திருமலை விழா 8 - தேர் திருவிழா / குதிரை வாகனம்
காலை - தேர் திருவிழா (ரதோற்சவம்)
"தேரு வருதே" - இதை அப்படியே திருப்பிப் போடுங்கள்! என்ன வந்தது?
அதே, "தேரு வருதே"!
ஆங்கிலத்தில் இதை Palindrome-ன்னு சொல்லுவாங்க! தமிழில் இதற்குப் பெயர் என்னன்னு தமிழ் ஆய்ந்த யாராச்சும் வந்து சொல்லுங்கப்பா! (இலக்கணத்தில் ஒரு வகையான அணி என்று சொல்லலாமா?)
இன்று காலை திருமலையில் தேர் திருவிழா. வாகனங்கள் போதாதா? அம்மாடியோவ்! இவ்வளவு பெரிய ஆழித்தேரா? ஏன்?
வாகனங்களைத் தேர்ந்த உடல்வலு உள்ளவர்களும், நடையாட்டம் பழகியவர்களும், கோவில் ஊழியர்களும், மடைப்பள்ளி பட்டர்களும், பெரும்பாலும் ஆண்களே சுமக்கின்றனர்! இவர்களை ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று அழைப்பர்.
ஆனால் ஆழித்தேர் அப்படியில்லை!
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பிரபலங்கள், சாமான்யர், மடாதிபதிகள், தலைவர்கள், ஆன்மீக அறிஞர்கள் என சமுதாயத்தில் உள்ள எவரும் வடம் பிடித்து இழுக்க முடியும்.
பலம் தேவையில்லை! பாசமே தேவை!!
ஒருவர் இழுக்க முடியவில்லை என்றால் இன்னொருவர் ஈடு கொடுக்கிறார்.
Complementing each other என்று சொல்லுவார்கள்!
நான் இழுத்ததால் தான் ஓடியது, நீ இழுத்ததால் தான் ஓடியது என்ற பேச்சுக்கு எல்லாம் இடமேயில்லை!
இப்படி ஊர் கூடித் தேர் இழுக்க, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற சமூகப் பாடத்தை எந்தக் கல்லூரிக்கும் செல்லாமலேயே கற்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------
(சுவாமியின் தேர் இழுக்கும் போது ஒலிக்கும் பாடல் இதோ...அன்னாமாச்சார்யரின் 'அதிவோ அல் அதிவோ ஸ்ரீஹரி வாசமு' என்ற பாடல் தான்!!
வேண்டுமானால்,இந்த வரிகளின் மீது க்ளிக் செய்யுங்க; புது விண்டோவில் திறக்கும்; ஒலி அளவைச் சிறிதாகவே வைத்துக் கொள்ளுங்கள்; கோவிந்த கோஷம் பாடலின் இடையே ஒலிக்கும்)
------------------------------------------------------------------------------------------------
ஆழித் தேர் பூக்களாலும், தொங்கல் கொடிகளாலும், பட்டுத் துணிகளாலும், வாழை மரங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. உச்சியில் தங்கக் குடை. துவாரபாலகர்கள் ஜயன், விஜயன் இருவரும் தேர் முகப்பில்! குதிரைப் பொம்மைகள் ஏழு தேரின் முன்னால்!
சுவாமியையும் தேவியரையும் தேரில் ஏற்றியாகி விட்டது. பட்டர்கள் சாமரம் வீசுகின்றனர்! ஆரத்தி! மேள தாளங்கள் முழங்க, கொம்புகள் ஊத, கொடி அசைத்து விட்டார் பட்டர். இதோ தேர் நகருகிறது! பெருமான் ஆடி ஆடி வருகிறான்!!
சுவாமியின் முன்னால் அருளிச்செயல் குழாம் என்னும் பெரிய திவ்யப்பிரபந்த கோஷ்டி! அக்கோஷ்டி தமிழ்ப் பாசுரங்கள் முழங்கி முன்னே செல்ல, தமிழ் செல்லும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், தேரில் பெருமான் ஓடோடி வருகிறான்!! சுவாமியே ஓடும் போது, அவன் பின்னால் வரும் சிறிய வேத கோஷ்டி சும்மா இருக்க முடியாதே! பகவான் தமிழின் இனிமையில் மயங்கி, எங்கே நம்மை விட்டு ஓடி விடுவானோ, என்று அக்கோஷ்டியும் ஓடி வர, ஆகா 'ஓடுவார், விழுவார், உகந்து ஆலிப்பார்' தான் போங்களேன்!
(இதனால் வேதங்களைக் குறைத்து மதிப்பிட்டதாக யாரும் வருந்தி விடக் கூடாது!
வேதங்களை மொழிந்தவனே அவன் தானே? அவற்றைக் காக்கவும் மச்சமாய் (மீனாய்) அவன் வரவில்லையா? இரண்டுமே அவன் கண்கள் தான்!
அவன் சொன்னது தான் வேதம்.
அதில், தன்னைத் தானே, தன் பெருமைகளைச் சொன்னாற் போல் ஆகி விட்டது பகவானுக்கு!
பார்த்தான்...தீந்தமிழ் ஆழ்வார்களை அனுப்பி, அவர் தம் பாக்களால் பாடக் கேட்டான்.
தற்பெருமை போய், தமிழால் பெருமை!
அதனால் தமிழுக்குக் கடன் பட்டான்; தமிழுடன் உடன் பட்டான்!
'தமிழ் இறைவனுக்கும் முன்னால்' என்று நண்பர் குமரன், இது பற்றிச் சுவையாக முன்பே பதிந்துள்ளார். இங்கே காணலாம்!)
பேசியது போதும்! வாருங்கள் வடம் பிடிக்கலாம்...
கையில் வடத்தை (கயிறை) நல்லா பிடிச்சுக்கோங்க! ஆங்...அப்பிடித்தான்...சுவாமியைப் பாத்துக்கிட்டே, அப்படியே நடந்துக்கிட்டே, இழுங்க!
ரொம்பல்லாம் மூச்சு முட்ட இழுக்காதீங்க!
சும்மா அப்பிடி நடந்துகிட்டே இழுங்க, போறும்!
உங்கள மாதிரியே நிறைய பேர் இழுக்குறாங்க, திரும்பிப் பாருங்க...ஆட்டோமாட்டிக்கா நகரும்! ஆங் அதே அதே....
இப்ப வந்துடுச்சு வித்தை....அப்பிடியே மெயின்டைன் பண்ணுங்க!
அப்படியே வெக்கப்படாம சொல்லுங்க, "ஏடு கொண்டலவாடா, வேங்கட ரமணா..கோவிந்தா!...கோவிந்தா!!"
தேருக்குள், சுவாமியின் முன் அழகு | பின் அழகு |
(சுவாமியின் தேர், மாட வீதிகளில், எட்டு இடங்களில் நிற்கும்.
அந்த அந்த திசைக்குரிய பரிவார தேவதைக்கு, அன்னபலி சார்த்தப்பட்டு, ஆரத்திக்குப் பின் மீண்டும் நகர ஆரம்பிக்கும்.
மக்கள் உப்பும் மிளகும் தேர்க்கால்களில் தூவ, தேர் நிலைக்கு வந்துசேரப் பல மணி நேரம் ஆகும்).
மாலை - குதிரை வாகனம் (அஸ்வ வாகனம்)
மாலையில், மலை குனிய நின்றான் பெருமாள், தேரில் வந்த களைப்பு தீர, ஊஞ்சல் ஆடுகிறான்! பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசனான பெருமாள், கல்கி ரூபத்தில், தங்கக் குதிரை (ஆடல் மா) மேல் அமர்ந்து நகர் உலா வருகிறான்!
ராஜ அலங்காரம். தலையில் மடிப்பு வைத்துத் தைத்த தலைப்பாகை! கையில் சாட்டை! வாள், கேடயம்! பரி மேல் வரும் பரி மேல் அழகன்! காணக் கண் கோடி போதுமோ?
இன்று,
திருமங்கை ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.
(திருமங்கை ஆழ்வார், கலியன் என்று போற்றப்பட்ட குறுநில மன்னர். பெருநிலம் வேண்டிப் பெருமாளைச் சரண் புகுந்தார்.
திருவைணவத்தை ஒரு மக்கள் அமைப்பாக அமைத்துக் கொடுத்தவர்.
பரகாலன், பெருவீரன் என்று அவரைக் குறிப்பிட்டாலும், உள்ளத்தை உருக்கும் பலப்பல காதல் கவிதைகளைப் பொழிந்துள்ளார்.
ஆடல்மா என்பது அவர் குதிரை. இன்று குதிரை வாகனம் ஆதலால், அவர் பாடல் ஒன்றைப் படிப்போம்)
தெரியேன் பாலகனாய்ப் பல தீமைகள் செய்துவிட்டேன்,
பெரியேன் ஆயினபின் பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்,
கரிசேர்ப் பூம்பொழில் சூழ் கன மாமலை வேங்கடவா,
அரியே வந்துஅடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே.
(கரி=யானை; பொழில்=பூங்கா)
பாலகனான புரியாத பருவத்தில், தெரியாமல் பல தீமைகளைச் செய்து, 'விட்டேன்'.
புத்தி பின்னர் வந்தாலும், இறை அன்பு வரப் பெறவில்லை; அதனால்,
பெரியவன் ஆன பின்னர், நல்லவர் அல்லாத பிறர்க்கு உழைத்தே ஏழையானேன்!
யானைகள் விளையாடும் பல பூங்காக்களை உடைய வேங்கட மலையானே,
ஹரியே, உன்னை வந்து சரண் அடைந்தேன்! அடியேனை ஆட்கொண்டு அருளே!!
பிரசாத ஸ்டால்:
வாங்க வாங்க! நம்ம துளசி டீச்சர் தான் இன்னிக்கி பிரசாத ஸ்டால் இன்சார்ஜ்.
அவராப் பாத்து உங்களுக்குப் போட்டுக் கொடுப்பாரு. அதுவரை வரிசையில் பொறுமையா இருங்க பக்த கோடிகளே! பார்சல் பொட்டலம் எல்லாம் கேக்கக் கூடாது. அதெல்லாம் நீங்களே தான் பாத்துக்கணும்!!
அந்தரி ரண்டி; ப்ரஸாதம் தீஸ்கோண்டி!
உண்ணும் பிரசாதம் வடை, சரி.
ஆனா அது மட்டும் தான் பிரசாதமா?
இப்ப எல்லாம் திருமலையில் விருக்ஷப் பிரசாதம் (செடிகொடி பிரசாதம்) ரொம்பவே பிரபலம்!
துளசி, பவழமல்லி, இருவாட்சி, தவனம், மரு என்று பல செடிகள், திருமலைத் தோட்டத்தில் தருகிறார்கள். விஜயா வங்கியில் கேட்டு, விவரம் பெறலாம்.
சில செடிகள் அவ்வளவா தண்ணீர் தேவைப்படாதவை; வளர்ப்பதும் எளிது!
இது, வீட்டுக்கும் நாட்டுக்கும், வேங்கடத்தான் அருளால், நல்லது தானே!
ஆகவே செடிகொடி பிரசாதமும் பெற்றுக் கொள்ளுங்கள் பக்தர்களே!
நாளை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் இறுதி நாள்;
ஏழுமலையான் பிறந்த நாள்!! (அவதார நாள்)
ஷ்ரவண நட்சத்திரம்! சக்கரத்தாழ்வார் நீராட்டு!
அவசியம் வாங்க! அமுதனைப் பாத்து போங்க!
தோ........ ஓடிவந்துட்டேன்.
ReplyDeleteநாந்தான் இன்னிக்கு 'ஸ்டால் இன்சார்ஜ்'னு தெரியாமப் போச்சே. அதுவும் இன்னிக்கு
ஸ்பெஷல்....? வடையாமே!!!!! ஆஹா........
இபடி வந்து எல்லாரும் லைன்லே நில்லுங்கப்பா. எனக்குப் போக மீதி எதாவது
இருந்தா விநியோகம் செய்யலாம்:-)))))
ரண்டி ரண்டி ரண்டி:-)))))
இந்த 'கரி சேர் பூம்பொழில்' ரொம்ப ஜோரா இருந்துருக்கும். பதிவுலேயும்
ஒரு படத்துலே அஞ்சு கரிகள் இருக்கே. அதுவும் பிடிச்சிருக்கு.
ஏடு கொண்டலவாடா......... வெங்கட்ட ரமணா...........
கோவிந்தா கோவிந்தா.........
நான் வரிசையில் நிற்கிறேன்.
ReplyDeleteவாங்க டீச்சர்!
ReplyDelete//எனக்குப் போக மீதி எதாவது
இருந்தா விநியோகம் செய்யலாம்:-)))))//
பாத்துங்க டீச்சர், பக்தர்கள் எல்லாம் ஆஜானுபாகுவா இருக்கா போலத் தெரியுது. ஆமா நீங்க விருக்ஷப் பிரசாதத்தைத் தானே mean பண்ணீங்க! எவ்ளோ வேணும்னாலும் எடுத்துக்குங்க!
ஆனா வடையில் வேண்டாமே தடை!
:-)))
//இந்த 'கரி சேர் பூம்பொழில்' ரொம்ப ஜோரா இருந்துருக்கும்//
உண்மை தான் டீச்சர்.
ஆகா அடுத்த பதிவுக்கு எடுத்துக் கொடுத்திட்டீங்க! நன்றி!
// வடுவூர் குமார் said...
ReplyDeleteநான் வரிசையில் நிற்கிறேன்//
குமார் வாங்க, இன்னிக்கி அவ்வளவா கூட்டம் இல்ல...எல்லாம் தேர் இழுத்த களைப்பு போல!
எல்லா வடையும் டீச்சருக்கும், உங்களுக்கும் தான் போல இருக்கு!
:-)) அள்ளிக்கோங்க!
தாயேதந்தையென்றும் தாரமேகிளைமக்களென்றும்,
ReplyDeleteநோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோராசையினால்,
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா.,
நாயேன்வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே
கண்ணன் போதுமா பதிகம் போட்டு தண்டனிட்டேன்.இதுவரை எங்களை ஆண்டவ்னுக்கு மிக அருகில் அழைத்துச் சென்ற நீங்கள் இப்பொழுது அவனுக்கு சமானமாகவே ஆக்கிவிட்டீர்கள்.ஆவி உனக்கு அமுது என்றபடி அமுது உனக்கு படம் எங்களுக்கு என்று போட்டு.மிகச் சிறந்தது நல்ல காரியத்தில் ஈடுபடுதல். அதைவிட நல்லது மற்றவர்களையும் அதி ஈடுபடுத்துவது,ஆண்டாள் பிராட்டி மாதிரி செய்துள்ளீர்கள். அந்த வெங்கடேஸ்வரன் மங்களத்தை கொடுக்கட்டும். நான் தினமும் வந்து தரிசனம் செய்து கொண்டுதான் இருந்தேன் பதிவேட்டில் குறியிடவில்லை அவ்வளவுதான்.
ஆஹா. இதென்ன கூத்து? கரிசேர் பூம்பொழிலா? இதென்ன வம்பா போச்சு? இன்னைக்கு எங்க போனாலும் கரி கரிங்கறாங்க? ஓ. இது வேற கரியா? :-)
ReplyDeletePalindromeக்கு தமிழ் பெயர் இருக்கே. என்னன்னு சட்னு நினைவுக்கு வரலை.
ReplyDeleteதேர்திருவிழா ஏன் என்கிற விளக்கம் மிக நன்று. இத்தனை வாகனங்களும் இருக்க பின்னர் தேரும் ஏன் என்று இயைந்து கூறியிருப்பது புதுமையான விளக்கம். இதுவரை இந்தப் பார்வையில் எண்ணிப் பார்த்ததில்லை.
திருவாய்மொழி படித்த அளவிற்கு திருமங்கையாழ்வார் பாசுரங்களைப் படித்ததில்லை. ஆனால் ஆங்காங்கே படிக்கக் கிடைத்தக் கலியன் பாசுரங்கள் அவருடைய பாசுரங்கள் எல்லாவற்றையும் படிக்கத் தூண்டுகின்றன. விரைவில் இறைவன் அருளால் நடக்கும் என்று நினைக்கிறேன்.
துளசி அக்கா. என்ன தான் எங்க வீட்டு வடை மொறு மொறுன்னு இருந்தாலும் திருவேங்கடவன் தேர்த்திருவிழா பிரசாத வடை போல வருமா? :-) நாங்க மூணு பேர் வந்திருக்கோம். மூன்றோ, ஆறோ, பன்னிரண்டு வடைகளோ தாருங்கள்.
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteநாயேன் வந்தடைந்தேன் நல்கியாளென்னைக்கொண்டருளே//
வாங்க திராச; அருமையான பாசுரம்!
பாலாவும் குறிப்பிட்டார்! பாசுர மழைக்கு உங்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!!
//ஆவி உனக்கு அமுது என்றபடி அமுது உனக்கு படம் எங்களுக்கு என்று போட்டு... அந்த வெங்கடேஸ்வரன் மங்களத்தை கொடுக்கட்டும்.//
நன்றி ஐயா!
//நான் தினமும் வந்து தரிசனம் செய்து கொண்டுதான் இருந்தேன் பதிவேட்டில் குறியிடவில்லை அவ்வளவுதான்//
நீங்கள் தரிசித்து மகிழ்ந்தது எனக்கும் மிக்க மகிழ்ச்சி!!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஆஹா. இதென்ன கூத்து? கரிசேர் பூம்பொழிலா? இதென்ன வம்பா போச்சு? இன்னைக்கு எங்க போனாலும் கரி கரிங்கறாங்க? ஓ. இது வேற கரியா? :-) //
வாங்க குமரன்; "இங்கு கரி பூசப்படும்"-ன்னு சொல்ல அவசியமே இல்லையே! கரிக்குப் பதில் மொட்டைத் தலையில் சந்தனம் பூசப்படும்ன்னு வேணும்னா சொல்லலாம்!:-))
ஆக ஏதோ ஒண்ணு பூசாம விட மாட்டீங்களேன்னு நீங்க அங்க சொல்றது எனக்கு இங்க கேக்குது! :-)
// குமரன் (Kumaran) said...
ReplyDeletePalindromeக்கு தமிழ் பெயர் இருக்கே. என்னன்னு சட்னு நினைவுக்கு வரலை.//
எனக்கும் தான் குமரன். இந்த நேரம் பாத்து, ஜிரா எங்கன்னும் தெரியல!
//தேர்திருவிழா ஏன் என்கிற விளக்கம் மிக நன்று. இத்தனை வாகனங்களும் இருக்க பின்னர் தேரும் ஏன் என்று இயைந்து கூறியிருப்பது புதுமையான விளக்கம். இதுவரை இந்தப் பார்வையில் எண்ணிப் பார்த்ததில்லை//
நன்றி குமரன்!
//திருவாய்மொழி படித்த அளவிற்கு திருமங்கையாழ்வார் பாசுரங்களைப் படித்ததில்லை. ....அவருடைய பாசுரங்கள் எல்லாவற்றையும் படிக்கத் தூண்டுகின்றன. விரைவில் இறைவன் அருளால் நடக்கும் என்று நினைக்கிறேன். //
நிச்சயம் நடக்கும் குமரன்!
கலியன் பாசுரங்களில் நம்மாழ்வார் போல் தத்துவக் கருத்துகள் அவ்வளவாக வராவிட்டாலும், அவர் நம் சார்பாகவே பேசுவது போல் தோன்றும்.
அன்றாட வாழ்வில் மனிதர் செய்யும் பாவங்கள், தடுமாற்றங்கள் எல்லாம் ஒளிவு மறைவு இல்லாது தம் மேல் ஏற்றிக் கொண்டு பாடி விடுவார்!
நயத்துக்காக வைணவ அருணகிரி என்று கொள்ளலாமோ? :-))
//துளசி அக்கா. என்ன தான் எங்க வீட்டு வடை மொறு மொறுன்னு இருந்தாலும் திருவேங்கடவன் தேர்த்திருவிழா பிரசாத வடை போல வருமா? :-) நாங்க மூணு பேர் வந்திருக்கோம். மூன்றோ, ஆறோ, பன்னிரண்டு வடைகளோ தாருங்கள்//
டீச்சர், குமரன் ஆழமான பொருளில் பேசுகிறார். கவனிக்க வேண்டிய விடயம் என்னன்னா "எங்க வீட்டு வடை மொறு மொறுன்னு"!
அடுத்த முறை அவர் வீட்டுக்கு போகும்போது மறக்காம நேயர் விருப்பம் கொடுத்துடணும்; மறந்துறாதீங்க!! :-)))
பன்ணிரண்டு வடைகள் கொடுத்துடுங்க டீச்சர். 2 அவர்களுக்கு, 10 அவரின் திருமகளார்க்கு!
(அதுக்காக, என்னடா recommendation ல்லாம் பலமா இருக்குன்னு நீங்க தப்பா நினச்சிக்க வேணாம் :-))
Hai, KRS. Good afternoon. Very nice. Keep it up. by Tholkappiam
ReplyDelete