Sunday, December 27, 2009

உண்மைக் கதை: "யானை" ஏகாதசியா? வைகுண்ட ஏகாதசியா??

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில், பல நாள் கழித்து....வணக்கம் சொல்லிக் கொள்கிறேன்!
மாதவிப் பந்தல் நிறைந்தது என்று சொல்லி இருந்தேன்...
இருந்தாலும், பந்தல் பொழிலை வாட விடாது, தண்ணென்று நீர் பாய்ச்சி, சிந்து பூ மகிழும் ரங்கன் அண்ணாவின் அனுமதி பெற்று...

இதோ...உங்கள் முன்னே...அடியேன்...

ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?


இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்" - ஜில்லென்று மலையாளப் பாட்டை, கண்ணன் பாட்டில் போய்க் கேட்டுப் பாருங்கள்!

அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி?
பொதுவா, "வைகுண்ட" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அத்தனை ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தான் காரணம்!
= வாரணம் தான் காரணம்!

அந்த யானையின் மனசு தான், மொத்த வைகுந்த ஏகாதசிக்கே, "குருவாயூர்" ஏகாதசி என்று பெயர் பெற்றுத் தந்தது!


1914! வல்லிய ராஜா என்னும் நிலம்பூர் நாட்டு ராஜா! உள்நாட்டுக் கலகத்தில் அவஸ்தைப்பட்ட தன் குடும்பத்துக்காக வேண்டிக் கொண்டார்!
தன்னிடம் இருந்த பல யானைகளில் ஒன்றை, குருவாயூர் ஸ்ரீகோயிலுக்கு, தானம் அளித்தார்!
அந்த பத்து வயதுக் குட்டி யானை = கேசவன்! பின்னாளில் புகழ் பெற்ற "கஜராஜன் கேசவன்" ஆனது!

யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
பிரகலாதனும் குட்டி தானே! அவனைப் போலவே தான் இதுவும்!

அமைதியான-x-துறுதுறுப்பான சுபாவம், என்னையப் போல! :)
சாப்பிடும் போதும், விளையாடும் போதும், ஸ்ரீகோயிலைப் பார்த்தவாறே தான் எதுவும் பண்ணும்! அங்கிருந்து தன் கண்ணை மட்டும் எடுக்கவே எடுக்காது! இத்தனையும் பத்தே வயசில்!
அவ்வப்போது ஊர்வலத்தில் கண்ணனை அதன் மேலும் ஏற்றுவார்கள்!

கண்ணனையே சுமக்கும் களிப்பிலே, மிதப்பிலே...
இந்த யானை, ஆலயத்துக்கு உள்ளேயே சாணம் போடும்! நீரும் பாய்ச்சும்! :)
நாலம்பலம் என்று சொல்லப்படும் பிரகார வலம்! அதில் வலம் வரும் போதெல்லாம் இப்படித் தவறாது பண்ணும்! :)

வளர வளர, சக யானைகளெல்லாம், விளையாடுவதும், முரண்டு பிடிப்பதும்,
பணக்காரக் கோயிலில் சாப்பாட்டுக்குப் பஞ்சமே இல்லாமல்,
குலைகுலையாய் நேந்திரம் பழம் உண்டு, ஜாலியாகக் கழிப்பதுமாய் இருக்க...

இது மட்டும், ஏகாதசி நாளில் சாப்பிடாமல் இருக்க, எப்படியோ கற்றுக் கொண்டது!
மேலும் விதம் விதமாக வேடிக்கை காட்டவும் வேறு கற்றுக் கொண்டது!
பூவைத் தூவி, தலையைக் குலுக்கி, கழுத்து மணியை ஆட்டி...என்று பல இன்பச் சேட்டைகள்!

போதாக் குறைக்கு, வீதியுலாவின் போது, வித்தியாசமாக நடந்து காட்டும்!
முன்னும் பின்னும், வலமும் இடமும்,
நேர் வாட்டிலும், குறுக்கு வாட்டிலும்,
அசைந்து அசைந்து செல்வது ஏதோ டான்ஸ் ஆடுவது போல இருக்கும்!

குருவாயூரப்பன், திடீரென்று இதனால் அரங்கனைப் போல், நடையழகு உடையவன் ஆகி விட்டான்! :)
மக்களிடம், குறிப்பாகச் சின்னஞ் சிறார்களிடம் கேசவனுக்கு ஏக செல்வாக்கு கூடி விட்டது! ஆனால்...ஆனால்...


பக்கத்து ஊர்களில் நடக்கும் உற்சவங்களுக்கு இது செல்லாது! முரண்டு பிடிக்கும்!
அங்குசத்தால் அடி வாங்கும்!
ஆனால் அலறாது! பிளிறாது! கண்ணீர் உகுக்கும்! நீர் பெருக்கும்! ஆனால் அப்பவும் குருவாயூரை விட்டு மட்டும் செல்லவே செல்லாது!
குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!

மனசிலே சுமக்கத் தொடங்கி விட்டால் வரும் பாரத்தை யார் அறிவார், சொல்லுங்கள்?


குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! "வெளி"யில் கொண்டு வரும் சிலை என்பதால் திரு-"வெளி"! ஆனால் ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!

திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கும் இந்த ஸ்ரீவேளி உண்டு! பொன்-வெள்ளி என்று இரண்டு ஸ்ரீவேளிகள்!
மூலத்தானத்து முதல்வனின் காலடியில் இரு பக்கமும், இவற்றை இன்றும் காணலாம்!
செந்தூரில், மலையாள முறையில் (குமார தாந்த்ரீகம்) பூசை செய்வதால், இப்படி மலையாள வழக்கம் ஏற்பட்டு விட்டது! இப்போ நாம் குருவாயூருக்கு வருவோம்!

ஸ்ரீவேளி = தட்டையான பலகையில், மாயோனின் உருவம் பொறித்து, அதன் கீழே சின்னூண்டு இருக்கும்!
நம்மூரு சிலை போலவெல்லாம் இருக்காது! கேரளா ஸ்டைலில் இருக்கும்!
அதுக்கு "திடம்பு"-ன்னு பேரு!

நம்ம கேசவன், அந்தத் “திடம்பை“ யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே தன் முன்னங்காலை மடக்கும்!
மற்ற யாராய் இருந்தாலும், பின்னங்கால் வழியாக ஏறித் தான், யானை மேல் உட்கார வேண்டும்!

எவ்வளவு தான் தேங்காய், பழம், கரும்பு இனாமாகக் கொடுத்தாலும், அவற்றை எல்லாம் ஒதுக்கி விடும்!
தன் முன்னங் கால்களை மட்டும், வேறு யாருக்கும் மடக்கவே மடக்காது!

உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
வேறு எங்கும்,
அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! படிச்சாலும், நிஜ வாழ்வில் பிடிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!

செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்
அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!
வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்
அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே!கேசவனை, "திமிர் பிடித்த யானை" என்று பட்டம் கட்டி விட்டார்கள்!
அது "நார்மலான" யானை இல்லை! "ஈகோ பிடிச்ச" யானை என்று பேர் வாங்கிக் கொண்டது!

* முதலில் கரும்பைக் கொடுத்து ஆசை காட்டியவர்கள், பிற்பாடு சாப்பாடு கூடச் சரியாகப் போடாமல் தண்டிக்கப் பார்த்தார்கள்! = பசி!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* மற்ற யானைகளிடம் இருந்து ஒதுக்கி வைக்கப் பார்த்தார்கள்! = தனிமை!
அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

* சரி யானையின் "ஈகோ"-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!
குருவாயூர் அப்பனைத் தானே மனசால் சுமக்கிறாய்? அவனையே உனக்கு இல்லாமல் செய்து விட்டால்??? ஐயோ!

அன்றில் இருந்து, கேசவன் மேல் மட்டும் குருவாயூரப்பன் "திடம்பை" ஏற்றுவதில்லை!
கேசவனின் முறையே வந்தாலும் கூட, "திடம்பை" அவன் மேல் ஏற்றுவதில்லை! அவனோடு பேசுவதையெல்லாம் குறைத்துக் கொண்டார்கள்!

அவன் மிக அழகாக ஒதுக்கப்பட்டான்! ஒதுக்கப்பட்டான்!
உதாசீனம்! Ignore! - Thatz the Best Insult!
அப்போவாச்சும் அந்தக் கேசவன் "திருந்தினானா"?


ஆனால் அப்பவும் கேசவன் - "வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!

பிற யானைகளின் மேல் குருவாயூரப்பன் உலா வருவதைப் பார்க்கும் கேசவனுக்கு, தன்னை ஒதுக்குகிறார்கள் என்று நன்றாகத் தெரிந்து விட்டது!
நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்! ஆனால்......ஆனால்...

யானை தனக்கென்று எந்த உரிமையும் கோரவில்லை!
தன்னை மட்டும் தான் குருவாயூர் அப்பனின் உலாவுக்குப் பயன்படுத்த வேணும் என்று அடமும் பிடிக்கவில்லை! மதமும் பிடிக்கவில்லை!

அதன் மனதில் ஒன்றே ஒன்று தான்:
குருவாயூர் அப்பனுக்கு வளைந்த கால்கள், வேறு எங்கும் வளையாமல் இருக்க வேண்டும்!
மற்றபடி, கண்ணன் யார் மீது வலம் வந்தால் என்ன? கண்ணன் ஆசைப்பட்டு வலம் வந்தால் போதாதா?

மயிற் பீலி அசைய அசைய, அவன் வலம் வரும் அழகே அழகு!
மானச சஞ்சரரே! மானச சஞ்சரரே!
அதை நானே கெடுப்பேனா? நானே கெடுப்பேனா?

கேசவன் பொறாமை பிடித்து, வீதியுலாவில் மற்ற யானைகளோடு, முரண்டும் பிடிக்கவில்லை! சண்டைக்கும் செல்லவில்லை!
மற்ற பளு தூக்கும் வேலைகளுக்குத் தயங்காது வந்து நிற்கும்! வேலை செய்யும்!
ஆனால் அதன் கண்களில்? கண்களில்?......அது மட்டும் நிற்கவே இல்லை!

பாகன்களுக்குப் பயம் வந்து விட்டது! யானையின் கண்ணில் தொடர்ந்து நீர் கோர்த்த வண்ணம்!
ஒரு நாளில்லை ஒரு நாள், மதம் பிடித்து விடும் என்று நினைத்து விட்டார்கள்!

ஆனால் மதமாவது? ஒன்றாவது?
குருவாயூரப்பனிடம், தனக்கு"ம்" உரிமை இருக்கு என்று நிலை நாட்டிக் கொள்ள, பாவம்...மட நெஞ்சம், அதற்குத் தெரியவே இல்லை!
அவனே ”கதி” என்ற நிலையில்...”சரணா கதி” என்ற நிலையில்...

தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை...
அவனைக் குருவாயூரப்பனும் கைவிட்டு விட்டானோ? :(1970 மார்கழி மாசம் - குருவாயூர் ஸ்ரீகோயிலில் ஏகாதசி விளக்கு விழா!
விளக்கு மாடம் முழுக்க சுடர்விடும் விளக்குகள்!
அம்மே நாராயணா, தேவீ நாராயணா என்ற கோஷங்கள்!

நம்ம கேசவன் மேல் மாயக் கண்ணன் உலா வர வேண்டிய முறை!
ஆனால் ஸ்ரீவேளி உற்சவத்தை இன்னொரு யானையைக் கொண்டு முடித்து விட்டார்கள்! கோயில் நடை சார்த்தப்பட்டது!
கோயிலுக்கு வெளியே கொட்டடியில் படுத்துக் கொண்டான் கேசவன்! வாரணத்துக்கு ஆயிரம் கனவுகள்! - வாரணமாயிரம் கனவுகள்!

"அதிகாலை நேரத்தில் சூரியன் தன்னிடம் இதமாகத் தானே இருந்தது?
ஆனால் பிற்பாடு சுயரூபம் காட்டி விட்டதே! இப்போ இப்படிச் சுடுகிறதே!
சரி, இனி நம்ம வழி நமக்கு! அவனுக்கு மலர வேணாம் என்று ஒரு தாமரைப்பூ நினைத்திடுமா?

அது போல், என் துயரை நீ வீட்டா விட்டாலும் பரவாயில்லையடா!
உனக்கு அல்லால்,
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"வேறெங்கும்" அகம் குழைய மாட்டேனே!
"

ஈரமே வாழ்வாகிப் போன கேசவனின் தூங்கிய கண்களில் மெல்லிய ஈரம்...நீரில் இருந்து நெருப்பு வருமா என்ன?
பஞ்ச பூதத் தத்துவம் என்ன சொல்லிற்று? = அக்னியில் இருந்து நீர் உண்டானது! அக்னையே இதம் நமம!
அன்றைய ஏகாதசி இரவில் பற்றிக் கொண்டது! - தீ! தீ! தீ!
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்! - தீ! தீ! தீ!

மேற்குச் சுற்றம்பலத்தில் பிடித்துக் கொண்ட தீ, கூத்தம்பலத்துக்குப் பரவி, கிடு கிடுவென்று வளர்ந்து, நாலம்பல விளக்கு மாடங்களைப் பற்றிக் கொண்டது!
ஏதோ புகைச்சல் வாசனை பார்த்து, யாரோ கூவ, ஒரு சிலர் மட்டும் விழித்துக் கொண்டு பதறினார்கள்!

யானைகளை அவ்வளவு சீக்கிரம், அதுவும் தூக்கத்தில் இருந்து எழுப்ப முடியுமா என்ன?
அம்பலத்தைத் தன் பார்வையில் இருந்து அகற்றாத கேசவன் மட்டும், நெருப்பைக் கண்டு, அலறி அடித்துக் கொண்டு, எழுந்து ஓடினான்!

"ஐயோ! என் செல்வப் பிள்ளைக்கு என்ன ஆயிற்றோ? என் சின்னிக் கண்ணனுக்கு என்ன ஆயிற்றோ? "
அதிகம் பிளிறாத கேசவன், அன்று நள்ளிரவில் படு பயங்கரமாகப் பிளிறினான்! - "என்டே குருவாயூரப்பா"!

கேசவன் பிளிறலில் மொத்த குருவாயூரும் விழித்துக் கொண்டது! அவனோ நாலம்பல நடையைச் சுற்றிச் சுற்றி வருகிறான்!
புதிய மண்டபம் கட்டுவதற்காக வைக்கப் பட்டிருந்த மணல் மூட்டைகளை, ஒரே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து, அவன் தொம் தொம் என்று போட...

ஊரே திரண்டது! மணல் கொண்டு வீசியது! தீயணைப்புத் துறை சற்று நேரம் கழித்து வந்து நீரைப் பாய்ச்ச, மொத்த அம்பலமும் மொத்தமாய்க் குளிர்ந்தது!

அனைவரும் உள்ளே சென்று பார்க்க...
இன்னும் மூனே மூனு அடி தான்! கருவறைச் சுவர்!
அது வரை அத்தனையும் மொத்தமாய் கருகி இருக்க...
ஸ்ரீகோயில் வாசல் மாலைகள் மட்டும் கருகாமல் இருக்க...
ஸ்ரீகோயில் தப்பியது! சின்னிக் கிருஷ்ணன் தப்பித்தான்!

துவாரகையில் கண்ணனே வழிபட்டு, பின்னர் உத்தவர் வழிபட்டு,
குருவும் வாயுவும் அந்த விக்ரகத்தைக் கொண்டு வந்து,
அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரன் அருளால் பிரதிட்டை செய்யப்பட்ட அந்த.....
குருவாயூரப்பன் தப்பித்தான்! குருவாயூரப்பன் தப்பித்தான்!


மக்கள், கேசவன் மனசைப் புரிந்து கொண்டார்கள்!
கேசவன் "ஈகோ" பிடித்த ஜீவன் அல்ல! "கண்ணனை"ப் பிடித்த ஜீவன் - என்பதை லேட்டாகப் புரிந்து கொண்டார்கள்.......
என்ன பிரயோஜனம்?......அவனோ மனத்தளவில் மிகவும் தளர்ந்து போய் விட்டான்! - கேசவனைப் பாடவும், நீ கேட்டே, கிடத்தீயோ?

மேல்சாந்திகளும், தந்த்ரிகளும், கடுமையான சாஸ்திர சட்டங்களால் ஆளும் குருவாயூரில்,
மனிதர்களுக்கே பல சமயம் நீதி கிடைப்பதில்லை! ஒரு யானைக்கா நீதி கிடைக்கப் போகிறது?

நெஞ்சுக்கு நீதி - அதை யார் தருவார்கள், போயும் போயும் ஒரு யானைக்கு? = நிமலன் நிர்மலன் "நீதி" வானவன்! அவன் அல்லவா தர முடியும் "நெஞ்சுக்கு நீதி"!

குருவாயூரப்பன் ஸ்ரீவேளியான "திடம்பு", மீண்டும் கேசவன் மேல் ஏறியது!
கேசவன் வெகு நாள் கழித்து, முன்னங் கால்களை மடித்தான்!

ஸ்ரீவேளி பிடித்தவர், அவன் கால் மேல் ஏறி, அவன் மேல் ஏறினார்!
பின்னங் கால்கள் வழியாகப் பலரும் ஏறினார்கள்!
குடை பிடிப்பவரும், சாமரம் ஆட்டுவரும், மயில்தோகை விசிறி வீசுவரும் ஏறினார்கள்!

நெடுநாள் கழித்து நடையழகு!
மீண்டும் கேசவன்-கண்ணன் உலா!


வண்ண மாடங்கள் சூழ் "குரு வாயூர்"
"கண்ணன்-கேசவன்" நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!


Dec-1976......இன்றைய நாள்...அன்று! மோட்ச ஏகாதசி என்னும் வைகுந்த ஏகாதசி!
குருவாயூரப்பன் "திடம்பை", கேசவன் மேல் ஏற்றுகிறார்கள்!
ஏற்றிய சில வினாடிகளிலேயே,
கீழே, சரி சரி சரி எனச்.....சரிந்து விழுகிறான் கேசவன்! ஐயோ!!!

அவசரம் அவசரமாக, "திடம்பை", இன்னொரு யானைக்கு மாற்றுகிறார்கள்!
தொடங்கிய புறப்பாட்டை முடிக்கணுமே! சாஸ்திர விதி ஆயிற்றே!

மூச்சு இழுக்க இழுக்க........
ஹோய் கேசவா.....உனக்கா இந்த மரண அவஸ்தை?

இன்னொரு யானையின் மேல், குருவாயூரப்பன் உலா வரும் அழகை,
இன்பமாகப் பார்த்து முடித்தான் கேசவன்!
வீதியுலா முடிந்தது! ஸ்ரீவேளி முடிந்தது! மாறிலா அன்பும் முடிந்தது!
வைத்த கண் வாங்கவில்லை! உயிரை மட்டும் வாங்கிக் கொண்டான்!

எம்பெருமான் ஸ்ரீவேளி முன்பாக,
அந்த மயிலிறகின் முன்பாக,
அந்த மதி வதனம் முன்பாக,
சிரித்த சிறு செவ்விதழ்கள் முன்பாக,
கலைத்த அந்த தலைமுடியின் முன்பாக,
துதிக்கையை நீட்டி விரித்தபடி,
துதிக்-"கையை" நீட்டி விரித்தபடி,

"சரணம்" என்று வாயால் சொல்லக் கூடத் தெரியாது...
அனன்ய சரணஹ, த்வாம் சரணம், சரணம் அஹம் பிரபத்யே!
ஸ்ரீமன் நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நமஹ!

புகல் ஒன்று இல்லா அடியேன்....
மோட்ச ஏகாதசியான வைகுந்த ஏகாதசியும் அதுவுமாய்.....
அகலகில்லேன், உன்னை அகலகில்லேன் என்று உன்
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!தன் மேல் ஏற்றாவிட்டாலும் பரவாயில்லை, கண்ணன் வீதியுலா கண்டால் போதும் என்று இருந்த ஜீவன் அல்லவா? அதன் இயற்கையான கம்பீரம் குறைந்து, இப்படி மனத்தளவில் தளர்ந்து, அதன் கதி இப்படி முடிந்து விட்டதே!

தன் கால்களைத் தானே, வேறு யாருக்கும் மடக்காது இருந்தான்?
வேறு யாரும் கண்ணனிடம் செல்வதைத் தடுத்தானா என்ன?
மடக்காது இருத்தலுக்கும், தடுக்காது இருத்தலுக்கும் கூடவா, மாந்தர்க்கு வித்தியாசம் தெரியவில்லை?

அவன் மனத்திலா பொறாமை? ஆணவம்?
அவன் மனத்திலா "தனக்கு மட்டுமே" என்கிற ஒரு எண்ணம்?
தனக்கு ஒத்து வரவில்லை என்பதால், அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கா, ஒரு பாழும் வெறி?

அவனையா ஒதுக்கி வைக்க முடிந்தது? உதாசீனப் படுத்த முடிந்தது?
அவனுக்கா பசியைக் கொடுத்து, தனிமையைக் கொடுக்க முடிந்தது?

யார் பெற்ற பிள்ளையோ?
மாயங்கள் செய்யும் மாயோனிடம் மனதைக் கொடுத்து,
இப்படி மண்ணில் இன்று விழுந்து விட்டதே!

அவாவறச் சூழ் ”அரியை அயனை அரனை” அலற்றி
அவா அற்று, வீடு பெற்ற, குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப் பத்து அறிந்தார்......
பிறந்தார் உயர்ந்தே-உயர்வற உயர் நலம், துயர் அறு சுடர் அடி, தொழுது எழென் மனனே!

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!

வாழைப்பந்தல் கிராமத்தில், சின்னஞ் சிறு வயதில்...அன்று கண்ட காட்சி...

அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்!
ஆனை பரிமேல் அழகர் வந்தார் வந்தார்!
கச்சி தன்னில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார்!
கருத வரம் தரும், வரதப் பெருமாள் வந்தார்!

முக்தி மழை பொழியும் முகில் வண்ணன் வந்தார்!
”மூமூமூலம்” என ஓஓஓலம் இட, வல்லார் வந்தார்!


வாழைப்பந்தல் கிராமத்தின் கஜேந்திர வரதராஜப் பெருமாளே! ஆனைக்கு அருளிய அருளாளப் பெருமாளே!

ஹே பெருமானே,
இந்த யானைக்கு முக்தி கொடு! உன்னைக் கொடு!
யம்மாடி கோதை,
இந்த யானைக்கு இனி உன் வீடே வீடு! இதைச் சேர்த்துக் கொள்!

இந்தக் கால் மடங்கா யானைக்கு...
வேறெங்கும் அகங் குழையா யானைக்கு...
பிறர் வீட்டில் ஏறத் தானே மதிப்பில்லை?
உன் "வீட்டில்" ஏற, மிக்கதோர் மதிப்புண்டே!


கேரள அரசு, கேசவனைக் "கஜராஜன்" என்று பிற்பாடு கொண்டாடி...
குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!

"வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!" என்று...
இன்றும் எம்பெருமானைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்...
ஐந்தறிவு மட்டுமே கொண்ட அவனுடைய அவன்!

ஐந்து-அறிவால் அறிந்து, உன் இரு-தாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே!
அழகான செம்பொன் மயில் மீது அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!


உன் பேரையே என்றென்றும் சொல்லிய,
என் அலை-வாய்க்கு உகந்த பெருமாளே!

35 comments:

 1. கேசவனை மறக்க முடியுமோ?

  நம்ம வீட்டிலும் இருக்கான்.

  பதிவு (வழக்கம்போல்) அருமை.

  ReplyDelete
 2. நல்ல விளக்கங்கள். நானும் குருவாயூர் கோவிலின் முகப்பில் கேசவனின் படம் பார்த்தேன். மாதவா, மதுசூதனா,குருவாயூரப்பா இந்த யானை செய்த புண்ணியம் கூட பாவி அடியேன் செய்யவில்லையே என்று மனமுருக வேண்டி வந்தேன். நன்றி.

  ReplyDelete
 3. அந்த கேசவனை பாடவும் கேட்டே
  கிடக்காது அவன் திருவடி தொழுவோம்.

  ReplyDelete
 4. வாங்க பதிவுலக சூப்பர் ஸ்டார் கிரஸ்
  உங்கள் பதிவுகள் மூலமாக நான் பல ஆன்மீக விழயங்களை தெரிந்து கொண்டேன் (கொண்டோம்)
  அதற்க்கு எனது முதல் நன்றிகள்.
  உங்கள் வரவு எங்களக்கு மகிழ்ச்சி. அரங்கன் என்றும் துணை இருப்பானாக!

  ReplyDelete
 5. சரி யானையின் "ஈகோ"-வை அதன் வழியிலேயே அடக்குவோம் என்று நினைத்தார்கள்!

  நேற்று வரை கண்ணனைச் சுமந்து வந்த கேசவன்,
  இன்று கட்டையை மட்டுமே சுமப்பவன் ஆக்கப்பட்டான்!

  கேரள அரசு, கேசவனைக் "கஜராஜன்" என்று பிற்பாடு கொண்டாடி...
  குருவாயூர் வீதியிலே, பன்னிரெண்டு அடிச் சிலையாக எழுப்பியது!:)))))

  கடைசி நேரத்தில் யானையின் பக்தியை புரிந்து கொண்டவர்கள் . முன்னமே கண்ணனை கேசவன் மீது ஏற்றி இருந்தால் எவ்வளவு சந்தோஷ பட்டு இருப்பார் யானையார்.
  . பக்தி மிக்க யானைக்கா ஈகோ! இவர்களுக்குத்தான் ஈகோ முன்னங்கால் தனக்கு வைக்கவில்லையே என்று …. கேசவனுக்கா 5 அறிவு (பக்தி ஞானம் கேசவனுக்கு) . இவர்களுக்குதான் அறிவே இல்லை. பித்து பிடித்தவர்கள் . என்றுதான் இப்படி பட்டவர்கள் திருந்துவார்களோ இறைவா!

  ReplyDelete
 6. நடு நடுவே பல பாசுரங்கள்
  கேள்வி படாத பல புதிய பாடல்கள்
  பாடல்கள் அருமை.

  ReplyDelete
 7. Superb KRS... unknown to me - like many other things that are not known ;-)

  ReplyDelete
 8. யானை என்னமோ குட்டி தான்! இருந்தாலும் சுட்டி!
  பிரகலாதனும் குட்டி தானே! அவனைப் போலவே தான் இதுவும்!:)))

  இப்போதும் பிரகலாதனை போல ஸ்ரீமன் நாராயணனுக்கு பக்தர்கள் (இருந்தார்கள்) எங்காவது இருந்து கொண்டு இருப்பார்கள் _என்பது சந்தோசப்பட வேண்டியது மட்டும் இல்லாமல்
  ஆரோக்யமான விஷயம் .

  ReplyDelete
 9. நிக‌ழ்வுக‌ளை அப்ப‌டியே நேரே பார்க்கும் அனுப‌வ‌ம் ப‌டிக்கும் போது வ‌ருகிற‌து.

  ReplyDelete
 10. ஆஹா வந்தாச்சா? யானை வரும் பின்னே மணி ஓசை கேட்டப்போவே நினச்சேன்! தவம் கலைந்ததா சுவாமி?:) நல்வரவு! வரேன் ..வைகுண்ட ஏகாதசிக்கு இங்க கோயில் விசிட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு!

  ReplyDelete
 11. அன்பின் கேயாரெஸ்

  மிகவும் ரசித்து மகிழ்ந்து படித்தேன் - கேசவனுடன் கண்ணனுடன் - அடடா அடடா -அருமையான இடுகை

  நல்வாழ்த்துகள் கேயாரெஸ்

  ReplyDelete
 12. உங்க நடையில் படிக்கும் போது சிறப்பாகவே இருக்கு

  ReplyDelete
 13. //ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?

  /////

  அப்போ இது நேரிழையீருக்கு மட்டும்தானா?:) ராகவ் எங்க போனேப்பா வந்து கவனி உன் அண்ணனை!!! எல்லோரும் போந்தாரோ போந்தார் என்று எண்ணிக்கொண்டு விட்டார்போலும்!!!

  ReplyDelete
 14. //குருவாயூரப்பனை, சும்மா ஒப்புக்குச் சுமக்காமல், மனசிலே சுமந்து விட்டது போலும்!

  மனசிலே சுமக்கத் தொடங்கி விட்டால் வரும் பாரத்தை யார் அறிவார், சொல்லுங்கள்/////

  அதானே ?

  ReplyDelete
 15. //உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
  வேறு எங்கும்,
  அகம் குழைய மாட்டேனே-ன்னு ஆழ்வார் பாசுரத்தை நாமே படிச்சதில்லை! அப்படியே படிச்சாலும், நிஜ வாழ்வில் பிடிச்சதில்லை! ஆனா இந்த யானை, இதை எங்கே போயி படிச்சிது/பிடிச்சிது-ன்னு தான் தெரியவில்லை!

  செந்தழலே வந்து அழலைச் செய்திடினும், செங்கமலம்
  அந்தரம் சேர் வெங் கதிரோற்கு அல்லால் அலர் ஆவால்!!
  வெந்துயர் வீட்டா விடினும் வித்துவக்கோட்டு அம்மானே-உன்
  அந்தம் இல் சீர்க்கு அல்லால் அகம் குழைய //////


  இதுக்குத்தான் கே ஆர் எஸ் வரணும் என்கிறது ஆனைப்பதிவிலும் ஆழ்வாரை அழகாகக்கொண்டுவரமுடிகிறதே!

  ReplyDelete
 16. இன்றுபோய் நாளை வந்து மேலும் பின்னூட்ட்டமிடுகிறேன்.

  ReplyDelete
 17. //குருவாயூரப்பன் ஊருலாச் சிலையை (உற்சவர்), மலையாளத்தில், திரு-வெளி என்பார்கள்! "வெளி"யில் கொண்டு வரும் சிலை என்பதால் திரு-"வெளி"! ஆனால் ஸ்ரீவேளி, சீவேளி என்று பின்னாளில் திரிந்து விட்டது!//

  அருமையான பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

  திரும்பி வந்ததற்கு மிக்க நன்றி.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. கண்ணபிரான்..

  எங்க ரொம்ப நாளாச்சு.. ஆளையே காணலை..!

  உங்களுடைய எழுத்து நடை தனித்துவம் வாய்ந்தது..! சிறப்புப் பெற்றது. நாத்திகவாதிகள் படித்தாலும் ஈர்க்கப்படுவார்கள்..!

  கேசவனின் கதையைத் தெரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி..!

  என் அப்பனின் மாமனை மிகவும் கேட்டதாகச் சொல்லவும்..!

  ReplyDelete
 19. கேசவ ஏகாதசியன்று கேசவனைப் பற்றி அறிய கொடுத்து வைத்திருக்க வேண்டும். கேசவனுக்கு நன்றி.

  ReplyDelete
 20. " KRS RETURNS " GOOD TO SEE U BRO AGAIN.

  GONE FOR HONEY MOON???////
  Am i right...

  Murali

  ReplyDelete
 21. K M Munshi-nnu oruthar Krishnavaatara-nu series of books ennamaa ezhidhiyirukkaru... padichu padichu krishnanoda layicchi irukkura samayathila, ippadi oru unmai kathai. ippa puriyudhu, krishnan-na enn ellorakkum (ella jeevarasikalukkum) edho aagudhu...

  KRS, mudingha andha aangile novela appadiye thamizha ezhudha try pannalame. ---- MM

  ReplyDelete
 22. உன் அந்தமில் சீர்க்கு அல்லால்,
  வேறு எங்கும்,
  அகம் குழைய மாட்டேனே!
  //
  ???

  ReplyDelete
 23. ஒரு உண்மைக் கதையை, இன்று சொல்லப் போந்தேன்! போதுமினோ நேரிழையீர்?::))
  சூப்பர் கேஆர்எஸ் கலக்கிடீங்க
  பதிவுல இருக்கறவங்க எல்லாருக்கும் ஆணி பொன்னுல நேரிழை வாங்கி கொடுத்துடுங்க
  கழுத்துல போட்டுக்கிட்டு படிக்கறோம்

  ReplyDelete
 24. திருவனந்தபுரம் பத்மனாபன் கோயிலில் பலமுறை ‘சீவேலி’ என்ற வார்த்தையை கேட்டு இருக்கேன். இப்போது அதன் அர்த்தம் புரிந்தது. நன்றி!
  குருவாயூர் கேசவன் என்று ஒரு பிரபலமான மலையாள படமும் உள்ளது.

  ReplyDelete
 25. Though I read the post much earlier, I got the green signal only now. :)
  Absolutely fantastic post !!
  Guruvayoor Kesavan Vaazhga Vaazhga !!

  ReplyDelete
 26. அடடே தமிழில் பதிவிடுவது எப்படி என்று எமக்கு சொல்லிகொடுத்த ராதா ராமானுஜ தாசரே இன்று ஆங்கிலத்தில் டைப் செய்திருக்கிறார் ஏனோ!

  ReplyDelete
 27. இன்று பலரும் இறைவனை வழிபடும் காரணங்களில் முக்கிய காரணம் என்ன! பணம் வேண்டும் என்பதா!மோட்சம் வேண்டும் என்பதா! நல்ல வாழ்க்கை அமையனும் என்பதா! நாம் இறைவனை வணங்க காரணம் பல இருக்கும் அதில் முதன்மையானது எதுவென்று யோசித்தது உண்டா! சிலர் மோட்சம் வேண்டும் என்பர்! சிலர் நல்ல வாழ்க்கை அமையனும் என்பர்! ஆனால் அனால் இந்த யானை எதை பார்த்து பக்தி கொண்டது. என்று சொல்ல முடியுமா! இறை அன்பு ஒன்றே! சரியா!

  அந்த தூய அன்பைதானே ஸ்ரீமன் நாராயணனும் நம்மிடம் எதிர்பார்க்கிறார் .  மோட்சம் வேண்டும் என்பதற்காக மாங்கு மாங்கு என்று இறைவனை வழிபதுவது மிகவும் கடினம் என்பதே எம் கருத்து  எம்மை பொருத்தவரை பெருமாளே இவ்வுலகில் மிகவும் நல்லவர்! அவரை தவிர நல்லவர் இவ்வுலகில் இல்லை என்றே சொல்வேன்! பெருமாளை வழிபடும் பல காரணங்களில் முதன்மையானது பெருமாள் மிக நல்லவர் என்பதே!

  இதில் தவறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன்

  rajesh narayanan

  ReplyDelete
 28. என்ன ஆச்சு ராஜேஷ்?
  நான் இந்தப் பதிவு பக்கமே எட்டிப் பார்க்காது, ஒருவருக்கும் பதில் சொல்லாது.....போயிடாலாம்-ன்னு....தான் இருந்தேன்...

  நீங்க பிடிச்சி இழுத்துப் பதில் சொல்ல வைக்கறீங்க! :)

  //நாம் இறைவனை வணங்க காரணம் பல இருக்கும் அதில் முதன்மையானது எதுவென்று யோசித்தது உண்டா! சிலர் மோட்சம் வேண்டும் என்பர்! சிலர் நல்ல வாழ்க்கை அமையனும் என்பர்!//

  ஒரு சில "காரணங்களுக்காக" மட்டுமே இறைவனை வணங்குதல் என்பது...அப்படி ஒன்றும் தவறு ஆகி விடாது!

  //ஆனால் அனால் இந்த யானை எதை பார்த்து பக்தி கொண்டது?//

  ஹா ஹா ஹா!
  உண்மை தான்! இது எதையும் "எதிர்பார்த்து" பக்தி செய்யவில்லை!

  ஆனால் எல்லாத் திருமணங்களும் காதல் திருமணங்கள் அல்லவே! :)

  ஒரு சிலரே காதலிக்கின்றார்கள்!
  அதுக்காக, மத்தவங்க எல்லாம் கல்யாணமே பண்ணிக்க கூடாது-ன்னு சொல்லீற முடியுமா? :)

  என்ன, கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகாவது, கொஞ்சம் கொஞ்சமா, இறைவனைக் காதலிக்க கத்துக்கணும்! :) ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு கல்யாணம் பண்ணிக்கிடலாம்! தப்பில்லை! ஆனால் அந்தத் திருமணம் பழகப் பழக, எதிர்பார்ப்பு குறைந்து, வாஞ்சை அதிகரிக்க வேணும்! அப்போது பக்தி எனப்படும் இறையன்பு கனியும்!

  //தூய அன்பைதானே ஸ்ரீமன் நாராயணனும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்//

  நாரணன் நம்மிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை!
  அவனே "களவாடிக்" கொள்கிறான்!:)

  ஆனால் அவன் அப்படி களவாடிக் கொள்ளும் போது, அதை நாம் "அனுமதிக்கிறோமா" என்று மட்டுமே பார்க்கிறான்! :)

  ReplyDelete
 29. //பெருமாளை வழிபடும் பல காரணங்களில் முதன்மையானது பெருமாள் மிக நல்லவர் என்பதே!//

  Therez Nothing Good or Bad!
  Only Thinking Makes it So!

  பெருமாள்...அல்லது இறைவன்...
  "நல்லவர்கள்-நல்லவர் அல்லாதவர்கள்" என்று அத்தனையும் கடந்த ஒரு எளிமையான கண்ணாடி!
  அதில் யார் யார் எப்படி எப்படிப் பார்க்கிறார்களோ, அப்படி அப்படித் தெரிகிறார்கள்!

  ReplyDelete
 30. //தூய அன்பைதானே ஸ்ரீமன் நாராயணனும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்//
  நாரணன் நம்மிடம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை!
  அவனே "களவாடிக்" கொள்கிறான்!:)
  ஆனால் அவன் அப்படி களவாடிக் கொள்ளும் போது, அதை நாம் "அனுமதிக்கிறோமா" என்று மட்டுமே பார்க்கிறான்:))

  ஏற்று கொள்கிறேன்
  கருத்தை பரிசீலித்து கூறியமைக்கு மிக்க நன்றி!
  உடனே நீங்கள் வருவீர்கள் என்று நான் எதிர்பார்கவில்லை

  ReplyDelete
 31. //மோட்சம் வேண்டும் என்பதற்காக மாங்கு மாங்கு என்று இறைவனை வழிபடுவது மிகவும் கடினம் என்பதே எம் கருத்து//

  எது மோட்சம் என்று தெரிந்தால், இந்த "மாங்கு மாங்கு" போய் விடும்!

  நிறைய பேர் இன்னொரு பிறவி "எனக்கு" வேண்டாம், "என்னால்" கிடந்து அல்லாட முடியாது என்று அலுத்துக் கொள்ளுவார்கள்!

  அவர்களிடம் மோட்சத்தை விட, "தான்", "தன்னால்", "எனக்கு" என்ற பதங்களே அதிகம் இருக்கும்! :)

  அவர்களிடம் போய், "சரி மோட்சம் தானே வேணும்? மோட்சத்துக்கு இப்போதே வருகிறாயா?" என்று கேட்டுப் பாருங்கள்! :))

  உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? உயர்ந்த பக்தர்கள் யாரும் இது வரை மோட்சம் போக வில்லை! :)
  போன நம்மாழ்வாரும் திரும்பி வந்து விட்டார்! பிரகலாதன், துருவன், அனுமன் என்று ஒருத்தர் கூட "அங்கு" இல்லை! எல்லாரும் "இங்கு" தான் இருக்கிறார்கள்!

  அங்கு இருப்பது Last Minute Narayana என்று தன் பையனைக் கூப்பிட்ட அஜாமிளன் போன்ற மகாபாவிகள் தான்! :)

  வெறும் - சம்சார துக்க நிவர்த்தி - இது மட்டுமே மோட்சம் இல்லை!

  எம்பெருமானிடத்தில் மாறாத காதலும், நித்ய கைங்கர்யமும் தான் மோட்சம்!

  அதனால் தான் தோழி கோதை, "இற்றைப் பறை கொள்வாம் அன்று" - நாங்க மோட்சம் கேட்போம்-ன்னு பார்த்தாயா கண்ணா? அன்று! என்கிறாள்! "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு" - என்று பிறவியைக் கேட்டு வாங்குகிறாள்!

  மோட்சம் என்றால் என்ன? இந்தப் புரிதலுக்கு, இந்தப் பதிவு கொஞ்சம் உபயோகப்படும்-னு நினைக்கிறேன்!

  ஞான யோகம்/கர்ம யோகம்/பக்தி யோகம் - இவை எல்லாம் மோட்சத்துக்கு ஷார்ட்கட் என்ற ஒரு மிகையான/தவறான/தன்னலமான புரிதல், பெரும்பாலும் இருக்கத் தான் செய்கிறது!

  இது பற்றியும், மோட்சம் என்றால் உண்மையிலேயே என்ன என்பது பற்றியும், தவறாகப் புரிந்து கொண்டவர்கள் பின்பு எப்படிச் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பது பற்றியும், இனி கதை போல எழுதுகிறேன் - ஒவ்வொரு ஏகாதசியும்!

  ReplyDelete
 32. அதனால் தான் தோழி கோதை, "இற்றைப் பறை கொள்வாம் அன்று" - நாங்க மோட்சம் கேட்போம்-ன்னு பார்த்தாயா கண்ணா? அன்று! என்கிறாள்! "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு" - என்று பிறவியைக் கேட்டு வாங்குகிறாள்:)))

  சும்மா நச்சுன்னு சொல்லியாச்சு!
  சூடி கொடுத்த சுடர்கொடி கோதைன்னா சும்மாவா!
  i like this!

  ReplyDelete
 33. கேசவனின் பக்தி கண்ணீரைப் பெருக்கிற்று. ஏகாதசி திருநாளில் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்திருக்கிறான்..பெரியது அவன் உருவம் மட்டுமல்ல..அவனது..பக்தியும் தான்...இவனைப்போலவே மதுரை மீனாட்சியமனுக்கும் பித்தாக ஒருத்தி இருந்தாள்..அவள் கதையும் சேர்கலாம் இதிலேயே..

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP