Tuesday, October 31, 2006

அமெரிக்கா கொண்டாடும் பேயாட்டம்

பூசணிக்காய் மகத்துவம் அமெரிக்கா வந்த பின் தான் தெரிகிறது.

சென்னையில், வீடுகளில் திருஷ்டிப் பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதைக் கேலியாகப் பார்த்த காலம் உண்டு.
"முப்பதாயிரம் ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத லாரியா, இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தில் ஓடப் போகுது-ன்னு"
விவேக் கேட்பாரே, அது போலத் தான் வைச்சிக்குங்களேன்.

பூசணிக்காய் சுத்திப் போடுதல், ஆயுத பூஜை பூசணிக்காய்...எல்லாம் பாத்து பாத்து அலுத்துப் போன எனக்கு, இங்கும் பூசணிக்காயா?
ஆமாம். எல்லா வீடுகளிலும் பூசணிக்காய் (பூசணிப்பழம்) கட்டி வைக்கிறார்கள். ஏன்? எதற்கு?

என்ன ஆச்சு இந்த அமெரிக்காவுக்கு-ன்னு கேட்கறீங்களா?
Oct 31 இரவு - பேய்களின் திருவிழா - பேரு ஹாலோவீன் (Halloween).

இன்னாது? பேய்க்கு எல்லாம் திருவிழாவா?...
வாங்க என்னன்னு பாக்கலாம்.

ஸ்காட்லாண்டு மற்றும் ஐரிஷ் மக்கள் கொண்டாடிய இந்த விழா, அவர்களுடன் அப்படியே புலம் பெயர்ந்து, அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டது!
ஆன்மாக்களுக்கும் (All Souls), புனிதர்களுக்கும் (All Saints) கொண்டாடப்பட்ட விழா, இன்று பேய்களின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
All Hallows Eve என்பது Halloween என்றாகி விட்டது.

ஐரிஷ் நாட்டு கெல்ட் இன மக்கள், குளிர் காலம் ஆரம்பிக்கும் முன் ஆவிகள் எல்லாம், பூமிக்கு விஜயம் செய்வதாக நம்பினர்.
உணவுக்கும், இறைச்சிக்கும், உற்சாக பானத்துக்கும் மட்டும் இன்றி, தங்களுக்கு ஆள் எடுக்கவும் அவை பூமிக்கு வருமாம்.

ஆனால் பெரிய பெரிய தீ மூட்டிக் கொண்டாடினால், அவை பயந்து ஓடி விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.
மேலும் மக்கள் எல்லாரும் பேய்களின் உடை அணிந்து கொண்டு, பேய் வேடம் போட்டு, ஊருக்குள் உலாவினர்.

அவர்களைப் பாத்து, 'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல; சரி மனிதர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்லலாம்', என்று பேய்கள் போய்விடும் என்று நம்பினர்.

அறுவடைக் காலம் நெருங்குவதால், சல்லீசாக கொட்டிக் கிடக்கும் பூசணிப் பழங்கள்; அவற்றைத் தோண்டி, ஓட்டை போட்டு, அதன் மேல் கண்டபடி வரைவார்கள்.
பின்னர் அதை ஒரு கூடை போல் ஆக்கி, அதற்குள் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு, ஊர் சுற்ற வேண்டியது தான்!
இப்படித் தீயவைகளை ஏமாற்ற, தீயவர் போல் நடிக்கும் ஒரு விழா உருவாகி விட்டது! :-))

அட்சய திருதியை அன்று அலைமகளை வணங்கி, நமக்கு இருக்கும் செல்வத்தில் சிறிது தானம் செய்ய வேண்டும் என்பது நியதி.
அதை அப்படியே உல்டாவாக்கி, இன்னும் கொஞ்சம் தங்கம் சேர்த்துக் கொள்வது நல்லது என்று நம்ம ஊர் வியாபார காந்தங்களும், மக்கள்ஸும் சேர்ந்து, (ஏ)மாற்றி விட்டார்கள் அல்லவா?

இது நம்மூருக்கு மட்டும் இல்லைங்க, எல்லா ஊருக்கும் பொது தான் போல இருக்கு!
அமெரிக்காவிலும் இதை அப்படியே மாற்றி, குழந்தைகள் உற்சாகமாக கொண்டாடும் விழாவாக மாற்றி விட்டன நிறுவனங்கள்.

இன்றைய ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் ஒரே ரகம் தான்.
பேய், ஆவி, கிழவிகள், பூனை மீசை, தேவதை எனப் பலவாறாக குழந்தைகள் வேடமிட்டுக் கொள்வர்; இதற்கான உடைகளைப் பெற்றோர் வாங்கித் தர வேண்டும்.

வீடுகளையும் பேய் வீடு போல அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். (கெட்டுது போ...ன்னு யாரோ அங்க முணுமுணுக்கறாப் போல இருக்கே?:-)
ஒட்டடை, சிலந்தி வலை, பூசணி, பூனை முகம், ஆந்தை, ஒளி விளக்கு இப்படி பல வழி இருக்கு!

அப்புறம் என்ன, வேடமிட்ட குழந்தைகள் வீடு வீடாய்ப் போய் 'கோவிந்தா' போட வேண்டியது தான். பூசணி உண்டியல் குலுக்க வேண்டியது தான்!
ட்ரிக் ஆர் ட்ரீட் (Trick or Treat?? ) -
என்னை ட்ரீட் செய்கிறாயா இல்லை உன் மேல் ட்ரிக் பண்ணட்டுமா என்று சிறார்கள் கேட்க,
ஒவ்வொரு வீட்டிலும் பெரியவர்கள் குழந்தைகளின் பூசணிப் பையில் நிறைய மிட்டாய்களைப் போட்டு ட்ரீட் செய்கிறார்கள்!
உணவு இல்லாத பண்டிகையா?
சோள மிட்டாய் (candy corn), பூசணிப் பிரட் (pumpkin bread), பூசணி அல்வாத் துண்டு (pumpkin pie)...இன்னும் நிறைய!

தண்ணித் தொட்டியில், காசுகளை ஆப்பிளுக்குள் புதைத்து, ஆப்பிள்களை மிதக்க விடும் விளையாட்டும் உண்டு. (Bobbling for Apples)
சிறார்கள் வாயாலேயே ஒடும் (மிதக்கும்) ஆப்பிளைப் பிடிக்கும் விளையாட்டு!
மின்னசோட்டாவில் உள்ள அனோகா நகரம் தான் ஹாலோவீன் கொண்டாட்டங்களின் தலைநகரம். (என்ன குமரன்... கொண்டாடப் போனீங்களா?)சேலம் (அட நம்மூரு...?) , (அட, இது வெட்டிப்பையல் பாலாஜிக்கு பக்கத்து ஊராச்சே), கீன் (நியு ஹாம்ப்ஷையர்), மற்றும் நியுயார்க் நகரங்களிலும் பெரும் கொண்டாட்டங்கள் உண்டு!

அட... டிவியைப் போட்டாக் கூட ஒரே பேய்ப் படமால்ல இருக்கு!
மொத்த ஊரையே இப்பிடி பேய் பிடிச்சு ஆட்டினா, என்ன பண்றது?
யாராச்சும் பேய் ஒட்டறவங்க இருக்கீங்களாப்பா? :-))

ஊரே பூசணி மஞ்சளில் மூழ்கியிருக்க, என்ன நாமளும் கோவிந்தா போடலாம் வாரீகளா?
"பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தனை", கண்களே காணுங்கள்-ன்னு அப்பர் சுவாமிகள் சொல்வார்; அது மாதிரி நம்ம சிவபெருமானுடைய பூத கணங்களின் விழா-ன்னு வேணும்னா நினைச்சிக்குனு ஒரு ரவுண்டு கொண்டாடிட்டாப் போச்சு! என்ன சொல்றீங்க?

சென்னைக்கு அடுத்த முறை போகும் போது அம்மாவிடம் சொல்லி பூசணிக்கா கூட்டும், பூசணிப் பழ அல்வாவும் செய்யச் சொல்லணும்! :-)

மறக்காம அமெரிக்கப் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப் போடச் சொல்லி
....ய்ப்பா யாருப்பா அது பூசணிக்காய நடுரோட்டுல போட்டு உடைக்கிறது...அதெல்லாம் இங்க allowed இல்ல சொல்லிட்டேன்...
Trick or Treat??.........
அன்பே வா......அருகிலே....!!!

32 comments:

 1. அது பூசணியா? இல்ல பரங்கிக்காயா?

  ReplyDelete
 2. இதுக்கு மஞ்சள் பூசணிதானே பயன் படுத்தறாங்க. போட்டும். நல்ல வேளை வெள்ளைப்பூசணி இல்லை.
  அது கிடைச்சாத்தான் சாம்பார், மோர்குழம்பு, கூட்டுன்னு ஜமாய்ச்சுருவேனே.

  இப்ப ஒரு பத்து வருசமா இங்கேயும் வந்துருச்சு ஹாலோவீன். கடைக்காரங்க கொழுத்துக்கிட்டு
  இருக்காங்க. கை ஃபாக்ஸ் டே வேற வருதே. அந்தப் பட்டாசுகளும், வேஷங்களுமா பசங்க
  சுத்துதுங்க. போலீஸ்க்கு தலைவலியா இருக்காம்.
  ஒரு பக்கம் 'ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்'ன்னு சொல்லிக்கிட்டு,
  இப்படி ராத்திரியிலே பசங்க தெரியாத வீடுகளுக்குப் போவறது சரியில்லைன்னு ஒரு க்ரூப் மக்கள்ஸ்
  நினைக்கிறாங்க.

  எதுக்கு அமெரிக்கன் விழா இங்கே வரணுமுன்னு இன்னொரு கூட்டம் கேக்குது.

  ஆமா.... இது மட்டும் வந்துருச்சே, இன்னும் ஏன் 'தேங்க்ஸ் கிவிங்' மட்டும் வரலை?ன்னு எனக்குக் கவலை.
  நல்லது வர நாள் செல்லுமோ? :-))))

  நம்ம பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் ,'மாஸ்க்' போட்டுக்கிட்டு வந்தவுடன்,
  நான் அடையாளம் தெரியாதது போல ஒரு 'அதிர்ச்சி' காட்டுவேன். அதுலெ
  அவுங்களுக்கு ஒரு சந்தோஷம். கூடவே வரும் அவுங்க வீட்டுப்பூனையைப்
  பார்த்தால்தான் சிரிப்பு வந்துரும்:-)))

  உங்களுக்கும் ஹாலோவீன் வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete
 3. நானும் இப்ப அதுக்குதான் எங்க மேனஜர் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்!!!

  வீட்டின் லானில் நெருப்பு வைத்து அதில் marsh mellows கொளுத்தி அதை பிஸ்கெட் துண்டிகளின் நடுவில் வைத்து கொடுத்தார். பிறகு பக்கத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகள் கலர் கலராக (பேய் மாதிரி) உடையணிந்து கையில் பூசணிப்பழ பொம்மையுடன் அங்கே வந்து கேண்டீஸ் வாங்கி சென்றனர்....

  அப்பறம் நம்ம ஊர்ல இந்த மாதிரி ஏதாவது இருக்கானு கேட்டாங்க... நாங்க தீபாவளி பற்றி பெரிய லக்சர் கொடுத்தோம் :-)

  ReplyDelete
 4. அங்க என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.இந்த விழா பற்றி பல நாட்கள் இருந்த சந்தேகம் தீர்ந்தது.
  இங்க அதெல்லாம் கிடையாது.

  ReplyDelete
 5. Thanks for your detailed explanation. I really understood about the Haloween day. Yesterday few boys came to my house and keep pressing the door bell. But I opened the door they saw my (stranger) face and ran away telling something. I didn't understand becuse I can not understand the Italian. ( Yes I am in Italy). Again they kept pressing the door bell for a long time but I never opened the door. If I have read your article first I would have given some candies to them.

  ReplyDelete
 6. இங்க மிடில் ஈஸ்ட்ல இந்தவிழா வந்தா இம்மக்கள் யாரும் பேயா வேசம் போட வேண்டிய அவசியம் கிடையாது.

  தினமுமே இந்திய / வெளிநாட்டு உழைப்பாள மக்களின் உழைப்பை பேயாத் திருடறவங்கதானே...

  அதனாலேயே அடுத்த விழாவான தேங்ஸ் கிவிங்கும் நோ கமிங் ஹியர்!

  ReplyDelete
 7. //Anonymous said...
  அது பூசணியா? இல்ல பரங்கிக்காயா?//

  அனானி, pumpkin என்று தான் சொல்கிறார்கள். நிச்சயம் வெள்ளைப் பூசணி இல்லை! படத்துல பாத்து நீங்களே சொல்லுங்களேன்.

  ReplyDelete
 8. வாங்க டீச்சர்,

  மஞ்சப் பூசணி தான்!
  அட, 'ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்' என்பது உங்க ஊர் கோட் வொர்ட் போல!

  //எதுக்கு அமெரிக்கன் விழா இங்கே வரணுமுன்னு இன்னொரு கூட்டம் கேக்குது//

  இது அமெரிக்கன் விழாவே இல்ல டீச்சர். copy from Ireland :-)

  //கூடவே வரும் அவுங்க வீட்டுப்பூனையைப்
  பார்த்தால்தான் சிரிப்பு வந்துரும்:-)))//

  என்னடா பூனையப் பற்றி டீச்சர் இன்னும் சொல்லலையேன்னு நினைச்சேன்.:-)
  அந்தப் பூனைக்கும் மாஸ்க் போட்டு, சிங்காரிச்சு...ஒரே ஜாலி தான் போங்க!

  ReplyDelete
 9. //வெட்டிப்பயல் said...
  நானும் இப்ப அதுக்குதான் எங்க மேனஜர் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்!!!//

  அட வாங்க பாலாஜி; பேய் வீட்டுக்குப் போகச் சொன்னா நீங்க தேவதை வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கீங்க :-)))

  //நாங்க தீபாவளி பற்றி பெரிய லக்சர் கொடுத்தோம் :-)//

  அட,ஆமாம், candies-க்குப் பதில் அதிரசம்; பேய் உடைக்குப் பதில் பட்டுப் பாவாடை...வீடு வீடாப் போய் ஒரு வெட்டு வெட்டிட்டு வர்றதை மட்டும் வெளியில சொல்லிடாதீங்க :-)

  ReplyDelete
 10. //வடுவூர் குமார் said...
  இந்த விழா பற்றி பல நாட்கள் இருந்த சந்தேகம் தீர்ந்தது.
  இங்க அதெல்லாம் கிடையாது.//

  வாங்க குமார் சார்; ஓ இந்த விழா பற்றி பல நாட்கள் சந்தேகமா உங்களுக்கு? அந்த ஊர்ல இல்லின்னா என்ன? இப்படி ஒரு எட்டு வந்துட்டுக் கொண்டாடிட்டுப் போங்க!

  ReplyDelete
 11. //padippavan said...
  If I have read your article first I would have given some candies to them.//

  அட இத்தாலி குட்டீஸ் கூட கும்மாளம் மிஸ் பண்ணிட்டீங்களா? சரி பரவாயில்ல. அடுத்த வருடம் ஜமாய்ச்சிடுங்க!!

  ReplyDelete
 12. //Hariharan # 26491540 said:
  இங்க மிடில் ஈஸ்ட்ல இந்தவிழா வந்தா இம்மக்கள் யாரும் பேயா வேசம் போட வேண்டிய அவசியம் கிடையாது.
  தினமுமே இந்திய / வெளிநாட்டு உழைப்பாள மக்களின் உழைப்பை பேயாத் திருடறவங்கதானே...//

  வாங்க ஹரிஹரன் சார்.
  இங்கே பேய் வேடம் என்பது குழந்தைகளுக்கும், அவர்களை மகிழ்விப்பவர்களுக்கும் தான்!
  மிடில் ஈஸ்ட்ல குழந்தைகள் விழான்னு ஏதாச்சும் இருந்தா சொல்லுங்களேன்!

  நீங்க உழைப்புத் திருட்டு என்று சொன்னவுடன், வேறு சில பேய்களும் நினைவுக்கு வருகின்றன. அகப்பேய் சித்தர் பாடல்களைத் தான் படிக்கவேணும்!

  ReplyDelete
 13. ஹேலோவீன்....எனக்கும் பிடித்த பண்டிகைதான். அடுத்த ஆண்டு கொண்டாடலாம் என்று இருக்கிறேன். :-) இந்தியாவில் இதெல்லாம் ஆகுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

  எந்தவொரு பண்டிகையும் காலப்போக்கில் அதன் தன்மை மாறும். என்னதான் சொல்லியோ செய்தோ மாற்றாமல் வைத்திருந்தால் மொத்தமாய் மாறிவிடும்.

  // துளசி கோபால் said...
  இதுக்கு மஞ்சள் பூசணிதானே பயன் படுத்தறாங்க. போட்டும். நல்ல வேளை வெள்ளைப்பூசணி இல்லை.
  அது கிடைச்சாத்தான் சாம்பார், மோர்குழம்பு, கூட்டுன்னு ஜமாய்ச்சுருவேனே. //

  டீச்சர். தமிழில் பூசணிக்காய் என்றாலே மஞ்சள் நிறத்தில் இருப்பதுதான். வெள்ளைப் பூசணிக்காய் என்று நீங்கள் குறிப்பிடுவது தமிழில் தடியங்காய் எனப்படும். இன்றைக்குப் பலர் தடியங்காயைப் பூசணிக்காய் என்றும் அல்லது சாம்பல் பூசணியென்றும் சொல்லி விட்டு உண்மையான பூசணிக்காய்க்கு மஞ்சள் பூசணி என்று பெயர் வைத்து விட்டார்கள். கொடுமை. கொடுமை. பூசணிக்காய் நலச்சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இதை எதிர்த்துப் பல காய்கறிக்கடைகளில் குரல் கொடுத்திருக்கிறேன் என்பதை மிகத்தாழ்மையுடன் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வாழ்க பூசணி. வளர்க அதன் புகழ்.

  // வெட்டிப்பயல் said...
  நானும் இப்ப அதுக்குதான் எங்க மேனஜர் வீட்டுக்கு போயிட்டு வந்தேன்!!!

  வீட்டின் லானில் நெருப்பு வைத்து அதில் marsh mellows கொளுத்தி அதை பிஸ்கெட் துண்டிகளின் நடுவில் வைத்து கொடுத்தார். //

  யாருப்பா அவரு?

  ReplyDelete
 14. மிக நல்ல உபயோகமான தகவல் அடங்கிய பதிவு இது, ரவி.

  இதைப் பற்றி நான் மிகவும் யோசித்திருக்கிறேன்.

  கிட்டத்தட்ட இந்த நாட்களில்தான், நம்மூரிலும், சிறுவர், சிறுமியர், பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து, வீடு வீடாய்ப் போய் சுண்டல் வாங்கச் செல்வார்கள்.

  கிட்டத்தட்ட அனைவரிடமும் இந்த ஒரு வழக்கம் இருந்திருக்கிறது, அவரவர் கலாச்சாரத்திற்கேற்ப மாற்றி கொண்டாடுகிறார்கள் என நினைப்பதுண்டு.

  ReplyDelete
 15. 5 கிலோ மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகளுக்கு வாரி வாரி வழங்கினேன். குளிர் அதிகமாக -7 டிகிரி சி ஆக இருந்ததால் அதிக குழந்தைகள் வரவில்லை. ஆகையால் இன்று ஆபிஸில். நேற்றைக்கு ஆபிஸில் நிறைய "சூனிய காரிகளும்" "எலும்புகூடுகளும்" இருந்தனர்.

  எனக்கு பிடித்த பண்டிகைகளில் இதுவும் ஒன்று

  ReplyDelete
 16. நான் கொடுத்த ச்சுட்டியைப் பார்த்தீங்களா? :-)))

  ReplyDelete
 17. அய்யோ..யாராவது பூசணி,பரங்கி வித்யாசம் சொல்லுங்களேன்..படத்துல இருக்கறது பரங்கிக்காய்னு நினைக்கிறேன்..

  ReplyDelete
 18. //துளசி கோபால் said...
  நான் கொடுத்த ச்சுட்டியைப் பார்த்தீங்களா? :-))) //

  பாத்தேன் டீச்சர்; நெஜமாலுமே பேயாட்டம் தான் போட்டு இருக்குதுங்க அந்த வால் பசங்க. லெட்டர் பாக்ஸில் எல்லாம் ராக்கெட் வைப்பாங்களா? என்னப்பா இது சவுத் ஐலேண்டுக்கு வந்த கொடுமை :-)
  சரி நேத்து ஹாலோவீன் அதுவுமா, பசங்களைப் பதிவில திட்ட வேணாம்னு தான் நான் ஒண்ணும் சொல்லலை. :-))
  டீச்சர், இந்த மாதிரி வால்களை நீங்க எப்படி மேனேஜ் பண்ணறீங்களோ?

  ReplyDelete
 19. //இந்தியாவில் இதெல்லாம் ஆகுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டும்.//

  SK வின் பின்னூட்டம் பாருங்கள் ஜிரா; பேய்களுக்கு விழா எடுக்கவில்லையே தவிர, இது போல் வீடு வீடாகப் போய் சுண்டல் வாங்குவதும், வீ்டு வீடாகப் போய் நாம் அவர்களுக்கு இனிப்பு தருவதும் நம் பண்பாட்டிலும் உண்டே!

  //எந்தவொரு பண்டிகையும் காலப்போக்கில் அதன் தன்மை மாறும். என்னதான் சொல்லியோ செய்தோ மாற்றாமல் வைத்திருந்தால் மொத்தமாய் மாறிவிடும்//

  மாற்றம் ஒன்றே மானிடத் தத்துவம்?:-)

  //பூசணிக்காய் நலச்சங்கத்தின் தலைவர்// ஜிரா வாழ்க வாழ்க! ஒரு பெரிய பூசணியாப் பாத்து சுத்திப் போடுங்கப்பா...

  ReplyDelete
 20. //மிக நல்ல உபயோகமான தகவல் அடங்கிய பதிவு இது, ரவி.//

  வாங்க SK ஐயா. நன்றி!

  //கிட்டத்தட்ட இந்த நாட்களில்தான், நம்மூரிலும், சிறுவர், சிறுமியர், பல்வேறு வண்ண ஆடைகள் அணிந்து, வீடு வீடாய்ப் போய் சுண்டல் வாங்கச் செல்வார்கள்//

  சரியாச் சொன்னீங்க! நாம கொள்வது மட்டும் அன்றி கொடுக்கவும் செய்வோம்!
  வீடு வீடாகப் போய் சுண்டல் வாங்குவதும், வீ்டு வீடாகப் போய் நாம் அவர்களுக்கு இனிப்பு தருவதும் நம் பண்பாட்டிலும் உண்டே!

  ReplyDelete
 21. // கால்கரி சிவா said...
  5 கிலோ மிட்டாய் வாங்கி வந்த குழந்தைகளுக்கு வாரி வாரி வழங்கினேன்.//

  வாங்க சிவா அண்ணா!
  குழந்தைகள் வாங்கும் போது அவற்றின் முகத்தைப் பாக்கணுமே (மாஸ்க் இல்லாமல் இருந்தால்)...:-)
  என்ன ஒரு சந்தோஷம் வீடு வீடாப் போறது...அதுவும் அமெரிக்கப் பெற்றோர் பொதுவாக முன்பின் தெரியாத வீட்டுக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அனுப்ப மாட்டார்கள் அல்லவா! அதுவும் குதூகலத்துக்கு ஒரு காரணமா இருக்கலாம்!

  உங்க பின்னூட்டம் பாத்த பிறகு தான் நினைவுக்கு வருகிறது. இது கனடாவிலும் கொண்டாடப்படுமே என்று! தலைப்பை அமெரிக்கா-ன்னு வச்சிட்டேனே! சரி வட அமெரிக்க கண்டம்ன்னு சொல்லி சமாளிச்சுக்க வேண்டியது தான் :-)
  அப்பிடின்னா ஐரோப்பாவிலும் உண்டேன்னு எதிர் கேள்வி கேட்டு கீட்டு வைக்காதீங்க :-)

  ReplyDelete
 22. //anamika said...
  அய்யோ..யாராவது பூசணி,பரங்கி வித்யாசம் சொல்லுங்களேன்..படத்துல இருக்கறது பரங்கிக்காய்னு நினைக்கிறேன்.. //

  அனாமிகா...எனக்குத் தெரியலையேம்மா...பேசாம நீங்க பூசணிக்கா நலச் சங்கத் தலைவரைக் கேட்டுடுங்களேன்! போட்டு உடைப்பாரு! பூசணிக்காய இல்ல! உங்களுக்குப் பதிலை!! :-))

  ReplyDelete
 23. இரவிசங்கர். நாங்க இந்த வருடம் மிட்டாயே வாங்கலை. போன வருடம் வாங்குன லாலி பாப் நிறைய மீதம் இருந்தது. எங்க பொண்ணு வருடம் முழுக்க சாப்பிட்டப் பின்னும் நிறைய மீதம் இருந்தது. அதைத் தான் இந்த வருடம் எல்லாருக்கும் கொடுத்தோம். இன்னும் ஒரு 20 லாலி பாப் இருக்கு. :-) இந்த வருடமும் போன வருடத்தைப் போல வீடு விடாய் போகவில்லை. எங்க இளவரசி வர்றவங்களுக்குத் தன் கையாலேயே லாலி பாப் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டா. எத்தனையோ தடவை உனக்கு மிட்டாய் வேணாமான்னு கேட்டுப் பார்த்தோம். வேண்டாம்னு சொல்லிட்டா.

  அனோகா ஊரைப் பத்தி தெரியும். ஆனால் அங்கே தான் ஹாலோவீன் ரொம்ப பிரபலம்னு இப்ப உங்க பதிவைப் படிச்ச பிறகு தான் தெரியும். :-)

  நல்ல நடையில் ஹாலோவீன் பத்தி சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 24. கண்ணபிரான் இந்த பேய் கலாச்சாரம் அங்கு மட்டுமில்லை சிங்கபூர்.சைனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் உள்ளது.இற்ந்தவர்களை வணங்குவது உலகெங்கும் கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தாலும் அது இந்தியாவில் எள்ளி நகையாடப்ப்டுகிறது.நானும் இந்த நாளைக் கொண்டாடுவேன் ஆனால் அது திருமண நாளாக

  ReplyDelete
 25. //குமரன் (Kumaran) said...
  இன்னும் ஒரு 20 லாலி பாப் இருக்கு. :-) இந்த வருடமும் போன வருடத்தைப் போல வீடு விடாய் போகவில்லை. எங்க இளவரசி வர்றவங்களுக்குத் தன் கையாலேயே லாலி பாப் கொடுக்கணும்ன்னு சொல்லிட்டா. எத்தனையோ தடவை உனக்கு மிட்டாய் வேணாமான்னு கேட்டுப் பார்த்தோம். வேண்டாம்னு சொல்லிட்டா//

  பாத்தீங்களா. எவ்வளவு நல்ல, சமத்துப் பொண்ணு! பாருங்க அப்பாவுக்கு இந்த ஆண்டு செலவே வைக்கல!

  குட்டி,
  அப்பாவிடம் நீ இப்படியெல்லாம் சொல்லி விடாதே;
  அப்புறம் "சொல்வது ஒன்று புரிவது ஒன்று" என்று பதிவு போட்டு எஸ்கேப் ஆயிடுவாரு!
  "கேளுங்கள் கொடுக்கப்படும்" ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க! என்ன புரியுதாம்மா?

  ReplyDelete
 26. //தி. ரா. ச.(T.R.C.) said...
  கண்ணபிரான் இந்த பேய் கலாச்சாரம் அங்கு மட்டுமில்லை சிங்கபூர்.சைனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் உள்ளது.இற்ந்தவர்களை வணங்குவது உலகெங்கும் கொண்டாடும் ஒரு வழக்கம் இருந்தாலும் அது இந்தியாவில் எள்ளி நகையாடப்ப்டுகிறது//

  வாங்க திராச!
  அப்படியா ஐயா? உலகெங்கும் கொண்டாடும் ஒரு வழக்கம் அரசல் புரசலாத் தான் எனக்குத் தெரியும். எதோ அந்த மட்டும் "நீத்தார் பெருமை" நினைவு வச்சுக்குறாங்களே! நல்லது தான்!!

  ReplyDelete
 27. ரவி சங்கர்

  நல்ல பதிவுங்க..

  நன்றி

  ReplyDelete
 28. //'அட நாம அட்ரெஸ் மாறி நம்ம ஆளுங்க இருக்கும் இடத்துக்கே வந்து விட்டோம் போல//

  :) ஹஹா! நல்ல திறனாய்வு! நேரம் கிடைக்கும் போது பிற பதிவுகளையும் படிக்கிறேன். மல்லாரிக்கு மிக்க நன்றி. ஒரு நிமிடத்தில் கல்லிடைக்கே சென்று வந்து விட்டேன். :)

  ReplyDelete
 29. இது கொண்டாட்டமோ! வியாதியோ!! இங்கேயும் 10 வருசமா???தொத்திவிட்டது. இது பிரான்சியர் முணுமுணுப்பு, எனினும் இந்த வியாபாரத் தந்திரத்தை வியாபாரிகள் நன்கு பயன் படுத்துகிறார்கள்;
  நம்ம வீட்டுக் கதவையும் தட்டி மிட்டாய் வாங்கிச் சென்றாங்க!!!பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும்; அந்தக் கலகலப்பு,கும்மாளம்; பின்பு மிட்டாய் பங்கிடல் நல்லாதான் பிள்ளைகள் செய்கிறார்கள்.
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 30. சிபா - வருகைக்கு நன்றி

  அம்பி
  //ஹஹா! நல்ல திறனாய்வு! நேரம் கிடைக்கும் போது பிற பதிவுகளையும் படிக்கிறேன்//
  வாங்க! அவசியம் வந்து பாத்துட்டு உங்க கருத்து சொல்லுங்க!
  மல்லாரி பற்றி தனிப் பதிவும் பின்னர் இடுகிறேன்!

  ReplyDelete
 31. //Johan-Paris said...
  இது கொண்டாட்டமோ! வியாதியோ!! இங்கேயும் 10 வருசமா???தொத்திவிட்டது. இது பிரான்சியர் முணுமுணுப்பு, எனினும் இந்த வியாபாரத் தந்திரத்தை வியாபாரிகள் நன்கு பயன் படுத்துகிறார்கள்;//

  வாங்க யோகன் அண்ணா, கொண்டாட்டமாகவே இருந்துட்டுப் போகட்டும்! நம்மள போல தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி ன்னு அவ்வளவாப் பண்டிகை இல்லையே! பாவம் குழந்தைகள்!

  //நம்ம வீட்டுக் கதவையும் தட்டி மிட்டாய் வாங்கிச் சென்றாங்க!!!பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும்; அந்தக் கலகலப்பு,கும்மாளம்; பின்பு மிட்டாய் பங்கிடல் நல்லாதான் பிள்ளைகள் செய்கிறார்கள்.//
  :-)))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP