ஆளரிநாதன்

செங்கீரைப் பாசுரங்களைச் சொன்னால், நமக்கு என்ன கிடைக்கும்?
***
*'அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்*ஆமையும் ஆனவனே! ஆயர்கள் நாயகனே!*
என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*
ஏழுலகும் உடையாய்! ஆடுக ஆடுக' என்று*
அன்ன நடை மடவாள் அசோதை உகந்த பரிசு*
ஆன புகழ் புதுவைப் பட்டன் உரைத்த தமிழ்*
இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்* உலகில்
எண் திசையும் புகழ் மிக்கு இன்பம் அது எய்துவரே.
உய்ய உலகு - 1-6-11
'அன்னமாகவும், மீன் உருவாகவும், நரசிங்கமாகவும், வாமனனாகவும், ஆமையாகவும் அவதரித்தவனே! இடையர்களுக்குத் தலைவனே! என் துன்பத்தை நீக்கு! செங்கீரை ஆடுக! ஏழு உலகங்களையும் உடையவனே (வயிற்றில் வைத்துக் காத்தவனே)! மீண்டும் மீண்டும் ஆடுக!'
என்று, அன்ன நடை கொண்ட யசோதை விரும்பிச் சொன்னவாறு, புதுவைப் பட்டர் சொன்ன இனிய ராகத்தோடு கூடிய பத்துப் பாசுரங்களையும் கற்ற வல்லவர்கள், இந்த உலகில் எட்டுத் திசைகளிலும் புகழ் பெற்று, இன்பம் எய்துவர்'.
'அன்னமும்' என்றவர், 'மீனும்' என்று கூறாது, 'மீன் உருவும்' என்று கூறுவானேன்?
***
மத்ஸ்ய (மீன்) அவதாரக் கதை, இரண்டு விதமாகச் சொல்லப் படுகிறது.
(1)
சோமுகாசுரன் (சிலர் மதுகைடபர்கள் என்ற இருவர் என்றும் கூறுவர்) வேதங்களைத் திருடினான். கடலுள் மறைந்தான்.

திருமால் மீன் வடிவம் எடுத்தார்; கொன்றார்; மீட்டார்; அன்ன உருவுடன் பிரமனுக்கு உபதேசித்தார்!

இதனாலேயே 'அன்னமும், மீனுருவும்' என்று இரண்டையும் சேர்த்து ஆழ்வார் கூறுகிறாரோ?
(2)
ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களைத் திருடினான். இதைக் கண்ட திருமால், ஒரு சிறிய மீன் வடிவு கொண்டார்.

இதனாலேயே 'அன்னமும், மீனுருவும்' என்று இரண்டையும் சேர்த்து ஆழ்வார் கூறுகிறாரோ?
(2)
ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களைத் திருடினான். இதைக் கண்ட திருமால், ஒரு சிறிய மீன் வடிவு கொண்டார்.
சத்யவிரதன் என்ற முனிவர் (சிலர், ச்ராத்த தேவர் எனும் மநு என்பர்) நீர் அருந்தும்போது, அவர் கைகளில் இந்த மீன்! தன்னைக் காப்பாற்றுமாறு கேட்ட மீனைத் தன் கமண்டலத்தில் விட்டார்.
ஓரிரவில் கமண்டலம் முழுதும் வளர்ந்தது! வேறு ஒரு பாத்திரத்தில் மீனை விட, அதிலும் இடமில்லை! இப்படியே குளம், ஆறு, ஏரி, கடல், பெருங்கடல் என வளர்ந்தது மீன்! முனிவருக்கு மீன் யார் என்று தெரிந்தது.

அடுத்த மூன்று நாட்களில் ஏற்பட்ட பிரளயத்தின் போது, திருமால் உலகைக் காத்தார். மறைந்த வேதங்களையும் மீட்டார்.
ஒரே மீனாக இருந்தாலும், 'Container'-ன் அளவாக இருந்தவை பல - 'மீன் உரு'க்கள்! எனவே, 'மீனும்' என்னாது, 'மீனுருவும்' என்கின்றார்!
திருமால், குதிரையாக வருவதற்கு (ஹயக்ரீவ அவதாரம்) அற்புதமான காரணம் உள்ளது. ஆனால், ஏன் அன்னமாக வந்து உபதேசிக்க வேண்டும்? இதற்கு என்ன காரணம்? இது பற்றித் தெரிந்தால் கூறுங்கள். அடியேனும் தெரிந்து கொள்கிறேன்)
முதல் முறையாக 'ஆளரியும்' என்கின்றார். ஏன் அவர் நரசிங்கமாக வரவேண்டும்?
***
ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு காட்சி ...
இடம்: மந்தர மலை அடிவாரம்
காலம்: இரணியகசிபுவின் தவம் முடியும் காலம்

பிரமன் (கையில் கமண்டலத்துடன், தனக்குள்): எங்கே இரணியன்! தேவர்கள் இங்கு தான் எங்கேயோ என்று சொன்னார்களே!
அருகில், ஒரு சிறு மலை போன்ற புற்று! அதில், எறும்புகள், ஈசல்கள் சாரை சாரையாக!

(விஷயம் புரிந்த பிரமன், தன் கமண்டல நீரை எடுத்து, மலையில் தெளிக்கிறார். புற்று கரைகிறது. மீண்டும் நீர் தெளிக்க, எறும்புகள் கடித்து, எலும்பாக இருந்த இரணியன், பொன் நிறம் பெற்று, பூரண ஆரோக்கியத்துடன் எழுகின்றான்)
பிரமன்: இரணியா! யாரும் 100 தேவ வருடங்கள் உயிருடன் இருந்து தவம் செய்ததில்லை! உன் தவத்தால் நான் ஜயிக்கப் பட்டேன். உனக்கு என்ன வேண்டும்?
இரணியன்: வணக்கம்! கேட்டதைக் கொடுப்பதாக வாக்களித்தால் கேட்கிறேன்.
பிரமன்: சரி, வேண்டியதைக் கேள்!
இரணியன்: உம்மால் படைக்கப்பட்ட பிராணிகளிடம் இருந்து எனக்கு மரணம் ஏற்படக் கூடாது. உள்ளேயும், வெளியேயும், மரணம் கூடாது. பகலிலும், இரவிலும் கூடாது. நீர் (நேரடியாகப்) படைக்காத (தக்கன் மூலம் படைத்தது) பிராணிகளிடமிருந்தும், ஆயுதங்களாலும் மரணம் கூடாது.
பிரமன் (தனக்குள் ... ஆஹா! இப்பவே கண்ணைக் கட்டுதே!): இவ்வளவு தானே!
இரணியன்: இன்னும் இருக்கிறது! தரையிலும் ஆகாசத்திலும் மரணம் கூடாது. மனிதர்களாலும் மிருகங்களாலும் மரணம் கூடாது. உயிரில்லாதவை, உயிருள்ளவை, தேவர்கள், அசுரர்கள், நாகர்கள் யாராலும் மரணம் கூடாது.
பிரமன் (தனக்குள் ... ரொம்பக் கண்ணைக் கட்டுதே!): போதும், நிறுத்து!
இரணியன்: பிரபோ! இன்னும் ஒன்றே ஒன்று! சண்டையில் எதிரி இல்லாத தன்மையும், எல்லாப் பிராணிகளுக்கும் ஒரே தலைவனாயும் இருக்க வேண்டும். உமக்கு இருப்பது போல் திக்பாலகர்களுடைய மகிமையும், தவமும், யோகசக்தி உடைய சித்தர்களிடம் எப்பொழுதும் இருக்கும் அணிமாதி சித்திகளும் என்னிடம் இருக்க வேண்டும்'.
பிரமன்: பிடி வரம்! விடு ஆளை! எடு ஓட்டம்!
(அடுத்த வரம் கேட்பதற்குள் ’Escape'!)
இந்த வரங்களைப் பற்றி கம்பர் என்ன சொல்கிறார்?
***
கம்பர், 5 கவிகளால் (144-148), இரணியன் பெற்ற வரங்களைக் கூறுகிறார். இந்த வரங்கள் பாகவதத்தில் கூறியவை போல இருந்தாலும், 2 கவிகள் மட்டும், குறிப்பிட்டுக் கூறக் கூடியவை:
தேவர் ஆயினர் ஏவரும், சேணிடைத் திரியும்
யாவரேயும், மற்று எண்ணுதற்கு அரியராய இயன்ற
கோவை மால் அயன் மானிடன் யாவரும் கொல்ல,
ஆவி தீர்கிலன்; ஆற்றலும் தீர்கிலன்; அனையான். (145)
(மானிடன் = மான் + இடன்; தாருகா வனத்து முனிவர் ஏவிய மானை இடது கையில் கொண்டதால், சிவன், ’மானிடன்’ எனப்படுவார்)
மூன்றாவது வரியில், (திரு)மால், அயன், சிவன், மூவரும் அவனைக் கொல்ல இயலாது என்று வரம் வாங்கியதாகக் கூறுகின்றார்!
’திருமால் அவனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை இரணியன் பெற்றதாக, வேறு எந்த நரசிம்மர் அவதாரக் காவியத்திலும், புராணத்திலும் கூறப்படவில்லை.
இதற்கு விளக்கமாக, 'திருமால் நாராயணனாக வந்து இரணியனைக் கொல்ல முடியாது' என்று வரம் பெற்றதாக கம்பராமாயண விளக்கப் புத்தகங்கள் கூறுகின்றன. (இதே விளக்கம் சிவனுக்கும், பிரமனுக்கும் பொருந்துமே?)
வரங்கள் கொடுக்கும்போது, பிரமனும், மற்ற தேவர்களும், தங்கள் சக்திக்கேற்ற வரத்தையே கொடுக்க இயலும்! அடுத்தவர்கள் சார்பில், சக்திக்கு மீறிய வரத்தைக் கொடுக்க இயலாது என்று வேதங்கள் கூறுகின்றன. (உதாரணம் - மார்க்கண்டேயர் வரலாறு - திருவாய்மொழிப் பாசுரம் 4-10-8)!
எனவே கம்பர் கூறியது போல் பிரமன், 'திருமால் இரணியனைக் கொல்ல முடியாது’ என்ற வரத்தை அளித்திருக்க இயலாது என்று பெரியோர்கள் கூறுவர்.
இன்னொரு பாடல்:
பூதம் ஐந்தொடும் பொருந்திய புருவினால் புரளான்;
வேதம் நான்கினும் விளம்பிய பொருள்களால் விளியான்;
தாதை வந்து தான் தனிக் கொலை சூழினும் சாகான்;
ஈது அவன் நிலை; எவ்வுலங்கட்கும் இறைவன். (148)
இரண்டாவது வரியில், 'வேதம் விளம்பிய பொருள்களால்' மரணம் இல்லை என்ற வரம் பெற்றதாகக் கூறுகிறார்.
வேதம் கூறும் பொருட்கள் என்பது இங்கு, மந்திரங்கள், தந்திரங்கள். இவைகளையும் ஆயுதமாகக் கருதுவதால், இதையும் வரமாகப் பெற்றதாகக் கம்பர் கூறுவது அழகு!
தனது தந்தையே வந்து கொல்ல முயன்றாலும் சாக மாட்டான் ('தாதை ... சாகான்') என்ற வரம் வாங்கியதாகக் கூறுகின்றார். இந்த வரமும், வேறு எந்தப் புராணத்திலும் காணப்படவில்லை!
இரணியனின் தந்தை, காச்யப முனிவர். அவருக்கும் படைக்கும் சக்தி இருந்ததால், இதையும் கம்பர் குறிப்பிட்டதாகக் கூறுவர்.
(பிரமன் படைத்தவரே இரணியனின் தந்தையான காசியபர்; பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை என்பதால், இந்த வரம், அடியேனுக்கு 'Superfluous' என்றே தோன்றுகிறது!)
நேரமிருந்தால் கவிச் சக்கரவர்த்தியின் மீதிப் பாடல்களையும் படித்துப் பாருங்கள்!
'என் கேள்விக்கென்ன பதில்'?
***
இரணியனுக்குக் கிடைத்த வரங்கள் பல என்றாலும், அவற்றுள் மிக முக்கியமானவை இரண்டு:
(1) 'பிரமன் படைத்த எதனாலும் மரணம் இல்லை' என்பதால், திருமால் ஒருவனே இவனைக் கொல்ல முடிந்தது.
(2) பிரமன் ஏற்கனவே படைத்த பிராணி எதுவும் (எந்த உருவமும் - மனிதன் அல்லது மிருகம்) இரணியனைக் கொல்ல முடியாததால், திருமாலும், அதுவரை எவரும் படைத்திராத, பார்த்திராத உருவமாக வந்து அவனைக் கொல்ல வேண்டி இருந்தது!
நரசிம்ma உருவத்தை அதுவரை யாரும் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று, இரணிய வதத்தின் பின்னே வருகின்றது. இதைப் பற்றி யாருக்காவது தெரிந்தால் பதில் அளியுங்களேன்?
இனி, பாசுரத்தின் பலன்களைப் பார்க்கலாம்.
***
திருமொழியைக் கற்று அறிந்தவர்கள் ('வல்லார்') எட்டுத் திசைகளிலும் புகழ் பெறுவராம்! இன்பமும் கிடைக்குமாம்!
'வல்லார்' என்ற வார்த்தைக்குப் பொருளாக, 'கற்று ஸமர்த்தரானவர்' என்று வியாக்கியானம் கூறுவார்கள்! கற்றால் மட்டும் போதாது, அதன் படி நிற்க வேண்டுமாம் ('கற்க ...' என்ற திருக்குறள் ஞாபகம் வரணுமே?)!
'இன்பம் எய்துவரே' என்று கூறினால் போதாதா? ஏன் 'இன்பம் அது எய்துவர்' என்கின்றார்'?
கிடைக்கும் புகழுக்கு ஏற்ற இன்பத்தை, 'அது' என்கின்றார்.
சரி, கற்ற படி நிற்பதற்கு எவ்வளவு வருடங்கள் ஆகுமோ? நமக்கு எல்லாம் உடனே வேண்டுமே? என்ன செய்வது?
... நரசிம்மர் உடனே வழி சொல்வார்
நல்ல கருத்துக்கள். இரணியன் முதலில் சாகா வரம் கேட்டான். பிரம்மா பிறந்தவர் அனைவரும் மரணம் என்பது விதி ஆதலால் தர மறுக்க இது மாதிரி குழப்பமான வரம் கேட்டான். இது போல மகிஷா சூரனின் தங்கை மகிஷியும் கேட்டது தாங்கள் அறிந்ததே. நன்றி.
ReplyDeleteஅன்பரே
ReplyDelete//இது போல மகிஷா சூரனின் தங்கை மகிஷியும் கேட்டது தாங்கள் அறிந்ததே.//
இது அடியேனுக்கு இதுவரை தெரியாது. தங்களுக்கு நன்றி.
சிவபெருமானுக்கு மானிடன் என்ற பெயர் எப்படி பொருந்துகிறது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. பிறப்பில்லாதான் பல்பிறப்பு பிறக்கிறான் என்கிறது வேதம்; இவர் பிறப்பில்லாதவர் என்று இருந்தாலும் மானிடன் ஆனார் என்று இரட்டுற மொழிந்தார் போலும் கம்பர். :-)
ReplyDeleteஆணும் ஆணும் இணைந்து பிறந்த குழந்தை, அதுவும் மண்ணுலகில் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து தன்னை வதம் செய்ய வேண்டும் என்ற நிகழ முடியா குயூக்தியான வரம் வாங்கியதை அய்யப்பன் கதையில் படித்துருப்பீர்கள்.
ReplyDeleteஅண்ணே தங்களை நான் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். படித்து எழுதவும். நன்றி.
அருமையான விளக்கங்கள்.
ReplyDeleteமான் + இடன் = மானை வைத்திருப்பவனும், உமைக்கு ஒரு பாகத்தை அளித்தவனும் எனவும் பொருள் கொள்ளலாமோ?
இதே மாதிரி நரகாசுரன் தன் தாய் கையால் தான் தனக்கு மரணம் நேரிட வேண்டும் என சென்டிமென்டா செக் வைத்து வரம் வாங்கியதும் நினைவுக்கு வருகிறது.
நரகாசுரனை கொன்றது சத்ய பாமா தான், ஆனா எல்லா புகழும் கிருஷ்ணருக்கே! :)) (ஆணாதிக்கம்?)
அம்பி
ReplyDelete//மான் + இடன் = மானை வைத்திருப்பவனும், உமைக்கு ஒரு பாகத்தை அளித்தவனும் எனவும் பொருள் கொள்ளலாமோ?//
‘மான்’ என்ற சொல்லுக்கு, மானை வைத்திருப்பவன் என்ற பொருள் வருமா என்று தெரியவில்லை. தமிழ் அறிஞர்கள், வலையில் உள்ள இலக்கணப் புலிகள் யாராவது தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
ஆளரி என்ற ஒரு பதம் கொண்டதாலே அந்த பாசுரத்திற்கு ஒரு பதிவு. அருமை அருமை. வளர்க தங்கள் சேவை.
ReplyDeleteஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா
ஓம் நமோ நாராயணா