Monday, December 24, 2007

தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?

அன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்!
"அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே! எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே! ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா?"

"ஓய், என்னைக் கேட்கறீரா? நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா! இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன்! அச்சோ! ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா விழுந்து கிடக்கே? அபசாரம், அபசாரம்!
நேற்று ராப்பூஜையில் என்னய்யா பண்ணீர் நீர்? திருவிழா நேரம்-னா நடை சாத்தக் கொஞ்சம் தாமதம் ஆகத் தான் செய்யும். அதுக்காகப் பசி தாளாம, அம்பலத்தில் களியை ஒளிச்சி வச்சித் தின்னறதா? நீரெல்லாம் என்னய்யா ஒரு தீட்சிதர்?"

"அய்யோ, இப்படி அபாண்டமாப் பேசாதீங்கோ! நம்மவா களி தின்னும் வழக்கம் எல்லாம் கிடையாதே! நான் எப்படிங் காணும் களியைப் போயித் தின்னிருப்பேன்? பழியைப் போட்டாலும் பொருந்தப் போடணும் ஓய்!
இது வேற எவனாச்சும் செஞ்ச வேலையாத் தான் இருக்கும்! ஹூம்...திருவாதிரை ஆருத்ரா அபிஷேகத்தின் போதா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்?"

"நாமத் தான் அம்பலத்தில் ஒருத்தனையும் விடமாட்டோமே! வேறு எவன் ஐயா வந்து வீசியிருக்க முடியும்?
ஏற்கனவே நாம போடுற சுத்தபத்த ஆட்டத்தை எல்லாம் பார்த்துட்டு, ஜனங்கள் ரொம்பவே நொந்து போயிருக்கா. இப்போ இது வேறயா?
கண்டராதித்த சோழர் வந்திருக்காராமே ஊருக்கு! இங்க வந்து, "நல்லா இருக்குய்யா உங்க சுத்தமும், ஆச்சாரமும்" ன்னு கேட்கப் போறாரு! என்ன சொல்லப் போறீரு?"

- சிதம்பரத்து தீட்சிதர்கள் இருவர், கோயிலில் இப்படிப் பேசிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், மிகவும் பயந்து போய் இருந்தார்கள்! அதற்குள் கண்டராதித்த சோழன், பொன்னம்பல நாதனைத் தரிசிக்க ஓடோடி வந்து விட்டான்! என்ன இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம், இப்படி ஆவலுடன் ஓடி வருகிறான்?



அதற்கு முந்தைய நாள் இரவு!
"செம்பியன் மாதேவி, ஒவ்வொரு ராத்திரியும் பூசை முடித்த பின், என் காதுகளுக்கு நடராஜப் பெருமானின் சதங்கை ஒலி கேட்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அது இன்று கேட்கவில்லை! என் வழிபாட்டில் தான் ஏதோ குறை உள்ளது போலும்! அப்படித் தானே?"

"கண்டராதித்தரே, உங்களைப் போல் சிவநெறிச் செல்வரைக் கணவராகப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! எதற்கு வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்! இன்று கேட்காத சதங்கை ஒலி நாளை கேட்கும் பாருங்கள்! வாருங்கள், சாப்பிட்டு உறங்கப் போகலாம்!"

"இல்லை மாதேவி, எனக்கு மனம் சரியில்லை! உணவு வேண்டாம்! நீ போய் வா! நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்!"

கவலையில் சோழனுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை! புரண்டு புரண்டு படுத்தான். சிற்றஞ் சிறுகாலே தோன்றிய உறக்கத்தில், ஒரு கனவு! ஆகா...இது என்ன!.....ஈசனே அல்லவா கனவில் பேசுகிறார்!
"ஆதித்தா...இன்று இரவு சேந்தன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்! அதான் இங்கு உன்னிடம் வரவில்லை! உனக்கு என் சதங்கை ஒலியும் கேட்கவில்லை!
சேந்தன் தெரியுமல்லவா உனக்கு?"

"தெரியாதே சுவாமி!"

"பட்டினத்துப் பிள்ளையின் கணக்குப் பிள்ளை அவன்! பட்டினத்தான் துறவு பெற்ற பின், அவன் சொத்துக்களை எல்லாம் ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டான். அரசனுக்கு கொடுக்கவில்லையாம். செய்யாத குற்றத்துக்குச் சிறைவாசம் அனுபவித்து விட்டு, இப்போது தில்லைக்கு வெளியில் பரம ஏழையாக உள்ளான். அவன் வீட்டுக்குத் தான் ஒரு முதியவனாய் இன்று போய் எட்டிப் பார்த்தேன்...."


"சேந்தனாரு இருக்காருங்களா சாமீ...தினமும் சிவன் அடியாரு ஒருத்தருக்காச்சும் சாப்பாடு போட்டுட்டுத் தான் சாப்பிடுவாராமே! யப்பா...இன்னிக்கி இந்தப் பேய் மழையில இங்கனாச்சும் ஒதுங்கினேனே!"

"வாங்க பெரியவரே! அடியேன் தான் சேந்தன்! இப்படி உட்காருங்க"

"ஓ...நீ தான் சேந்தனா! பார்க்கவே பரம ஏழையா இருக்கேயே! உனக்கு ஏன்பா இந்த அன்னதானம் எல்லாம்? உனக்கே இன்னொருத்தரு அன்னதானம் பண்ணனும் போல இருக்கே!"

"எங்கள் ஈசனும் பரம ஏழை தானே, ஐயா!
ஏழைப் பங்காளன், அவன் உலகத்துக்கே படி அளக்கவில்லையா? அது போலத் தான், நானும்!"

"உக்கும்...இந்தப் பேச்செல்லாம் நல்லா வெவரணையாத் தான் பேசுறாங்க இந்தச் சிவனடியாருங்க! ஆனா பேசறத்துக்கு மட்டும் தான் வாயின்னு நெனச்சிக்காதீங்க சேந்தனாரே! சோறு திங்கறத்துக்கும் சேத்து தான் வாயி! உமக்கே சோத்துக்கு இருக்கான்னு தெரியலை! இதோ, வெறகுக்கட்டை வேற மழையில விக்காம இங்கேயே போட்டிருக்க போல!
அட நடராசா! இது தெரியாம இன்னி ராவுக்கு இவன் வூட்டாண்ட வந்துட்டோமே! பஞ்ச வீட்டில் பெருசா என்ன கொடுத்துவிடப் போறாங்க? பசி வேற வயித்தக் கிள்ளுது! ச்சே..."

சேந்தன், மனைவியைப் பார்க்க...அம்மையார், சமையலறை பக்கம் போனார். எஞ்சியிருந்த கொஞ்சம் அரிசி நொய்யில், களி தயாரித்தார்.
சேந்தன் கொல்லையில் இருந்த காஞ்ச கீரையைப் பறித்துத் தர, கீரைக்குழம்பு தயாரானது.
வயசாளிக்குக் களியும் குழம்பும் ஊத்த, கெடைச்ச மட்டும் லாபம்-னு சாப்புட்டு போட்டுக் கெளம்பினாரு! அப்போ தான் அது நடந்திச்சி...

"அட இன்னும் கொஞ்சம் களி மீதி இருக்கே பாத்திரத்தில்! எனக்கு நாளைக்கு ஆகுமே"-ன்னு வெக்கமில்லாம கேட்டாரு வயசாளி அண்ணாச்சி! சேந்தனும் அவர் மனைவியும் ஏதாச்சும் சாப்பிட்டாங்களா-ன்னு ஒப்புக்குக் கூடக் கேக்கலை!
இந்தக் காலத்துல சில ஆம்ஸடர்டாம்-நியுயார்க் பசங்க, சாப்படக் கூப்புடற வீட்டுல இருந்தே, பார்சல் கட்டிக்கிட்டு வரலையா?:) கட்டிக்கிட்டு வந்து, ரெண்டு நாளுக்கு மைக்ரோவேவ்-ல வச்சி சாப்புடறதில்லையா? அது போலவே சிவபெருமானும் பண்ணியிருக்காரு டோய்!
மிச்ச மீதிக் களியைத் தன் இடுப்புத் துண்டில் கொட்டிக்கொண்டு ஆளு எஸ்கேப்பு!



சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி

"கண்டராதித்தா, சேந்தன் வீட்டுக் களி தான் என் ஆடையில் இருக்குன்னு தெரியாம "ஆச்சார சீலர்கள்" சிலர் ஆலயத்தில் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! நீ சென்று அவர்களைக் கவனி! சேந்தனை நாளை தேர்த் திருவிழாவில் உனக்கு அடையாளம் காட்டுகிறேன்...."

அச்சோ...கனவு கலைந்தது...சோழன் அலறி அடித்துக் கொண்டு ஆலயம் வருகிறான்!
களியின் மகிமை கோயிலில் சொல்லப்பட்டது! தீட்சிதர்கள் ஓரளவு அமைதி ஆனார்கள்! ஆனாலும் இந்தக் கதையை அவர்கள் மனம் முழுமையாக நம்பவில்லை போலும்! ஆனாச் சொல்வது அரசன் ஆயிற்றே!

தாஙகள் சொல்லும் கதையை ஊர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஊர் சொல்லும் கதையை, தான் நம்ப வேண்டாமோ? நம்பாதவரையும் வேறு ஒன்று செய்து நம்ப வைப்பவன் அந்த நடராசன் அல்லவா?

மக்கள் எல்லாரும் யார் அந்தச் சேந்தன்? யார் அந்தச் சேந்தன் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க...தேர் திருவிழா தொடங்கியது.

ஆடல் வல்லான் சிற்றம்பலத்தை விட்டு, பொன்னம்பலத்தின் வழியாக, ஆனந்த நடனம் செய்து கொண்டே வெளியே வருகிறான். தில்லையில் மூலவரே உற்சவரும் ஆகிறார்! தேர் புறப்பட்டு வீதிகளில் சுற்றிய வண்ணம் உலா வருகிறது!
அதைத் தொடாதே, இப்படி நில்லு என்ற அதட்டல் எல்லாம் கோயிலுக்குள் தான் போலும்! வீதியில் அந்த வில்லங்கங்கள் ஏதும் இல்லாது, மிகவும் நிம்மதியாய், மக்களோடு மக்களாய் உலா வருகிறான் இறைவன்.

இதோ நிலைக்கு வரப் போகிறது தேர்! அச்சோ, சக்கரம் பூமியில் இறங்கியது. தேர் நகரவில்லை! என்ன இது காலையில் இருந்து ஒரே அபசகுனமாய் நடந்து கொண்டே இருக்கே-ன்னு தீட்சிதர்கள் முணுமுணுக்க...
அபசகுணம் இல்லை இது! அடியவர் சகுணம்...அன்பின் சகுணம்; அதைக் காட்ட எண்ணிவிட்டான் அம்பலத்தான்.

யானைப் படைகளின் உதவியுடன் தேரை மேலே தள்ளினர் வீரர்கள். ஹூஹூம்...ஒன்றும் முடியவில்லை.
"சேந்தனே, தேர் நகரப் பல்லாண்டு பாடு" என்று ஒரு குரல்.
கூட்டத்தோடு கூட்டமாக இருந்த சேந்தனார், இதைக் கேட்டுத் திடுக்கிட்டார்...
கூட்டம், குரல் கேட்டு வழிவிட்டது! இவனா சேந்தன்? இவனா சேந்தன் என்று எல்லாரும் திரும்பிப் பார்க்க...
இவன் வீட்டுக் கம்பங் களியா, இன்று காலை பெருமானின் மேல் விழுந்து கிடந்தது என்று தீட்சிதர்கள் ஒரு பார்வை பார்க்க...
சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!

மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாளுமை கோன், அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே!
- (9ஆம் திருமுறை)

மக்கள் எல்லாரும் இப்போது தேரை இழுக்க, தேர் மீண்டும் வலம் வந்தது.
மந்திரங்களுக்கு கட்டுப்படாத இறைவன், மனத்துக்குக் கட்டுப்பட்டான்!
அபிஷேகத்தால் குளிராத இறைவன், அன்புக்குக் குளிர்ந்து போனான்!
கண்டராதித்தர் ஓடியே வந்து சேந்தனாரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

தீட்சிதர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை! கண்ணுக்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது! சேந்தனின் சிவபக்தி ஊர் அறிந்த ஒன்றாகி விட்டது!
ஆனால் சேந்தன் என்றுமே அதே சேந்தன் தான்! நடந்த அற்புதத்தை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் மிட்டா மிராசு செய்யவில்லை! தனி வழியில் தரிசிக்கவில்லை! சிதம்பர ரகசியத்தைப் பணங்கொடுத்து பார்க்கவில்லை! சித்சபையில் சிறப்பு கேட்டு சீண்டிப் பார்க்கவில்லை! கூட்டத்தோடு கூட்டமாக நின்று சேவிக்கும் அதே சேந்தன் தான் அவன்!

அவன் வீட்டுக் களியை நடராசன் உண்டான். நாமும் உண்கிறோம்!
கீழ்த்தட்டு மக்களின் அன்றாட உணவை இன்று தீட்சிதர்கள் உண்கின்றனர். தனவந்தர்கள் உண்கின்றனர். அடியவர்கள் எல்லாம் திருவாதிரைக் களி என்று அன்புடன் உண்கின்றனர்!

ஏழையின் சொல் அம்பலம் ஏறியது!
ஏழையின் சோறு அம்பலம் ஏறியது!


சாதாரண அம்பலம் அல்ல! பொன்னம்பலம் ஏறியது! சிற்றம்பலம் ஏறியது!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!



Dec 24, 2007
இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! திருவாதிரைக் களி நாள்!

33 comments:

  1. தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவற்கும் இறைவா போற்றி.
    திருச்சிற்றம்பலம்.....

    வீட்டில் பூஜித்தும், களியினை உண்டும் களித்தேன்,
    இங்கு பதிவினை படித்தும், படங்களைப் பார்த்தும் களித்தேன்.

    ReplyDelete
  2. சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள், திருவாதிரைக்கு ஏன் களி கிண்டுகிறார்கள் என்று தெரியலை.

    "களி தின்றால்" சிதம்பர அநியாங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறதா ? அவர்களுக்கு அந்த களி கிடைக்குமா ?

    நடராஜா நீயே சொல்லு...

    :))

    ReplyDelete
  3. திருவாதிரைக்கு ஏன் களி கிண்டுகிறார்கள் என்று தெரியலை.... "இப்போதுதான் அறிந்து கொண்டேன்"

    என்பது விடுபட்டுவிட்டது.

    :)

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...
    "களி தின்றால்" சிதம்பர அநியாங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறதா?//

    களியைக் களிப்புடன் தின்னா குறையும்!
    வேண்டா வெறுப்பாத் தின்னா குறையாது! :-)

    //நடராஜா நீயே சொல்லு...//

    பாவம் அவரு சிவனேன்னு இருக்காரு! அவருக்கும் சேத்து கிண்டறீங்களே கோவி அண்ணா! :-))

    நானும் பாருங்க! இன்னும் தூங்காம இருக்கேன். மணி 3:30 ஆச்சுது!
    ஆனா எதுவும் கிண்டலை! :-))

    ReplyDelete
  5. மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே.

    ReplyDelete
  6. ஒரு பார்வை பார்க்க...
    சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!

    அது... அது.... அங்கேதான் ரவி நிக்கறார்.

    என்ன ஒத்துமை ரவி இதே கருத்தில் இதே நாளில் என்பதிவும் வரநேர்தது.

    ReplyDelete
  7. நேர்த்தியான உரையாடலாக, முழுநீளக் கதையாக

    முனைப்பாய் படைத்தமைக்கு நன்றி கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  8. interesting read.. informational post :)

    ReplyDelete
  9. அழுதுவிட்டேன்ப்பா! அழுதுவிட்டேன்! எனக்கு மிகவும் பிடித்த பதிவு இந்த வருஷததில் இது தான்!!! என் அப்பன் நடராஜன் பத்தின பதிவில்லையா அதான்!!!

    ReplyDelete
  10. //சேத்தன் said...
    மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே.
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
    :)

    ReplyDelete
  11. கோவி.கண்ணன் said...
    //சேத்தன் said...
    மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே.
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
    :)//

    சேத்தன், கோவி அண்ணா
    ஏழை வூட்டுக் களின்னா எப்படி இருக்கணும் நினைச்சீங்க? ஏழை ரெண்டு முந்திரி கூட போட்டுச் சாப்பிடக் கூடாதா என்ன? :-)

    களி படம் இணையத்துல சரியாக் கிடைக்கல! ஆனா கிட்டத்தட்ட இப்படித் தான் இருக்கும். கெட்டியா உருட்டி வச்சிருப்பாங்க. கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான்!

    ReplyDelete
  12. கோவி.கண்ணன் said...
    //சேத்தன் said...
    மேலே படத்தில் இருப்பதுதான் களியோ பார்த்தா அப்படி ஏழை வீட்டு களி மாதிரி தெறியலையே.
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
    :)//

    சேத்தன், கோவி அண்ணா
    ஏழை வூட்டுக் களின்னா எப்படி இருக்கணும் நினைச்சீங்க? ஏழை ரெண்டு முந்திரி கூட போட்டுச் சாப்பிடக் கூடாதா என்ன? :-)

    களி படம் இணையத்துல சரியாக் கிடைக்கல! ஆனா கிட்டத்தட்ட இப்படித் தான் இருக்கும். கெட்டியா உருட்டி வச்சிருப்பாங்க. கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான்!

    ReplyDelete
  13. திருவாதிரை - ஆருத்ரா தரிசனம் - களிப்புடன் களி கிண்டிச் சாப்பிட வேண்டும். கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண்டியுடன் அருமையான பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  14. அருமையான பதிவு...

    இப்பவெல்லாம் திருப்பதிக்கு போகனுங்கற ஆசையைவிட தில்லை நடராஜனை சேவிச்சா போதும்னு தோண ஆரம்பிச்சிடுச்சி.

    நடராஜர் கொள்ளை அழுகு. ஆனா யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியல. எல்லாரும் முருகனையும், கண்ணனையும் தான் அழகுனு சொல்றாங்க. என் கண்ணுக்கு என்னுமோ தில்லை நடராஜர் தான் கொள்ளை அழகுனு தோணுது.

    ReplyDelete
  15. @ஜெகதீசன்
    புன்சிரிப்புக்கு நன்றி! :-)

    @மெளலி அண்ணா
    உண்டு களித்தீங்க
    படித்துக் களித்தீங்க
    பதிவு போட்டும் களித்தீங்க! - அதையும் சேர்த்துச் சொல்லுங்க! :-)

    ReplyDelete
  16. திருச்சிற்றம்பலம்.

    சேந்தனாரின் கதையை முன்பு எஸ்.கே. பதிவில் படித்ததாக நினைவு. ஆனால் படித்த வேகத்திலேயே மறந்தும் போய்விட்டேன். இன்று இங்கு படித்து மகிழ்ந்தேன். அடுத்த வருடத்திற்குள் மீண்டும் மறந்து போய்விடும். நீங்கள் மீண்டும் எழுதுவீர்கள் அல்லவா? அப்போது படித்து மகிழ்ந்து கொள்கிறேன்.

    திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  17. //வெட்டிப்பயல் said...
    இப்பவெல்லாம் திருப்பதிக்கு போகனுங்கற ஆசையைவிட தில்லை நடராஜனை சேவிச்சா போதும்னு தோண ஆரம்பிச்சிடுச்சி//

    ஆகா...எல்லாம் அழகு படுத்தும் பாடா, பாலாஜி? :-)
    நடராஜரை நாலு முறை பார்த்த பின்னர்...இங்க என்னடா இன்னும் பண்ணிக்கிட்டு இருக்க? திருமலைக்குப் போகலியா-ன்னு கேட்டுடுவார் பாருங்க! :-)

    //நடராஜர் கொள்ளை அழுகு. ஆனா யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியல. எல்லாரும் முருகனையும், கண்ணனையும் தான் அழகுனு சொல்றாங்க.//

    ஹிஹி

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ் வாயில் குமிழ் சிரிப்பும்
    பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்
    இனித்த முடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
    மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம் மாநிலத்தே!

    ன்னு சொல்லி இருக்காங்களே தளபதி படத்துல! :-)

    ஒவ்வொரு பெருமானுக்கும் ஒவ்வொன்று அழகு!
    அரங்கனுக்குக் கண்ணழகு! நடையழகு!
    ஆடல்வல்லானுக்கு அந்தக் குமிழ் சிரிப்பும் கூரிய நாசியும் அழகு!

    அலங்காரம் இல்லாமல் நடராசனைச் சேவிக்கும் போது, ஒரு உயிருள்ள மனிதனைக் காண்பது போல், கூரிய மூக்கை, குமிழ் சிரிப்பைக் கண்டு கொண்டே இருக்கலாம்! அப்படி ஒரு வடிவு!

    ReplyDelete
  18. இந்தியாவில் இருந்த வரை வருடம் தவறாமல் களி தின்றிருக்கிறேன், சேந்தன் கதையும் அறிந்திருக்கிறேன், ஆனால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு இன்றுதான் அறிந்தேன்.

    // கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான் //

    திருவாதிரை நாள் மட்டும் மார்க்கெட்டில் / தள்ளுவண்டியில் எல்லா காய்கறிகளிலும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ஒரு சிறு துண்டு என்று கலந்து பேக்கேஜாக விற்பார்கள். அதற்கென்றே ஒரு பெயர் கூட உண்டு. மறந்து விட்டது.

    நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  19. சுட்டி வேலை செய்யவில்லை.

    என் வீட்டுக் களி:திருவாதிரை

    http://oagaisblog.blogspot.com/2007/12/blog-post_23.html

    ReplyDelete
  20. // கோவி.கண்ணன் said...
    திருவாதிரைக்கு ஏன் களி கிண்டுகிறார்கள் என்று தெரியலை.... "இப்போதுதான் அறிந்து கொண்டேன்"
    என்பது விடுபட்டுவிட்டது.//

    கோவி கண்ணன் - தீராத விளையாட்டுப் பிள்ளை! :-)

    களியைக் கொஞ்சம் கொஞ்சமாத் தான் கிண்டனும் கோவி அண்ணா!
    அதான் முதலில் விடுபட்டு,
    இப்போ வெளிப்பட்டுறீச்சு!

    மொதல்லயே வெளிப்பட்டிருக்கணும்! ஆனா சிதம்பர அநியாயங்கள் பத்திச் சொல்ல வந்ததால், அப்போ விடுபட்டுப் போச்சுது!

    சரி தானே? நானும் நல்லாவே கிண்டறேனா? :-)

    ReplyDelete
  21. @அறிவன்
    நன்றி

    //தி. ரா. ச.(T.R.C.) said...
    ஒரு பார்வை பார்க்க...
    சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!
    அது... அது.... அங்கேதான் ரவி நிக்கறார்//

    ஹிஹி. உக்காந்துகிட்டு தான் எழுதினேன் திராச ஐயா! :-)

    //என்ன ஒத்துமை ரவி இதே கருத்தில் இதே நாளில் என்பதிவும் வரநேர்தது//

    ஓ..பார்த்தேனே! அருமையான நந்தனார் பாட்டைப் போட்டிருக்கீங்களே!

    ReplyDelete
  22. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    நேர்த்தியான உரையாடலாக, முழுநீளக் கதையாக//

    கதை சொல்லத் தான் பிடிக்குது ஜீவா! நஒக ஆன்மீகத்தில் சொல்லலாமா? :-)

    //Dreamzz said...
    Wow! super :)
    Dreamzz said...
    interesting read.. informational post :)//

    தினேசு...என்ன ரெட்டை ரெட்டையா ஆடுறீங்க? :-)

    ReplyDelete
  23. //அபி அப்பா said...
    அழுதுவிட்டேன்ப்பா! அழுதுவிட்டேன்!//

    ஆகா
    ஏங்க அபிஅப்பா?
    அபிஅப்பாவை அழ வைத்த பதிவர் கே.ஆர்.எஸ்-னு ஒருத்தரு பதிவு போடப் போறாராம்! :-)

    //எனக்கு மிகவும் பிடித்த பதிவு இந்த வருஷததில் இது தான்!!! என் அப்பன் நடராஜன் பத்தின பதிவில்லையா அதான்!!!//

    குட்டி நட்ராஜைச் சொல்லறீங்களா? நட்ராஜ்கள் அவர்கள் நடனமும் எப்பமே அழகு தான்!
    மாயவரத்தில் இருந்து அடிக்கடி சிதம்பரம் போவீங்களோ?

    ReplyDelete
  24. //heena (சீனா) said...
    கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண்டியுடன் அருமையான பயனுள்ள பதிவு//

    அச்சோ, நான் என்ன நையாண்டி பண்ணேன் சீனா சார்?
    அந்த நடனாண்டி பத்தித் தானே சொன்னேன்? :-)

    ReplyDelete
  25. //heena (சீனா) said...
    கேயாரெஸ்ஸின் வழக்கமான நையாண்டியுடன் அருமையான பயனுள்ள பதிவு//

    அச்சோ, நான் என்ன நையாண்டி பண்ணேன் சீனா சார்?
    அந்த நடனாண்டி பத்தித் தானே சொன்னேன்? :-)

    ReplyDelete
  26. //ஓகை said...
    என் வீட்டுக் களி:திருவாதிரை//

    சுட்டி வேலை செய்யாவிட்டாலும் பாத்தாச்சே!
    ஓகை ஐயா, களி புழுங்கல் அரிசில பண்ணறது தான் வழக்கமாம்! விசாரிச்சிட்டேன்!

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    சேந்தனாரின் கதையை முன்பு எஸ்.கே. பதிவில் படித்ததாக நினைவு//

    ஆமாம் குமரன். ஷைலஜா கேட்க, SK வேகமாச் சொன்னாரு! திருப்பல்லாண்டு பத்து பாட்டும் கொடுத்தாரு!

    //ஆனால் படித்த வேகத்திலேயே மறந்தும் போய்விட்டேன்.//

    சேந்தன் -னு பேர் இருக்கும் போது எப்படி மறக்கலாம்? :-)

    //அடுத்த வருடத்திற்குள் மீண்டும் மறந்து போய்விடும்//

    மறக்காது. ஏன்னா அடுத்த ஆண்டு எழுதப் போவது நீங்க தானே? :-)
    பட்டினத்தார் கதையின் ஒரு பகுதியிலும், சேந்தன் கதை வரும் குமரன்!

    சேந்தன் அறுபத்து மூவருள் ஒருவரும் கூட!
    திருச்சிற்றம்பலம்.

    ReplyDelete
  28. //முகமூடி said...
    இந்தியாவில் இருந்த வரை வருடம் தவறாமல் களி தின்றிருக்கிறேன், சேந்தன் கதையும் அறிந்திருக்கிறேன், ஆனால் இரண்டுக்கும் உள்ள தொடர்பு இன்றுதான் அறிந்தேன்//

    வாங்க முகமூடி!
    களியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாச் செய்தாலும்...கிராமத்தில் செய்யும் களி போல் வருமா?
    அதன் சுவையே தனி!

    சேந்தன் கதையை அறிந்திருந்தா, கட்டாயம் களி பற்றி வந்திருக்குமே! சரி, இப்ப தெரிஞ்சிக்கிட்டதும் மகிழ்ச்சியே!

    // கெடைச்ச காய் எதுவோ, அத ஒன்னாக் கொட்டி கொழம்பு. அம்புட்டு தான் //

    //திருவாதிரை நாள் மட்டும் மார்க்கெட்டில் / தள்ளுவண்டியில் எல்லா காய்கறிகளிலும் ஒன்று அல்லது இரண்டு அல்லது ஒரு சிறு துண்டு என்று கலந்து பேக்கேஜாக விற்பார்கள்//

    அட ஆமாம்!
    சென்னையில் இன்னிக்கும் இப்படி விக்கறாங்க-ன்னு தான் நினைக்கிறேன்! திருவாதிரை ஏழு கறி-ன்னு சொல்லுவாங்களோ? ஆனா அதுக்காக ஏழு விதமான காய் இருக்கா-ன்னு எண்ணி எல்லாம் பாக்கக் கூடாது! விக்கற பாட்டி வையும்! :-)

    ReplyDelete
  29. கண்ணபிரான்,

    உங்களை பாராட்டி எனக்கு அலுத்து விட்டது :) கதையை விட, அதை சொன்ன நடை தான் எனக்குப் பிடித்தது ! நடராஜரின் படமும் அருமை ! வாழ்த்துக்கள்.

    ஒரு விஷயம், களி இது வரை தின்றதில்லை :)

    எ.அ.பாலா

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP