Showing posts with label Community. Show all posts
Showing posts with label Community. Show all posts

Friday, February 26, 2010

(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2

அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!

சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா நடக்கிறது??? இவரைக் கேட்பார் எவருமே இல்லியா?"

இந்தக் கதையின் முந்தைய பாகம் இங்கே!
அந்தப் பதிவு வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு! அப்போ அடியேனின் தமிழ்மண நட்சத்திர வாரம்! :)
அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால், கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)

இதை இன்னிக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்னா-ன்னு கேட்கறீங்களா?
இன்று தான் அந்தக் கதை நாயகனின் பிறந்த நாள்! (மாசி ஆயில்யம்! Feb 26, 2010) - Happy Birthday Dhanur Daasa! :)
பிள்ளை உறங்கா வில்லி தாசனே! - பின்னாளில் திருவரங்க ஆலயத்துக்கே "மேலாளன் ஆன வேளாளனே"! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



இருள் மயங்கும் வேளை! அருள் முயங்கும் வேளை!
அவன் கையைப் படக்-கென்று பிடித்துக் கொண்டார்...விறுவிறு என்று இழுத்துக் கொண்டு வருகிறார்...கிடுகிடு கிடுவென்று...

தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் வீதி தாண்டி,
ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,

இதோ வந்தாகி விட்டது காயத்ரி மண்டபத்துக்கு!
24 காயத்ரி எழுத்துக்களும் 24 தூண்களாய்த் தாங்கும் பேரமைதிக் கருவறை!
அதன் மேல் அந்த ஓங்கார விமானம்!
ஓம் என்பது போலவே வளைந்து நெளிந்த....பிரணவாகார ரங்க விமானம்!

குறுகிய வாசல்! உள்ளம் உருகிய வாசல்!
நெய் தீப மணமும், துளசீ மணமும் துளைக்கின்றது!
வட-தென் காவேரிக் குளிர்ச்சி உள்ளேயும் சிலிர்க்கிறது!
வீணை ஏகாந்தம் இந்த இரவிலும் இசைக்கிறது!

ஆயர்ப்பாடி வெண்ணெய் வீச்சம் கருவறையில் வீசுகிறது!
பச்சைக் கர்ப்பூர நெடி...அன்று கோதையின் பச்சை உடம்பை என்னமோ பண்ணியதே! இன்று என் உடம்பையும் என்னமோ செய்கிறதே!!!

தனுர்தாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
"அவளை விட அழகிய கண்ணைக் காட்டுறேன்-ன்னு சொன்னவரு, இங்கே கூட்டிக்கிட்டு வராரே! மாடத் தெரு ஆடலாளியைக் காட்டுவாரு-ல்ல நினைச்சோம்"! - அந்தப்புரம் என்று எண்ணி வந்தவன் நொந்தப்புரம் ஆனான்!
ஆனால்...ஒரே விநாடி தான்....திரை விலகியது.....அய்யோ.....

கரிய..பெரிய..உரிய..விரிய..சரிய..தெரிய..அரிய..உருவம்!!
ஜென்ம ஜென்மத்துக்கும்....
மெல்லிய தீபம், அசைத்து அசைத்துக் காட்டப்படுகிறது!
பாதத்தில் ஜொலிக்கும் தீபம்....சிறிது சிறிதாக மேலேறுகிறது!!

* திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
* சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே
* உந்தி (தொப்புள்) மேலதன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
* திருவயிற்று உதர பந்தனம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

"தனுர்தாசா...என்ன சிலையாக நின்று விட்டாய்? என்ன காண்கிறாய், சொல்?"

* ஆர மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
* கண்டம் (கழுத்து) கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
* செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

"என்ன தடுமாறுகிறாய்? அருகில் இதற்கென்றே உள்ள இரண்டு திருமணத் தூண்களைப் பிடித்துக் கொள்! விழுந்து விடாதே! சொல், சொல்...என்ன செய்கிறது?"

பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!!





அரங்கனின் பெருந்தாமரைக் கண்களின் நேராக நேத்ர தீபம் சுழல்கிறது!
நாமும் சுழல்கிறோம்!
நம் மனசென்னும் ஆழியுட் புக்கு...முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழையாய்...
நேத்ரானந்த தீப சேவை!

ஒன்று மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்,
இன்று மறப்பேனோ ஏழைகாள்? - அன்று
கருவரங்கத்து உட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கத்து மேயான் திசை!!!

"என்னது? பெரியவாய கண்களா?
அடேய்....நீ கண்டாயா? கண்டு என்ன செய்தாய்? சொல்! தனுர்தாசா....சொல்!"

"கண்டேன்! கண்டேன்! நாடி நான் கண்டு கொண்டேன்!
என்னையே பார்க்கும் கண்கள்! என்னையே விழுங்கும் கண்கள்!
இல்லை இல்லை! உலகையே விழுங்கும் கண்கள்!
ஐயோ! கரியவனின் பெரிய வாய கண்கள்!"

கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும், முடிவில்லதோர் எழில்
நீலமேனி...ஐயோ....நிறை கொண்டது என் நெஞ்சினையே!


"என்னது ஐயோ-வா? எதற்கு ஐயோ என்று சொல்கிறாய்?"

"தாங்க முடியவில்லை சாமீ! நடுங்குகின்றேன்! என்ன செய்தீர்கள் என்னை?
என் கண்கள் அந்தக் கண்களோடு ஒட்டிக் கொண்டது போல் இருக்கே!
வைத்த கண்ணை மீண்டும் எடுக்க முடியவில்லையே!
அந்தக் கண்களே வெள்ளைப் பாற்கடல் போல் இருக்கே!
அந்த வட்ட விழி - நட்ட நடு - கருமணியில்.....நானும் தெரிகிறேனே!"

"ஓ! அந்தக் கண் மேல் உந்தன் கண்ணை வைத்து விட்டாயா?
இனி, அவனும் உன் மேல் கண்ணை வைத்து விட்டான்!
இனி, உன்னைக் கன்ணுள் வைத்துத் தாங்குவான்!
இனி, என்ன செய்யப் போகிறாய் தனுர்தாசா?"

என் அமுதினைக் கண்ட கண்கள்,
மற்று ஒன்றினைக் காணாவே!
மற்று ஒன்றினைக் காணாவே!!
மற்று ஒன்றினைக் காணாவே!!!

திரையிடப்பட்டது! முறையிடப்பட்டது!
அரங்கனில் கிறங்கினான்! அங்கேயே உறங்கினான்!


மல்யுத்த வீரன், மல்லாண்ட திண்தோள் தனுர்தாசன், இராமானுசரின் சீடர்களுள் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான்!
குருவை...அவன் தேடிப் போகவில்லை! அவனைத் தேடி...குரு வந்தார்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இன்று போலி குருக்களைத் தேடி, போலியாய் அலையும் பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியது இது!
குருவைத் தேடித் தேறவும் முடியுமா? குரு போலியா இல்லையா என்று கண்டுபிடிக்கும் ஞானம் இருந்திருந்தால் நீயே குருவாக ஆகியிருப்பாயே!
அந்த ஞானமே இல்லாத போது, நீ எதை வைத்து ஒரு குருவைச் சோதிக்க முடியும்?

உன் பேராசைகள் நிறைவேறுமா என்று மை போட்டுப் பார்க்கவல்ல குருவைத் தேடி அலைகிறாயா?
பேராசையாக அலைந்தால், பேராசிரியர் தான் கிடைப்பார்!
பேர் ஆசிரியர் - பேருக்கு ஆசிரியர் - பேராசைப் பேராசிரியர்!


அதனால் "நல்ல" குருவை எடை போட்டுத் தேடி "அலையாதே"!
தாகமாய் இரு! தண்ணீர் கிடைக்கும்!!
மாணவனாய் இரு! ஆசான் கிடைப்பார்!!
குரு இல்லை என்றால்...வாழ்க்கைப் பாடங்களையே...இறைவன் உனக்கு குருவாக ஆக்குவான்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


தனுர்தாசன் பெரிய பண்டிதன் கிடையாது! முரட்டு மல்லன்!
அவனைச் சேர்த்துக் கொண்டு் அரசவை வாதப் போரில் எல்லாம் வெல்ல முடியாது!
ஆனாலும் குழாத்தில் அவனையும் சேர்த்துக் கொண்டார் இராமானுசர்!
பயன் அன்று ஆகிலும், பாங்கு அல்லன் ஆகிலும், திருத்திப் பணி கொள்வது தானே குருவின் சிறப்பு!

சீடனின் உள்மனம் குருவுக்குத் தெரியும்! அங்கு கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லவே இல்லை! இது தெரியுமா, அதைப் படிச்சிருக்கியா என்றெல்லாம் ஒன்னுமே கேட்கவில்லை!
முக்கியமாக "உன் குலம்-கோத்திரம் என்ன? கலை-ஆசார்யன் என்ன?" என்ற கேள்வி எல்லாம் எழவே இல்லை!
சீடர்களுள் சீடராய்ச் சேர்த்துக் கொண்டார்!
தனுர் தாசன் என்று இருந்தவனை, "பிள்ளை உறங்கா வில்லி" என்னும் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொடுத்து, தீட்சையும் அளித்து விட்டார்!

ஆனால் அவனுக்கு குடும்பம்-ன்னு ஒன்னு இருக்கே!
என்ன தான் அவள் நடன மங்கையாக இருந்தாலும்,
சாத்திரத் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆயினும்...
அவள்-அவன்...இருவரும் ஆருயிர் காதல் துணைகள் ஆயிற்றே!
ஹேமாம்பா என்ற அவளுக்கும் "பொன்னாச்சி" என்று தீட்சை அளித்து விட்டார்!

இருவரையும் இராமானுசர் பிரிக்கவில்லை! அதே சமயத்தில் தம்பதிகளை மடத்திற்குள்ளே சேர்க்காமல், தனி இல்லத்தில் குடியிருத்தினார்!
காதலன்-காதலி இருவருமே தொண்டில் சிறந்து, சிறிது நாளில் பலரின் நன்மதிப்பையும் பெற்றனர்!


என்ன தான் வில்லியைச் சேர்த்துக் கொண்டாலும், அவன் கட்டை உருவம், நாலாம் வருணம் என்ற எண்ணம் சில சீடர்கள் மனத்தில் உறுத்தலாகவே இருந்தது போலும்!

அவனிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் ஒட்டி உறவாடாமல், "தங்களுக்குள் மட்டும் தனிக் கோஷ்டியாக" இருந்தனர்!
மனதுக்குள் சிரித்துக் கொண்ட இராமானுசர், அவர்களை அடக்கித் திருத்த வேறு வழிகளைக் கையாண்டார்...

தினமும் ஆற்றில் குளிக்கப் போகும் முன், அந்தணச் சீடனின் தோள் பற்றி நடப்பார்!
குளித்து முடித்த பின், வில்லியின் தோள் பற்றி நடந்து வருவார்!
அச்சோ...குளிச்சி முடிச்ச பிறகும் இப்படித் தீட்டாயிடுத்தே-ன்னு சொல்லாத முடியாத படிக்கு,
பேச்சால் பேசிக் கொண்டிராமல், செய்கையால் சாதியின் வாயை அடைப்பது, இராமானுசருக்கு, கை வந்த கலை!

"சுவாமி, நீங்க அந்த வில்லிக்கு ரொம்பவே இடம் கொடுக்கறீங்க"

"ஏன்? கொடுத்தா தப்பா சிஷ்யர்களே? வில்லியின் பண்பட்ட மனம் இங்கே யாருக்காச்சும் இருக்கா?"

"அப்படி என்ன பண்பட்டுட்டான் அவன் மட்டும்?"

"சொல்கிறேன்...இப்போது போய்த் தூங்குங்கள். பின்னிரவு ஆகி விட்டது!"

சீடர்கள் தூங்கச் சென்றார்கள்! சிறிது நேரம் கழித்து உடையவர் தானே சென்று, அத்தனை பேரின் மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள் போட்டார்!
தீராத விளையாட்டுப் பிள்ளை! உடையவர் மடத்திலே சீடருக்கு ஓயாத தொல்லை! :)

மறுநாள் காலை...மடத்தில் சுப்ரபாதமா ஒலித்தது? இல்லையில்லை!
கேட்கக் கூசும் வசவு வார்த்தைகள் ஒலித்தன!
சீடர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.

"சீடர்களே, சாதாரண ஒரு நூல் துண்டுக்கா இத்தனை பேச்சு பேசுகிறீர்கள்? தகுமா இது?
பல நூல் கற்ற நீங்கள், சில "நூலுக்கு", உயர் நூலை அடகு வைத்தீர்களே!
ஆக, உங்கள் யாவருக்கும் இது நாள் வரை.......
வாய் தான் மறையோதிற்றா? மனம் ஓதவில்லையா?"

"குருவே!"

"சரி சரி, உங்களைச் சோதிக்க நான் தான் ஆடைகளைக் கத்தரித்தேன்! நீங்கள் பேசிய இழிசொல் அத்தனையும் என்னையே சேரட்டும்!
உம்ம்ம்..முரட்டு மல்லன் வில்லி கூட இப்படி எல்லாம் பேசியதில்லை!"

"ஆசார்யரே...அய்யோ...மதி இழந்தோம்! கேவலமாய் நடந்து கொண்டோம்! மன்னியுங்கள்! இப்போதே வில்லியிடம் சென்று மன்னிப்பு கோருகிறோம்!"

"வேண்டாம்! அவன் லட்சணம் என்ன என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம்!
இன்று இரவு வில்லியை நான் மடத்துக்கு அழைத்துப் பேசப் போகிறேன்!
அந்தச் சமயம் பார்த்து நீங்கள் அவன் வீட்டுக்கு மாறுவேடத்தில் சென்று, பொன்னாச்சியின் நகைகளை திருடிக் கொண்டு வாருங்கள்!"

"என்ன! திருட்டா? குருவே..."

"உம்...சொன்னதைச் செய்யுங்கள்! ஆசார்யரின் ஆக்ஞை!"



வில்லி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான்! கையில் நகை மூட்டை!

"சாமீ, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, என் வீட்டில் யாரோ சில கொள்ளையர்கள் புகுந்து களவாடியுள்ளனர்!
உறங்கிக் கொண்டிருந்த பொன்னாச்சி எழுந்து பார்த்து அலற நினைத்தாள் போலும்!
ஆனால் கொள்ளையர்கள் நாமம் தரித்து, திருச்சின்னங்கள் தாங்கி இருப்பதைப் பார்த்து அமைதியாகி விட்டாள்!

படுத்துக் கொண்டிருந்தவள், சரி தன் மேலுள்ள நகைகளையும் எடுத்துக் கொள்ளட்டுமே என்று திரும்பிப் படுத்தாள் போல!
ஆனால் அவள் அசைவு கண்டு அவர்களோ பயந்து ஓடி விட்டார்கள்!

இது என்ன சோதனை சுவாமி? பூலோக வைகுந்தம் என்று சொல்வீர்களே!
அரங்கத்திலா இப்படித் திருட்டு நடக்கிறது?
அதுவும் அடியார்கள் போல் தோற்றம் அளிப்பவர்கள் இப்படிச் செய்வது நமக்கு அல்லவா இழுக்கு??

அதான் பொன்னாச்சியின் சம்மதத்தோடு அத்தனை நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து வந்து விட்டேன்! இதை ஏற்றுக் கொண்டு அந்த ஏழைப்பட்ட அடியார்களிடம் கொடுத்து விடுங்கள்!
அன்னதானம் போன்ற திருப்பணிகளும் செய்ய வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்! அப்படிச் செய்தால் திருட்டு ஒழிந்து, நம் இயக்கம் காப்பாற்றப்படும்".

இராமானுசர் மற்ற அத்தனை சீடர்களையும் திரும்பி ஒரு பார்வை பார்க்க...
அனைவருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது!
இத்துப் போன மேல் துண்டுக்குச் சத்தம் போட்ட நாம் எங்கே?
சத்தம் போட்டுத் தாக்குவதே தொழிலாகக் கொண்டிருந்த வில்லி எங்கே?

சீடர்கள் அத்தனை பேரும்...குலம் பார்க்காது...
வில்லி தாசனின் காலில்...
நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்க,
நடந்த நாடகத்தை ஏதுமறியா வில்லி விழி விழியென விழித்தான்!

இராமானுசர் நடந்தது அத்தனையும் அவனுக்கு விவரித்தார்! இனி அடியவர் கூட்டத்தில் எவரும் குல விசாரிப்பு செய்யக் கூடாது என்பதை அப்போதே சட்டமாக இயற்றினார்!

"அடியவரைக் குலப் பரிசோதனை செய்பவன், பெற்ற தாயை...யோனிப் பரிசோதனை செய்தவனுக்கு ஒப்பாவான்!!!"
என்று அவர் அதிரடியாக முழங்கியதைக் கேட்டு ஸ்ரீரங்கமே அதிர்ந்து போனது!
அப்படி ஒரு வார்த்தை எம்பெருமானார் இராமானுசர் வாயில் இருந்து வரும் என்று எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

கொஞ்ச நாளில், வில்லி சிறந்த மாணாக்கனாகத் தேறி வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை பெற்றான்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆனான்!
பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று ஆழ்வார் பாசுரங்களை நாட்டியம் செய்து பாடிப் பரவினாள்! அவர்கள் காதல் ஈரப் பாசுரம் போல் ஈரமாகவே வளர்ந்தது!

மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் - கீழிருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்!


எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
பொன்னாச்சி உடனுறை பிள்ளை உறங்கா வில்லி தாசன் திருவடிகளே சரணம்!!
Read more »

Wednesday, October 22, 2008

சீடனின் மனைவிக்கு விவாகரத்து செய்து வைப்பாரா?

சரி போகட்டும், உன் மனைவியை எனக்குத் தந்து விடுகிறாயா சீடனே? - ச்ச்சீய்...என்ன கேள்வி இது? கேவலமாக இல்லை? அதுவும் கேட்பது யார்? கோபுரம் ஏறி மட்டுமே கூவத் தெரிந்த ஒரு குரு!
இந்த இப்பிறவிக்கு மட்டும் வழிகாட்டும் மந்திரம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா? அடுத்தவன் பெண்டாட்டியைத் தனக்குத் தந்து விடுகிறாயா என்று கேட்கிறார் இராமானுசர்!

இந்தக் காலத்துப் துறவிகள் பலர் சொல்கிறார்களே....
இகத்தைப் பார்த்தாலே சுகத்தைப் பெறலாம்;
அந்தப் பர-த்தை, பரத்தை வீட்டில் பெற்றுக் கொள்ளலாம் என்று!
அது மாதிரியா, இந்தத் துறவி?

மனைவிக்குக் குடை பிடித்து வந்த தனுர்தாசனை, என்னமோ ஏதோ சொல்லிக் குழப்பி, அரங்கன் கண்ணைக் காட்டி மயக்கி...

எல்லாம் இதற்குத் தானா? அழகில் அழகு வாய்ந்த சிவப்புச் சிரிப்பழகி பொன்னாச்சிக்காகத் தானா? இவரா ஆசார்யர்? ஹூம்!

தம்பதிகள் என்பதால், இராமானுச மடத்தில் தங்காமல், வெளியே தங்கி இருந்தார்கள் பொன்னாச்சியும், தனுர்தாசனும்.
அவர்களுக்குள் சில நாளாகவே கருத்து வேறுபாடு! சண்டை! ஒருவருக்கொருவர் பேசிக் கூட கொள்வதில்லை! எல்லாமே சைகை பாஷை தான்!

அன்பு மிக்க நண்பர்களிடையே கூட, சண்டைன்னு வந்துட்டா, ஒன்னு உடனே போயிடும்; இல்லை போகாமல் அந்த அன்பைச் சுற்றியே திரும்பித் திரும்பி வரும்! :)
இங்கோ கருத்தொருமித்த காதல் தம்பதிகள்! யார் கண்ணு பட்டதோ...ஆண்மகன் தனுர்தாசன் மனமிரங்க மறுக்கிறான்!

அப்படி என்ன தான் செய்து விட்டாளாம் இந்தப் பொன்னாச்சி?
செல்வச் செழிப்பிலே வளர்ந்தவள், பழைய சுபாவம் மாறாமல், அடியார்களிடத்திலே "தான்" என்ற அகம்பாவம் காட்டி விட்டாளாம்! அதுவும் எப்படி-ங்கிறீங்க?

ஒரு நாடகத்துக்காக அந்தணர்கள் தம் வீட்டில் திருட வந்த போது, சரி பாவம்...பிழைக்க வழி இல்லாதவர்கள்; எடுத்துக் கொண்டு போகட்டும், என்று திரும்பிப் படுத்து விட்டாளாம்! அவள் திரும்பிய சத்தம் கேட்டு, அவர்கள் பயந்து ஓடி விட, வீட்டுக்கு வந்த தனுர்தாசன், விஷயம் அறிந்து கொள்கிறான்.

"தன்" நகை, "தான்" கொடுக்கிறோம், "தான்" தந்து அடியார்கள் பிழைக்கட்டும் - என்று அவளுக்குத் "தான்" ரொம்பவே இருக்குதாம்!
ஹிஹி! தனுர்தாசன் சொல்லும் காரணம் பாருங்கள்!
இதனால் கொஞ்ச நாளாகவே இருவருக்கும் சண்டை. ச்சே சண்டையில்லை! பாவம், "பாவம்" புரியவில்லை! சு-பாவம் புரியவில்லை!

விஷயம் இராமானுசர் காதுகளுக்கு அரசல் புரசலாக வருகிறது. துறவி தானே? எதுக்குத் தேவையில்லாமல் கணவன்-மனைவி விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்க வேண்டும்?
பொன்னாச்சியின் மனமும் நன்கு அறிந்தவர், தனுர்தாசன் உறுதியும் நன்கு அறிந்தவர். அதான் சமயம் வரும் போது பயன்படுத்திக்கப் பாக்கறோரா?
ஆசை யாரை விட்டது-ன்னு கேக்கறீங்களா? ஆமாம், ஆசை தான்! மேலே படிங்க!



"அப்பா துனுர்தாசா, ஏன் உனக்குப் பொன்னாச்சியிடம் இவ்வளவு விரக்தி? நானும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன்; பூசைகளில் கூட ரெண்டு பேரும் எட்டி எட்டி நிற்கிறீர்கள்?"

"சாமி, நானே சொல்லணும்-னு நினைச்சேன்! எனக்கு ரொம்ப விரக்தியாகி விட்டது சுவாமி! அவள் அகங்கார-ஆணவமெல்லாம் வெளியில் தெரிவதில்லை! ஆனா புத்தியில் ரொம்பவே இருக்கு!"

"நிச்சயமாகத் தெரியுமா?"

"தெரியும் சாமி! அவளுக்கு எப்பமே "தான்" தான்! சரியான கர்வி! பொன்னாச்சி இனி எனக்கு வேணாம் சாமி!"

"வேணாமா? என்ன உளறுகிறாய் தனுர்தாசா? வேணாம்-னா என்ன அர்த்தம்?"

"வேணாம்-னா வேணவே வேணாம்! பேசாம எனக்கும் சந்நியாசம் கொடுத்துருங்க! அவளோடு குடும்பம் நடத்த எனக்கு இஷ்டமில்லை! இனி அவள் அடியேனுக்கு வேணாம் சாமீ"

"ஓ...அப்ப வேணாம்-னு உறுதியா இருக்க! ஹூம்ம்ம்ம்!
சரி, அப்படி வேணாம்-ன்னா அவளை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?"

(சுற்றிலும் உள்ள மக்கள், அடியார்கள், அந்தணர்கள், கோயில் அலுவலர்கள் எல்லாம் வாயடைத்துப் போகிறார்கள்! பொம்பளை பொன்னாச்சி நடுங்குகிறாள்! ஆம்பிளை தனுர்தாசன் மட்டும் அப்போதும் சிலை போல நிற்கிறான்!

ஆலயத்தில் தமிழ் ஓங்கிக் கொண்டு வருவதைப் பிடிக்காத சில நல்ல உள்ளங்களுக்கு மட்டும்...வாயெல்லாம் சிரிப்பு! இதை எப்படியாவது ஊதிப் பெருசாக்கி, இராமானுசருக்குக் களங்கம் கற்பித்து விடலாம், எல்லாம் அந்த அரங்கன் தானாக எப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்குறான் பாரு! - என்று உள்ளூரக் குதூகலித்துப் போகிறார்கள்)



"ஓ...அப்ப வேணாம்-னு உறுதியா இருக்க! ஹூம்ம்ம்ம்! சரி, அப்படி வேணாம்-ன்னா அவளை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?"

"சாமீ...என்ன கேள்வி இது? எப்ப நாங்க ரெண்டு பேரும் உங்க திருவடிகளில் வந்து சேர்ந்தோமோ, அன்னிக்கே நாங்க உங்களுக்குச் சொந்தமாயிட்டோமே!
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு, நின் அருளே புரிந்து இருந்தேன்; இனி என்ன திருக்குறிப்பே?-ன்னு நேத்து தானே பாடம் நடத்தினீங்க?"

"ஓ...அப்படி வரியா? சரி! என்னுடையவளை நான் எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? நான் யாருக்குப் பிரியப்படுகிறேனோ, அவர்களுக்கும் கொடுத்து விடலாம் அல்லவா?"

(ஓ...பொன்னாச்சியைத் தேவதாசியாக்க திட்டம் போடுகிறாரோ இந்த இராமானுசர்? யப்பா, பலே ஆளா இருப்பாரு போல இருக்கே! - என்று சிலர் யோசிக்கவே தொடங்கி விட்டார்கள்!)

"ஆமாம் குருவே! உங்களுக்கு யார் பிரியமானவரோ, அவர்களுக்கு அவளைக் கொடுத்து விடலாம்! ஏன் இந்தக் கேள்வியெல்லாம் சாமீ?"

"யப்பா தனுர்தாசா! எனக்கு இந்த கோஷ்டியிலே பல பிரியமானவர்கள் இருக்கிறார்கள்;
ஞான யோகத்துக்குக் கூரத்தாழ்வான்,
கர்ம யோகத்துக்கு முதலியாண்டான்,
பக்தி யோகத்துக்கு திருமலை அனந்தாழ்வான்,

ஆனால் ஏனோ தெரியலை,
பிரியத்துக்கு மட்டும் பிள்ளை உறங்கா வில்லி என்னும் தனுர்தாசன் தான் இருக்கான்!
தனுர்தாசன் என்னும் நீயே இந்த இராமானுஜனுக்குப் பிரியமானவன்!
அதனால் உனக்கே பொன்னாச்சியைக் கொடுக்கிறேன்! புதுசா கொடுக்கறேன்
!"

"சாமீஈஈஈ"

"இது நாள் வரை அவளை உன் மனைவி-ன்னு நினைச்ச!
இப்ப நான் அவளைப் பெற்றுக் கொடுக்கிறேன்!
இனி அவளை இந்த இராமானுசன் மகள்-ன்னு நினைச்சிக்கோ!"

"சாமீ...."

"என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"

"அச்சோ.....ஓஓஓஓ....இறைவா!" (உடையவர் வாயை ஓடோடி வந்து மூடுகிறான் தனுர்தாசன்!)
(குரு, மகான், ஆசார்யர் அப்படி-ன்னா பத்தடி தள்ளி நிக்கணும், கை கட்டி, வாய் பொத்தி, தொடாமப் பேசணும் - இதெல்லாம் இந்த இராமானுசரிடம் இல்லையோ?)

"தனுர்தாசா! பொன்னாச்சியை நான் அறிவேன்! அவளுக்கு ஆணவம் எல்லாம் இல்லை! அவள் செய்தது "தான்" என்பதில் சேர்த்தியாகாது!
அப்படிப் பார்த்தால், நீ கூடத் தான் அவளை எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக்குங்க-ன்னு சொன்ன? அது என்ன "நீ" சொல்வது? உனக்கென்ன அப்படி ஒரு உரிமை? அப்போ உனக்கும் "தான்" என்பது இருக்கு தானே?"

(மெளனம்)

"துறவிக்கு எது கூடினாலும், உறவு மட்டும் கூடவே கூடாது! துறவிகள் தங்கள் பழைய உறவினர்களை அதிகாரத்தில் அண்ட விடவே கூடாது! ஆனாலும், இந்தத் திருவரங்கமே சாட்சியாகச் சொல்கிறேன்!
இனி இவள் என் உறவு! இராமானுஜன் மகள்! இவள் இராமானுஜ தயா பாத்ரம்!
என் பாத்திரம், அவள் பத்திரம்! சரியா?"

இராமானுஜ தயா பாத்ரம், கருணா வத்சல குணார்னவம்!
வில்லீ சர்வ மங்கள நாயகீம், வந்தே வைஷ்ணவ வனிதா மணிம்!

(பொருள்: இராமானுசனின் தயைக்கு உகந்தவள்; கருணையும் வாத்சல்யமும் கொண்டவள்!
வில்லியின் மங்கள மனைவி! அம்மா, வைணவ வனிதா மணியே! உனக்கு வந்தனங்கள்!)

தயா பாத்ரம் என்பது பின்னாளில் வரும் குருமார்களுக்கு, முன்னாள் ஆச்சார்யர்களின் பெயரை ஒட்டிக் கொடுக்கும் பட்டம்! தன் ஆச்சார்ய சம்பந்தத்தைக் காட்ட அவரவருக்கு உள்ள சுலோகம் தான் இந்த தயா பாத்ரம்!
இராமானுசருக்குப் பின்னால் வந்த வேதாந்த தேசிகருக்கு, "இராமானுஜ தயா பாத்ரம், வந்தே வேதாந்த தேசிகம்" - அப்படி-ன்னு தயா பாத்ரம் இருக்கு!

அப்படிப்பட்ட ஒன்றை,
குலம் அறியாத, ஞான-கர்ம-பக்திகளைச் செய்யாத ஒருவருக்கு,
அதுவும் மாதம் சில நாள் தீட்டாகும் என்று சொல்லப்படும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்படுகிறது என்றால்? அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு?
அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்! பேச எவர்க்கும் வாய் வரவில்லை! எல்லாரும் உடையவர்-வில்லி-பொன்னாச்சியையே பார்க்கிறார்கள்!

தொட்டதெற்கெல்லாம் குடும்பச் சண்டை, மண முறிவு என்று காலம் ஆகிப் போயிற்று! அவரவர் கருத்தில் உறுதிப்பாடு அதிகம் ஆகிறது!
இதில், கணவன்-மனைவி விஷயத்தில் எல்லாம் கூட மூக்கை நுழைத்து, அவரவர் கோப தாபங்களைக் கிளறாமல், புதைந்து போன அவர்களின் அன்பை மீண்டும் பதமாய் வெளிக்கொணரனும்-னா எப்படி?



யோவ், இந்த வேலையெல்லாம் ஒரு ஆன்மீகவாதிக்குத் தேவையா?
இந்த இராமானுசர் சமயப் பணி செய்ய வந்தாரா இல்லை சமூகம்-குடும்பம்-னு பணி செய்ய வந்தாரா? எதுக்கு இவருக்கு இந்த வீண் வேலை?
இப்படி ஒரு கருணைக் குணம் ஆன்மீகத்துக்கும், ஆன்மீகப் பணி செய்வபர்களுக்கும் அவசியம் தேவை தானா?

ஞான உச்சியின் மேல் அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி!
இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு?
என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? - ஹிஹி....கருணை இருக்கணுமாம்! அதைத் தான் கந்தர் அலங்காரம் பதிவில் முன்பு சொல்லி இருந்தேன். புயலும் சண்டையும் கிளம்பியது! :)

இராமானுசருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ துறவிகள், குருமார்கள், ஆச்சார்யர்கள் வந்திருக்கிறார்கள்!
அத்தனை பேரையும் கருணை என்னும் தராசுத் தட்டில் வைத்து, அவர்கள் கூடவே இறைவனையும், அதே தட்டில் வைத்து, எதிர்த் தட்டில் உடையவரை நிறுத்தினால், பெருமாள் உட்பட அவர்கள் எல்லாம் உயர்ந்து இருக்க, தராசில் இவர் தாழ்ந்தே இருப்பார்!

இதை எதையோ நிறுவுவதற்காகச் சொல்லவில்லை! இதை நானும் சொல்லவில்லை! இதைச் சொல்பவள் சாட்சாத் மகாலக்ஷ்மி-அரங்கநாயகித் தாயார்!

திருமலை வேங்கடவன் பெருமாளே என்று ஊர் அறிய உறுதி செய்தாயிற்று! பின்னால், குழப்பம் விளைவித்த எல்லாரையும் கழுவில் ஏற்றத் துணிந்தான் மன்னன். ஆனால் அத்தனை பேரையும், மன்னன் ஆணையை மீறி விடுவித்த கருணை! - தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

கடலில் போட்ட தில்லை கோவிந்தராசப் பெருமாளை, மீண்டும் அதே இடத்தில் நிறுவி, வீம்பு காட்ட வேண்டுமா? மதப் போட்டிகளால் மக்களுக்கு அல்லவா வீண் பிரச்சனை? வேணாம்!
திருப்பதி அடிவாரத்தில் சிலையை வைத்துக் கொள்ளலாம்!
தில்லையின் ஈசனைச் சிந்தையில் வைத்துக் கொள்ளலாம்!
யாருக்கு வரும் இந்தக் கருணை? - தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் உன் அருளாம் தன்மை? -
என்று அதனால் தான் பின்னாளில் ஒரு பாட்டு எழுந்தது!
அவர் கூரை ஏறிக் கோபுரம் ஏறிக் கூவியதும் போதும்! அவர் சொன்ன மந்திரம் இப்பிறவி மட்டும் அறுக்குதோ, எப்பிறவியும் அறுக்குதோ? யாருக்கு வேணும் பிறவி அறுக்கும் மந்திரங்கள்?

மோட்சத்தை அஜாமிளன் போன்ற பாவிகளுக்குக் கொடுத்துக் கொள்!
ஆனால் பிறவிகளை அடியார்களுக்குக் கொடுத்து விடு!
மோட்சத்தைக் கேட்டு வாங்காது, பிறவியைக் கேட்டு வாங்கி, இன்றும் ஒரு ஓரத்தில் குணானுபவம் செய்து கொண்டிருக்கிறானே சிறிய திருவடி ஆஞ்சநேயன்? அவனுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்,
"உன்" தன்னோடு, உற்றோமே ஆவோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று!

தனிப் பெருங் "கருணை"! அருட் பெருஞ் சோதி!

PS: I would be out of country for a day...Will return and reply to your comments, morrow mid nite :)
Read more »

Tuesday, February 26, 2008

மஜ்ஜை தானம் மகத்தான தானம்! Bone Marrow Donation - Part 2

எலும்பு மஜ்ஜை தானம்-னு பதிவுல சொல்றதுக்கு எல்லாம் ஈசியாத் தான் இருக்கும்! ஆனா உதவணும் மனம் இருந்தாக் கூட, மனத்தில் கூடவே பயமும் இருக்கேப்பா!
எங்க வீட்டுல சொன்னா அவ்ளோ தான்! டின்னு கட்டிருவாங்க! இந்த வேலையெல்லாம் உனக்குத் தேவையா-ன்னு கேட்பாங்களே!

அட என்னாங்க அண்ணாச்சி, இப்பிடி வீட்டுக்குப் பயந்த புள்ளையாட்டும் Act கொடுக்கறீங்க? நீங்க "தம்" அடிக்கறது வீட்டுக்குத் தெரியுமா என்ன? :-)
இல்லீன்னா மவுண்ட் ரோடு Casino தியேட்டர் படத்துக்கு எப்பமே வீட்ல சொல்லிட்டுத் தான் வாரீங்களா? :-)
ஹிஹி! கோச்சீக்காதீங்க! சும்மா ஒங்களைச் சீண்டறத்துக்காகச் சொன்னேன்!

நமக்கே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் புரியுது! அப்படி இருக்க, வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவுக்கோ, இல்லை மனைவிக்கோ முழு விஷயம் தெரியும்-னு எதிர்பார்க்கலாமா? நீங்க பக்குவமா எடுத்துச் சொல்லலாம்!

அதை விட, நீங்க தானம் கொடுத்து விட்டு அப்புறம் வந்து சொன்னீங்கனா, உங்களைப் பார்த்த பின்னாடி அவிங்களுக்கே ஒரு தெம்பு வந்துரும்! சமையலைக் கூட உங்க மேலத் தானே முதலில் டெஸ்ட் பண்ணறது வழக்கம்? அதே போல இதுக்கும் நீங்க தான் முதல் டெஸ்ட்! :-)

பச்சைக் குழந்தைகள் விஷயத்தில் உங்களையும் என்னையும் விட, வீட்டில் இருப்பவங்களுக்குத் தான் கருணையும் அதிகம்! பொறுமையும் அதிகம்! எத்தனையோ விஷயம் செஞ்சிட்டீங்க! இதைச் செய்ய முடியாதா உங்களால?

வலியோ, பக்க விளைவுகளோ இன்றி இயல்பாக எடுக்கப்படும் முறை தான் எலும்பு மஜ்ஜை தானம்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்!
வாங்க, இன்னிக்கு, தானம் கொடுக்கும் போது என்னவெல்லாம் நடக்குது-ன்னு பாத்துருவோம்!

Fear of the Unknown-ன்னு சொல்லுவாங்க! கடவுளைப் பத்தி தெரியாத வரைக்கும் தான் "பய"பக்தி! கொஞ்சம் தெரியா ஆரம்பிச்சிருச்சுன்னா, "பய"பக்தியில், பயம் போயிடும்! பக்தி மட்டும் நின்னுக்கும்! அது போலத் தான் இதுவும்! விஷயம் தெரிஞ்சி போச்சின்னா பயம் போயிடும் :-)


*1. முதலில் பதிவு! அப்பறம் தான் எல்லாம்!சென்ற பதிவில் சொன்னா மாதிரி, முதலில் பெயரைப் பதிஞ்சிக்கிடணும்! இணையத்துலேயே பதிஞ்சிக்கிலாம்!
* இந்தியாவில் பங்களிக்க இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்கா நிரந்தர வாசமா? - இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்காவில் பதிந்தவுடன், Kit வீடு தேடி வரணுமா? இங்கே!
* அவிங்கவங்க நாட்டில் பங்களிக்க, இங்கிட்டுப் போகலாம்!

*2. பதிஞ்சாச்சு; அப்பாலிக்கா என்ன?நீங்க பதிஞ்சி முடிஞ்சதும், உங்களின் எச்சில் சாம்பிளோ அல்லது இரத்த சாம்பிளோ கொடுக்கச் சொல்லிக் கடிதம் வரும். உங்கள் ஊரிலேயே இருக்கும் ஆய்வுக் கூடத்துக்கு (Diagnostic Lab) அனுப்பி வைப்பார்கள். இதில் உங்கள் செலவு எதுவும் கிடையாது!

* முக்கியமா இங்கிட்டு ஒரு விஷயம் சொல்லிக்கறேன் மக்களே!
நீங்களும் இது தொடர்பா எதற்கும் காசு கொடுக்க வேண்டாம்! அதே போல தானத்துக்காக, உங்களுக்கும் எந்தக் காசும் தரப்பட மாட்டாது! :-)

*3. அடுத்தது தானம் தானா?
அதான் இல்லை! பல நேரங்களில் உங்களுக்கு அழைப்பே வராமல் கூட போகலாம்! பாவம், எந்தக் குழந்தையோ, இல்லை எந்த மனிதரோ? தேவையைப் பொறுத்து தான் அழைப்பு வரும்!

ஒரே குடும்பத்துக்குள் ஒப்புமை (Match) கிடைப்பதே 30% தான்!
அப்படி இருக்க வெளியில் கிடைப்பது அதை விடக் கம்மி!
இப்போ தெரியுதுங்களா, எதுக்கு பெயரையாச்சும் பதிஞ்சி வச்சிக்குங்க-ன்னு திருப்பித் திருப்பி பிளேடு போடறேன்-னு! இதுக்குத் தான்! :-)

*4. சரிப்பா, நான் ஒருத்தருக்கு மேட்ச் ஆயிட்டேன்னு வை! அப்புறமா?
கையைக் கொடுங்க சாமீ! நீங்க ஆசீர்வதிக்கப்பட்டவர்! லட்சத்துல ஒருத்தரய்யா நீர்! உங்களால் ஒரு பிஞ்சு ஜீவன் காப்பாத்தப்படணும்-னு இருக்கு!


நீங்கள் மேட்ச் ஆனீர்கள் என்றால், மருத்துவமனையில் இருந்து உங்களிடம் தொலைபேசுவார்கள்! இன்ன காரணத்துக்குத் தேவை என்பதைச் சொல்லி, உங்களிடம் மீண்டும் ஒரு முறை சம்மதம் கேட்பார்கள்!

தயவு பண்ணி "யோசிச்சி சொல்லறேன்" எல்லாம் சொல்லிடாதீங்க! உண்டு/இல்லை-ன்னு தெளீவா சொல்லிருங்க!
யாரும் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டாங்க! தப்பா நினைச்சிக்கவும் மாட்டாங்க! நேரத்தை வீணடிக்காமல், லட்சம் பேரில் வேறு யாரையாச்சும் தேடுவாங்க!

உங்கள் உடல் நிலையோ, அல்லது வேறு குடும்பக் காரணங்களோ உண்மையாகவே தானத்துக்குத் தடையா இருக்கும் பட்சத்தில் சொல்லிவிடலாம்! அவர்களும் பல கேள்விகள் கேட்டு, நீங்கள் அந்த நேரத்தில் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு தான் அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.

*5. அடுத்தது என்ன? தானம் தான்!
மருத்துவமனையில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்! நீங்களும் அவர்கள் யாரும் போலி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தானத்துக்கான அடையாள அட்டையைக் கொடுத்து விடுவார்கள்.

அப்பறம் என்ன? ஆப்பிள் ஜூசு குடிங்க! :-)
மயக்க மருந்து உங்களுக்குத் தரப்படும்! (லோக்கல் அனிஸ்தீஷியா)! ஆனா முழிச்சிக்கிட்டு தான் இருப்பீங்க!

மெல்லிய ஊசிகளால் 3-5% எலும்பு மஜ்ஜை எடுத்துக் கொள்ளப்படும்! அதுவும் நாலு வாரங்களில் மறுபடியும் உங்கள் உடலில் சுரந்து விடும்! மொத்தம் 2-4 மணி நேரம் தான்! அப்பறம் அன்னிக்கே வீட்டுக்கு வந்து விடலாம்!
*6. பக்க விளைவுகள்?ஒங்க தில்லுக்கு அதெல்லாம் ஒன்னுமே வராது! கவலைப் படாதீங்க!
சில மக்கள் மட்டும் சோர்வு/தலைவலி வந்ததாச் சொன்னாங்களாம்! அதான் இப்பல்லாம் சூடான பதிவுக்குச் சூடான பின்னூட்டம் போட்டா, பக்க விளைவுகள் எல்லாம் தானா வருதே! இதெல்லாம் உங்களை அசைச்சிடுமா என்ன? :-)

*7. என்னிடம் எடுக்கப்பட்ட மஜ்ஜை அடுத்து எங்கே போகும்?
அதே மருத்துவமனையிலோ, இல்லை பயனாளி எங்கு அட்மிட் ஆகி இருக்காரோ, அங்கு மருத்துவக் கூரியர் மூலமாக விரைந்து செல்லும்!
ஏற்கனவே அந்த நோயாளி/குழந்தை கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டு இருப்பாங்க! இது நோய் வாய்ப்பட்ட செல்களை (diseased cells) ஓரளவு அகற்றி இருக்கும்!

உங்கள் மஜ்ஜையில் கிடைத்த செல்கள் அவர்களுக்கு transfusion மூலமாகச் செலுத்தப்படும்.
இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாப் போச்சுனா, சில நாட்களில் ஆரோக்யமான செல்களை அவர்கள் உடம்பும் உற்பத்தி செய்யத் துவங்கி விடும்!

*8. தானம் பெற்றுக் கொள்பவரிடம் நான் பேசலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம்! 3-6 மாதம் கழித்து கடிதமோ, தொலைபேசியோ, இல்லை நேரிலோ சந்திக்க ஏற்பாடு செய்து தருவார்கள்.

*9. இன்னொருத்தருக்கும் தானம் செய்ய என்னைக் கூப்பிட்டால்?
ஹிஹி! பயப்படாதீங்க! அதெல்லாம் கூப்பிட மாட்டாங்க! நீங்க தானம் செய்து முடித்த அடுத்த ஒரு ஆண்டுக்கு, உங்கள் பெயர் தகவற் களஞ்சியத்தில் (Database) இருந்து மறைக்கப்படும்! உங்களை இரத்த தானம் கூட செய்ய வேண்டியதில்லை என்றும் சில இடங்களில் சொல்லி விடுவாங்க.

* 10. இன்னொரு ஈசியான விஷயம் வந்திருக்கு!
அண்மைக் காலத்தில், எலும்பு மஜ்ஜைக்குப் பதிலா, PBSC-ன்னு ஒன்னு வந்திருக்கு! Peripheral Blood Stem Cell-ன்னு பேரு! இதில் தானம் செய்வது இன்னும் எளிது! எலும்பு மஜ்ஜை எடுப்பதற்குப் பதிலா, நம்ம இரத்தத்தில் இருந்தே செல்களை எடுத்துக்கறாங்க!

தானம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன், ஊசி மூலம் மருந்து செலுத்தி, அதிக செல்கள் இரத்தத்தில் உற்பத்தி ஆகுமாறு செய்யறாங்க. பின்னர் ஒரு கையில் இருந்து இரத்தம் எடுத்து நம் கண் முன்னாலேயே கருவிக்கு அனுப்புறாங்க.

அது செல்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு விடும்! மீதி இரத்தத்தை நம் அடுத்த கைக்கு அனுப்பி விடுவார்கள். இதில் மயக்க மருந்தோ, மஜ்ஜை எடுப்பதோ இல்லாமல் இன்னும் எளிதாகப் போய் விடுகிறது.
ஒரே ஒரு விஷயம்: இது இன்னும் பரவலாக்கப் படவில்லை!


மக்களே,
ரெண்டு பதிவுக்கும் வந்து படிச்சிப் பார்த்து, ஆதரவு தந்தமைக்கு நன்றி!
ரொம்ப டெக்னிக்கலா எல்லாம் சொல்லாது, இயல்பா பேசிக்கறாப் போலத் தான் சொல்லி இருக்கேன்! அதையும் மீறி கொஞ்சம் மொக்கை தலை தூக்கி இருந்தா மன்னிச்சிக்குங்க!

நீங்கள் செய்யும் ஒரே உதவி - எலும்பு மஜ்ஜை தானம், பேரில் இருப்பது போல் அப்படி ஒன்னும் பயங்கரமானது இல்லை என்பது தெரிந்து கொள்வது தான்!
உங்களுக்கு இந்நேரம் தானாகவே தெரிஞ்சிருக்கும்! உங்களுக்குத் தெரிஞ்சதைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்க! அதுவே முதல் படிக்குப் போதும்!

இதையும் மீறி அடுத்த கட்டத்துக்குச் சென்று உதவணும் நினைச்சா...
please please please...உங்கள் பெயரை இங்கு பதிந்து கொள்ளுங்கள்!

உயிர் தேடும் வேட்டையில், லட்சத்தில் ஒரு பெயர் அகப்படும் போது ஏற்படும் விம்மிதம் இருக்கே! அது சொல்லில் அடங்காது!
இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனம் (அபிஷேகம்) எப்படி குளிரப் பண்ணுகிறதோ, அதே போல், "உயிர் தரும் செல்களால்" ஒரு குழந்தைக்குச் செய்யும் திருமுழுக்கு, பெருமானுக்கு என்றுமே உகப்பானது! குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!

குழந்தைகள் வலி இன்றி, வளம் பெற்று வாழட்டும்!
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளாலே வந்து அச்சோ அச்சோவே!
ஆரத் தழுவ வந்து அச்சோ அச்சோவே!!
(- பெரியாழ்வார் திருமொழி; குழந்தையை நோய் அண்டாமல் இருக்கப் பாடும் பட்டினம் காப்பு)





References (உசாத்துணை):
தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள் =
http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன? =
http://www.mayoclinic.com/health/bone-marrow/CA00047
வ.கே.க =
http://www.matchpia.org/htm/faq.htm
http://www.marrow.org/DONOR/When_You_re_Asked_to_Donate_fo/Donation_FAQs/index.html
NMDPஇல் இருந்து Eligibility Guidelines =
http://www.giveblood.org/nmdp/eligibility.htm

Read more »

Sunday, February 17, 2008

இரத்த தானம் செய்யலாம்! Bone Marrow Donation செய்யலாமா? - 1

அண்மையில் Help Gayathri - Leukemia-ன்னு ஒரு பதிவை நண்பர் கப்பி சுவரொட்டியில் போட்டிருந்தாரு!
அதுல காயத்ரி என்னும் இரண்டு குழந்தைகளுக்குத் தாய்-இருபத்து எட்டு வயதுப் பெண், எலும்பு மஜ்ஜை தானம் தேடி அலையும் செய்தி வந்துச்சி.

இரத்த தானம்-ங்கிறது இப்பெல்லாம் சர்வ சாதாரணமா ஆகிப் போச்சு!
ஆனா அது என்னாங்க எலும்பு மஜ்ஜை தானம்?
பேரைக் கேட்டாலே பயமா இருக்கே! = எலும்பு/ மஜ்ஜை
தானம் கொடுக்கறேன் பேர்வழி-ன்னு ஏதாச்சும் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்டா?...

Okay; அதாச்சும் என்னான்னா...
பச்சைக் குழந்தைங்க ஒன்னுமே பண்ணாம, கஷ்டப்படுறத பாத்தா மட்டும் தாங்க முடியறதில்லீங்க!
கோவம் கோவமா வருது! வீட்டுக்கு வந்து "போய்யா...நீயும் உன் கருணையும்"-ன்னு சண்டை எல்லாம் கூட போட்டிருக்கேன் முருகன் கிட்ட!

சினிமாவிலும் கதைகளிலும் Blood Cancerஐப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டுப் போச்சு நமக்கு! அங்க காட்டுறதெல்லாம் வாழ்வே மாயம் கமலஹாசன் ஸ்டைல்ல மட்டுமே வரும்!
ஆனால், சிறு குழந்தைகள் இந்த நோயால் படும் அவஸ்தை?
இதுக்கு, இந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றாய் வந்திருப்பது தான் Bone Marrow என்னும் எலும்பு மஜ்ஜை சிகிச்சை!

நாங்கள் பங்கு கொள்ளும் சமூக நிலையத்தின் (Community Center) சார்பாக, விழிப்புணர்வு முகாம் ஒன்னு அண்மையில் நடந்துச்சு!
புது ஜெர்சி, நியூ பிரன்ஸ்விக் நகரத்து St. Peters மருத்துவமனையில் நடந்த இந்த முகாமில், ஒரு volunteerஆ (தன்னார்வலர்...தமிழ்-ல சரி தானே?) கலந்துகிட்டேன்!

அப்போது தான் இரத்த தானம் போல் இந்தத் தானம் பற்றியும் பல விசயங்கள் தெரிய வந்துச்சி!
சரி உங்க கிட்டு வந்து புலம்பாம வேறு யாரு கிட்டப் போயி புலம்பப் போறேன்?

அதான் வழக்கம் போல, உங்க கிட்ட கொஞ்சம் சொன்னா,
நீங்க இன்னொருத்தர் கிட்ட பேச்சுவாக்குல சொல்லி, அப்படியே கொஞ்சமாச்சும் பரவாதா என்ன?

தானம் தராமல் வேறு வழிகளில் கூட உதவ முடியும்!
இப்போதே தரணும் என்பது கூட இல்லை! பெயரைப் பதிந்து கொண்டால் கூடப் போதும்!
இரண்டு தொடராப் போடுறேன். படிச்சித் தான் பாருங்களேன்!


இரத்த தானம் - அதன் அருமை பெருமை இப்போ எல்லாருக்கும் தெரியும்! தூய்மையான முறைகளில் இரத்தம் கொடுக்க இப்போதெல்லாம் யாருக்கும் எந்தப் பயமும் இருக்குறதில்ல! 

வலியப் போயி இரத்தம் கொடுக்கும் நல்ல உள்ளங்கள் நாட்டில் இருப்பதை நினைச்சாப் பெருமையாத் தான் இருக்கு! இரத்த தானத்துக்குன்னே விதம் விதமா நெட்வொர்க் இருக்கு!
ஆனா இது போல ஒரு விழிப்புணர்வு எலும்பு மஜ்ஜை தானத்துக்கு இருக்கான்னு கேட்டா...இல்லைன்னு தான் சொல்லணும்! 

இரத்த தானம் வந்த புதிதில், மக்களுக்கு என்னவெல்லாம் பயம், தயக்கம் இருந்துச்சோ, 
அதே மாதிரி புதுசா வந்த இந்த எலும்பு மஜ்ஜை தானத்துக்கும் இருக்கு!

இந்த எலும்பு மஜ்ஜைத் தானம் எப்படின்னா,
இரத்த தானத்தில் இரத்த வகை (Blood Group) மாதிரி அவ்ளோ ஈசியா எல்லாம் இங்க செட் ஆகாதுங்க! 
ஒரே குடும்ப முறை, நெருங்கிய சொந்தம், ஒரே நாடு/இனம்-னு இப்படிச் செட் ஆவுற விஷயங்கள் ஏகப்பட்டது இருக்கு இதுல!

அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுக்குன்னே ஒரு பெரிய தகவற் களஞ்சியம் (Database) வச்சி நடத்துறாங்க! இந்தியாவில் இப்பத் தான் கொஞ்சம் கொஞ்சமா விழிப்புணர்ச்சி வரத் தொடங்கி இருக்கு!

இந்தத் தானத்தைத் தேடுற இந்தியர்கள் படும் கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லீங்க! அதுவும் இப்ப அண்மைக் காலங்களில் இந்தியக் குழந்தைகளும் இதனால் அதிகம் பாதிக்கப்படுதுங்க! 
இந்தச் சின்னக் குழந்தைகளுக்காகத் தேடித் தேடி அவங்க அம்மா-அப்பா நடக்கும் நடை இருக்கே! அப்பப்பா!!

இந்தக் காலத்துல ஒரே குழந்தையோட கூட நிறுத்திக்கறாங்க! 
அதுனால சகோதர சகோதரிகள் வழியாகவோ, இல்லை நெருங்கிய குடும்ப உறவு மூலமாகவோ தானம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைந்து கொண்டே வருது! 
அதுனால வெளியில் தேட வேண்டிய கட்டாயம்! சரி...எங்கே-ன்னு போய் தேடுவது?
டாக்டர்கள் பொதுவா சினிமாவில் வருவது போல், அமெரிக்கா-ன்னு கைகாட்டுவாங்க! 
ஆனா இங்கிட்டு அல்லாடித் திரிஞ்சி வந்து, நம்ம இனத்துக்கு ஒத்து வரா மாதிரி, மரபியல் (genetics) சார்ந்த ஒரு தானம் அளிப்பவரைத் தேடிக் கண்டு பிடிப்பதற்குள்...போதும் போதும் என்று ஆகி விடும்!

எத்தனை தான் பணம் வைத்திருக்கட்டுமே! 
சிகிச்சையும் முழுசாத் துவங்க முடியாமல், தானம் கிடைக்கும் இடம் எது-ன்னு கூட தெரியாமல், பிஞ்சு உயிர்கள் அல்லாடும் சிலவற்றைப் பார்த்த போது.....இறைவா!



* இவிங்களுக்கு என்ன தான் தேவை?
நம் முதுகின் பின்னால் இருக்கும் பெல்விக் எலும்புகளில் இருந்து கொஞ்சூண்டு திரவங்கள். 
இந்தத் திரவம் தான் Liquid Marrow - எலும்பு மஜ்ஜை!
மட்டன் சாப்பிடும் போது சில பேர் உறிஞ்சுவார்களே! இல்லீன்னா முருங்கைக் காய் உறிஞ்சுவோம் இல்லியா! அது போலன்னு வச்சிக்குங்களேன்!

* எதுக்கு இதெல்லாம் இவிங்களுக்குத் தேவைப்படுது?உயிர் அச்சுறுத்தும் சில நோய்கள் - Leukemia, Lymphoma, குழந்தைகள் கேன்சர் போன்றவற்றிற்கு இந்த எலும்பு மஜ்ஜையோ இல்லை கொடி இரத்தமோ (Cord Blood) சிகிச்சைக்குத் (Transplant) தேவைப்படுகிறது!

* இது தவிர வேற சிகிச்சையே இல்லையா?
கீமோதெரப்பி, ரேடியேஷன்-ன்னு சில சிகிச்சைகள் இருந்தாலும்...பல ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த எலும்பு மஜ்ஜை சிகிச்சையை நிரந்தரத் தீர்வாக் கண்டு பிடிச்சிருக்காங்க!
அதுவும் சிறு குழந்தைகளை, ரேடியேஷன் போன்ற பழைய வலி நிறைந்த சிகிச்சைக்கு உட்படுத்திக் காலத்தை வீணடிப்பதை விட, இது இன்னும் நல்ல தீர்வாக உள்ளது!

* இதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்?
1. நம் எலும்பு மஜ்ஜையைத் தேவைப்பட்டால் கொடுக்கலாம்-ன்னு எண்ணம் வந்தா போதும்!
2. உடனே கொடுக்கணும்-னு இல்லை! பெயரைப் பதிஞ்சி வச்சிக்கிட்டா போதும்! எப்போது தேவையோ அப்போது அவர்களே கூப்பிடுவார்கள்!
3. அதுவும் அபூர்வ இரத்த வகை உள்ளவர்கள் (Rare blood group) செய்தால் இன்னும் புண்ணியமாப் போகும்!
4. தெரியாதவங்களுக்கு எடுத்துச் சொல்லலாம். உங்கள் நிறுவன மனிதவளத் துறையிடம் (HR) அறிமுகப்படுத்தலாம்!
5. முற்றிலும் நம் விருப்பம் தான்! பெயரைப் பதிந்த பின், நமக்குப் பிடிக்கலைன்னா முடிவை மாத்திக்கலாம்! எதுவும் கட்டாயம் இல்லை!

* யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமா?
1. 18-60 வயதுக்குள் யார் வேண்டுமானுலும் தரலாம்!
2. எச்.ஐ.வி மற்றும் 18 வயதுக்கு மேல் மஞ்சள் காமாலை வந்தவர்கள் தானம் தர முடியாது.
3. போதைப் பொருள் பழகியோர், வரம்பற்ற உடலுறவு கொண்டவர்கள் - இவர்கள் மட்டும் தானம் தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

* எலும்பு, மஜ்ஜை...பேரே ரொம்ப பயமா இருக்கேப்பா!ஹிஹி...பயப்படாதீங்க! 
உங்க எலும்பை ஒடைச்சி இன்னொருத்தருக்குப் பொருத்த எல்லாம் மாட்டாங்க! 
முட்டிக்கி முட்டி தட்டறது எல்லாம் இங்கிட்டு கிடையாது! :-) பாருங்க எப்படிக் காபி குடிச்சிக் கிட்டே கொடுக்கறாரு மனுசன்!
1. இது பெரும்பாலும் outpatient முறை தான். 4-6 மணி நேரத்துக்கு மேல் ஆகாது!
2. இரத்த தானத்துக்கும் இதுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இதுக்கு லோக்கல் மயக்க மருந்து (Local Anaesthesia) கொடுப்பது தான்! மத்தபடி ஒன்னும் பெருசா வித்தியாசம் இல்லை!

3. வலியோ, அபாயமோ கிடையாது! உங்களிடம் இருந்து பெறப்படும் 5% மஜ்ஜையே போதும் ஒரு உயிரைக் காப்பாற்ற!
4. தானம் கொடுத்த 4-6 வாரங்களில், உங்கள் உடம்பு, நீங்கள் கொடுத்த தானத்தை ஈடு கட்டி விடும்!

5. வெகு சிலருக்கு மட்டுமே தலைவலி, அசதி ஓரிரு நாள் இருக்கலாம்! ஆனால் இது மிகவும் கம்மி!
பிட்ஸ்பர்க் வேங்கடேஸ்வரர் ஆலயத்தில் Bone Marrow Drive செய்யும் சிறார்கள்

* சரி யோசிக்கிறேன்! ஆனா இதுக்கு எங்கிருந்து ஆரம்பிக்கறது? ஏதோ பெயரைப் பதிஞ்சி வச்சிக்கலாம்-னு சொன்னீங்களே! எங்கே?

முதலில் யோசிக்கறேன்-னு சொன்னீங்க பாருங்க! அதுக்கே நன்றி!

உலகில் மிகப் பெரிய - கொடையாளர்கள் தகவற் களஞ்சியம் - National Marrow Donor Program (NMDP) - Marrow.org
அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்பட்டாலும், உலகெங்கும் மருத்துவர்கள் இதில் யாராச்சும் உதவுவோர் கிடைக்க மாட்டார்களா என்று முதலில் பார்க்கிறார்கள்.

ஆனால் அண்மையில் நம் இந்திய நாட்டவர்/வம்சா வளியினருக்கு என்றே ஒரு தனி தகவற் களஞ்சியம் தொடங்கப்பட்டுள்ளது!
என்னைக் கேட்டால், அதில் பதிந்து கொள்வது இன்னும் சிறப்பு! 
மரபியல் ஒப்பாக உள்ளவருக்குத் தானே உதவ முடியும்! இங்கு பதிந்தால் பெறுபவருக்கும் நன்மை! கொடுப்பவருக்கும் எளிது!
அந்தத் தளத்தின் பெயர் MatchPIA.org

***இங்கே நம் பெயரைப் பதிந்து கொள்ளலாம்! ***லட்சத்தில் ஒருவர் தான் தானத்துக்குத் தேறுகிறார்!
நீங்கள் அந்த உயிர் தரும் அபூர்வ கொடையாளியாகவும் இருக்கலாம்!
YOU could be that special life-giving person!
இவர்களின் திட்டம் இந்திய மரபியல் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும்!
//The goal of USADR, is to build a donor registry of educated and committed donors, who will represent a concentration of genetics by different regions of India, resulting in a greater number of matches for South Asian patients. Once completed, this project may be deemed the Largest Genetic Journey undertaken in India//

என்னைக் கேட்டால்,
அயல் நாட்டில் தற்காலிகமாக வாழும் நம் போன்ற இளைஞர்/இளைஞிகள், இதற்கு முதலில் காலடி எடுத்து வைக்க நினைக்க வேண்டும்! நாம் வளர்ந்த தாய்நாட்டில், இன்று வளரும் குழந்தைகளுக்குச் செய்யும் மிகப் பெரிய கைம்மாறாக இது இருக்கும்!

கணிணித் துறையில் எத்தனையோ பேர் databaseகளில் வேலை பார்க்கிறோம். சாதாரணமாய் ஒரு query போட்டு ஒன்னுமே வரலை என்றாலே எப்படி வெறுப்பாய் இருக்கு! 
ஒரு உயிர் காக்க இவர்கள் தேடும் bone marrow queryக்கு, ஒன்றுமே கிட்டவில்லை என்றால் இவர்களின் அப்போதைய மனநிலை எப்படி இருக்கும்-னு கற்பனை செய்து பாருங்கள்!

குறைந்தபட்சம் இந்த Database-ஐ ஆவது நாம் நிரப்பலாம்!
அடுத்த பதிவில்...
* பெயரைப் பதிந்து கொண்டால் எப்படிக் கூப்பிடுவாங்க?
* இன்னாருக்கு/இந்த நாட்டவருக்கு மட்டும் தானம் அளிக்கிறேன் என்று சொல்லலாமா?
* எப்படி எடுப்பாங்க? பக்க விளைவுகள் ஏதாச்சும் இருக்குமா?
* இப்படித் தானம் கொடுத்தால் வீட்டில் திட்டு விழுமா? :-)
என்பதை எல்லாம் பார்த்து விட்டு முடிப்போம்!

உங்களுக்கு இந்தத் தானம் சம்பந்தமான கேள்விகள் இருந்தாலும் தயங்காமல் கேளுங்க! அடியேன் அறிந்த வரை சொல்கிறேன். எங்கள் இயக்கத்தில் மருத்துவரைக் கேட்டும் சொல்கிறேன்.
நம் பதிவர்கள் இடையே இருக்கும் VSK ஐயா உட்பட மருத்துவர்கள் பலரையும் நாம் கலந்து ஆலோசிக்கலாம்!

(இன்று குலசேகராழ்வார் பிறந்த நாள். நேரம் இருந்தால் தனிப் பதிவு இடுகிறேன். இல்லீன்னா, இதையே அவர் பதிவாகக் கருதிக் கொள்ளவும்)

References (உசாத்துணை):தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள்= http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன?
Read more »

Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல்! - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல்,
இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி,
எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும் அல்லவா சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் நடிகை ஷ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62

பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் அப்படியே நியூயார்க் நகரில் Manhattan நடுரோட்டுல கரும்பு நட்டு, பொங்கல் வச்சா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!



சென்ற ஆண்டு தைப்பொங்கல் போது இட்ட இடுகையின் மீள்பதிவு இது!
இந்த ஆண்டுப் பொங்கலுக்கும் ஊருக்குப் போயி வந்தேங்க! இந்த விளம்பரத்தின் வாயிலாக! :-)
கடைசியில் அந்த அம்மா, அவங்க பையனுக்குத் திருஷ்டி கழிக்க நெட்டி உடைப்பது.....எனக்கு வீட்டு ஞாபகம் ரொம்பவே வந்திரிச்சி! கண்ணோரம் ஆனந்த ஈரம்!
Read more »

Sunday, January 06, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

முந்தைய பகுதி இங்கே!
சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் நாற்பது கோடி!
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி!
அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன் நாக்கூசுகிறது!

போலியோ அட்டாக் வந்து, கால்கள் குச்சி போல சூம்பிப் போன நிலையில், பெருமான் இருக்கிறானாம். நான் சொல்லலை! அரசாங்கத்தின் பழனிக் கமிட்டியில் உள்ள ஒரு கெமிக்கல் எஞ்சினீயர் சொல்றாரு!
முருகனின் கோலத்தைக் கிட்டக்க போயிப் பார்த்துவிட்டு வாய்விட்டு அழுதாராம்! அப்புறம் இங்கிட்டுப் போய் படிங்க. டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு...முந்து முந்து முருகவேள் முந்து! எங்கே முந்தறது?

அதான் நாப்பது கோடிக்குச் சொந்தக்காரனாச்சே-ப்பா? நல்லாக் கவனிப்பாங்களே!
உம்..உம்...கவனிக்கிறாங்க தான்! முருகனைத் தவிர மற்ற எல்லாத்தையும்!
இதே நாப்பது கோடி மதிப்புள்ள ஒரு தனியார் கம்பெனியில், அசெம்ப்ளி லைனில் - ப்ரேக் பொருத்தும் கருவி வீக்கா இருக்கு!
மணிக்கு அறுபது யூனிட் போட்டாகணும், இருபது தான் போட முடியுதுன்னா - இந்தப் பிரச்சனை குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் தீர்க்கப்படாம இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் இருபது வருடம்??? :-(

எல்லாருக்கும் பழனியில் பிரச்சனை இருக்கு-ன்னு தெரியும்! ஆனா தீர்வு மட்டும் ஏன் தேட மாட்டறாங்க?
காரணம்: அவங்க அவங்க முன்னுரிமை வேற வேற!
* நிர்வாகத்தின் முன்னுரிமை: பொருள் ஈட்டுதல், ஈட்டிய பொருளை அரசு(?) கஜானாவில் சேர்த்தல்.
* பக்தர்களின் முன்னுரிமை: தங்களுடைய வேண்டுதல் மட்டுமே! குடம் குடமாய் பாலாபிஷேகம்.

அதான் சென்ற பதிவில் சொன்னேன். பக்தர்கள் பங்கு=40%, நிர்வாகத்தின் பங்கு=60%; சென்ற பதிவில் நம்மால் ஆன சிறு சிறு சீர்திருத்தங்கள், மாற்றங்களைப் பார்த்தோம்.
இன்னிக்கி துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.



ஆகமங்கள்: கோயில்ல இருக்கும் சிலையின் நீள-அகலங்கள், மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப, இத்தனை குடம் நீராட்டு, இவ்வளவு முறை நீராட்டு என்பது நியமம்! தைலக் காப்பு செய்தல், விக்ரக சேதாரங்களைக் குறைக்கும்! (wear & tear)

பக்தர்கள்: அவன் ஒரு குடம் கொடுத்தான். நாமும் ஒரு குடமாச்சும் குடுத்து வேண்டிக்குவோம். சரி போட்டிக்காக எல்லாம் வேணாம்! நம்ம கஷ்டமெல்லாம் தீர அவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி மகிழ்வோம்! - இப்படி ஓவராக் குளிப்பாட்டினா அவன் மகிழ்வானா? ஐயோ! அதை யோசிக்கலையே!

நிர்வாகம்: கோயிலுக்கு வருவாய் சேர்க்கணும்-னா புதுப்புது வழியில் திட்டங்கள் உருவாக்கணுமாம்! பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வதில் குறியா இருக்காய்ங்க! இந்த வீக்னஸ் தான் நமக்கு டிமாண்டு! புதுசா புதுசா திட்டம் போடுவோமா?
1. AFA = Abishekam For All = Rs 500/- only!
2. அ.ஆ. = அபிடேகம்-ஆறுமுகம் = Rs. 100/- only

அச்சோ...இதனால் மூலவர் சிலை சேதாரப்பட்டாலும் படலாம்! ஆகமத்தில் சொல்லி இருக்கே! ஆறு கால வழிபாட்டு - வெறும் ஆறாறு (6x6) குடம் முழுக்காட்டுன்னு...

யோவ், அதெல்லாம் ஒருத்தனுக்கும் புரியாது! ஒரு G.O. போட்டாப் போச்சு! தெரிஞ்ச அர்ச்சகர்கள் கூட எதிர்க்க மாட்டாங்க! அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துருவோம்!
நாம என்ன கொலையா பண்ணுறோம்? சாமிக்கு அபிசேகம் தானயா பண்ணுறோம்? அப்படியே வருவாயைப் பெருக்கிப் "பல நல்ல" விசயங்களுக்குப் பயன்படுத்தப் போறோம்! வந்துட்டாங்க பெருசா!....போயி ஆவுற வேலயப் பாருங்கப்பா!
குருவாய் "வருவாய்" அருள்வாய் குகனே-ன்னு, வருவாயைத் தான் அருளச் சொல்லி இருக்காரு! தெரியுமில்ல? :-)

இப்படித் தான் பொதுவா எல்லா வருவாய் பெருக்கும் திட்டங்களும் ஆரம்பிக்குது! வருவாயைப் பெருக்க வேண்டாம்-னு சொல்லலை!
ஆனா at the cost of what? எதுக்கு முன்னுரிமை? அதை யோசிக்க மறுப்பது ஏன்?
* ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
** இல்லை சராசரி பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கிடைக்கட்டுமே-ன்னு "ஒரு நல்ல எண்ணத்துல", தனவான்களைக் தனியாக் கவனிக்க ஏற்பட்டவையா?
- "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்?" என்று பாரதி கேட்டது தான் நினைவுக்கு வருது!

இதுக்கெல்லாம் பக்தர்களைப் பெருசாக் குறை சொல்ல முடியாது!
பலரும் ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தான்! அவர்களுக்குப் படிப்படியாக ஆன்மீகச் சிந்தனைகள், மன அமைதி, பண்பாடு இவற்றை எல்லாம் ஊட்டத் தானே ஆலயங்கள் தோன்றின!
ஆ+லயம் = ஆன்மா லயிக்கும் இடம்!
ஹிஹி! லயிப்பதா? சிரிக்கிறீங்களா? ஆனா அது தான் உண்மை! அதான் நிர்வாகத்தின் பங்கு 60%! வாங்க, பார்க்கலாம்!



1. முதலில் ஆலய நிர்வாகம், கொள்கை என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளட்டும். ஆலயங்களின் முழுமுதல் நோக்கம் (Primary Objective): இறைவனுக்கும்-பக்தனுக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே!

இதெல்லாம் பேசத் தான் நல்லா இருக்கும், நடைமுறைக்குச் சாத்தியமில்லை-ன்னு சொல்லலாம்!
வாடிக்கையாளர் திருப்தியே ஒரு நிறுவனத்தின் முதல் நோக்கம்-ன்னு ஒரு இயக்கம் வந்த போது, நிறைய பேர் இதையே தான் சொன்னாங்க! ஆனா இன்னிக்கி நிலைமை என்ன? வாடிக்கையாளர்களை வெளிப்படையாக யாரும் பகைச்சிக்க முடியாது!

அதே மாற்றம் தான், ஆலயங்களுக்கும் வர வேண்டும்!
ஆலயத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த முழுமுதல் நோக்கத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைச் சரி பார்த்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்! (All actions should be aligned with this objective)


2. அரசின் இந்து அறநிலையத் துறை (HRCE), முதலில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாற வேண்டும்! IIT, IIM, ISRO என்று இருப்பது போல் HRCE.
இதில் அரசின் பங்கு கொள்கை முடிவுகள் மட்டுமே!

எப்படி ஒரு கம்பெனிக்கு Charter, Vision Statement, Mission, Quality Policy என்று இருக்கிறதோ, அதே போல் HRCE-க்கும் தேவை.
முக்கியமான ஒன்று: கூடுமான வரை HRCE-இன் நிர்வாக மட்டத்தில் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் இல்லாமல் இருத்தல் நலம்.
அதே போல் ஆகம வல்லுநர், பொருளாதார வல்லுநர் - இருவரும் அதிகாரக் குழுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!

ஆங்காங்கு உள்ள கோயில்களில் தன்னார்வக் கண்காணிப்பு குழுக்கள் அமையுங்கள்.
இல்லத் தலைவிகள், வணிகர், மருத்துவர் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு தட்டிலும் இருந்தும் ஒருவர் இருப்பது நல்லது. குறிப்பாக கல்லூரி மாணவ/மாணவியர் இருக்க வேண்டும்! இளங்கன்று பயமறியாமல் பட்டதைச் சொல்லும்!


3. அனைத்து ஆலயங்களின் பணித் தகவல்கள், அசையாச் சொத்துக்கள், நிலங்கள் ஆவணப்படுத்தி, நடைமுறையும் படுத்த வேண்டும்! தரவுத் தளத்தில் (database) சேமிக்கப்பட வேண்டும்!
ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு அறிக்கையை வெளிப்படையாகச் சமர்பிக்க வேண்டும்! அனைவர் பார்வையிலும் படும்படி இருக்க வேண்டும்!

ஆலயச் சொத்தை அபகரிப்போர், குத்தகை/வாடகை தராதவர்களின் பெயர்கள்-புகைப்படத்தைக் கட்டம் கட்டி, ஆலய வாசலில் பெரிதாக வைக்க வேண்டும்! அட, நன்கொடை கொடுத்தவங்க பேரை வைக்கறீங்க! புன்கொடை கொடுத்தவங்க பேரையும் பெருசா வைங்கடே! மானம் போகட்டும் :-)


4. சாதி, மதம், பணம் - இந்த வேறுபாடுகள் ஆலயங்களில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்!
* சாதி=கிட்டத்தட்ட ஒழித்தாகி விட்டது! இதுக்கு ஒரு பெரியார் வர வேண்டி இருந்தது!
* பணம்=இந்தப் பேதத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வருவாரா?
தன்னலமில்லாத ஆன்ம பலத்தால், கோவிலில் சாதிக் கொடுமையை ஒழித்துத் தள்ளினார் பெரியார்! பயமே பாதி வேலையைச் செய்தது! மீதியைத் தான் சட்டங்கள் செய்தன!

ஆலயத்தில் சாதி வேறுபாடு பாக்குறாங்க-ன்னா பாய்ந்தோடி வராங்க-ல்ல அரசியல் தலைவர்கள்? பண வேறுபாடு பாக்குறாங்க-ன்னா மட்டும் ஏன் வருவதில்லை?
சாதி-சாதி வேறுபாடு எவ்வளவு கொடுமையோ, அதே போல் தான் ஆலயத்தில் பணம்-பண வேறுபாடு!
For whoever it is, Sorry! No Compromise! Zero Tolerance!!


5. கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை (Crowd Management) மிகவும் முக்கியமான ஒன்று! அட அதுக்குத் தானேப்பா ஸ்பெஷல் டிக்கெட் போடறோம்-னு எல்லாம் சொல்லாதீங்க! Manage the crowd, Dont exploit the crowd!

பெரிய ஆலயங்களில் தான் இந்தப் பிரச்சனை? அதான் வருவாய் வருதே! Management Consultant-களை அழைத்துப் பேசித் தீர்வு காணுங்களேன். கருவறைக்குள் ஒரே நேரத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்று முதலில் நிர்ணயம் செய்யுங்கள்! (Maximum Occupancy). நெரிசல்/விபத்து-ன்னா முதலில் HRCE தலைவர் ராஜினாமா செய்யட்டும்!

Crowd Managementக்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்! முன்பெல்லாம் திருமலை-திருப்பதியில் காத்திருப்பு நேரம் எவ்வளவு? தர்ம தரிசனம்னா 24-36 மணி நேரம்! இன்னிக்கி அப்படி இல்லை! இது எப்படிச் சாத்தியம் ஆகியது?
தேவஸ்தானம் முதலில் பக்தர்களுக்கு வசதியா சேர் எல்லாம் போட்டு, கொட்டாய்/ஷெட் கட்டியது. ஆனா IIM-A மாணவர்கள் தங்கள் பிராஜெக்டில், "ஷெட் கட்டுவதால் நெரிசல் வேணும்னா குறையும்! காத்திருப்பு நேரம் குறையாது! பிரச்சனையின் மூலத்தைப் பிடிங்க-ன்னு" சொன்னாங்க!

நோய் நாடி-நோய் முதல் நாடி-ன்னு பின்பு வந்தது தான் இந்த சுதர்சனம்-பார் கோட்(Bar Code)-கைப் பட்டைத் திட்டம்! இன்னிக்கி வெறுமனே கூண்டுக்குள் அடைஞ்சி கிடக்காம, திருமலையில் மற்ற இடங்களான பாபவிநாசம் நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, அனந்தாழ்வான் நந்தவனம், அதிசயக் கல்வளைவு-ன்னு பல இடங்களுக்குப் போய் வரமுடியுதே! பக்கத்து மாநிலத்தை பஸ் டிக்கெட் விலையேற்றத்துக்கு மட்டும் உதாரணம் காட்டாதீங்க! கூட்ட மேலாண்மைக்கும் அங்கிருந்து கொஞ்சம் பாடம் படிக்கலாம்!


6. சிறப்புத் தரிசனத் திட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள்!
ஞாபகம் வச்சிக்குங்க பக்தர்களே! -
* ஒன்னு "தர்ம" தரிசனம்!
* இன்னொன்னு "அதர்ம" தரிசனம்!
நீங்க எந்த தரிசனம் பார்க்க விரும்புறீங்க?


பணம் திரட்ட வேறு பல நல்ல வழிகள் உள்ளன! நல்ல மேலாண்மை, முதலீட்டு நிபுணர்களை அணுகுங்கள்! உங்களை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறேன்! பக்தர்களை விட்டு விடுங்கள்!
இறைவன் பிரம்மாதி தேவர்க்கு அரியவன்! பத்துடை அடியவர்க்கு எளியவன்! - இது தான் அடிப்படை! - சிறப்புத் தரிசனம்-னு சொல்லி அதைத் தூக்கிப் போட்டு உடைக்கறீங்க! அடிப்படையை ஆட்டிப்புட்டு, பணம் திரட்டி வைரக் கீரீடம் செய்யப் போறீங்களா? சொல்லுங்கப்பா!

அட, வேளாங்கண்ணியில கூட்டம் இல்லியா? அங்க சிறப்புத் தரிசனம் இருக்கா என்ன? ஒப்பிட்டுப் பேசறேன்-னு தப்பா நினைக்காதீங்க! நல்லதை எங்கிருந்து வேணும்னாலும் கத்துக்கலாம்!
எனக்குத் தெரிஞ்சி, ஷிர்டி சாயிபாபா, பிர்லா மந்திர், சபரிமலை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கிடையாது! இங்க போனா மட்டும் பிசியோ பிசியான நீங்க, எப்படி லைன்ல நிக்கறீங்க? கேரளக் கோவில்கள் பலவற்றில் சிறப்புத் தரிசனமே கிடையாது! கட்டுப் பெட்டித்தனங்கள் நிறைய இருந்தாலும், இந்த ஒன்றுக்காகவே அவிங்கள பாராட்டலாம்!

முதியோர், ஊனமுற்றோர், நோயாளிகள், கைக்குழந்தைகள் - இவர்கள் மட்டும் தான் விதிவிலக்கு! ஒரு நாளைக்கு நான்கு வேளை - இவர்களுக்கு மட்டும் தரிசன நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். போதும்!
ஐஸ்வர்யா ராய், அம்பானி எல்லாம் நிப்பாங்களா? அப்படியே நின்னாலும் கூட்டம் சும்மா விடுமா-ன்னு எல்லாம் கேட்கறீங்களா? வெளிநாட்டுக்குப் போனாங்கன்னா அவங்க ரோமாபுரியில் நிக்கலை? இங்கேயும் நிப்பாங்க!

இல்லீன்னா இருக்கவே இருக்கு சில அதிகாலைச் சேவைகள்! முன்பதிவு செய்துட்டு அந்த நாளுக்குக் காத்திருந்து வழிபடட்டுமே! அவங்க நன்கொடை கொடுத்தாங்கன்னா, நன்றி சொல்லி வாங்கிக்குங்க! மாலை போட்டு மரியாதை செய்யுங்க போதும்! மேல்விழுந்து கொண்டு பக்தர்கள் வரிசையை நிறுத்தறது எல்லாம் டூ மச்! எறிபத்த நாயனார் மட்டும் இப்ப இருந்தாரு...வாய் பேசாது! கை மழு தான் பேசும்! :-)


7. அனைத்து மதத்தினரையும் சேவிக்க உள்ளே விடுங்கள்! ஒரு காலத்தில் இருந்த பகைமை உணர்ச்சி இப்ப இல்லை! நீங்க சேவிக்க விட்டுட்டீங்க-ன்னு உடனே யாரும் அப்படியே திரண்டு வரப் போவதில்லை! விருப்பப்பட்டவங்க தான் வரப் போறாங்க! வரட்டுமே! துலுக்கா நாச்சியார் வரலையா?

இப்ப மட்டும் சாதாரண உடையில் வந்தா உங்களுக்குத் தெரியப் போவுதா என்ன? வெளிநாட்டவர்கள்/பிரபலங்கள் என்றால் தானே இந்தப் பிரச்சனை! எதுக்கு வீண் பழியைச் சுமந்து கொள்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை எந்த ஆகமத்திலும் இந்தத் தடை இல்லை! அப்படி இருந்தாச் சொல்லுங்க! தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கு! கோவிலுக்குப் பாதுகாப்பு அவசியம்! அதை பலப்படுத்துங்கள்! அதுவே போதும்!


8. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! பயிற்சியும் கல்வித் தகுதியுமே போதும்!
வாரிசுமுறை எல்லாம் தேவையே இல்லை! பெரும்பாலான வாரிசுகளே ஏழ்மை நிலை கருதி, வேண்டாம் என்று ஒடி விடுகின்றன! ஆக விருப்பமும், பயிற்சியும் தான் இன்றைய தேவை! இது பெரும் கோயில்களுக்கு மட்டும் இல்லை! கருப்பண்ணசாமி, பாடிகாட் முனீஸ்வரன், பேச்சியம்மன் போன்ற நாட்டார் ஆலயங்களில் கூடச் சாதிவழி அர்ச்சகர் முறை தேவையற்றது!

வைணவ ஆகமத்தில் முக்கியமான ஆகமம் ஒன்னு இருக்கு! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு பேரு! அதுல அர்ச்சகர்கள் சாதி வழி வரத் தேவையில்லை-ன்னு சொல்லியிருக்கு! அதை ஒட்டித் தான் திருவரங்கம் முதலான பல கோவில்களை, அன்னிக்கே ஸ்டிரிக்ட்டான வேறு ஆகமத்தில் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்துக்கு மாற்றினார் இராமானுசர்! பல எதிர்ப்புகளையும் மீறிச் செய்து காட்டினார்!

இன்னிக்கும் திருவரங்கம், திருக்கோவிலூர், வானமாமலை, திருக்குறுங்குடி-ன்னு பல ஆலயங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் இருக்காங்க! சுமார் முந்நூறு வருசமா வழி வழியா வராங்க! இதற்காகப் பல நிலைகளில் பயிற்சி தராங்க! ஆகமப் ப்ரவீனர்-னு பட்டமும் தராங்க!
ஏதோ அரசாங்கம் தான் இப்ப 2007ல சாதிச்சிட்டாங்க-ன்னு பேசிக்கறது எல்லாம் சும்மா! இன்னிக்கி அரசு அமைத்த குழுவில் சிறப்பு வழிகாட்டியே, திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர் தான்!


9. அர்ச்சகர்களையும், இதர அரசுப் பணியாளர்கள் போலவே நடத்துங்கள்! அவர்களுக்கும் மாத வருமானம், பதவி உயர்வு, அகவிலைப்படி, பயிற்சி என்று ஒரு ஒழுங்கு முறைக்குள் (system) கொண்டு வாருங்கள்!

ஆலயங்களை வருமான அளவில் வகைப் பிரித்து, அதற்கு ஏற்றாற் போல் ஊதியம் நிர்ணயிக்காதீர்கள்! எப்படிக் கோவில்பட்டி கிளாஸ்-சி ஊழியருக்கும், கோயம்புத்தூர் கிளாஸ்-சி ஊழியருக்கும் அதே சம்பளமோ, அதே போல் தான் பரமக்குடி கோயில் அர்ச்சகருக்கும், பழனி கோயில் அர்ச்சகருக்கும்!

ஆலயச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை, அனைத்து ஆலயப் பொது நிதி (common pool) ஆக்கி முதலீடு செய்யுங்கள்! TTD இப்படித் தான் செய்கிறது! ஆலோசனை கேளுங்கள்!

அர்ச்சகர்கள் மட்டும் இல்லை! அவர்களோடு, ஓதுவார்கள், அரையர்கள், நாதசுரம் மற்றும் இசைக் கலைஞர்கள், சிற்பிகள் - இவர்கள் எல்லாம் சிறப்புப் பணியாளர்கள் (Speciality Occupation); சமுதாயம் ஒதுங்கிக் கொள்ளும் வேலைகளை இவர்கள் துணிந்து செய்கிறார்கள்! மதித்து, கருணை காட்டுங்கள்!


10. தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!
வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு! அது காலத்தின் கொடுமை!!

ஒரு அரசாங்கம் சாதிக்க முடியாததை, ஆசாரியர்கள் சாதித்துக் காட்டினார்கள்! நாதமுனியும், இராமானுசரும், தேசிகரும், மணவாள மாமுனிகளும் - இவர்களுக்கு எல்லாம் தமிழக அரசு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது!


11. தமிழ் அர்ச்சனை பற்றிச் சென்ற பதிவிலேயே சொல்லி விட்டேன்!
இறைவன் மொழியைக் கடந்தவன் தான்! எனக்கும் தெரியும்! ஆனால் பக்தன் மொழியைக் கடந்தவனா? Again the objective is: பக்தனுக்கும் இறைவனுக்கும் பாலமாய் இருப்பது! தான் என்ன சொல்லி சங்கல்பம் செய்கிறோம் என்று பக்தனும் தெரிந்து கொள்வது தான் நல்லது!

அவரவர்க்கு விருப்பமான மொழியில் வழிபட்டுக் கொள்ளட்டுமே-ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான்! அவரவருக்கு விருப்பமான மொழி-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கறது?

இப்படிப் பொத்தாம் பொதுவாச் சொன்னீங்கனா நான் வேற மாதிரி வருவேன்! வேணும்னா இப்படிப் பண்ணலாமா?
அர்ச்சனையின் போது பேரு, நட்சத்திரம் கேக்கறாங்க-ல்ல? அப்படியே என்ன மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புறீங்க-ன்னு கேக்கலாம்!

* தமிழ்-னு சொன்னா தமிழ் அர்ச்சனை!
* உங்க இஷ்டம்-னு சொன்னாலும் தமிழ் அர்ச்சனை!
* வேறு ஏதாச்சும் மொழி குறிப்பிட்டுச் சொன்னா, தமிழ்நாட்டுல எங்க போறது? வடமொழி அர்ச்சனை செய்துடலாம்! என்ன சொல்றீங்க? :-)

அர்ச்சனை என்பது குணப்பெயர்களால் ஆன சொல்மாலை! அவ்வளவு தான்!
தொன்று தொட்டு எல்லாம் இது வருவதில்லை! புதிய ஆலயங்களுக்கு புதிய அர்ச்சனைகள் இன்றும் வடமொழியில் எழுதப்படுகின்றன! அமெரிக்காவில் சங்கல்பம் செய்யும் போது அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதி சமீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! Missisippi எந்த மந்திர நூலில் உள்ளது? :-))

எனவே புனிதம் போயிடுமோ, மந்திர அதிர்வு கொறைஞ்சிடுமோ-ன்னு எல்லாம் ஓவராக் கற்பனை பண்ணிக்காதீங்க, ப்ளீஸ்!

வடமொழியை மட்டம் தட்டவோ, இல்லை கைத்தட்டல் பெற்றுக் கொள்ளவோ இதை சொல்லவில்லை! அடியேன் சுப்ரபாதப் பதிவுகள் போடுவதும் உங்களுக்குத் தெரியும்!
புருஷ சூக்தம், ஸ்ரீருத்ரம், செளந்தர்ய லஹரி - இதையெல்லாம் மாத்திப் பாடச் சொல்லும் ஏட்டிக்குப் போட்டி ஆசாமி நானில்லை! ஆனால் அர்ச்சனையின் நோக்கத்தை (தாத்பர்யத்தை) உணர்ந்து கொள்ளுங்கள்! அவ்வளவே!


12. ஆலயத்தில் இறைவன் பூசனையோடு மட்டும் நின்று விடாது...
சமூக நல்லிணக்கம், மொழி வளர்ச்சி, இசை-பண்பாடு வளர்ச்சி, அருட் பேருரைகள், Counselling போன்ற நற்பணிகளைத் தன்னார்வக் குழுக்கள் உதவியுடன் செய்யத் திட்டம் தீட்டுங்கள்!
அன்னமாச்சார்யரின் தெலுங்குக் கீர்த்தனைகளை (கிட்டத்தட்ட 2003 பாடல்கள்), TTD digitize செய்து முடித்து விட்டது - ஒலி வடிவம் உட்பட! அடுத்து ஆழ்வார்களின் தமிழ்க் கீர்த்தனைகளைச் செய்யலாமா-ன்னு யோசிக்கறாங்களாம்! வாழ்க! வாழ்க!! திருப்பதி அவங்க கிட்டயே இருக்கட்டும்! தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்துறாதீங்கப்பா! :-)

அப்படியே வேகமாகச் சில கூடாதவைகள் (Dont's):

1. கருவறை நுழைவு கூடாது!
Control Room - விஞ்ஞானிகள், Operation Theater - மருத்துவர்கள், கருவறை - சாதி வேறுபாடற்ற, பயின்ற, அந்த ஆலய அர்ச்சகர்கள் மட்டுமே! - வேறு எப்பேர்பட்ட பிஸ்தும் உள்ளே நுழைதல் ஒவ்வாது!
சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு! அங்கே கருவறை என்ற ஆகம அமைப்போ, மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள்!

அதன் பெயரே கருவறை - கர்ப்பக் கிருகம் - தாயின் கருவறையில் வசதிகள் கம்மியாத் தான் இருக்கும்! குறுகலாத் தான் இருக்கும்! ஒளி, காற்று இதெல்லாம் இருக்காது! குழந்தை பாவம், இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கே-ன்னு விரிவாக்கம் செய்கிறோமா என்ன? அதே கான்செப்ட் தான் கருவறை! தனிப் பதிவில் சொல்கிறேன்! இங்கு விரிந்து விடும்!

உங்கள் நோக்கம் தரிசனமா? நுழைவா??
நுழைந்தே தீருவேன் என்று அடம் பிடித்தால், விரைவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேருங்கள்! Qualify and then Enter! :-)

2. மூலவரைப் படம் பிடித்தல், வீடியோ பிடித்தல்...கூடாது! சொன்னாக் கேட்டுக்குங்க!
படம் பிடித்தால் சக்தி கொறைஞ்சிடும் என்பதெல்லாம் டுபாக்கூர்! அப்படின்னா மறுப்பாளர்கள் தான் கோயிலுக்கு முதலில் வரணும்! வந்து சக்தியை எல்லாம் கொறைச்சிட்டுப் போயிடணும்! :-)

ஆகம ரீதியான கருவறைக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடு! காமிரா எல்லாம் இப்போ வந்தவை! ஆயிரம் ஆண்டுகளாக, ஓவியத்துக்குக் கூட இந்தக் கட்டுப்பாடு உண்டு என்பது தெரியுமா? அச்சு அசலாக அப்படியே வரைய மாட்டார்கள்! - ஏன்?

உருவம் கடந்த இறைவனை, கண நேரத்துக்கு உருவமுடன் காண்கிறோம்!
அருவமும், உருவமும் சேர்ந்து அருவுருவம் - கருவறை உருவை, உருவமாக "மட்டுமே" வீட்டிலும் கொண்டாந்து நம்ம ஏக போக இஷ்டத்துக்கும் நிலைநிறுத்தி விடக் கூடாது! அதான்! தனிப் பதிவில் சொல்கிறேன்!

திருமுகத்தை க்ளோசப் ஷாட் எடுத்துக்குங்க! DOF, Night Vision எல்லாம் கரெக்ட் செட்டிங் வச்சி எடுத்தீங்கனா, அதுவும் கருவறையின் இருட்டில் - பிச்சிக்கிட்டுப் போகாது? :-)
* கருவறையில் அமைதி பெற முயலுங்கள்!
* ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளலாம்!
ஏற்கனவே எடுத்திருந்தால் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! இனிச் செய்யாதீர்கள்! உற்சவரைப் படம் எடுக்க எவரும் தடை சொல்ல மாட்டார்கள்!

கருவறை உங்கள் பிறந்தநாள் பார்ட்டி நடக்கும் இடம் அல்ல!
இதையே நாசாவிலோ, இல்லை Imax Theater-இலோ செய்வீர்களா?
தஞ்சைப் பெரிய கோவில் உள்ளே இருக்கும் ஓவியக் கூடத்தில் கூட தொல்பொருள் துறை அனுமதிப்பதில்லை! இவன் யாரு கலையைப் படம் பிடிக்கத் தடை சொல்லுறது-ன்னு பேசறீங்களா?
அவ்ளோ பேசறவங்க, உங்க நினைவுத் திரையில் படம் பிடிச்சிக்கிட்டு வாங்களேன்!

3. கருவறையில் தள்ளுமுள்ளு தேவையில்லை! அதட்டல் பேச்சுக்கள் வேண்டாம்! பக்தர்களை வரிசைப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கு! பணியாளருக்கு பயிற்சியில் சொல்லிக் கொடுங்கள்! பணியாளருக்கு (அர்ச்சகர் உட்பட) நடத்தை விதிகள் (code of conduct) உருவாகட்டும்! வீண் வழக்குகள், விவாதங்கள் நடத்தும் இடம், கருவறை கிடையாது! இதை இரு தரப்பும் உணர வேண்டும்!


இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு!
நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites

2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153;
2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)

ஒரு பொது நிதியே (Common fund) அத்தனைக்கும் போதுமானது! நல்ல முதலீட்டு நிபுணர்கள் ஒன்னை ரெண்டாக்கித் தருவாங்க! வேணும்னா அம்பானியை HRCE நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டு, மரியாதையை எல்லாம் அங்கே செய்யுங்கள்! :-)

அரசே,
உன் செயல்பாட்டுக்கு கோயில் வருமானத்தில் கைவைக்க வேண்டாம்! முடிந்தால் இரயில்வே பட்ஜெட் தனியாகப் போடுவது போல், ஆலய பட்ஜெட் ஒன்றைத் தனியாகப் போடவும்!

பக்தர்களே!
மேலே சொன்ன நல்லது பல நடந்துச்சுன்னா, அப்போ உண்டியலில் பணம் போடுங்க! அது வரை போடாதீங்க! நீங்க போடும் பணம் முதலை வாய்க்குத் தான் போகும்!
நீங்க பொருளாக் கொடுங்க! சென்ற பதிவில் சொன்ன காசோலைத் திட்டத்தைக் கடைப்பிடியுங்க! போதும்!!

Coming back to the roots...
பெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி!
பக்தனின் உகப்புக்காக, ஆகா-ஓகோ வசதிகள் செய்து தருகிறேன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, முதலுக்கே மோசம் செய்தால்...

அடுத்த தலைமுறையில் நாத்திகத்தை நன்கு தழைக்கச் செய்த "பெரும் புண்ணியம்" தான் நமக்குக் கிட்டும்! :-)
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர்-எம்பாவாய்!


Results of the Poll:
Read more »

Monday, December 31, 2007

2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)

திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?

இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!

இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.

ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?

ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!

ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!


1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)

கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?

தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)


2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!

நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!

அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?

கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!


3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)

4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.


5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.


அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.

வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?

பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!

யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)

இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!


6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.

கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!



7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!

முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.

ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!

சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!


8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)

9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!

ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!

கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!


10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!

நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!

இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!

அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )

அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP