Showing posts with label அந்தணர் அல்லாதார். Show all posts
Showing posts with label அந்தணர் அல்லாதார். Show all posts

Wednesday, March 04, 2009

கருவறைக்குள் அந்தணர் அல்லாதார்! - 1000வது ஆண்டு!

கருவறைக்குள்ளே அந்தணர் அல்லாதார் போகலாமா? அப்படிப் போகத் தான் முடியுமா?
போக ஆகமத்தில் அனுமதி உண்டா? இது வரை யாராச்சும் அப்படிப் போய் இருக்காங்களா?
போனவர்களைச் சக அந்தணர்கள் மதித்து நடத்துவாங்களா? - இப்படி அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் தான்! = ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

ஆகா! அப்படிக் கருவறைக்குள் போனவர் யாருப்பா? அதுவும் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே?
இப்ப தானே அரசு சட்டம் எல்லாம் கொண்டாந்து, அனைத்துச் சாதி அர்ச்சகர்-ன்னு ஆகமம் படிக்கவே ஆரம்பிச்சி இருக்காங்க?
சென்னை நகரம் பூவிருந்தவல்லி ஏரியாவின் ஒரு வைசியர்! எண்ணெய் வியாபாரச் செட்டியார் குடும்பத்தில் பிறந்தவர்! ஸோ-கால்ட் தாழ்ந்த குலத்தவர்!
மிகுந்த பணிவும் பண்பும் கொண்டவர்! இறைவன் மீது பக்தியை விட, அன்பைப் பிரதானமாகக் கொண்டவர்!

இவரின் 1000வது பிறந்த நாள் தான் இன்று (Mar-5-2009)! மாசி மாதம் மிருகசீரிட நட்சத்திரம்! ஒரு வாழ்த்து சொல்லிருவமா மக்களே?
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நம்பி! :)


ஆகா? நம்பியா? யார் அந்த நம்பி?

"நானும் கருவறைக்குள் நுழைந்து காட்டுகிறேன் பார்" என்று வீம்புக்கு இவர் நுழையவில்லை! கருவறை நுழைவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு, பின்னர் நுழைந்தார்!
முறையாகப் பயின்று, முறையாக நுழைந்தார்! அன்பால் நுழைந்தார்!

நுழைந்த அடுத்த நிமிடமே அவருக்கு வேர்த்து ஊற்றுகிறது!
அடடா, கருவறை இறைவனுக்கு இப்படியா வேர்த்து வடியும்? என்று விசனப்பட்டார்!
விசிறி (ஆலவட்டம்) வீசினார்! வீசி, வீசி, அவனிடம் பேசவும் பேசினார்!

கற்பனை செய்து பாருங்கள்...
* எண்ணெய் வாணிபச் செட்டியார் ஒருவர், கருவறைக்கு உள்ளே!
* அந்தண இளைஞன் ஒருவன், கருவறைக்கு வெளியே!


"இறைவன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறான்? அவனிடம் எனக்கு ஒரு உத்தரவு வாங்கிக் கொடுங்க" என்று ஒரு அந்தண இளைஞன் ஒரு செட்டியாரைக் கெஞ்சுகிறான்! ஹா ஹா ஹா!

நண்பன் ஜி.ராகவனுக்கும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இப்படி நுழையணும்-ன்னு ஒரு ஆசையாம்! "கனவு, கினவு ஏதாச்சும் காணுறியா கேஆரெஸ்? இதெல்லாம் நடக்கிற காரியமா?" என்று கேட்கத் தோணுதா மக்களே? ஹிஹி!
இது முற்றிலும் உண்மை! அதான் சொன்னேனே ஆயிரமாவது பிறந்த நாள்-ன்னு! ஓ...பேரையும் ஊரையும் இன்னும் சொல்லலீயா? அதான் சந்தேகமா...?

அது காஞ்சிபுரம் பேரருளாளன் (வரதராஜப் பெருமாள்) கருவறை!
* வெளியில் நின்ற அந்தண இளைஞனின் பெயர் = ???
* கருவறையில் உள்ளே இருந்த செட்டியாரின் பெயர் = திருக்கச்சி நம்பிகள்! - இனிய 1000வது பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருக்கச்சி நம்பிகளே! இன்னுமொரு ஆயிரம் ஆண்டு இரும்!


கஜேந்திர தாசன்! ஆனால் அனைவரும் மரியாதையாக அழைப்பது = திருக்கச்சி நம்பிகள்! காஞ்சி பூர்ணர்!
பூவிருந்தவல்லி அவர் சொந்த ஊர்! சென்னைத் தமிழில் பூந்தமல்லி! :)
அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து செல்கிறார் நம்பி! கையில் குடமும், பூக்குடலையும்! வழியில் ஸ்ரீபெரும்பூதூரில் தங்கி இளைப்பாற...
அந்த அதி முக்கியமான வரலாற்றுச் சந்திப்பு நடந்தது! ஒரு இளைஞனின் வாழ்க்கையையே திசை திருப்பிப் போட்டது!

ஒரு சைவக் குடும்பத்துச் சிறுவன்! வடமா என்னும் அந்தணர் குலத்தில் பிறந்தவன்! நம்பிகளின் பணிவும் பக்தியும் பார்த்து, மெள்ள மெள்ள அவரை அணுகினான்!
திருக்கச்சி நம்பியோ அங்குள்ள தெரிஞ்ச ஆட்களிடம் ஏதோ திவ்யப் பிரபந்தமாம்...அதைப் மெல்லிசாப் பாடிக் காட்டிக் கொண்டு இருந்தார்! அந்தச் சந்த ஓசை கேட்டு, இவன் மெள்ள வந்து அவர் காலில் வணங்குகிறான்!

நம்பி: "ஐயோ...என்ன இது? பார்க்க ஐயர் வீட்டுப் புள்ளைப் போல இருக்கீங்களே தம்பி! என் காலில் நீங்க விழலாமா?"

இளைஞன்: "அதனால் என்ன சுவாமி? உங்களைப் பார்த்தால் தொண்டிலே பழுத்த பெரியவர் போல இருக்கீங்க! உங்க காலில் விழுந்து ஆசி பெறுவதில் தவறு ஒன்னும் இல்லையே!"

நம்பி: "அதுக்கில்லைப்பா! நீங்கள் அந்தணர்! அடியேன் தாழ்ந்த குலத்தவன்!"

இளைஞன்: "எதைப் பார்த்து என்னை அந்தணன் என்று சொன்னீர்கள் சுவாமி? தோளில் உள்ள இந்த நூலைப் பார்த்தா? பூநூல் தரிப்பதால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகி விட முடியுமா என்ன?
இறைவனைத் தோளில் தரிப்பதா? நெஞ்சில் தரிப்பதா? யார் அந்தணர்?"

நம்பி: "ஆகா! இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா! உங்க ஆட்கள் யாராச்சும் தவறாக நினைக்கப் போகிறார்கள்!"

இளைஞன்: "தவறாக ஒன்னும் சொல்லலையே சுவாமி! வித்தியாசமா சொல்றேன்-ன்னு வேணும்னாச் சொல்லுங்க!
திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்தாராம் தலைமை அர்ச்சகர்! பின்னர் மனம் திருந்திய பின், இப்போது அந்தணர்களே ஆழ்வாரைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்களாமே! திருப்பாணாழ்வாரை விடவா நான் ஒரு உயர்ந்த அந்தணன்?"

நம்பி: "இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு பணிவான பேச்சா? உன் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்களப்பா!"

இளைஞன்: "சுவாமி! நீங்கள் சற்று முன் பாடினீங்களே ஒரு பாட்டு! அது நம்மாழ்வார் எழுதியது தானே?"

நம்பி: "ஆமாம்! ஓ...உனக்கு ஆழ்வார்களைப் பற்றித் தெரியுமா? உன்னைப் பார்த்தா ஐயமாரு வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்கே! வேத அத்யயனம் செய்வீங்க அல்லவா? தமிழ்ப் பாசுரம் எங்கேயாச்சும் தனியாப் படிச்சிருக்கியா தம்பீ?"

இளைஞன்: "சும்மா ஆர்வத்தில் அங்கொன்னு இங்கொன்னு கத்துக்கிட்டது தான் சுவாமி! நீங்கள் பாடின சந்த ஓசை, அப்படியே கட்டிப் போட்டு விட்டது! அதான் உங்களிடம் வந்து வணங்கினேன்! வகுப்புக்கு நேரமாச்சு! நான் போய் வருகிறேன் சுவாமி!"

நம்பி: "யாரிடம் படிக்கிறாயப்பா? இது தான் உன் ஊரா? நான் இந்த வழியாத் தான் காஞ்சிபுரம் போவேன் வருவேன்! அடுத்த முறையும் முடிஞ்சா சந்திப்போம்!

இளைஞன்: "திருப்புட்குழி யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத குரு! அவர் கிட்டக்கத் தான் தற்சமயம் பாடம் வாசிக்கிறேன்! பாடசாலையில் ஏற்கனவே சில பிரச்சனைகள்! தாமதமாகப் போகக் கூடாது! நான் வரேன் சுவாமி!
உங்களைப் பார்த்ததில் இருந்து என் மனம் என்னமோ லேசானது போல் இருக்கு!"

நம்பி: "பேர் சொல்லாமல் போகிறாயேப்பா! உன் பேர் என்ன?"

இளைஞன்: "இராமானுஜன்..." (ஓடி விடுகிறான்!)



பின்னாளில் ஆசிரியரின் விளக்கங்கள் சரியில்லாத போது, கேள்விகள் கேட்டு...
அறியும் விழைவால் கேட்ட கேள்விகளை எள்ளலாக எடுத்துக் கொண்ட அந்த ஆச்சாரியர், இவனைக் கொல்லவும் துணிந்து...
அந்தச் சதியிலிருந்து தப்பி... தந்தை இல்லாச் சிறுவன், தாய் சொன்னபடி, திருக்கச்சி நம்பியிடமே போய்ச் சேர்ந்தான்!

வேறு ஒரு நல்ல குருவை அவர் பையனுக்குக் காட்டுவார் என்று தாய் நினைத்தாள்! இவனோ, நம்பியையே குருவாக வரிக்க நினைக்கிறான்! அவரோ, தன் குலம் கருதி சற்றுத் தயங்குகிறார்!

காஞ்சி வரதனுக்குச் சாலைக் கிணற்றில் இருந்து நீர் கொண்டாந்து தரும் தீர்த்த கைங்கர்யம்=நீர்த் தொண்டு செய்யச் சொல்கிறார்!
அப்படிச் செய்யும் போது, உனக்கு ஒரு நல்ல குரு தானாகவே கிடைப்பார் என்றும் சொல்கிறார்!

"வேதம் படிச்சவன் இது போன்ற வேலைக்கார வேலையெல்லாம் செய்வதா? இதெல்லாம் படிக்காத பக்தர்கள் அல்லவா செய்வார்கள்?" - என்று கேள்வியே கேட்கவில்லை அந்த இளைஞன்!
படித்ததின் பயனே, பணிவதற்குத் தான் என்பதைப் புரிந்து வைத்திருந்தான்! உடனே சம்மதித்தும் விட்டான்! அப்படித் தண்ணீர்த் தொண்டு செய்து வரும் வேளையில் தான்....புகழ் பெற்ற "அந்த ஆறு வார்த்தைகள்" உதித்தன!


நம்பி: "என்ன இராமானுசா? இன்று ஏதோ தயங்கித் தயங்கி நிற்கிறீர்கள்? என்ன விஷயம்?"

இளைஞன்: "சுவாமி நீங்கள் கருவறைக்குள்ளேயே சென்று தொண்டு செய்யும் பேறு பெற்றவர்! அடியேனுக்கு அந்தப் பேறு இல்லை!"

நம்பி: "அதனால் என்ன? முறையாகப் பயின்று, முறையாக உள்ளே வரலாமே?"

இளைஞன்: "அதில்லை சுவாமி! எனக்கு ரொம்ப நாளா மனதை அரித்துக் கொண்டே இருக்கும் சில சந்தேகங்கள்! அதைத் தீர்த்து வைக்க குருவும் இதுவரை அமையவில்லை! அமைந்த ஒரே குருவான ஆளவந்தாரும், நான் போய்ப் பார்க்கும் முன்னமே இயற்கை எய்தி விட்டார்! அடுத்து என் வாழ்க்கைப் பாதை எப்படிப் போகும்-ன்னே தெரியலை சுவாமி!"

நம்பி: "இவ்வளவு விசனமா உமக்கு? இயற்கை எய்திவிட்டாலும், உமக்குப் பரமகுரு ஆளவந்தார் தான்! நீர் அந்தணன்! என்னைக் குருவாக வரித்தால், உங்கள் வீட்டிலோ, சமூகத்திலோ, உம் மனைவியோ ஏதாச்சும் சொல்லுவார்கள்! அதான் தயங்கினேன்!
ஆனால் உம் மனத் தாபம் பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கு! சொல்லும் என்ன வேண்டும் உமக்கு?"

இளைஞன்: "இன்றிரவு கருவறைக்குள் விசிறி வீசுவீங்க-ல்ல? அப்போது என் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?
எனக்கு பதில் வாங்கித் தாருங்கள் சுவாமி! உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டு இருப்பேன்!"

நம்பி: "ஹா ஹா ஹா! சொல்லும்...உம் சந்தேகங்கள் என்ன?"

இளைஞன் சொல்லச் சொல்ல.....நம்பி திடுக்கிடுகிறார்....


காஞ்சி வரதன்!


இறைவன்: "என்ன நம்பிகளே! பலத்த யோசனை? இன்று உம் விசிறியில் இருந்து காற்றே வரலையே? காற்று வந்தால் தானே அதற்குப் பேரு விசிறி?" :)

நம்பி: "பெருமாளே! மன்னிக்க வேண்டும்! ஆழ்ந்த சிந்தனை! சிறு பிள்ளை கேட்ட பெரும் கேள்விகள் அப்படி! அவன் கேட்டது எனக்கும் தெரிந்தது போலத் தான் இருக்கு! ஆனால் தெரியாதது போலவும் இருக்கு!"

இறைவன்: "அடேயப்பா! உம் சீடன் கேட்ட கேள்விகளுக்கு அப்படி ஒரு சக்தியா? கேள்வி கேட்கவே பிறந்திருக்கான் போல!
கேள்வி தான் ஆன்ம விசாரணையைத் தூண்டும்! கேள்வியே வேள்வி! தாங்கள் அறியீரோ நம்பீ?"

நம்பி: "அறிவேன் சுவாமி! ஆனால் இது போன்ற கேள்விகளைக் கேட்டு, பாடசாலைக் குருவால் அவனுக்கு ஆபத்து தானே மிஞ்சியது?
உண்மையை அறியும் விழைவு இல்லாது, தாங்கள் வைத்ததே சட்டம் என்னும் குருமார்கள் யோக விசாரணை இல்லாதவர்கள்! அவர்களுக்கு கேள்விகள் என்றுமே பிடிப்பதில்லை!
அவர்களிடம் போய்க் கேட்பதை விட, அவன் சந்தேகத்தை நீங்களே தீர்த்து வைத்தால் என்ன?....குருவாய் வருவாய் அருள்வாய் வரதா!"

இறைவன்: "சொல்லுங்கள்! என்ன கேள்விகள்?"

1. கட+வுள் என்றால் என்ன? யார் பரம்பொருள்?
2. உண்மைத் தத்துவம் என்பது எது?
3. கடவுளை அடையும் உபாயம் எது?
4. மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
5. எப்போது மோட்சம் கிட்டும்?
6. குருவாக யாரைக் கொள்வது?

நம்பிகள் சொல்லச் சொல்ல, இறைவனே திடுக்கிடுகிறான்....


இறைவன்: "திருக்கச்சி நம்பிகளே! போய் உம் சீடன் இராமானுசனிடம் சொல்லும்! அவன் கேட்ட கேள்விகள் அவ்வளவு கூர்மையானவை!
அதை விளக்கத் தான், நான் இத்தனை காலம், இத்தனை அவதாரங்கள் எடுத்து கஷ்டப் படுகிறேன்! :))

ஆனால் அவனோ, ஆறே வார்த்தையில் கேட்டு விட்டான்! ஆறு படையான ஆற்றுப்படை! அவன் வாழ்வின் திருப்புமுனை இங்கே ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள்!

இதோ நம் பதில்கள்! இதோ நம் ஆறு வார்த்தைகள்!
1. பரம் பொருள் நாமே!
2. பேதமே தரிசனம்!
3. உபாயம் பிரபத்தியே!
4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்!
5. சரீரம் விடுகையில் மோட்சம்!
6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது!"



கையில் ஆலவட்ட விசிறியுடன், திருக்கச்சி நம்பிகள்!


1. பரம் பொருள் நாமே! = அகரம் முதலே எல்லா எழுத்தும்! ஆதி பகவன் முதற்றே எல்லா உலகும்!
ஒருவர் விடாது, எல்லாரும், என்றேனும் அடைய வேண்டிய பொருள் நாமே! அதற்கு வழி நாமே! நாமே வழியும் ஜீவனுமாய் இருக்கிறோம்!

2. பேதமே தரிசனம்! = எதுவுமே மாயை அல்ல! எல்லாமே உண்மை!
சித்(உயிர்ப்பு உள்ளது), அசித்(உயிர்ப்பு இல்லாதது), ஈஸ்வரன்(இறைவன்) என்ற பேதமே தரிசனம்! அதுவே தத்துவம்!

3. உபாயம் பிரபத்தியே! = "தன்" அறிவு (ஞானம்), "தன்" செயல் (கர்மம்), "தன்" பக்தி (பக்தி) என்ற அனைத்திலும் "தன்னை" விடுப்பதே உபாயம்! பிரபத்தி என்னும் சரணாகதியே உபாயம்!
உங்கள் அறிவினால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம் ஞானத்தால், கர்மாவால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!
எனவே, என்றுமே வற்றாத நீர் நிலையான எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! பற்றுக பற்றற்றான் பற்றினை!

4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்! = இறக்கும் தருவாயில் இறைவன் நினைவு தேவையில்லை! நல்ல நாளிலேயே என்னை நினைக்க முடியாத உனக்கு, உடல் தளரும் போது, அவஸ்தையை மீறி என்னை நினைக்க முடியுமா? அதனால்..... அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

5. சரீரம் விடுகையில் மோட்சம்! = சரணம் அடைந்தார்க்கு எல்லாம் சரீரம் விடுகையில் மோட்சம்!

6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது! = எப்போதும் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்!
* சரி பெரியவர்கள் என்று எப்படி அறிவது? செயற்கரிய செய்வார் பெரியர்! பெரியவர்கள் பெரியது செய்வார்கள்!
* சரி, அப்போ பெரியது எது? = தொண்டர் தம் பெருமை சொல்லவும் "பெரிதே"! அடியவர்களை அரவணைப்பவரே பெரியவர்! அந்தப் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்! பெரிய நம்பிகளைக் குருவாக இவன் பற்றட்டும்!

நம்பி: "வரதா! வரதா!.........அருமை! அருமை! நீயே குரு! நீயே குரு!
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!
தஸ்மை ஸ்ரீ-யின் குரவே நமஹ!

உய்யும் **ஆறு** என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம்பாவாய்! இதோ சொல்லி விடுகிறேன்...! வெளியில் ஆவலாய்க் காத்துக் கிட்டு இருக்கான்!

ஆற்றுப்படை வார்த்தைகள் இவை தான், என் சீடனே! உன் பொருட்டு இறைவனே சொன்னது! என் இனிய இராமானுசா.....கேட்டுக் கொள்! கேட்டுக் கொள்! " - மகிழ்ச்சியில் விரைகிறார் நம்பிகள்.......


ஆற்றுப்படையான ஆறு வார்த்தைகளைப் பெற்றுத் தந்து...
அந்த இளைஞனின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி...
பின்னாளில் ஒரு சமூக-பக்தி இயக்கம் = இராமானுச இயக்கம் தோன்ற...
முதல் விதை போட்டவர் திருக்கச்சி நம்பிகள்!


அருளாளர் உடன்மொழி சொல் அதிசயத்தோன் வாழியே!
ஆறு மொழி பூதுரார்க்கு அளித்த பிரான் வாழியே!
திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே!
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே!

கருவறைக்குள் அந்தணர் அல்லாத அவரை,
இன்று அத்தனை அந்தணர்களும் கொண்டாடுகிறார்கள்!
நாமும் கொண்டாடுவோம்! 1000வது பிறந்த நாள்!
வரதராசன் கருவறைக்குள் அன்றே புகுந்த, திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்!


அனைத்துச் சாதி அர்ச்சகர்கள், பல நூற்றாண்டுகளாக!
சட்டங்கள் இன்றி, சத்தங்கள் இன்றி...

Read more »

Wednesday, November 07, 2007

திருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்!

திருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க! அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்! - ஹிஹி...புரியலீங்களா?
சரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க! பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க!

ஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).
அவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்!
தமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள்! சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது!

ஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள்! அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்!
இந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்!

பல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்!

இப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா? ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா?
வாய்ச்சொல் புரட்சியா? வாழ்வில் புரட்சியா? - எது வேண்டும்?

இறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது! இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்!
அரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை! ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு!
இது எல்லாம் எந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா? பதிவின் தலைப்பைப் பாருங்க! :-)

1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது?

2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது?

3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான்! அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, "திருக்கோவிலூர்" மலையமானுக்கு மணம் முடித்தார்.
பின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார்! இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது?

4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது?

5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது?

6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது?

7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது?




அத்தனைக்கும் ஒரே பதில் தான்!
திருக்கோவிலூர்! - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்!
(பூங் "கோவல்" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு! அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது!

தமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள்! பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்!)

புறநானூற்றிலும் திருக்கோவலூர் சொல்லப்படுகிறது! (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று!!
எங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்!
கடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க! காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பாரதி!

எதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீங்களா? - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது! (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)
அவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்!
அவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள்! முதலாழ்வார்கள் என்றே பெயர்! அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First! ஆக நிக்குது :-)
இப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது!

திவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு? அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி?
திரும்பி எப்படிக் கிடைச்சது?
திருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி? - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க!




திருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை! கும்மிருட்டு வேறு!
பெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்! அவர் பெயர் பொய்கையார்.

பொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே! இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம்! இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது!
உலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க! உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே!

அது ஒரு பக்தரின் வீடு போலும்! எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள்! அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும்! திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?

பொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு! குளிரத் தொடங்கி விட்டது! இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா? உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை! திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.
அதுவும் இல்லை! அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே!
(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!)
நாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன்! நான் நம்பிக்கையான ஆள் தான்! பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி!

சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்!
வீட்டில் உணவு தீர்ந்து விட்டது! பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி!

பொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி! நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன்! வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க!

ஹூம்...என்னமோ தெரியலை இன்னிக்கி!
பசியும் எடுக்குறா மாதிரி இருக்குது! ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை!
ஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது! இறைவா!
கையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்!
டக் டக் டக்!
- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்!

பூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்!
இவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்!
நாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! (உட்காரலாம்)

இருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்!
மீண்டும் டக் டக் டக்!
இன்னொருவர் தட்டுகிறார்! அவரும் அடியவர் போல் தான் உள்ளார்!
பேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே!

பொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க! இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே!
இது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா?
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்!
குறுகலான இடம்! ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை!
நீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை!
கூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை!

திடீரென்று...கும்மிருட்டில்...
மூவருக்கும் மூச்சு திணறுகிறது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு!
யாரோ பிடித்து நெருக்கறாங்க! அச்சோ வலிக்கிறதே!!! - கள்வனோ?
(நாளை தொடரும்...)

Read more »

Thursday, November 30, 2006

கைசிகம் - புராணமா? புரட்சியா??

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Dec-01, 2006). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!

சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்!
இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!

தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!

வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் திருவரங்கம் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்!
அவ்வகையில் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!

இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.

குறுங்குடி நம்பி


அரையர் சேவை

அன்று ஒரு நாள், கார்த்திகை மாத ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை!
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!

அந்தணனாக இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
இன்று ஏகாதசி அல்லவா?....
அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"

உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே!
"நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?" என்று பிரம்ம ராட்சசனிடம் கேட்டுப் பார்த்தான்.

"டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"
என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ?
அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.

தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
"என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? வைணவ அடியான் சொன்ன சொல் தவறலாமா?"

விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? நான் பெருமாளின் அன்பன்! இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!

மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை அப்போது விட்டது!
"உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!

"சரி நீயே விரும்பிக் கேட்பதால்,கடைத்தேற இதோ", என்று புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான்.
பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
நம்பாடுவானை அந்த அந்தணன் விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.



(Re-enactment)

ஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது! (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ்.அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். கிராமியக் கலை, இந்தச் சுட்டியில் காணலாம்!

இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!

இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர்!

என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்! யார் தெரியுமா?
அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!


"அமர ஓர்அங்கம் ஆறும், வேதம் ஓர்நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே
"


இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள் மற்றும் ஆச்சாரியர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP