நரசிம்ம வாமனன்
பெரியாழ்வாரின் திருவரங்கக் காதல் தொடர்கின்றது ...
***
உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி*
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான் கோயில்*
உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட*
வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே.
மரவடியை 4-9-8
இரணியனின் இருதயத்தைத் தொட்டு, நகங்களின் முனையால் அவன் ஒளி பொருந்திய மார்பு அழுந்தும்படி அழுத்தி, அவன் தலையைப் பற்றி, கிரீடம் உடையும்படி, கண்கள் பிதுங்கி வழிய, வாயினால் அலறும்படி பிளந்தவனுடைய கோயிலானது,
திண்மை பொருந்திய தாமரை மலர்கள், உலகளந்த வாமனனுடைய சிவந்த திருவடிகள் போல் உயர்ந்து வளர, முற்றும் வளர்ந்த நெல் பயிர்கள் தண்டுகளைச் சாய வைத்து, நுனியைத் தாழ வைக்கும் குளிர்ந்த அரங்கமே!
(உரம் - மார்பு; தெழித்தான் - பிளந்தவன்; உரம் - வலிமை, திண்மை; வரம்புற்ற - வரம்பு + உற்ற = அதிக பட்சமாக வளர்ந்த; தாள் - தண்டு)
***
கையால் மண்ணை எடுப்பது போல் இரணியனை அள்ளு! நகத்தால் மார்பில் ஒரு குத்து! மல்லியைப் போல் நரம்பு ஒரு கொத்து! தலையில் ஒரு தட்டு! 'Paste' போல் கண்களை ஒரு பிதுக்கு! 'ஐயோ' என்ற கத்து!
ஆழ்வாரின் வர்ணை இப்படி! மற்ற வர்ணனைகள் எப்படியோ?
***
தன் பலத்தால், இரணியனைப் பிடிக்கிறான் எம்பெருமான். அரண்மனை வாசல் படியில், தன் மடியில் வைத்து, அவன் மார்பைப் பிளக்கிறான்.
'ஐயோ! ஐராவதத்தின் (இந்திரனின் யானை) பற்கள் மோதிய போது, என் மார்பில் பட்டு ஐராவவதத்தின் பற்கள் பொடிப் பொடியாயின. இப்படிப் பட்ட என் நெஞ்சை இந்த உருவம் சாதாரணமாகப் பிளக்கிறது! விதி நம்மை ஆட்டும் போது, புல்லும் நம்மை அவமதிக்கிறது!' (ந.பு.44.30)
(இது ரொம்ப ஓவர்! சாகும் போதும் பழமொழி தேவையா?!)
என்று இரணியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நரசிம்மம் மார்பைப் இரு கூறாகப் பிளக்கிறதாம் - ஐராவதம், துர்வாசர் கொடுத்த தாமரை மாலையைத் தன் காலில் போட்டு நசுக்கியது போல்!
நரசிம்மத்தின் நகத்தில் இருந்து, இரணியன் மார்பு, இரண்டு கூறுகளாகக் கீழே விழுகின்றது! இதைப் பார்த்த நரசிம்மத்தின் கண்களிலும், வாயிலும் சிரிப்பு!
மார்க்கண்டேய ரிஷி, ஸஹஸ்ராணிகருக்கு, நரசிம்ம புராணத்தில், இரணிய வதத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
***
இரணியன் அனுப்பிய அசுரர்களை வதைத்த பின்னர், இரணியனுடன் போர் புரிகிறான் நாரயணன். இந்தப் போரை அற்புதமாக 6 கவிகளால் வருணிக்கிறார் கம்பர் (இதனைப் பின்பு பார்க்கலாம்)! போரின் முடிவில், மேலும் 4 கவிகளால் இரணியனை எம்பெருமான் வதைத்தமையைப் பாடுகிறார்.
வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீளிருங் கனக முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி
கோளடும் திரிவது என்ன, குலமணிக் கொடும்பூண் மின்ன,
தாளினை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக்கை ஒன்றால். (280)
இரணியன் கால்களிரண்டையும், தன் ஒரு கையால் சிம்மம் பிடித்துச் சுழற்றியதாம்!
சுழற்றிய காலத்து, இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி,
கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன; கிடந்த இன்றும்,
அழல்தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தமான,
நிழல் தரும் காலை, மாலை நெடுமணிச் சுடரின் நீத்தம். (281)
சுழற்றிய போது, அவன் காதிலிருந்த குண்டலங்கள், கிழக்கு, மேற்குத் திசைகளுக்குச் சென்று விழுந்தனவாம்! அவையே, இன்றும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் நமக்கு நிழல் தருகின்ற மலைகளாம்!
போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது; என்று
தான் தனி ஒருவன் தன்னை, உரை செயும் தரத்தன் நானோ?
வான் தகு வள்ளல், வெள்ளை வள்ளுகிர் வயிர மார்பின்
ஊன்றலும்; உதிர வெள்ளம் பரந்துளது உலக மெங்கும். (282)
பரமபதம் தருகின்ற வள்ளல், வெண்மையான கூரிய நகங்களை மார்பில் ஊன்றிய உடனேயே ரத்தம் உலகெங்கும் பரவியதாம்!
ஆயவன் தன்னை, மாயன், அந்தியின் அவன் பொற் கோயில்
வாயிலின் மணிக்க வான் மேல், வயிரவாள் உகிரின் வாயின்
மீயெழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு
தீயெழப் பிளந்து நீக்கி, தேவர் தம் இடுக்கண் தீர்த்தான்!
அரண்மனை வாயில் படியில், அவன் மார்பை, தீப்பொறி உண்டாகப் பிளந்து, தேவர்கள் துன்பம் தீர்த்தான் நரசிம்ம மூர்த்தி!
பிரகலாதன் சொன்னதை நிரூபிக்க வந்தாலும், இரணியன் மரணம், தேவர்கள் இன்னல் தீர்ப்பதற்காகத் தான் என்று கம்பர் கருதுகின்றாரோ?
***
செவ்வை சூடுவார் பாகவதத்தில், வதத்தை விளக்க எழுதிய ஒரே கவிதையை (கழை சுளி களிறு அன்னானை ... அன்றே. 1692) நாம் முன்னமேயே (’அளைந்த கைகள்’ பதிப்பில்) பார்த்தோம்.
மூல பாரதத்திலும், இரணிய வதம் சுருக்கமாகவே உள்ளது (2 சுலோகங்கள் - 7.14.8.28-29). அதன் தமிழாக்கம் இதோ:
'நாராயணனுடைய ஒளியினால் கண்களை மூடிக் கொண்டு சண்டை செய்யும் அசுரனை, அட்டகாசமாகச் சத்தம் செய்து கொண்டு பிடித்தார். பாம்பு எலியைப் பிடிக்கும்போது எலி எவ்வாறு துன்பப் படுமோ, அவ்வாறு இரணியன் நரஸிம்மர் பிடியில் துன்பப் பட்டான்.
வஜ்ராயுதத்தாலும் காயப் படுத்த முடியாத தோலை உடைய அசுரனை, நரஸிம்மர், இரணியன் அரண்மனையில் வாசல் படியில், தன் தொடையில் போட்டுக் கொண்டு நகங்களால், பகலும் இல்லாத, இரவும் இல்லாத மாலை வேளையில், அதிக விடமுள்ள பாம்பைக் கருடன் கிழிப்பது போல், விளையாட்டாகக் கிழித்தார்.'
எம்பெருமான் குடலை உருவினாரா, இல்லை மார்பைப் பிளந்தாரா?
***
ஸ்ரீமத் பாகவதத்தில், நரசிம்மம், 'அசுரனைக் கிழித்தார்' என்றே இருக்கின்றது (7.14.8.29). 'உடல்' என்றால், மார்பா? குடலா? உடலா?
இந்தக் கேள்வியை முன்பு ஒரு அன்பரரும் ('கலவை' என்று நினைக்கிறேன்) கேட்டிருந்தார்.
சூடுவார் பாகவதத்தில், 'மார்பைக் கிழித்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டார்' என்றும், நரசிம்ம புராணத்தில், 'மார்பைக் கிழித்தார்' எனவும், கம்பராமாயணத்தில் 'மார்பில் நகங்களை ஊன்றினார்' எனவும் உள்ளது! விஷ்ணு புராணத்தில், நரசிம்ம அவதாரம் மற்றும் வதம் பற்றி அதிகம் பேசப் படவில்லை.
பொதுவாக, பெரியோர்கள் இரணிய வதத்தை அதிகம் பேசுவதில்லை (நரசிம்மாவதாரத்தை எழுதுவதனால் அடியேண் இதை விளக்கமாக எழுத வேண்டியதாயிற்று).
இரணிய வதம் செய்யும் உக்ர நரசிம்மர் (படங்கள், சிலைகள், கோயில் சிலைகள்) பார்ப்பதற்குப் பயங்கரமாக இருப்பார். இந்தக் காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சிலருக்கு மனக்கலக்கம் ஏற்படலாம் (இதை அனுபவித்துள்ளதாக, சிலர் அடியேனிடம் கூறியுள்ளனர்). இதனாலேயே, 'வீட்டில் உக்ர நரசிம்மரை வைக்கக் கூடாது' என்றும் பெரியோர் கூறுவர். மாறாக லக்ஷ்மி நரசிம்மரை வீட்டில் வைத்து வணங்குதல் நன்று! திருவும் சேர்ந்து இருந்தால் நலம் தானே?
மீண்டும் பாசுரத்திற்குத் தாவுவோமா?
***
திருவரங்கம், தீவரங்கம் = தீவும், அரங்கமும்!
காவிரி! அரங்கனுக்காகவே படுக்க இடம் கொடுத்து, உறங்கும் அவன் திருவடிகளைத் தன் அலைக் கைகளால் வருடிக் கொடுத்து, மீண்டும் ஓடும் காவிரி!
அதனுள் மூன்று தீவுகள்! ஆதி ரங்கம் (ஸ்ரீரங்கப் பட்டிணம்)!
மத்ய ரங்கம் (சிவ சமுத்திரம்),!
இதில் கடைக்குட்டியான அந்த்ய ரங்கம் தான் நம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!
இந்த மூன்று தீவுகளும், மிகவும் செழிப்பானவை! காவிரியினால் வளப்படுத்தப் பட்ட இந்த தீவுகளில் வளர்கின்ற யாவையும், எவரும் கொடுத்து வைத்த வைகள்/வர்கள்! அதீதமான வளர்ச்சி! அரங்கனின் பெயரைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தால் இருக்காதா என்ன?
இப்படிப் பட்ட குளிர்ச்சியான அரங்கத்தில் நன்கு முற்றிய, வளர்ந்த, செந்நெல் கதிர்கள் வளர்கின்றன! அருகே, அழகிய தாமரைகள்! திருவின் தயவால், ஏற்கனவே சிவந்து, அழகாக இருக்கும் தாமரைகள், அரங்க நாமம் எனும் உரமும் சேர்ந்து, மிகவும் உயர்ந்து இருக்கின்றன!
வழக்கமாகத் தங்களை விட தாழ்ந்து இருக்கும் தாமரைகளைப் பார்க்கின்ற நெற்கதிர்களுக்கு, மிகவும் ஆச்சரியம்! தாமரைகள், தங்களை விட உயரமாக வளர்ந்து, சிவந்து எம்பெருமான் திருவடி போல் தெரிகின்றன!
நெற்கதிர்களுக்கு, ஒரு வேளை அரங்கத்தில் வாழும் நரசிம்மன், மீண்டும் வாமன அவதாரம் எடுத்து விட்டாரோ என்ற வியப்பு! உடனே, வாமனனின் திருவடிகளை வணங்குவதற்காக, தங்கள் தண்டுகளை சற்று வளைத்து, தலைகளை சற்றே தாழ்த்துகின்றன!
(சில வகைத் தாமரைகளின் தண்டு, நீண்டு, நேராக இருக்கும்! விளைந்துள்ள முற்றிய கதிர்கள், நெல்லின் பளுவால், சற்று வளைந்து இருக்கும்! அந்த சமயத்தில், தாமரைகள் நெற்கதிர்களை விட உயரமாக இருக்கும், அல்லது அப்படித் தோன்றும்! தாமரையும், அருகே வளைந்து நெற்கதிர்கள் இருக்கும் இந்தக் காட்சியைத் தான் ஆழ்வார் இப்படி வருணிக்கின்றார்!)
இப்படி, நரசிம்மன் வாமன அவதாரம் எடுத்த திவ்ய தேசம், அரங்கமே என்கின்றார் பெரியாழ்வார்!
- அரங்க நரசிம்மர் மீண்டும் வருவார்!
// லக்ஷ்மி நரசிம்மரை வீட்டில் வைத்து வணங்குதல் நன்று! திருவும் சேர்ந்து இருந்தால் நலம் தானே? //
ReplyDeleteமிகவும் உண்மை, அப்படியே தினமும் மந்திர இராஜபத ஸ்தோத்திரம் படித்தால் மிக நல்லது. நல்ல பதிவு. மிக்க நன்றி.
அன்பர்களுக்கு
ReplyDeleteதிருமலையான் அழைத்ததனால் அங்கு சென்றுவிட்டேன். எனவே சென்ற வாரம் எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.
அன்பரே
ReplyDelete//மிகவும் உண்மை, அப்படியே தினமும் மந்திர இராஜபத ஸ்தோத்திரம் படித்தால் மிக நல்லது. நல்ல பதிவு. மிக்க நன்றி.//
நன்றி.
மற்ற அன்பர்களுக்கு: மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தின் தமிழாக்கத்தை அடியேனுடைய வலைத்தளத்தில் (www.maayaa.net)பார்க்கலாம்.
வழக்கம் போல நரசிம்மரை அனுபவித்தேன். எடுத்துக் கொண்ட பொருளில் இருந்து கொஞ்சமும் விலகாத மிக நேர்த்தியான விவரனை.
ReplyDelete//மந்திர இராஜபத ஸ்தோத்திரம் //
@பித்தன், ஏதேனும் வலைத் தளம் அல்லது தங்கள் பதிவில் பதிவிட்டு இருக்கீறீர்களா?
//மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தின் தமிழாக்கத்தை அடியேனுடைய வலைத்தளத்தில் //
லிங்குக்கு நன்றி. கண்டிப்பாக வாசிக்கிறேன், மூலமும் கிடைத்தால் மகிழ்வேன். :)
அம்பி
ReplyDelete//லிங்குக்கு நன்றி. கண்டிப்பாக வாசிக்கிறேன், மூலமும் கிடைத்தால் மகிழ்வேன். :)//
மூலமும், ஒவ்வொரு ஸ்லோகத்தின் தமிழாக்கமும் உள்ளன.
அற்புதம் !!
ReplyDeleteநரசிம்மர் இரண்ய வதம் புரியும் போது நேரில் நின்று பார்த்தவர்கள் பாடியது போல உள்ள பாசுரங்களும், அவற்றை நீங்கள் தந்திருக்கிற அழகும் .. அற்புதம் !!
வாமணர் பற்றிய ஒரு சந்தேகம் .. திருவிக்ரமனாக உருமாற்றம் பெற்று, விண்ணை அளந்தது, எந்தக் காலில் (இடதா / வலதா )?
காஞ்சி - உலகளந்தார் - இடது காலால் விண்ணை அளக்க, திருக்கோவிலூர் - திருவிக்ரமன் - வலது காலால் விண்ணை அளக்கிறார்.
ஏன் இந்த மாறுபாடு ?
கையால் மண்ணை எடுப்பது போல் இரணியனை அள்ளு! நகத்தால் மார்பில் ஒரு குத்து! மல்லியைப் போல் நரம்பு ஒரு கொத்து! தலையில் ஒரு தட்டு! 'Paste' போல் கண்களை ஒரு பிதுக்கு! 'ஐயோ' என்ற கத்து))
ReplyDeleteSimply superb!!
பெரிய ஆழ்வார் நரசிம்மர் பாசுரங்களோடு மார்க்கண்டேய ரிஷி , கம்பர்,செவ்வாய் சூடுவார்
என நரசிம்மர் பாசுரங்களையும் கூறி விளக்கம் கொடுப்பதை படிக்கும் போடு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும்
படிக்க படிக்க புரிந்து ஆர்வம் ஏற்படுகிறது .
Rajesh Narayanan
அன்பரே
ReplyDelete//வாமனர் பற்றிய ஒரு சந்தேகம் .. திருவிக்ரமனாக உருமாற்றம் பெற்று, விண்ணை அளந்தது, எந்தக் காலில் (இடதா / வலதா )?//
எம்பெருமான் ஓரடியால் பூவுலகமும், இரண்டாவது அடியால் மேலுலகமும் அளந்ததாக வரலாறு.
உங்கள் கேள்வி, முதல் அடி, வலது காலா அல்லது இடது காலா என்பதா?
இதற்கு விடை, இரண்டு கால்களும் தான். முதல் அடி, வலது கால்! பூவுலகம் அளந்தது!
ஏனெனில், நம் கலாச்சாரத்தில், ‘அடி எடுத்து வைத்தல்’ என்றாலே, முதலில் வலது காலை எடுத்து வைப்பது தான். அப்புறம் இடது காலை எடுத்து வைத்துத் தான் ஆக வேண்டும்!
மாவலி, சாஸ்திரப்படி, கையில் நீர் வார்த்து, திருவடிகளை அலம்பி, தானம் செய்ததால், ’Default'-ஆக, வலது காலைத் தான் முதலில் எடுத்து வைத்ததாகக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது அடி, இடது கால் - சுவர்க்க லோகம் அளந்தது!
மூன்றாவது அடி, மீண்டும் வலது திருவடியால், மாவலியின் சிரஸில் வைத்தது!
//காஞ்சி - உலகளந்தார் - இடது காலால் விண்ணை அளக்க, திருக்கோவிலூர் - திருவிக்ரமன் - வலது காலால் விண்ணை அளக்கிறார்.
ஏன் இந்த மாறுபாடு ?//
காஞ்சியில் பலிக்குக் காட்சி; சுவர்க்க லோகம் அளந்த திருக்கோலம்.
சீர்காழியில் உரோமச முனிவருக்குக் காட்சி; சுவர்க்க லோகம் அளந்த திருக்கோலம்.
திருக்கோவலூரில், மிருகண்டு முனிவருக்குக் காட்சி; இங்கு, பிரமன் எம்பெருமான் வலது திருவடியை அலம்புகின்றார். எனவே, வலது திருவடி தூக்கியவாறு காட்சி அளிக்கிறார் எம்பெருமான்.
மாறுபாடு எதுவும் இல்லை என்பது அடியேன் எண்ணம்.
Rajesh
ReplyDelete//பெரிய ஆழ்வார் நரசிம்மர் பாசுரங்களோடு மார்க்கண்டேய ரிஷி , கம்பர்,செவ்வாய் சூடுவார்
என நரசிம்மர் பாசுரங்களையும் கூறி விளக்கம் கொடுப்பதை படிக்கும் போடு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும்
படிக்க படிக்க புரிந்து ஆர்வம் ஏற்படுகிறது . //
அடியேன், நாலாயிரம், கம்பராமாயணம், பாகவதம், மற்ற புராணங்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் எழுத நினைப்பதால் வந்த குழப்பம் இது.
(குழப்புவர் எழுத நினைத்தால் குழம்பு தான் வரும் என்பது தெரிந்தது தானே :-(
If you have any ideas on better presentation of the material, I am eager to learn from you. Please feel free to provide your inputs.
Thanks in advance,
Dhaasan Rangan
ரங்கன் அண்ணா
ReplyDeleteதாமரை மலர்கள் நீட்ட நிமிர்ந்து இருக்க..
அதில் திருவடிகள் உள்ளனவா என்று நெற்கதிர்கள் தலை குனிந்து தேட...
தற்குறிப்பேற்ற உவமையில் இயற்கைக் காட்சி ரொம்ப அழகா வந்திருக்கு!
தங்களிடம் ஒரு கேள்வி:
இரணிய வதம் நடக்கும் போது, இந்தக் குடலைக் கிழித்து...போன்ற காட்சியெல்லாம் குழந்தைப் பிரகலாதன் பார்த்தானா? அவன் நிலைமை அப்போது என்ன என்று பாடல்களில் சொல்லப்பட்டிருக்கா?
//திருக்கோவலூரில், மிருகண்டு முனிவருக்குக் காட்சி; இங்கு, பிரமன் எம்பெருமான் வலது திருவடியை அலம்புகின்றார். எனவே, வலது திருவடி தூக்கியவாறு காட்சி அளிக்கிறார் எம்பெருமான்//
ReplyDeleteவலது திருவடியால் கீழ் உலகம்!
இடது திருவடியால் மேல் உலகம்!
- இது வரை சரியே!
இடது திருவடியைத் தூக்கி மேலே அளக்கும் போது தானே, சத்யலோகத்தில் தென்பட்ட பாதங்களை, பிரம்மன் அலம்புகிறார்? வலத் திருவடி தான் கீழே இருக்கே?
அப்படி இருக்க, பிரம்மன் எப்படி வலத் திருவடியை அலம்புவதாகச் சொல்கிறீர்கள்? திருக்கோவிலூரிலும் அப்படி ஒரு காட்சி இருக்கு?
இதை அன்பர்களுக்கு மேலும் விளக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்!
KRS
ReplyDelete//இரணிய வதம் நடக்கும் போது, இந்தக் குடலைக் கிழித்து...போன்ற காட்சியெல்லாம் குழந்தைப் பிரகலாதன் பார்த்தானா? அவன் நிலைமை அப்போது என்ன என்று பாடல்களில் சொல்லப்பட்டிருக்கா?//
இதைப் பற்றி, பின்னால் கதை வரும்போது எழுதலாம் என்றிருந்தேன்.
சுருக்கமான விடை:
பிரகலாதன் கை கூப்பிக் கொண்டு நின்றிருந்தான்.
தூணில் எம்பெருமான் தோன்றிய போது, பிரகலாதன், அவனைப் பார்த்த சந்தோஷத்தில், அந்த அரண்மனையில் குறுக்கும் நெடுக்கும் ஓடிச் சிரித்ததாக கம்பன் வர்ணனை.
If you have any ideas on better presentation of the material))
ReplyDeleteநீங்களே நல்லாதானே எழுதுறீங்க! நாலாயிரம், கம்பராமாயணம், பாகவதம், மற்ற புராணங்கள்
போன்றவையும் உங்கள் பதிவில் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.
I am eager to learn from you))
ஆஹா! கடைசி பெஞ்ச்ல உட்கார்ந்து கொண்டிருக்கும் அப்பாவி மாணவனை பார்த்து
சொல்லிகொடுக்கும் ஆசிரியர் இப்படி எல்லாம் கேட்கலாமா! கேக்க படாது
தெரியலையே!! தெரிஞ்சா சொல்லுவோம்ல!
Please feel free to provide your inputs.:))
அதனால்தான் படிக்கும் போது ஏற்பட்ட அனுபவத்தை free-ஆ பகிர்ந்து கொண்டோமே!
Thanks
Rajesh Narayanan
//பெரிய ஆழ்வார் நரசிம்மர் பாசுரங்களோடு மார்க்கண்டேய ரிஷி , கம்பர்,செவ்வாய் சூடுவார்
ReplyDeleteஎன நரசிம்மர் பாசுரங்களையும் கூறி விளக்கம் கொடுப்பதை படிக்கும் போடு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும்
படிக்க படிக்க புரிந்து ஆர்வம் ஏற்படுகிறது //
mey silirkum varnanai.....ahaaa! vaarthai illai. Pathivin thadathilirunthu inmialavum vilagaatha oru nadai....roomba pramatham.
Thambi
அன்பர்களே
ReplyDelete/*//பெரிய ஆழ்வார் நரசிம்மர் பாசுரங்களோடு மார்க்கண்டேய ரிஷி , கம்பர்,செவ்வாய் சூடுவார்
என நரசிம்மர் பாசுரங்களையும் கூறி விளக்கம் கொடுப்பதை படிக்கும் போடு ஆரம்பத்தில் குழப்பமாக இருந்தாலும்
படிக்க படிக்க புரிந்து ஆர்வம் ஏற்படுகிறது //
mey silirkum varnanai.....ahaaa! vaarthai illai. Pathivin thadathilirunthu inmialavum vilagaatha oru nadai....roomba pramatham.
*/
நன்றி.
கே.ஆர்.எஸ்
ReplyDelete//இடது திருவடியைத் தூக்கி மேலே அளக்கும் போது தானே, சத்யலோகத்தில் தென்பட்ட பாதங்களை, பிரம்மன் அலம்புகிறார்? வலத் திருவடி தான் கீழே இருக்கே?
அப்படி இருக்க, பிரம்மன் எப்படி வலத் திருவடியை அலம்புவதாகச் சொல்கிறீர்கள்? திருக்கோவிலூரிலும் அப்படி ஒரு காட்சி இருக்கு?//
திருக்கோவிலூரில் காணும் காட்சி, மிருகண்டு முனிவருக்குக் கொடுத்த காட்சி.
திருக்கோவிலூர் ஸ்தல புராணப்படி, மிருகண்டு முனிவருக்கு, பிரகலாதன், மகாபலி, சுக்ராசாரியர், 33 கோடி தேவர்கள், 41,000 மகரிஷிகள், யக்ஷர்கள், சித்தர்கள், கருடன், விஷ்வக்சேனர் முதலியோர் புடை சூழ, உலகளந்த கோலத்தைக் காட்டி அருளினான்.
தன் வலது காலைத் தூக்கி, காட்சி கொடுத்த போது, பிரம்மா மீண்டும் உலகளந்தான் திருவடிகளுக்குப் பாத பூஜை செய்தார். எனவே, இங்கு பிரம்மா பாத பூஜை செய்வது இரண்டாவது முறை.
இந்த ஸ்தல புராணம், பாத்ம புராணம் க்ஷேத்ர கண்டத்தில் கூறப்பட்டுள்ளது. ப்ரம்மாண்ட புராணத்திலும் கூறப் பட்டுள்ளது. (கோயில் ஸ்தல புராணப் புத்தகமும் சற்று விரிவாகவே உள்ளது - அடியேன் இதன் சுருக்கத்தையே இங்கே எழுதியுள்ளேன்)
'நாராயணனுடைய ஒளியினால் கண்களை மூடிக் கொண்டு சண்டை செய்யும் அசுரனை, நரஸிம்மர் அட்டகாசமாகச் சத்தம் செய்து கொண்டு பிடித்தார்:)
ReplyDeleteவஜ்ராயுதத்தாலும் காயப் படுத்த முடியாத தோலை உடைய அசுரனை, நரஸிம்மர் பாம்பைக் கருடன் கிழிப்பது போல், விளையாட்டாகக் கிழித்தார்:))
இதெல்லாம் படிக்கும் போது நாமும் பிரகலாதன் வீட்டில் அமர்ந்து
இரண்ய வதம் பார்ப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது
அருமையான தமிழ் விளக்கம்
நன்றி
Rajesh Narayanan
mey silirkum varnanai.....ahaaa! vaarthai illai. Pathivin thadathilirunthu inmialavum vilagaatha oru nadai....roomba pramatham. ::))))
ReplyDeleteஏலே யாருல இது comment-kke comment அடிக்கறது
காமெடி கீமடி எதனா பண்றீலா
//ஏலே யாருல இது comment-kke comment அடிக்கறது
ReplyDeleteகாமெடி கீமடி எதனா பண்றீலா//...illai sir, onga comment nalla irunthathunaala athayee naanum eduthu use pannineen...thappa nanachukka veendaam.
Thambi
O! Sareenga Thambi
ReplyDeleteமற்ற அன்பர்களுக்கு: மந்திர ராஜ பத ஸ்தோத்திரத்தின் தமிழாக்கத்தை அடியேனுடைய வலைத்தளத்தில் (www.maayaa.net)பார்க்கலாம்::))
ReplyDeletePaarttom Very useful website.
Thanks