Showing posts with label ஆச்சார்யர்கள். Show all posts
Showing posts with label ஆச்சார்யர்கள். Show all posts

Wednesday, March 04, 2009

கருவறைக்குள் அந்தணர் அல்லாதார்! - 1000வது ஆண்டு!

கருவறைக்குள்ளே அந்தணர் அல்லாதார் போகலாமா? அப்படிப் போகத் தான் முடியுமா?
போக ஆகமத்தில் அனுமதி உண்டா? இது வரை யாராச்சும் அப்படிப் போய் இருக்காங்களா?
போனவர்களைச் சக அந்தணர்கள் மதித்து நடத்துவாங்களா? - இப்படி அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் தான்! = ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

ஆகா! அப்படிக் கருவறைக்குள் போனவர் யாருப்பா? அதுவும் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே?
இப்ப தானே அரசு சட்டம் எல்லாம் கொண்டாந்து, அனைத்துச் சாதி அர்ச்சகர்-ன்னு ஆகமம் படிக்கவே ஆரம்பிச்சி இருக்காங்க?
சென்னை நகரம் பூவிருந்தவல்லி ஏரியாவின் ஒரு வைசியர்! எண்ணெய் வியாபாரச் செட்டியார் குடும்பத்தில் பிறந்தவர்! ஸோ-கால்ட் தாழ்ந்த குலத்தவர்!
மிகுந்த பணிவும் பண்பும் கொண்டவர்! இறைவன் மீது பக்தியை விட, அன்பைப் பிரதானமாகக் கொண்டவர்!

இவரின் 1000வது பிறந்த நாள் தான் இன்று (Mar-5-2009)! மாசி மாதம் மிருகசீரிட நட்சத்திரம்! ஒரு வாழ்த்து சொல்லிருவமா மக்களே?
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நம்பி! :)


ஆகா? நம்பியா? யார் அந்த நம்பி?

"நானும் கருவறைக்குள் நுழைந்து காட்டுகிறேன் பார்" என்று வீம்புக்கு இவர் நுழையவில்லை! கருவறை நுழைவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு, பின்னர் நுழைந்தார்!
முறையாகப் பயின்று, முறையாக நுழைந்தார்! அன்பால் நுழைந்தார்!

நுழைந்த அடுத்த நிமிடமே அவருக்கு வேர்த்து ஊற்றுகிறது!
அடடா, கருவறை இறைவனுக்கு இப்படியா வேர்த்து வடியும்? என்று விசனப்பட்டார்!
விசிறி (ஆலவட்டம்) வீசினார்! வீசி, வீசி, அவனிடம் பேசவும் பேசினார்!

கற்பனை செய்து பாருங்கள்...
* எண்ணெய் வாணிபச் செட்டியார் ஒருவர், கருவறைக்கு உள்ளே!
* அந்தண இளைஞன் ஒருவன், கருவறைக்கு வெளியே!


"இறைவன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறான்? அவனிடம் எனக்கு ஒரு உத்தரவு வாங்கிக் கொடுங்க" என்று ஒரு அந்தண இளைஞன் ஒரு செட்டியாரைக் கெஞ்சுகிறான்! ஹா ஹா ஹா!

நண்பன் ஜி.ராகவனுக்கும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இப்படி நுழையணும்-ன்னு ஒரு ஆசையாம்! "கனவு, கினவு ஏதாச்சும் காணுறியா கேஆரெஸ்? இதெல்லாம் நடக்கிற காரியமா?" என்று கேட்கத் தோணுதா மக்களே? ஹிஹி!
இது முற்றிலும் உண்மை! அதான் சொன்னேனே ஆயிரமாவது பிறந்த நாள்-ன்னு! ஓ...பேரையும் ஊரையும் இன்னும் சொல்லலீயா? அதான் சந்தேகமா...?

அது காஞ்சிபுரம் பேரருளாளன் (வரதராஜப் பெருமாள்) கருவறை!
* வெளியில் நின்ற அந்தண இளைஞனின் பெயர் = ???
* கருவறையில் உள்ளே இருந்த செட்டியாரின் பெயர் = திருக்கச்சி நம்பிகள்! - இனிய 1000வது பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருக்கச்சி நம்பிகளே! இன்னுமொரு ஆயிரம் ஆண்டு இரும்!


கஜேந்திர தாசன்! ஆனால் அனைவரும் மரியாதையாக அழைப்பது = திருக்கச்சி நம்பிகள்! காஞ்சி பூர்ணர்!
பூவிருந்தவல்லி அவர் சொந்த ஊர்! சென்னைத் தமிழில் பூந்தமல்லி! :)
அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து செல்கிறார் நம்பி! கையில் குடமும், பூக்குடலையும்! வழியில் ஸ்ரீபெரும்பூதூரில் தங்கி இளைப்பாற...
அந்த அதி முக்கியமான வரலாற்றுச் சந்திப்பு நடந்தது! ஒரு இளைஞனின் வாழ்க்கையையே திசை திருப்பிப் போட்டது!

ஒரு சைவக் குடும்பத்துச் சிறுவன்! வடமா என்னும் அந்தணர் குலத்தில் பிறந்தவன்! நம்பிகளின் பணிவும் பக்தியும் பார்த்து, மெள்ள மெள்ள அவரை அணுகினான்!
திருக்கச்சி நம்பியோ அங்குள்ள தெரிஞ்ச ஆட்களிடம் ஏதோ திவ்யப் பிரபந்தமாம்...அதைப் மெல்லிசாப் பாடிக் காட்டிக் கொண்டு இருந்தார்! அந்தச் சந்த ஓசை கேட்டு, இவன் மெள்ள வந்து அவர் காலில் வணங்குகிறான்!

நம்பி: "ஐயோ...என்ன இது? பார்க்க ஐயர் வீட்டுப் புள்ளைப் போல இருக்கீங்களே தம்பி! என் காலில் நீங்க விழலாமா?"

இளைஞன்: "அதனால் என்ன சுவாமி? உங்களைப் பார்த்தால் தொண்டிலே பழுத்த பெரியவர் போல இருக்கீங்க! உங்க காலில் விழுந்து ஆசி பெறுவதில் தவறு ஒன்னும் இல்லையே!"

நம்பி: "அதுக்கில்லைப்பா! நீங்கள் அந்தணர்! அடியேன் தாழ்ந்த குலத்தவன்!"

இளைஞன்: "எதைப் பார்த்து என்னை அந்தணன் என்று சொன்னீர்கள் சுவாமி? தோளில் உள்ள இந்த நூலைப் பார்த்தா? பூநூல் தரிப்பதால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகி விட முடியுமா என்ன?
இறைவனைத் தோளில் தரிப்பதா? நெஞ்சில் தரிப்பதா? யார் அந்தணர்?"

நம்பி: "ஆகா! இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா! உங்க ஆட்கள் யாராச்சும் தவறாக நினைக்கப் போகிறார்கள்!"

இளைஞன்: "தவறாக ஒன்னும் சொல்லலையே சுவாமி! வித்தியாசமா சொல்றேன்-ன்னு வேணும்னாச் சொல்லுங்க!
திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்தாராம் தலைமை அர்ச்சகர்! பின்னர் மனம் திருந்திய பின், இப்போது அந்தணர்களே ஆழ்வாரைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்களாமே! திருப்பாணாழ்வாரை விடவா நான் ஒரு உயர்ந்த அந்தணன்?"

நம்பி: "இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு பணிவான பேச்சா? உன் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்களப்பா!"

இளைஞன்: "சுவாமி! நீங்கள் சற்று முன் பாடினீங்களே ஒரு பாட்டு! அது நம்மாழ்வார் எழுதியது தானே?"

நம்பி: "ஆமாம்! ஓ...உனக்கு ஆழ்வார்களைப் பற்றித் தெரியுமா? உன்னைப் பார்த்தா ஐயமாரு வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்கே! வேத அத்யயனம் செய்வீங்க அல்லவா? தமிழ்ப் பாசுரம் எங்கேயாச்சும் தனியாப் படிச்சிருக்கியா தம்பீ?"

இளைஞன்: "சும்மா ஆர்வத்தில் அங்கொன்னு இங்கொன்னு கத்துக்கிட்டது தான் சுவாமி! நீங்கள் பாடின சந்த ஓசை, அப்படியே கட்டிப் போட்டு விட்டது! அதான் உங்களிடம் வந்து வணங்கினேன்! வகுப்புக்கு நேரமாச்சு! நான் போய் வருகிறேன் சுவாமி!"

நம்பி: "யாரிடம் படிக்கிறாயப்பா? இது தான் உன் ஊரா? நான் இந்த வழியாத் தான் காஞ்சிபுரம் போவேன் வருவேன்! அடுத்த முறையும் முடிஞ்சா சந்திப்போம்!

இளைஞன்: "திருப்புட்குழி யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத குரு! அவர் கிட்டக்கத் தான் தற்சமயம் பாடம் வாசிக்கிறேன்! பாடசாலையில் ஏற்கனவே சில பிரச்சனைகள்! தாமதமாகப் போகக் கூடாது! நான் வரேன் சுவாமி!
உங்களைப் பார்த்ததில் இருந்து என் மனம் என்னமோ லேசானது போல் இருக்கு!"

நம்பி: "பேர் சொல்லாமல் போகிறாயேப்பா! உன் பேர் என்ன?"

இளைஞன்: "இராமானுஜன்..." (ஓடி விடுகிறான்!)



பின்னாளில் ஆசிரியரின் விளக்கங்கள் சரியில்லாத போது, கேள்விகள் கேட்டு...
அறியும் விழைவால் கேட்ட கேள்விகளை எள்ளலாக எடுத்துக் கொண்ட அந்த ஆச்சாரியர், இவனைக் கொல்லவும் துணிந்து...
அந்தச் சதியிலிருந்து தப்பி... தந்தை இல்லாச் சிறுவன், தாய் சொன்னபடி, திருக்கச்சி நம்பியிடமே போய்ச் சேர்ந்தான்!

வேறு ஒரு நல்ல குருவை அவர் பையனுக்குக் காட்டுவார் என்று தாய் நினைத்தாள்! இவனோ, நம்பியையே குருவாக வரிக்க நினைக்கிறான்! அவரோ, தன் குலம் கருதி சற்றுத் தயங்குகிறார்!

காஞ்சி வரதனுக்குச் சாலைக் கிணற்றில் இருந்து நீர் கொண்டாந்து தரும் தீர்த்த கைங்கர்யம்=நீர்த் தொண்டு செய்யச் சொல்கிறார்!
அப்படிச் செய்யும் போது, உனக்கு ஒரு நல்ல குரு தானாகவே கிடைப்பார் என்றும் சொல்கிறார்!

"வேதம் படிச்சவன் இது போன்ற வேலைக்கார வேலையெல்லாம் செய்வதா? இதெல்லாம் படிக்காத பக்தர்கள் அல்லவா செய்வார்கள்?" - என்று கேள்வியே கேட்கவில்லை அந்த இளைஞன்!
படித்ததின் பயனே, பணிவதற்குத் தான் என்பதைப் புரிந்து வைத்திருந்தான்! உடனே சம்மதித்தும் விட்டான்! அப்படித் தண்ணீர்த் தொண்டு செய்து வரும் வேளையில் தான்....புகழ் பெற்ற "அந்த ஆறு வார்த்தைகள்" உதித்தன!


நம்பி: "என்ன இராமானுசா? இன்று ஏதோ தயங்கித் தயங்கி நிற்கிறீர்கள்? என்ன விஷயம்?"

இளைஞன்: "சுவாமி நீங்கள் கருவறைக்குள்ளேயே சென்று தொண்டு செய்யும் பேறு பெற்றவர்! அடியேனுக்கு அந்தப் பேறு இல்லை!"

நம்பி: "அதனால் என்ன? முறையாகப் பயின்று, முறையாக உள்ளே வரலாமே?"

இளைஞன்: "அதில்லை சுவாமி! எனக்கு ரொம்ப நாளா மனதை அரித்துக் கொண்டே இருக்கும் சில சந்தேகங்கள்! அதைத் தீர்த்து வைக்க குருவும் இதுவரை அமையவில்லை! அமைந்த ஒரே குருவான ஆளவந்தாரும், நான் போய்ப் பார்க்கும் முன்னமே இயற்கை எய்தி விட்டார்! அடுத்து என் வாழ்க்கைப் பாதை எப்படிப் போகும்-ன்னே தெரியலை சுவாமி!"

நம்பி: "இவ்வளவு விசனமா உமக்கு? இயற்கை எய்திவிட்டாலும், உமக்குப் பரமகுரு ஆளவந்தார் தான்! நீர் அந்தணன்! என்னைக் குருவாக வரித்தால், உங்கள் வீட்டிலோ, சமூகத்திலோ, உம் மனைவியோ ஏதாச்சும் சொல்லுவார்கள்! அதான் தயங்கினேன்!
ஆனால் உம் மனத் தாபம் பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கு! சொல்லும் என்ன வேண்டும் உமக்கு?"

இளைஞன்: "இன்றிரவு கருவறைக்குள் விசிறி வீசுவீங்க-ல்ல? அப்போது என் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?
எனக்கு பதில் வாங்கித் தாருங்கள் சுவாமி! உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டு இருப்பேன்!"

நம்பி: "ஹா ஹா ஹா! சொல்லும்...உம் சந்தேகங்கள் என்ன?"

இளைஞன் சொல்லச் சொல்ல.....நம்பி திடுக்கிடுகிறார்....


காஞ்சி வரதன்!


இறைவன்: "என்ன நம்பிகளே! பலத்த யோசனை? இன்று உம் விசிறியில் இருந்து காற்றே வரலையே? காற்று வந்தால் தானே அதற்குப் பேரு விசிறி?" :)

நம்பி: "பெருமாளே! மன்னிக்க வேண்டும்! ஆழ்ந்த சிந்தனை! சிறு பிள்ளை கேட்ட பெரும் கேள்விகள் அப்படி! அவன் கேட்டது எனக்கும் தெரிந்தது போலத் தான் இருக்கு! ஆனால் தெரியாதது போலவும் இருக்கு!"

இறைவன்: "அடேயப்பா! உம் சீடன் கேட்ட கேள்விகளுக்கு அப்படி ஒரு சக்தியா? கேள்வி கேட்கவே பிறந்திருக்கான் போல!
கேள்வி தான் ஆன்ம விசாரணையைத் தூண்டும்! கேள்வியே வேள்வி! தாங்கள் அறியீரோ நம்பீ?"

நம்பி: "அறிவேன் சுவாமி! ஆனால் இது போன்ற கேள்விகளைக் கேட்டு, பாடசாலைக் குருவால் அவனுக்கு ஆபத்து தானே மிஞ்சியது?
உண்மையை அறியும் விழைவு இல்லாது, தாங்கள் வைத்ததே சட்டம் என்னும் குருமார்கள் யோக விசாரணை இல்லாதவர்கள்! அவர்களுக்கு கேள்விகள் என்றுமே பிடிப்பதில்லை!
அவர்களிடம் போய்க் கேட்பதை விட, அவன் சந்தேகத்தை நீங்களே தீர்த்து வைத்தால் என்ன?....குருவாய் வருவாய் அருள்வாய் வரதா!"

இறைவன்: "சொல்லுங்கள்! என்ன கேள்விகள்?"

1. கட+வுள் என்றால் என்ன? யார் பரம்பொருள்?
2. உண்மைத் தத்துவம் என்பது எது?
3. கடவுளை அடையும் உபாயம் எது?
4. மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
5. எப்போது மோட்சம் கிட்டும்?
6. குருவாக யாரைக் கொள்வது?

நம்பிகள் சொல்லச் சொல்ல, இறைவனே திடுக்கிடுகிறான்....


இறைவன்: "திருக்கச்சி நம்பிகளே! போய் உம் சீடன் இராமானுசனிடம் சொல்லும்! அவன் கேட்ட கேள்விகள் அவ்வளவு கூர்மையானவை!
அதை விளக்கத் தான், நான் இத்தனை காலம், இத்தனை அவதாரங்கள் எடுத்து கஷ்டப் படுகிறேன்! :))

ஆனால் அவனோ, ஆறே வார்த்தையில் கேட்டு விட்டான்! ஆறு படையான ஆற்றுப்படை! அவன் வாழ்வின் திருப்புமுனை இங்கே ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள்!

இதோ நம் பதில்கள்! இதோ நம் ஆறு வார்த்தைகள்!
1. பரம் பொருள் நாமே!
2. பேதமே தரிசனம்!
3. உபாயம் பிரபத்தியே!
4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்!
5. சரீரம் விடுகையில் மோட்சம்!
6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது!"



கையில் ஆலவட்ட விசிறியுடன், திருக்கச்சி நம்பிகள்!


1. பரம் பொருள் நாமே! = அகரம் முதலே எல்லா எழுத்தும்! ஆதி பகவன் முதற்றே எல்லா உலகும்!
ஒருவர் விடாது, எல்லாரும், என்றேனும் அடைய வேண்டிய பொருள் நாமே! அதற்கு வழி நாமே! நாமே வழியும் ஜீவனுமாய் இருக்கிறோம்!

2. பேதமே தரிசனம்! = எதுவுமே மாயை அல்ல! எல்லாமே உண்மை!
சித்(உயிர்ப்பு உள்ளது), அசித்(உயிர்ப்பு இல்லாதது), ஈஸ்வரன்(இறைவன்) என்ற பேதமே தரிசனம்! அதுவே தத்துவம்!

3. உபாயம் பிரபத்தியே! = "தன்" அறிவு (ஞானம்), "தன்" செயல் (கர்மம்), "தன்" பக்தி (பக்தி) என்ற அனைத்திலும் "தன்னை" விடுப்பதே உபாயம்! பிரபத்தி என்னும் சரணாகதியே உபாயம்!
உங்கள் அறிவினால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம் ஞானத்தால், கர்மாவால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!
எனவே, என்றுமே வற்றாத நீர் நிலையான எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! பற்றுக பற்றற்றான் பற்றினை!

4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்! = இறக்கும் தருவாயில் இறைவன் நினைவு தேவையில்லை! நல்ல நாளிலேயே என்னை நினைக்க முடியாத உனக்கு, உடல் தளரும் போது, அவஸ்தையை மீறி என்னை நினைக்க முடியுமா? அதனால்..... அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

5. சரீரம் விடுகையில் மோட்சம்! = சரணம் அடைந்தார்க்கு எல்லாம் சரீரம் விடுகையில் மோட்சம்!

6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது! = எப்போதும் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்!
* சரி பெரியவர்கள் என்று எப்படி அறிவது? செயற்கரிய செய்வார் பெரியர்! பெரியவர்கள் பெரியது செய்வார்கள்!
* சரி, அப்போ பெரியது எது? = தொண்டர் தம் பெருமை சொல்லவும் "பெரிதே"! அடியவர்களை அரவணைப்பவரே பெரியவர்! அந்தப் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்! பெரிய நம்பிகளைக் குருவாக இவன் பற்றட்டும்!

நம்பி: "வரதா! வரதா!.........அருமை! அருமை! நீயே குரு! நீயே குரு!
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!
தஸ்மை ஸ்ரீ-யின் குரவே நமஹ!

உய்யும் **ஆறு** என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம்பாவாய்! இதோ சொல்லி விடுகிறேன்...! வெளியில் ஆவலாய்க் காத்துக் கிட்டு இருக்கான்!

ஆற்றுப்படை வார்த்தைகள் இவை தான், என் சீடனே! உன் பொருட்டு இறைவனே சொன்னது! என் இனிய இராமானுசா.....கேட்டுக் கொள்! கேட்டுக் கொள்! " - மகிழ்ச்சியில் விரைகிறார் நம்பிகள்.......


ஆற்றுப்படையான ஆறு வார்த்தைகளைப் பெற்றுத் தந்து...
அந்த இளைஞனின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி...
பின்னாளில் ஒரு சமூக-பக்தி இயக்கம் = இராமானுச இயக்கம் தோன்ற...
முதல் விதை போட்டவர் திருக்கச்சி நம்பிகள்!


அருளாளர் உடன்மொழி சொல் அதிசயத்தோன் வாழியே!
ஆறு மொழி பூதுரார்க்கு அளித்த பிரான் வாழியே!
திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே!
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே!

கருவறைக்குள் அந்தணர் அல்லாத அவரை,
இன்று அத்தனை அந்தணர்களும் கொண்டாடுகிறார்கள்!
நாமும் கொண்டாடுவோம்! 1000வது பிறந்த நாள்!
வரதராசன் கருவறைக்குள் அன்றே புகுந்த, திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்!


அனைத்துச் சாதி அர்ச்சகர்கள், பல நூற்றாண்டுகளாக!
சட்டங்கள் இன்றி, சத்தங்கள் இன்றி...

Read more »

Sunday, January 18, 2009

கண் இழந்த கண்ணப்பர் - 1000வது பிறந்த நாள்!

இவரும் ஒரு கண்ணப்ப நாயனார் தான்! கண்ணப்ப ஆழ்வார்-ன்னு வேண்டுமானால் இவரைச் சொல்லிக் கொள்ளலாம்! (இவர் பேரில் ஆழ்வார்-ன்னு இருப்பதால்)! இவரின் 1000-வது பிறந்த நாள், Jan-17, 2009 அன்று துவங்கியது! யாருங்க இவரு? இவர் எப்படிக் "கண்ணப்பர்" ஆவாரு?

அதற்கு முன், "ஓம் நம சிவாய" என்று திருவைந்தெழுத்தை உரக்க ஓதி, இந்த ஆழ்வாரின் கதையை இன்னிக்கிப் பார்க்கலாம்!
* தென்னாடுடைய சிவனே போற்றி!
* என்(னுடை)-நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
* திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!



* கண்ணப்பனின் இயற்பெயர் திண்ணன்! இவர் இயற்பெயர் திருமறுமார்வன்!
* கண்ணப்பனுக்கு இறைவனிடத்தில் கூட அசாத்திய வைராக்கியம்! இவருக்கும் அப்படியே!
* கண்ணப்பன் பார்க்கவே கருகரு-ன்னு இருப்பான். நீண்ட ரோமம்! இவரும் அப்படியே. பெரிய தாடி!
* கண்ணப்பன் தான் உண்ட பன்றி இறைச்சியையே இறைவனுக்குக் கொடுப்பான்! இவரோ இறைவன் அன்று உண்ணவில்லை என்றால், தானும் அன்று பட்டினி கிடப்பார்!

* கண்ணப்பன் வேடன், ஆனால் வேட்டுவத் தலைவன்! இவரும் தலைவர் தான்! பிறவிச் செல்வந்தர்! - இருவருமே தங்கள் செல்வங்களைப் பின்னாடி உதறினார்கள்!
* கண்ணப்பர் காட்டிய அன்பு, "ஆச்சாரமில்லை" என்றார்கள்! இவர் காட்டிய அன்பை "மடத்தனம்" என்றார்கள்!

* கண்ணப்பன் செய்வது பக்தி இல்லை! அது மூடம் என்றார்கள்! தாங்கள் வகுத்து வைத்த வழிபாடே "உசத்தி" என்றும் நினைத்துக் கொண்டார்கள்!
இவர் செய்வதும் அடிமைத்தனம் என்றார்கள்! தாங்கள் வகுத்து வைத்ததே "உசத்தி" என்று ஒரு படி மேலே போய், கையெழுத்தே போட்டுத் தரச் சொன்னார்கள்!


* கண்ணப்பன் இறைவனின் கண்களில் ரத்தம் கொட்டியதைப் பார்த்த மாத்திரத்திலேயே பதறிப் போனான்! வகுத்து வைத்தவர்களோ "வேடிக்கை" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!
இவரோ, குருவின் தலை போகப் போகிறது என்று உணர்ந்த மாத்திரத்தில் பதறிப் போனார்! வகுத்து வைத்தவர்களோ இங்கும் "வேடிக்கை" தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!

* கண்ணப்பன் சிவலிங்கத்தின் மீது தன் காலை வைத்தான்! இவரோ தன் ஆடையைக் களைந்து குருவின் துணிகள் மேல் போட்டார்! குருவின் ஆடையைத் "திருட்டுத்தனமாக" தான் போர்த்திச் சென்றார்.

* கண்ணப்பன் வேறு வழியில்லாமல், தன் கண்களையே பிடுங்கி வைத்து, காளத்தி அப்பனைக் காத்துக் கொடுத்தான்! இவரோ வேறு வழியில்லாமல், தன் கண்களைப் பிடுங்கித் தானே எறிந்து, குருவையும் சமயத்தையும் காத்துக் கொடுத்தார்!

இன்றும் ஆலயங்களில் கண்ணிழந்து காணப்படும் கூரேசன்


அவர் கண்ணப்ப நாயனார்! இவர் கண்ணப்ப ஆழ்வார்! அவ்வளவு தான் வித்தியாசம்!

காஞ்சிபுரம் அருகில் உள்ள "கூரம்" சொந்த ஊர் என்பதால் கூரத்தாழ்வார், கூரேசன் என்று கூப்பிடுவார்கள்! இவருக்கே 1000-வது பிறந்த நாள்! அடுத்த ஆண்டு 2010-இல் ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெறும்!
இனிய ஆயிரமாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள், கூரேசா!
இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!

இந்த ஆண்டில், இவரைப் பற்றியும், திருவரங்க ஆலயத்தில் தமிழ் மொழி "நுழைய", இவர் ஆற்றிய பங்கு பற்றியும், அவ்வப்போது பதிவிடுகிறேன்! ஷைலஜா அக்கா எழுதிய கூரேசனின் சுருக்கமான வரலாற்றை இங்கே சென்று அவசியம் படிக்கவும்!

பிறந்த நாள் என்பதால், இவர் கண்ணிழந்த நிகழ்ச்சியை இன்னிக்கி சொல்லாது, இன்னொரு நாள் சொல்கிறேன்!
இன்று ஜாலியான, மகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை மட்டும் பார்ப்போமா? :)


அன்று பெரு மழை! இரண்டு காவிரி ஆற்றிலும் வெள்ளம்!
ஆகா...அது என்ன இரண்டு காவேரி ஆறு? எல்லா ஊரிலும் ஒரு காவேரி தானே ஓடும்?
ஹா ஹா ஹா! அது மற்ற ஊர்! இது உற்ற ஊர்! இங்கே இரண்டு காவிரி!

தென் காவிரி (காவிரி), வட காவிரி (கொள்ளிடம்) என்று ஒரே காவிரி ஆறு, இரண்டாகப் பிரிந்து, சுழித்துக் கொண்டு ஓடுகிறது! இப்படி இரண்டு (ஒரே) ஆற்றுக்கும் நடுவில், இயற்கையாக எழும் மணல் திட்டுக்கு "அரங்கம்" என்று பெயர்!
அங்கு மனித குலத்தின் செல்வம் = "திரு" கொலுவிருப்பதால், திரு+அரங்கம் என்று ஆயிற்று!

இன்னொன்னு கவனிச்சீங்களா? இப்படி முக்கியமான தலங்களில் இருக்கும் இறைவனுக்குத் தனியாகப் பெயர்கள் கிடையாது! ஐயாவுக்குத் தனியாக நித்யவத்சலப் பெருமாள், அந்தப் பெருமாள், இந்தப் பெருமாள்-ன்னு எல்லாம் பேரே இருக்காது!
திரு அரங்க+நாதன், திரு வேங்கடம்+உடையான்-ன்னு ஊரை வச்சித் தான் பேரு! - அது தான் திருத்தலங்களின் (திவ்யதேசங்களின்) பெருமை! பெருமாளை விட அவன் சம்பந்தா சம்பந்தங்களுக்கே ஏற்றம் தரப் படுகிறது!

இப்படி ஓடி வரும் காவிரி, இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலை சூட்டி, அதே மாலையை, திருவானைக்கா அப்பனான சிவபெருமானுக்கும் சூட்டி மகிழ்கிறது!

திருச்சிக்கும் முன்பே முக்கொம்பு என்னும் இடத்தில் பிரியும் ஆறு, பிறகு ஒன்று கூடுகிறது! கல்லணையில் மீண்டும் பிரிகிறது!
காவிரியில் அதிக வெள்ளம் கண்டால், ஆங்காங்கே பிரித்து, கொள்ளிடம் பக்கமாக அணை திறந்து, நீரை வடிய விடுவார்கள்! இது தமிழர்கள் அன்றே கையாண்ட நீர்வள உத்தி (Water Management Techniques)! கல்லணை கட்டிய கரிகாற் சோழனைப் "பெருவளத்தான்" என்று சொல்வது தான் எத்தனை பொருத்தம்!

கதைக்கு வருவோம்! காவிரி, கொள்ளிடம் - ரெண்டிலுமே வெள்ளம்-ன்னா, மக்கள் அப்போ என்ன பண்ணுவாங்க? பாவம்! வீட்டில் இருப்பதை வைத்துத் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்! ஆனால் கூரேசனின் வீட்டில் அது கூட இல்லை!

அவரோ அன்றாடம் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர். உஞ்ச விருத்தி என்பார்கள்!
பிட்சை ஏற்பதால் துறவி-ன்னு நினைச்சிறக் கூடாது! அவருக்கு அழகு மிக்க-அறிவு மிக்க மனைவி! பேரு ஆண்டாள்! தியாகராஜரைப் போல் இவரும் வகுப்பு நடத்தி, பிட்சை ஏற்று உண்பவர்!



கூரேசன் இராமானுசரை விட வயதில் மூத்தவர். அறிவில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம். ஆனாலும் சீடராக அடக்கமுடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் இராமானுசரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேள்விப்பட்டு, அவருடன் வந்து தங்கி விட்டார். தன்னிடம் இருந்த செல்வத்தை எல்லாம் கொடுத்து விட்டு, அறம் வளர்க்கவென்றே இராமனுசரின் பின்னால் வந்தவர்.

கூரேசன் மனைவி ஆண்டாளும் பணக்கார வீட்டுப் பெண் தான்! ஆனால் கணவன்-மனைவிக்குள் அப்படி ஒரு அன்னோன்யம்! கருத்துக்களில் கூட!
இராமானுசரின் ஒரு சில நடவடிக்கைகள், சில சமயம் தடாலடியாக அமையும் போது, ஆண்டாளைக் கூப்பிட்டு கருத்து கேட்பாராம் உடையவர்! அப்படி ஒரு பெண் இவள்! :)

அன்று மழையும் வெள்ளமும் என்பதால் கூரேசன் உஞ்ச விருத்திக்குச் செல்ல முடியலை!
வீட்டில் உள்ள துளசி தீர்த்தத்தை, தீர்த்தமாகப் பருகாமல், குவளை நிறைய பருகி விட்டார்!
திருவாய்மொழியை எடுத்துக் கொண்டு நம்மாழ்வாரை ஆதி முதல் அந்தமாகப் படிக்க உட்கார்ந்து விட்டார் மனுசன்!

வேதங்களில் உள்ள பிரம்ம சூத்திரங்களுக்கு, உள்ளது உள்ளபடியே, சொந்தக் கருத்து எதுவும் சேர்க்காமல் உரை எழுதணும்! அபேத-பேத-கடக ஸ்ருதி என்று எல்லாப் பார்வையில் இருந்தும் பாஷ்யம் (உரை) செய்யணும் என்பது அவா!
அதைக் குருவும் சீடனும் அவ்வப்போது பேசிக் கொள்வார்கள்! பல விதங்களில் ஹோம் வொர்க் (வீட்டுப் பாடம்) செய்து கொள்வார்கள் போல! அதான் தமிழ் வேதமான திருவாய்மொழியை எடுத்துக்கொண்டு அன்று உட்கார்ந்து விட்டார் கூரேசன்!

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்-என்று எவ்வளவு நேரம் தான் இருக்க முடியும்? வயிற்றில் கிள்ளாதா?

நேற்று இரவு போய், இன்று காலை போய்...மாலை போய், இரவும் வந்து விட்டது! இன்னும் சாப்பிடலை! ஆண்டாள் கூட இருப்பதையும் மறந்தே போனார் மனுஷன்!
அங்கே சாப்பிடவும் ஒன்றும் இல்லை என்பது வேறு விஷயம்! வழக்கமாக விசாரிக்கும் இராமானுசரும் அன்னிக்குன்னு பார்த்து ஊரில் இல்லை! கூரேசன் சற்று மெலிந்தவர்! அவர் களைப்படைவது கண்ணுக்கு நேராத் தெரியுது! ஆண்டாள் அவரை ஏக்கமாகப் பார்க்கிறாள்!

பசியோடு இருப்பது கொடுமைங்க! ஆனா அதை விடக் கொடுமை, அடுத்தவர் பசியைப் பார்த்துக் கொண்டு இருப்பது!

முன்பு சண்டை போட்ட நண்பன், ஒரு வேலையாக அலுவலகம் வந்து பார்த்த போது, எனக்கு கொஞ்சம் லேட் ஆகி விட்டது! ஆனாச் சாப்பிடவே மாட்டேன்-ன்னு வைராக்கியமாச் சொல்லிட்டான்! அவனிடம் கெஞ்சி, கொஞ்சி, சாப்பிட வைத்து, சாப்பிட்ட பொறவு தெம்பாச் சண்டை போடுப்பா ராசா-ன்னு சொல்லி.... :)
பசிக் கொடுமையை விட, பசியைப் பார்க்கும் கொடுமை ரொம்ப ரொம்ப பெருசுங்க!


டங்...டங்...டங்! டங்...டங்...டங்!
அரங்கன் அரவணை அமுது கண்டருளுகிறான்! ஸ்ரீரங்கநாத அரவணாம்ருதம் நிவேதயாமி...
கோயில் மணி, நைவேத்யத்துக்கு ஓங்கி அடிக்கப்படுகிறது! ஆண்டாள் காதிலும் விழுகிறது! அவளோ விரக்திச் சிரிப்பில்...
"ரங்கா, அடியவர் வாட, அமுது செய்கிறையோ?"

அதிர்ந்தான் அரங்கன்! நைவேத்தியம் செல்லவில்லை! வாய் வரையில் சென்ற கை அப்படியே நின்று விட்டது! கைத்தல சேவையானுக்கு, கைத்தல உணவாய் தங்கி விட்டது!

திருமார்புத் தாயார்: "என்னங்க சாப்பிடலையா? என்ன அப்படிப் பலமான யோசனை?"

பெருமாள்: "கூரேசன் பசியால் வாடுகிறான்; அவன் இல்லாள், அமுது செய்கிறீரோ?-என்று நம்மைச் சிரித்து விட்டாள்!"

தாயார்: "சாப்பிட்டாச்சா? என்று நம் இராமானுசன் தினமும் கேட்பான்! அதான் அவனை இதத்-தாய் என்று எல்லாரும் சொல்கிறார்கள்!
அவன் இல்லாத வேளையில் நீர் கேட்டிருக்கக் கடவது! ஆனால் கேட்கவில்லை! நம்மையும் படி தாண்டாப் பத்தினி என்று தனிக்கோயில் நாச்சியாராக இருக்கச் செய்து விட்டீர்!"

பெருமாள்: (மெளனம்)

தாயார்: "சுவாமி, ஞாபகம் இருக்கா? காஞ்சிபுரத்தில் இருந்த போது, ஒரு நாள் கூரேசன் வீட்டுக் கதவுகள் "தடங்"-கென்று மூடிய சப்தம் கேட்டதே?"

பெருமாள்: "ஆமாம்! அவன் அப்போது பெரும் செல்வந்தன்! அன்றைய தர்மங்கள் எல்லாம் முடிந்து வீட்டு நடையைச் சார்த்தினான்! அந்த சப்தம் கேட்டு, கோயிலை ஏன் அதற்குள் மூடுகிறார்கள் என்று நீ கூட குழம்பிப் போனாயே?"

தாயார்: "ஆமாங்க! அப்பேர்ப்பட்ட செல்வன்! இன்று உம் அரங்கத்தில் பசியால் வாடுகிறான்! நீர் அல்லவோ கேட்கக் கடவது? உமக்கு இதயம் கொடுத்தவன் தானே என்ற அலட்சியம் ஆயிற்றோ உமக்கு?
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்!"

பெருமாள்: (பெருத்த, பலத்த, மெளனம்)

கண்ணா! நான் முகனைப் படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள்! பசி ஆவது ஒன்றில்லை! ஓவாதே நமோ நாரயணா என்று
எண்ணா நாளும், இருக்கு-எசுச்-சாம-வேத நாண்மலர் கொண்டு, உன் பாதம்
நண்ணா நாள்! அவை தத்துறும் ஆகில், அன்று எனக்கு, அவை பட்டினி நாளே!!!



வழக்கம் போல் அர்ச்சகரும் கண்டருளப் பண்ணி விட்டார்! நைவேத்யம் = கண்டருள்வித்தல்!
இராமானுசர் கோயில் வழிபாட்டில், இப்படி மாற்றிக் கொடுத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம்! ஏராளம்!

அம்மா பேரைச் சொல்லி விட்டு, ஆனால் நாமத் தானே நிறையச் சாப்பிடுவோம்?
நாம் சாப்பிடுவோம், அவள் காண்பாள்! ="கண்டு"+அருளப்+பண்ணுதல்! :)
நைவேத்யம் = கண்டு அருளப் பண்ணுதல்! நாம் "உண்டு"+அருளப்+பண்ணுதல்! :)

அர்ச்சகர் உணவைக் கைகாட்டி விட்டார்! சாமி சாப்பிட்டு ஆயிருச்சி-ன்னு வழக்கம் போல நினைச்சிக்கிட்டு, பக்தர்களுக்குக் கொஞ்சம் பிரசாதமாய் கொடுத்துட்டு, மீதியை வீட்டுக்குக் கொண்டு போயிட்டார்! அவர் பேரு உத்தம நம்பி! வீட்டுக்குப் போகும் அவருக்கோ வழியெல்லாம் சந்தேகம்!

"சாமிக்கு நைவேத்தியம் காட்டினோமே! அப்புறம் அந்தப் போஜன தீபத்தை அணைத்தோமோ? அணைக்கலியா? ஐயோ! நடை சார்த்தியாச்சே! இனி காலை வரை திறக்கக் கூடாதே!" - வீட்டில் போயச் சாய்ந்தவர், சாய்ந்தவர் தான்.....

"உத்தம நம்பி...கண்டருளிய தீபம் இன்னும் அணைக்கப்பட வில்லை!
என் அடியான் கூரத்தாழ்வான் பசி வெள்ளத்தால் வாடுகிறான்! இப்போதே போம்! நான் சொன்னதாகப் போம்! நடை திறந்து போம்! நடை திறப்பு தோஷமாகாது! தாயிடத்தில் குழந்தைக்குத் தோஷமேது?

நடை திறந்து, நமக்குக் கண்டருளப் பண்ணிய அரவணை அமுதைக் கொண்டு போம்! தீபத்தோடு, சகல பரிவார ஜனங்களையும் அழைத்துக் கொண்டு போம்! துந்துபி முழங்க, சிறு பறை கொட்ட, விதானக் கொடிகள் அசைய, பரிவாரங்களோடு போம்!
துளசியும், சடாரியும் சார்த்தி, அதைக் கூரேசனுக்குக் கண்டருளப் பண்ணி வாரும்! இது நம் ஆக்ஞை!
"


உத்தம நம்பிக்கு உடல் பதற்றம் எடுத்து விட்டது! அலறி அடித்துக் கொண்டு எழுகிறார்!
தான் வீட்டுக்குக் கொண்ட வந்த நைவேத்தியத்தை எடுத்துக்கறார்! கோயிலுக்கு ஓடிச் சென்று அங்குள்ள நைவேத்தியம், தீபம்-ன்னு எல்லாத்தையும் எடுத்துக்கறார்!
கொம்பு ஊதும் ஆளுக்குக் குரல் கொடுக்கிறார்! மழையில் நனையாதிருக்க விதானம் விரிக்கப்படுகிறது!

நடு ராத்திரியில் ஒரு குட்டி ஊர்வலம்...
ஊருக்கு வெளியில் ஆற்றோரமான வீடு! அங்கே அந்தச் சின்ன ஊர்வலம் செல்ல...துந்துபி முழங்க...சிறு பறை கொட்ட, விதானம் அசைய...

என்னடா இது? திருவிழா கூட இல்லை! இப்போது என்ன ஊர்வலம்-ன்னு ஆழ்வானும் ஆண்டாளும் வெளியே ஓடி வர...
உத்தம நம்பி அவர்களுக்குச் சகலத்தையும் சொல்கிறார்! துளசி-சடாரி சார்த்துகிறார்! அவர் கை நடுங்குகிறது! மொத்த பிரசாதத்தையும் எடுத்து கூரேசன் முன் வைக்கிறார்!

ஆண்டாள் கண்களில் பொல பொல-ன்னு பொத்துக்கிட்டு வருது! கூரேசன் கண்களில்...!
"அடியேன் நாயேனைப் பார்த்தா, "குழந்தைக்குத் தோஷமேது?" என்று கேட்டார்? ரங்கா, ரங்கா, ரங்கா!... "
தனக்கும், ஆண்டாளுக்குமாய் இரு பெரும் கவளங்களை உருட்டி எடுத்துக் கொண்டார்! மீதியை அங்கு ஆற்றோரமாய் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கச் சொல்லி விட்டார்!

ஊர்வலம் கலைய...வீட்டிற்குள் சென்ற கூரேசன் ஆண்டாளைப் பார்த்து....முதல் கேள்வி: "நீ ஏதும் பெருமாளிடம் வேண்டினாயா?"

"ஆமாங்க! நைவேத்திய மணி அடிச்சாங்க! அடியவர் வாட, அமுது செய்கிறீரோ-ன்னு கேட்கக் கூட இல்லை! சும்மா நினைத்தேன்!"

"தவறு ஆண்டாள்! தவறு! அவன் நம் குழந்தை போல! அவன் சாப்பிட உட்காரும் நேரம் அறிந்தா, இப்படி ஒரு தாய் கேட்பாள்?
ஒன்று தெரிந்து கொள்: இந்தப் பிறவியில் ஏற்பட்ட உறவு நீ! உனக்கே என் மீது இவ்வளவு கரிசனம் என்றால்...... எந்தை-தந்தை-தந்தை தம் மூத்தப்பன்-ஏழ்ப்படி கால் தொடங்கி உறவு! அவனுக்கு எவ்வளவு கரிசனம் இருக்கும்?
இனி, ஒருக்காலும், சாப்பிட உட்கார்ந்த பிள்ளையிடம் இப்படிப் புலம்பாதே!"

"என்னை மன்னிச்சிருங்க!"

"சரி! பரவாயில்லை! உன் நினைப்புக்கே அரங்கனிடம் இவ்வளவு செல்வாக்கா-என்று உடையவர் வந்து உன்னை வழக்கம் போல் வியக்கத் தான் போகிறார்! இப்போ நீ சாப்பிடு"


தாயார்: "என்னாங்க, இப்படியா கூடை கூடையாச் சாப்பாடு அனுப்புவது? அதுவும் கூடையில்? நல்லா அழகா, மடிச்சி அனுப்பத் தெரியாதா?"

பெருமாள்: "ரங்கீ...அம்மா சாப்பாடு போடும் போது பார்த்து இருக்கல்ல? அடுக்கி அடுக்கி, அழகாகவா இருக்கும்? எப்படிப் பார்த்தாலும், ஒரு கை, கூட இருக்குமே தவிர, குறைவா இருக்கவே இருக்காது!"

தாயார்: "ஆமாங்க!"

பெருமாள்: "பார், அவன் மனைவியிடம் சொல்கிறான்....சாப்பிட உட்காரும் போது குழந்தையிடம் புலம்பாதே-ன்னு! நீ முன்பு சொன்னது தாம்மா!
இதயம், இல்லாளுக்கு என்று ஆன பின்னாலும் கூட,
வயிறு என்னமோ என்றுமே அம்மாவுக்குத் தான்
!"


அந்த பிரசாதத்தை உண்ட அன்று இரவே, கூரேசனின் அன்பு மனைவி-ஆண்டாள் திருவயிற்றில், இரட்டைக் குழந்தைகள் வந்து தங்கின!

* வியாச பட்டர், பராசர பட்டர் என்று அந்த இரட்டையருக்குப் பின்னாளில் பெயரிட்டார் இராமானுசர்! தன் குருவான ஆளவந்தாருக்குச் செய்து கொடுத்த சத்தியத்தை, இவர்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார்!
* இந்தப் பராசர பட்டக் குழந்தை தான் வளர்ந்து, பின்னாளில் அடுத்த குரு ஆகியது!
கண்ணிழந்த கூரத்தாழ்வான், இப்படித் தன் கண்ணையும், இன்னும் பல கண்களையும் சமய நெறிக்குக் கொடுத்தவர்!

ஆயிரமாவது பிறந்த நாள் காணும் எங்கள் கூரேசா! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! இல்லையில்லை.....இன்னும் "பல" நூற்றாண்டு இரும்!
கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்!
Read more »

Monday, November 24, 2008

கேஆரெஸ் சிவம்! துளசி சிவம்! பதிவர் சிவம்! பரமம் சிவம்!

கேஆரெஸ் சிவம்! ஜிரா சிவம்! துளசி டீச்சர் சிவம்! நம்ம ஜீவா சிவம்!
குமரன் சிவம்! கோவி கண்ணன் சிவம்! எஸ்.கே. சிவம்! மெளலி அண்ணன் சிவம்!
தேவும் சிவம்! வெட்டிப் பயலும் சிவம்! ஆயில்ஸ் சிவம்! அந்த அதிஷா சிவம்!
கானா சிவம்! கொத்த னாரும் சிவம்! துர்கா சிவம்! மை ஃபிரெண்டும் சிவம்!
பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்! பதிவர் சிவம்! எங்கும் பரமம் சிவம்!!

அடப்பாவி கேஆரெஸ்! நல்லாத் தானே இருந்தே? என்ன ஆச்சுறா உனக்கு?
சுப்ரபாதம் போட்ட கையோடு, இப்படிச் சூடா வெண்பொங்கல் கணக்கா கொழ கொழ-ன்னு ஆயிட்டே? - அப்படின்னு பாக்கறீங்களா மக்களே? ஹா ஹா ஹா!

ஆல் பிகாஸ் ஆஃப் திஸ் குமரன்! இருங்க, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு சிவத்தை விட்டுபுட்டேன்! அவிங்களையும் சொல்லிடறேன்!
கீதா சிவம்! ஓ! அது அவங்க பேர்-ல ஏற்கனவே இருக்கா! சரி சரி!
கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! கீதா சிவம்! கீதா சாம்ப சிவம்! :)

மேட்டர் என்னான்னா, நம்ம கூடலார்-குமரனார் ஒரு பதிவு போட்டிருக்காரு! நானே சிவன்! நானே சிவம்-ன்னு!
அதைப் படிச்சதிலிருந்து, எனக்கு வேற வேலையே ஓடலை! அப்படியே ஒட்டிக்கிச்சி! ஏன்னா, நான் ரொம்ப நாளாய், அதுவும் நாத்திகனில் இருந்து ஆத்திகனாய் மாறிய காலம் தொட்டு, மிகவும் விரும்பிப் படிக்கும் பாட்டு அது!

இல்லை, இல்லை-ன்னு தான் அந்தப் பாட்டில் வரும்!
இல்லை-ன்னு சொல்லும் நாத்திகத்தை விட்டு வர, எனக்கு இந்த "இல்லை-இல்லை" பாட்டு தேவைப்பட்டுதோ என்னமோ? :)

ஆத்ம ஷட்கம் (நிர்வாண ஷட்கம்) என்பது அதற்குப் பெயர்! விடுதல் ஆற்றுப்படை-ன்னு, தமிழில் மொழி பெயர்த்து இருக்கேன்! :)
நிர்வாணம் = விடுபடுதல்! விடுபட்ட நிலை
ஷட்கம் = ஆறு பாடல்கள்
அதான் நிர்வாண ஷட்கம் = விடுதல் ஆறு! விடுதல் ஆற்றுப்படை!
ஆறு செய்யுளும் இருக்கு! நமக்கு ஆற்றுப் படையாகவும் இருக்கு!

இது ஜகத்குரு ஆதி சங்கரரின் அருளிச் செயல்!
பல தத்துவங்களை உள்ளடக்கிய பாட்டு! அத்வைதம் என்றால் என்ன என்று படிக்கத் துவங்குபவர்கள், இதைப் படிச்சிட்டுத் துவங்கினா, அத்வைதத்தின் நுண்ணிய கருத்துகள் பலவும் மிக எளிதாகப் புலப்படும்! ஏன் தெரியுமா?

ஆதி சங்கரரே, இதைப் பாடி விட்டுத் தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சாராம்!
அடியேன் சங்கரனும், இதைப் படிச்சிட்டு தான், பாடம் படிக்கவே ஆரம்பிச்சேன்!
வாங்க, எப்பமே கதையைச் சொல்லிட்டுக் கருத்தைச் சொல்லுறது தானே என் கெட்ட பழக்கம் :)


ஆதி சங்கரர், என்ன தான் கருவிலே திரு உடையவர் என்றாலும், ஒரு நல்ல குருவைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்! அப்போது தான் முதலை வாயில் இருந்து தப்பித்து, தாயின் இசைவோடு ஆபத் சன்னியாசம் பெற்று இருந்தார்! அது தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட சன்னியாசம்! முறையான ஒன்று அல்ல!

அப்படியே நடந்து நடந்து, இமயமலையில் உள்ள பத்ரிநாத் என்னும் தலத்துக்கு வந்து சேர்ந்தார் சங்கரர்! கோவிந்தன் துணைகொண்டு ஞானம் பெற வேண்டும்! பரந்து விரிந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!

திருவதரீ என்றும் பத்ரிகாச்ரமம் என்றும் சொல்லப்படுவது பத்ரிநாத்! 108 திவ்யதேசங்களிலே ஒன்றாக வைத்துப் போற்றப்படுவது! அதரி என்றால் இலந்தைப் பழ மரம்!
அதனடியில் பத்ரி நாராயணனாக, ஞான குருவாக இறைவன் வீற்றிருக்கிறான்! யோக முத்திரை காட்டியபடி! அவனுடன் மகாலக்ஷ்மி, சேனை முதலியார் என்று ஆசார்ய பரம்பரை!
கூடவே கருடன், வியாழன், நாரதர், குபேரன், உத்தவர், நர-நாராயணர்கள்!
பத்ரிநாதப் பெருமாள் ஞான குருவாக அமர்ந்து உபதேசிப்பதை, அர்த்த பஞ்சக ஞானம் என்று குறிப்பிடுவார்கள்!
1. ஜீவாத்மா எது?
2. பரமாத்மா எது?
3. ஜீவாத்மா எதை அடையணும்?
4. அடையும் வழிகள் என்ன?
5. அடையும் வழியில் தடைகள் என்ன?

சங்கரர் தப்த குண்டம் என்று சொல்லப்படும் சுடு நீர் ஊற்றிலே குளித்து விட்டு, பத்ரீநாதனை மனதால் சேவித்துக் கொண்டார்! பின்னாளில் அந்த ஆலயத்தின் இறைவனை ஆற்றில் இருந்து தாம் தான் எடுத்து மீட்கப் போகிறோம் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை! தன் அடி மன வேட்கையான ஒரு நல்ல குருவை அடையணுமே என்று வேண்டிக் கொண்டு, இமயமலையின் மேல் நடக்க ஆரம்பித்தது தான் தாமதம்...

கண் முன்னே அந்த ஞான குரு! பெயர் கோவிந்த பாதர்!
அடியேனைத் தங்கள் சீடனாய் வரிக்க வேண்டும் என்று இந்தப் பிள்ளை வேண்ட,
யாரப்பா நீ? என்று வந்தது ஒரே ஒரு கேள்வி!

சங்கரர் அதுகாறும் மனத்தில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் மள மளவென்று மழை போல் பொழியத் துவங்கி விட்டார்!
* நான் மனம் இல்லை! நான் புத்தி இல்லை!
* நான் சினம் இல்லை! நான் சித்தம் இல்லை!
* நான் வான் இல்லை! மண் இல்லை! வளி இல்லை! ஒளி இல்லை!
* நான் அதுவும் இல்லை! நான் இதுவும் இல்லை! நேதி! நேதி!

எதுவுமாக இல்லாத நான், "நான் யார்?" என்பதை அறியவே தங்களை நாடி வந்துள்ளேன் குருவே என்று மொழிந்தார்!
தன் காலடிக் கதையைச் சொல்லிக் காலடியில் வீழ்ந்தார் அண்ணல்!
"நான் இல்லை! நான் இல்லை!" என்று சங்கரர், குருவிடம் சொன்ன முதல் சுலோகம் இதுவே! ஆத்ம ஷட்கம்! நிர்வாண ஷட்கம் என்றும் பெயர்!

கோவிந்தபாதருக்கு இந்தப் பிள்ளையின் ஞானத்தில் அப்படி ஒரு ஈர்ப்பு உண்டாகிவிட்டது! உடனே சன்னியாசத்தை முறையாக அளித்து, தன் சீடனாகச் சேர்த்துக் கொண்டார்!
அத்வைத நான்கு மகா வாக்கியங்களையும், அபேத சுருதிகளையும் சொல்லித் தர ஆரம்பித்தார்! அத்வைத விசாரணையும் படிப்பும் படிப்படியாகத் துவங்கியது!

பின்னாளில் ஞானம்-கர்மம்-பக்தி என்று மூன்று மார்க்கத்துக்குமே ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கப் போகும் சங்கரனின் பாடம் துவங்கியது இப்படித் தான்!
(* கோவிந்த பாதரை பத்ரிநாத்தில் சந்திக்காமல், நர்மதை நதிக் கரையில் சந்தித்தார் என்று சொல்வாரும் உண்டு)



குமரன் பதிவு இதோ! சொல்-ஒரு-சொல்லாய், பொருளும் கொடுத்திருக்காரு!
ஆறே ஆறு பாட்டு தான்! வாய் விட்டுப் படிக்கும் போது, சந்தம் தானா வந்துரும்!
இதைச் சந்தம் மாறாமல் தமிழ்ச் செய்துள்ளேன் அடியேன்!
சொல்லும் பொருளும் இசையும் சேர்ந்து வருதா என்று நீங்களே பார்த்துச் சொல்லுங்களேன்!

மந்திர ஒலி வடிவில் - வேகமாக! (கேட்டுக்கிட்டே படிங்க)


விடுதல் ஆற்றுப்படை

* அதுவும் இல்லை! இதுவும் இல்லை! நேதி! நேதி!

மனோ புத்தி அஹங்கார சித்தா நினாஹம்
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே ந ச க்ராண நேத்ரே
ந ச வ்யோம பூமிர் ந தேஜோ ந வாயு:
சிதானந்த ரூபம் சிவோஹம் சிவோஹம்


மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை!
சினம் தங்கு செவி நாக்கு கண்களும் இல்லை!
வானாகி மண்ணாகி வளி ஒளியும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(சிதானந்தம் = சித்தம்(ஞானம்) + ஆனந்தம்; சச்சிதானந்தம்/திருச்சிற்றம்பலம் என்பது போல் சித்+ஆனந்தத்தை மட்டும் தூய தமிழில் ஆக்காது, சிதானந்தம் என்றே வைத்து விட்டேன்! சிவோஹம் = சிவ + அஹம்)

ந ச ப்ராண சங்க்யோ நவை பஞ்சவாயு:
ந வா சப்த தாதுர் நவா பஞ்சகோச:
ந வா பாணி பாதம் ந சோபஸ்தபாயு:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

உயிர் மூச்சு மில்லை! ஐங் காற்றும் இல்லை!
எழு தாதும் இல்லை! ஐம் போர்வை இல்லை!
கை கால்கள் இல்லை! சினை வினையும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(ஐங்காற்று: ப்ராணன் - உள்ளிழுக்கும் மூச்சு; அபானன் - உடல் அழுக்குகளை வெளியேற்றும் காற்று; சமானன் - உண்டதைச் செரிக்கும் காற்று; உதானன் - உறுப்புகளை நடத்தும் காற்று; வ்யானன் - உடல் செய்கைகளை நடத்தும் காற்று

எழு தாது: ரசம், ரத்தம், மாமிசம், கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து/முட்டை

ஐம் போர்வை: அன்னமய கோசம் - உணவால் ஆன போர்வை; ப்ராண மய கோசம் - உயிர்காற்றுகளால் ஆன போர்வை; மனோ மய கோசம் - மனத்தால் ஆன போர்வை; விஞ்ஞான மய கோசம் - அனுபவங்களால் ஆன போர்வை; ஆனந்த மய கோசம் - இன்பத்தால் ஆன போர்வை)

ந மே த்வேஷ ராகௌ ந மே லோப மோஹௌ
மதோ நைவ மேநைவ மாத்ஸர்ய பாவ:
ந தர்மோ ந ச அர்த்தோ ந காமோ ந மோக்ஷ:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


விரு வெறுப்பில்லை! மையல் பற்றும் இல்லை!
கரு கருவம் இல்லை! அழுக் காறும் இல்லை!
அறம் பொருள் நல்லின்ப வீடும் நானில்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

ந புண்யம் ந பாபம் ந சௌக்யம் ந துக்கம்
ந மந்த்ரோ ந தீர்த்தம் ந வேதா ந யக்ஞ:
அஹம் போஜனம் நைவ போஜ்யம் ந போக்தா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


வினை வேட்கை இன்பங்கள் துன்பங்கள் இல்லை!
மறை வேத தீர்த்தங்கள் வேள்விகள் இல்லை!
துப்பில்லை துப்பாக்கித் துப்பாரும் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


(துப்பில்லை=உணவில்லை; துப்பாக்கித் துப்பாரும் இல்லை=உணவை உருவாக்கலும் இல்லை! உண்டு துய்ப்பவனும் இல்லை!)

ந ம்ருத்யுர் ந சங்கா ந மே சாதிபேத:
பிதா நைவ மே நைவ மாதா ச ஜன்மா
ந பந்துர் ந மித்ரம் குருர் நைவ சிஷ்யா:
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்

மரணங்கள் கரணங்கள் சாதிகள் இல்லை!
தாய் தந்தை இல்லை! தரும் பிறப்பில்லை!
உற்றார்கள் சுற்றார்கள் குரு சீடர் இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!

அஹம் நிர்விகல்போ நிராகார ரூபோ
விபுத்வாச்ஸ சர்வத்ர சர்வேந்த்ரியானாம்
ந ச சங்கடம் நைவ முக்திர் ந மே யா
சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்


மாற்றங்கள் இல்லை! பல தோற்றங்கள் இல்லை!
எங்கெங்கும் எங்கெங்கும், எதிலும் நான் நானே!
தளையில்லை! தடையில்லை! தரும் முத்தி இல்லை!
சிதானந்த ரூபம்! சிவம் நான்! சிவம் நான்!


இதி ஸ்ரீ மத் சங்கராச்சார்ய விரசித, நிர்வாண ஷட்கம் சம்பூர்ணம்!
சங்கராச்சார்யர் திருவடிகளே சரணம்! சிவோஹம்!
(***கார்த்திகைச் சோமவாரம் சிறப்புப் பதிவு***)


இசை வடிவில்:
Read more »

Wednesday, October 08, 2008

கோயிலில் முதல் மரியாதை யாருக்கு? - அபராதச் சக்கரவர்த்திக்கு!

அன்றும் அங்கே அதே பிரச்சனை தான்! கோயில் திருவிழாவில் முதல் முரியாதை யாருக்கு? இந்த முதல் மரியாதை, குடும்ப மரியாதை - சென்ட்டிமென்ட் சீனை எல்லாம் வைத்து எத்தனையோ கேப்டன் படங்கள், சரத்குமார் படங்கள் வந்து விட்டன! பெரிய தாம்பாளத் தட்டில் மாலையெல்லாம் வச்சி, பரிவட்டம் கட்டி, பல பேர் அருவா வீசி, முட்டி மோதிய பின்னர், முதல் மரியாதையை நம்ம ஹீரோவுக்குப் பூசாரி பண்ணி வைப்பாரு!
ஆனால் அவர்கள் எல்லாம் சினிமா கதாநாயகர்கள்! நிஜ வாழ்க்கைக் கதாநாயகரை இன்னிக்கிப் பார்க்கலாமா? அவர் பெயர் வேதாந்த தேசிகன்!
இன்று அவர் பிறந்தநாளும் கூட! (புரட்டாசித் திருவோணம் - Oct 9, 2008)

கடலூர் திருவயிந்தபுரம் கோயிலில் அன்னிக்கி ஒரே கூட்டம்! ஏதோ திருவிழாவாம்! கருட பஞ்சமியாம்! நாம தான் கூட்டத்தில் தரிசனம் பண்ணனும்னா, ஒரேயடியா சலிச்சிக்கிற ஆளுங்களாச்சே! சினிமாவுக்கு எவ்வளவு கூட்டம் இருந்தாலும், முதல் காட்சியிலேயே பார்த்து விடணும்! ஆனா கோயிலில் மட்டும், அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாகத், தாமும் ஒரு துளியாகக் கரைந்து வணங்கும் மனோபாவம் மட்டும் நமக்கு வராது அல்லவா! ஹா ஹா ஹா!

கடலூருக்கு அருகில் உள்ள தலம் திருவயிந்தபுரம் என்னும் திருவஹீந்திரபுரம்!

அஹீந்திரன் என்றால் ஆதிசேஷன்! அவன் வணங்கிய தலம், அதனால் திரு-அஹீந்திர-புரம்!
வைணவ வைத்தீஸ்வரன் கோயில் என்றும் சொல்லுவார்கள்! சில நோய் நீக்க மருந்துகளும் இங்கு தரப்படுகின்றன! மருந்து மலை என்னும் ஒளஷத கிரியின் அடிவாரத்தில் உள்ள ஆலயம்!
இங்கு தேவநாதப் பெருமாள், சிவபெருமானைப் போலவே, முக்கண் அப்பனாய்க் காட்சி தருகிறார்!
அவர் நெற்றியில் நெற்றிக் கண்! போதாக்குறைக்கு நீண்ட ஜடாமுடி! கையிலோ பிரம்மனைப் போல் தாமரை மலர்! இப்படி முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்று சமய ஒற்றுமைக்கு, சாட்சி கொடுத்துக் காட்சி கொடுக்கிறான் இறைவன்!

இறைவனே ஒற்றுமைக்குச் சாட்சி கொடுத்தாலும், மனிதர்களுக்கு முதலில் தங்கள் சுய பெருமை தானே முக்கியம்? - அன்று கோயிலில் தீர்த்தச் சண்டை! முதல் தீர்த்தம் யாருக்கு?


வைணவக் கோட்பாடுகளில் இரு பிரிவுகள். தென்கலை, வடகலை!
சொல்லப் போனால் அது பிரிவே இல்லை! கருத்துக்களின் பரிமாணம்! ஆனால் அது போதாதா நம்மாளுங்களுக்கு?
மாற்றுக் கருத்து என்றால் அதை வெறுத்துப் பிரித்து வேறுபாடா ஆக்கிட மாட்டாங்களா என்ன!

நண்பர்கள் என்றாலோ, சமூகம் என்றாலோ, ஒத்த கருத்து உடையவர்கள் தானே எப்போதும் நண்பர்களாக இருக்க முடியும்? கொஞ்சம் வேற வேற கருத்துன்னா, அது நட்பாகாதே! நட்பு ஆகவும் விட மாட்டாங்களே! அப்படித் தான் உலகத்தின் பார்வைக்கு, இந்தத் தென்கலை-வடகலைக் கருத்து வேறுபாடும் :))

* இறைவனைச் சரணம் அடைய வேண்டுமே என்ற பழுதிலா எண்ணமும், அவாவும் ஒன்றே போதும்; தனியாகச் சரணாகதி என்னும் செயல் கூடத் தேவையில்லை! - இது தென்கலை!
* எண்ணமும் அவாவும் மட்டும் போதாது. அதற்கான கர்மாவைச் செய்யவேண்டும். செயல் புரிய வேண்டும்! - இது வடகலை!

தமிழ் மொழியில் வழிபாட்டுக்கு இருவருமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஆழ்வார்கள் தீந்தமிழை இருவருமே கருவறையில் ஓதுகிறார்கள்! அப்புறம் என்ன?
இரு சாராருக்கும் சிறுச்சிறு சித்தாந்த வேறுபாடுகள் தான்! சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ? சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே! - இதை உணர்ந்து விட்டால் நாதத்தில் பேதம் ஏது?

ஆனால் "உணர" வேண்டுமே! அப்படி உணர்வதற்கு முதலில் "தான்", "தங்கள் கருத்து" என்பதைக் கழற்றி வைத்து, "அவன்", "அவன் கருத்து" என்று யோசிக்கும் மனம் வர வேண்டுமே! அந்த மனம் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் இருக்காது போல! - அன்று ஆலயத்தில் சண்டை! - முதல் தீர்த்தம் யாருக்கு?

அவர்களுக்கா? இவர்களுக்கா? அவர்கள் தலைவருக்கா? இவர்கள் தலைவருக்கா?
அவர்களுக்கும் இவர்களுக்குமான ஒரே தலைவர்! - தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!



வேதாந்த தேசிகர் பழுத்த மகான். இல்லறத்தில் இருந்து கொண்டே வைணவ அறம் வளர்த்த நாயகர். எம்பெருமானுக்கு அல்லாது வேறு எதற்கும் சிக்காதவர்! உன் அந்தமில் சீர்க்கு அல்லால், அகம் குழைய மாட்டேனே என்று ஆழ்வார் வாக்கினை வாழ்க்கையிலும் காட்டிய மகா குரு! குரு பரம்பரையில் வாராது வந்த ஒரு மாமணி!

தென்கலை-வடகலை இருவருமே மதித்துப் போற்றும் மாமனிதர். கல்வி கேள்விகளில் வல்லவர். இரு மொழிப் பெரும் புலவர். சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அரங்கத்து அன்னையே உவந்து பட்டம் அளிக்கப் பெற்றவர்!

அன்று ஆலயத்தில் இந்த வீண் வேறுபாடுகளை எல்லாம் பார்த்தார், உடல் வேர்த்தார்! இறைவன் தீர்த்தத்துக்கா இவ்வளவு சண்டை? இம்புட்டுக் கூச்சல்? இது ஆ-லயமா இல்லை ஆரவார-லயமா?....
அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க, விறுவிறு என்று நடந்து, வாசலை நோக்கிச் செல்கிறார் தேசிகர்.

ஆலயத்தில் ஒரே நிசப்தம் ஆகி விட்டது! கோபமே வராத தேசிகருக்கும் கோபம் வந்து விட்டதோ? தீர்த்தம் கூட பெற்றுக் கொள்ளாமல் வெளியேறுகிறாரே!
தீர்த்தம் வழங்க இவ்வளவு கால தாமதம் செய்கிறார்களே என்ற தாபமோ?
தனக்கு முதல் தீர்த்தம் தர இவ்வளவு யோசிக்கிறார்களே என்ற கோபமோ? ஆகா!

தேசிகர் நேராக வரிசையின் கடைசிக் கோடிக்குச் சென்று நின்று கொண்டார்! அடியவர்களோடு அடியவராகக், கூடி இருந்து குளிர்ந்தேலோ என்று நின்று விட்டார்!



"சுவாமி, என்ன இது? இங்கு வந்து நின்று கொண்டீர்கள்? அடுக்குமா? முன்னே வாருங்கள்! என்ன இருந்தாலும் நீங்கள் மகா குரு!"

"இல்லையில்லை! அடியேன் மகா குரு எல்லாம் இல்லை!"

"சுவாமீ...அப்படிச் சொல்லக் கூடாது! தாங்கள் சர்வ தந்திர ஸ்வதந்திரர்! தாங்கள் சர்வ கலா சக்கரவர்த்தி!"

"ஹா ஹா ஹா! இல்லையில்லை! அடியேன், அபராதச் சக்ரவர்த்தி!"

"ஐயகோ!"

"ஆமாம்...உண்மை தான்! அடியேன், அபராதச் சக்ரவர்த்தி!"

"தாங்களே இப்படிச் சொன்னால், நாங்கள் எல்லாம் எப்படி?"

"இதோ, இங்கே எம்பெருமானைச் சேவிக்கக் காத்திருக்கும் இந்த நடுநாட்டு விவசாயி மக்கள், அடியவர்களை எல்லாம் பாருங்கள்! அவர்கள் எல்லாரும் வேதம் அறிந்தவர்களா என்ன?"

"அதனால் தான் சுவாமி அவர்களுக்கு நடைமுறையில் இறுதியாகத் தீர்த்தம் தரப்படுகிறது"

"ஓகோ! அவர்களுக்கு வேதம் தெரியாது! சரி தான்! ஆனால் பேதமும் தெரியாது தானே!"

"புரியவில்லை சுவாமி"

"தங்கள் செளகர்யம்-அசெளகர்யங்களை எல்லாம் மறந்து விட்டு, இந்தப் புழுக்கத்திலும், அவன் ஒருவனையே குறிக்கோளாக வந்திருக்கிறார்களே! ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? வேதம் தெரிந்ததால் பேதமும் தெரிந்து வைத்திருக்கிறோம், அல்லவா?
நம் செளகர்யம்-அசெளகர்யங்களை மட்டும் பார்த்துக் கொண்டு, யாருக்கு முதலில் என்று தீர்த்தச் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் தானே?"

"சுவாமீ..."

"இந்தச் சண்டைகளால், எம்பெருமான் திருமுகம் உல்லாசப்படுமா? அதை யோசித்தீர்களா?
அவன் திருமுக உல்லாசம், அவன் திருவுள்ள உகப்பு - இது வேண்டுமா இல்லை முதல் தீர்த்தம் வேண்டுமா? எது வேண்டும் உங்களுக்கு?

"சுவாமீ..."

"இனி மேல்...வழிபாடு செய்து முடிக்கும் வரை, அடியேன் உங்களோடு இருந்து கொண்டு மறைகளும் மந்திரங்களும் ஓதுவேன்!
பூசைகள் முடிந்த பின்னர், அடியார்களுக்கு எல்லாம் கடைசி அடியாராக, இதே போல், இறுதியில் போய் நின்று கொள்வேன்!
நீங்கள், எல்லாருக்கும் தீர்த்தம் அளித்த பின், இந்த அபராதச் சக்ரவர்த்திக்கு தீர்த்தம் பிரசாதித்தால், அதுவே போதும்!"

"சுவாமி.....எங்களை மன்னித்து விடுங்கள்! வேண்டாம் இந்த விபரீத முடிவு! முன்னே வாருங்கள், தீர்த்தமும், துழாயும் பெற்றுக் கொள்ளுங்கள்"

"மறையோர்களே, இந்த ஊர் பேர் தெரியாத அடியவர்கள் எல்லாம், தங்களை முன்னிறுத்திக் கொள்ளவில்லை! அவனை முன்னிறுத்தியே வந்துள்ளனர்!
ஆனால் நாமோ, நம்மையும் நம் கோட்பாட்டையும் முன்னிறுத்திக் கொண்டோம்!
இப்போது சொல்லுங்கள் யார் அன்பர்கள்? யாருக்கு முதல் தீர்த்தம்?

இனி அடியவர்கள் ஒருவர் விடாது, அனைவரும் தீர்த்தம் பெற்றுக் கொண்ட பின்னர் தான், அடியேன் வேதாந்த தேசிகன் பெற்றுக் கொள்வேன்! இது சத்தியம்!"



வேதாந்த தேசிகர் பிறந்த நாளான (திரு அவதார நாளான) இன்று,
வெறுமனே விழாவாக மட்டும் கொண்டாடாது, அவர் ஆசார்ய ஹிருதயத்தை உணர்ந்து பார்ப்போம்!

தேசிகரைப் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ள இதோ விக்கிக் கட்டுரை! இனி வரும் காலங்களில் மாதவிப் பந்தலில், தேசிகர் பற்றிய ஆழங்கால் பதிவுகள் தொடரும்!

எம்பெருமானார் இராமானுசரை உள்ளத்தால் அண்டிய அன்பர்கள் எல்லாரும் கருணை என்னும் பெருங்குணத்தைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள்!
அவர்கள் வரிசையில் வந்தவர் வேதாந்த தேசிகர். அவரை "இராமானுஜ தயா பாத்ரம்" என்றே இன்றும் கொண்டாடுகிறார்கள்!
தேசிகர் ஸ்ரீவைஷ்ணவ மகுடத்தில் ஒரு மாமணி! மாமுனி!

ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்கிய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம்!

(இராமானுசரின் தயைக்குப் பாத்திரமானவரும், நல்லறிவும் பெரு உறுதியும் கொண்டவரும்,
திருவேங்கடநாதனின் அம்சமாய், அதே திருப்பெயர் கொண்டவருமான, வேதாந்த தேசிகருக்கு வணக்கங்கள்!)


செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே!

வடகலை-தென்கலை என்னும் கோட்பாடுகளால் மட்டும் உலகம் அளந்தவனை, அளந்து விட முடியுமா என்ன?
உலகளந்த பெருமாளை அளக்க முடியாது! "கொள்"ளத் தான் முடியும்! "கொள்"வோம்!
குற்றேவல் எங்களைக் "கொள்"ளாமல் போகாது! மற்றை நம் காமங்கள் மாற்று-ஏல்-ஒர் எம்பாவாய்!

வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்!
Read more »

Saturday, January 12, 2008

விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video

விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (Jan 12, 2008) ஒரு சிறப்புப் பார்வை!
நாம் ஏன் ஒத்துப் போவதில்லை என்பதை அழகான ஒரு கதையைச் சொல்லி, தனக்கே உரிய நடையில் அற்புதமாக விளக்குகிறார் விவேகானந்தர்.
பதிவின் இறுதியில் படியுங்கள்!
இல்லை youtube வீடீயோவில் கேளுங்கள்!

வீடியோ பிற்தயாரிப்பு செய்யப்பட்டது. அதில் கேட்பது சுவாமிகளின் குரல் அன்று!



1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893


அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள்.

அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.



2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்!


விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
1. வரவேற்புக்கு மறுமொழி
2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
3. இந்து மதம்
4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று
5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
6. நிறைவு நாள் உரை
அனைத்தும் வாசிக்க, கீழுள்ள சுட்டிக்குச் செல்லவும்!
நன்றி: http://www.geocities.com/vivekananda_tamil/index.html
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP