Monday, January 12, 2009

மார்கழி-28: கடவுளாலும் முடியாத ஒரே ஒரு காரியம்...DNA!

*முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான் என்னவன் முருகன்!
*அன்பினால் சிறுபேர் அழைத்தனமும் சீறாது "அருளுவான்" எந்தை திருமால்!
= ஏன்?

முருகனே நினைச்சாலும்,"என்-முருகன்" உறவை அழிக்க முடியாது!
You are Powerless da,before my love:)
முருகா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

அன்னிக்கு அப்படித் தான், ஒரு குழந்தை ஓடி வந்து மேலேறிக்கிச்சி! புதுசா வந்த Samsung Behold T919 வேணுமாம் விளையாட!
நான் தரவில்லை! முடியைப் பிடிச்சி இழுக்குது! கன்னத்தில் கடிக்குது! சரி, படவா என்று திட்டுவோம், ஆனால் சனியனே-ன்னு திட்டுவோமா?

தலைமுடியைப் பிடிச்சி இழுத்தாக்கா, சோறு கிடையாது என்று தெரிஞ்சா குழந்தை இழுக்குமா?
இழுத்த குழந்தை அன்று சாப்பிடாவிட்டால் மாறி மாறிக் கெஞ்சியும், கொஞ்சியும் ஊட்டுகிறோமே?

* பெற்றோர்க்கு கன்னக் கடியும் உண்டு! குழந்தைக்கு அன்னக் கடியும் உண்டு!
* அதே தான் இறைவனிடத்திலும்!
சீறுவது போல் பூச்சாண்டி காட்டி, சிரிப்-பூவாய், சிறப்-பூ அருளுவான்!
"அன்பினால்" "சிறுபேர் அழைத்தனமும்", "சீறி"-"அருளுவான்"!

கடவுளை.....ஏதோ.....
சர்வ சக்தன், சர்வ சுதந்திரன், சர்வ ஈசன் (சர்வேசன்),
சர்வ சுவாமி, சர்வ லோக பாலகன்,
சர்வ சிரேஷ்டன், சர்வ அந்தர்யாமி-ன்னு.....பல "சர்வ" போடுகிறோம்!
ஆனால் அப்பேர்ப்பட்ட கடவுளாலும் முடியாத ஒரே காரியம்.....ஒன்னு இருக்கு!
ஆகா...என்ன அது? அதைக் கோதை வெட்ட வெளிச்சமா ஆக்குறா! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,


உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!



பாடலின் விளக்கத்துக்குப் போவோம்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தாய்! மாறிக்கிட்டே இருக்காய்ங்க!
ஒரு பிறவித் தாய்க்கே இம்புட்டு பாசம்-ன்னா, 
எல்லாப் பிறவிக்கும் தாயான தாய்க்கு எம்புட்டு பாசம் இருக்கும்?

உறவுகள் ரெண்டு வகை = சரீர பந்துக்கள்! ஆத்ம பந்து!
சரீர உறவினர்கள் எப்ப வேணும்னாலும் வருவாங்க! எப்ப வேணும்னாலும் போயிருவாங்க! யாருக்கு எப்போ கோவம் வரும்-ன்னு, யாருக்குத் தெரியும்? :)

* அவங்களைப் பொறுத்த வரை = நீ முதலில் சரீரம்! அப்பறம் தான் உள்ளம்!
* ஆனா ஒரே ஒருத்தருக்குத் தான் = நீ முதலில் உள்ளம், அப்பறம் தான் உன் சரீரம்!

சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க!
இந்த அறிவியல் காலத்தில் கூட, அட்ரெஸ் தெளிவா இல்லீன்னா ஒரு பொருளைக் கொண்டு போய் கொடுப்பது சிரமமா இருக்கு!
பின் கோடு, சிப் கோடு, யூனிக் கோடு-ன்னு பல கோடுகள்! அதில்லாம தபால் அனுப்பினா திவால் தான்!
ஆனால் பிறவிகள் தோறும்...உன் கர்மாக்கள்...உன் வினைகள்...கரெக்டா உன் கிட்ட வந்து சேருதே? எப்படி?

* முகத்தைப் பார்த்து கொடுக்க முடியாது - புது உடம்பு வந்தாச்சி!
* பேரைப் பார்த்து கொடுக்க முடியாது - ஜீவாத்மா நாம ரூபம் இல்லாதவன்!
* அட்ரெஸ் பார்த்து கொடுக்க முடியாது - ஆளுக்கு அட்ரெஸ் இருக்கான்னே தெரியாது! எங்காச்சும் காட்டுக்குள்ள மிருகமாக் கூட பொறந்திருக்கலாம்!
* பேங்க் அக்கவுன்ட் பார்த்து கொடுக்க முடியாது - அதைச் சொந்தக்காரவுங்க, எப்பவோ சாப்பிட்டு, வெத்தலை-பாக்கும் போட்டிருப்பாங்க!:)


எப்படி ஒரு அடையாளம், Identification, Embedded Chip கூட இல்லாம, புண்ய-பாவக் கணக்குகள், கரீட்டா பட்டுவாடா ஆகுது? ஹா ஹா ஹா!
* இறைவனைப் பற்றி இறைவனே தான் அறிந்து கொள்ள முடியும்!
* ஒரு குழந்தையை, அதன் தாயே தான் அடையாளம் காட்ட முடியும்!


பிறந்து ரெண்டு நாளே ஆன குழந்தை...
பார்ப்பதற்கு மத்த குழந்தைகளைப் போலவே இருந்தாலும், அதன் தாய்க்குத் தன் குழந்தையை எளிதில் அடையாளம் காண முடியும் அல்லவா!
* நாம் காட்சியை மட்டும் வைத்து அடையாளம் கண்டால்...
* அம்மா வாசனை, காட்சி, குரல், சுவை, தீண்டல்-ன்னு ஒரே நொடியில் சொல்லிடுவா!

அப்படித் தான் பிறவிகள் தோறும், நம்மை இறைவனும் அடையாளம் கண்டு கொள்கிறான்! Embedded Chip எல்லாம் எதுவும் வைக்காமலேயே! :)

இப்பேர்ப்பட்ட இறைவன்...அவனாலும் முடியாத ஒரே காரியம்...* நாம்-அவன் என்கிற இந்த உறவை அழிக்கவே முடியாது!
* அதை நம்மாலும் அழிக்க முடியாது! அவனாலும் அழிக்க முடியாது!


பொறந்தாச்சு! இனி..
"நான் அம்மா" இல்லைன்னு சொன்னாலும் = அம்மா, அம்மா தான்!
"நான் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் = புள்ளை, புள்ளை தான்!
DNA மகத்துவம் அப்படி!!!

சர்வ சக்தன், சர்வ ஈசன் (சர்வேசன்) ...பல "சர்வ" போட்டாலும்...
கடைசியில்... அவன் சர்வ சரண்யன்! 

* உன் தன்னோடு - உறவேல் - நமக்கு 
= இங்கு ஒழிக்க ஒழியாது!!!

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எனக்குமான DNA-வை நீயே நினைச்சாலும் ஒன்னுமே பண்ண முடியாது! :)
அடுத்த முறை நீ ரொம்ப மக்கர் பண்ணேன்னு வையி, ஏய் பெருமாளே! DNA Test-க்கு வரீயா-ன்னு கூப்பிடுவேன்! :)

கோதை சொல்லிக் கொடுக்கும் இந்த சூப்பர் உத்தியைப் பார்க்கலாமா? வாங்க, விளக்கத்துக்குப் போகலாம்!



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம் = கறவை மாட்டுக்குப் பின்னாலேயே போய், காட்டிலே மேய விட்டு, பின்னர் சாப்பிடுவோம்!

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து = இப்படி மாடு மேய்க்கும் கூட்டம்! ரொம்ப பெருசா அறிவெல்லாம் இல்லாத ஒரு ஆயர் குலம்!
அந்தக் குலத்துக்கு ஜப-தப-ஹோமம் எல்லாம் ஒன்னும் செய்யத் தெரியாது! வியாபாரம் கூட பெருசா ஒன்னும் தெரியாது! ஞான நூல்கள் எல்லாம் படிக்கத் தெரியாது! ஆன்மீகப் பதிவு கூடப் போடத் தெரியாது! :)

உன் தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் = அந்த மாதிரியான ஒரு கூட்டத்துக்கு நடுவில், நீ வந்து பொறந்தீயே! என்னைப் பெத்த ராசா! என்ன புண்ணியம் செஞ்சோமோ நாங்க?

குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா = வெறுமனே குறை இல்லாத கோவிந்தா-ன்னு சொல்ல மனசு ஒப்பலையே!
இன்னிக்கி வேணும்னா குறை இல்லாம இருக்கலாம்! ஆனா நாளைக்கு மாறிடுவாங்களே! நீயோ, குறை "ஒன்றுமே" இல்லாத கோ-விந்தன்!


சென்ற பாட்டில் சொன்னது போல், இனி திருப்பாவை முடியும் வரை கோவிந்த கோஷம் தான்!
கோவிந்த நாமம் மிக மிக மங்களகரமானது என்று நேற்றே பார்த்தோம்!
நோன்பு முடிந்த வெற்றியில், ஒவ்வொரு பாட்டிலும், கோவிந்தனை வலிய இழுத்து, கொண்டாடுகிறார்கள்!
கோவிந்த நாம சங்கீர்த்தனம்...கோவிந்தா கோவிந்தா!

* ஆபாட மொக்குல வாடா, அடுகடுகு தண்ணல வாடா = கோவிந்தா கோவிந்தா!
* வட்டிகாசுல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா = கோவிந்தா கோவிந்தா!



உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = நீ+உறவு+நாங்கள் = அ+உ+ம = ஓம்!அகரம்=அவன்;
மகரம்=நாம்;
உகரம்=(அவன்-நாம்)உறவு!

பிரணவ சொருபத்தை இப்பாசுரத்தில் மிக அழகாகக் காட்டுகிறாள் கோதை!
எல்லாரும் பிரணவப் பொருள், பிரணவப் பொருள்-ன்னு சும்மா பேசறோமே தவிர, முருகப் பெருமான் அப்பாவுக்குச் சொன்ன பொருள் தான் என்ன?

* அதை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஏன்? பிரணவம் என்பது ரகசியமா?
* ஆனால் கோதை இதோ சொல்கிறாளே! ஊர் அறியப் போட்டு உடைத்து விட்டாளே!

ஓம் என்னும் பிரணவத்துக்குப் பொருள் தெரியாமல் தானே பிரம்மா அவதிப்பட்டார்? ஆசை முருகன் தலையில் குட்டினான்?
தெரியாத பிரம்மனுக்குப் பிறகு சொல்லிக் கொடுத்தானா?

சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் "இரு செவி" மீதிலும் பகர் என்று ஆனதுவே!
எப்படி ஒரே நேரத்தில், இரண்டு செவி மீதிலும் சொல்ல முடியும்? அருணகிரி பொய் சொல்ல மாட்டாரே! - தனிப் பதிவாய் தான் இட வேணும்!
யாரேனும் தைப் பூசத்தின் போது அடியேனுக்கு ஞாபகப் படுத்துங்கள்!


இங்கு ஒழிக்க ஒழியாது = "நீ-நான்" உறவு;  
அதை நீயே ஒழிக்க நினைச்சாலும் ஒழியாது!

ஏன் தெரியுமா?
(ஓம்)+நமோ+நாராயணாய = 1+2+5 = 8 = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டெழுத்து!
ஓம் என்பது தமிழில் எழுதும் போது, பார்க்க ஈரெழுத்து போல இருப்பினும், அது ஒரே எழுத்து தான்! அ+உ+ம சப்தம் சேர்ந்த ஏகாட்சரம்!

* உந்தன்னோடு = அ
* உறவேல் = உ
* நமக்கு = ம
அ+உ+ம = ஓம்!
அந்த உறவை, அந்த "ஓம்"-ஐ, உன்னால் கூட அழிக்க முடியுமா?
அழித்தால் உன் அஷ்டாட்சரத்துக்கே பொருள் இல்லாமல் போய் விடுமே?

ஏன்னா, அந்த "ஓம்" என்பதைச் சேர்த்தா தான் எட்டு எழுத்து! 
"ஓம்"-ஐ நீக்கிப் பாருங்கள்! 
ஏழாகி விடும்! சப்தாட்சரம்-ன்னு ஆயிரும்! :)

இப்படி ஓங்காரம் சேர்ந்தே இருக்கும் "ஒரே" மந்திரம் என்பது தானே அஷ்டாட்சரப் பெருமை!
"ஓம்" என்பதைச் சேர்த்தால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி!
வேறு எந்த மந்திரத்துக்கும் இப்படி ஓங்காரத் த்வனி, பிரணவ மயம் இல்லை!

* நம+சிவாய = 5 = பஞ்சாட்சரம்! திருவைந்தெழுத்து! - "ஓம்" என்பது அதில் இல்லை! ஓம் என்பதைப் பஞ்சாட்சரத்துடன் தனியாகக் கோர்த்து நாம தான் சொல்லணும்!
* சரவண+பவ = 6 = சடாட்சரம்! திருவாறெழுத்து! - "ஓம்" என்பதைச் சடாட்சரத்துடன் தனியாகக் கோர்த்து தான் சொல்லணும்!

* (ஓம்)+நமோ+நாராயணாய = 8 = அஷ்டாட்சரம்! திருவெட்டெழுத்து! - "ஓம்" என்பதைக் கோர்க்கவே தேவையில்லை!
ஓங்காரமாகிய பிரணவம், மந்திரத்துக்குள்ளேயே இயைந்து ஒலிப்பது தான் இதன் தனித்துவம்! அதை மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது!

அதனால் தான் இதைப் பிரணவாகாரம் என்று சொன்னான் "குரு"குகனான எங்கள் முருகப் பெருமான்!
அரங்க விமானமும் பிரணவாகார விமானம் என்றே வழங்கப்படுகிறது!

(குறிப்பு:  இதனால் பஞ்சாட்சர, சடாட்சர, ஏனைய மந்திரங்கள் எல்லாம் தாழ்ச்சி என்றோ, திருவெட்டெழுத்து மட்டுமே உசத்தி என்றோ, குறுகுறு மனமாய்க் கணக்கு போடக் கூடாது!
ஒவ்வொரு மந்திர சப்த மாத்திரமும் ஒவ்வொரு நன்மைக்கு ஏற்பட்டது! 
இது பிரணவாகாரம் என்பதைக் காட்ட வந்த மந்திரம்! அவ்வளவே! இதற்கு மேல் வீண் கற்பனைகளை, அவரவர் மனசுக்கு ஏத்தாப் போலே, உயர்ச்சி/தாழ்ச்சி-ன்னு வளர்த்துக்க வேணாம்!)

* இப்படியான பிரணவம் = உந்தன்னோடு+உறவேல்+நமக்கு! = அ+உ+ம!* அடே பெருமாளே, இப்போ அந்த உறவை ஒழியேன் பார்ப்போம் என்று கோதை சவடால் விடுகிறாள்!

புடிச்சாப்பா பாயின்ட்டை!
அவன் ஒன்னுமே பண்ண முடியாது! ஹா ஹா ஹா! :)



அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்! :)
எங்க நல்லது எது-ன்னு எங்களுக்கே தெரியாது! எங்கள் நல்லது நாடும் உள்ளங்களை நாங்களே போட்டுத் தாக்குவோம்!

ஒரு பொருள் - நேற்று நல்லதாகத் தெரியும்!
ஆனா இன்னிக்கு மாறிடும்!
நாளை மீண்டும் நல்லதாத் தெரியும்!
இப்படி "நல்லது" அறியாக் கூட்டம் நாங்க!

அன்பினால் உன் தன்னை = ஏதோ, அன்பாலேயும், உரிமையாலேயும், உன்னை
சிறு பேர் அழைத்தனமும் = என்னென்னமோ சொல்லி இருக்கோம்! எப்படி எப்படியோ திட்டி இருக்கோம்!

சீறி அருளாதே = பூச்சாண்டி காட்டுவது போல் சீறக் கூடச் சீறாதே!
சீறினாலும் அருள்வாய் அல்லவா! 
முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பாய் அல்லவா!

இறைவா, நீ தாராய் பறை = இறைவா! குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா! நீ தான் அபயம்! அபயம்!

நேற்றைய பாசுரத்திலேயே பறை என்னும் நோன்புப் பொருளைக் கொடுத்து விட்டாய்! இருந்தாலும் இன்னிக்கும் பறை தாராய்-ன்னு கேட்கிறோமே-ன்னு பாக்குறியா? கேட்டுக் கேட்டுப் பழக்க தோஷம் ஆயிருச்சா? ஹிஹி! ஏன்-ன்னு அடுத்த பாசுரத்தில் சொல்கிறோம்! உனக்கே இன்ப அதிர்ச்சி கொடுக்கிறோம்!

இப்போதைக்கு "நீ-நாங்கள்" உறவைப் பிரிக்கவே முடியாது! அதனால் தான்
* "உன்" தன்னைப் பிறவி பெறுந்தனை
* "உன்" தன்னோடு உறவேல் நமக்கு
* "உன்" தன்னைச் சிறு பேர் அழைத்தனமும்
என்று மூன்று முறை "உன், உன், உன்" என்று ஒரே பாட்டில் சொல்லி,

"நம்-அவன்" = உறவைக்
கல்வெட்டு போல வெட்டி வைக்கிறாள்..
இந்த அறியாப் பெண்! அப்பாவிச் சிறுமி!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!
அவள் வழியிலேயே, நானும்...

முருகனே நினைச்சாலும்,"என்-முருகன்" உறவை அழிக்க முடியாது!
You are Powerless da,before my love:)
முருகா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!



எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய "குறையொன்றுமில்லை" என்னும் அழியாக் காவியமான பாடலின் கரு, இந்தப் பாசுரத்தில் இருந்தே எடுக்கப்பட்டது!
குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா = குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு!

32 comments:

  1. //அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்!:)//

    அப்போ இவங்க எல்லாம் நம்ப சொந்தகார பய புள்ளைங்கன்னு சொல்லுங்க :)))

    ReplyDelete
  2. இறைவா! குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா! நீ தான் அபயம்! அபயம்!

    மனதில் உள்ள வேண்டுதல்கள் அப்படியே வந்துள்ளன.

    மிகவும் லயித்துப் படித்தேன்..

    ReplyDelete
  3. //குறையொன்றுமில்லை கோவிந்தா = குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு//

    அடடே இதற்கு இப்படியும் பொருள் வருமா :D

    மார்கழி மாசம் ரொம்ப சீக்கிரமா முடிய போகுதேன்னு feelings :D
    நீங்க ஆற்றிய மார்கழி சொற்(ஜொள்)பொழிவு ஏதாச்சும் record பண்ணி வைச்சு இருக்கீங்களா :D?
    சென்று வருகின்றேன் என் செல்ல அண்ணாவே :D

    ReplyDelete
  4. //நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
    //

    அதைத்தான் செய்தேன்

    ReplyDelete
  5. இறைவன் ஒரு மாபெரும் நாத்திக வாதி, ஏனென்றால் இறைவனுக்கு மற்றொரு இறைவன் கிடையாது !

    :)

    ReplyDelete
  6. //Raghav said...
    மிகவும் லயித்துப் படித்தேன்..//

    அடியேன் எழுதிய திருப்பாவைப் பதிவுகள் (விளக்கங்கள்-ன்னு சொல்லிக்கலை)...

    அதில் மிகவும் "லயித்து" எழுதியது இந்தப் பதிவு தான்!....

    "லயித்து எழுதினீங்களா?" என்று என்னிடம் அடிக்கடி கேட்கும் என் தம்பி பாலாஜி, துணைவியார், குழந்தையின் பேரைச் சொல்லி,

    கோதையின் கோவிந்த நாமார்ச்சனையில் காணிக்கை ஆக்குகின்றேன்!

    ReplyDelete
  7. //உன் தன்னோடு - உறவேல் நமக்கு - இங்கு ஒழிக்க ஒழியாது// என்பதற்கு கொடுத்த விளக்கம் அருமை
    அதை ஓங்காரத்தோடு ஒப்பிட்டதும் அருமை

    ReplyDelete
  8. DNA - கலக்கிட்டிங்க தல :))

    ReplyDelete
  9. //υnĸnown вlogger™ said...
    //அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்!:)//

    அப்போ இவங்க எல்லாம் நம்ப சொந்தகார பய புள்ளைங்கன்னு சொல்லுங்க :)))//

    அதே அதே!
    நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஜிஸ்டர்! :)

    ReplyDelete
  10. //υnĸnown вlogger™ said...
    மார்கழி மாசம் ரொம்ப சீக்கிரமா முடிய போகுதேன்னு feelings :D//

    ஹா ஹா ஹா!
    அப்பாடா-ன்னு இருக்குமே உனக்கு? :)
    அடுத்து டகால்ட்டி ராமாயணம் தான் ஜிஸ்டர்! மாப்பி கோப்பி கேட்டுக்கிட்டே இருக்கான்! :)

    //நீங்க ஆற்றிய மார்கழி சொற்(ஜொள்)பொழிவு ஏதாச்சும் record பண்ணி வைச்சு இருக்கீங்களா :D?//

    எதுக்கு கேட்கிறே? :)

    //சென்று வருகின்றேன் என் செல்ல அண்ணாவே :D//

    எங்கே? எங்கே?

    ReplyDelete
  11. //கோவி.கண்ணன் said...
    //நேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே!
    //

    அதைத்தான் செய்தேன்//

    என்ன செஞ்சீங்க? அதைச் சொல்லுங்க! மைனஸ் குத்தா? :)

    ReplyDelete
  12. //கோவி.கண்ணன் said...
    இறைவன் ஒரு மாபெரும் நாத்திக வாதி, ஏனென்றால் இறைவனுக்கு மற்றொரு இறைவன் கிடையாது !
    :)//

    ஹா ஹா ஹா
    கடவுள் இல்லை-ன்னும் சொல்ல மாட்டான்!
    நானே கடவுள்-ன்னும் சொல்லிக்க மாட்டான்!

    ஆனா தானே கடவுள்-ன்னு பல வழிகளில் காட்டிப்பானோ? :)

    ReplyDelete
  13. //மின்னல் said...
    //உன் தன்னோடு - உறவேல் நமக்கு - இங்கு ஒழிக்க ஒழியாது// என்பதற்கு கொடுத்த விளக்கம் அருமை
    அதை ஓங்காரத்தோடு ஒப்பிட்டதும் அருமை//

    நன்றி மின்னல்!
    அது ஆச்சார்ய விளக்கம் அன்று!
    உன் தன்னோடு - அ
    உறவேல் - உ
    நமக்கு - ம்
    என்பது தோனின விளக்கம் மட்டுமே! ஆனா அது உண்மையும் கூட!

    ReplyDelete
  14. //கோபிநாத் said...
    DNA - கலக்கிட்டிங்க தல :))//

    மருத்துவர் கோபியின் பாராட்டே பாராட்டு! :)

    ReplyDelete
  15. பிரணவ விளக்கம் அருமை. சிபாரிசு செய்பவள் அகரத்தில் இருக்கிறாளா? உகரத்தில் இருக்கிறாளா?

    ReplyDelete
  16. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    என்ன செஞ்சீங்க? அதைச் சொல்லுங்க! மைனஸ் குத்தா? :)
    //

    மைனஸ் குத்தா ? நான் அஷ்டதிக்கு பாலகனில் இல்லை. :)

    ReplyDelete
  17. //அதே அதே!
    நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஜிஸ்டர்!//

    கண்ணு பட்டுட போகுது அண்ணா :P


    //ஹா ஹா ஹா!
    அப்பாடா-ன்னு இருக்குமே உனக்கு? :)
    அடுத்து டகால்ட்டி ராமாயணம் தான் ஜிஸ்டர்! மாப்பி கோப்பி கேட்டுக்கிட்டே இருக்கான்! :)//

    இன்னும் 2 வருசதுக்கு இந்த பதிவுலகை விட்டே ஓடனும் போல இருக்கே....

    //எதுக்கு கேட்கிறே? :)//

    கேட்கனும்ன்னு ஆசை கேட்குறேன்.இது என்ன கேள்வி அண்ணா :D
    என்னை சந்தேக கண்ணோடு பார்த்துட்டே இருக்குறது உங்களுக்கு வேலையா போச்சு

    //எங்கே? எங்கே?//

    நேத்து கட் அடிச்சுட்டு ஊரு சுத்த போனேன் :D
    அத சொல்ல வந்தேன் :D

    ReplyDelete
  18. MS அம்மா பாட்டு எழுதினது ராஜகோபலாச்சாரி! President of India was very fond of Venkat!

    ReplyDelete
  19. இந்தக்குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா வரிகளை வைத்து எளிமையாய் திரு ராஜாஜி எழுதியபாடல் எம் எஸ் அவர்களால் பாடப்பட்டு உலகின் எல்லா மூலைகளிலும் பலரது இதயங்களை வருடிக்கொண்டிருக்கிறதே!

    //சீறுவது போல் பூச்சாண்டி காட்டி, சிரிப்-பூவாய் சிறப்-பூ அருளுவான்//

    கோபம் உள்ள இடத்துலதானே குணம் இருக்கும்!

    //இப்பேர்ப்பட்ட இறைவன்...அவனாலும் முடியாத ஒரே காரியம்...
    * நாம்-அவன் என்கிற உறவை அழிக்கவே முடியாது!
    * அதை நம்மாலும் அழிக்க முடியாது! அவனாலும் அழிக்க முடியாது!
    பொறந்தாச்சு! இனி "நான் அம்மா" இல்லைன்னு சொன்னாலும் அம்மா, அம்மா தான்! "நான் புள்ளை" இல்லைன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்! DNA மகத்துவம் அப்படி!!!
    /////


    அப்பாடி! எப்படிப்பா இப்படி சிந்திக்கறீங்க! ரொம்பவே என்னைக்கவர்ந்தவிளக்கம் இது!


    ///
    ஞான நூல்கள் எல்லாம் படிக்கத் தெரியாது! ஆன்மீகப் பதிவு கூடப் போடத் தெரியாது! :)//

    உம்மாச்சிக்கிட்ட பொய் சொல்லக்கூடாது!!!

    ReplyDelete
  20. பிறந்து ரெண்டு நாளே ஆன குழந்தை...பார்ப்பதற்கு மத்த குழந்தைகளைப் போலவே இருந்தாலும், அதன் தாய்க்குத் தன் குழந்தையை எளிதில் அடையாளம் காண முடியும் அல்லவா!
    * நாம் காட்சியை மட்டும் வைத்து அடையாளம் கண்டால்...
    * அவள் வாசனை, காட்சி, குரல், சுவை, தீண்டல்-ன்னு ஒரே நொடியில் சொல்லிடுவா!
    அப்படித் தான் பிறவிகள் தோறும், நம்மை இறைவனும் அடையாளம் கண்டு கொள்கிறான்! Embedded Chip எல்லாம் எதுவும் வைக்காமலேயே! :)

    >>>>>>>>>>>>>>>>>...
    இந்தக்குழந்தைகளுக்கும் அம்மாவாசனை நன்கு தெரியும்!!! எத்தனைபேர் கைக்குத்தாவினாலும் பெற்ற தாயின் கைக்குவரும்போது அதன் முகத்தைப்பார்க்கணுமே!!! இறைவன் பல நேரங்களில் குழந்தைதானோன்னு தோன்றுகிறது!!! அதனாலதான் நாமும் சிறுபேர் அழைத்துச்செல்லமாய் அப்பப்போ சீறுகிறோமோ?:)

    ReplyDelete
  21. குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா - இறைவா, நீ தாராய் பறை!
    >>>>>
    இந்தப்பறை என்ன என்றுஅண்மையில் ஒரு வைபவம் போனபோது அங்குவந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகரைக்கேட்டேன்..அவர் சொல்கிறார் அது இறைவனே நினைத்து மகிழ்ந்து நமக்குத்தரும் சிறப்புமிக்க சீர் என்கிறார். ஆனாலும் பாடலுக்குப்பாடல் பறை என்பதின் பொருள் வேறாகிறது அல்லவா ரவி இதை நீங்க தெளிவாபறைஞ்சா தேவலை!
    பறை என்பதின்

    ReplyDelete
  22. திருப்பாவைல ஒரு கொடி(உங்க மாதவி) வருகிறது
    ஒருகுன்று(கோவர்த்தனம்) ஒரு நகர்(வடமதுரை) வருகிறது. ஒரு தீவு(இலங்கை) ஒருத்தி , யசோதை(அ) தேவகி . ஒருவிளையாட்டுப்பொருள் கைப்பந்து..கவனித்தீர்களா?:)

    ReplyDelete
  23. உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = நீ+உறவு+நாங்கள் = அ+உ+ம = ஓம்!
    அகரம்=அவன்; மகரம்=நாம்(ம); உகரம்=உறவு!
    >>>>>>>>>>>>>>>
    அ உ ம விற்கு இப்படியொரு சிந்தையா?!அனைத்திற்கும் முதலானஅகரமாகிய அவனின் அன்புக்கடலில் மகரங்கள் தானே நாம்?
    பொருத்தமாகவே இருக்கிறது உங்க விளக்கம் இன்னமும் விரிவாக எழுத ஆவல்தான் போகிவேலைகள் அழைக்கின்றன! பிறகுவரேன்.

    ReplyDelete
  24. நான் இன்று சென்னை வந்தவுடன்தான் இதை படிக்க இந்த லிங்க் கிடைத்தது. மாறிய காலத்திற்க்கு ஏற்றாற்போல் உள்ளது படைப்பு.
    தொடர்க உங்களின் எண்ணங்கள்.

    ஆமாம் எங்கே ரொம்ப நாளா எழுதக்காணோம்.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  25. //Anonymous said...
    நான் இன்று சென்னை வந்தவுடன்தான் இதை படிக்க இந்த லிங்க் கிடைத்தது. மாறிய காலத்திற்க்கு ஏற்றாற்போல் உள்ளது படைப்பு.
    தொடர்க உங்களின் எண்ணங்கள்//

    வாங்க ராகவன்! நன்றி!
    சங்கரர் மாறிய காலத்துக்கு ஏற்றாற் போலத் தானே ஷண்மதம் கண்டார்!

    மாறிய காலத்துக்கு ஏற்றாற் போலத் தானே சங்கரரும், இராமானுசரும், வள்ளலாரும், விவேகானந்தரும் களம் அமைத்தார்கள்? அதே தான்! :)

    அவர்கள் அனைவரின் நோக்கம்:
    காலத்துக்கு ஏற்றாற் போல் மாறிக்கிட்டு காம்ப்ரமைஸ் செய்து கொள்வது அல்ல!
    காலம் மாறினாலும், அடியவர்களுக்கு இதைத் தவறாது கொண்டு செல்லணும் என்பது தான் ஒரே குறிக்கோள்!

    //ஆமாம் எங்கே ரொம்ப நாளா எழுதக்காணோம்//

    ஆகா...அப்பப்ப எழுதிக்கிட்டு தானே இருக்கேன்! :)
    பதிவு மின்னஞ்சல்கள் அவ்வளவாக அனுப்புவதில்லை!

    ReplyDelete
  26. சங்கரர், இராமானுஜர், வள்ளலார், விவேகானந்தர் வழி வந்த எங்கள் அருமை அண்ணன் அகில உலக ஆன்மிக சூப்ரீம் ஸ்டார் ஐயா கண்ணபிரான் இரவிசங்கர் வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க!

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    சங்கரர், இராமானுஜர், வள்ளலார், விவேகானந்தர் வழி வந்த//

    ஹா ஹா ஹா
    ரொம்ப நேரம் சிரிச்சேன் குமரன்!

    ஆபீஸ்-ல என்னைய சுத்தி ஒரே கூட்டம்! ஏற்கனவே லேட்டு! செம எரிச்சல்-ல இருந்தேன்! அப்ப-ன்னு பாத்து, மின்னஞ்சலில் இந்தப் பின்னூட்டம்! - பாத்தவுடன் முகம் மலர சிரிச்சேன் பாருங்க! பக்கத்தில் இருக்கவங்க எல்லாம் ஹிஹி....

    இமெயில் பாத்து சிரிச்சா, அது ஏதோ காதல் விவகாரமாம்!
    இன்னிக்கி காலைல ராகவன் மின்னஞ்சல் வேற பாத்து சிரிச்சி வைச்சேனா...ஆபீஸ் மக்கள் முடிவே கட்டிட்டாங்க! புது ஜெர்சியில் ஏதோ விஷயம்-ன்னு :)

    ReplyDelete
  28. //எங்கள் அருமை அண்ணன்//

    இது உங்களுக்கே அடுக்குமா?
    மத்த சில பேரை எல்லாம் நான் அண்ணா-ன்னு கூப்பிடறேன்! உங்களை மட்டும் குமரன் அண்ணா-ன்னு மரியாதையா கூப்பிடலை-ன்னு கோபம் தானே? மொதல்ல இருந்தே குமரன்-ன்னு சொல்லிச் சொல்லி பழகிருச்சி! இப்போ மாத்த முடியலை! மன்னிச்சு விட்டுருங்களேன்! :)

    //வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க! வாழ்க வாழ்க!//

    அது என்ன ஆறு கணக்கு? :)
    முருகா! முருகா!

    ReplyDelete
  29. இனொரு வாரியார் பிறந்ததாக எண்ணுகிறேன் உங்கள் பதிவுகளை படிக்கும் போது .

    ReplyDelete
  30. //Ganapathi said...
    இனொரு வாரியார் பிறந்ததாக எண்ணுகிறேன் உங்கள் பதிவுகளை படிக்கும் போது//

    ஹா ஹா ஹா
    வாரியார் = தமிழ் மலை! முருக மலை! பேச மட்டு்மே செய்யாது, தொண்டிலும் மலை!
    அடியேன் மலை ஓரத்தில் ரொம்ப சின்ன மடு-ங்க!

    கருத்துக்களை மட்டும் சரி பார்த்து சொல்லுங்க! அது போதும்! :)

    ReplyDelete
  31. நான் கொஞ்சம் ஏதோ புண்ணியம் பண்ணியிருக்கேன், இங்கு உங்களிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு. I am so blessed. Such in depth writing, thank you.

    amas32

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP