Showing posts with label கம்பர். Show all posts
Showing posts with label கம்பர். Show all posts

Tuesday, April 12, 2011

கம்பன் கள்: காமம் இராமனுக்கா? இராவணனுக்கா??

வாரியார் - ஆன்மீகத் தமிழுக்கு வேறுயார்?

அன்னாரின் காணொளி ஒன்றை youtube-இல் தரவேற்றியுள்ளேன்; கண்டு மகிழுங்கள்! பதிப்புரிமைப் பிரச்சனை வராமல் இருக்கணும்! வாரியார் குறித்த பல நிரல்கள், சிலரின் "தனிப்பட்ட உரிமை" என்ற பேரில் அகற்றப்பட்டு விடுகின்றன! வள்ளல் வாரியார் வலைப்பூவும் இப்படித் தான் முடங்கிப் போனது!  இதுக்கு என்னிக்குத் தான் விடிவோ?

வாரியார் சுவாமிகளின் கம்ப இராமாயணப் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! இருந்தேன், இருந் தேன், நறுந் தேன்! அம்புட்டு போதை!
இன்று இராம நவமி அல்லவா! அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்! (12-Apr-2011)


இராமனை அளவுக்கு அதிகமா ஏத்திவிட்டு, பேசியும் எழுதியும் விடுறாங்க என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு!
நாத்திகர்கள்/பகுத்தறிவாளர்கள் மட்டுமன்றி, சைவ அன்பர்கள், முருக அன்பர்கள் சிலரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எதிர்வினை ஆற்றுவதும் வழக்கம்!:)

ஆனால் திருமுருக. வாரியாரே, இராமனுக்கு வரிந்து கட்டும் காட்சிகளைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்!
வாரியார் இப்படித் "தெரிந்தே துணை போவதற்கு", மேற்சொன்னவர்கள் எல்லாம் என்ன சப்பைக் கட்டு கட்டுவார்களோ, நாம் அறியோம்:)

இராமனை, ஆழ்வார் அருளிச் செயல்கள் கூட இப்படித் தாங்கிப் பிடிக்காது!
இராமன் பால் அன்பு பூண்ட குலசேகராழ்வார் கூட, "இராமன் செய்த ஒவ்வொரு செயலும் ஒரு தத்துவம்" என்றெல்லாம் அடுக்க மாட்டார்!

ஆனால் ஆழ்வாருக்கும் ஒரு படி மேலே போய், நம் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலே தத்துவமாக விரிக்கின்றார்!
=> ஒரு பாதுகை = பர ஞானம், இன்னொரு பாதுகை = அபர ஞானம்,
=> இராவணன் = ஆணவம்; கும்பகர்ணன் = கன்மம்; இந்திரஜித் = மாயை!
=> கோசலை/கைகேயி/சுமித்திரை = ஞான சக்தி/இச்சா சக்தி/கிரியா சக்தி என்றெல்லாம் தத்துவ அடுக்குகள் அடுக்கப்படுகின்றன! :)

இது ஏன் என்பது இன்று வரை எனக்குப் புரியாத புதிர்!
வாலி வதம் தவறு என்று இராமனே ஒப்புக் கொண்ட பிறகும், எதற்கு இராமனைக் காப்பாற்ற இத்தனை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள்?



வாலி வாங்கிய வரம் அப்படி! No Fair Play!
கலைஞரை எதிர்த்து யாரு திருவாரூரில் நின்னாலும், அவிங்க ஓட்டில் பாதி, கலைஞர் ஐயாவுக்குப் போயிரும்-ன்னா, எவன் தேர்தல்-ல்ல நிப்பான் சொல்லுங்க? :) பாதி ஓட்டு அங்கே போயிரும்-ன்னு வரம் பற்றியே தெரியாது, ஒரு புதியவன் வீரத்தை மட்டுமே நம்பிக் களத்துக்கு வந்தால்???
வஞ்சக வரத்தை வஞ்சகத்தால் தான் வீழ்த்த முடியும்! அப்போ தான் வஞ்சமாய் வரம் வாங்கியவனுக்கு வலி-ன்னா என்ன-ன்னு தெரியும்!

திரைமறைவு பேரங்களைத் "திரைமறைவாக" டேப் செஞ்சாத் தானே, ஆ.ராசா/நீரா ராடியாவுக்கு வலிக்கும்? "ஐயோ, எங்கள் சதிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தனி மனித உரிமை மீறல்"-ன்னு அப்போ தானே குதிப்பாய்ங்க? :)
செய்யறது பொதுஜனச் சதி! இதுல உரிமை மீறலா? ஆமாண்டி, மீற வேண்டி இருக்கு, என்னாங்குற? அதே போலத் தான் இதுவும்!

வாலியை எப்படித் தான் வீழ்த்துவது?
மறைந்திருந்து கொல்வது முறையாகாது! மறையாமல் கொல்லணும்-ன்னா, கொல்லவே முடியாது! நம்மோட பாதி பலமும் போயீரும்!
ஓக்கே! மறைஞ்சிருந்து கொன்னு, கெட்ட பேரு வாங்கிக்க யாரு ரெடி?


வரம் கொடுத்தவரு ரெடியா? வரம் வாங்கியவரு ரெடியா?
ஹிஹி...யாருமே இல்லை! ஒரே ஒருத்தரு தான் ரெடி! :)

பேரறத்துக்காகச் சிற்றறத்தைக் கைவிட்டாலும்....
அதனால் வரும் விளைவுகளையும்....
ஒருவன் துணிந்து ஏற்க வேண்டும்! = இதைக் காட்ட வந்ததே காவியம்!


மனுசனா வாழ்ந்து காட்ட வந்த ஒருத்தரு, நல்லதும் பண்ணுவாரு, தப்பும் பண்ணுவாரு! தப்புக்கு Spelling-கே தெரியாத "புனித பிம்பம்" இல்ல அவரு!
ஆனா தப்பு பண்ணா, அதுக்கு எப்படி நடந்துக்கணும் என்பதையும் சேர்த்தே தான் நடந்து காட்டுவாரு! ஏதாச்சும் பரிகாரம்/ஹோமம் பண்ணி சமாளிச்சிறலாம்-ன்னு கணக்குப் போடமாட்டாரு! :)

வாலியை "மறைந்து" கொன்ற "பாவம்" தீர......
தானும் அதே போல் மறைந்தே கொல்லப்படுவாரு!
அவரே காலம்பு வாங்கி, குவலயம் நீங்கி, பாலாழி பாய்ந்த பாதகன்! (பா.பா.பா)

"பிற்பகல் தாமே வரும்" என்னும் வினைச் சுழற்சிக்கு யாருமே அப்பாற்பட்டவர் அல்லர்! அதைத் தனக்கும் சேர்த்தே உட்படுத்திக் கொள்வாரு!  ஹைய்யோ, நான் கடவுள்; அஹம் பிரம்மாஸ்மி, நான் பிறவான்-இறவான்,  I Am excluded-ன்னு சொல்லிக்க மாட்டாரு:)
No one is above Lokpal, incl the Prime Minister! அதானே அன்னா ஹசாரே சொல்வதும்?

அவரைச் சும்மா அவதாரம், அவதாரம்-ன்னு எதற்கெடுத்தாலும் ஓவராக ஏத்தி விடுதல் என்பதை இலக்கியமும், ஆன்மீகமும் செய்யவே கூடாது!
அது அந்த அவதார நோக்கத்துக்கே முற்றிலும் மாறாகப் போய் விடும்!
"அவிங்க எல்லாம் அவதாரம்-ப்பா! நாமளோ சாதாரண மனுசங்க! நம்மால முடியுமா?" என்று மனிதன் எஸ்கேப் ரூட் தேடிக்கொள்வான்! இதற்காகவா அவதாரம்?

இப்படி யோசிச்சா, "இராம போதையை" சமயவாதிகள் ஏற்ற மாட்டார்கள்! இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இப்படி நன்கு யோசிப்பவர்கள்!

இராமனை உச்சி மேல் வைச்சிக்கணும்! ஆனா நடக்க எல்லாம் வேணாம்! நாடு உடையாம இருக்கணும்-ன்னு அவன் காட்டுக்குப் போவான், ஆனா நாம மசூதியை உடைப்போம்! :)
இராமன் தப்பே பண்ணாலும் அது தப்பே இல்ல! ஆனா அடியவனான ஆஞ்சநேயன், தான் என்ற எண்ணத்தால்  இன்னொருவர் செய்த லிங்கத்தை வாலால் அசைப்பான்-ன்னு பின்னாளில் "கப்ஸா" எழுதி வைப்போம் :))

இப்படியெல்லாம் ஏத்தி விட்டதால் தான், அவதாரங்கள் "தோல்வி" அடைந்து போயின!
அவதாரங்கள் தோல்வி அடைந்தன என்று சொல்வதில் எனக்குத் தயக்கமோ, பயமோ இல்லை! கூட இருந்து கீதை கேட்ட அருச்சுனனே போர் முடிந்ததும் சரணாகதி செய்யலையே? நாட்டை ஆண்டு, சுகபோகத்தில் திளைத்து, வழியில் அல்லவோ மாண்டான்?
கூட இருந்து கீதை கேட்டவனுக்கே இந்த லட்சணம்-ன்னா, நாமெல்லாம் கேட்கும் கீதை எந்த லட்சணம்? யோசிச்சிப் பாருங்க :)

மனிதனுடைய "Hypocrisy" முன்னால், தாம் இறங்கி வந்து ஒன்னும் செய்ய முடியாது என்பதைப் புரிந்த கொண்ட இறைவன்...அதனால் தான்...
* ஆழ்வார்களைப் பிறப்பித்து,
* நாயன்மார்களைப் பிறப்பித்து,
* அடியவர்களைப் பிறப்பித்து,
மானைக் கொண்டு மானைப் பிடித்தாற் போலே, மனிதனைக் கொண்டே மனிதனைப் பிடிப்போம் என்று எண்ணி விட்டான் எம்பெருமான்!

கீதையோ, வேதாந்தமோ சற்றே தாழ்வானது! ஆழ்வார்களின் ஈரத் தமிழோ அதனினும் உயர்வானது!
கீதையை யார் வேண்டுமானாலும் வறட்டு வேதாந்தமாகப் பேசி விடலாம்! ஆனால் ஆழ்வாரின் ஈரத் தமிழை, கண் ஈரம்-மன ஈரம் கொண்டே அணுக முடியும்!

அதனால் தான் கீதை சாதித்துக் காட்டாத சரணாகதியை, ஆழ்வார்களின் காதல் நிறைந்த அருளிச்செயல் சாதித்துக் காட்டியது!
இராமானுசர் முதலானவர்களும், ஆழ்வார்களை முன்னிட்டே, மக்களைச் சரணாகதிப் பாதைக்குத் திருப்பினார்கள்!


இராமனைத் துதிபாட இத்தனை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் எதற்கு தெரியுமா?=ஹீரோவை வில்லன் ஆக்குவது, வில்லனை ஹீரோ ஆக்குவது - இந்த மாயையிலேயே சுழன்றுச் சுழன்று...
ஆக மொத்தம் நமக்குத் தேவை ஒரு ஹீரோ-ஒரு வில்லன்! :)

இதைக் கடந்தால்:
இராகவன் இனிப்பான், இராவணன் இனிப்பான், இராமாயணம் இனிக்கும்!

இதைக் கடக்கா விட்டால்:
இராகவன் கசப்பான் = நாத்திகருக்கு! இராவணன் கசப்பான் = ஆத்திகருக்கு! இராமாயணம் கசக்கும் = எனக்கு! :)

ஆனால் ஒரே ஒரு விஷயம்: "இராம நாடகத்தை" நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்...இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று!
எப்படிச் சூரனை மயிலும் சேவலுமாய் ஆக்கிக் கொண்டானோ திருமுருகன், அதே போல், வைகுந்த வாயிலுக்குச் சொந்தக்காரராகவே ஆகிப் போனார்கள் இராவண-கும்பகர்ண ஜய-விஜயர்கள்!

கற்பனை செய்து பாருங்கள்: இதோ....இராவணன் கையிலும் சங்கு-சக்கரங்கள்! :)
யார் தருவார் அடியவர்க்கு, தன்னுடைய அடையாளமான சங்கு சக்கரங்களை? தனக்கு மயிலாய்/ஊர்தியாய் வைத்துக் கொண்டால் போதாதா? எதற்கு தன் அடையாளங்களை அவர்களுக்கும் தர வேண்டும்? பார்ப்பவர்கள் இவன் தான் பெருமாள் என்று நினைத்து விட்டால்? :)

ஏன்? = தனிப் பெருங் "கருணை"! கருணை என்பதே ஆன்மீகத்தின்/ இறையன்பின் அடிப்படை!
ஹீரோ-வில்லன், நல்லோர்-தீயோர், அசுரர்-தேவர் என்று அனைவரும் ஒரு நாள் அங்கே தான் சேரப் போகின்றார்கள்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! - என்று ஓதுவது திராவிட வேதம் என்னும் திருவாய்மொழி!

அதனால் தான் இராவணின் செத்த உடம்பைத் "திருமேனி" என்று சொல்கிறார் கம்பர்!
பொதுவாகப் பாகவத அடியவர்களின் பூத உடலைத் தான் "திருமேனி" என்று குறிப்பது வழக்கம்! இராவணன் அடியாரா? :) பார்க்கலாமா நம் வாரியார் விருந்தை?


இராவணன் வீழ்ந்து கிடக்கிறான்! துயில் ஆழ்ந்து கிடக்கிறான்!
அவன் அரும் உடலைச் சுவைத்த மனைவி/துணைவி/இணைவிகள் எல்லாம்...
இதோ வெறும் உடலைக் காண விரைந்து வருகின்றனர்!

அத்தனை பேருக்கும் முன்னாக, அலறி அடித்து, ஓடோடி வருகிறாள் அன்னை மண்டோதரி!
அவள் இராவணனின் உடலை மட்டும் சுவைக்கவில்லை! உள்ளத்தையும் சுவைத்தவள்! அதான் அவளுக்கு மட்டும் கண்ணிலும்+நெஞ்சிலும் நீர்! மற்றவருக்கு கண்ணிலே நீர்!

வந்தவளுக்கோ பெரும் அதிர்ச்சி!
இராவணன் உடலை அம்புகள் துளைத்த்த்த்து எடுத்துள்ளன...யாரோ, கண்ட மேனிக்கு, எங்கு படுதோ படட்டும் என்று அம்பு விட்டாற் போலே!
ஆகா! இருக்காதே! இராகவன் சுத்த வீரனாயிற்றே! அவனா இத்தனை அம்புகளை விட முடியாமல் கண்ட மேனிக்கு விட்டிருப்பான்?

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த "திருமேனி" - மேலும் கீழும்
எள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும் இடம்தேடி - இழைத்த வாறோ?


எருக்கம் பூவைச் சடையில் சூடிய எங்கள் ஈசன் - பொன்னார் மேனியன் - அவர் மலையையே மலைக்க வைத்த  இராவணன்!
பலரும் நினைப்பது போல்...இராவணன் சிவ அன்பன் அல்ல! வெறும் பய பக்தன்! அட, அன்பனுக்கும் பக்தனுக்கும் என்னங்க வேறுபாடு?

* சிவ அன்பன் = இறைவனிடம் அன்பு செலுத்துவான்!
* பய பக்தன் = இறைவனிடம் "பய"-பக்தி செய்வான்!

இராவணன் பய-பக்தன்!
ஈசனைத் தாறுமாறாக இகழ்ந்து பேசியவன் தான்! சுடுகாட்டான் மலையை நான் சுற்றிக் கொண்டு செல்வதா? என்று இறுமாந்த இலங்கையர் கோன்!
நந்தி தேவரை ஏளனம் செய்து சாபம் வாங்கியவன்! ஞானசம்பந்தர் ஒவ்வொரு தேவாரப் பதிகத்தின் எட்டாம் பாட்டிலும் இராவணனை இகழ்ந்து பாடுவார்!

மலையை அசைக்க எண்ணி முடியாமல் போகவே, மலைக்குள் அழுந்திக் கொண்டதால் உயிர்ப் பயம் வந்தது! வாழ்க்கையில் முதன்முதலாகப் "பணிவு" செய்து பார்த்தான் இராவணன்!  அதுவே முதலும் கடைசியுமான பணிவு!
நந்திகேஸ்வரர் உட்பட யாரிடம் சாபம் வாங்கினாலும், சாப விமோசனம் கூடக் கோராது, தவறுக்கு வருந்தாது, ஹா போங்கடா என்று போகிறவன்...
இப்போ போக முடியாததால், ஈசனை வணங்கினான்! "ஆராய்ந்து அருளும் கள்ளத்தனம்" தெரியாத வரப் பிரசாதியான ஈசனாரும், அவனை மன்னித்து வாழ்த்தி விட்டார்!

இப்படி வெற்பெடுத்த வெறும் மேனி, இப்போ "திருமேனி"யாகக் கிடக்கிறது! அதில் எள்ளிருக்க இடமின்றி என்கிறார் கம்பர்!
எள்ளைப் போல் சிறுசிறு துளையாகத் துளைத்திருக்கு-ன்னு பெரும்பாலும் பொருள் கொள்ளுவார்கள்! ஆனால் அதையும் தாண்டிய இலக்கியச் சுவை ஒன்று உண்டு!

இறந்தவனுக்கு நீத்தார் கடனாக எள்ளிறைப்பது வழக்கம்! அந்த எள்ளும் நீரும் தூவும் போது, அதை ஏற்கக் கூட முடியாத அளவுக்கு, உடலில் துளைகள்!

எள் இருக்க இடம் இன்றி = எள் மேனியிலே தங்க முடியாத அளவுக்கு, துளைகளில் போய் சிக்கிக் கொள்கிறதே!
எத்தனை துளைகளைத் தான் நிரப்புவது? மொத்த உடலையும் எள்ளால் மூடினால் தான் உண்டு! பாவி இராமா! இப்படியா துளைப்ப்ப்ப்ப்ப்ப்பாய்?



கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் - கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ - ஒருவன் வாளி?


இவன் உடம்பும் மனசும்...எங்கெங்கெல்லாம் என் மனைவியை ஆசைப்பட்டதோ?
அந்த ஒவ்வொரு இடமாகத் தேடி...
அதில் தேங்கியுள்ள சீதையாசை என்னும் காமத்தை அழிக்கிறேன் பார்...
என்று உடல் முழுதும் தடவியதாம் ஒருவன் அம்பு! (வாளி=அம்பு)

இப்படியுமா எண்ணுவான் ஒரு ஆண் மகன்?
ஆகா! இராவணனுக்குக் காமமா? இராகவனுக்குக் காமமா?

தன்னுடைய போகப் பொருளை இன்னொருவன் வைத்திருந்தான் என்றால், அந்தப் போகப் பொருளைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறோம்! ஆனால் வைத்திருந்தவனின் உடம்பை....
"டேய்,  இங்கேயா வைத்துக் கொண்டு இருந்தாய்?
இங்கேயா ஆசைப்பட்டாய்?
இந்த உறுப்பா காமத்தை விரும்பியது?" என்றெல்லாம் அணுஅணுவாக யாரேனும் நுணுக்குவார்களா? இராமன் நுணுக்கினானோ இல்லையோ, அவன் வாயிலாகக் கம்பன் நுணுக்குகின்றான்! = உள்ளிருக்கும் எனக்கருதி உடல் முழுதும் தடவியதோ ஒருவன் வாளி?

எந்த அளவுக்கு அவளை உடலாலும் உள்ளத்தாலும் உரிமை கொண்டாடி இருந்தால் இப்படி யோசிப்பான் "காமுக" இராமன்?:) பிரிந்திருந்த மாதங்களின் ஒட்டுமொத்த காமமோ/காதலோ?
* இதை........இராமன் நிலையில் இருந்து "வெறியுடன்" நோக்குவதா?
* இல்லை, இராவணன் நிலையில் இருந்து "காமத்துடன்" நோக்குவதா?
* இல்லை, சீதை நிலையில் இருந்து, "தற்பெருமையுடன்" நோக்குவதா?
* இல்லை, மண்டோதரியின் நிலையில் இருந்து, "ஆற்றாமையுடன்" நோக்குவதா?
உளவியல் வல்லுநர்கள் தான் சொல்ல வேணும்! இது தான் கம்பன் கவி! கம்பன் கவியே கவி!
ஒரே ஒரு வரி = உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

சரிஈஈஈஈஈ....ஆனால் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்???
ஒரு மலரில், தேன் தானே இருக்கும்? கள் எப்படி இருக்கும்? தோண்டிப் புதைச்சி ஊற வச்சா தானே கள்ளு?

இங்கும் கம்பன் தமிழால் விளையாடுகிறான்! = கள்ளிருக்கும் + மலர்கூந்தல் + சானகி!
* கள் இருக்கும் மலரைச், சூடிய சீதையா?
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சீதையா? :)

சீதை, அசோக வனத்தில், ஆ-சோகமாகத் தானே இருந்தாள்? இராகவனே இராகவனே என்று ஸ்தம்பித்துப் போய் இருப்பவள், வாழ்வைத் தொலைத்துவிட்டு....வாழாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவள்!
She exists, not lives...அழுக்கு ஆடை, செம்பட்டை முடி.....அவளா புது மலர் சூடிக் கொள்வாள்?

வாடிப் போன சம்பங்கிப் பூவைப் பார்த்து இருக்கீங்களா? அதிலிருந்து ஒழுகி ஒரு வாடை அடிக்கும்!
அவள் காட்டிலே அன்று சூடிய மலர், இராகவன் தன் கையால் வைத்துவிட்ட மலர், அது வதங்கி, இன்றும் அவள் தலையில் தான் இருக்கிறது! அதை எடுக்கக் கூட அவளுக்குத் தோனலை! அது வாடி, ஊறி, அந்தத் தேனே கசந்து போய்க் கள்ளாய் மாறி விட்டது! = கள் இருக்கும் மலரை, சூடிய சானகி!

இராவணனுக்கு அவள் உடம்பு மேல் அப்படியொரு ஆசை! காமக் கடும்புனல்!
அவள் கண் மேல் தன் கண்,
அவள் இதழ் மேல் தன் இதழ்,
அவள் முலை மேல் தன் மார்,
அவள் "அதன்" மேல் தன் "இது"!

இப்படி அவள் உடம்பு முழுக்கக் கள் பொங்குகிறது இராவணனுக்கு! பால், நெருப்பில் தான் பொங்கும்! கள்ளோ, நெருப்பு இல்லாமலேயே பொங்கும்!

கள்ளைப் பூமிக்குள் அடைத்து வைப்பது போல், அவளை மனச் சிறையில் அடைத்து வைத்தான்! அது பரிசுத்தமான காதலா? இல்லை! "கரந்த" காதல்! காமக் கடும்புனல்!
அவள் கண்ணீரிலே ஒன்றும் வடியாதவனுக்கு, அவள் உடம்பில் மட்டும் கள் வடிகிறது!  சீதை உடம்பிலே கள்= மலர் சூடிய, கள்ளிருக்கும் சானகி!

கள்ளிருக்கும் + மலர்க்கூந்தல் + சானகி
* கள் இருக்கும் மலரைச், சூடிய சீதை!
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சீதை!!
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

கம்பன் கள் வாழ்க! கம்பன் தமிழ் வாழ்க!!


இந்தச் சொற்றொடரில் "கள்" இருப்பதாலோ என்னவோ கண்ணதாசனுக்கும் இதன் மேல் ஒரு மோகம்! :)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்" என்ற சொல்லாட்சியை அப்படியே எடுத்தாளுகிறார் சினிமாப் பாட்டில்! கொடி மலர் என்னும் படம்! எம்.எஸ்.வி இசை...

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை - அவள்
தேர் செல்லும் பாதையிலே தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை - தன்
பாவமில்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

கானகத்தைத் தேடி இன்று போகின்றாள்,
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி!

என் கண்ணாளா முருகா! இவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை! "என் பாவமில்லை" என்று சொல்லக் கூட இவளுக்கு ஒரு வார்த்தையும் இல்லை! கானகம் தேடிப் போகின்றாள்! முருகா, இவள் பயந்த தனி வழிக்கு நீயே துணை!

கம்பன் கவியை, இதோ, தமிழ்ச் சுவையாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் :)
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை, மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?



மக்களே, Apr-13; ஓட்டு மறக்காம போட்டுருங்க! நாளை (மட்டும்) நமதே!:)
எந்தச் சின்னமா? = தமிழ்த் துரோகச் சின்னத்துக்கு மட்டும் அல்ல! 49-O ஆச்சும் போட்டுருங்க! ஆனா ஓட்டு கட்டாயம் போட்டுருங்க!
Read more »

Saturday, January 02, 2010

ரங்க சிம்மன்


20 திவ்ய தேசங்களின் மேல் பாடல்கள் பாடியுள்ள பெரியாழ்வார், மற்ற எல்லாத் திவ்ய தேசங்களையும் விட, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்திற்கு மிகவும் அதிக ஏற்றம் தருகிறார்!

திருவரங்கத்தைப் போற்றும் 'மாதவத்தோன்' என்று தொடங்கும் இந்தத் திருமொழியின் 8-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் ஊர் திருவரங்கம் என்கின்றார்!

***

வல் எயிற்றுக் கேழலுமாய்* வாள் எயிற்றுச் சீயமுமாய்*
எல்லை இல்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானூர்*

எல்லியம் போது இருஞ்சிறை வண்டு*
எம்பெருமான் குணம் பாடி*
மல்லிகை வெண் சங்கு ஊதும்* மதிளரங்கம் என்பதுவே.
மாதவத்தோன் 4-8-8

(எயிறு - கொம்பு, பல்; கேழல் - வராகம்; வாள் - ஒளி வீசும்; சீயம் - சிங்கம்; இடந்தான் - தூக்கினான்; எல்லி - இரவு; இருஞ்சிறை - இரு சிறகுகள்; சங்கு ஊதும் - தேன் குடிக்கும்; மதிள் - பிரகாரங்கள்)

வலிமையுடைய கொம்புகள் உடைய வராகமுமாய், ஒளி வீசும் பற்கள் உடைய நரசிம்மமாய் அளவு கடந்த பூமியையும், இரணியனையும் தூக்கியவன் (இருக்கின்ற) ஊரானது,

அந்திப் போதில் திடமான சிறகுகளை உடைய வண்டுகள், எம்பெருமானுடைய குணங்களைப் பாடிக் கொண்டு, வெண் சங்கு போல் நிறமுடைய மல்லிகைப் பூக்களின் உள்ள தேனைக் குடிக்க இடமாய் உள்ள பிரகாரங்களை உடைய அரங்கமே!

எம்பெருமான் இரணியனையும் 'எயிற்றால்' தூக்கியதாகப் பெரியாழ்வார் கூறுகின்றரோ?

***

ராஹ அவதாரத்தின் போது இரணியாட்சனைக் கொன்று, தன் கொம்புகளால் ('வல் எயிற்று'), பூமியை வெளியே தூக்கி வருகின்றான் ('எல்லை இல்லாத் தரணியை இடந்தான்') எம்பெருமான்!


ஆனால் இரணியாட்சனைக் கொன்றது, தன் கொம்புகளால் அல்ல! பாகவதம், இரணியாட்சனை எம்பெருமான் 'கதையால் தலையில் அடித்துக் கொன்றார்' என்றே கூறுகிறது! கொம்புகள், பூமியைத் தூக்குவதற்காவே வந்ததாம்!

(சிலர், சக்கரத்தாழ்வாரே கொம்பு ரூபத்தில் வந்ததாகக் கூறுவர்)

இரணியனை வதம் செய்வதற்காக, எம்பெருமான் நரசிம்மமாக வருகின்றான்! கைகளில் சங்கு, சக்கரம், வேல், போன்ற பல ஆயுதங்கள்! கூரிய நகங்கள் - கைகளிலும், கால்களிலும்!

எதனால் இரணியன் கொல்லப் படுவான் என்று பகவானுக்குச் சந்தேகம் இருந்ததால், எதற்கும் இருக்கட்டுமே என்று, கூரிய பற்களும், கத்தி போன்று கூர்மையான நாக்கும் இருந்ததாக பாகவதம் வர்ணிக்கும்!

நகங்களால் தான் இரணியனுக்கு மரணம் ஏற்படுகின்றது! இந்த நகம், பல், நாக்கு ஆயுதங்களா?

***

இரணியன் பெற்ற வரங்களில் அதிகம் பேசப்படாதது ஒன்று: உயிர் உள்ளவைகள், அல்லது உயிரற்றவைகள் இரண்டினாலும் மரணம் இல்லை என்பதே!

'பற்களுக்கு உணர்ச்சியும், உயிரும் உண்டு' என்கிறது விஞ்ஞானம் (உள்ளே உள்ள நரம்புகள் மூலம்)! ஆனால் நகங்கள்?

விஞ்ஞான ரீதியாக, நம்முடைய நகங்கள் 'Dead Cells'. இருந்தாலும், எல்லா நகங்களும், எப்பொழுதும் வளர்கின்றன! நகங்கள் உயிருள்ளவையா? உயிரில்லாதவையா?

இந்தக் குழப்பம் இன்னும் தீராததால், பிரமன் கொடுத்த வரங்களுக்குச் சேதம் ஏற்படாது, இரணியனை வதைக்க எம்பெருமான் தேர்ந்து எடுத்தது நகங்கள்!

எதற்கும் இருக்கட்டுமே என்று பற்களையும் 'கூர்மையாக்கிக் கொண்டு' வந்தானாம் நாராயணன்! கடைசியில், நகங்களால் மார்பைக் கீற, நகங்களில் ரத்தம் உறைகின்றது! பற்களுக்கு வேலை இல்லை! எனவே அது இரணிய வதத்திற்குப் பிறகும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றதாம்!

'வல் எயிற்றுக் கேழலுமாய் எல்லை ல்லாத் தரணியை இடந்தான் ஊர்; வாள் எயிற்றுச் சீயமுமாய் இரணியனை இடந்தான் ஊர்'

என்று மாற்றிப் படித்தால் வரும் பொருள்:

’வலிய கொம்புகளுடன் வந்து, பூமியைத் தூக்கியவன் ஊர்; ஒளி வீசும் பற்களுடன் வந்து, இரணியனைக் கிழித்த ஊர்’

(இரணியன் மார்பை, பற்களால் பிளந்தவன் என்ற பொருள் வராது)

இரண்டு அவதாரங்களுக்குமே, 'இடந்தான்' என்ற பதத்துக்கு, 'கிழித்தான்' என்ற பொருள் பொருந்தும் - வராக அவதாரத்திலும், பிரளய ஜலத்தைக் கிழித்துத் தானே பூமியை எடுத்தான்?

இப்படி அவதாரங்கள் எடுத்தவன் ஊர் எது என்கின்றார் ஆழ்வார்?

***

விசாலமான மதிள்களை உடைய ஊராம் அது! உள்ளே, பல சோலைகள்! பூங்கொத்துக்கள்!

சில முனிவர்கள், எம்பெருமான் இருக்கும் அந்த ஊரின் மேல் தீராத காதல் கொள்கின்றனர்! அந்த ஊரை விட்டுப் பிரிய மனமில்லாமல், மறு பிறவியில் அதே ஊரில் வண்டுகளாகப் பிறக்கின்றனர்!

இந்த (முனி)வண்டுகள், தூங்குவதற்காக, மாலைப் பொழுதில் மலர்களைத் தேடி வருகின்றன!

அங்கு, வெண்மையான சங்கு போல் நிறமுள்ள மல்லிகை, மலர்கள்! இந்த மலர்களில், வண்டுகள் அமர்ந்து, தேன் குடிக்கின்றன!

(‘சங்கு ஊதும்என்றால், ’கடைசியில் ஊதுகின்ற சங்கு’ இல்லீங்கோ! , ’தேன் குடிக்கும்’ என்று அர்த்தமுங்கோ!)

தேன் குடித்த வண்டுகளுக்கு, பூர்வ ஜன்ம வாசனை வருகின்றது! ஆனால், எம்பெருமானைப் பாட நினைத்தாலும் வார்த்தைகள் வர மறுக்கின்றன! அந்த வண்டுகள் போடும் சப்தம், அவன் குணம் பாடுவது போலுள்ளது!


'ரங்கா, ரங்கா' என்ற சத்தம் வருகின்றது (இது தான் ர[ரீ]ங்காரமோ?)

(இந்த ஊருக்கு அரங்கம் என்ற பெயரும் இதனால் தான் என்ற கதை உண்டு)

பாசுரத்தின் கடைசி இரண்டு வரிகளை,

எல்லி அம் போது, வெண் மல்லிகை சங்கு ஊதும் இருஞ்சிறை வண்டு, எம்பெருமான் குணம் பாடும் மதிள் அரங்கம் என்பதுவே

என்றே பொருள் கொள்ள வேண்டும்!

அரங்கத்தில் இருப்பவன் நரசிம்மன் என்கின்றாரே ஆழ்வார்?

***

இடம்: கோயில் மண்டபம்
நேரம்: Trial நேரம்

(ஒரு வைணவப் பெரியாரும், புலவர் ஒருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)

புலவர்: அடியேன் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து வந்துள்ளேன்! அடியேனுக்கு ராமன் பேரில் மிகுந்த அன்பு உண்டு! அந்த அன்பினால், ராம காதையை எழுதியுள்ளேன்!

வைணவப் பெரியார்: இந்தக் கோயிலில் இதை அரங்கேற்றும்!

புலவர்: அரங்கேற்றத்தின் முன் தங்களைப் போன்ற பெரியவர் யாராவது படித்து விட்டு, கருத்துக்களைக் கூறினால் அரங்கேற்றம் எளிதாகும்! தாங்கள் உதவுவீர்களா?

வைணவப் பெரியார்: அடியேன் முடிந்தவரை உதவுகிறேன். தாங்கள் ராமனைப் படித்துக் காட்டுங்கள்!

(புலவர் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து, தான் எழுதிய கதையை அவருக்குப் படித்துக் காட்டுகின்றார்)

வைணவப் பெரியார்: ஒரு சிறு எண்ணம்! ஆழ்வார்களை முன்னிட்டு ராமன் கதையைச் செய்தால், ஒப்புதல் எளிதில் கிடைக்கும்!

புலவர்: நன்றி பெரியவரே!

(புலவர், கலக்கத்துடன், எம்பெருமானிடம் சென்று கண்ணீர் வடிக்கிறார்)

எம்பெருமான் (அசரீரியாக): புலவரே! நம் சடகோபனைப் பாடினையோ? பாடினால் தான் உம் ராம காதையை நாம் அங்கீகரிப்போம்!


(புலவர் முகம் மலர, எம்பெருமானை வணங்கிச் செல்கிறார்)

***

ப்போது எல்லாம் தெரிந்திருக்குமே! புலவர், கம்பநாட்டாழ்வார்! அந்த வைணவப் பெரியார் ...


நாதமுனிகள்! வைணவர்களின் முதல் குரு (நம்மாழ்வாருக்குப் பிறகு)!

இது நடந்த இடம், திருவரங்கத்தில், 5-ம் திருச்சுற்றில் உள்ள திருவந்திக் காப்பு மண்டபத்தின் கீழ்ப்புறம்.

(இதனை சோழ மன்னன் அகளங்கனின் திருச் சுற்று என்றும் கூறுவர்)

மண்டபத்தின் இடது பாகத்தில் ஒரு கோயில் உண்டு. ஸ்ரீ நாத முனிகளும், அவரது சீடரான திருவரங்கப் பெருமாள் அரையரும், நாதமுனிகளின் பேரரான ஆளவந்தாரும் கோயிலில் நமக்குத் தரிசனம் தருகின்றார்கள்!

(வேறு சிலர், கம்பர் சில அறிஞர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் படித்துக் காட்ட, அவர்கள், ராம காதை ஆழ்வார் சம்பந்தம் இல்லாததால் அதை முன்னிட்டுப் பல குறைகள் கண்டு பிடித்ததாகவும் கூறுவர். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது போல், கம்பர் எழுதிய சடகோபர் அந்தாதிச் செய்யுள்:

பாவைத் திருவாய்மொழிப் பழத்தை பசுங்கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதாவமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்த வெங்கோவை அல்லா வென்னைக் குற்றங்கண்டென்
னாவைப் பறிப்பினு நல்லோரன்றோ மற்றை நாவலரே!)

நாதமுனிகள் எதிரே, முன் கம்பத்தில் கை கூப்பிய வண்ணம்,கம்பர் நிற்கின்றார்! அவருக்கு நன்றி செலுத்துகிறாரோ?

***

இடம்: திருவரங்கம், கம்ப மண்டபம்
வேளை: அரங்கேற்ற வேளை

(கம்பர், சடகோபர் அந்தாதி எழுதிய பின், ராமாயணத்தை அரங்கேற்றம் செய்கின்றார். பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்க, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது. அதன் நடுவே, திடீரென்று இரணியனும், பிரகலாதனும் ’Entry' ஆகின்றனர்)

ஒரு புலவர்: இது தவறு! ராமாயணத்தில் இரணியன் வருவதற்குக் காரணமே இல்லை!

('சும்மா நீளமா வசனம் பேசுவதற்கென்றே எல்லாக் கதைகளிலும், காப்பியங்களிலும் யாராவது ஒருத்தர் கிளம்பிடறாங்கப்பா!' என்று அவையில் ஒருவர் முணுமுணுக்கிறார்)

இன்னொருவர்: உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?

பொழுது போகாமல் உட்கார்ந்திருப்பவர் ஒருவர்: ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது!

அவைத் தலைவர்: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!

(பெருமூச்சுடன், கம்பர் தொடர்கின்றார்)

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி

இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்
;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது சிங்கட் சீயம்!
(யு.கா - இ.வ.ப - 257)

'நாடி நான் தருவேன்!' என்ற நல் அறிவாளன், நாளும்
...

ஒரு புலவர் (வேகமாக எழுந்து): புலவரே! முந்தைய பாடலை மீண்டும் படியுங்கள்!

(கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்குகிறார்)

புலவர்: 'சிரித்தது சிங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாரவது இதைப் பார்த்ததுண்டா?

(அவையில் சிரிப்பு!; கம்பர், இந்தச் சிரிப்பை 'கண்டுக்காமல்', அடுத்த பாசுரத்தை ஆரம்பிக்கிறார்)

அவைத் தலைவர் (கம்பரை நோக்கி): புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!

(கம்பர் பதில் தெரியாமல் திகைக்க, அதைக் காணச் சகியாமல் சூரியன் மறைய, அன்று அரங்கேற்றம் நிறுத்தப் படுகிறது; கம்பர் இரவு முழுவதும் மணத்தூண் அருகிலேயே, கண்களில் நீர் வழிய, அரங்கனை வேண்டி நிற்கின்றார்)

***

இடம்: கம்ப மண்டபம்
நேரம்: மறு நாள் காலை

(அரங்கேற்றம் தொடர்கிறது ...)

அதே புலவர் (மீண்டும்): நேற்றிரவு, உங்கள் கனவெல்லாம், சிங்கம் சிரிப்பதாகவே வந்திருக்குமே?

(அவையில் பலத்த சிரிப்பொலி ... திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

(ஒரே ஒரு கணம்! கம்ப மண்டபத்தின் மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர், பெருமுழக்கத்துடன் சிரித்து, பின் மறைகிறார்! அனைவரும் மெய் சிலிர்க்கின்றனர்! கம்பரின் கண்களிலே ஆனத்தக் கண்ணீர்!)

(விக்கிரகமே சிரித்தால், சிங்கம் சிரிப்பதில் என்ன ஆச்சரியம்! ராம காதை அரங்கேற்றம் தடங்கல் இன்றி இனிதே நிறைவேறுகின்றது!)

(சிலர், அவைத் தலைவர் நாத முனிகள் தான் என்றும், சிலர், இதன் பின்னர் நாத முனிகளிடம் அங்கீகாரம் பெற்றார் என்றும் கூறுவர்)

***

ம்ப மண்டபத்திற்கு எதிரே, இன்னொரு பெரிய மண்டபம் உண்டு.

இங்கு, யக்ஞமூர்த்தி என்பவருக்கும், ராமாநுஜருக்கும், விவாதம் நடந்ததாம்! அப்போதும் இதே மேட்டு அழகிய சிங்கர், தம் தலை அசைப்பினால், ராமாநுஜரை வெற்றி அடையச் செய்ததாக குரு பரம்பரை பிரபாவம் கூறுகின்றது!

பிரகலாதன் துயர் துடைத்தவனும், கம்பன் துயர் துடைத்தவனும், ராமாநுஜர் துயர் துடைத்தவனும், அரங்கனூரில் இருக்கும் நரசிம்மன் தானே?

- அரங்க சிம்மனே போற்றி!

Read more »

Thursday, November 05, 2009

ஆளரிநாதன்


செங்கீரைப் பாசுரங்களைச் சொன்னால், நமக்கு என்ன கிடைக்கும்?

***

*'ன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*
ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!*

என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*

ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுக' என்று*
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு
*
ஆன புகழ் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*

இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்

எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.

உய்ய உலகு - 1-6-11

'அன்னமாகவும், மீன் உருவாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும், ஆமையாகவும் அவதரித்தவனே! இடையர்களுக்குத் தலைவனே! என் துன்பத்தை நீக்கு! செங்கீரை ஆடுக! ஏழு உலகங்களையும் உடையவனே (வயிற்றில் வைத்துக் காத்தவனே)! மீண்டும் மீண்டும் ஆடுக!'

என்று, அன்ன நடை கொண்ட யசோதை விரும்பிச் சொன்னவாறு, புதுவைப் பட்டர் சொன்ன இனிய ராகத்தோடு கூடிய பத்துப் பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், இந்த உலகில் எட்டுத் திசைகளிலும் புகழ் பெற்று, இன்பம் எய்துவர்'.

'அன்னமும்' என்றவர், 'மீனும்' என்று கூறாது, 'மீன் உருவும்' என்று கூறுவானேன்?

***

த்ஸ்ய (மீன்) அவதாரக் கதை, இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது.

(1)
சோமுகாசுரன் (சிலர் மதுகைடபர்கள் என்ற இருவர் என்றும் கூறுவர்) வேதங்களைத் திருடினான். கடலுள் மறைந்தான்.


திருமால் மீன் வடிவம் எடுத்தார்; கொன்றார்; மீட்டார்; அன்ன உருவுடன் பிரமனுக்கு உபதேசித்தார்!


இதனாலேயே 'அன்னமும், மீனுருவும்' என்று இரண்டையும் சேர்த்து ஆழ்வார் கூறுகிறாரோ?


(2)
ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களைத் திருடினான். இதைக் கண்ட திருமால், ஒரு சிறிய மீன் வடிவு கொண்டார்.

சத்யவிரதன்
என்ற முனிவர் (சிலர், ச்ராத்த தேவர் எனும் மநு என்பர்) நீர் அருந்தும்போது, அவர் கைகளில் இந்த மீன்! தன்னைக் காப்பாற்றுமாறு கேட்ட மீனைத் தன் கமண்டலத்தில் விட்டார்.

ஓரிரவில் கமண்டலம் முழுதும் வளர்ந்தது! வேறு ஒரு பாத்திரத்தில் மீனை விட, அதிலும் இடமில்லை! இப்படியே குளம், ஆறு, ஏரி, கடல், பெருங்கடல் என வளர்ந்தது மீன்! முனிவருக்கு மீன் யார் என்று தெரிந்தது.


அடுத்த மூன்று நாட்களில் ஏற்பட்ட பிரளயத்தின் போது, திருமால் உலகைக் காத்தார். மறைந்த வேதங்களையும் மீட்டார்.

ஒரே மீனாக இருந்தாலும், 'Container'-ன் அளவாக இருந்தவை பல - 'மீன் உரு'க்கள்! எனவே, 'மீனும்' என்னாது, 'மீனுருவும்' என்கின்றார்!

திருமால், குதிரையாக வருவதற்கு (ஹயக்ரீவ அவதாரம்) அற்புதமான காரணம் உள்ளது. ஆனால், ஏன் அன்னமாக வந்து உபதேசிக்க வேண்டும்? இதற்கு என்ன காரணம்? இது பற்றித் தெரிந்தால் கூறுங்கள். அடியேனும் தெரிந்து கொள்கிறேன்)


முதல் முறையாக 'ஆளரியும்' என்கின்றார். ஏன் அவர் நரசிங்கமாக வரவேண்டும்?

***

ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு காட்சி ...

இடம்: மந்தர மலை அடிவாரம்
காலம்: இரணியகசிபுவின் தவம் முடியும் காலம்


பிரமன் (கையில் கமண்டலத்துடன், தனக்குள்): எங்கே இரணியன்! தேவர்கள் இங்கு தான் எங்கேயோ என்று சொன்னார்களே!

அருகில், ஒரு சிறு மலை போன்ற புற்று! அதில், எறும்புகள், ஈசல்கள் சாரை சாரையாக!


(விஷயம் புரிந்த பிரமன், தன் கமண்டல நீரை எடுத்து, மலையில் தெளிக்கிறார். புற்று கரைகிறது. மீண்டும் நீர் தெளிக்க, எறும்புகள் கடித்து, எலும்பாக இருந்த இரணியன், பொன் நிறம் பெற்று, பூரண ஆரோக்கியத்துடன் எழுகின்றான்)

பிரமன்: இரணியா! யாரும் 100 தேவ வருடங்கள் உயிருடன் இருந்து தவம் செய்ததில்லை! உன் தவத்தால் நான் ஜயிக்கப் பட்டேன். உனக்கு என்ன வேண்டும்?

இரணியன்: வணக்கம்! கேட்டதைக் கொடுப்பதாக வாக்களித்தால் கேட்கிறேன்.

பிரமன்: சரி, வேண்டியதைக் கேள்!


(ஏற்கனவே ‘Room' போட்டு யோசித்து’ வைத்ததை, இப்பொழுது ஒப்பிக்கிறான் இரணியன்!)

இரணியன்: உம்மால் படைக்கப்பட்ட பிராணிகளிடம் இருந்து எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. உள்ளேயும், வெளியேயும், மரணம் கூடாது. பகலிலும், இரவிலும் கூடாது. நீர் (நேரடியாகப்) படைக்காத (தக்கன் மூலம் படைத்தது) பிராணிகளிடமிருந்தும், ஆயுதங்களாலும் மரணம் கூடாது.

பிரமன் (தனக்குள் ... ஆஹா! இப்பவே கண்ணைக் கட்டுதே!): இவ்வளவு தானே!

இரணியன்: இன்னும் இருக்கிறது! தரையிலும் ஆகாசத்திலும் மரணம் கூடாது. மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் கூடாது. உயிரில்லாதவை, உயிருள்ளவை, தேவர்கள், அசுரர்கள், நாகர்கள் யாராலும் மரணம் கூடாது.

பிரமன் (தனக்குள் ... ரொம்பக் கண்ணைக் கட்டுதே!): போதும், நிறுத்து!

இரணியன்: பிரபோ! இன்னும் ஒன்றே ஒன்று! சண்டையில் எதிரி இல்லாத தன்மையும், எல்லாப் பிராணிகளுக்கும் ஒரே தலைவனாயும் இருக்க வேண்டும். உமக்கு இருப்பது போல் திக்பாலகர்களுடைய மகிமையும், தவமும், யோகசக்தி உடைய சித்தர்களிடம் எப்பொழுதும் இருக்கும் அணிமாதி சித்திகளும் என்னிடம் இருக்க வேண்டும்'.

பிரமன்: பிடி வரம்! விடு ஆளை! எடு ஓட்டம்!

(அடுத்த வரம் கேட்பதற்குள் ’Escape'!)

இந்த வரங்களைப் பற்றி கம்பர் என்ன சொல்கிறார்?

***

ம்பர், 5 கவிகளால் (144-148), இரணியன் பெற்ற வரங்களைக் கூறுகிறார். இந்த வரங்கள் பாகவதத்தில் கூறியவை போல இருந்தாலும், 2 கவிகள் மட்டும், குறிப்பிட்டுக் கூறக் கூடியவை:

தேவர் ஆயினர் ஏவரும், சேணிடைத் திரியும்
யாவரேயும், மற்று எண்ணுதற்கு அரியராய இயன்ற

கோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல,

ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்; அனையான். (145)


(மானிடன் = மான் + இடன்; தாருகா வனத்து முனிவர் ஏவிய மானை இடது கையில் கொண்டதால், சிவன், ’மானிடன்’ எனப்படுவார்)

மூன்றாவது வரியில், (திரு)மால், அயன், சிவன், மூவரும் அவனைக் கொல்ல இயலாது என்று வரம் வாங்கியதாகக் கூறுகின்றார்!

’திருமால் அவனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை இரணியன் பெற்றதாக, வேறு எந்த நரசிம்மர் அவதாரக் காவியத்திலும், புராணத்திலும் கூறப்படவில்லை.

இதற்கு விளக்கமாக, 'திருமால் நாராயணனாக வந்து இரணியனைக் கொல்ல முடியாது' என்று வரம் பெற்றதாக கம்பராமாயண விளக்கப் புத்தகங்கள் கூறுகின்றன. (இதே விளக்கம் சிவனுக்கும், பிரமனுக்கும் பொருந்துமே?)

வரங்கள் கொடுக்கும்போது, பிரமனும், மற்ற தேவர்களும், தங்கள் சக்திக்கேற்ற வரத்தையே கொடுக்க இயலும்! அடுத்தவர்கள் சார்பில், சக்திக்கு மீறிய வரத்தைக் கொடுக்க இயலாது என்று வேதங்கள் கூறுகின்றன. (உதாரணம் - மார்க்கண்டேயர் வரலாறு - திருவாய்மொழிப் பாசுரம் 4-10-8)!

எனவே கம்பர் கூறியது போல் பிரமன், 'திருமால் இரணியனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை அளித்திருக்க இயலாது என்று பெரியோர்கள் கூறுவர்.

இன்னொரு பாடல்:

பூதம் ஐந்தொடும் பொருந்திய புருவினால் புரளான்;
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;

தாதை வந்து தான் தனிக் கொலை சூழினும் சாகான்;

ஈது அவன் நிலை; எவ்வுலங்கட்கும் இறைவன். (148)


இரண்டாவது வரியில், 'வேதம் விளம்பிய பொருள்களால்' மரணம் இல்லை என்ற வரம் பெற்றதாகக் கூறுகிறார்.

வேதம் கூறும் பொருட்கள் என்பது இங்கு, மந்திரங்கள், தந்திரங்கள். இவைகளையும் ஆயுதமாகக் கருதுவதால், இதையும் வரமாகப் பெற்றதாகக் கம்பர் கூறுவது அழகு!

தனது தந்தையே வந்து கொல்ல முயன்றாலும் சாக மாட்டான் ('தாதை ... சாகான்') என்ற வரம் வாங்கியதாகக் கூறுகின்றார். இந்த வரமும், வேறு எந்தப் புராணத்திலும் காணப்படவில்லை!

இரணியனின் தந்தை, காச்யப முனிவர். அவருக்கும் படைக்கும் சக்தி இருந்ததால், இதையும் கம்பர் குறிப்பிட்டதாகக் கூறுவர்.

(பிரமன் படைத்தவரே இரணியனின் தந்தையான காசியபர்; பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை என்பதால், இந்த வரம், அடியேனுக்கு 'Superfluous' என்றே தோன்றுகிறது!)

நேரமிருந்தால் கவிச் சக்கரவர்த்தியின் மீதிப் பாடல்களையும் படித்துப் பாருங்கள்!

'என் கேள்விக்கென்ன பதில்'?


***

ரணியனுக்குக் கிடைத்த வரங்கள் பல என்றாலும், அவற்றுள் மிக முக்கியமானவை இரண்டு:

(1) 'பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை' என்பதால், திருமால் ஒருவனே இவனைக் கொல்ல முடிந்தது.

(2) பிரமன் ஏற்கனவே படைத்த பிராணி எதுவும் (எந்த உருவமும் - மனிதன் அல்லது மிருகம்) இரணியனைக் கொல்ல முடியாததால், திருமாலும், அதுவரை எவரும் படைத்திராத, பார்த்திராத உருவமாக வந்து அவனைக் கொல்ல வேண்டி இருந்தது!

நரசிம்ma உருவத்தை அதுவரை யாரும் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று, இரணிய வதத்தின் பின்னே வருகின்றது. இதைப் பற்றி யாருக்காவது தெரிந்தால் பதில் அளியுங்களேன்?

இனி, பாசுரத்தின் பலன்களைப் பார்க்கலாம்.

***

திருமொழியைக் கற்று அறிந்தவர்கள் ('வல்லார்') எட்டுத் திசைகளிலும் புகழ் பெறுவராம்! இன்பமும் கிடைக்குமாம்!

'வல்லார்' என்ற வார்த்தைக்குப் பொருளாக, 'கற்று ஸமர்த்தரானவர்' என்று வியாக்கியானம் கூறுவார்கள்! கற்றால் மட்டும் போதாது, அதன் படி நிற்க வேண்டுமாம் ('கற்க ...' என்ற திருக்குறள் ஞாபகம் வரணுமே?)!

'இன்பம் எய்துவரே' என்று கூறினால் போதாதா? ஏன் 'இன்பம் அது எய்துவர்' என்கின்றார்'?

கிடைக்கும் புகழுக்கு ஏற்ற இன்பத்தை, 'அது' என்கின்றார்.

சரி, கற்ற படி நிற்பதற்கு எவ்வளவு வருடங்கள் ஆகுமோ? நமக்கு எல்லாம் உடனே வேண்டுமே? என்ன செய்வது?

... நரசிம்மர் உடனே வழி சொல்வார்

Read more »

Thursday, October 29, 2009

மறங்கொள் இரணியன் - 2



ம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

இடம்: ராவணன் அரண்மனை
காலம்: அவனுடைய கெட்ட காலம்



ராவணன்:
மந்திரிகளே! நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்!

மகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ?

வச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.

துன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா?

மகா பார்சுவன்: குரங்குக்கு உதவிய அக்னியை நீங்கள் அன்றே எரித்திருக்க வேண்டும்.

தூமிராட்சன்: அல்பமாக இருந்தாலும், சண்டையிட்டு, கொன்று தின்று விடுவோம். வேறு வழியில்லை.

கும்பகர்ணன்: சீதையை அபகரித்தது தவறு. உனக்குப் பல மனைவிகள் இருந்தும், இன்னொருவன் மனைவியின் அடிகளில் பல முறை வீழ்ந்தும், அவள் மறுப்பதும் உனக்கு அழகல்ல. இருந்தாலும், சண்டை செய்வதே இப்பொழுது வீரர்களுடைய செயல்.

இந்திரஜித்: நாங்களே சென்று கொன்று வருவோம். அந்தக் குரங்கை நான் ஏற்கனவே பிடித்தவன் தானே!

விபீடணன்: உனக்கு முன்னால், உன்னையும் விட வலிமையான இரணியாட்சனும், அவனையும் விட மிக வலிமையான இரணியகசிபுவும், திருமால் சினத்தால் தமது சுற்றத்தாருடன் இறந்தனர். அதைக் கேள்!

(இரணிய வதைப் படலத்தின் 170 கவிகளால் பிரகலாத சரித்திரத்தை, அழகாக விவரிக்கின்றான்)

விபீடணன் (கடைசியில்): இப்படிப் பட்ட வலிமையுடைய இரணியனே திருமாலால் எளிதாக அழிக்கப்பட்டான்! நீ எம்மாத்திரம்? இராமனாக வந்துள்ள திருமால் உன்னை அழிப்பது நிச்சயம். நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால், சீதையை இராமனிடம் மீண்டும் சேர்த்து விட்டு அவரிடம் சரணடைந்து விடு!

கம்பர், இங்கு விபீடணன் மூலம் வர்ணித்த இரணியனின் வீரம், நம் கற்பனைக்கு எட்டுமா?

***


ம்பர், 11 கவிகளால் (133-143) இரணியனுடைய அபரிமிதமான வலிமையையும், அவனால் தேவர்களும், மனிதர்களும் பட்ட துன்பங்களையும் வர்ணிக்கின்றார்.

இவற்றை முழுவதும் விளக்கினால், நரசிம்மரில் இருந்து முழுவதும் ராமருக்குத் தாவ நேரிடலாம் என்ற பயத்தினால், ’இரணியன் Top 10' மட்டும் குறிப்பிட்டுள்ளேன்:

பாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
பூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;

ஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி

ஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும்.
(133)

10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)!
9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)!

'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;
'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;

'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;

அண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும்.
(134)

8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)!

(இதை, வட மொழியில் ஆவரண ஜலம் என்பர்)

மரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,

பரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,

இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
(135)

7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)!
6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)!
5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)!

நிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,

உலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்

வலியும், செய்கையும், வருணன் தன் கருமமும் ஆற்றும்.
(137)

4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)!

தாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;
தூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும்.
(138)

3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)

பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,
தெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்

கொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த

தண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான்.
(141)

2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)!

மண்டலம் தரும் கதிரவன் வந்து போய் மறையும்
எண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,

கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்

குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்?
(142)

1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)!

அவன் வலிமையைப் பற்றி இனிக் கூறவும் வேண்டுமோ (மற்று ... கூறல்)?

(கவிஞனின் கற்பனை வளத்திற்கு உதாரணமாக, இலக்கிய ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும், இரணிய வதைப் படலம் கூறப்படுகின்றது)

சரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா?

***

வா
ல்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

(ராவணனிடம் கோபித்துக் கொண்டு, விபீடணன் தன் நான்கு மந்திரிகளுடன் ராமன் இருக்குமிடம் வருகிறான். சுக்ரீவனும் மற்ற வீரர்களும், போரிடத் தயாராகின்றனர்)



விபீடணன் (எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக):
ராமனிடம் சரணடைய வந்துள்ளோம்.

(சுக்ரீவன், ராமனிடம் ஓடிச் செல்கிறான்)

சுக்ரீவன்:
பிரபோ! விபீடணன் எதிரியின் பலத்தைச் சோதிக்க வந்திருக்கிறான். இவனை நம்மிடம் சேர்க்க வேண்டாம்.

ராமன் (மற்ற மந்திரிகளிடம்): நீங்கள் சுக்ரீவன் சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் எண்ணம் என்ன?

அங்கதன்: அவனைப் பரீட்சித்துப் பார்த்தே சேர்க்க வேண்டும். அவன் நல்லவனாக இருந்தால் சேர்க்கலாம்.

ஜாம்பவான்: இவனிடத்தில் நாம் சந்தேகப் படவேண்டியது நியாயமே.

மைந்தன் (மயிந்தன்): கேள்விகள் கேட்டுப் பரீட்சித்துப் பாருங்கள். இவன் நல்லவனாக இருந்து, இவனை நாம் விட்டு விட்டால், ஒரு மித்திரனை இழந்து விடுவோம்.

(’கழுவும் நீரில் நழுவும் மீன்கள்’ என்பதற்கு இவர்கள் தான் உதாரணமோ?)

இலக்குவன்: அண்ணா! இவன் வந்த காரணம் பற்றி எனக்குச் சந்தேகம் உள்ளது.

அனுமன் (ராமனிடம்): தங்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் என்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசும்படி கட்டளை இட்டதால் பேசுகிறேன். இவனை இப்படிப் பரீட்சிப்பது உசிதமல்ல. (விபீடணனுடைய நல்ல குணங்களைச் சொல்லி), சந்தேகப் படுவதும் தவறு. இவன் நேர்மையாகப் பேசுபவன். அசுரனாக இருந்தாலும், யோக்கியன். எனவே இவனைச் சேர்க்கலாம். தங்கள் கட்டளை என்ன?

(அனுமன் மற்ற மூன்று மந்திரிகளையும் மறைமுகமாகக் கண்டித்ததால், அவர்கள் நெளிகின்றனர் )

ராமன்: என்னை வந்து அடைந்தவனை நான் ஒருபோதும் கைவிடுவது இல்லை.

சுக்ரீவன்: இவன் நன்றியற்றவன். தமையனைக் கைவிட்டு இங்கு வந்தவன், பின்னால் நம்மையும் கைவிடலாம்.

ராமன்: ராவணன், நல்லவனான விபீடணனிடம் கோபப் படுவது நம்பக் கூடியதே. மேலும், அசுரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்களே (பிரகலாதனைச் சொல்கிறாரோ)?

சுக்ரீவன்: தாங்கள் இவனிடத்தில் பொறுமை காட்டுவது தவறு. இப்பொழுதே திருப்பி அனுப்பி விடுங்கள்.

(ராமனிடத்தில் உள்ள அன்பினால், கோபம் கொள்கிறான் சுக்ரீவன்)

ராமன் (அவனுக்கு புத்தி சொல்ல நினைத்து): வானர அரசனே! இவன் கெட்ட எண்ணத்துடனேயே வந்து இருக்கட்டும். இவனால் என்னை என்ன செய்ய முடியும்? (யு.கா.ஸ - 18.240-244)


ராமன் (மீண்டும்):
நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைக் கொஞ்சம் கூடச் சிரமப் படுத்தாமல், பூமியில் உள்ள அரக்கர்களையும், தானவர்களையும், பிசாசுகளையும், மற்ற கெட்ட பிராணிகளையும், நினைத்த மாத்திரத்திலேயே விரலின் நுனியால் நாசம் செய்வேன் என்று நீ அறி! அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்! (யு.கா.ஸ - 18.245-255)

(அனைவரும், விபீடணனை அழைத்து வரச் செல்கின்றனர்)

(சர்வேஸ்வரன் தன்னையே புகழ்ந்து கொள்வது சரியா எனில், நடந்த உண்மையை அப்படியே சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்பர் பெரியோர். நரசிம்ம அவதாரத்தில் இது தானே நடந்தது?)

நரசிம்மாவதாரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் வேறு எங்கும் கூறப்படவில்லை.

(பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர். இருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது?)

(அடியேனின் எண்ணம் - வால்மீகி கோடு காண்பித்தார்; கம்பர் ரோடு போட்டார். இதில் தவறேதும் இல்லையே? மேலும், நரசிம்மனே 'சரி' என்று கூறியதில் நாம் தவறு காணலாமா?)

மீண்டும் ஆழ்வார் பாசுரத்துக்குத் தாவுவோமா?

***

ன்ன? 'மறங்கொள் இரணியன்' என்பது சரிதானே?

ஆழ்வார் உண்மையில் இரணியனையா புகழ்ந்தார்?

'இந்தக் கண்ணன் தான் இரணியனின் மார்பை அன்று கிழித்தான்' என்பதால், நரசிம்மன் வலிமையை மட்டும் சொல்கிறாரோ?

ஒருவேளை 'கண்ணனே நரசிம்மன்!' என்றும் சொல்கிறாரோ?

இந்த நரசிம்மனின் வலிமைக்கு, நம் வணக்கங்கள்.

... நரசிம்மர் மீண்டும் வருவார்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP