Thursday, September 04, 2008

இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1

"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்டு வர இம்புட்டு நேரமா ஆகும்?"

"அதில்லீங்க அத்தை! வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது! இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு!
வரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது! அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்!"

"நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம்! ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு பாத்தா, எப்பவும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கியே!
வீடுன்னா வேலைகள் இருக்கத் தான் செய்யும்! நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும்! இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை? ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா?"

"அதில்லீங்க அத்தை..."

"பதிலுக்குப் பதில் பேசாதே! உங்க வீட்டுல செல்வச் செழிப்பிலே வளர்ந்த பொண்ணுன்னா, தண்ணி இறைக்கக் கூடவே ஒரு வேலையாளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்!
அதை விட்டுட்டு, உனக்கும் சேர்த்து நாங்களே வேலை செய்யணும்-னா எப்படி? எங்களுக்குத் தான் செய்ய வேணாம்! உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல?"

தேசிகன் திருக்கிணறு

அத்தை-அத்துழாய் உரையாடல்! அத்தை சொற்களால் அர்ச்சிக்கிறாள்! அத்துழாய் பாவம் சின்ன பொண்ணு! பெரிய நம்பியின் திருமகள்!
அதுவோ புதுசாய் புகுந்த புகுந்த வீடு! எல்லாரும் நல்லவங்க தான்!
ஆனால் உள்ளதையும் சரி, உள்ளத்தையும் சரி, அன்பினால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை! சில சமயம் சொற்கள் வெளிப்பட்டு விடுகின்றன!

அவர்கள் வீட்டில் வேண்டுமானால் அவை சாதாரண சொற்களாய் இருக்கலாம்! ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே! :)
தீந்தமிழ்ப் பாசுரங்களே ஓதி ஓதி வளர்ந்த வீட்டுப் பெண்ணொருத்தி, திக்-திக் வார்த்தைகளைக் கேட்டால் என்ன செய்வாள் பாவம்! தன் அப்பா பெரிய நம்பிகளிடம் சொல்லாமல் சொல்லிக் கண் கலங்குகிறாள்!

"நம் வீட்டில் எது நடந்தாலும், அண்ணாவிடம் சொல்வது தானேம்மா வழக்கம்! போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்!"


நம்-அண்ணாவிடம் செல்கிறாள் அத்துழாய்! அது யார் நம்-அண்ணா?
நம்-ஆழ்வார் தெரியும்! அது யார் நம்-அண்ணா?
நம்-கோயில்-அண்ணன் என்று மொத்த திருவரங்கமும் உரிமை கொண்டாடிய உடையவர் தான் அந்த நம்-அண்ணா!

"அட, இதெல்லாம் குடும்ப விஷயம்! இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா? பேசாம நகரும்மா! வந்தோமா, சேவிச்சோமா, பிரசாதம் வாங்கினோமா, போயிக்கிட்டே இருக்கணும்!"

இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது! அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர்! குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான்! அந்தரங்க விஷயமும் அந்த-"ரங்க" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்!
காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை?


"என்னம்மா...சொல்லு அத்துழாய்! நீர் இறைக்க, உங்க வீட்டிலிருந்து கூடவே ஒருவரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்-னா சொன்னாங்க?"

"உம்...சுவாமி!"

"முதலியாண்டான்......"

"சொல்லுங்கள் குருவே!"

"நம் அத்துழாய் பொருட்டு, இந்தத் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய உமக்கு விருப்பமா?"

"அடியேன்! சித்தம்!"
ஆகா...என்ன இது? முதலியாண்டான் சகல சாஸ்திர பண்டிதராச்சே! அவரைப் போய்....சேச்சே!
கோயிலில் கூட இது போன்ற வேலைகளை எல்லாம் "படிக்காத அடியார்கள்" அல்லவா செய்வார்கள்?

இவர் சொல்லின் செல்வர்! வாயைத் திறந்தால் வண்டமிழும் வடமொழியும் கொட்டுமே! இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர்! இவரையா இப்படி? படிச்ச படிப்புக்கு ஒரு கெளரவம் வேண்டாம்?

ஏதோ கோயில் கைங்கர்யம்; குருவுக்கு முடியலைன்னாலும் பரவாயில்லை! போனாப் போகுது-ன்னு செஞ்சிடலாம்!
யாரோ ஒரு சம்பந்தி! அவிங்க வீட்டுக்குப் போய் தண்ணி இறைச்சிக் கொடுக்கணுமாம்! இது என்ன மானக்கேடு? இதுக்குத் தீர்த்தக் கைங்கர்யம்-னு பெத்த பேரு வேற!

ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க! பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க! அவிங்கள இப்படிச் செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

முதலியாண்டான் மறைபொருள் வித்தகர்! இவருக்கா இப்படி? உடையவர் தான் சொன்னார் என்றால் இவருக்கு எங்கே போனது புத்தி? எதிர்த்துப் பேச வேண்டாம்? ஏன் இப்படி மென்மையாகவே போகிறார்கள்? கொஞ்சம் கூடச் சரியில்லை!


(திருப்பாற்கடலில் வாயிற் காத்தருளும் ஜய விஜயர்களோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்...)
"என்னப்பா, ஜய-விஜயா,......நானும் வேதம் எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு! யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை! நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல! செல்லப் போகிறேன்! என்னுடன் வருகிறீர்களா?"

"சுவாமி...நாங்கள் பரிபூர்ண சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! சரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்ற தங்கள் வாக்கு பொய்யாகலாமா?
நாங்கள் மீண்டும் பிறவி எடுத்தால், செய்த சரணாகதிக்கு ஏது மதிப்பு?
நீங்கள் ஆணையிட்டால் நாங்கள் இங்கேயே இருக்கவே பிரியப்படுகிறோம்!"

(கருமுகில் முகம் இன்னும் சற்றே கருக்கிறது...)

"சுவாமி...தங்கள் முகம் மாறலாமா? சரி, நாங்கள் உம்முடனேயே வருகிறோம்!"

"கடனே என்று சொல்ல வேண்டாம்! யோசித்துச் சொல்லுங்கள்! மேலும்....,
என்னுடன் உங்களை அழைத்துச் சென்றால், கதையில் நீங்கள் வில்லன்களாகத் தான் வருவீர்கள்! ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள்! திட்டித் தீர்ப்பார்கள்! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!"

"சுவாமி, ஆத்திகர்கள் எங்களை வசைபாடுவார்களா? அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும்? உம்மிடம் சரணாகதி செய்த எங்களுக்கு, இது தானா நீங்கள் செய்யும் உபகாரம்?

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை!
ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ!
"


* முதலியாண்டான் சென்றாரா? ஜய-விஜயர்கள் சென்றார்களா?
* ஏன் செல்ல வேண்டும்? எதற்குச் செல்ல வேண்டும்?
* "என்" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா?
* "என்" ஞானம், "என்" கர்மம், "என்" பக்தி - இதெல்லாம் "என்"னாவது?
"நான்" செய்த இதுக்கெல்லாம் மதிப்பில்லையா?

(அடுத்த பதிவில்....)

42 comments:

 1. இதுதான் உம்மிடம்......
  சரியான இடத்தில் தொடருமுன்னு சொல்லாமக் கொள்ளாமல் ஓடுவது.....

  சீக்கிரம் வாருமைய்யா:-)

  ReplyDelete
 2. //துளசி கோபால் said...
  இதுதான் உம்மிடம்......
  சரியான இடத்தில் தொடருமுன்னு சொல்லாமக் கொள்ளாமல் ஓடுவது.....//

  வாங்க டீச்சர்,
  அந்தச் சின்னப் பொண்ணு பேரும் துளசி தான்!
  தீந்தமிழில் அத்துழாய்!

  ReplyDelete
 3. அடுத்த பதிவு எப்போ?
  ஷோபா

  ReplyDelete
 4. //ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க! //

  அதுக்குள்ள பதினாலாம் ஆழ்வார் வந்திட்டாரா? யார் யாருக்கு பட்டம் கொடுக்கறது? அதுக்குதான் நாங்க தனியா உரூம் போட்டு யோசிச்சுக் கொடுக்கிறோமில்ல.

  * முதலியாண்டான் சென்றாரா? ஜய-விஜயர்கள் சென்றார்களா?
  போனாங்களே. ஒரு தடவை இல்லை இரண்டு தடவை இல்லை மூணுவாட்டி போய்ட்டு வந்தாங்கன்னு நினைக்கிறேன். (இரண்ய சகோதரர்கள். இராவணன்/கும்பகர்ணன், கம்சன்/சிசுபாலன்)

  * ஏன் செல்ல வேண்டும்? எதற்குச் செல்ல வேண்டும்?
  அது என்னமோ துர்வாசர் சாபம் ஒண்ணு இருக்குன்னு சொல்லுவாங்க. துர்வாசர் இதற்க்காகவே இருக்கற கேரக்டர்ல்ல.

  * "என்" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா?

  உங்க தகுதிக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள் வருமே :-)

  * "என்" ஞானம், "என்" கர்மம், "என்" பக்தி - இதெல்லாம் "என்"னாவது? இதுக்கெல்லாம் மதிப்பில்லையா?

  பெருமாளிடம் போய் 'உன்'னிடத்தில் 'என்'னைக் கொடுத்தேன் என்று சொல்லிவிடுங்கள். "எல்லாம் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்".

  ReplyDelete
 5. சூப்பர்! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...!

  ReplyDelete
 6. //இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1 //

  இவை ஒன்றும் இல்லா அடியேனைப் போன்ற அடியவர்கள் நிலை என்ன?

  ReplyDelete
 7. //போய் நம் அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்!"//

  பெரிய நம்பிகளுக்கும் அவர் அண்ணன் தானா?. இராமானுஜருக்கு, பெரிய நம்பிகளும் ஒரு ஆச்சார்யர் தானே?

  ReplyDelete
 8. ஆங்
  சொல்ல மறந்துட்டேனே!
  Happy Teachers Day, டீச்சர்!
  இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. //Shobha said...
  அடுத்த பதிவு எப்போ?//

  வாங்க ஷோபாக்கா...
  இது ஒரு தொடர்பதிவு! ஸோ, வந்துக்கிட்டே இருக்கப் போவுது! :(

  ReplyDelete
 10. //கவிநயா said...
  சூப்பர்! அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்...!//

  நன்றிக்கா! திங்கட் கிழமை இடுகிறேன்!

  ReplyDelete
 11. //Raghav said...
  //இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1 //

  இவை ஒன்றும் இல்லா அடியேனைப் போன்ற அடியவர்கள் நிலை என்ன?//

  நீங்களே இப்படிப் பயமுறுத்தினால்,
  ஆணவத்தால் அலைகழியும் "என்" போன்றவர்களின் நிலை என்ன ராகவ்?

  1. இவை ஒன்றும் இல்லா நான்
  2. மற்ற அடியவர்கள் நிலை என்ன?
  என்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்!

  ReplyDelete
 12. //Raghav said...
  பெரிய நம்பிகளுக்கும் அவர் அண்ணன் தானா?. இராமானுஜருக்கு, பெரிய நம்பிகளும் ஒரு ஆச்சார்யர் தானே?//

  இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.

  பெரிய நம்பிகள் இராமானுசருக்கு ஆச்சார்யர் தான்!
  இராமானுசரை விட வயதில் மூத்தவர்கள் பலரும் அவர் திருக்குழுவில் இருந்தார்கள் தான்!

  ஆனால், நம்-கோயில்-அண்ணன் என்ற பட்டம் பெற்ற பின், மொத்த திருவரங்கமும் இராமனுசரை "அண்ணா" என்றே அழைக்கத் துவங்கி விட்டது!

  என்னைப் பெத்த ராசா என்று சில தாய்மார்கள் அழைப்பார்கள் இல்லையா? அதைப் போல!

  ReplyDelete
 13. //1. இவை ஒன்றும் இல்லா நான்
  2. மற்ற அடியவர்கள் நிலை என்ன?
  என்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்!//

  புரியவில்லையே அண்ணா.. ஞானம், கடமை, பக்தி, பணிவு இல்லா அடியேனை எம்பெருமானுக்கு பிடிக்காதா?. "அரங்கன் திருத்திப் பணி கொள்வான்" என்று தானே ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

  ReplyDelete
 14. Sridhar Narayanan said...
  //ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க! //

  //அதுக்குதான் நாங்க தனியா உரூம் போட்டு யோசிச்சுக் கொடுக்கிறோமில்ல//

  ஹா ஹா
  பயப்படாதீங்க அண்ணாச்சி! அது எப்பமே உங்க உரூம் உரிமை தான்!

  நான் சும்மா, என்னையே திட்டிக் கொள்ளணும் போல இருந்துச்சி! அதான் திட்டிக் கொண்டேன்!


  //போனாங்களே. ஒரு தடவை இல்லை இரண்டு தடவை இல்லை மூணுவாட்டி போய்ட்டு வந்தாங்கன்னு நினைக்கிறேன்//

  ஜயவிஜயர்கள் விருப்பப்பட்டு உடனே எல்லாம் போகலை! டகால்ட்டி பண்ணித் தான் போக வச்சாரு!
  ஆனா முதலியாண்டானோ, தானே விரும்பிச் செல்லுவார்!
  அடுத்த பாகத்தில் தெரியும் பாருங்க!

  //(இரண்ய சகோதரர்கள். இராவணன்/கும்பகர்ணன், கம்சன்/சிசுபாலன்)//

  அது கம்சன்/தந்தவக்கிரன்

  //துர்வாசர் இதற்க்காகவே இருக்கற கேரக்டர்ல்ல//

  தவறு தவறு! துர்வாசர் பெரும் சக்தி உபாசகர். கோபம் இருக்கும் இடத்தில் குணமும் உண்டு!

  ஜய விஜயர்களைச் சபிப்பது, பிள்ளை ரிஷிகள் நான்கு பேர்! சனகர்-சனந்தனர்-சனாதனர்-சனத்குமாரர்!

  //உங்க தகுதிக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள் வருமே :-)//

  தகுதியா? அடியேன் விகுதிக்குக் கூடத் தேற மாட்டேன்!

  //'உன்'னிடத்தில் 'என்'னைக் கொடுத்தேன் என்று சொல்லிவிடுங்கள். "எல்லாம் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்"//

  'உன்'னிடத்தில் 'என்'னைக் கொடுத்தேன் என்று எல்லாரும் தான் சொல்லுறோமே! :)

  ReplyDelete
 15. //ஆணவத்தால் அலைகழியும் "என்" போன்றவர்களின் நிலை என்ன ராகவ்?//

  ஆணவமா உங்களுக்கா?? "வைணவ வாரியார்" என்று உங்கள் அன்பு நண்பரால் அழைக்கப்படுபவர் நீங்கள்.

  "நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!"

  என்று தாங்கள் முந்தைய பதிவில் சொன்னதைப் போல் ஆணவம் உங்களை அண்டவே அண்டாது..

  ReplyDelete
 16. //Raghav said...
  புரியவில்லையே அண்ணா.. ஞானம், கடமை, பக்தி, பணிவு இல்லா அடியேனை எம்பெருமானுக்கு பிடிக்காதா?//

  வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
  யாண்டும் இடும்பை இல!

  எம்பெருமானுக்குப் பிடிக்காது என்ற ஒன்றில்லை! வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்!

  கண்ணாடி போல!
  எதை உடுத்திக் கொண்டு நிற்கிறோமோ, அதைத் தான் காட்டும்!

  இந்தப் பிடிப்பு, பிடிக்காது எல்லாம் நமக்குத் தான்!
  ஞானம், கடமை, பக்தி, பணிவு என்ற இவற்றில் எதை உடுத்திக் கொண்டு நின்றால் மிகவும் அழகாகத் தெரிவோம்???


  நமக்கு எது பரிபூர்ண நன்மையோ, அது தான் இறைவனுக்குப் பிடிக்கும்!

  நமக்கு எது பரிபூர்ண நன்மையைக் கொடுக்கும்?
  - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா?

  ஸோ,
  இறைவனுக்குப் பிடித்தமானது எது?
  - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா?

  ReplyDelete
 17. //"அரங்கன் திருத்திப் பணி கொள்வான்" என்று தானே ஆழ்வார்கள் பாடியுள்ளனர்//

  உண்மை!
  இவை ஒன்றுமில்லா அடியவர்களின் நிலை என்ன என்று கேட்டீர்கள்?

  அவர்கள் அத்தனை பேரையும் திருத்திப் பணி கொள்வான்.

  எப்படித் திருத்த முடியும்?
  எது இருந்தால் திருந்த முடியும்?
  திருந்த வேண்டும் என்பதற்கு முதலில் எது வேண்டும்?
  ஞானம்? கடமை? பக்தி? பணிவு?

  ReplyDelete
 18. //1. இவை ஒன்றும் இல்லா நான்
  2. மற்ற அடியவர்கள் நிலை என்ன?
  என்று நீங்களே பதிலையும் சொல்லி விட்டீர்கள்!//

  ஹா ஹா
  புரியவில்லையா? இல்லை அறி-வினாவா?

  ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந்து" சொல்லும் போது
  * பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது!

  மற்ற அடியவர்கள் நிலை என்ன? என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது!

  ஞானமா? கர்மமா? பக்தியா? பணிவா? :)

  ReplyDelete
 19. //ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந்து" சொல்லும் போது
  * பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது!

  மற்ற அடியவர்கள் நிலை என்ன? என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது!//

  ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம். இருப்பினும் மனதில் ஒரு மிகப்பெரிய கேள்வி. தனியாக பேசும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 20. //Raghav said...
  "நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!"//

  சிறிய திருவடிகளின் மனசு யாருக்கு வரும்?
  ஒரு பக்தனை அந்தப் பக்தனே அறிவான்! ஒரு பாகவதன் மனம் அந்தப் பாகவதனுக்கே தெரியும்!

  வீடணனை அனைவரும் ஏகமனதாகத் தள்ளிய போது, எம் அன்பன் ஆஞ்சநேயனே அவன் "அசுர" உள்ளத்தை அறிந்தான்!

  //என்று தாங்கள் முந்தைய பதிவில் சொன்னதைப் போல் ஆணவம் உங்களை அண்டவே அண்டாது..//

  ஹா ஹா! நல்ல நம்பிக்கை!ஒன்னும் சொல்லுறத்துக்கு இல்ல!
  அவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன்! Nothing Stays! மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்! :)

  ReplyDelete
 21. //Raghav said...
  //ஒன்றும் இல்லா நான் என்று உதட்டால் அல்லாது "உணர்ந்து" சொல்லும் போது
  * பணிவும், *ஞானமும் வந்து விடுகிறது!

  மற்ற அடியவர்கள் நிலை என்ன? என்று அக்கறையாய் கேட்கும் போது கடமை என்னும் கர்மாவும், பக்தியும் வந்து விடுகிறது!//

  ஆஹா என்ன ஒரு அருமையான விளக்கம்.//

  :)
  தொடர் பதிவுகளில்
  ஞானயோகம்,
  கர்மயோகம்,
  பக்தியோகம்,
  இன்ஸ்டன்ட் சாம்பார் போல என்று சொல்லப்படும் சரணாகதி
  - இவை ஒவ்வொன்றாய் மனதில் உள்ளவாறு சொல்கிறேன்!

  அப்படியே அத்வைதம், த்வைதம், கிறிஸ்துவம்-ன்னு $$$ பதிவுகளுக்குப் போய் விடலாம்! :)

  //இருப்பினும் மனதில் ஒரு மிகப்பெரிய கேள்வி. தனியாக பேசும்போது விளக்கம் கேட்டுக்கொள்கிறேன்//

  :)

  ReplyDelete
 22. //அவ்வளவு சீக்கிரம் அடியேனை நம்பிறாதீங்கன்னு மட்டும் சொல்லிக்கறேன்!//

  இப்புடி சொல்லுறத நம்ப வேணாம்னு சொல்றீங்களா?? :)

  //Nothing Stays! மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்! :)//

  சரி, அறிந்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் வந்து சொல்லட்டும். என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.

  ReplyDelete
 23. பதிமூணாம் ஆழ்வார் யாருப்பா.ரவி, தொடர்னா சஸ்பென்சோட நிறுத்தணும்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா:)

  நியுயார்க் ஆழ்வார் எத்தனையாவது இடம்??

  ReplyDelete
 24. ரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-)

  //இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.//

  எப்ப? எங்கே? ரொம்ப மறதியாகிப்போச்சு இப்ப எல்லாம்.

  ReplyDelete
 25. //Raghav said...
  //Nothing Stays! மிக அருகாமையில் தான் என்னைச் சரியாக அறிவார்கள்! :)//

  சரி, அறிந்தவர்கள் இங்கு யாராவது இருந்தால் வந்து சொல்லட்டும். என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்//

  :)
  போதும்! பகவத் குணானுபவங்களை மட்டும் பேசுவோமே!

  ReplyDelete
 26. //வல்லிசிம்ஹன் said...
  பதிமூணாம் ஆழ்வார் யாருப்பா//

  அப்படி எல்லாம் யாரும் இல்லீங்க வல்லியம்ம!

  //ரவி, தொடர்னா சஸ்பென்சோட நிறுத்தணும்னு யாராவது சொல்லி இருக்கிறார்களா:)//

  யெஸ்ஸூ!
  என் ஆசைத் தம்பி சொல்லி இருக்காரு!

  //நியுயார்க் ஆழ்வார் எத்தனையாவது இடம்??//

  மொத்தம் 660 கோடி ஆழ்வார்கள்! உலக மக்கள் தொகை!

  ReplyDelete
 27. //குமரன் (Kumaran) said...
  ரெண்டு கதையையும் நல்லா இணைக்கிறீங்க இரவி. :-)//

  இன்னும் இணைக்கவே இல்லையே குமரன்!
  ஓ நீங்க பதினாறு அடி பாய்ஞ்சி, இணைச்சிட்டீங்களா?

  //
  //இது பற்றி முன்னரே ஒரு முறை குமரன் விவாதித்து இருந்தார்.//

  எப்ப? எங்கே? ரொம்ப மறதியாகிப்போச்சு இப்ப எல்லாம்//

  கூகுளாண்டவர் இருக்க பயமேன்?

  இறைவன் வாங்கிய அடி/இடி - பாகம் 1
  http://madhavipanthal.blogspot.com/2006/10/1.html

  ReplyDelete
 28. ரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். :)

  ReplyDelete
 29. //இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது! அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர்! குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான்! அந்தரங்க விஷயமும் அந்த-"ரங்க" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்!//

  போடு தப்பல்!

  ReplyDelete
 30. ஜீவி சாரின் "போடு தப்பல்" மதுரையை நினைவில் கொண்டு வந்துவிட்டது. மதுரைக்காரங்களுக்கே உரிய சொற்றொடர் அது! ம்ம்ம்ம்ம்ம்., பதிவைப் படிக்கலை, ரோமாயணம் எழுதிட்டீங்களோனு பார்க்கவந்தேன். அப்புறமா வந்து படிச்சுட்டுப் பின்னூட்டறேன், வரேன் கட்டாயமா!

  ReplyDelete
 31. என்ன, கீதா மேடம்? அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண்டிருக்கேன்?..
  மதுரைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே?..
  (ரகஸ்யமாக) 'போடு தப்பல்'ன்னா
  'அப்படிப்போடு' 'அடிசக்கை' அப்படீன்னு தானே அர்த்தம்?..

  ReplyDelete
 32. //இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? //

  நண்பர் ரவி,முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே?

  அன்பை மீறியதுதானே அனைத்தும்?

  அழுதால் உன்னைப் பெறலாமே" என்றுதானே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றார்??????

  ReplyDelete
 33. // மதுரையம்பதி said...
  ரொம்ப சுவாரஸ்யமா போகுது... அடுத்த பகுதிக்கு வெயிட்டிங். :)
  //

  இன்னிக்கி ராவுல போட்டுறண்ணே!
  ராவோட ராவா! :)

  ReplyDelete
 34. //ஜீவி said...
  போடு தப்பல்!//

  அப்படியே காவிரி பதிவுக்குள்ள வந்தா மாதிரி இருக்கு ஜீவி சார்! :)

  ReplyDelete
 35. //கீதா சாம்பசிவம் said...
  ஜீவி சாரின் "போடு தப்பல்" மதுரையை நினைவில் கொண்டு வந்துவிட்டது. மதுரைக்காரங்களுக்கே உரிய சொற்றொடர் அது!//

  போச்சு கீதாம்மா போச்சு!
  ஜீவி சார் ஒங்கள இன்னிக்கு விட மாட்டாரு! பாருங்க அவர் அடுத்த பின்னூட்டத்தை!

  //ம்ம்ம்ம்ம்ம்., பதிவைப் படிக்கலை, ரோமாயணம் எழுதிட்டீங்களோனு பார்க்கவந்தேன்.//

  ரோமாயணமா?
  மை ஃபாதர் இஸ் நாட் இன் தி பேரல் - உபயம்: துளசி டீச்சர் :)

  ReplyDelete
 36. //ஜீவி said...
  என்ன, கீதா மேடம்? அது தஞ்சாவூர் பாஷைன்னா நெனைச்சிண்டிருக்கேன்?..
  மதுரைன்னு ஒரே போடா போட்டுட்டீங்களே?..//

  ஜீவி சார்
  கீதாம்மா ஒருகா, போடு தபால் -ன்னு நினைச்சிப் படிச்சிட்டாங்களோ? :)))

  //(ரகஸ்யமாக) 'போடு தப்பல்'ன்னா
  'அப்படிப்போடு' 'அடிசக்கை' அப்படீன்னு தானே அர்த்தம்?..//

  அப்படித் தான் நானும் கேள்விப்பட்டிருக்கேன்! தஞ்சாவூர்ல சீவலைப் போட்டுக்கிட்டே பல பேரு சொல்லுற வார்த்தை இது! கரந்தைல பல தமிழாசிரியர்கள் கூடச் சொல்லிக் கேட்டிருக்கேன்!

  ReplyDelete
 37. //அறிவன்#11802717200764379909 said...
  நண்பர் ரவி,முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்களே?
  அன்பை மீறியதுதானே அனைத்தும்?//

  உஷ்....
  இப்படி சஸ்பென்சை எல்லாம் உடைக்கக் கூடாது அறிவன் சார்! :)

  //அழுதால் உன்னைப் பெறலாமே" என்றுதானே மாணிக்கவாசகர் சொல்லிச் சென்றார்??????//

  அடுத்த பகுதி சூடண்டி!

  அன்பில் அகங்கார அன்பும் உண்டு! பணிவான அன்பும் உண்டு!
  பணிவான அன்பே அழும்! வினையேன் அழுதால் உனைப் பெறலாமே!

  ReplyDelete
 38. நண்பர் ரவி..சார்,மோர் எல்லாம் வேண்டாமே...
  :)))))
  இனிய,இணைய நட்பாகத்தான் உங்களை நான் பார்க்கிறேன் !

  ReplyDelete
 39. //அது கம்சன்/தந்தவக்கிரன்//

  அண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங்க வீட்டில. கரெக்டான்னு சொல்லுங்க :-)

  தந்தவக்கிரன்னு கதையும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.

  ReplyDelete
 40. //அண்ணாச்சி அது சிசுபாலன்/தந்தவக்கிரன் -னு சொல்றாங்க வீட்டில. கரெக்டான்னு சொல்லுங்க :-)//

  அண்ணாச்சி மன்னிக்கவும்! ஏதோ அவ-ஜூரத்துல சொல்லிட்டேன்!
  சிசுபாலன்/தந்தவக்கிரன் என்பதே சரி!
  வீட்டில் சொன்னதே சரி! :)

  //தந்தவக்கிரன்னு கதையும் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை//

  இத்தனைக்கும் சுப்ரபாதப் பதிவில் சிசுபாலன்/தந்தவக்ரன் கதையை முன்னரே சொல்லி உள்ளேன்!
  ஆனா இங்கிட்டு உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்! :)

  இந்தாங்க சுட்டி்
  http://verygoodmorning.blogspot.com/2007/08/14.html#comment-4858604799641510268

  ReplyDelete
 41. //உங்க பதிலில் மாத்தி உளறிட்டேன்! :)//

  அதெப்படிங்க இப்படி பொறுப்பில்லாம உளறலாம்? உங்களை நம்பி பெட் கிட் எல்லாம் கட்டி ஏமாந்து போயிட்டேனே. ஹ்ம்ம்ம்..... :-(

  ReplyDelete
 42. //Sridhar Narayanan said...
  அதெப்படிங்க இப்படி பொறுப்பில்லாம உளறலாம்?//

  இப்படிக் கேட்பது பாலாஜியோன்னு நினைச்சேன்! அப்பறம் பேரைப் பாத்தா அது ஸ்ரீதர் அண்ணாச்சி! :)

  //உங்களை நம்பி பெட் கிட் எல்லாம் கட்டி ஏமாந்து போயிட்டேனே. ஹ்ம்ம்ம்..... :-(//

  அச்சச்சோ அழுவாதீங்க அண்ணாச்சி!
  யார் கிட்ட பெட்டு? என்ன பெட்டு?
  நான் வேணும்-ன்னா நட்ட ஈடு தரவா? :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP