Friday, October 06, 2006

இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1

மோவாய்க் கட்டையில் ஒரு பெரிய வெள்ளைப் பொட்டு. எங்கனாச்சும் பாத்தா மாதிரி இருக்குதுங்களா? ஒரு கடவுளின் திருவுருவச் சிலையில் தான்!
யாருன்னு தெரியுதுங்களா?
ஏன் அந்தப் பொட்டு? சும்மா இல்லை! அடிபட்டதற்கு மருந்து! என்னது அடியா?
ஏன் என்ன ஆச்சு, பாக்கலாம் வாரீகளா?

நடந்தாய் வாழி காவேரி!
ஒரே ஆறாக ஓடி வரும் காவேரி, அரங்கத்துக்குச் சற்று முன்னால் இரண்டாகப் பிரிகிறாள்!
அரங்கத்தைத் தாண்டிய பின் மீண்டும் சேர்ந்து ஒரே ஆறாக ஓட்டம்!
தாம் ஓடும் வழியில் அரங்கன் துயில்கிறானே!
அவனுக்கு மாலையாகப் பிரிந்து, நீர் மாலை சூட்டி, பின்னர் மீண்டும் சேர்ந்தாளோ? கங்கையிற் புனிதமாய காவிரி ஆனாளோ!

ஆறிரண்டும் காவேரி...
அழகான தென்னைமரம்!
அழகான மரம் நடுவில், அமைதியாய் ஒரு குடிசை. குடிசைக்குள், சுமார் ஒரு ஐம்பது பேர் உள்ளேயும், வெளியேயும் அமர்ந்து தங்கள் மெய்மறந்து இருந்தனர்.
தீவெட்டி வெளிச்சமும், புகையும் மணமும் அப்படியே அந்தச் சூழலில் கலந்து ஒரு வித ஜொலிப்பை ஏற்படுத்தி இருந்தது!
அத்தனை பேருக்கும் நடுவில் ஒரு வயதான மனிதர். வசீகரமான குரல். கருணை பொழியும் கண்கள்!!

தம் சீடர்கள் அனைவரையும் வரச் சொல்லியிருந்தார். கூடவே அன்று தீவெட்டி பிடிப்போரும், அவர் தம் குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினர்கள். இது அவர் அன்றாட வழக்கம் தான். ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், சமூகத்தின் கடைநிலையில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு பிரிவினரை அழைத்து, அவர்களைத் திருக்குலத்தார் எனச் சிறப்பிப்பார். அவர்களின் தொண்டினைப் பாராட்டிப், பிரசாதங்கள் அளித்துப் பின்னர் தான், தம் உரையைத் தொடங்குவது அவர் வழக்கம்.

"எந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்,
சிந்துபூ மகிழும் திருவேங் கடத்து,
அந்தமில் புகழ்க் கார்எழில் அண்ணலே
"

என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாட, கூட்டம் அப்படியே சொக்கிப் போய் இருந்தது!
திருவாய்மொழி சொற்பொழிவு அல்லவா?
"என் தந்தை, தந்தைக்கும் தந்தை, முப்பாட்டன், முப்பாட்டனுக்கும் பாட்டன் என்று எல்லாரும் தரிசித்தவனே! அவ்வளவு மூத்தோனே! அழகிய இளையோனே! வானவர்கள், தங்கள் தலைவனோடு வந்து உன்னைத் தரிசிக்கிறார்கள். எங்கும் பூக்கள் சிந்தி, உன் இல்லம் எல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அந்தப் பூ மணத்தில் மகிழும் இறைவா..." என்று சொல்லிக் கொண்டே சென்றவர், அப்படியே நிறுத்தி விட்டார்! கண்களில் கண்ணீர் தாரை தாரையாக!!

எல்லோருக்கும் அதிர்ச்சி; ஏன் இந்த இராமானுசர் திடீர் என்று அழுகிறார்? ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்! ஒரு சிறுவன் ஓடி வந்து, "தாத்தா, அழுவாதீங்க, இந்தாங்க", என்று தன் முண்டாசைக் கொடுக்கிறான். அவரும் சற்றே ஆறி மேலும் தொடர்கிறார்.

"பாத்தீங்களா இந்தப் பாசுரத்தை. "சிந்துபூ" என்று பூக்கள் குலுங்குவதாகச் சொல்கிறது. எப்போதும் கும்மென்று வாசம் வீசும் மலர்கள் அவன் அணிவதாகச் சொல்கிறார் நம்மாழ்வார்! ஆனால் இன்றைய உண்மை நிலை என்ன தெரியுமா?
ஒரு பூமாலைக்கே வழியின்றி இருக்கிறான் அவன்! ஏதோ காட்டுச் செடிகள் படர்ந்துள்ளன. அவனுக்கா இந்த நிலை? சென்ற முறை நான் சென்ற போது, பார்த்து விட்டு மிகவும் வருந்தினேன்! அடியவரும், என் தாய்மாமனும் ஆன பெரிய திருமலை நம்பிகளை அங்கேயே விட்டு விட்டு வந்தேன். அவரும் வயதானவர்...பாவம் தன்னால் முடிந்த தண்ணீர் கைங்கர்யத்தை அவர் செய்து கொண்டு தான் இருக்கிறார்."
(குறிப்பு: இராமானுசருக்கு இராமாயண பாடம் சொல்லிக் கொடுத்த குருவானவர் திருமலை நம்பிகள்; இருப்பினும் இராமானுசர் இப்போது வைணவ தர்மத்துக்குத் தலைமை வகிப்பதால், ஏனையோர் அனைவரும் தொண்டர்களாகக், கருதப்படுகின்றனர்.)


"என் மனதில் ஒன்று ஓடுகிறது. பேசாமல், திருமலையில் ஒரு குளம் வெட்டி, நந்தவனம் அமைத்து, மலர்களைத் தொடுத்து, அவனுக்கு பூப்பணி (புஷ்ப கைங்கர்யம்) செய்தால் என்ன?

பாம்பணி இறைவனுக்குப் பூப்பணி செய்ய இங்கு உள்ள யாரேனும் முன் வருகிறீர்களா?"

அவ்வளவு தான்; ஒரே நிசப்தம்!
ஒரு சிலருக்கு இராமானுசரைப் பிரிய வேணுமே என்று ஏக்கம். அரங்கனைப் பிரிவதா என்ற துக்கம்.
பல பேருக்கு திருமலைக் குளிர் என்றாலே பயம்.
இன்னும் சிலர் மடத்தில் கிடைக்கும் உணவு மற்றும் இதர வசதிகள் இன்றித் திருமலையில் தனியாக வாழணுமா என்ற தயக்கம்.
ஒருவரும் முன் வரவில்லை.
உடையவருக்கே (இராமானுசர்) வருத்தமாகப் போய் விட்டது. யாரையும் வற்புறுத்திக் கடனே என்று தொண்டு செய்யுமாறு சொல்ல அவர் மனம் இசையவில்லை!

"நானும் என் மனைவியும் செல்கிறோம் சுவாமி!"
ஆ...யார் அது...பின் பக்கத்தில் இருந்து குரல் வருகிறதே! ஓ சில மாதங்களுக்கு முன்பு தான் வந்து சேர்ந்தான் ஒரு அடியவன்! அவன் தான்!
"உன் பேர் என்னப்பா?"
அனந்தாழ்வான்
"உன் மனைவி கர்ப்பவதி ஆயிற்றே"
கவலை வேண்டாம் சுவாமி; நான் பார்த்துக் கொள்கிறேன்.
"ரொம்பவும் குளிருமே"
பாசுரங்களின் கதகதப்பு போதும் சுவாமி.
"ஆகா நீர் அல்லவோ ஆண் பிள்ளை. பயண ஏற்பாடுகளைச் செய். மனைவியை மலை ஏற விடாதே; டவாலிகள் உதவியுடன் தூக்கிச் செல்"
இன்றே கிளம்புகிறேன் சுவாமி. குருவின் ஆணையே பெரிது!

அவன் செல்வதை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் இராமானுசர். பின்னர் சீடர்களைச் சிரித்தபடியே பார்க்க, அனைவரும் தலை குனிந்தனர்! அவருக்குத் தெரியும், "திருமலையில் இனி எல்லாம் சுகமே"!

சொன்ன வண்ணம் செய்தான் அந்தச் சீடன். மலை மேல் மனைவியுடன் சென்று வராகரை வழிபட்டான்.
பின்பு நெட்டழகன, நீல மேனியால் நிறை கொள்ளும் நிவாசனைத் தரிசித்தான்.
குரு சொன்னதை விடக் கொடுமையாக இருந்தது! ஒரே சிறிய விளக்கு; ஆழ்ந்து நோக்கினால், அலங்காரங்கள் ஏதுமின்றி, ஒற்றைத் துணி உடுத்தி, ஓங்கி நின்று கொண்டிருந்தான் செல்வத்தின் நாயகன்!
கண்களில் நீர் வழிய அன்றே பணிகளை ஆரம்பிக்க உறுதி பூண்டார்கள் இருவரும். பெரிய திருமலை நம்பிகள் தன் தள்ளாத வயதில், தன் வீட்டிலேயே இடம் கொடுக்க, அவர்களும் அங்கேயே தங்கினர்!

பூங்காவுக்கு இடம் பார்த்தாயிற்று! பலி தேவதைகளையும் எல்லைக்காவல் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டாயிற்று! பூங்காவிற்கு நீர் வேண்டுமே! அருகிலேயே கேணி ஒன்று தோண்ட முடிவாயிற்று! நம் அனந்தன் தோண்டத் தோண்ட, அவன் மனைவி, அவளால் முடிந்த வரை மணலை அள்ளிக் கொட்ட முடிவு செய்தனர். அனந்தன் தானே பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். ஆனால் அவள் தான் ஜாடிக்கேத்த மூடியாயிற்றே!
நல்ல கணவன், நல்ல மனைவி!

கர்ப்பவதிக்கு மூச்சு வாங்குகிறது. திருமலை வாசனுக்கே பொறுக்கவில்லை. அவளுக்கு உதவி செய்ய வேடம் போட்டு வந்தான் வேதன்.
ஐயாவிற்குத் தான் எப்போதும் பக்தர்களிடம் விளையாடுவதே பொழுது போக்கு ஆயிற்றே!
அதை இங்குக் காட்டலாம் என்று நினைத்தான் போலும்! அவனுக்குத் தெரியாது, நம் அனந்தனுக்குக் குரு பக்திக்குப் பிறகு தான் மறு பக்தி என்று!

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

27 comments:

 1. ரொம்ப நல்லா எழுதறீங்க கே.ஆர்.எஸ். அடுத்த பகுதிக்கு ஆவலாய் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 2. ஆஹா!!
  ஏதோ கதாகாலட்சேபம் கேட்கிற மாதிரி எழுதிரீங்க.
  அட்டகாசம் போங்க..

  ReplyDelete
 3. ம்ம்ம் . அப்புறம்?

  பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட அதே கதை இங்கேயுமா?

  அலகிலா விளையாட்டுடையான்...!

  ReplyDelete
 4. அருமை.
  நல்ல இடத்தில் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி விட்டீரே? தொடருங்கள்

  ReplyDelete
 5. அடுத்த இடுகைக்குக் காத்திருக்கிறோம் !

  ReplyDelete
 6. திருமலைத் தெய்வக் கதைகள் எல்லாவற்றையுமே எழுதுங்கள்
  கண்ணபிரான்.

  ஹாதிராம் மடம், குலசேகரப்படி வாசல்,

  என்று ஒவ்வொன்றாக சொல்லவும். அருமையான சரள நடை நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
 7. //இலவசக்கொத்தனார் said...
  ரொம்ப நல்லா எழுதறீங்க கே.ஆர்.எஸ். //

  வாங்க கொத்ஸ்; நன்றி!

  //அடுத்த பகுதிக்கு ஆவலாய் காத்திருக்கிறேன்.
  //
  இதோ எழுதி விடுகிறேன், உங்களுக்காக மட்டும் :-))

  ReplyDelete
 8. //வடுவூர் குமார் said...
  ஆஹா!!
  ஏதோ கதாகாலட்சேபம் கேட்கிற மாதிரி எழுதிரீங்க.
  அட்டகாசம் போங்க..//

  நன்றி குமார். கதாகாலட்சேபம்-ன்னு சொல்லி சிறு வயது நினைவுகளை எல்லாம் ஞாபகப்படுத்தி வுட்டுடீங்க! இப்பல்லாம் இது மாதிரி நடக்குதா? பெரும்பாலும், சினிமா மெட்டில் அமைந்த பாடல்களைப் டேப்பில் போட்டு ஓட்டி விடுகின்றனரே!

  ReplyDelete
 9. //துளசி கோபால் said...
  ம்ம்ம் . அப்புறம்?
  பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட அதே கதை இங்கேயுமா?//

  வாங்க டீச்சர், அங்காச்சும் பிரம்பு அடி
  இங்கே இரும்பு அடி! :-))

  //அலகிலா விளையாட்டுடையான்...!//

  தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!

  ReplyDelete
 10. // செல்வன் said...
  அருமை.
  நல்ல இடத்தில் சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தி விட்டீரே? தொடருங்கள்//

  வாங்க செல்வன், சாமி கதையில் கூட சஸ்பென்ஸ் வச்சாத் தான் சுவாரஸ்யம் கூடுது. என்ன சொல்றீங்க? :-))
  நிச்சயம் தொடர்கிறேன்!

  ReplyDelete
 11. //மணியன் said...
  அடுத்த இடுகைக்குக் காத்திருக்கிறோம் ! //

  வாங்க மணியன். இன்னும் 2-3 நாளில் இட்டு விடுகிறேன்!

  ReplyDelete
 12. // வல்லிசிம்ஹன் said... திருமலைத் தெய்வக் கதைகள் எல்லாவற்றையுமே எழுதுங்கள்
  கண்ணபிரான்.
  ஹாதிராம் மடம், குலசேகரப்படி வாசல்,
  என்று ஒவ்வொன்றாக சொல்லவும்.//

  நிச்சயம் வல்லியம்மா. இன்று நாம் காணும் பணக்காரத் திருமலைக்கும் உள்ளே, பலப் பல அன்புத் திருக்கதைகள் எல்லாம் ஒளிந்து உள்ளன. அவற்றை எல்லாம் எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன்!

  // அருமையான சரள நடை நன்றாக இருக்கிறது. //
  நன்றி வல்லிம்மா

  ReplyDelete
 13. ரவிசங்கர், அனந்தாண்பிள்ளை கதையா? நன்று. நன்று. மிகக் குறைவான பேர்களுக்கே தெரிந்தது. நான் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். நீங்கள் முந்திக் கொள்கிறீர்கள். அதனால் என்ன? கொஞ்ச நாள் கழித்து நானும் சொன்னால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள்?

  திருமலை கதைகளை எல்லாம் முடித்து விட்டு இராமானுஜரின் அணுக்கத் தொண்டர்களின் கதைகளையும் சொல்லுங்கள். முக்கியமாக பொன்னாச்சியின் மணாளரின் கதையைச் சொல்லுங்கள்.

  ReplyDelete
 14. நம் அனந்தனுக்குக் குரு பக்திக்குப் பிறகு தான் மறு பக்தி என்று!

  வைணவ சம்பிரதாயத்தின் சாரம்சத்தை ஒரு வரியில் விளக்கிவிட்டீர்கள்.அனந்தாழ்வாரை பாம்பு கடித்ததைப் பற்றி எழுதுங்கள்.

  ReplyDelete
 15. சீக்கிரம் சொல்லுங்க...
  இப்படி சஸ்பென்ஸா நிறுத்தனா என்ன செய்ய?

  ReplyDelete
 16. அரங்கனைப் பற்றி இவ்வளவு கதைகளா,,, நான் படித்ததில்லை.
  மிக அழகாகச் சொல்லுகிறீர்கள்.
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 17. //குமரன் (Kumaran) said:
  ரவிசங்கர், அனந்தாண்பிள்ளை கதையா? நன்று. நன்று.
  நான் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். நீங்கள் முந்திக் கொள்கிறீர்கள். //

  வாங்க குமரன். ஆகா.. உங்களுக்கே உரிய நடையில் நீங்கள் எழுதி, நான் கதை கேட்க, முடியாமல் போய் விட்டதே! தனி மடல் ஒன்று அனுப்பியுள்ளேன் குமரன்!

  //திருமலை கதைகளை எல்லாம் முடித்து விட்டு இராமானுஜரின் அணுக்கத் தொண்டர்களின் கதைகளையும் சொல்லுங்கள். முக்கியமாக பொன்னாச்சியின் மணாளரின் கதையைச் சொல்லுங்கள்//

  கண்டிப்பாகச் சொல்கிறேன். அதுவும் பொன்னாச்சியும் அவர் மணாளர் பிள்ளை உறங்கா வில்லி தாசர் கதை, அரங்கனின் மயக்கும் கண்கள் பற்றி ஆயிற்றே! நினைவுறுத்தியமைக்கு நன்றி குமரன்!

  **
  இராமானுசருக்குக் குருவான திருமலை நம்பிகள், பதிவில் "சீடர்" என்று வருவது பற்றிச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
  பதிவில் அது ஏன் என்று, சற்று விளக்கம் கொடுத்து மாற்றி விட்டேன் குமரன்!

  ReplyDelete
 18. //தி. ரா. ச.(T.R.C.) said...
  நம் அனந்தனுக்குக் குரு பக்திக்குப் பிறகு தான் மறு பக்தி என்று!
  வைணவ சம்பிரதாயத்தின் சாரம்சத்தை ஒரு வரியில் விளக்கிவிட்டீர்கள்.//

  வாங்க திராச சார். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. குருர் சாக்ஷாத் பரப்பிரம்ம என்று தானே நாம் எல்லாரும் சொல்கிறோம். கண்ணனே நமக்கு கீதாசார்யன், ஜகத்குரு தானே!
  Kalam அவர் நூலில் மிக அழகாகச் சொல்வார், "when the student is ready, the teacher arrives!"

  அது போன்ற குரு, அமைவது நாம் வாங்கி வந்த வரம்.
  எங்கும் வியாபாரப் போக்கு மலிந்து விட்ட இக்காலத்தில், பேசாமல் இறைவனையே தான் குருவாகப் பற்ற வேண்டும் போலும்!!

  //அனந்தாழ்வாரை பாம்பு கடித்ததைப் பற்றி எழுதுங்கள்//
  ஆகா, நிச்சயம் எழுதுகிறேன்!
  preview one liner: பாம்பையே பாம்பு கடிக்குமா என்ன! :-)))

  ReplyDelete
 19. // வெட்டிப்பயல் said...
  சீக்கிரம் சொல்லுங்க...
  இப்படி சஸ்பென்ஸா நிறுத்தனா என்ன செய்ய?//

  யெஸ் சார்; இதோ சொல்லி விடுகிறேன் சார்! :-)))

  ReplyDelete
 20. இந்தக் கதையைத் திருமலை தெய்வம் படத்தில் பார்த்து விட்டேன். ஆனால் சற்று வேறு விதமாக. உங்கள் கதை முடியட்டும். ஒற்றுமை வேற்றுமைகளைச் சொல்கிறேன்.

  ReplyDelete
 21. // Johan-Paris said...
  அரங்கனைப் பற்றி இவ்வளவு கதைகளா,,, நான் படித்ததில்லை.
  மிக அழகாகச் சொல்லுகிறீர்கள்.
  யோகன் பாரிஸ்//

  நன்றி யோகன் அண்ணா!
  குமரன் வேறு இன்னும் நிறைய கதைகளுக்கு அச்சாரம் போடுகிறார் பாருங்கள்! :-) அள்ளக் குறையுமோ அழகன் அரங்கன், வேங்கடவனின் கதைகள்!
  நீங்கள் வரும் கதைகளுக்கும் அவசியம் வந்து, கருத்துரைக்க வேணும்!

  ReplyDelete
 22. //எங்கும் வியாபாரப் போக்கு மலிந்து விட்ட இக்காலத்தில், பேசாமல்
  இறைவனையே தான் குருவாகப் பற்ற வேண்டும் போலும்!!//

  இது........... இதைத்தான் நான் எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
  எனக்கும் சாமிக்கும் நடுவுலே யாரும் வேணாமுன்னு. எனக்கு 'அவனே குரு'

  நாமெல்லாம் டைரக்ட்டா காண்டாக்ட் வச்சுக்க்றதுதான். நோ இடைத்தரகர்

  ReplyDelete
 23. //துளசி கோபால் said...
  இது........... இதைத்தான் நான் எப்பவும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.
  எனக்கும் சாமிக்கும் நடுவுலே யாரும் வேணாமுன்னு. எனக்கு 'அவனே குரு'
  நாமெல்லாம் டைரக்ட்டா காண்டாக்ட் வச்சுக்க்றதுதான். நோ இடைத்தரகர்//

  டீச்சர் அது எப்படிங்க
  நீங்க இப்படிக் கலக்குறீங்க?
  "when the student is ready, the teacher arrives!" என்று நான் எழுதி முடிக்கிறேன்...and the Teacher (Ms. Tulsi Gopal) arrives! சூப்பர்!!

  Your Student (krs) is now ready Teacher!
  குருவே, டீச்சரே சரணம் :-)))

  ReplyDelete
 24. //G.Ragavan said:
  இந்தக் கதையைத் திருமலை தெய்வம் படத்தில் பார்த்து விட்டேன். ஆனால் சற்று வேறு விதமாக. உங்கள் கதை முடியட்டும். ஒற்றுமை வேற்றுமைகளைச் சொல்கிறேன்.//

  வாங்க ஜிரா! கதை முடிந்தவுடன் சொல்லுங்க! திரைக் கதையிலும் துறைக் கதையிலும் ஒற்றுமைகளைப் பார்ப்போம்! அந்தப் படத்தில் கேபி சுந்தராம்பாள் "ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை" என்ற பாடல் ஒன்று பாடியிருப்பார். மிகவும் கணீரென்று அருமையான பாடல்!

  ReplyDelete
 25. ரவிசங்கர். நீங்கள் என்ன தான் விளக்கம் சொன்னாலும் இராமானுசரின் ஆசாரியரான பெரிய திருமலை நம்பிகளை அவரின் சீடராக இராமானுசரே தன் வாயால் சொல்லியது போல் எழுதியிருப்பது என் மனதிற்கு ஒப்பவில்லை.

  இராமானுசருக்கு ஒரு முறை விடமிடப்பட்டப் பின் இராமானுசரின் ஆசாரியர் ஒருவர் (எந்த ஆசாரியர் என்று மறந்துவிட்டது) உடையவரைப் பார்க்க வரும் போது இவர் வடகாவேரிக்குச் சென்று அவரை எதிர்கொள்ளும் போது அந்த சுடுமணலில் விழுந்து ஆசாரியரைச் சேவிப்பார். அப்போதும் இராமானுஜர் வைணவ தர்மத்தின் தலைவர் தான்; ஒரு சன்யாசி தான். ஆனாலும் ஆசாரியரைச் சேவிக்கிறார். அப்போது அந்த ஆசாரியர் இராமானுசரை உடனே எழுப்பாமல் சுடுமண்ணில் கிடக்க விடுவதைக் கண்டு முதலியாண்டான் துடித்து தன் ஆசாரியரின் ஆசாரியரைக் கேள்வி கேட்க அப்போது தானே அந்த ஆசாரியர் இராமானுசரின் மடப்பள்ளிப் பொறுப்பை முதலியாண்டானுக்குக் கொடுக்கிறார். என்ன தான் துரியாசிரமத்தில் இருந்தாலும் சமயத்தலைமையில் இருந்தாலும் ஆசாரியர் எப்போதும் சீடர் ஆக மாட்டார்.

  ReplyDelete
 26. //குமரன் (Kumaran) said...
  ரவிசங்கர். நீங்கள் என்ன தான் விளக்கம் சொன்னாலும் இராமானுசரின் ஆசாரியரான பெரிய திருமலை நம்பிகளை அவரின் சீடராக இராமானுசரே தன் வாயால் சொல்லியது போல் எழுதியிருப்பது என் மனதிற்கு ஒப்பவில்லை.//

  உங்கள் மனநிலை எனக்கு நன்கு புரிகிறது குமரன். அதனால் தான் உடனே அச்சொல்லை மாற்றி விட்டேன்.

  தகப்பன் சாமியான முருகன், சர்வேஸ்வரனைப் பார்த்து, சீடனாய் வலம் வந்து கைகட்டி வாய்பொத்தி உபதேசம் பெறுங்கள் என்று சிலர் என்ன தான் கவிநயமாகச் சொன்னாலும், எனக்கும் பலமுறை உங்கள் மனநிலை தான் இருந்ததுண்டு!

  //இராமானுசருக்கு ஒரு முறை விடமிடப்பட்டப் பின் இராமானுசரின் ஆசாரியர் ஒருவர் (எந்த ஆசாரியர் என்று மறந்துவிட்டது)//

  திருக்கோட்டியூர் நம்பிகள், குமரன்.

  //ஆனாலும் ஆசாரியரைச் சேவிக்கிறார்//

  உண்மை தான் குமரன். எவ்வளவு பெரிய கீதாசார்யன் ஆனாலும், சாந்தீபனி மகரிஷியைக் கண்ணன் சேவிக்கவில்லையா? 'கண்ணன் கழலை நண்ணும் மனமுடை' நம் உடையவர் மட்டும் மாறுபடுவாரா என்ன?

  //என்ன தான் துரியாசிரமத்தில் இருந்தாலும் சமயத்தலைமையில் இருந்தாலும் ஆசாரியர் எப்போதும் சீடர் ஆக மாட்டார்.//

  அதனால் தான் நீங்க தனி மடலில் குறிப்பிட்டதும், உடனே "சீடர்" என்பதை எடுத்து விட்டு வைணவ "அடியார்" என்று அப்போதே மாற்றி விட்டேனே குமரன்!

  தொண்டர் குலமாய் அனைவரும் இருந்து, இராமானுசர் தலைவராக இருந்தாலும், இராமனுசரும் தொண்டருக்குள் தொண்டர், அடியவர் தானே!
  என்ன, அவர் திருவாயால் "சீடர்" என்ற சொல் தான், உங்களை மனம் ஒப்பாமல் செய்து விட்டது! அதை உடனே "அடியார்" என்று மாற்றி விட்டேன்!

  ஆதியில் அவ்வரியை எழுதின நோக்கம் என்னவென்றால், "என்னடா, இவரின் குருவும், தாய்மாமாவும் ஆன நம்பிகளையே திருமலைத் தொண்டுக்கு நியமம் செய்கிறாரே" என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்ற என் ஆதங்கம் தான்!
  ஆனால் வேறு பொருள் விளைவது தெரிந்தவுடன் அதை மாற்றி, ஆசார்ய பீடத்தில் இப்போது உடையவர் இருப்பதால், இது போன்ற நியமங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஆகிறது என்று பதிவில் குறிப்பும் இட்டு விட்டேன்!

  இது போதும் என நினைக்கிறேன்!
  கதையின் அடுத்த பாகம் இன்று இடுகிறேன்; பார்த்துவிட்டுத் தங்கள் மேலான கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்!!

  ReplyDelete
 27. ரவி. நீங்கள் அடியவர் என்று மாற்றியதை இப்போது தான் பார்த்தேன். மன்னிக்கவும்.

  எப்படியோ திருக்கோஷ்டியூர் நம்பிகளைப் பற்றியும் முதலியாண்டானைப் பற்றியும் சொல்லியாயிற்று. :-)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP