Wednesday, April 30, 2008

அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 2

"காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?" - சென்ற பாகம் இங்கே!

துடிதுடித்துப் போய் விட்டான் இராமன்! இவர்கள் இலக்கு இலக்குவனா?
இலக்குவனைக் கொல்வதற்காகவே இப்படி ஒரு திட்டம் தீட்டினார்களா தேவர்கள்? அன்று இந்திரனுக்காக இந்திரசித்தைக் கொன்றவனுக்கு இன்று அதே இந்திரன்-சித்து காட்டுகிறானே?
பட்டாபிஷேகம் பறி போன போது கூட படபடக்காத இராமன் இன்று ஏனோ அப்படிப் படபடக்கிறான்! சிந்தைக்கு இனியவர்களுக்கு மட்டும் ஏதாவது ஒன்றென்றால் நம் சிந்தை ஏன் செயல்படாது போகிறது சில நேரம்?

யமன்: இராமா...இன்னும் தேவ ரகசியம் சொல்லி முடியவில்லை! லட்சுமணா...இன்னும் சில விநாடிகள் நீ வெளியே நில்!
(இலக்குவன் வந்த வழியே வெளியேற...)

நாராயணா, இன்னுமா இந்த மனித வேடம்? சிவபெருமான் தம் பணியைத் துவங்கி விட்டார்! அவதார முடிவின் சூட்சுமங்கள் தொடங்கி விட்டன! இதை உணர்ந்து தயாராகி விடுங்கள்!
மானிடனைக் கேட்டால் தான் பெண்ணுக்குக் கல்யாணம், பையனுக்குக் காதுகுத்தல் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருப்பார்கள்! நீங்களுமா? உலகுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சீக்கிரம் சொல்லி விட்டுச் சீக்கிரம் தயாராகுங்கள்!

இராமன்: எல்லாம் சரி தான் தர்மராஜரே! ஆனால் இலக்குவன்.....?

யமன்: சுவாமி, உங்களுக்குமா பந்த பாசம்? நீங்கள் வைகுந்தம் வரும் போது அங்கு ஆதிசேடன் இருக்க வேண்டும் அல்லவா! ஆதிசேடன் அல்லவா இலக்குவனாய் வந்தது! உங்களுக்கு முன் இலக்குவன் விண்ணேக வேண்டும் என்பது விதி!
பாருங்கள், விதிப்பவன் உங்களுக்கே விதியைக் காட்டும் வினோத விதி எனக்கு!
இலக்குவன் விண்ணேக வேண்டும்! சங்கு சக்கரங்களான பரத சத்ருக்கனர்களும் உங்களுடன் ஏகி விடுவார்கள்! பிராட்டியும் தங்கள் வருகைக்குக் காத்துக் கொண்டுள்ளார்! நினைவிருக்கட்டும்! இன்னும் ஒரு பட்ச காலம் (பதினைந்து நாட்கள்) தான் உங்களுக்கு அவகாசம்!
நான் கிளம்புகிறேன்! கடமையால் வந்த கடுஞ்சொற்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள் இராமா! இலக்குவன் தண்டனையை மறந்து விடாதீர்கள்!

(துர்வாசருடன் இலக்குவன் உள்ளே வரவும், துறவி (யமன்) வெளியேறவும் சரியாக உள்ளது...துர்வாசரும் யமனும் ஒருவரை ஒருவர் உள்ளர்த்தப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொள்கிறார்கள்...)


துர்வாசர்: இராமா...அகோரப் பசியாய்ப் பசிக்கிறது...நீ உண்ட உணவை உன் கையால் எனக்கு இப்போதே இட வேண்டும்! "முந்தையோர் முறையே முடி சூடிய அந்த நாள் தொட்டு", ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் ரகு குலத்தில் இவ்வாறு உண்பது என் விரதம்!

இராமன்: ஆகா...அப்படியே ஆகட்டும் முனிவரே! இதோ கொண்டு வரச் சொல்கிறேன்! சற்று அமருங்களேன்! நானும் களைத்துப் போயுள்ளேன். மனத்தை அரிக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் கிடுகிடுவென்று நடந்துவிட்டன...

துர்வாசர்: இராமனா இப்படிப் பேசுவது? விருந்தினர் முன் சொந்த துயரங்களைப் பேசுவதா பண்பு? முதலில் என்னைக் கவனி! அரச-அதிதி முறை தெரியுமல்லவா உனக்கு? நீ அதன் லட்சணம் அறியாதவனோ? இல்லை ஹரி யாதவனோ??

இராமன்: மன்னிக்க வேண்டும் முனிவரே! இதோ உணவு! களைப்பு தீர உண்டு பசியாறுங்கள்!

துர்வாசர்: ஆ...என்ன இது அவமதிப்பு? வெறும் சோறும் கறிச் சேறுமா எனக்கு விருந்து? நான் வந்தது அரண்மனையா இல்லை ஆண்டிமனையா?

இராமன்: முனிவரே! கோபம் வேண்டாம்! நீங்கள் கேட்டது நான் உண்டு, அதன் மீதி மிஞ்சிய உணவு! சீதை சென்றபின் இதுவே எனக்கு உணவாகி விட்டது! என்னால் இளையவனுக்கும் இதையே உண்கிறான்! அருள் கூருங்கள்! இல்லை விருந்து தேவை என்றால் உள்ளே வாருங்கள்...அன்னக் கூடம் செல்லலாம்!

துர்வாசர்: உம்...உன் மனைவி போனபின் உனக்கு மரத்துப் போன உணவா? இதனால் எல்லாம் நீ நல்ல கணவன் என்று சொல்ல மாட்டேன்! நீ உண்டு சேஷமான (மீதமான) உணவே எனக்குப் போதும்!
ஆதி சேஷமே இதை உண்ணும் போது, மீதி சேஷமாய் நானும் உண்கிறேன்!
(முனிவர் உண்டு பசி ஆறியவுடன் இராமன் சில கேள்விகளை முனிவரிடம் முன் வைக்கிறான்!)

இராமன்: முனிவரே...நான் நல்ல கணவன் என்றெல்லாம் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை! எனக்குத் தெரியும் என்னைப் பற்றி! பொதுவுடைமைக்குத் தனியுடைமையை விற்ற சிறியேன் நான்!
வாலி வதத்துக்குக் கூட அடுத்த பிறவியில் கர்ம வினையால் நான் கழுவாய் தேடிக் கொள்வேன்!
ஆனால்...சீதை விஷயத்தில் தான் என் மனம் சதா சஞ்சலப்படுகிறது!
எங்கள் இருவரின் பரஸ்பர அன்பையும் ஆழமான காதலையும் எங்களைத் தவிர நாட்டு மக்கள் வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லையோ? எனக்கு அமைதி காட்டுங்கள், முனிவரே!

துர்வாசர்: கலங்காதே இராமா! உங்கள் இருவருக்கும் உங்கள் இருவரின் அன்பு புரிந்ததல்லவா? அது போதும்! மற்றவர்க்குப் புரிய வைக்க, புரிய வைக்கப் புண்ணாகத் தான் ஆகும்! அதனால் அப்படியே விட்டுவிடு!
உன் காலம் இன்னும் சிறிது நாள் தான்! அமைதி பெறு! இனி வரும் காலங்களிலும் உங்கள் இருவரின் அன்பும் செயல்களும் விவாதப் பொருளாகத் தான் அமையப் போகிறது!

உன் அவதாரம் போதனைக்கு அல்ல! சோதனைக்கு! - சத்திய சோதனைக்கு!
அவரவர் உங்களைச் சோதித்து அவரவர் தீர்ப்பு எழுதிக் கொள்வார்கள்! அந்தத் தீர்ப்பு உங்களுக்கு அல்ல! அவரவர்க்கே தான்!
உங்கள் வாழ்க்கை அதற்கு உதவும் ஒரு சிறு தீத்துளி! அதைக் கொண்டு தீபம் ஏற்றவோ கோபம் ஏற்றவோ, அது அவரவர் விளையாட்டு!

உன் விளையாட்டு முடிந்ததல்லவா? விடை பெற்றுக் கொள்! தனித்தருள் செய்தது போதும்! திருமகளுடன் சேர்ந்து திருவருள் செய்வாயாக! என் நல்லாசிகள்! நாராயண இதி சமர்ப்பயாமி!
(துர்வாசர் விடை பெறுகிறார்...உடனே அந்தரங்க அரச ஆலோசனை சபை கூடுகிறது)இராமன்: இலக்குவனுக்கு நானே மரண தண்டனை விதிக்கும் தர்ம சங்கடம் இப்போது ஏற்பட்டுள்ளது! முனிவர் இலக்குவனிடமே கேட்டிருக்கலாம்! அரச குடும்பத்தைச் சூழுப் போகும் விபரீதம் அறியாமல் இப்படி எல்லாம் நிகழ்ந்து விட்டது! அப்படியும் போக முடியாமல், இப்படியும் போக முடியாமல் - இது தான் தர்ம சங்கடம் என்கிறார்கள் போலும்! என்ன செய்யலாம் சான்றோர்களே?
(அனைவரும் அதிர்ச்சியில் உறைய...நடந்த நிகழ்வுகள் எல்லாம் உரைக்கப்படுகிறது...)

அமைச்சர் (தயங்கித் தயங்கி): மன்னா...புதல்வர்களுக்கு இப்போது தான் பட்டம் கட்டினோம்! இது அரசியல் சட்டப்படிக் கருணைக் காலம்! நீங்கள் சொல்லும் ஒரு பட்சத்துக்குள்....நம் நாட்டில் இலக்குவனுக்கு மட்டுமில்லை, வேறு எவருக்குமே மரண தண்டனை நிறைவேற்ற முடியாது!
பேசாமல் இளையவரை நிரந்தரமாகக் காட்டுக்கு அனுப்பி விடுங்கள்! உங்கள் பிரிவே அவருக்கு மரண வேதனை தான்!
தர்ம சாஸ்திரமும் இதற்கு ஒப்புதல் அளிக்கிறது! துறவியின் வாக்கைக் காத்தது போலும் ஆகும்! நாட்டின் சட்டத்தை மதித்தது போலும் ஆகும்!

இராமன்: காட்டுக்கும் எனக்கும் இப்படி ஒரு ராசியா? ஹா ஹா ஹா...எனக்குப் பிரியமான அனைத்தும் ஒவ்வொன்றாய்க் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது விதியா? விளையாட்டா? கண்ணா இலட்சுமணா...நீ என்ன சொல்கிறாய்?

இலக்குவன்: அண்ணா...என்ன நடக்கிறது என்றே ஒன்றும் புரியவில்லை! யார் அந்த தேவ ரகசியத் துறவி என்றும் தெரியவில்லை!
ஆனால் தப்ப வழியில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது!
மனதார வஞ்சனை செய்ய உனக்கு என்றுமே தெரியாது! அதனால் உன் எண்ணம் எதுவோ அதுவே என் விதி என்று எடுத்துக் கொள்கிறேன்!

ஏதோ ஒன்று நிறைவடையப் போகிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது! நான் காடேகி விடுகிறேன்! பின்னர் யாரும் என்னைத் தேட வேண்டாம்!
ஊர்மிளையிடமும், மக்கள் சித்ரகேது/சித்ராங்கதனிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்! என்னைத் தனியாக நீங்களே காட்டில் கொண்டு போய் விட்டுவிட வேண்டும். இதுவே என் விண்ணப்பம், அண்ணா!

இராமன்: தம்பி...அன்று உன்னை விட்டுவிட்டு நானும் சீதையும் மட்டும் காட்டுக்குப் போக நினைத்த போது சண்டை போட்டாயே? இப்போது மட்டும் ஏன் அமைதி காக்கிறாய்?

இலக்குவன்: கணவனை விட்டுச் சில நாள் மனைவி பிரிந்திருக்க முடியும்! மக்களை விட்டுப் பெற்றோர் சில நாள் பிரிந்திருக்க முடியும்! ஆனால் பச்சிளங் குழந்தை? உன்னை விட்டுப் பிரிந்து இருக்க என்னால் இயலுமோ அண்ணா?
சில நாள் அண்ணியும் உன்னை விட்டுப் பிரிந்து இருக்க முடிந்தது! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது!
நீர் உள எனின் உள மீனும், நீலமும்
பார் உள எனின் உள யாவும், பார்ப்புறின்
நார் உள தனுவுளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளேம்? அருளுவாய் என்றான்!

ஊருக்குத் தான் நாம் அண்ணன்-தம்பி உறவுக்குள் கட்டுப்பட்டோம்! ஆனால் உண்மையில் எனக்கு நீ யார்?
தலைவன்? குரு? தாய்? தகப்பன்? - இல்லை...எதையும் மறைக்காத ஆருயிர் தோழன்? இல்லை அதையும் தாண்டி...
உன்னுள் ஆழ்ந்தவன் நான்! - ஆழ்வான்! இளையாழ்வான்! - உன் அடி ஒற்றும் அடியவன்! உன் அருளே புரிந்து இருப்பேன்! இனி என்ன திருக்குறிப்பே?

(காட்டுக்கு வெளியே தனிமையில்...அண்ணனும் தம்பியும் மட்டும்...)
இராமன்: இலட்சுமணா....அன்று தனிமையில் சீதை உன் கற்பை வார்த்தையால் சுட்டெரித்தாள்! அன்று குனிந்த உன் தலை, அவள் முன்னர் மட்டும் என்றுமே நிமரவில்லை!
அன்று அவள் எரித்த சொற்களை இன்று சரயு நதியில் குளிர்வித்து விடு! வாய்ச்சொல் தலைச்சுமை! அவள் தனியாகச் சுமந்தது போதும்! இனி நானும் அவளும் உன் பெருமையைச் சேர்ந்தே சுமக்கிறோம்!

இலக்குவன்: அண்ணா...இனி நாம் தான் ஒருவருக்கொருவர் பேசப் போவதில்லையே!
உங்கள் திருக்கரத்தை என் நெஞ்சில் வைத்து அமைதி ஆக்குங்கள்! உங்கள் தோளில் சாய்த்துக் கொண்டு நான் ஆறுதல் அடைய வழிகாட்டுங்கள்!

(இலக்குவன் மெள்ள மெள்ள சரயு நதியில் இறங்குகிறான்...விசுவாமித்திரர் சிறு வயதில் கற்றுக் கொடுத்த ஜலயோகம் செய்து மூழ்குகிறான்...இந்திர விமானம் தோன்றுகிறது! நாகத்துக்குப் பகையாம் கருடன், சேஷனைச் சேவித்து வரவேற்கிறான்...வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!)


(ஆங்கே...அயோத்தியின் சபையில்...இராமன் தனிமையில்...)
குளத்தில் இருந்து கரையில் எடுத்துப் போட்ட பின்னர், நீர்ப் பசை உள்ள அளவு தானே மீனும் இருக்கும்! இதோ இன்னும் ஒரு பட்சம் தான்! நாங்களும் சரயு நதிக்குள் யோக நிலையில் மூழ்கப் போகிறோம்!

உழைக்கும்; வெய்து உயிர்க்கும்;
ஆவி உருகும்; போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான்,
"இலக்குவா! இலக்குவா!" என்று,

அழைக்கும்; தன் கையை
வாயின், மூக்கின் வைத்து அயர்க்கும்;
"ஐயா! பிழைத்தியோ!" ‘என்னும்
மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்.


பெற்றதனால் வந்த பாசம் அன்னை தந்தையர் காட்டுவது - தொட்டு
உற்றதனால் வந்த பாசம் மனைவியர் காட்டுவது! உன்னை நான் பெற்றேனும் இல்லை! தொட்டு உற்றேனும் இல்லை! பின் எதனால் இவ்வளவு ஒட்டுதல்?

மனைவிகளில் நூறு பத்தினிகளைக் காட்டலாம்! உறவுகளில் ஆயிரம் நண்பர்களைக் காட்டலாம்!
ஆனால் உன்னைப் போல் ஒரு தம்பியைக் காட்ட முடியுமா? "அண்ணா" என்ற ஒற்றைச் சொல்லுக்கு உன்னால் அல்லவா உயிர்ப்பு!
நட்பிலும் கற்பைக் காட்டிய காகுத்தா!
நம் இருவர் இடையே உள்ள ஆத்ம உறவை எந்தப் பொருளால் விளக்குவது?

பயந்த தனிமைக் காட்டில், செல்வத்தைத் மறந்து, மனையாளைப் பிரிந்து, தனியே அல்லல் உற்றுக் கிடந்தேன்! அல்லலுக்கு நேரே உறைவிடம் நான்!
ஆனால் உயிருக்கு உயிராய் முன் எப்போதை விடவும் தனிமையில் துணை நின்றாய் தம்பீ! என்னை நீ வந்து உற்ற பின்னர் தான், சீரே உயிர்க்கு உயிராய், பாலைவனத்தில் பன்னீராய்த் தித்தித்ததே!
வாராது வந்த நண்பனாய் வந்த தம்பி.......
உன் பேச்சை மீறி, உன்னை அயோத்தியிலேயே விட்டு வந்திருந்தால்? இன்று இந்த அண்ணன் தான் ஏது??
கேளிக்கையில் உடன் இருப்பவனைக் காட்டிலும் கேட்டில் உடன் இருப்பவன் அல்லவா உற்ற தோழமை கொள்வான்!

காரேய் கருணை ராமானுஜா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவார் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்து உற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராய், அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


மற்றவர்களுக்கு எல்லாம் இராமாவதாரத் தத்துவம் என்பது மானுட தத்துவம்! சரணாகதித் தத்துவம்!
ஆனால் என்னைப் பொருத்தவரை இது இராமாவதாரம் இல்லை! இது இலக்ஷ்மணாவதாரம்! இதன் தத்துவம் கைங்கர்ய தத்துவம்!
தன் கடன் அடியேனைத் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே!
தொண்டின் ஆரம்ப நிலை - இறைத் தொண்டு - பகவத் கைங்கர்யம்!
தொண்டின் முழுமை நிலை - அடியார் தொண்டு - பாகவத கைங்கர்யம்!
நன் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

என் இராமாவதார ஆசை இதுவே!
நான் இலக்ஷ்மணனாய் மாற வேண்டும், நீ இராமனாய் ஆக வேண்டும்!
அடுத்து நீயே இராமன்! என் அன்புக்குப் பலன் ராமன்! நீ பல-ராமன்!
உனக்கு ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நான்!

லக்ஷ்மணோ லக்ஷ்மீ சம்பந்ந: செல்வத்துள் செல்வம் கைங்கர்ய லட்சுமி! நானும் திருமகளும் உனக்குக் கைங்கர்யம் செய்து வாழப் போகிறோம்!
இது அவதார முடிவு என்றா நினைத்தாய்? இல்லையில்லை! கிருஷ்ணாவதாரத்துக்கான தோற்றம்! அதை இன்று தான் என் மனதில் சங்கல்பித்தேன்! உறுதி பூண்டேன்!

உலகிற்கு எப்போதும் நீயே இராமனின் அனுஜன்! என் இராமானுஜன்!
இளைய பெருமாள் திருவடிகளே சரணம்!
இலக்குவன் திருவடிகளே சரணம்!!

46 comments:

 1. இராமன் சரயூ நதியில் வீழ்ந்து தன் அவதாரத்தை நிறைவு செய்து கொண்டான் என்று படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை இவ்வளவு விவரமாகப் படித்ததில்லை. லக்ஷ்மி சம்பந்நனின் திருவவதார நிறைவை அறியத் தந்ததற்கு நன்றிகள்.

  ReplyDelete
 2. அருமையான விவரணம். பகிர்ந்தமைக்கு நன்றி!

  //நீ அதன் லட்சணம் அறியாதவனோ? இல்லை ஹரி யாதவனோ??//

  ஏதோ வார்த்தை விளையாட்டு காட்டுகிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் 'யாதவன்' என்று இராமனை சொல்வது சரியாகுமா? :-)

  முக்கியமான கேள்விகள்:

  1. பத்து அவதாரங்களில் இரண்டு அவதாரங்களில் மட்டும்தான் ஆதிசேஷன் 'அனுஜர்'ஆக வருகிறார். மற்ற அவதாரங்களில் ஏன் வரவில்லை என்று ஏதாவது காரணம் இருக்கிறதா?

  2. பலராமர் ஆதிசேஷனின் அவதாரமாக இருக்க அவரை ஏன் பத்து அவதாரங்களில் ஒன்றாக காட்ட வேண்டும்? ஏன் இலக்குவனை பத்து அவதாரங்களில் ஒன்றாக கொள்ளவில்லை?

  ReplyDelete
 3. //ஆனால் 'யாதவன்' என்று இராமனை சொல்வது சரியாகுமா? :-)//

  கண்டிப்பா சரியாகும் ஸ்ரீதர்! இராமன்
  அழுக்காறு அறி-யாதவன்!
  அவா (பேராசை) அடை-யாதவன்!
  வெகுளி புரி-யாதவன்!
  இன்னாச் சொல் தெரி-யாதவன்!

  இப்படி இராமன் யாதவனே! :-)

  //முக்கியமான கேள்விகள்://

  நாங்க பதிவு மட்டும் தான் போடுவோம்! பதில்-லாம் குமரன் தான் வந்து கொடுப்பாரு! :-)

  ReplyDelete
 4. //குமரன் (Kumaran) said...
  ஆனால் இதுவரை இவ்வளவு விவரமாகப் படித்ததில்லை. லக்ஷ்மி சம்பந்நனின் திருவவதார நிறைவை அறியத் தந்ததற்கு நன்றிகள்//

  லக்ஷ்மீ சம்பந்தன் தான் லக்ஷ்மணன்!
  பலராமனும் அப்படியே குமரன்! ருக்மணிப் பிராட்டியும் கண்ணனும் அவருக்குச் செய்யும் பூசைகள் பாகவதத்தில் உண்டு!

  இது எப்படி வாலியோன் வழிபாடு ஆச்சு என்பதை நீங்க தான் விளக்கணும்!

  ReplyDelete
 5. எப்போதும் போல உங்கள் வார்த்தை ஜாலங்களை கொடுத்து கலக்கிட்டீங்க...மிக்க நன்றி.

  //"முந்தையோர் முறையே முடி சூடிய அந்த நாள் தொட்டு", ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் ரகு குலத்தில் இவ்வாறு உண்பது என் விரதம்!//

  புதசெவி.....

  ReplyDelete
 6. இணைய உலகின் எழுத்துச் சித்தர்ன்னு ஒரு டைட்டில் இன்று முதல் அழைக்கப்படுவீர்கள் :)

  ReplyDelete
 7. //1. பத்து அவதாரங்களில் இரண்டு அவதாரங்களில் மட்டும்தான் ஆதிசேஷன் 'அனுஜர்'ஆக வருகிறார்//

  ஸ்ரீதர்...என் பங்குக்கு இதோ! :-)

  இராமாயணத்தில் இரண்டு ஆதிசேஷன்கள்! ஒன்னு இலக்குவன்! இன்னொன்னு யாருன்னு தெரியுதா?

  ReplyDelete
 8. //மதுரையம்பதி said...
  எப்போதும் போல உங்கள் வார்த்தை ஜாலங்களை கொடுத்து கலக்கிட்டீங்க...மிக்க நன்றி//

  அட! உண்மையை எழுதினா வார்த்தை ஜாலம்-ன்னு சொல்லீட்டீங்களே அண்ணே! நான் யார் கிட்ட போயி மொறை இடுவேன்! ஜிரா......:-)

  //"முந்தையோர் முறையே முடி சூடிய அந்த நாள் தொட்டு", ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் ரகு குலத்தில் இவ்வாறு உண்பது என் விரதம்!//
  புதசெவி.....//

  இது வேறயா?
  இராமனின் முன்னோர் முடிசூடிய அந்த நாள் தொட்டு இன்று வரை, once in 1000 years, நம்ம துர்வாசர் ரகு குலச் சாப்பாடு சாப்ட வருவாராம்! அதான் அண்ணாச்சி!
  பு? த.செ.சொ!

  ReplyDelete
 9. //மதுரையம்பதி said...
  இணைய உலகின் எழுத்துச் சித்தர்ன்னு ஒரு டைட்டில் இன்று முதல் அழைக்கப்படுவீர்கள் :)//

  ஆகா...
  தேவ் அண்ணாத்த தான் ஆன்மீகச் சிரிப்புச் சித்தர்-ன்னு ஆரம்பிச்சி வுட்டாரு!
  இப்ப நீங்களா?
  சித்தனை ஜித்தன் ஆக்காம இருந்தாச் சரி! :-)

  ReplyDelete
 10. //இராமனின் முன்னோர் முடிசூடிய அந்த நாள் தொட்டு இன்று வரை, once in 1000 years, நம்ம துர்வாசர் ரகு குலச் சாப்பாடு சாப்ட வருவாராம்! அதான் அண்ணாச்சி!
  பு? த.செ.சொ! //

  இல்லீங்க இ.உ.எ.சி (இணைய உலக எழுத்து சித்தரே). அதென்ன 1000 வருட கணக்கு?. எங்கே, எப்போது இப்படி ஒரு ப்ரதிக்ஞை?. தயவு செய்து சிறு குறிப்பு வரைக...:)

  ReplyDelete
 11. அறியாத தகவலை எளிய தமிழில் கொடுத்து அருமையான பதிவை வெளியிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 12. //1. பத்து அவதாரங்களில் இரண்டு அவதாரங்களில் மட்டும்தான் ஆதிசேஷன் 'அனுஜர்'ஆக வருகிறார். மற்ற அவதாரங்களில் ஏன் வரவில்லை என்று ஏதாவது காரணம் இருக்கிறதா?
  //


  இந்தாங்க இன்னோரு க்ளூ!

  சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
  நின்றால் மரஅடியாம் நீள்கடலுள்- என்றும்
  புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
  அணையாம் திருமாற்(கு) அரவு.

  ReplyDelete
 13. நேற்று படிக்கும் போது தோன்றிய ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன். இந்தப் பகுதியைப் படிக்கும் போது இராமனும் இரவிசங்கரும் திருவரங்கத்தமுதனாரும் மாறி மாறி பேசுவது போல் ஒரு தோற்றம் கிடைத்தது. யார் எப்போது பேசுகிறார்கள் என்று குழப்பமும் ஏற்பட்டது. ரொம்ப உணர்ச்சி வேகத்தோடு எழுதினீர்கள் போலும்.

  இந்த இடுகையில் யார் என்ன கேள்விகள் கேட்டாலும் நீங்கள் தான் பதில் சொல்லவேண்டும். எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது. வழக்கம் போல் என் நக்கீரர் குணத்திற்காக மட்டும் கேள்விகளிலேயே சொற்குற்றம், பொருட்குற்றம் வேண்டுமானால் கண்டுபிடிக்கிறேன். :-)

  அனுஜன் என்பது தம்பி. பூர்வஜன் என்றால் அண்ணன். இராமாவதாரத்தில் தானே ஆதிசேஷன் அனுஜனாக வருகிறான். கிருஷ்ணாவதாரத்தில் அவன் பூர்வஜன் ஆகிறான். அம்புட்டு தாங்க. மத்ததெல்லாம் இ.எ.சி. சொல்லுவார்.

  ReplyDelete
 14. இராமனுஜருக்கு இப்பவே கட்டியம் சொல்லியாச்சா.
  சரி சரி.
  மே எட்டுக்குப் பதிவு உண்டல்லவா.

  அன்புத் தம்பியை....அண்ணன் ராமன்
  கரையேற்றினான் என்றுதான் நான் படிப்பேன்.

  எங்கேரெந்துதான் இப்படி விவரம் சேர்க்கிறீர்களொ:))
  கைங்கர்ய ஸ்ரீக்கு மங்களம்.

  ReplyDelete
 15. இது வரை அறியாத தகவல் இராம இலக்குவரின் மறைவுக் கதை. அருமை. ஆனால், விடிந்தும் விடியாததுமாய் இந்த கதையை படித்து அழுதேன்:‍-(

  ஓஹோ: வாமனன்..குடை; சிங்காசனம்..?; பரசுராமன்(?)...நின்றால் மரஅடி; மச்சம்...நீள்கடலுள் புணை; மணிவிளக்காம்; பூம்பட்டாம்; புல்கும் அணையாம் .. ரெண்டு மூணு அவதாரத்துக்கு கன்பியூசன் ஆவுதே! அருஞ்சொற்பொருள் விளக்கம் தருக.

  அனுஜ: / அனுஜா (தம்பி/தங்கை)... குமரன் சொல்வது சரி. மலையாளத்தில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் அனுஜத்தி / அனியத்தி. ஜேஷ்டன் என்பதே இன்றைக்கு சேட்டன்.

  ReplyDelete
 16. //குமரன் (Kumaran) said...
  இந்தப் பகுதியைப் படிக்கும் போது இராமனும் இரவிசங்கரும் திருவரங்கத்தமுதனாரும் மாறி மாறி பேசுவது போல் ஒரு தோற்றம் கிடைத்தது//

  இந்த லிஸ்ட்டு-ல எங்கள் இனிய இலக்குவனை ஏன் வுட்டுட்டீங்க குமரன்! அவன் கூடயும் தானே பேசினேன்?

  //ரொம்ப உணர்ச்சி வேகத்தோடு எழுதினீர்கள் போலும்//

  :-)


  //நக்கீரர் குணத்திற்காக மட்டும் கேள்விகளிலேயே சொற்குற்றம், பொருட்குற்றம் வேண்டுமானால் கண்டுபிடிக்கிறேன். :-)
  //
  சரி...ரெடி...ஸ்டார்ட் மீசிக்!

  //அனுஜன் என்பது தம்பி. பூர்வஜன் என்றால் அண்ணன்//
  சரியே!
  அஜன்=உடன் பிறந்தான்
  பூர்வ=முன்; அனு=பின்

  பிள்ளையாருக்கு ஸ்கந்த பூர்வஜாய நம-ன்னு அர்ச்சனை வரும்!
  பரதன், சத்ருக்கனன் எல்லாரும் அனுஜர்கள் தான்! ஆனா இலக்குவன் மட்டுமே இராமானுஜன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறான்!

  பரதாழ்வானுக்கும் இளையாழ்வானுக்கும் நூலிழை தான் வேறுபாடு!
  பரதன்=சொன்ன வண்ணம் செய்த பெருமாள்
  இலக்குவன்=சொல் பேச்சை மீறியும் தொண்டு செய்த பெருமாள்

  சீதை இராமனிடம் சொல்வதாக ஒரு கட்டம் வரும்!
  கிணற்றில் குதி என்றால் உடனே பரதன் குதித்து விடுவான்!
  இலக்குவனோ, இராமனுக்குத் தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்து விட்டு அப்புறம் தான் குதிப்பான் :-)

  பரதன்-இலக்குவன் ஒப்பீடு...அதுவும் சீதை வாயால்...அது தனிப் பதிவாத் தான் போட முடியும்! :-)

  ReplyDelete
 17. //இல்லீங்க இ.உ.எ.சி (இணைய உலக எழுத்து சித்தரே). அதென்ன 1000 வருட கணக்கு?. எங்கே, எப்போது இப்படி ஒரு ப்ரதிக்ஞை?. தயவு செய்து சிறு குறிப்பு வரைக...:)//

  போச்சுரா...விடமாட்டீங்க போல இருக்கே!:-)
  துர்வாசர் சக்தி உபசாகர். நீங்க தான் சொல்லணும்! ஆயிரம் வருட விரதம் அவருக்கு ஏன்-ன்னு?

  முந்தையோர் முறையே முடி சூடிய அந்த நாள் தொட்டு
  ஓராயிரம் ஆண்டுக்கு வந்து ஓர்நாள் உன் வாயின் அயின்று...
  என்பது பாட்டு! ஒட்டக்கூத்தரின் உத்திர காண்டம்.

  ReplyDelete
 18. யப்பா! ////1. பத்து அவதாரங்களில் இரண்டு அவதாரங்களில் மட்டும்தான் ஆதிசேஷன் 'அனுஜர்'ஆக வருகிறார்// இதுக்கு தான் நான் சொன்னேன் (குமரனும் அப்படியேன்னு நினைக்கிறேன்). பலராமர் பூர்வஜன் இல்லியோ?

  ReplyDelete
 19. @கெபி அக்கா...எப்படி இருக்கீங்க?

  அனுஜன்/பூர்வஜன் ஓக்கே தான்!
  இலக்குவன்=அனுஜன்; பலராமன்=பூர்வஜன்

  நம்ம ஸ்ரீதர் கேட்கிற கேள்வியை லைட்டா மாத்திக்கலாம்
  //1. பத்து அவதாரங்களில் இரண்டு அவதாரங்களில் மட்டும்தான் ஆதிசேஷன் "அஜர்" (சகோதரர்) ஆக வருகிறார்//
  மத்த அவதாரங்களில் ஆதிசேஷன் எங்கே?

  ReplyDelete
 20. //போச்சுரா...விடமாட்டீங்க போல இருக்கே!:-)
  துர்வாசர் சக்தி உபசாகர். நீங்க தான் சொல்லணும்! ஆயிரம் வருட விரதம் அவருக்கு ஏன்-ன்னு?//

  அது சரி.... :-)

  ReplyDelete
 21. //வல்லிசிம்ஹன் said...
  மே எட்டுக்குப் பதிவு உண்டல்லவா//

  சங்கர ஜெயந்தி தானே வல்லியம்மா? :-)

  //அன்புத் தம்பியை....அண்ணன் ராமன்
  கரையேற்றினான் என்றுதான் நான் படிப்பேன்//

  ஹிஹி! இதுவும் நல்லாத் தான் இருக்கு!

  //எங்கேரெந்துதான் இப்படி விவரம் சேர்க்கிறீர்களொ:))//

  விவரம் எல்லாம் வேங்கட விவரம்! :-)
  யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும்
  தாமே பெற வேலவர் தந்ததினால்

  //கைங்கர்ய ஸ்ரீக்கு மங்களம்.//

  இலக்குவனுக்கு மங்களம் நித்ய மங்களம்!

  ReplyDelete
 22. //கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
  இது வரை அறியாத தகவல் இராம இலக்குவரின் மறைவுக் கதை. அருமை. ஆனால், விடிந்தும் விடியாததுமாய் இந்த கதையை படித்து அழுதேன்:‍-(//

  பலருக்கும் புதிய கதை தான்-க்கா!
  ஆனா எதுக்கு அழணும்?
  அவதார பூர்த்தி இல்லையே! அடுத்த அவதாரத்துக்கு ஆதாரம் அல்லவா?
  பெம்மான் இராமன் இறவான் இறவான்! :-)

  //ரெண்டு மூணு அவதாரத்துக்கு கன்பியூசன் ஆவுதே! அருஞ்சொற்பொருள் விளக்கம் தருக.//

  நின்றால் = பாதுகை/மரவடி
  இருந்தால்/அமர்ந்தால் = சிங்காதனம்
  நடந்தால்/சென்றால் = குடை
  கிடந்தால்...
  புணை=தெப்பம்/படகு
  மணிவிளக்கு=சேஷனின் முடியில் உள்ள ரத்தினங்களின் விளக்கு
  பூம்பட்டு=உடை
  புலுகும் அணையாம்=உறங்கும் தலையணை

  //மலையாளத்தில் இன்றும் புழக்கத்தில் இருக்கும் அனுஜத்தி / அனியத்தி. ஜேஷ்டன் என்பதே இன்றைக்கு சேட்டன்//

  ஆகா
  ஜேஷ்ட குமாரன் தான் சேட்டனா?
  அப்போ சேச்சி? (எத மறந்தாலும் சேச்சியை மறக்க மாட்டோம்-ல? :-)))

  ReplyDelete
 23. //Expatguru said...
  அறியாத தகவலை எளிய தமிழில் கொடுத்து அருமையான பதிவை வெளியிட்டமைக்கு நன்றி//

  நன்றி Expatguru.
  எனக்கும் இலக்குவனைப் பற்றி எண்ணுவதிலும் சொல்லுவதிலும் ரொம்ப மகிழ்ச்சி :-)

  ReplyDelete
 24. @கெபி அக்கா, குமரன், வல்லியம்மா, ஸ்ரீதர்

  சங்கு சக்கர அகந்தைப் பேச்சும்...
  நின்றால் மரவடியாம் பாதுகையின் பணிவும்...
  அதனால் பாதுகை ஆண்டதும், சங்கு சக்கரங்கள் பாதுகைக்கு அடங்கியதும்....

  அனைவருக்கும் தெரியும்-னு தான் நினைக்கிறேன்!
  சேஷன் இலக்குவனாகவும் பாதுகையாகவும் வீட்டையும் நாட்டையும் காத்தான் என்பது ஈடு பொருள்!

  ReplyDelete
 25. அரைகுறை அறிவுதானே... அதான் தவறாக 'அனுஜர்' என்று சொல்லிவிட்டேன். திருத்திய குமரன், கெ.பி., (என்னாங்க பேரு இது? இதுக்கும் எதுவும் விளக்கம் வச்சிருக்கீங்களா என்ன? :-))) கேஆரெஸ் எல்லாருக்கும் நன்றி.

  இராமாயணத்தின் ஆதிசேஷனின் இன்னொரு அவதாரத்தை அறியத் தந்தமைக்கும் நன்றி.

  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பெரியோர் எல்லாரும் மௌனம் சாதிக்கிறதைப் பார்த்தா ரொம்ப டிரிவியலான கேள்விகள் போலிருக்கு. :-)

  ReplyDelete
 26. //பூம்பட்டு=உடை//

  பாதுகை, உடை எல்லாம் எல்லா அவதாரத்திலும் வருவதுதானே... So ஆதிசேஷன் default-ஆ வரார் போல.

  ஆனா, ஆதிசேஷனுக்கு ஏன் திடீர்னு கிருஷ்ண அவதாரத்தில மட்டும் புரமோஷன்? அண்ணனா வரார். அது மட்டுமல்ல திருமால அவதாரமாகவே சொல்லப்படுகிறார்....

  ReplyDelete
 27. //கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பெரியோர் எல்லாரும் மௌனம் சாதிக்கிறதைப் பார்த்தா.../

  @ஸ்ரீதர்
  என்னது...பெரியோரா?
  அதெல்லாம் குமரன், கெக்கே பிக்குணி, வெட்டி, ஜிரா போன்றவங்க!

  என்னைச் சிறியோர்...சின்ன பையன்-ன்னு இப்பச் சொல்லுங்க! பதிலை ஒடனே சொல்றேன்! :-)

  ReplyDelete
 28. //சின்ன பையன்-ன்னு இப்பச் சொல்லுங்க! பதிலை ஒடனே சொல்றேன்! :-)//

  வயசை குறைச்சு காட்ட அவ்வளவு ஆசையா? சரி... சரி... சொல்லுங்க :-)

  ReplyDelete
 29. அவதாரம் என்பது இறங்கி வருதல் என்று பொருள்படும்!
  பொதுவாக நூற்றுக்கு மேற்பட்ட இறங்கி வருதல்கள் இருந்தாலும் (ஹயக்ரீவர் உட்பட)...
  வந்த நோக்கம், அது விட்டுச் சென்ற தாக்கம் - இதைப் பொறுத்து பத்து அவதாரங்கள் என்று பொதுவாகச் சிலாகித்துப் பேசுதல் வழக்கம்!

  ஒவ்வொரு அவதாரத்தின் போதும் பெருமாளுடன், தாயாரும், நித்ய சூரிகள் சிலரோ பலரோ சேர்ந்தே அவதரிப்பர்!

  ராம, கிருஷ்ணாவதாரத்தில் தான் பெருமாளின் அத்தனை அம்சங்களும் சேர்ந்தே அவதரித்தனர்; அதனால் தான் அவை பூர்ண அவதாரங்கள் என்று சொல்லப்படுகின்றன!

  பெருமாள் ராமனில் தன் பாதி அம்சத்தையும்,
  பரத, இலக்குவ, சத்ருக்கனரில் மீதி அம்சத்தையும் அளித்தார்!

  ராமம் சர்வ லக்ஷண சம்யுக்தம்
  விஷ்ணோர் "அர்த்தம்" மகா பாகம்
  என்பது வால்மீகி சுலோகம்! (அர்த்தம்=பாதி)

  பெருமாளின் பிரதான அம்சத்தை மட்டுமே "அவதாரம்" என்று குறிப்பது வழக்கம்! = சேஷி

  அவருடன் வருபவர்கள் = சேஷன்!
  அவர்கள் பொதுவாக அவதாரம் ஆக மாட்டார்கள்!

  பலராமன் மட்டும் இதற்கு விதிவிலக்கு ஆனான்! ஏன்?

  ReplyDelete
 30. தன் அம்சத்தில் ஒரு சிறு பங்கை மட்டும் தான் சேஷி சேஷனுக்கு அளித்தான்! அதனால் இலக்குவன் தனி அவதாரம் இல்லை!

  ஆனால் அன்பிலும் சரி, தொண்டிலும் சரி, சிறந்து விளங்கினான் இலக்குவன்! பெருமாளே தடுத்த போதும் தொண்டை விடவில்லை!
  மற்றவர்கள் எல்லாம் அன்புக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டுத் தொண்டில் இருந்து சற்றே ஒதுங்கினர்!

  இறைவன் பேரில் அன்பு மட்டும் செய்தால் போதாது! தொண்டும் சேர்த்தே செய்தால் தான் உய்வு என்பதைக் காட்ட இலக்குவனை மட்டும் முன்னிறுத்த எண்ணினான் இறைவன்! அதனால் தான் அவனுக்கு மட்டும் அடுத்த முறை தனி "அவதார அந்தஸ்தை" வழங்கினான்!

  ஆனால் ஆதிசேடன் சேஷன் ஆயிற்றே! சேஷி இல்லையே! எப்படி அவனைப் "பலராம" அவதாரமாக ஆக்க முடியும்? அதற்கும் இறைவனே வழி வகுத்தான்! எப்படி?

  ReplyDelete
 31. இறைவன் தேவகியின் கர்ப்பத்தில் ஏழாவது குழந்தையாய் ஆவர்பித்தான்!

  ஆனால் தன் யோக மாயை மூலமாக அதை உடனே ரோகிணியின் கர்பத்துக்கு மாற்றினான்! அப்போது அதில் ஆதிசேஷனை முழுதும் ஆவர்பிக்கச் செய்தான்! இதனால் சேஷனுக்கு இறைவனின் முழு அம்சமும் வந்து விடுகிறது! (இலக்குவனுக்கு ஆனது போல் ஒரு பாதியில் ஒரு சிறு பங்கு இல்லை)

  இதனால் ஆதிசேடன், பெருமாளின் முழுமையான அம்சமாகவே, பலராமனாகப் பிறக்கிறான்!
  முழுமையான அம்சம் ஆதலால் "அவதாரம்" என்றே கொள்ளப்படுகிறான்!

  நின்றால் மரவடியாம் = பாதுகை ஆன ஆதிசேஷனை, அதனால் தான் ஆண்டாளும் "செம் பொற் ***கழல் அடிச்*** செல்வா பலதேவா! உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்" என்று போற்றிப் பாடுகிறாள்!

  தொண்டுக்குக் கிடைத்த பரிசு இது!
  தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!


  இதுவே பலராமன் மட்டும் அவதாரமாகக் கொள்ளப்பட்ட அவதார சூட்சுமம்!

  ஓக்கேவா ஸ்ரீதர்? :-)

  ReplyDelete
 32. ம்ம், இரண்டாம் பாகம் நல்லா இருக்கு.

  தலைப்பு தான் நெருடுகிறது. வல்லிமா சொன்ன மாதிரி வெச்சு இருக்கலாமோ? :)

  ReplyDelete
 33. இன்று முதல் நீங்க பதிவு எழுதும் பெருமாள்!னு அறியபடுவீர்கள். :p

  ReplyDelete
 34. //ambi said...
  ம்ம், இரண்டாம் பாகம் நல்லா இருக்கு.//

  அப்போ மொத பாகம் நல்லா இல்லீயா அம்பி?

  //தலைப்பு தான் நெருடுகிறது. வல்லிமா சொன்ன மாதிரி வெச்சு இருக்கலாமோ? :)//

  வச்சி இருக்கலாம் தான்! ஆனா இராமன் தான் புனித பிம்பம் ஆச்சே! அவனைப் போட்டுத் தாக்கினாத் தானே புடிச்சிருக்கு! :-)

  ReplyDelete
 35. //ambi said...
  இன்று முதல் நீங்க பதிவு எழுதும் பெருமாள்!னு அறியபடுவீர்கள். :p//

  இது என்ன இம்சை அரசன் இஷ்டைல்-ல?
  நானும் வெறுமாள்=வெறும் ஆள் தான்!

  முருகா..இந்த அம்பியிடம் இருந்து காப்பாத்துப்பா! :-)

  ReplyDelete
 36. Excellent narration of the uttara kandam avathara sampoornam. Dialogues are very powerful making it compelling to read further.

  Please choose such unconventional topics and write in the future. Why don't you write on avatarams of Devi from Devi Bhagavatham on the same lines as Srimad Bhagavatham?

  My blessings and wishes to you. I will visit this blog frequently.
  - Umapathy Sivachariar, Tiruvanaikaval

  ReplyDelete
 37. அருமையான விளக்கம். உங்களிடம் வியப்பதே இந்த பாங்குதான். ஒரு சிறு கேள்விக்கும் முழுமையாக பதில் தருகிறீர்கள்.

  சுகி சிவம், முக்கூரார், கிருஷ்ண பிரேமி போன்றோரின் சொற்பொழிவுகளை கேட்ட மாதிரி இருக்கிறது உங்கள் பதிவுகளை படிப்பது.

  மீண்டும் - உங்கள் பதிவுகளை புத்தகமாக தொகுத்து பதிந்தால் மேலும் பலர் பயன்பெறுவர்.

  ReplyDelete
 38. //
  சுகி சிவம், முக்கூரார், கிருஷ்ண பிரேமி போன்றோரின் சொற்பொழிவுகளை கேட்ட மாதிரி இருக்கிறது உங்கள் பதிவுகளை படிப்பது.
  //
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!
  வழி மொழிகிறேன்!!!

  ReplyDelete
 39. @உமாபதி சிவாச்சாரியார் ஐயா
  வணக்கம்! அடியேன் பதிவுகளுக்கு தாங்கள் வருவது ஆனைக்கா அப்பனே வருவது போல் இருக்கு! தங்கள் அன்புக்கு நன்றி!
  அடியேன் தேவி பாகவதம் கொஞ்சம் தான் அறிவேன்;
  அதை என்னை விட அருமையாச் சொல்லக்கூடிய ஓரிருவர் இங்கு இருக்காங்க! மதுரையம்பதி மற்றும் திவா போன்றவர்கள் இப்பணியைச் செய்தால் உங்களுடன் சேர்ந்து நானும் மகிழ்வேன்!

  @ஸ்ரீதர்
  புத்தகமா? கிழிஞ்சுது போங்க!

  @குமரன்
  நீங்களுமா இந்தக் கட்சியில் சேந்துக்கறீங்க? ஐயகோ!

  ஜிரா தான் என்னைய கரெக்டாப் புரிஞ்சவரு! ஆர்க்குட்-ல டெஸ்டிமோனியல் எல்லாம் போட்டிருக்காரு! :-)

  பலராம அவதாரத்துக்கு வாரியாரும் ஒரு அருமையான விளக்கம் சொல்லி இருப்பாரு வாரியார் விருந்து-ல! சட்டுனு நினைவுக்கு வரல!

  ReplyDelete
 40. அடடா..வசனங்களோடு .கண்ணெதிரே ஒரு காவியத்தையே நடத்திக் காட்டிட்டிங்க மாம்ஸ். அருமை:)))

  ReplyDelete
 41. //Why don't you write on avatarams of Devi from Devi Bhagavatham on the same lines as Srimad Bhagavatham?//

  ரீப்பீட்டே!!!!

  திரு உமாபதி சிவாச்சாரியார் அவர்களே, அப்பப்ப இந்த பதிவுப்பக்கம் வாங்க, வந்து மேலே நீங்க சொன்ன இந்த ரிக்வெஸ்டை வையுங்க.......:-)

  ReplyDelete
 42. அன்புள்ள கேஆர்எஸ் அண்ணா, இந்த பதிவினை படித்து அழுதுவிட்டேன். அப்பப்பா என்ன ஒரு விவரிப்பு. ஏதோ கண்முன் நடப்பது போல் இருந்தது! பலநாட்களாக இளையபெருமாள் வைகுண்டம் எய்தியது பற்றி யோசித்ததுண்டு, இன்று அதற்கான விடை கிடைத்துவிட்டது. அபாரமான பதிவு!
  | ஸ்ரீ மந்நாராயண சரணம் சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மதே நாராயணாய நம: |
  - அடியார்க்கும் அடியேன் கண்டன் மணி கண்டன்.

  @உமாபதி சிவாச்சாரியார் ஐயா! அனேக நமஸ்காரங்கள்! நீங்கள் ஒரு ப்ளாக் ஆரம்பித்து இணையத்தில் ஆன்மீக சேவை செய்யவேண்டும். இது எங்களின் பணிவான வேண்டுகோள்!

  ReplyDelete
 43. நல்ல பதிவு நண்பா. நன்றி..

  ReplyDelete
 44. அட, போங்க! வேணும்னே சொல்றதில்லை ஒண்ணுமே! :((((((((

  ReplyDelete
 45. சகோதர/சகோதரி பாசத்திற்கு மிஞ்சிய ஏதுமில்லை இவ்வுலகில் என்பதற்கு மற்றுமொரு சான்று, மிக நேர்த்தியாக படைத்தமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 46. //கீதா சாம்பசிவம் said...
  அட, போங்க! வேணும்னே சொல்றதில்லை ஒண்ணுமே! :(((((((( //

  என்னாச்சு கீதாம்மா? நான் ஒன்னுமே சொல்லுறதில்லையா?
  பு.த.செ.வி

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP