Showing posts with label ஆலயச் சீர்திருத்தம். Show all posts
Showing posts with label ஆலயச் சீர்திருத்தம். Show all posts

Sunday, January 06, 2008

2008: இனி கோயில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-2)

முந்தைய பகுதி இங்கே!
சும்மா ஒரு எடுத்துக்காட்டு! பழனி கோவில் வருமானம் எவ்வளவு இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் நாற்பது கோடி!
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருத்தருக்கு தொகுதி மேம்பாட்டுக்குன்னு செலவழிக்க மத்திய அரசு ஒதுக்கும் தொகை = ஆளுக்கு ஒரு கோடி!
அப்படின்னா பழனி ஆலயம் நாப்பது தொகுதிக்குச் சமானம்! இம்புட்டு மதிப்பு இருக்கும் முருகப் பெருமானின் கதி என்ன? சொல்லவே அடியேன் நாக்கூசுகிறது!

போலியோ அட்டாக் வந்து, கால்கள் குச்சி போல சூம்பிப் போன நிலையில், பெருமான் இருக்கிறானாம். நான் சொல்லலை! அரசாங்கத்தின் பழனிக் கமிட்டியில் உள்ள ஒரு கெமிக்கல் எஞ்சினீயர் சொல்றாரு!
முருகனின் கோலத்தைக் கிட்டக்க போயிப் பார்த்துவிட்டு வாய்விட்டு அழுதாராம்! அப்புறம் இங்கிட்டுப் போய் படிங்க. டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு...முந்து முந்து முருகவேள் முந்து! எங்கே முந்தறது?

அதான் நாப்பது கோடிக்குச் சொந்தக்காரனாச்சே-ப்பா? நல்லாக் கவனிப்பாங்களே!
உம்..உம்...கவனிக்கிறாங்க தான்! முருகனைத் தவிர மற்ற எல்லாத்தையும்!
இதே நாப்பது கோடி மதிப்புள்ள ஒரு தனியார் கம்பெனியில், அசெம்ப்ளி லைனில் - ப்ரேக் பொருத்தும் கருவி வீக்கா இருக்கு!
மணிக்கு அறுபது யூனிட் போட்டாகணும், இருபது தான் போட முடியுதுன்னா - இந்தப் பிரச்சனை குறைஞ்ச பட்சம் எவ்வளவு நாள் தீர்க்கப்படாம இருக்கும்-னு நினைக்கறீங்க? சுமார் இருபது வருடம்??? :-(

எல்லாருக்கும் பழனியில் பிரச்சனை இருக்கு-ன்னு தெரியும்! ஆனா தீர்வு மட்டும் ஏன் தேட மாட்டறாங்க?
காரணம்: அவங்க அவங்க முன்னுரிமை வேற வேற!
* நிர்வாகத்தின் முன்னுரிமை: பொருள் ஈட்டுதல், ஈட்டிய பொருளை அரசு(?) கஜானாவில் சேர்த்தல்.
* பக்தர்களின் முன்னுரிமை: தங்களுடைய வேண்டுதல் மட்டுமே! குடம் குடமாய் பாலாபிஷேகம்.

அதான் சென்ற பதிவில் சொன்னேன். பக்தர்கள் பங்கு=40%, நிர்வாகத்தின் பங்கு=60%; சென்ற பதிவில் நம்மால் ஆன சிறு சிறு சீர்திருத்தங்கள், மாற்றங்களைப் பார்த்தோம்.
இன்னிக்கி துறை சார்ந்த மாற்றங்கள் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.



ஆகமங்கள்: கோயில்ல இருக்கும் சிலையின் நீள-அகலங்கள், மற்றும் அதன் தன்மைக்கு ஏற்ப, இத்தனை குடம் நீராட்டு, இவ்வளவு முறை நீராட்டு என்பது நியமம்! தைலக் காப்பு செய்தல், விக்ரக சேதாரங்களைக் குறைக்கும்! (wear & tear)

பக்தர்கள்: அவன் ஒரு குடம் கொடுத்தான். நாமும் ஒரு குடமாச்சும் குடுத்து வேண்டிக்குவோம். சரி போட்டிக்காக எல்லாம் வேணாம்! நம்ம கஷ்டமெல்லாம் தீர அவனைக் குளிரக் குளிரக் குளிப்பாட்டி மகிழ்வோம்! - இப்படி ஓவராக் குளிப்பாட்டினா அவன் மகிழ்வானா? ஐயோ! அதை யோசிக்கலையே!

நிர்வாகம்: கோயிலுக்கு வருவாய் சேர்க்கணும்-னா புதுப்புது வழியில் திட்டங்கள் உருவாக்கணுமாம்! பக்தர்கள் பாலாபிஷேகம் செய்வதில் குறியா இருக்காய்ங்க! இந்த வீக்னஸ் தான் நமக்கு டிமாண்டு! புதுசா புதுசா திட்டம் போடுவோமா?
1. AFA = Abishekam For All = Rs 500/- only!
2. அ.ஆ. = அபிடேகம்-ஆறுமுகம் = Rs. 100/- only

அச்சோ...இதனால் மூலவர் சிலை சேதாரப்பட்டாலும் படலாம்! ஆகமத்தில் சொல்லி இருக்கே! ஆறு கால வழிபாட்டு - வெறும் ஆறாறு (6x6) குடம் முழுக்காட்டுன்னு...

யோவ், அதெல்லாம் ஒருத்தனுக்கும் புரியாது! ஒரு G.O. போட்டாப் போச்சு! தெரிஞ்ச அர்ச்சகர்கள் கூட எதிர்க்க மாட்டாங்க! அவங்களுக்கும் ஒரு பங்கு கொடுத்துருவோம்!
நாம என்ன கொலையா பண்ணுறோம்? சாமிக்கு அபிசேகம் தானயா பண்ணுறோம்? அப்படியே வருவாயைப் பெருக்கிப் "பல நல்ல" விசயங்களுக்குப் பயன்படுத்தப் போறோம்! வந்துட்டாங்க பெருசா!....போயி ஆவுற வேலயப் பாருங்கப்பா!
குருவாய் "வருவாய்" அருள்வாய் குகனே-ன்னு, வருவாயைத் தான் அருளச் சொல்லி இருக்காரு! தெரியுமில்ல? :-)

இப்படித் தான் பொதுவா எல்லா வருவாய் பெருக்கும் திட்டங்களும் ஆரம்பிக்குது! வருவாயைப் பெருக்க வேண்டாம்-னு சொல்லலை!
ஆனா at the cost of what? எதுக்கு முன்னுரிமை? அதை யோசிக்க மறுப்பது ஏன்?
* ஆலயங்கள் இறைவனுக்கும் பக்தனுக்கும் பாலமாக இருக்க ஏற்பட்டவையா?
** இல்லை சராசரி பக்தனுக்கு ரெண்டு லட்டு ஃப்ரீயாக் கிடைக்கட்டுமே-ன்னு "ஒரு நல்ல எண்ணத்துல", தனவான்களைக் தனியாக் கவனிக்க ஏற்பட்டவையா?
- "கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்?" என்று பாரதி கேட்டது தான் நினைவுக்கு வருது!

இதுக்கெல்லாம் பக்தர்களைப் பெருசாக் குறை சொல்ல முடியாது!
பலரும் ஆன்மிக வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தான்! அவர்களுக்குப் படிப்படியாக ஆன்மீகச் சிந்தனைகள், மன அமைதி, பண்பாடு இவற்றை எல்லாம் ஊட்டத் தானே ஆலயங்கள் தோன்றின!
ஆ+லயம் = ஆன்மா லயிக்கும் இடம்!
ஹிஹி! லயிப்பதா? சிரிக்கிறீங்களா? ஆனா அது தான் உண்மை! அதான் நிர்வாகத்தின் பங்கு 60%! வாங்க, பார்க்கலாம்!



1. முதலில் ஆலய நிர்வாகம், கொள்கை என்ன என்பதை வரையறுத்துக் கொள்ளட்டும். ஆலயங்களின் முழுமுதல் நோக்கம் (Primary Objective): இறைவனுக்கும்-பக்தனுக்கும் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே!

இதெல்லாம் பேசத் தான் நல்லா இருக்கும், நடைமுறைக்குச் சாத்தியமில்லை-ன்னு சொல்லலாம்!
வாடிக்கையாளர் திருப்தியே ஒரு நிறுவனத்தின் முதல் நோக்கம்-ன்னு ஒரு இயக்கம் வந்த போது, நிறைய பேர் இதையே தான் சொன்னாங்க! ஆனா இன்னிக்கி நிலைமை என்ன? வாடிக்கையாளர்களை வெளிப்படையாக யாரும் பகைச்சிக்க முடியாது!

அதே மாற்றம் தான், ஆலயங்களுக்கும் வர வேண்டும்!
ஆலயத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், இந்த முழுமுதல் நோக்கத்துடன் ஒத்துப் போகிறதா என்பதைச் சரி பார்த்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்! (All actions should be aligned with this objective)


2. அரசின் இந்து அறநிலையத் துறை (HRCE), முதலில் ஒரு தன்னாட்சி நிறுவனமாக மாற வேண்டும்! IIT, IIM, ISRO என்று இருப்பது போல் HRCE.
இதில் அரசின் பங்கு கொள்கை முடிவுகள் மட்டுமே!

எப்படி ஒரு கம்பெனிக்கு Charter, Vision Statement, Mission, Quality Policy என்று இருக்கிறதோ, அதே போல் HRCE-க்கும் தேவை.
முக்கியமான ஒன்று: கூடுமான வரை HRCE-இன் நிர்வாக மட்டத்தில் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தவர்கள், அரசியல்வாதிகள் இல்லாமல் இருத்தல் நலம்.
அதே போல் ஆகம வல்லுநர், பொருளாதார வல்லுநர் - இருவரும் அதிகாரக் குழுவில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்!

ஆங்காங்கு உள்ள கோயில்களில் தன்னார்வக் கண்காணிப்பு குழுக்கள் அமையுங்கள்.
இல்லத் தலைவிகள், வணிகர், மருத்துவர் என்று சமுதாயத்தின் ஒவ்வொரு தட்டிலும் இருந்தும் ஒருவர் இருப்பது நல்லது. குறிப்பாக கல்லூரி மாணவ/மாணவியர் இருக்க வேண்டும்! இளங்கன்று பயமறியாமல் பட்டதைச் சொல்லும்!


3. அனைத்து ஆலயங்களின் பணித் தகவல்கள், அசையாச் சொத்துக்கள், நிலங்கள் ஆவணப்படுத்தி, நடைமுறையும் படுத்த வேண்டும்! தரவுத் தளத்தில் (database) சேமிக்கப்பட வேண்டும்!
ஒவ்வொரு ஆண்டும் வரவு-செலவு அறிக்கையை வெளிப்படையாகச் சமர்பிக்க வேண்டும்! அனைவர் பார்வையிலும் படும்படி இருக்க வேண்டும்!

ஆலயச் சொத்தை அபகரிப்போர், குத்தகை/வாடகை தராதவர்களின் பெயர்கள்-புகைப்படத்தைக் கட்டம் கட்டி, ஆலய வாசலில் பெரிதாக வைக்க வேண்டும்! அட, நன்கொடை கொடுத்தவங்க பேரை வைக்கறீங்க! புன்கொடை கொடுத்தவங்க பேரையும் பெருசா வைங்கடே! மானம் போகட்டும் :-)


4. சாதி, மதம், பணம் - இந்த வேறுபாடுகள் ஆலயங்களில் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்!
* சாதி=கிட்டத்தட்ட ஒழித்தாகி விட்டது! இதுக்கு ஒரு பெரியார் வர வேண்டி இருந்தது!
* பணம்=இந்தப் பேதத்தை ஒழிக்க இன்னொரு பெரியார் வருவாரா?
தன்னலமில்லாத ஆன்ம பலத்தால், கோவிலில் சாதிக் கொடுமையை ஒழித்துத் தள்ளினார் பெரியார்! பயமே பாதி வேலையைச் செய்தது! மீதியைத் தான் சட்டங்கள் செய்தன!

ஆலயத்தில் சாதி வேறுபாடு பாக்குறாங்க-ன்னா பாய்ந்தோடி வராங்க-ல்ல அரசியல் தலைவர்கள்? பண வேறுபாடு பாக்குறாங்க-ன்னா மட்டும் ஏன் வருவதில்லை?
சாதி-சாதி வேறுபாடு எவ்வளவு கொடுமையோ, அதே போல் தான் ஆலயத்தில் பணம்-பண வேறுபாடு!
For whoever it is, Sorry! No Compromise! Zero Tolerance!!


5. கூட்டக் கட்டுப்பாடு மேலாண்மை (Crowd Management) மிகவும் முக்கியமான ஒன்று! அட அதுக்குத் தானேப்பா ஸ்பெஷல் டிக்கெட் போடறோம்-னு எல்லாம் சொல்லாதீங்க! Manage the crowd, Dont exploit the crowd!

பெரிய ஆலயங்களில் தான் இந்தப் பிரச்சனை? அதான் வருவாய் வருதே! Management Consultant-களை அழைத்துப் பேசித் தீர்வு காணுங்களேன். கருவறைக்குள் ஒரே நேரத்தில் எத்தனை பேர் இருக்கலாம் என்று முதலில் நிர்ணயம் செய்யுங்கள்! (Maximum Occupancy). நெரிசல்/விபத்து-ன்னா முதலில் HRCE தலைவர் ராஜினாமா செய்யட்டும்!

Crowd Managementக்கு மட்டும் ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்! முன்பெல்லாம் திருமலை-திருப்பதியில் காத்திருப்பு நேரம் எவ்வளவு? தர்ம தரிசனம்னா 24-36 மணி நேரம்! இன்னிக்கி அப்படி இல்லை! இது எப்படிச் சாத்தியம் ஆகியது?
தேவஸ்தானம் முதலில் பக்தர்களுக்கு வசதியா சேர் எல்லாம் போட்டு, கொட்டாய்/ஷெட் கட்டியது. ஆனா IIM-A மாணவர்கள் தங்கள் பிராஜெக்டில், "ஷெட் கட்டுவதால் நெரிசல் வேணும்னா குறையும்! காத்திருப்பு நேரம் குறையாது! பிரச்சனையின் மூலத்தைப் பிடிங்க-ன்னு" சொன்னாங்க!

நோய் நாடி-நோய் முதல் நாடி-ன்னு பின்பு வந்தது தான் இந்த சுதர்சனம்-பார் கோட்(Bar Code)-கைப் பட்டைத் திட்டம்! இன்னிக்கி வெறுமனே கூண்டுக்குள் அடைஞ்சி கிடக்காம, திருமலையில் மற்ற இடங்களான பாபவிநாசம் நீர்வீழ்ச்சி, ஆகாச கங்கை, அனந்தாழ்வான் நந்தவனம், அதிசயக் கல்வளைவு-ன்னு பல இடங்களுக்குப் போய் வரமுடியுதே! பக்கத்து மாநிலத்தை பஸ் டிக்கெட் விலையேற்றத்துக்கு மட்டும் உதாரணம் காட்டாதீங்க! கூட்ட மேலாண்மைக்கும் அங்கிருந்து கொஞ்சம் பாடம் படிக்கலாம்!


6. சிறப்புத் தரிசனத் திட்டத்தை அடியோடு ஒழித்துக் கட்டுங்கள்!
ஞாபகம் வச்சிக்குங்க பக்தர்களே! -
* ஒன்னு "தர்ம" தரிசனம்!
* இன்னொன்னு "அதர்ம" தரிசனம்!
நீங்க எந்த தரிசனம் பார்க்க விரும்புறீங்க?


பணம் திரட்ட வேறு பல நல்ல வழிகள் உள்ளன! நல்ல மேலாண்மை, முதலீட்டு நிபுணர்களை அணுகுங்கள்! உங்களை கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறேன்! பக்தர்களை விட்டு விடுங்கள்!
இறைவன் பிரம்மாதி தேவர்க்கு அரியவன்! பத்துடை அடியவர்க்கு எளியவன்! - இது தான் அடிப்படை! - சிறப்புத் தரிசனம்-னு சொல்லி அதைத் தூக்கிப் போட்டு உடைக்கறீங்க! அடிப்படையை ஆட்டிப்புட்டு, பணம் திரட்டி வைரக் கீரீடம் செய்யப் போறீங்களா? சொல்லுங்கப்பா!

அட, வேளாங்கண்ணியில கூட்டம் இல்லியா? அங்க சிறப்புத் தரிசனம் இருக்கா என்ன? ஒப்பிட்டுப் பேசறேன்-னு தப்பா நினைக்காதீங்க! நல்லதை எங்கிருந்து வேணும்னாலும் கத்துக்கலாம்!
எனக்குத் தெரிஞ்சி, ஷிர்டி சாயிபாபா, பிர்லா மந்திர், சபரிமலை இங்கெல்லாம் சிறப்புத் தரிசனம் கிடையாது! இங்க போனா மட்டும் பிசியோ பிசியான நீங்க, எப்படி லைன்ல நிக்கறீங்க? கேரளக் கோவில்கள் பலவற்றில் சிறப்புத் தரிசனமே கிடையாது! கட்டுப் பெட்டித்தனங்கள் நிறைய இருந்தாலும், இந்த ஒன்றுக்காகவே அவிங்கள பாராட்டலாம்!

முதியோர், ஊனமுற்றோர், நோயாளிகள், கைக்குழந்தைகள் - இவர்கள் மட்டும் தான் விதிவிலக்கு! ஒரு நாளைக்கு நான்கு வேளை - இவர்களுக்கு மட்டும் தரிசன நேரம் ஒதுக்கிக் கொடுங்கள். போதும்!
ஐஸ்வர்யா ராய், அம்பானி எல்லாம் நிப்பாங்களா? அப்படியே நின்னாலும் கூட்டம் சும்மா விடுமா-ன்னு எல்லாம் கேட்கறீங்களா? வெளிநாட்டுக்குப் போனாங்கன்னா அவங்க ரோமாபுரியில் நிக்கலை? இங்கேயும் நிப்பாங்க!

இல்லீன்னா இருக்கவே இருக்கு சில அதிகாலைச் சேவைகள்! முன்பதிவு செய்துட்டு அந்த நாளுக்குக் காத்திருந்து வழிபடட்டுமே! அவங்க நன்கொடை கொடுத்தாங்கன்னா, நன்றி சொல்லி வாங்கிக்குங்க! மாலை போட்டு மரியாதை செய்யுங்க போதும்! மேல்விழுந்து கொண்டு பக்தர்கள் வரிசையை நிறுத்தறது எல்லாம் டூ மச்! எறிபத்த நாயனார் மட்டும் இப்ப இருந்தாரு...வாய் பேசாது! கை மழு தான் பேசும்! :-)


7. அனைத்து மதத்தினரையும் சேவிக்க உள்ளே விடுங்கள்! ஒரு காலத்தில் இருந்த பகைமை உணர்ச்சி இப்ப இல்லை! நீங்க சேவிக்க விட்டுட்டீங்க-ன்னு உடனே யாரும் அப்படியே திரண்டு வரப் போவதில்லை! விருப்பப்பட்டவங்க தான் வரப் போறாங்க! வரட்டுமே! துலுக்கா நாச்சியார் வரலையா?

இப்ப மட்டும் சாதாரண உடையில் வந்தா உங்களுக்குத் தெரியப் போவுதா என்ன? வெளிநாட்டவர்கள்/பிரபலங்கள் என்றால் தானே இந்தப் பிரச்சனை! எதுக்கு வீண் பழியைச் சுமந்து கொள்கிறீர்கள்? எனக்குத் தெரிந்தவரை எந்த ஆகமத்திலும் இந்தத் தடை இல்லை! அப்படி இருந்தாச் சொல்லுங்க! தீவிரவாதிகள் அச்சுறுத்தல் எப்போதும் இருக்கு! கோவிலுக்குப் பாதுகாப்பு அவசியம்! அதை பலப்படுத்துங்கள்! அதுவே போதும்!


8. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! பயிற்சியும் கல்வித் தகுதியுமே போதும்!
வாரிசுமுறை எல்லாம் தேவையே இல்லை! பெரும்பாலான வாரிசுகளே ஏழ்மை நிலை கருதி, வேண்டாம் என்று ஒடி விடுகின்றன! ஆக விருப்பமும், பயிற்சியும் தான் இன்றைய தேவை! இது பெரும் கோயில்களுக்கு மட்டும் இல்லை! கருப்பண்ணசாமி, பாடிகாட் முனீஸ்வரன், பேச்சியம்மன் போன்ற நாட்டார் ஆலயங்களில் கூடச் சாதிவழி அர்ச்சகர் முறை தேவையற்றது!

வைணவ ஆகமத்தில் முக்கியமான ஆகமம் ஒன்னு இருக்கு! பாஞ்சராத்ர ஆகமம்-ன்னு பேரு! அதுல அர்ச்சகர்கள் சாதி வழி வரத் தேவையில்லை-ன்னு சொல்லியிருக்கு! அதை ஒட்டித் தான் திருவரங்கம் முதலான பல கோவில்களை, அன்னிக்கே ஸ்டிரிக்ட்டான வேறு ஆகமத்தில் இருந்து பாஞ்சராத்ர ஆகமத்துக்கு மாற்றினார் இராமானுசர்! பல எதிர்ப்புகளையும் மீறிச் செய்து காட்டினார்!

இன்னிக்கும் திருவரங்கம், திருக்கோவிலூர், வானமாமலை, திருக்குறுங்குடி-ன்னு பல ஆலயங்களில் அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் இருக்காங்க! சுமார் முந்நூறு வருசமா வழி வழியா வராங்க! இதற்காகப் பல நிலைகளில் பயிற்சி தராங்க! ஆகமப் ப்ரவீனர்-னு பட்டமும் தராங்க!
ஏதோ அரசாங்கம் தான் இப்ப 2007ல சாதிச்சிட்டாங்க-ன்னு பேசிக்கறது எல்லாம் சும்மா! இன்னிக்கி அரசு அமைத்த குழுவில் சிறப்பு வழிகாட்டியே, திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர் தான்!


9. அர்ச்சகர்களையும், இதர அரசுப் பணியாளர்கள் போலவே நடத்துங்கள்! அவர்களுக்கும் மாத வருமானம், பதவி உயர்வு, அகவிலைப்படி, பயிற்சி என்று ஒரு ஒழுங்கு முறைக்குள் (system) கொண்டு வாருங்கள்!

ஆலயங்களை வருமான அளவில் வகைப் பிரித்து, அதற்கு ஏற்றாற் போல் ஊதியம் நிர்ணயிக்காதீர்கள்! எப்படிக் கோவில்பட்டி கிளாஸ்-சி ஊழியருக்கும், கோயம்புத்தூர் கிளாஸ்-சி ஊழியருக்கும் அதே சம்பளமோ, அதே போல் தான் பரமக்குடி கோயில் அர்ச்சகருக்கும், பழனி கோயில் அர்ச்சகருக்கும்!

ஆலயச் செலவுகள் போக மீதமுள்ள பணத்தை, அனைத்து ஆலயப் பொது நிதி (common pool) ஆக்கி முதலீடு செய்யுங்கள்! TTD இப்படித் தான் செய்கிறது! ஆலோசனை கேளுங்கள்!

அர்ச்சகர்கள் மட்டும் இல்லை! அவர்களோடு, ஓதுவார்கள், அரையர்கள், நாதசுரம் மற்றும் இசைக் கலைஞர்கள், சிற்பிகள் - இவர்கள் எல்லாம் சிறப்புப் பணியாளர்கள் (Speciality Occupation); சமுதாயம் ஒதுங்கிக் கொள்ளும் வேலைகளை இவர்கள் துணிந்து செய்கிறார்கள்! மதித்து, கருணை காட்டுங்கள்!


10. தேவாரத் திருவாசகத் திருமுறைகள் = எல்லாச் சிவாலயங்களிலும் ஆறு காலமும் கண்டிப்பாக ஓதப்பட வேண்டும்! முதலில் மந்திரங்கள் ஓதி விட்டு, பின்பு ஓதுவார்கள் பதிகங்கள் ஓதிக் கொள்ளலாம் என்பது எல்லாம் மிகவும் தவறு! சிவாச்சாரியார்களும் சேர்ந்தே ஓத வேண்டும்! சிவாலயங்களில் இதை நடைமுறைப்படுத்த ஒரு குழுவை அமையுங்கள்!
வைணவ ஆலயங்களில் இந்தப் பாகுபாடு பிரச்சனை இல்லை! பெருமாளே தமிழ்ப் பாசுரக் குழுவின் பின்னால் தான் போகிறார்! முதலில் தமிழ்க் குழு - பின்னர் பெருமாள் - அவர் பின்னால் வேத கோஷ்டி!
ஆழ்வார்களுக்குப் பின் ஆசாரியர்கள் வந்தது போல, நாயன்மார்களுக்குப் பின் எவரும் வராதது தான் சைவத்துக்கு ஒரு இழப்பு! அது காலத்தின் கொடுமை!!

ஒரு அரசாங்கம் சாதிக்க முடியாததை, ஆசாரியர்கள் சாதித்துக் காட்டினார்கள்! நாதமுனியும், இராமானுசரும், தேசிகரும், மணவாள மாமுனிகளும் - இவர்களுக்கு எல்லாம் தமிழக அரசு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளது!


11. தமிழ் அர்ச்சனை பற்றிச் சென்ற பதிவிலேயே சொல்லி விட்டேன்!
இறைவன் மொழியைக் கடந்தவன் தான்! எனக்கும் தெரியும்! ஆனால் பக்தன் மொழியைக் கடந்தவனா? Again the objective is: பக்தனுக்கும் இறைவனுக்கும் பாலமாய் இருப்பது! தான் என்ன சொல்லி சங்கல்பம் செய்கிறோம் என்று பக்தனும் தெரிந்து கொள்வது தான் நல்லது!

அவரவர்க்கு விருப்பமான மொழியில் வழிபட்டுக் கொள்ளட்டுமே-ன்னு சொல்றீங்களா? அதுவுஞ் சரி தான்! அவரவருக்கு விருப்பமான மொழி-ன்னு எப்படித் தெரிஞ்சிக்கறது?

இப்படிப் பொத்தாம் பொதுவாச் சொன்னீங்கனா நான் வேற மாதிரி வருவேன்! வேணும்னா இப்படிப் பண்ணலாமா?
அர்ச்சனையின் போது பேரு, நட்சத்திரம் கேக்கறாங்க-ல்ல? அப்படியே என்ன மொழியில் அர்ச்சனை செய்ய விரும்புறீங்க-ன்னு கேக்கலாம்!

* தமிழ்-னு சொன்னா தமிழ் அர்ச்சனை!
* உங்க இஷ்டம்-னு சொன்னாலும் தமிழ் அர்ச்சனை!
* வேறு ஏதாச்சும் மொழி குறிப்பிட்டுச் சொன்னா, தமிழ்நாட்டுல எங்க போறது? வடமொழி அர்ச்சனை செய்துடலாம்! என்ன சொல்றீங்க? :-)

அர்ச்சனை என்பது குணப்பெயர்களால் ஆன சொல்மாலை! அவ்வளவு தான்!
தொன்று தொட்டு எல்லாம் இது வருவதில்லை! புதிய ஆலயங்களுக்கு புதிய அர்ச்சனைகள் இன்றும் வடமொழியில் எழுதப்படுகின்றன! அமெரிக்காவில் சங்கல்பம் செய்யும் போது அமெரிக்கா வர்ஷே, Missisippi-Missouri ஜீவ நதி சமீப ஸ்திதா-ன்னு சொல்லுறாங்களே! Missisippi எந்த மந்திர நூலில் உள்ளது? :-))

எனவே புனிதம் போயிடுமோ, மந்திர அதிர்வு கொறைஞ்சிடுமோ-ன்னு எல்லாம் ஓவராக் கற்பனை பண்ணிக்காதீங்க, ப்ளீஸ்!

வடமொழியை மட்டம் தட்டவோ, இல்லை கைத்தட்டல் பெற்றுக் கொள்ளவோ இதை சொல்லவில்லை! அடியேன் சுப்ரபாதப் பதிவுகள் போடுவதும் உங்களுக்குத் தெரியும்!
புருஷ சூக்தம், ஸ்ரீருத்ரம், செளந்தர்ய லஹரி - இதையெல்லாம் மாத்திப் பாடச் சொல்லும் ஏட்டிக்குப் போட்டி ஆசாமி நானில்லை! ஆனால் அர்ச்சனையின் நோக்கத்தை (தாத்பர்யத்தை) உணர்ந்து கொள்ளுங்கள்! அவ்வளவே!


12. ஆலயத்தில் இறைவன் பூசனையோடு மட்டும் நின்று விடாது...
சமூக நல்லிணக்கம், மொழி வளர்ச்சி, இசை-பண்பாடு வளர்ச்சி, அருட் பேருரைகள், Counselling போன்ற நற்பணிகளைத் தன்னார்வக் குழுக்கள் உதவியுடன் செய்யத் திட்டம் தீட்டுங்கள்!
அன்னமாச்சார்யரின் தெலுங்குக் கீர்த்தனைகளை (கிட்டத்தட்ட 2003 பாடல்கள்), TTD digitize செய்து முடித்து விட்டது - ஒலி வடிவம் உட்பட! அடுத்து ஆழ்வார்களின் தமிழ்க் கீர்த்தனைகளைச் செய்யலாமா-ன்னு யோசிக்கறாங்களாம்! வாழ்க! வாழ்க!! திருப்பதி அவங்க கிட்டயே இருக்கட்டும்! தமிழ்நாட்டுக்குத் திருப்பிக் கொடுத்துறாதீங்கப்பா! :-)

அப்படியே வேகமாகச் சில கூடாதவைகள் (Dont's):

1. கருவறை நுழைவு கூடாது!
Control Room - விஞ்ஞானிகள், Operation Theater - மருத்துவர்கள், கருவறை - சாதி வேறுபாடற்ற, பயின்ற, அந்த ஆலய அர்ச்சகர்கள் மட்டுமே! - வேறு எப்பேர்பட்ட பிஸ்தும் உள்ளே நுழைதல் ஒவ்வாது!
சில ஆலயங்கள் மட்டுமே (காசி விஸ்வநாதர் உட்பட) விதி விலக்கு! அங்கே கருவறை என்ற ஆகம அமைப்போ, மூர்த்தி-சேதன பிராணப் பிரதிஷ்டை என்ற முறையோ கிடையாது! இருந்திருந்தால் அங்கேயும் உள்ளே விட்டிருக்க மாட்டார்கள்!

அதன் பெயரே கருவறை - கர்ப்பக் கிருகம் - தாயின் கருவறையில் வசதிகள் கம்மியாத் தான் இருக்கும்! குறுகலாத் தான் இருக்கும்! ஒளி, காற்று இதெல்லாம் இருக்காது! குழந்தை பாவம், இடுக்கிக் கொண்டு உட்கார்ந்து இருக்கே-ன்னு விரிவாக்கம் செய்கிறோமா என்ன? அதே கான்செப்ட் தான் கருவறை! தனிப் பதிவில் சொல்கிறேன்! இங்கு விரிந்து விடும்!

உங்கள் நோக்கம் தரிசனமா? நுழைவா??
நுழைந்தே தீருவேன் என்று அடம் பிடித்தால், விரைவில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேருங்கள்! Qualify and then Enter! :-)

2. மூலவரைப் படம் பிடித்தல், வீடியோ பிடித்தல்...கூடாது! சொன்னாக் கேட்டுக்குங்க!
படம் பிடித்தால் சக்தி கொறைஞ்சிடும் என்பதெல்லாம் டுபாக்கூர்! அப்படின்னா மறுப்பாளர்கள் தான் கோயிலுக்கு முதலில் வரணும்! வந்து சக்தியை எல்லாம் கொறைச்சிட்டுப் போயிடணும்! :-)

ஆகம ரீதியான கருவறைக்கு மட்டும் தான் இந்தக் கட்டுப்பாடு! காமிரா எல்லாம் இப்போ வந்தவை! ஆயிரம் ஆண்டுகளாக, ஓவியத்துக்குக் கூட இந்தக் கட்டுப்பாடு உண்டு என்பது தெரியுமா? அச்சு அசலாக அப்படியே வரைய மாட்டார்கள்! - ஏன்?

உருவம் கடந்த இறைவனை, கண நேரத்துக்கு உருவமுடன் காண்கிறோம்!
அருவமும், உருவமும் சேர்ந்து அருவுருவம் - கருவறை உருவை, உருவமாக "மட்டுமே" வீட்டிலும் கொண்டாந்து நம்ம ஏக போக இஷ்டத்துக்கும் நிலைநிறுத்தி விடக் கூடாது! அதான்! தனிப் பதிவில் சொல்கிறேன்!

திருமுகத்தை க்ளோசப் ஷாட் எடுத்துக்குங்க! DOF, Night Vision எல்லாம் கரெக்ட் செட்டிங் வச்சி எடுத்தீங்கனா, அதுவும் கருவறையின் இருட்டில் - பிச்சிக்கிட்டுப் போகாது? :-)
* கருவறையில் அமைதி பெற முயலுங்கள்!
* ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் வெளியே வைத்துக் கொள்ளலாம்!
ஏற்கனவே எடுத்திருந்தால் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்! இனிச் செய்யாதீர்கள்! உற்சவரைப் படம் எடுக்க எவரும் தடை சொல்ல மாட்டார்கள்!

கருவறை உங்கள் பிறந்தநாள் பார்ட்டி நடக்கும் இடம் அல்ல!
இதையே நாசாவிலோ, இல்லை Imax Theater-இலோ செய்வீர்களா?
தஞ்சைப் பெரிய கோவில் உள்ளே இருக்கும் ஓவியக் கூடத்தில் கூட தொல்பொருள் துறை அனுமதிப்பதில்லை! இவன் யாரு கலையைப் படம் பிடிக்கத் தடை சொல்லுறது-ன்னு பேசறீங்களா?
அவ்ளோ பேசறவங்க, உங்க நினைவுத் திரையில் படம் பிடிச்சிக்கிட்டு வாங்களேன்!

3. கருவறையில் தள்ளுமுள்ளு தேவையில்லை! அதட்டல் பேச்சுக்கள் வேண்டாம்! பக்தர்களை வரிசைப்படுத்த பல நல்ல வழிகள் இருக்கு! பணியாளருக்கு பயிற்சியில் சொல்லிக் கொடுங்கள்! பணியாளருக்கு (அர்ச்சகர் உட்பட) நடத்தை விதிகள் (code of conduct) உருவாகட்டும்! வீண் வழக்குகள், விவாதங்கள் நடத்தும் இடம், கருவறை கிடையாது! இதை இரு தரப்பும் உணர வேண்டும்!


இப்போ டப்பு மேட்டருக்கு ஒஸ்தானு!
நற்பணிகள் எல்லாம் நடைபெற வேண்டுமே? இத்தனைக்கும் பணம்?
1. தமிழக ஆலயங்களின் மொத்த நிலச்சொத்து (கணக்கில் வந்தவை மட்டும்) = 4,78,939 acres, 20,046 buildings and 33,627 sites

2. பத்து லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள ஆலயங்கள் = 153;
2-10 lakhs = 438; 1-2 lakhs = 3390 (நன்றி: http://www.hrce.tn.nic.in/)

ஒரு பொது நிதியே (Common fund) அத்தனைக்கும் போதுமானது! நல்ல முதலீட்டு நிபுணர்கள் ஒன்னை ரெண்டாக்கித் தருவாங்க! வேணும்னா அம்பானியை HRCE நிர்வாகக் குழுவில் சேர்த்துக் கொண்டு, மரியாதையை எல்லாம் அங்கே செய்யுங்கள்! :-)

அரசே,
உன் செயல்பாட்டுக்கு கோயில் வருமானத்தில் கைவைக்க வேண்டாம்! முடிந்தால் இரயில்வே பட்ஜெட் தனியாகப் போடுவது போல், ஆலய பட்ஜெட் ஒன்றைத் தனியாகப் போடவும்!

பக்தர்களே!
மேலே சொன்ன நல்லது பல நடந்துச்சுன்னா, அப்போ உண்டியலில் பணம் போடுங்க! அது வரை போடாதீங்க! நீங்க போடும் பணம் முதலை வாய்க்குத் தான் போகும்!
நீங்க பொருளாக் கொடுங்க! சென்ற பதிவில் சொன்ன காசோலைத் திட்டத்தைக் கடைப்பிடியுங்க! போதும்!!

Coming back to the roots...
பெருமானின் திருவுள்ள உகப்பிற்குப் பக்தனைத் தயார் செய்வது தான் ஆலயத்தின் பணி!
பக்தனின் உகப்புக்காக, ஆகா-ஓகோ வசதிகள் செய்து தருகிறேன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு, முதலுக்கே மோசம் செய்தால்...

அடுத்த தலைமுறையில் நாத்திகத்தை நன்கு தழைக்கச் செய்த "பெரும் புண்ணியம்" தான் நமக்குக் கிட்டும்! :-)
மற்றை நம் காமங்கள் மாற்று, ஏல்-ஓர்-எம்பாவாய்!


Results of the Poll:
Read more »

Monday, December 31, 2007

2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)

திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?

இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!

இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.

ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?

ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!

ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!


1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)

கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?

தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)


2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!

நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!

அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?

கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!


3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)

4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.


5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.


அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.

வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?

பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!

யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)

இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!


6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.

கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!



7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!

முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.

ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!

சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!


8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)

9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!

ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!

கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!


10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!

நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!

இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!

அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )

அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP