Thursday, October 26, 2006

சென்னையிலே செந்திலாண்டவர் ஷோக்கா கீறாரா?

"தருமம் மிகு சென்னை" என்று எழுதும் போதே, அதன் செந்தமிழ் அப்படியே வந்து தென்றலாய்(?) ஒட்டிக் கொள்கிறது:-) என்ன செய்ய!

"அது சரி...அது இன்னாப்பா 'தருமம் மிகு சென்னை'?
மெட்ராஸ்-க்குள்ள அம்மாந் தருமம் கீதா? இல்லாங்காட்டி நீயா எதுனா பிகிலு வுடுறியா? மேட்டருக்கு ஸ்டெரெயிட்டா வா மாமே", என்று அங்கு செளகார்பேட்டையில் யாரோ மொழிவது, இங்கு என் காதில் தேன் வந்து பாய்கிறது!
அதனால ஸ்டெரெயிட்டா மேட்டருக்கு வருகிறேன்! இன்று கந்த சஷ்டி!! (Oct 27, 2006)

(ஒவ்வொரு அமாவாசை/பெளர்ணமி முடிந்து ஆறாவதாக வரும் நாளே சஷ்டி! வடமொழியில் சஷ்டி என்றால் ஆறாம் நம்பர்! முருகனுக்குரிய நாள்!
அப்பிடின்னா மத்த நாளுல்லாம் என்ன சும்மாவா?...பிறந்த நாள் அன்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்வதால், அப்ப மற்ற நாள் எல்லாம் அழுவணுமா என்று எடக்குவாதமா செய்கிறோம்? இல்லையே! :-)
அதே போல, எல்லா நாளும் இறைவன் நாளே! ஆனால் முருகனின் பல அருட்செயல்கள், சஷ்டி அன்று நிகழ்ந்ததால் சிறப்பு!)

தீபாவளி-அமாவாசை முடிந்து ஆறாவதாக வரும் நாள், கந்த சஷ்டி!



தருமம் மிகு சென்னை-ன்னு நான் சொல்லவில்லை! 'அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெருங் கருணை' என்று சொன்னாரே வள்ளலார்!!! அவர் தான் சென்னையை இப்படிச் சிறப்பிக்கிறார்! ஏன் தெரியுமா?
அங்கு வந்து குடி கொண்டான் ஒரு மிகப் பெரும் செல்வந்தன்! அவனால் தான் சென்னைக்கு இத்தனை பெருமை!
அவனிடம் 'எனக்கு அது கொடு, இது கொடு', என்று கேட்டுக் கேட்டு வாங்குகிறார் வள்ளலார்!
வள்ளலாரா இப்படி...சேச்சே இருக்காதுப்பா.... உண்மையான துறவிப்பா அவரு!
அப்ப இன்னா நான் சொல்லறது பொய்யா?
'வேண்டும் வேண்டும்', என்று அந்த அடியவர், வேண்டி வேண்டிப் பாடுவதைப், பதிவின் இறுதியில் காணலாம். அது சரி; அந்த செல்வந்தன் யாருன்னு நினைக்கிறீங்க? சாட்சாத் நம்ம முருகப்பெருமான் தான்!!

சென்னையில் இரண்டு கோட்டம் உண்டு;
ஒன்று வள்ளுவர் கோட்டம் - முப்பால் முனிவனுக்கு!
மற்றொன்று கந்த கோட்டம் - முப்பால் மொழியை முத்தமிழாய் தந்தவனுக்கு!
சென்னை பாரிமுனையில், (ஜார்ஜ் ட்வுன், பூக்கடை ஏரியா), ராசப்ப செட்டித் தெருவில் உள்ள இக்கோவில், சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று!
கந்த கோட்டம் என்று பெயர். கந்தசாமி கோயில் என்று தான் சென்னை மக்களிடையே பிரபலம்!
மிகப் பெரிய கோவில், குளம், மண்டபங்கள்; வெளியில் இருந்து பார்த்தால் கோபுரம் கூட கண்ணுக்குக் கஷ்டப்பட்டுத் தான் தெரியும். ஏன்னா இப்போ சுற்றிலும் அடுக்கு மாடிக் கடைகள், பாத்திரக் கடைகள், என்று வணிக வளாகம் போல் ஆகி விட்டது.

வடபழனிக் கோவிலுக்கும் முந்தியது. சென்னையின் முதல் கோவில்களுள் ஒன்று எனலாம்.
திருப்போரூர் வேம்புமரப் புற்றில் இருந்து மாரிச்செட்டியாரால் கொண்டு வரப்பட்ட முருகன். ஒரு கை வேலும், மறு கை அபயமும் காட்டி, வள்ளி, தேவயானையுடன் சாந்த சொரூபத் திருக்கோலம்.
ராமலிங்க வள்ளலார், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், அண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் என்று பல மகான்கள் வழிபட்ட தலம் என்று சென்னை வாசிகளுக்கே அவ்வளவாகத் தெரியாது!


மூலவர்
கந்தசுவாமி (ஓவியம்)


உற்சவர்
முத்துக்குமாரசுவாமி



கந்த சஷ்டி அன்று தெருவில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது
! திருச்செந்தூர் போலவே மிக அழகாக இருக்கும்!
பத்மாசுரன், தாருகன், சிங்கமுகன், இறுதியில் சூரபத்மன் ஆகியோர் மீது, சுவாமியின் திருக்கை வேல் பாயும் கம்பீரம் காணக் கண்கோடி வேண்டும்!
"சுற்றி நில்லாதே, போ பகையே! துள்ளி வருகுது வேல்!!" என்ற பாரதியாரின் கவிதை தான் நினைவுக்கு வரும்!
பின்னர் கொலு மண்டபத்தில், பேரழகன், தமிழ்ப்பாக்களுக்கு இசைந்து ஆடும் ஊஞ்சல் உற்சவம் அழகோ அழகு!
அடுத்த முறை சென்னை சென்றால், பாரீஸ் கார்னர் ஷாப்பிங் முடித்து, அவசியம் இந்த அழகனைக் கண்டு வாருங்கள்!

திருச்செந்தூர் சூரசங்காரம்
(படங்களுக்கு நன்றி: Chennai Online)



வேண்டாம் என்று சகலமும் துறந்த வள்ளலார், கந்த கோட்டம் வாழும் கந்தனைக் கண்டதும்,
'வேண்டும் வேண்டும்', என்று வேண்டி வேண்டிப் பாடுகிறார்; இதோ!
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம்உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்

பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்


மருவு பெண் ஆசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்

மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.

(பாடலின் சுட்டி கிடைத்து விட்டது; கேட்டு மகிழுங்கள். க்ளிக் செய்த பின், புதிய விண்டோவில், ராப்சடி ப்ளேயரில் திறக்கும்)
மிகவும் எளிமையான பாடல் தான்; அதனால் பொருளாக உரைக்க வில்லை! கவிதை நயம் மட்டும் சிறிது சுவைப்போம்.
தனக்காக எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. போனஸ் கொடு, நிலம் கொடு, பணம் கொடு, செல்வாக்கு கொடு, தேர்தலில் வெற்றி கொடு, எனக்குக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனுக்குத் தோல்வி கொடு, என்று எல்லாம் கேட்கவில்லை!
இந்தத் தலை நகர முருகனிடம், நற் சிந்தனைகள் தலைக்குள் நகர வேண்டிப் பாடுகிறார்.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற அடியார்கள் உறவு = அது என்ன ஒருமை?... அப்படின்னா பன்மை-ன்னு வேற இருக்கா? ஆமாம் இருக்கு!
பல எண்ணங்களுக்குள் ஆழ்ந்து போய், கடவுள் அன்பை, பத்தோட பதினொன்னு, அத்தோட இதுவும் ஒன்னு என்றில்லாமல்,
உலக வாழ்வில் பல கடமைகள், பன்மையாக இருந்தாலும், அவற்றை எல்லாம் நிறைவேற்றுவதோடு நின்று விடக் கூடாது;
இறை விழைவை, ஒருமையாக , primary ஆக, மனத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிகிறதோ இல்லையோ, மனத்தில் வைத்துக் கொண்டால் என்றாவது ஒரு நாள் துளிர் விடும் அல்லவா?
அப்படிப்பட்ட நல்ல இதயங்கள் உள்ளவரோடு பழகினாலே, அரைக்க அரைக்க அம்மிக்கும் வாசம் வந்து விடும். அதனால் அடியார் உறவை வேண்டுகிறார்.

உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார் உறவு கலவாமை = இது போன்ற ஆட்களை வெறுத்து ஒதுக்கச சொல்லவில்லை; ஆனால் உறவு கொண்டு, நாமும் அதில் கலந்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறார். அதனால் நாமும் கெட்டு, அவன் திருந்தும் வாய்ப்பையும் நாமே கெடுத்து விடுவோம்.

பெருமைபெறு நினது புகழ் பேசல் = இப்படிப் பேசிக் கொண்டு இருந்தாலே, 'வாசி வாசி' என்பது போய், 'சிவா சிவா' வந்து விடும்.
பொய்மை பேசாது இருத்தல் = பொய்யும் சொல்லிட்டு, சப்பைக்கட்டு கட்ட மேலும்மேலும் சொல்ல, வட்டி குட்டி போட்டு விடும்; அதனால் வேண்டாம் என்கிறார்.

பெருநெறி பிடித்து ஒழுகல் = அவன் நெறி (ஒழுக்கம்) பிடித்துக் கொண்ட பின், தவறவிட்டு விடக் கூடாது. அப்பறம் right from scratch என்று ஆகி விடும்.
மதமான பேய் பிடியாது இருத்தல் = இது மிக முக்கியம்; 'ஆன்மீகம்' என்ற தேவதை போய், 'மதம்' என்று பேய் பிடித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் இறங்காது! மதம் பிடித்த யானை போல் ஊரையே ஒருவழி பண்ணிவிடும்.

மருவு பெண் ஆசை மறத்தல் = பெண்ணை ஆணோ, ஆணை பெண்ணோ, விட்டுவிட்டு ஓடச் சொல்லவில்லை; அதையே பிடித்து உழன்று கொண்டு இல்லாமல் (மருவு), பருவ தாகம் தீர்ந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக காமத்தை மறந்து (மன மருத்துவர்கள் கவனிக்கவும்: 'மறந்து' தான்; 'துறந்து' இல்லை), காதலை முன்னுக்குத் தள்ளச் சொல்கிறார்.

உனை என்றும் மறவாது இருத்தல் = இது தான் கொஞ்சம் கஷ்டமோ கஷ்டம்; ஆனால் முயற்சி வேண்டும்.

மதி = குதர்க்கம் பேசாத நல்லறிவு
கருணைநிதி = அய்யோ...நம்ம தமிழக முதல்வர்-ன்னு யாரும் தப்பா நினைச்சி வம்புக்கு வந்துடாதீங்கப்பா! வள்ளலார் சொல்வது இறைவனின் கருணை தான், நமக்குப் பெரிய நிதி; அதுவே கருணாநிதி! அருட்செல்வம்!! மிக அழகிய சொல் இது!
நோயற்ற வாழ்வில் வாழல் = இது துறவிக்கும் தேவையான ஒன்று! சுவர் இருந்தால் தான் சித்திரம்!!

பல தான தருமங்கள் நடக்கும் தலை நகரமாம் சென்னையில் உள்ள கந்த கோட்டத்து கந்தசாமியே!
அடியேன் இப்படி 'வேண்டும் வேண்டும்' என்று கேட்டது எல்லாம் தானமாகத் தாப்பா! எனக்கு மட்டும் இல்லை; அன்பர் எல்லார்க்கும் தா! (அவர்கள் கேட்காவிட்டாலும், அவர்கள் சார்பாக நான் தான் கேட்டு விட்டேனே!);
அன்பர் அனைவருக்கும் அருள் செய்யப்பா, ஆறுமுகத் தெய்வமணியே!!

50 comments:

  1. அவருக்கென்னப்பா ஷோக்காத்தான் இருப்பார். இன்னிக்கு கந்தசஷ்டிவேற, கேக்கணுமா? :-)))

    //மதமான பேய் பிடியாது இருத்தல்//

    ஸோ.... அப்ப இருந்தே இந்தப் பேய், ஆடு ஆடுன்னு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு. இன்னும் அடங்கலை(-:

    ReplyDelete
  2. கண்ணபிரான் இரவி சங்கர்,

    நன்றாக எழுதியுள்ளீர்கள்..

    ReplyDelete
  3. கந்ஸாமி கோயில பத்தி சும்மா கும்முன்னு சூப்பர் கதி சொல்லிக்கிறபா. டக்கராக்கீதுபா.

    ReplyDelete
  4. முதல் பேரா படிச்சிட்டு நான் வெத்தலை வாங்கிகறேனுங்க...நமக்கும் சைவ சாமிக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்... :-)

    ReplyDelete
  5. அப்புறம் ஒரு மேட்டர் உங்க IP tracking ல இருக்கும் வார்தைகள சுட்டு நானும் போட்டுட்டேன்...பேச்சு பேச்சா தான் இருக்கனும் ராயல்டி எல்லாம் கேக்கப்பிடாது :-)

    ReplyDelete
  6. இதுதான் அந்த தருமம் மிகு சென்னையின் ரகசியமா???

    அருமையா எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  7. Blogger மாலை சுமார் 5:30 மணிக்கு, ஒரே பேஜார் பண்ணப்ப, நம்ம துளசி டீச்சர் அனுப்பிய தனி மடல் இது!
    டீச்சரே இப்படி 'செந்தமிழில்' வெளுத்து வாங்கினால், மாணவர்கள் வாளா இருத்தல் முறையோ?

    அதான் மாணவர்களின் ஒரு இன்ஸ்பிரேஷனுக்காக, பிரைவேட் இமெயிலை பப்ளிக்கா போட்டுற்றேன். கோவிச்சுக்காதீங்க டீச்சர்! :-)
    ------------------------------------
    KRS,

    உங்க பதிவைப் படிக்கறதுக்குள்ளே சஷ்டி போய் சப்தமி வந்துரும்போல இருக்கு.
    ஒரு வழியாப் படிச்சுட்டாலும், பின்னூட்டம் போட முடியலையேப்பா.

    கூகுள் என்னவோ எர்ரர்ன்னு கூவிக்கிட்டு இருக்கு. கொஞ்சம் என்னான்னு பாரு நைனா...
    ( அய்ய்யோ எனக்கும் இந்த சென்னைத்தமிழ் ஒட்டிக்கிச்சே:-)))...)

    என்றும் அன்புடன்,
    துளசி
    ------------------------------------

    ReplyDelete
  8. ஆகா இன்று கந்த சஷ்டியா?

    கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான பதிவை இந்நாளில் வழங்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?

    சந்தடி சாக்கில் ஒரு விளம்பரம் செய்து கொள்கிறேன்:-)

    10 நாள் வெளியூர் செல்கிறேன். நவம்பர் 10 அன்று தான் ஊர் திரும்புவேன். அதுவரை நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. கண்ணபிரான் ரவி, எத்தனை நல்ல பாடல். இது ஒரு மந்திரம் போதும் தினம் சொல்ல மனம் சுத்தமாகும்.
    சூலமங்கலம் சகோதரிகள் ஒரு படத்தில் பாடிய இந்தப் பாடலைத் தேடி டௌன்லோட் செய்ய முயற்சிக்கிறேன்.நடக்கலை.
    கந்தகோட்டம் முருகன் அலங்காரம்
    ரொம்ப அழகா இருக்கும். சுத்தமான குளம்,மீன்கள் எல்லாமே அழகு.

    ReplyDelete
  10. கந்த கோட்டம். நமக்கெல்லாம் சொந்த கோட்டம். சென்னையில் வடபழநிக்குப் பலமுறை போயிருக்கிறேன். இந்தப் பக்கம் திருப்போரூரும் அந்தப் பக்கம் திருத்தணியும் கூட பலமுறை சென்றிருக்கிறேன். ஆனால் கந்த கோட்டம்? யாரிடம் கேட்டாலும் விடை கிடைக்கவில்லை. பாரீஸ் போய் போகனும்..எங்கயோ இடுக்குல இருக்குன்னு மட்டுமே சொல்லக் கேட்டேன்.

    ஒரு நாள் மைத்துனனுடன் பைக்கில் ஏறிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டோம். குறுகலான சந்து பொந்துகள். ஆனால் அதற்குள் ஒரு அழகிய கோட்டம். கோயிலுக்குள் நல்லதொரு தெப்பம். அதுவும் தூய்மையாக. வள்ளலார் வணங்கிய அந்தத் திருக்கோயிலில் நானும் முருகனை வணங்கினேன். மகிழ்ந்தேன்.

    அடுத்து நேரம் கிடைத்தால் மீண்டும் செல்ல வேண்டும். முருகனடியவர்கள் ஒருமுறையாவது செல்ல வேண்டிய திருக்கோயில் அது.

    சஷ்டி நாளன்று இந்தப் பதிவு தந்து உளத்தின் குளத்தில் வள்ளலாரின் ஞானமழை பொழிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
  12. ராசா, கொஞ்ச்ம் உன் பாண்டை (fontஐ pantஐ இல்லை!) பெர்சு பண்ணு ராசா, என்ன மாரி நாலு கண்ணு பார்ட்டிங்க படிக்க சொல்ல பேஜாராக்கீது.

    ReplyDelete
  13. என்னாடா இது காத்தாலேந்து இப்படி வானம் பொத்துகிட்டு ஊத்துதே முருகன் கோவிலிக்கு கூட போகமுடியலயே சரி இன்னிக்கி முருகன் தரிசனம் அவ்வள்வுதான் என்று நினைத்து மடிக்கணியை திறந்து "ஷ்ண்மதச்செம்மல்" கே.ஆர்.ஸ். என்ன சொல்லரார்னு பாத்தேன்.பாத்தா நான் அடிக்கடி போகும் கந்தக்கோட்டம் "ஒரு திரு முருகன் உதித்தணன் உலகம் ஊய்ய" மட்டும் அல்லாது என்னையும் ஆட்கொள்ள எப்படி வந்தான் தெரியுமா
    சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்
    தார்கொண்ட பன்னிரு தோள்களும்
    தாமரைத்தாள்களும்
    ஓர் கூர்கொண்ட வேலும்,மயிலும்
    நற் கோழிக்கொடியும்
    அருட்கார்கொண்ட வண்மைத் தணிகசலமும்
    என் கண்ணுற்றதே
    அது என்ன என் கண்ணுற்றதே பின்னே என்னா காதா பார்க்கும்?,வள்ளார் தப்பாவா சொல்லுவார்?
    மேலே சொன்ன சீர்கொண்ட.....தணிகாசலமும் எல்லாம் யுகம் யுகமா இருக்கு இப்ப வந்தது இல்லை ஆனால் என் பாழும் கண்ணுக்கு இப்பொழுதுதான் தெரிந்தது என்ற பொருளில் கூறுகிறார்.
    நன்றி

    ReplyDelete
  14. ரவி சங்கர்!
    இக் கந்த சஷ்டி நிறைவு நாளில் அழகான படங்களுடன், வள்ளலார் பாடல்களுடன் அருமையான பதிவு.
    யோகன் பாரிஸ்

    ReplyDelete
  15. //Sivabalan said:
    கண்ணபிரான் இரவி சங்கர்,
    நன்றாக எழுதியுள்ளீர்கள்..//

    வாங்க சிவபாலன்; சஷ்டி அதுவுமா, சிவபாலன் என்ற முருகன் பெயரில் இருந்து ஆரம்பப் பின்னூட்டம்; மெய்யாலுமே இது ஷோக்கா கீதே! :-)

    ReplyDelete
  16. //துளசி கோபால் said...
    //மதமான பேய் பிடியாது இருத்தல்//

    ஸோ.... அப்ப இருந்தே இந்தப் பேய், ஆடு ஆடுன்னு ஆடிக்கிட்டுத்தான் இருக்கு. இன்னும் அடங்கலை(-: //

    ஆமாம் டீச்சர்; 'மதம் பிடித்த யானை போல் ஊரையே ஒருவழி பண்ணிவிடும்' என்று அதான் போட்டேன்; அது அடங்கணும்னா இன்னும் கொஞ்சம் பெரியார்கள் வர வேண்டியிருக்கு! :-)

    ReplyDelete
  17. //இலவசக்கொத்தனார் said...
    கந்ஸாமி கோயில பத்தி சும்மா கும்முன்னு சூப்பர் கதி சொல்லிக்கிறபா. டக்கராக்கீதுபா. //

    கொத்ஸ்
    ரொம்ப டேங்ஸ், பா!
    எல்லாம் அந்த கந்சாமி சொல்றான்; இந்த கண்ணபிரான் செய்யரான் பா:-)

    ReplyDelete
  18. //Syam said...
    நமக்கும் சைவ சாமிக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்... :-)//

    வாங்க சியாம்; அதனால் என்ன? ரொம்ப தூரம்னா, flight புடிச்சு வாங்க! :-) டிக்கட் வேணும்னா கந்தசாமி கிட்ட சொல்லி அனுப்பச் சொல்றேன். :-)

    //ராயல்டி எல்லாம் கேக்கப்பிடாது :-)//

    சேச்சே; உங்க கிட்ட போய் அதெல்லாம் கேட்பேனா? 'open source மாமே!' என்று ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்! உங்களுக்கு இல்லாததா. அள்ளிக்கோங்க!

    ReplyDelete
  19. //வெட்டிப்பயல் said...
    இதுதான் அந்த தருமம் மிகு சென்னையின் ரகசியமா???//

    வாங்க பாலாஜி; இது தான் அந்த தங்கமலை ரகசியம்! முதல் பெஞ்சிலே உட்கார்ந்து கப்புனு புடிச்சிக்கிட்டீங்க பாருங்க; இது! படிக்கிற புள்ளைக்கு நீங்க தான் பா எக்ஜாம்பிள்!

    ReplyDelete
  20. பள்ளியிறுதி முடித்துவிட்டு கல்லூரிக்குச் சேரும் முன் ஒரு முறை பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தேன். அப்போது கந்தகோட்டம் செல்ல விரும்பி தனியாக பேருந்து ஏறி பாரிமுனைக்குச் சென்றுவிட்டேன். அங்கே ஒரு ரிக்சாகாரரிடம் கந்தகோட்டம் எங்க இருக்குன்னு கேட்டா தெரியலை. பல பேரைக் கேட்டுப் பாத்தேன். யாருக்கும் தெரியலை. கடைசியில ஒரு பெரியவர் 'அதாம்பா கண்சாமி கோவில்' என ரிக்சாகாரரும் 'கண்சாமி கோவிலா. தம்பி. குந்துப்பா' என்று சொல்லி கோவில் வாசலில் கொண்டு போய் விட்டு ஐந்து ரூபாயும் பெற்றுக் கொண்டார். //கந்த கோட்டம் என்று பெயர். கந்தசாமி கோயில் என்று தான் சென்னை மக்களிடையே பிரபலம்! // இதனைப் படித்தவுடன் அது தான் நினைவிற்கு வந்தது. :-) அதன் பின் ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் வேங்கடகிருஷ்ணனையும் கற்பகத்தையும் கபாலியையும் கந்தசாமியையும் காணாமல் வருவதில்லை.

    ReplyDelete
  21. ஷண்மதச் செம்மல் வாழ்க வாழ்க.

    - அ.உ.ஷ.செ. நற்பணி மன்றத் தலைவர்.

    ReplyDelete
  22. //செல்வன் said...
    ஆகா இன்று கந்த சஷ்டியா?
    கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான பதிவை இந்நாளில் வழங்கிய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?//

    'முருகா' என்று ஒரு முறை சொல்லுங்க தலைவா; 'நன்றி' ன்னு நூறு தடவை சொன்னா மாதிரி! :-)

    //10 நாள் வெளியூர் செல்கிறேன். நவம்பர் 10 அன்று தான் ஊர் திரும்புவேன். அதுவரை நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்றுக் கொள்கிறேன்//

    தலைவா...தமிழ்மணத்தின் கதியை நினைச்சுப் பாத்து ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க! வெளியூர் போனாலும் அப்பப்ப எட்டிப் பாருங்க! 4 நாளைக்கு ஒரு மினி பதிவாச்சும் போட்டு, பக்த கோடிகளைக் காப்பாத்துங்க! :-)
    Have a safe and pleasant journey!

    ReplyDelete
  23. //வாங்க பாலாஜி; இது தான் அந்த தங்கமலை ரகசியம்! முதல் பெஞ்சிலே உட்கார்ந்து கப்புனு புடிச்சிக்கிட்டீங்க பாருங்க; இது! படிக்கிற புள்ளைக்கு நீங்க தான் பா எக்ஜாம்பிள்!
    //
    இத கேட்டா படிக்கிற புள்ளைங்க எல்லாம் பள்ளி கூடம் வரதையே நிறுத்திடுவாங்க ;)

    ReplyDelete
  24. நல்ல பதிவு...ரவி சங்கர் கண்னபிரான்

    கந்த சஷ்டியன்று படித்தது நிறைவு

    நன்றி

    ReplyDelete
  25. //வல்லிசிம்ஹன் said:
    கண்ணபிரான் ரவி, எத்தனை நல்ல பாடல். இது ஒரு மந்திரம் போதும் தினம் சொல்ல மனம் சுத்தமாகும்.//

    மிகவும் உண்மை வல்லியம்மா; தின வழிபாட்டில் இதைச் சேர்த்துக் கொள்வது எவ்வளவு அமைதியும் ஆனந்தமும் தரும் என்பதை உங்களைப் போன்று அனுபவித்துச் சொல்பவர்கள், சொன்னால்...இதை பல பேர் பிடித்துக் கொள்வார்கள்!

    //சூலமங்கலம் சகோதரிகள் ஒரு படத்தில் பாடிய இந்தப் பாடலைத் தேடி டௌன்லோட் செய்ய முயற்சிக்கிறேன்//

    படம் பேர்: கொஞ்சும் சலங்கை!
    ஜெமினி, சாவித்திரியின் 'சிங்கார வேலனே தேவா' பாடல் மிகவும் புகழ் பெற்றது!
    அதே திரைப்படத்தில் பதிவில் உள்ள வள்ளலார் பாடல், சூலமங்கலம் பாடிக் கேட்க மிகவும் அருமையாக இருக்கும்!
    நானும் musicindiaonline-இல் தேடினேன்; கிட்டவில்லை!
    நண்பர்கள் யாராவது வந்து சுட்டி கொடுத்தால் எல்லாரும் மகிழ்வோம்!

    (நித்யஸ்ரீ, அனுராதாஸ்ரீராம் என்று பலர் இதைப் பாடி உள்ளார்கள்; சுட்டி தான் கிடைக்க மாட்டேன் என்கிறது....)

    ReplyDelete
  26. //G.Ragavan said:
    கந்த கோட்டம். நமக்கெல்லாம் சொந்த கோட்டம். சென்னையில்.. கந்த கோட்டம்? யாரிடம் கேட்டாலும் விடை கிடைக்கவில்லை. பாரீஸ் போய் போகனும்..எங்கயோ இடுக்குல இருக்குன்னு மட்டுமே சொல்லக் கேட்டேன்//

    வெளியூர் அன்பர் அனைவரின் வசதிக்காக:
    ----------------------------------
    பாரீஸ் பூக்கடை காவல் நிலையத்தில் இருந்து, வழி மிக எளிது. அங்கிருந்து சென்ட்ரல் நோக்கிச் செல்லும் சாலையில், மசூதி அருகே சாலை திரும்பும் போது, வலப்பக்கத்தில் ராசப்ப செட்டித் தெரு; மிகவும் குறுகலானது! ஆனால் கோபுரம் தெரியும்! கந்த கோட்டம் என்று கேட்க வேண்டாம்; கந்தசாமி கோயில் என்று கேளுங்கள்! பல பேர் சொல்லுவார்கள்!

    //ஆனால் அதற்குள் ஒரு அழகிய கோட்டம். கோயிலுக்குள் நல்லதொரு தெப்பம். அதுவும் தூய்மையாக//

    தெப்பம்=குளம்?
    சரவணப் பொய்கை...அய்யோ அதில் ஜிலு ஜிலு மீன்கள்; வல்லியம்மா சொன்ன மாதிரி ரொம்பவும் சூப்பர்!

    //சஷ்டி நாளன்று இந்தப் பதிவு தந்து உளத்தின் குளத்தில் வள்ளலாரின் ஞானமழை பொழிந்தமைக்கு நன்றி//

    அழகிய தமிழ்மழை பின்னூட்டக் குளத்தில் பொழிந்தமைக்கும் நன்றி ஜிரா!

    ReplyDelete
  27. //பூங்குழலி said...
    பதிவுக்கு நன்றி.. //

    வாங்க "பூவேற்றி - பூங்குழலி" :-)
    தங்கள் முதல் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  28. //இலவசக்கொத்தனார் said...
    ராசா, கொஞ்ச்ம் உன் பாண்டை (fontஐ pantஐ இல்லை!) பெர்சு பண்ணு ராசா, என்ன மாரி நாலு கண்ணு பார்ட்டிங்க படிக்க சொல்ல பேஜாராக்கீது//

    கொத்ஸ், மீள் வருகைக்கு நன்றி!
    (இன்னாது மீன் வறுக்கறுத்துக்கு நன்றியான்னு கேட்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும் :-))

    அடி மடியில் சேச்சே அடி பாண்டிலேயே (பாண்ட் பாக்கெட்டில்?) கை வைக்கறீங்களோ நினைச்சேன்,பா! சென்னைத் தமிழா!

    அப்பறம் தான் தெரிஞ்சுச்சு, கணினி font-ஐச் சொல்லுறீங்கன்னு!
    பெர்சு பண்ணிடரேன் ராசா!
    பதிவு font கும்முனுன்னு தானே கீது?
    கமெண்ட் செகஷன் சொல்றீயா நைனா??

    ReplyDelete
  29. //தி. ரா. ச.(T.R.C.) said:
    என்னாடா இது காத்தாலேந்து இப்படி வானம் பொத்துகிட்டு ஊத்துதே முருகன் கோவிலிக்கு கூட போகமுடியலயே//

    வாங்க திராச; என்ன பேரனுடன் விளையாடுவதில் ஒரே பிஸியா நீங்க?
    மழை நின்றவுடன் ஆலயம் செல்ல முடிந்ததா? நிம்மல் (நிர்மல்) குழந்தைப் பதிவாளர் லாப்டாப்பில் பதிவு போட ஆரம்பிச்சுட்டாரா? :-))

    //அது என்ன என் கண்ணுற்றதே பின்னே என்னா காதா பார்க்கும்?//
    :-))
    "சீர்கொண்ட தெய்வ வதனங்கள்" என்ற பாட்டை எடுத்துக்கொடுத்து, முருகப் பெருமான் பாதாதி கேச வர்ணனை காட்டிய திராச ஐயாவுக்கு மிகவும் நன்றி!

    //எல்லாம் யுகம் யுகமா இருக்கு! இப்ப வந்தது இல்லை! ஆனால் என் பாழும் கண்ணுக்கு இப்பொழுதுதான் தெரிந்தது//

    திராச, இதை நீங்கள் சொல்லும் போது, எனக்கு என் கண்களும் மனதும் இன்னும் எதை எதை எல்லாம் காணாமல் இருக்கிறோம் என்று...ஹூம்!

    //"ஷண்மதச்செம்மல்" கே.ஆர்.எஸ். என்ன சொல்லரார்னு பாத்தேன்.//

    அச்சச்சோ! திராச, கடைசியில் இப்படிக் குருவியின் தலையில் இவ்வளவு பெரிய பனம்பழத்தை வைத்து விட்டீர்களே! நியாயமா? பின்னாடியே குமரனைப் பாருங்க; இது தான் சான்ஸ் என்று 'சிக்கெனப்' பிடித்துக் கொண்டார்! இருங்க குமரன், உங்களிடம் வருகிறேன்!

    ReplyDelete
  30. //Johan-Paris said...
    ரவி சங்கர்!
    இக் கந்த சஷ்டி நிறைவு நாளில் அழகான படங்களுடன், வள்ளலார் பாடல்களுடன் அருமையான பதிவு//

    வாங்க யோகன் அண்ணா; மிக்க நன்றி!
    கவரிமா விடயம் என்ன ஆனது? பாடநூல் அதிகாரிகளுக்கு மடல் ஏதாச்சும் அனுப்பிச்சீங்களா? அப்பறம் சொல்ல மறந்துட்டேனே, ராமாயணத்திலும் "கவரிமா" வைக் கண்டேன்! வந்து உங்கள் பதிவிலேயே சொல்கிறேன்!

    ReplyDelete
  31. // குமரன் (Kumaran) said...
    அங்கே ஒரு ரிக்சாகாரரிடம் கந்தகோட்டம் எங்க இருக்குன்னு கேட்டா தெரியலை. 'அதாம்பா கண்சாமி கோவில்' என ரிக்சாகாரரும் 'கண்சாமி கோவிலா. தம்பி. குந்துப்பா' என்று சொல்லி//

    வாங்க குமரன்; ஜிராவும் இதே தான் சொல்லி இருந்தார்; அதனால் சுருக்கமாய் ஒரு யாஹூ மேப் மேலே பின்னூட்டத்தில் இட்டு விட்டேன்!
    அட, குமரன் போய் கந்தனைத் தேடலாமோ? நீங்க ரெண்டு பேரும் பேசி வச்சிக்கிட்டு, பாவம் அந்த ரிக்சாகாரரை நல்லா அலைய விட்டீர்களா? :-)

    கந்த கோட்டம் போலவே, காஞ்சியில் குமர கோட்டம் உள்ளது!

    //அதன் பின் ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் வேங்கடகிருஷ்ணனையும் கற்பகத்தையும் கபாலியையும் கந்தசாமியையும் காணாமல் வருவதில்லை//

    அம்மை, அப்பன், மாமன், மருகன் என்று குடும்பத்தில் உள்ள எல்லார் வீட்டுக்கும் ஒரு ரவுண்டு வரீங்க போல? :-))

    ReplyDelete
  32. //குமரன் (Kumaran) said...
    ஷண்மதச் செம்மல் வாழ்க வாழ்க.
    - அ.உ.ஷ.செ. நற்பணி மன்றத் தலைவர்//

    தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
    "வாழ்க வாழ்க" மட்டும் போதாதா?
    குருவி தலையில் பனம்பழம் தாங்குமா?
    கந்தசாமியே காப்பாத்துப்பா!

    ReplyDelete
  33. //அன்புடன்...ச.சங்கர் said...
    நல்ல பதிவு...ரவி சங்கர் கண்னபிரான்
    கந்த சஷ்டியன்று படித்தது நிறைவு//

    வாங்க சங்கர் சார்; தங்களைப் பற்றி, NJ இல் உள்ள நண்பர் சம்பத் எனக்குச் சொன்னார்! பின்னர் தனி மடல் இடுகிறேன்! மிக்க நன்றி.

    ReplyDelete
  34. ////குமரன் (Kumaran) said...
    ஷண்மதச் செம்மல் வாழ்க வாழ்க.
    - அ.உ.ஷ.செ. நற்பணி மன்றத் தலைவர்//

    தலைவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ!
    "வாழ்க வாழ்க" மட்டும் போதாதா?
    குருவி தலையில் பனம்பழம் தாங்குமா?
    கந்தசாமியே காப்பாத்துப்பா!//

    இதுக்கு என்ன பொருள்?

    குருவி - குமரன்
    பனம்பழம் - அ.உ.ஷ.செ. நற்பணி மன்றத் தலைவர் பதவி?

    அதெல்லாம் கவலைப்படதீங்க. குமரன் தாங்குவாரு!!! :-D

    ReplyDelete
  35. //இதுக்கு என்ன பொருள்?
    குருவி - குமரன்
    பனம்பழம் - அ.உ.ஷ.செ. நற்பணி மன்றத் தலைவர் பதவி? //

    வாங்கப்பா கொத்ஸே! இப்பிடிக் கொத்தறீங்களே; :-)
    நீங்க மயில் ஏதாச்சும் வளர்க்கீகளா? அப்படியே இருந்தாலும் "வடிவேலன் மனசை வச்சான்" ன்னு பாடற என்னைப் போய் மயிலு கொத்துமா? :-))

    உங்களுக்கு நான் இன்னா பண்ணேன்? பாண்ட் சைஸை வேற இன்க்ரீஸ் பண்ணிட்டேனே?
    பத்தலீன்னா, கேளுப்பா, மேலே போட்டுத் தாரேன்! அதுக்காக இப்படியா? :-)))
    ஹைய்யோ! ஹைய்யோ!

    குருவி - நான்
    பனம்பழம் - அதுவும் நான்தான்பா...
    அப்பப்பா :-))

    ReplyDelete
  36. //குருவி தலையில் பனம்பழம் தாங்குமா?//

    //குருவி - நான்
    பனம்பழம் - அதுவும் நான்தான்பா...
    அப்பப்பா :-))//

    அப்போ உங்க தலையில் நீங்களே எப்படி உட்கார முடியும்? ஒரு வேளை சிரசாசனம் பண்ண ட்ரை பண்ணறீங்களா? ஒண்ணுமே புரியலையே.....:-D

    ReplyDelete
  37. நம்மூட்லேயும் 'கடாய்' வாங்கணுமுன்னா கன்சாமி கோயில் பக்கம்தான் போறது.
    முறுக்கு பிழியர நாழி, தோசைக்கல்லு, பித்தளைப் பிரிமணைன்னு சகலமும்
    கிடைக்கும். அப்படியே கந்தனுக்கும் ஒரு கும்புடு போட்டுட்டு வர்றதுதான்.

    ReplyDelete
  38. ஞானவெட்டியான் ஐயா, "உண்முகச் சைவமணி" என்பதற்கு விளக்கம் தந்துள்ளார்.
    ------------------------------------
    அன்பு கண்ணபிரான்,
    மிக்க நன்றி.

    //"தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி"
    தண்முகம் = குளிர்ந்த முகம்
    உண்முகம் = உள்+முகம்; நம்முள் இருக்கும் முகம்??//

    ஆமாம். சைவ(சீவ) மணி இருக்குமிடம் தலையினுள்ளேதான் உள்ளது.

    ReplyDelete
  39. கந்த சஷ்டி நன்நாளன்று அற்புத தரிசனம்.

    கூடவே பழனியப்பனிடமிருந்து ஒரு தனி மடல் வேறு!

    முருகனருள் முன்னிற்கும்!

    சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது தவறாமல் போன கோயில் இது!

    அதே சமயம் தந்தையார் காஞ்சியில் பணி புரிந்ததால், வாராவரம் குமரக் கோட்ட தரிசனமும் உண்டு!

    பல ஆண்டுகள் ஆயின இங்கெல்லாம் போய்!

    இன்று ஷண்மதச் செம்மல் அருளால் அந்த பாக்கியம்!
    மிக்க நன்றி,ரவி!

    ReplyDelete
  40. கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!!

    நான் பூக்கடை தொலைபேசியகத்தில் பணிபுரிந்தபோது அடிக்கடி கந்தகோட்டம் சென்றிருக்கிறேன். அத்தனை பரபரப்பான சூழலிலும் உள்ளே சென்றால் கிடைக்கும் அமைதி தனியானது.

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  41. ம்ம்ம்ம், நான் எப்பவுமே லேட் லத்தீஃபாக இருக்கேன். இப்போதான் உங்க மெயிலைப் பார்த்துட்டு உடனே இந்த மழையில் வந்தேன். பாடலும் அருமை. விளக்கங்களும் அருமை. எல்லாரும் பாராட்டிட்டுப் போயிட்டாங்க. பட்டமும் கூடல் குமரன் கொடுத்திருக்கார். நான் என்ன தனியாச் சொல்லறது? அதுவும், அந்த "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"-க்குக் கொடுத்திருக்கும் விளக்கம் ரொம்ப அருமை. இப்படியே எல்லாரும் நினைக்க அந்த முருகன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  42. //SK said...
    சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது தவறாமல் போன கோயில் இது!
    அதே சமயம் தந்தையார் காஞ்சியில் பணி புரிந்ததால், வாராவரம் குமரக் கோட்ட தரிசனமும் உண்டு!//

    வாங்க SK; குமரக் கோட்டம் பற்றி பதிவு போட வேண்டும்; நீங்கள் வந்து என் ஆசையைக் கிளப்பி விட்டீர்கள்!

    ஓ, நீங்க MMC-ஆ? அப்பிடின்னா கந்தனும் நீங்களும் ஒரே தொகுதின்னு சொல்லுங்க ~ :-)

    ReplyDelete
  43. //மணியன் said...
    கந்தனுக்கு அரோகரா! முருகனுக்கு அரோகரா!!
    நான் பூக்கடை தொலைபேசியகத்தில் பணிபுரிந்தபோது அடிக்கடி கந்தகோட்டம் சென்றிருக்கிறேன். //

    வாங்க மணியன் சார்!
    அரோகரா சொல்ல நான் மறந்து போனேனே! தக்க சமயத்தில் வந்து சொன்னீங்க; மிக்க நன்றி!

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!
    வெற்றி வேல்; வீர வேல்!!

    ReplyDelete
  44. //கீதா சாம்பசிவம் said...
    ம்ம்ம்ம், நான் எப்பவுமே லேட் லத்தீஃபாக இருக்கேன்//

    கீதா மேடம்; நீங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து இருக்கீங்க! பாடலின் சுட்டி நீங்க வரும் போது தான் கிடைத்தது! அருணா சாய்ராம் பாடும் "ஒருமையுடன்".

    //அதுவும், அந்த "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்"-க்குக் கொடுத்திருக்கும் விளக்கம் ரொம்ப அருமை. இப்படியே எல்லாரும் நினைக்க அந்த முருகன் அருள் புரியட்டும்//

    மிக்க நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  45. கண்ணபிரான்,
    அருமையான பதிவு ! லேட் வருகைக்கு மன்னிக்கவும் !
    கந்த கோட்டம் தெரியும், ஆனால் இது வரை ஏனோ சென்று முருகனை தரிசித்ததில்லை ! வடபழனி கோயிலுக்கு பல முறை சென்றிருக்கிறேன்.

    முருகன் துதி ஒன்று:


    அருவமும் உருவமாகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
    பிரம்மமாய் நின்ற சோதி பிழம்பதோர் மேனியாய்
    கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே
    ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய !


    எ.அ.பாலா

    ReplyDelete
  46. // enRenRum-anbudan.BALA said...
    கண்ணபிரான்,
    அருமையான பதிவு ! லேட் வருகைக்கு மன்னிக்கவும் !
    கந்த கோட்டம் தெரியும், ஆனால் இது வரை ஏனோ சென்று முருகனை தரிசித்ததில்லை ! வடபழனி கோயிலுக்கு பல முறை சென்றிருக்கிறேன்//

    அவசியம் ஒரு நடை போய்ட்டு வாங்க பாலா; அமைதியான இடம்; குழந்தைகளுக்குக் குளம் ரொம்ப பிடிக்கும்!

    //முருகன் துதி ஒன்று://
    ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய !//

    அடடா, கச்சியப்பரின் கந்த புராணப் பாடல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி பாலா!
    பாலா என் பதிவுக்கு வந்தாலே எனக்கு ஒரே ஜாலி தான்; எப்படியும் ஒரு பாட்டு இலவசமாக் கிடைச்சிடும்! :-)

    ReplyDelete
  47. மனதில் போட்டு வைத்தால் என்றோ துளிர்விடும்- இது பல விஷயங்களில் நடக்கிறது.
    போன வாரமே தெரிந்திருந்தால் ஒரு ஓட்டம் போய் பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
  48. கண்ணபிரான் இரவி சங்கர்,

    வள்ளலாரின் பாடல்களில் சில உத்தரா என்ற பதின்வயது சிறுமியால் பாடப்பட்டு குறுந்தட்டுகளாகவும், கேசட்டுகளாகவும் கிடைக்கின்றன. பெயர் - 'திருவருட்பா'. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேடு கோவில் அருகே வாங்கினேன். அனைத்துப் பாடல்களையும், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற... எனத் தொடங்கும் பாடல் உட்பட, அச்சிறுமி அருமையாகப் பாடியுள்ளார்.

    ReplyDelete
  49. //வடுவூர் குமார் said...
    மனதில் போட்டு வைத்தால் என்றோ துளிர்விடும்- இது பல விஷயங்களில் நடக்கிறது.
    போன வாரமே தெரிந்திருந்தால் ஒரு ஓட்டம் போய் பார்த்திருக்கலாம்//

    குமார் சார், வாங்க!
    அதனால் என்ன; மனசில் போட்டு வச்சிக்குங்க! அடுத்த முறை செல்லும் போது அமைஞ்சிடும் பாருங்க! :-)

    ReplyDelete
  50. //தங்கவேல் said...
    வள்ளலாரின் பாடல்களில் சில உத்தரா என்ற பதின்வயது சிறுமியால் பாடப்பட்டு குறுந்தட்டுகளாகவும், கேசட்டுகளாகவும் கிடைக்கின்றன. பெயர் - 'திருவருட்பா'//

    தகவலுக்கு நன்றி தங்கவேல்!
    சிறுமி என்று சொல்வதால் ஆர்வம் கூடுகிறது. தேடிப் பார்க்கிறேன்!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP