Thursday, October 12, 2006

பாகம்2 - கடப்பாரையால் இறைவன் வாங்கிய இடி

(முன்குறிப்பு: இப்பதிவின் முதல் பாகம் இங்கே! இது இறுதிப் பாகம்.)

உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!!

அழகாக உடுத்திக்கொண்டு, நகைகள் பூண்டு, ஒரு நடுவயதுப் பாலகனாய், அனந்தனின் மனைவியார் முன் தோன்றினான்.
"அம்மா, இவ்வளவு சிரமப் படுறீங்களே; விலகுங்க நான் உதவி செய்யறேன்; உங்க புருஷனுக்கு மனசாட்சியே இல்லியா? உங்கள இப்படி வேல வாங்குறாரே!"
அய்யோ, அவர் வேணாம்ன்னு தான் சொன்னாரு. நான் தான் தனி ஒரு ஆளா கிடந்து கஷ்டப்படுறாரேன்னு, அவர் திருப்பணியிலும் துணை செய்கிறேன்.
"சரிம்மா, மண்கூடைய இப்பிடி கொடுங்க; நான் கொட்டிட்டு வர்றேன். நீங்க அப்பிடி போய் மர நிழலில் உக்காருங்க.."
கூடையை வாங்கின கூடாரை வெல்லும் கோவிந்தன், தன் வேலையைக் காட்டினான்.

மண்ணை நேராகக் கொண்டு போய் அனந்தன் வெட்டும் பள்ளத்திலேயே, அதன் மறுபக்கத்தில் கொட்டினான். அனந்தனும் இதை கவனிக்க வில்லை!
வெறும் கூடையைக் கொண்டு போய் அவளிடம் கொடுத்து, "போங்கம்மா, போய் எடுத்து வந்து தாங்க. கொட்டிட்டு வர்றேன். நானே போய் எடுத்துக் கொள்வேன்; ஆனா உங்க புருஷனைப் பாத்தா கொஞ்சம் பயமாயிருக்கு. பெருமாள் பக்தர் மாதிரி தெரியாறாரு. அவங்க கிட்டே எல்லாம் நான் வம்பே வச்சிக்க மாட்டேன்!" என்றான் கபடன்!

அவளும் விவரம் அறியாது, சிரித்துக் கொண்டே செல்ல, இதுவே வாடிக்கையானது.
சிறிது நேரத்தில் அனந்தன் கண்டு பிடித்து விட்டார். மெல்லச் செய்யும் மனைவி இன்று இவ்வளவு வேகமாகச் செய்கிறாளே என்று திரும்பிப் பார்க்க, அய்யோ அவருக்கு அழுகையே வந்து விட்டது! பாடுபட்டு வெட்டும் கேணியிலேயே மீண்டும் மண் அள்ளிப் போட்டால், சும்மாவா? நமக்கெல்லாம் கோபம் வரும்; எரிந்து விழுவோம்! ஆனால் இராமானுசரின் அடியவர் ஆயிற்றே! கண்கள் சிவப்பதற்குப் பதிலாகப், பனித்தன!

"ஏம்மா, ஏன் இப்படி செய்தாய்? பேறுகாலக் குழப்பமா? யாராவது வெட்டின இடத்திலேயே மீண்டும் கொட்டுவாங்களா? எவ்வளவு உழைப்பு வீணாப் போச்சு! சரி நானே பார்த்துக் கொள்கிறேன். நீ போ!"
அய்யோ இல்லீங்க, அந்தப் பையன் தான் உதவி செய்யறேன்னு...என்று முழுதும் சொல்லி முடிக்க....பாலகனும் முன்னே வந்து நின்றான்!
"அப்பா, உன்னைப் பாத்தாலே தெரியுது, தங்கச் செம்பில் மண் வைத்து விளையாடுபவன் நீ. அந்த வேங்கடவன் போல! இந்த மாதிரி வேலை எல்லாம், உழைக்கும் இராமானுசரின் அடியார் கூட்டம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்! நீ சென்று வாப்பா"


அனந்தாழ்வான்அனந்தனும்,
ஆசார்யர் இராமானுசரும்

..அய்யோ எனக்கு வெட்டும் இடம் எதுன்னு சரியா தெரியாதுங்க. இனிமே ஒழுங்கா செய்யறேன் சாமி!
அனந்தனும் சரியெனச் சொல்ல, "மிகச் சரியாக" மீண்டும் அதே இடத்திலேயே வந்து மண்ணைக் கொட்டினான் பாலகன். அவ்வளவு தான்! வந்ததே கோபம் அனந்தனுக்கு! கையில் கடப்பாரையுடன் பையனைத் துரத்தி ஓட, நம் கண்ணனுக்கு ஓடி ஓளியக் கற்றுத் தர வேண்டுமா என்ன?

"சரி பையன் இனி வர மாட்டான், நாம் திரும்பி விடுவோம்", என்று எண்ணிய அனந்தன் காலில் கல் தடுக்கி கீழே வீழ,
பாலகன் என்ன ஏது என்று திரும்பிப் பார்க்க,
விழும் அனந்தன் கையில் இருந்த கடப்பாரை எகிறி, பையன் முகத்தைப் பதம் பார்க்க,
எல்லாம் கணப்பொழுதில் நடந்து விட்டது!
பாலகன் முகவாய்க் கட்டையில் சரியான அடி, வீக்கம், இரத்தம்.
ஓடியே போய்க் கோவிலுக்குள்ளே மறைந்தான் சிறுவன்.
அலைமகளும், மண்மகளும் பதறி விட்டனர்!
ஆனால் நாடகம் இன்னும் முடியவில்லையே!
சிரித்தான் கள்ளச்சிரிப்பழகன்!!
அனந்தன் மிகவும் பயந்து போய் விட்டார். நேராகக் கோவிலுக்குள் ஓடினார்.

அதற்குள் கோவிலில் இருந்து பதறியடித்து அர்ச்சகர் வெளியே ஓடி வர, என்ன ஏது என்று சிறு கூட்டமும் சேர்ந்து விட்டது. "ஐயோ, பெருமாள் முகத்தில், மோவாயில் இருந்து இரத்தம் வழிகிறது" என்பதே எங்கும் பேச்சு! திருமலை நம்பிகளைக் கூட்டி வர ஆள் அனுப்பினார்கள். காலையில் நடை சாத்தும் போது கூட நன்றாகத் தானே இருந்தது! இதுவரை இப்படி ஒன்று நடந்ததே இல்லையே என்று, இயலாமையால் அர்ச்சகர் அரற்றினார்! அனந்தனுக்கு இதயமே வெடித்து விட்டது.

"என்ன காரியம் செய்து விட்டோம். பையனின் விளையாட்டு விபரீதமாகப் போயிற்றே! அறியாது செய்தது தான் என்றாலும் அரியை அல்லவா துன்புறுத்தி விட்டேன்!
மலர்ப்பணி செய்யச் சொன்னால், மாப்பிணி அல்லவா உண்டாக்கி விட்டோம்; எப்படி விழிப்பேன் என் இராமானுசர் முகத்தில்!" என்று கண்ணீர் மல்கினார். குழந்தைக்கு அடிபட்டதால், மாலை வீடு வரும் கணவன் என்ன சொல்வாரோ என்று அஞ்சும் சாதாரணத் தாயின் நிலைமை போல் இருந்தது! கூட்டத்தின் முன்னிலையில், நடந்ததை எல்லாம் சொல்லி அழுதார்கள் கணவனும் மனைவியும்!

"என்ன தான் பக்தியும் ஞானமும் இருந்தாலும், ஹூம், இறைவன் நேரே வந்து நின்ற பின்னர் கூட, அறிய முடியாத பாவியாகிப் போனேனே!
இது தான் என் பக்தியின் லட்சணம்", என்று நொந்து கொண்டார்.
திடீரென்று என்ன தோன்றிற்றோ தெரியவில்லை,

"அய்யோ இறைவனுக்கு வலிக்குமே" என்ற எண்ணம் பளிச்!
உடனே ஓடினார். பச்சைக் கர்ப்பூரம் பொடிசெய்து, மருதஇலை, மகரந்தப்பொடி, துளசிச்சாறு விட்டுப் பிசைந்து, உருண்டையாக்கி அர்ச்சகரிடம் கொடுத்தார்.
"ஐயா, சுவாமிக்கு வலிக்குமே, இதை அடிபட்ட இடத்தில் பூசுங்கள்", என்று சொல்ல, வெறும் கல்லா அவன்? நம் கண்ணுக்குள் நிற்கும் கண்ணன் அல்லவா!!!

பொடியைப் பூசவும் இரத்தம் நிற்கவும் சரியாக இருந்தது!
அடியார் கூட்டம் வாயடைத்து நிற்க, அர்ச்சகர் மேல் சுவாமி அரூபமாகச் சொன்னதை, அத்தனை பேரும் காதாரக் கேட்டார்கள்!
"வருந்த வேண்டாம் அனந்தான் பிள்ளாய்! உன் உள்மனதை இன்று ஊர் அறிந்தது!
எப்படி எம் மார்பில் ஸ்ரீமகாலக்ஷ்மியின் அம்சமாய், ஸ்ரீவத்சம் என்ற மச்சம் (திருமறு) உள்ளதோ, அதேபோல்,
இனி என் மோவாயிலும் இந்தப் பச்சைக் கர்ப்பூரப் பொட்டு அனுதினமும் சார்த்தப்படும்!!
என்னைத் தரிசிப்பவர் எல்லார்க்கும், என் மார்பில்,
அலைமகள் அடையாளம் தெரிவது போல், மோவாயில்
அடியவர் அடையாளமும் தெரிவதாக
!!" என்று அருளினான் நம் அண்ணல்!!

மோவாயில் பொட்டழகன்

இன்றளவும் இந்தப் பச்சைக்கர்ப்பூரப் பொடியை இறைவன் மோவாயில் சார்த்துகிறார்கள்!
பக்தன் கொடுத்த அடியை அவமானமாக மறைக்கத் தோன்றாது, பெருமையுடன் வெளிக்காட்டிக் கொண்டு நிற்கிறான் வேங்கடவன்!!
திருமுகத்தில் உள்ள இந்த வடுக்கு "தயா சிந்து" என்பது பெயர்!
இந்தத் "தாயினும் சாலப் பரிந்து", 'தயை சிந்தும்' உள்ளம் வேறு யாருக்கு வரும்???

பின்னர், நந்தவனமும், கேணியும் அனந்தன் முயற்சியால் அழகாக அமைந்தது. மலர்கள் எல்லாம் மனங்களைப் போல் பூத்துக் குலுங்கின!
துளசியோடு, மல்லிகை, முல்லை, மாலதி என்னும் குடமல்லி, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரி, செந்தாமரை, தவனம், மரு, மகிழம், செண்பகம் எனப் பலப்பல மலர்கள்.
அதுவும் முதலில் பூத்த மகிழச் செடியின் மேல் தனி பாசம் நம் அனந்தனுக்கு!
இன்றும் உற்சவர் மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தில்(அதாங்க, காட்டுல கூட்டாஞ்சோறு:-)), இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதை தரப்படுகிறது!


அந்த மகிழ மரம்


இவர் அனந்த நாகத்தின் அம்சம் (ஆதி சேஷன் என்றும் சொல்லுவார்கள்). ஒருமுறை தோட்டத்தில் பாம்பு தீண்டியும், "நாகத்தையே நாகம் தீண்டுமா" என்று தன் வேலையுண்டு தான் உண்டு என்று இருந்துவிட்டார்!
மலர் மொட்டுகள் மலர்ந்து, வண்டுகளின் எச்சில் படுவதற்கு முன்பே பறித்து விடுவார்; மாலைகள் கட்டி, திருவேங்கடமுடையானுக்கு மலர்ப்பணி செய்து வந்தார்.

தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழி தனியன் பாடல், "திருமலைக் கோவில் ஒழுகு விதிகள்" (code of conduct) மற்றும் வடமொழியில் "திருவேங்கடமலை வரலாறு" போன்ற நூல்களும் எழுதினார்!

பின்னர், பலகாலம் திருமலையை விட்டு நீங்காது, நகரப் பணிகளையும் செய்து, தன் குருவான இராமானுசருக்குப் பின், இறைவன் திருவடி நீழலை அடைந்தார் அனந்தன்!

இன்று திருமலையில் உள்ள இவ்வளவு உற்சவச் சிறப்புக்கெல்லாம் ஆதி காரணம் இந்த அடியவர், அனந்தாழ்வார் தான், என்றால் அது மிகையே இல்லை!
தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!
(அடுத்த பதிவில், அடியார்: பெரிய திருமலை நம்பிகள்;
படங்களுக்கு நன்றி: இராமானுச தாசர்கள் குழு, Tirumala.org, Thanjavurpaintings.com)ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில தகவல்:

இப்பவும் திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்!

அனந்தன் பூத்தொடுத்த இடத்திற்கு யமுனைத்துறை என்று பெயர். இன்றும், அவன் திருமேனியில் சார்த்தப்படும் மாலைகள் இங்கு தான் தொடுக்கப்படும்; தரிசனம் முடிந்து, உண்டியல் செலுத்தி, பின் நரசிம்மர் சந்நிதியைச் சுற்றி வரும் போது இம்மண்டபத்தைக் காணலாம். காலை (அ) மாலை என்றால் மாலை தொடுப்பதையும் நேரே காணலாம்.


திருமலையில், இறைவன் அணிந்த மலர்கள்,மாலைகள், பிரசாதமாக யாருக்கும் தரப்படுவது கிடையாது! அனைத்தும் பூங்கிணறு (தெலுங்கில்:பூல பாவி) என்னும் கிணற்றில் போட்டு விடுவார்கள்! இக்கிணற்றுக்குள் மண்மகள் வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம்.

இலவச பிரசாதம், தொன்னையில் வாங்கிக் கொண்டு வெளியே வரும் போது இந்தக் கிணற்றைக் காணலாம்! சில சமயம், மேலே பூமாலைகள் வழிந்தும் கிடக்கும்!

அடுத்த முறை திருமலை யாத்திரையில் இவற்றை மறக்காமல் கண்டு,களித்து வாங்க!

44 comments:

 1. நல்ல தகவல்கள் கே.ஆர்.எஸ்.. நன்றி.

  ReplyDelete
 2. ச்சும்மாக் கோயிலைச் சுத்தறேன் பேர்வழின்னு இருந்துருக்கேன் இத்தனை நாளா.
  மனசுலே வச்சுருந்து பார்க்க நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கீங்க.
  இனிமே கட்டாயம் கவனிச்சுப் பார்க்கணும்.

  ஆமாம், 'தகப்பன் சாமி' னு சொல்றோமே அதுபோல
  'டீச்சர் சாமி' இருக்குதானே? :-)))))

  ReplyDelete
 3. குமட்டுலே குத்து வாங்குன கதையும்
  அருமை.

  ReplyDelete
 4. அனந்தான் பிள்ளை (அனந்த ஆண் பிள்ளை?) கதையை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் ரவி. மிக்க நன்றி.

  தயா சிந்து என்று சொல்வார்கள் என்பது இன்று தான் தெரியும். தயா சிந்து அவன் தானே. அவன் பட்ட காயமும் அது தானா? :-)

  திருமறு திருமகளின் அடையாளமா? திருமறுவும் திருமகளும் சுவாமி மார்பில் என்றும் இருப்பவர்கள் ஆயிற்றே.

  பூலவாவியை அடுத்த முறை செல்லும் போது பார்க்கவேண்டும். தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 5. .
  இவர் அனந்த நாகத்தின் அம்சம் (ஆதி சேஷன் என்றும் சொல்லுவார்கள்). ஒருமுறை தோட்டத்தில் பாம்பு தீண்டியும், "நாகத்தையே நாகம் தீண்டுமா" என்று தன் வேலையுண்டுத் தான் உண்டு என்று இருந்துவிட்டார்!
  மலர் மொட்டுகள் மலர்ந்து, வண்டுகளின் எச்சில் படுவதற்கு முன்பே பறித்து விடுவார்; மாலைகள் கட்டி, திருவேங்கடமுடையானுக்கு மலர்ப்பணி செய்து வந்தார்.

  பாம்பினால் கடி பட்ட அனந்தாழ்வர் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மாலையை எடுதுக்கொண்டு வேங்கடவனுக்கு சூடச்சென்றார்.பகவான் கேட்டார்"என்ன அனந்தா உன்னை பாம்பு கடித்ததாமே இன்னிக்கி"
  அன்ந்தன்:'ஆமாம் அதுக்கு என்ன இப்போ" பகவான்:"இல்லை பாம்பு தீண்டியதால் நீ இறந்து விடுவோமே என்ற கவலை கிடையாதா?" அனந்தன்:"நான் இருந்தாலும் இறந்தாலும் எனக்கு ஒன்றுதான் எந்தொழிலும் ஒன்றுதான்". பகவான்: "எப்படி அப்படிச் சொல்கிறாய்"
  அனந்தன்:"பாம்பு கடித்து ஓன்னும் ஆகாமல் இருந்தால் நேரே உன் சன்னிதிக்கி வந்து உனக்கு மாலை சாதி உன்னை வணங்குவேன்.இல்லை பாம்பு கடித்து மரித்து இருந்தால் நேரே சொர்கத்துக்கு வந்து உனக்கு மலை மலை சாத்தி உன்னை வணங்குவேன்".என்றாராம் என்ன ஒரு பக்தி நிலை
  திருப்பதியில் இதுவரை பாரத்து ஆனால் என்ன விவரம் என்று தெரியாமல் இருந்த இடங்களை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

  ReplyDelete
 6. தி.ரா.ச. நீங்கள் சொன்னதைப் படித்த பிறகு 'இருந்தால் வேங்கடம். இல்லையேல் பரமபதம்' என்று சொன்னது நினைவிற்கு வந்தது. மிக்க நன்றி.

  ReplyDelete
 7. //வெட்டிப்பயல் said...
  அருமை! அருமை!!!//

  வாங்க பாலாஜி; நன்றி!

  ReplyDelete
 8. //இலவசக்கொத்தனார் said...
  நல்ல தகவல்கள் கே.ஆர்.எஸ்.. நன்றி.//

  நன்றி கொத்ஸ்! சில தகவல்களை நம் பயணத்தின் போது தொடர்பு படுத்திப் பாத்தோம்னா, நமக்கே பிரமப்பா இருக்கும் இல்லையா! என்ன சொல்றீங்க?

  அப்பறம் உங்களுக்கு ஒரு கேள்வி.
  அடியவர் கதைகளை இன்னும் சுருக்கமாச் சொல்லணுமா? நீங்க என்ன நினைக்கிறிங்க??

  ReplyDelete
 9. //துளசி கோபால் said...
  மனசுலே வச்சுருந்து பார்க்க நிறைய குறிப்புகள் கொடுத்திருக்கீங்க.
  இனிமே கட்டாயம் கவனிச்சுப் பார்க்கணும்.//

  வாங்க டீச்சர்! ஊருக்குக் கிளம்பியாச்சா?
  திருமலைப் பயணத்தின் போது தொடர்பு படுத்திப் பாக்கத் தான் டீச்சர், சில எக்ஸ்ட்ரா தகவல்கள் தரணும்னு நினைச்சேன்.
  அதே சமயம் பதிவு நீளமாப் போகக் கூடாதேன்னு பயம் வேறு!

  //ஆமாம், 'தகப்பன் சாமி' னு சொல்றோமே அதுபோல
  'டீச்சர் சாமி' இருக்குதானே? :-)))))//

  டீச்சரே கேள்வி கேக்கலாமுங்களா? :-))

  ReplyDelete
 10. //துளசி கோபால் said...
  குமட்டுலே குத்து வாங்குன கதையும்
  அருமை.//

  'குமட்டுலே குத்துவேன்' ன்னு கிராமத்துல சொல்லுவாங்க. நீங்க சொன்னதும் ஞாபகம் வந்திடுச்சு.

  ReplyDelete
 11. // குமரன் (Kumaran) said...
  அனந்தான் பிள்ளை (அனந்த ஆண் பிள்ளை?) கதையை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள் ரவி. மிக்க நன்றி.//

  குமரன் வாங்க வாங்க!
  //அனந்த ஆண் பிள்ளை?// மிகவும் உண்மை :-)) செயற்கரிய செய்யறவங்க தானே பெரியார்!

  //தயா சிந்து என்று சொல்வார்கள் என்பது இன்று தான் தெரியும். தயா சிந்து அவன் தானே. அவன் பட்ட காயமும் அது தானா? :-) //

  ஆமாங்க; சுப்ரபாதத்தில் கூட இந்த "தயா சிந்து" வரும்! 'சேஷாத்ரி சேகர விபோ' மாறி, 'ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்' ன்னு மாறும் பாருங்க! அங்க தான்!!

  //திருமறு திருமகளின் அடையாளமா? திருமறுவும் திருமகளும் சுவாமி மார்பில் என்றும் இருப்பவர்கள் ஆயிற்றே//

  ஆமாம் குமரன்; திருமறு (ஸ்ரீ வத்ஸம்) திருமகளின் அடையாளமே! திருமகள் சுவாமியின் மார்பில் நித்ய வாசம் செய்கிறாள் அல்லவா? அவதார காலங்களில் என்ன செய்வது? அதான் வத்ஸமாய் தங்கி விட்டாள்;
  இந்த மச்சத்தை அசுர குரு சுக்ராசார்யரிடம் இருந்து மறைக்க, வாமனன், மான் தோலை இழுத்திப் போர்த்தி வந்ததாகச் சொல்லுவார்கள்!

  //பூலவாவியை அடுத்த முறை செல்லும் போது பார்க்கவேண்டும். தகவல்களுக்கு நன்றி//

  அவசியம் பாத்து வாங்க! முடிஞ்சா, விருப்பமுள்ள நண்பருக்கோ உறவினருக்கோ கூடச் சொல்லுங்க! அவங்களும் என்ஜாய் பண்ணட்டுமே!

  ReplyDelete
 12. //அடியவர் கதைகளை இன்னும் சுருக்கமாச் சொல்லணுமா? நீங்க என்ன நினைக்கிறிங்க??
  //
  வேணாங்க... இதுவே நல்லாதான் இருக்கு

  ReplyDelete
 13. //தி. ரா. ச.(T.R.C.) said...
  அனந்தன்:"பாம்பு கடித்து ஓன்னும் ஆகாமல் இருந்தால் நேரே உன் சன்னிதிக்கி வந்து உனக்கு மாலை சாதி உன்னை வணங்குவேன்.இல்லை பாம்பு கடித்து மரித்து இருந்தால் நேரே சொர்கத்துக்கு வந்து உனக்கு மலை மலை சாத்தி உன்னை வணங்குவேன்".என்றாராம் என்ன ஒரு பக்தி நிலை//

  திராச ஐயா, வர வேண்டும்!
  அழகாக எடுத்துக் கொடுத்தீர்கள்! மிகவும் நன்றி!
  ஒரே வரியில் முடிக்கிறோமே-ன்னு ஆதங்கமாத் தான் அந்த வரியை எழுதினேன்! அதுவும் போன பதிவில் நீங்க பின்னூட்டத்தில், பாம்புக்கடி நிகழ்ச்சியை எழுதச் சொன்னீங்க!

  இப்ப மிக அழகா, உங்க வாயில் இருந்தே வர வேண்டும்-ன்னு இருக்குப் பாருங்க! அருமை அருமை!!

  இனிமே, பாதி கதையைப் பின்னூட்டத்தில் சொல்லலாம்னு ஐடியா!!! :-) அப்படி செய்தா பதிவும் நீளாது! beginners-உம் சுவை குறையாமல் படிக்கலாம்! :-)

  போன பதிவில் குமரன் இப்படித்தான் கோட்டியூர் நம்பி-முதலியாண்டான் கதையைப் பின்னூட்டத்தில் சொல்லிச் சுவை கூட்டினார்!

  //திருப்பதியில் இதுவரை பாரத்து ஆனால் என்ன விவரம் என்று தெரியாமல் இருந்த இடங்களை சுட்டிக்காட்டியதற்கு நன்றி//

  பதிவின் நோக்கத்தில் அதுவும் ஒன்று திராச. அடுத்த விசிட்டில் மலரும் நினைவுகள் வரும் அல்லவா? அதுக்குத் தான் பகிர்ந்து கொண்டேன்.

  ReplyDelete
 14. //குமரன் (Kumaran) said...
  தி.ரா.ச. நீங்கள் சொன்னதைப் படித்த பிறகு 'இருந்தால் வேங்கடம். இல்லையேல் பரமபதம்' என்று சொன்னது நினைவிற்கு வந்தது. மிக்க நன்றி.//

  குமரன்; நீங்க சொன்னதும் ஞாபகம் வந்தது. நா.கண்ணன் சார் தனி மடலில் இதையும் சொல்லச் சொல்லி இருந்தார்!
  "கடித்த பாம்புக்கு விடம் அதிகம் என்றால், நான் வைகுண்டத்தில் விரஜை நதியில் நீராடி, உன்னை வந்து தரிசிக்கிறேன்!
  கடிபட்ட பாம்புக்கு (அனந்தன்) விடம் அதிகம் என்றால் இங்கேயே கோனேரியில் நீராடி, உன்னை வந்து தரிசிக்கிறேன்!"

  திராச மிக அழகாக எடுத்துக் கொடுத்து விட்டார்!!!

  ReplyDelete
 15. ரவி, ஒரு சிறு திருத்தம்.

  // உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!! //

  இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே. நாடகத்தின் விளைவை அறிந்து அதை நடத்திச் செல்லும் அவனுக்கா நாடகத்தின் முடிவு தெரியாமற் போகும்!

  நான் பார்த்த திருமலைத் தெய்வத்தில், கணவனும் மனைவியும் திருப்பணி செய்வார்கள். மனைவிக்கு உதவ வேங்கடன் வருவான். அவன் வந்து உதவுவதைப் பார்த்து அனந்தருக்கு ஆத்திரம் வந்து அவரே மண்வெட்டியைக் கொண்டு அடிப்பதாகக் காட்டியிருந்தார்கள்.

  திருவரங்கத்தில் ராமானுசரின் கட்டளை கேட்டுக் கொண்டு திருப்பதி சென்ற விவரங்கள் சொல்லப்படவில்லை. அனந்தராக டி.ஆர்.மகாலிங்கமும் அவர்தம் துணைவியாக விஜயகுமாரியும் நடித்திருந்தனர். ஏ.பி.நாகராஜன் இயக்கம். கற்பூரத்தை வைத்துக் குருதியை அடைத்ததும் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் டி.ஆர்.மகாலிங்கம் குரலில் ஒரு நல்ல பாடலும் உண்டு.

  ReplyDelete
 16. //G.Ragavan said:
  //உதை படப் போகிறோம் என்று அறியாது, விளையாட்டில் இறங்கினான் வேங்கடத்தான்!! //
  இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே.//

  வாங்க ஜிரா; "உதை படப் போகிறோம் என்று அறியாது" என்பது சும்மா ஒரு நயத்துக்குத் தாங்க சொன்னேன்! உலக வழக்கில், "டேய் இப்படி உதை விழும்னு தெரிஞ்சிருந்தா அப்பிடி செய்திருக்கவே மாட்டே இல்ல?" ன்னு கேட்கிறோம் இல்லையா. அதையே தான் "நைசா" அவன் மேல் ஏத்திச் சொல்லிவிட்டேன் :-)
  கபட விளையாட்டு மன்னனுக்குத் தெரியாதா கதையின் முடிவு!

  "பெருமாள் பக்தர் மாதிரி தெரியாறாரு. அவங்க கிட்டே எல்லாம் நான் வம்பே வச்சிக்க மாட்டேன்!" என்றான் கபடன்!" என்றும் சொல்லியிருக்கேன் பாருங்க! சான்ஸ் கிடைக்கும் போது கபடனைக் கொஞ்சம் வம்பு பண்ணனுமில்லே :-))

  //நான் பார்த்த திருமலைத் தெய்வத்தில்,...அவன் வந்து உதவுவதைப் பார்த்து அனந்தருக்கு ஆத்திரம் வந்து அவரே மண்வெட்டியைக் கொண்டு அடிப்பதாகக் காட்டியிருந்தார்கள்//

  திரைக்கதையில் கொஞ்சம் வித்தியாசம் தான். ஜனரஞ்சகத்துக்கோ? :-) அனந்தன் இராமானுசரின் பழுத்த அடியவர். ஒரு பாலகனை மண்வெட்டி கொண்டு அடிக்கும் அளவுக்குப் போவாரா என்ன? நான் வேறு ஒரு version-உம் கேட்டுள்ளேன். தன் தொண்டில் பிறருக்குப் பங்கு கொடுக்க விரும்பாமல் சிறுவனைத் துரத்துவார் என்று! அதுவும் செவி வழி தான்! ஆனால் நிகழ்வுகள் "வேங்கடாசல இதிகாச மாலை" என்னும் நூலில் செவ்வனே கூறப்பட்டுள்ளன!!

  //அனந்தராக டி.ஆர்.மகாலிங்கமும் அவர்தம் துணைவியாக விஜயகுமாரியும் நடித்திருந்தனர். ஏ.பி.நாகராஜன் இயக்கம். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் டி.ஆர்.மகாலிங்கம் குரலில் ஒரு நல்ல பாடலும் உண்டு//

  கேபி சுந்தராம்பாள் கூட அந்தப் படத்தில் நடிச்சாங்கன்னு நினைக்கிறேன். பெருமாள் மேல் கணீர் என்று ஒரு பாட்டு பாடுவாங்க!
  "ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை" ன்னு நினைக்கிறேன்! முருகனின் பாடல்களே பாடி வந்த அம்மையார், பெருமாள் பாடல் அவ்வளவாகப் பாடிக் கேட்டதில்லை. ஆனா இந்தப் படத்தில் அவருக்கே உரிய கம்பீரக் குரலில் ரொம்ப அருமையா பாடுவாங்க!

  ReplyDelete
 17. பச்சை கற்பூரத்தின் கதை அருமை. குழந்தை கிள்ளினால் தாய் பெருமைப்படுவது போல் தான் கண்ணனும் பெருமைப்பட்டிருக்கிறான். தாயுமானவன் என்றால் அவன் தான்

  ReplyDelete
 18. நோ சுருக்கம் ப்ளீஸ்.

  எல்லாம் விஸ்தரிச்சு சொல்லறதுக்குத்தான் ப்லொக்ன்னு பேரு:-)))))))))))

  ReplyDelete
 19. Good n Glad to read, Thanks for the post(s)!

  ReplyDelete
 20. //செல்வன் said:
  பச்சை கற்பூரத்தின் கதை அருமை. குழந்தை கிள்ளினால் தாய் பெருமைப்படுவது போல் தான் கண்ணனும் பெருமைப்பட்டிருக்கிறான். தாயுமானவன் என்றால் அவன் தான்//

  செல்வன் வாங்க, க்ரெக்டா சொன்னீங்க, கிராமத்தில் கூட கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா, கன்னு உதைச்சு மாடு நோகுமா" என்பார்கள். தாயுமானவன் அவனே!

  ReplyDelete
 21. //துளசி கோபால் said...
  நோ சுருக்கம் ப்ளீஸ்.

  எல்லாம் விஸ்தரிச்சு சொல்லறதுக்குத்தான் ப்லொக்ன்னு பேரு:-))))))))))) //

  // வெட்டிப்பயல் said...
  //அடியவர் கதைகளை இன்னும் சுருக்கமாச் சொல்லணுமா? நீங்க என்ன நினைக்கிறிங்க??
  //
  வேணாங்க... இதுவே நல்லாதான் இருக்கு //

  யெஸ் சார்; யெஸ் டீச்சர்!!

  ReplyDelete
 22. //Jeeva said...
  Good n Glad to read, Thanks for the post(s)! //

  ஜீவா நன்றி; அடியவர் கதைகள் தொடர்ந்து படிங்க; அப்படியே தமிழில் எழுத கொஞ்சூண்டு முயற்சி பண்ணுங்க; ரொம்ப ஈஸி தான்!

  ReplyDelete
 23. // கேபி சுந்தராம்பாள் கூட அந்தப் படத்தில் நடிச்சாங்கன்னு நினைக்கிறேன். பெருமாள் மேல் கணீர் என்று ஒரு பாட்டு பாடுவாங்க!
  "ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை" ன்னு நினைக்கிறேன்! முருகனின் பாடல்களே பாடி வந்த அம்மையார், பெருமாள் பாடல் அவ்வளவாகப் பாடிக் கேட்டதில்லை. ஆனா இந்தப் படத்தில் அவருக்கே உரிய கம்பீரக் குரலில் ரொம்ப அருமையா பாடுவாங்க! //

  உண்மைதான். அம்மையார் சைவக் கொழுந்து. பழுத்த சைவப் பழம். ஆனால் சைவ வரதன் அவரை வைணவ வரதனைப் பாடுவதைத் தடுக்கவில்லை.

  ஏழுமலையிருக்க எனக்கென்ன மனக்கவலையும் அருமையான பாடல். இதே படத்தில் நாளெல்லாம் உந்தன் திருநாளே! மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே! என்ற அருமையான பாடலும் உண்டு. ஆனால் அது "நாளெல்லாம் பூசம் திருநாளே" என்ற பாடலை மாற்றி எழுதிக் கொண்டது. அதாவது நான் அவ்வப்பொழுது "ஆறுமுகமிருக்க எனக்கென்ன மனக்கவலை" என்று பாடிக்கொள்வது போல.

  ReplyDelete
 24. Arumaiyana thagaval..

  Few weeks back we took our daughter to a temple. After seeing the white mark on Perumal she asked me why he looks like a bunny, I didn't know the details then so I said something and asked her to be polite (sami-a pathu appadi ellam sollakoodathu) :).. Thanks to this article I can tell her the real info!

  ReplyDelete
 25. //Anonymous said:
  After seeing the white mark on Perumal she asked me why he looks like a bunny,...and asked her to be polite (sami-a pathu appadi ellam sollakoodathu) :).. Thanks to this article I can tell her the real info!//

  அனானிமஸ் நண்பரே, சிரித்து விட்டேன் (why he looks like a bunny?); குழந்தையின் உலகமே வேறு! இந்தக் கதையைச் சுருக்கமாக, அவளுக்குச் சொன்னால் போதும்; ஒரு குழந்தைக்கு இன்னொரு பள்ளிக் குழந்தை சொல்வது போல; வளர்ந்த பின் ஆன்மீக ஆழ்பொருள் எல்லாம் அவளே அறிந்து கொள்வாள்!

  நீங்கள் அனானியாக பின்னூட்டம் இட்டாலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி; இந்தப் பதிவு குழந்தையைச் சென்று சேர்கிறதே என்று! தங்கள் குழந்தைக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. இந்த பச்சை கற்பூரத்தை பற்றி ஒரு வார்த்தை.என் நணபர் Dr.வெங்கட ரமண தீக்ஷிதிலு திருமலாவில் முதன்மை அர்ச்சகராக இருக்கிறார்.கருடசேவயில் கையில் தங்ககொடை வைத்திருக்கிறாரே அவர்தான்.அவர் சொன்னது வெள்ளிக்கிழமையன்று அபிஷேகத்தின் போது பச்சை கற்பூரத்தினால் நாமத்தையும் தயா சிந்துவையும் பொடியாக வைப்பார்களாம்.பின்பு அதை வியழக்கிழமையன்று நேத்திர தரிசனத்திற்காக எடுத்து விடுவார்களாம். அப்படி எடுக்கும் போது பொடியாக வைத்த பச்சைகற்பூரம் கல்லு மதிரி ஆகி எடுக்க மிகவும் சிரமப்படுவர்களாம்.அந்த அளவுக்கு பெருமாளின் விகிர்ஹத்தில் உஷ்ணம் உண்டாகுமாம்.

  ReplyDelete
 27. இன்னிக்கு ஒரு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் ஆலயம் போய் வந்தோம்.அருமையான தரிசனம்.
  தயாசிந்து வைப் பார்த்து ஒரே பரவசம்.பட்டரும் பொறுமையா சகஸ்ர நாம அர்ச்சனை செஞ்சார்.


  உங்களை ஸ்பெஷலா நினைச்சுக்கிடோம். .

  ReplyDelete
 28. // G.Ragavan said...
  பழுத்த சைவப் பழம். ஆனால் சைவ வரதன் அவரை வைணவ வரதனைப் பாடுவதைத் தடுக்கவில்லை.//

  மருகனுக்கு, ஆசை மாமன் ஆயிற்றே! தடுக்கவும் எண்ணுவானோ தண்டபாணி?:-)

  //மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே! என்ற அருமையான பாடலும் உண்டு. ஆனால் அது "நாளெல்லாம் பூசம் திருநாளே" என்ற பாடலை மாற்றி எழுதிக் கொண்டது. அதாவது நான் அவ்வப்பொழுது "ஆறுமுகமிருக்க எனக்கென்ன மனக்கவலை" என்று பாடிக்கொள்வது போல//

  அப்படிக்கு இப்படியும், இப்படிக்கு அப்படியும் மாத்தி மாத்தி விளையாடுவதே வாடிக்கையாப் போச்சு இந்த மாமனுக்கும் மருகனுக்கும் :-) உமையன்னையிடம் சொல்லி உதை கொடுக்கச் சொல்லணும் இருவருக்கும்!
  :-)) (ஜிராவுக்கும் சேத்து தான் :-))

  ReplyDelete
 29. //தி. ரா. ச.(T.R.C.) said...
  இந்த பச்சை கற்பூரத்தை பற்றி ஒரு வார்த்தை.என் நணபர் Dr.வெங்கட ரமண தீக்ஷிதிலு திருமலாவில் முதன்மை அர்ச்சகராக இருக்கிறார்.கருடசேவயில் கையில் தங்ககொடை வைத்திருக்கிறாரே அவர்தான்...//

  திராச ஐயா மிகமிக அருமையான தகவல்களைக் கொடுக்கிறார். மிகவும் நன்றி சார்! Dr. Ramana Deekshitulu தாங்கள் அறிந்தவரா? ஆகா! எம்பெருமான் வைபவத்தில் ஐயம் இருப்பின், இனி திராச ஐயா அவர்களைக் கேட்டால் போதும்; அறிந்து சொல்லி விடுவார்! மிக்க நன்றி திராச!

  //அந்த அளவுக்கு பெருமாளின் விகிர்ஹத்தில் உஷ்ணம் உண்டாகுமாம்//

  ஆகா, நீங்கள் சொல்லும் போதே பல உணர்வுகள் எழுகின்றன! தானே ஆவர்பித்த திருமேனி ஆயிற்றே! உளி படாத உயிர் மேனி ஆயிற்றே!! சுவாமியின் அர்ச்சா பேரத்தில் ஜீவ களை என்று சொல்லுவார்கள்!! திருமஞ்சனம் போது பல அதிசயங்களைத் தரிசிக்கலாம், சுவாமியின் நிஜபாதம், ஸ்ரீவத்சம், கேசம் உட்பட!!

  களைந்து விட்ட நாமப்பொடிக்கு ஸ்ரீபாதரேணு என்று பெயர். அவன் திருமேனி சம்பந்தம் பெற்ற, கமகம என மணக்கும் பச்சைக்கருப்பூரப் பொடி.
  வெள்ளிக்கிழமைகளில், அர்ச்சகர்கள் உபயதாரர்களுக்குச் சிறிது பிரசாதமாகத் தரப் பார்த்துள்ளேன்!

  மிக்க நன்றி திராச ஐயா, கிடைத்தற்கு அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு!!

  ReplyDelete
 30. //துளசி கோபால் said...
  தயாசிந்து வைப் பார்த்து ஒரே பரவசம்.உங்களை ஸ்பெஷலா நினைச்சுக்கிடோம்//

  மிக்க நன்றி டீச்சர்!
  அடியேன் இராமானுச தாசன்!!

  அட அதுக்குள்ள வந்துட்டீங்களா? "5 --" என்று சொல்லி இருந்தீங்களே! க்ளாஸ் பசங்களே உஷார்!!:-)

  ReplyDelete
 31. இன்னும் வரலை:-))))

  எல்லாரும் கொண்டாடுங்கோ!!!!

  நாம் இங்கிருந்து கோயிலுக்கு அனுப்புற கணிக்கைகள் ரசீது அங்கிருந்து வரும்போது ஸ்ரீவாரு ப்ரசாதமுன்னு
  துளிசந்தனமும் பச்சைக்கற்பூரமும்
  கலந்து நமக்கு வரும். எத்தனை நாளானாலும் வாசம்போகாது.

  ReplyDelete
 32. கண்ணபிரான், தெரிந்த விஷயமாக இருந்தாலும் அலுக்காத விஷயம்.
  துளசி சொல்வதுபோல் திருமலைத் தீர்த்தமும் அப்படியே இருக்கும். வாசனை,குணம் இரண்டும் மாறாது.

  இந்த அடிப்படை ஒன்று நமக்குப் போதும்.
  புரட்டாசிக்குப் பதிவு,பெருமாளுக்குப் பதிவு..இன்னும் என்ன வேணும். படிக்க ஆவல்தான் வேண்டும்.

  ReplyDelete
 33. கண்ணபிரான்,

  சேஷ அம்சமான அனந்தாழ்வான் புராணம் முன்னமே தெரியும் (நம்ம முப்பாட்டனுக்கு .. முப்பாட்டனுக்கு .. முப்பாட்டனில்லையா,
  அதனாலும் தான் !!!) என்றாலும், உங்கள் சிறப்பான நடையும், உபரி தகவல்கள் தருவதும், வாசிக்கத் தூண்டுவதாய் அமைந்துள்ளன.

  'நான் சின்னப் பையன்' என்று கூறிக் கொண்டே, மிக சீக்கிரமாகவே நல்ல தமிழில், அருமையான சொற்பிரயோகங்களோடு
  பதிவெழுதப் பழகி விட்டீர்கள் :)

  உங்களுக்கு ஒரு தகவல்:

  ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும்,
  நீரும் வழங்க முற்பட்டார். அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல், தாங்கள் அவர்
  தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும், அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது 'ஆச்சார்ய தனியனை' கூறுமாறு பணித்தனர். உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

  அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்

  ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே நந்தார்ய தேசிகம்


  அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின்
  இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

  ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்

  ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !


  தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர் என்று ஒரு சம்பவம் அனந்தாழ்வான் வைபவத்தில் உள்ளது.

  எ.அ.பாலா

  ReplyDelete
 34. //வல்லிசிம்ஹன் said:
  கண்ணபிரான், தெரிந்த விஷயமாக இருந்தாலும் அலுக்காத விஷயம்.
  ..
  இன்னும் என்ன வேணும். படிக்க ஆவல்தான் வேண்டும்//

  வாங்க வல்லியம்மா! உண்மை தான்; அம்மா செய்த இட்லியும் புதினாச் சட்னியும் சில சமயம் அலுத்த மாதிரி இருந்தாலும், மீண்டும் ஏங்குகிறோமே! அது போலத் திகட்டாத அவனைத் தீந்தமிழில் சொல்லவும் அலுக்குமோ?

  ReplyDelete
 35. //enRenRum-anbudan.BALA said: பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும், அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது 'ஆச்சார்ய தனியனை' கூறுமாறு பணித்தனர்//

  பாலா வாங்க! நீங்க சொல்லச் சொல்ல எனக்கு ஏன் தான் அனந்தனின் கதையை மிகவும் சுருக்கி விட்டோமே என்ற எண்ணம் தான் மேல் எழுகிறது!
  இளைய தலைமுறைக்கும், மற்றும் புதிதாகப் படிப்பவர்களுக்கும், ஓவர் லோட் செய்யாமல், அடியவரின் மிக முக்கியமான வைபவத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று தான் எழுதத் தொடங்கினேன்.

  ஆனா பாருங்க திராச ஐயா, குமரன், நீங்க இன்னும் பலர் வந்து மீதம் உள்ள வைபவத்தை மிக அழகாகப் பின்னூட்டத்தில் சொல்லி விட்டீர்கள்!
  அழகாகப் பாட்டுக்குப் பாட்டு போல் இது உள்ளது. ஒரு கதை பதிவில்; மறு கதை பின்னூட்டத்தில்! சூப்பர்!

  ReplyDelete
 36. பாலா சீனியர். வடமொழி தனியன்களைச் சொல்லிவிட்டுப் பொருளைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? என்னைப் போன்ற மந்த புத்திகளுககாகவாவது பொருளைச் சொல்லக்கூடாதா?

  ReplyDelete
 37. //enRenRum-anbudan.BALA said:
  அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின்
  இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார்//

  வைபவத்தில் மிகவும் முக்கியமான நிகழ்வைக் குறிப்பிட்டு உள்ளீர்கள் பாலா! மிக நன்றி!! நீங்க அனந்தன் வம்சா வழியோ? என் வந்தனம்!

  "அகிலாத்ம குணாவாஸம்" தனியன் ஒரு தொண்டனின் பேரில், பெருமாளே எழுதிக் கொடுத்தது எவ்வளவு சிறப்பு பாருங்கள் பாலா?
  அடியவர் ஆண்டவன் பேரில் கவிதை பாடுவது போய், ஆண்டவன் அடியார் பேரில் கவிதை பாடுகிறான்!

  இது போன்ற சிறப்பு ஆசார்யர் என்ற முறையில் மணவாள மாமுனிகளுக்குக் கிடைத்தது. அரங்கனே வந்து தனியன் பாடினான். ஆனால் தொண்டருக்குத் தனியன் நம் அனந்தனுக்குத் தான் என்னும் போதே மனம் களிக்கிறது!

  ReplyDelete
 38. எ.அ பாலா இப்படி வந்து என் ஆவலை ஒரேயடியாகக் கிளறிவிட்டார்:-) கை துடிக்கிறது அனந்தன் வைபவத்தில் மேலும் சொல்ல!

  1. அனந்தன் பெருமாளுக்கு மாமனார் ஆனது. பெருமாள் அவனுக்கு மணவாளப் பிள்ளையானது!

  2. ஆழ்வார்க்கோ,ஆசார்யருக்கோ திருமலையில் உருவச் சிலைகள் இல்லை! ஆனால் நம் இராமானுசருக்கு மட்டும் விக்ரகம், தமிழ் வழிபாடு!
  இது பெருமாளிடம் அனந்தனே பேசி வாங்கிய சலுகை! தொண்டனால் குருவுக்கே பெருமை!!

  3. அனந்தனைப் பற்றிக் கொண்டு பிள்ளயுறங்கா வில்லி முத்தி பெற்றது

  4. ஆலயத்தில் மதுரையில் இருந்த வந்த ராமர், சீதை, இலக்குவன், சுக்ரீவன், அனுமன் சிலை பிரதிட்டை.

  இதை எல்லாம் சொல்லக் கை பரபரக்கிறது! ஆனால் புதியவர்க்கும், வைணவ அறிமுகம் சற்றே இருப்பவர்க்கும் overload ஆகி விடுமோ என்ற அச்சம் தான் தடுக்கிறது!
  நீங்க என்ன சொல்றீங்க? வேறு ஒரு தனிப் பதிவிட்டு சொல்லட்டுமா?

  அவன் அருள் இன்றி ஏது?

  ReplyDelete
 39. ரவிசங்கர். திருமலையின் அடுத்தக் கதைக்குச் செல்லுங்கள். அனந்தாழ்வான் பெருமையைப் பற்றி மீண்டும் சொல்லலாம். சிறிது நாள் செல்லட்டும்.

  ReplyDelete
 40. என்னுடைய திருமலையான் யார்? பதிவினை எழுதி முடிக்க வேண்டும்...ம்ம்ம்ம்ம்

  அதற்கு இத்தனை பேர் மகிழ்ந்து பின்னூட்டமிடுவார்களா தெரியவில்லை....ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 41. //என்னுடைய திருமலையான் யார்? பதிவினை எழுதி முடிக்க வேண்டும்...ம்ம்ம்ம்ம்

  அதற்கு இத்தனை பேர் மகிழ்ந்து பின்னூட்டமிடுவார்களா தெரியவில்லை....ம்ம்ம்ம்ம்ம்//

  சதயம். நான் வெகு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்கள் தான் எழுதுவதில்லை.

  பின்னூட்டம் கட்டாயம் கிடைக்கும். மகிழ்ந்து பின்னூட்டம் இடுவார்களா என்றால் அது எழுதப்படும் முறையையும் நோக்கத்தையும் பொறுத்தது. இல்லையா? :-)

  ReplyDelete
 42. //சதயம் said:
  என்னுடைய திருமலையான் யார்? பதிவினை எழுதி முடிக்க வேண்டும்...ம்ம்ம்ம்ம்
  அதற்கு இத்தனை பேர் மகிழ்ந்து பின்னூட்டமிடுவார்களா தெரியவில்லை....ம்ம்ம்ம்ம்ம்//

  வாங்க சதயம்; நிச்சயம் எழுதுங்கள்; நானும் படிக்கிறேன்! ஏற்கனவே சென்று உங்கள் முந்தைய பதிவுகளைப் பார்த்தும் வந்தேன். திருவேங்கடமுடையான் திருவருளால் இனிதே நடக்கும்!

  ReplyDelete
 43. கண்ணபிரான்: அருமை! அருமை!!

  அனந்தனைப் பாம்பு கடித்த கதையை இப்படிச் சொல்வதும் வழக்கம்: "கடித்த பாம்பு வலுவுடையதாயின் விரஜா நதியில் நீராடி, வைகுந்தனுக்கு கைங்கர்யம். கடிபட்ட பாம்பு வ்லுவுடையதாயின் சந்திர புஷ்கரணியில் நீராடி, வேங்கடவனுக்கு கைங்கர்யம்".

  இதுதான் வைஷ்ணவ லக்ஷணம்! தொண்டு என்பதே லட்சியம். சாவு இடையில் வந்து போகும் மாற்றம். என்ன அழகு! என்ன அழகு!!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP