Showing posts with label சரணாகதி. Show all posts
Showing posts with label சரணாகதி. Show all posts

Sunday, January 31, 2010

"அறிவு கெட்ட" பீஷ்மரா? "மகா ஞானி" பீஷ்மரா??

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
தலைப்பைக் கண்டு என்னமோ ஏதோ-ன்னு பயந்துறாதீங்க! பீஷ்மர் கதாபாத்திரத்தை மிகவும் நேசிப்பவர்கள் ஓவரா டென்ஷனும் ஆவாதீங்க :)
.....இன்று பீஷ்ம ஏகாதசி! (26-Jan-2010)

பெரிய ஞான யோகியும்...சிறந்த கர்ம யோகியுமான...பீஷ்ம பிதாமகர்!
அவரோட நினைவு நாள் இன்று!

* பீஷ்மர் => "அறிவு கெட்ட" பீஷ்மரா?.... "பக்த பெரும்" பீஷ்மரா??
* நாம் எல்லாம் => "அறிவு கெட்ட" ஆத்திகர்களா? "அன்பு கொண்ட" நெஞ்சங்களா?? :)


பீஷ்மன் = தமிழில், வீடுமன்! ="பயங்கரமான சபதம் எடுத்தவன்"
என்ன சபதம்?-ன்னு தான் உங்களுக்கே தெரியுமே!

அப்பாவுக்கு ஒரு பெண்ணின் மேல் = கண்டதும் "காதல்"!
பெண்ணின் அப்பனுக்கோ...ராஜ்ஜியத்தின் மேல் = கண்டதும் "காதல்"!
தன் பெண்ணின் பிள்ளையே நாடாள வேண்டும்!
அந்தப் பிள்ளை இன்னும் பொறக்கக் கூட இல்ல! திருமணம் கூட நடக்கலை! அதற்கு முன்பே இப்படி ஒரு Family Planning! :)

அப்பாவைக் கலந்து பேசாமலேயே, இந்த நிபந்தனை பிள்ளை பீஷ்மனுக்கு ஓக்கே தான்!
ஏன்னா, அவனுக்கு அப்பா சந்தோஷம் மட்டுமே முக்கியம்!


ஆனால் அவனுக்குப் பின், அவன் வம்சத்தவர்கள் வந்து அரச உரிமை கொண்டாடினால்? - கணக்கு போட்டார் காதலியின் அப்பா!
அப்பப்பா! வீடுமன் விடு விடு என்று செய்தான் ஒரு சபதம்! சாதாரண சபதமா அது? பாஞ்சாலி சபதத்தை விடப் பெரும் சபதம்!

"நான் கல்யாணம் செய்து கொண்டால் தானே, எனக்கு வம்சத்தவர் உருவாவார்கள்? 
நான் கடைசி வரை பிரம்மச்சாரியாகவே இருக்கிறேன்! இது சத்தியம்! சத்தியம்!!"

ஒரு இளம் வாலிபன்...மீசையெல்லாம் ஆசை மணப்பவன்...பருவ வாலிபன் செய்யக் கூடிய சபதமா இது?
நாம செய்வோமா? ஃபிகருக்காக ஃபிரெண்டையே கழட்டி விட்டுற மாட்டோம்? :))

இளம் வயதிலேயே பீஷ்மனின் உயர்ந்த மனசு தெரிகிறது அல்லவா? எதையும் தாங்கும் இதயம் தெரிகிறது அல்லவா?
ஒரு "பிள்ளை" பீஷ்மன், "தியாகி" பீஷ்மன் ஆனான்! ஆக்கப்பட்டான்!

விஷயம் கேள்விப்பட்டு, இப்பேர்ப்பட்ட பிள்ளையை மெச்சிய அவன் தந்தை, அவனுக்கு ஒரு நல்ல வரத்தைக் கொடுக்கக் கூடாதோ?
"நீயாக விரும்பும் போது, மரணம் அடைவாய்" - என்ற ஒரு பெரிய சாபத்தை, வரமாகக் கொடுத்து விட்டார் அப்பா! :(

அது எப்படிச் சாபம் ஆகும்-ன்னு கேக்கறீங்களா?
* இறுதி என்னிக்கி-ன்னு தெரியாமலேயே மறைந்தால், அது மரணம்!
* இறுதி என்னிக்கி-ன்னு தாமே தெரிவு செய்து மறைந்தால், அது தற்கொலை அல்லவா? :)
இப்போ சொல்லுங்க...அந்த அப்பா கொடுத்தது வரமா? சாபமா??

தான் விரும்பும் போது தான் மரணம் என்றால்...எத்தனை பேர் "போக" ஆசைப்படுவோம்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :)
* ஆருயிர் நண்பனையே, ரெண்டு மாசம் கழிச்சிக் கூப்பிட்டுக்கலாம்...என்னும் சோம்பல் சக்ரவர்த்திகளாகிய நாம்...
* ஆருயிர் கவ்வும் எமனையா ரெண்டு மாசம் கழிச்சிக் கூப்பிடப் போறோம்? ஒத்திப் போட்டு ஒத்திப் போட்டே, ஓட்டி விட மாட்டோமா என்ன? :)

இறைவன், சில விஷயங்களை, Expiry Date ஒட்டாமல், நம்ம கிட்ட இருந்து "மறைத்து வைப்பது" - நம் நன்மைக்குத் தானோ???
ஆனால் பீஷ்மன் விஷயத்தில், இந்தக் கணக்கு தப்பியது! அன்று முதல்...தப்பு தப்பாய்த் தப்பியது!



பீஷ்மன் = சபதம் = தியாகம்!
இந்த வட்டத்துக்குள்ளேயே அடங்கிப் போனான் ஒரு சிறு பிள்ளை!

பல நூல் படித்தவன்! = அறிவாளி!
பல வேல் பிடித்தவன்! = வெற்றி வீரன்!
"தன் மனசுக்கு எது நல்லது"-ன்னு படுதோ, அதன் படி மட்டுமே நடப்பவன்! - நல்ல குணம் தானே-ன்னு நினைக்கத் தோனுது இல்லையா? ஆமாம், நல்ல குணம் தான்! மேலே படிங்க!

யாருக்காகச் சபதம் செய்தானோ, அந்தத் தந்தை மறைந்து விட்டார்! கங்கைக் கரையில் சடங்குகள் செய்கிறான் பிள்ளை!
மந்திரங்கள் முழங்க அர்ப்பணிப்புகள் அளிக்கிறான்!
திடீரென்று மண்ணில் இருந்து தந்தையின் கரம் மட்டும் மேலே எழுகிறது.....அவன் அளிக்கும் அர்ப்பணிப்புகளைப் பெற!

பிள்ளையோ, அவன் மெத்தப் படித்த சாஸ்திர நூலில் சொல்லி இருப்பதால், தந்தையின் கைகளில் அளிக்காது, சடங்கிலே வைக்கப்பட்டிருக்கும் "குசம்" என்னும் புல்லில் அர்ப்பணத்தை விடுகிறான்!
ஆர்வம் துடிக்க எழுந்த தந்தையின் கரம், கைகளை உள்ளே இழுத்துக் கொள்கிறது!

இத்தகைய "நெறி மாறாத" பீஷ்மன்...வளர்ந்து வளர்ந்து...
"பீஷ்மர்" ஆனார்...
"பீஷ்மாச்சாரியர்" ஆனார்...
"பீஷ்ம பிதாமகர்" ஆனார்...

* ஒருவன் தன் செயல்களை மட்டும் தவறாது செய்து வந்தால் போதாதா? => கர்ம யோகி பீஷ்மர் உருவாகிறார்!
* ஒருவன் தன் ஞானத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் போதாதா? => ஞான யோகி பீஷ்மர் உருவாகிறார்!

பரசுராமனுக்கே அடங்காத யோகி...
சகுனிக்கு அடங்கிப் போகும் "யோகி" ஆனார்!!!
:)))

ஆனால்........
ஒரு "மாடு மேய்க்கும் இடை மகன்"..."ஆயர்களின் ஆண்மையற்ற தலைவன்", அத்தினாபுரத்துக்குத் தூது வந்து-போனதில் இருந்து...
பீஷ்மரின் மனத்தில் என்னவோ ஒரு யோசனை....அரித்துக் கொண்டே இருக்கு!!


தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே...வாங்க...போவோமா போர்க்கோலம்?

அதோ......................
* கையிலே உழவு கோலும்,
* பிடிச்ச சிறுவாய்க் கயிறும்,
* தூசரிதமான திருமுடிக் கற்றையும்,
* தேர்த் தட்டிலே நாற்றின திருவடிகளுமாய்...

அவன் மேல் பீஷ்ம பிதாமகரின்...மின்னல் வேக அம்புகள்...
பறந்து பறந்து, பருந்து போல் அவன் முகத்தைக் கொத்த...

அன்று கன்னியர் வருடிக் கண்பட்ட முகம்,
இன்று புண்ணியர் வருடிப் புண்பட்ட முகமாய்ப் போனதே!!!

சாரதி: "பீஷ்மரே! எதிராளியை விட்டுவிட்டு, ஆயுதமில்லாத தேரோட்டி மேல் பாய்கிறீரே! என்னவாயிற்று உமக்கு? இது தான் தர்மமா?"

பீஷ்மர்: "கிருஷ்ணா, முடிந்தால் நீயும் ஆயுதம் எடுத்து, உன்னைக் காத்துக் கொள்ளேன்! இது ராஜாங்க யுத்தம்! இதில் ராஜாங்கம் மட்டும் தான் தர்மம்!"

சாரதி: "ஹா ஹா ஹா! நல்ல தர்மம் தான்! மூன்று தலைமுறை வயசாகியுமா உங்கள் ராஜாங்க ஆசை அடங்கவில்லை?"

பீஷ்மர்: "கிருஷ்ணா! எனக்கு ராஜாங்க "ஆசை" இல்லை! ஆனால் ராஜாங்க "தர்மம்" உண்டு!
எதுவாகிலும், அதை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்! என் தர்மம்! - அது மட்டுமே தர்மம்!"

சாரதி: "கிழட்டுச் சிங்கமே! "உம்" தர்மமா? எதைச் சொல்கிறீர்கள், "உம்" தர்மம், "உம்" தர்மம் என்று?



* வயதான தந்தைக்கு பிள்ளையே மறுமணம் செய்து வைத்தது தான் தர்மமா?
* பின்னால், அதே தந்தையின் கைகளுக்குத் தர்ப்பணம் விட மறுத்தது தான் தர்மமா?

* பெண்களை, மணப்பவர்கள் தான் கைப்பிடிக்க வேண்டும்! ஆனால், மூக்கை நழைத்து...ஏதோ தம்பிக்குப் பொம்மை வாங்கிக் கொடுப்பது போல், மனைவி வாங்கிக் கொடுத்தீரே, அதான் தர்மமா?

* ஒன்றும் அறியாப் பேதைப் பெண் அம்பை! அவள் காதலன் வெல்லும் முன்னரே, நீர் திடுதிப்பென்று நுழைந்து பற்றிக் கொண்டீர்...
அவளுடைய காதலை அறிந்து கொண்ட பின்னால்...மாற்றி வாங்கி வந்துவிட்ட கடைச் சரக்கைப் போல் கை கழுவி விட்டீர்! அவளைக் குறுக்கும் நெடுக்கும் ஓட விட்டீரே - அதான் தர்மமா?

* அந்தப் பேதை முருகப்பெருமானிடம் மாலை வாங்கி, உத்திரத்தில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டாளே! - அதான் தர்மமா?

* மாத விலக்கான பாஞ்சாலியின் சேலையை, மான விலக்காகப் பற்றி இழுத்த போது...
இன்று "என்" தர்மம் "என்" தர்மம் என்று பேசும் இதே வாய்....அன்று அபலை தர்மம் பேசாது இருந்ததே! - அதான் தர்மமா?

* அவள் கடைசி நம்பிக்கையாக, போயும் போயும் உம்மை கையெடுத்துக் கும்பிட்டாளே!
அப்போது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு, "என்னை எதற்குக் கேட்கிறாய்?...போய் உன் கணவனைக் கேள்!" என்று பேசியதே, ஒரு வாய்! இதற்கு என் தொடை மீது வந்து உட்கார் என்று சொன்னவன் எவ்வளவோ மேல்!!

* அவள், அவள் கணவனைத் தான் கேட்க வேண்டும் என்றால்,
உன் தம்பி, அவன் மனைவியைத் தானே கேட்க வேண்டும்?
நீர் எதற்கு மூக்கை நுழைத்து "மனைவி வாங்கி" கொடுத்தீர்? தர்மம், உம் வசதிக்கு வசதி மாறுபடுமா?"

செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரம் தான்
வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால்!
ஆங்கவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன்.
தீங்கு தடுக்கும் திறம் இலேன் - என்றந்த
மேலோன் தலை கவிழ்ந்தான்!!!



பீஷ்மர்: "கண்ணா, என்னை வார்த்தையால் கொல்லாதே! ஆயுதத்தால் கொன்று விடு!
நான் செய்து கொடுத்த சத்தியம் அப்படி! அதை எப்படியும் காத்தே ஆக வேண்டும்! அதுவே "என்" கர்மம்!

சாரதி: "சத்தியமா? அப்படி பெருசா, என்ன சத்தியம் செய்து கொடுத்தீங்க பீஷ்மரே?"

பீஷ்மர்: "நான் எனக்கென்று வம்சத்தை வளர்த்துக் கொள்ளாது, இந்த அரியணைக்கே கடைசி வரை விசுவாசமாக இருப்பேன்!
இந்த வம்சத்தின் வளர்ச்சிக்காகவே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்! - இதுவே பீஷ்ம சபதம்!"

சாரதி: "ஹா ஹா ஹா! நல்ல சத்தியம் தான்!
சரி.....இப்போ இந்த வம்சத்தின் "வளர்ச்சிக்கு" வழி கோலுகிறீர்களா? இல்லை இந்த வம்சத்தின் "அழிவுக்கு" வழி கோலுகிறீர்களா??
வம்சமே அழிந்தாலும் பரவாயில்லை! ஆளில்லா அரியணைக்கு விசுவாசம் காட்டப் போகிறீர்கள்? = இதானே உம்ம சத்தியம்?"


பீஷ்மர்: "ஐயோ கண்ணா!"

சாரதி: "உம் தம்பிகள், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைக்குப் பிள்ளைகள், என்று பல தலைமுறைகள் செத்து விட்டாலும்...
நீர் மட்டும் இன்னும் அட்டை போல் ஒட்டிக் கொண்டு இருப்பது இதற்குத் தானா? ச்சீ...

பீஷ்மர்: "ஐயோ...."

சாரதி: "உம் சத்தியம் - வம்சத்தின் வாழ்வுக்காகச் செய்யப்பட்டதா? இல்லை தாழ்வுக்காகச் செய்யப்பட்டதா?
யோசித்துப் பார்க்க மாட்டீர்களா? ஒரு வம்சமே வாழாது போனாலும் பரவாயில்லை! உமக்கு "உம்" சத்தியம் மட்டுமே முக்கியம்? அப்படித் தானே?"

பீஷ்மர்: "கண்ணாஆஆஆஆ!
நான் கர்ம யோகத்தில் இருப்பவன்! ஏது வந்தாலும் "என்" கர்மங்களை மட்டும் விடாது செய்து கொண்டே செல்பவன்! இதுவே "என்" தர்மம்!"

சாரதி: "கர்மங்களைத் **தான்** செய்வதாக நினைக்காமல் செய்வது  கர்ம யோகமா? இல்லை மூச்சுக்கு மூச்சுக்கு "என்" கர்மம், "என்" கர்மம் என்று உங்களை நீங்களே பிடித்துத் தொங்குவது கர்ம யோகமா, பீஷ்மரே?"

பீஷ்மர்: "ஆஆஆஆ!"

சாரதி: "ஹே பார்த்திபா, இந்தக் கிழச் சிம்மத்தின் கர்மயோகம் இனி மேலாவது அடங்கட்டும்! எடு காண்டீபம்! தொடு பாண்டீபம்!!"


கண்ணன் கருமுகத்தில் சிவ-முகம்! முகமெல்லாம் குருதி கொப்பளிக்கத் தேரோட்டுகிறான் தேவப் பெருமாள்!
தாத்தாவாயிற்றே என்று தயங்கும் பார்த்தன்.....

சாரதி: "ஹே! அர்ச்சுனா! வீண் வேடிக்கையா காட்டுகிறாய்?...இதோ நானே இறங்கி முடிக்கிறேன் அந்த மூர்க்க முதல்வன் பீஷ்மனை!

* போரிலே ஆயுதம் ஏந்தேன் என்று கண்ணன் செய்த சத்தியம் பொய்யாகட்டும்!
* போரிலே தோழனைக் காத்தான் என்ற கண்ணன் மனம் மட்டுமே மெய்யாகட்டும்!


ஹே பீஷ்மாஆஆஆ....
சத்தியம் தவறிய கண்ணன்...இதோ உன் முன்னே!"

தேர்த் தட்டிலே, ஆசன பத்மத்திலே,
அழுத்தின திருவடிகள், எகிறிக் குதிக்க...
கலைந்த மயிரிலே புழுதிகள் அளைக்க...
கச்சையின் ஆடையோ காற்றிலே பறக்க...

அறிவுற்று, தீ விழித்து,
வேரி மயிர் பொங்க,
எப்பாடும் பேர்ந்து...உதறி....
மூரி....நிமிர்ந்து....முழங்கி....
புறப்பட்டான்...புறப்பட்டான்...புறப்பட்டான்...

"சத்தியம் தவறிய கண்ணன்" கைகளில், சத்திய சொரூபமான சக்கரம் சுழல்கின்றதே!

(எதற்கும் கலங்காத யோகி பீஷ்மர், இன்று கண்ணன் கோலத்தைக் கண்டு, மனத்தால் கேவுகிறார்...உடல் நடுங்குகிறது....)
எம்பெருமானே வருக! என் கண் வருக! எனது ஆருயிர் வருக!
சேத தண்ட வினோதா நமோ நம! தீர சம்ப்ரம வீரா நமோ நம!


தனக்குப் பொய்யனே! = தன் அடியார்க்கு மெய்யனே!!
சரணாகதம்! அடியேன் உனக்குச் சரணாகதம்!!

பீஷ்மர்: "கண்ணாஆஆஆஆஆ! இன்று தான் தெரிந்து கொண்டேன்! இன்று தான் புரிந்து கொண்டேன்!
"என்" தர்மம், "என்" தர்மம் என்று இது நாள் வரை....எனக்குள் மட்டுமே ஒழிந்த என்னை......

இன்று தோழனின் உயிர் காக்க, "உன்" சத்தியத்தையும் பொய்யாக்கத் துணிந்து, "என்" தர்மம் என்றால் என்ன என்று உணர்த்தி விட்டாய்!

அர்ச்சுனன்: "ஐயோ...கண்ணா வேண்டாம்! வேண்டாம்! உனக்கு எதற்கு இந்த அவப் பெயர்? இது நாள் வரை எங்களுக்காக நீ வாங்கிக் கட்டிக்கிட்ட சாபங்களே போதும்! அவரை விட்டு விடு! நான் பார்த்துக் கொள்கிறேன்! காரேறு கண்ணனே, தேரேறு! நீ தேரேறு!"


கண்ணன்: ஹே அர்ஜூனா! பொறு! உனக்கு ஒருவரை நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்!

"ஐயா, ஆயுசுக்கும் உங்கள் வீட்டுக் கிணற்றிலே நீர் இறைத்து, என் நன்றியைச் செலுத்துவேன் என்று சத்தியம் செய்தானாம் ஒருவன்!

ஒரு நாள் அந்த வீட்டுக் குழந்தை தவறிக் கிணற்றிலே விழுந்து விட்டது! அதைப் பார்த்து விட்டு.......

அப்போதும் விடாமல் தன் சத்தியம் தன் சத்தியம் என்றே நீர் இறைத்துக் கொண்டு இருந்தானாம் அந்தச் "சத்திய" புருஷன்!

அவன் ஒரு "கர்ம" யோகி! அவன் பெயர் பீஷ்மன்!
அவனுக்கு சத்தியம் தவறிய கண்ணனின் வணக்கங்கள்
!"

பீஷ்மர்: "ஐயோ...ஐயோ....கண்ணாஆஆஆஆஆ!"

கண்ணன்: "யாரங்கே? கண்ணனின் புனிதமான தேரிலே, ஒரு திருநங்கை ஏறப் போகிறாள்!
அவளுக்குத் தேரோட்டுவதில் இந்தக் கண்ணன் பெருமைப் படுகிறான்!
இதை விடாப்பிடிக் கர்ம-ஞான சாஸ்திர யோகியான பீஷ்மர் உணரட்டும்!
இவர் மட்டுமல்ல! இன்னும் பலப் பல விடாப்பிடி பீஷ்மர்கள் எல்லாம் உணரட்டும்!"


அவன் தூக்கிய சக்கரத்தால்......அவர் மனத்திலே "சரணம்" கனிந்தது!

ச்சே...அடியவன் ஒருவனுக்காக...பெருமான் தன் "தர்மத்தையே" விடத் துணிந்தானே!
நானோ, யாருக்கும் பயனில்லாமல், என் "தர்மத்தை" மட்டுமே இது நாள் வரை பிடிச்சி, தொங்கிக் கொண்டு இருந்தேனே!

குலத்தின் மானம் காக்கத் தானே சத்தியம் செய்தேன்?
ஆனால் அன்று அவள் சேலை பறி போன போது, குலத்தின் மானமே ஒட்டு மொத்தமாய்ப் போச்சே!
நான் எதைக் காத்தேன்? - "என்" சத்தியத்தையா? "குலத்தின்" மானத்தையா??


எது தர்மம்?
பக்கத்து வீட்டுக் குழந்தையின் சங்கிலி, என் வீட்டு வாசலில் விழுந்து விட்டது! கீழே விழுந்த பொருள் தானே? நைசாக எடுத்து வந்து விடு என்று என் அப்பா சொல்கிறார்!
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! பித்ரு வாக்ய பரிபாலனம்! அதுவா தர்மம்??

எது தர்மம்?
* மாதா பிதா குரு தெய்வம் என்பதே தர்மம்! => பிரகலாதன் அதர்மம் செய்தவனா?
* இறைவன் தலையில் நம் கால் தூசு படக் கூடாது! => கோபிகைகள் அதர்மக்காரிகளா?


தனக்குப் பொய்யன்! தன் அடியார்க்கு மெய்யன்!
அவன் எங்கே? நான் எங்கே?
நான் ஏன் இப்படி யோசிக்காமல் போனேன்?


எது தர்மம்?
* "என்" கர்ம யோகத்தில் மட்டுமே அடங்கிப் போய் விடுவதா?
* "என்" ஞான யோகத்தில் மட்டுமே அடங்கிப் போய் விடுவதா?
* என் தர்மத்துக்கு நான் இருப்பதா?? அவன் தர்மத்துக்கு நான் இருப்பதா??

- இப்படியெல்லாம் ஒரு கர்ம யோகி, ஞான யோகி யோசிக்கத் தொடங்கி விட்டார்!


அன்று வரை பீஷ்மர் என்பவர்
= போராளி, அரசியல் வித்தகர், பெண்களைச் சிறையெடுப்பவர், சபதக்காரர், நிர்வாகி, யோகி...என்று மட்டுமே உலகம் அறிந்து வைத்திருந்தது!

இன்றோ பீஷ்மர் என்பவர் = "தன்"-னை விடுத்து, "அவன்"-ஐப் பற்றிக் கொண்டார்!

* உலகமே துதித்து மகிழும் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பதற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டார்!
* ஆசார்யர்கள் துதித்து மகிழும் பீஷ்ம ஸ்துதி என்பதற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டார்!
* அவர் இறக்கும் தறுவாயில், அவர் மோட்சம் புகுவதைக் காண வேண்டுமே என்று கண்ணன் அரக்க பறக்க ஓடி வருகிறான்! பீஷ்மரை நாடி வருகிறான்!

பீஷ்மோ உவாச:
ஜகத் ப்ரபும் தேவ தேவம், அனந்தம் புருஷோத்தமம்!
ஸ்துவன் நாம சகஸ்ரேன...புருஷ சத தோதிதா
ஏஷமே சர்வ தர்மானாம்! தர்மாதிக தமோமத:
பவித்ரானாம் பவித்ரம்யோ, மங்களானாம் ச மங்களம்!

ஏஷமே சர்வ தர்மானாம்! = அவன் தர்மமே பரம தர்மம்!
என் தர்மம் என்று ஒன்றில்லை! அவன் தர்மத்துக்கே நான்!

"மகா ஞானி" பீஷ்மர், தன்னை ஒப்புக் கொண்டார்!
"அறிவு கெட்ட" நான், என்னை ஒப்புக் கொள்வேனா?
என்னைப் பின்னே தள்ளி, அவனை முன்னே தள்ளுவேனா?
அவன் "உள்ள உகப்புக்கு" இருப்பேனா?

* நான் = என் சுயநல ஆசைக்காக, முருகன் மேல்...குடம் குடமாய் பால் கொட்டும் ஆத்திகனா?
* நான் = அவன் சிலையின் அவல நிலை கண்டு, ஐயோ முருகாஆஆஆ வேணாம்...ரெண்டே கண்-துளி சொட்டும் காதலனா?


என் ஆசைக்கு அவனா? = அவன் ஆசைக்கு நானா??
பீஷ்மர் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, December 27, 2009

உண்மைக் கதை: "யானை" ஏகாதசியா? வைகுண்ட ஏகாதசியா??

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்!
மாதவிப் பந்தல் நிறைந்தது என்று சொல்லி இருந்தேன்...
இருந்தாலும், பந்தல் பொழிலை வாட விடாது, தண்ணென்று நீர் பாய்ச்சி, சிந்து பூ மகிழும் ரங்கன் அண்ணாவின் அனுமதி பெற்று...

இதோ...உங்கள் முன்னே...அடியேன்...

ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?


இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்" - ஜில்லென்று மலையாளப் பாட்டை, கண்ணன் பாட்டில் போய்க் கேட்டுப் பாருங்கள்!

அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி?
பொதுவா, "வைகுண்ட" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அத்தனை ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தான் காரணம்!
= வாரணம் தான் காரணம்!

அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, "குருவாயூர்" ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!


1914! வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!
தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!
அந்த பத்து வயதுக் குட்டி யானை = கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற "கஜராஜன் கேசவன்" ஆனது!

யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
பிரகலாதனும் குட்டி தானே! அவனைப் போலவே தான் இதுவும்!

அமைதியான-x-துறுதுறுப்பான சுபாவம், என்னையப் போல! :)
சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்! அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!

கண்ணனையே சுமக்கும் களிப்பிலே, மிதப்பிலே...
இந்த யானை, ஆலயத்துக்கு உள்ளேயே சாணம் போடும்! நீரும் பாய்ச்சும்! :)
நாலம்பலம் என்று சொல்லப்படும் பிரகார வலம்! அதில் வலம் வரும் போதெல்லாம் இப்படித் தவறாது பண்ணும்! :)

வளர வளர, சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும்,
பணக்காரக் கோயிலில் சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லாமல்,
குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க...

இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!
மேலும் விதம் விதமாக வேடிக்கை காட்டவும் வேறு கற்றுக் கொண்டது!
பூவைத் தூவி, தலையைக் குலுக்கி, கழுத்து மணியை ஆட்டி...என்று பல இன்பச் சேட்டைகள்!

போதாக் குறைக்கு, வீதியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்!
முன்னும் பின்னும், வலமும் இடமும்,
நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும்,
அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!

குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்! :)
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது! ஆனால்...ஆனால்...


பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்!
அங்குசத்தால் அடி வாங்கும்!
ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!
குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!

மனசிலே சுமக்கத் தொடங்கி விட்டால் வரும் பாரத்தை யார் அறிவார், சொல்லுங்கள்?


குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! "வெளி"யில் கொண்டு வரும் சிலை என்பதால் திரு-"வெளி"! ஆனால் ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!

திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கும் இந்த ஸ்ரீவேளி உண்டு! பொன்-வெள்ளி என்று இரண்டு ஸ்ரீவேளிகள்!
மூலத்தானத்து முதல்வனின் காலடியில் இரு பக்கமும், இவற்றை இன்றும் காணலாம்!
செந்தூரில், மலையாள முறையில் (குமார தாந்த்ரீகம்) பூசை செய்வதால், இப்படி மலையாள வழக்கம் ஏற்பட்டு விட்டது! இப்போ நாம் குருவாயூருக்கு வருவோம்!

ஸ்ரீவேளி = தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்!
நம்மூரு சிலை போலவெல்லாம் இருக்காது! கேரளா ஸ்டைலில் இருக்கும்!
அதுக்கு "திடம்பு"-ன்னு பேரு!

நம்ம கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!
மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்!

எவ்வளவு தான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!
தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!

உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
வேறு எங்கும்,
அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! படிச்சாலும், நிஜ வாழ்வில் பிடிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்
அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!
வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!



கேசவனை, "திமிர் பிடித்த யானை" என்று பட்டம் கட்டி விட்டார்கள்!
அது "நார்மலான" யானை இல்லை! "ஈகோ பிடிச்ச" யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!

* முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டியவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்! = பசி!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்! = தனிமை!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* சரி யானையின் "ஈகோ"-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!
குருவாயூர் அப்பனைத் தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்??? ஐயோ!

அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் "திடம்பை" ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, "திடம்பை" அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!

அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்கப்பட்டான்!
உதாசீனம்! Ignore! - Thatz the Best Insult!
அப்போவாச்சும் அந்தக் கேசவன் "திருந்தினானா"?


ஆனால் அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது!
நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்......ஆனால்...

யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை!
தன்னை மட்டும் தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!

அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்:
குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!
மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?

மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!
மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?

கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை!
மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!
ஆனால் அதன் கண்களில்? கண்களில்?......அது மட்டும் நிற்கவே இல்லை!

பாகன்களுக்குப் பயம் வந்து விட்டது! யானையின் கண்ணில் தொடர்ந்து நீர் கோர்த்த வண்ணம்!
ஒரு நாளில்லை ஒரு நாள், மதம் பிடித்து விடும் என்று நினைத்து விட்டார்கள்!

ஆனால் மதமாவது? ஒன்றாவது?
குருவாயூரப்பனிடம், தனக்கு"ம்" உரிமை இருக்கு என்று நிலை நாட்டிக் கொள்ள, பாவம்...மட நெஞ்சம், அதற்குத் தெரியவே இல்லை!
அவனே ”கதி” என்ற நிலையில்...”சரணா கதி” என்ற நிலையில்...

தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை...
அவனைக் குருவாயூரப்பனும் கைவிட்டு விட்டானோ? :(



1970 மார்கழி மாசம் - குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா!
விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்!
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!

நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்! வாரணத்துக்கு ஆயிரம் கனவுகள்! - வாரணமாயிரம் கனவுகள்!

"அதிகாலை நேரத்தில் சூரியன் தன்னிடம் இதமாகத் தானே இருந்தது?
ஆனால் பிற்பாடு சுயரூபம் காட்டி விட்டதே! இப்போ இப்படிச் சுடுகிறதே!
சரி, இனி நம்ம வழி நமக்கு! அவனுக்கு மலர வேணாம் என்று ஒரு தாமரைப்பூ நினைத்திடுமா?

அது போல், என் துயரை நீ வீட்டா விட்டாலும் பரவாயில்லையடா!
உனக்கு அல்லால்,
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"

ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்...நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
பஞ்ச பூதத் தத்துவம் என்ன சொல்லிற்று? = அக்னியில் இருந்து நீர் உண்டானது! அக்னையே இதம் நமம!
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! - தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! - தீ! தீ! தீ!

மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!
ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!

யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?
அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!

"ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? "
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! - "என்டே குருவாயூரப்பா"!

கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட...

ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!

அனைவரும் உள்ளே சென்று பார்க்க...
இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!
அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க...
ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க...
ஸ்ரீகோயில் தப்பியது! சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!

துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு,
குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து,
அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த.....
குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!


மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்!
கேசவன் "ஈகோ" பிடித்த ஜீவன் அல்ல! "கண்ணனை"ப் பிடித்த ஜீவன் - என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்.......
என்ன பிரயோஜனம்?......அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! - கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?

மேல்சாந்திகளும், தந்த்ரிகளும், கடுமையான சாஸ்திர சட்டங்களால் ஆளும் குருவாயூரில்,
மனிதர்களுக்கே பல சமயம் நீதி கிடைப்பதில்லை! ஒரு யானைக்கா நீதி கிடைக்கப் போகிறது?

நெஞ்சுக்கு நீதி - அதை யார் தருவார்கள், போயும் போயும் ஒரு யானைக்கு? = நிமலன் நிர்மலன் "நீதி" வானவன்! அவன் அல்லவா தர முடியும் "நெஞ்சுக்கு நீதி"!

குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான "திடம்பு", மீண்டும் கேசவன் மேல் ஏறியது!
கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!

ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்!
பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்!
குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!

நெடுநாள் கழித்து நடையழகு!
மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!


வண்ண மாடங்கள் சூழ் "குரு வாயூர்"
"கண்ணன்-கேசவன்" நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!


Dec-1976......இன்றைய நாள்...அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் "திடம்பை", கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே,
கீழே, சரி சரி சரி எனச்.....சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!

அவசரம் அவசரமாக, "திடம்பை", இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்!
தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!

மூச்சு இழுக்க இழுக்க........
ஹோய் கேசவா.....உனக்கா இந்த மரண அவஸ்தை?

இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்!
வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!
வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!

எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,
அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,
சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,
துதிக்கையை நீட்டி விரித்தபடி,
துதிக்-"கையை" நீட்டி விரித்தபடி,

"சரணம்" என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது...
அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!
ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

புகல் ஒன்று இல்லா அடியேன்....
மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்.....
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!



தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!

தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?

அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?
அவன் மனத்திலா "தனக்கு மட்டுமே" என்கிற ஒரு எண்ணம்?
தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?

அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?

யார் பெற்ற பிள்ளையோ?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து,
இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே!

அவாவறச் சூழ் ”அரியை அயனை அரனை” அலற்றி
அவா அற்று, வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார்......
பிறந்தார் உயர்ந்தே-உயர்வற உயர் நலம், துயர் அறு சுடர் அடி, தொழுது எழென் மனனே!

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வாழைப்பந்தல் கிராமத்தில், சின்னஞ் சிறு வயதில்...அன்று கண்ட காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!

முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!
”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!


வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!

ஹே பெருமானே,
இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!
யம்மாடி கோதை,
இந்த யானைக்கு இனி உன் வீடே வீடு! இதைச் சேர்த்துக் கொள்!

இந்தக் கால் மடங்கா யானைக்கு...
வேறெங்கும் அகங் குழையா யானைக்கு...
பிறர் வீட்டில் ஏறத் தானே மதிப்பில்லை?
உன் "வீட்டில்" ஏற, மிக்கதோர் மதிப்புண்டே!


கேரள அரசு, கேசவனைக் "கஜராஜன்" என்று பிற்பாடு கொண்டாடி...
குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!

"வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!" என்று...
இன்றும் எம்பெருமானைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்...
ஐந்தறிவு மட்டுமே கொண்ட அவனுடைய அவன்!

ஐந்து-அறிவால் அறிந்து, உன் இரு-தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!


உன் பேரையே என்றென்றும் சொல்லிய,
என் அலை-வாய்க்கு உகந்த பெருமாளே!
Read more »

Thursday, September 18, 2008

இறைவனுக்கு எது பிடிக்கும்? - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - Part 2

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை! ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ! - ஜய விஜயர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்...கருமுகிலான் யோசிக்கிறான்! சென்ற பதிவு இங்கே!
(மன்னிக்கவும்! பாக்டிரீயாக் காய்ச்சலின் காரணமாக, ஓரிரு வாரமாய் தொடரைப் பதிய முடியவில்லை! சென்ற பகுதியை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடுங்கள்; தொடர்ச்சி/Continuity புரிந்து விடும்)

"ஆகா! இவர்களுக்குத் திருவிளையாடல் ஆடித் தான் புரிய வைக்கணும் போல இருக்கே! பார்த்தாயா லக்ஷ்மீ, என் துவாரபாலகர்களே, என் சொல்லைக் கேட்டு நடக்க, கொஞ்சம் யோசிக்கிறார்கள்!
ஆனால் (பின்னாளில்), நம் இராமானுசனை அண்டினோர் மட்டும், அவன் சொன்ன வண்ணமே செய்கிறார்களே! இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?

"உம்..."

"என்ன உம்? உடையவர் சொன்ன ஒரே வார்த்தைக்காகப் பேரறிஞர் முதலியாண்டான், கொஞ்சம் கூட கூச்சம் பாராமல், யார் வீட்டுக்கோ சென்று தண்ணி இறைக்கப் போகிறார்! ஆனா என் துவார பாலகர்கள்? எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?"

"ஹா ஹா ஹா, பெருமாளே! உங்களுக்கு இன்னுமா காரணம் புரியவில்லை?"
"புரியவில்லையே தேவீ! நான் தான் வேதம் சொன்னேன்! நான் தான் கீதை சொன்னேன்! அதையே தானே இந்த இராமானுஜன் இன்னும் விரித்து விரித்து விலாவரியாகச் சொல்கிறான்! அவன் சொந்தமா ஒன்னும் சொல்லலை! ஆனா எனக்கு மட்டும் மதிப்பு இல்லாமப் போச்சுதே!"

"ஓ...நீங்க அப்படி வரீங்களா? சரீ....வேதம், கீதை-ல எல்லாம் என்னான்னு சொன்னீங்க சுவாமி?"

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று-ன்னு சொன்னேன்"

"சரி தான்! உங்க கால்-ல வந்து விழு விழு-ன்னு நீங்களே சொல்லிக்கிட்டா யாரு வந்து விழுவாங்க? இதே ஒரு அடியவர், அதோ அழகிய மணவாளப் பெருமாள் இருக்காரு! அவர் அன்பானவர்! அவர் கால்-ல விழுங்க-ன்னு சொன்னா அது அழகு, அடக்கம், ஆற்றுப்படுத்தல், வழிகாட்டல்! அப்போ வந்து விழுவாங்க!"

"ஓ...."

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று - இதை எப்போ எங்கே சொன்னீங்க?"

"கீதையில் பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னேன்! இது கூடவா உனக்குத் தெரியாது?"

"உக்கும்...கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? யாருக்கு அம்புட்டு பொறுமை இருக்கு?
குழந்தைகளுக்கு என்ன தரப் போகிறோம்-ன்னு முன்னாடியே சொன்னா தானே, அதுங்க ஆர்வத்தோடு விளையாட்டில் கலந்துக்குங்க!"

"அட! ஆமாம்!"

"இதே ஆண்டாளைப் பாருங்க, எடுத்த எடுப்பிலேயே சொல்லிடறா, நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்-னு! - அம்மா எப்போதும் சொல்லிவிட்டுக் கொடுக்க மாட்டாள்! கொடுத்து விட்டுச் சொல்லுவாள்!
அது தான் அம்மாவின் ஹிருதயம்! அம்மாவின் ஹிருதயம் தான் ஆச்சார்ய ஹிருதயம்! அதுனால தான் ஆச்சாரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு!"

"ஓ..."

"என்ன ஓ...ஓ...ன்னு ஓ போடுறீங்க சுவாமி? :) பேசாம நீங்களும் அடியார் கூட்டத்தில் போய்ச் சேர்ந்துடுங்க! அப்பறம் தெரியும் அங்கே மட்டும் எப்படி வேலை டாண் டாண்-னு நடக்குதுன்னு? இப்போ நீங்க பேசாம வேடிக்கை பாருங்க! அதோ....சனகாதி ரிஷிகள் உங்களைத் தேடி வராங்க பாருங்க!"


சனகாதி ரிஷிகள், குழந்தை ரிஷிகள்! மொத்தம் நான்கு பேர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்...
திருப்பாற்கடலை நோக்கி வருகிறார்கள்! இறைவனுக்கு உருவம் இருக்கா என்ன? போய் தான் பார்த்துடுவோமே-ன்னு சும்மா அதிரடியாகக் கிளம்பி வருகிறார்கள்...

இறைவனின் பாற்கடல் ஆலயத்துக்குள் வந்தவர்கள், துவாரபாலகரான ஜய-விஜயர்களைப் பார்க்கிறார்கள்! பார்த்தும் பார்க்காதது போல், நேரடியாக உள்ளே செல்ல எத்தனிக்கிறார்கள்!
அளந்தவனையே அளந்து பார்க்க அல்லவா வந்துள்ளார்கள்! அதான் இறைவன் ஒருவனையே குறியாகக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்!

ஜய விஜயர்களுக்குப் பாவம் அப்போது தான் பெருமாள் தங்களைக் கீழே வருகிறீர்களா-ன்னு கேட்ட டென்ஷன்! தப-தப என்று உள்ளே நுழையும் சனகாதி ரிஷிகள் நால்வரையும் தடுக்கிறார்கள்! வரவின் காரணம் என்ன என்பதை உரைத்து விட்டுச் செல்லும்படிச் சொல்கிறார்கள்...பிடி சாபம்...

"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும்! அது தானே உங்கள் கடமை? ஆனால் இறைவனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் உங்களுக்கு ஆணவத்தையும் திமிரையும் அல்லவா வளர்த்து இருக்கு?
அதை வளர்த்து விட்ட அந்த நெருக்கம் இனி உங்களுக்குத் தேவையில்லை! இறைவனை இக்கணமே பிரியுங்கள்! பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்!"

"ஐயோ...முனி சிரேஷ்டர்களே...அபயம், அபயம்! சக அடியார்களே அபயம், அபயம்! அடியோங்களை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

"உம்..."

"பெருமாள் சற்று முன்னர் தான் பூலோகம் வருகிறீரா-ன்னு கேட்டார்! அப்போது அவரிடம் தயங்கினோம்! ஆனால் இப்போது சாபம் பெற்றுச் செல்ல வேண்டியதாகப் போய்விட்டதே!
இறைவனிடம் வைக்க வேண்டிய பற்றை, மோட்சத்தில் வைத்தோமே! ஐயகோ! எங்களை மன்னித்து, விமோசனத்துக்கு வழி காட்டுங்கள் ரிஷிகளே!"

"இறைவனை நூறு பிறவிகள் பிரிந்து, ஆத்திகர்களாக வாழ்கிறீரா? இல்லை
இறைவனை மூனு பிறவிகள் பிரிந்து, நாத்திகர்களாக வாழ்கிறீரா? - எது வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள்! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க நாங்கள் இங்கு வரவில்லை! வேறு ஒரு முக்கியமான வேலையாக வந்துள்ளோம்!"

"முனீஸ்வரா, இறைவன் வாய் விட்டுக் கேட்ட போது யோசித்தோம்! ஆனால் இப்போது அதேயே யாசித்தோம்! அவர் சங்கல்பம் எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்! - அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் அது வரம் ஆகியிருக்கும்! இப்போதோ அது சாபம் ஆகிப் போனது!

சரி, எது எப்படியோ, எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! ஆகவே, நாத்திகராய்ப் பிறந்தாலும், மூன்றே பிறவிகள் பிரிந்து, அவரையே சீக்கிரமாகச் சேர வேண்டும்!
சீக்கிரமான கைங்கர்ய பலனையே எங்களுக்குச் சாபமாக ஆக்கித் தாருங்கள்! நன்றி உடையவர்களாக இருப்போம்!"

முனிவர்களுக்கே வெட்கமாகிப் போனது...அவசரப்பட்டு விட்டோமோ? பாவம், இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ? அப்படி ஒன்றும் மோசமாக எல்லாம் இவர்கள் செய்து விடவில்லையே?

அப்போது மூக்கைத் துளைக்கும் ஒரு நறுமணம்! - துளசீ மணம்! காற்றோடு கலந்து வீசி வீசி வருகிறது! கூடவே ஒரு சப்தம்! ஜல், ஜல்! கல், கல்!



"ஆகா எம்பெருமான் பொற் பாதச் சலங்கைகள் ஒலிக்க நடந்து வருகிறானோ? அவன் மணம் அல்லவா இந்தத் துளசீ மணம்?
ச்சே! அவனைப் போய் உருவம் இருக்கா, அது இருக்கா, இது இருக்கா-ன்னு எல்லாம் சந்தேகப்பட்டோமே! அதைப் போக்கிக் கொள்ள இவ்வளவு தூரம் நடந்து வேறு வந்தோமே! இது என்ன வெட்கக் கேடு?

பெற்ற தாய்க்கு முலைப்பால் சுரக்குமா என்று சோதித்துப் பார்த்து விட்டா ஒரு குழந்தை பிறக்கிறது? ச்ச்சீ! இது என்ன கேவலமான சோதனைப் புத்தி நமக்கு?
அருவமான நீராவி உருவமான நீர் ஆகாதா? இல்லை உருவமான நீர் தான், அருவமான ஆவி ஆகாதா?

மெத்தப் படித்ததால் ஞான யோகமும், தினப்படி கர்மாக்கள் செய்ததால் கர்ம யோகமும், அவனைப் போற்றிப் பாடியதால் பக்தி யோகமும் கை கூடிற்றே தவிர,
இப்படிச் சோதித்துப் பார்க்கும் ஒரு எண்ணம் எப்படி நமக்கு வந்தது? அப்படியானால் இந்த மூன்று யோகங்களைத் தவிர, நமக்கு இன்னும் வேறு ஏதோ ஒன்னு குறையுதோ?"

எம்பெருமான் முனிவர்கள் முன் தோன்றி விட்டான். வாசலுக்கே வந்து விட்டான்!
மயிலிறகு அசைய அசைய, பீதாம்பரம் உருள உருள, கையில் தாமரைப் பூ சுழற்றச் சுழற்ற, இட்டடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க...இதோ ஈசன்!

அடியில் முடி வீழச் சேவிக்கிறார்கள் முனிவர்கள்! ஆகா என்ன ஆச்சரியம்!
திருவடிகளைக் காணோம்!
உருவம் சோதிக்க வந்தவர்க்கு, அடியை அருவம் ஆக்கிச் சோதிக்கிறானோ?
தவற்றினை உணர்ந்த தவ முனிகள், எம்பெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்! உய்வுக்கு வழி காட்டுமாறு வேண்டுகிறார்கள்!

"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா! - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே! அப்படியானால் எங்களுக்கு வேறேதும் ஒர்ய் யோகம் இன்னும் கைவர வேண்டுமோ? அதை என்னவென்று சொல்லி அருள வேண்டும் சுவாமி!"

"சனகாதிகளே! சொல்கிறேன்! ஆனால் அதற்கு முன்னால்...இங்கிருக்கும் ஜய விஜயர்கள் ஏன் இப்படி முகம் வாடிக் களைத்துப் போயுள்ளார்கள்?"

"அவர்கள் அகம்பாவமாக நடந்து கொண்டார்கள் சுவாமி! அதனால் தான் அவர்களைச் சபித்து பூலோகம் அனுப்பத் துணிந்து விட்டோம்!"

"ஆகா! என்ன காரியம் செய்தீர்கள்? ஜய விஜயர்கள் பரம பாகவதர்கள் ஆயிற்றே! சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு என்னைப் பிரிய மாட்டாது, வைகுண்டத்தைப் பிரிய மாட்டாது இருக்கலாம்! ஆனால் அவர்களுக்கு அகம்பாவமா? யார் சொன்னது?"

"அவர்களே ஒப்புக் கொண்டார்கள் சுவாமி!"

"அவர்கள் ஒப்புக் கொண்டால், அது அவர்கள் சுபாவம்! ஆனால் நான் ஒப்புக் கொள்வேனா?"

"சுவாமி..."

"யாருக்கு அகம்பாவம்? அகம்-பாவம்! உங்களுக்கா? அவர்களுக்கா? இல்லை எனக்கா?"

"ஐயையோ...சுவாமி..."

"ஆலயத்துக்குள் நுழையும் போது, கண்ணில் பட்டவரை எல்லாம் தள்ளி விட்டு, நேராகக் கருவறைக்குள் சென்று விடுவீர்களா? கோபுரம் தரிசித்து, கொடிமரம் வணங்கி, சேனை முதலியாரையோ/தும்பிக்கை உடையானையோ துதித்து, கருடனையும் கண்டு, ஆலய வரிசையில் அடியார் கூட்டத்தை எல்லாம் கண்ட பின்னர் தானே, என்னைச் சேவிக்க வருவீர்கள்?
இல்லை கண்ணை மூடிக் கொண்டு, நேராகக் கருவறை வந்து தான் கண்ணைத் திறப்பீர்களா?"

"சுவாமி..."
(சனகாதிகள் வெலவெலத்துப் போகின்றார்கள்)


"அது போலத் தானே இங்கும்? ஜய விஜயர்கள் என் பணியில் இருக்கும் அடியார்கள் அல்லவா! அவர்களை வணங்கக் கூட வேண்டாம்! முகமன் கூறலாம் அல்லவா? கூடி இருந்து குளிர்ந்தேலோ தெரியாதா உங்களுக்கு?
நேரடியாக இறைவனும் நானும் மட்டுமே! மற்ற எவனும், எந்த அடியானும் எங்களுக்கு நடுவில் இல்லை என்ற அதிகாரப் போக்கை உங்களுக்கு யார் கொடுத்தது?"

"சுவாமி..."

"ஜய விஜயர்களுக்கு இறை-அணுக்க அகங்காரம் என்று சொல்லும் உமக்குத் தான் அகங்காரம் என்று நான் சொல்கிறேன்!"
(சனகாதிகள் வெலவெலத்துப் போகிறார்கள். இவ்வளவு கோபமாகச் சினப்பார் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!)

"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று!
எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! அதனால் நாத்திகனாய்ப் பிறந்தாலும் பரவாயில்லை! மூன்றே பிறவிகள் பிரிந்து, கைங்கர்ய சீக்கிரத்தையே அவர்கள் விரும்பினார்கள்! அவர்களைப் போய்...."
(சனகாதிகள் தேம்பித் தேம்பி அழ...)

"இப்போது நான் உங்களைச் சபிக்கட்டுமா?"

"சுவாமி..."

"வேண்டாம், போங்கள்!
கேட்டீர்களே ஞானம், கர்மம், பக்தி தவிர வேறு என்ன வேண்டும்-ன்னு! உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை!
பின்னாளில் சிவபெருமான் சொல்லப் போகிறார்! அதுவும் வாய் பேசாமல், மவுன மொழியாகவே சொல்லப் போகிறார்!
நீங்கள் சபித்த நாத்திகர்களிடம் இருந்து நீங்களே ஒரு பாடம் கற்றுக் கொள்வீர்கள்!
அந்த நாத்திகரின் வம்சக் கொழுந்து தான், அசைக்க முடியாத பக்தி என்றால் என்ன என்று, மெத்தப் படித்த உங்களுக்கு உணர்த்தப் போகிறது!
ஒன்று மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்! அடியார்களுக்குச் சாபம் தெரியாது! சரணமே தெரியும்!"

"சுவாமி..."

"சென்று வாருங்கள்!"
(இறைவன் மறைந்து விடுகிறான்)

அடியவர்களை அலட்சியம் செய்த அறிஞர்கள், இறைவனிடத்தில் நமக்கு Straight Dealing, இவர்கள் என்ன இடையில் என்று அதிகாரப் போக்காய் யோசித்த யோகிகள்...
உயிர்ப் பயம் என்று வரும் போது மட்டும், தங்கள் சொந்த நலனுக்காக, தினமும் நூறு முறை "இரண்யகசிபுவே நமஹ", "இரண்யகசிபுவே நமஹ" என்று சொல்லும்படி ஆயிற்று! :)

ஆத்திக ஜய விஜயருக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறிய ஞானிகள்,
நாத்திக ஜய விஜயருக்கு ஆயிரம் முறை வணக்கம் சொல்ல வேண்டியதாகப் போயிற்று :)

எதை எதோடு, எப்போது கோர்க்க வேண்டுமோ, அதை அதோடு, அப்போது கோர்க்க வேண்டும்! - அந்தக் கலையில் ஒருவனே வல்லவன்! அவனே நல்லவன்!

ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ? அந்த வேறேதோ என்ன?
(தொடரும்)...
Read more »

Thursday, September 04, 2008

இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1

"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்டு வர இம்புட்டு நேரமா ஆகும்?"

"அதில்லீங்க அத்தை! வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது! இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு!
வரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது! அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்!"

"நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம்! ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு பாத்தா, எப்பவும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கியே!
வீடுன்னா வேலைகள் இருக்கத் தான் செய்யும்! நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும்! இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை? ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா?"

"அதில்லீங்க அத்தை..."

"பதிலுக்குப் பதில் பேசாதே! உங்க வீட்டுல செல்வச் செழிப்பிலே வளர்ந்த பொண்ணுன்னா, தண்ணி இறைக்கக் கூடவே ஒரு வேலையாளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்!
அதை விட்டுட்டு, உனக்கும் சேர்த்து நாங்களே வேலை செய்யணும்-னா எப்படி? எங்களுக்குத் தான் செய்ய வேணாம்! உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல?"

தேசிகன் திருக்கிணறு

அத்தை-அத்துழாய் உரையாடல்! அத்தை சொற்களால் அர்ச்சிக்கிறாள்! அத்துழாய் பாவம் சின்ன பொண்ணு! பெரிய நம்பியின் திருமகள்!
அதுவோ புதுசாய் புகுந்த புகுந்த வீடு! எல்லாரும் நல்லவங்க தான்!
ஆனால் உள்ளதையும் சரி, உள்ளத்தையும் சரி, அன்பினால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை! சில சமயம் சொற்கள் வெளிப்பட்டு விடுகின்றன!

அவர்கள் வீட்டில் வேண்டுமானால் அவை சாதாரண சொற்களாய் இருக்கலாம்! ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே! :)
தீந்தமிழ்ப் பாசுரங்களே ஓதி ஓதி வளர்ந்த வீட்டுப் பெண்ணொருத்தி, திக்-திக் வார்த்தைகளைக் கேட்டால் என்ன செய்வாள் பாவம்! தன் அப்பா பெரிய நம்பிகளிடம் சொல்லாமல் சொல்லிக் கண் கலங்குகிறாள்!

"நம் வீட்டில் எது நடந்தாலும், அண்ணாவிடம் சொல்வது தானேம்மா வழக்கம்! போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்!"


நம்-அண்ணாவிடம் செல்கிறாள் அத்துழாய்! அது யார் நம்-அண்ணா?
நம்-ஆழ்வார் தெரியும்! அது யார் நம்-அண்ணா?
நம்-கோயில்-அண்ணன் என்று மொத்த திருவரங்கமும் உரிமை கொண்டாடிய உடையவர் தான் அந்த நம்-அண்ணா!

"அட, இதெல்லாம் குடும்ப விஷயம்! இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா? பேசாம நகரும்மா! வந்தோமா, சேவிச்சோமா, பிரசாதம் வாங்கினோமா, போயிக்கிட்டே இருக்கணும்!"

இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது! அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர்! குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான்! அந்தரங்க விஷயமும் அந்த-"ரங்க" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்!
காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை?


"என்னம்மா...சொல்லு அத்துழாய்! நீர் இறைக்க, உங்க வீட்டிலிருந்து கூடவே ஒருவரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்-னா சொன்னாங்க?"

"உம்...சுவாமி!"

"முதலியாண்டான்......"

"சொல்லுங்கள் குருவே!"

"நம் அத்துழாய் பொருட்டு, இந்தத் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய உமக்கு விருப்பமா?"

"அடியேன்! சித்தம்!"
ஆகா...என்ன இது? முதலியாண்டான் சகல சாஸ்திர பண்டிதராச்சே! அவரைப் போய்....சேச்சே!
கோயிலில் கூட இது போன்ற வேலைகளை எல்லாம் "படிக்காத அடியார்கள்" அல்லவா செய்வார்கள்?

இவர் சொல்லின் செல்வர்! வாயைத் திறந்தால் வண்டமிழும் வடமொழியும் கொட்டுமே! இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர்! இவரையா இப்படி? படிச்ச படிப்புக்கு ஒரு கெளரவம் வேண்டாம்?

ஏதோ கோயில் கைங்கர்யம்; குருவுக்கு முடியலைன்னாலும் பரவாயில்லை! போனாப் போகுது-ன்னு செஞ்சிடலாம்!
யாரோ ஒரு சம்பந்தி! அவிங்க வீட்டுக்குப் போய் தண்ணி இறைச்சிக் கொடுக்கணுமாம்! இது என்ன மானக்கேடு? இதுக்குத் தீர்த்தக் கைங்கர்யம்-னு பெத்த பேரு வேற!

ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க! பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க! அவிங்கள இப்படிச் செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

முதலியாண்டான் மறைபொருள் வித்தகர்! இவருக்கா இப்படி? உடையவர் தான் சொன்னார் என்றால் இவருக்கு எங்கே போனது புத்தி? எதிர்த்துப் பேச வேண்டாம்? ஏன் இப்படி மென்மையாகவே போகிறார்கள்? கொஞ்சம் கூடச் சரியில்லை!


(திருப்பாற்கடலில் வாயிற் காத்தருளும் ஜய விஜயர்களோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்...)
"என்னப்பா, ஜய-விஜயா,......நானும் வேதம் எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு! யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை! நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல! செல்லப் போகிறேன்! என்னுடன் வருகிறீர்களா?"

"சுவாமி...நாங்கள் பரிபூர்ண சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! சரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்ற தங்கள் வாக்கு பொய்யாகலாமா?
நாங்கள் மீண்டும் பிறவி எடுத்தால், செய்த சரணாகதிக்கு ஏது மதிப்பு?
நீங்கள் ஆணையிட்டால் நாங்கள் இங்கேயே இருக்கவே பிரியப்படுகிறோம்!"

(கருமுகில் முகம் இன்னும் சற்றே கருக்கிறது...)

"சுவாமி...தங்கள் முகம் மாறலாமா? சரி, நாங்கள் உம்முடனேயே வருகிறோம்!"

"கடனே என்று சொல்ல வேண்டாம்! யோசித்துச் சொல்லுங்கள்! மேலும்....,
என்னுடன் உங்களை அழைத்துச் சென்றால், கதையில் நீங்கள் வில்லன்களாகத் தான் வருவீர்கள்! ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள்! திட்டித் தீர்ப்பார்கள்! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!"

"சுவாமி, ஆத்திகர்கள் எங்களை வசைபாடுவார்களா? அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும்? உம்மிடம் சரணாகதி செய்த எங்களுக்கு, இது தானா நீங்கள் செய்யும் உபகாரம்?

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை!
ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ!
"


* முதலியாண்டான் சென்றாரா? ஜய-விஜயர்கள் சென்றார்களா?
* ஏன் செல்ல வேண்டும்? எதற்குச் செல்ல வேண்டும்?
* "என்" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா?
* "என்" ஞானம், "என்" கர்மம், "என்" பக்தி - இதெல்லாம் "என்"னாவது?
"நான்" செய்த இதுக்கெல்லாம் மதிப்பில்லையா?

(அடுத்த பதிவில்....)
Read more »

Sunday, July 20, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - Final Part!

"இல்லையப்பா! எனக்கு மோட்சம் கிட்டாது! நான் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!" - அதிர்ந்து விட்டான் வில்லி!
எடக்கு மடக்கு பண்ணுவதே, இப்பவெல்லாம் இந்த உடையவருக்கு வழக்கமாகப் போய் விட்டது! இவரே இப்படிச் சொன்னால் இவரை நம்பி வந்த சீடர்கள், பாவம் என்ன செய்வார்கள்? முந்தைய பதிவு இங்கே!

"முன்பு, குருவின் ஆணையை மீறி, எட்டெழுத்தின் பொருளை, ஊரைக் கூட்டிச் சொன்னேனே! மறந்து விட்டாயா?
நன்மையோ, தீமையோ, நான் செய்த காரியம் செய்தது தானே? விதைத்தது முளைத்து தானே ஆகும்! குருவின் ஆணையை மீறியவனுக்கு நரகம் அல்லவா கிட்டும்? சரி தானே வில்லி?"

(மெளனம்)

"ஆனால்.....இங்கே, இப்போதே, அரங்கன் சாட்சியாகச் சொல்கிறேன்!
குருவின் ஆணையை மீறினவன் என்றாலும்.....
எனக்கும் மோட்சம் உண்டு!
என்னைப் பற்றினீர்கள் அல்லவா? உங்கள் எல்லாருக்கும் மோட்சம் உண்டு
!"

(குழப்பத்துடன்...)
"ஆகா! குருவே! உங்கள் வாக்கிலிருந்து இப்படி ஒரு சொல் வர என்ன புண்ணியம் செஞ்சோமோ தெரியலையே! என் கவலை எல்லாம் தீர்ந்தது!"

"அட என்ன சீடனப்பா, நீ? "என்னால்" தான் உங்களுக்கு எல்லாம் மோட்சம் என்று சொல்கிறேன்! திமிர் பிடித்துப் போய், ”தான்” என்னும் ஆணவமாகப் பேசுகிறார் இராமானுசர்? - இப்படியெல்லாம் திருப்பித் தாக்க மாட்டாயா?
அடியேன் அடியேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நீ எப்போது அடுத்த குரு ஆவது?"

(குரு தன்னிடம் மட்டும் ஏன் இப்படி விளையாடுகிறார் என்று குழம்புகிறான் வில்லி! தப்பாக எதுவும் விவாதத்தை ஆரம்பித்து வைத்து விட்டோமோ? அதான் உடையவர் இந்த வாங்கு வாங்குகிறாரோ?)


"என்ன வில்லி? குழப்பமா இருக்கா?....எனக்கு மோட்சம் கிடைத்தால், உங்களுக்கும் கண்டிப்பாக மோட்சம் கிடைக்கும்-னு சொன்னேன் அல்லவா!
எனக்கு யாரால் கிடைக்கும்-னு நினைக்கிறாய்? என் சுய பிரதாபத்தாலா கிடைக்கும்? இல்லை! என் குருவான பெரிய நம்பியால் கிடைக்கும்! அவருக்கு மோட்சம் உண்டு என்றால் எனக்கும் கண்டிப்பாக உண்டு!
ஆனால்...பெரிய நம்பிக்கு நிச்சயமாக் கிடைக்குமா? கிடைத்து விட்டதா??"

(வில்லி மயக்கம் போட்டு விழாத குறை! "இவரு ஊர்-ல ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டாரா?
மொதல்ல நம்ம மேல கையை வச்சாரு!
அடுத்து அவர் மேலேயே கை வச்சிக்கிட்டாரு!
இப்போ என்னடான்னா, அவர் குருநாதர் மேலேயே கையை வைக்கிறாரே?")

குரு பரம்பரை - இறைவி-இறைவனே முதல் குரு! அது சேனை முதலியார் என்று அப்படியே விரிந்து, ஒரு ஆபரணம் போல் ஒளிர்கிறது!


"என்ன வில்லி இவ்வளவு தீவிரமாக யோசிக்கிறாய்?
* உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் -> உங்கள் குரு இராமானுசனால்!
* இராமானுசனுக்கு மோட்சம் கிடைக்கும் -> அவர் குரு பெரிய நம்பியால்! - இது வரை சரி!

* பெரிய நம்பிக்கு கிடைக்கும் -> அவர் குரு, ஆளவந்தாரால்!
* ஆளவந்தாருக்கு கிடைக்கும் -> மணக்கால் நம்பியால்!

* மணக்கால் நம்பிக்கு கிடைக்கும் -> உய்யக் கொண்டாரால்!
* உய்யக் கொண்டாருக்கு கிடைக்கும் -> நாதமுனியால்!

* நாதமுனிக்கு கிடைக்கும் -> நம்மாழ்வாரால்!
சரி......நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைக்குமா? கிடைச்சுச்சா??"


(வில்லி அரண்டு நடுநடுங்கிப் போய் விட்டான்! சீடர்கள் பேந்த பேந்த விழிக்கிறார்கள்! உபன்னியாசம் கேட்க வந்த ஊரே வாயைப் பிளக்கிறது! "என்னாது? நம்மாழ்வாருக்கு மோட்சம் கிடைச்சுச்சா-வாஆஆஆ?.....
அடேயப்பா! இவரு இந்தக் கட்சியில் இருந்து கொண்டு, இந்தக் கட்சிக்கே வேட்டு வைக்கிறாரே! இராமானுசர் பிறப்பால் சைவர்! ஒரு வேளை வைணவத்தில் விவகாரம் பண்ணவே இவரு இங்கிட்டு வந்தாப் போலத் தெரியுதே!" :-)

"நான் இன்னும் முடிக்கவில்லை வில்லி!
* நம்மாழ்வாருக்கு கிடைக்கும் -> சேனை முதலியாருக்கு கிடைத்தால்!
* சேனை முதலியாருக்கு கிடைக்கும் -> அன்னை மகாலட்சுமிக்கு கிடைத்தால்!
* அன்னை, மகாலட்சுமிக்கு ஒருவேளை மோட்சம் கிடைக்குமாஆஆ?...."

"அய்யோ.....குருவே....."

"பதறாதீர்கள்!....கேளுங்கள்!
* மகாலட்சுமிக்கு கிடைக்கும் -> இறைவனுக்கு கிடைத்தால்.......
* இறைவன், பரப்பிரம்மமான, நாராயணனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆஆஆஆஆஆஆல்......"

(அத்தனை மக்களும் அலறி அடித்துக் கொண்டு எழுந்து விட்டார்கள்.....கோவிந்தா கோவிந்தா என்கிற கோஷம்!.....அப்போதும் அவர் விடவில்லை.....)
* இறைவனுக்கு ஒருவேளை மோட்சம் கிடைத்தாஆஆல்....அப்போ மகாலட்சுமிக்கும் கிடைக்கும்!
* இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? சொல்லுங்க பார்ப்போம்"
(காவிரியாறு கூட வாயைப் பொளந்து விட்டது! ஒரு துளிச் சத்தம் கூட எழவில்லை! மனிதன், மிருகம், புல், பூண்டு என்று அவ்வளவு உயிர்களும் கப்..சிப்..
"இவருடன் வாதாட முடியாது போலிருக்கே! இவர் வாதங்களை முன் வைக்கும் போது எம்பெருமானார் வாதாடுகிறாரா? இல்லை அந்த எம்பெருமானே வந்து வாதாடுகிறானா??....தெரியவில்லையே!")

"இறைவனின் வீட்டில் இறைவனுக்கு இல்லாத இடமா? இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா என்று எந்தப் பைத்தியக்காரனாவது கேட்பானா?
இறைவனுக்கு உண்டு என்றால், நான் சொன்ன வரிசையில் அப்படியே ஒவ்வொருவராய் பின்னோக்கி வாருங்கள்.....

அவனுக்கு உண்டு என்றால், அவளுக்கு உண்டு!
அவளுக்கு உண்டு என்றால் சேனை முதலியாருக்கு உண்டு.....
சேனை முதலியாருக்கு உண்டு என்றால், நம்மாழ்வாருக்கு உண்டு.....

இப்படியே பின்னோக்கி வந்து....உங்கள் வரை வந்து.....
பெரிய நம்பிக்கு உண்டு என்றால், இராமானுசனுக்கும் உண்டு!
இராமானுசனுக்கு உண்டு என்றால், உங்களுக்கும் உண்டு!

உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
உங்கள் அனைவருக்கும் மோட்சம் உண்டு!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!"


(அத்தனை பேர் முகத்தி்லும் அப்படி ஒரு சிரிப்பூபூபூபூபூ)

"இறைவனின் குழந்தைகள் தானே எல்லாரும்! அவைகளை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அவனும் அவளும் சொல்லத் தான் முடியுமா?
அப்படி ஒரு குடும்பக் கோட்பாட்டை எந்த தாய்-தந்தையாவது உருவாக்குவார்களா???

* குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டு இருக்கின்றன! ஆட்டம் முடிந்தால் அவை வீட்டுக்குத் தானே போக வேண்டும்?
** என்ன...சில குழந்தைகள் வீட்டுக்கு அருகிலேயே ஆடுவதால், பொழுதோடு வீட்டுக்குப் போய் விடுகின்றன! சில குழந்தைகள் ஊர் சுற்றிகள்! வீடு வந்து சேரக் கொஞ்சம் தாமதம் ஆகிறது! அவ்வளவு தான்!

மண்ணில் பிறந்தவர் அனைவர்க்கும் மோட்சம் உண்டு! வானவரும், தேவர்களும் கூட, மோட்சம் அடைய வேண்டும் என்றால், மானிடனாய்ப் பிறந்து தான் மோட்ச நிலைக்குச் செல்ல முடியும்!
வைகுந்தம் புகுதலும், வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர், எமது இடம் புகுக என்று
வைகுந்தத்து அமரரும், முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது ***மண்ணவர்*** விதியே!!!


புண்ணியமோ-பாபமோ, சொர்க்கமோ-நரகமோ,
கர்ம வினைகளை அறுக்க மானிடனாய்ப் பிறந்தே ஆக வேண்டும்!
அதனால் தான் அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!
அப்படி மானிடராகப் பிறந்து,
அற்றது பற்றெனில், உற்றது வீடு! = ஆனால் அந்தப் பற்று எப்படி அறும்
???"


மாறனோடு இப்போது ஐயன் வள்ளுவனைத் துணைக்கு அழைப்போமா?

பற்றுக பற்றற்றான் பற்றினை! அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு!
பற்றற்றான் பற்றிலே பரிபூர்ண சரணாகதி செய்தக்கால்=அற்றது பற்று!

அப்புறம் என்ன?
அற்றது பற்றெனில், உற்றது வீடு!

= மாறன் + வள்ளுவன் வாக்கு மாறுமோ? மாலவன் வாக்கு அல்லவா!

எனவே மோட்ச நிலை குறித்து அதீதமாகக் கவலைப்பட்டு, போலி குருக்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு வீண் குழப்பங்கள் எதற்கு?
அவன் பத்துடை அடியவர்க்கு மிகவும் எளியவன், பிறர்களுக்குத் தான் அரிய வித்தகன்!

உங்கள் அறிவினால் மட்டுமே, அரியவனை, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே முயன்று நம் அறிவினால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், உங்கள் ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்!
ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!

எனவே, காருண்யம் வற்றாத நீர் நிலை - எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! இதோ...
அகல கில்லேன் இறையும்! என்று
அலர் மேல் மங்கை உறை மார்பா!
புகல் ஒன்று இல்லா அடியேன், உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!!


அப்படிப் புகுந்தவர், வைகுந்தமும் புகுவர்!
இறைவனுக்கு மோட்சம் உண்டென்றால், நம் அனைவருக்கும் உண்டு!
வைகுந்தம் புகுவது *மண்ணவர்* விதியே!!!



இந்தத் தொடர் பதிவு - மூன்று பாகமாய் வந்தது.
இதில் சரணாகதி தத்துவத்தை வீடணன், பாஞ்சாலி, கஜேந்திரன் என்று ஒரு கதை போலத் தான் பார்த்தோம்!
This series was only a primer! Kinda Eye Opener! ஆனால் இன்னும் சில ஆழ்ந்த n-dimension பரிமாணங்கள் இதில் உள்ளன!

அதைப் பார்ப்பதற்கு முன்னால், அடிப்படையை கொஞ்சம் ஆழ வாங்கிக் கொள்ள வேண்டும்! அடிப் படையை வாங்காமால், ஆனைப் படைகள் ஆயிரம் வாங்கினாலும், வெற்றி என்பது சந்தேகமே! கொஞ்ச நாளில் காற்றில் கரைந்து விடும்!

எது அடிப்படை? = எம்பெருமானின் "அடிப்"-படையே அடிப்படை!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர்! நீந்தார்
இறைவன் "அடி" சேரா தார்!


திக்கெட்டும் தத்துவங்கள் ஆயிரம் பேசலாம்!
அவை எல்லாம் பளிச்செனத் தோன்றி மறையும் மின்னல் தான்!
திருவடி சரணங்கள் என்பதே நிலைத்த தீபம்!
நிலைத்த தீபிகை=அதுவே சரணாகதி தீபிகை!
ஹரி ஓம்!

(நிறைந்தது)


இன்னும் சிலருக்குச் சில-பல கேள்விகள்:

* பரிபூர்ண சரணாகதி செய்த பின் ஒருவனின் வாழ்க்கை நிலை என்ன?
* தாய்க் குரங்கைக் குட்டியானது கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டுமா? இல்லை, தாய்ப்பூனையே சேய்ப்பூனையைக் கவ்விச் சென்று காப்பாற்றுமா?

* மற்ற சமயங்களான கிறிஸ்துவம், இஸ்லாம், சமணம், பெளத்தம், சாக்தம், சைவம், வைணவம் போன்றவற்றில் சரணாகதியின் நிலை என்ன?
* சங்கத் தமிழ் இலக்கியத்தில் சரணாகதி பேசப்படுகிறதா?

* அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் = போன்ற தத்துவங்களின் சாராம்சம் என்ன? அவற்றில் சரணாகதி சொல்லப்படுகிறதா?
* மூன்று ஆச்சார்யர்களும் முரண்பட்டார்களா? இராமானுசர் சங்கரைப் புகழ்கிறார்! ஏன்? எதற்கு? எங்கே?

* பிறவி-சரணாகதி-மோட்சம் என்பது ஒரு சுழற்சியா? ஆதியில் என்னவாக இருந்தது? - இது அத்தனையும் ஏன்? எந்துக்கு? எந்து? யாகே? க்யோ? WHY? WHY? WHY?
* அறிவியல் இதற்கு வெளிச்சம் போட உதவுமா?

இவற்றை ஒவ்வொன்றாக மாதவிப் பந்தலில் பார்க்கப் போகிறோம்!
இரு வாரத்துக்கு ஒரு முறை (fortnightly) என்று முயல்கிறேன்;

நண்பர்கள் மற்றும் சக பதிவர்கள் கண்ணன் சார், குமரன், SK, மெளலி அண்ணா, கீதாம்மா, திவா சார், ஜீவா, கோவி கண்ணன் போன்றவர்கள் உதவியுடன்...!
உங்கள் விவாத விளக்குகளுடன்; அதற்கு முன் இவ்விரு பதிவுகளையும் படித்துப் பார்க்கவும்!


* தம்பி CVR இன் Destination Unknown சிறுகதை!
** நண்பர் குமரனின், இல்லாமையிலிருந்து பிறவி தோன்றுமா?

பெரும் தத்துவங்கள் என்பதால், எப்போதும் போல் விளையாட்டான நடையில் அடியேனால் எழுத முடியுமா தெரியவில்லை! அதனால் இந்தப் பொருளில் பேசப் போகும் பதிவுகளை எல்லாம் "$$$" என்று தலைப்பில் குறிப்பேன்!
இதையே அவரவர் எச்சரிக்கை மணி/ஆராய்ச்சி மணியாக எடுத்துக் கொண்டு வருவதும் வராமலும் போகலாம்! :)

அதே சமயம், மற்ற விளையாட்டான பதிவுகள் வழக்கம் போல் தொடரும் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :))
Read more »

Thursday, July 10, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 2

"நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே? அட இராமா! ச்சே...இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?" - முந்தைய பதிவு இங்கே!

"ஓ! இது தான் உன் கவலையா சீடனே? உன் பெயருக்கு ஏற்றாற் போலவே நீயும் உறங்கா வில்லி தான்! உபன்யாசம் கேட்டுக் கொண்டே உறங்காத வில்லியாகத் தான் இருக்கிறாய்!" :-)

"குருவே! மறைக்காமல் சொல்லுங்க! என்னைக் கூண்டில் ஏற்றி நிறுத்தி, கேள்வியால் துளைத்து, அடியேன் சரணாகதியை அளந்து அளந்து தானே பார்க்கப் போறாங்க? விபீஷணனைக் கூட இப்படி எல்லாம் அளந்து பார்த்து தானே முடிவெடுத்தாங்க?"

"ஹா ஹா ஹா....கதையில் இப்படி ஒன்றி விட்டாயே வில்லி! வீண் கவலை வேண்டாம்! ஒன்றை நினைவில் வைத்துக் கொள்!
நீ என்னுடைய சீடன், என்னைப் பற்றியவன்!
அது இராமன் கோஷ்டி! இது இராமானுசன் கோஷ்டி!
அங்கு விசாரணை இருக்கலாம்! இங்கு விசாரணை கிடையாது!
"
முதலில் உட்கார்!

"உடையவரே! மனம் உடைந்து போய் கேட்கிறேன்! சொல்லுங்களேன்! சரணாகதி செய்தால் எனக்கு மோட்சம் கிட்டி விடுமா?"

"ஹூம்...ஆக....ஏதோ ஒன்றை வேண்டித் தான் நீ சரணாகதி செய்வாய்? அப்படித் தானே? இல்லையென்றால் சரணாகதி செய்ய மாட்டாய்! சரியா?"

(மெளனம்)

"அப்புறம் எதுக்கு சர்வ தர்மங்களையும் விட்டு விட்டு, உன் ஒருவனையே சரணம் அடைகிறேன் என்று உதட்டளவில் சொல்லித் திரிகிறாய்?
சர்வ தர்மங்களையும் விட்டேன் என்று சொல்லும் நீ, மோட்ச தர்மத்தை விட்டா மாதிரி தெரியலையே? உன் கண் அங்கே அல்லவா இருக்கிறது?"

(மெளனம்)

"ஏன் வில்லி?...பல பிறவிகள் எடுத்தால் மிகவும் கஷ்டப்படுவோம் என்று பயமா உனக்கு?
கடைத்தேற இன்னும் பல கோடி மக்கள் இருக்கிறார்களே! பல சாதிகளில் பிறந்து, உழன்று, மறை பொருளை அறியாமல் இருக்கிறார்களே! அவர்கள் கதியெல்லாம் என்ன?
அவர்களுக்கு மறையை மறைத்து வைக்காது, எடுத்துச் செல்லும் பெரும்பணி இருக்கிறதே! அதில் எனக்கு ஒத்தாசையாக வர மாட்டாயா?"

(வில்லி தலை கவிழ்கிறான்)

"இதற்காக இன்னொரு பிறவி எடுத்து, இராமானுசனுக்கு உதவி செய்ய வா என்று கூப்பிட்டால், நீ மறுத்து விடுவாய் தானே?
அப்பாடா, நான் சரணாகதி செய்தாகி விட்டது! மோட்சம் உறுதியாகி விட்டது!
இனி அவரவர் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்க்கிட்டே இருங்க என்று சொல்லி விடுவாய் தானே?"

(மீண்டும் மெளனம்)

"தனக்கு வேலை ஆனால் போதும்! தனக்கு மோட்சம் கிட்டினால் போதும்! நான் ஒரு காரியமாக உன்னைச் சரணாகதி அடைகிறேன்! அதைக் கொடுத்து விடு! = இது தானே உன் எண்ணம்?

சற்றுமுன் கருணை வள்ளலான இராமபிரானை ஏதேதோ கேள்வி கேட்டாயே!
ச்சே...இதுவா சரணாகதி?
இதுவா உன் பரங்கருணை?
இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?

......அதே போல் நான் உன்னைக் கேட்கட்டுமா?
ச்சே...இதுவா உன் சரணாகதி?
இதுவா உன் இறையன்பு?
இதுவா உன் நிபந்தனையற்ற சரணம்?
"


(வில்லி தேம்பித் தேம்பி அழுகிறான்...)

"உடையவரே! அடியேனை மன்னித்து விடுங்கள்! இறைவனிடத்தில் சுயநலத்தைக் காட்டிப் பொதுநலத்தை மறந்தேன்! எனக்கு வேண்டியதை மட்டும் எதிர்பார்த்து அதற்கு மட்டும் சரணாகதி என்று துணிந்தேன்! என் தவறைத் திருத்தி ஆட்கொள்ளுங்கள்!"

"தவறல்ல வில்லி! முதலில் அப்படித் தான் இருக்கும்! ஆனால் மனதால் உணர்ந்த பின் சரியாகி விடும்!
அதற்காக அருளாளன் அருள் உனக்கு இல்லை என்றாகி விடாது! கவலைப்படாதே!

ஒன்றை வேண்டிச் செய்த சரணாகதி - பாஞ்சாலி - இது காம்யார்த்த சரணாகதி!
அவனையே வேண்டிச் செய்த சரணாகதி - கஜேந்திரன் - இது பரிபூர்ண சரணாகதி!

ஆனைக்கும் அருள் உண்டு! ஆயிழைக்கும் அருள் உண்டு! ஆனால் யார் செய்த சரணாகதிக்கு, இறைவன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்? தெரியுமல்லவா?..."

"தெரியும் குருவே! ஆனைக்குத் தான் அலறி அடித்துக்கொண்டு, ஓடி வந்தான்"

"உம்...ஐந்தறிவுச் சரணாகதி உசத்தியாகி விட்டது! ஆறறிவுச் சரணாகதி சற்று தாமதமாகி விட்டது, பார்த்தாயா? ஹா ஹா ஹா!"

"ஆமாம் குருவே! இத்தனைக்கும் யானைக்குத் தான் செய்வது சரணாகதி என்பது கூடத் தெரியாது தானே?"



"அருமையாகப் பிடித்துக் கொண்டாய்! சரணாகதி செய்கிறோம் என்று கூடத் தெரியாமல், செய்த சரணாகதி தான் கஜேந்திர சரணாகதி!

யானை எவ்வளவோ போராடிப் பார்த்தது! ஒன்றும் முடியவில்லை! இறக்கும் தறுவாயில் ஒருவருக்கு இப்படியா சிந்தனை போகும்? ஆனைக்கு இப்படிப் போனது...”அச்சோ...நம்மால் இயலாமற் போனதே! இந்தத் தாமரை மலரை எம்பெருமானுக்குச் சூட்டினால் எவ்வளவு மங்களகரமாக இருக்கும்?”

மேலே...அலைமகள், அப்பனுடன் தத்துவ சாரத்தைப் பேசிக் கொண்டு இருக்கிறாள்!
அவன் மேல்துண்டில், தன் சேலையை முடித்துக் கொண்டு, ”என்னை விட்டு ஓடிப் போக முடியுமா” என்று ஏகாந்தமாக உரையாடிக் கொண்டிருக்கிறாள்!

ஆதிமூலமே......!

அலறி அடித்துக் கொண்டு எழுந்தான்! அன்னை முடிச்சு போட்டதையும் மறந்தான்!
விறுவிறு என்று ஓடுகிறான் அப்பன்! குறுகுறு என்று கீழே விழுகிறாள் அன்னை!
அவன் மிரண்டான்! இவள் புரண்டாள்! - ஹூஹூம்! சட்டை செய்யவில்லை!
கருடன் குறிப்பறிந்து ஓடோடி வருகிறான்!
அன்னையின் நிலை கண்டு கருடன் கண்ணில் நீர்! ஆனால் அப்பனுக்கோ எதுவும் பொருட்டில்லை! கஜேந்திரா...இதோ வந்தேன்!

அவன் நமக்கு அது கொடுப்பான், இது கொடுப்பான், மோட்சம் கொடுப்பான் என்றெல்லாம் கணக்குப் போடாத நிலை!
நாம் அவனுக்கு அது கொடுப்போம், இது கொடுப்போம், அவன் உள்ளத்துக்கு உகப்பைக் கொடுப்போம் என்று நாம் அவனுக்குத் தரும் நிலை!

தன் விருப்பம் என்னவென்று ஆனைக்குத் தெரியவில்லை! எம்பெருமானின் திருவுள்ள உகப்பிற்கு மட்டும் தாம் இருப்போம் என்றே அது இருந்தது!
- இதுவே கஜேந்திர சரணாகதி!
- இதுவே பிரகலாத சரணாகதி!
- இதுவே ஆஞ்சநேய சரணாகதி!
- இதுவே பரிபூர்ண சரணாகதி!

வாழைப்பந்தல் கிராமத்து, ஆலயக் கருவறையில் அதே காட்சி! ஆனையும் இருக்க, அதனுடன் அப்பனும் இருக்க......ஆனைக்கருளிய அருளாளப் பெருமாள் (வடமொழியில்: கஜேந்திர வரதராஜப் பெருமாள்) திருவடிகளே சரணம்!



"பாஞ்சாலிக்கு வருவோம்!
அவள் ஒன்றை வேண்டிச் செய்தாள் - அது தவறில்லை - தன்னால் இயன்ற மட்டும் போராடிப் பார்த்தாள்! ஒன்றும் முடியாது என்று தெரிந்து போகவே, இறுதியில் வேண்டிக் கொண்டாள்!
என்னவென்று வேண்டிக் கொண்டாள்? அது அவளுக்கே தெரியாது! அது தான் வேடிக்கை!:-)

”கடவுளே, என்னை வீமன் காப்பாற்றுவானா? விசயன் வில்லெடுப்பானா? பீஷ்மர் எழுந்து ஆணையிடுவாரா? விதுரர் விடாமல் போராடுவாரா? அது நடக்குமா? இது நடக்குமா??” என்றெல்லாம் நினைத்தாளே தவிர "இறைவா, என் மானம் காப்பாற்று" என்று மட்டும் நினைக்கத் தோன்றவே இல்லை!

இன்னின்ன இப்படியிப்படி நடக்க வேண்டும் என்று நினைக்கும் மனித மனம்,
கடினமான நேரத்திலும் காரியத்தைத் தான் கவனிக்கறது! காரணத்தை மறந்து போகிறது!

இறைவனுக்கும் அவள் கேட்டதை உடனே கொடுத்து விட ஆசை தான்!
ஆனால் அவரா? இவரா? அதுவா? இதுவா? என்று வினாடிக்கு வினாடி அவள் விருப்பம் மாறிக் கொண்டே இருக்கிறதே! எதை விரும்புகிறாள்? எதைக் கொடுப்பது???

இறுதியில் தன் விருப்பம் எதுவும் சரி வரவில்லை என்று அவளுக்குத் தெரிந்து விட்டது! எல்லாம் முடிந்தது! ”ஏழு தலைமுறைக்கும் என் குலத்தைக் காப்பாற்று!” என்று தன்னையும் அறியாமல் அவள் நா முணுமுணுக்கிறது! அதற்கு மேல் எதுவும் கேட்கக் கூடத் தோன்றவில்லை!
உட்சோ தியிற் கலந்தாள்; - அன்னை
உலகத்தை மறந்தாள், ஒருமை யுற்றாள்!
ஹரி, ஹரி, ஹரி என்றாள்; - கண்ணா,
அபயம் அபயம் உனக்கு அபயம் என்றாள்


கோவிந்தா........!
சரணாகதி முடிந்தது! அருள் மழை பொழிந்தது!
நாயகன் செய்யாததை, அவன் நாமம் செய்தது!
தன் விருப்பம் எதுவென்று தெரியாது, இறைவனிடமே ஒப்புவித்தாள்! அவள் எதை விரும்பியதாக நினைத்தாளோ, அதுவே அவளுக்குக் கிட்டியது!

சரணாகதி செய்ததை பின்னர் அவளே மறந்து போய் விட்டாள்! ஆனால் அவன் மறக்கவில்லை!
ஏழு குலத்துக்கும் கர்ப்பத்தில் உள்ள குழந்தையையும் சேர்த்தே காப்பாற்றினான்!
= இது காம்யார்த்த சரணாகதி! நொடிப்பொழுது சரணாகதி!
இதை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்!
ஒரு பொருள் மேல் பற்று போய், இன்னொரு பொருள் மேல் பற்று வரும் போதெல்லாம், அதை வேண்டிச் செய்ய வேண்டும்!

பரிபூர்ண சரணாகதியில், அப்படி இல்லை!
ஒரு முறை ஒப்புவித்தது ஒப்புவித்தது தான்!
இனி எல்லாம் அவன் திருவுள்ள உகப்பே! இனி எல்லாம் சுகமே!
உனது ஆளாக என்றென்றும் பார்த்திருப்பேன் அடியேனே!
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!



"சரி வில்லி........ரொம்ப தத்துவம் எல்லாம் வேண்டாம்!
உன் மனதை அரித்தெடுக்கும் கேள்வி! அதை நீயும் கேட்டு விட்டாய்...
அதற்கு விளக்கேற்றி வைக்கிறேன். விடை தெரிகிறதா பார்!

என்ன கேட்டாய்? சரணாகதி செய்தால் உனக்கு மோட்சம் கிடைக்குமா என்று தானே கேட்டாய்?
எங்கே சொல் பார்ப்போம்...இராமானுசன் என்னும் எனக்கு மோட்சம் கிடைக்குமா?"

"குருவே என்ன கேள்வி இது? அய்யகோ! அய்யகோ!"

"பதறாதே! பயப்படாமல் சொல்!"

"அரங்கத்து ஆலயத்தைத் திருத்தி வைத்தீர்! "நம்மை உடையவர்" என்று அந்த அரங்கனே சொன்ன உடையவர் நீங்கள்! திருமலை அப்பனுக்கே சங்காழி அளித்த அண்ணல்!
மாறனின் தமிழ் வேதத்தை மாநிலம் முழுதும் தழைக்கச் செய்தவர்!
குலத்தால் தள்ளாது அனைவரையும் நலத்தால் நல்கும் கருணை கொண்டவர்!
- உங்களுக்கு மோட்சம் கிட்டாது என்றால் வேறு யாருக்குத் தான் கிட்டும்?"

"இல்லையப்பா! எனக்குக் கிட்டாது!
இராமானுசன் மோட்சத்தைச் சம்பாதிக்க முடியாது!"

(தொடரும்...)
Read more »

Wednesday, July 09, 2008

இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? - 1

"என்ன இது லூசுத்தனமான கேள்வி? இறைவன் தானே எல்லாருக்கும் மோட்சம் அருளுவதாக சொல்லுவாங்க! அவருக்கே மோட்சம் கிடைக்குமா-ன்னு கேட்டா என்ன அர்த்தம்? வர வர உங்க விளையாட்டுக்கு அளவே இல்லாமப் போச்சு கேஆரெஸ்!" - அப்படி-ன்னு என்னைத் திட்ட வரீங்க தானே? :-)

என்னங்க பண்ணறது! நம்ம ஸ்ரீதர் நாராயணன் அண்ணாச்சியோட Dragon Fly Effect-ல மாட்டிக்கிட்டேன்-ல! அதான் இப்படி எல்லாம் எடக்கு மடக்கா யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்!:-)
போதாக்குறைக்குப் பொன்னப்பா-ன்னு எங்க பாலாஜி வேற "அவர் என்ன லூசா?"-ன்னு சங்கிலிக் கேள்வித் தொடர்-ல கேட்டிருந்தாரா? அதான் இப்படி ஒரு லூசான யோசனை.....
அட, பேசாம மேற்கொண்டு பதிவைப் படிங்கப்பு :-)

அன்று காவிரிக் கரையில் இராமாயண உபன்னியாசம்...விபீஷண சரணாகதி கட்டம்...
அப்போ தான் இந்தக் கேள்வி எழுகிறது! லூசுத்தனமான இந்தக் கேள்வியைக் கேட்கிறது கேஆரெஸ் இல்லீங்கப்பா!
சாட்சாத் ஒரு விற்பன்னர்! அறிவும் அன்புமாய் கலந்து தன் மாணாக்கருக்குச் சொல்லிக் கொடுப்பவர்! அவர் போய் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா? சிலர் நெளிகிறார்கள்! சிலர் முகம் சுளிக்கிறார்கள்!

அம்மா மண்டபத்து ஆலமரத்தின் கீழே ஒரே சலசலப்பு!
ஆல இலைகள் சலசலக்க, ஆற்று நீர் சலசலக்க, ஆசார்யன் கேட்ட கேள்வியால் ஆட்கள் எல்லாம் சலசலக்க, அடியார்கள் சலசலக்க...
"அந்த வீடணன் துரோகி தானே?" - இதுவல்ல கேள்வி! இதை மெள்ள இன்னொரு பதிவில் பார்த்துக்கலாம்! :-)
"சொல்லுங்க பார்ப்போம், இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா?" - இது தான் அந்த மகாகுரு கேட்ட கேள்வி! இதை மட்டும் இந்தப் பதிவுத் தொடரில் பார்ப்போம்! :-)



அண்ணன் இராவணன் மிகவும் இழிவாகப் பேசி வெளியேறச் சொல்லி விட்டான்! இந்திர சித்தோ சீற்றப்பன் ஆகி, சிற்றப்பனைச் சிறுமைப்படுத்தி விட்டான்!
இலங்கையை விட்டு, மனைவியை விட்டு, மக்களை விட்டு ஓடோடி வருகிறான் வீடணன். கண்ணீர் மல்க கும்பகருணனின் நிலையையும் எண்ணிக் கொண்டே வருகிறான்! நண்பர்கள் நால்வர் அவனுடன் பறந்து வருகிறார்கள்!

இராமன் இருக்கும் இடம் வந்து சேர்கிறான் வீடணன்...பார்த்தாலே தெரிகிறது அவர்கள் அசுரர்கள் என்று! உடனே குரங்கினப் படைகள் சூழ்ந்து அவர்களை விரட்டப் பார்க்கின்றன!
இன்னும் வீடணன் வானத்தை விட்டுக் கீழே இறங்கவில்லை! இறங்கினால் அதோகதி தான்!

அதோகதியில், யார் கதி? அதோ கதி! அதோ கதி! என்று அடியவர்க்கு அதோ...கதியாக கண்ணுக்குத் தெரிகிறானே! இராமன்! அதோ நம் கதி! - இதுவே வீடணனின் அப்போதைய மனநிலை!

கார் தான் எனும் மெய்நீர் உரையும் என்ன
கண்ணன் கழல் அடைந்து உய்ய வந்தேன்!
ரக்ஷமாம் சரணாகதம்! ராகவாய மகாத்மனே!
சர்வ லோக சரண்யாய, விபீஷணம் உபாஸ்திதம்!

"அன்பர்களே! என் பேர் வீடணன்; இலங்கைப் பேரரசன் இராவணனின் தம்பி! அண்ணனை நல்வழிப்படுத்த முடியவில்லை! துரத்தி விட்டனர்! புகல் ஒன்று இல்லா அடியேன், அண்ணலின் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்! போய் இராமனிடம் சொல்லுங்கள்;

சர்வ தர்மங்களையும் விட்டு விட்டேன், அவன் ஒருவனே சரணம் என்று வந்துள்ளேன்!
குடும்பத்தை விட்டேன், சுற்றத்தை விட்டேன்,
செல்வத்தை விட்டேன், பதவியை விட்டேன்,
நாட்டை விட்டேன், மானத்தை விட்டேன்,
ஊர் தூற்றி ஏசுமோ என்னும் சுய கெளரவம் விட்டேன்!
அண்ணனை விட்டேன், ஆயின் அண்ணலை விடேன்!!

இலங்கையில் இருந்து வந்த முதல் அகதி அடியேன் தான்!
அண்ணலிடம் போய் என் சரணாகதியைச் சொல்லி ஆற்றுப்படுத்துங்கள்!"



சுக்ரீவனுக்குச் சந்தேகம், அங்கதனுக்குச் சந்தேகம், ஜாம்பவானுக்குச் சந்தேகம், இன்னும் எத்தனை பேரோ, அத்தனை பேருக்கும் சந்தேகம்!

"இதுவா சரணாகதி? இவன் மேலே இருக்கான்! அண்ணல் கீழே இருக்கார்! ஒரு பணிவு வேணாம்? ஆணவம் பிடித்த அசுரன், சரணாகதி செய்யும் லட்சணத்தைப் பாருங்கள்!

இவன் எதிரியின் ஒற்றனே தான்!
இல்லையென்றால், ஏதாவது தவறு செய்தபடியால் இவனை இராவணன் அடித்து விரட்டி இருப்பான்!
இல்லையென்றால், மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!
இவனைச் சேர்த்துக் கொள்ளவே கூடாது!" - சொல்வது சுக்ரீவன்! புன்னகை பூப்பது இராமன்!

இதில் நகைச்சுவை என்னவென்றால் "மண்ணாசை பிடித்துப் போய் மானம் இல்லாமல் உதவி கேட்டு வந்திருப்பான்!" என்பதைச் சுக்ரீவன் சொன்னது தான்!
சில மனிதர்களுக்கு ஒரு வேடிக்கையான குணம்: தனக்கொரு நியாயம்; பிறர்க்கொரு நியாயம்! தன் கருத்துக்கு ஒரு நியாயம்! மற்றவரின் அதே கருத்துக்கு வேறொரு நியாயம்! ஐயன் வள்ளுவனே சிரிக்கிறான்!
ஏதிலார் குற்றம் போல் தன் குற்றம் காண்கிற் பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு?

நாத்திகனுக்கு,
சீதை எனும் பெண்ணை இழிவாகப் பேசினால் - அது நியாயம்!
ஆனால் பெண்ணை மற்றவர்கள் இழிவாய்ப் பேசி, பெண்ணுரிமை மறுத்தால் அது அநியாயம்!
ஆத்திகனுக்கு,
நந்தனார் பாஷை தெரியாமல் செய்யும் பூசை - அது நியாயம்! புராணமாகும்!
ஆனால் அடுத்த வீட்டுக் குப்பன், ஏதோ அவன் அறிந்ததை ஓதி வழிபட்டால், அது மட்டும் தீட்டாகும்! :-)

ஆனால் இப்படி இரட்டை இரட்டை நிலை எடுக்கத் தெரியாதவன் தானே உண்மையான அடியவன்!
வீடணனின் நிலைமை அங்கே ஒரே ஒரு அடியவனுக்குத் தான் தெரிந்திருந்தது!
இப்போது சரணாகதி செய்பவனின் நிலை, அப்போது சரணாகதி செய்தவனுக்குத் தெரிந்திருந்தது!
யார் அந்த அடியவன்? சிறிய திரு அடியவன்?
சரணம் கேட்டு வந்திருப்பவன் கொடியவனா? இல்லை கொடி-அடியவனா?
இராமன் கூட்டிய சபையில், பக்தனுக்காக ஒரே ஒரு குரல்!
- அது அன்றும், இன்றும், என்றும், எம் அன்பன் ஆஞ்சநேயனின் குரல்! சிறிய திருவடிகள் திருவடிகளே சரணம்!


உபன்னியாசம் மிக அழகாக போய்க் கொண்டு இருக்கும் வேளையில்...
"அச்சோ! நான் தேறுவேனா?" - இப்படி ஒரு குரல் முன் வரிசையில் இருந்து!
அரற்றும் கூக்குரல் அது!....
பாதியில் எழுந்து அரற்றுகிறார் ஒரு சீடர்!

"இத்தனை பேர் இருக்கும் சபையில், இப்படியா ஒரு சீடன் நடந்து கொள்வது? ச்சே! இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சீடனாகச் சேர்த்துக் கொண்டால், இப்படித் தான் ஆகும்! ஒரு இங்கிதமும் தெரியாது! அழகானதொரு உபன்னியாசம் இப்படிப் பாதியில் நின்று போனதே!" - சீடர்கள் சில பேரின் பொருமல்!

"என் சீடனே! என்ன புதுப் பழக்கம்? ஏன் திடீர் என்று இப்படிப் பாதியில் அரற்றுகிறாய்? என்ன ஆனது உனக்கு?"

"சாமீ...விசயம் தெரியாமல் போயும் போயும் இந்தப் பெருமாளுக்கு நான் ஒரு அன்பன் ஆனேனே!
பெண்டாட்டி, புள்ளை, சொத்துபத்து, பதவி-ன்னு எல்லாம் விட்டுட்டு வந்தான் ஒருவன்! அவனை நடுவானத்தில் நிறுத்தி வைத்து விட்டு, இப்படியா விசாரித்துக் கொண்டு இருப்பார்கள்? இது தானா அந்த இராமனின் குணம்?
கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ-ன்னு நேற்று சொன்னீங்களே! ஆனா இப்படி ஆயிடிச்சே சாமீ...

"ஓ...இதனால் உனக்கு என்ன கஷ்டம்? அச்சோ, நான் தேறுவேனா என்று ஏன் கத்தினாய்?"

"இப்படி அனைத்தையும் விட்டுட்டு், அவன் ஒருவனே கதி-ன்னு வந்தான்! அவனுக்கே இந்தக் கதி-ன்னா.....
ஒன்னுத்தையும் விடாம, சும்மா ஒப்புக்கு இருக்கும் அடியேனுக்கு என்ன கதியோ?
அவனாச்சும் ரெண்டு மந்திரம், ரெண்டு பாட்டு சொன்னான்! எனக்கு அது கூடத் தெரியாதே!

குருவே, எங்களை எல்லாம் உபன்னியாசத்தின் முடிவில் சரணாகதி செய்யுமாறு சொன்னீங்களே?...
நான் சரணாகதி செய்தால், யார் யாரை எல்லாம் கூட்டி, என்னென்ன விசாரணை எல்லாம் நடக்குமோ, தெரியலையே?

அட இராமா! இதுவா சரணாகதி? இதுவா உன் பரங்கருணை? இதுவா உன் நிபந்தனையற்ற அபயம்?"

(தொடரும்....)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP