Wednesday, March 04, 2009

கருவறைக்குள் அந்தணர் அல்லாதார்! - 1000வது ஆண்டு!

கருவறைக்குள்ளே அந்தணர் அல்லாதார் போகலாமா? அப்படிப் போகத் தான் முடியுமா?
போக ஆகமத்தில் அனுமதி உண்டா? இது வரை யாராச்சும் அப்படிப் போய் இருக்காங்களா?
போனவர்களைச் சக அந்தணர்கள் மதித்து நடத்துவாங்களா? - இப்படி அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் தான்! = ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

ஆகா! அப்படிக் கருவறைக்குள் போனவர் யாருப்பா? அதுவும் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே?
இப்ப தானே அரசு சட்டம் எல்லாம் கொண்டாந்து, அனைத்துச் சாதி அர்ச்சகர்-ன்னு ஆகமம் படிக்கவே ஆரம்பிச்சி இருக்காங்க?
சென்னை நகரம் பூவிருந்தவல்லி ஏரியாவின் ஒரு வைசியர்! எண்ணெய் வியாபாரச் செட்டியார் குடும்பத்தில் பிறந்தவர்! ஸோ-கால்ட் தாழ்ந்த குலத்தவர்!
மிகுந்த பணிவும் பண்பும் கொண்டவர்! இறைவன் மீது பக்தியை விட, அன்பைப் பிரதானமாகக் கொண்டவர்!

இவரின் 1000வது பிறந்த நாள் தான் இன்று (Mar-5-2009)! மாசி மாதம் மிருகசீரிட நட்சத்திரம்! ஒரு வாழ்த்து சொல்லிருவமா மக்களே?
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நம்பி! :)


ஆகா? நம்பியா? யார் அந்த நம்பி?

"நானும் கருவறைக்குள் நுழைந்து காட்டுகிறேன் பார்" என்று வீம்புக்கு இவர் நுழையவில்லை! கருவறை நுழைவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு, பின்னர் நுழைந்தார்!
முறையாகப் பயின்று, முறையாக நுழைந்தார்! அன்பால் நுழைந்தார்!

நுழைந்த அடுத்த நிமிடமே அவருக்கு வேர்த்து ஊற்றுகிறது!
அடடா, கருவறை இறைவனுக்கு இப்படியா வேர்த்து வடியும்? என்று விசனப்பட்டார்!
விசிறி (ஆலவட்டம்) வீசினார்! வீசி, வீசி, அவனிடம் பேசவும் பேசினார்!

கற்பனை செய்து பாருங்கள்...
* எண்ணெய் வாணிபச் செட்டியார் ஒருவர், கருவறைக்கு உள்ளே!
* அந்தண இளைஞன் ஒருவன், கருவறைக்கு வெளியே!


"இறைவன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறான்? அவனிடம் எனக்கு ஒரு உத்தரவு வாங்கிக் கொடுங்க" என்று ஒரு அந்தண இளைஞன் ஒரு செட்டியாரைக் கெஞ்சுகிறான்! ஹா ஹா ஹா!

நண்பன் ஜி.ராகவனுக்கும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இப்படி நுழையணும்-ன்னு ஒரு ஆசையாம்! "கனவு, கினவு ஏதாச்சும் காணுறியா கேஆரெஸ்? இதெல்லாம் நடக்கிற காரியமா?" என்று கேட்கத் தோணுதா மக்களே? ஹிஹி!
இது முற்றிலும் உண்மை! அதான் சொன்னேனே ஆயிரமாவது பிறந்த நாள்-ன்னு! ஓ...பேரையும் ஊரையும் இன்னும் சொல்லலீயா? அதான் சந்தேகமா...?

அது காஞ்சிபுரம் பேரருளாளன் (வரதராஜப் பெருமாள்) கருவறை!
* வெளியில் நின்ற அந்தண இளைஞனின் பெயர் = ???
* கருவறையில் உள்ளே இருந்த செட்டியாரின் பெயர் = திருக்கச்சி நம்பிகள்! - இனிய 1000வது பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருக்கச்சி நம்பிகளே! இன்னுமொரு ஆயிரம் ஆண்டு இரும்!


கஜேந்திர தாசன்! ஆனால் அனைவரும் மரியாதையாக அழைப்பது = திருக்கச்சி நம்பிகள்! காஞ்சி பூர்ணர்!
பூவிருந்தவல்லி அவர் சொந்த ஊர்! சென்னைத் தமிழில் பூந்தமல்லி! :)
அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து செல்கிறார் நம்பி! கையில் குடமும், பூக்குடலையும்! வழியில் ஸ்ரீபெரும்பூதூரில் தங்கி இளைப்பாற...
அந்த அதி முக்கியமான வரலாற்றுச் சந்திப்பு நடந்தது! ஒரு இளைஞனின் வாழ்க்கையையே திசை திருப்பிப் போட்டது!

ஒரு சைவக் குடும்பத்துச் சிறுவன்! வடமா என்னும் அந்தணர் குலத்தில் பிறந்தவன்! நம்பிகளின் பணிவும் பக்தியும் பார்த்து, மெள்ள மெள்ள அவரை அணுகினான்!
திருக்கச்சி நம்பியோ அங்குள்ள தெரிஞ்ச ஆட்களிடம் ஏதோ திவ்யப் பிரபந்தமாம்...அதைப் மெல்லிசாப் பாடிக் காட்டிக் கொண்டு இருந்தார்! அந்தச் சந்த ஓசை கேட்டு, இவன் மெள்ள வந்து அவர் காலில் வணங்குகிறான்!

நம்பி: "ஐயோ...என்ன இது? பார்க்க ஐயர் வீட்டுப் புள்ளைப் போல இருக்கீங்களே தம்பி! என் காலில் நீங்க விழலாமா?"

இளைஞன்: "அதனால் என்ன சுவாமி? உங்களைப் பார்த்தால் தொண்டிலே பழுத்த பெரியவர் போல இருக்கீங்க! உங்க காலில் விழுந்து ஆசி பெறுவதில் தவறு ஒன்னும் இல்லையே!"

நம்பி: "அதுக்கில்லைப்பா! நீங்கள் அந்தணர்! அடியேன் தாழ்ந்த குலத்தவன்!"

இளைஞன்: "எதைப் பார்த்து என்னை அந்தணன் என்று சொன்னீர்கள் சுவாமி? தோளில் உள்ள இந்த நூலைப் பார்த்தா? பூநூல் தரிப்பதால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகி விட முடியுமா என்ன?
இறைவனைத் தோளில் தரிப்பதா? நெஞ்சில் தரிப்பதா? யார் அந்தணர்?"

நம்பி: "ஆகா! இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா! உங்க ஆட்கள் யாராச்சும் தவறாக நினைக்கப் போகிறார்கள்!"

இளைஞன்: "தவறாக ஒன்னும் சொல்லலையே சுவாமி! வித்தியாசமா சொல்றேன்-ன்னு வேணும்னாச் சொல்லுங்க!
திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்தாராம் தலைமை அர்ச்சகர்! பின்னர் மனம் திருந்திய பின், இப்போது அந்தணர்களே ஆழ்வாரைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்களாமே! திருப்பாணாழ்வாரை விடவா நான் ஒரு உயர்ந்த அந்தணன்?"

நம்பி: "இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு பணிவான பேச்சா? உன் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்களப்பா!"

இளைஞன்: "சுவாமி! நீங்கள் சற்று முன் பாடினீங்களே ஒரு பாட்டு! அது நம்மாழ்வார் எழுதியது தானே?"

நம்பி: "ஆமாம்! ஓ...உனக்கு ஆழ்வார்களைப் பற்றித் தெரியுமா? உன்னைப் பார்த்தா ஐயமாரு வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்கே! வேத அத்யயனம் செய்வீங்க அல்லவா? தமிழ்ப் பாசுரம் எங்கேயாச்சும் தனியாப் படிச்சிருக்கியா தம்பீ?"

இளைஞன்: "சும்மா ஆர்வத்தில் அங்கொன்னு இங்கொன்னு கத்துக்கிட்டது தான் சுவாமி! நீங்கள் பாடின சந்த ஓசை, அப்படியே கட்டிப் போட்டு விட்டது! அதான் உங்களிடம் வந்து வணங்கினேன்! வகுப்புக்கு நேரமாச்சு! நான் போய் வருகிறேன் சுவாமி!"

நம்பி: "யாரிடம் படிக்கிறாயப்பா? இது தான் உன் ஊரா? நான் இந்த வழியாத் தான் காஞ்சிபுரம் போவேன் வருவேன்! அடுத்த முறையும் முடிஞ்சா சந்திப்போம்!

இளைஞன்: "திருப்புட்குழி யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத குரு! அவர் கிட்டக்கத் தான் தற்சமயம் பாடம் வாசிக்கிறேன்! பாடசாலையில் ஏற்கனவே சில பிரச்சனைகள்! தாமதமாகப் போகக் கூடாது! நான் வரேன் சுவாமி!
உங்களைப் பார்த்ததில் இருந்து என் மனம் என்னமோ லேசானது போல் இருக்கு!"

நம்பி: "பேர் சொல்லாமல் போகிறாயேப்பா! உன் பேர் என்ன?"

இளைஞன்: "இராமானுஜன்..." (ஓடி விடுகிறான்!)



பின்னாளில் ஆசிரியரின் விளக்கங்கள் சரியில்லாத போது, கேள்விகள் கேட்டு...
அறியும் விழைவால் கேட்ட கேள்விகளை எள்ளலாக எடுத்துக் கொண்ட அந்த ஆச்சாரியர், இவனைக் கொல்லவும் துணிந்து...
அந்தச் சதியிலிருந்து தப்பி... தந்தை இல்லாச் சிறுவன், தாய் சொன்னபடி, திருக்கச்சி நம்பியிடமே போய்ச் சேர்ந்தான்!

வேறு ஒரு நல்ல குருவை அவர் பையனுக்குக் காட்டுவார் என்று தாய் நினைத்தாள்! இவனோ, நம்பியையே குருவாக வரிக்க நினைக்கிறான்! அவரோ, தன் குலம் கருதி சற்றுத் தயங்குகிறார்!

காஞ்சி வரதனுக்குச் சாலைக் கிணற்றில் இருந்து நீர் கொண்டாந்து தரும் தீர்த்த கைங்கர்யம்=நீர்த் தொண்டு செய்யச் சொல்கிறார்!
அப்படிச் செய்யும் போது, உனக்கு ஒரு நல்ல குரு தானாகவே கிடைப்பார் என்றும் சொல்கிறார்!

"வேதம் படிச்சவன் இது போன்ற வேலைக்கார வேலையெல்லாம் செய்வதா? இதெல்லாம் படிக்காத பக்தர்கள் அல்லவா செய்வார்கள்?" - என்று கேள்வியே கேட்கவில்லை அந்த இளைஞன்!
படித்ததின் பயனே, பணிவதற்குத் தான் என்பதைப் புரிந்து வைத்திருந்தான்! உடனே சம்மதித்தும் விட்டான்! அப்படித் தண்ணீர்த் தொண்டு செய்து வரும் வேளையில் தான்....புகழ் பெற்ற "அந்த ஆறு வார்த்தைகள்" உதித்தன!


நம்பி: "என்ன இராமானுசா? இன்று ஏதோ தயங்கித் தயங்கி நிற்கிறீர்கள்? என்ன விஷயம்?"

இளைஞன்: "சுவாமி நீங்கள் கருவறைக்குள்ளேயே சென்று தொண்டு செய்யும் பேறு பெற்றவர்! அடியேனுக்கு அந்தப் பேறு இல்லை!"

நம்பி: "அதனால் என்ன? முறையாகப் பயின்று, முறையாக உள்ளே வரலாமே?"

இளைஞன்: "அதில்லை சுவாமி! எனக்கு ரொம்ப நாளா மனதை அரித்துக் கொண்டே இருக்கும் சில சந்தேகங்கள்! அதைத் தீர்த்து வைக்க குருவும் இதுவரை அமையவில்லை! அமைந்த ஒரே குருவான ஆளவந்தாரும், நான் போய்ப் பார்க்கும் முன்னமே இயற்கை எய்தி விட்டார்! அடுத்து என் வாழ்க்கைப் பாதை எப்படிப் போகும்-ன்னே தெரியலை சுவாமி!"

நம்பி: "இவ்வளவு விசனமா உமக்கு? இயற்கை எய்திவிட்டாலும், உமக்குப் பரமகுரு ஆளவந்தார் தான்! நீர் அந்தணன்! என்னைக் குருவாக வரித்தால், உங்கள் வீட்டிலோ, சமூகத்திலோ, உம் மனைவியோ ஏதாச்சும் சொல்லுவார்கள்! அதான் தயங்கினேன்!
ஆனால் உம் மனத் தாபம் பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கு! சொல்லும் என்ன வேண்டும் உமக்கு?"

இளைஞன்: "இன்றிரவு கருவறைக்குள் விசிறி வீசுவீங்க-ல்ல? அப்போது என் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?
எனக்கு பதில் வாங்கித் தாருங்கள் சுவாமி! உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டு இருப்பேன்!"

நம்பி: "ஹா ஹா ஹா! சொல்லும்...உம் சந்தேகங்கள் என்ன?"

இளைஞன் சொல்லச் சொல்ல.....நம்பி திடுக்கிடுகிறார்....


காஞ்சி வரதன்!


இறைவன்: "என்ன நம்பிகளே! பலத்த யோசனை? இன்று உம் விசிறியில் இருந்து காற்றே வரலையே? காற்று வந்தால் தானே அதற்குப் பேரு விசிறி?" :)

நம்பி: "பெருமாளே! மன்னிக்க வேண்டும்! ஆழ்ந்த சிந்தனை! சிறு பிள்ளை கேட்ட பெரும் கேள்விகள் அப்படி! அவன் கேட்டது எனக்கும் தெரிந்தது போலத் தான் இருக்கு! ஆனால் தெரியாதது போலவும் இருக்கு!"

இறைவன்: "அடேயப்பா! உம் சீடன் கேட்ட கேள்விகளுக்கு அப்படி ஒரு சக்தியா? கேள்வி கேட்கவே பிறந்திருக்கான் போல!
கேள்வி தான் ஆன்ம விசாரணையைத் தூண்டும்! கேள்வியே வேள்வி! தாங்கள் அறியீரோ நம்பீ?"

நம்பி: "அறிவேன் சுவாமி! ஆனால் இது போன்ற கேள்விகளைக் கேட்டு, பாடசாலைக் குருவால் அவனுக்கு ஆபத்து தானே மிஞ்சியது?
உண்மையை அறியும் விழைவு இல்லாது, தாங்கள் வைத்ததே சட்டம் என்னும் குருமார்கள் யோக விசாரணை இல்லாதவர்கள்! அவர்களுக்கு கேள்விகள் என்றுமே பிடிப்பதில்லை!
அவர்களிடம் போய்க் கேட்பதை விட, அவன் சந்தேகத்தை நீங்களே தீர்த்து வைத்தால் என்ன?....குருவாய் வருவாய் அருள்வாய் வரதா!"

இறைவன்: "சொல்லுங்கள்! என்ன கேள்விகள்?"

1. கட+வுள் என்றால் என்ன? யார் பரம்பொருள்?
2. உண்மைத் தத்துவம் என்பது எது?
3. கடவுளை அடையும் உபாயம் எது?
4. மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
5. எப்போது மோட்சம் கிட்டும்?
6. குருவாக யாரைக் கொள்வது?

நம்பிகள் சொல்லச் சொல்ல, இறைவனே திடுக்கிடுகிறான்....


இறைவன்: "திருக்கச்சி நம்பிகளே! போய் உம் சீடன் இராமானுசனிடம் சொல்லும்! அவன் கேட்ட கேள்விகள் அவ்வளவு கூர்மையானவை!
அதை விளக்கத் தான், நான் இத்தனை காலம், இத்தனை அவதாரங்கள் எடுத்து கஷ்டப் படுகிறேன்! :))

ஆனால் அவனோ, ஆறே வார்த்தையில் கேட்டு விட்டான்! ஆறு படையான ஆற்றுப்படை! அவன் வாழ்வின் திருப்புமுனை இங்கே ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள்!

இதோ நம் பதில்கள்! இதோ நம் ஆறு வார்த்தைகள்!
1. பரம் பொருள் நாமே!
2. பேதமே தரிசனம்!
3. உபாயம் பிரபத்தியே!
4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்!
5. சரீரம் விடுகையில் மோட்சம்!
6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது!"



கையில் ஆலவட்ட விசிறியுடன், திருக்கச்சி நம்பிகள்!


1. பரம் பொருள் நாமே! = அகரம் முதலே எல்லா எழுத்தும்! ஆதி பகவன் முதற்றே எல்லா உலகும்!
ஒருவர் விடாது, எல்லாரும், என்றேனும் அடைய வேண்டிய பொருள் நாமே! அதற்கு வழி நாமே! நாமே வழியும் ஜீவனுமாய் இருக்கிறோம்!

2. பேதமே தரிசனம்! = எதுவுமே மாயை அல்ல! எல்லாமே உண்மை!
சித்(உயிர்ப்பு உள்ளது), அசித்(உயிர்ப்பு இல்லாதது), ஈஸ்வரன்(இறைவன்) என்ற பேதமே தரிசனம்! அதுவே தத்துவம்!

3. உபாயம் பிரபத்தியே! = "தன்" அறிவு (ஞானம்), "தன்" செயல் (கர்மம்), "தன்" பக்தி (பக்தி) என்ற அனைத்திலும் "தன்னை" விடுப்பதே உபாயம்! பிரபத்தி என்னும் சரணாகதியே உபாயம்!
உங்கள் அறிவினால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம் ஞானத்தால், கர்மாவால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!
எனவே, என்றுமே வற்றாத நீர் நிலையான எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! பற்றுக பற்றற்றான் பற்றினை!

4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்! = இறக்கும் தருவாயில் இறைவன் நினைவு தேவையில்லை! நல்ல நாளிலேயே என்னை நினைக்க முடியாத உனக்கு, உடல் தளரும் போது, அவஸ்தையை மீறி என்னை நினைக்க முடியுமா? அதனால்..... அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

5. சரீரம் விடுகையில் மோட்சம்! = சரணம் அடைந்தார்க்கு எல்லாம் சரீரம் விடுகையில் மோட்சம்!

6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது! = எப்போதும் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்!
* சரி பெரியவர்கள் என்று எப்படி அறிவது? செயற்கரிய செய்வார் பெரியர்! பெரியவர்கள் பெரியது செய்வார்கள்!
* சரி, அப்போ பெரியது எது? = தொண்டர் தம் பெருமை சொல்லவும் "பெரிதே"! அடியவர்களை அரவணைப்பவரே பெரியவர்! அந்தப் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்! பெரிய நம்பிகளைக் குருவாக இவன் பற்றட்டும்!

நம்பி: "வரதா! வரதா!.........அருமை! அருமை! நீயே குரு! நீயே குரு!
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!
தஸ்மை ஸ்ரீ-யின் குரவே நமஹ!

உய்யும் **ஆறு** என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம்பாவாய்! இதோ சொல்லி விடுகிறேன்...! வெளியில் ஆவலாய்க் காத்துக் கிட்டு இருக்கான்!

ஆற்றுப்படை வார்த்தைகள் இவை தான், என் சீடனே! உன் பொருட்டு இறைவனே சொன்னது! என் இனிய இராமானுசா.....கேட்டுக் கொள்! கேட்டுக் கொள்! " - மகிழ்ச்சியில் விரைகிறார் நம்பிகள்.......


ஆற்றுப்படையான ஆறு வார்த்தைகளைப் பெற்றுத் தந்து...
அந்த இளைஞனின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி...
பின்னாளில் ஒரு சமூக-பக்தி இயக்கம் = இராமானுச இயக்கம் தோன்ற...
முதல் விதை போட்டவர் திருக்கச்சி நம்பிகள்!


அருளாளர் உடன்மொழி சொல் அதிசயத்தோன் வாழியே!
ஆறு மொழி பூதுரார்க்கு அளித்த பிரான் வாழியே!
திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே!
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே!

கருவறைக்குள் அந்தணர் அல்லாத அவரை,
இன்று அத்தனை அந்தணர்களும் கொண்டாடுகிறார்கள்!
நாமும் கொண்டாடுவோம்! 1000வது பிறந்த நாள்!
வரதராசன் கருவறைக்குள் அன்றே புகுந்த, திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்!


அனைத்துச் சாதி அர்ச்சகர்கள், பல நூற்றாண்டுகளாக!
சட்டங்கள் இன்றி, சத்தங்கள் இன்றி...

35 comments:

  1. கேஆர்எஸ்! அப்படியே இதயம் இனித்தது, கண்கள் பனித்தன என்று எழுதலாம் என்று பார்த்தால் முடிலிங்க :-)

    கோவில் அர்ச்சகர் என்பது ஒரு வேலை. அவர் கடவுளின் ஏஜண்டு என்பது நாமாக நினைத்துக்
    கொள்வது, எங்கோ ஒரு சில இடங்களில் ஆத்மார்த்தமாய் சேவை செய்பவர்கள் இருக்கலாம் (எத்தினி படத்துல கதையில பார்த்திருக்கிறோம் :-) மாமி, பெற்ற பெண்ணுக்கு ஒரு வழியில்லையே என்று புலம்ப, ஐயிரு எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று தத்துவம் பேசுவார்)
    மத்தப்படி, கோவில் -கடவுள் என்பது பிசினசுக்கு மூல தனம் என்பது அர்சகர்களுக்கு நன்கு தெரியும்.

    பிரபல, கூட்டம் கும்மும் கோவில்கள் பரம்பரை சொத்து ஐயா. நம்ம சிதம்ப்ரம் மாதிரி, அத்தினி
    சுலபமா வெளி ஆட்களுக்கு, பிராமணனாய் இருந்தாலும் வேலை கிடைக்காது. அடுத்து பாப்பான்/
    பிராமணன் என்ற ஒற்றை சொல் கோவில் காரியங்களில் வேலைக்கு ஆவாது. ஐயர் என்றால்
    ஏழு எட்டு பிரிவுகள், அய்யங்கார் என்றால் வடகலை, தெங்கலை இப்படி பல்வேறு பிரிவினைகள்.
    அந்த பிரிவுக்கு கீழ் வரூம் கோவில்களில் மத்த பிரிவை சேர்ந்த பிராமணனை பூஜை செய்ய விட மாட்டார்கள்.

    ஸ்மார்த்த பிராமணனக்கு ஸ்ரீரங்கம் கோவில் வேலை கிடைக்குமா? அனைத்து சாதியினருக்கும்
    அர்ச்சகர் வேலை என்பது சமூக சாதி உயர்வு தாழ்வை நீக்குகிறது என்பதில் ஐயமில்லை, ஆனால்
    என்னுடைய கேள்வி ஒன்றுதான்.

    தெரு முனை புள்ளையார்கோவில் தினம் கிடைக்கும் சில்லறையும், மாச சம்பளமாய் சில நூறும் வேண்டாம், அவர்களுக்கு திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரை இருக்கும் பணம் கொழிக்கும் கோவில்களில் வேலை கிடைக்குமா? கொடுப்பார்களா?

    ReplyDelete
  2. அகத்தும் புறத்தும் அரங்கனே!உன்தன்
    முகத்தையே காண்கின்றேன்மொய்ம்பார்-சகத்தின்
    இரட்சகனே என்று திருக்கச்சி நம்பி
    உரத்துக்கு உண்டோ ஓர் ஒப்பு.

    இந்தநன்னாளில் நம்பியைப்பற்றிய பதிவென்றதும் ஓடிவந்துவிட்டேன்!

    ReplyDelete
  3. Only Pothi's can enter inside Thiruchendur's Sanctum. They are
    from Karnataka(Brahmins). When there was a drought everybody decided to leave, including the tamilnadu brahmins who had the right to perform the poojas. Pothi's stepped in and stayed.
    This is the story I have heard!

    ReplyDelete
  4. தலைப்பு ? அந்தணர் என்றால் பார்பனர் என்ற பொருள் இல்லை.

    ReplyDelete
  5. "நானும் கருவறைக்குள் நுழைந்து காட்டுகிறேன் பார்" என்று வீம்புக்கு இவர் நுழையவில்லை! கருவறை நுழைவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு, பின்னர் நுழைந்தார்! முறையாகப் பயின்று, முறையாக நுழைந்தார்! அன்பால் நுழைந்தார்!
    >>>>>>>>

    திருக்கச்சிநம்பியின் தந்தை தன் மைந்த்ர்களுக்கு சிறிது பொருளைக்கொடுத்து இதனைக்கொண்டு உங்களீல் யார் அதிகம் பணம் சம்பாதித்துவருகிறீர்கள் என்ப்பார்க்கிறேன் என்றாராம்
    சிலநாட்கள் கழிந்ததும் மற்றமைந்தர்கள் அவர்கொடுத்தபொருளை வைத்து நிறையபொருள் ஈட்டிவந்திருக்க நம்பிமட்டும் திருமால் அடியார்களுக்கு விருந்தளித்து செல்வழித்ததாகக் கூற அப்பாவால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
    தாயோ அன்பின்மிகுதியால் தன்னிடம் உள்ளபொருளைத்தருவதாக சொல்லி அதனைத் தந்தையிடம் காண்பித்து நம்பி ஈட்டிவந்ததாய் சொல்லி தங்களோடு இருக்கக்கெஞ்சினாள்
    பொய் சொல்ல விரும்பாத நம்பி தாயினை சமாதானம் விட்டு வெளியேறினார் ஸ்ரீபெரும்புதூர் சென்றபோது அவருக்கு அத்திகிரி வரதன் நினைவாகவே இருக்க, பேரருளாளன் அவர்கனவில் தோன்றி தன்னைக்காண வரச்செய்தான்.

    ஏழைகீழ்மகன் என்று பேதம்காணாது என்னையும் ஆட்கொண்ட பெருமானே அடியேன் உனக்கு செய்தற்குரிய தொண்டு என்ன என்பதை நீங்களே பணித்தருளல் வேணும் என நம்பி கேட்டுக்கொள்ள இறைவனே தனக்கு திருவால வட்டம் வீசும்படி கேட்டுக்கொண்டான்!

    ReplyDelete
  6. இன்னும் நிறைய இருக்கிறது திருக்கச்சிநம்பியின் பெருமைகளையும் சிறப்புகளையும் சொல்வதற்கு என நினைக்கிறேன்.பேரருளாளர் அவருக்குப்பலநேரங்களில் தாயாய் தந்தையாய் குருவாய் இருந்து காத்திருக்கிறான் என்பதை அவர்தம் வரலாறு படிக்கையில் தெரிகிறது
    இந்தப்பதிவில் சுருக்கமாகச்சொன்னாலும் சுவாரஸ்யமாக சொல்லிவிட்ட ரவிக்கு பாராட்டு!

    மருவாரும் திருவல்லி வாழவந்தோன் வாழியே!
    மாசி மிருக சீரீடத்தில் வந்துதித்தோன் வாழியே!

    அருளாள னுடன் மொழிசொல் அதிசயத்தோன் வாழியே!

    ஆறு மொழி பூதுரற் களித்த பிரான் வாழியே!

    திருவாலவட்டமெனும் செம்பணியோன் வாழியே!

    தேவரா சாட்டகத்தைச் செப்பு பிரான் வாழியே!

    தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே!

    திருக்கச்சிநம்பியிரு திருவடிகள் வாழியே!

    **************************
    பேரருளாளர் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  7. //ramachandranusha(உஷா) said...
    கேஆர்எஸ்! அப்படியே இதயம் இனித்தது, கண்கள் பனித்தன என்று எழுதலாம் என்று பார்த்தால் முடிலிங்க :-)//

    ஹா ஹா ஹா!
    ஏன் முடியலை உஷாக்கா?

    //தெரு முனை புள்ளையார்கோவில் தினம் கிடைக்கும் சில்லறையும், மாச சம்பளமாய் சில நூறும் வேண்டாம், அவர்களுக்கு திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரை இருக்கும் பணம் கொழிக்கும் கோவில்களில் வேலை கிடைக்குமா? கொடுப்பார்களா?//

    பதிவுக்கும் உங்க கேள்விக்கும் என்ன சம்பந்தம் உஷாக்கா?
    நான் சொன்னது கைங்கர்யம்!
    நீங்க பேசுவது பிசினஸ்! :)

    பை தி வே, பொறந்த நாள் அதுவுமா வாழ்த்து கூடச் சொல்லாம, நேரடியா நீங்க பிசினஸில் இறங்கினா எப்படி? :)

    //"பணம் கொழிக்கும் கோவில்களில்" வேலை கிடைக்குமா?//

    நோக்கத்தைப் பொறுத்தது அது!
    பணம் கொழிக்கும் கோவில் ஏதாச்சும் ஒன்றில் மட்டும் தான் நுழைவேன்-ன்னு இடையறாது முயற்சித்தா நுழையலாம்! :)))

    ReplyDelete
  8. //ஷைலஜா said...
    இந்தநன்னாளில் நம்பியைப்பற்றிய பதிவென்றதும் ஓடிவந்துவிட்டேன்!//

    திருவரங்கப்ரியா இல்லாமல் நம்பியா? :)
    வெண்பொங்கல் கணக்கா வெண்பாவோடு வந்திருக்கீங்க-க்கா! :)

    ReplyDelete
  9. //Anonymous said...
    Only Pothi's can enter inside Thiruchendur's Sanctum. They are
    from Karnataka(Brahmins). When there was a drought everybody decided to leave, including the tamilnadu brahmins who had the right to perform the poojas. Pothi's stepped in and stayed.
    This is the story I have heard!//

    You are right sire!
    Not even sivachariyars are allowed inside the Tiruchendur Sanctum! It is just the Pothis! :)

    Hereditary love to the Lord is what matters, not hereditary rights! Just bcoz one generation served in the times of drought doesnt mean, people can bank on that good deed for years to come.

    Self qualification & Selfless service to the Lord alone matters!
    But sure times will change, slowly n steadily, as newer generations generate...

    ReplyDelete
  10. //கோவி.கண்ணன் said...
    தலைப்பு ? அந்தணர் என்றால் பார்பனர் என்ற பொருள் இல்லை//

    ஹிஹி!
    அது தெரியும்-ண்ணா! ஆனா பிறந்த நாள் வாழ்த்து சொல்லாம, நீங்க "அதை" மட்டுமே பாத்துக்கிட்டு இருந்தா எப்படி? :))

    கருவறைக்குள் "பார்ப்பனர்" அல்லாதார்-ன்னு போட்டாத் தான் வாழ்த்து சொல்வீங்களா? :))
    மரியாதை நிமித்தமாத் தான் இப்படித் தலைப்பு வச்சேன்!

    ReplyDelete
  11. //நம்பிமட்டும் திருமால் அடியார்களுக்கு விருந்தளித்து செல்வழித்ததாகக் கூற அப்பாவால் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்//

    ஆமாம்-க்கா!
    1000வது ஆண்டு நிறைவு! நம்பிகள் வாழ்க்கை வரலாற்றை ஒவ்வொன்னாச் சொல்லலாம்!

    //இறைவனே தனக்கு திருவால வட்டம் வீசும்படி கேட்டுக்கொண்டான்!//

    ஆமாம்! அரங்கனும் திருவேங்கடமுடையானும் குளிரில் நடுங்க, யாக அக்னியின் நடுவே உதித்த காஞ்சி வரதன் மட்டுமே, விசிறி வீசும் இவரை ஏற்றுக் கொண்டான்! :))

    ReplyDelete
  12. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவி.கண்ணன் said...
    தலைப்பு ? அந்தணர் என்றால் பார்பனர் என்ற பொருள் இல்லை//

    ஹிஹி!
    அது தெரியும்-ண்ணா! ஆனா பிறந்த நாள் வாழ்த்து சொல்லாம, நீங்க "அதை" மட்டுமே பாத்துக்கிட்டு இருந்தா எப்படி? :))

    //கருவறைக்குள் "பார்ப்பனர்" அல்லாதார்-ன்னு போட்டாத் தான் வாழ்த்து சொல்வீங்களா? :))//

    உண்மையிலேயே தலைப்பைப் பார்த்த பிறகு வேறெதையும் படிக்க தோன்றவில்லை.

    மரியாதை நிமித்தமாத் தான் இப்படித் தலைப்பு வச்சேன்!//

    யார் யாருக்கு என்ன ஈர்க்குமோ அது தானே கண்ணில் தெரியும்.

    மரியாதை நிமித்தமாக உங்களை Non-Brahmin என்கிற அடைமொழியில் சொன்னால் ஏற்பீர்களா ? :)

    பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்பதெல்லாம் சாதிப் பெயரல்ல என்பது எனக்கு தெரியும். ஒரு சாதியினருக்கு உயரிய தகுதியைக் காட்ட 'பிராமணர்' என்று குறிப்பிடுவது தேவையா ?
    பிராமணர், அந்தணர் என்ற தகுதியை சாதியின் பெயராக ஒப்புக் கொண்டீர்களெனில் சூத்திரன் என்ற சொல் வழக்கில் இருப்பதையும் ஏற்கவேண்டும். முடியுமா ? :)

    உங்க பதிவை திசைத் திருப்ப விரும்பவில்லை.

    ReplyDelete
  13. //கோவி.கண்ணன் said...
    உங்க பதிவை திசைத் திருப்ப விரும்பவில்லை//

    ஹா ஹா ஹா
    என் அனுமதி இல்லாம, யாரும் திசை திருப்ப முடியாது! :))
    இன்னும் நீங்க பொறந்த நாள் வாழ்த்தே சொல்லலை! :(

    ReplyDelete
  14. //இனிய 1000வது பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருக்கச்சி நம்பிகளே! இன்னுமொரு ஆயிரம் ஆண்டு இரும்! //

    ஞானிகளுக்கும் நல்லான்மாக்களுக்கும் பிறப்பு / இறப்பு ஏது ?

    :)
    இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து 'வலி''யுறுத்துவதால்' வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்.

    திருக்கச்சி நம்பிகளே ! என்றென்றும் வாழ்க நின் புகழ் !

    ReplyDelete
  15. //கோவி.கண்ணன் said...
    ஞானிகளுக்கும் நல்லான்மாக்களுக்கும் பிறப்பு / இறப்பு ஏது ?//

    ஆனா நமக்கு உண்டே! :)
    நம்மோடு பழகி, நம்மைத் திருத்தி பணி கொள்ள வேண்டி இருப்பதால் அவர்களுக்கும் உண்டு! பெம்மான் முருகன் பிறவான் இறவான் :)

    //இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து 'வலி''யுறுத்துவதால்' வாழ்த்துகள் கூறிக் கொள்கிறேன்.
    திருக்கச்சி நம்பிகளே ! என்றென்றும் வாழ்க நின் புகழ் !//

    ஹிஹி! சூப்பர்!
    இனிமே பதிவைத் தாராளமாத் திசை திருப்பிக்கலாம்! நோ பிராப்ளம்! :)

    ReplyDelete
  16. //கோவி.கண்ணன் said...
    மரியாதை நிமித்தமாக உங்களை Non-Brahmin என்கிற அடைமொழியில் சொன்னால் ஏற்பீர்களா ? :)//

    எக்ஜாக்ட்லி! அதனால் தான் கருவறைக்குள் "பார்ப்பனர் அல்லாதார்" என்று சாதி அடைமொழியாகச் சொல்லவில்லை!
    அந்தணர்களே குழுமி இருந்த ஒரு இடத்தில், அந்தணரல்லாத மற்றவர்களும் வரத் துவங்கினர்... என்ற பொருளில் சொன்னேன்!

    இந்தித் திணிப்பை எதிர்க்கும் பல மாநிலத் தலைவர்கள் கூடும் மாநாட்டில் "இந்தி பேசாத மாநில மக்களின்" நலனைக் கருதி-ன்னு சொல்வது இல்லையா?
    உடனே எதற்கு இந்தியை வைத்து எங்களை "இந்தி பேசாத மக்கள்"-ன்னு மையப் படுத்துகிறாய் என்றா கேட்போம்? :)

    வரியைத் தாண்டிய வரியின் நோக்கத்தை வரிக்க வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    //ஒரு சாதியினருக்கு உயரிய தகுதியைக் காட்ட 'பிராமணர்' என்று குறிப்பிடுவது தேவையா ?//

    ஹா ஹா ஹா! இது தனிக் கேள்வி!
    உங்கள் பிரச்சனை எது?
    "இவர்களை" கருவறையில் பேதம் இன்றிக் காண வேண்டும் என்பதா?
    "அவர்களை" அந்தணர்கள் என்று குறிப்பிடக் கூடாது என்பதா? :)

    "அந்தணர்" என்ற சொல் பலவிதமாகப் புழங்கப்படுகிறது!
    அது ஏதோ பெரிய மரியாதைக்குரிய சொல் என்றோ, அந்தச் சொல்லால் குறிப்பிட்டால் உயரிய தகுதி என்றோ நான் நினைக்கவில்லை!

    ReplyDelete
  17. //ஷைலஜா said...
    இன்னும் நிறைய இருக்கிறது திருக்கச்சிநம்பியின் பெருமைகளையும் சிறப்புகளையும் சொல்வதற்கு என நினைக்கிறேன்.//

    ஆமாம்-க்கா! ஆயிரத்தியோராம் ஆண்டில் ஒவ்வொன்னாச் சொல்லுவோம்!

    //திருவாலவட்டமெனும் செம்பணியோன் வாழியே!
    தேவரா சாட்டகத்தைச் செப்பு பிரான் வாழியே!//

    இது என்னா-க்கா? வாழித் திருநாமம்-ன்னு சொல்வாங்களே! அதுவா?

    ReplyDelete
  18. sakthi said...krs!endraia soolnilayil archakar aawayn endru solbavargal entha jaathi aaga irunthalum nenngal eluthiyathai padithall usefula iruukum.

    ReplyDelete
  19. இனி "நுனிப்புல்" மேய்ந்த உஷாக்காவுக்கு வருகிறேன்! :))

    //ramachandranusha(உஷா) said...
    மத்தப்படி, கோவில் -கடவுள் என்பது பிசினசுக்கு மூல தனம் என்பது அர்சகர்களுக்கு நன்கு தெரியும்//

    உண்மை தான்! இப்போ ஆத்மார்த்தம் என்று ரொம்ப எதிர்பார்க்க முடியாது தான்! ஆனால் அந்த பிசினசையும் டீசென்ட்டா பண்ணனும்-ல?

    //அடுத்து பாப்பான்/
    பிராமணன் என்ற ஒற்றை சொல் கோவில் காரியங்களில் வேலைக்கு ஆவாது.... இப்படி பல்வேறு பிரிவினைகள். அந்த பிரிவுக்கு கீழ் வரூம் கோவில்களில் மத்த பிரிவை சேர்ந்த பிராமணனை பூஜை செய்ய விட மாட்டார்கள்//

    ஆமாம்! பரம்பரை பரம்பரையா வச்சதே சட்டம்-ன்னு வந்ததால் அப்படி! முறையாப் பயின்று தகுதி அடிப்படையில் வந்தால், இந்தப் பேச்சே எழாதே! அதற்கு நீங்க ஒரு துரும்பு கிள்ளிப் போடுவீங்களா?

    //என்னுடைய கேள்வி ஒன்றுதான்.
    தெரு முனை புள்ளையார் கோவில் தினம் கிடைக்கும் சில்லறையும், அவர்களுக்கு திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரை இருக்கும் பணம் கொழிக்கும் கோவில்களில் வேலை கிடைக்குமா? கொடுப்பார்களா?//

    ரொம்ப புரட்சிகரமா யோசிச்சிட்டீங்க போல இருக்கே! பாராட்டுக்கள்!

    இங்கே சொல்லப்பட்ட காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் பணக்காரக் கோயில் தான்!
    இங்கே சொல்லப்பட்ட திருக்கச்சி நம்பி பரம்பரையான அர்ச்சகர் இல்லை தான்! சில்லறை ஆளு தான்!

    ஆனாலும் அவர் எப்படிக் கருவறைக்குள் வர முடிந்தது? அதைக் கொஞ்சம் யோசிச்சீங்களா? அப்படி வர முடிந்த காரணங்களைத் தொகுத்துப் பார்க்கலாமே?

    அதை எல்லாம் ஒன்னுமே பாக்காம, வழக்கம் போல, அவன் வர முடியுமா?, இது நல்ல பிசினஸ்-ன்னு புரட்சிகரமான கேலிகளை, உங்களை விட நல்லா என்னாலயும் பேச முடியும்! பேசியும் இருக்கேன்!

    என்னுடைய கேள்வியும் ஒன்று தான்:
    நீங்கள் சொன்னபடி வர முடிந்த ஒரு நிகழ்வைக் காட்டியுள்ளேனே!
    அது ஏன் உங்கள் பார்வைக்குப் படவில்லை? "நுனிப்புல்" என்பதாலா?

    நீங்கள் சொன்னபடியே வர முடிந்த ஒரு நிகழ்வு இங்கு வைக்கப்பட்டுள்ளது!
    அதற்கு உங்கள் கருத்து என்ன? அதைச் சொல்லுங்கள்!
    அதைப் பரவலாக்க முடியுமா? வழி சொல்லுங்கள்! - முடியுமா?

    (சாரி உஷாக்கா, அடியேன் பதிலில் கடுமை இருந்தால்...
    எப்பமே இறைச் சமயத்தில் அரை டம்ப்ளர் காலி, காலி-ன்னே நீங்கள் பல முறை சொல்லுவதால்,
    இம்முறை உங்களுக்கான என் கேள்விகள்! கோச்சிக்காதீங்க :))

    ReplyDelete
  20. //SAKTHIVEL said...
    krs!endraia soolnilayil archakar aawayn endru solbavargal entha jaathi aaga irunthalum nenngal eluthiyathai padithall usefula iruukum//

    வாவ்! சத்தி! நீங்களா? என்ன ஆச்சரியம்! எப்போ பிளாக்கர் கணக்கு எல்லாம் ஓப்பன் பண்ணீங்க?
    நிழல் வாசகர் நிஜ வாசகர் ஆவுறாருப்பா! வருக! வருக! :)

    அர்ச்சகர்கள் பல பேர் பாவப்பட்ட ஜென்மாக்கள்!
    அரசியல்-பிசினஸ்-க்கு இடையேயும் இருக்கணும்! ஆத்மார்த்தமாவும் செய்யணும்-ன்னா ரொம்ப கஷ்டம்!

    We need to have a system for this, just like any other government employee! Merit based admission and subsequent employee program.

    ஆனால் இது ஆம்புலன்ஸ் பணி போல, ஒரு கண்ணியமான பணி என்பதை அர்ச்சகர்கள் உணர்ந்தே இருந்து, எம்பெருமானின் திருமுக உல்லாசத்துக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்ளும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்வது கட்டாயம் இல்லை! ஆனால் நல்லது!

    ReplyDelete
  21. தல

    பெரியவருக்கு வணக்கங்கள் ;)

    உங்கள் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்கும் போது நீங்கள் முகப்பில் கூறிப்பிட்டுள்ள குமுதம் அரசு பதில்கள் தான் ஞாபகத்துக்கு வருது ;)

    ReplyDelete
  22. திருக்கச்சி நம்பிகளின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள். இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் இரும்!!!

    ReplyDelete
  23. திருக்கச்சி நம்பிகளுக்கு கஜேந்திர தாசன் என்று ஒரு திருநாமம் இருப்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். நன்றி இரவி.

    ReplyDelete
  24. பூந்தமல்லி என்பது சென்னைத் தமிழில் வந்த பெயர் இல்லை; அதாவது கொச்சைப்படுத்தப்பட்ட பெயர் இல்லை. அது சரியான பெயரே. அந்த ஊருக்கு இரு பெயர். பூவிருந்தவல்லி, பூந்தண்மல்லி. பூந்தண்மல்லி (குளிர்ச்சியான பூக்கள் நிறைந்த சோலை) என்ற பெயர் அந்த ஊரில் (கோவிலில்) இருக்கும் ஒரு கல்வெட்டில் இருக்கிறது. அதனால் அதுவும் பழமையான பெயரே.

    ReplyDelete
  25. //குமரன் (Kumaran) said...
    பூந்தண்மல்லி (குளிர்ச்சியான பூக்கள் நிறைந்த சோலை) என்ற பெயர் அந்த ஊரில் (கோவிலில்) இருக்கும் ஒரு கல்வெட்டில் இருக்கிறது//

    ஓ பூந்தண்மல்லியா அது! ஜூப்பரு! அப்படின்னா சென்னைவாசிகளாகிய நாங்கள் நற்றமிழ்த் தொண்டு செஞ்சிருக்கோம்-ன்னு சொல்றீங்க! கேட்கவே சந்தோசமா இருக்கே! :)

    சென்னைச் செந்தமிழ் மறவேன் உன்னாலே...ன்னு குமரன் S/O மகாலக்ஷ்மி பாட்டை மாத்திடறேன்! :)

    ReplyDelete
  26. @குமரன்
    //அந்த ஊரில் (கோவிலில்) இருக்கும் ஒரு கல்வெட்டில் இருக்கிறது. அதனால் அதுவும் பழமையான பெயரே//

    அந்த ஊர்க் கோயிலும் வரதராஜப் பெருமாள் - திருக்கச்சி நம்பிகள் ஆலயம்-ன்னு தான் அழைக்கப்படுகிறது!

    நம்பிகளுக்காக அரங்கன், திருவேங்கடமுடையான், வரதராஜன் மூவருமே அங்கு எழுந்தருளி உள்ளார்கள்!

    எளிமையான தூய்மையான சிறப்பான ஆலயம்! அடுத்த முறை குறித்துக் கொள்ளுங்கள்! :)

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    திருக்கச்சி நம்பிகளுக்கு கஜேந்திர தாசன் என்று ஒரு திருநாமம் இருப்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். நன்றி இரவி//

    கஜேந்திர தாசன், காஞ்சி பூர்ணர், பேரருளாள தாசர் என்ற பெயர்களும் உண்டு குமரன்!
    அவரே பிள்ளை லோகாச்சாரியாராக பிற்பாடு அவதரித்தார் என்பது நம்பிக்கை!

    தேவராஜ அஷ்டகம் என்னும் நூலைச் செய்துள்ளார் நம்பிகள்!
    திருமழிசை ஆழ்வார் தனியன் நம்பிகள் செய்தது தான்!

    "அதோ, அவர் தான் இராமானுசர்" என்று ஆளவந்தாருக்குக் கைகாட்டி, உடையவருக்கு ஆச்சார்ய சம்பந்தம் செய்து வைத்த பெருமை நம்பிகளையே சாரும்!

    ReplyDelete
  28. //கோபிநாத் said...
    தல
    பெரியவருக்கு வணக்கங்கள் ;)//

    வணக்கம் கோபி :)

    //உங்கள் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்கும் போது நீங்கள் முகப்பில் கூறிப்பிட்டுள்ள குமுதம் அரசு பதில்கள் தான் ஞாபகத்துக்கு வருது ;)//

    ஹா ஹா ஹா!
    அப்போ நிறைய எதிரிகள் இருக்காங்க-ன்னு சொல்றீங்களா?
    யார் யாருன்னு சொன்னா அவிங்க எல்லாரையும் கும்புட்டுப்பேன்! :)

    ReplyDelete
  29. Vanakkam sir,
    Thirukkachi nambigalin thiruvadigale saranam.He is also disciple of swamy Alavandhar,சரீரம் விடுகையில் மோட்சம்! = சரணம் அடைந்தார்க்கு எல்லாம் சரீரம் விடுகையில் மோட்சம்!this word comes in Thiruvaimozhi passuram for Thirukkannapuramperumal.There is no paramapadha vasal also there.(saranamagum thanadhal adaindharkkellam maranamanal vaigundham kodukkum piran)Tomorrow Kulasekaraperumal birthday,please write about him also.Pallandu irum.
    ARANGAN ARULVANAGA.
    anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  30. //Anonymous said...
    He is also disciple of swamy Alavandhar//

    ஆமாம் ஸ்ரீநிவாசன் சார்! ஆளவந்தாருக்கு உடையவரைக் "காட்டிக் கொடுப்பதே" திருக்கச்சி நம்பிகள் தானே! :)

    //சரீரம் விடுகையில் மோட்சம்! = சரணம் அடைந்தார்க்கு எல்லாம் சரீரம் விடுகையில் மோட்சம்! this word comes in Thiruvaimozhi passuram for Thirukkannapuramperumal//

    ஆமாம்!
    தன தாள் அடைந்தார்க்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்!

    முழு பாசுர வரிகளையும் தர முடியுமா சார்?

    //Tomorrow Kulasekaraperumal birthday,please write about him also.Pallandu irum.//

    நன்றி! நேரமிருக்குமா-ன்னா தெரியலை! முயல்கிறேன்!
    சென்ற ஆண்டு இட்ட பதிவு இதோ:
    http://madhavipanthal.blogspot.com/2008/02/blog-post_18.html
    ஒரு பெண் மனசு, ஆண் மனசு, ஆழ்வார் மனசு!

    ReplyDelete
  31. there are two famous Murugan temples in Srilanka and the "poojaris" are not brahmins..
    one is Kathirkaamam and the other is Selva Sannithi (in Jaffna)

    ReplyDelete
  32. //வெத்து வேட்டு said...
    there are two famous Murugan temples in Srilanka and the "poojaris" are not brahmins..
    one is Kathirkaamam and the other is Selva Sannithi (in Jaffna)//

    ஆமாங்க வெத்துவேட்டு!
    கதிர்காம முருகன் கருவறையில் பூசை முறைகளும் வைதீகம் இல்லை! அதனால் அங்கு அந்தணர்களும் பூசையில் இல்லை!

    ஆனால் கதிர்காமம் கருவறையை ஒட்டிய தேவயானை ஆலயத்தில் அந்தணர்கள் தான் பூசை செய்கிறார்கள் அல்லவா?

    தமிழ்நாட்டில் பெரும்பாலான அம்மன் கோயில்களில் அந்தணர்கள் பூசை முறையில் இல்லை!
    ஆனால் எல்லா முருகன் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும் பெரும்பாலும் அந்தணர்கள் "மட்டுமே" பூசை முறையில் இருப்பார்கள்!

    ReplyDelete
  33. திருக்கச்சி நம்பிகளின் திருவடிகள் சரணம். பலமுறை படிச்சிட்டு பின்னூட்டாமலேயே போக வேண்டி வந்திருச்சு. :( finally!

    ReplyDelete
  34. //கவிநயா said...
    திருக்கச்சி நம்பிகளின் திருவடிகள் சரணம். பலமுறை படிச்சிட்டு பின்னூட்டாமலேயே போக வேண்டி வந்திருச்சு. :( finally!//

    ஹா ஹா ஹா!
    சென்னைக்கு வாங்கக்கா! காஞ்சிபுரம் போயி அப்படியே திருக்கச்சி நம்பி கிட்டயும் போய் வரலாம்!

    ReplyDelete
  35. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
    இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
    ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

    இங்கே சொடுக்கவும்

    ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
    அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
    தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP