Friday, January 22, 2010

தசாவதார நரசிம்மர்



முந்தைய பாசுரத்தில், நரசிம்மனே வாமனனாய் வந்து காட்சி தரும் கோயில் அரங்கம் என்றார்.

ஆனால் அடுத்த பாசுரத்தில்?
***

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*

சேவலொடு பெடை அன்னம்* செங்கமல மலர் ஏறி ஊசலாடி*

பூவணைமேல் துதைந்து எழு* செம்பொடி ஆடி விளையாடும் புனலரங்கமே.
மரவடியை 4-9-9

அருள் உடைய மீனாக, ஆமையாக, வராகமாக, நரசிம்மமாக, வாமனனாக, மூன்று உருவில் ராமனாக, கண்ணனாக, கல்கியாக வந்து, தீயோரை அழிப்பவனுடைய
கோயிலானது,

ஆண் அன்னத்துடன், பெண் அன்னம், தாமரை மலர் மீது ஏறி, ஊஞ்சல் ஆடி, மலர்ப் படுக்கையில் ஒன்றோடு ஒன்று கலந்து இருந்து, மலரிலிருந்து எழுந்த மகரந்தப் பொடிகளைப் பூசிக்கொண்டு விளையாடுவதற்கு இடமான, நீர் வளம் மிக்க அரங்கமே!

(தேவுடைய = தே + உடைய = அருள் உடைய; சேவல் - ஆண் அன்னம்; பெண்; பெடை -ஊசல் - ஊஞ்சல்; பூவணை = பூ + அணை - மலர்ப் படுக்கை; துதைந்து - ஒன்றோடொன்று கலந்து; செம்பொடி - செந்தூரப் பொடி; புனல் - நதி, நீர்)

***

திருமால், ராமன், கூர்மம், இருக்குமிடம் அரங்கம், நரசிம்ம வாமனன் இருக்குமிடம் அரங்கம், என்று எழுதிக் கொண்டிருந்த பெரியாழ்வாருக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது!

பத்து அவதாரங்களுக்கும், எல்லா Combination-களையும் போட ஆரம்பித்தால் குறைந்தது 10C2 பாசுரங்களாவது எழுத வேண்டுமே?

யோசித்த ஆழ்வார், தசாவதாரப் பெருமான்கள் எல்லோரும் இருக்குமிடம் அரங்கம் தான் என்று, இரண்டே வரியில் அழகாகப் பாடி முடித்து விட்டார்! நாமும் ஒரு தசாவதாரப் பாசுரம் கிடைக்கப் பெற்றோம்!


(மங்கையாரும் ஒரு தசாவதாரம் பாசுரம் எழுதியுள்ளார் - மீனோடாமை - பெ.தி.8-8-10)

நமக்கு அருள் செய்வதற்காகவே, மீனாய் அவதாரம் எடுத்து, வேதங்களை அருளிச் செய்கிறான்! எனவே, அருள் உடைய மீன் இது! 'தேவுடைய மீன்'!

மீன் மட்டும் தான் தேவுடையதோ?

தேவுடைய = தேவு + உடைய. 'தேவு' என்பது, 'தேஜஸ்' என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. ஒளி உடைய மீன்!

தேவுடைய - அவனே ஒளியுடையவனாய்ப் பிறக்கிறான்! அவன் ஒளி பெறுபவனாகவே இருக்கிறான்! அவன் பிறந்தே நமக்கு ஒளி கொடுக்கிறான்!

இவன் தானே 'ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்' (திருவாய்மொழி 2-5-5)!

மீன் மட்டும் தான் ஒளி உடையதா? எல்லா அவதாரங்களும் தானே! எனவே, தேவுடைய மீன், தேவுடைய ஆமை என்று, எல்லா அவதாரங்களுக்கும் இந்த வார்த்தையைச் சேர்த்தும் பொருள் கொள்ளாலாம்!

தேவுடைய நரசிம்மன்! இவன் ஒளி, பற்களாலும், நகங்களாலும்! இவனை நாம் இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்!

மூவுருவில் - மூன்று உருவில் (ஏதுப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை) ராமன்! பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்!'கல்கியாய் முடிப்பான்' அரங்கன்! அருள் கொடுக்கும் அரங்கன் அழிக்கலாமோ?

அவன் அழிப்பது நம்மையல்ல! கலியுலகின் முடிவில், பெருகும் அதர்மத்தை முடிப்பவன்! யஸஸ் எனும் பிராம்மணரின் மகனாய், கையில் சங்கு சக்கரத்துடனும், குதிரை வாகனமாய், நாந்தகம் (கத்தி) ஏந்தி வருவான் அவன்!

அந்த நேரத்தில் நாம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை!

இப்பொழுதே அரங்கனைச் சேவித்து விடுங்கள்! அரங்கனைச் சேவித்தால், கலியைச் சேவித்தது போல் ஆயிற்று என்கின்றார் ஆழ்வார்!

ஒரு கதை கேளுங்கள்!

***

இடம்:
ஸ்ரீ வில்லிபுத்தூர்
நேரம்: காதல் நேரம்
மாதம்: தை மாதம்

(ஒரு பெண், தனியாகப் புலம்பிக் கொண்டு இருக்கிறாள்)

பெண்: பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் மன்மதா! உன்னை வணங்குகிறேன். எனக்கு உதவி செய்!

மன்மதன் (நேரிலே தோன்றி): என்ன? தை மாதமாயிற்றே! பொங்கல் கரும்பு வேண்டுமா? என்னிடம் ஒரு கரும்பு வில் தானே உள்ளது!

பெண்: விளையாடாதே! என்னை வேங்கடவனுடன் சேர்த்து வை!

மன்மதன்: யார்! அந்த ஏழு மலையானிடமா?

பெண்: பின்னே! மனித வேங்கடவனா? மனிதக் கல்யாணம் என்ற பேச்சு எழுந்தால் நான் உயிர் தரிக்க மாட்டேன்!

மன்மதன்: ஐயோ! ஆளை விடு! ஏற்கனவே ஒரு திவ்ய தம்பதிகளைச் சேர்த்து வைக்கப் போய், நான் முழுவதும் எரிந்து விட்டேன்!
(மறைந்து விடுகிறான்)

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தோழி, வேகமாக ஓடிச் சென்று, கோயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் வடபத்ர சாயியிடம் கோள் சொல்ல, அவர் புலம்புகிறார் '... நான் அல்லவா தினமும் அவள் சூடிய மாலையை அணிந்து கொள்கிறேன். இவள் வேங்கடவனைக் கேட்கிறாளே!')

***
இடம்: வீட்டுத் தோட்டம்
நேரம்: காலை நேரம்
காலம்: மார்கழி மாதத்திற்கு முன்

(இந்தப் பெண்ணின் காதல் முற்றுகிறது. எம்பெருமான் அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கனவு காண்கின்றாள். அதே கனவு, பெண்ணின் தந்தைக்கும் வருகின்றது. விடிந்தவுடன், பெண்ணும், தந்தையும் பேசிக் கொள்கின்றனர்)

தந்தை: பெண்ணே! நீ யாரை மணமுடிக்க விரும்புகிறாய்?

பெண்: மணிவண்ணனையே மணாளனாக மணமுடியுங்கள்!
தந்தை (அதிர்ச்சி அடைந்தாலும்): சரி! அந்த மணாளன் எந்த ஊரான்? எந்த அவதாரம்?

பெண்: தந்தையே! மணிவண்ணன் அவதாரங்களையும், ஊர்களையும்ன் விளக்குங்கள்!

(தந்தை விளக்க ஆரம்பிக்கிறார்)

தந்தை: வாமனனைப் பிடிக்குமா?
பெண்: வேண்டாம்! அவன் என்னை விட உயரத்தில் சிறியவன்!

தந்தை: சரி, பலராமனைப் பிடிக்குமா?

பெண்: வேண்டாம்! அவன் ஞானி! நமக்கும் அந்த அறிவுக்கும் ஒத்து வராது! மேலும், அவன் எப்பொழுதும் கலப்பையுடனேயே வயல்களிலேயே திரிவான். அவன் பின்னால் காலில் செருப்பும் இல்லாமல் என்னால் ஓட முடியாது!

தந்தை: ராமனைப் பிடிக்குமா?

பெண்: அவர் ஏக பத்தினி விரதர்! என்னைக் கல்யாணம் செய்ய மாட்டார்!

தந்தை (அலுப்புடன்): கண்ணன்?

பெண்: அவனை எனக்குப் பிடிக்கும்! இருந்தாலும் அவனுக்கு ஏற்கனவே என்னைப் போலவே 14,000 மனைவியர்!

தந்தை: வேங்கடவன்?


பெண்: வேண்டாம்! அவனைப் பார்க்கவேண்டும் என்றால் கூட, கையில் Badge கட்டிக் கொண்டு, 3 மாதம் முன்னாலேயே Booking பண்ணி, வைகுந்த வாசலில் நுழைந்து, வரும் VIP-களுக்கும், அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் வழி விட்டு, 20 மணி நேரம் Queue-வில் நின்று, கடைசியில், ஜய, விஜயர்களுக்கு அருகே வந்து கை கூப்புவதற்குள், 3-4 பேர், புரியாத பாஷையில், பிடித்துத் தள்ளிவிடுவார்கள்!


தந்தை (எரிச்சலுடன்): பின்னே என்ன தான் செய்யச் சொல்லுகிறாய்?

பெண்: அப்பா! ஒவ்வொரு திவ்ய தேசப் பெருமாளையும் பற்றிச் சொல்லுங்கள்!

(தந்தை, மிகவும் பொருமையாக விளக்கத் தொடங்குகின்றார்)

தந்தை: திருக்கோட்டியூர் ஸெளம்ய நாராயணன்?

பெண்: அவர் அழகு தான்! இருந்தாலும், அவர் வீட்டில் எப்போதும் தேவர்கள் ஒளிந்து கொண்டு இருப்பர்! Privacy கிடைக்காது! வேறு வரன் உள்ளதா?

தந்தை: பத்ரி நாராயணன்?

பெண்: அவர் 1,000 வருடங்களுக்கு ஒரு முறை தவம் செய்யப் போய்விடுவார்! வேண்டாம்!

தந்தை: கடிநகர் (தேவப் ப்ராயாக்) புருஷோத்தமன்?

பெண்: அப்பா! தென் திருப்பதி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்! என்னால் அடிக்கடி கோபித்துக் கொண்டு வட நாட்டில் இருந்து இங்கே வர முடியாது! மேலும், மாப்பிள்ளை பெயர் வடமொழிப் பெயராக இருப்பதால், கல்யாண செலவிற்கு Discount கிடைக்காது!

தந்தை: பிரகலாத வரதன்?

பெண்: அப்பா! பிரகலாதன் மாதிரி யாராவது கூப்பிட்டால், என்னை விட்டு விட்டு, உடனே தூணிற்குள் ஒளிந்து கொள்ளப் போய்விடுவார் இவர்! தாயாரே இவரைப் பார்க்க பயப்படும்போது, நான் மட்டும் பயப்பட மாட்டேனா?

(பல திவ்ய தேசங்களையும், அவதாரங்களையும், கழித்து விடுகின்ற பெண்ணைக் கண்டு, கோபமும், ஆத்திரமும், எரிச்சலும், வருத்தமும் வருகின்றது தந்தைக்கு ... புலம்புகிறார் ... 'உனக்குத் தாய் இல்லையாதலால், பெண் மனது அறியாமல் வளர்த்து விட்டேன்! என் தவறு அது! இதற்குத் தகுந்த தண்டனை எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது’)

தந்தை: இன்னும் ஒரே ஒருவன் தான் இருக்கின்றான்! அவனையும் பிடிக்கவில்லை என்றால், அவன் தான் உன்னையும் என்னையும் கடைத்தேற்ற வேண்டும்!

பெண்: யார் அப்பா அந்த ஒருவன்?

தந்தை: அழகிய மணவாளன்!


பெண்: பெயரே அழகாக இருக்கின்றது! அவன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா!

தந்தை (பாடுகிறார்):

ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*

...

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும், மனிதர்களும், தெய்வங்களும் அரங்கத்தில் இருக்கும் அவனே!

பெண்: அடேயப்பா! இவ்வளவு பெருமைகளா? மேலும் சொல்லுங்கள் அப்பா!

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*

...


எல்லா அவதாரங்களும் இருக்கும் கோயில் அரங்கமே!

பெண் (முகம் சிவந்து): இன்னும் ஏதாவது?


தந்தை (மகள் முகம் நோக்கியதும் தன் முகத்தில் சிரிப்புடன்): இந்தத் திருப்பதியைத் தொழுதால், தென் நாட்டுத் திருப்பதியும், வட நாட்டுத் திருப்பதியும் தொழுதது போல் ஆகும்!

(வெட்கத்தில், பேச இயலாத பெண்ணைக் கண்டு, தந்தையின் முகத்தில் சிரிப்பு! அதையும் மீறி, இந்தத் திருமணம் எப்படி நடக்கும் என்ற கவலை!)

இப்படி, ஆண்டாளுக்காகப் பெரியாழ்வார், அரங்கன் பெருமைகளைச் சொல்லி, தேர்ந்தெடுத்த மணவாளன் வாழுமூர்! தசாவதாரமும் இருக்கும் ஊர்! அரங்கம்!

Over To பாசுரம்!
***

ண் அன்னம், தன் பெண் அன்னத்துடன் விளையாட இடம் தேடுகின்றது! காவிரியின் கரையில், தாமரை மலர்களைப் பார்த்தவுடன், இரண்டும் மலர்களின் மீது ஏறி விளையாடுன்றன! மெல்லிய காற்றினால் அசையும் தாமாரை மலர்த் தண்டுகளுடன், அன்னங்களும் ஊஞ்சலாடுகின்றன!

இரவு வந்து விடுகின்றது! தாமரை மலரிலேயே அன்னங்கள் தூங்கிவிடுன்றன! மலர்ப் படுக்கையாயிற்றே! இரவில் புரண்டு படுக்கும்பொழுது, மலர்களில் உள்ள மகரந்தச் செம்பொடி, அன்னங்களின் உடல் மீது சேர்ந்து, அன்னங்கள் சிவப்பு நிறமாய்க் காட்சியளிக்கின்றன!

இப்படி, சிவந்த அன்னங்கள் விளையாடும் இடம், குளிர்ந்த அரங்கமே!

இங்கு, தசாவதாரங்களுடன், ஹம்ஸ (அன்னம்) அவதாரமும் பேசப்படுகின்றது!
'தேவுடைய' (இன்னமுமா?) எம்பெருமானாக இருப்பதற்குக் காரணம், அவனுடன் இருக்கும் திருவே என்கின்றார். எனவே தான் சேவலுடன், பெடையும் (பெண் அன்னம் - திரு) இருக்கின்றதாம்!

- தசாவதார நரசிம்மன் மீண்டும் வருவார்!

22 comments:

  1. ரங்கன் அண்ணா பிளாக்கர் பிரச்சனையினால் எனது பிளாக்கர் ஐடியில் இருந்து வெளியிட்டுள்ளேன்.

    ReplyDelete
  2. கருடவாகன பண்டிதர் என்பவர் எழுதிய நூல் தான் திவ்ய சூரி சரிதம்! பழைய நூல்! அச்சில் அவ்வளவாகக் கிடைப்பதில்லை!
    நம்மாழ்வார் ஆண்டாள் சுயம்வரத்தை நடத்துவார்; தோழி அனுக்ரகை கூவிக் கூவி அழைக்க, ஒவ்வொரு எம்பெருமானும் கோதை முன் தோன்றுவர்;

    அரங்கனை மட்டுமே அவள் கண்களால் தேர்ந்து எடுப்பதாகவும் வரும்! ஒவ்வொரு பெருமாள் வரும் போதும், அவர் தலம், அதன் தல வரலாறு சொல்வதோடு நூல் நின்று விடும்!
    KRS - 2008 பதிவில் படித்தது.

    ஒவ்வொரு பெருமாளும் பராக் பராக் என்று வர
    ஆண்டாள் ஒவ்வொரு தல பெருமாளையும் பார்த்து Select செய்வதை
    நீங்களும் அழகாக விவரித்து கூறியிருகிறீர்கள்! நன்றி

    Rajesh Narayanan

    ReplyDelete
  3. Rajesh

    //அரங்கனை மட்டுமே அவள் கண்களால் தேர்ந்து எடுப்பதாகவும் வரும்! ஒவ்வொரு பெருமாள் வரும் போதும், அவர் தலம், அதன் தல வரலாறு சொல்வதோடு நூல் நின்று விடும்!
    KRS - 2008 பதிவில் படித்தது.

    ஒவ்வொரு பெருமாளும் பராக் பராக் என்று வர
    ஆண்டாள் ஒவ்வொரு தல பெருமாளையும் பார்த்து Select செய்வதை
    நீங்களும் அழகாக விவரித்து கூறியிருகிறீர்கள்! நன்றி//

    ஒரு அடியார் குழாம் அருகில் அடியேன் நின்றிருந்த போது, அங்கு, மற்ற 107 திவ்ய தேசப் பெருமாள்களையும், எம்பெருமானின் 23 அவதாரங்களையும், ஆண்டாள் எவ்வாறு, எதற்காக நிராகரித்தாள் என்று விவரமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. அதிலிருந்து வெகு சிலவற்றை எழுதியுள்ளேன். அவ்வளவு தான்!

    இந்த நன்றி, அந்த பாகவதர்களையே சாரும்! அதைக் காப்பி அடித்த அடியேனுக்கு அல்ல!

    ReplyDelete
  4. கதை மிகவும் அருமை! மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  5. அன்பர்களுக்கு

    ஒரு சிறு திருத்தம்.

    ‘அரங்கனைச் சேவித்தால், கலியைச் சேவித்தது போல் ஆயிற்று’

    இதனை,

    ‘அரங்கனைச் சேவித்தால், கல்கியைச் சேவித்தது போல் ஆயிற்று என்று படிக்கவும்.

    எழுதும்போது இந்தத் தவறு நேர்ந்து விட்டது. மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. மதுரை கள்ளழகரும் இந்த லிஸ்ட்டில் வருவதாய் படித்த நினைவு. :)

    ReplyDelete
  7. //எம்பெருமானின் 23 அவதாரங்களையும், ஆண்டாள் எவ்வாறு, எதற்காக நிராகரித்தாள்//

    10 அவதாரங்கள் தானே?
    24 அவதாரங்களா? என்னென்ன-ன்னு அடியோங்களுக்கு சொல்லுங்க ரங்கன் அண்ணா! :)

    //ambi said...
    மதுரை கள்ளழகரும் இந்த லிஸ்ட்டில் வருவதாய் படித்த நினைவு. :)//

    நாரதா...இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :)
    எப்பயோ படிச்ச பதிவெல்லாம் இன்னும் எதுக்கு ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்க? அதுவும் மருதை மேட்டரு! :)

    ReplyDelete
  8. //தேவுடைய = தேவு + உடைய. 'தேவு' என்பது, 'தேஜஸ்' என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு//

    ரங்கன் அண்ணா
    "தே" என்பது தனித்த தமிழ்ச் சொல்லும் கூட!
    தே = தலைமை, உயர்ந்த, அருள், இறைமை, தெய்வம் என்று பொருள் வரும்!

    தே+ஆரம்=தேவாரம்
    தே+பெருமாள்=தேப்பெருமாள்

    தேவுடைய மீன் என்பது உயர்ந்த மீன், தெய்வமான மீன்,ஆமை,கேழல்,ஆளரி என்று பொருள்படும்!

    ReplyDelete
  9. //மன்மதன்: ஐயோ! ஆளை விடு! ஏற்கனவே ஒரு திவ்ய தம்பதிகளைச் சேர்த்து வைக்கப் போய், நான் முழுவதும் எரிந்து விட்டேன்!//

    ஹா ஹா ஹா
    செம டயலாக்!

    //தந்தை: வேங்கடவன்?
    [Photo]
    பெண்: வேண்டாம்! அவனைப் பார்க்கவேண்டும் என்றால் கூட, கையில் Badge கட்டிக் கொண்டு, 3 மாதம் முன்னாலேயே Booking பண்ணி, வைகுந்த வாசலில் நுழைந்து, வரும் VIP-களுக்கும், அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் வழி விட்டு, 20 மணி நேரம் Queue-வில் நின்று, கடைசியில், ஜய, விஜயர்களுக்கு அருகே வந்து கை கூப்புவதற்குள், 3-4 பேர், புரியாத பாஷையில், பிடித்துத் தள்ளிவிடுவார்கள்!//

    ஹா ஹா ஹா
    அப்ப எதுக்கு மன்மதன் கிட்ட "வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றையே" -ன்னு முன்னாடி வேண்டினாளாம்?

    ரங்கன் அண்ணா,
    கேள்வி: அரங்கனுக்கு என்னை விதிக்கிற்றையே-ன்னு எங்கும் சொன்னா மாதிரி தெரியலையே!

    தனியனில் கூட, வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு-ன்னு தானே வருது?

    எப்படி வேங்கடவன்-ன்னு வேண்டிக்கிட்டு, அரங்கன்-ன்னு மாறிப் போச்சு? - இதற்கு உங்கள் தரப்பு விளக்கம் சொல்லுங்க!
    எங்க தரப்பு விளக்கம், ராகவ் மிரட்ட, எப்பவோ சொன்னதா ஞாபகம்! :)

    ReplyDelete
  10. //பெண்: அப்பா! தென் திருப்பதி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்! என்னால் அடிக்கடி கோபித்துக் கொண்டு வட நாட்டில் இருந்து இங்கே வர முடியாது!//

    ஹிஹி! என் தோழி கோதை கோவிச்சிக்கிட்டா, அவன் தான் பொறந்த வீட்டுக்கோ, புகுந்து வீட்டுக்கோ வந்து கண்ணைக் கசக்கணும்! :)

    //மேலும், மாப்பிள்ளை பெயர் வடமொழிப் பெயராக இருப்பதால், கல்யாண செலவிற்கு Discount கிடைக்காது//

    இது நல்ல ஐடியாவே இருக்கே! தேர்தல் சமயத்தில் கொஞ்சம் உரக்கச் சொல்லுங்க! :)

    //எல்லா அவதாரங்களும் இருக்கும் கோயில் அரங்கமே!//

    அதான் திருவரங்கத்தில் தசாவதார சன்னிதியா?

    ReplyDelete
  11. //தந்தை (மகள் முகம் நோக்கியதும் தன் முகத்தில் சிரிப்புடன்): இந்தத் திருப்பதியைத் தொழுதால், தென் நாட்டுத் திருப்பதியும், வட நாட்டுத் திருப்பதியும் தொழுதது போல் ஆகும்!//

    அது எப்படி?
    அது தென்னரங்கமா? வட அரங்கமா?
    அல்லது வடதென்னரங்கமா? :))

    ReplyDelete
  12. KRS

    //அது எப்படி?
    அது தென்னரங்கமா? வட அரங்கமா?
    அல்லது வடதென்னரங்கமா? :))//

    அரங்கம் - அவன் வடக்கில் இருந்தால் வட அரங்கம். தெற்கில் இருந்தால் தென்னரங்கம்.

    வடதெற்கில் இருந்தால் வடதென்னரங்கம் :-)

    ReplyDelete
  13. KRS

    //ரங்கன் அண்ணா
    "தே" என்பது தனித்த தமிழ்ச் சொல்லும் கூட!
    தே = தலைமை, உயர்ந்த, அருள், இறைமை, தெய்வம் என்று பொருள் வரும்!//

    100/100 சரி!

    இதைத் தான் அடியேனும் பொருளுரையில் எழுதியுள்ளேன்!

    //தேவுடைய = தே + உடைய = அருள் உடைய;//

    நமக்கு அருள் செய்வதற்காகவே, மீனாய் அவதாரம் எடுத்து, வேதங்களை அருளிச் செய்கிறான்! எனவே, அருள் உடைய மீன் இது! 'தேவுடைய மீன்'!//

    ReplyDelete
  14. அம்பி, கே.ஆர். எஸ்

    //மதுரை கள்ளழகரும் இந்த லிஸ்ட்டில் வருவதாய் படித்த நினைவு. :)

    நாரதா...இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா? :)
    எப்பயோ படிச்ச பதிவெல்லாம் இன்னும் எதுக்கு ஞாபகம் வச்சிக்கிட்டு இருக்க? அதுவும் மருதை மேட்டரு! :)//

    மருதையைப் பற்றி ரொம்ப எழுதாதீர்கள்! நீங்கள் எழுதினால், உடனே அதை இன்னொரு ’மருதைப்’ படம் எடுத்து விடுவார்கள்!

    ReplyDelete
  15. KRS

    //அப்ப எதுக்கு மன்மதன் கிட்ட "வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றையே" -ன்னு முன்னாடி வேண்டினாளாம்?//

    எல்லாப் பசங்களும், ஆரம்பத்தில் IswaryA Rai, Sushmitha Sen, Katrina Kaif போன்றோர் மனைவிகளாக வேண்டும் என்று கனவு காண்பதில்லையா? அப்புறம், திருமணம் என்று வரும்போது, அப்பா/அம்மா யாரைக் கட்டிக்கச் சொல்கிறார்களோ அவளைக் கட்டிப்பதில்லையா? அதுமாதிரி தான் இதுவும்!

    ஆண்டாள் விஷயத்தில், அழகிய மணவாளனும் வேங்கடவனுக்கு இணையான அழகு தான்! அந்த அதிர்ஷ்டம் எல்லோருக்கும் வராது!

    ReplyDelete
  16. 10 அவதாரங்கள் தானே?
    24 அவதாரங்களா? என்னென்ன-ன்னு அடியோங்களுக்கு சொல்லுங்க ரங்கன் அண்ணா! :)-krs

    Naantanungo reminder

    ReplyDelete
  17. அண்ணே

    //10 அவதாரங்கள் தானே?
    24 அவதாரங்களா? என்னென்ன-ன்னு அடியோங்களுக்கு சொல்லுங்க ரங்கன் அண்ணா! :)-krs

    Naantanungo reminder//

    எல்லா மன்வந்தரங்களிலும், விஷ்ணுவின் அம்ஸமாகப் பிறப்புக்கள் உண்டு.

    முதல் மன்வந்தரமாகிய ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், ஆகூட்தி தேவியின் கர்ப்பத்தில், யக்ஞன்.

    ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில், துஷிதா தேவியிடம் அஜிதர்.

    உத்தம மன்வந்தரத்தில், ஸத்யா தேவியிடம், ஸத்யன்.

    தாமஸ மன்வந்தரத்தில், ஹர்யா என்பவளுக்கு, ஹரி என்னும் புதல்வன்

    ரைவத மன்வந்தரத்தில், ஸம்பூதினியிடத்தில், மானஸன்.

    சாக்‌ஷுச மன்வந்தரத்தில், விகுண்டா என்பவளிடம், வைகுண்டண்.

    வைவஸ்வத மன்வந்தரத்தில் (Current) அதிதியின் வயிற்றில் வாமனன்/த்ரிவிக்கிரமன்

    ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் வியாசர்.

    ஒவ்வொரு க்ருத யுகத்திலும் கபிலர் (ஸ்வாயம்புவ மனுவில், தேவவூதியின் வயிற்றில் பிறந்த கபில மகரிஷி அவதாரம் பாகவதத்தில் [14] சிறப்பாகச் சொல்லப் படுகிறது)

    தஸாவதாரங்களைத் தவிர, ஹம்ஸாவதாரம் (அன்னம்)

    ஹயக்ரீவ அவதாரம்

    இவை அனைத்தும், விஷ்ணு புராணத்தில் (3-1, 3-2) விரிவாகச் சொல்லப் பட்டுள்ளன. உடன் மன்வந்தரம், யுகக் கணக்குகளும் உள்ளன.

    த்வாபர யுகத்தில், சதுர் மூர்த்திகளாக, வாஸுதேவ, ஸங்கர்ஷண, ப்ரத்யும்ன, அநிருத்தர்கள் விளங்கினர்.

    (திருவாய்மொழிப் பாசுரம் - ’தமர்கள் கூட்ட வல்வினையை நாசம் செய்யும் சதுர் மூர்த்தி’ - இனங்குறித்தல்)

    சிலர், இதை, சதிர்மூர்த்தி என்றும் சொல்வர் - சதிர்மூர்த்தி என்ற பொருளில், இந்த நால்வர் எனப் பொருள் கொள்ள முடியாது)

    வட இந்தியாவில், புத்தரும் நாராயணனின் அவதாரமாகக் கருதப் படுகிறார்.

    இதைத் தவிர, ‘நான் தான் கல்கி’ என்று சொல்லிக் கொள்பவர்களும் உள்ளனர் :-))

    ReplyDelete
  18. தம்பி ,

    இவ்வளவு விஷயங்கள் இருக்கா! ரொம்ப நல்லதுங்க

    ReplyDelete
  19. //KRS
    எல்லாப் பசங்களும், ஆரம்பத்தில் IswaryA Rai, Sushmitha Sen, Katrina Kaif போன்றோர் மனைவிகளாக வேண்டும் என்று கனவு காண்பதில்லையா? அப்புறம், திருமணம் என்று வரும்போது, அப்பா/அம்மா யாரைக் கட்டிக்கச் சொல்கிறார்களோ அவளைக் கட்டிப்பதில்லையா? அதுமாதிரி தான் இதுவும்!//

    :)
    நோ! நோ! ஒப்புத்துக்க மாட்டேன்! :)
    என்ன, என் தோழியை இப்படிச் சொல்லீட்டீங்க? அவள் காதலே வெற்றிக் காதல்! அவனைத் தொற்றிக் காதல்!

    இது சென்ற ஆண்டு திருப்பாவைப் பதிவுகளில் கேள்வியாக வைக்கப்பட்டது! அப்போ சொன்ன விளக்கம் இதோ:

    கோதை கண்ணனையே காதலித்தாள்!
    அந்தக் கண்ணனோ பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு பிறந்து விட்டான்! அவன் துவாபர யுகம், இவளோ கலியுகம்! எப்படி-ன்னு காதலனைத் தேடுவது?

    ஒவ்வொரு திவ்யதேச எம்பெருமான்களாகப் பாடுகிறாள்! அதில் பரிபூர்ணமாக கண்ணனின் சாயலைப் பெற்றவர் யாரோ, அவரே காதலன்!

    திருமாலிருஞ்சோலை பெருமாள் பஞ்சாயுதங்கள் வைத்துள்ளார்! அடிபட்டுப் போகிறது!
    பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் உள்ள பெருமாள்களும், முழுக் கண்ண ரூபமாக இல்லை!

    ஒரு வேளை வேங்கடவனோ? மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று காலைச் சுட்டிக் காட்டி நிற்கிறானே என்று பார்த்து, "அவனுக்கு என்னை விதிக்கிற்றியே" என்று ஆசையாகப் பாடுகிறாள், மார்கழி நோன்பு நோற்ற கையோடு!

    ஆனால் திருவேங்கடமுடையான் இராமனின் சொரூபம்!
    சடா முடியும், தோளிலே அம்புறாத் தூணி தழும்புகளும் இன்றும் காணலாம்!
    காலைக் காட்டி நிற்கும் கோலம் மட்டுமே கண்ணன் கோலம்!
    - இப்படி வேங்கட ராமனாகவும், வேங்கட கிருஷ்ணனாகவும் உள்ளான்!

    அதான் கோதைக்கு, அவனே, "தான் முழுமையான கண்ணன் அல்லன்!
    முழுமையான கண்ணன் - பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே என்னும்படிக்கு, அரங்கத்திலே பள்ளி கொள்ளும் பெரிய பெருமாள்", என்று வேங்கடவனே காட்டிக் கொடுக்கிறான்!

    விரையார் பொழில் வேங்கடவன்=நிமலன் நிர்மலன், நீள் மதில் "அரங்கத்து அம்மான்"!
    அரங்கனே அவளுக்கு அம்மான்! முறை மாமன்!

    பெரியபெருமாள் சங்கு சக்கரங்கள் கூட இன்றி, வெறும் கண்ணனாகவே இருக்கிறார்! இன்றும் அவர் இடுப்பில் யசோதை கட்டித் தேய்த்த தாம்புக் கயிற்றின் அடையாளம் உள்ளது! அவர் கருவறையில் வெண்ணெய் வாசம் வீசுகிறது! ஏலாப் பொய்கள் உரைப்பவர்! வெவ்வேறு ஊரில் உதிக்கும் பக்தர்கள்/ஆசார்யர்களைக் கூட, அந்த ஊருக்குக் கொடுக்காமால், தன் பக்கலிலே இழுத்துக் கொள்பவர்!

    கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் = அண்டர் கோன் அணி அரங்கன்,
    என் அமுதினைக் கண்ட கண்கள் என்ற பாசுரம் இதை மெய்ப்பிக்கும்!

    அதான் வேங்கடவற்கு விதிக்கிற்றையே ஆனாலும், அவனாலேயே...
    100% கண்ணனான பெரிய பெருமாளிடம் காதலால் சேர்கிறாள்! சேர்ப்பிக்கப் படுகிறாள்!

    மனத்தால் வரித்த மணவாளன், அழகிய மணவாளன், பெரிய பெருமாளின் ஆதி சேஷ பர்யங்கத்தில்,
    தன் பிஞ்சுக் கால்களை மெல்ல அழுத்தி மேலேறி,
    குத்து விளக்கெரிய, கோட்டுக் கால் கட்டில் மேல்,
    காதலனைச் சேர்ந்திட்டாள் கோதை!

    ReplyDelete
  20. KRS

    //அதான் வேங்கடவற்கு விதிக்கிற்றையே ஆனாலும், அவனாலேயே...
    100% கண்ணனான பெரிய பெருமாளிடம் காதலால் சேர்கிறாள்! சேர்ப்பிக்கப் படுகிறாள்!//

    உங்கள் விளக்கம் அருமை!

    ஆண்டாள் திருமண வைபவம், வட பத்ர சாயி தொடங்கி, கண்ணன், வேங்கடவன், அரங்கன் என்று முடிந்த காரணத்தை, நாம் யூகிக்கலாமே தவிர, அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இந்த யூகத்திற்குத் துணை, பாசுரங்கள், குரு பரம்பரை ப்ரபாவம், திவ்ய சூரி சரிதம் போன்ற புத்தகங்கள்.

    ஆண்டாளின் மன ஓட்டத்தை, நாச்சியார் திருமொழியில் இருந்து ஓரளவுக்கு யூகிக்கலாம்!

    இதனை சமயம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP