அமெரிக்கப் பெருசுகள் சாப்பிட்ட தீபாவளி மைசூர்பாக்
வாங்க; அனைவருக்கும் குதூகலம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
ஷாம்பூ குளியல் முடிஞ்சு, புது ஜீன்ஸ், மிடி எல்லாம் போட்டுக் கொண்டு, பட்டாசு எல்லாம் வெடிச்சாச்சா?
குட்டிகள் அடிக்கும் கும்மாளம், வெடிச்சத்தத்தை விடப் பெரிதாகக் கேட்கிறதா?
இந்த ஒரு பண்டிகை, நம்ம நாடு முழுமைக்கும் கொடுக்கும் சந்தோஷமே தனி தான்!
நம்ம நாடுன்னு இல்லாம, புலம் பெயர்ந்த அனைத்து இந்தியர்கள் வீட்டிலும், முடிஞ்ச வரை களை கட்டுது!
நண்பர்கள் குடும்பங்களோடு pot luck கொண்டாட்டம், தமிழ்ச் சங்க விழா இப்படி ஏதாச்சும் ஒண்ணு!
வண்ண மத்தாப்பு கூட கொளுத்தாலாம் என்றால் பாருங்களேன்!
நியூயார்க்கில் Jul 4 Independence Day போது, நடைபாதைக் கடைகளில் கம்பி மத்தாப்பு விற்பார்கள்;
அதை வாங்கி, குருவி போல (பாதுகாப்பாக) சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
தீபாவளி அன்று, வீட்டு வாசலுக்கு போய், தண்ணி பக்கெட் ஒன்றைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு,
யாருக்கும் தெரியாமல், பயந்து பயந்து, மத்தாப்பு கொளுத்தலாம்! :-))
மீண்டும் வீட்டுக்குள் வந்து, இணையத்தில் கிடைக்கும் வெடிச்சத்தத்தை,
ஹோம் தியேட்டரில் உரக்க வைத்து, ஹைய்யா...பட்டாசு வெடிச்சாச்சுன்னு ஒரு அல்ப சந்தோஷம்!
ஆனா, என்ன தான் இருந்தாலும், நம் அம்மா, அப்பா, தங்கை, தம்பி, குழந்தைகள், குடும்பம், நண்பர்கள்-ன்னு சேர்ந்து கொண்டாடுற சந்தோஷம் வருமா?
ஏதோ வேற தேசம் வந்ததனால நமக்குத் தான் இப்பிடின்னா,
நம்மூரிலேயே யாரும் இல்லாமல் தனியாகக் கொண்டாடும் சிறு குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் இருக்கத் தான் செய்கின்றனர்;
ஆதரவுக்கு ஆட்கள் இருந்தும், காலத்தின் கோலத்தாலோ நமக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்றோ, தனியே வாழும் பெற்றோர் கூட, இப்படித் தான்.
அவர்களுக்குத் தீபாவளி என்பது just any other day!
இவர்கள் முகங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமா?
அந்நியத் நாட்டுத் தனிமை நமக்குச் சில பாடங்களையும் சேர்த்தே தான் கற்றுத் தருகிறது!
அந்நியம் போய் அந்'நேயம்' வளர்க்கிறது மனத்தில்!!
அப்படித் தான் சென்ற ஆண்டு, ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. நாம் ஏன் முதுமையில் தனித்து வாழும் சீனியர்களைப் போய் சந்திக்கக்கூடாது?
அமெரிக்கா தான்! தீபாவளி பற்றி அம்முதியவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!!
பணம் சற்று இருந்தாலும், பாசம் காணாது வாழும் சிலரை ஏதோ கிராமத்து தாத்தா பாட்டி போல் நினைத்துக் கொள்ளலாமே!
தீபாவளி அன்று கொஞ்சம் பலூன்கள், மலர்கள், இனிப்புகள், நம் குடும்பப் படங்கள், இவற்றுடன் போய்க் கொண்டாடுவதை வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்? முயன்று தான் பார்ப்போமே!
SeniorCorps.org இதற்கு மிகவும் உதவுகிறது.
நியுயார்க், லாங்க் ஐலேண்டில் உள்ள Court Square முதியோர் இல்லம் சென்றோம்.
கம்ப்யூட்டர்/இன்டெர்நெட் பயன்படுத்தும் போது ஏற்படும் சில சிக்கல்களைச் சமாளிப்பது எப்படி என்று சும்மா கலந்துரையாட வருவதாகப் பேச்சு.
இல்லப் பொறுப்பாளரைச் சந்தித்து மேலும் விளக்கினோம்; மிகவும் மகிழ்ந்தார் அந்தப் பெண்மணி.
உள்ளே சென்றால், ஒரு பேரமைதி. மிகவும் சுத்தமாக இருந்தது. மொத்தம் 28 முதியவர்களாம். அதில் ஒரு குஜராத்தி தம்பதியரையும் பார்த்தோம்.
எல்லாருடனும் சென்று கைகுலுக்கி விட்டு, ரோஜாப்பூ ஒன்னு கொடுத்து விட்டு, சும்மா ஜாலியாகப் பேசிக் கொண்டு இருந்தோம்.
ஈராக், போப்பாண்டவர், ஃபுட்பால் இன்னும் என்னன்வோ உளறிக் கொட்டினேன். வாய் விட்டுச் சிரித்தோம்.
ஒரு சிலர் இமெயிலில் நிறைய படங்கள் அனுப்புவது பற்றிக் கேட்டார்கள்.
நம்ம அதிமேதாவித்தனத்தைக் காட்டிவிட்டு (:-)), அப்படியே flicker-இல் சேமிப்பது பற்றி எல்லாம் சொன்னேன். சாட்டிங், வெப்காம் பற்றியெல்லாம் பேச்சு திரும்பியது.
இந்த வயதிலும் தங்கள் துக்கத்தையும், இயலாமையும் மறைத்துக் கொண்டோ, அல்லது உதறி்விட்டோ, மிகவும் சகஜமாக இவர்களால் பேசவும் பழகவும் முடிகிறதே!
நம்மால் அலுவலகத்தில் மூட்-அவுட் ஆகாமல், இது போல் இருக்க முடியுமா? என்னையே கேட்டுக் கொண்டேன்.
தீபாவளி பற்றிச் சும்மா கொஞ்சமா எடுத்துச் சொன்னேன் அமெரிக்கப் பெருசுகளுக்கு (பெரியவர்களுக்கு!). இன்டெர்நெட் youtube-இல் கொஞ்சம் தீபாவளி பிலிம் காட்டினேன்.
நல்ல வேளை, அந்த குஜராத்தி தம்பதியர் இருந்தனர். அவர்கள் ஒரு காலத்தில் அவங்க எப்படி எல்லாம் தீபாவளி கொண்டாடுவார்கள் என்பது பற்றி எல்லாம் எல்லாருக்கும் எடுத்துச் சொன்னார்கள்.
இப்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால், அன்று தீபாவளி என்றே தெரியாது என்று அவர்கள் சொல்லும் போது, அவர்கள் கண்களில் கண்ணீர் இல்லை. வேறு ஏதோ ஒரு....
மதியம் ஆகி விட்டது; அப்புறம் ராஜ்போக்-இல் முன்பே வாங்கிச் சென்ற மெல்லிய மைசூர்பாக், காஜூகத்லி, போளி எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டோம்.
கூடவே சாலட், பாஸ்டா, சிக்கன், சான்ட்விச் என்ற அவர்களின் வழக்கமான உணவு. போளி செம ஹிட்; பற பற எனப் பறந்தே விட்டது.
மைசூர்பாக்கை ஒரு பாட்டி கடி கடிக்க, ஐயோ என்று வேண்டிக் கொண்டேன் :-) ஆனால் மிக மிருதுவாகத் தான் இருந்தது.
எல்லாரும் ஜாலியாகக் கைகுலுக்கி விடைபெற்றோம். ஒரு பிரேசில் முதாட்டி எனக்குப் படம் ஒன்றை இமெயிலில் அனுப்புவதாகச் சொன்னார்!
'சரிப்பா, ஊருக்குப் போயி கடுதாசி போடுறேன்', என்று அந்த அம்மா சொல்வது போலத் தோன்றியது எனக்கு!
திரும்பி வீட்டுக்கு வரும் வழியில், இந்தியா கூப்பிட்டுத் தொலைபேசினேன். எல்லாரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.
தங்கையின் சுட்டிப் பெண் அவள் வீர தீர சாகசங்களை மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்;
பெருமாள் சங்கு சக்கரத்தை இன்று மட்டும் தீபாவளி அதுவுமாக அவள் கையில் எடுத்துக்கொண்டு சுற்றினாளாம்; கதை சூப்பராகச் சொன்னாள்.
அம்மா வழக்கம் போல், தீபாவளி பட்சணங்களை வேலைபார்க்கும் பணியாளர்கள் வீட்டுக் குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு வந்தார்களாம்.
அது சரி, அவரவர், அவர்களால் முடிந்ததைச் செய்து கொண்டு இருப்பதனால் தானே உலகம் ஓடுகிறது!
தீபாவளித் திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பினோம்.
மாலை கோவிலுக்குச் செல்லலாம் என்று எண்ணம். பார்ப்போம். நண்பரின் இல்லத்துக்கும் செல்ல வேண்டி உள்ளது.
இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பவே ஸ்வீட் & ஸ்பீட். நாம் கூகுள் என்றால், அவை கூகுள் வீடியோ என்று சொல்லிக் கலக்கதுங்க.
அடிப்படை நம்பிக்கைகள் மாறி வரும் உலகில், குழந்தைகளுக்குக் கூட seeing is believing; walk the talk தான். நம்மையே ஆயிரம் எதிர்க் கேள்விகள் வேறு!
பிஞ்சிலேயே சில நல்ல செயல்களைக் கண்ணிலும், மனதிலும் விதைப்பது, வளர்ந்த பின்னர் வரப்போகும் வணிக உலகில், ஒரு கொழுகொம்பாக இருக்கும் அல்லவா?
இப்பதிவையும் ஆன்மீகம் category-இலேயே பதிவு செய்கிறேன்.
எண்ணங்கள் செயல்கள் ஆனால் சிறப்பு தான்;
ஆனால் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களே சிறப்பு தானே!
அந்த வரையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. அதான் இதை எழுதினேன்.
மீண்டும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் குதூகலம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!!
நரகாசுரனோ இல்லை நம்பாத கதையோ, எதுவாயினும்,
'அகல் தீபம்' மட்டும் அல்லாது 'அகத் தீபங்களும்' ஏற்றி வைப்போம் வாருங்கள், இந்த நன்னாளில்!
திருவேங்கடமுடையான் திருவருளால், தீபாவளி இன்னும் ஜொலிக்கட்டும்! Happy Diwali !!
கண்ணபிரான், தீபாவளி வாழ்த்துக்கள். இந்த இளம் வயதில் கூட ஆன்மிகத்தில் கலக்குகின்றீர்கள். நல்ல சமூக சேவை செய்கிறீர்கள் நன்று கீப் இட் அப்
ReplyDeleteமனதை நெகிழ வைத்த தீபாவளி கொண்டாட்டம்.
ReplyDeleteஇந்தமாதிரியே எல்லாரும் தீபாவளி கொண்டாடினாங்கன்னா உலகம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும்?ஹ்ம்ம்..
கோயிலுக்கு போனீங்களா சாயந்திரமா? கூட்டமா இருந்துச்சா?
கால்கரியார் சொன்ன மாதிரி பிரிச்சு பெடல் எடுக்கறீங்க. என் கண்ணே பட்டுடும் போல் ஒவ்வொரு பதிவும் சூப்பரா எழுதறீங்க. வாழ்த்துக்கள்
முதியோர்களைப் பார்த்ததில் உங்களுக்கு 120/100.
ReplyDeleteநல்ல இதயம் கொண்டவர்களைப்
பெருமாள் உற்றார் உறவினருடன்
காப்பாற்றுவார்.
நன்றி கண்ணபிரான்.
ஆஹா...
ReplyDeleteபடிக்கும் போதே ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்குங்க. நாங்களும் இந்த முறையை பின்பற்ற கண்டிப்பாக முயற்சிக்கிறோம்!!!
கண்ணபிரான், வாழ்த்துகள். சிறந்த சேவை. தாங்கள் எப்பொழதாவது இந்தியாவில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்றதுண்டா ?
ReplyDeleteகண்ணபிரான், வாழ்த்துகள். சிறந்த சேவை. தாங்கள் எப்பொழதாவது இந்தியாவில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்றதுண்டா ?
ReplyDeleteகண்ணபிரான் ரவிஷங்கர்,
ReplyDeleteபாராட்டுக்கள்...பாராட்டுக்கள்...பாராட்டுக்கள்
உண்மையில் உங்கள் பதிவு படித்ததும் முழுமையான ஒரு பதிவு படித்த த்ருப்தி...
"பிஞ்சிலேயே சில நல்ல செயல்களைக் கண்ணிலும், மனதிலும் விதைப்பது, வளர்ந்த பின்னர் வரப்போகும் வணிக உலகில், ஒரு கொழுகொம்பாக இருக்கும் அல்லவா?"""
ஆயிரத்தில் ஒரு வார்த்தை...இந்த ஜெட்டிக்ஸ் பவர்ரேஞ்சர்களுக்கு நடுவில் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைப் பற்றி பெற்றோர் கண்டிப்பாக எடுத்து சொல்ல வேண்டும்...அதற்கு நேரம் ஒதுக்குவோம் :)
கண்ணபிரான், தீபாவளி வாழ்த்துக்கள் !!
ReplyDeleteதீபாவளி ஆன்மிகத்தை விட அதிகமான சமூக பண்டிகை(More of Social festival than a religious one). புத்தாடை அணிந்து சுற்றாருடனும் நண்பர்களுடனும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு மகிழும் இதன் சமூகத் தன்மையை வெளிநாட்டிலும் கடைபிடிக்கும் உங்கள் தீபாவளி உண்மையான தீபாவளி.
அருமையான தீபாவளிப்பா.
ReplyDeleteநல்லாக் கொண்டாடி இருக்கீங்க. மனசுக்கு நிறைவா இருக்கும். இல்லே?
நல்லா இருங்க. ஆசிகள்.
மத்தியானத்திலே இருந்து உங்க பதிவைத் திறக்கவே முடியலை. தமிழ்மணமே வரலை. இப்போதான் கடைசியா ஒரு முயற்சின்னு வந்தேன்.
அருமையான பதிவு. சந்தோஷத்தோட 'ச்சில்லுன்னு ஒரு காதல் ' பார்க்கப்போறேன் நம்ம தியேட்டர்லே:-))))
//கால்கரி சிவா said...
ReplyDeleteகண்ணபிரான், தீபாவளி வாழ்த்துக்கள். நல்ல சமூக சேவை செய்கிறீர்கள் நன்று கீப் இட் அப்//
கால்கரி சிவா அண்ணா,
உங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும், மறந்து விடப்போகிறேன், நீமோவுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
அச்சச்சோ சமூக சேவை எல்லாம் இல்லீங்கண்ணா! நானும் போய் ஜாலியாத் தான் சாப்பிட்டு வந்தேன். நோ உழைப்ஸ்!
சமூக சேவை-ன்னா இந்தியக் கனவு இயக்கம் சென்னையில் செய்தாங்க பாருங்க, அது தான் உண்மையான சேவைண்ணா!
// செல்வன் said...
ReplyDeleteகோயிலுக்கு போனீங்களா சாயந்திரமா? கூட்டமா இருந்துச்சா?//
வாங்க செல்வன்; மாலை கோவில் மிஸ்ஸாயிடுச்சு! அதுனால என்ன பரவாயில்லை; உங்க பதிவுக்குள்ள ஒரு எட்டு எட்டிப் பாத்துக்கறேன். உலகின் புதிய கடவுள் தரிசனம் கிடைக்கும் அல்லவா? :-)))
//கால்கரியார் சொன்ன மாதிரி பிரிச்சு பெடல் எடுக்கறீங்க. என் கண்ணே பட்டுடும் போல் ஒவ்வொரு பதிவும் சூப்பரா எழுதறீங்க. வாழ்த்துக்கள்//
நன்றி செல்வன்.
//வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteமுதியோர்களைப் பார்த்ததில் உங்களுக்கு 120/100.
நல்ல இதயம் கொண்டவர்களைப்
பெருமாள் உற்றார் உறவினருடன்
காப்பாற்றுவார்//
வல்லியம்மா, தீபாவளி ஜாலியா என்ஜாய் பண்ணீங்களா? எங்கே என் பட்சணங்கள்? 120/100 ஆ? அப்பிடின்னா பாஸ் மார்க் தானே?
ஹைய்யா...நான் பாஸாயிட்டேன்!
//வெட்டிப்பயல் said...
ReplyDeleteநாங்களும் இந்த முறையை பின்பற்ற கண்டிப்பாக முயற்சிக்கிறோம்!!!//
வாங்க பாலாஜி; நீங்க சொல்றீங்க பாருங்க முயற்சிக்கிறோம் என்று...
அது தான் ரொம்ப சந்தோஷமாவும், பெருமையாவும் இருக்கு.
தொலைபேசினதுக்கு அப்புறம் கேட்க மறந்துட்டேனே. தோசை மாவு சரியாப் புளிச்சிடுச்சா? தோசையை ஊத்தி ரவுண்ட் ஷேப்-ல தானே வார்த்தீங்க? :-))
//Ivan said...
ReplyDeleteகண்ணபிரான், வாழ்த்துகள். சிறந்த சேவை. தாங்கள் எப்பொழதாவது இந்தியாவில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்றதுண்டா ?//
வாங்க ஐவன்!
உங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும், தீபாவளி வாழ்த்துக்கள்!
சென்னையில் உள்ள முதியோர் இல்லத்துக்கு ஒரே ஒரு முறை தான் சென்றுள்ளேன்! அதற்கும் இங்கும் வசதிகள் என்று பார்த்தால் மிக மிக வித்தியாசம். ஆனால் வாழும் மனிதர்களும் மனங்களும் ஒன்றாகவே தான் பட்டது. அதுவும் நான் சென்னையில் சென்றது ஓரளவு படித்தவர்கள் வாழும் இல்லம். ஆனால் நண்பன் மற்ற இல்லங்களைப் பற்றி எல்லாம் சொல்லிக் கேள்வி.
அடுத்த முறை சென்னை வரும் போது சிறார் இல்லம் மட்டும் இல்லாது, இங்கும் சென்று வர வேண்டும்! நினைவுறுத்தியமைக்கு நன்றி!
//அன்புடன்...ச.சங்கர் said...
ReplyDeleteஉண்மையில் உங்கள் பதிவு படித்ததும் முழுமையான ஒரு பதிவு படித்த த்ருப்தி...//
மிக்க நன்றி ச.சங்கர்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
//ஆயிரத்தில் ஒரு வார்த்தை...இந்த ஜெட்டிக்ஸ் பவர்ரேஞ்சர்களுக்கு நடுவில் குழந்தைகள, க்கு நல்ல விஷயங்களைப் பற்றி பெற்றோர் கண்டிப்பாக எடுத்து சொல்ல வேண்டும்...அதற்கு நேரம் ஒதுக்குவோம் :)//
உண்மையோ உண்மை! பெற்றோர் இல்லைன்னா நண்பர் கண்டிப்பாக எடுத்து சொ(செ)ல்ல வேண்டும், சீரயஸ்ஸாக இல்லாமல், சிம்பிளாக :-))
//மணியன் said...
ReplyDeleteகண்ணபிரான், தீபாவளி வாழ்த்துக்கள் !!//
உங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும், தீபாவளி வாழ்த்துக்கள், மணீயன்!
/தீபாவளி ஆன்மிகத்தை விட அதிகமான சமூக பண்டிகை(More of Social festival than a religious one). //
கரெக்டா சொன்னீங்க மணியன்; ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு பண்டிகைன்னா...தீபாவளி நமக்கே நமக்கு ஆன பண்டிகை! அதான் நமக்குன்னு வரும் போது பட்டாசு அது இதுன்னு ஜமாய்ச்சிடறோம்!
அப்பா,அம்மா தனிமையில்..
ReplyDeleteஅதுக்காகத்தான் இந்த தடவை தீபாவளிக்கு சென்னைக்கு ஓடி வந்துட்டேன்.
//துளசி கோபால் said:
ReplyDeleteஅருமையான தீபாவளிப்பா.
நல்லாக் கொண்டாடி இருக்கீங்க. மனசுக்கு நிறைவா இருக்கும். இல்லே?
நல்லா இருங்க. ஆசிகள்.//
நன்றி டீச்சர்.
ஆமாம் மனம் நிறைந்த தீபாவளி தான்!
பெரியவர்கள் கண்களில் தெரிந்த களிப்பே, ஆயிரம் வாலா வெடிச்ச சந்தோஷத்துக்குச் சமம்!
//
அருமையான பதிவு. சந்தோஷத்தோட 'ச்சில்லுன்னு ஒரு காதல் ' பார்க்கப்போறேன் நம்ம தியேட்டர்லே:-))))//
சில்லுன்னு ஒரு காதல்-ஆ
படம் பிடிச்சு இருந்துச்சா டீச்சர்? இரண்டாம் பார்ட் எப்படி இரு`ந்துச்சு?
தீபாவளி லேட்டஸ்ட் ரிலீஸ்...வல்லவன்...இதெல்லாம் அங்க இன்னும் ஓடலியா??
//தோசை மாவு சரியாப் புளிச்சிடுச்சா? தோசையை ஊத்தி ரவுண்ட் ஷேப்-ல தானே வார்த்தீங்க? :-))//
ReplyDeleteசூப்பரா வந்துடுச்சு...
ரொம்ப நன்றி!!!
//வடுவூர் குமார் said...
ReplyDeleteஅப்பா,அம்மா தனிமையில்..
அதுக்காகத்தான் இந்த தடவை தீபாவளிக்கு சென்னைக்கு ஓடி வந்துட்டேன்//
நல்ல வேலை பண்ணீங்க குமார்.
சென்னையில் தீபாவளி எப்படி இருந்துச்சு?
அம்மா அப்பாவுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும். நீங்களும் எஞ்சாய் பண்ணியிருப்பீங்க!
வெரி குட்
அருமையா கொண்டாடி இருக்கிங்க கண்ணபிரான்.
ReplyDeleteநினைக்கவே பெருமையா இருக்கு!
அழகாவும் எழுதறிங்க!
உங்களுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.
உங்கள் கட்டுரை உள்ளம் தொடுகிறது. உங்கள் சிந்தனை உயரிய சிந்தனை. பெருகிவரும் முதியோர் இல்லங்களில் எனக்கு உடன்பாடில்லை. என்ன செய்வது. மாறிவரும் சூழ்நிலைகள். அகத்தீபங்களை ஏற்றும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅன்புடன், ராம. வயிரவன்.
//தம்பி said...
ReplyDeleteநினைக்கவே பெருமையா இருக்கு!
அழகாவும் எழுதறிங்க!
உங்களுக்கு என் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.//
வாங்க தம்பி. மிக்க நன்றி.
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
//இராம. வயிரவன் said...
ReplyDeleteபெருகிவரும் முதியோர் இல்லங்களில் எனக்கு உடன்பாடில்லை. என்ன செய்வது. மாறிவரும் சூழ்நிலைகள். அகத்தீபங்களை ஏற்றும் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.//
வாங்க ராம.வயிரவன். வருகைக்கு நன்றி! முதியோர் இல்லம், ஏதோ ஒரு ஒதுக்குப்புறம் போல் இல்லாமல், 'இல்லமாக' இருக்கும் வரை நல்லதே! உண்மை தாங்க, அகத்தீபங்கள் தான் இப்போது தேவை!
மிக நல்ல சிந்தனை தூண்டும் பதிவு இரவிசங்கர்.
ReplyDeleteசொல்வதை விட செய்வதே மேல் என்பதை மீண்டும் உணர்த்தும் ஒரு நல்ல பதிவு.
கண்ணபிரான்,
ReplyDeleteதரையில படுத்து கிடக்குற ஸ்டைலப் பார்த்தா இவ்வளவு சீரியசான நல்ல பிள்ளையா இருப்பீங்கன்னு தெரியல.
ரெம்ப நல்ல பாராட்டத்தகுந்த விஷ்யம் செஞ்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.
இந்த முயற்சிய கிறிஸ்மஸ் டைம்ல செய்ய முயல்கிறேன் தகவலுக்கு நன்றி.
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteசொல்வதை விட செய்வதே மேல் என்பதை மீண்டும் உணர்த்தும் ஒரு நல்ல பதிவு//
வாங்க குமரன்; நன்றி!
தர்ம காரியங்களை மனிதில் நினைப்பது கூட நாள்பட செயலில் போய் முடியும் என்று பாட்டி அடிக்கடி சொல்லுவார்கள். நீங்க பின்னூட்டத்தில் சொன்னது எனக்கு அதை ஞாபகப்படுத்தி விட்டது!
//சிறில் அலெக்ஸ் said...
ReplyDeleteகண்ணபிரான்,
தரையில படுத்து கிடக்குற ஸ்டைலப் பார்த்தா இவ்வளவு சீரியசான நல்ல பிள்ளையா இருப்பீங்கன்னு தெரியல//
அடடா, இந்த ஒரு ஃபோட்டோவுக்குப் பின்னால இம்புட்டு விஷயமா?
ஸ்டைல்-ன்னு சொன்னதுக்கு நன்றி சிறில்! ஆனா ஸ்டைல் எல்லாம் இல்லீங்க! திடீர்ன்னு நாமளும் ஏன் நம்ம ஆளு ரங்கநாதர் மாதிரி போஸ் கொடுக்கக் கூடாதுன்னு ஒரு ஆசை வந்துச்சு; அப்போது நண்பன் க்ளிக்கிய படமே அது!
நல்ல பிள்ளையா ன்னு வேற கேட்குறீங்க. நான் என்னத்த சொல்ல? ஆமாம் -ன்னு பொய்ய சொல்லட்டுமா? இல்ல-ன்னு மெய்யச் சொல்லட்டுமா?
சரி உண்மையே சொல்லிடறேன்! :-)
//கிறிஸ்மஸ் டைம்ல செய்ய முயல்கிறேன் தகவலுக்கு நன்றி//
சிறில், இப்படி நீங்கள் முயல்கிறேன்னு சொன்னதற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்! நன்றி!!
அப்புறம் அன்னிக்கு இந்தியாவில் பதிவர் யாருடனாவது பேச முடிஞ்சுச்சுங்களா? நைட் ரொம்ப நேரம் கண் விழிக்க வச்சுட்டாங்களா நம்ம மக்கள்ஸ்? :-)
நல்லதொரு சேவை செய்திருக்கிறீர்கள், ரவி.
ReplyDeleteஉங்கல் மனம் லேசாவதற்கு அரியதொரு செயல் ஆற்றியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
யார்கிட்டயும் பேசமுடியல. தருமி ஒருத்தர்தான் நம்பர ஒழுங்கா கொடுத்தார், அவர் செல்போன் நான் கூப்பிட்டப்ப பிசியாயிருந்துச்சு. அப்புறம் தூங்கப் போயிட்டேன்.
ReplyDelete// SK said...
ReplyDeleteநல்லதொரு சேவை செய்திருக்கிறீர்கள், ரவி.
உங்கல் மனம் லேசாவதற்கு அரியதொரு செயல் ஆற்றியிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.//
மிக்க நன்றி SK!
உண்மையைச் சொல்லணும்னா, இது போன்ற செயல்களில், நமக்கு நிறைவு கிடைப்பதினால், இதுவும் ஒரு வகையான தன்னலமே! :-)
உங்கள் நல்ல நோக்கத்திற்கு பாராட்டுக்கள் !! தீபாவளியை இம்மாதிரியும் கொண்டாடலாம் என்ற கருத்து அருமை !!
ReplyDelete***
//நரகாசுரனோ இல்லை நம்பாத கதையோ, எதுவாயினும்,
'அகல் தீபம்' மட்டும் அல்லாது 'அகத் தீபங்களும்' ஏற்றி வைப்போம் வாருங்கள், இந்த நன்னாளில்!//
நிச்சயமாய், இந்த நல்ல விஷயத்தை நானும் பின்பற்றுகிறேன் !!
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ரவி. மகிழ்ச்சியிலெல்லாம் பெரிய மகிழ்ச்சி அடுத்தவரை மகிழ்த்திப் பார்ப்பதுதான். அதுவும் தீபவொளித் திருநாளில் நீங்கள் செய்திருப்பது மிகுந்த சிறப்பு. பண்டிகை என்பது இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. இருப்பவர்கள் என்றால் பணம் மற்றும் உறவு. இல்லாதவர்களுக்கும் உண்டு என்று நிரூபித்திருக்கின்றீர்கள். இது தொடர வேண்டும். கண்டிப்பாக. என்னுடைய உளங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்.
ReplyDelete//இப்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டதால், அன்று தீபாவளி என்றே தெரியாது என்று அவர்கள் சொல்லும் போது, அவர்கள் கண்களில் கண்ணீர் இல்லை. வேறு ஏதோ ஒரு..//
ReplyDeleteஇத படிச்சதும் ஏனோ தெரியல என் கண்களில் லேசாக கண்ணீர்....
ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...தொடரட்டும் உங்கள் எழுத்து பணி....
ReplyDelete//சோம்பேறி பையன் said...
ReplyDeleteதீபாவளியை இம்மாதிரியும் கொண்டாடலாம் என்ற கருத்து அருமை !! நிச்சயமாய், இந்த நல்ல விஷயத்தை நானும் பின்பற்றுகிறேன் !!//
வாங்க 'சுறுசுறுப்பான' சோம்பேறி பையன் அவர்களே! தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. "நானும் பின்பற்றுகிறேன்" என்று நீங்கள் சொல்வது மிக மிக மகிழ்ச்சி!
// G.Ragavan said...
ReplyDeleteபண்டிகை என்பது இருப்பவர்களுக்கு மட்டுமல்ல.
இருப்பவர்கள் என்றால் பணம் மற்றும் உறவு.
இல்லாதவர்களுக்கும் உண்டு//
வாங்க ஜிரா. உண்மை தான்.
"இருப்பவர்கள்" என்பது "பணம்" இருப்பவர்கள், "உறவு" இருப்பவர்கள் என்பது போய், "மனம்" இருப்பவர்கள் என்று மாறிவிட்டால்...எல்லாரும் இருப்பவர்களே; என்றும் இருப்பவர்களே!
//இது தொடர வேண்டும். கண்டிப்பாக. என்னுடைய உளங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்//
நன்றி ஜிரா! வாழ்த்துக்கள்!!
//Syam said...
ReplyDeleteஇத படிச்சதும் ஏனோ தெரியல என் கண்களில் லேசாக கண்ணீர்....//
ஷியாம் வாங்க வாங்க!
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! எனக்கும் அப்படித் தாங்க இருந்துச்சு; அதனால் தான் பதிவில் "..." என்று போட்டு விட்டேன்!
//ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க...தொடரட்டும் உங்கள் எழுத்து பணி....//
மிக்க நன்றி ஷயாம். உங்கள் "என்ட்ரோப்பியா பிரபஞ்சம்" சூப்பர்; இனி "தினமும் உங்களைக் கவனிக்கிறேன்" :-))
புதுசா, பெருசா, ஒரு தினுசா ஒரு வேல செய்திருகீங்க.
ReplyDeleteநன்றிங்க(நானும் ஒரு நாள் முதியவனாவேன் - அதுக்காக)
//ஓகை said...
ReplyDeleteபுதுசா, பெருசா, ஒரு தினுசா ஒரு வேல செய்திருகீங்க.
நன்றிங்க(நானும் ஒரு நாள் முதியவனாவேன் - அதுக்காக)//
வாங்க ஓகை நடராஜன் சார்! தங்கள் முதல் வரவுக்கு அடியேனின் நன்றி.
//நானும் ஒரு நாள் முதியவனாவேன்// என்று நீங்க சொன்னீங்க பாருங்க. இந்த எண்ணம் ஒன்றே போதும் சார்.
இந்த உணர்வு பல குடும்பங்களில் இருந்தால், இந்நேரம் இன்னல் போய் இன்பம் வந்திருக்காதா என்ன?
நன்று செய்தீர்கள் கே.ஆர்.ஸ்.உங்களுடைய சேவையைப் பார்த்தபோது எனக்கு தாயுமாணவரின் வரிகள் ஞாயபகத்திற்கு வருகிறது.
ReplyDeleteஅன்பர் பணிசெய்ய என்னை ஆக்கி விட்டால்
இன்ப நிலை தாமே வந்து எய்தும் பராபரமே....
உங்களுடைய மற்ற பதிவுகள் திறந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லயே ஏன்.
//தி. ரா. ச.(T.R.C.) said...
ReplyDeleteநன்று செய்தீர்கள்... எனக்கு தாயுமாணவரின் வரிகள் ஞாயபகத்திற்கு வருகிறது.
அன்பர் பணிசெய்ய என்னை ஆக்கி விட்டால்
இன்ப நிலை தாமே வந்து எய்தும் பராபரமே....//
வாங்க திராச! தீபாவளி எப்படி இருந்தது? என் தனி மடல் கிடைத்ததா? தாயுமானவர் பாடல் தந்து சிறப்பித்தீர்கள்; மிக்க நன்றி!
//உங்களுடைய மற்ற பதிவுகள் திறந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லயே ஏன்.//
Blogger publishing-இல் இருக்கும் போது பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்; இப்ப பாருங்க திராச; ஓபன் ஆகும் என்று நினைக்கிறேன்!
வாழ்த்துகள். தீபாவளி வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்
ReplyDelete