Wednesday, October 08, 2008

கோயிலில் முதல் மரியாதை யாருக்கு? - அபராதச் சக்கரவர்த்திக்கு!

அன்றும் அங்கே அதே பிரச்சனை தான்! கோயில் திருவிழாவில் முதல் முரியாதை யாருக்கு? இந்த முதல் மரியாதை, குடும்ப மரியாதை - சென்ட்டிமென்ட் சீனை எல்லாம் வைத்து எத்தனையோ கேப்டன் படங்கள், சரத்குமார் படங்கள் வந்து விட்டன! பெரிய தாம்பாளத் தட்டில் மாலையெல்லாம் வச்சி, பரிவட்டம் கட்டி, பல பேர் அருவா வீசி, முட்டி மோதிய பின்னர், முதல் மரியாதையை நம்ம ஹீரோவுக்குப் பூசாரி பண்ணி வைப்பாரு!
ஆனால் அவர்கள் எல்லாம் சினிமா கதாநாயகர்கள்! நிஜ வாழ்க்கைக் கதாநாயகரை இன்னிக்கிப் பார்க்கலாமா? அவர் பெயர் வேதாந்த தேசிகன்!
இன்று அவர் பிறந்தநாளும் கூட! (புரட்டாசித் திருவோணம் - Oct 9, 2008)

கடலூர் திருவயிந்தபுரம் கோயிலில் அன்னிக்கி ஒரே கூட்டம்! ஏதோ திருவிழாவாம்! கருட பஞ்சமியாம்! நாம தான் கூட்டத்தில் தரிசனம் பண்ணனும்னா, ஒரேயடியா சலிச்சிக்கிற ஆளுங்களாச்சே! சினிமாவுக்கு எவ்வளவு கூட்டம் இருந்தாலும், முதல் காட்சியிலேயே பார்த்து விடணும்! ஆனா கோயிலில் மட்டும், அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாகத், தாமும் ஒரு துளியாகக் கரைந்து வணங்கும் மனோபாவம் மட்டும் நமக்கு வராது அல்லவா! ஹா ஹா ஹா!

கடலூருக்கு அருகில் உள்ள தலம் திருவயிந்தபுரம் என்னும் திருவஹீந்திரபுரம்!

அஹீந்திரன் என்றால் ஆதிசேஷன்! அவன் வணங்கிய தலம், அதனால் திரு-அஹீந்திர-புரம்!
வைணவ வைத்தீஸ்வரன் கோயில் என்றும் சொல்லுவார்கள்! சில நோய் நீக்க மருந்துகளும் இங்கு தரப்படுகின்றன! மருந்து மலை என்னும் ஒளஷத கிரியின் அடிவாரத்தில் உள்ள ஆலயம்!
இங்கு தேவநாதப் பெருமாள், சிவபெருமானைப் போலவே, முக்கண் அப்பனாய்க் காட்சி தருகிறார்!
அவர் நெற்றியில் நெற்றிக் கண்! போதாக்குறைக்கு நீண்ட ஜடாமுடி! கையிலோ பிரம்மனைப் போல் தாமரை மலர்! இப்படி முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்று சமய ஒற்றுமைக்கு, சாட்சி கொடுத்துக் காட்சி கொடுக்கிறான் இறைவன்!

இறைவனே ஒற்றுமைக்குச் சாட்சி கொடுத்தாலும், மனிதர்களுக்கு முதலில் தங்கள் சுய பெருமை தானே முக்கியம்? - அன்று கோயிலில் தீர்த்தச் சண்டை! முதல் தீர்த்தம் யாருக்கு?


வைணவக் கோட்பாடுகளில் இரு பிரிவுகள். தென்கலை, வடகலை!
சொல்லப் போனால் அது பிரிவே இல்லை! கருத்துக்களின் பரிமாணம்! ஆனால் அது போதாதா நம்மாளுங்களுக்கு?
மாற்றுக் கருத்து என்றால் அதை வெறுத்துப் பிரித்து வேறுபாடா ஆக்கிட மாட்டாங்களா என்ன!

நண்பர்கள் என்றாலோ, சமூகம் என்றாலோ, ஒத்த கருத்து உடையவர்கள் தானே எப்போதும் நண்பர்களாக இருக்க முடியும்? கொஞ்சம் வேற வேற கருத்துன்னா, அது நட்பாகாதே! நட்பு ஆகவும் விட மாட்டாங்களே! அப்படித் தான் உலகத்தின் பார்வைக்கு, இந்தத் தென்கலை-வடகலைக் கருத்து வேறுபாடும் :))

* இறைவனைச் சரணம் அடைய வேண்டுமே என்ற பழுதிலா எண்ணமும், அவாவும் ஒன்றே போதும்; தனியாகச் சரணாகதி என்னும் செயல் கூடத் தேவையில்லை! - இது தென்கலை!
* எண்ணமும் அவாவும் மட்டும் போதாது. அதற்கான கர்மாவைச் செய்யவேண்டும். செயல் புரிய வேண்டும்! - இது வடகலை!

தமிழ் மொழியில் வழிபாட்டுக்கு இருவருமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஆழ்வார்கள் தீந்தமிழை இருவருமே கருவறையில் ஓதுகிறார்கள்! அப்புறம் என்ன?
இரு சாராருக்கும் சிறுச்சிறு சித்தாந்த வேறுபாடுகள் தான்! சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ? சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே! - இதை உணர்ந்து விட்டால் நாதத்தில் பேதம் ஏது?

ஆனால் "உணர" வேண்டுமே! அப்படி உணர்வதற்கு முதலில் "தான்", "தங்கள் கருத்து" என்பதைக் கழற்றி வைத்து, "அவன்", "அவன் கருத்து" என்று யோசிக்கும் மனம் வர வேண்டுமே! அந்த மனம் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் இருக்காது போல! - அன்று ஆலயத்தில் சண்டை! - முதல் தீர்த்தம் யாருக்கு?

அவர்களுக்கா? இவர்களுக்கா? அவர்கள் தலைவருக்கா? இவர்கள் தலைவருக்கா?
அவர்களுக்கும் இவர்களுக்குமான ஒரே தலைவர்! - தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!



வேதாந்த தேசிகர் பழுத்த மகான். இல்லறத்தில் இருந்து கொண்டே வைணவ அறம் வளர்த்த நாயகர். எம்பெருமானுக்கு அல்லாது வேறு எதற்கும் சிக்காதவர்! உன் அந்தமில் சீர்க்கு அல்லால், அகம் குழைய மாட்டேனே என்று ஆழ்வார் வாக்கினை வாழ்க்கையிலும் காட்டிய மகா குரு! குரு பரம்பரையில் வாராது வந்த ஒரு மாமணி!

தென்கலை-வடகலை இருவருமே மதித்துப் போற்றும் மாமனிதர். கல்வி கேள்விகளில் வல்லவர். இரு மொழிப் பெரும் புலவர். சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அரங்கத்து அன்னையே உவந்து பட்டம் அளிக்கப் பெற்றவர்!

அன்று ஆலயத்தில் இந்த வீண் வேறுபாடுகளை எல்லாம் பார்த்தார், உடல் வேர்த்தார்! இறைவன் தீர்த்தத்துக்கா இவ்வளவு சண்டை? இம்புட்டுக் கூச்சல்? இது ஆ-லயமா இல்லை ஆரவார-லயமா?....
அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க, விறுவிறு என்று நடந்து, வாசலை நோக்கிச் செல்கிறார் தேசிகர்.

ஆலயத்தில் ஒரே நிசப்தம் ஆகி விட்டது! கோபமே வராத தேசிகருக்கும் கோபம் வந்து விட்டதோ? தீர்த்தம் கூட பெற்றுக் கொள்ளாமல் வெளியேறுகிறாரே!
தீர்த்தம் வழங்க இவ்வளவு கால தாமதம் செய்கிறார்களே என்ற தாபமோ?
தனக்கு முதல் தீர்த்தம் தர இவ்வளவு யோசிக்கிறார்களே என்ற கோபமோ? ஆகா!

தேசிகர் நேராக வரிசையின் கடைசிக் கோடிக்குச் சென்று நின்று கொண்டார்! அடியவர்களோடு அடியவராகக், கூடி இருந்து குளிர்ந்தேலோ என்று நின்று விட்டார்!



"சுவாமி, என்ன இது? இங்கு வந்து நின்று கொண்டீர்கள்? அடுக்குமா? முன்னே வாருங்கள்! என்ன இருந்தாலும் நீங்கள் மகா குரு!"

"இல்லையில்லை! அடியேன் மகா குரு எல்லாம் இல்லை!"

"சுவாமீ...அப்படிச் சொல்லக் கூடாது! தாங்கள் சர்வ தந்திர ஸ்வதந்திரர்! தாங்கள் சர்வ கலா சக்கரவர்த்தி!"

"ஹா ஹா ஹா! இல்லையில்லை! அடியேன், அபராதச் சக்ரவர்த்தி!"

"ஐயகோ!"

"ஆமாம்...உண்மை தான்! அடியேன், அபராதச் சக்ரவர்த்தி!"

"தாங்களே இப்படிச் சொன்னால், நாங்கள் எல்லாம் எப்படி?"

"இதோ, இங்கே எம்பெருமானைச் சேவிக்கக் காத்திருக்கும் இந்த நடுநாட்டு விவசாயி மக்கள், அடியவர்களை எல்லாம் பாருங்கள்! அவர்கள் எல்லாரும் வேதம் அறிந்தவர்களா என்ன?"

"அதனால் தான் சுவாமி அவர்களுக்கு நடைமுறையில் இறுதியாகத் தீர்த்தம் தரப்படுகிறது"

"ஓகோ! அவர்களுக்கு வேதம் தெரியாது! சரி தான்! ஆனால் பேதமும் தெரியாது தானே!"

"புரியவில்லை சுவாமி"

"தங்கள் செளகர்யம்-அசெளகர்யங்களை எல்லாம் மறந்து விட்டு, இந்தப் புழுக்கத்திலும், அவன் ஒருவனையே குறிக்கோளாக வந்திருக்கிறார்களே! ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? வேதம் தெரிந்ததால் பேதமும் தெரிந்து வைத்திருக்கிறோம், அல்லவா?
நம் செளகர்யம்-அசெளகர்யங்களை மட்டும் பார்த்துக் கொண்டு, யாருக்கு முதலில் என்று தீர்த்தச் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் தானே?"

"சுவாமீ..."

"இந்தச் சண்டைகளால், எம்பெருமான் திருமுகம் உல்லாசப்படுமா? அதை யோசித்தீர்களா?
அவன் திருமுக உல்லாசம், அவன் திருவுள்ள உகப்பு - இது வேண்டுமா இல்லை முதல் தீர்த்தம் வேண்டுமா? எது வேண்டும் உங்களுக்கு?

"சுவாமீ..."

"இனி மேல்...வழிபாடு செய்து முடிக்கும் வரை, அடியேன் உங்களோடு இருந்து கொண்டு மறைகளும் மந்திரங்களும் ஓதுவேன்!
பூசைகள் முடிந்த பின்னர், அடியார்களுக்கு எல்லாம் கடைசி அடியாராக, இதே போல், இறுதியில் போய் நின்று கொள்வேன்!
நீங்கள், எல்லாருக்கும் தீர்த்தம் அளித்த பின், இந்த அபராதச் சக்ரவர்த்திக்கு தீர்த்தம் பிரசாதித்தால், அதுவே போதும்!"

"சுவாமி.....எங்களை மன்னித்து விடுங்கள்! வேண்டாம் இந்த விபரீத முடிவு! முன்னே வாருங்கள், தீர்த்தமும், துழாயும் பெற்றுக் கொள்ளுங்கள்"

"மறையோர்களே, இந்த ஊர் பேர் தெரியாத அடியவர்கள் எல்லாம், தங்களை முன்னிறுத்திக் கொள்ளவில்லை! அவனை முன்னிறுத்தியே வந்துள்ளனர்!
ஆனால் நாமோ, நம்மையும் நம் கோட்பாட்டையும் முன்னிறுத்திக் கொண்டோம்!
இப்போது சொல்லுங்கள் யார் அன்பர்கள்? யாருக்கு முதல் தீர்த்தம்?

இனி அடியவர்கள் ஒருவர் விடாது, அனைவரும் தீர்த்தம் பெற்றுக் கொண்ட பின்னர் தான், அடியேன் வேதாந்த தேசிகன் பெற்றுக் கொள்வேன்! இது சத்தியம்!"



வேதாந்த தேசிகர் பிறந்த நாளான (திரு அவதார நாளான) இன்று,
வெறுமனே விழாவாக மட்டும் கொண்டாடாது, அவர் ஆசார்ய ஹிருதயத்தை உணர்ந்து பார்ப்போம்!

தேசிகரைப் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ள இதோ விக்கிக் கட்டுரை! இனி வரும் காலங்களில் மாதவிப் பந்தலில், தேசிகர் பற்றிய ஆழங்கால் பதிவுகள் தொடரும்!

எம்பெருமானார் இராமானுசரை உள்ளத்தால் அண்டிய அன்பர்கள் எல்லாரும் கருணை என்னும் பெருங்குணத்தைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள்!
அவர்கள் வரிசையில் வந்தவர் வேதாந்த தேசிகர். அவரை "இராமானுஜ தயா பாத்ரம்" என்றே இன்றும் கொண்டாடுகிறார்கள்!
தேசிகர் ஸ்ரீவைஷ்ணவ மகுடத்தில் ஒரு மாமணி! மாமுனி!

ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்கிய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம்!

(இராமானுசரின் தயைக்குப் பாத்திரமானவரும், நல்லறிவும் பெரு உறுதியும் கொண்டவரும்,
திருவேங்கடநாதனின் அம்சமாய், அதே திருப்பெயர் கொண்டவருமான, வேதாந்த தேசிகருக்கு வணக்கங்கள்!)


செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே!

வடகலை-தென்கலை என்னும் கோட்பாடுகளால் மட்டும் உலகம் அளந்தவனை, அளந்து விட முடியுமா என்ன?
உலகளந்த பெருமாளை அளக்க முடியாது! "கொள்"ளத் தான் முடியும்! "கொள்"வோம்!
குற்றேவல் எங்களைக் "கொள்"ளாமல் போகாது! மற்றை நம் காமங்கள் மாற்று-ஏல்-ஒர் எம்பாவாய்!

வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்!

32 comments:

  1. நானும் திருவஹீந்த்ரபுரம் சென்று வழிபட்டிருக்கிறேன் - சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்பு. எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்.
    காலை 6.30 மணி இருக்கும். சுமாரான பக்தர் கூட்டம். பட்டாச்சார் துளசி தீர்த்தம் கொடுத்து சடாரி சாத்திக்கொண்டு வருகிறார். என்னைக் கண்டதும் என்னை ஒதுக்கிவிட்டு அடுத்த நாமக்காரருக்கு சடாரி சாத்திவிட்டுப் போகிறார். என் நெற்றிநிறைய விபூதி. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு வைணவப் பெரியவர் பட்டாச்சாரை அழைத்து அவருக்கு ஏன் சடாரி சாதிக்கவில்லை என்று வினவினார். பட்டாச்சார் தான் கவனிக்கவில்லை என்றார். “உங்களைப் போன்றவர்களால் தான் ஸ்ரீவைஷ்ணவத்துக்குக் கெட்ட பெயர். நீ அவருக்கு ஏன் சடாரி சாத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். போம், அவருக்கு மாலைசாத்தி சடாரி வையும்” என்று சற்றுக்கோபமாகக் கூறினார். பின்னர் என்னை அழைத்து நடந்த தவறுக்கு மன்னிக்க வேண்டினார். அந்தப் பெரியவர் லிஃப்கோ கிருஷ்ணசாமி சர்மா என்று எனக்குத் தெரியவந்தது.

    ReplyDelete
  2. ஆஹா.. ஆஹா நம் தூப்புல் குலமணி ஸ்ரீவேதாந்த தேசிகரின் திரு அவதார தினத்தன்று அவரை சென்று சேவிக்க இயலவில்லையே என்று நினைத்திருந்தேன். அக்குறை தங்களால் தீர்ந்தது.

    அவரின் வரலாற்றை தங்கள் மூலமாக அறியக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  3. ஆச்சார்ய பரம்பரையின் அனைத்து ஆச்சார்யர்களிடத்தும் அடியேன் சரண் அடைகின்றேன்

    ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் திருவடி தொழுகின்றேன்.

    நல்லதொரு நாளில் சிறப்பான பதிவு தந்த தங்களையும் நமஸ்கரிக்கிறேன்.

    ReplyDelete
  4. இப்பெருந்தகையின் திருப்பெயரினைக் கேட்டாலே அடியேனுக்கு உள்ளமும் உடலும் சிலிர்க்கின்றன.

    ஸ்ரீமான் வேங்கடநாதார்ய கவிதார்க்கிக கேசரி
    வேதாந்தாசார்யவர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி

    திருமிகு வேங்கடநாதார்யரே! கவிதையிலும் தர்க்கத்திலும் சிங்கமே! வேதாந்த ஆசார்யர்களில் சிறந்தவரே! அடியேனின் உள்ளத்தை என்றென்றைக்கும் நிலையான இருப்பிடமாகக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  5. மிகவும் அருமையான பதிவு. தேசிகர் பெயரை சொல்லும் போதும் கேட்கும்பொதும் படிக்கும் போதும் , தலை முதல் கால்வரை பக்தி எனும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உனர்வு வரும். அவரது திரு நக்‌ஷத்ர நாளில் அவரது செய்தியை படத்துடன் வெளியிட்டமைக்கு , தலை அல்லால் கைம்மாறு இலனே.

    ReplyDelete
  6. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் திருவடிகள் சரணம். அவர் தரிசனம் அளித்தமைக்கு நன்றிகள் கண்ணா.

    ReplyDelete
  7. ஸ்ரீமகா தேசிகன் படமும் பதிவும் அன்போடு கொடுத்துவிட்டீர்கள் ரவி.

    திருவஹீந்திரபுரமும் தேவநாதனையும்,கருடபகவானையும் சேர்த்துத் தரிசனம் செய்த நிறைவு கிட்டியது.

    ReplyDelete
  8. //ஆனால் நாமோ, நம்மையும் நம் கோட்பாட்டையும் முன்னிறுத்திக் கொண்டோம்!//
    தக்க நேரத்தில்...!

    ReplyDelete
  9. சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  10. அற்புதமான மனிதர்...பதிவுக்கு நன்றி தல ;)

    ReplyDelete
  11. Vanakkam sir,
    Swami desikan did lot of work for srivaishnavam,and I am really happy, that you are going to write more about him in future.His birthday and Thiruvengadamudayan birthday also a same day.
    ARANGAN ARULVANAGA.
    anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  12. //S. Krishnamoorthy said...
    என்னைக் கண்டதும் என்னை ஒதுக்கிவிட்டு அடுத்த நாமக்காரருக்கு சடாரி சாத்திவிட்டுப் போகிறார். என் நெற்றிநிறைய விபூதி//

    ஹா ஹா ஹா
    வாங்க கிருஷ்ணமூர்த்தி. எனக்கும் அப்படியே. என் நெற்றியிலும் விபூதி தான்! :)

    உபய விபூதி என்று வைணவச் சொல்லில் உள்ள விபூதியைச் சில வைணவர்களே அவ்வப்போது மறந்து விடுகிறார்கள்!

    // நீ அவருக்கு ஏன் சடாரி சாத்தவில்லை என்பது எனக்குத் தெரியும். போம், அவருக்கு மாலைசாத்தி சடாரி வையும்” என்று சற்றுக்கோபமாகக் கூறினார்//

    அருமை! அருமை!
    இராமானுசரே பிறப்பால் சைவர். அவருக்குச் சடாரி சார்த்த எந்த ஒரு வைணவப் பட்டரும் மறுக்கத் தான் முடியுமா என்ன?

    //அந்தப் பெரியவர் லிஃப்கோ கிருஷ்ணசாமி சர்மா என்று எனக்குத் தெரியவந்தது//

    பெரியவர் லிஃப்கோ கிருஷ்ணசாமி அவர்களுக்கு வந்தனங்கள்!

    ReplyDelete
  13. // Raghav said...
    ஆஹா.. ஆஹா நம் தூப்புல் குலமணி ஸ்ரீவேதாந்த தேசிகரின் திரு அவதார தினத்தன்று அவரை சென்று சேவிக்க இயலவில்லையே என்று நினைத்திருந்தேன்//

    அதனால் என்ன ராகவ்? அதான் பந்தலில் சேவித்து ஆயிற்றே!

    //அவரின் வரலாற்றை தங்கள் மூலமாக அறியக் காத்திருக்கிறோம்//

    சிறிது சிறிதாக, கருத்தை ஒட்டிய கதையாகச் சொல்கிறேன்!

    ReplyDelete
  14. // Raghav said...
    ஆச்சார்ய பரம்பரையின் அனைத்து ஆச்சார்யர்களிடத்தும் அடியேன் சரண் அடைகின்றேன்//

    ஆகட்டும்!

    //ஸ்ரீமத் வேதாந்த தேசிகரின் திருவடி தொழுகின்றேன்//

    அப்படியே ஆகட்டும்!

    //நல்லதொரு நாளில் சிறப்பான பதிவு தந்த தங்களையும் நமஸ்கரிக்கிறேன்//

    நோ! அடியேன் நமஸ்காரம் கூடாது!

    சர்வ தேவ நமஸ்காரம்
    கேசவம் பரதி கச்சதி!

    ReplyDelete
  15. //குமரன் (Kumaran) said...
    இப்பெருந்தகையின் திருப்பெயரினைக் கேட்டாலே அடியேனுக்கு உள்ளமும் உடலும் சிலிர்க்கின்றன//

    அடியேனுக்கும் அப்படித் தான் குமரன்!
    வேதாந்த தேசிகர் வெரி பிராக்டிக்கல் தேசிகர். அத்துணை ஞானம், நூலறிவு இருந்தும் இத்துணை பணிவு!

    ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்திற்கு இத்துணை நூல்கள் எழுதித் தத்துவக் கரை கட்டியவர் ஒருவர் உண்டென்றால், அவர் தேசிகர் தான்!

    மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி
    அடியேனின் உள்ளத்தை என்றென்றைக்கும் நிலையான இருப்பிடமாகக் கொள்ள வேண்டும்.

    சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் தேசிகன் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  16. //paravasthu said...
    மிகவும் அருமையான பதிவு. தேசிகர் பெயரை சொல்லும் போதும் கேட்கும்பொதும் படிக்கும் போதும் , தலை முதல் கால்வரை பக்தி எனும் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உனர்வு வரும்.//

    வாங்க பரவஸ்து!

    அது தான் தேசிகர் சிறப்பம்சம்.
    திருவேங்கடத்து ஆலய மணி அல்லவா தேசிக அவதாரம் செய்தது! அதான் அப்படி ஒரு கலீர் என்ற மின்சார உணர்வு :)

    ReplyDelete
  17. //கவிநயா said...
    ஸ்ரீ வேதாந்த தேசிகரின் திருவடிகள் சரணம். அவர் தரிசனம் அளித்தமைக்கு நன்றிகள் கண்ணா//

    பந்தலை மூடித் திறந்த முதல் பதிவு ஆசார்யருக்கு அர்ப்பணம் ஆனதில் மகிழ்ச்சி தான் கவிக்கா!

    திரும்ப நியூயார்க் வந்தாச்சே! :)

    ReplyDelete
  18. //வல்லிசிம்ஹன் said...
    திருவஹீந்திரபுரமும் தேவநாதனையும்,கருடபகவானையும் சேர்த்துத் தரிசனம் செய்த நிறைவு கிட்டியது//

    நன்றி வல்லியம்மா!
    தேசிகன் பெருமை சொல்லவும் பெரிதே!

    ReplyDelete
  19. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    //ஆனால் நாமோ, நம்மையும் நம் கோட்பாட்டையும் முன்னிறுத்திக் கொண்டோம்!//

    தக்க நேரத்தில்...!//

    உண்மை தான் ஜீவா...
    கோட்பாடுகளைக் கொள்ளப்படும் அடியாருக்காகத் தள்ளியும் வைக்கத் தயங்காதவர் தான் நம் தேசிகர்.

    ReplyDelete
  20. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!//

    வேதாந்த தேசிகன் பொற்றாள் சரண்!

    ReplyDelete
  21. //கோபிநாத் said...
    அற்புதமான மனிதர்...பதிவுக்கு நன்றி தல ;)
    //

    வா கோபி! மனிதர் அற்புதமானவர் மட்டும் இல்லை. அதையும் தாண்டிப் பெரும் சித்தாந்த போதகர்.

    ReplyDelete
  22. அருமையான பதிவு. திருப்பதியில் சுப்ரபாத சேவையில் சைவர்களும் வைஷ்ணவர்களும் சேர்ந்தே வேங்கடவனை துதித்து பாடுவதை காணலாம். அது மட்டுமல்ல, திரை விலகியபின் வைஷ்ணவர்களுக்கு தரிசிப்பதற்கு முன் சைவர்களே முதலில் கோவிந்தனை தரிசிப்பார்கள். கடவுள் முன் அனைவரும் சமமே என்று காட்டுவதற்காகத்தான் இந்த வழக்கம்.

    ReplyDelete
  23. //Anonymous said...
    I am really happy, that you are going to write more about him in future.//

    வாங்க ஸ்ரீநிவாசன் சார். நலமா? ரொம்ப நாள் ஆச்சுது.

    //His birthday and Thiruvengadamudayan birthday also a same day//

    ஆமாம் புரட்டாசித் திருவோணம் தான் பிரம்மோற்சவத்தின் கடைசி நாள். அன்று தான் தேசிகன் திருவவதாரமும் கூட!

    ReplyDelete
  24. // Expatguru said...
    அருமையான பதிவு. திருப்பதியில் சுப்ரபாத சேவையில் சைவர்களும் வைஷ்ணவர்களும் சேர்ந்தே வேங்கடவனை துதித்து பாடுவதை காணலாம்.//

    ஆமாம் expatguru! இன்றும் சைவர்களும் வேத பாராயணம் செய்கிறார்கள் திருமலையில்.

    திருமலைத் தெய்வம் யார் என்று திடீரென்று முளைத்து இடையில் குழப்பம் செய்த பின், இராமானுசரிடம் வாதத்தில் தோற்றார்கள் சில சைவர்கள்.

    அவர்களை மன்னன் தண்டிக்க முற்பட்ட போது, அதைத் தடுத்து, திருந்தியவர்களை மட்டும் ஆலயப் பணியில் ஈடுபடுத்தினார். அது இன்றும் தொடர்கிறது!

    //திரை விலகியபின் வைஷ்ணவர்களுக்கு தரிசிப்பதற்கு முன் சைவர்களே முதலில் கோவிந்தனை தரிசிப்பார்கள்//

    இது எந்த அளவுக்கு மெய்யான நிகழ்வு என்று தெரியவில்லை! ஆனால் முதல் தரிசனம் இடையனுக்கே (கோனார்). பின்பு தான் அர்ச்சகர்களே உள் செல்ல முடியும்!

    ReplyDelete
  25. நிஹமாந்த மஹா தேசிகர், தீர்த்தத்திற்கு மட்டும் அல்ல , பொன் பொருளுக்கும் ஆசைப் படாமல் தான் வாழ்ந்தார். ஒரு முறை அவருக்கு அளிக்கப் பட்ட அரிசியுடன், பொன் பொருளும் மறைத்து வழங்கப்பட்டது. ஆனால், தேசிகர் அப் பொன்,பொருட்களை எல்லாம் வாழ்வுக்கு வேண்டாதவை என்று கூறி, அவற்றை , மற்ற வேண்டாத பொருட்களுடன் சேர்த்து குப்பையில் இடும்படி , தமது துணைவியாரிடம் கூறிவிட்டார்.( இந்த காலத்தில் இப்படி யாராவது செய்வார்களா?)

    அவர் பிறர்க்கு உபதேசிப்பதை , தன் வாழ்வில் கடைப்பிடிக்கிறாரா, என்று கண்டறிய இப்படி சோதனை செய்தவர்கள் கடைசியில் வெட்கி தலை குனிந்தார்கள்.

    இது மட்டும் அல்ல. அவருக்கு, பல இடையூறூகள், கொடுத்த போதெல்லாம், எல்லாச் சோதனைகளையும் சாதனைகளாக மாற்றியவர்.

    தேசிகருக்கு, சர்வதந்த்ர ச்வதந்த்ரர்(ஆய கலைகள் அனைத்தும் அறிந்தவர்)எனும் பட்டம் கொடுத்த பின் அவர், பல முறை பலரால் சோதிக்கப்பட்டார்.

    பெயருக்கு ஏற்ப எல்லாக் கலைகளும் தெரியுமா என்று சிலர் அவரை சோதனை செய்தனர்.தம் திறமையை நிரூபணம் செய்வதற்காக,ஒரு எடுதுக்காட்டாக, அயிந்தை நகரில் கிணறு வெட்டினார்.

    அவருடைய வாழ்வு மற்றும் அவரது படைப்புகளின் பெருமைகளைப் பற்றிப் பேச, ஒரு பிறவி காணாது.அவரைப் பற்றிய கட்டுரை மற்றும் செய்திகளை K R S எப்போது வெளியிடுவார் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்.

    தீதாகிய பல மாயக்கலைகளை சிக்கென வென்ற , தூப்புல் புனிதனின் பாதாரவிந்தம் சரண் அடைகிறேன்.

    ReplyDelete
  26. மிகவும் தாமதமாய் பின்னூட்டமிடுகிறேன் அதுக்கு மன்னிப்பு! போனவாரம் தான் திருவஹீந்திரபுரம்போனேன்...பூத்தூறலாய்மழை வரவேற்க ஹயக்ரீவப்பெருமானையும் தேவராஜரையும் சேவித்து தேசிகர் சந்நிதிவந்தால் திரைபோட்டுவிட்டார்கள்.
    அட்டடா அந்தமகானதுதரிசனம் நமக்குக்கிடைக்காதா என மனம் வருத்தப்படும்போது திடீரென யாரோ ஒருவர் தன்குடும்பமுடன் செல்ல அவர்களுடன் நானும் செல்ல அலங்காரத்திற்கு ஆயத்தமாய் தேசிகப்பெருமான் அங்கேகாட்சிதர பெருமானின் திருமேனியையிலிருந்தமாலையைக்
    கழற்றி என்கையில் கொடுத்தார் அர்ச்சகர். சேவித்து வரும்போது பழங்களின்கலவைபிரசாதமும் தேவாம்ருதமான சக்கரைப்பொங்கலும் கிடைத்தது.இங்கே வந்தால் இப்போது
    அதன் தொடர்ச்சியாய் உங்கள் இனியபதிவு.என்ன சொல்ல ரவி !அங்கேயும் கண்டேன் கவிதார்க்கிக கேசரியை இங்கும் கண்டேன்!

    ReplyDelete
  27. //paravasthu said...
    நிஹமாந்த மஹா தேசிகர், தீர்த்தத்திற்கு மட்டும் அல்ல , பொன் பொருளுக்கும் ஆசைப் படாமல் தான் வாழ்ந்தார். ஒரு முறை அவருக்கு அளிக்கப் பட்ட அரிசியுடன், பொன் பொருளும் மறைத்து வழங்கப்பட்டது. ஆனால், தேசிகர் அப் பொன்,பொருட்களை எல்லாம் வாழ்வுக்கு வேண்டாதவை என்று கூறி, அவற்றை , மற்ற வேண்டாத பொருட்களுடன் சேர்த்து குப்பையில் இடும்படி , தமது துணைவியாரிடம் கூறிவிட்டார்.( இந்த காலத்தில் இப்படி யாராவது செய்வார்களா?)//

    இந்தக் காலத்தில் நிச்சயமா அடியேன் செய்யமாட்டேன் :))))

    அருமையான ஒரு கருத்தைச் சொல்லியிருக்கீங்க சுந்தரண்ணா. இத்தனைக்கும் தேசிகர் இல்லறவாசி. உடையவரைப் போலத் துறவி அல்ல! ஆனால் பாருங்கள் அந்த தயா பாத்ரம், மனத்தால் துறப்பது என்பது அப்படியே வருகிறது! துறவாமல் துறத்தல் என்பது இது தானோ?

    //பெயருக்கு ஏற்ப எல்லாக் கலைகளும் தெரியுமா என்று சிலர் அவரை சோதனை செய்தனர்.தம் திறமையை நிரூபணம் செய்வதற்காக,ஒரு எடுதுக்காட்டாக, அயிந்தை நகரில் கிணறு வெட்டினார்//

    அந்தக் கிணறு இன்றும் உள்ளது!

    //அவரைப் பற்றிய கட்டுரை மற்றும் செய்திகளை K R S எப்போது வெளியிடுவார் என்று ஆவலுடன் காத்து இருக்கிறேன்//

    வந்து கொண்டே இருக்கிறது! முழுக்க முழுக்க தத்துவ சாரமாகவும் இல்லாமல், வெறும் கதை போலவும் இல்லாமல், அவர் நடாத்திய கருத்துரைரையாடல்களும், விவாதங்களும், அப்பைய தீட்சிதர் நட்பும் எல்லாம் சிறிது சிறிதாகச் சொல்கிறேன்!

    //தீதாகிய பல மாயக்கலைகளை சிக்கென வென்ற , தூப்புல் புனிதனின் பாதாரவிந்தம் சரண் அடைகிறேன்//

    சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

    நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
    மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
    சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  28. //ஷைலஜா said...
    மிகவும் தாமதமாய் பின்னூட்டமிடுகிறேன் அதுக்கு மன்னிப்பு!//

    ஆகா! நானே லேட்டு!
    லேது என்பதை விட லேட்டு ஓக்கே தான்-கா! :)

    //போனவாரம் தான் திருவஹீந்திரபுரம் போனேன்...தேசிகர் சந்நிதிவந்தால் திரைபோட்டுவிட்டார்கள்.
    அட்டடா அந்தமகானதுதரிசனம் நமக்குக்கிடைக்காதா என மனம் வருத்தப்படும்போது//

    மை.பா.வுக்கே திரையா? :)

    //திடீரென யாரோ ஒருவர் தன்குடும்பமுடன் செல்ல அவர்களுடன் நானும் செல்ல அலங்காரத்திற்கு ஆயத்தமாய் தேசிகப்பெருமான் அங்கேகாட்சிதர பெருமானின் திருமேனியையிலிருந்தமாலையைக்
    கழற்றி என்கையில் கொடுத்தார் அர்ச்சகர்//

    யக்கா...சூப்பரு!
    சூடிக் களைந்த தேசிகன் மாலை சூடிக் களைந்ததுண்டு-ன்னு பாடலாம்! மிகவும் இனிய அனுபவம்!

    //சேவித்து வரும்போது பழங்களின்கலவைபிரசாதமும் தேவாம்ருதமான சக்கரைப்பொங்கலும் கிடைத்தது//

    சீரங்கமே வேறு ஊர் சக்கரைப் பொங்கலைப் புகழுதுன்னா...அது சும்மா இல்ல! :))

    //அங்கேயும் கண்டேன் கவிதார்க்கிக கேசரியை இங்கும் கண்டேன்!//

    அங்குள்ள தேசிகரை, இங்கு எளியேன் பதிவில் கண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி-க்கா!

    ReplyDelete
  29. இப்போதெல்லாம் அடிக்கடி மாதவிப்பந்தலை வலம் வருகிறேன்.

    தேசிகரைப் பற்றிய, சிறந்த பதிவு இங்கு இருப்பதால்.

    அதெல்லாம் சரி!புரட்டாசித் திருவோணத்திற்கு, தேசிகர் பற்றிய பதிவு இருக்கிறது.


    அதே போல, ஐப்பசி மூலம் எனும் சிறப்புத் திருநாளில், மணவாள மாமுனிகளைப் பற்றிய செய்தியை பதிவு செய்யலாமே!

    ReplyDelete
  30. //paravasthu said...
    இப்போதெல்லாம் அடிக்கடி மாதவிப்பந்தலை வலம் வருகிறேன்//

    இன்னுமா தூங்கலை நீங்க?
    இதுக்காகவே பந்தல்-ல நிறைய எழுதணும் போல இருக்கே! :)

    //அதெல்லாம் சரி!புரட்டாசித் திருவோணத்திற்கு, தேசிகர் பற்றிய பதிவு இருக்கிறது.
    அதே போல, ஐப்பசி மூலம் எனும் சிறப்புத் திருநாளில், மணவாள மாமுனிகளைப் பற்றிய செய்தியை பதிவு செய்யலாமே!//

    ஹூம்...இந்த ஆண்டு நேரம் போதாமற் போனது. ஆனால் சென்ற ஆண்டு குமரனைப் பதிவிடச் சொல்லி இருந்தேன்! அவர் செய்திருந்தார்! இதோ!

    மேலும் ஐப்பசி மூலத்தை ஒட்டினாற் போல் தான் முதலாழ்வார்கள்/பிள்ளை லோகாசார்யர் திருநட்சத்திரங்கள்! அது பற்றிய பதிவு இதோ!

    ReplyDelete
  31. மிஸ் பண்ணிட்டேனேன்னு வந்தா 'மிஸ்' கண்ணில் பட்டது இது.

    //கோயில் திருவிழாவில் முதல் முரியாதை யாருக்கு?//

    அதென்ன முரியாதையோ?????
    டீச்சரா இருப்பது ரொம்பக் கஷ்டம்.

    பதிவும் படங்களும் வழக்கம்போல் அருமை.

    ReplyDelete
  32. //துளசி கோபால் said...
    மிஸ் பண்ணிட்டேனேன்னு வந்தா 'மிஸ்' கண்ணில் பட்டது இது//

    டீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

    //
    //கோயில் திருவிழாவில் முதல் முரியாதை யாருக்கு?//

    அதென்ன முரியாதையோ?????
    டீச்சரா இருப்பது ரொம்பக் கஷ்டம்//

    மரியாதையை ஒழுங்காப் பண்ணலைன்னா முரியாததையும் முரிச்சிடுவோம்-ன்னு சொல்றாங்களோ? :)

    பதிவின் தலைப்பிலேயே ஸ்பெல்லிங் மிஷ்டேக்கு பண்ணியிருக்கேனா டீச்சர்? வெளங்கிரும்!
    இதை இத்த்னி பேரு பாத்து இருக்காக! ஒருத்தர் கூடச் சொல்லலை! துளசீ தீர்த்தம் நீங்க தான் கொடுக்கணும்-ன்னு இருக்கு! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP