Tuesday, October 03, 2006

திருமலை விழா 9 - சக்ர நீராட்டம் - சுபம்

ஒன்பதாம் நாள் (விழா நிறைவு)

சக்ர நீராட்டம் (சக்ர ஸ்நானம்)

தீர்த்தம் -ன்னா என்னப்பா? இந்த கேள்விக்குப் பலர், பலவிதமாய் பதில் சொல்லுவார்கள்! :-) ஆனா நாம அங்கெல்லாம் போகப் போறது இல்லை :-))
அனைத்து ஆலயங்களிலும், விழா நிறைவுறும் போது, தீர்த்தவாரி என்ற ஒன்று நடைபெறுவது உண்டு. கேரளத்தில் அய்யப்பனுக்கு ஆறாட்டு என்று வழங்குவார்கள். பல ஊர்களில் பல விதமாய் வழங்கி வருகிறது! நீர் நிலைகள் பற்றி நண்பர் ஜிரா ஒரு பதிவு இட்டிருந்தார். நீர் இன்றி அமையாது உலகு என்பதை நன்கு உணர்ந்தவர்கள், நம் முன்னோர்கள். அதனால் தான் புனிதத் தலங்களில் தீர்த்தமாடுவதை, யாத்திரை விதியாக விதித்து இருந்தார்கள்.

என்ன தான் வீட்டுக்குள் முங்கி முங்கிக் குளித்தாலும், நம்ம ஊர் பம்ப்செட்டில் பாஞ்சி பாஞ்சிக் குளிப்பது போல் வருமா?
"குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே, பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்?" என்று ஆண்டாளும் கேட்கிறாள் பாருங்கள்!
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றிலும் மிகச் சிறப்பு உடையது திருமலை.
இறைவனே கல்லாய்ச் சமைந்தான் = மூர்த்தி
ஆதிசேஷனே மலையாய் ஆனது = தலம்
வைகுண்டத்தில் பாயும் விரஜை நதியே கோனேரியாய் ஆனது = தீர்த்தம்


திருமலையில் பல தீர்த்தங்கள் உள்ளன. சிறிது தான் நாம் அறிந்தவை. மலைக்குள் இன்னும் பல இடங்களில் பலப்பல நீர் ஆதாரங்கள்!
கோனேரி (சுவாமி புஷ்கரிணி), ஆகாச கங்கை, பாப விநாசம், கபில தீர்த்தம், குமார தாரை, பொற்கிணறு, பூங்கிணறு இன்னும் பல!
இன்று தீர்த்தவாரியின் போது, எல்லா தீர்த்தங்களும், கோனேரியில் வந்து கலப்பதாக ஐதீகம். அதனால் இது முக்கோடி தீர்த்த நாள் என்ற பெயர் பெற்றது.

காலையில் சுவாமிக்கு, எண்ணெய்க் காப்பு செய்து (Birthday அல்லவா? தலைக் குளியல் வேண்டுமே! சுவாமி சின்னக் குழந்தையாட்டம் அடம் பிடித்தால் கூட விடுவோமா?)
சூரணம் என்னும் பொடியைத் தலையில் பூசுகிறார்கள். இதற்கு சூர்ணாபிசேகம் என்று பெயர். பின்னர் சுவாமியையும் தேவியரையும், பல்லக்கில் வைத்து, குளக்கரையில் உள்ள வராகப் பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணுகிறார்கள். கூடவே சக்கரத்தாழ்வாரும்!

விழாவில் நடக்கும் குற்றம் குறைகளைக் கண்காணிப்பவர் சக்கரத்தாழ்வார். பெருமாளின் முதற் படைக்கருவி! எவ்வளவு பெரிய நிறுவனமோ, அரசாங்கமோ ஆனாலும் தணிக்கை (audit) வேண்டுமல்லவா?
திருமகள் மார்பனுக்கு இயல்பாகவே இரக்க குணம். போதாக்குறைக்கு, தயையே உருவான தேவியர். அப்ப யார் தான் கண்காணிப்பது.
அதான் சக்கரத்தாழ்வார். பெருமாளை விட்டு என்றும் பிரியாதவர். நரசிம்மனாய் வந்த போதுகூட அவன் நகமாய் வந்தவர்! கோடி சூர்யப் பிரகாசம் கொண்டவர்!! (சுவாமியின் boomerang? :-)))

அனைவருக்கும், குளக்கரையில் நீராட்டம் நடக்கிறது. நீர், பால், தயிர், தேன், இளநீர் என்று பஞ்சாமிர்த அபிஷேகம். அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ பூசப்படுகிறது. துழாய்(துளசி)மாலை சார்த்தப்பட்டு, தீபங்கள் காட்டுகின்றனர்.
ஆயிரம் துளைகள் கொண்ட தங்கத் தாம்பாளத் தட்டின் வ்ழியாக, shower bath வேறு! (சகஸ்ர தாரை).


பின்னர் சக்கரத்தாழ்வாரை, குளத்துக்கு எடுத்துச் சென்று, பட்டர்கள் நீருக்குள் முங்குகின்றனர். அவ்வாறு முங்கும் போது, குழுமியிருக்கும் பல்லாயிரம் பக்தர்களும் தாமும் முங்கி தீர்த்தவாரி செய்கின்றனர்.
விழா இனிதே நிறைவு பெறுகிறது!
மாலையில் ஏற்றிய கொடியினை இறக்கி, வந்த அனைத்து தேவர்களையும், மனிதர்களையும், பிரம்மா வழி அனுப்பி வைப்பதாக ஐதீகம்.
"OK பிரம்மா, See you, it was a grand show, awesome!", என்று நாமும் சொல்லி 'வடை' பெறுகிறோம்! ...ஹிஹி 'விடை' பெறுகிறோம்.
சுப்ரபாத தோத்திரத்தில் ஒரு இனியது கேட்டு நிறைவோம்!

அகம் தூர தஸ்தே, பதாம்போ ஜயுக்ம
பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி
சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ
ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா


என் வீடு, மிகத் தொலைவில் உள்ளது. (அகம் தூர தஸ்தே)
ஆனாலும் உன் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொள்ள வந்தேன். (பதாம்போ ஜயுக்ம)
இன்று உன் திருமுக தரிசனம் கண்டேன்!
தினமும் திருமலையிலேயே தங்கி உன்னைச் சேவிக்க ஆசை தான், ஆனால் முடியுமோ?
(பிரணாமேச்ய ஆகத்ய சேவாம் கரோமி)
அதனால் நமக்குள் ஒரு ஒப்பந்தம்!

எப்போதெல்லாம் நான், என் மனம் நிறைய உன்னை நினைக்கிறேனோ,
அப்போதெல்லாம், நீ எனக்கு இப்போது கொடுத்த தரிசனத்தை, அப்போதும் கொடுக்க வேண்டும்!
(சக்ருத் சேவயா, நித்ய சேவா பலம் த்வ)
இறைவா, திருமலைவாசா, வேங்கடவா, இதையே எனக்கு நீ அருள்வாய்! (ப்ரயச்ச ப்ரயச்ச பிரபோ வேங்கடேசா)

இந்த நவ நாட்களும் வந்து சிறப்பித்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி!
சொல்லிலோ, பொருளிலோ குற்றம் குறைகள் இருந்தாலும் எனக்காக அவையெல்லாம் பொறுத்துக் கொள்ளுங்கள்.
சேர்ந்தாற் போல தமிழில் இவ்வளவு தட்டச்சு செய்வது இதுவே முதல் முறை.
நிறை குறை (நிறைய குறை?:-) -கள் சுட்டிக்காட்டுங்கள்.
அல்லன அகற்றிடத் தயங்க மாட்டேன்!
வாய்ப்புக்கு நன்றி!
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

இன்று,
நம்மாழ்வாரும், திருவேங்கடத்தானும்.

(இவர் நம்ம ஆழ்வார்; நம் ஆழ்வார் என்று அரங்கனே சொன்ன பின்னர், நாம் என்ன சொல்ல!
ஆழ்வார்களுள், மிகவும் குறைந்த வயதினர்! ஆனால் ஆழ்வார்க்கெல்லாம் தலையாயவர் என்று போற்றப்படுபவர். நால் வேதங்களையும் தமிழ் செய்தவர்! தாளாற்றித் தந்த வேளாள மரபினர்.
ஆசார்யர், ஆழ்வார் என்று இரண்டும் ஒன்றாய் இருப்பவர்! எல்லாக் கோவில்களிலும் பெருமாள் பாதங்களைத் தாங்கி, சடகோபமாய் இருப்பவர்! அவன் மென்மலர்ப் பாதங்களை நம் தலைக்கு எடுத்து வந்து கொடுக்கும் சடாரி ரூபமானவர். இன்னும் எவ்வளவோ! "வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது"!)

திருவேங்கடமுடையான் மீது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க, இவர் பாடிய பாடல்களுள், மிகப் பிரபலமானவை இதோ! நண்பர்கள் கண்ணன் சார், குமரன், பாலா, இன்னும் பலர் பின்னூட்டங்களில் இந்தப் பாடல்களை இட்டிருந்தார்கள்! அதை அப்படியே தருகிறேன்!!

ஏனோ இன்று, இந்த ஆழ்வார் பாடலுக்கு மட்டும்,
பொருள் சொல்லவோ, பதவுரை தரவோ முன் வராமல், மனம் அப்படியே நிற்கின்றது!
பாடலைத் தான் மீண்டும் மீண்டும் படிக்கத் தோணுதே அன்றி, மற்றவை அப்படியே நிற்கிறது!
முடிந்த வரை பத்தி பிரித்து தருகிறேன். எளிமையான் தமிழ் தான்
. வரிகளைப் படிக்கப் படிக்க உங்களுக்கே மனதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்!! (பின்னூட்டத்தில் நீங்கள் வந்து பொருள் உரைத்தாலும் மிகவும் மகிழ்வேன்; நன்றி!)

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே!
-------------------------------------------------------------------------------------------

வந்தாய் போலே வாராதாய். வாராதாய் போல் வருவானே
செந்தாமரைக் கண், செங்கனி வாய், நால் தோள், அமுதே. எனது உயிரே
சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல் செய் திருவேங்கடத்தானே
அந்தோ அடியேன் உன்பாதம்
அகல கில்லேன் இறையுமே.
(அல்லைப் பகல் செய் = இரவையும் இருளையும் பகல் ஆக்கும்)
-------------------------------------------------------------------------------------------
அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய். உலகம் மூன்று உடையாய். என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல்ஒன்று இல்லாஅடியேன் உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே.
-------------------------------------------------------------------------------------------
அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர். வாழ்மின் என்று என்று அருள்கொடுக்கும்
படிக் கேழ் இல்லாப் பெருமானைப் பழனக் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும்
பிடித்தார் பிடித்தார் வீற்று இருந்து பெரிய வான் உள் நிலாவுவரே!

(கேழ் இல்லாப் பெருமான் = ஒப்புமை இல்லாத பெருமான்; தன் ஒப்பார் இல் அப்பன்)
(சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் = தான் பாடிய திருவாய்மொழி 1000 பாடல்களில், திருவேங்கடத்துக்கு எனப் பிரத்யேகமாகப் பாடிய இந்தப் பத்து பாடல்களும்)
(பழனம்=நெல் வயல்கள்; குருகூர்=ஆழ்வார் திருநிகரி எனப்படும் திருக்குருகூர் என்ற ஊர்; சடகோபன்=நம்மாழ்வார்; பெரிய வான்=திருநாடு எனப்படும் வைகுந்தம்)
-------------------------------------------------------------------------------------------
இதோ இறைவன் பாதங்கள் பற்றித்

துழாயும் திருப்பாதமும் (துளசியும், சடாரியும்) பெற்றுக் கொள்ளுங்கள்!!

சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்!
சரணம் சரணம் திருமலைக்கு அரசே
சரணம் சரணம் வேங்கடா சரணம்!!

20 comments:

 1. அருமையான சேவை. ஸாதிச்சதுக்கும் சந்தோஷம்.

  ஒண்ணும் சொல்லவோ, எழுதவோ வாயும் கையும் வரலை.
  அதான் மனசு பூரா 'திம்'ன்னு நிறைஞ்சுகிடக்கே.

  பெருமாளையும், 'துளசி'யையும் பிரிக்கவே முடியாது:-))))))

  இந்த ஒன்பது நாள் பதிவுகளையும் தனிப்பகுதியா எடுத்துவச்சுக்கலாம்.
  பொருத்த்மாப் படங்களும் அமைஞ்சது பாருங்களேன்.
  எல்லாம் அவன் செயல்.

  நல்லா இருங்கோ கே ஆர் எஸ்.
  மங்களம் மங்களம் மங்களம்

  பி.கு: நாலஞ்சு நாளைக்கு முன்னே சூரியன் ஒரு விசித்திர கோணத்தில்
  வீட்டுக்குள்ளெ வந்து சரியாப் பெருமாளொட பாதத்தை மட்டும் வெளிச்சம்
  போட்டுக் காமிச்சது. அதை உடனே படம் புடிச்சுட்டேன்.
  என் பதிவுலே போடட்டா?

  ReplyDelete
 2. // வெட்டிப்பயல் said...
  மிக்க நன்றி!!!//
  தன்யவாதாலு பாலாஜிகாரு!

  ReplyDelete
 3. //துளசி கோபால் said...
  அருமையான சேவை. ஸாதிச்சதுக்கும் சந்தோஷம்.
  ஒண்ணும் சொல்லவோ, எழுதவோ வாயும் கையும் வரலை.
  அதான் மனசு பூரா 'திம்'ன்னு நிறைஞ்சுகிடக்கே.//

  நன்றி டீச்சர்! 9 நாள் வைபவத்திலும் நீங்கள் முதல் ஆளாய் தவறாது வந்து கலந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி!!

  //பெருமாளையும், 'துளசி'யையும் பிரிக்கவே முடியாது:-))))))//
  ஹை..தோடா, டீச்சர் என்கிற முறையில், ஒரு சந்தேகம்! சந்துவில் சிந்து பாடறதுன்னா என்ன டீச்சர்? :-)))

  உண்மை தான் டீச்சர்...நகை எல்லாம் எதுவுமே வேண்டாம். ஒரு 'துளசி தளம்' போதாதா அவனுக்கு!

  //இந்த ஒன்பது நாள் பதிவுகளையும் தனிப்பகுதியா எடுத்துவச்சுக்கலாம்.
  பொருத்த்மாப் படங்களும் அமைஞ்சது பாருங்களேன்.
  எல்லாம் அவன் செயல்.//
  அப்பா, அம்மா, மற்றும் என் கல்லூரி ஆசிரியை கேட்டதால், I am planning to compile in one single pdf.

  //நல்லா இருங்கோ கே ஆர் எஸ்.
  மங்களம் மங்களம் மங்களம்//
  தங்கள் ஆசிக்கு என் நன்றி!

  //பி.கு: நாலஞ்சு நாளைக்கு முன்னே சூரியன் ஒரு விசித்திர கோணத்தில்
  வீட்டுக்குள்ளெ வந்து சரியாப் பெருமாளொட பாதத்தை மட்டும் வெளிச்சம்
  போட்டுக் காமிச்சது. அதை உடனே படம் புடிச்சுட்டேன்.
  என் பதிவுலே போடட்டா?//

  இது என்ன கேள்வி; உடனே போடூங்க!!
  நேராகவே வந்து பாக்க நான் நியுசி வரட்டுமா??? :-)))

  ReplyDelete
 4. ஒன்பது நாளும் நல்லாவெ சொல்லி இருந்திங்க. நல்ல தமிழ்ல் அழ்காச் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. Kannabiran,

  Great show during this Brahmotsavam :) Thanks !

  வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,

  செந்தா மரைக்கண் செங்கனிவாய் நால்தோ ளமுதே. எனதுயிரே,

  சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே,

  அந்தோ! அடியேன் உன்பாதம் அகல கில்லேன் இறையுமே.

  பதவுரை:
  வருவாய் என எண்ணும்போது வரமாட்டாய், வரமாட்டாய் என எண்ணும்போது வந்தருள்வாய்! தாமரை போன்ற கண்களும், சிவந்த இதழ்கள் கூடிய வாயும், அகண்ட தோள்களும் கொண்ட என் உயிருக்கு ஒப்பானவனே! இருள் போன்ற என் அல்லல்களையும், பாவங்களையும் துடைக்கும் ஒளியான வேங்கடேசனே! நான் உன் பாதங்களை விட்டுப் பிரியாமல் இருக்கும் நிலையை வேண்டினேன் ஐயனே!

  ReplyDelete
 6. சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்

  அது எப்படி எல்லா உலகத்திலயும் இருந்துண்டு லக்ஷிமியிடத்திலும் இருப்பார்.முரன்பாடா இருக்காப்போல இருக்கும்.
  அதுதான் பகாவான்.லக்ஷிமிதேவி இல்லத இடமே கிடையாது. லக்ஷ்மின்னா பணம் மாத்திரம் கிடையாது. எல்லா செல்வங்களும்தான்.இந்த உலகத்துலேயோ அல்லது மற்ற உலகத்துலேயோ அஷ்ட லக்ஷ்மியில் எதாவ்து ஒரு லக்ஷிமியாவது இல்லாத இடமே கிடையாது.பரம தரித்திரனாக இருந்தாலும் சந்தான லக்ஷிமியாவது இருப்பாள். அப்போ லக்ஷிமியில்லாத இடமே எந்த உலகத்திலேயும் கிடையாது.அப்போ அங்கே ச்ரி நிவாசனும் இருப்பான் அதுனாலே தான் சர்வலோக நிவாசாய என்று மஹான்கள் சொல்லியிருக்கலாம் என்று என்னுடைய கருத்து.
  அப்பேற்ப்பட்ட ச்ரினிவாசனை எந்த ஒரு செல்வும் இல்லாமல் எங்கள் வீட்டுக்குள் ஒன்பது நாட்கள்
  கூட்டிவந்து தரிசனம் செய்யவைத்த உங்களுக்கு நன்றி என்கிற வார்த்தை மிகவும் சிறியது.இதுதான் சொல்ல முடியும் அமோக இரு அப்பா என்று.

  ReplyDelete
 7. திருப்பாதங்களின் அழகினைப் பருகிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் வருகிறேன்.

  ReplyDelete
 8. நேற்று சக்ர ஸ்னானத்தை மிஸ் பண்ணிவிட்டேன். வருடம்தவறாமல் பார்க்கும் காட்சி.
  எப்படியொ பெருமாள் உங்கள் கை வழியாக இங்கே சேவை கொடுத்துவிட்டார்.
  பாதகமல சேவை ஆயிற்று.
  கண்ணபிரான் நீங்கள் ரொம்ப நன்றாஆக சீரும் சிறப்போடு இருக்கவேண்டும்.
  நிறைய எழுதுங்கள்.
  நன்றி நன்றி நன்றி.

  ReplyDelete
 9. நல்லதொரு தொடர். திருவேங்கடமுடையான் மீது பற்றுள்ளோருக்குப் பற்றறுக்கும் தொடர். ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ச் செய்யுட்களைக் குடுத்து அவைகளை விளக்கியமையும் அருமை. வாழ்க. வளர்க.

  இந்தப் பதிவில் நான் ரசித்தவை

  குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
  அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
  சென்று சேர் திருவேங்கட மாமலை
  ஒன்றுமே தொழ நம்வினைகள் ஓயுமே!

  ReplyDelete
 10. //Krishnaswamy said...
  ஒன்பது நாளும் நல்லாவெ சொல்லி இருந்திங்க. நல்ல தமிழ்ல் அழ்காச் சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றி திரு. கிருஷ்ணசாமி. ஒன்பது நாளும் நீங்க வந்து பாத்ததுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. //enRenRum-anbudan.BALA said...
  Kannabiran,
  Great show during this Brahmotsavam :) Thanks !//

  வாங்க பாலா; நீங்க எல்லாரும் வந்து கலந்து கொண்டு உற்சாகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.

  அதுவும் நீங்கள், முந்தைய நாட்களில் எடுத்துக் கொடுத்த பாசுரங்களை, நிறைவு நாளில் பதிக்க நினைத்து இருந்தேன். அதுவும் நல்ல வண்ணமே நடந்தது!

  //வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே,//
  நீங்கள் நிச்சயம் வந்து விளக்கம் கொடுப்பீர்கள் என்று எனக்குத் தெரியும் :-)) நன்றி பாலா!

  "சிந்தா மணிகள் பகரல்லைப் பகல்செய்" என்பதற்கு மேல் விளக்கம் ஒன்றும் உள்ளது. குமரனும் வரட்டும். அவர் என்ன சொல்கிறார் என்றும் கேட்போமே!

  கண்ணன் சார் சொன்னது போல் ஒரே பாசுர மழை தான் போங்கள்; மிக்க மகிழ்ச்சியும் நிறைவும் எனக்கு! உங்களுக்கும் அப்படியே என எண்ணுகிறேன்!

  ReplyDelete
 12. //தி. ரா. ச.(T.R.C.) said...
  இல்லாத இடமே கிடையாது.பரம தரித்திரனாக இருந்தாலும் சந்தான லக்ஷிமியாவது இருப்பாள். அப்போ லக்ஷிமியில்லாத இடமே எந்த உலகத்திலேயும் கிடையாது.//

  வித்தியாசமான, அழகிய சிந்தனை திராச!
  அதற்கு முந்தைய வரி "ஸ்ரீ மத் சுந்தர ஜாமாத்ரு முனி மானச வாசினே, சர்வ லோக நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்"
  வழமையாக உரைக்கும் பொருள்; "மணவாள மாமுனிகள் போன்ற அடியார் தம் மனங்களில் உறைபவனே! மனத்து உறைவதால் உலகம் எங்கும் நீ உள்ளாய்" என்பது தான்!

  ஆனால் நீங்கள் ஒரு படி மேல் சென்று, ஸ்ரீயுடன் ஸ்ரீயப்பதிக்கான தொடர்போடு உலகெலாம் நிறைந்தாய் என்று சொல்லி விட்டீர்கள். மிக நன்று!

  மற்ற மங்கள சுலோகங்களுக்கும் பொருள் உரைக்க எண்ணியுள்ளேன்!
  சுப்ரபாதத்தின் சாரமாக விளங்குபவை அவை. மிகவும் அழகான கருத்துக்கள் எல்லாம் இரண்டே வரிகளில் வந்து விடும்!

  //அப்பேற்ப்பட்ட ச்ரினிவாசனை எந்த ஒரு செல்வும் இல்லாமல் எங்கள் வீட்டுக்குள் ஒன்பது நாட்கள்
  கூட்டிவந்து தரிசனம் செய்யவைத்த உங்களுக்கு நன்றி என்கிற வார்த்தை மிகவும் சிறியது.இதுதான் சொல்ல முடியும் அமோக இரு அப்பா என்று//

  தங்கள் ஆசிக்கு என்றும் என் அன்பு திராச! தங்கள் மற்றும் அடியவர் இல்லம் எழுந்தருள அவனுக்கும் அன்னைக்கும் கூட ஆர்வம் தானே!

  ReplyDelete
 13. //குமரன் (Kumaran) said:

  திருப்பாதங்களின் அழகினைப் பருகிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் வருகிறேன்.//

  அழகினைப் பருகி
  அவனிடம் உருகி
  பின்னர் வருகி றார் குமரன்! காத்திருகிறோம் அது வரை!

  ReplyDelete
 14. // வல்லிசிம்ஹன் said...
  கண்ணபிரான் நீங்கள் ரொம்ப நன்றாஆக சீரும் சிறப்போடு இருக்கவேண்டும்.//
  ஆசிக்கு நன்றி வல்லி-ji. தங்களைப் பெயர் சொல்லி அழைக்க மனம் ஒப்ப மாட்டேன்-கிறது. அக்கா, டீச்சர், போன்ற ஏதேனும் ஒன்றை சீக்கிரமே கண்டு பிடிக்க வேண்டும்!

  //நிறைய எழுதுங்கள்.
  நன்றி நன்றி நன்றி.//

  நிச்சயம் செய்கிறேன்! நவ நாட்களில் வந்து ஆதர்வு தந்தமைக்கு என் நன்றியும் கூட!

  ReplyDelete
 15. // G.Ragavan said...
  நல்லதொரு தொடர். திருவேங்கடமுடையான் மீது பற்றுள்ளோருக்குப் பற்றறுக்கும் தொடர்.//

  வாங்க பிரசாத ஸ்டால் மேனஜர் ஜிரா அவர்களே! :-)))
  பொருள் அல்லவரையும் ஒரு பொருளாகச் செய்யும் பொருள் அல்லவோ அவன்!

  பதிவுகளின் நோக்கமே, திருமலை பணம் கொழிக்கும் இடம் என்பதையும் தாண்டி,
  அருளும், காதலும் கொண்டு அவனிடம் ஆழ்வார்களும் அடியாரும் எப்படி எல்லாம் உருகினர் என்பதை மீண்டும் நினைவுறுத்தத் தான் ஜிரா!

  என் கூட திருமலை வந்த நண்பர்களுக்கு அப்போது சொல்லாத பதிலை இப்போது சொல்லியதில் என் மனமும் நிறைந்தது.

  //ஒவ்வொரு பதிவிலும் தமிழ்ச் செய்யுட்களைக் குடுத்து அவைகளை விளக்கியமையும் அருமை. வாழ்க. வளர்க.//

  மிக்க நன்றி ஜிரா. நீங்களும் அவ்வப்போது வந்து பாசுர மழையில் கலந்து கொண்டமைக்கு நன்றி.
  (உங்களுக்குத் தான் மழை ரொம்ப புடிக்கும்ன்னு தெரிந்து கொண்டோமே! :-)))

  வாங்க, தொடர்ந்து நீங்க ஆதரவு கொடுக்கோணும்! தமிழுக்காக, கட்டாயம் கொடுப்பீங்கன்னு தெரியுமே:-))

  ReplyDelete
 16. ஆஹா!!!
  காலங்கார்த்தாலேயே பெருமாள் சக்ர நீராட்டு சேவை-திருப்பாத சேவை,சடாரிசேவை.
  நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்-உங்கள் பதிவு மூலம்.
  நன்றி

  ReplyDelete
 17. அம்மானு சொல்லலாமே கண்ணபிரான்.
  வல்லியம்மானு சொன்னாப்போச்சு.

  இத்தனை படித்த,நல்லது சொல்லும் வலைக் குழந்தைகள் என்னை அம்மானு சொன்னால் எனக்குத்தான் பெருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. //வடுவூர் குமார் said...
  ஆஹா!!!
  காலங்கார்த்தாலேயே பெருமாள் சக்ர நீராட்டு சேவை-திருப்பாத சேவை,சடாரிசேவை.
  நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்-உங்கள் பதிவு மூலம்.
  நன்றி//

  குமார். நவ நாட்களும் வந்துச் சிறப்பத்தீர்கள். நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்! மிக்க நன்றி

  ReplyDelete
 19. // வல்லிசிம்ஹன் said...
  அம்மானு சொல்லலாமே கண்ணபிரான்.
  வல்லியம்மானு சொன்னாப்போச்சு.

  இத்தனை படித்த,நல்லது சொல்லும் வலைக் குழந்தைகள் என்னை அம்மானு சொன்னால் எனக்குத்தான் பெருமை.
  வாழ்த்துக்கள்.//

  அப்படியே ஆகட்டும் வல்லியம்மா.
  ஹை
  "வலைக் குழந்தைகள்" - இது ஒரு நல்ல டைட்டில் போல் உள்ளதே. ஒரு பதிவுக்கு பயன்படுத்திக்கணும்!!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP