Showing posts with label Tirumala. Show all posts
Showing posts with label Tirumala. Show all posts

Wednesday, January 30, 2008

தியாகராஜ ஆராதனை: திருமலையில் தீ வைத்த பாட்டு! - 2

இறைவன்-திரை-தியாகராஜர்!
அந்தத் திரை கல்லால் ஆன மதில் போல் அப்படியே கெட்டியாக நிற்கிறதே! "ஏமிரா இது! ஈ பெத்த மொகோடு-கி எந்த அகங்காரம்? எந்த அகங்காரம்?" - அர்ச்சகர்கள் இப்போது கைப்பிடித்துத் தள்ளி விடாத குறையாக விரட்டுகின்றனர்! முந்தைய பாகம் இங்கே!

"சுவாமிகளே, திரை மட்டும் தானே போட்டு இருக்கீங்க! இன்னும் நடை சார்த்தி விடவில்லையே! தயவு பண்ணித் தரிசனம் செய்து வையுங்கள்!
அடியேன் பெயர் தியாகராஜன். காவிரிக் கரையான திருவையாற்றில் இருந்து வருகிறேன்! வழியெல்லாம் அவனைப் பார்க்கும் ஏக்கத்தோடயே வந்து விட்டோம்!
ஒரே ஒரு கணம் பெருமானைக் கண்ணாரக் கண்டுவிட்டு போய் விடுகிறோம்! மீண்டும் நாளை காலை வந்து ஆர அமரச் சேவிக்கிறோம். இப்போது நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணனும்!"

"ஓஹோ...நீங்க பக்தியில் அப்படியே உருகுறவரோ?
போதும் போதும்யா உருகினது! நாளைக்கு உருகறத்துக்குக் கொஞ்சம் மிச்சம் மீதி வச்சிக்குங்க! இப்போ ஜருகண்டி! ஜருகண்டி பாபு!"


தியாகராஜரும், அவரது மூன்று சீடர்களும் சற்றே தயங்கி நிற்கிறார்கள்!
"அர்ச்சகர்களே! இவர் பெருமை அறியாமல் பேசுகிறீர்கள்!
இவர் சங்கீத மேதை, நாதப் பிரம்மம், திருவையாறு தியாகராஜ சுவாமிகள்! தஞ்சாவூர் மகாராஜாவின்...." அவர்கள் சொல்லி முடிப்பதற்குள், சன்னிதியில் சுய பிரதாபங்கள் தேவையில்லை என்று தியாகராஜர் தடுத்து விடுகிறார்.

"நீங்க யாரா இருந்தா எங்களுக்கென்ன? உங்களைப் பார்த்தா அப்படி ஒன்னும் செல்வாக்கு இருக்குற மாதிரி எல்லாம் தெரியலையே! பஞ்சத்தில் அடிபட்டவங்க மாதிரி இருந்துகிட்டு, பேச்சு மட்டும் நீளுகிறதே?
இப்படி இங்கேயே நின்னுன்டு இருந்தீங்கன்னு வச்சிக்கோங்க, வாசக் கதவைப் புடிங்கிண்டு வந்து உங்க எல்லாரையும் பெருமாள் பாத்துருவாரு! ஹாஹா ஹாஹா!" - கேலியாகச் சிரிக்கிறார் பட்டை நாமம் போட்ட ஒரு அர்ச்சகர்.

"ஐயா பக்த சிகாமணிகளே! உங்களை எல்லாம் பார்க்காம பெருமாள் ஒன்னும் கரைஞ்சிப் போயிட மாட்டாரு! மனசுக்குள்ள அப்படியே பெரிய ஆழ்வார்-ன்னு நெனைப்பா? என்னமோ அப்படியே ஏங்கறாங்களாமில்ல ஏங்கறாங்க!" - இன்னொரு அர்ச்சகரும் கேலியில் சேர்ந்து கொள்கிறார்.

வாலாஜாப்பேட்டை வேங்கடரமணன் என்னும் சீடனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விடுகிறது! "இன்னும் அர்த்த ஜாம பூஜை கூட முடியவில்லை! அதற்குள் நீங்கள் எப்படி நடையை மூடலாம்?"
"இத்தனை பக்தர்களையும் முதலில் எதுக்கு உள்ளே வர விட்டீங்க? கோயிலை மூடுவதாய் இருந்தால் வாசலிலேயே தடுத்து இருக்கலாமே! உங்கள் சவுகரியத்துக்கு, எல்லாம் செய்து விட்டு, இப்போது ஏளனம் வேறு செய்யறீங்களா? ஜாக்கிரதை!"

தியாகராஜர் வேங்கடரமணின் கையைப் பற்றிக் கொள்கிறார். "வேண்டாம் ரமணா வேண்டாம்! விட்டுவிடு!
ஆலயத்தில் ஜாக்கிரதை அது இதுன்னு அந்நிய வார்த்தைகளை எல்லாம் பேசாதே! நம் அப்பனின் வீட்டில், நாமே அப்படி நடந்து கொண்டால் நல்லாவா இருக்கு?
இப்போ என்ன? நாம் தான் அவனைப் பார்க்கவில்லையே தவிர, அவன் நம்மை எல்லாம் பார்த்திருப்பான் அல்லவா! அது போதும்! வா போய் விடலாம்! நாளை காலையில் திரும்பி வருவோம்!"

"ஆகா, சாது மாதிரி என்னமா நடிக்கறாருப்பா! புனித பிம்பம்-னு இதைத் தான் சொல்லுறாங்க போல!
போன்னு சொன்னா உடனே போகாம, எங்களை இப்படியெல்லாம் பேசத் தூண்டியதே நீங்க தான்! இப்போ அடிபட்ட குழந்தை போல் வேஷம் போடுறீங்களா? நகருங்கள் இங்கிருந்து! இதுவே இறுதி எச்சரிக்கை!!"



தியாகராஜரும் சீடர்களும் வந்த வழியே திரும்பி வந்து, திருமாமணி மண்டபத்தில் நின்று கொள்கிறார்கள்.
தியாகராஜர், துவார பாலகர்களான ஜய விஜயர் இருவரையும் பார்க்கிறார். எதிரில் கை கூப்பி நிற்கும் கருடனைப் பார்க்கிறார்! சதா சர்வ காலமும் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்! நீங்கள் செய்த புண்ணியமே புண்ணியம் என்பது போல அவர் கண்கள் பனிக்கின்றன.

"குருவே, நீங்களே இப்படி நாலு பேர் பார்க்கிறா மாதிரி அழலாமா? உம்-னு ஒரு வார்த்தை சொல்லுங்க! வருவது வரட்டும்!
வேகமாக ஓடிப் போய், படீர்னு திரையை விலக்கி விடுகிறேன்! அந்தக் கண நேரத்தில் நீங்க பெருமாளைப் பார்த்து விடுங்கள்!"

"வேண்டாம் ரமணா! வேண்டாம்!
இது அவங்க போட்ட திரை-ன்னு தானே நினைச்சுகிட்டு இருக்கே! இல்லை!!
இது எனக்கு நானே போட்டுக் கொண்ட திரை!!

எந்தப் பிறவியில்...எந்தப் பக்தனை ஆணவத்தால், மனம் நோகப் பேசினேனோ? அது எல்லாம் ஒன்னாச் சேர்ந்து, இப்படித் திரையாக வந்து முன்னால் தொங்குது!
எப்பவும் மற்றவர்கள் மனம் வலிக்கப் பேசுகிறோமே! ஆனா நமக்குன்னு வலிக்கும் போது தானே வலி-ன்னா என்னன்னு தெரியுது!"
பெருமாளே! தயா சிந்து! உன்னை ஆசை ஆசையாய்த் தேடி வந்தவனைத் தள்ளி நிற்க வைத்து ஒரு புதிய கீதை சொல்கிறாயா நீ?"

திருவையாறு காவிரி ஆறு, தியாகராஜர் கூடவே புறப்பட்டு வந்துவிட்டதா என்ன? அவர் கண்களில் அப்படி ஒரு ஆடிப் பெருக்கு! எந்தப் பொறியாளனால் இதுக்கு அணை கட்ட முடியும், சொல்லுங்கள்? அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்? ஆர்வலர் புன் கண்ணீர் பூசல் தரும்!
நாதப் பிரம்மத்துக்கு நா எழவில்லை! பா எழுந்தது!! - தெர தீயக ராதா!!


115858699_771cce968c

தெர தீயக ராதா...நா லோனி
திருப்பதி வேங்கட ரமணா...மத்சரமுனு

(தெர தீயக ராதா)
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி - நா லோனி

(தெர தீயக ராதா)

(பாடலைக் கேட்டுக் கொண்டே படிக்கலாம்....)
* மதுரை மணி குரலில்
** எம்.எஸ்.அம்மா குரலில்
*** ரஞ்சனி-காயத்ரி யூ-ட்யூப் வீடியோ

திரை விலக்க மாட்டாயா - என்னுடைய
திருப்பதி வேங்கட ரமணா...தீய எண்ணத்
(திரை விலக்க மாட்டாயா)

பரம புருஷா, தர்மாதி மோட்சம் தன்னை
பற்ற விடாது, அடாது செய்யும் - என்றன்

(திரை விலக்க மாட்டாயா)

வலை தனை அறியாமல் - விலங்கினங்கள்
வகை யாய்ச் சிக்கினவே - நானும் உன்றன்
தயவால் குறிப்பறிந்தேன் - அனுசரித்தே
தியாகராஜன் வேண்டுகிறேன் - தீய எண்ணத்

(திரை விலக்க மாட்டாயா)




கெளளிபந்து ராகத்தில், தியாகராஜர் உள்ளம் எரிந்து பாடுகிறார்.....
பற்றி எரிகிறது திரை!
சுற்றி எரிகிறது திரை!

கண்மூடிக் கண் திறப்பதற்குள்.....

குபுகுபு என்று தீ பற்றிக் கொண்டது திரையில்!
கருவறைக்கு முன்னுள்ள பட்டுத் திரை சில நிமிடத்தில் அறுந்து, விழுந்து.....பஸ்பமாகிப் போனது!
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க, தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்! - என்று கோதை சொன்னது உண்மை தானோ?
எம்பெருமான் கருவறை விளக்குகள் எல்லாம் இன்னும் ஒரு படிச்சுடர் விட்டுப் பிரகாசிக்கின்றன!

பெருமானின் ஏகாந்த சேவை! - அர்ச்சகர்கள் செய்து வைக்காத சேவையை, அன்பு செய்து வைத்தது!
தியாகராஜர் மூச்சடைத்து நிற்கிறார்!
சீடர்கள் பேச்சடைத்து நிற்கிறார்கள்!
அர்ச்சகர்கள் அரண்டு போய் கதிகலங்கி நிற்கிறார்கள்!!
அங்கிருந்த இதர பக்தர்கள் ஆகாகாரம் செய்கிறார்கள்!!
கோவிந்தா என்னும் கோஷம் போடக்கூட யாருக்கும் நாக்கு வரவில்லை! ஆனால் அனைவருக்கும் கைகள் மட்டும் தன்னை அறியாமல் தலைக்கு மேல் போகின்றன!

தியாகராஜரின் கண்களுக்குத் தன்னையே தான் நம்ப முடியவில்லை! எல்லாரும் ஆகா ஓகோ என்று சொல்லும் இவனா....அந்தத் திருவேங்கடமுடையான்?......
முதல் முறை பார்க்கிறார் அல்லவா? உடம்பு கிடுகிடு என்று நடுங்குகிறது!
கமல பாதம் வந்து என் கண்ணினுள் ஒக்கின்றதே!
செய்ய வாய் ஐயோ என் சிந்தை கவர்ந்ததுவே!
பெரிய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!
நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே!


இவன் சக்ரவர்த்தி திருமகன் இராமன் போலவே தெரிகிறானே! கெளசல்யா சுப்ரஜா "ராமா" என்றல்லவா இவனை எழுப்புகிறார்கள்! ஆம்! இவன் இராமனே தான்! வேங்கட ராமன்! வேங்கட ரமணன்!
நான் அன்றாடம் போற்றிய இராமனே தான் இவன்! - அப்படியே மூர்ச்சித்துக் கீழே விழுகிறார்! சீடர்கள் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்!

அர்ச்சகர்கள் கருவறைக்குள் செல்லவே பயப்படுகிறார்கள்!
சற்று முன்னர் தானே, எரியும் திரையைக் கண்டார்கள்? அதான் உள்ளே செல்ல அப்படி ஒரு நடுக்கம்! ஒருவர் மட்டும் ஓடி வந்து சீடன் வேங்கடரமணனிடம் மன்னிப்பு கேட்கிறார்!
மயக்கம் போக்கத் தண்ணீர் தேவைப்படுகிறது! எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு, அந்த மனிதர் கருவறைக்குள் ஓடிச் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வருகிறார்!

நீர் தெளிக்கப்பட, தியாகராஜரின் மயக்கம் தெளிகிறது! அர்ச்சகர்கள் எல்லாரும் ஓடோடி வந்து மன்னிப்பு கேட்கிறார்கள்! அதன் பின்னரே, ஏகாந்த சேவையை முறையாகச் செய்து வைத்து நடை சாத்துகிறார்கள்!
பக்தர்கள் அனைவருக்கும் இரவு நேரப் பிரசாதம் - திராட்சை முந்திரிகள் தூவிய கெட்டிப் பாலும்-பழமும், தொன்னையில் வைத்துத் தரப்படுகிறது!
தியாகராஜரையும் சீடர்களையும் அன்றிரவு தங்க வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள், அலுவலர்கள்.

மறுநாள் காலையில் பல முறை அப்பனைத் தரிசனம் செய்து மகிழ்ந்த தியாகராஜர், "வேங்கடேச நின்னு சேவிம்பனு" என்று இன்னொரு கீர்த்தனையை மத்யமாவதி ராகத்தில் பாடுகிறார். திருமலையிலேயே வாழ்ந்து மறைந்த அன்னமாச்சார்யருக்கு மறக்காமல் தன்னுடைய அஞ்சலியைச் செலுத்துகிறார்!
பின்பு எம்பெருமானிடம் பி்ரியாவிடை பெற்றுக் கொண்டு திருமலையை விட்டுக் கீழே இறங்கி, தம் ஆருயிர் நண்பரான கோவூர் சுந்தரேச முதலியாரைக் காணச் சென்னை நோக்கிப் பயணமாகிறார்!

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் நின்றிருக்க,
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா!
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா!!



மக்களே,
சென்ற ஞாயிற்றுக்கிழமை (Jan 27, 2008) நடந்த தியாகராஜர் நினைவு நாள் - ஆராதனையை ஒட்டி எழுதியதே இந்த இரண்டு பதிவுகள்!
தியாகராஜ ஆராதனையின் ஹைலட்டே (முக்கிய கட்டமே) "எந்தரோ மகானுபாவுலு" என்னும் கடைசிக் கீர்த்தனை தான்! கீழே யூ-ட்யூப் வீடியோவில் கண்டு மகிழுங்கள்!
பாட்டின் இறுதிக் கட்டத்தில், வெறும் கைத்தட்டல் ஓசை மட்டுமே தாளமாகக் கொண்டு முடியும் சூப்பர் காட்சி! தவறாது காணுங்கள் (Track position 05:00)!

எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
எத்தனை எத்தனை மகான்கள், பக்தி உள்ளங்கள், இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் என் வந்தனங்கள்!

Read more »

Saturday, January 26, 2008

தியாகராஜ ஆராதனை: குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா! - 1

நீங்க ரொம்பத் தொலைவில் இருந்து ஒரு பெரிய ஊருக்கு வந்திருக்கீ்ங்க. மிகவும் களைப்பான பயணம். திரும்பிச் சென்று பயணக் கட்டுரை எல்லாம் வேற போடணும்! அந்த ஊரில் இருப்பதோ மிகவும் பிரபலமான கோயில். உங்களுக்கு மிகவும் புடிச்ச சாமி வேற! மதியம் கோயிலை மூடி நடை சாத்தப் போறாங்க. இன்னும் அரை மணி நேரம் தான் பாக்கி இருக்கு! சரின்னு, ஓய்வு கூட எடுத்துக்காம நேராக் கோயிலுக்கு ஓடறீங்க!

அங்க போயி அப்படி சன்னிதானத்துக்குள் நுழைஞ்சீங்களோ.....இல்லையோ, அர்ச்சகர் கதவைப் படார்னு சாத்திடறாரு! - எப்படி இருக்கும் உங்களுக்கு?

கைக்கடிகாரத்தைப் பார்க்கறீங்க...மணி 11:10 தான் ஆவுது! பொதுவா 11:30 மணிக்குத் சாத்தறது தான் அங்கிட்டு வழக்கம்! அன்னிக்கி மட்டும் என்ன பிரச்சனையோ! ஐயா சாத்திப்புட்டாரு! உடனே நீங்க என்னவெல்லாம் பேச ஆரம்பிப்பீங்க? அதுவும் நீங்க ஒரு பெரும்புள்ளியாகவோ இல்லை பெரிய பெரிய ஆளுங்களைத் தெரிஞ்சவராகவோ இருந்தீங்கன்னா? அப்படியே கற்பனையில் ஓட்டிக் கொள்ளுங்கள்! :-)

இசை உலகில் பெரிதும் மதிக்கப்படுபவரின் அஞ்சலி நாள் இன்று! அவர் பாட்டுடன் ராகம் போல், இறைவனுடன் கலந்த நாள்; புஷ்ய பகுள பஞ்சமி.
இன்னிக்கி தியாகராஜ ஆராதனை! (Jan 27, 2008). மேலே சொன்னது போல் அவர் வாழ்விலும் ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி நடந்திருக்கு! பார்ப்போம், வாங்க!


சங்கீத மும்மூர்த்திகளில் இன்று முதலாவதாக வைத்துப் போற்றப்படும் தியாகராஜர், அன்றோ பரம ஏழை! அவருக்கோ "நிதியை" விட "சந்-நிதியே" சுகமாய் இருந்தது!

அவருடைய பாடல்கள் கொஞ்ச கொஞ்சமாய் வெளியில் பரவ ஆரம்பித்த போது தான், அவருக்கென்று சில சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனா குருதட்சிணை வாங்கிச் சம்பாதிக்கத் தெரிய மாட்டாமல், நாளொரு இராமன் பொழுதொரு இராமனாகவே இருந்தாரு தியாகராஜர்.

அன்னிக்கு என்னமோ திடீரென்று அவருக்குத் திருப்பதி யாத்திரைக்குப் போகணும் போல ஒரு உணர்வு! இதுவரை போனதே இல்லை!

அவர் இருப்பதோ தென் தமிழ்நாட்டில்! அதுவோ வட வேங்கடம்! தஞ்சாவூருக்குப் பக்கத்தில் இருக்கும் திருவையாறு கிராமத்தில் இருந்து, வண்டி கட்டிக்கிட்டுப் போகணும்னாக் கூட குறைஞ்சது ஏழு நாளாச்சும் ஆகும்! கைச்செலவுக்கு காசு வேறு வேணும்! என்ன செய்யலாம்?...தள்ளிப் போடலாம்!
அன்றிரவு புரண்டு புரண்டு படுக்கிறார்! தூக்கமே வரலை! ஏன் திடீர்னு இப்படி ஒரு உந்துதல்? இராமனிடம் மட்டுமே லயித்த தன் மனம், இன்று வேங்கடவனைக் காணத் துடிப்பது ஏனோ? ச்சே...எல்லாம் அந்தச் சிறுவனால் வந்தது!


போன வாரம் திருவையாற்றுக்கு வந்திருந்த அந்தப் பொடிப் பையன் என்னமாப் பேசி விட்டான்! திருவரங்கம் இராமானுச மடத்தில் இருந்து ஊர் ஊராய் போய்த் தொண்டு செய்யறவன் போல! பேச்சு வாக்கில் வேங்கடவன் கோலமும் இராமனின் கோலமும் எப்படி எல்லாம் ஒத்துப் போகுது என்று அவன் சொல்லச் சொல்ல...இப்படி ஒரு ஆவல் தம்மைப் பற்றிக் கொண்டு விட்டதே!



வேங்கடவனுக்கும் இராமனைப் போல் அதே சடைமுடி! இன்றும் சடைமுடியைச் சற்றே தூக்கி விட்டுத் தானே நீராட்டுகிறார்கள்! மூர்த்தியின் தோளிலே காணப்படும் வில் ஏந்திய தழும்பு!

அதே கஸ்தூரி திலகம்! மார்பில் அதே திருமறு மச்சம்!
முழங்கால் வரை அதே போல் நீண்டு தொங்கும் கைகள்! அதே போல் மெல்லிய புன்சிரிப்பு!
இராமனுக்கு ஒரு சபரித் தாய் என்றால் இவனுக்கோ ஒரு வகுளைத் தாய்!
சபரி எச்சில் பழத்தை இராமனுக்குக் கொடுத்தாள்; அவனும் உண்டான்!
இந்த வகுள மாலிகையும் ருசியைச் சோதிக்க பழத்தைக் கடித்துப் பார்த்துக் கொடுக்கிறாள்! அதை இவனும் உண்கிறானே!

அனுமன் அவதரித்த மலை தானே திருமலை! இராமன் இல்லாமல் அங்கு அனுமன் தோன்றுவானா என்ன?
மேலும், மதுரையில் இருந்து வந்த ஒரு இராமனின் உற்சவ மூர்த்தியைத் திருமலைக் கருவறையில் இராமானுசர் நிறுவி இருக்காராமே!....


இப்படி எல்லாம் யோசித்து யோசித்து, உறங்காமலே உறங்கிக் கொண்டிருக்கும் தியாகராஜருக்கு, சிற்றஞ்சிறு காலை ஒரு வழியாய்ப் புலர்ந்தது!
சிற்றஞ்சிறு காலை, "வந்துன்னைச் சேவிக்க ஒரு வழியும்" சேர்த்தே புலர்ந்தது!...

சென்னையில் இருந்து தன் பரம ரசிகர், கோவூர் சுந்தரம் முதலியார், கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு ஓலையும் உடன் அனுப்பி இருக்கிறார்!

திருமலை யாத்திரைக்குத் தியாகராஜர் சென்று வரவேண்டும்; அப்படியே வரும் வழியில் சென்னைக் கோவூரில் உள்ள தன் இல்லத்துக்கு வந்து அளவளாவ வேண்டும் என்றும் எழுதியுள்ளார். அந்தக் கோவூரில் உள்ள சிவபெருமான் மேல் தியாகராஜர் வாயால் சில பாடல்கள் பாட வேண்டும் என்று ஓலையில் தனியாக விண்ணப்பம் வேறு வைத்துள்ளார்.

அட, ரெண்டு நாளுக்கு முன்னால் தானே நமக்கே திருப்பதி போகணும்-னு தோனிச்சி? அதுக்குள்ள முதலியாருக்கு யாரு சொல்லி இருப்பா?
சரி, அப்படியே யாராச்சும் சொல்லி இருந்தால் கூட, சென்னையில் இருந்து திருவையாறு வருவதற்கே அஞ்சு நாள் ஆயிடுமே! - ஒன்றுமே புரியவில்லை தியாகராஜருக்கு! சரி.....இறைவன் திருவுள்ளம் வைத்ததால் தான், தரிசன பாக்கியம் அமைகிறது போலும் என்று நினைத்துக் கொண்டார்.

தம் சீடர்கள் சிலருடன் உடனே கிளம்பி விட்டார். திருமலை யாத்திரை கிளம்பும் முன் மறக்காமல் தன் குலதெய்வத்தையும் வழிபட்டுவிட்டு, பின்னரே கிளம்பினார்.
திருவையாறு, கும்பகோணம், கடலூர்,
விழுப்புரம், திண்டிவனம், வந்தவாசி,
காஞ்சிபுரம், திருத்தணிகை, புத்தூர்,
ரேனிகுண்டா, சந்திரகிரி, நாகலாபுரம் என்று எல்லா ஊர்களையும் தாண்டி இதோ வந்து விட்டார்கள் திருமலையின் அடிவாரம்!



திருச்சுகனூர் குளக்கரையில் அன்னையை - அலர்மேல் மங்கையைக் கண்ணாரக் கண்டாகி விட்டது! இனி அப்பனைக் காண்பதொன்றே கருத்து! அடிவாரத்தில் ஆழ்வார்களை வணங்கி விட்டு, கிடுகிடுவென்று மலை ஏறுகின்றார்கள் குருவும் சீடர்களும்! அச்சோ, எங்கும் இருள் சூழ்ந்து விட்டதே!

தியாகராஜருக்கும் சற்றே வயதாகி விட்டதல்லவா? முன்போல் அவ்வளவாக நடக்க முடியவில்லை! ஆனாலும் ஆசை விடவில்லை! ஆசை உந்த உந்த, உலகத்தில் "முடவனுக்கும்" வாழ்க்கை "நடக்கிறது" தானே?
தியாகராஜரையும் ஆசை தான் உந்தி உந்தித் தள்ளியது! எந்த ஆசை? பொன்னாசையா? பணத்தாசையா? புகழாசையா? சரி....இசை ஆசையா? - உம் அது கூட இல்லை! பின் எது?
நோயே பட்டு ஒழிந்தேன், "உன்னைக் காண்பதோர் ஆசையினால்"!
நாயேன் வந்து அடைந்தேன், நல்கி என்னை ஆட்கொண்டு அருளே!!
- மெல்லப் பாசுரம் முணுமுணுக்கப்படுகிறது!

இதோ ஏழு மலையும் ஒருவழியாக ஏறி விட்டனர்! இரவும் நன்கு கவிந்து விட்டது! ராத்திரி ஆகி விட்ட படியால், சுவாமி புஷ்கரிணி எனப்படும் கோனேரியில் யாரும் நீராடவில்லை! கை கால்களை மட்டும் சுத்தம் செய்து கொள்கின்றனர்! அது மட்டும் தானா? யாருமே மனதைச் சுத்தம் செய்து கொள்ளவில்லையா என்ன?....அன்று தியாகராஜருக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை! அவர் மனத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டு இருக்கு!

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்து மிட்டேன்!
பெரியேன் ஆயின பின் பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!!

கரிசேர் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா!
அரியே வந்தடைந்தேன், அடியேனை ஆட்கொண்டு அருளே!!


குளத்தின் நன்னீரால் சுத்தமாவதற்கு முன்பே, அந்தப் பாசுரத்தைக் கேட்டு வந்த கண்ணீரால், மனது எப்போதோ சுத்தமாகி விட்டது!
குளத்தின் கரையில் உள்ள வராகப் பெருமாளை முதலில் தரிசனம் செய்து விட்டு, அனைவரும் ஓடோடிச் செல்கின்றனர் கோபுர வாசலுக்கு!

தங்க வாசல் தாண்டி இதோ ஆனந்த நிலையத்துக்குள் வந்தாகி விட்டது! சற்றுக் கண் திரும்பினால் போதும், வைத்த மா நிதி கிடைத்து விடும்! எம்பெருமான் அகப்பட்டு விடுவான்! அதோ தீப ஒளி தெரியுது! பச்சைக் கர்ப்பூர வாசனை துளைக்குது!
இதோ கரியவன், நெடியவன் தெரிகி..... ஐயகோ! இது என்ன கொடுமை?
அர்ச்சகர்கள் வேகம் வேகமாகத் திரையை இழுத்துச் சரேல் சரேல்-ன்னு மூடுறாங்களே?.....முழுக்க மூடியாகி விட்டது! ஒன்னுமே தெரியலை!

அன்று ஏனோ, அர்ச்சகர்கள் கடுகடு என்று உள்ளனர்! கொஞ்சம் கூடச் சிரிப்பு இல்லை!! - உம்...எல்லாரும் வெளியே போங்க! போங்க!! இத்தோட நாளைக்குக் காலையில் தான்!
அடப் போங்கைய்யா! எத்தன வாட்டிய்யாச் உங்களுக்கெல்லாம் சொல்லுறது? கேக்கவே மாட்டீங்களா? ஜருகும்மா ஜருகு! பதண்டி பதண்டி!! எவரய்யா அக்கட? வெள்ளு, வெள்ளு!
ஏம்பா...பெரியவரே...காது என்ன செவிடா? உனக்கு மட்டும் தனியாச் சொல்லனுமா? போ...போ!!

தியாகராஜர் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் ஒழுகுது! யாராவது திட்டினால் இந்த மனுசன் திருப்பித் திட்ட வேண்டியது தானே? அதை விட்டுட்டு, ஏன் இப்படிக் கண் கலங்குறார்?

ஆசையாய்ச் சாப்பிட உட்கார்ந்த குழந்தையின் தட்டைத் தட்டி விட்டால் எப்படி இருக்கும்?
காதலனைக் அன்புடன் காண வந்த காதலியை, இழித்துப் பேசினால் எப்படி இருக்கும்?
ஆருயிர் நண்பனைக் காணச் சென்ற நண்பனை, முகத்தில் கதவடைத்தால் எப்படி இருக்கும்?
அப்பாவின் மடியில் ஓடோடி உட்காரப் போன பிள்ளையைக் கால் இடறி விட்டால் எப்படி இருக்கும்??

எம்பெருமானுக்கும் தியாகராஜருக்கும்.....இடையே.....அந்தக் கரிய பெரிய திரை!!!

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா...
குறையுண்டு குறையுண்டு மறைமூர்த்தி கண்ணா!

(திரை விலகுமா?...அடுத்த பாகத்தில்!)



Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

Saturday, November 04, 2006

"தண்ணி" காட்டிய இறைவன்

தொண்டர்கள் தொடர் இது!
அப்படித் தான் ஒரு முறை, "தண்ணி உள்ள காட்டிலேயே", நமக்குத் "தண்ணி" காட்டினான் இறைவன்!!
சென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்!
இன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.

ஒருவர் நல்ல வசதியுடன் "ஜம்" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு!
ஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த போதும், அவர் கூடவே இருந்து, அவருக்குத் தொண்டு புரிவது என்பது வேறு!
அதுவும் வயதான காலத்தில், ஊஞ்சல் ஆடிக் கொண்டு, மஞ்சூரியன் ஃப்ரைஸ் சாப்பிட்டோ, இல்லை பஹாமாஸ் வெகேஷன் போயோ, ஜாலியாக இருக்கலாமே!
அதை விட்டு விட்டுத் தினமும் நாலு மைல் நடந்து தண்ணிக் குடம் சுமக்க தலையெழுத்தா என்ன?

சிற்றஞ் சிறு காலை; லேசான இருட்டு!
ஓத்தையடிப் பாதை; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; பயந்த தனி காட்டு வழிக்குத் துணை எம்பெருமான் நாமங்கள்!
வயதான ஒரு பெரியவர், தலை மேல் பெரிய தண்ணீர்க் குடம் சுமந்து கொண்டு கிடுகிடு என்று நடந்து செல்கிறார்......எங்கே? எதற்கு?
பாபவிநாசம் என்ற நீர்வீழ்ச்சி திருமலையின் மேல் உள்ளது. மிகப் பழமையானது; தூய்மையான, சுவையான, பாறை நீர்!!
அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான் சன்னிதி நோக்கிச் செல்கிறார் அம்முதியவர்.
எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கும் (நீராட்டு/அபிஷேகம்), மற்றும் பூஜை தீர்த்ததிற்கும் அந்த நீர் மிகவும் உகந்தது!

"பற்றே ஒன்றும் இலேன்; பாவமே செய்து பாவியானேன்,
மற்றே ஒன்று அறியேன்; மாயவனே, எங்கள் மாதவனே.
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச்சுனை வேங்கடவா,
அற்றேன் வந்துஅடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டு அருளே!"
என்ற திருமங்கை மன்னனின் பெரியதிருமொழி பாசுரங்களைப் பாடிக் கொண்டே, ஓடுகிறார் நம்பிகள்! மலை இறக்கம் ஆயிற்றே!

"தாத்தா கொஞ்சம் நில்லு!
களைப்பா இருக்காப் போல இருக்கு! கொஞ்சம் தண்ணி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன்!"
யாருப்பா அது, இவ்வளவு காலையில்?...அட ஒரு வேடன்! தொழிலுக்குக் கிளம்பிட்டான் போல!
"அப்பா, இது எம்பெருமான் தீர்த்தம்! ஆனால் தண்ணீர் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லவே கூடாது! அதனால் ஒண்ணு பண்ணு!
இந்தா இதைப் பருகி விடு! ஒரு கல் தூரம் கூட இல்லை பாபவிநாசம்;
பருகி விட்டு, அங்கு போய் எனக்கு மீண்டும் புது நீர் எடுத்து வாப்பா!
நான் வயதானவன், மீண்டும் மேடு ஏறக் கஷ்டமாய் உள்ளது!
இன்னும் பல தூரம் செல்லணும்; நீ சீக்கிரம் வந்தால், எம்பெருமான் திருமஞ்சனம் தடையிலாமல் நடக்க ஏதுவாய் இருக்கும்!"

பாபவிநாசம்

ஆகாசகங்கை

"அட போ தாத்தா, தண்ணி கேட்டா கொடுப்பியா, அதை வுட்டுட்டு பெருசா கதை சொல்ற!
அதுவும் என்னை வேற வேலை வாங்குற!
நான் ஒண்ணும் தவிச்ச வாய்க்குத் தண்ணி கேக்கல! சும்மா தான் கேட்டேன்;
அது சரி, உன்னை அடிச்சுப் போட்டுக் குடத்தைப் புடுங்குனா நீ என்னா பண்ணுவே?"

நம்பிகளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! இவனிடம் என்ன பேசமுடியும்? பார்வையும் பேச்சும், தாகத்தால் தவிப்பவன் மாதிரியும் தெரியவில்லை!
விடுவிடு என்ற நடக்க ஆரம்பித்தார்.
விடுவானா ஆன்ம வேட்டையாளன்?
வேங்கடத்தான் அல்லவோ அவன்!
"யோவ் தாத்தா, நில்லு!" - "அப்பா, என்னைத் துரத்தும் தூரத்துக்கு, அந்தச் சுனை கிட்டத் தானே இருக்கு! வீண் அலம்பல் பண்ணாதப்பா"
"எனக்கு அடிச்சுப் புடிங்கித் தான் எப்பவும் பழக்கம்; ஏதோ வயசாளின்னு பாத்தா ரொம்ப தான் பண்ணுறியே"

மீண்டும் விடுவிடு நடை தான்! வேங்கடத்தான் வேடிக்கை வேட்கையாளன் ஆயிற்றே!
பார்த்தான்....வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்தான். குடத்தில் ஓட்டை!
நீர் பொத்துக் கொண்டு வருகிறது. பின்னாலேயே வந்து இரு கைகளாலும் பருகினான்!
நம்பிக்குச் சுமை குறைவது தெரிந்து, திரும்பிப் பார்க்க, அழுகையே வந்து விட்டது!
"அடேய், உனக்கு நீர் தரக் கூட நான் மறுக்கவில்லையே! இப்படிப் பாத்திரதையே உடைத்து விட்டாயே! இன்று திருமஞ்சனமாயிற்றே!
மீண்டும் சிரமப்பட்டு எடுத்து வந்தாலும், ஓட்டைக் குடம்; எல்லாம் வீணாகி விடுமே" என்று அழ ஆரம்பித்து விட்டார்!

வேடன் பார்த்தான். வயதானவரும் குழந்தையும் ஒன்றல்லவா?
அழக் காண அழகாகுமா?
வில் அம்பால் அங்குள்ள ஓர் உச்சியைத் துளைத்து நீர் பிரவாகம் செய்தான்!
"தாத்தா, இதோ பார் ஆகாச கங்கா தீர்த்தம்! இது நீர் விழ்ச்சி இல்லை என்றாலும், இதுவும் சுனை தான்!
இனி அவ்வளவு தூரம் நடந்து வருந்தாதீர்!
நீர், இதில் இருந்தே நீர் - எடுத்துச் செல்லும்!!
இதுவும் விஷ்ணுப் ப்ரீதியே! இதோ உம் குடம்", என்று சொல்லி மறைந்து விட்டான்.

நம்பிகள் வாயடைத்துப் போய் விட்டார். புதிய ஆகாச கங்கை நீர் கொண்டு, கோவிலுக்குப் போய்ச் சேரத் தாமதம் ஆனது!
அர்ச்சை ரூபத்தில் உள்ள இறைவன், அர்ச்சகர் மேல் ஆவேசித்து, காட்டு வழி நிகழ்ச்சியை அனைவரும் அறியுமாறு உரக்கச் சொன்னான்.
"தாத்தா" என்று என் வாயால் நானே விரும்பி அழைத்த திருமலை நம்பிகள், இனி "தாத்தாச்சார்யர்" என்றும் அறியப் படுவர் என்று அருளினான்!

தண்ணீர் அமுது உற்சவம்



திருமலை நம்பிகள்

மேலும் மழையினாலோ, இன்ன பிற காரணங்களாலோ, இந்தப் புதிய ஆகாச கங்கை தீர்த்தம் வரத் தாமதம் ஆனால் கூட,
கோவிலுக்குள்ளேயே இருக்கும் பொற்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கக் கடவது என்று வரையறுத்து அருளினான்!
அடியவர், பணி செய்கையில் கூட, எந்த இன்னலுக்கும் ஆளாகக் கூடாது என்று எண்ணும் நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
"என்ன செய்வியோ, ஏது செய்வியோ (hook or crook); எனக்கு வேலை முடிய வேண்டும்", என்று சொல்லும் தலைவர்கள் மத்தியில்,
தலைவர்க்குத் தலைவன் அல்லவா நம் வேங்கடத்து அண்ணல்!
தயாசிந்து உடைய தயை சிந்தும் வள்ளல் அல்லவோ அவன்!

இன்றும் இந்த வேடுவன்-கிழவர் விளையாட்டை மார்கழி மாதத்தில் திருமலை மீது நடித்துக் காட்டுகிறார்கள். தண்ணீர் அமுது உற்சவம் என்று இதற்குப் பெயர்!
நீர் வண்ணா, திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!



திருமலை நம்பிகள் குறிப்பு:
மேலே நாம் கண்ட திருமலை நம்பிகள் (ஸ்ரீசைல பூர்ணர்), ராமானுசரின் தாய்மாமனும் ஆவார். ராமானுசருக்கு அவ்வாறு பெயர் இட்டதே இவர் தான்;
இராமாநுஜன் = இராம+அநுஜன் = இராமனின் தம்பி = அதாவது இலக்குவன்!
ஆதிசேஷனின் அம்சமானதால் இவ்வாறு பெயர் சூட்டினார்.
(லக்ஷ்மண முனி என்ற பெயரும் இராமானுசருக்கு உண்டு-ஆதிசேஷன் தானே இலக்குவனாகவும், பின்னர் பலராமனாகவும், பின்னர் ராமானுசராகவும், அதன் பின் மாமுனிகளாகவும் வந்தது!)

ஆளவந்தாரின் சீடரான திருமலை நம்பிகள், திருவரங்கத்தில் இருந்து, பின்னர் கைங்கர்யத்துக்காக (இறைத்தொண்டுக்காக) திருமலையில் வந்து தங்கி விட்டார்.
இராமானுசருக்கு ராமாயணம் கற்பித்த குருவும் கூட!
திருமலை அடிவாரத்தில் நடந்த இந்த வகுப்புகளின் போது,
மதுரையில் இருந்து ராமனே - இலக்குவன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் ஆகியோருடன், விக்ரக உருவில் வந்தது தனிக்கதை!
பழுத்த வயதில், தொண்டில் சிறந்து, பின்னர் இறைவன் அடி சேர்ந்தார் நம்பிகள்!

ராமானுஜர் காலத் திருமலையில் முதற்குடிமகன்கள் என்றால் (First Citizens of Tirumala) அது திருமலை நம்பிகள், மற்றும் அனந்தாழ்வான் தான்!
அவர்கள் செய்த பணி தான், இன்று நாம் வசதியாகத் தரிசனம் செய்ய முடிகிறது!


ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில குறிப்பு:

பொற்கிணறு (தெலுங்கில்: பங்காருபாவி), தரிசனம் முடித்து வெளி வந்த உடனேயே தென்படும்.
படியேறி தீர்த்தம் வாங்கச் செல்லும் வழியில் உள்ளது இது.
அதை ஒட்டினாற் போல் உள்ள அறை தான் அன்னப்பிரசாதங்கள் செய்யும் சமையல் அறை (லட்டு செய்யும் இடம் வேறு).
அங்கு பெருமாளின் பசி போக்கிய தாயாகக் கருதப்படும் வகுளா தேவி, சிலை உருவில் இருக்கின்றாள்; இன்றும் சமையலை அவளே கவனிப்பதாக ஐதீகம்!

பொற்கிணறு

திருமலை நம்பிகள் வாழ்ந்த குடில், தெற்கு வீதியில் உள்ளது; ஊஞ்சல் மண்டபத்துக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் ஏறும் இடத்தில், இக்கோவிலைக் காணலாம்.
க்யூ வரிசையில் இருந்தே இதைப் பார்க்க முடியும்! கண்டு வாருங்கள் அடுத்த யாத்திரையில்!
Read more »

Thursday, October 12, 2006

பாகம்2 - கடப்பாரையால் இறைவன் வாங்கிய இடி

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்.)

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

அழகாக உடுத்திக்கொண்டு, நகைகள் பூண்டு, ஒரு நடுவயதுப் பாலகனாய், அனந்தனின் மனைவியார் முன் தோன்றினான்.
"அம்மா, இவ்வளவு சிரமப் படுறீங்களே; விலகுங்க நான் உதவி செய்யறேன்; உங்க புருஷனுக்கு மனசாட்சியே இல்லியா? உங்கள இப்படி வேல வாங்குறாரே!"
அய்யோ, அவர் வேணாம்ன்னு தான் சொன்னாரு. நான் தான் தனி ஒரு ஆளா கிடந்து கஷ்டப்படுறாரேன்னு, அவர் திருப்பணியிலும் துணை செய்கிறேன்.
"சரிம்மா, மண்கூடைய இப்பிடி கொடுங்க; நான் கொட்டிட்டு வர்றேன். நீங்க அப்பிடி போய் மர நிழலில் உக்காருங்க.."
கூடையை வாங்கின கூடாரை வெல்லும் கோவிந்தன், தன் வேலையைக் காட்டினான்.

மண்ணை நேராகக் கொண்டு போய் அனந்தன் வெட்டும் பள்ளத்திலேயே, அதன் மறுபக்கத்தில் கொட்டினான். அனந்தனும் இதை கவனிக்க வில்லை!
வெறும் கூடையைக் கொண்டு போய் அவளிடம் கொடுத்து, "போங்கம்மா, போய் எடுத்து வந்து தாங்க. கொட்டிட்டு வர்றேன். நானே போய் எடுத்துக் கொள்வேன்; ஆனா உங்க புருஷனைப் பாத்தா கொஞ்சம் பயமாயிருக்கு. பெருமாள் பக்தர் மாதிரி தெரியாறாரு. அவங்க கிட்டே எல்லாம் நான் வம்பே வச்சிக்க மாட்டேன்!" என்றான் கபடன்!

அவளும் விவரம் அறியாது, சிரித்துக் கொண்டே செல்ல, இதுவே வாடிக்கையானது.
சிறிது நேரத்தில் அனந்தன் கண்டு பிடித்து விட்டார். மெல்லச் செய்யும் மனைவி இன்று இவ்வளவு வேகமாகச் செய்கிறாளே என்று திரும்பிப் பார்க்க, அய்யோ அவருக்கு அழுகையே வந்து விட்டது! பாடுபட்டு வெட்டும் கேணியிலேயே மீண்டும் மண் அள்ளிப் போட்டால், சும்மாவா? நமக்கெல்லாம் கோபம் வரும்; எரிந்து விழுவோம்! ஆனால் இராமானுசரின் அடியவர் ஆயிற்றே! கண்கள் சிவப்பதற்குப் பதிலாகப், பனித்தன!

"ஏம்மா, ஏன் இப்படி செய்தாய்? பேறுகாலக் குழப்பமா? யாராவது வெட்டின இடத்திலேயே மீண்டும் கொட்டுவாங்களா? எவ்வளவு உழைப்பு வீணாப் போச்சு! சரி நானே பார்த்துக் கொள்கிறேன். நீ போ!"
அய்யோ இல்லீங்க, அந்தப் பையன் தான் உதவி செய்யறேன்னு...என்று முழுதும் சொல்லி முடிக்க....பாலகனும் முன்னே வந்து நின்றான்!
"அப்பா, உன்னைப் பாத்தாலே தெரியுது, தங்கச் செம்பில் மண் வைத்து விளையாடுபவன் நீ. அந்த வேங்கடவன் போல! இந்த மாதிரி வேலை எல்லாம், உழைக்கும் இராமானுசரின் அடியார் கூட்டம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! நீ சென்று வாப்பா"


அனந்தாழ்வான்



அனந்தனும்,
ஆசார்யர் இராமானுசரும்

..அய்யோ எனக்கு வெட்டும் இடம் எதுன்னு சரியா தெரியாதுங்க. இனிமே ஒழுங்கா செய்யறேன் சாமி!
அனந்தனும் சரியெனச் சொல்ல, "மிகச் சரியாக" மீண்டும் அதே இடத்திலேயே வந்து மண்ணைக் கொட்டினான் பாலகன். அவ்வளவு தான்! வந்ததே கோபம் அனந்தனுக்கு! கையில் கடப்பாரையுடன் பையனைத் துரத்தி ஓட, நம் கண்ணனுக்கு ஓடி ஓளியக் கற்றுத் தர வேண்டுமா என்ன?

"சரி பையன் இனி வர மாட்டான், நாம் திரும்பி விடுவோம்", என்று எண்ணிய அனந்தன் காலில் கல் தடுக்கி கீழே வீழ,
பாலகன் என்ன ஏது என்று திரும்பிப் பார்க்க,
விழும் அனந்தன் கையில் இருந்த கடப்பாரை எகிறி, பையன் முகத்தைப் பதம் பார்க்க,
எல்லாம் கணப்பொழுதில் நடந்து விட்டது!
பாலகன் முகவாய்க் கட்டையில் சரியான அடி, வீக்கம், இரத்தம்.
ஓடியே போய்க் கோவிலுக்குள்ளே மறைந்தான் சிறுவன்.
அலைமகளும், மண்மகளும் பதறி விட்டனர்!
ஆனால் நாடகம் இன்னும் முடியவில்லையே!
சிரித்தான் கள்ளச்சிரிப்பழகன்!!
அனந்தன் மிகவும் பயந்து போய் விட்டார். நேராகக் கோவிலுக்குள் ஓடினார்.

அதற்குள் கோவிலில் இருந்து பதறியடித்து அர்ச்சகர் வெளியே ஓடி வர, என்ன ஏது என்று சிறு கூட்டமும் சேர்ந்து விட்டது. "ஐயோ, பெருமாள் முகத்தில், மோவாயில் இருந்து இரத்தம் வழிகிறது" என்பதே எங்கும் பேச்சு! திருமலை நம்பிகளைக் கூட்டி வர ஆள் அனுப்பினார்கள். காலையில் நடை சாத்தும் போது கூட நன்றாகத் தானே இருந்தது! இதுவரை இப்படி ஒன்று நடந்ததே இல்லையே என்று, இயலாமையால் அர்ச்சகர் அரற்றினார்! அனந்தனுக்கு இதயமே வெடித்து விட்டது.

"என்ன காரியம் செய்து விட்டோம். பையனின் விளையாட்டு விபரீதமாகப் போயிற்றே! அறியாது செய்தது தான் என்றாலும் அரியை அல்லவா துன்புறுத்தி விட்டேன்!
மலர்ப்பணி செய்யச் சொன்னால், மாப்பிணி அல்லவா உண்டாக்கி விட்டோம்; எப்படி விழிப்பேன் என் இராமானுசர் முகத்தில்!" என்று கண்ணீர் மல்கினார். குழந்தைக்கு அடிபட்டதால், மாலை வீடு வரும் கணவன் என்ன சொல்வாரோ என்று அஞ்சும் சாதாரணத் தாயின் நிலைமை போல் இருந்தது! கூட்டத்தின் முன்னிலையில், நடந்ததை எல்லாம் சொல்லி அழுதார்கள் கணவனும் மனைவியும்!

"என்ன தான் பக்தியும் ஞானமும் இருந்தாலும், ஹூம், இறைவன் நேரே வந்து நின்ற பின்னர் கூட, அறிய முடியாத பாவியாகிப் போனேனே!
இது தான் என் பக்தியின் லட்சணம்", என்று நொந்து கொண்டார்.
திடீரென்று என்ன தோன்றிற்றோ தெரியவில்லை,

"அய்யோ இறைவனுக்கு வலிக்குமே" என்ற எண்ணம் பளிச்!
உடனே ஓடினார். பச்சைக் கர்ப்பூரம் பொடிசெய்து, மருதஇலை, மகரந்தப்பொடி, துளசிச்சாறு விட்டுப் பிசைந்து, உருண்டையாக்கி அர்ச்சகரிடம் கொடுத்தார்.
"ஐயா, சுவாமிக்கு வலிக்குமே, இதை அடிபட்ட இடத்தில் பூசுங்கள்", என்று சொல்ல, வெறும் கல்லா அவன்? நம் கண்ணுக்குள் நிற்கும் கண்ணன் அல்லவா!!!

பொடியைப் பூசவும் இரத்தம் நிற்கவும் சரியாக இருந்தது!
அடியார் கூட்டம் வாயடைத்து நிற்க, அர்ச்சகர் மேல் சுவாமி அரூபமாகச் சொன்னதை, அத்தனை பேரும் காதாரக் கேட்டார்கள்!
"வருந்த வேண்டாம் அனந்தான் பிள்ளாய்! உன் உள்மனதை இன்று ஊர் அறிந்தது!
எப்படி எம் மார்பில் ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமாய், ஸ்ரீவத்சம் என்ற மச்சம் (திருமறு) உள்ளதோ, அதேபோல்,
இனி என் மோவாயிலும் இந்தப் பச்சைக் கர்ப்பூரப் பொட்டு அனுதினமும் சார்த்தப்படும்!!
என்னைத் தரிசிப்பவர் எல்லார்க்கும், என் மார்பில்,
அலைமகள் அடையாளம் தெரிவது போல், மோவாயில்
அடியவர் அடையாளமும் தெரிவதாக
!!" என்று அருளினான் நம் அண்ணல்!!

மோவாயில் பொட்டழகன்

இன்றளவும் இந்தப் பச்சைக்கர்ப்பூரப் பொடியை இறைவன் மோவாயில் சார்த்துகிறார்கள்!
பக்தன் கொடுத்த அடியை அவமானமாக மறைக்கத் தோன்றாது, பெருமையுடன் வெளிக்காட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!!
திருமுகத்தில் உள்ள இந்த வடுக்கு "தயா சிந்து" என்பது பெயர்!
இந்தத் "தாயினும் சாலப் பரிந்து", 'தயை சிந்தும்' உள்ளம் வேறு யாருக்கு வரும்???

பின்னர், நந்தவனமும், கேணியும் அனந்தன் முயற்சியால் அழகாக அமைந்தது. மலர்கள் எல்லாம் மனங்களைப் போல் பூத்துக் குலுங்கின!
துளசியோடு, மல்லிகை, முல்லை, மாலதி என்னும் குடமல்லி, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரி, செந்தாமரை, தவனம், மரு, மகிழம், செண்பகம் எனப் பலப்பல மலர்கள்.
அதுவும் முதலில் பூத்த மகிழச் செடியின் மேல் தனி பாசம் நம் அனந்தனுக்கு!
இன்றும் உற்சவர் மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தில்(அதாங்க, காட்டுல கூட்டாஞ்சோறு:-)), இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதை தரப்படுகிறது!


அந்த மகிழ மரம்


இவர் அனந்த நாகத்தின் அம்சம் (ஆதி சேஷன் என்றும் சொல்லுவார்கள்). ஒருமுறை தோட்டத்தில் பாம்பு தீண்டியும், "நாகத்தையே நாகம் தீண்டுமா" என்று தன் வேலையுண்டு தான் உண்டு என்று இருந்துவிட்டார்!
மலர் மொட்டுகள் மலர்ந்து, வண்டுகளின் எச்சில் படுவதற்கு முன்பே பறித்து விடுவார்; மாலைகள் கட்டி, திருவேங்கடமுடையானுக்கு மலர்ப்பணி செய்து வந்தார்.

தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழி தனியன் பாடல், "திருமலைக் கோவில் ஒழுகு விதிகள்" (code of conduct) மற்றும் வடமொழியில் "திருவேங்கடமலை வரலாறு" போன்ற நூல்களும் எழுதினார்!

பின்னர், பலகாலம் திருமலையை விட்டு நீங்காது, நகரப் பணிகளையும் செய்து, தன் குருவான இராமானுசருக்குப் பின், இறைவன் திருவடி நீழலை அடைந்தார் அனந்தன்!

இன்று திருமலையில் உள்ள இவ்வளவு உற்சவச் சிறப்புக்கெல்லாம் ஆதி காரணம் இந்த அடியவர், அனந்தாழ்வார் தான், என்றால் அது மிகையே இல்லை!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!
(அடுத்த பதிவில், அடியார்: பெரிய திருமலை நம்பிகள்;
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் குழு, Tirumala.org, Thanjavurpaintings.com)



ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில தகவல்:

இப்பவும் திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்!

அனந்தன் பூத்தொடுத்த இடத்திற்கு யமுனைத்துறை என்று பெயர். இன்றும், அவன் திருமேனியில் சார்த்தப்படும் மாலைகள் இங்கு தான் தொடுக்கப்படும்; தரிசனம் முடிந்து, உண்டியல் செலுத்தி, பின் நரசிம்மர் சந்நிதியைச் சுற்றி வரும் போது இம்மண்டபத்தைக் காணலாம். காலை (அ) மாலை என்றால் மாலை தொடுப்பதையும் நேரே காணலாம்.


திருமலையில், இறைவன் அணிந்த மலர்கள்,மாலைகள், பிரசாதமாக யாருக்கும் தரப்படுவது கிடையாது! அனைத்தும் பூங்கிணறு (தெலுங்கில்:பூல பாவி) என்னும் கிணற்றில் போட்டு விடுவார்கள்! இக்கிணற்றுக்குள் மண்மகள் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

இலவச பிரசாதம், தொன்னையில் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது இந்தக் கிணற்றைக் காணலாம்! சில சமயம், மேலே பூமாலைகள் வழிந்தும் கிடக்கும்!

அடுத்த முறை திருமலை யாத்திரையில் இவற்றை மறக்காமல் கண்டு,களித்து வாங்க!

Read more »

Friday, October 06, 2006

இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1

மோவாய்க் கட்டையில் ஒரு பெரிய வெள்ளைப் பொட்டு. எங்கனாச்சும் பாத்தா மாதிரி இருக்குதுங்களா? ஒரு கடவுளின் திருவுருவச் சிலையில் தான்!
யாருன்னு தெரியுதுங்களா?
ஏன் அந்தப் பொட்டு? சும்மா இல்லை! அடிபட்டதற்கு மருந்து! என்னது அடியா?
ஏன் என்ன ஆச்சு, பாக்கலாம் வாரீகளா?

நடந்தாய் வாழி காவேரி!
ஒரே ஆறாக ஓடி வரும் காவேரி, அரங்கத்துக்குச் சற்று முன்னால் இரண்டாகப் பிரிகிறாள்!
அரங்கத்தைத் தாண்டிய பின் மீண்டும் சேர்ந்து ஒரே ஆறாக ஓட்டம்!
தாம் ஓடும் வழியில் அரங்கன் துயில்கிறானே!
அவனுக்கு மாலையாகப் பிரிந்து, நீர் மாலை சூட்டி, பின்னர் மீண்டும் சேர்ந்தாளோ? கங்கையிற் புனிதமாய காவிரி ஆனாளோ!

ஆறிரண்டும் காவேரி...
அழகான தென்னைமரம்!
அழகான மரம் நடுவில், அமைதியாய் ஒரு குடிசை. குடிசைக்குள், சுமார் ஒரு ஐம்பது பேர் உள்ளேயும், வெளியேயும் அமர்ந்து தங்கள் மெய்மறந்து இருந்தனர்.
தீவெட்டி வெளிச்சமும், புகையும் மணமும் அப்படியே அந்தச் சூழலில் கலந்து ஒரு வித ஜொலிப்பை ஏற்படுத்தி இருந்தது!
அத்தனை பேருக்கும் நடுவில் ஒரு வயதான மனிதர். வசீகரமான குரல். கருணை பொழியும் கண்கள்!!

தம் சீடர்கள் அனைவரையும் வரச் சொல்லியிருந்தார். கூடவே அன்று தீவெட்டி பிடிப்போரும், அவர் தம் குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினர்கள். இது அவர் அன்றாட வழக்கம் தான். ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், சமூகத்தின் கடைநிலையில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு பிரிவினரை அழைத்து, அவர்களைத் திருக்குலத்தார் எனச் சிறப்பிப்பார். அவர்களின் தொண்டினைப் பாராட்டிப், பிரசாதங்கள் அளித்துப் பின்னர் தான், தம் உரையைத் தொடங்குவது அவர் வழக்கம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்தமில் புகழ்க் கார்எழில் அண்ணலே
"

என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாட, கூட்டம் அப்படியே சொக்கிப் போய் இருந்தது!
திருவாய்மொழி சொற்பொழிவு அல்லவா?
"என் தந்தை, தந்தைக்கும் தந்தை, முப்பாட்டன், முப்பாட்டனுக்கும் பாட்டன் என்று எல்லாரும் தரிசித்தவனே! அவ்வளவு மூத்தோனே! அழகிய இளையோனே! வானவர்கள், தங்கள் தலைவனோடு வந்து உன்னைத் தரிசிக்கிறார்கள். எங்கும் பூக்கள் சிந்தி, உன் இல்லம் எல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தப் பூ மணத்தில் மகிழும் இறைவா..." என்று சொல்லிக் கொண்டே சென்றவர், அப்படியே நிறுத்தி விட்டார்! கண்களில் கண்ணீர் தாரை தாரையாக!!

எல்லோருக்கும் அதிர்ச்சி; ஏன் இந்த இராமானுசர் திடீர் என்று அழுகிறார்? ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்! ஒரு சிறுவன் ஓடி வந்து, "தாத்தா, அழுவாதீங்க, இந்தாங்க", என்று தன் முண்டாசைக் கொடுக்கிறான். அவரும் சற்றே ஆறி மேலும் தொடர்கிறார்.

"பாத்தீங்களா இந்தப் பாசுரத்தை. "சிந்துபூ" என்று பூக்கள் குலுங்குவதாகச் சொல்கிறது. எப்போதும் கும்மென்று வாசம் வீசும் மலர்கள் அவன் அணிவதாகச் சொல்கிறார் நம்மாழ்வார்! ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன தெரியுமா?
ஒரு பூமாலைக்கே வழியின்றி இருக்கிறான் அவன்! ஏதோ காட்டுச் செடிகள் படர்ந்துள்ளன. அவனுக்கா இந்த நிலை? சென்ற முறை நான் சென்ற போது, பார்த்து விட்டு மிகவும் வருந்தினேன்! அடியவரும், என் தாய்மாமனும் ஆன பெரிய திருமலை நம்பிகளை அங்கேயே விட்டு விட்டு வந்தேன். அவரும் வயதானவர்...பாவம் தன்னால் முடிந்த தண்ணீர் கைங்கர்யத்தை அவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்."
(குறிப்பு: இராமானுசருக்கு இராமாயண பாடம் சொல்லிக் கொடுத்த குருவானவர் திருமலை நம்பிகள்; இருப்பினும் இராமானுசர் இப்போது வைணவ தர்மத்துக்குத் தலைமை வகிப்பதால், ஏனையோர் அனைவரும் தொண்டர்களாகக், கருதப்படுகின்றனர்.)


"என் மனதில் ஒன்று ஓடுகிறது. பேசாமல், திருமலையில் ஒரு குளம் வெட்டி, நந்தவனம் அமைத்து, மலர்களைத் தொடுத்து, அவனுக்கு பூப்பணி (புஷ்ப கைங்கர்யம்) செய்தால் என்ன?

பாம்பணி இறைவனுக்குப் பூப்பணி செய்ய இங்கு உள்ள யாரேனும் முன் வருகிறீர்களா?"

அவ்வளவு தான்; ஒரே நிசப்தம்!
ஒரு சிலருக்கு இராமானுசரைப் பிரிய வேணுமே என்று ஏக்கம். அரங்கனைப் பிரிவதா என்ற துக்கம்.
பல பேருக்கு திருமலைக் குளிர் என்றாலே பயம்.
இன்னும் சிலர் மடத்தில் கிடைக்கும் உணவு மற்றும் இதர வசதிகள் இன்றித் திருமலையில் தனியாக வாழணுமா என்ற தயக்கம்.
ஒருவரும் முன் வரவில்லை.
உடையவருக்கே (இராமானுசர்) வருத்தமாகப் போய் விட்டது. யாரையும் வற்புறுத்திக் கடனே என்று தொண்டு செய்யுமாறு சொல்ல அவர் மனம் இசையவில்லை!

"நானும் என் மனைவியும் செல்கிறோம் சுவாமி!"
ஆ...யார் அது...பின் பக்கத்தில் இருந்து குரல் வருகிறதே! ஓ சில மாதங்களுக்கு முன்பு தான் வந்து சேர்ந்தான் ஒரு அடியவன்! அவன் தான்!
"உன் பேர் என்னப்பா?"
அனந்தாழ்வான்
"உன் மனைவி கர்ப்பவதி ஆயிற்றே"
கவலை வேண்டாம் சுவாமி; நான் பார்த்துக் கொள்கிறேன்.
"ரொம்பவும் குளிருமே"
பாசுரங்களின் கதகதப்பு போதும் சுவாமி.
"ஆகா நீர் அல்லவோ ஆண் பிள்ளை. பயண ஏற்பாடுகளைச் செய். மனைவியை மலை ஏற விடாதே; டவாலிகள் உதவியுடன் தூக்கிச் செல்"
இன்றே கிளம்புகிறேன் சுவாமி. குருவின் ஆணையே பெரிது!

அவன் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் இராமானுசர். பின்னர் சீடர்களைச் சிரித்தபடியே பார்க்க, அனைவரும் தலை குனிந்தனர்! அவருக்குத் தெரியும், "திருமலையில் இனி எல்லாம் சுகமே"!

சொன்ன வண்ணம் செய்தான் அந்தச் சீடன். மலை மேல் மனைவியுடன் சென்று வராகரை வழிபட்டான்.
பின்பு நெட்டழகன, நீல மேனியால் நிறை கொள்ளும் நிவாசனைத் தரிசித்தான்.
குரு சொன்னதை விடக் கொடுமையாக இருந்தது! ஒரே சிறிய விளக்கு; ஆழ்ந்து நோக்கினால், அலங்காரங்கள் ஏதுமின்றி, ஒற்றைத் துணி உடுத்தி, ஓங்கி நின்று கொண்டிருந்தான் செல்வத்தின் நாயகன்!
கண்களில் நீர் வழிய அன்றே பணிகளை ஆரம்பிக்க உறுதி பூண்டார்கள் இருவரும். பெரிய திருமலை நம்பிகள் தன் தள்ளாத வயதில், தன் வீட்டிலேயே இடம் கொடுக்க, அவர்களும் அங்கேயே தங்கினர்!

பூங்காவுக்கு இடம் பார்த்தாயிற்று! பலி தேவதைகளையும் எல்லைக்காவல் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாயிற்று! பூங்காவிற்கு நீர் வேண்டுமே! அருகிலேயே கேணி ஒன்று தோண்ட முடிவாயிற்று! நம் அனந்தன் தோண்டத் தோண்ட, அவன் மனைவி, அவளால் முடிந்த வரை மணலை அள்ளிக் கொட்ட முடிவு செய்தனர். அனந்தன் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். ஆனால் அவள் தான் ஜாடிக்கேத்த மூடியாயிற்றே!
நல்ல கணவன், நல்ல மனைவி!

கர்ப்பவதிக்கு மூச்சு வாங்குகிறது. திருமலை வாசனுக்கே பொறுக்கவில்லை. அவளுக்கு உதவி செய்ய வேடம் போட்டு வந்தான் வேதன்.
ஐயாவிற்குத் தான் எப்போதும் பக்தர்களிடம் விளையாடுவதே பொழுது போக்கு ஆயிற்றே!
அதை இங்குக் காட்டலாம் என்று நினைத்தான் போலும்! அவனுக்குத் தெரியாது, நம் அனந்தனுக்குக் குரு பக்திக்குப் பிறகு தான் மறு பக்தி என்று!

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

Read more »

Tuesday, October 03, 2006

திருமலை விழா 9 - சக்ர நீராட்டம் - சுபம்

ஒன்பதாம் நாள் (விழா நிறைவு)

சக்ர நீராட்டம் (சக்ர ஸ்நானம்)

தீர்த்தம் -ன்னா என்னப்பா? இந்த கேள்விக்குப் பலர், பலவிதமாய் பதில் சொல்லுவார்கள்! :-) ஆனா நாம அங்கெல்லாம் போகப் போறது இல்லை :-))
அனைத்து ஆலயங்களிலும், விழா நிறைவுறும் போது, தீர்த்தவாரி என்ற ஒன்று நடைபெறுவது உண்டு. கேரளத்தில் அய்யப்பனுக்கு ஆறாட்டு என்று வழங்குவார்கள். பல ஊர்களில் பல விதமாய் வழங்கி வருகிறது! நீர் நிலைகள் பற்றி நண்பர் ஜிரா ஒரு பதிவு இட்டிருந்தார். நீர் இன்றி அமையாது உலகு என்பதை நன்கு உணர்ந்தவர்கள், நம் முன்னோர்கள். அதனால் தான் புனிதத் தலங்களில் தீர்த்தமாடுவதை, யாத்திரை விதியாக விதித்து இருந்தார்கள்.

என்ன தான் வீட்டுக்குள் முங்கி முங்கிக் குளித்தாலும், நம்ம ஊர் பம்ப்செட்டில் பாஞ்சி பாஞ்சிக் குளிப்பது போல் வருமா?
"குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்?" என்று ஆண்டாளும் கேட்கிறாள் பாருங்கள்!
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் மிகச் சிறப்பு உடையது திருமலை.
இறைவனே கல்லாய்ச் சமைந்தான் = மூர்த்தி
ஆதிசேஷனே மலையாய் ஆனது = தலம்
வைகுண்டத்தில் பாயும் விரஜை நதியே கோனேரியாய் ஆனது = தீர்த்தம்






திருமலையில் பல தீர்த்தங்கள் உள்ளன. சிறிது தான் நாம் அறிந்தவை. மலைக்குள் இன்னும் பல இடங்களில் பலப்பல நீர் ஆதாரங்கள்!
கோனேரி (சுவாமி புஷ்கரிணி), ஆகாச கங்கை, பாப விநாசம், கபில தீர்த்தம், குமார தாரை, பொற்கிணறு, பூங்கிணறு இன்னும் பல!
இன்று தீர்த்தவாரியின் போது, எல்லா தீர்த்தங்களும், கோனேரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் இது முக்கோடி தீர்த்த நாள் என்ற பெயர் பெற்றது.

காலையில் சுவாமிக்கு, எண்ணெய்க் காப்பு செய்து (Birthday அல்லவா? தலைக் குளியல் வேண்டுமே! சுவாமி சின்னக் குழந்தையாட்டம் அடம் பிடித்தால் கூட விடுவோமா?)
சூரணம் என்னும் பொடியைத் தலையில் பூசுகிறார்கள். இதற்கு சூர்ணாபிசேகம் என்று பெயர். பின்னர் சுவாமியையும் தேவியரையும், பல்லக்கில் வைத்து, குளக்கரையில் உள்ள வராகப் பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுகிறார்கள். கூடவே சக்கரத்தாழ்வாரும்!

விழாவில் நடக்கும் குற்றம் குறைகளைக் கண்காணிப்பவர் சக்கரத்தாழ்வார். பெருமாளின் முதற் படைக்கருவி! எவ்வளவு பெரிய நிறுவனமோ, அரசாங்கமோ ஆனாலும் தணிக்கை (audit) வேண்டுமல்லவா?
திருமகள் மார்பனுக்கு இயல்பாகவே இரக்க குணம். போதாக்குறைக்கு, தயையே உருவான தேவியர். அப்ப யார் தான் கண்காணிப்பது.
அதான் சக்கரத்தாழ்வார். பெருமாளை விட்டு என்றும் பிரியாதவர். நரசிம்மனாய் வந்த போதுகூட அவன் நகமாய் வந்தவர்! கோடி சூர்யப் பிரகாசம் கொண்டவர்!! (சுவாமியின் boomerang? :-)))

அனைவருக்கும், குளக்கரையில் நீராட்டம் நடக்கிறது. நீர், பால், தயிர், தேன், இளநீர் என்று பஞ்சாமிர்த அபிஷேகம். அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ பூசப்படுகிறது. துழாய்(துளசி)மாலை சார்த்தப்பட்டு, தீபங்கள் காட்டுகின்றனர்.
ஆயிரம் துளைகள் கொண்ட தங்கத் தாம்பாளத் தட்டின் வ்ழியாக, shower bath வேறு! (சகஸ்ர தாரை).






பின்னர் சக்கரத்தாழ்வாரை, குளத்துக்கு எடுத்துச் சென்று, பட்டர்கள் நீருக்குள் முங்குகின்றனர். அவ்வாறு முங்கும் போது, குழுமியிருக்கும் பல்லாயிரம் பக்தர்களும் தாமும் முங்கி தீர்த்தவாரி செய்கின்றனர்.




விழா இனிதே நிறைவு பெறுகிறது!
மாலையில் ஏற்றிய கொடியினை இறக்கி, வந்த அனைத்து தேவர்களையும், மனிதர்களையும், பிரம்மா வழி அனுப்பி வைப்பதாக ஐதீகம்.
"OK பிரம்மா, See you, it was a grand show, awesome!", என்று நாமும் சொல்லி 'வடை' பெறுகிறோம்! ...ஹிஹி 'விடை' பெறுகிறோம்.
சுப்ரபாத தோத்திரத்தில் ஒரு இனியது கேட்டு நிறைவோம்!

அகம் தூர தஸ்தே, பதாம்போ ஜயுக்ம
பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ
ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா


என் வீடு, மிகத் தொலைவில் உள்ளது. (அகம் தூர தஸ்தே)
ஆனாலும் உன் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்ள வந்தேன். (பதாம்போ ஜயுக்ம)
இன்று உன் திருமுக தரிசனம் கண்டேன்!
தினமும் திருமலையிலேயே தங்கி உன்னைச் சேவிக்க ஆசை தான், ஆனால் முடியுமோ?
(பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி)
அதனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம்!

எப்போதெல்லாம் நான், என் மனம் நிறைய உன்னை நினைக்கிறேனோ,
அப்போதெல்லாம், நீ எனக்கு இப்போது கொடுத்த தரிசனத்தை, அப்போதும் கொடுக்க வேண்டும்!
(சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ)
இறைவா, திருமலைவாசா, வேங்கடவா, இதையே எனக்கு நீ அருள்வாய்! (ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா)

இந்த நவ நாட்களும் வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி!
சொல்லிலோ, பொருளிலோ குற்றம் குறைகள் இருந்தாலும் எனக்காக அவையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
சேர்ந்தாற் போல தமிழில் இவ்வளவு தட்டச்சு செய்வது இதுவே முதல் முறை.
நிறை குறை (நிறைய குறை?:-) -கள் சுட்டிக்காட்டுங்கள்.
அல்லன அகற்றிடத் தயங்க மாட்டேன்!
வாய்ப்புக்கு நன்றி!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!





இன்று,
நம்மாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

(இவர் நம்ம ஆழ்வார்; நம் ஆழ்வார் என்று அரங்கனே சொன்ன பின்னர், நாம் என்ன சொல்ல!
ஆழ்வார்களுள், மிகவும் குறைந்த வயதினர்! ஆனால் ஆழ்வார்க்கெல்லாம் தலையாயவர் என்று போற்றப்படுபவர். நால் வேதங்களையும் தமிழ் செய்தவர்! தாளாற்றித் தந்த வேளாள மரபினர்.
ஆசார்யர், ஆழ்வார் என்று இரண்டும் ஒன்றாய் இருப்பவர்! எல்லாக் கோவில்களிலும் பெருமாள் பாதங்களைத் தாங்கி, சடகோபமாய் இருப்பவர்! அவன் மென்மலர்ப் பாதங்களை நம் தலைக்கு எடுத்து வந்து கொடுக்கும் சடாரி ரூபமானவர். இன்னும் எவ்வளவோ! "வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது"!)

திருவேங்கடமுடையான் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க, இவர் பாடிய பாடல்களுள், மிகப் பிரபலமானவை இதோ! நண்பர்கள் கண்ணன் சார், குமரன், பாலா, இன்னும் பலர் பின்னூட்டங்களில் இந்தப் பாடல்களை இட்டிருந்தார்கள்! அதை அப்படியே தருகிறேன்!!

ஏனோ இன்று, இந்த ஆழ்வார் பாடலுக்கு மட்டும்,
பொருள் சொல்லவோ, பதவுரை தரவோ முன் வராமல், மனம் அப்படியே நிற்கின்றது!
பாடலைத் தான் மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுதே அன்றி, மற்றவை அப்படியே நிற்கிறது!
முடிந்த வரை பத்தி பிரித்து தருகிறேன். எளிமையான் தமிழ் தான்
. வரிகளைப் படிக்கப் படிக்க உங்களுக்கே மனதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்!! (பின்னூட்டத்தில் நீங்கள் வந்து பொருள் உரைத்தாலும் மிகவும் மகிழ்வேன்; நன்றி!)

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!
-------------------------------------------------------------------------------------------

வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண், செங்கனி வாய், நால் தோள், அமுதே. எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன்பாதம்
அகல கில்லேன் இறையுமே.
(அல்லைப் பகல் செய் = இரவையும் இருளையும் பகல் ஆக்கும்)
-------------------------------------------------------------------------------------------
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய். உலகம் மூன்று உடையாய். என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல்ஒன்று இல்லாஅடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.
-------------------------------------------------------------------------------------------
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வான் உள் நிலாவுவரே!

(கேழ் இல்லாப் பெருமான் = ஒப்புமை இல்லாத பெருமான்; தன் ஒப்பார் இல் அப்பன்)
(சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் = தான் பாடிய திருவாய்மொழி 1000 பாடல்களில், திருவேங்கடத்துக்கு எனப் பிரத்யேகமாகப் பாடிய இந்தப் பத்து பாடல்களும்)
(பழனம்=நெல் வயல்கள்; குருகூர்=ஆழ்வார் திருநிகரி எனப்படும் திருக்குருகூர் என்ற ஊர்; சடகோபன்=நம்மாழ்வார்; பெரிய வான்=திருநாடு எனப்படும் வைகுந்தம்)
-------------------------------------------------------------------------------------------
இதோ இறைவன் பாதங்கள் பற்றித்

துழாயும் திருப்பாதமும் (துளசியும், சடாரியும்) பெற்றுக் கொள்ளுங்கள்!!

சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்!
சரணம் சரணம் திருமலைக்கு அரசே
சரணம் சரணம் வேங்கடா சரணம்!!

Read more »

Monday, October 02, 2006

திருமலை விழா 8 - தேர் திருவிழா / குதிரை வாகனம்

எட்டாம் நாள்

காலை - தேர் திருவிழா (ரதோற்சவம்)

"தேரு வருதே" - இதை அப்படியே திருப்பிப் போடுங்கள்! என்ன வந்தது?
அதே, "தேரு வருதே"!
ஆங்கிலத்தில் இதை Palindrome-ன்னு சொல்லுவாங்க! தமிழில் இதற்குப் பெயர் என்னன்னு தமிழ் ஆய்ந்த யாராச்சும் வந்து சொல்லுங்கப்பா! (இலக்கணத்தில் ஒரு வகையான அணி என்று சொல்லலாமா?)

இன்று காலை திருமலையில் தேர் திருவிழா. வாகனங்கள் போதாதா? அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய ஆழித்தேரா? ஏன்?
வாகனங்களைத் தேர்ந்த உடல்வலு உள்ளவர்களும், நடையாட்டம் பழகியவர்களும், கோவில் ஊழியர்களும், மடைப்பள்ளி பட்டர்களும், பெரும்பாலும் ஆண்களே சுமக்கின்றனர்! இவர்களை ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைப்பர்.
ஆனால் ஆழித்தேர் அப்படியில்லை!

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பிரபலங்கள், சாமான்யர், மடாதிபதிகள், தலைவர்கள், ஆன்மீக அறிஞர்கள் என சமுதாயத்தில் உள்ள எவரும் வடம் பிடித்து இழுக்க முடியும்.
பலம் தேவையில்லை! பாசமே தேவை!!
ஒருவர் இழுக்க முடியவில்லை என்றால் இன்னொருவர் ஈடு கொடுக்கிறார்.
Complementing each other என்று சொல்லுவார்கள்!
நான் இழுத்ததால் தான் ஓடியது, நீ இழுத்ததால் தான் ஓடியது என்ற பேச்சுக்கு எல்லாம் இடமேயில்லை!
இப்படி ஊர் கூடித் தேர் இழுக்க, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சமூகப் பாடத்தை எந்தக் கல்லூரிக்கும் செல்லாமலேயே கற்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------
(சுவாமியின் தேர் இழுக்கும் போது ஒலிக்கும் பாடல் இதோ...அன்னாமாச்சார்யரின் 'அதிவோ அல் அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்ற பாடல் தான்!!
வேண்டுமானால்,இந்த வரிகளின் மீது க்ளிக் செய்யுங்க; புது விண்டோவில் திறக்கும்; ஒலி அளவைச் சிறிதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; கோவிந்த கோஷம் பாடலின் இடையே ஒலிக்கும்)
------------------------------------------------------------------------------------------------




ஆழித் தேர் பூக்களாலும், தொங்கல் கொடிகளாலும், பட்டுத் துணிகளாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. உச்சியில் தங்கக் குடை. துவாரபாலகர்கள் ஜயன், விஜயன் இருவரும் தேர் முகப்பில்! குதிரைப் பொம்மைகள் ஏழு தேரின் முன்னால்!

சுவாமியையும் தேவியரையும் தேரில் ஏற்றியாகி விட்டது. பட்டர்கள் சாமரம் வீசுகின்றனர்! ஆரத்தி! மேள தாளங்கள் முழங்க, கொம்புகள் ஊத, கொடி அசைத்து விட்டார் பட்டர். இதோ தேர் நகருகிறது! பெருமான் ஆடி ஆடி வருகிறான்!!



சுவாமியின் முன்னால் அருளிச்செயல் குழாம் என்னும் பெரிய திவ்யப்பிரபந்த கோஷ்டி! அக்கோஷ்டி தமிழ்ப் பாசுரங்கள் முழங்கி முன்னே செல்ல, தமிழ் செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், தேரில் பெருமான் ஓடோடி வருகிறான்!! சுவாமியே ஓடும் போது, அவன் பின்னால் வரும் சிறிய வேத கோஷ்டி சும்மா இருக்க முடியாதே! பகவான் தமிழின் இனிமையில் மயங்கி, எங்கே நம்மை விட்டு ஓடி விடுவானோ, என்று அக்கோஷ்டியும் ஓடி வர, ஆகா 'ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்' தான் போங்களேன்!

(இதனால் வேதங்களைக் குறைத்து மதிப்பிட்டதாக யாரும் வருந்தி விடக் கூடாது!
வேதங்களை மொழிந்தவனே அவன் தானே? அவற்றைக் காக்கவும் மச்சமாய் (மீனாய்) அவன் வரவில்லையா? இரண்டுமே அவன் கண்கள் தான்!
அவன் சொன்னது தான் வேதம்.
அதில், தன்னைத் தானே, தன் பெருமைகளைச் சொன்னாற் போல் ஆகி விட்டது பகவானுக்கு!
பார்த்தான்...தீந்தமிழ் ஆழ்வார்களை அனுப்பி, அவர் தம் பாக்களால் பாடக் கேட்டான்.
தற்பெருமை போய், தமிழால் பெருமை!
அதனால் தமிழுக்குக் கடன் பட்டான்; தமிழுடன் உடன் பட்டான்!
'தமிழ் இறைவனுக்கும் முன்னால்' என்று நண்பர் குமரன், இது பற்றிச் சுவையாக முன்பே பதிந்துள்ளார். இங்கே காணலாம்!)




பேசியது போதும்! வாருங்கள் வடம் பிடிக்கலாம்...
கையில் வடத்தை (கயிறை) நல்லா பிடிச்சுக்கோங்க! ஆங்...அப்பிடித்தான்...சுவாமியைப் பாத்துக்கிட்டே, அப்படியே நடந்துக்கிட்டே, இழுங்க!
ரொம்பல்லாம் மூச்சு முட்ட இழுக்காதீங்க!
சும்மா அப்பிடி நடந்துகிட்டே இழுங்க, போறும்!
உங்கள மாதிரியே நிறைய பேர் இழுக்குறாங்க, திரும்பிப் பாருங்க...ஆட்டோமாட்டிக்கா நகரும்! ஆங் அதே அதே....
இப்ப வந்துடுச்சு வித்தை....அப்பிடியே மெயின்டைன் பண்ணுங்க!
அப்படியே வெக்கப்படாம சொல்லுங்க, "ஏடு கொண்டலவாடா, வேங்கட ரமணா..கோவிந்தா!...கோவிந்தா!!"


தேருக்குள், சுவாமியின் முன் அழகு


பின் அழகு

(சுவாமியின் தேர், மாட வீதிகளில், எட்டு இடங்களில் நிற்கும்.
அந்த அந்த திசைக்குரிய பரிவார தேவதைக்கு, அன்னபலி சார்த்தப்பட்டு, ஆரத்திக்குப் பின் மீண்டும் நகர ஆரம்பிக்கும்.
மக்கள் உப்பும் மிளகும் தேர்க்கால்களில் தூவ, தேர் நிலைக்கு வந்துசேரப் பல மணி நேரம் ஆகும்).



மாலை - குதிரை வாகனம் (அஸ்வ வாகனம்)

மாலையில், மலை குனிய நின்றான் பெருமாள், தேரில் வந்த களைப்பு தீர, ஊஞ்சல் ஆடுகிறான்! பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசனான பெருமாள், கல்கி ரூபத்தில், தங்கக் குதிரை (ஆடல் மா) மேல் அமர்ந்து நகர் உலா வருகிறான்!
ராஜ அலங்காரம். தலையில் மடிப்பு வைத்துத் தைத்த தலைப்பாகை! கையில் சாட்டை! வாள், கேடயம்! பரி மேல் வரும் பரி மேல் அழகன்! காணக் கண் கோடி போதுமோ?





இன்று,
திருமங்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.
(திருமங்கை ஆழ்வார், கலியன் என்று போற்றப்பட்ட குறுநில மன்னர். பெருநிலம் வேண்டிப் பெருமாளைச் சரண் புகுந்தார்.
திருவைணவத்தை ஒரு மக்கள் அமைப்பாக அமைத்துக் கொடுத்தவர்.
பரகாலன், பெருவீரன் என்று அவரைக் குறிப்பிட்டாலும், உள்ளத்தை உருக்கும் பலப்பல காதல் கவிதைகளைப் பொழிந்துள்ளார்.
ஆடல்மா என்பது அவர் குதிரை. இன்று குதிரை வாகனம் ஆதலால், அவர் பாடல் ஒன்றைப் படிப்போம்)


தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துவிட்டேன்,
பெரியேன் ஆயினபின் பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்,
கரிசேர்ப் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா,
அரியே வந்துஅடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே
.

(கரி=யானை; பொழில்=பூங்கா)
பாலகனான புரியாத பருவத்தில், தெரியாமல் பல தீமைகளைச் செய்து, 'விட்டேன்'.
புத்தி பின்னர் வந்தாலும், இறை அன்பு வரப் பெறவில்லை; அதனால்,
பெரியவன் ஆன பின்னர், நல்லவர் அல்லாத பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்!
யானைகள் விளையாடும் பல பூங்காக்களை உடைய வேங்கட மலையானே,
ஹரியே, உன்னை வந்து சரண் அடைந்தேன்! அடியேனை ஆட்கொண்டு அருளே!!



பிரசாத ஸ்டால்:
வாங்க வாங்க! நம்ம துளசி டீச்சர் தான் இன்னிக்கி பிரசாத ஸ்டால் இன்சார்ஜ்.
அவராப் பாத்து உங்களுக்குப் போட்டுக் கொடுப்பாரு. அதுவரை வரிசையில் பொறுமையா இருங்க பக்த கோடிகளே! பார்சல் பொட்டலம் எல்லாம் கேக்கக் கூடாது. அதெல்லாம் நீங்களே தான் பாத்துக்கணும்!!
அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!






உண்ணும் பிரசாதம் வடை, சரி.
ஆனா அது மட்டும் தான் பிரசாதமா?
இப்ப எல்லாம் திருமலையில் விருக்ஷப் பிரசாதம் (செடிகொடி பிரசாதம்) ரொம்பவே பிரபலம்!
துளசி, பவழமல்லி, இருவாட்சி, தவனம், மரு என்று பல செடிகள், திருமலைத் தோட்டத்தில் தருகிறார்கள். விஜயா வங்கியில் கேட்டு, விவரம் பெறலாம்.
சில செடிகள் அவ்வளவா தண்ணீர் தேவைப்படாதவை; வளர்ப்பதும் எளிது!
இது, வீட்டுக்கும் நாட்டுக்கும், வேங்கடத்தான் அருளால், நல்லது தானே!
ஆகவே செடிகொடி பிரசாதமும் பெற்றுக் கொள்ளுங்கள் பக்தர்களே!

நாளை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இறுதி நாள்;
ஏழுமலையான் பிறந்த நாள்!! (அவதார நாள்)
ஷ்ரவண நட்சத்திரம்! சக்கரத்தாழ்வார் நீராட்டு!
அவசியம் வாங்க! அமுதனைப் பாத்து போங்க!
Read more »

Sunday, October 01, 2006

திருமலை விழா 7 - சூர்ய / சந்திர வாகனம்

ஏழாம் நாள்

காலை - கதிர் ஒளி வாகனம் (சூர்யப் பிரபை வாகனம்)

இன்னிக்கி சூரியன்FM பல பேர் கேக்கறாங்க. சில பேரால அது இல்லாம இருக்க முடியறது இல்ல. காதோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல், எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு நிக்குது. பாட்டைக் கேட்டுச் சிலர், சில பேருக்கு dedication செய்யறாங்க!
ஆனால் இந்த Total Dedication என்பது உலகத்தில் ஒரே ஒருத்தருக்குத் தாங்க பொருந்தும். அது நம்ம சூரிய பகவான் தாங்க! உலகத்தில தப்பு நடக்குதோ, நல்லது நடக்குதோ, எதுவாயினும், கரெக்டா கன்-டைமுக்கு ஆஜராயிடுவாரு! ஒரே ஒரு நாள், சும்மா ஒரு பத்து பதினைந்து நிமிஷம் லேட்டா எழுந்திருச்சாருன்னு வைச்சுக்குங்க....அவ்ளோ தான்!

இப்படிக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சூரியப் பகவானைப் ப்ரத்யக்ஷ தெய்வம் என்று சொல்லுவார்கள். சூர்ய நாராயணர் என்றுப் போற்றப் படுகிறார். இவருக்குப் பல பெயர்கள்;
ரவி (அட நம்ம பேருங்க; அதான் முதல்ல சொல்லிட்டேன்; கண்டுக்காதீங்க :-)
பாஸ்கரன், ஆதித்யன், தமிழில் ஞாயிறு, பரிதி, பகலவன், வெய்யோன் இன்னும் நிறைய இருக்கு! பல பேர் பின்னூட்டத்தில் சொன்னீங்கனா, தொகுத்து ஒரு தமிழ் அர்ச்சனைப் புத்தகமே போட்டுவிடலாம். 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது. அட நம்ம தமிழர் திருநாளாம் பொங்கல் கூட இவருக்குத் தானே!

அப்பேர் பட்டவருக்கு ஒரு தனி வழிபாட்டு முறையையே நிறுவினார் ஆதிசங்கரர். "செளரம்" என்று அதற்குப் பெயர்! ஸ்ரீமன் நாராயணனே, சூர்ய சொரூபமாக உலகைக் காப்பதாக ஐதீகம்; யஜூர் வேதத்தில், காயத்ரி வழிபாட்டில்,
"சத சாவித்ரு மண்டல மத்ய வர்த்தே நாராயணஹ
சரஸி ஜாசன சாம்னி விஷ்டஹ
....
க்ரீடீ, ஹாரீ, ஹிரண்மய வபுர்; தித சங்கு சக்ரஹ"
என்று, சூர்ய நாராயணன் என்றே புகழ்கிறது வேதம்!


பஞ்சாயுதம்


இன்று காலை திருமலையில், அந்தச் சூர்ய நாராயணனாக உலா வருகிறான் பெருமாள்;
பின்னால் பெரிய சூரியப் பிரபை(சூரியத் தட்டு). பகலவனின் தேரில் ஏறி, பஞ்ச ஆயுதங்களும் தரித்து,
அருணன் சாரதியாய் தேரோட்ட, இறைவன் தேரின் மையப் பகுதியில் (மத்ய வர்த்தே) வீற்று இருக்கிறான்.
சக்கரம், சங்கு, வாள், கதை, வில் ஆகிய இவையே பஞ்சாயுதங்கள்.
'அங்கையில் நேமி, சங்கு, வாள், தண்டோடு, அடல் சராசனமும் தரித்தோன்', என்று பாடுகிறார் வில்லிபுத்தூரார். (சில சமயங்களில் கிருஷ்ண ரூபமாகவும் சூரியத் தேரில் வலம் வருவதுண்டு)

ஏழு குதிரைகள் பூட்டிய சூரியத்தேர் சுடர்விட்டு பறக்கிறது! நம் மனங்களும் அவனுடன் சேர்ந்தே பறக்கின்றன!!
இரு பெரும் வெண் குடைகள் ஒய்யாரமாக ஆடிஆடி சூரியனுக்கே நிழல் கொடுக்கின்றன!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!!!


Tent-க்குள்!


(பிரம்மோற்சவத்தில் வாகனத்தின் பின்னால், பல அடி தள்ளி, tent போல ஒரு அமைப்பைத் தூக்கி வருவார்கள்; திருமலையில் எப்போது பனியும் மழையும் பெய்யும் என்று சொல்ல முடியாது.
அதனால், மழையோ தூறலோ பெய்யும் போது, உடனே அந்த tent-ஐ கொண்டு வந்து சுவாமியின் வாகனத்துக்குக் காப்பாக நிறுத்தி விடுவார்கள்!
பின்னர், ஊர்வலம், tent-க்குள் இருக்கும் சுவாமியுடன், மழை பெய்தாலும் தடையில்லாது செல்லும்!
)


மாலை - மதி ஒளி வாகனம் (சந்திரப் பிரபை வாகனம்)

"வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ எந்தன் கதையே" என்ற பாட்டு மிகவும் பிரபலமான பாடல் தானுங்களே? அது என்னங்க, இந்த சந்திரனுக்கும் காதலர்களுக்கும் அவ்வளோ தொடர்பு? காதலில் எதற்கு எடுத்தாலும் நிலாவைக் கூப்புட்டுகிறதே வழமையாப் போச்சு! (ஹைய்யா இலங்கைத் தமிழ் ஒட்டிக்கிடுச்சு, எல்லாம் தமிழ்மணம் புண்ணியத்துல!)

ஏதோ குழந்தைகளுக்குச் சோறூட்டத் தான் அம்புலி மாமா என்றால், காதலில் கூட, 'கண்ணே அந்த நிலவு உனக்கு வேணுமா?', 'நிலவின் பிறை போல நெற்றி', 'நிலவைப் பாத்து வானம் சொன்னது என்னைத் தொடாதே' ன்னு
இப்படி எங்கும் நிலா, எதிலும் நிலா! இந்தப் பதிவை எத்தனை காதலர்கள் படிப்பீங்க. யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்களேன் இந்த நிலா mania பற்றி!


ஏழாம் நாள் மாலையில் நம் காதலன் திருமலை வாசனும், இதே நிலவு வாகனத்தில் தான் உலா வருகிறான். சந்திரப் பிரபை வாகனம்.
முழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம். தக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை. முத்துக் கொண்டை;
மல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;
இப்படி இன்று எல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு!! கையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.

வாருங்கள் நாமும் அவனுடன் காதல் கதைகள் பேசிக் கொண்டே, இரவில் காலாற உலா வருவோம்!
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!"





இன்று,
திருப்பாணாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மந்தி பாய் வட வேங்கட மாமலை, வானவர்கள்,
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்,
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே.


(மந்தி=குரங்கு; சந்தி=சந்தியா வந்தனம் (முன்று சந்திகளிலும் வழிபாடு); அரவின் அணை=பாம்புப் படுக்கை; அயன்=பிரம்மா; உந்தி=தொப்புள் கொடி)
மந்திகள் பாய்ந்து ஓடி விளையாடும் வட வேங்கட மாமலை மீது,
வானவர்கள் அனைவரும் கீழிறங்கி வந்து, சந்தி என்னும் மூன்று வேளை வழிபாடு செய்கின்றனர்.
அவன் அரங்கத்தில் பைந் நாகப் பாய் எனப்படும் ஆதி சேஷன் மேல் துயில்பவன்.

அந்தி வேளை நிறம் கொண்ட அழகிய ஆடை உடுத்தி, அவன் திருவயிற்றுப் பகுதியில், தொப்புள் கொடியின் மேல், பிரம்மனைப் படைத்தான்.
அவன் மூலமாக நம் அனைவரையும் படைக்கவும் வைத்தான்.

ஆக எனக்கும், பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு!
அதுவே என் உள்ளத்தின் உள்ளத்தில் உயிராக, உறவாக என்னை வாழ்விக்கிறது!

(வலை நண்பர்களுக்கும், அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
நாளை திருத் தேரோட்டம். ஊர் கூடித் தேர் இழுக்கும் நன்னாள்; எல்லாரும் மறக்காம வந்து ஒரு கை கொடுங்க!
வட வேங்கடன் வடம் இழுக்க அவசியம் வாங்க! - வடம் இழுப்பார்க்கு வடை உண்டு :-)) )
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP