Saturday, January 12, 2008

விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video

விவேகானந்தரின் பிறந்தநாளான இன்று (Jan 12, 2008) ஒரு சிறப்புப் பார்வை!
நாம் ஏன் ஒத்துப் போவதில்லை என்பதை அழகான ஒரு கதையைச் சொல்லி, தனக்கே உரிய நடையில் அற்புதமாக விளக்குகிறார் விவேகானந்தர்.
பதிவின் இறுதியில் படியுங்கள்!
இல்லை youtube வீடீயோவில் கேளுங்கள்!

வீடியோ பிற்தயாரிப்பு செய்யப்பட்டது. அதில் கேட்பது சுவாமிகளின் குரல் அன்று!
1. வரவேற்புக்கு மறுமொழி
செப்டம்பர் 11, 1893


அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, 'வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்' என்று உங்களுக்குக் கூறினார்கள்.

அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: 'யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.'

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், 'நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்' என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.

ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

'நீ எங்கிருந்து வருகிறாய்?'

'கடலிலிருந்து'

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?' என்று கேட்டது.

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?'

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்!


விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
1. வரவேற்புக்கு மறுமொழி
2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை?
3. இந்து மதம்
4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று
5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு
6. நிறைவு நாள் உரை
அனைத்தும் வாசிக்க, கீழுள்ள சுட்டிக்குச் செல்லவும்!
நன்றி: http://www.geocities.com/vivekananda_tamil/index.html

16 comments:

 1. அமெரிக்காவில் வீவேகானந்தரின் முதல் சொற்பொழிவு தாக்குதல் நடந்தது செப்டம்பர் 11 அன்று. நான் பிறந்த தேதி என்பதால் அது எப்போதும் எனக்கு நினைவில் இருக்கும்

  ReplyDelete
 2. beautiful -

  4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று
  செப்டம்பர் 20, 1893

  நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.

  இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.

  இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.

  ReplyDelete
 3. சரியான போங்கு ஆட்டம் இது, அடுத்ததாக அப்படியே இராமகிருஷ்ணருக்கும் யு டுயுப் விடியோ போடலாமே! :-))

  ReplyDelete
 4. இச்சொற்பொழிவு படித்துள்ளேன்.அவர் குரல் இப்போதுதான் கேட்டேன். வீரத்துறவி
  என்பது சரியே!!குரல் வித்தியாசமானதாகத் தான் உள்ளது.
  இந்தியாவுக்கு மதம் வேண்டாம். முழு உண்மை,ஆனால் அவர்கள் வருவது அவர்கள் மதம் பரப்ப,அதனூடு கல்வி ,சுகாதாரம்
  பணிகளும் செய்துள்ளார்கள்.
  அமெரிக்கரை சகோதர சகோதரிகள்
  எனச் சொல்லி அசத்திய விவேகானந்தரால்,
  இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் எனும் உணர்வை ஓங்க வைக்க முடியாது போனதால் தான், இணையத்தில் கூட நீ காலால் பிறந்தவன் எளியவன் என்று இன்றும்
  ஒரு கூட்டம் எழுதுகிறது.
  அன்று விவேகானந்தர் ஏதாவது கூறியிருந்தால், அவரையும் தலையால் பிறந்தவர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்.
  போட்டுத் தள்ளிவிட்டு ,முத்தியடைந்தார் என ஒரு கதையும் சொல்லியிருப்பார்கள்.

  ReplyDelete
 5. சரித்திரம் செய்த சன்யாசியின் உரை நமக்கு உத்வேகத்தை தரட்டும். உன்னத இந்தியா உருவாக உரமாகட்டும். தக்கதொரு சமயத்தில்
  சமயச்சுடரின் சொற்பொழிவினை தருவித்தமைக்கு நன்றி KRS.

  ReplyDelete
 6. நல்ல பதிவு! நானும், விவேகானந்தரைப் பத்தி ஒரு புத்தகம் வாங்கினேன். படிக்கத்தான் நேரமில்லை!! (சகோதர சகோதரிகளே - ஞானதீபம் 11 சுடர்களின் தொகுப்பு)

  ReplyDelete
 7. made a nice reading :)
  thanks!

  ReplyDelete
 8. //உமையணன் said...
  அமெரிக்காவில் வீவேகானந்தரின் முதல் சொற்பொழிவு தாக்குதல் நடந்தது செப்டம்பர் 11 அன்று//

  விவேகானந்தரின் சொற்பொழிவைத் தாக்குதல்-னே முடிவு கட்டிட்டீங்களா உமையணன்? :-)

  ReplyDelete
 9. //SurveySan said...
  beautiful -
  4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று//

  வாங்க சர்வேசன். நான் இதையும் பதிவில் போட நினைத்தேன்! பெருசா நீண்டு விடுமே-ன்னு அப்புறம் சுட்டி மட்டும் கொடுத்துவிட்டேன்!
  நீங்க எடுத்துக் கொடுத்திட்டீங்க! :-)

  ஆனா ஒன்னு! விவேகானந்தர் சொல்வது இன்று நம் மதத் தலைவர்களுக்கும் மிகவும் பொருந்தும்!

  ReplyDelete
 10. //வவ்வால் said...
  சரியான போங்கு ஆட்டம் இது//

  விவேகானந்தர் இவ்ளோ ஸ்டைலா ஆங்கிலம் பேசறாரே-ன்னு நானும் நினைத்தேன் வவ்வால்!
  ஆனா அப்புறம் அந்த வீடியோவின் hidden குறிப்பைப் படித்த பின் தான், இது ஒரு பிற்தயாரிப்பு என்று அறிந்தேன்!

  அதான் பதிவின் தொடக்கத்திலேயே சொல்லியும் விட்டேன்! :-)

  //அடுத்ததாக அப்படியே இராமகிருஷ்ணருக்கும் யு டுயுப் விடியோ போடலாமே! :-))//

  அட, இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா யோசிங்க!
  ஆதிசங்கரர், இராமானுசர்,
  பகவத் கீதையை கண்ணனே சொல்வது போல்,
  மலைப்பொழிவை யேசுநாதரே சொல்வது போல்-னு எல்லாம் யூ-ட்யூப் வீடியோ வந்தாலும் வியப்பில்லை! :-)

  ReplyDelete
 11. // யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  இச்சொற்பொழிவு படித்துள்ளேன்.அவர் குரல் இப்போதுதான் கேட்டேன்.//

  யோகன் அண்ணா! இது விவேகானந்தரின் குரல் அன்று!
  பதிவில் சொல்லி உள்ளேனே! Post Production செய்யப்பட்ட அசை படம் அது! அயல் நாட்டினர் ஆங்கிலம் பேசுவது போல் உள்ளது!

  //அமெரிக்கரை சகோதர சகோதரிகள்
  எனச் சொல்லி அசத்திய விவேகானந்தரால்,
  இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் சகோதர சகோதரர்கள் எனும் உணர்வை ஓங்க வைக்க முடியாது போனதால் தான்,//

  வேற்றுமைகள் தலைமுறை தலைமுறையாக வந்த ஒன்று! தலைமுறை தலைமுறையாகத் தான் போகும்! அதற்கு விவேகானந்தர் போல் நாமும் வித்திட்டுக் கொண்டே தான் இருக்கனும்!

  //இணையத்தில் கூட நீ காலால் பிறந்தவன் எளியவன் என்று இன்றும்
  ஒரு கூட்டம் எழுதுகிறது//

  :-(((((
  காலால் பிறந்ததாகவே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால்...
  திருவடிகளின் பெருமை அனைத்தையும் விடச் சிறந்தது என்று அந்தக் கூட்டம் அறியாமல் போனது ஏனோ?

  //அன்று விவேகானந்தர் ஏதாவது கூறியிருந்தால், அவரையும் தலையால் பிறந்தவர்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள்//

  இராமானுசருக்கும் இதே கதி தான்! விஷம் வைத்துக் கொல்லப் பார்த்த கதையைப் பின்னொரு பதிவில் சொல்கிறேன்!

  ReplyDelete
 12. // ஜீவா (Jeeva Venkataraman) said...
  சரித்திரம் செய்த சன்யாசியின் உரை நமக்கு உத்வேகத்தை தரட்டும். உன்னத இந்தியா உருவாக உரமாகட்டும்.//

  ஆமாம் ஜீவா!
  விவேகானந்தரின் ஒவ்வொரு சொல்லும் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் போலத் தான்! அப்படி ஒரு தாக்கம், Motivation!

  ReplyDelete
 13. //தஞ்சாவூரான் said...
  விவேகானந்தரைப் பத்தி ஒரு புத்தகம் வாங்கினேன். படிக்கத்தான் நேரமில்லை!! (சகோதர சகோதரிகளே - ஞானதீபம் 11 சுடர்களின் தொகுப்பு)//

  வாங்கண்ணா!
  புத்தகம், பாக்கெட் சைசில் வாங்கினா ஈசியா படிச்சிடலாம்! மத்தபடி இணையத்தில் படிச்சிக்கறது தான் இப்போ எளிதாப் போய்விட்டது!

  குரல் வழிப் புத்தகங்கள் கிடைக்குதுண்ணா! microsoft reader இல் அதுவே படிச்சு சொல்லும்! தூங்கும் போது கேட்டுக்கிட்டே தூங்கிடலாம்!

  ReplyDelete
 14. //கீதா சாம்பசிவம் said...
  நன்றி.//

  நன்றி கீதாம்மா! உங்க விவேகா பதிவும் கண்டேன்!

  //Dreamzz said...
  made a nice reading :)
  thanks!//

  தல, ஊருக்கு வந்தாச்சா? இன்னும் மேற்காலத் தான் இருக்கீங்களா?

  ReplyDelete
 15. //சரித்திரம் செய்த சன்யாசியின் உரை நமக்கு உத்வேகத்தை தரட்டும். உன்னத இந்தியா உருவாக உரமாகட்டும். தக்கதொரு சமயத்தில்
  சமயச்சுடரின் சொற்பொழிவினை தருவித்தமைக்கு நன்றி KRS.//

  ரீப்பீட்டே...

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP