Sunday, January 04, 2009

மார்கழி-21: ஆன்மீக "எதிராளி"களை அடக்குவது எப்படி?

பெரும் அரசியல் தலைவர்களுக்கு எதிரிகள் ஏன் உருவாகிறார்கள்? காரணம் = அரசியல்! சரி....புரியுது! ஆனால் நல்ல ஆன்மீகத் தலைவர்களுக்கும் எதிரிகள் உருவாகிறார்களே! அது ஏன்? அங்கு என்ன அரசியல் இருக்க முடியும்? ஆன்மீகம் தானே இருக்கு? அப்புறம் என்ன? ஏன் இப்படி?

அப்பர் சுவாமிகள், திருமங்கை, இராமானுசர், வள்ளலார் - இவர்களைப் போன்றவர்களுக்கு மட்டும் ஏன் எதிரிகள் பரபர-ன்னு உருவானாங்க?
இவர்களும் எதிராளிகளுடன் பல காலம் போராட வேண்டி இருந்ததே! ஏன்? எதுக்கு? எப்படி?

* அப்பர் மிகவும் முதியவர்! மென்மையானவர்! அவருக்கு வெளியில் இருந்து எதிரிகள்! அதுவும் அவர் முன்னால் இருந்த சமணத்தில் இருந்து! - ஏன்?
* திருமங்கை மிகவும் துடிப்பு மிக்கவர்! சொல்லவே வேணாம்! அவருக்கும் எக்கச்சக்க எதிரிகள்! அதுவும் அவர் முன்னாள் படைத் தளபதிகளே!

* இராமானுசர் மிகவும் கருணை மிக்கவர்! எதையுமே வித்தியாசமாக யோசிப்பவர்! சமூக நலன் ஒட்டிய ஆன்மீக நலன் விரும்புபவர்!
அவருக்கு உள்ளே இருந்தும் எதிரிகள், வெளியில் இருந்தும் எதிரிகள்! வெளியிலாச்சும் வெறும் வெறுப்பு மட்டுமே! உள்ளே இருக்கும் சில பொல்லாத வைஷ்ணவர்கள் விஷம் வச்சிக் கொல்லவே துணிந்தார்களே! ஏன்?

* வள்ளலார் கருணை தவழும் முகம்! அவருக்கு வெளியில் எதிரிகள் இல்லை! உள்ளே எக்கச்சக்கம்! அவர் அருட்பாவை, மருட்பா என்று மறுத்து, அவரைக் கோர்ட், கேஸ் என்று பலவாறு அலைய விட்டார்களே! ஏன்?
* மகான்களுக்கு விரோதிகள் ஏன் ஏற்படுகிறார்கள்? மகான்கள் கிட்ட தெரிந்தோ தெரியாமலோ இருக்கும் சில குறைகள் தான் காரணமா?

இப்படி எதிர்ப்பவர்களை எல்லாம் எதிரி-ன்னோ, விரோதி-ன்னா மகான்கள் சபிக்க மாட்டார்கள்! இப்படி விஷயமே புரியாமல் வீம்புக்கு எதிர்ப்பவர்களுக்கு, வைணவத்தில் "மாற்றார்"-ன்னு அடைமொழி உண்டு! மாற்றார், உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண், என்று ஆண்டாளும் பாடுகிறாள்!

பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப,
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்!
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்


தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய்!
மாற்றார் உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!மகான்களுக்கு விரோதிகள் ஏன் ஏற்படுகிறார்கள்? மகான்கள் கிட்ட இருக்கும் குறைகள் காரணமா? ஹிஹி! இல்லை! மகான்கள் கிட்ட இருக்கும் நிறைகள் தான் காரணம்!:)

* மகான்களின் அப்பழுக்கற்ற ஞான யோகம்,
* அந்த ஞானத்தை செயல் வடிவில் கொண்டு வரும் கர்ம யோகம்,
* இவை இரண்டையும் இணைத்து, "தொண்டுக்கே" என்று இருக்கும் பக்தி யோகம்!
இதனால் மகான்களின் சொல் அம்பலம் ஏறுகிறது! அது சில குறுகிய அறிவுள்ளவர்களின் பொறாமையைத் தூண்டுகிறது! பொறாமை விரோதிகளைச் சிருஷ்டிக்கிறது!

அதை விட முக்கியமான காரணம், மகான்கள் வெறுமனே கதாகாலட்சேபம்-ன்னு பேசி விட்டுப் போக மாட்டார்கள்! அதைச் செயலாக்க முனைவார்கள்!
நம் கொள்கைகளுக்காக இறைவன் இல்லை! இறைவனுக்காகவே நம் கொள்கைகள்!
ஆட்களையும், ஆட்கள் உருவாக்கிய கொள்கைகளையும் பின்னுக்குத் தள்ளி, இறைவனையும், இறை அன்பையும் மட்டுமே முன்னுக்குத் தள்ளுவார்கள்! - இது இன்னும் எரிச்சலைத் தோற்றுவிக்கிறது!

அப்படி முளைத்தது தான் ஸ்ரீரங்கம் கோயில் ஸ்தனத்தார்கள் விரோதம், இராமானுசர் மீது!
அப்படி முளைத்தது தான் சைவத் திருமுறைக் கழகத்தார் விரோதம், வள்ளலார் மீது!
சரி, அதற்காக, "மாற்றார்களை" ஒழித்து விட முடியுமா என்ன? தவறல்லவா!

"மாற்றாரை" மாற்றுவது எப்படி? = "மாற்றாரின்" வலிமையை (அசட்டுப் பிடிவாதத்தை) தொலைக்க வைத்தால், மற்ற விரோதங்கள் தானே தொலையும்!
மாற்றார் வலி தொலைந்து உன் வாசற் காண்
ஆற்றாது வந்து, உன் அடி பணியுமா போலே

என்று ஆண்டாளும் இதற்கு வழி சொல்லிக் கொடுக்கிறாள்! மாற்றாரின் வலிமையை (அசட்டுப் பிடிவாதத்தை) அசைத்துப் பார்த்து, அதைத் தொலைக்கச் சொல்கிறாள்!

எதைப் பிரமாணம் என்று அசட்டுத்தனமாக நம்புகிறார்களோ, அதையே அசைத்தால் வலி தொலையும்!
இப்படி அசைத்து அசைத்துத் தான், முன்னாள் "மாற்றாரான" ஒருவரை, "போற்றார்" ஆக்கினார் நம் இராமானுசர்! திருவரங்கத்து அமுதனார் என்ற மாற்றார், பின்னாளில் போற்றுவார் ஆனார்! ஆலயச் சாவியை இராமானுசரிடம் கொடுத்து விட்டார்! அரங்கன் ஆலயத்தில் தமிழ் நுழைந்தது! (இந்தக் கதையைப் பிறகு சொல்கிறேன்)

இன்றைக்கு அரசாங்க சட்டங்கள் பல போட்டும் தமிழ் அர்ச்சனை முழு அளவில் நடக்கிறதா? ஆனால் எந்த சட்டங்களைப் போட்டு, இதெல்லாம் இராமானுசரால் செய்ய முடிந்தது?
* அவருடைய சட்டம் = பாகவத-பகவத் கைங்கர்யம்!
* அவருடைய ஆயுதம் = கடல் போன்ற கருணை!
எதிரியை எதிரியாகப் பார்க்காது, "மாற்றார்" என்று பார்த்த கருணை!
மாற்றார், உனக்கு வலி தொலைந்து, உன் வாசற் கண்,
ஆற்றாது வந்து, அடி பணியுமா போலே,
போற்றி யாம் வந்தோம், புகழ்ந்து, "ஏல்-ஓர்" எம் பாவாய்!


(மேற்கண்ட சில பத்திகள், சாண்டில்யன் எழுதிய உடையவர் வைபவம் என்னும் நூலின் அடிப்படைக் கருத்துக்கள். இந்த 21-ஆம் திருப்பாவையின் ஆச்சார்ய, சமய விளக்கத்திலும் "மாற்றார்" என்பதற்கான விளக்கம் மிகுந்து இருக்கும்!
கந்தாடை தோழப்பர், நடுவில் திருவீதிப் பிள்ளை, தமிழ் வழிபாட்டை எதிர்த்த அமுதனார், துலுக்கா நாச்சியார் குறித்து ஒப்புக் கொள்ளாத வைணவர்கள் என்று பல முன்னாள் "மாற்றார்களை", உதாரணமாகவும் காட்டுவார் பிரதிவாதி பயங்கரம் சுவாமிகள்!)ஏற்ற கலங்கள், எதிர் பொங்கி மீதளிப்ப = பாலைக் கறக்கும் கலத்தில், பால் வேகமாக நிரம்பி, வழிகிறது!
பால் கறக்கும் கலம் இரண்டு வகைப்படும் = ஏற்ற கலம்/மாற்ற கலம்
ஏற்ற கலம் = அப்போது கறந்து கொண்டிருக்கும் கலம்! மாற்ற கலம் = அடுத்து கறக்கத் தயராய் இருக்கும் கலம்!
ஏற்ற கலத்தில் இருந்து மாற்ற கலத்துக்கு மாற்றுவதற்குள், பால் பொங்கி, மீதளிக்கிறது! பீய்ச்சி அடிக்கிறது! அப்படி ஒரு செழுமையான பசுக்கள்!

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் = இப்படி தனக்குன்னு உள்ளுக்குள் மறைத்து வைக்காது, தாராளமாய்ப் பால் சொரியும் இந்தப் பசுக்கள், வள்ளல்கள்!
இறையன்பர்களும் தங்கள் சொந்தக் கொள்கைப் பிடிப்புக்காக, இறைவனைச் சமூகத்திடம் இருந்து மறைத்து வைக்கக் கூடாது! மாற்றாதே இறையன்-"பால்" சொரிய வேண்டும் என்பது உட்கருத்து!

வேதங்களின் சாரம்: ஜீவனை-இறைவனுடன் சேர்த்து வைப்பது தான்!
அதற்கு விளக்கம் சொல்கிறேன், வியாக்யானம் சொல்கிறேன் என்கிற பெயரில், தம் தனிப்பட்ட ஆச்சாரங்களை, கொள்கைகளை ஏற்றி, வேத சாரத்தை "மாற்றி" விடக் கூடாது! "மாற்றாமல்" பால் சொரியனும்!
ஜீவன்-இறைவன் சேர்தல் தான் அடிப்படை! அப்படி இருக்கும் போது, ஒரு சில ஜீவன்களுக்கு மட்டுமே-ன்னு வேதப் பொருள் உரியது-ன்னு "மாற்றி" வியாக்யானம் செய்யக் கூடாது!
எந்த வியாக்யானமும் எம்பெருமானின் "அடி"-ப்படையை ஒட்டி அமையணும்!

ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய் = இப்படிப் பால் செல்வத்தைப் பெருக்கும் ஆற்றலைப் பெற்ற நந்த கோபாலன் மகனே, கண்ணா! தூக்கம் கலைந்து விட்டதல்லவா? போதும்! எழு! எழு!

ஊற்றம் உடையாய்! பெரியாய்! = சதா, காக்கும் கருத்து உடையவனே! பெரியவனே!
உலகத்தில் உன் பிள்ளைகள், உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சட்டை செய்கிறார்கள்! உன்னை மட்டும் தான் அவர்கள் கண்டு கொள்வதில்லை!
இவர்கள் உன்னைக் கண்டு கொள்ளவில்லை என்றாலும், ஒரு நல்ல அம்மாவைப் போல, சதா இவர்களை நீ கண்டு கொள்கிறாயே! அதிலேயே ஊற்றம் உடையவனா, கருத்துடையவனா இருக்கீயே! பெரியோனே! பெரிய பெருமாளே!


உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயில் எழாய் = உலகத் தோற்றத்துக்குக் காரணமாக நின்ற தனிப் பெரும் ஜோதி! அருட் பெருங் கருணை! துயில் எழுவாய்!
* ஊற்றம் உடையாய் = பரம் => வைகுந்தப் பரம்பொருள், பரப் பிரம்மம்! கட+உள்
* பெரியாய் = வியூகம் => திருப்பாற்கடலில் குறை கேட்டு அருளும் இறைவன்!
* உலகினில் தோற்றமாய் = விபவம் => நரசிம்ம, வாமன, ராம, கிருஷ்ணாதி அவதாரங்கள்!
* நின்ற = அர்ச்சை => அனைத்து ஆலயங்களில் இருக்கும் அர்ச்சா விக்ரக இறைவன்!
* சுடரே = அந்தர்யாமி => எல்லாரின் அந்தராத்மா, அடி மனசில், சுடராய் ஒளிரும் இறைவன்!

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே!

பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒன்னே முக்கால் அடிகளில் காட்டி விடுகிறாள், கோதை! திருக்குறளில் ஐயன் வள்ளுவன் காட்டும் அதே பாணியில்!
* இறைவனுக்கே அளக்க மூன்று அடிகள் தேவைப்பட்டன!
* ஆனால் என் கோதைக்கும், ஐயன் வள்ளுவனுக்கும், ஒன்னே முக்கால் அடிகளே போதுமாகி விட்டது பார்த்தீர்களா!

தெய்வத் தமிழுக்கே உரிய பெரும்பெரும் சிறப்பு இது தானோ?


மாற்றார் உனக்கு வலி தொலைந்து = உன்னை எதிர்த்த "மாற்றார்கள்" எல்லாருக்கும், அவர்கள் வலிமை என்னும் அசட்டுப் பிடிவாதத்தைத் தொலைக்க வைத்தாய்! அவர்களின் போலி அடிப்படையை நீ அசைத்து விட்டாய்! இனி அவர்கள் தாங்கக் கூடிய பிரமாணம்-ன்னு ஒன்றும் இல்லை!
அவர்கள் அடிப்படையை விட உன் "அடி"-ப்படையே உயர்ந்தது!

உன் வாசற் கண் ஆற்றாது வந்து = அந்த முன்னாள் "மாற்றார்கள்" எல்லாரும் உன் வாசல் தேடி வருகிறார்கள்! ஆத்த மாட்டாம வந்து, ஆற்றாது வந்து, தலை கவிழ்ந்து நிற்பார்களே!

உன் அடி பணியுமா போலே = அவர்கள் உன் "அடி"-ப்படையைப் பணிவது போலே

போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து = நாங்களும் உன்னைப் போற்றி வந்தோம், புகழ்ந்து வந்தோம், பணிந்து வந்தோம்!

இது வரை எங்களையும், எங்கள் ஆச்சார-கொள்கைப் பிடிப்புகளையுமே, நாங்கள் முன் நிறுத்தி இருந்திருக்கலாம்! "எங்க கிட்ட இருக்கும் பெருமாள் சிலையை மட்டுமே மதிப்போம்! எங்களுக்குப் பிடிக்காதவங்க கிட்ட இருக்கும் பெருமாள் சிலைகளை மதிக்க மாட்டோம்" என்று நாங்கள் இருந்திருக்கலாம்! "எங்கள் அம்மனுக்கு மட்டுமே துதி செய்வோம்! எங்கள் விரோதிகளிடம் இருக்கும் அம்மன் ஆலயத்தில் பாட மாட்டோம்" என்று இருந்திருக்கலாம்!

ஆனால் இப்போது திருந்தி விட்டோம்!
தென்கலை-வடகலை, சைவம்-வைணவம், தமிழ் வழிபாடோ-வேறு வழிபாடோ எதுவாயினும், ஒன்றைப் புறம் தள்ளிச் சண்டையிடும் முன்னால்,
இது எம்பெருமானுக்கு உவக்குமா? இல்லை இதனால் அவன் மனசு வாடுமா?
.....என்று எங்களையே நாங்கள் இனி கேட்டுக் கொள்வோம்!

இனி உன்னையே முன்னிறுத்துவோம்! உன் உள்ள உகப்பே உகப்பு!
எங்களை ஏற்றுக் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!

38 comments:

 1. //(unknown blogger) said...
  :)
  //

  உந்தன் புன்னகை என்ன விலை?
  :))

  ReplyDelete
 2. //உந்தன் புன்னகை என்ன விலை?
  :))//

  USD 1500 per smile

  ReplyDelete
 3. ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
  தோற்றமாய் நின்ற பரம்பொருளே ஸ்ரீமன்நாராயணா சரணம்.

  ReplyDelete
 4. //பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒன்னே முக்கால் அடிகளில் காட்டி விடுகிறாள், கோதை!//

  ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள்.

  ReplyDelete
 5. அடியேன் இராமனுஜ தாசன் தங்கள் பாங்களை நமஸ்கரிக்கிறேன்

  மணி பாண்டி ( இராமனுஜ தாசன் )

  ReplyDelete
 6. //ஜீவன்-இறைவன் சேர்தல் தான் அடிப்படை! அப்படி இருக்கும் போது, ஒரு சில ஜீவன்களுக்கு மட்டுமே-ன்னு வேதப் பொருள் உரியது-ன்னு "மாற்றி" வியாக்யானம் செய்யக் கூடாது!
  எந்த வியாக்யானமும் எம்பெருமானின் "அடி"-ப்படையை ஒட்டி அமையணும்!//

  ஏனுங்க 100 கோடி மக்களில் ஒரு காலத்துக்கு ஒருவர் தானே பிரதமரும், அவருக்கும் கீழ் பல அமைச்சர்கள் என ஒருசிலர் தானே வரமுடியுது. மற்றவர்களெல்லாம் சராசாரி மக்கள் தானே.

  தேனிக்கள் பல என்றாலும் இராணித் தேனி கூட்டுக்கு ஒன்று தானே.

  மனம், ஒப்பீடு இவற்றையெல்லம் கடந்து பார்த்தால் உயர்வு தாழ்வு எதுவுமே தென்படாது, இயக்கத்தில் நீங்களும் ஒரு அங்கம், நானும் ஒரு அங்கம், நிலைகளை வைத்தே ஒருவர் மற்றவரிலிருந்து வேறுபடுவதாக உணர்கிறோம். அது சூழலையே உண்மை என்று நினைக்கும் (மன)மயக்கம் தான்.

  வாசனையை கடத்தும் நரம்புகள், என்றாலும், காட்சியைக் கடத்தும் நரம்புகள் என்றாலும் மூளை என்பதன் செயல்பாட்டில் அவை வெறும் கருவிகளே.

  ReplyDelete
 7. பின்னிப் பெடல் எடுக்கறீங்க...கடந்த நாலு நாளாக உங்கள் பதிவுகளை படிக்க முடியவில்லை. இன்றும் நாளையும் விட்டுப்போனதைப் படிக்க வேண்டும்.

  மாற்றார் விளக்கம் அருமை.

  //நம் கொள்கைகளுக்காக இறைவன் இல்லை! இறைவனுக்காகவே நம் கொள்கைகள்!

  திருக்கோஷ்டியுர் கோவில் கதை ஒன்று.... நம்பி பதினேழு முறை இராமானுஜருக்கு திருமந்திரம் உபதேசிக்க மறுத்துப் பதினெட்டாவது முறை, வேறு யாருக்கும் உபதேசிக்க கூடாது, மீறினால் நரகம் என்று சபதம் வாங்கிக்கொண்டு உபதேசித்தார். இராமானுஜர், திருக்கோஷ்டியுர் முன்றாவது தளத்திற்க்கு சென்று, தனக்கு நரகம் கிடைத்தாலும், பலருக்கு வைகுண்டம் கிட்டும் என்று ஊருக்கே உபதேசித்தார்.

  திருக்கொஷ்டியூர்,மதுரை அருகே சவுமிய நாரயண பெருமாள் பள்ளிக்கொண்டு இருக்கும் திருத்தலம் இரண்யனை வதம் செய்ய ஒரு கோஷ்டியாக சிவன், விஷ்னு, பிரம்மா ஆலோசனை செய்த இடம் என்பது ஐதீகம்.

  ReplyDelete
 8. //(unknown blogger) said...
  USD 1500 per smile//

  நீ சிரிச்சா பயமா இருக்கு-ன்னு எல்லாரும் சொல்றாங்களே! அது இப்பத் தான் புரியுது தங்கச்சி! :))

  ReplyDelete
 9. //Raghav said...
  ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
  தோற்றமாய் நின்ற பரம்பொருளே ஸ்ரீமன்நாராயணா சரணம்.//

  தோற்றமாய் நின்ற பரம்பொருளே-வா?
  தோற்றமாய் நின்ற சுடரே-ன்னு சொல்லுங்க! அப்போ தான் சுடரா நம்ம கிட்டயே இருப்பான்! இல்லீனா வேற எங்காச்சும் பரம், பரம் ன்னு ஓடீப் போயிறப் போறான்! ஹவுஸ் அரெஸ்ட்-ல வையுங்க! :)

  ReplyDelete
 10. //Raghav said...//

  வாங்க ராகவ்! அரங்கத்தில் இருந்து வந்தாச்சா?
  தாயார் நலமா? தென்னரங்கன் திருச் செல்வம் செளக்கியமா இருக்காளா?

  //பெரியாய்//
  பெரிய பெருமாள் எப்படி இருக்காரு?
  அவர் திருமேனி எப்படி இருக்கு?
  அவர் பகல் பத்து எப்படி இருக்கு?
  அவர் அரங்கம் எப்படி இருக்கு?
  அவர் ஆஸ்தானம் எப்படி இருக்கு?
  அவர் நடை அழகு எப்படி இருக்கு?

  ஒழுங்கா வேளைக்குச் சாப்பிடறாரா?
  ஒழுங்கா ஊரை ஏமாத்தாம எல்லாருக்கும் தரிசன மகாபாக்கியம் செய்து வைக்கிறாரா?
  இல்லை இப்பவும் ஊர் சுத்திக்கிட்டு தான் இருக்காரா? :)

  ReplyDelete
 11. //மின்னல் said...
  //பெருமாளின் ஐந்து நிலைகளையும் ஒன்னே முக்கால் அடிகளில் காட்டி விடுகிறாள், கோதை!//

  ந‌ல்ல‌ விள‌க்க‌ங்க‌ள்//

  நன்றி மின்னல்!
  பெருமாளின் ஐந்து நிலைகளுக்கும், நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான் என்ற நான்கு கோலங்களுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா? சொல்லுங்களேன்!

  ReplyDelete
 12. //மணி said...
  அடியேன் இராமனுஜ தாசன் தங்கள் பாங்களை நமஸ்கரிக்கிறேன்//

  அச்சோ! நான் ரொம்ப ரொம்ப சின்னப் பையன்!
  பெரிய வார்த்தை சொல்லாம அடியேனை ஆசீர்வதியுங்கள், மணியண்ணே!

  அடியேன் இராமானுஜ தாசானுதாசன்! தொண்டரைச் சேவித்து இருப்பேனே!

  ReplyDelete
 13. //கோவி.கண்ணன் said...
  ஏனுங்க 100 கோடி மக்களில் ஒரு காலத்துக்கு ஒருவர் தானே பிரதமரும், அவருக்கும் கீழ் பல அமைச்சர்கள் என ஒருசிலர் தானே வரமுடியுது. மற்றவர்களெல்லாம் சராசாரி மக்கள் தானே//

  என்ன சொல்ல வரீங்க கோவி அண்ணா? ஒன்னுமே புரியலை!

  பிரதமர் எல்லாம் ஒரு முகம் அம்புட்டு தான்!
  பிரதமர் = Public Servant!
  மக்கள் இஸ் நாட் சராசரி!

  //மனம், ஒப்பீடு இவற்றையெல்லம் கடந்து பார்த்தால் உயர்வு தாழ்வு எதுவுமே தென்படாது//

  ஒன்னுமே புரியலையே! :)
  தாழ்வு தென்படாது-ன்னா வேதத்தை மற்றவர்களும் ஓதலாம்-ன்னு சொல்லீறலாமே?

  //இயக்கத்தில் நீங்களும் ஒரு அங்கம், நானும் ஒரு அங்கம், நிலைகளை வைத்தே ஒருவர் மற்றவரிலிருந்து வேறுபடுவதாக உணர்கிறோம்//

  நல்லாத் தானே இருக்கீங்க? :)

  //வாசனையை கடத்தும் நரம்புகள், என்றாலும், காட்சியைக் கடத்தும் நரம்புகள் என்றாலும் மூளை என்பதன் செயல்பாட்டில் அவை வெறும் கருவிகளே//

  பயமா இருக்கு! இப்போ தனியா இருக்கும் உங்களை மோகினி அடிச்சிரிச்சா? :)

  மூளைக்கு வெறு கருவி-ன்னாலும், வாசனையை எப்படி Decode பண்ணனும், காட்சியை எப்படி Decode பண்ணனும் நல்லாவே தெரியும்! ரெண்டுத்தையும் ஒரே மாதிரி Decode பண்ண முடியாதுன்னும் மூளைக்குத் தெரியும்! :)

  ReplyDelete
 14. //Rishi said...
  பின்னிப் பெடல் எடுக்கறீங்க...//

  ஹா ஹா ஹா!
  நன்றி ரிஷி!

  //கடந்த நாலு நாளாக உங்கள் பதிவுகளை படிக்க முடியவில்லை. இன்றும் நாளையும் விட்டுப்போனதைப் படிக்க வேண்டும்//

  முப்பத்து மூவர் அமரர்க்கு பதிவையும் பின்னூட்டங்களையும் கட்டாயம வாசியுங்கள்!

  //மாற்றார் விளக்கம் அருமை//

  மாற்றார் விளக்கம் மொத்தமும் எனது இல்லீங்க ரிஷி!
  மாற்றார் விளக்கத்தை நான் கொடுத்தேன்னா, இங்கே சிலர் வேறு மாதிரி எடுத்துக்குவாங்க! அதான் பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமிகள் விளக்கத்தை எடுத்து ஆண்டேன்! அதை அடிக்குறிப்பிலும் சொல்லி இருக்கேன்!

  //இராமானுஜர், திருக்கோஷ்டியுர் முன்றாவது தளத்திற்க்கு சென்று, தனக்கு நரகம் கிடைத்தாலும், பலருக்கு வைகுண்டம் கிட்டும் என்று ஊருக்கே உபதேசித்தார்//

  ஆமாம்!
  அது தான் "உருகும்" மனம்!
  அதனால் தான் உடையவரை "தயைஏஏஏஏக சிந்தோ", "காரேய் கருணை"-ன்னு சொன்னாங்க!

  ஆச்சார்ய விளக்கத்துக்கு மாறான விளக்கம்-ன்னு தானா நினைச்சிக்கிட்டு இருக்கும் வைராக்கிய சீலர்கள், உடையவரை அப்போது கடிந்தும் கொண்டார்கள்! ஆனால் ஆசார்யர் அவரைச் சரியாகப் புரிந்து கொண்டார்! அதான் "எம்பெருமானாரே"-ன்னு அழைத்தார்!

  //திருக்கொஷ்டியூர்,மதுரை அருகே சவுமிய நாரயண பெருமாள் பள்ளிக்கொண்டு இருக்கும் திருத்தலம் இரண்யனை வதம் செய்ய ஒரு கோஷ்டியாக சிவன், விஷ்னு, பிரம்மா ஆலோசனை செய்த இடம் என்பது ஐதீகம்//

  தகவலுக்கு நன்றி!
  ஏன் திருக்கோஷ்டியூர் மட்டும் அட்டாங்க விமானம்? தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

  ReplyDelete
 15. //எங்காச்சும் பரம், பரம் ன்னு ஓடீப் போயிறப் போறான்! ஹவுஸ் அரெஸ்ட்-ல வையுங்க! :)//

  எங்க எமனேஸ்வரம் வரதராஜர் தான் என் மனதில் பல வருடமாக ஹவுஸ் அரெஸ்டில் இருக்கிறார். :)

  நான் கூப்பிடும் போதெல்லாம் உடன் வந்து பதில் அளிப்பவர்..

  ReplyDelete
 16. //ஏன் திருக்கோஷ்டியூர் மட்டும் அட்டாங்க விமானம்?//

  அட்டாங்க திவ்ய விமானம் பரமபதத்தில் உள்ளது எனவும் அஃதே திருக்கோட்டியூர் திவ்ய தேசத்திலும் உள்ளதாக தல புராணம் கூறுகிறது.

  அட்டாங்க விமானம் அஷ்டாட்சர மந்திரத்தின் மூன்று பிரிவுகளைப் போல் மூன்று தளங்களையும்,
  ஆமோதம், ஸம்மோதம், பிரமோதம், வைகுண்டமென நான்கு நிலைகளை கொண்டு விளங்குகிறது.

  ReplyDelete
 17. //Raghav said...
  எங்க எமனேஸ்வரம் வரதராஜர் தான் என் மனதில் பல வருடமாக ஹவுஸ் அரெஸ்டில் இருக்கிறார். :)
  நான் கூப்பிடும் போதெல்லாம் உடன் வந்து பதில் அளிப்பவர்..//

  ஓ...என்ன கேள்வி கேப்பீங்க? என்ன பதில் சொல்லுவாரு?

  வரதன்-ன்னாலே அன்றில் இருந்து இன்று வரை கேள்வி கேட்டா பதில் சொல்லறவரு என்பது சரி தான் போல!

  அடியேனின் சில கேள்விகளை வரதனின் திருச்செவி சார்த்தி, அடியேனுக்கு விடைகள் அறியத் தர வேணும்னு தங்களை விஞ்ஞாபிக்கிறேன் ராகவ்!

  ReplyDelete
 18. //பெரிய பெருமாள் எப்படி இருக்காரு? //

  பச்சைப் பட்டுடுத்தி ,
  திருமார்புக்கு எண்ணெய் காப்பு சார்த்தி,
  நெடிய மேனியனாய்,
  பவள வாயில் புன்னகையுடன்,

  அடடா.. பார்த்துக் கொண்டே இருந்தேன்.. வேறு எதுவும் தோன்றவில்லை. திருப்பாணாழ்வார் எப்படித் தான் வாய் திறந்து பாடினாரோ ?

  ReplyDelete
 19. //Raghav said...
  அட்டாங்க திவ்ய விமானம் பரமபதத்தில் உள்ளது எனவும் அஃதே திருக்கோட்டியூர் திவ்ய தேசத்திலும் உள்ளதாக தல புராணம் கூறுகிறது//

  நன்றி ராகவ்!

  //அட்டாங்க விமானம் அஷ்டாட்சர மந்திரத்தின் மூன்று பிரிவுகளைப் போல் மூன்று தளங்களையும்//

  அட்டாங்க விமானத்தின் மூன்று தளங்களில் ஒன்று மட்டுமே கருவறை!
  மற்ற இரண்டு நிலைகளில் உள்ள பெருமாள்கள் திருவாராதானம் கண்டருளவதில்லையாமே? அப்படியா? ஏன்?

  //ஆமோதம், ஸம்மோதம், பிரமோதம், வைகுண்டமென நான்கு நிலைகளை கொண்டு விளங்குகிறது//

  தகவலுக்கு நன்றி ராகவ்!
  நான்கு நிலைகள் என்றால் என்ன?
  மூன்று தளங்கள் என்றால் என்ன?
  தளங்களை கோயிலில் பார்க்கலாம்? நிலைகளைப் பார்க்க முடியுமா?

  ReplyDelete
 20. //Raghav said...
  பச்சைப் பட்டுடுத்தி ,
  திருமார்புக்கு எண்ணெய் காப்பு சார்த்தி,
  நெடிய மேனியனாய்,
  பவள வாயில் புன்னகையுடன்//

  மாதவிப் பந்தலில், பெரிய பெருமாளை ஏளப் பண்ணியமைக்கு, ஸ்ரீபாதம் தாங்கியான உங்களுக்கு அடியோங்கள் தெண்டம் சமர்ப்பிக்கிறோம்!

  ReplyDelete
 21. //அவர் பகல் பத்து எப்படி இருக்கு?//
  அற்புதம் அற்புதம்.. காலை கருவறையில் இருந்து சிம்ம கதியுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் ஆழ்வார்கள் சூழ, அரையர் சுவாமிகள் இன்னிசையுடன் நம்பெருமாளை பாடி பரவசப்படுத்த.. பெருமாளை மிக அருகில் தரிசிக்க முடிந்தது. சிறிது நேரம் இருந்து நம்பெருமாளை தரிசித்து, திவ்ய பிரபந்த்த சேவையும் தரிசித்து திரும்பினேன்.

  ReplyDelete
 22. //அவர் ஆஸ்தானம் எப்படி இருக்கு?
  அவர் நடை அழகு எப்படி இருக்கு?//

  நம்பெருமாள் கிருபையால், நண்பர் பிரசன்ன வெங்கடேஷ் உதவியால் சென்ற வருடம் ஏகாதசி உற்சவ வீடியோவும் கிடைத்தது... நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வைகுண்ட நிலைக்கதவம் திறக்கும் முழு திருவிழாவையும் கண்டு மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 23. //அடடா.. பார்த்துக் கொண்டே இருந்தேன்.. வேறு எதுவும் தோன்றவில்லை.//

  மற்று ஒன்றினைக் காணாவே! :)

  குட திசை முடியை வைத்து
  குண திசை பாதம் நீட்டி
  வட திசை பின்பு காட்டி
  தென் திசை இலங்கை நோக்கி

  கடல் நிறக் கடவுள் எந்தை
  அரவு அணைத் துயிலுமா கண்டு
  உடல் எனக்கு உருகு மாலோ
  என் செய்கேன் உலகத் தீரே!


  //திருப்பாணாழ்வார் எப்படித் தான் வாய் திறந்து பாடினாரோ ?//

  நல்லவேளை ஞாபகப்படுத்தினீர்கள்!
  திருப்பாணாழ்வார் - பாகம் 2 போட வேண்டும்!
  நாளை மறுநாள் "வைகுண்ட ஏகாதசி" அன்று பதிவிட முயல்கிறேன்!

  ReplyDelete
 24. //அடியேனின் சில கேள்விகளை வரதனின் திருச்செவி சார்த்தி, அடியேனுக்கு விடைகள் அறியத் தர வேணும்னு தங்களை விஞ்ஞாபிக்கிறேன் ராகவ்//

  அரங்கன் அருள் பரிபூரணமாக பெற்ற தங்களுக்கு வரதன் கூப்பிட்டவுடன் வருவானே..

  ReplyDelete
 25. //எங்களை ஏற்றுக் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!//

  ஒரு நூறு வரிகளில் எழுதியும் புரியாதது
  ஒரே வரியில் அமைந்தபின் புரிந்தது.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 26. இறைவனின் ஐந்து நிலைகளையும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இரவி. கோதை ஒன்றே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறாள் என்பது சரி தான். ஆனால் ஐயன் வள்ளுவன் எழுதியவை ஒன்றே முக்கால் அடிகள் இல்லை. குறள் வெண்பா இலக்கணப்படி ஒவ்வொரு குறட்பாவும் இரண்டு அடிகள்; இரண்டாவது அடிக்கு மூன்றே சீர்கள். அவ்வளவு தான். மூன்று சீர்கள் இருப்பதால் இரண்டாவது அடி முக்கால் அடி ஆகிவிடாது.

  ReplyDelete
 27. //மூளைக்கு வெறு கருவி-ன்னாலும், வாசனையை எப்படி Decode பண்ணனும், காட்சியை எப்படி Decode பண்ணனும் நல்லாவே தெரியும்! ரெண்டுத்தையும் ஒரே மாதிரி Decode பண்ண முடியாதுன்னும் மூளைக்குத் தெரியும்! :)//

  விதண்டாவாதத்துக்கு நான் வரலை.

  ஜீவன்-இறைவன் சேர்தல் தான் அடிப்படை! அப்படி இருக்கும் போது, ஒரு சில ஜீவன்களுக்கு மட்டுமே-ன்னு வேதப் பொருள் உரியது-ன்னு "மாற்றி" வியாக்யானம் செய்யக் கூடாது!
  எந்த வியாக்யானமும் எம்பெருமானின் "அடி"-ப்படையை ஒட்டி அமையணும்! - என்று சொன்னதற்காகத்தான் நான் அதனைக் குறிப்பிட்டேன்.

  முயற்சி செய்யும் நீங்களும் சோம்பேறியாக இருப்பவர்களும் ஒன்றா என்று எண்ணிப் பார்க்கவும். எல்லாம் ஒன்று என்று நினைப்பது நல்ல விசயம் தான். ஆனால் நடைமுறையில் எல்லாம் ஒன்று அல்ல.

  //ஆன்மீக "எதிராளி"களை அடக்குவது எப்படி?"//

  ஆன்மிக "போலிகளை" அடக்குவது எப்படி என்று ஒரு பதிவிடவும். நான் ஒரு சில நூல்களில் அறிந்த வகையில் கலியுகத்தின் லட்சனம், "இறைவனை சிறிதும் அறியாதவர்கள் அறிந்தவர்கள் போல பேசுவது தானாம்" இறைவன் என்கிற பெயரில் இருக்கும் புகழில் குளிர்காய்பவர்கள் தான் கலியுகத்தில் ஆன்மிகவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வார்களாம். போலி ஆன்மிகவாதிகளைப் பார்க்கும் போது அவை உண்மை என்றே தெரிகிறது

  ReplyDelete
 28. //கோவி.கண்ணன் said...
  முயற்சி செய்யும் நீங்களும் சோம்பேறியாக இருப்பவர்களும் ஒன்றா என்று எண்ணிப் பார்க்கவும்//

  ஹா ஹா ஹா! நான் என்ன முயற்சி செய்யறேண்ணா?
  சரி யாரு சோம்பேறியா இருக்காங்க? யார் மேலயோ கோவமா இருக்கீங்க போல! :)

  //ஆன்மிக "போலிகளை" அடக்குவது எப்படி என்று ஒரு பதிவிடவும்//

  அதான் இந்தப் பதிவு!
  படிச்சீங்களா, இல்லை தலைப்பை மட்டுமே பாத்து பின்னூட்டமா? :)

  இராமானுசருக்கு விஷம் வச்சதும் ஆன்மீகப் பயலுக தான்! இன்னும் கன்னா பின்னான்னு டார்ச்சர் கொடுத்ததும் ஆன்மீகப் போலிங்க தான்! வள்ளலாருக்கும் அப்படியே!

  அதானே பதிவில் சொல்லி இருக்கேன்! ஆன்மீக எதிராளி-ன்னா நாத்திகர்-ன்னு நீங்களா நினைச்சிக்கிட்டீங்களா? இங்கே காட்டியது ஆன்மீகப் போலிகளைத் தானே! :)

  //"இறைவனை சிறிதும் அறியாதவர்கள் அறிந்தவர்கள் போல பேசுவது தானாம்"//

  அப்படியாச்சும் பேசறாங்களே! விடுங்க! பேசிப் பேசி பொய்யானவங்களே மெய்யானவங்களா மாறிடுவாய்ங்க! :)

  ReplyDelete
 29. //Raghav said...
  //அவர் பகல் பத்து எப்படி இருக்கு?//
  அற்புதம் அற்புதம்.. காலை கருவறையில் இருந்து சிம்ம கதியுடன் புறப்பட்டு//

  மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கமா?

  //அரையர் சுவாமிகள் இன்னிசையுடன் நம்பெருமாளை பாடி பரவசப்படுத்த..//

  அருமை! அருமை!

  //பெருமாளை மிக அருகில் தரிசிக்க முடிந்தது. சிறிது நேரம் இருந்து நம்பெருமாளை தரிசித்து, திவ்ய பிரபந்த்த சேவையும் தரிசித்து திரும்பினேன்//

  பாத்தீங்களா? உங்க கிட்ட இருந்து பாதிப் பதிவை வாங்கிட்டேன்! :)
  மீதிப் பதிவை, ரங்கம் சென்றான் ராகவ்-ன்னு எழுதிப் போடுங்க! :)

  ReplyDelete
 30. //Raghav said...
  அரங்கன் அருள் பரிபூரணமாக பெற்ற தங்களுக்கு//

  :)
  எறும்பின் தலையில் பனம்பழமா?

  //வரதன் கூப்பிட்டவுடன் வருவானே..//

  அப்போ வரதராஜன் வராத-ராஜன் கிடையாது! வரும் ராஜன்-ன்னு சொல்றீங்க! :)
  சரி, அவன் கிட்டயே சில ஐயப்பாடுகளைக் கேக்குறேன்!

  இராமானுசருக்கு திருக்கச்சி நம்பி இருந்தாரு! கேட்டுச் சொன்னாரு! அடியேனுக்கு? :(

  ReplyDelete
 31. //sury said...//

  வாங்க சூரி சார்! ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கீக! நலமா? இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  //
  //எங்களை ஏற்றுக் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!//
  ஒரு நூறு வரிகளில் எழுதியும் புரியாதது
  ஒரே வரியில் அமைந்தபின் புரிந்தது//

  உண்மை!
  எனக்கும் பதிவில் பிடிச்ச வரிகள் அது! ஏல்=ஏற்றுக் கொள்! அதான் ஏல்-ஓர் எம்பாவாய்!

  ReplyDelete
 32. //குமரன் (Kumaran) said...
  இறைவனின் ஐந்து நிலைகளையும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இரவி//

  நன்றி குமரன்!

  //குறள் வெண்பா இலக்கணப்படி ஒவ்வொரு குறட்பாவும் இரண்டு அடிகள்; .... மூன்று சீர்கள் இருப்பதால் இரண்டாவது அடி முக்கால் அடி ஆகிவிடாது//

  இரண்டாம் அடியில் முக்கால் தான் இருந்தாலும், இரண்டாம் அடியை யூஸ் பண்ணியாச்சுன்னா, அது இரண்டு அடி-ன்னு கணக்கு தானே? :)

  நான் ஏதோ பாமரத்தனமாச் சொல்லிட்டேன் போல!
  மன்னிக்கவும் மதுரைக் கணக்காயனார். நக்கீரரே! :)
  குறளுக்கும் ஒன்னே முக்கா அடி-ன்னு சும்மா பேச்சு வழக்கில் சொல்லுவாங்க! அதைத் தான் சொன்னேன்! :)

  //கோதை ஒன்றே முக்கால் அடியில் சொல்லியிருக்கிறாள் என்பது சரி தான்//

  இது மட்டும் எப்படிச் சரி ஆகும்? :)

  பை தி வே, வாஷிங்கடன் டிசி-இல் ஒரு தெரு 15-3/4th St :)

  ReplyDelete
 33. //அப்போ வரதராஜன் வராத-ராஜன் கிடையாது! வரும் ராஜன்-ன்னு சொல்றீங்க! :)//

  அவர் வரம் தரும் ராஜன்..
  ”உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்” என்ற நம்மாழ்வார் பாசுரத்திற்கு வியாக்கியானம் எழுதும் போது, பெரியவாச்சான் பிள்ளை அவர்கள், “எவன்” என்று வந்தவுடன் எழுதுவதை நிறுத்தி விட்டு “உயர்வற உயர்நலம் உடையவன் எவன்” என்ற கேள்வியைக் கேட்க.. எந்த கடவுளார்களும் வரவில்லையாம்.. முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சி தனில் காட்சி தரும் பேரருளாளனே பிரத்யட்சமானாராம்.

  நீங்கள் காஞ்சிக்கு செல்ல வேண்டாம், மனதில் வேண்டிக் கொள்ளுங்கள் கட்டாயம் பதில் சொல்வான்.

  ReplyDelete
 34. பேரருளாளன் என்பதற்கு இன்னொரு விளக்கம் கேள்விப்பட்டேன்.. அரங்கனோ, திருமலையானோ அருளாளர்கள்.. காஞ்சி வரதனோ, மோட்சத்துக்கு அதிபதி, ஆக மோட்ச பிராப்தியான பேரருள் வழங்குபவன் ஆகையாலே பேரருளாளன் என்று வழங்கப்படுகிறார்.

  ReplyDelete
 35. //Raghav said...
  பேரருளாளன் என்பதற்கு இன்னொரு விளக்கம் கேள்விப்பட்டேன்..//

  எங்கே? எப்போ? யாரு சொன்னாங்க? :)

  "தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்" விளக்கம் இன்னொரு முறை பாருங்க!

  //அரங்கனோ, திருமலையானோ அருளாளர்கள்.. காஞ்சி வரதனோ, மோட்சத்துக்கு அதிபதி//

  இது ஆச்சார்ய விளக்கத்துக்கு ஏற்புடையதா?

  அகலகில்லேன் என்ற சரணாகதிப் பாசுரத்தை நம்மாழ்வார் திருமலையின் மீது செய்து மோட்சம் புகுந்ததன் பின்னணி என்னவோ?

  ReplyDelete
 36. ரவிஷங்கர்,

  உங்களது திருப்பாவை பதிவுகளில் இருக்கும் படங்கள் "சித்திரத் திருப்பாவை" புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைதானே?

  எங்கள் வீட்டிலும் "சித்திரத் திருப்பாவை" புத்தகம் இருந்தது. அது இப்போது தொலைந்து விட்டது. இந்தப் புத்தகம் இப்போது எங்கே கிடைக்கும்? இன்டெர்னெட்டில் இருக்க வாய்ய்புகள் உள்ளதா?

  ReplyDelete
 37. //Simulation said...//

  அண்ணாச்சி! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்! தினம் ஒரு பதிவு பளு தாங்க முடியலை! :)

  //உங்களது திருப்பாவை பதிவுகளில் இருக்கும் படங்கள் "சித்திரத் திருப்பாவை" புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவைதானே?//

  ஆமாம்!

  //எங்கள் வீட்டிலும் "சித்திரத் திருப்பாவை" புத்தகம் இருந்தது. அது இப்போது தொலைந்து விட்டது. இந்தப் புத்தகம் இப்போது எங்கே கிடைக்கும்? இன்டெர்னெட்டில் இருக்க வாய்ய்புகள் உள்ளதா?//

  உங்களுக்குப் படம் மட்டும் தான் வேணும்னா நான் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்!

  புத்தகம் பி.ஸ்ரீ எழுதியது! சென்னை TTD சென்டர்-ல கிடைக்கும்! அவங்க தான் கடைசியா வெளியிட்டாங்க!

  அதே படங்கள், இந்தப் புத்தகத்திலும் இருக்கு!
  http://www.sundarasimham.org/ebooks/Thiru1.pdf

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
* யாவையும் யாவரும் தானாய்,
* அவரவர் சமயம் தோறும்,
* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,
* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,
* "பாவனை அதனைக் கூடில்,
* அவனையும் கூட லாமே
"!!!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP