ரங்க சிம்மன்
20 திவ்ய தேசங்களின் மேல் பாடல்கள் பாடியுள்ள பெரியாழ்வார், மற்ற எல்லாத் திவ்ய தேசங்களையும் விட, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்திற்கு மிகவும் அதிக ஏற்றம் தருகிறார்!
திருவரங்கத்தைப் போற்றும் 'மாதவத்தோன்' என்று தொடங்கும் இந்தத் திருமொழியின் 8-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் ஊர் திருவரங்கம் என்கின்றார்!
***
வல் எயிற்றுக் கேழலுமாய்* வாள் எயிற்றுச் சீயமுமாய்*
எல்லை இல்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானூர்*
எல்லியம் போது இருஞ்சிறை வண்டு* எம்பெருமான் குணம் பாடி*
மல்லிகை வெண் சங்கு ஊதும்* மதிளரங்கம் என்பதுவே.
மாதவத்தோன் 4-8-8
(எயிறு - கொம்பு, பல்; கேழல் - வராகம்; வாள் - ஒளி வீசும்; சீயம் - சிங்கம்; இடந்தான் - தூக்கினான்; எல்லி - இரவு; இருஞ்சிறை - இரு சிறகுகள்; சங்கு ஊதும் - தேன் குடிக்கும்; மதிள் - பிரகாரங்கள்)
வலிமையுடைய கொம்புகள் உடைய வராகமுமாய், ஒளி வீசும் பற்கள் உடைய நரசிம்மமாய் அளவு கடந்த பூமியையும், இரணியனையும் தூக்கியவன் (இருக்கின்ற) ஊரானது,
அந்திப் போதில் திடமான சிறகுகளை உடைய வண்டுகள், எம்பெருமானுடைய குணங்களைப் பாடிக் கொண்டு, வெண் சங்கு போல் நிறமுடைய மல்லிகைப் பூக்களின் உள்ள தேனைக் குடிக்க இடமாய் உள்ள பிரகாரங்களை உடைய அரங்கமே!
எம்பெருமான் இரணியனையும் 'எயிற்றால்' தூக்கியதாகப் பெரியாழ்வார் கூறுகின்றரோ?
***
வராஹ அவதாரத்தின் போது இரணியாட்சனைக் கொன்று, தன் கொம்புகளால் ('வல் எயிற்று'), பூமியை வெளியே தூக்கி வருகின்றான் ('எல்லை இல்லாத் தரணியை இடந்தான்') எம்பெருமான்!
ஆனால் இரணியாட்சனைக் கொன்றது, தன் கொம்புகளால் அல்ல! பாகவதம், இரணியாட்சனை எம்பெருமான் 'கதையால் தலையில் அடித்துக் கொன்றார்' என்றே கூறுகிறது! கொம்புகள், பூமியைத் தூக்குவதற்காவே வந்ததாம்!
(சிலர், சக்கரத்தாழ்வாரே கொம்பு ரூபத்தில் வந்ததாகக் கூறுவர்)
இரணியனை வதம் செய்வதற்காக, எம்பெருமான் நரசிம்மமாக வருகின்றான்! கைகளில் சங்கு, சக்கரம், வேல், போன்ற பல ஆயுதங்கள்! கூரிய நகங்கள் - கைகளிலும், கால்களிலும்!
எதனால் இரணியன் கொல்லப் படுவான் என்று பகவானுக்குச் சந்தேகம் இருந்ததால், எதற்கும் இருக்கட்டுமே என்று, கூரிய பற்களும், கத்தி போன்று கூர்மையான நாக்கும் இருந்ததாக பாகவதம் வர்ணிக்கும்!
நகங்களால் தான் இரணியனுக்கு மரணம் ஏற்படுகின்றது! இந்த நகம், பல், நாக்கு ஆயுதங்களா?
***
இரணியன் பெற்ற வரங்களில் அதிகம் பேசப்படாதது ஒன்று: உயிர் உள்ளவைகள், அல்லது உயிரற்றவைகள் இரண்டினாலும் மரணம் இல்லை என்பதே!
'பற்களுக்கு உணர்ச்சியும், உயிரும் உண்டு' என்கிறது விஞ்ஞானம் (உள்ளே உள்ள நரம்புகள் மூலம்)! ஆனால் நகங்கள்?
விஞ்ஞான ரீதியாக, நம்முடைய நகங்கள் 'Dead Cells'. இருந்தாலும், எல்லா நகங்களும், எப்பொழுதும் வளர்கின்றன! நகங்கள் உயிருள்ளவையா? உயிரில்லாதவையா?
இந்தக் குழப்பம் இன்னும் தீராததால், பிரமன் கொடுத்த வரங்களுக்குச் சேதம் ஏற்படாது, இரணியனை வதைக்க எம்பெருமான் தேர்ந்து எடுத்தது நகங்கள்!
எதற்கும் இருக்கட்டுமே என்று பற்களையும் 'கூர்மையாக்கிக் கொண்டு' வந்தானாம் நாராயணன்! கடைசியில், நகங்களால் மார்பைக் கீற, நகங்களில் ரத்தம் உறைகின்றது! பற்களுக்கு வேலை இல்லை! எனவே அது இரணிய வதத்திற்குப் பிறகும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றதாம்!
'வல் எயிற்றுக் கேழலுமாய் எல்லை இல்லாத் தரணியை இடந்தான் ஊர்; வாள் எயிற்றுச் சீயமுமாய் இரணியனை இடந்தான் ஊர்'
என்று மாற்றிப் படித்தால் வரும் பொருள்:
’வலிய கொம்புகளுடன் வந்து, பூமியைத் தூக்கியவன் ஊர்; ஒளி வீசும் பற்களுடன் வந்து, இரணியனைக் கிழித்த ஊர்’
(இரணியன் மார்பை, பற்களால் பிளந்தவன் என்ற பொருள் வராது)
இரண்டு அவதாரங்களுக்குமே, 'இடந்தான்' என்ற பதத்துக்கு, 'கிழித்தான்' என்ற பொருள் பொருந்தும் - வராக அவதாரத்திலும், பிரளய ஜலத்தைக் கிழித்துத் தானே பூமியை எடுத்தான்?
இப்படி அவதாரங்கள் எடுத்தவன் ஊர் எது என்கின்றார் ஆழ்வார்?
***
விசாலமான மதிள்களை உடைய ஊராம் அது! உள்ளே, பல சோலைகள்! பூங்கொத்துக்கள்!
சில முனிவர்கள், எம்பெருமான் இருக்கும் அந்த ஊரின் மேல் தீராத காதல் கொள்கின்றனர்! அந்த ஊரை விட்டுப் பிரிய மனமில்லாமல், மறு பிறவியில் அதே ஊரில் வண்டுகளாகப் பிறக்கின்றனர்!
இந்த (முனி)வண்டுகள், தூங்குவதற்காக, மாலைப் பொழுதில் மலர்களைத் தேடி வருகின்றன!
அங்கு, வெண்மையான சங்கு போல் நிறமுள்ள மல்லிகை, மலர்கள்! இந்த மலர்களில், வண்டுகள் அமர்ந்து, தேன் குடிக்கின்றன!
(‘சங்கு ஊதும்’ என்றால், ’கடைசியில் ஊதுகின்ற சங்கு’ இல்லீங்கோ! , ’தேன் குடிக்கும்’ என்று அர்த்தமுங்கோ!)
தேன் குடித்த வண்டுகளுக்கு, பூர்வ ஜன்ம வாசனை வருகின்றது! ஆனால், எம்பெருமானைப் பாட நினைத்தாலும் வார்த்தைகள் வர மறுக்கின்றன! அந்த வண்டுகள் போடும் சப்தம், அவன் குணம் பாடுவது போலுள்ளது!
'ரங்கா, ரங்கா' என்ற சத்தம் வருகின்றது (இது தான் ர[ரீ]ங்காரமோ?)
(இந்த ஊருக்கு அரங்கம் என்ற பெயரும் இதனால் தான் என்ற கதை உண்டு)
பாசுரத்தின் கடைசி இரண்டு வரிகளை,
‘எல்லி அம் போது, வெண் மல்லிகை சங்கு ஊதும் இருஞ்சிறை வண்டு, எம்பெருமான் குணம் பாடும் மதிள் அரங்கம் என்பதுவே’
என்றே பொருள் கொள்ள வேண்டும்!
அரங்கத்தில் இருப்பவன் நரசிம்மன் என்கின்றாரே ஆழ்வார்?
***
இடம்: கோயில் மண்டபம்
நேரம்: Trial நேரம்
(ஒரு வைணவப் பெரியாரும், புலவர் ஒருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)
புலவர்: அடியேன் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து வந்துள்ளேன்! அடியேனுக்கு ராமன் பேரில் மிகுந்த அன்பு உண்டு! அந்த அன்பினால், ராம காதையை எழுதியுள்ளேன்!
வைணவப் பெரியார்: இந்தக் கோயிலில் இதை அரங்கேற்றும்!
புலவர்: அரங்கேற்றத்தின் முன் தங்களைப் போன்ற பெரியவர் யாராவது படித்து விட்டு, கருத்துக்களைக் கூறினால் அரங்கேற்றம் எளிதாகும்! தாங்கள் உதவுவீர்களா?
வைணவப் பெரியார்: அடியேன் முடிந்தவரை உதவுகிறேன். தாங்கள் ராமனைப் படித்துக் காட்டுங்கள்!
(புலவர் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து, தான் எழுதிய கதையை அவருக்குப் படித்துக் காட்டுகின்றார்)
வைணவப் பெரியார்: ஒரு சிறு எண்ணம்! ஆழ்வார்களை முன்னிட்டு ராமன் கதையைச் செய்தால், ஒப்புதல் எளிதில் கிடைக்கும்!
புலவர்: நன்றி பெரியவரே!
(புலவர், கலக்கத்துடன், எம்பெருமானிடம் சென்று கண்ணீர் வடிக்கிறார்)
எம்பெருமான் (அசரீரியாக): புலவரே! நம் சடகோபனைப் பாடினையோ? பாடினால் தான் உம் ராம காதையை நாம் அங்கீகரிப்போம்!
(புலவர் முகம் மலர, எம்பெருமானை வணங்கிச் செல்கிறார்)
***
இப்போது எல்லாம் தெரிந்திருக்குமே! புலவர், கம்பநாட்டாழ்வார்! அந்த வைணவப் பெரியார் ...
நாதமுனிகள்! வைணவர்களின் முதல் குரு (நம்மாழ்வாருக்குப் பிறகு)!
இது நடந்த இடம், திருவரங்கத்தில், 5-ம் திருச்சுற்றில் உள்ள திருவந்திக் காப்பு மண்டபத்தின் கீழ்ப்புறம்.
(இதனை சோழ மன்னன் அகளங்கனின் திருச் சுற்று என்றும் கூறுவர்)
மண்டபத்தின் இடது பாகத்தில் ஒரு கோயில் உண்டு. ஸ்ரீ நாத முனிகளும், அவரது சீடரான திருவரங்கப் பெருமாள் அரையரும், நாதமுனிகளின் பேரரான ஆளவந்தாரும் கோயிலில் நமக்குத் தரிசனம் தருகின்றார்கள்!
(வேறு சிலர், கம்பர் சில அறிஞர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் படித்துக் காட்ட, அவர்கள், ராம காதை ஆழ்வார் சம்பந்தம் இல்லாததால் அதை முன்னிட்டுப் பல குறைகள் கண்டு பிடித்ததாகவும் கூறுவர். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது போல், கம்பர் எழுதிய சடகோபர் அந்தாதிச் செய்யுள்:
பாவைத் திருவாய்மொழிப் பழத்தை பசுங்கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதாவமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்த வெங்கோவை அல்லா வென்னைக் குற்றங்கண்டென்
னாவைப் பறிப்பினு நல்லோரன்றோ மற்றை நாவலரே!)
பூவைப் பொருகடற் போதாவமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்த வெங்கோவை அல்லா வென்னைக் குற்றங்கண்டென்
னாவைப் பறிப்பினு நல்லோரன்றோ மற்றை நாவலரே!)
நாதமுனிகள் எதிரே, முன் கம்பத்தில் கை கூப்பிய வண்ணம்,கம்பர் நிற்கின்றார்! அவருக்கு நன்றி செலுத்துகிறாரோ?
***
இடம்: திருவரங்கம், கம்ப மண்டபம்
வேளை: அரங்கேற்ற வேளை
(கம்பர், சடகோபர் அந்தாதி எழுதிய பின், ராமாயணத்தை அரங்கேற்றம் செய்கின்றார். பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்க, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது. அதன் நடுவே, திடீரென்று இரணியனும், பிரகலாதனும் ’Entry' ஆகின்றனர்)
ஒரு புலவர்: இது தவறு! ராமாயணத்தில் இரணியன் வருவதற்குக் காரணமே இல்லை!
('சும்மா நீளமா வசனம் பேசுவதற்கென்றே எல்லாக் கதைகளிலும், காப்பியங்களிலும் யாராவது ஒருத்தர் கிளம்பிடறாங்கப்பா!' என்று அவையில் ஒருவர் முணுமுணுக்கிறார்)
இன்னொருவர்: உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?
பொழுது போகாமல் உட்கார்ந்திருப்பவர் ஒருவர்: ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது!
அவைத் தலைவர்: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!
(பெருமூச்சுடன், கம்பர் தொடர்கின்றார்)
நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது சிங்கட் சீயம்!
(யு.கா - இ.வ.ப - 257)
'நாடி நான் தருவேன்!' என்ற நல் அறிவாளன், நாளும்
...
ஒரு புலவர் (வேகமாக எழுந்து): புலவரே! முந்தைய பாடலை மீண்டும் படியுங்கள்!
(கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்குகிறார்)
புலவர்: 'சிரித்தது சிங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாரவது இதைப் பார்த்ததுண்டா?
(அவையில் சிரிப்பு!; கம்பர், இந்தச் சிரிப்பை 'கண்டுக்காமல்', அடுத்த பாசுரத்தை ஆரம்பிக்கிறார்)
அவைத் தலைவர் (கம்பரை நோக்கி): புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!
(கம்பர் பதில் தெரியாமல் திகைக்க, அதைக் காணச் சகியாமல் சூரியன் மறைய, அன்று அரங்கேற்றம் நிறுத்தப் படுகிறது; கம்பர் இரவு முழுவதும் மணத்தூண் அருகிலேயே, கண்களில் நீர் வழிய, அரங்கனை வேண்டி நிற்கின்றார்)
***
இடம்: கம்ப மண்டபம்
நேரம்: மறு நாள் காலை
(அரங்கேற்றம் தொடர்கிறது ...)
அதே புலவர் (மீண்டும்): நேற்றிரவு, உங்கள் கனவெல்லாம், சிங்கம் சிரிப்பதாகவே வந்திருக்குமே?
(அவையில் பலத்த சிரிப்பொலி ... திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)
(ஒரே ஒரு கணம்! கம்ப மண்டபத்தின் மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர், பெருமுழக்கத்துடன் சிரித்து, பின் மறைகிறார்! அனைவரும் மெய் சிலிர்க்கின்றனர்! கம்பரின் கண்களிலே ஆனத்தக் கண்ணீர்!)
(விக்கிரகமே சிரித்தால், சிங்கம் சிரிப்பதில் என்ன ஆச்சரியம்! ராம காதை அரங்கேற்றம் தடங்கல் இன்றி இனிதே நிறைவேறுகின்றது!)
(சிலர், அவைத் தலைவர் நாத முனிகள் தான் என்றும், சிலர், இதன் பின்னர் நாத முனிகளிடம் அங்கீகாரம் பெற்றார் என்றும் கூறுவர்)
***
கம்ப மண்டபத்திற்கு எதிரே, இன்னொரு பெரிய மண்டபம் உண்டு.
இங்கு, யக்ஞமூர்த்தி என்பவருக்கும், ராமாநுஜருக்கும், விவாதம் நடந்ததாம்! அப்போதும் இதே மேட்டு அழகிய சிங்கர், தம் தலை அசைப்பினால், ராமாநுஜரை வெற்றி அடையச் செய்ததாக குரு பரம்பரை பிரபாவம் கூறுகின்றது!
பிரகலாதன் துயர் துடைத்தவனும், கம்பன் துயர் துடைத்தவனும், ராமாநுஜர் துயர் துடைத்தவனும், அரங்கனூரில் இருக்கும் நரசிம்மன் தானே?
- அரங்க சிம்மனே போற்றி!
பிரகலாதன் துயர் துடைத்தவனும், கம்பன் துயர் துடைத்தவனும், ராமாநுஜர் துயர் துடைத்தவனும், அரங்கனூரில் இருக்கும் நரசிம்மன் தானே?:)
ReplyDeleteமேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர் ஆலய பராமரிப்பு அரங்கனுக்கு இணையாக உள்ளதா! (ஆலய பராமரிப்பு தேவைதானே!)
அருமை, அருமை. சிங்கம் சிரித்ததை படிக்கும் போதே எனக்கு சிலிர்க்கிறது. நேரில் பார்த்தவர்கள் பாக்யசாலிகள் (எள்ளி நகையாடினாலும் கூட).
ReplyDeleteமல்லிகை வெண் சங்காய் வண்டினம் ஊதும் என்ற வரிகள் ராகவேந்திரா படத்தில் சாருகேசி ராகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது என்ற பல்லவியுடன் வரும். வாலி எழுதினார்னு நெனச்சேன், ஆழ்வார் எழுதினதா? ஹிஹி. :))
இனிது. மிக மிக எளிய தமிழில் சிங்கப் பெருமான் மற்றும் திருவரங்கத்தின் பெருமையைக் கூறிய விதம் மிகவும் அருமை.
ReplyDelete//மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர் ஆலய பராமரிப்பு அரங்கனுக்கு இணையாக உள்ளதா! (ஆலய பராமரிப்பு தேவைதானே!)//
ReplyDeleteஇதற்கு திருவரங்கத்தில் வாழும் அன்பர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
அம்பி
ReplyDelete//மல்லிகை வெண் சங்காய் வண்டினம் ஊதும் என்ற வரிகள் ராகவேந்திரா படத்தில் சாருகேசி ராகத்தில் ஆடல் கலையே தேவன் தந்தது என்ற பல்லவியுடன் வரும். வாலி எழுதினார்னு நெனச்சேன், ஆழ்வார் எழுதினதா? ஹிஹி. :))//
வாலியைச் சொல்லிக் குற்றமில்லை. அவரும் நல்ல புலவரே!
ஆழ்வார்களும், நாயன்மார்களும், பல சங்க காலப் புலவர்களும், குயில், மயில், கிளி, வண்டு, மற்ற பறவைகள், சோலைகள், நதிகள் பற்றி, அக்கு வேறு ஆணி வேறாகப் ’பிரித்து மேய்ந்து’ விட்டார்கள்.
எனவே, வண்டுகளைப் பற்றி இனி புதிதாக எழுதுவது என்பது மிகவும் கடினமான செயல்.
ஸ்ரீராம் அவர்களே
ReplyDelete//இனிது. மிக மிக எளிய தமிழில் சிங்கப் பெருமான் மற்றும் திருவரங்கத்தின் பெருமையைக் கூறிய விதம் மிகவும் அருமை.//
நன்றி.
//மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர் ஆலய பராமரிப்பு அரங்கனுக்கு இணையாக உள்ளதா! (ஆலய பராமரிப்பு தேவைதானே!)//
ReplyDeleteஇதற்கு திருவரங்கத்தில் வாழும் அன்பர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
'இராமாவதார'க் காவிய அரங்கேற்றத்தை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் அரங்கன் அண்ணா. ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார்க்கும் போது சில குழப்பங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் கம்பருக்கு சொல்லும் காலத்தைப் பார்த்தால் கம்பர் நாதமுனிகள் காலத்திலா இராமானுசர் காலத்திலா இருந்தார் என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.
ReplyDeleteசிரித்த செங்கட் சீய அரங்கன் திருவடிகளே போற்றி!
for followup
ReplyDeleteநல்ல கட்டுரை, கம்பர் இராமகாதையை அரங்கேற்றியதை நேரில் பார்த்தது போல இருந்தது. நன்றி.எனது பிலாக்கில் நான் வெள்ளியங்கிரி புனிதப் பயணம் நிறைவுப் பகுதியில் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளேன். பார்க்கவும். நன்றி கே ஆர். எஸ்.
ReplyDeleteகுமரன்
ReplyDelete//ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார்க்கும் போது சில குழப்பங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் கம்பருக்கு சொல்லும் காலத்தைப் பார்த்தால் கம்பர் நாதமுனிகள் காலத்திலா இராமானுசர் காலத்திலா இருந்தார் என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.//
கம்பர் காலம் குறித்து குழப்பம் நிலவுவது உண்மையே!
கம்பர் அரங்கேற்றத்தைத் தெரிவிக்கின்ற பாடல் ஒன்று
எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்
மேற் சடையன் வாழ்வு*
புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்*
பண்ணிய இராமகாதை பங்குனி உத்தரத்தில்*
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே!
சாலிவாகன சகாப்தம் 807-ல் (கி.பி. 885) அரங்கேற்றம் நடைபெற்றதாகக் குறிக்கிறது.
வேறு சிலர், கம்பர் கி.பி. 1150-1200 காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர். இந்த ஆராய்ச்சி, சோழ அரசர்களின் வரலாற்றினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப் பட்டது. கம்பர் வாழ்ந்த காலம், பிரதாப ருத்திரன் காலம் என்று கருதப் படுவதால், பிரதாப ருத்திரன் காலமே கம்பர் காலம் என்று இந்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
எது எப்படி இருப்பினும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றோரின் நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களில் மேற்கோள் காட்டியதால், 13-ம் நூற்றாண்டிலேயே ராமகாதை பிரபலம் அடைந்து விட்டது என்பது தெளிவு.
குமரன்
ReplyDelete//ஆய்வாளர்கள் சொல்லும் கால வரையறைகளைப் பார்க்கும் போது சில குழப்பங்கள் எனக்கு ஏற்படுவதுண்டு. அவர்கள் கம்பருக்கு சொல்லும் காலத்தைப் பார்த்தால் கம்பர் நாதமுனிகள் காலத்திலா இராமானுசர் காலத்திலா இருந்தார் என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு.//
கம்பர் காலம் குறித்து குழப்பம் நிலவுவது உண்மையே!
கம்பர் அரங்கேற்றத்தைத் தெரிவிக்கின்ற பாடல் ஒன்று
எண்ணிய சகாத்தம் எண்ணூற்றேழின்
மேற் சடையன் வாழ்வு*
புண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்*
பண்ணிய இராமகாதை பங்குனி உத்தரத்தில்*
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங்கேற்றினானே!
சாலிவாகன சகாப்தம் 807-ல் (கி.பி. 885) அரங்கேற்றம் நடைபெற்றதாகக் குறிக்கிறது.
வேறு சிலர், கம்பர் கி.பி. 1150-1200 காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர். இந்த ஆராய்ச்சி, சோழ அரசர்களின் வரலாற்றினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு செய்யப் பட்டது. கம்பர் வாழ்ந்த காலம், பிரதாப ருத்திரன் காலம் என்று கருதப் படுவதால், பிரதாப ருத்திரன் காலமே கம்பர் காலம் என்று இந்த ஆராய்ச்சியாளர்களின் முடிவு.
எது எப்படி இருப்பினும், 14-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை போன்றோரின் நாலாயிர திவ்வியப் பிரபந்த வியாக்கியானங்களில் மேற்கோள் காட்டியதால், 13-ம் நூற்றாண்டிலேயே ராமகாதை பிரபலம் அடைந்து விட்டது என்பது தெளிவு.
Singam siritthadhu - class! sorry for my ignorance - where is THIRUVARANGAM? ----- MM
ReplyDelete//Singam siritthadhu - class! sorry for my ignorance - where is THIRUVARANGAM?//
ReplyDeleteSrirangam - Trichy.
Oh I see... Srirangam is called Tiruvarangam. Thanks --- MM
ReplyDeleteஅருமை, அருமை. ஒவ்வொவொரு பதிவும் ஒரு சிறிய தகவல் களஞ்சியம். மிக்க நன்றி.
ReplyDeleteநம்பனை அரங்க நரசிம்மனை வணங்குகிறேன்.