Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Sunday, December 27, 2009

உண்மைக் கதை: "யானை" ஏகாதசியா? வைகுண்ட ஏகாதசியா??

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்!
மாதவிப் பந்தல் நிறைந்தது என்று சொல்லி இருந்தேன்...
இருந்தாலும், பந்தல் பொழிலை வாட விடாது, தண்ணென்று நீர் பாய்ச்சி, சிந்து பூ மகிழும் ரங்கன் அண்ணாவின் அனுமதி பெற்று...

இதோ...உங்கள் முன்னே...அடியேன்...

ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?


இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்" - ஜில்லென்று மலையாளப் பாட்டை, கண்ணன் பாட்டில் போய்க் கேட்டுப் பாருங்கள்!

அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி?
பொதுவா, "வைகுண்ட" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அத்தனை ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தான் காரணம்!
= வாரணம் தான் காரணம்!

அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, "குருவாயூர்" ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!


1914! வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!
தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!
அந்த பத்து வயதுக் குட்டி யானை = கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற "கஜராஜன் கேசவன்" ஆனது!

யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
பிரகலாதனும் குட்டி தானே! அவனைப் போலவே தான் இதுவும்!

அமைதியான-x-துறுதுறுப்பான சுபாவம், என்னையப் போல! :)
சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்! அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!

கண்ணனையே சுமக்கும் களிப்பிலே, மிதப்பிலே...
இந்த யானை, ஆலயத்துக்கு உள்ளேயே சாணம் போடும்! நீரும் பாய்ச்சும்! :)
நாலம்பலம் என்று சொல்லப்படும் பிரகார வலம்! அதில் வலம் வரும் போதெல்லாம் இப்படித் தவறாது பண்ணும்! :)

வளர வளர, சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும்,
பணக்காரக் கோயிலில் சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லாமல்,
குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க...

இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!
மேலும் விதம் விதமாக வேடிக்கை காட்டவும் வேறு கற்றுக் கொண்டது!
பூவைத் தூவி, தலையைக் குலுக்கி, கழுத்து மணியை ஆட்டி...என்று பல இன்பச் சேட்டைகள்!

போதாக் குறைக்கு, வீதியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்!
முன்னும் பின்னும், வலமும் இடமும்,
நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும்,
அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!

குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்! :)
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது! ஆனால்...ஆனால்...


பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்!
அங்குசத்தால் அடி வாங்கும்!
ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!
குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!

மனசிலே சுமக்கத் தொடங்கி விட்டால் வரும் பாரத்தை யார் அறிவார், சொல்லுங்கள்?


குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! "வெளி"யில் கொண்டு வரும் சிலை என்பதால் திரு-"வெளி"! ஆனால் ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!

திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கும் இந்த ஸ்ரீவேளி உண்டு! பொன்-வெள்ளி என்று இரண்டு ஸ்ரீவேளிகள்!
மூலத்தானத்து முதல்வனின் காலடியில் இரு பக்கமும், இவற்றை இன்றும் காணலாம்!
செந்தூரில், மலையாள முறையில் (குமார தாந்த்ரீகம்) பூசை செய்வதால், இப்படி மலையாள வழக்கம் ஏற்பட்டு விட்டது! இப்போ நாம் குருவாயூருக்கு வருவோம்!

ஸ்ரீவேளி = தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்!
நம்மூரு சிலை போலவெல்லாம் இருக்காது! கேரளா ஸ்டைலில் இருக்கும்!
அதுக்கு "திடம்பு"-ன்னு பேரு!

நம்ம கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!
மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்!

எவ்வளவு தான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!
தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!

உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
வேறு எங்கும்,
அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! படிச்சாலும், நிஜ வாழ்வில் பிடிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்
அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!
வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!



கேசவனை, "திமிர் பிடித்த யானை" என்று பட்டம் கட்டி விட்டார்கள்!
அது "நார்மலான" யானை இல்லை! "ஈகோ பிடிச்ச" யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!

* முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டியவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்! = பசி!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்! = தனிமை!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* சரி யானையின் "ஈகோ"-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!
குருவாயூர் அப்பனைத் தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்??? ஐயோ!

அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் "திடம்பை" ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, "திடம்பை" அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!

அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்கப்பட்டான்!
உதாசீனம்! Ignore! - Thatz the Best Insult!
அப்போவாச்சும் அந்தக் கேசவன் "திருந்தினானா"?


ஆனால் அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது!
நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்......ஆனால்...

யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை!
தன்னை மட்டும் தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!

அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்:
குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!
மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?

மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!
மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?

கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை!
மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!
ஆனால் அதன் கண்களில்? கண்களில்?......அது மட்டும் நிற்கவே இல்லை!

பாகன்களுக்குப் பயம் வந்து விட்டது! யானையின் கண்ணில் தொடர்ந்து நீர் கோர்த்த வண்ணம்!
ஒரு நாளில்லை ஒரு நாள், மதம் பிடித்து விடும் என்று நினைத்து விட்டார்கள்!

ஆனால் மதமாவது? ஒன்றாவது?
குருவாயூரப்பனிடம், தனக்கு"ம்" உரிமை இருக்கு என்று நிலை நாட்டிக் கொள்ள, பாவம்...மட நெஞ்சம், அதற்குத் தெரியவே இல்லை!
அவனே ”கதி” என்ற நிலையில்...”சரணா கதி” என்ற நிலையில்...

தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை...
அவனைக் குருவாயூரப்பனும் கைவிட்டு விட்டானோ? :(



1970 மார்கழி மாசம் - குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா!
விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்!
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!

நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்! வாரணத்துக்கு ஆயிரம் கனவுகள்! - வாரணமாயிரம் கனவுகள்!

"அதிகாலை நேரத்தில் சூரியன் தன்னிடம் இதமாகத் தானே இருந்தது?
ஆனால் பிற்பாடு சுயரூபம் காட்டி விட்டதே! இப்போ இப்படிச் சுடுகிறதே!
சரி, இனி நம்ம வழி நமக்கு! அவனுக்கு மலர வேணாம் என்று ஒரு தாமரைப்பூ நினைத்திடுமா?

அது போல், என் துயரை நீ வீட்டா விட்டாலும் பரவாயில்லையடா!
உனக்கு அல்லால்,
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"

ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்...நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
பஞ்ச பூதத் தத்துவம் என்ன சொல்லிற்று? = அக்னியில் இருந்து நீர் உண்டானது! அக்னையே இதம் நமம!
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! - தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! - தீ! தீ! தீ!

மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!
ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!

யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?
அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!

"ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? "
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! - "என்டே குருவாயூரப்பா"!

கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட...

ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!

அனைவரும் உள்ளே சென்று பார்க்க...
இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!
அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க...
ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க...
ஸ்ரீகோயில் தப்பியது! சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!

துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு,
குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து,
அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த.....
குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!


மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்!
கேசவன் "ஈகோ" பிடித்த ஜீவன் அல்ல! "கண்ணனை"ப் பிடித்த ஜீவன் - என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்.......
என்ன பிரயோஜனம்?......அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! - கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?

மேல்சாந்திகளும், தந்த்ரிகளும், கடுமையான சாஸ்திர சட்டங்களால் ஆளும் குருவாயூரில்,
மனிதர்களுக்கே பல சமயம் நீதி கிடைப்பதில்லை! ஒரு யானைக்கா நீதி கிடைக்கப் போகிறது?

நெஞ்சுக்கு நீதி - அதை யார் தருவார்கள், போயும் போயும் ஒரு யானைக்கு? = நிமலன் நிர்மலன் "நீதி" வானவன்! அவன் அல்லவா தர முடியும் "நெஞ்சுக்கு நீதி"!

குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான "திடம்பு", மீண்டும் கேசவன் மேல் ஏறியது!
கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!

ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்!
பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்!
குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!

நெடுநாள் கழித்து நடையழகு!
மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!


வண்ண மாடங்கள் சூழ் "குரு வாயூர்"
"கண்ணன்-கேசவன்" நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!


Dec-1976......இன்றைய நாள்...அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் "திடம்பை", கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே,
கீழே, சரி சரி சரி எனச்.....சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!

அவசரம் அவசரமாக, "திடம்பை", இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்!
தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!

மூச்சு இழுக்க இழுக்க........
ஹோய் கேசவா.....உனக்கா இந்த மரண அவஸ்தை?

இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்!
வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!
வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!

எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,
அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,
சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,
துதிக்கையை நீட்டி விரித்தபடி,
துதிக்-"கையை" நீட்டி விரித்தபடி,

"சரணம்" என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது...
அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!
ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

புகல் ஒன்று இல்லா அடியேன்....
மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்.....
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!



தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!

தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?

அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?
அவன் மனத்திலா "தனக்கு மட்டுமே" என்கிற ஒரு எண்ணம்?
தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?

அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?

யார் பெற்ற பிள்ளையோ?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து,
இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே!

அவாவறச் சூழ் ”அரியை அயனை அரனை” அலற்றி
அவா அற்று, வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார்......
பிறந்தார் உயர்ந்தே-உயர்வற உயர் நலம், துயர் அறு சுடர் அடி, தொழுது எழென் மனனே!

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வாழைப்பந்தல் கிராமத்தில், சின்னஞ் சிறு வயதில்...அன்று கண்ட காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!

முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!
”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!


வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!

ஹே பெருமானே,
இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!
யம்மாடி கோதை,
இந்த யானைக்கு இனி உன் வீடே வீடு! இதைச் சேர்த்துக் கொள்!

இந்தக் கால் மடங்கா யானைக்கு...
வேறெங்கும் அகங் குழையா யானைக்கு...
பிறர் வீட்டில் ஏறத் தானே மதிப்பில்லை?
உன் "வீட்டில்" ஏற, மிக்கதோர் மதிப்புண்டே!


கேரள அரசு, கேசவனைக் "கஜராஜன்" என்று பிற்பாடு கொண்டாடி...
குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!

"வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!" என்று...
இன்றும் எம்பெருமானைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்...
ஐந்தறிவு மட்டுமே கொண்ட அவனுடைய அவன்!

ஐந்து-அறிவால் அறிந்து, உன் இரு-தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!


உன் பேரையே என்றென்றும் சொல்லிய,
என் அலை-வாய்க்கு உகந்த பெருமாளே!
Read more »

Wednesday, March 19, 2008

***பெண்ணழகு கண்ணழகு முன்னழகு பின்னழகு! - 1

நீ நடந்தால் நடை அழகு-ன்னு பாடுவாங்க காதலில் விழுந்த பசங்க! ஆனா காதலியின் நடைக்குக் குடை பிடிச்சிக்கிட்டுப் போகும் தெகிரியம் எத்தினி பேருக்குப்பா இருக்கு? :-)

அதுவும் நண்பர்கள் பல பேர் ஸ்பென்சர் ப்ளாசாவில் சூழ்ந்திருக்காய்ங்க!
அங்கே குக்கி மேனில் குக்கி தின்னுக்கிட்டு, "கடலையே கண்ணாயினார்"-ன்னு இருந்தாக் கூட மன்னிச்சி விட்டுருவாங்க நம்ம மக்கா!

ஆனா, நீ நடந்தால் நடை அழகு, உனக்கு நான் பிடிக்கும் குடை அழகு!-ன்னு பாடிக்கிட்டே...
காதலியின் தோளில் கை போட்டுக்கிட்டு,
மாலுக்குள்ளேயே குடை பிடிச்சிகிட்டுப் போனான்னு வைங்க!
அச் சிங்கம் அசிங்கமாயிரும், நண்பர்கள் கட்டுற ரவுசுல! :-)

ஆனா இந்த மாதிரி நெசமாலுமே நடந்து கொண்ட ஒரு இளைஞன், பின்னாளில் ஒரு பெரிய ஆன்மீகவாதியா மாறினானாம்! - அலோ, என்னை எதுக்குப் பாக்கறீங்க? நான் அவன் இல்லை! நான் யாருக்கும் குடையும் பிடிக்கலை! :-)


கங்கையிற் புனிதமாய காவிரிப் பெண் கொழித்தும் சுழித்தும் விளையாடும் ஊர். அந்தக் கள்ளன் அரங்கனோ, காவிரிப் பெண் வரும் வழியிலே பாம்புப் படுக்கை விரித்துப் படுத்துக் கொண்டான்!

பொதுவாகவே காவிரி நம்மிடையே தலை நிமிர்ந்து வரத் தயங்கும் பெண். எத்தனையோ சொல்லியாகி விட்டது. நாணம் அவளை விட்டபாடில்லை! ஞானம் அவளை அடைத்தவர்களைத் தொட்டபாடில்லை!

பார்த்தாள் காவிரி...அரங்கன் பள்ளி கொண்ட இடத்துக்குச் சில மைல்கள் முன்னரே இரண்டாகப் பிரிந்தாள், முக்கொம்பு என்னும் ஊரில்.
தென்காவிரி, வடகொள்ளிடம் எனப் பிரிந்து, இரண்டு பக்கமாக ஓடி வருகிறாள்.

ஒரு மாலையின் இரண்டு பக்கங்களைப் போல் ஓடியே வந்து, அரங்கனுக்கு நீர்மாலை சூட்டுகிறாள்.
திருமலையில் தோமாலை! அரங்கத்தில் நீர்மாலை!
பின்னர் கல்லணைக்கு முன்னுள்ள ஊரில் ஒன்றாகச் சேர்ந்து, ஓடுகிறாள் அந்த மாலையிட்ட மங்கை! இப்படி மாலுக்கே மாலையிட்டதனால், "கங்கையிற் புனிதமாய காவிரி" என்று பட்டம் பெறுகிறாள்.

அன்று காவிரிக் கரையில் ஒரே மக்கள் கூட்டம்...சாரி சாரியாக ஓடுகிறார்கள்!
கோயிலுக்குச் செல்லும் இராமானுசருக்கோ பெரும் வியப்பு!
சீடர்களைப் பார்த்துக் கேட்கிறார்..."ஆகா, மக்களுக்கு அரங்கன் மேல் ஆரா அன்பு வந்து விட்டதா என்ன? இத்தனை பேரும் ஆர்வமாக அரங்கத்துக்குள் செல்கிறார்களே?"

"சுவாமி...இவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் அரங்கம் திருவரங்கம் அல்ல! மல்யுத்த அரங்கம்!"

"என்னது...மல்யுத்த அரங்கமா?"

"ஆமாம் சுவாமி. யாரோ தனுர்தாசனாம்! பெரிய மல்யுத்த வீரன்! அவன் போடப் போகும் குத்துச் சண்டையைக் காணத் தான் இவ்வளவு கூட்டமும் செல்கிறது! பக்திச் சுவை அறியாத பாவி மக்கள்!"

"உம்! அப்படி மக்களைப் "பாவிகள்" என்று பழித்துச் சொல்லாதீர்கள்...இந்த நிலை மாற்றாத நாம் தான் பாவிகள்! மக்களை நோவதில் அர்த்தமே இல்லை!
அரங்கனின் கருவறைக்குள் அவர்களா இருக்கிறார்கள்? நாம் தானே இருக்கிறோம்! சொத்து யார் பொறுப்பில் உள்ளதோ அவர்கள் தான் அதைப் பராமரிக்க வேண்டும்!
இன்று அந்த மல்லனைப் பார்க்கப் போகட்டும். நாளை அவனை விடப் பெரிய மல்லன், மல்லாண்ட திண் தோள் மணிவண்ணன். அவனைக் காண இதே மக்கள் வருவார்கள். வாருங்கள் நாம் போய்ச் சேவிப்போம்! "



மறு நாள் சித்திரை வெயில் சீரங்கத்தில் தகிக்கிறது! ஆற்றிலும் கால் வைக்க முடியவில்லை! ஆற்று மணலிலும் கால் வைக்க முடியவில்லை!

வேதம் சுடும் வேதியர்க்கும் பாதம் சுடும்; தமிழோதி வரும் முனிவனுக்கா காத தூரம் சுடும்? நாதம் சுடும், கீதம் சுடும்! ஆயின், நாரணா என்றாலே அந்தச் சூடும் சுடும்!

ஆற்றில் காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, சீடர்களோடு வருகிறார் இராமானுசர்! வழியில் அந்தக் காட்சியைக் காண்கிறார்! - ஒரு பெண்ணும் பையனும் நெருக்கமாக!

அவள் கையை ஒய்யாரமாக வீசி வீசி நடந்து வருகிறாள்!
இவனோ அவளுக்குக் குடை பிடித்துக் கொண்டு நடந்து வருகிறான்!
அதுவும் எப்படி?
குடை வளைந்ததோ, இவன் தொடை வளைந்ததோ என்னும் படியாக ஒரு நடை!
வெயிலில் அவள் இட்டடி நோகக் கூடாதே! எடுத்த அடி கொப்பளிக்கக் கூடாதே! அப்படி ஒரு நடை!

சரி பாவம்...நல்ல வெயில்! ஏதோ இரண்டு பேருமாய் ஒன்னாக் குடை பிடித்து வந்தால் கூடப் பரவாயில்லை! இவன் பெருமாளுக்குக் குடை பிடிப்பது போல் பிடித்துக் கொண்டு வருகிறான். இவன் அடிகள் கொப்பளிக்கின்றன. ஆனால் அவனுக்கு அது ஒரு பொருட்டாகவும் தெரியவில்லை!

பார்த்தீர்களா? இராமானுசருக்கும் வெய்யில் பொருட்டில்லை, இவனுக்கும் வெய்யில் பொருட்டில்லை! இந்த விஷயத்தில் காதலும் கடவுளும் ஒன்னு! :-)


அவள் ஒரு தேவதாசி. பெயர் ஹேரம்பா.
பெயருக்கு ஏற்றாற் போலவே அவள் மேனியே பொன்மேனி தான்! தனியாகப் பொன்னாபரணங்கள் தேவையில்லை அவளுக்கு!
மின்னலைப் பிடித்து, பொன்னதில் உருக்கி, மேகத்தில் துடைத்து, பெண்ணெனப் படைத்து விட்டான் அந்தப் பிரம்மன்!

அவனோ மல்லன்! ஆனால் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் என்பதை அறி-யாதவன், அவன் ஹரி-யாதவன்!
பெயர் தனுர்தாசன்.
நேற்று மல்யுத்தத்தில் பலபேரைக் கட்டிப் போட்டுத் தூக்கி வீசிய மாவீரன்! இன்று மண்யுத்தத்தில் மங்கையின் காலடியை ஒத்தி ஒத்தி வருகிறான்!
இவர்கள் இருவரும் காதல் தம்பதியர்கள் தான்! கண்ணாலம் கட்டவில்லையானாலும் கணவன்-மனைவி தான்!
இருந்தாலும் அதையும் மீறிய கலை உணர்ச்சி இருவரிடமும் குடியிருந்தது!

வழியில் இந்தக் குடை பிடித்து வரும் தாசானு தாசன் காட்சியைக் கண்ட பலபேர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்!
நேற்று இவனை ஆரவாரம் செய்த இதே கூட்டம்,
இன்று எச்சில் ஊற ஈரவாரம் செய்கிறது!

அத்தனையும் இராமானுசர் பார்க்கிறார்! லேசாகச் சிரிக்கிறார்!
போவார் வருவோரைப் பார்த்துச் சிரிக்கும் வழக்கம் இல்லை அவருக்கு!
ஆனால் இன்று என்னமோ தெரியவில்லை!
அவர் கெட்ட நேரம்! அவர் சிரிப்பதை இவனும் பார்த்து விட்டான்! போச்சு!

மீசை துடிக்க, அவள் ஆசை தடிக்க, ஓடோடி வருகிறான், குடையைக் கீழே போட்டுவிட்டு! இப்போ வெயிலில் அவள் பொன்மேனி உருகுதே! என்னாசை பெருகுதே!

அடப் பாவி...இப்போ மட்டும் வெயிலில் உருக மாட்டாளா? அவள் பாதம் தான் எரியாதா?
யாருக்கு வேணும் அதெல்லாம்? என்னைப் பார்த்து இழிவாகச் சிரித்து விட்டானே அந்த மனுசன்! அதுவும் ஒரு சாமியார்!
அதை எதிர்ப்பதா, இல்லை, இவளுக்குக் கேவலமாகக் குடைபிடித்துக் கொண்டு இருப்பதா? :-))

ஆகா...இப்போது மட்டும் "அது" கேவலம் என்று ஏன் தெரிகிறது?
சிற்றின்ப இன்பம் என்பது இது தானோ?
வேண்டும் வரை கூடு! அப்புறம் இறக்கை கட்டி ஓடு!
சிற்றன்பு கொண்டால் சிற்றின்பம்! பேரன்பு கொண்டால் பேரின்பம்! - மண்ணிலேயே பேரின்பம் காணலாமே! சம்சார சாகரத்தைக் காதலால் கடக்கலாமே!


"எதுக்குச் சாமீ, என்னைய பாத்துச் சிரிச்சே? இதே வேற யாராச்சும் செஞ்சிருந்தா நடக்கிறதே வேற!"

"கோச்சிக்காதேப்பா! நான் உன்னைப் பார்த்துச் சிரிக்கவில்லை! இந்த மக்கள் நிலைமையை எண்ணிச் சிரிச்சேன்"

"பாக்க சாந்தமா இருக்க! ஆனாப் பொய் சொல்ற பாத்தீயா? உன்னை நம்ப மாட்டேன்! நீ ஒரு மோசடி.... "

"இல்ல தம்பீ....சரி விடு....நீ தானே நேற்று வெற்றி பெற்ற அந்த மல்யுத்த வீரன் தனுர்தாசன்?"

"ஆமாம்! அதுக்கென்ன இப்போ? தெரிஞ்சே தான் சிரிப்பு சிரிச்சீங்களா?"

"உம்ம்ம்ம்...நேற்றெல்லாம் கொண்டாடிய கூட்டம் இன்று துண்டாடியதைப் பார்த்தேனா! என்னையும் அறியாமல் சிரிப்பூ பூத்து விட்டது! தவறிருந்தால் என்னை மன்னித்து விடு தம்பி"

மல்லன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! எதிர்த்து எதிர்த்தே பழக்கப்பட்டவன்! இன்று இவ்வளவு பெரிய முனிவர் தன்னிடம் மன்னிப்பு கேட்கிறாரே!
சீடர்களுக்கும் இதே எண்ணம் தான்! "ச்சே...எவனோ ஒரு தாழ்ந்த சாதிக்காரன்....கன்னங் கரேல்-னு கட்டு மஸ்தா...இவனுக்கு அருகில் நின்று கொண்டு சரிசமமாப் பேசிக்கிட்டு இருக்காரே நம்ம குரு! இவருக்கு எப்பமே இதே வேலையாகப் போச்சு! ஆள் தராதரம் பாக்குறதே இல்ல!"

"என்ன தனுர்தாசா, பேசாமல் நின்னுட்ட...என்னை மன்னிக்க உனக்கு மனதில்லையா?"

"அய்யோ...அப்படியெல்லாம் சொல்லாதீங்க சாமீ...பாக்க ரொம்ப பெரிய சாமீ மாதிரி இருக்கீங்க! சரி நான் வாரேன்"

"நில்லு தம்பி...இத்தனை பேரும் சிரிக்கிறா மாதிரி நடந்து கொண்டாயே! இப்படியாப் பண்ணுறது? வேணும்னா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே குடையைப் பிடிச்சிக்கிட்டு வரலாமே! அதை விடுத்து, இப்படித் தாசானு தாசனாய்...."

"இல்ல சாமீ...அவ கண்ணுக்குள்ளாற இருக்குற சக்தி உனக்குத் தெரியாது! நானும் எத்தனையோ பேரைப் போட்டுத் தாக்கி இருக்கேன்! ஆனா இவ கண்ணால ஒரு பார்வை பாத்தா போதும்...
ஒரு வெட்டு வெட்டினா மாதிரி ஆயிடுது, வெட்டுப்பயலா, வெட்டிப்பயலா மாறிடறேன்! அதான்!"

"ஹிஹி! அவள் கண்களுக்கு அப்படி ஒரு சக்தியா?"

"ஆமா சாமீ....வேணும்னா நீயே போய் பாரேன்! மயங்கி விழுந்துருவ! ஏதோ நானா இருக்கவே, நடக்கவாச்சும் செய்யறேன்."

"உம்ம்ம்ம்...இந்தக் கண்கள் தான் உன்னை இப்படிச் செயல் இழக்கச் செய்யுதா? சரி...அவள் கண்கள் அழகு தான்! ஆனால் அதை விட அழகான கண்களை நான் உனக்குக் காட்டட்டுமா?"

"இருக்கவே முடியாது!"

"இருக்கே! காட்டினால் என்ன செய்வே?"

"அதை விட்டுவிட்டு, நீங்க காட்டும் கண்ணுக்கு அடிமை ஆயிடுவேன் சாமீ!"

"ஹிஹி! அப்போதும் அடிமை தானா? சரி என்னுடன் கிளம்பு! வா, போகலாம்!"

(கண்கள் மலரும்....)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP