Thursday, November 30, 2006

கைசிகம் - புராணமா? புரட்சியா??

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Dec-01, 2006). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!

சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்!
இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!

தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!

வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் திருவரங்கம் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்!
அவ்வகையில் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!

இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.

குறுங்குடி நம்பி


அரையர் சேவை

அன்று ஒரு நாள், கார்த்திகை மாத ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை!
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!

அந்தணனாக இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
இன்று ஏகாதசி அல்லவா?....
அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"

உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே!
"நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?" என்று பிரம்ம ராட்சசனிடம் கேட்டுப் பார்த்தான்.

"டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"
என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ?
அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.

தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
"என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? வைணவ அடியான் சொன்ன சொல் தவறலாமா?"

விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? நான் பெருமாளின் அன்பன்! இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை அப்போது விட்டது!
"உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!

"சரி நீயே விரும்பிக் கேட்பதால்,கடைத்தேற இதோ", என்று புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான்.
பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
நம்பாடுவானை அந்த அந்தணன் விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.



(Re-enactment)

ஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது! (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ்.அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். கிராமியக் கலை, இந்தச் சுட்டியில் காணலாம்!

இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!

இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர்!

என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா?
அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!


"அமர ஓர்அங்கம் ஆறும், வேதம் ஓர்நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே
"


இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள் மற்றும் ஆச்சாரியர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

Read more »

Thursday, November 23, 2006

பதிவுலகமே - நன்றி! நன்றி! நன்றி!

முகம் தெரியாத ஒருவருக்கு எப்போதாவது நன்றி சொல்லி இருக்கீங்களா?
இன்னிக்கு நாம சொல்லலாமா?
எங்கும் நன்றி! எதிலும் நன்றி!! எல்லோருக்கும் நன்றி!!

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


என்னடா இது, தலைப்பைப் பாத்தா, ஏதோ உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிச்சு வந்ததற்கு நன்றி சொல்வது போல் இருக்கு!
போதாக்குறைக்கு "செய்நன்றி அறிதல்" குறள் வேறு கூடவே வருது!
என்ன விடயம் என்று யோசிக்கிறீர்களா?
சரி மேலே படித்து விட்டு, மீண்டும் யோசியுங்கள்!

இந்த நாளில், "நன்றி", என்று பல பேருக்குக் குறிப்பிட்டுச் சொல்லணுமாம்!
யோசிச்சுப் பாத்து, ஒருவர் விடாமல் அனைவருக்கும் சொல்லணுமாம்!!
நேற்று அலுவலகத்தில் என் மேலாளர் என்னைக் கூப்பிட்டு, "Thanks for everything", என்று சொன்னார்!
நானும் என் துறையில் இருக்கும் அனைவரும் கூட்ட அறையில் (conference room) குழுமி, கலகலப்பாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு, நன்றி நவின்றோம்!
அப்படி என்ன நாள் இன்று?

நம்ம சக தமிழ் வலைப்பதிவு நண்பர்களுக்குத் தான் முதல் நன்றி!
அதுவும் வாசகன் என்ற முறையில் நான் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்!
கால நேரம் பார்க்காது, கருத்து எதுவாக இருந்தாலும்,
உலகின் எந்த கண்டத்தில் இருந்தாலும், கைம்மாறு கருதாமல்,
அழகுத் தமிழில் எழுதிக் குவிப்பவர் இல்லாவிட்டால் வலைப்பூவில் மணம் ஏது?
நன்றி நண்பர்களே!!

அடுத்து, பதிவுகளைப் படிக்கும் கோடானு கோடி வாசகர்களே, (அட நம்ம எல்லார் பதிவையும் சேத்து தான்பா சொன்னேன் "கோடானு கோடி" என்று:-)
உங்களுக்கும் நன்றி!!

தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், முத்தமிழ் மன்றம், இன்ன பிற வலைத்திரட்டிகள், தொழில்நுட்பத் தளங்கள், Blogger, Wordpress, Blogger beta(?) ஆகிய அனைவருக்கும் நன்றி!

பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக்கும் Googleஐ மறந்தால் நமக்கு நல்ல கதி கிடைக்குமா?
கூகுள் தேடு பொறி, ஆடியோ, வீடியோ, யூ ட்யூப், இ-கலப்பை, பராஹா - உங்கள் எல்லாருக்கும் நன்றி!

தமிழால் நாம் காலம் தள்ளுகிறோம்! தமிழுக்காகக் காலம் தள்ளியவர் எத்தனை பேர்!
பண்டோர் கம்பன், பாரதி, தாசன்,
ஐயன் வள்ளுவர், ஆழ்வார்கள், அருணகிரி என்று இப்படி எத்தனை பேரின் கவிதைகளை "இலவசமாய்" எடுத்தாளுகிறோம்! அவர்களுக்கு எல்லாம் நன்றி!

படித்துச் செல்பவர்கள், படித்துச் சொல்பவர்கள்,
பின்னூட்டம் இடுபவர்கள், பின்னூட்டப் புயல்கள்,
அனானிகள் ஆகியவருக்கும் ஸ்பெஷல் நன்றிகள்!!

பதிவுலகில் நாம் காலாற உலவி வர,
"உறுதுணை"யாய் நிற்கும் வாழ்க்கைத் துணை நலம் எத்தனை பேர்! அவர்களுக்கு "நன்றி" என்று ஒற்றை வார்த்தை தான் போதுமோ? இருந்தாலும் வாயார சொல்லுவோம்! நன்றி என் துணையே!

சரி,
இது வரை வெறும் பதிவுலகம் தொடர்புடையவரை மட்டும் தான் பார்த்தோம்!
ஆனால் குடும்பம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், மாநிலம், தேசம், இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை பேர் நம் ஆளுமையை ஆளாக்குகிறார்கள்!
இத்தனை பேருக்கும் "நன்றி" என்று வாயால், சொல்லத் தான் முடியுமா?
கொஞ்சம் தனியா உட்கார்ந்து யோசித்தால் தெரியும்!
நாம வாங்கி வாங்கிச் சிறுத்துப் போய்விடுவோம்;
நம்மைச் சுற்றி உள்ளவர்கள் கொடுத்துக் கொடுத்து உசந்து போய் விடுவார்கள்!
மனசால யோசிச்சுப் பாத்து, வாயால விட்டுப் போனவர்கள், யாரேனும் இருந்தால், அவர்களுக்கும் நன்றிகள் பல!

"இலவசமாய்" இன்ப துன்பங்களை வாரி, வழங்கி, பகிர்ந்து கொண்ட நமக்கு
"இலவசமாய்" நாமே நன்றி சொல்லிக் கொள்ளும் திருநாள்!!

அட, இன்று...... நன்றி நவிலும் நாள்!
Thanksgiving Day!! (Nov 23 - Last Thursday of November)!

அதாங்க! வாய் விட்டுச் சொல்லலாம் வாங்க!
நன்றி! நன்றி!! நன்றி!!!


Read more »

Saturday, November 18, 2006

ஒத்த ரூவா தாரேன்!

"ஒத்த ரூவா தாரேன்" என்ற குஷ்புவின் கரகாட்டப் பாட்டு எவ்வளவு பிரபலம்?
ஆனா இந்த "ஒத்த ரூபாயைப்" பாத்து எவ்வளவு நாள் ஆகி விட்டது, தெரியுமா?
இதோ கீழே பாருங்க!
இதுகளை எல்லாம் எங்காச்சும் எப்பவாச்சும் பாத்த ஞாபகம் இருக்குங்களா?

பார்த்த ஞாபகம் இல்லையோ?



இதை நிச்சயமா அடிக்கடி பாத்திருப்பீங்க!


அப்படிப் பாக்காதவங்க, இப்பவே நல்லா பாத்துக்குங்க!
அப்புறம் இதுவும் நாணயமாப் போச்சேன்னு ரொம்ப நாணயமாப் புலம்பக்கூடாது, சொல்லிட்டேன்! :-)

எங்கே சென்றன இவையெல்லாம்?

இந்தியப் பொருளாதாரம் வளர்கிறது!
பங்குச் சந்தையின் கிடுகிடு வளர்ச்சி! அந்நிய முதலீட்டாளர்கள் விரும்பும் சந்தையாக மாறி உள்ளது.
நில விலைகள் ஏறுமுகம்! கடன், கேட்காமலேயே கிடைக்கும் :-)
வாழ்க்கைத் தரம் உயர்ந்து, வாங்கும் திறனும் உயர்கிறது.
இந்தியத் திட்டம் 2020, வலுவான இந்தியா என்பதில் பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்கு உண்டு!

Cost of Living உயர உயர, அடிமட்ட பணத்தின் மதிப்பு குறையவே செய்யும் என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே!
ஐந்து ரூபாய் நோட்டை வைத்து மொய் எழுதிய காலம் உண்டு; இப்ப செஞ்சி பாருங்க! உங்கள மொய் எழுதிடுவாங்க:-)
ஆக நோட்டு எல்லாம் நாணயமா மாறிகிட்டே வருது!
"வெகு விரைவில் எதிர்பாருங்கள் 20 ரூபாய் நாணயம்", என்று விளம்பரம் தான் இன்னும் செய்யலை!

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் சிலவற்றில் அடிப்படையான ஒரு டாலர்/யூரோ/பவுண்டு/ரூபிள் இன்னும் அப்படியே உள்ளன!
அதை வைத்துப் பெரிதாக ஒன்றும் வாங்கி விட முடியாது தான் என்றாலும் புழக்கத்தில் இருக்கு! மதிப்பும் இருக்கு!
ஆனால் நம் இந்தியாவில் அப்படி இல்லை!

வல்லரசாக நினைக்கும் நமக்கு, இது நல்ல அறிகுறியா?
பொருளாதார நிபுணர்களைத் தான் கேட்கணும்; நம்ம மா.சிவக்குமார் அவர்களைக் கேட்டா அழகான விளக்கம் கிடைக்கும்!

அது சரி,
யாரிடமாவது இந்த ரூபாய்த் தாள்கள் இருந்தால், அப்படியே பத்திரப்படுத்தி வையுங்கள்!
வருங்காலத்தில் அருங்காட்சியகம் (மியூசியம்), மற்றும்
தொல்பொருள் துறையில் இதற்கு நல்ல டிமாண்ட் இருந்தாலும் இருக்கலாம்!
Numismatics என்ற பணத்தாள் சேகரிப்பில் கூட டிமாண்ட் கூடலாம்!

இவ்வளவு ஏன், "இந்த அஞ்சு ரூபாய்க்கு என்னென்னல்லாம் வாங்குவோம் தெரியுமா", என்று குழந்தைகளுக்குப் பல கதைகள் விடலாம்!
என்ன சொல்றீங்க?

(பட உதவி: rbi.org.in)
கீழே வெட்டிபையல் பின்னூட்டம் பாத்தவுடனே ஒரு பயம் வந்துடுச்சு; இதோ டிஸ்கி: -)
Disclaimer:
மேலே உள்ள ரூபாய் படங்கள் எல்லாம் ஒரு சாம்பிள் தான்; Specimen Copy; பமாகப் பயன்படுத்தலாம் என்று rbi வலைத்தளம் சொல்லுகிறது! இருந்தாலும் மக்களே, படத்தைக் காண மட்டும் செய்யுங்கள்! (நல்ல காலம் ரூபாய்களின் மறுபக்கத்தைப் பதிக்க வில்லை...)

Read more »

Thursday, November 09, 2006

புதிரா? புனிதமா?? - பாகம் 2

----------------------------------------------------------------------------------------------
விடைகள் பதிப்பிக்கப்பட்டன! (அப்பாடா, நியுயார்க் போக்குவரத்து நெரிசலில் தப்பித்து, இதோ வீடு வந்து சேர்ந்து, நேரே தமிழ்மணம்!)
சரியான விடைகளைக் காணப் பதிவின் இறுதிக்கு scroll செய்யவும்!
முடிவுகள் இதோ!

10/10
குமரன், ஜெயஸ்ரீ

9/10
வெட்டிபையல் (பாலாஜி)

7/10
இராமநாதன், சிவமுருகன், கீதாம்மா

வெற்றிக் கனி பெற்றவர்க்குப் பரிசை இரவு, மின்-மடல் வழியாக அனுப்பி வைக்கிறேன்.......
பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
வென்றவர்க்குச் சிறப்பு வாழ்த்துக்கள்!!

இது போல் அடுத்தது தமிழ்க் கடவுள் முருகனைப் பற்றித் தொடரலாமா?
நீங்க என்ன நினைக்கிறீங்க?
----------------------------------------------------------------------------------------------

இந்த முறை, தலைப்பைப் பாத்துட்டு, யாரும் வலையில் வந்து விழ மாட்டார்கள் என்ற நம்பிக்கை! என்ன சொல்றீங்க :-)

இதோ இராமாயணக் கேள்விகள்;
வெட்டிப்பையலாரின் இட்(ஷ்)டப்படி!!
ஒவ்வொரு கேள்விக்கும் ஒரே சரியான விடை மட்டுமே.

கலந்து பேசலாம்; பிட் அடிக்கலாம்;
ஆனா கூகுளாண்டாவரை மட்டும் வேண்டக் கூடாது!
....என்று சொல்லலாம் என்று இருந்தேன்!
ஆனா இதெல்லாம் நடக்கற விஷயமா?
"பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைந்திருக்கும் கூகுள் ஆனந்தமே", ன்னு பெரியவங்களே பாடியிருக்காங்களே! :-)
சரியான விடைகள் நாளை மாலை 07:00 மணிக்கு (நியுயார்க் நேரப்படி) அறிவிக்கப்படும்!

//வாங்க வடூவூர் குமார் சார்,
ஆஆஆம், உங்க பின்னூட்டம் பாத்தப்புறம் ஒரு ஐடியா!
பரிசாக:
முதல் மூவருக்கு,
வடூவூர் ராமனின் அழகுத் திருமுகம், படமாக!
ஓகே-வா?
//



1இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்?

1

அ) அருணகிரி
ஆ) நக்கீரர்
இ) வாரியார்
ஈ) பாம்பன் சுவாமிகள்

2

இராவணன் சேனையின் கொடி எது?

2

அ) சிம்மம்
ஆ) சூர்ய சந்திரன்
இ) வீணை
ஈ) பனை மரம்

3

ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது?

3

அ) ராமேச்வரம்
ஆ) சோளிங்கபுரம்
இ) காசி
ஈ) துவாரகை

4

கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?

4

அ) திருப்பதி
ஆ)தஞ்சை
இ) திருவரங்கம்
ஈ) தேரழுந்தூர்
(கம்பன் பிறந்த ஊர்)

5

"கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்?

5

அ) கோசலை
ஆ) கைகேயி
இ) வசிட்டர்
ஈ) விசுவாமித்திரர்

6போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன?6

அ) அஸ்வமேதம்
ஆ) நிகும்பலை
இ) சத்ரு சங்காரம்
ஈ) பிராயச்சித்தம்

7

இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன?

7

அ) கோதண்டம்
ஆ) சாரங்கம்
இ) பினாகம்
ஈ) தனுர்தரம்

8

இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்?

8

அ) விஸ்வகர்மா-வருணன்
ஆ) அனுமன்-அங்கதன்
இ) அனுமன்-ஜாம்பவான்
ஈ) நளன்-நீலன்

9

இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்?

9

அ) ஜாம்பவான்
ஆ) அனுமன்
இ) சுசேணன்
ஈ) விபீஷணன்

10

பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது.

இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது?

10

அ) மதுராந்தகம்
ஆ)அயோத்தி
இ) பத்ராசலம்
ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி)




இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக.
விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்!
கலக்குங்க!




1 அ) அருணகிரி ஆ) நக்கீரர் இ) வாரியார் ஈ) பாம்பன் சுவாமிகள்

2 அ) சிம்மம் ஆ) சூர்ய சந்திரன் இ) வீணை ஈ) பனை மரம்

3 அ) ராமேச்வரம் ஆ) சோளிங்கபுரம் இ) காசி ஈ) துவாரகை

4 அ) திருப்பதி ஆ)தஞ்சை இ) திருவரங்கம் ஈ) தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்)

5 அ) கோசலை ஆ) கைகேயி இ) வசிட்டர் ஈ) விசுவாமித்திரர்

6 அ) அஸ்வமேதம் ஆ) நிகும்பலை இ) சத்ரு சங்காரம் ஈ) பிராயச்சித்தம்

7 அ) கோதண்டம் ஆ) சாரங்கம் இ) பினாகம் ஈ) தனுர்தரம்

8 அ) விஸ்வகர்மா-வருணன் ஆ) அனுமன்-அங்கதன் இ) அனுமன்-ஜாம்பவான் ஈ) நளன்-நீலன்

9 அ) ஜாம்பவான் ஆ) அனுமன் இ) சுசேணன் ஈ) விபீஷணன்

10 அ) மதுராந்தகம் ஆ)அயோத்தி இ) பத்ராசலம் ஈ) திருப்புல்லணை (திருப்புலாணி)




----------------------------------------------------------------------------------------------

இதோ விடைகள்:



1இராம காவியம் என்ற நூலை இயற்றிய முருகன் அடியவர் யார்?

1 இ) வாரியார் சுவாமிகள்

எளிய உரைநடையில், குறிப்பாக இளைஞர்கள் ராமாயண நுட்பங்களை அறிய உதவும் நூல்

2

இராவணன் சேனையின் கொடி எது?

2 இ) வீணை

"வீணைக் கொடியுடைய வேந்தனே" பாட்டு நினைவுக்கு வருதுங்களா? இராவணன் சிறந்த வீணை இசைக் கலைஞன்; சாம கானம் இசைத்து சிவனாரை மகிழ்வித்தவன்; அவன் கொடியிலும் வீணை தான்!

3

ஆஞ்சநேயர், யோக நிலையில் அமர்ந்து, ராமனுக்கு இன்றி, இன்னொரு அவதார மூர்த்திக்குப் பணி புரியும் தலம் எது?

3 ஆ) சோளிங்கபுரம்

அரக்கோணம் அடுத்துள்ள சோளிங்கபுரம்; 108 திவ்ய தேசங்களில் ஒன்று; இங்கு தான் ஆஞ்சநேயர் சிறிய மலையில், யோக நிலையில் அமர்ந்துள்ளார்; அவர் கையில் சங்கு சக்கரங்கள்! பெரிய மலையில் உள்ள நரசிம்மரைப் பார்த்தவாறு அவர் பணி செய்து வீற்றிருக்கிறார்.

4

கம்ப ராமாயணம் எங்கு அரங்கேற்றப்பட்டது?

4 இ) திருவரங்கம்

அரங்கத்தான் கோவிலில், சிரக்கம்பம் செய்த நரசிம்மர் சந்நிதியின் மண்டபத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மூல நூலில் கூறாத பிரகலாதன் கதையைக் கம்பர் இதில் கூறுவதால் ஆட்சேபம் எழுந்தது. ஆனால் இறைவன் அருளால், நரசிம்மர் சிரக் கம்பம் செய்து இதற்கு ஒப்புதல் அளித்தார். அரங்கேற்றம் தடையின்றி நிறைவேறியது!

5

"கெளசல்யா சுப்ரஜா ராமா", என்று ராமனைப் பாட்டு பாடித் துயில் எழுப்பியவர் யார்?

5 ஈ) விசுவாமித்திரர்

யாகம் காக்க சென்ற இடத்தில் தான், விசுவாமித்திரர் இவ்வாறு பாடித் துயில் எழுப்பினார். இன்று பெரும்பாலும், பல ஊர்களின் பெருமாள் குறித்து பாடப்படும் சுப்ரபாதங்களும், இந்த வரிகளைத் தான் முதல் அடியாக இட்டுத் தொடங்குகின்றன.

6போரில் தோற்று விடுவோம் என்று எண்ணி, இந்திரசித்து கடைசி நேரத்தில் செய்த யாகத்தின் பெயர் என்ன?

6 ஆ) நிகும்பலை

நிகும்பலா தேவியின் மேல் செய்த யாகத்தைத் தான் பாதியில் நிறுத்தி, ஹனுமன் சொல்ல, இலக்குவன் போரிலே இந்திரசித்தைக் கொன்றான்.

7

இராமன் முறித்த சிவ துனுசின் பெயர் என்ன?

7 இ) பினாகம்

சிவானாரின் வில்லுக்கு "பினாகம்" என்பதே பெயர். பினாகபாணி = சிவன்; கோதண்டபாணி = இராமன்; சாரங்கபாணி = பெருமாள்

8

இலங்கைப் பாலத்தைக் கட்டும் பணியை இராமன் யாருக்கு அளித்தான்?

8 ஈ) நளன்-நீலன்

இவர்கள் பெற்ற சாபத்தால் தான், நீரில் போட்டது எல்லாம் மிதக்க, இவர்களையே பாலத்தின் பணிக்கு இராமன் பெரிதும் பயன்படுத்தினான்; மற்ற வானரப்படைகளும், அணிலும் கூட உதவி செய்தன.

9

இலக்குவனைப் பிழைக்க வைத்த சஞ்சீவினி மூலிகையைப் பறித்தவர் யார்?

9 இ) சுசேணன்

சஞ்சீவி மலையைக் கொண்டு வந்தது என்னவோ அனுமன் தான்; ஆனால் எது அந்த மூலிகை என்று தெரியாததால் தானே அவ்வாறு செய்தான்! சுசேணன் வானரப் படையின் மருத்துவன்; அவன் தான் மலையில் உள்ள மூலிகையைப் பறித்து, இலக்குவனை எழுப்பியது!

10

பொதுவாக, இராமனைக் குடும்ப சகிதமாக, நின்ற நிலையில் உள்ள உருவமாகத் தான் ஆலயங்களில் காண முடிகிறது.

இலக்குவன் அருகில் நிற்க, இராமனும், சீதையும் அமர்ந்த நிலையில் உள்ள ஆலயம் எது?

10 இ) பத்ராசலம்

ஆந்திராவில் உள்ள தலம்; இங்கு தான் சீதா ராம கல்யாணம் மிகப் பிரபலம். இங்கு தான் இராமன், சீதையை அணைத்தவாறு, தம் மடியில் இருத்தி, அமர்ந்த நிலையில் உள்ளான்

Read more »

Saturday, November 04, 2006

"தண்ணி" காட்டிய இறைவன்

தொண்டர்கள் தொடர் இது!
அப்படித் தான் ஒரு முறை, "தண்ணி உள்ள காட்டிலேயே", நமக்குத் "தண்ணி" காட்டினான் இறைவன்!!
சென்ற பதிவில் திருமலை அனந்தாழ்வான், திருமலை எம்பெருமானுக்குப் புரிந்த தொண்டுகள் பற்றிக் கண்டோம்!
இன்று காணப் போவது திருமலை நம்பிகள், பற்றி.

ஒருவர் நல்ல வசதியுடன் "ஜம்" என்று இருக்கும் போது, அவரைப் போய் பார்த்து, அவருக்குக் பணிவிடைகள் செய்து விட்டு வருவது என்பது வேறு!
ஆனால் அவரே எளிய ஆளாய் இருந்த போதும், அவர் கூடவே இருந்து, அவருக்குத் தொண்டு புரிவது என்பது வேறு!
அதுவும் வயதான காலத்தில், ஊஞ்சல் ஆடிக் கொண்டு, மஞ்சூரியன் ஃப்ரைஸ் சாப்பிட்டோ, இல்லை பஹாமாஸ் வெகேஷன் போயோ, ஜாலியாக இருக்கலாமே!
அதை விட்டு விட்டுத் தினமும் நாலு மைல் நடந்து தண்ணிக் குடம் சுமக்க தலையெழுத்தா என்ன?

சிற்றஞ் சிறு காலை; லேசான இருட்டு!
ஓத்தையடிப் பாதை; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை; பயந்த தனி காட்டு வழிக்குத் துணை எம்பெருமான் நாமங்கள்!
வயதான ஒரு பெரியவர், தலை மேல் பெரிய தண்ணீர்க் குடம் சுமந்து கொண்டு கிடுகிடு என்று நடந்து செல்கிறார்......எங்கே? எதற்கு?
பாபவிநாசம் என்ற நீர்வீழ்ச்சி திருமலையின் மேல் உள்ளது. மிகப் பழமையானது; தூய்மையான, சுவையான, பாறை நீர்!!
அதில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு, திருவேங்கடமுடையான் சன்னிதி நோக்கிச் செல்கிறார் அம்முதியவர்.
எம்பெருமானின் திருமஞ்சனத்திற்கும் (நீராட்டு/அபிஷேகம்), மற்றும் பூஜை தீர்த்ததிற்கும் அந்த நீர் மிகவும் உகந்தது!

"பற்றே ஒன்றும் இலேன்; பாவமே செய்து பாவியானேன்,
மற்றே ஒன்று அறியேன்; மாயவனே, எங்கள் மாதவனே.
கல்தேன் பாய்ந்து ஒழுகும் கமலச்சுனை வேங்கடவா,
அற்றேன் வந்துஅடைந்தேன்; அடியேனை ஆட்கொண்டு அருளே!"
என்ற திருமங்கை மன்னனின் பெரியதிருமொழி பாசுரங்களைப் பாடிக் கொண்டே, ஓடுகிறார் நம்பிகள்! மலை இறக்கம் ஆயிற்றே!

"தாத்தா கொஞ்சம் நில்லு!
களைப்பா இருக்காப் போல இருக்கு! கொஞ்சம் தண்ணி ஊத்து, குடிச்சிட்டுப் போறேன்!"
யாருப்பா அது, இவ்வளவு காலையில்?...அட ஒரு வேடன்! தொழிலுக்குக் கிளம்பிட்டான் போல!
"அப்பா, இது எம்பெருமான் தீர்த்தம்! ஆனால் தண்ணீர் கேட்பவருக்கு இல்லை என்று சொல்லவே கூடாது! அதனால் ஒண்ணு பண்ணு!
இந்தா இதைப் பருகி விடு! ஒரு கல் தூரம் கூட இல்லை பாபவிநாசம்;
பருகி விட்டு, அங்கு போய் எனக்கு மீண்டும் புது நீர் எடுத்து வாப்பா!
நான் வயதானவன், மீண்டும் மேடு ஏறக் கஷ்டமாய் உள்ளது!
இன்னும் பல தூரம் செல்லணும்; நீ சீக்கிரம் வந்தால், எம்பெருமான் திருமஞ்சனம் தடையிலாமல் நடக்க ஏதுவாய் இருக்கும்!"

பாபவிநாசம்

ஆகாசகங்கை

"அட போ தாத்தா, தண்ணி கேட்டா கொடுப்பியா, அதை வுட்டுட்டு பெருசா கதை சொல்ற!
அதுவும் என்னை வேற வேலை வாங்குற!
நான் ஒண்ணும் தவிச்ச வாய்க்குத் தண்ணி கேக்கல! சும்மா தான் கேட்டேன்;
அது சரி, உன்னை அடிச்சுப் போட்டுக் குடத்தைப் புடுங்குனா நீ என்னா பண்ணுவே?"

நம்பிகளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை! இவனிடம் என்ன பேசமுடியும்? பார்வையும் பேச்சும், தாகத்தால் தவிப்பவன் மாதிரியும் தெரியவில்லை!
விடுவிடு என்ற நடக்க ஆரம்பித்தார்.
விடுவானா ஆன்ம வேட்டையாளன்?
வேங்கடத்தான் அல்லவோ அவன்!
"யோவ் தாத்தா, நில்லு!" - "அப்பா, என்னைத் துரத்தும் தூரத்துக்கு, அந்தச் சுனை கிட்டத் தானே இருக்கு! வீண் அலம்பல் பண்ணாதப்பா"
"எனக்கு அடிச்சுப் புடிங்கித் தான் எப்பவும் பழக்கம்; ஏதோ வயசாளின்னு பாத்தா ரொம்ப தான் பண்ணுறியே"

மீண்டும் விடுவிடு நடை தான்! வேங்கடத்தான் வேடிக்கை வேட்கையாளன் ஆயிற்றே!
பார்த்தான்....வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்தான். குடத்தில் ஓட்டை!
நீர் பொத்துக் கொண்டு வருகிறது. பின்னாலேயே வந்து இரு கைகளாலும் பருகினான்!
நம்பிக்குச் சுமை குறைவது தெரிந்து, திரும்பிப் பார்க்க, அழுகையே வந்து விட்டது!
"அடேய், உனக்கு நீர் தரக் கூட நான் மறுக்கவில்லையே! இப்படிப் பாத்திரதையே உடைத்து விட்டாயே! இன்று திருமஞ்சனமாயிற்றே!
மீண்டும் சிரமப்பட்டு எடுத்து வந்தாலும், ஓட்டைக் குடம்; எல்லாம் வீணாகி விடுமே" என்று அழ ஆரம்பித்து விட்டார்!

வேடன் பார்த்தான். வயதானவரும் குழந்தையும் ஒன்றல்லவா?
அழக் காண அழகாகுமா?
வில் அம்பால் அங்குள்ள ஓர் உச்சியைத் துளைத்து நீர் பிரவாகம் செய்தான்!
"தாத்தா, இதோ பார் ஆகாச கங்கா தீர்த்தம்! இது நீர் விழ்ச்சி இல்லை என்றாலும், இதுவும் சுனை தான்!
இனி அவ்வளவு தூரம் நடந்து வருந்தாதீர்!
நீர், இதில் இருந்தே நீர் - எடுத்துச் செல்லும்!!
இதுவும் விஷ்ணுப் ப்ரீதியே! இதோ உம் குடம்", என்று சொல்லி மறைந்து விட்டான்.

நம்பிகள் வாயடைத்துப் போய் விட்டார். புதிய ஆகாச கங்கை நீர் கொண்டு, கோவிலுக்குப் போய்ச் சேரத் தாமதம் ஆனது!
அர்ச்சை ரூபத்தில் உள்ள இறைவன், அர்ச்சகர் மேல் ஆவேசித்து, காட்டு வழி நிகழ்ச்சியை அனைவரும் அறியுமாறு உரக்கச் சொன்னான்.
"தாத்தா" என்று என் வாயால் நானே விரும்பி அழைத்த திருமலை நம்பிகள், இனி "தாத்தாச்சார்யர்" என்றும் அறியப் படுவர் என்று அருளினான்!

தண்ணீர் அமுது உற்சவம்



திருமலை நம்பிகள்

மேலும் மழையினாலோ, இன்ன பிற காரணங்களாலோ, இந்தப் புதிய ஆகாச கங்கை தீர்த்தம் வரத் தாமதம் ஆனால் கூட,
கோவிலுக்குள்ளேயே இருக்கும் பொற்கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுக்கக் கடவது என்று வரையறுத்து அருளினான்!
அடியவர், பணி செய்கையில் கூட, எந்த இன்னலுக்கும் ஆளாகக் கூடாது என்று எண்ணும் நல்ல உள்ளம் யாருக்கு வரும்?
"என்ன செய்வியோ, ஏது செய்வியோ (hook or crook); எனக்கு வேலை முடிய வேண்டும்", என்று சொல்லும் தலைவர்கள் மத்தியில்,
தலைவர்க்குத் தலைவன் அல்லவா நம் வேங்கடத்து அண்ணல்!
தயாசிந்து உடைய தயை சிந்தும் வள்ளல் அல்லவோ அவன்!

இன்றும் இந்த வேடுவன்-கிழவர் விளையாட்டை மார்கழி மாதத்தில் திருமலை மீது நடித்துக் காட்டுகிறார்கள். தண்ணீர் அமுது உற்சவம் என்று இதற்குப் பெயர்!
நீர் வண்ணா, திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்! தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!!



திருமலை நம்பிகள் குறிப்பு:
மேலே நாம் கண்ட திருமலை நம்பிகள் (ஸ்ரீசைல பூர்ணர்), ராமானுசரின் தாய்மாமனும் ஆவார். ராமானுசருக்கு அவ்வாறு பெயர் இட்டதே இவர் தான்;
இராமாநுஜன் = இராம+அநுஜன் = இராமனின் தம்பி = அதாவது இலக்குவன்!
ஆதிசேஷனின் அம்சமானதால் இவ்வாறு பெயர் சூட்டினார்.
(லக்ஷ்மண முனி என்ற பெயரும் இராமானுசருக்கு உண்டு-ஆதிசேஷன் தானே இலக்குவனாகவும், பின்னர் பலராமனாகவும், பின்னர் ராமானுசராகவும், அதன் பின் மாமுனிகளாகவும் வந்தது!)

ஆளவந்தாரின் சீடரான திருமலை நம்பிகள், திருவரங்கத்தில் இருந்து, பின்னர் கைங்கர்யத்துக்காக (இறைத்தொண்டுக்காக) திருமலையில் வந்து தங்கி விட்டார்.
இராமானுசருக்கு ராமாயணம் கற்பித்த குருவும் கூட!
திருமலை அடிவாரத்தில் நடந்த இந்த வகுப்புகளின் போது,
மதுரையில் இருந்து ராமனே - இலக்குவன், அனுமன், அங்கதன், சுக்ரீவன் ஆகியோருடன், விக்ரக உருவில் வந்தது தனிக்கதை!
பழுத்த வயதில், தொண்டில் சிறந்து, பின்னர் இறைவன் அடி சேர்ந்தார் நம்பிகள்!

ராமானுஜர் காலத் திருமலையில் முதற்குடிமகன்கள் என்றால் (First Citizens of Tirumala) அது திருமலை நம்பிகள், மற்றும் அனந்தாழ்வான் தான்!
அவர்கள் செய்த பணி தான், இன்று நாம் வசதியாகத் தரிசனம் செய்ய முடிகிறது!


ஆர்வம் உள்ளோர்க்கு மேலும் சில குறிப்பு:

பொற்கிணறு (தெலுங்கில்: பங்காருபாவி), தரிசனம் முடித்து வெளி வந்த உடனேயே தென்படும்.
படியேறி தீர்த்தம் வாங்கச் செல்லும் வழியில் உள்ளது இது.
அதை ஒட்டினாற் போல் உள்ள அறை தான் அன்னப்பிரசாதங்கள் செய்யும் சமையல் அறை (லட்டு செய்யும் இடம் வேறு).
அங்கு பெருமாளின் பசி போக்கிய தாயாகக் கருதப்படும் வகுளா தேவி, சிலை உருவில் இருக்கின்றாள்; இன்றும் சமையலை அவளே கவனிப்பதாக ஐதீகம்!

பொற்கிணறு

திருமலை நம்பிகள் வாழ்ந்த குடில், தெற்கு வீதியில் உள்ளது; ஊஞ்சல் மண்டபத்துக்கு பக்கத்தில் படிக்கட்டுகள் ஏறும் இடத்தில், இக்கோவிலைக் காணலாம்.
க்யூ வரிசையில் இருந்தே இதைப் பார்க்க முடியும்! கண்டு வாருங்கள் அடுத்த யாத்திரையில்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP