Sunday, January 14, 2007

பொங்கல் - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல், இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி, எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும், சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் தொலைக்காட்சியிலும், நடிகை ஸ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62


பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் Manhattanஇல் நடுரோட்டுல பண்ணா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!
Read more »

Sunday, January 07, 2007

திருவையாத்துச் சாமீ ஆராதனைங்களா? - எந்தரோ மகானுபாவுலு!

சுந்தரத் தெலுங்கு என்று ஒரு காலத்தில் பாடி வைத்தான் பாரதி. தெலுங்கு தெரியுமோ தெரியாதோ, ஆனால் "எந்தரோ மகானுபாவுலு" என்ற சொற்றொடர் மட்டும் நம்மில் பல பேருக்குத் தெரியும்!
எந்தரோ மகானுபாவுலு - அப்படின்னா என்ன?

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி, ஆராதனை இன்று! (Jan 8 2007)
அவர் பாட்டுடன் ராகமாய், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.

தமிழிசை, இந்துஸ்தானி, கர்நாடக இசை, மெல்லிசை என்று இப்படி எந்தத் துறையில் இருந்தாலும் எல்லாரும் மதித்துப் போற்றி வழிபடும் ஒருவர் ஸ்ரீ தியாகராஜர். அவருக்கும் முன்பாகவே பல கலைஞர்கள் இசையில் கொடி கட்டிப் பறந்துள்ளனர். ஆனால் யாருக்கும் இப்படி ஒரு உன்னத நிலை அமையவில்லை! ஏன்?

உள்ளார்ந்த பக்தியை இசைப்பாடல்களாக வெளிப்படுத்தியவர்.
அவர் இசையில் தான் எத்தனை எத்தனை புதுமைகள் செய்தார்!
எவ்வளவு கஷ்டமான ராகங்களையும், தன் இனிய மெட்டால் எத்தனை எளிமை ஆக்கினார்!

115858699_771cce968c

பணத்தின் மு்ன்னோ, அரசாங்க ஆணையின் முன்னோ, பெரிய மனிதர்களின் சிபாரிசின் முன்னோ, பளபள சரிகை வேட்டிகளின் முன்னோ, பணிந்து வளைந்தாரா இவர்? இல்லையே! மெல்லிய தேகத்தில் தான் எத்தனை வல்லிய மன உறுதி.

நாம் எல்லாம் இன்று தானே, தினம் ஒரு பதிவு போடுகிறோம்! ஆனால் தியாகராஜர் அன்றே தினம் ஒரு பாடல், கவிதை எழுதியவர்!
தேர்ந்த வித்வான்கள் எல்லாம் அவர் பாடல்களை அலசி அராய்ந்து சாரமாய்ப் பொழிய முடியும்.
இல்லை என்றாலும் அந்நியன் படக் காட்சிகள் போல் கிண்டல், நையாண்டி செய்தும் மகிழலாம்! :-)
ஆனால் கிராமத்தில் வாழும் சாதாரண மக்கள் அவர் பாடல்களைப் பாடி மகிழ்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கூட்டமில்லாத நாட்களில் திருவையாறு சென்று பாருங்கள், தெரியும்!
சுத்துப் பட்டு கிராமங்கள், சுந்தர பெருமாள் கோவில், கபித்தலம், திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் இன்னும் பல இடங்களில் இருந்தும் கிராமத்து மக்கள் யாராச்சும் வருவார்கள்; வந்துக் காவிரிக் கரையோரமாக உட்காருவார்கள்.
"நீ தய ராதா", "சீதம்மா, மாயம்மா", "ரா ரா மா இண்டி", என்று ஏதாச்சும் ஒரு எளிமையான பாட்டை நீட்டி முழக்கிப் பாடிக் கொண்டிருப்பார்கள்!
அவர்களிடம் போய் இது என்ன ராகம் என்றெல்லாம் கேட்டு வைக்கக் கூடாது!:-)

கச்சேரிகளில் கூட இப்படி ரசித்துக் கேட்டிருக்க மாட்டீர்கள்! ஆனால் இங்கே சர்வ சாதாரணமாக, "Casual " என்று சொல்கிறோமே, அது போலப் பாடிக் கொண்டிருப்பார்கள்! அவர்கள் வீட்டு விசேடங்களுக்குச் சென்று பாருங்கள்.
நலங்கு, ஆரத்தி, அழைப்பு இப்படி எல்லாத்துக்கும் இவர் பாட்டு தான். "சீதா கல்யாண வைபோகமே" என்று பாடாவிட்டாலும், வாய்விட்டு சொல்லாதவர் தான் யார்!

இப்படி மக்கள் கலைஞராக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் தான் தியாகராஜர்!
காவிரிக்கரைச் சாமீங்களா, திருவையாத்துச் சாமீங்களா என்று தான் அவர்கள் எல்லாரும் பாசத்துடன் கேட்கிறார்கள்!

நம் அபிமானத்தால் இறைவனைப் பீடத்தில் ஏற்றினாலும் அவன் எங்கும் பரந்து விரிந்து இருக்கிறான் அல்லவா?
அதைப் போலேவே தியாகராஜரின் பக்தியும் இசையும், கச்சேரிகளையும் தாண்டி நிற்கும்;
எங்கும் பரந்து விரிந்து, எளிய மக்களின் மனங்களில் நிழலாடிக் கொண்டே இருக்கும்!


எந்தரோ மகானுபாவுலு! = அன்பால் உயர்ந்த பக்தர்கள் தான் எத்தனை பேர் இந்த உலகத்தில்? அவர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? (எனக்கு மட்டும் ஏன் இந்த போலி அகங்காரம், திமிர் எல்லாம்?)
அந்தரிகி வந்தனமுலு! = அவர்கள் அத்தனை பேரையும் அடியேன் வணங்குகிறேன்!

இது மிகவும் முக்கியமான பாடல்! பணிவு ஒன்றையே பண்பாகக் கொண்ட தொண்டர்களின் பெருமையைப் பற்றிப் பாடும் பாடல் அல்லவா?
கீழே அவருடைய ஆராதனையில், "எந்தரோ மகானுபாவுலு" என்று பாடப்படும் காட்சிகளைக் கண்டு மகிழுங்கள்.

பழைய DD Recording என்று நினைக்கிறேன்.
அன்றைய பல முன்னணி இசைக் கலைஞர்கள், மற்றும் சினிமாக் கலைஞர்கள் தெரிகிறார்கள். யார் யார் என்று நீங்க தான் பார்த்துச் சொல்லணும்! :-)
ஒரு சிலர் என்ன பட்டுப்புடைவை, என்ன அட்டிகை, என்ன நகை, என்ன மோதிரம் தெரிகிறது என்றும் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்துச் சொல்வதையும் பார்த்திருக்கிறேன்:-)

ஆனால் அந்தக் கூட்டத்திலும் முகம் தெரியாத ஒருவர் உட்கார்ந்து ஆழ்ந்து பாடிக் கொண்டிருக்கலாம்! அவருக்கும் நம் வந்தனங்கள்!!
கடைசியில் மிக முக்கியமான ஒரு பத்திக்கு மட்டும் விளக்கம் தந்துள்ளேன்; அதில் பலப்பல பக்தர்களையும் வரிசைப்படுத்திப் பாடி வணங்குகிறார் தியாகராஜர்! நாமும் வணங்குவோம்!!

பகுதி-1


பகுதி-2


வீடியோவிற்கு நன்றி: CoolCrave


7 ஆம் சரணம்:
பரம பாகவத மௌனி வர சசி
விபாகர சனக சனந்தன
திகீ்ச சுர கிம்புருஷ
கனகக சிபு சுத நாரத தும்புரு

பவன சுனு பால சந்திர தர சுக
சரோஜ பவபூ சுரவருலு

பரம பாவனுலு கனுலு சாச்வதுலு
கமல பவ சுகமு சதானு பவுலு காக

(எந்தரோ மகானுபாவுலு)

பரம பாகவத = பெரும் பக்தர்கள், அடியவர்கள்
மௌனி = முனிவர்கள்
வர சசி = அழகான் சந்திரன்
விபாகர = சூரியன்
சனக சனந்தன = சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் குழந்தை ரிஷிகள்

திகீ்ச = திக்+ஈச = அஷ்டதிக் பாலகர்கள்; எண் திசைக் காவலர்கள்
சுர = முப்பத்து முக்கோடி தேவர்கள்
கிம்புருஷ = கிம்புருட பிரதேசத்தில் வாழும் இசை ஞானிகள்
கனகக சிபு சுத = கசிபுவின் மகனான பிரகலாதன்
நாரத தும்புரு = நாரதர் மற்றும் தும்புரு ஆகிய ரிஷிகள்

பவன சுனு = பவன (வாயு) புத்திரன்; அன்பன் ஆஞ்சநேயன்
பாலச்சந்திர தர = பாலச் சந்திரனைப் பிறை சூடிய இறைவன், சிவபெருமான்
சுக = சுகப் பிரம்ம மகரிஷி
சரோஜ பவ = தாமரையில் தோன்றிய பிரம்ம தேவர்
பூ சுரவருலு = பூ உலகைக் காக்கும் தன்னலமில்லாத் தலைவர்கள்

பரம பாவனுலு = பரிசுத்தமான நல் இதயம் கொண்டவர்கள்
கனுலு சாச்வதுலு = நித்ய சிரஞ்சீவிகள்
கமல பவ சுகமு = இறைவன் திருவடித் தாமரைச் சுகத்தை
சதா அனுபவுலு காக = எப்போதும் அனுபவித்து, ஆழந்து கொண்டுள்ள
இன்னும் எத்தனையோ முகம் தெரியாத பக்தர்கள்!
இப்படி, எந்தரோ மகானுபாவுலு, அவர்கள் அந்தரிகி வந்தனமுலு!
Read more »

Friday, January 05, 2007

முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5

முந்தைய பதிவு இங்கே!
எம்பெருமான் எக்கி எக்கிப் பார்க்கிறான்! சரியாகத் தெரியவில்லை!
இன்னும் உயரத் தூக்குங்கள் என்கிறான்! தூக்குகிறார்கள்! ஆகா...மோகினியின் அழகில் மயங்கி விழுகிறான்!
என்னது இது அதிசயம்! அவன் தானே மோகினி வேடத்தில் சிவ பெருமானையே சிந்தை கலங்கச் செய்தவன்!
அவனே மயங்குகிறானா? ஆனானப்பட்ட மாயவனையே மயக்கும் மோகினி யாரப்பா? அவள் தான் பராங்குச நாயகி!

யார் அது? கேள்விப்பட்டதே இல்லையே! அவள் எந்த ஊர் நாயகி?
அட நம்ம நம்மாழ்வார் தான்! ஏழாம் நாள், மோகினித் திருக்கோலத்தில் உலா வருகிறார்!
ஒரு காலத்தில் பெருமாளிடம் மனத்தைப் பறிகொடுத்து, ஒரு காதலியாய் உருகி உருகிப் பொழிந்தார் பாசுரங்களை!
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே, தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே என்று மயங்கிக் கிடந்தார்!


38077112.ParankusaNayaki
பராங்குச
நாயகி


39499196_KAITHALASEVA

கைத்தல சேவை

ஆனால் பாருங்கள்! இன்று நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது!
ஆழ்வார் என்னும் நாயகியை, அரங்கன் எம்பி எம்பிப் பார்க்கிறான்!
அவனை வாகனத்தில் வைத்தோ, தோள் மேலே வைத்தோ தூக்கவில்லை இன்று! பின்னே வேறு எப்படித் தூக்கி வருகிறார்கள்?
அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் தாங்கித் தாங்கித் தூக்கி வருகிறார்கள்!
கைத்தல சேவை என்று பெயர்!

கைகளால் உயர உயரத் தூக்கி, அவனுக்கு நம்மாழ்வரின் அழகுத் திருக்கோலத்தைக் காண்பிக்கிறார்கள்!
ஒரு அடியவருக்கு இதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும் சொல்லுங்கள்!
அருமா மாயத்து எனது உயிரே, மனமே, வாக்கே, கருமமே!
ஒருமா நொடியும் பிரியான் என்ஊழி முதல்வன் ஒருவனே!



எட்டாம் நாள் திருமங்கை மன்னனின் வேடுபறியை விழாவாக நடித்துக் காட்டுகிறார்கள்! தங்கக்குதிரை வாகனம்! அது ஒரு சுவையான நாடகம் அல்லவா?
கால்மெட்டியை மட்டும் திருடமுடியாது போய், இறுதியில் காலமெல்லாம் நாராயணா என்று ஆன கதை ஆயிற்றே! பெருமாள் திருமங்கை மன்னனைக் கள்வர் தொழிலில் இருந்து மீட்டு, ஆட்கொண்டதை இந்தப் பதிவில் காணலாம்!

renganathar_visit_8

முன்பு ஒரு நாள், சங்கீத மகாகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் வந்தபோது இதே உற்சவம்;
அவர் தெற்கு வீதியில் நின்று கொண்டிருந்தார். அரங்கன் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வருகிறான்.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த அழகைப் பக்கத்தில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கப்பட்டார்.

அவர் என்ன பெரிய செல்வந்தரா இல்லை உபயதாரரா, அருகில் செல்ல?
இல்லையே! தனக்கு மாலை மரியாதை எல்லாம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளும் தலைவரும் கிடையாது! பரம சாது!

குதிரை வாகனம் வேறு வீதிக்குத் திரும்பி ஆனால் சற்று நேரத்தில் நின்று விட்டது. வாகனத்தைச் சுமப்போர் எவ்வளவோ முயன்றும் ஹூஹூம்.
அர்ச்சகரின் மேல் ஆவேசம் வந்து, ‘‘தெற்கு வீதியில் என் உள்ளார்ந்த பக்தன் ஒருவன், தரிசனம் செய்ய முடியாமல் துடிக்கிறானே! அவனை அழைத்து வாருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.

உடனே கோஷ்டியில் உள்ளவர்கள் தியாகராஜரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சுவாமிக்கு அருகில் அழைத்து வந்தார்கள்.
இதே குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;
பின்னர் "ஓ ரங்க சாயீ" முதலான ஸ்ரீரங்க பஞ்சரத்னக் கீர்த்தனைகளைத் தனியாகப் பாடி அருளினார்!


பத்து நாட்கள் ராப்பத்து விழா முடிந்து, இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சம்!
இது தான் விழாவின் மிக முக்கியமான கட்டம்;
பல அன்பர்கள் கண்ணிலும் நீர் வரவழைத்து விடும்!

முன்பே சொன்னது போல் நம்மாழ்வாருக்காக வாசல் திறக்கப்படும் வைபவம் தான் சொர்க்க வாசல்.
அதில் பெருமாள், தானே ஒரு சாதகனாய் நுழைகிறான்! ஒரு சாதகன் (முமுட்சு) எப்படி அனைத்து நிலைகளையும் கடந்து, பரமபதத்தில் எப்படி எல்லாம் வரவேற்கப்பட்டு, தன்னிடம் வந்து சேர்கிறான் என்பதைத் தானே நடித்துக் காட்டுகிறான்!

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின என்ற பாசுரம் முழங்குகிறார்கள்.
நம்மாழ்வார் திருவுருவச் சிலை சகல மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு நம்பெருமாள் முன் வைக்கப்படுகிறது.

nammalwar

நம்மாழ்வார்

அலங்காரங்கள் எதுவுமே இல்லை! வெறும் வெள்ளை உடையும் துளசி மாலை மட்டுமே! பன்னிரெண்டு திருமண் காப்பு திருமேனியில்!
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
என்று பாடுகிறார்கள்! பாடிக் கொண்டே, துளசி தளங்களால் அர்ச்சனை!

நம்மாழ்வார் திருவுருவச் சிலையை, அவர் தலை அப்படியே அரங்கன் திருவடிகளில் படுமாறு கிடத்துகிறார்கள்! தலையாலே கீழே விழுந்து வணங்கிப், பற்றற்றான் பற்றினைப் பற்றுகிறார்!
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே!

என்று அன்று பாடினார் அல்லவா? அது அப்படியே இன்று நம் கண்முன்னால் நடக்கிறது!

39499221_alwar

நம்மாழ்வார் மோட்சம்

துளசி அர்ச்சனை இடையறாது நடந்து கொண்டே இருக்க, அச்சோ!...சிறிது நேரத்தில் நம்மாழ்வாரைக் காணவில்லை!
ஆம்! துளசியால் முழுதும் மூடப்பட்டு விடுகிறார்!!
சற்று முன்னர் வரை நம் கண் முன்னே, திருவாய்மொழி பாடிக் கொண்டே வந்தவர், இப்போது காணவில்லையே!

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே


பாசுர முழக்கம் நிறைவு பெற்றது!
எங்கும் ஒரே நிசப்தம்! துளி சத்தம் கிடையாது!

எல்லார் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்!
மணியோசை எதுவுமில்லை!
எம்பெருமானுக்கு மகா தீப மங்கள கற்பூர ஆரத்தி!
பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
இது நம்மாழ்வார் மோட்சம்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!!


இத்துடன் திருவரங்கத்து வைகுந்த ஏகாதசித் தொடர் பதிவு நிறைந்தது!
ஆர்வமுடன் வாசித்தளித்த அன்பர்கள், அடியார்கள் அனைவருக்கும் நன்றி!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

ஆழ்வார் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம்!!

chatary

ஆராத அருள்அமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தான் அயோத்திமன்னர்க்கு அளித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுதகோயில்
துணையான வீடணார்க்குத்துணை ஆனகோயில்

சேராத பயன்எல்லாம் சேர்க்கும்கோயில்
செழுமறையின் முதல்எழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினை அனைத்தும் தீர்க்கும்கோயில்
திருஅரங்கம் எனத்திகழும் கோயில்தாமே!
Read more »

Monday, January 01, 2007

2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து! - 4

நண்பர்கள் எல்லாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
2006 கழிந்து, 2007 புகுந்து,
வளம் பல சிறக்க, உளமுடன் வாழ்த்து!
2006-இன் சிறந்த பதிவர் - வெட்டிப்பையல் பாலாஜி அவர்களுக்கு நன்றி! ஏன்?
இந்தப் பதிவை ஏகாதசியின் பின்னிரவில் கண்விழித்து எழுதிய போது, தொலைபேசியில் விடிய விடிய கம்பெனி கொடுத்தாரே! சும்மாவா!!!


இதற்கு முந்தைய பதிவு இங்கே!

பகல்பத்து, ராப்பத்து = இவை தமிழ்ச்சொத்து!
சிவராத்திரி ஒரு ராத்திரி, அன்னை அவளுக்கு நவராத்திரி - தெரிந்த விடயம் தான்! ஆனால் அது என்ன பத்து பகல், பத்து ராத்திரி?
மொத்தம் பத்து நாளா இல்லை இருபது நாளா?
மொத்தம் 21 நாட்கள்! பார்ப்போம் வாரீகளா? முத்தங்கி சேவையில் முத்து குளிக்க வாரீகளா?

renganatha_festival

அரங்கன் வேட்டைக்குச் செல்லும் வேடு பறி விழா

இந்த விழாவை முதலில் துவக்கி வைத்தது திருமங்கை மன்னன் (கலியன்)!
அதற்கு முன்னரே தமிழ் ஓதப்பட்டு தான் இருந்தது! ஆனால் பெரும் விழாவாக கொண்டாட்டம் எல்லாம் கிடையாது!
திருவாய் மொழியும், நம்மாழ்வார் வழியும்,
கலியனுக்குத் தெரிந்தது! கடையனுக்கும் தெரிய வேண்டாமா?
அரங்கன் அனுமதி பெற்று, திருமங்கை மன்னன் தான், இவ்விழாவை ஒரு நாடகம் போல் நடத்திக் காட்டினார்!

இதை உடையவர் ராமானுஜர் இன்னும் முறைப்படுத்தி வைத்தார்! வெறுமனே பாசுரம் ஓதுவதோடு மட்டும் இல்லாமல், குப்பன், சுப்பன் இன்னும் எளியோரும் எல்லாரும் இதில் மனமொப்பி ஈடுபடுமாறு வழி வகை செய்தார்! பாக்கலாம் வாங்க!

சென்ற பதிவின் இறுதியில் பார்த்தோமே
அருள்பாடி ஸ்ரீபாதம் தூக்குவோஓஓஓர் எங்கே?
அடியோம் இந்தோஓஓஓம்!

இதற்குச் செந்தமிழில் கட்டியங் கூறுதல் என்று பெயர்! கவிதையாகக் கூடப் படிப்பார்கள்! பாட்டோலை வாசிப்பார்கள்! இவர்கள் சொல்லச் சொல்ல, இவர்கள் கூப்பிடும் குரலுக்குத் தான், ஆழ்வார் விக்ரகங்களும் வந்து நிற்கும்!

இப்படிச் சொல்பவர்கள் எல்லாம் யார் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ்ப் பண்டிதர்கள்? கோவில் அர்ச்சகர்கள்? அந்தணர்கள்? அரசு அலுவலர்கள்? ஹூஹூம்! இல்லவே இல்லை! சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்! சாதாரணக் குப்பனும் சுப்பனும் தான்!
இவர்களுக்கு இப்படிப் பயிற்றுவித்து, விழாவோடும், தமிழோடும் ஒன்றச் செய்தவர் தான் நம் ராமானுஜர்!

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றுப் பெரிதாகக் சொல்லிக் கொண்டிருப்பார்கள்! ஆனால் ஒரு துரும்பும் கிள்ளிப் போட மாட்டார்கள்!
தமிழின் பேரைச் சொல்லித் தான் மட்டும் வாழ்வார்கள் மத்தியில்,
தமிழுக்காக வாழ்ந்தவர்கள் நம் ராமானுசரும், நம் மாமுனிகளும்!
இன்றும் விழாவில், இதை நேரில் சென்று அனுபவித்துப் பார்த்தால், கண்கள் பனிக்கும்!

Aalwars

வேதம் தமிழ் செய்த பன்னிரு ஆழ்வார்கள்

கார்த்திகை மாதக் கார்த்திகை நாள் அன்று (திருமங்கையாழ்வார் நட்சத்திரம்) அரங்கன், நம்மாழ்வாருக்குப் பாட்டோலை அனுப்புவான். அதை எடுத்துக் கொண்டு போய் நம்மாழ்வார் சன்னிதியில் அரசாங்க ஆணை போல உரக்க வாசிப்பார்கள்!

அத்யயனம் என்றால் படித்தல். அ+அத்யயனம் =அனத்யயனம், அதாவது படிக்காது இருத்தல். தமிழ் மறைகளைத் தவிர வேறு எதுவும் படிக்காது இருத்தல். (அந்தக் காலத்தில் வடமொழியில் சொன்னால் தானே, சிலர் வடமொழியையும் கொஞ்ச காலத்துக்கு நிறுத்தி வைப்பார்கள்! :-) அதனால் இப்படி ஒரு பெயர் கொடுத்தார்கள்!)

அந்தப் "படிக்காத" காலம் இப்போதிலிருந்து தொடங்குகிறது! மீண்டும் நம்மாழ்வார் ஊருக்கு வந்து சேரும் வரை அந்த அரசாணை அமுலில் இருக்கும்! (கார்த்திகை மாதக் கார்த்திகை தொடங்கி, தை மாத ஹஸ்தம் வரை)
ரங்கராஜனின் ஆணைப்படி இந்த இடைப்பட்ட காலத்தில் யாரும் மற்ற மறைகளைச் சாற்றக் கூடாது! தமிழ் மறையை மட்டுமே சாற்ற வேண்டும்; அதுவும் கூட்டாக ஆலயங்களில் சாற்ற வேண்டும்! அறியாதாரும் அறியும் வண்ணம் தமிழ் சாற்ற வேண்டும்! (கோதைத்தமிழ் மட்டுமே இதற்கு விதிவிலக்கு! யாரும் எங்கு வேண்டுமானாலும் சாற்றலாம்!)

ஆணை கேட்டு நம் ஆழ்வாரும் சகல மரியாதைகளுடன் திருவரங்கம் கிளம்பி வருவார்! பெருமாளும் பக்தனும் எதிர் எதிர் நிற்பார்கள் (எதிர்ச் சேவை); நாம் எதிர் விருந்து என்று சில திருமணங்களில் சொல்கிறோமே, அது போல!

முதல் நாள் திருமங்கை மன்னன் நினைவாக, அவருடைய திருநெடுந்தாண்டகம் ஓதப்படும்!
அதன் பின்னர், பகல்பத்து திருவிழா = வைகுந்த ஏகாதசிக்கு முன்னுள்ள பத்து நாட்கள்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆழ்வார் பாசுரங்கள்! பகல் வேளையில் கோலாகலங்கள் கொண்டாடப்படும்!
மொத்தம் 4000 திவ்யப் பிரபந்தங்கள் அல்லவா! நம்மாழ்வார் நீங்கலாக ஏனைய பதினோரு ஆழ்வார்களின் பாசுரங்களைப், பகல்பத்தில் பண்ணோடு இசைத்து ஓதுகிறார்கள்!
பேரரசன் அரங்கன், ஆஸ்தானத்தில் கொலுவிருக்க, நாமும் அவனுடைய குடிமக்களாய் இருந்து, செவி குளிரக் கேட்கலாம்!


607%20SRGM%20SESHRAYA%20YALI

சேஷராய மண்டபம்


614%20SRGM%20TPM%20PEETHAM
அரங்கன் கொலு மண்டபம்


பகல்பத்தின் கடைசி நாளன்று, நம்பெருமாளின் மோகினித் திருக்கோலம்!
(அதான் ஏற்கனவே தமிழைக் கேட்டு மயங்கிப் போய் உள்ளோமே! அது போதாதா? மோகினிக் கோலம் காட்டி மேலும் மயக்க வேண்டுமா என்ன? :-) )
அதன் பின்னர் தான், சென்ற பதிவில் பார்த்த சொர்க்க வாசல் சேவை! ஏகாதசி அன்று விடியற்காலையில்!

அன்றே ராப்பத்து திருவிழாவும் தொடங்குகிறது! = வைகுந்த ஏகாதசியும் சேர்த்து மொத்தம் பத்து நாட்கள்!
இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது!


ஏழாம் நாள் இரவு ஒரு உலக மகா அதிசயம்! எப்போதும் அரங்கன் தானே மாயம் செய்து, எல்லாரையும் மயக்கி, விளையாட்டு காட்டுவான்?
ஆனால் இன்று அரங்கனே கதி கலங்கி, மதி மயங்கி, கிடக்கிறான்!
ஓர் அழகுத் திருமுகத்தை எட்டி எட்டிப் பார்க்கிறான்!

ஹூஹூம், சரியாகவே தெரிய மாட்டேன்கிறதே!
அட, என்னை இன்னும் கொஞ்சம் உயரத் தூக்குங்ளேன்! சரியாகவே தெரியவில்லையே! இன்னும் உயர, இன்னும் உயர என்று பாவம், கெஞ்சுகிறான்!
அடுத்த பதிவில்! ஏகாதசி இறுதிப் பதிவில் பார்ப்போம்!

srirangam_chakra_deepam

srirangam_sangu_deepam
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP