Sunday, October 01, 2006

திருமலை விழா 7 - சூர்ய / சந்திர வாகனம்

ஏழாம் நாள்

காலை - கதிர் ஒளி வாகனம் (சூர்யப் பிரபை வாகனம்)

இன்னிக்கி சூரியன்FM பல பேர் கேக்கறாங்க. சில பேரால அது இல்லாம இருக்க முடியறது இல்ல. காதோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் போல், எப்பவும் கூடவே ஒட்டிக்கிட்டு நிக்குது. பாட்டைக் கேட்டுச் சிலர், சில பேருக்கு dedication செய்யறாங்க!
ஆனால் இந்த Total Dedication என்பது உலகத்தில் ஒரே ஒருத்தருக்குத் தாங்க பொருந்தும். அது நம்ம சூரிய பகவான் தாங்க! உலகத்தில தப்பு நடக்குதோ, நல்லது நடக்குதோ, எதுவாயினும், கரெக்டா கன்-டைமுக்கு ஆஜராயிடுவாரு! ஒரே ஒரு நாள், சும்மா ஒரு பத்து பதினைந்து நிமிஷம் லேட்டா எழுந்திருச்சாருன்னு வைச்சுக்குங்க....அவ்ளோ தான்!

இப்படிக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சூரியப் பகவானைப் ப்ரத்யக்ஷ தெய்வம் என்று சொல்லுவார்கள். சூர்ய நாராயணர் என்றுப் போற்றப் படுகிறார். இவருக்குப் பல பெயர்கள்;
ரவி (அட நம்ம பேருங்க; அதான் முதல்ல சொல்லிட்டேன்; கண்டுக்காதீங்க :-)
பாஸ்கரன், ஆதித்யன், தமிழில் ஞாயிறு, பரிதி, பகலவன், வெய்யோன் இன்னும் நிறைய இருக்கு! பல பேர் பின்னூட்டத்தில் சொன்னீங்கனா, தொகுத்து ஒரு தமிழ் அர்ச்சனைப் புத்தகமே போட்டுவிடலாம். 'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரம் சிறப்பிக்கிறது. அட நம்ம தமிழர் திருநாளாம் பொங்கல் கூட இவருக்குத் தானே!

அப்பேர் பட்டவருக்கு ஒரு தனி வழிபாட்டு முறையையே நிறுவினார் ஆதிசங்கரர். "செளரம்" என்று அதற்குப் பெயர்! ஸ்ரீமன் நாராயணனே, சூர்ய சொரூபமாக உலகைக் காப்பதாக ஐதீகம்; யஜூர் வேதத்தில், காயத்ரி வழிபாட்டில்,
"சத சாவித்ரு மண்டல மத்ய வர்த்தே நாராயணஹ
சரஸி ஜாசன சாம்னி விஷ்டஹ
....
க்ரீடீ, ஹாரீ, ஹிரண்மய வபுர்; தித சங்கு சக்ரஹ"
என்று, சூர்ய நாராயணன் என்றே புகழ்கிறது வேதம்!


பஞ்சாயுதம்


இன்று காலை திருமலையில், அந்தச் சூர்ய நாராயணனாக உலா வருகிறான் பெருமாள்;
பின்னால் பெரிய சூரியப் பிரபை(சூரியத் தட்டு). பகலவனின் தேரில் ஏறி, பஞ்ச ஆயுதங்களும் தரித்து,
அருணன் சாரதியாய் தேரோட்ட, இறைவன் தேரின் மையப் பகுதியில் (மத்ய வர்த்தே) வீற்று இருக்கிறான்.
சக்கரம், சங்கு, வாள், கதை, வில் ஆகிய இவையே பஞ்சாயுதங்கள்.
'அங்கையில் நேமி, சங்கு, வாள், தண்டோடு, அடல் சராசனமும் தரித்தோன்', என்று பாடுகிறார் வில்லிபுத்தூரார். (சில சமயங்களில் கிருஷ்ண ரூபமாகவும் சூரியத் தேரில் வலம் வருவதுண்டு)

ஏழு குதிரைகள் பூட்டிய சூரியத்தேர் சுடர்விட்டு பறக்கிறது! நம் மனங்களும் அவனுடன் சேர்ந்தே பறக்கின்றன!!
இரு பெரும் வெண் குடைகள் ஒய்யாரமாக ஆடிஆடி சூரியனுக்கே நிழல் கொடுக்கின்றன!
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!!!


Tent-க்குள்!


(பிரம்மோற்சவத்தில் வாகனத்தின் பின்னால், பல அடி தள்ளி, tent போல ஒரு அமைப்பைத் தூக்கி வருவார்கள்; திருமலையில் எப்போது பனியும் மழையும் பெய்யும் என்று சொல்ல முடியாது.
அதனால், மழையோ தூறலோ பெய்யும் போது, உடனே அந்த tent-ஐ கொண்டு வந்து சுவாமியின் வாகனத்துக்குக் காப்பாக நிறுத்தி விடுவார்கள்!
பின்னர், ஊர்வலம், tent-க்குள் இருக்கும் சுவாமியுடன், மழை பெய்தாலும் தடையில்லாது செல்லும்!
)


மாலை - மதி ஒளி வாகனம் (சந்திரப் பிரபை வாகனம்)

"வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ எந்தன் கதையே" என்ற பாட்டு மிகவும் பிரபலமான பாடல் தானுங்களே? அது என்னங்க, இந்த சந்திரனுக்கும் காதலர்களுக்கும் அவ்வளோ தொடர்பு? காதலில் எதற்கு எடுத்தாலும் நிலாவைக் கூப்புட்டுகிறதே வழமையாப் போச்சு! (ஹைய்யா இலங்கைத் தமிழ் ஒட்டிக்கிடுச்சு, எல்லாம் தமிழ்மணம் புண்ணியத்துல!)

ஏதோ குழந்தைகளுக்குச் சோறூட்டத் தான் அம்புலி மாமா என்றால், காதலில் கூட, 'கண்ணே அந்த நிலவு உனக்கு வேணுமா?', 'நிலவின் பிறை போல நெற்றி', 'நிலவைப் பாத்து வானம் சொன்னது என்னைத் தொடாதே' ன்னு
இப்படி எங்கும் நிலா, எதிலும் நிலா! இந்தப் பதிவை எத்தனை காதலர்கள் படிப்பீங்க. யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்களேன் இந்த நிலா mania பற்றி!


ஏழாம் நாள் மாலையில் நம் காதலன் திருமலை வாசனும், இதே நிலவு வாகனத்தில் தான் உலா வருகிறான். சந்திரப் பிரபை வாகனம்.
முழுதும் நல்ல வெண் முத்துக்களால் அலங்காரம். தக தக என்று ஒளிர் விடும் வெள்ளிப் பிரபை. முத்துக் கொண்டை;
மல்லிகை மலர்களால் ஆன தண்டு மாலை;
இப்படி இன்று எல்லாமே வெள்ளை, நம் வெள்ளை உள்ளத்தானுக்கு!! கையில் வெண்ணெய்க் குடம் கூட உண்டு.

வாருங்கள் நாமும் அவனுடன் காதல் கதைகள் பேசிக் கொண்டே, இரவில் காலாற உலா வருவோம்!
"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்!"

இன்று,
திருப்பாணாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

மந்தி பாய் வட வேங்கட மாமலை, வானவர்கள்,
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்,
அந்தி போல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே.


(மந்தி=குரங்கு; சந்தி=சந்தியா வந்தனம் (முன்று சந்திகளிலும் வழிபாடு); அரவின் அணை=பாம்புப் படுக்கை; அயன்=பிரம்மா; உந்தி=தொப்புள் கொடி)
மந்திகள் பாய்ந்து ஓடி விளையாடும் வட வேங்கட மாமலை மீது,
வானவர்கள் அனைவரும் கீழிறங்கி வந்து, சந்தி என்னும் மூன்று வேளை வழிபாடு செய்கின்றனர்.
அவன் அரங்கத்தில் பைந் நாகப் பாய் எனப்படும் ஆதி சேஷன் மேல் துயில்பவன்.

அந்தி வேளை நிறம் கொண்ட அழகிய ஆடை உடுத்தி, அவன் திருவயிற்றுப் பகுதியில், தொப்புள் கொடியின் மேல், பிரம்மனைப் படைத்தான்.
அவன் மூலமாக நம் அனைவரையும் படைக்கவும் வைத்தான்.

ஆக எனக்கும், பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு!
அதுவே என் உள்ளத்தின் உள்ளத்தில் உயிராக, உறவாக என்னை வாழ்விக்கிறது!

(வலை நண்பர்களுக்கும், அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
நாளை திருத் தேரோட்டம். ஊர் கூடித் தேர் இழுக்கும் நன்னாள்; எல்லாரும் மறக்காம வந்து ஒரு கை கொடுங்க!
வட வேங்கடன் வடம் இழுக்க அவசியம் வாங்க! - வடம் இழுப்பார்க்கு வடை உண்டு :-)) )

27 comments:

  1. தினமும் காலையில் தமிழ்மணம் திறந்ததும் நேரா பெருமாளைச் சேவிக்கவந்து நிக்கறது இப்ப ஒரு வாரமா
    'வழமை'யாப் போச்சு. ( எனக்கும் இலங்கைத் தமிழ் வந்துருச்சு).

    அந்தப் படம் ஸ்ரீ 'வேணு கோபால'ன் ரொம்பப் பிடிச்சிருக்கு.( அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணமும் இருக்கு!)

    சூரியனும் சந்திரனுமாய் ஜொலிக்கட்டும். எனக்குத்தான் இந்த சூரியனோடு கொஞ்சம் தகராறு(-:
    ஆனா ஊன்னா அவர் இங்கே வரமாட்டார். ஸ்ட்ரைக்தான். இன்னிக்கு 13 டிகிரிதானாம். அதுக்குத்தான்
    ஒரு சூரியனோட பெரியபடம் ( பித்தளை & ஒயிட் மெடல்) வாங்கி வீட்டுலே மாட்டி இருக்கேன். அப்படியாவது
    இங்கே 'காய்' என்று!


    அனைவருக்கும் விஜயதசமி & தஸரா வாழ்த்து(க்)கள்.


    இங்கே ரெண்டு வடை பார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸேல்:-)

    ReplyDelete
  2. வழக்கம் போல அருமையாக இருந்தது...

    சந்திரன் வரும் நேரம் மனதை வருடும் மாலை நேரமாக இருப்பதால் இருக்கலாம்...

    ReplyDelete
  3. நிலவு வாகனப் படம் நினைவில் தங்கும்படியாக சிறப்பாக உள்ளது நண்பரே!

    பெருமாளை இங்கிருந்தே (கோவையிலிருந்தே) சேவித்து விட்டேன் உங்கள் படங்கள் மூலம்!

    நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  4. நேரில் காணக்கிடைக்காத படங்கள்.
    நன்றி

    ReplyDelete
  5. //துளசி கோபால் said...
    தினமும் காலையில் தமிழ்மணம் திறந்ததும் நேரா பெருமாளைச் சேவிக்கவந்து நிக்கறது இப்ப ஒரு வாரமா 'வழமை'யாப் போச்சு//

    வாங்க டீச்சர்; இன்னும் 2 நாள் தான். அப்புறம் பிரம்மோற்சவம் நிறைவுற்றது. பெருமாள் மத்த வேலையப் பாக்கணுமே! :-)

    //.( அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணமும் இருக்கு!)//
    டீச்சர்...ஆகா, எனக்கு மட்டும் சொல்லுங்க! ஹூம்...தூக்கம் போச்சே!

    //எனக்குத்தான் இந்த சூரியனோடு கொஞ்சம் தகராறு(-://
    இன்னும் 1-2 மாசத்தில், இங்கேயும் இப்பிடித் தான் ஆகப்போது! 13 deg இல்லை, just 3 deg!!

    //இங்கே ரெண்டு வடை பார்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸேல்://
    யானையார் recommendation-ஆல், இந்த முறை பிரசாத ஸ்டால் உம்ம பொறுப்பில் கொடுக்கலாமா என்று பெருமாள் யோசனையில் உள்ளார் :-))

    ReplyDelete
  6. // வெட்டிப்பயல் said...
    சந்திரன் வரும் நேரம் மனதை வருடும் மாலை நேரமாக இருப்பதால் இருக்கலாம்...//

    வாங்க பாலாஜி! நீங்க 'தீயினால் சுட்ட புண்' கதையின் ஹீரோ இல்லையா? அதான் மனதை வருடும் மாலைன்னு சொல்றீங்க! கரிக்கை சோழி அண்ணி எப்படி இருக்காங்க அண்ணோவ்! :-))

    ReplyDelete
  7. //SP.VR.SUBBIAH said...
    நிலவு வாகனப் படம் நினைவில் தங்கும்படியாக சிறப்பாக உள்ளது நண்பரே!//

    வாங்க வாத்தியார் ஐயா.
    நாளை அவசியம் வந்து வடம் பிடிக்க ஒரு கை கொடுங்க.
    ஸ்கூல் பசங்களை உதவிக்கு கூட்டி வருவீகளா? எவ்ளோ வடை ரெடி பண்ணனும் சார்? :-)))

    //பெருமாளை இங்கிருந்தே (கோவையிலிருந்தே) சேவித்து விட்டேன் உங்கள் படங்கள் மூலம்!//

    மிக்க மகிழ்ச்சி சார்; கோவையிலும் தென் திருமலை உண்டே! அங்க நம்ம ஆளு செளக்கியமா? :-))

    ReplyDelete
  8. // வடுவூர் குமார் said...
    நேரில் காணக்கிடைக்காத படங்கள்.
    நன்றி//

    நல்வரவு குமார்.
    இன்னும் 2 நாட்கள்; அவசியம் வாங்க! நாளை வடம் பிடிக்க வந்துடுங்க!!

    ReplyDelete
  9. குலதெய்வமென்று குழந்தையிலிருந்து திருவேங்கடம் போய் வருகிறேன். ஒரு முறையும் இப்படி பிரம்மோற்சவம் அநுபவித்தில்லை. அருமை. நன்றி.

    இவ்வளவு பாசுர பக்தர்கள் இருப்பார்கள் என்பது உங்கள் 'சத் சங்கத்திற்கு' வந்த பின் தான் தெரிகிறது. நீங்களெல்லாம் சின்னப் பிள்ளையா இருந்தப்போ (ஹி..ஹி) தமிழின் முதல் மடலாடற் குழுவான "தமிழ்.நெட்" டில் பாசுர மடல் என்றொரு தொடர் எழுதினேன். 108 கட்டுரைகள்!

    இத்தலைமுறையின் ஈடுபாடும், ஆழம் காணுதலும் மனதிற்கு உவப்பாக உள்ளது. மரபு அறிந்த பின்தான் அதை மீற வேண்டும். உண்மையில் சம்பிரதாய வியாக்கியானம் கேட்டால்தான் தெரியும் அங்கு மீறுவதற்கு ஒன்றுமே இல்லையென்று. எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு வாஞ்சை. நம் வந்தனம் அனைத்தும் நம் முதற்தாய் சடகோபனுக்கே!

    ReplyDelete
  10. கண்ணபிரான்,
    வாசித்தேன், தரிசித்தேன், தொழுதேன், மிக்க நன்றி. என்ன, படங்கள் எல்லாம் முந்தைய பிரம்மோத்சவத்தில் தாங்கள் எடுத்ததா ? அருமை. பதிவுகள் திருப்பதியிலிருந்து slightly delayed டெலிகாஸ்ட் போல உள்ளது :) ஒரு சந்தேகம், நியூயார்க்கிலிருந்து தானே பதிகிறீர்கள் !

    சூரியன் என்றாலே, என் மனதில் உடனடியாகத் தோன்றுவது நடிகர் திலகம் தான் ! கர்ணனை மறக்க முடியுமா ? எப்போது போல, ஒரு திருப்பாசுரமும் விளக்கமும் ! சற்று நேரம் முன்பு, சப்தகிரி தொலைக்காட்சியில், தேர்த் திருவிழாவை லைவ்வாக ஒளிபரப்பினார்கள். நல்ல தரிசனம் !

    ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
    வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து
    ஆயன் நாள் மலராம் அடித்தாமரை
    வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே!

    பதவுரை:
    திருவேங்கடம் வாழ் எம்பெருமான் தனது தாமரை மலரை ஒத்த திருவடிகளை ஒவ்வொரு நாளும் (நாராயணா ... கோவிந்தா ... பக்தவத்சலா ... மதுசூதனா... புருஷோத்தமா ... என்று) வாயால் போற்றியும் மனத்தினால் துதிக்கவும் செய்யும் (கண்ணபிரானை ஒத்த :)) அடியார்களை, முதுமை, பிறப்பு, இறப்பு என்ற இன்னல்களிலிருந்து நிரந்தரமாக விடுவித்து தன்னோடு சேர்த்துக் கொள்வான்!

    எ.அ.பாலா

    ReplyDelete
  11. கண்ணபிரான், நியூயார்க்கிலெருந்து
    ஒளிபரப்பாகும் இந்த வர்ணனை

    தரிசனம் செய்யும் புண்ணியத்தைக் கொடுக்கிறது.நன்றி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. // நா.கண்ணன் said...
    குலதெய்வமென்று குழந்தையிலிருந்து திருவேங்கடம் போய் வருகிறேன். ஒரு முறையும் இப்படி பிரம்மோற்சவம் அநுபவித்தில்லை. அருமை. நன்றி.//

    வாங்க கண்ணன் சார்.
    தாங்கள் அநுபவித்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி! உண்மையைச் சொன்னா, நம்மைப் போல புலம் பெயர்ந்தவர்களுக்காகத் தான் இதை எழுதணும்னு தோணிச்சு! சிறு வயதில் இருந்து திருவேங்கட அனுபவங்களை அருகில் இருந்து அனுபவித்தவன் என்ற முறையில், பகிர்ந்து கொண்டால், இன்ன பிற அடியாரின் மனங்களும் களிக்குமே என்ற எண்ணம் தான்!

    டிவி-யில் பாக்க முடியாது. இணைய இதழ்களில் படங்கள் மட்டும் பாக்கலாம். ஆனா வைபவமும், பாசுரமும் சொல்லிச் சேவிக்கும் போது கிடைக்கிற நிறைவே தனி!

    //இவ்வளவு பாசுர பக்தர்கள் இருப்பார்கள் என்பது உங்கள் 'சத் சங்கத்திற்கு' வந்த பின் தான் தெரிகிறது. நீங்களெல்லாம் சின்னப் பிள்ளையா இருந்தப்போ (ஹி..ஹி) தமிழின் முதல் மடலாடற் குழுவான "தமிழ்.நெட்" டில் பாசுர மடல் என்றொரு தொடர் எழுதினேன். 108 கட்டுரைகள்! //

    நான் அவசியம் படிக்கிறேன். பாசுர மடல் சுட்டி தந்தால் மிகவும் மகிழ்வேன்!

    //மரபு அறிந்த பின்தான் அதை மீற வேண்டும்.//

    முற்றிலும் உண்மை!

    //உண்மையில் சம்பிரதாய வியாக்கியானம் கேட்டால்தான் தெரியும் அங்கு மீறுவதற்கு ஒன்றுமே இல்லையென்று.//

    பாசுரப் படி புத்தகம், சென்னையில் விட்டு வந்து விட்டேன். இப்போது தான் என் மடத்தனம் புரிகிறது. அடுத்த முறை மறவாமல் உடன் கொண்டு வரவேண்டும். இணையத்தில் கிடைக்கிறதா தெரியவில்லை!

    //எவ்வளவு சுதந்திரம், எவ்வளவு வாஞ்சை. நம் வந்தனம் அனைத்தும் நம் முதற்தாய் சடகோபனுக்கே//

    நண்ணித் தென் குருகூர் நம்பிக்கும்,
    நாதமுனிகள், உடையவர், மாமுனிகள், தேசிகர், மற்றும் உள்ள சகல ஆசார்யர்களின் திருவடிகளுக்கும் சரணம்! சரணம்!!

    ReplyDelete
  13. //வல்லிசிம்ஹன் said...
    கண்ணபிரான், நியூயார்க்கிலெருந்து
    ஒளிபரப்பாகும் இந்த வர்ணனை
    தரிசனம் செய்யும் புண்ணியத்தைக் கொடுக்கிறது.நன்றி.
    வாழ்த்துகள். //

    வாங்க வல்லி, மிக்க மகிழ்ச்சி!
    கண்ணன் சார் பின்னூட்டத்துக்கு இட்ட பதில் பாருங்களேன்!
    //சிறு வயதில் இருந்து திருவேங்கட அனுபவங்களை அருகில் இருந்து அனுபவித்தவன் என்ற முறையில், பகிர்ந்து கொண்டால், இன்ன பிற அடியாரின் மனங்களும் களிக்குமே என்ற எண்ணம் தான்!//

    நாளை வடம் பிடிக்க மறக்காம வந்துடுங்க!

    ReplyDelete
  14. //இத்தலைமுறையின் ஈடுபாடும், ஆழம் காணுதலும் மனதிற்கு உவப்பாக உள்ளது.
    //

    Thanks, நா.கண்ணன் Sir.

    I have read some of your postings !

    ReplyDelete
  15. கண்ணன் சார்,
    நேரம் கிடைக்கும்போது பாருங்கள், தங்கள் கருத்துக்களை கூறவும்.

    http://balaji_ammu.blogspot.com/2006/09/4_25.html
    http://balaji_ammu.blogspot.com/2006/09/3_21.html
    http://balaji_ammu.blogspot.com/2006/09/ii.html
    http://balaji_ammu.blogspot.com/2006/09/2.html
    http://balaji_ammu.blogspot.com/2006/09/i.html
    http://balaji_ammu.blogspot.com/2006/08/1.html

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  16. //enRenRum-anbudan.BALA said...
    கண்ணபிரான்,
    படங்கள் எல்லாம் முந்தைய பிரம்மோத்சவத்தில் தாங்கள் எடுத்ததா ?//

    ஆமாம் பாலா...முந்தைய பிரம்மோற்சவங்களில்! சில personal-ஆக எடுத்தவை/நண்பர்களால் எடுக்கப்பட்டவை.
    பிற pic courtesy போட்டு விடுகிறேன் அவ்வப்போது.

    //திருப்பதியிலிருந்து slightly delayed டெலிகாஸ்ட் போல உள்ளது :) ஒரு சந்தேகம், நியூயார்க்கிலிருந்து தானே பதிகிறீர்கள் !//

    ஆம். From NYC only! அதான் delayed டெலிகாஸ்ட்.
    இதில் எல்லாம் இந்தப் பூமி, நம் பாரத பூமியை விட பின் தங்கி தான் உள்ளது, நேரத்திலும் கூட :-))

    //கர்ணனை மறக்க முடியுமா//
    வெட்டிபையல் (பாலாஜி) பதிவில் youtube கர்ணன்/தளபதி பாத்தீங்களா?

    //சற்று நேரம் முன்பு, சப்தகிரி தொலைக்காட்சியில், தேர்த் திருவிழாவை லைவ்வாக ஒளிபரப்பினார்கள். நல்ல தரிசனம்//

    கொடுத்து வைத்தவரே! பாலா!!

    ReplyDelete
  17. //enRenRum-anbudan.BALA said...
    கோவிந்தா ... பக்தவத்சலா ... மதுசூதனா... புருஷோத்தமா ... என்று) வாயால் போற்றியும் மனத்தினால் துதிக்கவும் செய்யும் (கண்ணபிரானை ஒத்த :)) அடியார்களை, முதுமை, பிறப்பு, இறப்பு என்ற இன்னல்களிலிருந்து நிரந்தரமாக விடுவித்து தன்னோடு சேர்த்துக் கொள்வான்!//

    பாலா...பதவுரையில் உள்ள "கண்ணபிரானை ஒத்த" என்பதில், ஒரு நல்லடியாரைத் தானே குறிப்பிடுகிறீர்கள்? என் பெயர் அல்லவே? :-))))
    அடியார்கள் எங்கே? இந்தப் பையன் எங்கே?
    ஆனால் தங்கள் அன்புக்கு நன்றி!!

    //வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே!//
    பாசுரம் மிக அருமை!
    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க என்ற கோதைத்தமிழ் உடனே நினைவுக்கு வந்தது!
    பல காலங்களில் வாழ்ந்த ஆழ்வார்கள் ஒருவர் மனதை ஒருவர் அறிந்தவர்களோ? சொற்களும் பல சமயம் அப்படியே ஆளுகிறார்கள்!!

    ReplyDelete
  18. //வாங்க பாலாஜி! நீங்க 'தீயினால் சுட்ட புண்' கதையின் ஹீரோ இல்லையா? அதான் மனதை வருடும் மாலைன்னு சொல்றீங்க! கரிக்கை சோழி அண்ணி எப்படி இருக்காங்க அண்ணோவ்! :-))//
    என்னதிது??? சிறு புள்ளத்தனமா???
    அது கதைப்பா!!!

    நானெல்லாம் கல்யாணத்துக்கு போனா நேரா சாப்பாட்டு பந்திக்கு போற கேஸ் ;)

    ReplyDelete
  19. //பாலா...பதவுரையில் உள்ள "கண்ணபிரானை ஒத்த" என்பதில், ஒரு நல்லடியாரைத் தானே குறிப்பிடுகிறீர்கள்? என் பெயர் அல்லவே? :-))))
    அடியார்கள் எங்கே? இந்தப் பையன் எங்கே?
    ஆனால் தங்கள் அன்புக்கு நன்றி!!
    //
    kannabiran,
    I meant 'YOU' only considering the service you are doing during this Brahmotsavam by writing these divine postings !!!

    ReplyDelete
  20. // வெட்டிப்பயல் said...
    நானெல்லாம் கல்யாணத்துக்கு போனா நேரா சாப்பாட்டு பந்திக்கு போற கேஸ் ;) //

    தோடா, நம்பிட்டம்-ல!

    ReplyDelete
  21. //enRenRum-anbudan.BALA said...
    kannabiran,
    I meant 'YOU' only considering the service you are doing during this Brahmotsavam by writing these divine postings !!! //

    தங்கள் அன்புக்கு நன்றி பாலா!
    "ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே"!

    ReplyDelete
  22. நீங்கள் இரவியின் பெருமைகளை எழுதியிருக்கிறதைப் படிச்சவுடனே ஆதித்ய ஹ்ருதயத்திற்குப் பொருள் சொல்லவேண்டும் என்ற ஆவல் மிகுகிறது. ஆனால் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தலைப்புகளில் எழுதி முடித்தப் பின்னரே புதிதாக ஒரு தலைப்பை எடுத்துக் கொள்வது என்று எண்ணியிருப்பதால் ஐயன் கருணையுடன் பின்னொரு நாள் எழுதலாம்.

    பஞ்சாயுதங்களுடன் நம் பரமனைப் பார்த்தாலே எனக்கு திருமாலிருஞ்சோலையாம் எங்கள் அழகர் கோவிலில் நின்றிருக்கும் சுந்தரத் தோளுடையானின் நினைவு தான் வருகிறது. மூலவர் ஐந்து ஆயுதங்களுடன் நின்றிருப்பார்.

    //வெண்குடைகள் ஆடி ஆடி சூரியனுக்கே நிழல் கொடுக்கின்றன!// :-)

    உற்சவரின் மேல் மழைத்துளி விழக்கூடாது என்றொரு ஐதிகம் இருக்கிறது. அப்படி தப்பித்தவறி மழைத்துளி விழுந்தால் முன்மண்டபத்திலேயே உற்சவரை இருத்தி சாந்திகள் செய்த பின்னரே உள்ளே கொண்டு செல்வார்கள். ஏன் இந்த ஐதிகம் என்று தெரியவில்லை.

    //ஆக எனக்கும், பெருமாளுக்கும் தொப்புள் கொடி உறவு!//

    அருமை. மிக அருமை. இதுவரை பலமுறை இந்தப் பாசுரத்தைப் படித்திருக்கிறேன். பத்மநாபன் என்பதற்கும் பொருள் பலமுறை படித்திருக்கிறேன்; சொல்லியிருக்கிறேன். ஆனால் இந்தத் தொப்புள் கொடி உறவு மனதில் தோன்றியதில்லையே.

    ReplyDelete
  23. //அந்தப் படம் ஸ்ரீ 'வேணு கோபால'ன் ரொம்பப் பிடிச்சிருக்கு.( அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணமும் இருக்கு!)
    //

    எனக்குத் தெரியுமே எனக்குத் தெரியுமே. :-))

    துளசியம்மைக்கு அழகிய 'மணவாளனை'ப் பிடிக்காமல் போகுமா? :-)

    ReplyDelete
  24. // குமரன் (Kumaran) said...
    நீங்கள் இரவியின் பெருமைகளை எழுதியிருக்கிறதைப் படிச்சவுடனே ஆதித்ய ஹ்ருதயத்திற்குப் பொருள் சொல்லவேண்டும் என்ற ஆவல் மிகுகிறது//

    ஆகா, குமரன்! உங்கள் மனதில் படபடன்னு விடயங்கள் உதிக்கின்றனவே. நீங்க என்ன ரோகிணி நட்சத்திரமோ? இல்லை விசாகம்??

    //பஞ்சாயுதங்களுடன் நம் பரமனைப் பார்த்தாலே எனக்கு திருமாலிருஞ்சோலையாம் எங்கள் அழகர் கோவிலில் நின்றிருக்கும் சுந்தரத் தோளுடையானின் நினைவு தான் வருகிறது//

    தரிசனம் செய்து மகிழ்ந்துள்ளேன் குமரன். குடந்தை சாரங்கனும் அவ்வாறே!

    //உற்சவரின் மேல் மழைத்துளி விழக்கூடாது என்றொரு ஐதிகம் இருக்கிறது. அப்படி தப்பித்தவறி மழைத்துளி விழுந்தால் முன்மண்டபத்திலேயே உற்சவரை இருத்தி சாந்திகள் செய்த பின்னரே உள்ளே கொண்டு செல்வார்கள். ஏன் இந்த ஐதிகம் என்று தெரியவில்லை//

    ப்ராயச்சித்த அபிஷேகம் என்று பெயர்! ஆகம வல்லுநர்களைக் கேட்க வேண்டும்! இன்னொன்று தெரியுமா குமரன்? திருமலையில் 5 உற்சவர்கள். அதில் ஒருவர் வேங்கடத்துறைவார். அவர் மேல் சூரிய ஒளி விழக்கூடாது என்றொரு ஐதிகம் இருக்கிறது.

    //அருமை. மிக அருமை. இதுவரை பலமுறை இந்தப் பாசுரத்தைப் படித்திருக்கிறேன். ஆனால் இந்தத் தொப்புள் கொடி உறவு மனதில் தோன்றியதில்லையே.//

    நன்றி, நான் சொல்ல வேண்டியது பாசுரப்படிகளுக்குத் தான்! மணிப்ப்ரவாளம் தான் கொஞ்சம் பேஜார் பண்ணும் :-)))

    ReplyDelete
  25. // குமரன் (Kumaran) said...
    எனக்குத் தெரியுமே எனக்குத் தெரியுமே. :-))
    துளசியம்மைக்கு அழகிய 'மணவாளனை'ப் பிடிக்காமல் போகுமா? :-)//

    ஹா ஹா! குமரன். நானும் யூகித்து விட்டேன்! டீச்சரும் தனி மடலில் ரகசியத்தை உரக்கச் சொல்லி விட்டார்கள்!! :-))

    ReplyDelete
  26. //ஏதோ குழந்தைகளுக்குச் சோறூட்டத் தான் அம்புலி மாமா என்றால், காதலில் கூட, 'கண்ணே அந்த நிலவு உனக்கு வேணுமா?', 'நிலவின் பிறை போல நெற்றி', 'நிலவைப் பாத்து வானம் சொன்னது என்னைத் தொடாதே' ன்னு
    இப்படி எங்கும் நிலா, எதிலும் நிலா! இந்தப் பதிவை எத்தனை காதலர்கள் படிப்பீங்க. யாராச்சும் ஒருத்தர் சொல்லுங்களேன் இந்த நிலா mania பற்றி!//

    கண்ணபிரான்

    அது என்னவோ நம்மூர் கவிஞர்கள் நிலவை பெண்ணோடு ஒப்புமைப்படுத்துகிறார்கள்.ஆனால் நம் புராணங்களில் சந்திரன் ஒரு ஆணாக தான் கருதப்படுகிறான்.

    இது பற்றி ஒரு சுவாரசியமான கதை என்னன்னா ராமன் சூரிய குலத்தில் பிறந்ததும் சந்திரனுக்கு முகம் வாடிடுச்சாம்.தன்னோட போட்டியா இருக்கற சூரியனுக்கு இப்படி ஒரு பெருமையான்னு கோவிச்சுகிட்டு ராமர் கிட்ட போயி அழுதாராம்.உடனே ராமர் சூரிய குலத்தில் பிறந்தா என்ன?உன் பேரை என் பேரோட சேத்துக்கறேன்னு சொல்லிட்டு "ராமச்சந்திரன்" அப்படின்னு பேர் வெச்சுகிட்டாராம்.

    சூரிய குலத்தில் பிறந்த ராமன் , ராமச்சந்திரன் ஆன கதை இதுதான்.

    அப்புறம் சந்திரன் புராணப்படி லவ்ஸில் பட்டையை கிளப்புகிறவர்.27 மனைவி.லட்சுமியின் அண்ணன் வேற.

    ReplyDelete
  27. // செல்வன் said...
    நம்மூர் கவிஞர்கள் நிலவை பெண்ணோடு ஒப்புமைப்படுத்துகிறார்கள்.ஆனால் நம் புராணங்களில் சந்திரன் ஒரு ஆணாக தான் கருதப்படுகிறான்.//

    செல்வன் வாங்க, 'காதலர்கள்' யாராச்சும் வந்து சொல்லலையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன். நீங்க தைரியமா வந்து சொன்னதுக்கு மிக்க நன்றி :-))))

    //இது பற்றி ஒரு சுவாரசியமான கதை என்னன்னா..... பேரை என் பேரோட சேத்துக்கறேன்னு சொல்லிட்டு "ராமச்சந்திரன்" அப்படின்னு பேர் வெச்சுகிட்டாராம்.//

    ஆகா இது நான் கேள்விப் படாத கதையாத் தானே இருக்கு! அடுத்த காலட்சேபத்துல மறக்காம யூஸ் பண்ணிக்கணும் :-))

    அப்பறம் ரவிச்சந்திரன்னும் சொல்றாங்களே, சரி ரவியும் சந்திரனும் பிரெண்ட்ஸ் ஆங்காட்டியும் நினைச்சேன்...நீங்க வந்து சொன்னாப்புறம் தானே தெரியுது :-)))

    //அப்புறம் சந்திரன் புராணப்படி லவ்ஸில் பட்டையை கிளப்புகிறவர்.27 மனைவி//
    27 தானா? நட்சத்திரங்க தொகையை கொஞ்சம் இன்கிறீஸ் பண்ணச் சொல்லுங்ப்பா!

    //லட்சுமியின் அண்ணன் வேற//
    ஓ பெருமாளுக்கு மைத்துனன் பாசமோ...இப்ப புரியுது சாமி! :-))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP