Friday, January 05, 2007

முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5

முந்தைய பதிவு இங்கே!
எம்பெருமான் எக்கி எக்கிப் பார்க்கிறான்! சரியாகத் தெரியவில்லை!
இன்னும் உயரத் தூக்குங்கள் என்கிறான்! தூக்குகிறார்கள்! ஆகா...மோகினியின் அழகில் மயங்கி விழுகிறான்!
என்னது இது அதிசயம்! அவன் தானே மோகினி வேடத்தில் சிவ பெருமானையே சிந்தை கலங்கச் செய்தவன்!
அவனே மயங்குகிறானா? ஆனானப்பட்ட மாயவனையே மயக்கும் மோகினி யாரப்பா? அவள் தான் பராங்குச நாயகி!

யார் அது? கேள்விப்பட்டதே இல்லையே! அவள் எந்த ஊர் நாயகி?
அட நம்ம நம்மாழ்வார் தான்! ஏழாம் நாள், மோகினித் திருக்கோலத்தில் உலா வருகிறார்!
ஒரு காலத்தில் பெருமாளிடம் மனத்தைப் பறிகொடுத்து, ஒரு காதலியாய் உருகி உருகிப் பொழிந்தார் பாசுரங்களை!
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே, தெளிகிலேன் முடிவு இவள் தனக்கே என்று மயங்கிக் கிடந்தார்!


38077112.ParankusaNayaki
பராங்குச
நாயகி


39499196_KAITHALASEVA

கைத்தல சேவை

ஆனால் பாருங்கள்! இன்று நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது!
ஆழ்வார் என்னும் நாயகியை, அரங்கன் எம்பி எம்பிப் பார்க்கிறான்!
அவனை வாகனத்தில் வைத்தோ, தோள் மேலே வைத்தோ தூக்கவில்லை இன்று! பின்னே வேறு எப்படித் தூக்கி வருகிறார்கள்?
அர்ச்சகர்கள் தங்கள் கைகளில் தாங்கித் தாங்கித் தூக்கி வருகிறார்கள்!
கைத்தல சேவை என்று பெயர்!

கைகளால் உயர உயரத் தூக்கி, அவனுக்கு நம்மாழ்வரின் அழகுத் திருக்கோலத்தைக் காண்பிக்கிறார்கள்!
ஒரு அடியவருக்கு இதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும் சொல்லுங்கள்!
அருமா மாயத்து எனது உயிரே, மனமே, வாக்கே, கருமமே!
ஒருமா நொடியும் பிரியான் என்ஊழி முதல்வன் ஒருவனே!



எட்டாம் நாள் திருமங்கை மன்னனின் வேடுபறியை விழாவாக நடித்துக் காட்டுகிறார்கள்! தங்கக்குதிரை வாகனம்! அது ஒரு சுவையான நாடகம் அல்லவா?
கால்மெட்டியை மட்டும் திருடமுடியாது போய், இறுதியில் காலமெல்லாம் நாராயணா என்று ஆன கதை ஆயிற்றே! பெருமாள் திருமங்கை மன்னனைக் கள்வர் தொழிலில் இருந்து மீட்டு, ஆட்கொண்டதை இந்தப் பதிவில் காணலாம்!

renganathar_visit_8

முன்பு ஒரு நாள், சங்கீத மகாகுரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், ஸ்ரீரங்கம் வந்தபோது இதே உற்சவம்;
அவர் தெற்கு வீதியில் நின்று கொண்டிருந்தார். அரங்கன் தங்கக்குதிரை வாகனத்தில் பவனி வருகிறான்.
மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. அந்த அழகைப் பக்கத்தில் சென்று தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கப்பட்டார்.

அவர் என்ன பெரிய செல்வந்தரா இல்லை உபயதாரரா, அருகில் செல்ல?
இல்லையே! தனக்கு மாலை மரியாதை எல்லாம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளும் தலைவரும் கிடையாது! பரம சாது!

குதிரை வாகனம் வேறு வீதிக்குத் திரும்பி ஆனால் சற்று நேரத்தில் நின்று விட்டது. வாகனத்தைச் சுமப்போர் எவ்வளவோ முயன்றும் ஹூஹூம்.
அர்ச்சகரின் மேல் ஆவேசம் வந்து, ‘‘தெற்கு வீதியில் என் உள்ளார்ந்த பக்தன் ஒருவன், தரிசனம் செய்ய முடியாமல் துடிக்கிறானே! அவனை அழைத்து வாருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.

உடனே கோஷ்டியில் உள்ளவர்கள் தியாகராஜரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை சுவாமிக்கு அருகில் அழைத்து வந்தார்கள்.
இதே குதிரை வாகன அரங்கனை, "ராஜ வீதுல ஜூட முராரே, வைபோக ரங்கா" என்று தோடி ராகத்தில் பாடிப் பரவசப்பட்டார்;
பின்னர் "ஓ ரங்க சாயீ" முதலான ஸ்ரீரங்க பஞ்சரத்னக் கீர்த்தனைகளைத் தனியாகப் பாடி அருளினார்!


பத்து நாட்கள் ராப்பத்து விழா முடிந்து, இறுதி நாளில் நம்மாழ்வார் மோட்சம்!
இது தான் விழாவின் மிக முக்கியமான கட்டம்;
பல அன்பர்கள் கண்ணிலும் நீர் வரவழைத்து விடும்!

முன்பே சொன்னது போல் நம்மாழ்வாருக்காக வாசல் திறக்கப்படும் வைபவம் தான் சொர்க்க வாசல்.
அதில் பெருமாள், தானே ஒரு சாதகனாய் நுழைகிறான்! ஒரு சாதகன் (முமுட்சு) எப்படி அனைத்து நிலைகளையும் கடந்து, பரமபதத்தில் எப்படி எல்லாம் வரவேற்கப்பட்டு, தன்னிடம் வந்து சேர்கிறான் என்பதைத் தானே நடித்துக் காட்டுகிறான்!

சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின என்ற பாசுரம் முழங்குகிறார்கள்.
நம்மாழ்வார் திருவுருவச் சிலை சகல மரியாதைகளுடன் கொண்டு வரப்பட்டு நம்பெருமாள் முன் வைக்கப்படுகிறது.

nammalwar

நம்மாழ்வார்

அலங்காரங்கள் எதுவுமே இல்லை! வெறும் வெள்ளை உடையும் துளசி மாலை மட்டுமே! பன்னிரெண்டு திருமண் காப்பு திருமேனியில்!
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
என்று பாடுகிறார்கள்! பாடிக் கொண்டே, துளசி தளங்களால் அர்ச்சனை!

நம்மாழ்வார் திருவுருவச் சிலையை, அவர் தலை அப்படியே அரங்கன் திருவடிகளில் படுமாறு கிடத்துகிறார்கள்! தலையாலே கீழே விழுந்து வணங்கிப், பற்றற்றான் பற்றினைப் பற்றுகிறார்!
தாழ்ச்சி மற்றெங்கும் தவிர்ந்து, நின் தாள் இணைக்கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகை அருளாய் வந்தே!

என்று அன்று பாடினார் அல்லவா? அது அப்படியே இன்று நம் கண்முன்னால் நடக்கிறது!

39499221_alwar

நம்மாழ்வார் மோட்சம்

துளசி அர்ச்சனை இடையறாது நடந்து கொண்டே இருக்க, அச்சோ!...சிறிது நேரத்தில் நம்மாழ்வாரைக் காணவில்லை!
ஆம்! துளசியால் முழுதும் மூடப்பட்டு விடுகிறார்!!
சற்று முன்னர் வரை நம் கண் முன்னே, திருவாய்மொழி பாடிக் கொண்டே வந்தவர், இப்போது காணவில்லையே!

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக்கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆருயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனிநான் போகல்ஒட்டேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே


பாசுர முழக்கம் நிறைவு பெற்றது!
எங்கும் ஒரே நிசப்தம்! துளி சத்தம் கிடையாது!

எல்லார் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர்!
மணியோசை எதுவுமில்லை!
எம்பெருமானுக்கு மகா தீப மங்கள கற்பூர ஆரத்தி!
பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
இது நம்மாழ்வார் மோட்சம்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!!


இத்துடன் திருவரங்கத்து வைகுந்த ஏகாதசித் தொடர் பதிவு நிறைந்தது!
ஆர்வமுடன் வாசித்தளித்த அன்பர்கள், அடியார்கள் அனைவருக்கும் நன்றி!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

ஆழ்வார் திருவடிகளே சரணம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம் சரணம்!!

chatary

ஆராத அருள்அமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தான் அயோத்திமன்னர்க்கு அளித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுதகோயில்
துணையான வீடணார்க்குத்துணை ஆனகோயில்

சேராத பயன்எல்லாம் சேர்க்கும்கோயில்
செழுமறையின் முதல்எழுத்து சேர்ந்தகோயில்
தீராதவினை அனைத்தும் தீர்க்கும்கோயில்
திருஅரங்கம் எனத்திகழும் கோயில்தாமே!

35 comments:

  1. You have a riveting web log
    and undoubtedly must have
    atypical & quiescent potential
    for your intended readership.
    May I suggest that you do
    everything in your power to
    honor your encyclopedic/omniscient
    Designer/Architect as well
    as your revering audience.
    As soon as we acknowledge
    this Supreme Designer/Architect,
    Who has erected the beauteous
    fabric of the universe, our minds
    must necessarily be ravished with
    wonder at His infinate goodness,
    wisdom and power.

    Here's what remarkable men
    have asseverated about the
    world's bestseller:

    "I believe the Bible is the best gift
    God has ever given to man. All
    the good from the Savior of the
    world is communicated to us
    through this book."
    -- President Abraham Lincoln

    "It is impossible to rightly govern the
    world without God and the Bible."
    - President George Washington

    "The Bible is worth all other books which
    have ever been printed." - Patrick Henry
    (original member of the Continental Congress)
    ......

    ReplyDelete
    Replies
    1. God, if we are accept him as the supreme, can only be omnipresent and omnipotent. otherwise, we have to accept that something is seperate from him and so he is not all powerfull. If we are to accept Bible, then we will have to presume that God is not omnipotent and omnipresent which itself is contradictory to the concept of God

      But we should have an open mind to discuss all these.

      Delete
  2. இதுகாறும் இவ்வளவு நாட்கள் எங்களை ச்ரீ ரங்க சுற்றுலா அழைத்துச்சென்று எல்லா விசேஷத்தையும் விர்வாக விளக்கி,பாடல்களைத்தந்து,என்போன்றவர்களுக்காக அர்த்ததையும் சொல்லி,படங்களையும் தந்து,கடைசியாக ச்ரீ தியகராஜரையும் சேர்த்து,கூட்டத்தில் இடிபடாமல் பத்திரமாக அவரவர் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்த்ததற்கு வலைஉலக நண்பர்கள் சார்பாக கண்ணபிரான் ரவிஷன்கருக்கு பல்லாயிரம் நன்றிகள்.

    ReplyDelete
  3. அப்படியே அரங்கனை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் ரவி!

    கைத்தல சேவைதானே மாலை மாற்றும் முன்னர் நம் திருமணங்களில் நிகழ்வது!

    குதிரை மீது வரும் திருமங்கை ஆழ்வார் ஓரிரு நாட்களில் அடுத்த ஊருக்கும் செல்ல முடியும் என்பதை இந்தத் தங்கக் குதிரை சேவையிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்களே!:))

    அர்ச்சகர் மேல் ஆவேசம்....இன்று பூசாரி மேல் வரும் ஆவேசம் இதுதான் தியாகராஜருக்கு நிகழ்ந்தது போலும்!

    திருவடி சேர்ந்தால்தான் முக்தி என்பது சைவம், வைணவம் இரண்டிலும் வலியுறுத்தப்படும் ஒரு செய்தி!

    இன்றைய திருவெம்ப்பாவை பதிவிலும் இதுவே சொல்லப் பட்டிருக்கிறது!

    ஆடுவதும் ஒரு அரங்கிலே!
    துயில்வதும் ஒரு அரங்கிலே!

    என்ன ஒரு கருணை இறைவனுக்கு நம் மீதெல்லாம்!

    மிக்க நன்றி, ரவி!

    ReplyDelete
  4. ஸ்ரீ ரங்கம் திருவுலா இனிதே முடிவுற்றது; இனி மானிட ரங்கன் திருவுலா ஆரம்பிக்கவேண்டும்.

    தொடங்கவைப்பதும், தொடக்கியதை நடத்துபவனும், நடத்தியதை இனிதே முடித்து வைகுந்தம் அளிப்பதும் அவனே!

    "நின் கருணை கிட்டாதோ?" என கோபியர் கெஞ்சுவதும் நாம் கெஞ்சுவதும் ஒன்றன்றோ!

    ReplyDelete
  5. அற்புதம்! அற்புதம்!!

    ReplyDelete
  6. ரவி,
    உணர்ச்சிக் குவியலில் எங்களை மூழ்க வைத்துவிட்டீர்கள்.நம்பெருமாளையும் நம்மாழ்வாரையும் படித்த பிறகு
    இந்த ராப்பத்து பூராவையும் மீண்டும் படிக்க வேண்டும்.
    அப்புறம் தினம் தினம் வைகுண்ட ஏகாதசிதான்.
    நன்றி ரவி.

    ReplyDelete
  7. அழகுதமிழில் அரங்கனைப்பற்றி அருமையாக அளித்து முடித்துவிட்ட்டீர்கள். தமிழே அமுது அரங்கனோ ஆராஅமுதன். ஆகவே நெஞ்சில் நிறைந்து அந்தரங்கமாகிவிட்ட உணர்ச்சி ஏற்படுகிறது ஆனாலும் பிரிவின் வேதனை தாங்க இயலுமா?

    பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் கூறியது போல,'சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன் திருக்கோயில் சூழ் காலில் கலந்து ,ஆசை தந்து, ஏகினார் நெஞ்சு கல்நெஞ்சமோ? வாவிப்புறத்து அன்னமே இன்னம் ஏதோ வரக்கண்டிலேன்; பாவிக்கு அநேகம் தனிக்காலம் இந்தப்பனீக்காலமே' என்று அந்தத்தலவியைப்போல் உருகிப்பாடவேண்டும் போல் உள்ளது.

    நம்மாழ்வார் மோட்சம் கண்முன் வந்துவிட்டது இது காட்சிப்பிழை அல்லவே! உங்கள் எழுத்தின் வெற்றி ரவிசங்கர் பாராட்டுக்கள்!

    அரவின்மீது பள்ளி கொள் அரங்நாதன் வாழ்கவே
    பரவி நின்று தொண்டு செய்யும் பக்தர்கூட்டம் வாழ்கவே
    கரவிலாமல் அன்புகொண்டு காக்குமன்னை வாழ்லவே
    திருவரங்கச் செல்வமென்றும் சீர்த்தியோங்க வாழ்கவே!
    என்று எனது சிறு கவிதையை அரங்கருக்கு மங்களமாய் சமர்ப்பிக்கிறேன், நன்றி
    திருவரங்கப்ரியா

    ReplyDelete
  8. கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
    கண்ண நீர் கைகளால் இறைக்கும்
    சங்கு சக்கரத்தன் என்று கை கூப்பும்
    தாமரைக் கண் என்றே தளரும்
    எங்கணே தரிக்கேன் உன்னை விட்டு என்னும்
    இருநிலம் கை துழாவிருக்கும்
    செங்கயல் பாய் நீர் திருவரங்கத்தாய்
    இவள் திறத்து என் செய்கின்றாயே?!

    இரவும் பகலும் கண் உறங்க மாட்டேன் என்கிறாள். கண்களிலிருந்து பொழியும் நீரை கைகளால் இறைத்து இறைத்து வீசுகிறாள். (கண்ணீர் துடைக்கும் அளவிலிருந்து இறைக்கும் அளவிற்குப் பெருகிவிட்டது). சங்கு சக்கரத்தன், அவன் என்னைக் காப்பான் என்று கைகளைக் கூப்புகிறாள். அவனுடைய கண்கள் தாமரைக்கண்கள் அல்லவா? அவற்றை எப்போது காண்பேன் என்று தளர்கிறாள். உன்னை விட்டுப் பிரிந்து எப்படி இருப்பேன் என்று வருந்துகிறாள். வேறு ஒன்றும் செய்யத் தோன்றாமல் நிலத்தை கைகளை வீசி கண்ணனைத் தேடி துழாவிக் கொண்டிருக்கிறாள். சிவந்த கயல் மீன்கள் பாயும் திருக்காவிரியை உடைய திருவரங்கத்தவனே. இவளுக்காக நீ என்ன செய்கின்றாய்?

    ReplyDelete
  9. unc professor

    thanks for your comments here in this post about The Bible

    ReplyDelete
  10. //தி. ரா. ச.(T.R.C.) said...
    இதுகாறும் இவ்வளவு நாட்கள் எங்களை ச்ரீ ரங்க சுற்றுலா அழைத்துச்சென்று ....என்போன்றவர்களுக்காக அர்த்ததையும் சொல்லி//

    வாங்க திராச ஐயா!
    திருவரங்க சுற்றுலா என்றே முடிவு கட்டி விட்டீர்களா? :-))

    தியாகராஜர் குறிப்பு உங்களுக்குப் பிடிக்கும் என்று அடியேனுக்குத் தெரிந்தே பதித்தேன் :-)

    நீங்கள் படித்து மகிழ்ந்ததற்கு நன்றி!

    ReplyDelete
  11. //SK said...
    கைத்தல சேவைதானே மாலை மாற்றும் முன்னர் நம் திருமணங்களில் நிகழ்வது!//

    அப்படித் தான் நினைக்கிறேன் SK ஐயா!
    கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் - அல்லவா?

    இந்தக் கைத்தலம் நம்மாழ்வார் பாசுரத்தில் அவர் இறைவனைக் கையில் ஏந்த ஏங்கும் பாசுரம்! அதனாலும் கைத்தல சேவை.

    //குதிரை மீது வரும் திருமங்கை ஆழ்வார் ஓரிரு நாட்களில் அடுத்த ஊருக்கும் செல்ல முடியும் என்பதை இந்தத் தங்கக் குதிரை சேவையிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்களே!:))//

    ஓகோ-ஆகா! புரிந்து கொண்டேன்!!
    தங்கள் திருவெம்பாவைப் பதிவில் அந்தக் கேள்வியும் இந்த விளக்கமும் இங்கும் கண்டேன்! கண்டேன்! கண்டு கொண்டேன்!

    //திருவடி சேர்ந்தால்தான் முக்தி என்பது சைவம், வைணவம் இரண்டிலும் வலியுறுத்தப்படும் ஒரு செய்தி!//

    ஆமாம் SK ஐயா!
    போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் அல்லவா!

    நன்றி் ஐயா, தொடர்ந்து தாங்கள் வந்து அன்புடன் கருத்துரைத்தமைக்கு!

    ReplyDelete
  12. // ஞானவெட்டியான் said...
    ஸ்ரீ ரங்கம் திருவுலா இனிதே முடிவுற்றது; இனி மானிட ரங்கன் திருவுலா ஆரம்பிக்கவேண்டும்.//

    ஆகா, அழகாச் சொன்னீங்க ஞானம் ஐயா! அவன் உலா முடிந்து அவன் காட்டிய வழியில் நாம் உலா தொடங்க வேண்டும் அல்லவா?

    ReplyDelete
  13. //நா.கண்ணன் said...
    அற்புதம்! அற்புதம்!!//

    நன்றி கண்ணன் சார்!
    இதோ வார இறுதியில் பாசுர மடலுக்கு ஓடி வருகிறேன்! கடந்த வாரம் பணி மிகுதி, ஆனால் பனி ஏனோ மிகுதியில்லை!

    ReplyDelete
  14. //வல்லிசிம்ஹன் said...
    ரவி,
    உணர்ச்சிக் குவியலில் எங்களை மூழ்க வைத்துவிட்டீர்கள்.நம்பெருமாளையும் நம்மாழ்வாரையும் படித்த பிறகு
    இந்த ராப்பத்து பூராவையும் மீண்டும் படிக்க வேண்டும்//

    நன்றி வல்லியம்மா!
    தங்கள் மகிழ்வுடன் படிப்பது கண்டு மகிழ்ச்சியே!

    ReplyDelete
  15. //ஷைலஜா said...
    தமிழே அமுது!
    அரங்கனோ ஆராஅமுதன்//

    மிக அருமையாச் சொன்னீங்க ஷைலஜா! அமுதும் அமுதும் சேர்ந்தால் தெள்ளமுது அல்லவா?

    //சேவிக்க வாழ்விக்கும் எம் கோன் அரங்கன்//

    அருமையான கவிதை.

    //நம்மாழ்வார் மோட்சம் கண்முன் வந்துவிட்டது இது காட்சிப்பிழை அல்லவே! உங்கள் எழுத்தின் வெற்றி ரவிசங்கர் பாராட்டுக்கள்!//

    நன்றி ஷைலஜா! எண்ணமும் எழுத்தும் அவன் அருள்! நாம் சும்மா பாடித் திரிகிறோம் அவ்வளவே! :-)

    //அரவின்மீது பள்ளி கொள் அரங்நாதன் வாழ்கவே
    பரவி நின்று தொண்டு செய்யும் பக்தர்கூட்டம் வாழ்கவே
    கரவிலாமல் அன்புகொண்டு காக்குமன்னை வாழ்கவே
    திருவரங்கச் செல்வமென்றும் சீர்த்தியோங்க வாழ்கவே!//

    வாழிக் கவிதை அழகா இருக்கு!
    பேசாம இன்னும் விரிவா எழுதி கண்ணன் பாட்டு வலைப்பூவில் பாடியும் இட்டு விடலாம்! என்ன சொல்றீங்க!

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
    //

    ஆகா, குமரன் வாங்க!
    கங்குலும் பகலும் இல்லாத கைத்தல சேவையா?
    அழகா எடுத்துக் கொடுத்து விட்டீர்கள்! மிக்க நன்றி!

    //சிவந்த கயல் மீன்கள் பாயும் திருக்காவிரியை உடைய திருவரங்கத்தவனே. இவளுக்காக நீ என்ன செய்கின்றாய்?//

    அவளை மோகினி ஆக்கி, நான் மோகித்துப் போனேனே! என்று அரங்கன் சொல்லி விடுவான் அல்லவா? :-)

    ReplyDelete
  17. கங்குலும் பகலும் என்று தொடங்காமல் 'தெளிகிலேன் முடிவிவள் தனக்கே' என்று சொல்லி எனக்கு கங்குலும் பகலும் பாசுரத்தை நினைவூட்டியது நீங்கள் தானே இரவிசங்கர். அந்த பத்து பாசுரங்களையும் இங்கே பின்னூட்டமாக இட வந்து பின்னர் அதனைப் பிறகு பதிவாகவே திருவாய்மொழி வலைப்பூவில் இடலாம் என்று நிறுத்திவிட்டேன். :-)

    ReplyDelete
  18. கைத்தலச் சேவையைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று தான் கண்டேன்.
    கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம்

    ReplyDelete
  19. தியாகபிரம்மம் இராப்பத்து திருவிழாவை திருவல்லிக்கேணியிலும் சேவித்தார் என்று ஒரு நிகழ்ச்சி படித்திருக்கிறேன். அவரை அங்கே உள்ளவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க சில கீர்த்தனைகளையும் பாடியதாகவும் அதன் தொடர்ச்சியாக இன்றைக்கும் இராப்பத்தில் ஒரு நாள் தியாகராஜரின் கீர்த்தனைகள் திருவல்லிக்கேணியில் பாடப்படுவதாகவும் அதுவே டிசம்பர் கர்நாடக கச்சேரி இசைவிழாவிற்கான முன்னோடி என்றும் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் சொல்லிப் படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  20. ஆழ்வார் மோக்ஷத்தை அருமையாகச் சொன்னீர்கள். திருவடி நிழலை அடையும் நேரம் எல்லா திருவுருவங்களாகவும் இறைவன் காட்சி அளித்துள்ளான் போலும்.

    முனியே! நான்முகனே! முக்கண் அப்பா! என் பொல்லாக் கனிவாய் தாமரைக்கண் கருமாணிக்கமே! என் கள்வா! தனியேன் ஆருயிரே!

    ReplyDelete

  21. நண்பர்களே!
    பதிவில் சொல்ல மறந்த முக்கியமான விடயங்கள் இரண்டு!

    1. ஆழ்வார் பாசுரங்களை, வீணையில் இசைப்பது திருவரங்கத்தில் வழக்கம். அரவணை சேவை என்று பெயர்! சேர்ந்தாற் போல் ஒரு முப்பது நாற்பது வீணைகளில் கலைஞர்கள் இசைத்து வணங்குவது வேறெங்கும் காண முடியாத ஒரு orchestra!

    2. பகலபத்து, ராப்பத்தில் அரங்கன் கொலுவில், பாசுரம் ஓதும் போது, அதை அபிநயித்து ஆடிக் காட்டும் அரையர் சேவையும் நடக்கும்! இதை முன்பே கைசிக ஏகாதசிப் பதிவில் பார்த்தோம்!

    இப்படி,
    இயல் (பாசுரம்)
    இசை (வீணை),
    நாடகம் (அரையர் சேவை)
    என்னும் முத்தமிழும் கொடி கட்டிப் பறக்கும் அரங்கத்தில்!

    இப்போது சொல்லுங்கள், மாயவன் தமிழ்க் கடவுள் தானே!
    தமிழ்க் கடவுள் மட்டும் தானா?
    தமிழைக் காக்கும் கடவுளும் தான்!

    ReplyDelete
  22. தமிழ்க்கடவுள் மாலவன் புகழைப் பாடும் நீங்கள் தமிழ்க்கடவுள் மால்மருகன் திருவருளால் எல்லா வளமும் பெற்று வாழ்க வாழ்க!

    ReplyDelete
  23. ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும் அரவணை என்ற பிரசாதமும் நன்றாக இருக்கும் பதிவைப்போலவே.

    ReplyDelete
  24. //குமரன் (Kumaran) said...
    அந்த பத்து பாசுரங்களையும் இங்கே பின்னூட்டமாக இட வந்து பின்னர் அதனைப் பிறகு பதிவாகவே திருவாய்மொழி வலைப்பூவில் இடலாம் என்று நிறுத்திவிட்டேன். :-)//

    ஆகா சொல்லுங்க குமரன்! எப்போது திருவாய்மொழி வலைப்பூ?

    அதுவும் நம்மாழ்வார் பதிவில் அறிவிப்பு ஆகி விட்டதே! மிக நன்று!

    ReplyDelete
  25. //குமரன் (Kumaran) said...
    கைத்தலச் சேவையைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று தான் கண்டேன்.//

    அரங்கத்தில் இரண்டு முறை நடக்கும் குமரன்! ஐப்பசி மூலம், மார்கழியில் ராப்பத்து ஏழாம் நாள்!

    அல்லிக்கேணியிலும் இச்சேவை உண்டே!

    ReplyDelete
  26. //குமரன் (Kumaran) said...
    இன்றைக்கும் இராப்பத்தில் ஒரு நாள் தியாகராஜரின் கீர்த்தனைகள் திருவல்லிக்கேணியில் பாடப்படுவதாகவும் அதுவே டிசம்பர் கர்நாடக கச்சேரி இசைவிழாவிற்கான முன்னோடி என்றும்//

    புதிய தகவல்! நன்றி குமரன்!

    ReplyDelete
  27. // குமரன் (Kumaran) said...
    தமிழ்க்கடவுள் மாலவன் புகழைப் பாடும் நீங்கள்
    தமிழ்க்கடவுள் மால்மருகன் திருவருளால்
    எல்லா வளமும் பெற்று வாழ்க வாழ்க!//

    குமரன் அருள் முன்னிற்கும்!

    நன்றி குமரன்!

    ReplyDelete
  28. //பத்மா அர்விந்த் said...
    ஸ்ரீரங்கத்தில் கிடைக்கும் அரவணை என்ற பிரசாதமும் நன்றாக இருக்கும் பதிவைப்போலவே//

    நன்றி பத்மா ஜி.
    ஆகா அரவணைப் பாயசத்தை நினைவு படுத்தி விட்டீர்களே! மிகவும் கெட்டியான பாயசம்! இலையில் திடமாக நிற்கும், வழிந்து ஓடாது! அடுத்த முறை செல்லும் போது இதைச் சுவைக்க வேண்டும்!

    ReplyDelete
  29. Sri KRS,

    Irapathu-Pagalpathu thodurnthu padithu ARANGANai nnerile sendru sevitha palanai adaithom.

    Nandri solla varthaigal illai.

    Natrpani thodara vanangum

    sundaram

    ReplyDelete
  30. திரு தியாகராஜ பாகவதர் பின்னால் இப்படி ஒரு நிகழ்வா??கேட்கவே நெகிழ்வாக இருக்கு.
    ராப்பத்து இதெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர பார்த்ததில்லை.விபரமாக போட்டு தூள் கிளப்பிட்டீங்க.

    ReplyDelete
  31. அருமை கே.ஆர்.எஸ்....இரண்டு தினங்கள் கழித்து இன்றுதான் எனக்கு படிக்க முடிந்தது....

    ஏதோ வேறு ஒரு பதிவின் பின்னூட்டத்தில் நான் உங்கள் மூவரிடமும் (ரங்கன், குமரன், நீங்கள்) பொதுவாக கேட்டேன் ராப்பத்து-பகல்பத்து பற்றி...எனக்கு இத்துணை அறிய தகவல்களையும், அரங்கனையும் காண்பித்தமைக்கு...

    ReplyDelete
  32. //Anonymous said:
    Sri KRS,
    Irapathu-Pagalpathu thodurnthu padithu ARANGANai nnerile sendru sevitha palanai adaithom.
    Nandri solla varthaigal illai.
    Natrpani thodara vanangum
    sundaram//

    நன்றி சுந்தரம் சார், தொடர்ந்து வந்து கருத்து சொன்னீர்களே! உங்கள் உற்சாகமும் ஒரு ஊட்டம் தான்!

    ReplyDelete
  33. //வடுவூர் குமார் said...
    திரு தியாகராஜ பாகவதர் பின்னால் இப்படி ஒரு நிகழ்வா??கேட்கவே நெகிழ்வாக இருக்கு//

    குமார் சார், ஒரு சிறு திருத்தம்.
    அவர் தியாகராஜ பாகவதர் இல்லை!:-)
    தியாகராஜர் மட்டும் தான்!
    பாகவதர் என்று சொல்வது பொருள் பொருந்தினாலும், பின்னால் சினிமாவில் கலக்கிய தியாகராஜ பாகவதரைத் தான் பாகவதர் என்று பரவலாகச் சொல்லுவார்கள்!

    //ராப்பத்து இதெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேனே தவிர பார்த்ததில்லை.விபரமாக போட்டு தூள் கிளப்பிட்டீங்க//

    நன்றி குமார் சார்! தாங்கள் மகிழ்ந்து வாசித்தமைக்கு!

    ReplyDelete
  34. //Mathuraiampathi said...
    ஏதோ வேறு ஒரு பதிவின் பின்னூட்டத்தில் நான் உங்கள் மூவரிடமும் (ரங்கன், குமரன், நீங்கள்) பொதுவாக கேட்டேன் ராப்பத்து-பகல்பத்து பற்றி...எனக்கு இத்துணை அறிய தகவல்களையும், அரங்கனையும் காண்பித்தமைக்கு...//

    நன்றி மெளலி சார்!
    தாங்கள் திருப்தியுடன் வாசித்ததே அடியேனுக்கும் திருப்தி.

    அது சரி! நான் தெரியும், குமரன் தெரியும்! யார் அவர் ரங்கன்? தெரியாத பேரா இருக்கே! ஒரு கால் அரங்கனோ? :-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP