Saturday, May 17, 2008

பக்தர்களில் சிறந்தவன் தேவனா? அசுரனா??

உங்க பிறந்தநாள் அரை மணி நேரத்திலேயே முடிஞ்சி போனா உங்களுக்கு எப்படி இருக்கும்?
ச்சே அவன் பரிசு கொடுக்கறதாச் சொன்ன அந்த ஐபாடும் வரல, PIT போட்டிப் ட்ரைபாடும் வரல! அதுக்குள்ள பிறந்த நாள் முடிந்து விட்டால் எப்படி?-ன்னு மனசு கிடந்து அலை பாயாதா?

உலகத்திலேயே மிகவும் குறுகிய நேரப் பிறந்தநாள் கொண்டாடியது யாரு? சொல்லுங்க பார்ப்போம்! இருங்க...கேள்வியைச் சற்றே மாற்றிப் போடுகிறேன்!
அவதாரங்களிலேயே மிகக் குறுகிய காலமே நடைபெற்ற அவதாரம் எது?


இறைவன்: குழந்தையே! உன் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், உன் எல்லையில்லா அன்புக்கும் மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்?

குழந்தை: இறைவா...உன் மீது அன்பாக இருப்பது என்னுடைய சுபாவம் தானே! இதுக்குப் போய் நான் என்னவென்று பதிலுக்குக் கேட்பேன்?

இறைவன்: பரவாயில்லை! மனத்தில் தோன்றுவதைக் கேள்! இல்லையென்றால் உனக்கு உடனே புனித வேடம் கட்டி விடுவார்கள்! உறவு என்றால் அதில் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நடைமுறை!
அவர்களால் முடியாததை இன்னொருவர் செய்தால், உடனே அதற்குப் புனித வார்த்தை கொடுத்து, பீடத்தில் ஏற்றி ஒதுக்குவது தான் மானிட சூட்சுமம்! :-)

குழந்தை: அப்படி என்றால் தங்களைக் கணப்பொழுதும் மறக்கக் கூடாது; காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதும் வரத்தை எனக்குத் தாருங்கள் சுவாமி!

இறைவன்: இதெல்லாம் ஒரு வரமா? நானே உன்னை மறந்தாலும், உன்னால் என்னை மறக்க முடியாதே!
ஏன்னா உன் குணம் அப்படி! வேறு ஏதாவது கேள்! என் திருப்திக்காக ஏதாவது கேள்!

குழந்தை: அப்படி என்றால் செய்யும் பக்திக்குப் பிரதிபலனாக வரம் கேட்கலாம் என்ற வியாபர எண்ணமே தோன்றக் கூடாது!
வரம் கேட்காமல் இருக்கும் வரத்தை அடியேனுக்கு அருளுங்கள்!

இறைவன்: அட, இப்படி ஒரு அப்பாவியா இருக்கியேப்பா!
வரம் கொடுத்துத் தான் இது போன்ற எண்ணமெல்லாம் உனக்குச் சித்திக்க வேண்டும் என்பதில்லை!
ஏதாவது கேள், ஏதாவது கேள் என்று, என்னையே கெஞ்ச வைக்கிறாய் பார்த்தாயா? கேள், என் திருப்திக்காக ஏதாவது கேள்!


குழந்தை: சரி...என் தந்தை பொன்வண்ணர் (ஹிரண்ய கசிபு) நற்கதி அடைய வேண்டும்! அவருடைய ஆணவம் தான் அவருக்கு பெரிய பகையாய் போய்விட்டது. ஆணவம்-கன்மம்-மாயை அல்லவா?
ஆணவம் தொலைந்தால் தானே, தான் நம்புவது மட்டுமே சரியானது என்கிற விடாப்பிடி எண்ணம் தொலையும்? பிறர் என்ன தான் சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் எண்ணம் வளரும்!

ஆணவத் திரை அகன்றால் தேடல் என்னும் வெளிச்சம் வரும்!
தேடினால் தானே மாயை அகலும்!
இப்படிச் செய்யாமல் ஆணவத்தினால் அழிவு தேடிக் கொண்டார் என் தந்தை! அவர் உஜ்ஜீவிக்க நீங்கள் தான் அருள வேண்டும்!

இறைவன்: உஜ்ஜீவனமா? உன் தந்தையின் ஜீவனை மறுபடியும் கொடுக்கச் சொல்கிறாயா?
விதி முடிந்த ஒருவன் உயிரைக் கேட்டு என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தலாமா நீ?

குழந்தை: அச்சோ! மன்னியுங்கள் சுவாமி! உடலைக் காப்பது ஜீவனம்! ஆன்மாவைக் காப்பது உஜ்ஜீவனம்!
அடியேன் கேட்டது உஜ்ஜீவனம் அல்லவா! தங்களுக்குத் தெரியாததா? சிறுபிள்ளையிடம் தங்கள் விளையாட்டா? அவருக்கு உங்கள் திருவடியைக் காட்டி நற்கதி அருளுங்கள்!

இறைவன்: ஆகா...ஒருவன் என்னிடம் சரணாகதி செய்தால் அவனின் முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஈடேறும்! இது நானே கொடுத்த வாக்கல்லவா?
இதை நீ வரம் என்று ஏன் தனியாகக் கேட்கிறாய் குழந்தாய்? உன் சரணாகதிக்கு அது தானாகவே நடந்து விடுமே!
மேலும் உன் தகப்பன் = என் ஜய விஜயன்! அவன் இந்நேரம் வைகுந்த வாசலில் மீண்டும் பணிக்குப் போய் நின்றிருப்பான்!

அட என்னடா இது! இவன், எதுவும் கேட்கக் கூடத் தெரியாதவனாக இருக்கிறானே? என்னையே திகைப்பில் ஆழ்த்தும் இவனை என்ன செய்து அடக்கலாம்?
எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றல்லவா ஆகி விட்டது!
"இழந்த" என்பது எப்படி ஒருவனுக்கு நலமாகும்? வரவு அல்லவோ நலம்?
இழப்பை நலமாகக் கருதும் அறியாச் சிறுவனோ இவன்?

இவனுக்கு என்ன வரம் கொடுத்து விட்டு மறையலாம்? இன்னும் சில நாழிகை தான்! அதற்குள் மிகக் குறுகிய கால அவதாரம் பூர்த்தி ஆக வேண்டுமே! (இறைவனே கவலையுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்)

இவனுக்கு என்ன தரலாம்?
* பூமண்டல அதிபதி? - வேண்டாம்!
* சொல்லாய், சுர பூபதி? தேவர்கள் தலைவன்? - வேண்டவே வேண்டாம்!
* அசுரர் தலைவன்? - இப்போது தந்தைக்குப் பின் அதான் அவனே ஆகி விட்டானே!
* சரி, பிரம்ம பதவி? - அதுவும் இவன் பக்திக்கு முன் நிற்காதே?

சரி...
* வைகுண்டபதி? = அது கூட இவனுக்குச் சமானம் ஆகுமா தெரியலையே?
இவன் நம் பேரில் காட்டும் அன்பில் ஒரு பாதியாவது, நாம் பக்தர்கள் பேரில் காட்ட முடியுமா? திருமகள் கூடப் பொதுவாகக் கருணை உள்ளவள்! ஆனால் அவளும் பல வேளைகளில் சினந்துள்ளாளே!

ஆனால் இவனோ கருணையைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருக்கிறானே! கொல்ல வரும் சூலத்தைக் கூட நாராயண உருவமாகக் கண்டதால், அதுவும் இவனுக்கு அப்படியே அல்லவா ஆகிப் போனது! இவனுக்கு என்ன தான் தர முடியும்?

ஆங்...அதுவே சரி!
சாம்ராஜயத்தின் சக்ரவர்த்தி ஆக்கி விடுவோம்! - பக்த சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி!
அதுவே இவனுக்கு உரிய பட்டாபிஷேகம்! அதுவே இவனுக்கு உரிய வரம்!
பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி - அடியார்க்கு அரசன்! அடியார்க்கு நல்லான்!
இதையே கொடுத்து விடுவோம்!




இறைவி: பெருமாளே! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் என்று எதையும் ஆராய்ந்து தானே நீங்கள் அருளுவீர்கள்?
உங்கள் புதல்வன் பிரம்மனைப் போலவோ, மைத்துனர் சிவனாரைப் போலவோ வரங்களை உடனே உடனே தூக்கிக் கொடுத்துவிட மாட்டீர்களே!

வரத்தால் அவனுக்கு நன்மையா? அவன் எதிர்காலத்துக்கு நன்மையா? அவன் சமூகத்துக்கு நன்மையா? என்றெல்லாம் ஆராய்ந்து அருளும் நீங்களா இவனுக்கு இவ்வளவு பெரிய பட்டத்தைத் தூக்கிக் கொடுப்பது?

இறைவன்: ஆகா, கருணைக் கடலான அலர்மேல் மங்கையா இப்படிச் சொல்வது? வயிற்று வலி உள்ள குழந்தை பலாப் பழத்துக்கு அழுதால் அப்போது ஆராய்ந்து அருளலாம்! ஆனால் இவன் வலி உள்ள குழந்தை அல்ல, திருமகளே!

இறைவி: அதில்லை சுவாமி! இவனுக்கு இப்படிக் கொடுத்து விட்டால் நம் மற்ற பக்தர்களின் கதி எல்லாம் என்னாவது? அவர்கள் எல்லாரும் முனிவர்கள், தேவர்கள், மானிடர்கள் - ஓரளவு நல்லவர்கள்! என்ன இருந்தாலும் இவன் ஒரு அசுரன் ஆயிற்றே!

இறைவன்: ஹிஹி. அசுரன் என்பதாலா உனக்கு இந்தத் தயக்கம் தேவி? தேவர்களிடமோ முனிவர்களிடமோ இல்லாத அசுரத்தனமா? ஹா ஹா ஹா! வேண்டுமென்றே தானே இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? இவர் வாயால் அசுரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று ஆவலா?

இறைவனைக் காலால் எட்டி உதைக்கவில்லையா ஒரு முனிவன்? நீ கூட அதற்குக் கோபித்துக் கொண்டாயே!
தன்னலத்துக்காக பழி பாவங்கள் செய்யாதவர்களா என்ன தேவர்கள்? நீயே தேவர்களைப் பலமுறை தண்டித்துள்ளாயே!

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

- இது தான் சூட்சுமம்! குணமோ, குற்றமோ, எது மிகையோ - அதை நாடி அருள வேண்டும்!

கண்ணாடி முன் நின்று பார்த்துள்ளாய் அல்லவா?
அது நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே தான் காட்டும்!
உடுத்திக் கொண்டிருந்தால், உடுத்தியதாகத் தெரிவார்கள்!
அலங்கோலப் பட்டிருந்தால், அலங்கோலமாகத் தான் தெரிவார்கள்!
இறைவனும் அந்தக் கண்ணாடி போலத் தானே!


* குழந்தையாய்ப் பார்த்தால் குழந்தை! = தேவகி, யசோதை, பெரியாழ்வார், சபரி போன்றவர்களுக்கு!
* காதலனாய்ப் பார்த்தால் காதலன்! = மீரா, ஆண்டாள், கோபியருக்கு!
* தலைவனாய்ப் பார்த்தால் தலைவன்! = விபீஷணன், விதுரன், அக்ரூரன், அப்பர் போன்றவர்களுக்கு!
* நண்பனாய் பார்த்தால் நண்பன்! = குசேலன், அர்ச்சுனன், சுந்தரர் போன்றவர்களுக்கு!
* எதிரியாய்ப் பார்த்தால் எதிரி! = இராவணன், துரியோதனன், சூரபத்மன் போன்றவர்களுக்கு!
* நண்பன் தான்; ஆனால் அவனுடன் உரிமையாகச் சண்டை போட வேண்டும் என்று பார்த்தால் சண்டையிடும் நண்பர்கள்! = விருஷபாசுரன், குபேரன் போன்றவர்களுக்கு

இதில் அசுரன் தேவன் மனிதன் விலங்கு என்ற பாகுபாடே இல்லை! எனக்கு என்று தனியாக ஒரு குணம் கிடையாது!
யார் யார் எப்படி எப்படிப் பார்க்கிறார்களோ அப்படி அப்படிப் பெற்றுக் கொள்கிறார்கள்!
இவன் அசுரனாகத் தான் இருக்கட்டுமே! ஆனால் ஆத்மார்த்தமான பக்தியில் இவனுக்குப் பின்னே தான் எல்லாரும்!

பிரகலாத நாரத பராசர புண்டரீக
வயாச அம்பரீச சுக சௌனக பீஷ்மதால்பியான்
ருக்மாங்கத அர்சுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யானிமான் பரம பாகவதாம் ஸ்மராமி


என்று சுலோகங்களில் கூட அனைவருக்கும் முன்னால்,
ஏன் வியாசர், சுகப் பிரம்ம மகரிஷிக்கும் முன்னால்
இந்தப் பிரகலாதன் என்னும் அசுரனே இனி முன் நிற்பான்!
இப்போது என்ன சொல்கிறாய் மகாலக்ஷ்மீ?

இதோ பட்டாபிஷேகம்!
பிரகலாதனே பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி!
அடியார்க்கு நல்லான்!
அருளினோம்! அருளினோம்! அருளினோம்!

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் சிலீர் என்று மறைந்தது! அன்று முதல் எந்த ஒரு வழிபாட்டிலும், அடியார்களை முன்னிறுத்திச் செய்யும் பூசைகளில் எல்லாம்....
பிரகலாதன் என்னும் அசுரனே முதலில் முன்னிறுத்தப்படுகிறான்!


நான் சிவ பக்தன், பெருமாள் பக்தன், முருக பக்தன், அம்பிகை பக்தன், புத்த பக்தன், இயேசு பக்தன் என்று நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! பதிவு எழுதி ஆடலாம்! ஆனால்...

ஆனால் "இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே?
நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)

அப்படி, "இவன் என் பக்தன், இவன் என் பக்தன்" என்று இறைவனே தன் வாயால் சொல்லிச் சொல்லிச் சொந்தம் கொண்டாடியது இரண்டு பேரை மட்டுமே!

அந்த இருவரில்...
ஒருவர் கூட முனிவர் இல்லை, தேவர் இல்லை, மனிதர் இல்லை!

* ஒருவன் அசுரன்!
* இன்னொருவன் விலங்கு!


பிரகலாதன் திருவடிகளே சரணம்!
அனுமன் திருவடிகளே சரணம்!

முடிந்தால் யோசித்து, மனத்தளவில் இந்த அசுரன் ஆகப் பார்ப்போம்! இல்லை இந்த விலங்காகப் பார்ப்போம்! :-)
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
(நரசிம்ம ஜெயந்தி வரும் ஞாயிறு 18th May 2008. அதற்காக இட்ட சிறு பதிவு)

47 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ILA said...
    //இல்லை விலங்காவோம்! //
    உள்ளுக்குள்ள அப்படித்தானே இருக்கோம். அப்போ ஆண்டவன் என்னையும் பக்தன் என்று ஆண்டவன் சொல்வாரா?//

    கேட்டுத் தான் பாருங்க இளா :-)

    வெறும் விலங்காவச் சொல்லலை! "அந்த" அசுரன், "அந்த" விலங்கு ஆவச் சொன்னது! :-)

    //உள்ளுக்குள்ள இருக்கிற விலங்கு தூங்கிக்கிட்டு இருக்கு, தெரியுமா?(நன்றி:: தேவர் மகன்)//

    ஓ அப்படியா! எழுந்திரிச்சா என்ன பண்ணும்? பல் விளக்குமா? :-))

    ReplyDelete
  3. //இல்லை விலங்காவோம்! //
    உள்ளுக்குள்ள அப்படித்தானே இருக்கோம். அப்போ ஆண்டவன் என்னையும் பக்தன் என்று ஆண்டவன் சொல்வாரா? உள்ளுக்குள்ள இருக்கிற விலங்கு தூங்கிட்டு இருக்கு, தெரியுமா?(நன்றி:: தேவர் மகன்)

    ReplyDelete
  4. நம்ம கோயிலில் திங்கக்கிழமைதான் நரசிம்ம ஜெயந்தி. மாலை வழிபாட்டுக்குப் போகணும்.

    பசங்க 'நாடகம்' போடுறாங்க.


    இன்னிக்குக் காலையில் மனக்கண் திறந்ததும் தசாவதாரம் பற்றிய எண்ணங்கள்.

    எண்ணிஎண்ணிப்பார்த்தாலும் ஒம்போதுதான் வருது.

    எதுடா கவனத்துக்கே வரலைன்னு இங்கே வந்து பார்த்தால் அது......

    இன்னும் சந்தேகக் கேஸ்தான் என்வரையில்!

    பலராமனா இல்லை புத்தனா?

    எதுக்கு 'மோகினி அவதாரத்தை' இதுலே சேர்க்கலையாம்?

    ReplyDelete
  5. அருமையான பதிவுன்னு சொல்லவும் வேண்டுமோ?

    //எல்லாம் அற என்னை இழந்த நலம் //

    இந்த நலம்தான் வேண்டும்.

    //ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
    பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
    நாடி நாடி நரசிங்கா என்று
    வாடி வாடும் இவ் வாள் நுதலே!//

    ஆஹா. படிக்கையிலேயே கண்ணீர் மல்குவது உண்மைதான்.

    படங்களெல்லாமும் வெகு கச்சிதம். நன்றிகள், ரவி!

    ReplyDelete
  6. அருமையான பதிவு, படங்கள்...

    எங்களுக்கு குலதெய்வம் திருப்பதி பாலாஜி ஆனாலும், அவருக்கே குலதெய்வமான நரசிம்மரிடம் உள்ள அபிமானம், அதை வார்த்தைகளில் விவரிக்கத் தெரியவில்லை.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள யோக நரசிம்மராகட்டும், சோளிங்கர் நரசிம்மராகட்டும் - பார்த்த அந்த வாரம் முழுவதும் அந்த அதிர்வு இருக்கிறதே, அது சூப்பர்...ஆனா அவங்க ரெண்டு பேரையும் கடைசியா பாத்து நான்கு ஆண்டுகளாகிறது..

    உங்க பதிவு மூலமாக இங்கே 'கொசுவர்த்தி' கொழுந்து விட்டு எரிகிறது...

    ReplyDelete
  7. ஆமாம் கே.ஆர்.எஸ், பக்திக்கு ப்ரஹலாதன் தான். பஜனை பத்ததிகளிலும் இவர் முன்னிருத்தக் காரணம் இதுவே...

    //ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
    பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
    நாடி நாடி நரசிங்கா என்று//

    சூப்பர்...யார் சொன்னது இது?
    எவ்வளவு ரிதமிக்கா இருக்கு...

    படங்கள் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  8. //உறவு என்றால் அதில் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்கள் நடைமுறை!
    அவர்களால் முடியாததை இன்னொருவர் செய்தால், உடனே அதற்குப் புதிய வார்த்தை புனித வார்த்தை கொடுத்து, பீடத்தில் ஏற்றி ஒதுக்குவது தான் மானிட சூட்சுமம்! :-)//

    நிதர்சன உண்மை.

    //குழந்தை: சரி...என் தந்தை பொன்வண்ணர் நற்கதி அடைய வேண்டும்! //

    நரசிம்மர் சந்நிதிகளில் நாம் அவரோடு இரண்ய்னையும் சேர்த்துவணங்கும் போது எனக்குத்தோன்றும் இந்த அசுரனுக்குத்தான் எத்தனை பேறும் பெருமையும் என்று! உன் தந்தைக்கு இதைவிட நற்கதி கிடைக்கவும் வேண்டுமோ குழந்தாய்பிரஹலாதனே?

    //என்ன இவன், எதுவும் கேட்கக் கூடத் தெரியாதவனாக இருக்கிறானே? என்னையே திகைப்பில் ஆழ்த்தும் இவனை என்ன செய்து அடக்கலாம்? எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றல்லவா ஆகி விட்டது!
    "இழந்த" என்பது எப்படி ஒருவனுக்கு நலமாகும்? வரவு அல்லவோ நலம்? இழப்பை நலமாகக் கருதும் அறியாச் சிறுவனோ இவன்//

    கருவிலே திருவானவன் அல்லவா அதுதான் இப்படி ஒரு அறிவுபூர்வமான கேள்விகேட்டு அண்ணலைதிகைக்க வைத்துவிட்டான்!

    //நாடி குற்றமும் நாடி அவற்றுள்
    மிகை நாடி மிக்க கொளல்
    - இது தான் சூட்சுமம்! குணமோ, குற்றமோ, எது மிகையோ - அதை நாடி அருள வேண்டும்!//

    அருமை!

    //அப்படி, "இவன் என் பக்தன், இவன் என் பக்தன்" என்று இறைவனே தன் வாயால் சொல்லிச் சொல்லிச் சொந்தம் கொண்டாடியது இருவரை மட்டுமே!
    அந்த இருவரில்...
    ஒருவர் கூட முனிவர் இல்லை, தேவர் இல்லை, மனிதர் இல்லை!//

    ரவி இங்க் ஒரு சின்ன சந்தேகம்....ப்ரஹலாதன் அசுர
    குலத்தில் பிறந்ததால் அசுரனாய் அழைக்கபடுகிறானா? குலத்தால் வரும் பெயர்தான் நிரந்தரமோ? சதா ஓம்நமோநாராயணாய என்று கூறியவன் எப்படி அசுரன் ஆவான்? அண்ணலின் பெயரை உச்சரிக்கும்போதே அவன் தேவன் ஆகிவிடமாட்டானா?

    ****ஆக இன்று நரசிம்ம ஜெயந்தி திருநாளுக்கு ரவி அளித்த இந்தப்பதிவு மனதிற்கு நிறைவு. ஏனெனில் அவதாரங்களில் மிகவும் பெருமைக்குரியது நரசிம்ம அவதாரம் ஒரு குழந்தைக்காக தூணிலும் துரும்பிலும் தன்னை இருத்திக்கொண்டு அவனைக்காத்த கதை இது.' இல்லையென்று நீ சொன்ன சொல்லிலும் உளன் 'என்றான் தந்தையிடம் அன்று பிரகலாதன். ஆம் இந்தப்பதிவிலும் உள்ளான் இறைவன்.

    கம்ப காமகரி கோள்விடுத்தானே
    காரணா! கடலைக்கடைந்தேனே
    எம்பிரான்! என்னையாளுடைத்தானே
    ஏழையேனிடரைக் களைவாயே!

    மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக
    திருவரங்கப்ரியா

    ReplyDelete
  9. //அவர்களால் முடியாததை இன்னொருவர் செய்தால், உடனே அதற்குப் புதிய வார்த்தை புனித வார்த்தை கொடுத்து, பீடத்தில் ஏற்றி ஒதுக்குவது தான் மானிட சூட்சுமம்! :-)
    //

    //அட, இப்படி ஒரு புனித பிம்பமா இருக்கியேப்பா! //

    //ஆணவம் தொலைந்தால் தானே, தான் நம்புவது மட்டுமே சரியானது என்கிற விடாப்பிடி எண்ணம் தொலையும்//

    //"இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே!
    நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)//

    :-))))))

    ReplyDelete
  10. நாராயணா,
    இவருக்கு நல்ல சகவாசத்தை கொடுப்பா. எல்லா பதிவுலையும் இவர் புனித பிம்பத்தை கொண்டு வந்து அந்த பதிவையே நாசமாக்கிடறாரு :-((

    ReplyDelete
  11. கடவுள் பாதி மனிதர் பாதி கலந்து செய்த கலவை எனப்பாடுவது போய் அசுரன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் எனப் பாடக் கிடைக்குமோ?! :))

    ReplyDelete
  12. //துளசி கோபால் said...
    பசங்க 'நாடகம்' போடுறாங்க//

    சூப்பர்! அந்த நாடக இயக்குனர் நீங்களா டீச்சர்? :-)

    //எண்ணிஎண்ணிப்பார்த்தாலும் ஒம்போதுதான் வருது.
    எதுடா கவனத்துக்கே வரலைன்னு இங்கே வந்து பார்த்தால் அது......//

    ஹிஹி!
    நியூசிலாந்துல தூண் வச்ச வீடு இருந்தா ஞாபகம் வந்திருக்கும்! :-)

    //பலராமனா இல்லை புத்தனா?//
    பலராமன் தான் டீச்சர்!
    புத்தர் என்று சொல்வது பின்னால் வந்த வழக்கம் தான்!
    ஸ்ரீமத் பாகவதத்தில் அப்படி இல்லை!

    இலக்குவன் செய்த தொண்டுக்கு பெருமாளே நன்றிக் கடன் ஆற்றத் தான் பலராம அவதாரம்!
    போன பதிவில், பின்னூட்டத்தில் ஸ்ரீதர் நாராயணனுக்குப் பதில் சொல்லி இருக்கேன் பாருங்க!

    புத்த பகவான் வேத மார்க்கத்தில் உண்டான சாதித் தீமைகளை ஒழிக்க ஒரு anti hero போல வந்து வேத நெறியை மறுத்து அவதாரம் செய்தார் என்பது பின்னால் வந்த ஒரு கருத்து. இதுக்கு சாஸ்திரப் பிரமாணம் இல்லை! பாகவதத்திலும் இல்லை!

    //எதுக்கு 'மோகினி அவதாரத்தை' இதுலே சேர்க்கலையாம்?//

    ஆகா...டீச்சர்-ன்னு இப்படி அடிச்சி ஆடறீங்களே! கேள்வி மேல் கேள்வி கேட்டா இந்தப் பொடியன் என்ன செய்வேன்?
    குமரன், மெளலி அண்ணா, ஷைலு - உதவிக்கு வாங்க ப்ளீஸ்! :-)

    மோகினி, ஹயக்ரீவர், தத்தாத்ரேயர், கபிலர், தன்வந்திரி-ன்னு இன்னும் பல ரூபங்கள் இருக்கு (மொத்தம் 22) - ஆனால் பூர்ண அவதாரங்கள் மட்டுமே தசாவதாரத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன! மானுட குலத்துக்கு பெரிய அளவில் நன்மைகள் ஏற்படுத்திய அவதாரங்கள் மட்டுமே தசாவதார லிஸ்ட்டில் அமைவதாகவும் சொல்லுவார்கள்!

    மேல் விளக்கங்களை மேலே சொன்ன வல்லுனர்கள் வந்து தர வேண்டும்!

    ReplyDelete
  13. //ச்சின்னப் பையன் said...
    அருமையான பதிவு, படங்கள்...//

    வாங்க தல, நன்றி!

    //எங்களுக்கு குலதெய்வம் திருப்பதி பாலாஜி ஆனாலும், அவருக்கே குலதெய்வமான நரசிம்மரிடம்//

    உண்மை! ஸ்ரீநிவாசனின் திருக்கல்யாணத்தின் போது கல்யாண விருந்தின் முதல் நிவேதனம் இன்றும் நரசிம்மருக்கே அளிக்கப்படுகிறது!

    //அது சூப்பர்...ஆனா அவங்க ரெண்டு பேரையும் கடைசியா பாத்து நான்கு ஆண்டுகளாகிறது..//

    நான் இந்தியப் பயணத்தில் சென்ற ஆண்டு சோளிங்கரும்...
    இந்த ஆண்டு மயிலையில் கேசவப் பெருமாள் ஆலய அழகியசிங்கரையும் கண்டேன்!

    //உங்க பதிவு மூலமாக இங்கே 'கொசுவர்த்தி' கொழுந்து விட்டு எரிகிறது...//

    ஹிஹி! என்சாய் மாடி! :-)

    ReplyDelete
  14. //வெட்டிப்பயல் said...
    நாராயணா,
    இவருக்கு நல்ல சகவாசத்தை கொடுப்பா//

    நன்றி பாலாஜி! எனக்காக வேண்டிக்கிட்டதுக்கு!

    //எல்லா பதிவுலையும் இவர் புனித பிம்பத்தை கொண்டு வந்து அந்த பதிவையே நாசமாக்கிடறாரு :-((//

    எதுக்கு பாலாஜி என் மேல கோபம்!
    "புனித பிம்பம்" என்ற சொல்லைப் போட்டேன் என்றா?
    என்னைப் பொறுத்த வரை புனித பிம்பம்-னா "சரியான பழம்"-னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்! அதான் அப்படிச் சொன்னேன்!

    நீங்க தொலைபேசியில் சொல்லி வருத்தப்பட்ட பிறகு, //அட, இப்படி ஒரு அப்பாவியா இருக்கியேப்பா// என்று பதிவில் மாற்றி விட்டேன்!

    பரம பாகவதன், பிரகலாதாழ்வானின் கண்ணியத்துக்கு அடியேன் பதிவில் குறை ஏதும் வைத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்! :-(

    ReplyDelete
  15. //"இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே!
    நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)//
    :-))))))//

    எதற்கு இந்தச் சிரிப்பு பாலாஜி?
    எனக்கு ஏதோ குறிப்பால் உணர்த்தறீங்க போல :-)

    சரி, எதுவாயினும்...இந்த வசனங்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் வருபவை தான்! நாம் பக்தர்கள் என்று சொல்லிக்கறோம்! ஆனால் அவன் நம்மை பக்தர்கள் என்று சொல்லுவானா என்று கேள்வியை நாரதர் எழுப்புவார்!

    நாம் நம் மனசு சந்தோஷப்படுமாறு இறைவன் நமக்கு நன்மைகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு வகை பக்தி!

    ஆனால் எம்பெருமானின் திரு உள்ள உகப்பிற்கு மட்டும் நாம் இருப்போம்! என்று வேறு எதுவும் எண்ணாது, உனது ஆளாக என்றென்றும் பார்த்திருப்பேன் அடியேனே என்பது இன்னொரு வகை!

    இதை நாரதர் சொல்லும் போது தான், மேற்கண்ட எல்லா வசனங்களும் வரும்! பிரதம ஸ்கந்தம்-ன்னு பேரு அந்த பாகவத அத்தியாயத்துக்கு! அதைத் தான் சுருக்கமா நான் இங்கு கொடுத்திருந்தேன்! (புனித பிம்பம் என்ற சொல் மட்டுமே என் சொந்தச் சரக்கு! அதை இப்போது பதிவில் நீக்கி விட்டேன்!)

    பதிவின் சாராம்சம்:
    இறைவனுக்கு தேவாசுர பாகுபாடுகள் கிடையாது என்பது தான்! வேறு எந்த நோக்கமும் இல்லை!

    தொலைபேசும் போதும் மீத விளக்கமும் அளிக்கிறேன்! அது என் கடமையும் கூட! இப்போ போய் தூங்குங்க! :-)

    ReplyDelete
  16. //மதுரையம்பதி said...
    ஆமாம் கே.ஆர்.எஸ், பக்திக்கு ப்ரஹலாதன் தான். பஜனை பத்ததிகளிலும் இவர் முன்னிருத்தக் காரணம் இதுவே...//

    ஆமாம் அண்ணா!
    பாகவத சிரோன்மணி என்று தான் பஜனை சம்பிரதாயத்திலும் பிரகலாதனை முதலில் கொண்டாடுவார்கள்!

    //ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
    பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
    நாடி நாடி நரசிங்கா என்று//
    சூப்பர்...யார் சொன்னது இது?
    //

    நம்மாழ்வார்!
    நாளைய Birthday Boy! :-))

    //படங்கள் சூப்பரோ சூப்பர்//

    உங்க ஊரு தான்! :-)

    ReplyDelete
  17. //கவிநயா said...
    அருமையான பதிவுன்னு சொல்லவும் வேண்டுமோ?//

    நன்றி கவிநயா அக்கா!

    //எல்லாம் அற என்னை இழந்த நலம் //
    இந்த நலம்தான் வேண்டும்//

    அது அருணகிரிநாதார் அனுபூதி வாக்கு அக்கா!
    இது பாகவதத்தில் ஸ்வயம் முஹ்யதி - ஆத்ம சமர்ப்பணம் என்று வரும்! நான் அருணகிரியார் கிட்ட சில வசனங்களைக் கடன் வாங்கிக்கிட்டேன்!

    //ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
    பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி!//
    ஆஹா. படிக்கையிலேயே கண்ணீர் மல்குவது உண்மைதான்//

    நம்மாழ்வாரின் திருவாய்மொழி!
    திருவாசகம் போலவே உருக்கும்!

    ReplyDelete
  18. //ஷைலஜா said...
    நரசிம்மர் சந்நிதிகளில் நாம் அவரோடு இரண்ய்னையும் சேர்த்துவணங்கும் போது எனக்குத்தோன்றும் இந்த அசுரனுக்குத்தான் எத்தனை பேறும் பெருமையும் என்று! உன் தந்தைக்கு இதைவிட நற்கதி கிடைக்கவும் வேண்டுமோ குழந்தாய் பிரஹலாதனே?//

    சூப்பராச் சொன்னீங்க ஷைலஜா!
    இரண்ய சம்ஹாரத்தில் பகவான் இரண்யனை தன் மடியில் போட்டுக் கொள்வான்!

    பெருமாள் மடியில் அமர்ந்த தகுதி பூமிதேவிக்கு மட்டுமே உண்டு!
    அதில் அமர்ந்து ஞானோபதேசம் கேட்பாள் வராக அவதாரத்தில்!

    ஆனால் அடுத்த அவதாரத்தில் பெருமாள் மடியில் இரண்யகசிபு!

    //கருவிலே திருவானவன் அல்லவா அது தான் இப்படி ஒரு அறிவுப் பூர்வமான கேள்விகேட்டு அண்ணலை திகைக்க வைத்துவிட்டான்!//

    உண்மை! கன்னத்தில் கை வத்துக் கொண்டு உட்காரும் நரசிம்ம மூர்த்தி ஆலயம் எங்கோ உள்ளது! சட்டுன்னு நினைவுக்கு வரலை!

    ReplyDelete
  19. //ரவி இங்க ஒரு சின்ன சந்தேகம்....ப்ரஹலாதன் அசுர
    குலத்தில் பிறந்ததால் அசுரனாய் அழைக்கபடுகிறானா? குலத்தால் வரும் பெயர்தான் நிரந்தரமோ?//

    அப்படி இல்லை ஷைலஜா!
    அவன் அசுர குல அரசன்! அசுர குலப் பிரதிநிதியும் கூட! அவனை அசுரன் என்றே தான் கொள்ள வேண்டும்! அப்படிச் சொல்வதால் பிரகலாதனுக்கு இழுக்கு அல்ல!

    அசுரன் என்றாலே ஏதோ ஒரு கெட்ட வார்த்தை போல் ஆகி விட்டது!
    அதனால் அசுரன் என்ற சொல்லைப் பல பக்தர்கள் கூட விரும்பறதில்லை!

    ஆனா உண்மை அப்படி இல்லை!
    அசுரரும் ஒரு பிறப்பு! தேவரும் ஒரு பிறப்பு! அவ்ளோ தான்!

    //சதா ஓம்நமோநாராயணாய என்று கூறியவன் எப்படி அசுரன் ஆவான்? அண்ணலின் பெயரை உச்சரிக்கும்போதே அவன் தேவன் ஆகிவிடமாட்டானா?//

    தேவை இல்லியே!
    அண்ணலின் பெயரைத் தேவன் தான் உச்சரிக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே! அசுரனும் தாராளமாக உச்சரிக்கலாம்!
    அவன் எதற்கு தேவன் ஆக வேண்டும்? ஒன்று கெட்டதாய் இருந்தால் நல்லதற்கு மாறலாம்! அசுரன் என்றாலே கெட்டவன் என்று பொருள் ஆகி விடாது!

    நம்ம சினிமாக்கள் ஹீரோவை எதிர்க்கிறவன் வில்லன்-ன்னு காட்டுறது போல் அசுரன்-ன்னா கெட்டவன் என்ற false impression வந்து விட்டது! அங்கும் நல்லவர்கள் இருக்காங்க!

    ஜெர்மானியர்கள் ஹிட்லரின் நாடு என்பதால், அவர்கள் பெயரை மாற்றிக் கொள்ளத் தேவை இல்லை! ஜெர்மானியர்கள் ஜெர்மானியர்களே! ஹிட்லர் மோசமானவன் என்பதால் ஜெர்மானிய குலம் மோசமான குலம் என்று ஆகி விடாது! அது போலத் தான்!

    //****ஆக இன்று நரசிம்ம ஜெயந்தி திருநாளுக்கு ரவி அளித்த இந்தப்பதிவு மனதிற்கு நிறைவு//

    அன்பர்கள் மனம் நிறைந்தால் அதுவே அடியேனுக்குப் போதும்!
    உங்களைப் போல பலரும் ஆழ்ந்து வாசிப்பதால்...
    பல சங்கடங்களிலும், எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாகுது!

    //ஒரு குழந்தைக்காக தூணிலும் துரும்பிலும் தன்னை இருத்திக் கொண்டு//

    நாம் பிராணப் பிரதிஷ்டை-ன்னு எல்லாம் செய்யறோம்! அப்படிச் செஞ்சா இறைவன் வருவதாகவும் நம்பறோம்!

    ஆனாப் பாருங்க! தூணில் என்ன பிராணப் பிரதிஷ்டை செஞ்சான் அந்தச் சிறுவன்?
    பூரண விசுவாசம் என்பதை விட ஒரு உயர்ந்த பிரதிஷ்டையும் உண்டோ?


    //ஆம் இந்தப்பதிவிலும் உள்ளான் இறைவன்//

    அப்படியே எல்லாரிடத்திலும் நிறையட்டும்!
    ததாஸ்து! ஆமென்! அப்படியே ஆகட்டும்!

    //கம்ப காமகரி கோள்விடுத்தானே
    காரணா! கடலைக்கடைந்தேனே
    எம்பிரான்! என்னையாளுடைத்தானே
    ஏழையேனிடரைக் களைவாயே!//

    குமரன் பின்னூட்ட விதிப்படி செய்யுள் கொடுத்தா பொருள் சொல்லணுமாம் ஷைல்ஸ்! இல்லீனா குமரன் வந்து பதிவு ஓனரைத் தான் அடிப்பாராம்! :-))

    ReplyDelete
  20. நல்ல பதிவு தல ;)

    ReplyDelete
  21. ஹலோ ரவி,

    ஆஹா, ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. சரி இப்ப ஒரு சந்தேகம்.

    //"இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே!
    நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)//

    இந்தமாதிரி நிறைய்ய பக்தி விஷயங்களை மக்களுக்கு சொல்லி கடவுள் நாமத்தை சொல்லும் உங்களுக்கே இப்படி ஒரு சந்தேகம் வரலாமா? அப்ப எங்களின் கதி?

    ReplyDelete
  22. அசுரனாகப் பிறந்து தேவனாகிய பிரஹ்லாதந்தான் சந்தேகம் என்ன,வானுறையும் தெய்வத்துள் வல்க்கப்பட்டவன் அல்லவா

    ReplyDelete
  23. Ravi
    Nice post. Have been to 'Vola Lanka ' in Karnataka? A Narasimha temple where you feel good vibrations. I forget the name of the village, will let you know soon. Do visit in ur next India trip.
    Shobha

    ReplyDelete
  24. I think the village is Mulki
    Shobha

    ReplyDelete
  25. // You mean Mulabaghalu?//

    No Mulbaghal,if I am not mistaken is on the Chennai- Bengaluru road.
    Mulki is in South Karnataka & lies between Mangalore & Udupi. 18 miles north of Mangalore & south of Udupi.
    There are three idols viz: Venkatramana, Narasimha & Bindu Madhava. The temple is called Venkataramana Temple. The place is called Vola Lanka because according to legend, Hanuman is supposed to have started descending here mistaking the place for Lanka by the beauty of the place & when he found no asuras here decided this was not Lanka & called it Vola Lanka( false lanka).
    Shobha

    ReplyDelete
  26. Thanks Shobha for the details. Will check with my friends and visit in my next South Karnataka trip :-)

    ReplyDelete
  27. "அப்படி, "இவன் என் பக்தன், இவன் என் பக்தன்" என்று இறைவனே தன் வாயால் சொல்லிச் சொல்லி....."
    உண்மைதான் அதுதான் மேலான தகுதி. ஆமாம் குகனை விட்டுவிட்டீர்களே....

    ReplyDelete
  28. Arumaiyana pathivu.... Enjoyed reading... Pragalathana pathina nalla post narasimha jayanthi -ku... :-)

    ReplyDelete
  29. /Thanks Shobha for the details//

    Welcome Sir. If u go to South karnataka there are so many lesser known temples like Idakunji(Ganesa has both tusks here).
    Pajaka Kshetra-the avatara sthalam of Madhvacharya, among others. Can give u details when reqd. Really worth visiting.
    Shobha

    ReplyDelete
  30. // அவதாரங்களிலேயே மிகக் குறுகிய காலமே நடைபெற்ற அவதாரம் எது? //

    வாமன அவதாரம் இல்லையா??

    ஏன்னா நரசிம்மர் இரணியனைக் கொன்றபிறகு அந்த உக்கிரம் குறையாமல் ரொம்ப நாள் அலைந்து திரிந்து பின்னர் சிவபெருமான் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தபின்னர் தான் உக்கிரம் தணிந்து லட்சுமி நரசிம்மராகக் காட்சி தந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ஆனால் வாமன் அவதாரம் அப்படியில்லையே? உலகை அளந்ததுடன் அந்த அவதாரம் முடிந்துவிட்டதே!

    அதுபோக வாமனருக்கு எங்கும் கோவில் இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை. உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே கேயாரெஸ்! சொல்லுங்களேன்!

    :)

    ReplyDelete
  31. //பொன்வண்டு said...//
    வாங்க பொன்வண்டு!

    // அவதாரங்களிலேயே மிகக் குறுகிய காலமே நடைபெற்ற அவதாரம் எது? //
    வாமன அவதாரம் இல்லையா??//

    இல்லை!
    வாமனாவதாரம் காச்யபர்-அதிதிக்குத் தோன்றி, ஆடை மற்றும் இதர பொருட்கள் எல்லாம் தேவதைகளிடம் பெற்று, பின்னர் தான் மகாபலியிடம் சென்று, மூவடி அளந்த்து எல்லாம்!

    நரசிம்மம் என்னும் ஆளரி அவதாரத்தில் இது போன்ற அவதார ஆயத்தங்கள் எல்லாம் கிடையாது! மின்னல் போல் தோன்றி மறைந்த அவதாரம்.

    சரபேஸ்வரர் பெருமாளை அணைத்து உக்கிரத்தைக் குறைப்பதாகச் சொல்வது லிங்க புராணத்தில் மட்டுமே வரும்-னு நினைக்கிறேன்!

    அதுவும் பல நாள் உக்கிரம் எல்லாம் கிடையாது. அனைவரும் கிட்டே செல்ல அஞ்சிய போது, பிரகலாதன் மட்டும் தைரியமாகச் செல்வானே! உக்கிரம் கடுமையாக இருந்திருந்தால் குழந்தை தானே முதலில் பயப்பட்டு இருக்கும்?

    சிவபெருமானின் சரப மூர்த்தி தோற்றமும் கண நேரம் தான்! ஒரே அணைப்பில் எல்லாம் சரியாகி விடும்.
    தீவிர வைணவர்கள் சரபமூர்த்திக்குப் புராண ஆதாரம் மற்றும் பாகவதப் பிரமாணம் கிடையாது என்று வாதாடுவார்கள்.

    ஆனால் எது எப்படியோ, குறுகிய கால அவதாரம் நரசிம்ம அவதாரம் தான்!

    //அதுபோக வாமனருக்கு எங்கும் கோவில் இருப்பதாகக் கேள்விப்பட்டதில்லை//

    அப்படியா?

    //உங்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்குமே கேயாரெஸ்! சொல்லுங்களேன்! :-)//

    ஆகா, முடிவே கட்டீட்டீங்களா?
    எனக்குப் பெருசா ஒன்னும் தெரியாதுங்க! ஏதோ சீன் போட்டுக்கிட்டு இருக்கேன்! :-)

    குமரன், வெட்டி யாராச்சும் வந்து நம்ம பொன்வண்டுக்குச் சொல்லுங்கப்பா வாமனர் கோயில் எங்க இருக்குன்னு? வெட்டிக்கு நல்லாவே தெரியும்! சென்னையில் கூட வாமனர் கோயிலு இருக்கு போல!

    ReplyDelete
  32. //சென்னையில் கூட வாமனர் கோயிலு இருக்கு போல!//

    இது உங்களுக்கு தெரிஞ்ச சீனா, தெரியாத சீனா :)

    ReplyDelete
  33. //இலவசக்கொத்தனார் said...
    கடவுள் பாதி மனிதர் பாதி கலந்து செய்த கலவை எனப்பாடுவது போய் அசுரன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் எனப் பாடக் கிடைக்குமோ?! :))//

    கொத்ஸ் அண்ணாச்சி
    இப்போ உங்களுக்கு கமலைப் பதிவுக்குள்ளாற இழுக்கணும்! அதானே! :-)))

    @கோபி!
    நன்றி தல!

    @திராச
    //அசுரனாகப் பிறந்து தேவனாகிய பிரஹ்லாதந்தான்//

    பிரகலாதன் தேவன் ஆகவில்லை திராச! பக்தன் ஆனான்! அவ்வளவு தான்! எதுக்கு தேவன் ஆனான்-னு கன்வர்ட் பண்ணி இல்லாத சிறப்பைத் தேவனுக்குக் கொடுக்கணும்?

    Prahalaathan is just what he is.
    He was born asura.
    He attained fame as asura.
    He is divine as asura.
    He saw God, as asura!
    He didnt convert to Deva and then had the Lord's Darshan! He is just what he is!

    //வானுறையும் தெய்வத்துள் வல்க்கப்பட்டவன் அல்லவா//

    ஆமாம்! அசுரனும் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்! வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவன் அசுரனோ தேவனோ - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்!

    ReplyDelete
  34. @Ezhilanbu.
    நன்றி தல! பிரகலாதன் கதையை மட்டும் தான் நாம மேலோட்டமாப் படிச்சிருக்கோம்! ஆனா அதன் உண்மையான அர்த்தம் மிகவும் ஆழமானது!
    இரண்யகசிபு மட்டுமில்ல, அவன் தங்கச்சியும் சேர்ந்து அந்தச் சிறுவனை வாட்டி வதைப்பாங்க! (பிரகலாதனோட அத்தை :-)

    @கிருத்திகா
    நன்றி கிருத்திகா..
    குகனை விடவில்லை!
    குகனைத் தம்பி ஆக்கி விடுகிறான். பக்தனாகக் கொள்ளவில்லை! அதான் நானும் குறிப்பிடலை!

    ReplyDelete
  35. //Sumathi. said...
    இந்தமாதிரி நிறைய்ய பக்தி விஷயங்களை மக்களுக்கு சொல்லி கடவுள் நாமத்தை சொல்லும் உங்களுக்கே//

    ஆகா! வேணாம்-கா வேணாம்! அவ்வ்வ்வ் :-)
    அது என்ன "உங்களுக்கே"? நானும் உங்களைப் போலத் தான்!

    பதிவில் எழுதுவது ஒன்று! - உள்ளத்துப்
    பதிவில் எழுதுவது இன்னொன்று!
    அடியேன் அந்த அளவுக்கு எல்லாம் இல்லக்கா!:-)

    ReplyDelete
  36. @ஷோபா
    நன்றி ஷோபாக்கா! பல புதிய தகவல்களை அள்ளித் தந்திருக்கீங்க!
    What u said was right. It is MULKI only! Have heard about this place! Udipi-Mangalore NH 17-la, middle irukku-nu friend oruthan cholli irukkaan! He went for some dosha nivarthi coz they had navagrahams as plants in navagraha vanam or something they call.

    Googled for Mulki and got this.
    http://svtmulki.org/htmls/contact.html

    They have given phone number and good pictures too!
    Mouli anna, next time pogalaama? :-)

    ReplyDelete
  37. நன்றி ஷோபா-ஜி....

    நீங்க சொன்ன சில இடங்களை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். மத்வர் பிறந்த ஊர் சென்றிருக்கிறேன். பூர்வாஸ்ரமத்தில் அவர் சம்மந்தப்பட்ட சில இடங்கள் கோவில்களை தரிசிக்கும் பாக்யம் கிட்டியது.

    //Googled for Mulki and got this.
    http://svtmulki.org/htmls/contact.html

    They have given phone number and good pictures too!
    Mouli anna, next time pogalaama? :-)//

    போகலாமே....தேவரீர் அடுத்த முறை இந்தியா வரும் முன்னாடி நான் ஒரு தரம் போய் பார்த்துட்டு வர்ரேன்...அப்பத்தான் உங்களை கூட்டிச்செல்ல வசதியா இருக்கும்.

    ReplyDelete
  38. Hey I think I have that there is a temple for vamana in Kerala. May be I'm wrong...Will check it out...

    ReplyDelete
  39. andha athai kathaiyum oru pathiva podalam -la ??? nanga ellam therinjikkirom enna than nadanthirukku -nu ...

    ReplyDelete
  40. Vamana avatharam thane namma ulagalantha perumal -nu solrom.. apdina vamana avathrathukku oru koil kanchipuram-la irukke..
    ulagalatha perumal ( thiruooragam) sannidhi.


    http://www.divyadesamonline.com/hindu/temples/kanchipuram/tiruooragam-temple.asp

    ReplyDelete
  41. தலைப்பு நல்ல தலைப்பு இரவிசங்கர். இறைவனுக்கும் குழந்தைக்கும் நடக்கும் உரையாடலும் அருமை. பிரகலாத சக்கரவர்த்தியின் பெருமையை மிக மிக அருமையாகச் சொன்னீர்கள்.

    ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
    வ்யாஸ அம்பரீச சுக சௌனக பீஷ்மதால்பியான்
    ருக்மாங்கத அர்சுன வசிஷ்ட விபீஷணாதீன்
    புண்யானிமான் பரம பாகவதாம் ஸ்மராமி

    என்ற சுலோகத்தில் பரம பாகவதர்களைச் சொல்லிக் கொண்டே வரும் போது பிரகலாதனைத் தானே முதலில் சொன்னார்கள்.

    இடுகையில் இருக்கும் நரசிம்மரின் திருவுருவப்படங்களும் அருமை. பெங்களூரு ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் இருக்கும் அர்ச்சை என்று நினைக்கிறேன்.

    விருஷபாசுரன், குபேரன் சண்டை போட்ட கதைகள் தெரியவில்லையே இரவிசங்கர். எப்போது சொல்கிறீர்கள்?

    நீங்கள் கூறிய அசுரனாகவும் விலங்காகவும் ஆவது அவ்வளவு எளிதாக இல்லையே. பக்திக்கு இலக்கணங்களே அவர்கள் தானே.

    எனக்கும் நரசிம்மர் என்றாலே இந்த ஆடி ஆடி அகம் கரைந்து... திருவாய்மொழிப் பாசுரம் தான் நினைவிற்கு வரும்.

    ஷைலஜா அக்கா நல்ல கேள்வி கேட்டிருக்காங்க. அவங்க கேள்வியைப் பார்த்ததும் 'பண்டைக் குலத்தை தவிர்ந்து...' என்ற திருப்பல்லாண்டு பாசுர வரி நினைவிற்கு வந்தது.

    அசுரன் என்றால் குறையில்லை என்ற இரவிசங்கரின் விளக்கமும் நன்றாக இருந்தது.

    //குமரன் பின்னூட்ட விதிப்படி செய்யுள் கொடுத்தா பொருள் சொல்லணுமாம் ஷைல்ஸ்! இல்லீனா குமரன் வந்து பதிவு ஓனரைத் தான் அடிப்பாராம்! :-))
    //

    உண்மையோ உண்மை. :-)

    ReplyDelete
  42. //நான் சிவ பக்தன், பெருமாள் பக்தன், முருக பக்தன், அம்பிகை பக்தன், புத்த பக்தன், இயேசு பக்தன் என்று நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! பதிவு எழுதி ஆடலாம்!
    ஆனால்...

    "இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே!//

    ஹா ஹா ஹா ஹா, ஹா ஹா ஹா, நல்லா இருக்கே இது!

    ReplyDelete
  43. மெலட்டூர் பாகவத மேளாவில் நரசிம்ம ஜெயந்தி அன்று தான் பிரகலாதன் சரித்திரம் நடிக்கப் படும். நரசிம்மராய் வேஷம் போடுபவர் உக்கிரம் மூன்று நாள் ஆனாலும் தணியாது. நேரில் பார்த்திருக்கின்றோம். அருமையான நாட்டிய நாடகம். ஒவ்வொரு வருஷமும் வைகாசி மாதம் தவறாமல் நடக்கும். இந்த வருஷம் பொதிகைத் தொலைக்காட்சி புண்ணியத்தில் பார்க்க முடிந்தது.

    ReplyDelete
  44. @எழிலன்பு
    //Ezhilanbu said...
    Vamana avatharam thane namma ulagalantha perumal -nu solrom.. apdina vamana avathrathukku oru koil kanchipuram-la irukke..
    ulagalatha perumal ( thiruooragam) sannidhi//

    கரெக்டாப் புடிச்சீங்க பாயிண்ட்டை!
    அதாச்சும் பெருமாளின் நடந்த திருக்கோலம், உளகளந்த பெருமாள், தான் வாமனன் கோயில்

    * திருக்கோவிலூர் (கடலூர் பக்கம்)
    * திருஊரகம் (காஞ்சி)
    * திருக்குறுங்குடி (திருநெல்வேலி மாவட்டம்)
    * திருவாறன்விளை (ஆரமுளா-கேரளா)
    * திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்-நாகர்கோயில்)

    இவை எல்லாம் 108 திவ்யதேசங்களில் தனியான வாமனர் கோயில்கள்!

    ஆரமுளா அப்பனின் பெயர் திருக்குறளப்பன்! வாமனனாய் (குள்ளமாய்) வந்ததால் இந்தப் பெயர்! சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்கள் மகரஜோதிக்கு இங்கிருந்து தான் எடுத்துச் செல்லப்படுகின்றன!

    சென்னைக்கு அருகில் (பல்லாவரம்) உள்ள திருநீர்மலை ஆலயத்தில் (மலை மேல்) நடந்த திருக்கோலமான உலகளந்தானைக் காணலாம்!

    ReplyDelete
  45. //போகலாமே....தேவரீர் அடுத்த முறை இந்தியா வரும் முன்னாடி நான் ஒரு தரம் போய் பார்த்துட்டு வர்ரேன்...அப்பத்தான் உங்களை கூட்டிச்செல்ல வசதியா இருக்கும்//

    அண்ணா! தம்பியை மறந்து விடாதீர்கள்!!!!!!!:)

    By,
    தம்பி

    ReplyDelete
  46. *ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
    வ்யாஸ அம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யாந் |
    ருக்மாங்கத அர்ஜுந வஸிஷ்ட *விபீஷணாதீந்
    புண்யாந் இமாந் பரம பாகவதாந் ஸ்மராமி ||

    முதலில் சொல்லப்பட்ட பக்தன் தைத்ய குலத்தில் பிறந்தவன்; இறுதியில் சொல்லப்படும் விபீஷணன் அஸுர குலத் தோன்றல்


    தேவ்

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP