Sunday, January 31, 2010

"அறிவு கெட்ட" பீஷ்மரா? "மகா ஞானி" பீஷ்மரா??

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
தலைப்பைக் கண்டு என்னமோ ஏதோ-ன்னு பயந்துறாதீங்க! பீஷ்மர் கதாபாத்திரத்தை மிகவும் நேசிப்பவர்கள் ஓவரா டென்ஷனும் ஆவாதீங்க :)
.....இன்று பீஷ்ம ஏகாதசி! (26-Jan-2010)

பெரிய ஞான யோகியும்...சிறந்த கர்ம யோகியுமான...பீஷ்ம பிதாமகர்!
அவரோட நினைவு நாள் இன்று!

* பீஷ்மர் => "அறிவு கெட்ட" பீஷ்மரா?.... "பக்த பெரும்" பீஷ்மரா??
* நாம் எல்லாம் => "அறிவு கெட்ட" ஆத்திகர்களா? "அன்பு கொண்ட" நெஞ்சங்களா?? :)


பீஷ்மன் = தமிழில், வீடுமன்! ="பயங்கரமான சபதம் எடுத்தவன்"
என்ன சபதம்?-ன்னு தான் உங்களுக்கே தெரியுமே!

அப்பாவுக்கு ஒரு பெண்ணின் மேல் = கண்டதும் "காதல்"!
பெண்ணின் அப்பனுக்கோ...ராஜ்ஜியத்தின் மேல் = கண்டதும் "காதல்"!
தன் பெண்ணின் பிள்ளையே நாடாள வேண்டும்!
அந்தப் பிள்ளை இன்னும் பொறக்கக் கூட இல்ல! திருமணம் கூட நடக்கலை! அதற்கு முன்பே இப்படி ஒரு Family Planning! :)

அப்பாவைக் கலந்து பேசாமலேயே, இந்த நிபந்தனை பிள்ளை பீஷ்மனுக்கு ஓக்கே தான்!
ஏன்னா, அவனுக்கு அப்பா சந்தோஷம் மட்டுமே முக்கியம்!


ஆனால் அவனுக்குப் பின், அவன் வம்சத்தவர்கள் வந்து அரச உரிமை கொண்டாடினால்? - கணக்கு போட்டார் காதலியின் அப்பா!
அப்பப்பா! வீடுமன் விடு விடு என்று செய்தான் ஒரு சபதம்! சாதாரண சபதமா அது? பாஞ்சாலி சபதத்தை விடப் பெரும் சபதம்!

"நான் கல்யாணம் செய்து கொண்டால் தானே, எனக்கு வம்சத்தவர் உருவாவார்கள்? 
நான் கடைசி வரை பிரம்மச்சாரியாகவே இருக்கிறேன்! இது சத்தியம்! சத்தியம்!!"

ஒரு இளம் வாலிபன்...மீசையெல்லாம் ஆசை மணப்பவன்...பருவ வாலிபன் செய்யக் கூடிய சபதமா இது?
நாம செய்வோமா? ஃபிகருக்காக ஃபிரெண்டையே கழட்டி விட்டுற மாட்டோம்? :))

இளம் வயதிலேயே பீஷ்மனின் உயர்ந்த மனசு தெரிகிறது அல்லவா? எதையும் தாங்கும் இதயம் தெரிகிறது அல்லவா?
ஒரு "பிள்ளை" பீஷ்மன், "தியாகி" பீஷ்மன் ஆனான்! ஆக்கப்பட்டான்!

விஷயம் கேள்விப்பட்டு, இப்பேர்ப்பட்ட பிள்ளையை மெச்சிய அவன் தந்தை, அவனுக்கு ஒரு நல்ல வரத்தைக் கொடுக்கக் கூடாதோ?
"நீயாக விரும்பும் போது, மரணம் அடைவாய்" - என்ற ஒரு பெரிய சாபத்தை, வரமாகக் கொடுத்து விட்டார் அப்பா! :(

அது எப்படிச் சாபம் ஆகும்-ன்னு கேக்கறீங்களா?
* இறுதி என்னிக்கி-ன்னு தெரியாமலேயே மறைந்தால், அது மரணம்!
* இறுதி என்னிக்கி-ன்னு தாமே தெரிவு செய்து மறைந்தால், அது தற்கொலை அல்லவா? :)
இப்போ சொல்லுங்க...அந்த அப்பா கொடுத்தது வரமா? சாபமா??

தான் விரும்பும் போது தான் மரணம் என்றால்...எத்தனை பேர் "போக" ஆசைப்படுவோம்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :)
* ஆருயிர் நண்பனையே, ரெண்டு மாசம் கழிச்சிக் கூப்பிட்டுக்கலாம்...என்னும் சோம்பல் சக்ரவர்த்திகளாகிய நாம்...
* ஆருயிர் கவ்வும் எமனையா ரெண்டு மாசம் கழிச்சிக் கூப்பிடப் போறோம்? ஒத்திப் போட்டு ஒத்திப் போட்டே, ஓட்டி விட மாட்டோமா என்ன? :)

இறைவன், சில விஷயங்களை, Expiry Date ஒட்டாமல், நம்ம கிட்ட இருந்து "மறைத்து வைப்பது" - நம் நன்மைக்குத் தானோ???
ஆனால் பீஷ்மன் விஷயத்தில், இந்தக் கணக்கு தப்பியது! அன்று முதல்...தப்பு தப்பாய்த் தப்பியது!பீஷ்மன் = சபதம் = தியாகம்!
இந்த வட்டத்துக்குள்ளேயே அடங்கிப் போனான் ஒரு சிறு பிள்ளை!

பல நூல் படித்தவன்! = அறிவாளி!
பல வேல் பிடித்தவன்! = வெற்றி வீரன்!
"தன் மனசுக்கு எது நல்லது"-ன்னு படுதோ, அதன் படி மட்டுமே நடப்பவன்! - நல்ல குணம் தானே-ன்னு நினைக்கத் தோனுது இல்லையா? ஆமாம், நல்ல குணம் தான்! மேலே படிங்க!

யாருக்காகச் சபதம் செய்தானோ, அந்தத் தந்தை மறைந்து விட்டார்! கங்கைக் கரையில் சடங்குகள் செய்கிறான் பிள்ளை!
மந்திரங்கள் முழங்க அர்ப்பணிப்புகள் அளிக்கிறான்!
திடீரென்று மண்ணில் இருந்து தந்தையின் கரம் மட்டும் மேலே எழுகிறது.....அவன் அளிக்கும் அர்ப்பணிப்புகளைப் பெற!

பிள்ளையோ, அவன் மெத்தப் படித்த சாஸ்திர நூலில் சொல்லி இருப்பதால், தந்தையின் கைகளில் அளிக்காது, சடங்கிலே வைக்கப்பட்டிருக்கும் "குசம்" என்னும் புல்லில் அர்ப்பணத்தை விடுகிறான்!
ஆர்வம் துடிக்க எழுந்த தந்தையின் கரம், கைகளை உள்ளே இழுத்துக் கொள்கிறது!

இத்தகைய "நெறி மாறாத" பீஷ்மன்...வளர்ந்து வளர்ந்து...
"பீஷ்மர்" ஆனார்...
"பீஷ்மாச்சாரியர்" ஆனார்...
"பீஷ்ம பிதாமகர்" ஆனார்...

* ஒருவன் தன் செயல்களை மட்டும் தவறாது செய்து வந்தால் போதாதா? => கர்ம யோகி பீஷ்மர் உருவாகிறார்!
* ஒருவன் தன் ஞானத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் போதாதா? => ஞான யோகி பீஷ்மர் உருவாகிறார்!

பரசுராமனுக்கே அடங்காத யோகி...
சகுனிக்கு அடங்கிப் போகும் "யோகி" ஆனார்!!!
:)))

ஆனால்........
ஒரு "மாடு மேய்க்கும் இடை மகன்"..."ஆயர்களின் ஆண்மையற்ற தலைவன்", அத்தினாபுரத்துக்குத் தூது வந்து-போனதில் இருந்து...
பீஷ்மரின் மனத்தில் என்னவோ ஒரு யோசனை....அரித்துக் கொண்டே இருக்கு!!


தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே...வாங்க...போவோமா போர்க்கோலம்?

அதோ......................
* கையிலே உழவு கோலும்,
* பிடிச்ச சிறுவாய்க் கயிறும்,
* தூசரிதமான திருமுடிக் கற்றையும்,
* தேர்த் தட்டிலே நாற்றின திருவடிகளுமாய்...

அவன் மேல் பீஷ்ம பிதாமகரின்...மின்னல் வேக அம்புகள்...
பறந்து பறந்து, பருந்து போல் அவன் முகத்தைக் கொத்த...

அன்று கன்னியர் வருடிக் கண்பட்ட முகம்,
இன்று புண்ணியர் வருடிப் புண்பட்ட முகமாய்ப் போனதே!!!

சாரதி: "பீஷ்மரே! எதிராளியை விட்டுவிட்டு, ஆயுதமில்லாத தேரோட்டி மேல் பாய்கிறீரே! என்னவாயிற்று உமக்கு? இது தான் தர்மமா?"

பீஷ்மர்: "கிருஷ்ணா, முடிந்தால் நீயும் ஆயுதம் எடுத்து, உன்னைக் காத்துக் கொள்ளேன்! இது ராஜாங்க யுத்தம்! இதில் ராஜாங்கம் மட்டும் தான் தர்மம்!"

சாரதி: "ஹா ஹா ஹா! நல்ல தர்மம் தான்! மூன்று தலைமுறை வயசாகியுமா உங்கள் ராஜாங்க ஆசை அடங்கவில்லை?"

பீஷ்மர்: "கிருஷ்ணா! எனக்கு ராஜாங்க "ஆசை" இல்லை! ஆனால் ராஜாங்க "தர்மம்" உண்டு!
எதுவாகிலும், அதை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்! என் தர்மம்! - அது மட்டுமே தர்மம்!"

சாரதி: "கிழட்டுச் சிங்கமே! "உம்" தர்மமா? எதைச் சொல்கிறீர்கள், "உம்" தர்மம், "உம்" தர்மம் என்று?* வயதான தந்தைக்கு பிள்ளையே மறுமணம் செய்து வைத்தது தான் தர்மமா?
* பின்னால், அதே தந்தையின் கைகளுக்குத் தர்ப்பணம் விட மறுத்தது தான் தர்மமா?

* பெண்களை, மணப்பவர்கள் தான் கைப்பிடிக்க வேண்டும்! ஆனால், மூக்கை நழைத்து...ஏதோ தம்பிக்குப் பொம்மை வாங்கிக் கொடுப்பது போல், மனைவி வாங்கிக் கொடுத்தீரே, அதான் தர்மமா?

* ஒன்றும் அறியாப் பேதைப் பெண் அம்பை! அவள் காதலன் வெல்லும் முன்னரே, நீர் திடுதிப்பென்று நுழைந்து பற்றிக் கொண்டீர்...
அவளுடைய காதலை அறிந்து கொண்ட பின்னால்...மாற்றி வாங்கி வந்துவிட்ட கடைச் சரக்கைப் போல் கை கழுவி விட்டீர்! அவளைக் குறுக்கும் நெடுக்கும் ஓட விட்டீரே - அதான் தர்மமா?

* அந்தப் பேதை முருகப்பெருமானிடம் மாலை வாங்கி, உத்திரத்தில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டாளே! - அதான் தர்மமா?

* மாத விலக்கான பாஞ்சாலியின் சேலையை, மான விலக்காகப் பற்றி இழுத்த போது...
இன்று "என்" தர்மம் "என்" தர்மம் என்று பேசும் இதே வாய்....அன்று அபலை தர்மம் பேசாது இருந்ததே! - அதான் தர்மமா?

* அவள் கடைசி நம்பிக்கையாக, போயும் போயும் உம்மை கையெடுத்துக் கும்பிட்டாளே!
அப்போது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு, "என்னை எதற்குக் கேட்கிறாய்?...போய் உன் கணவனைக் கேள்!" என்று பேசியதே, ஒரு வாய்! இதற்கு என் தொடை மீது வந்து உட்கார் என்று சொன்னவன் எவ்வளவோ மேல்!!

* அவள், அவள் கணவனைத் தான் கேட்க வேண்டும் என்றால்,
உன் தம்பி, அவன் மனைவியைத் தானே கேட்க வேண்டும்?
நீர் எதற்கு மூக்கை நுழைத்து "மனைவி வாங்கி" கொடுத்தீர்? தர்மம், உம் வசதிக்கு வசதி மாறுபடுமா?"

செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரம் தான்
வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால்!
ஆங்கவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன்.
தீங்கு தடுக்கும் திறம் இலேன் - என்றந்த
மேலோன் தலை கவிழ்ந்தான்!!!பீஷ்மர்: "கண்ணா, என்னை வார்த்தையால் கொல்லாதே! ஆயுதத்தால் கொன்று விடு!
நான் செய்து கொடுத்த சத்தியம் அப்படி! அதை எப்படியும் காத்தே ஆக வேண்டும்! அதுவே "என்" கர்மம்!

சாரதி: "சத்தியமா? அப்படி பெருசா, என்ன சத்தியம் செய்து கொடுத்தீங்க பீஷ்மரே?"

பீஷ்மர்: "நான் எனக்கென்று வம்சத்தை வளர்த்துக் கொள்ளாது, இந்த அரியணைக்கே கடைசி வரை விசுவாசமாக இருப்பேன்!
இந்த வம்சத்தின் வளர்ச்சிக்காகவே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்! - இதுவே பீஷ்ம சபதம்!"

சாரதி: "ஹா ஹா ஹா! நல்ல சத்தியம் தான்!
சரி.....இப்போ இந்த வம்சத்தின் "வளர்ச்சிக்கு" வழி கோலுகிறீர்களா? இல்லை இந்த வம்சத்தின் "அழிவுக்கு" வழி கோலுகிறீர்களா??
வம்சமே அழிந்தாலும் பரவாயில்லை! ஆளில்லா அரியணைக்கு விசுவாசம் காட்டப் போகிறீர்கள்? = இதானே உம்ம சத்தியம்?"


பீஷ்மர்: "ஐயோ கண்ணா!"

சாரதி: "உம் தம்பிகள், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைக்குப் பிள்ளைகள், என்று பல தலைமுறைகள் செத்து விட்டாலும்...
நீர் மட்டும் இன்னும் அட்டை போல் ஒட்டிக் கொண்டு இருப்பது இதற்குத் தானா? ச்சீ...

பீஷ்மர்: "ஐயோ...."

சாரதி: "உம் சத்தியம் - வம்சத்தின் வாழ்வுக்காகச் செய்யப்பட்டதா? இல்லை தாழ்வுக்காகச் செய்யப்பட்டதா?
யோசித்துப் பார்க்க மாட்டீர்களா? ஒரு வம்சமே வாழாது போனாலும் பரவாயில்லை! உமக்கு "உம்" சத்தியம் மட்டுமே முக்கியம்? அப்படித் தானே?"

பீஷ்மர்: "கண்ணாஆஆஆஆ!
நான் கர்ம யோகத்தில் இருப்பவன்! ஏது வந்தாலும் "என்" கர்மங்களை மட்டும் விடாது செய்து கொண்டே செல்பவன்! இதுவே "என்" தர்மம்!"

சாரதி: "கர்மங்களைத் **தான்** செய்வதாக நினைக்காமல் செய்வது  கர்ம யோகமா? இல்லை மூச்சுக்கு மூச்சுக்கு "என்" கர்மம், "என்" கர்மம் என்று உங்களை நீங்களே பிடித்துத் தொங்குவது கர்ம யோகமா, பீஷ்மரே?"

பீஷ்மர்: "ஆஆஆஆ!"

சாரதி: "ஹே பார்த்திபா, இந்தக் கிழச் சிம்மத்தின் கர்மயோகம் இனி மேலாவது அடங்கட்டும்! எடு காண்டீபம்! தொடு பாண்டீபம்!!"


கண்ணன் கருமுகத்தில் சிவ-முகம்! முகமெல்லாம் குருதி கொப்பளிக்கத் தேரோட்டுகிறான் தேவப் பெருமாள்!
தாத்தாவாயிற்றே என்று தயங்கும் பார்த்தன்.....

சாரதி: "ஹே! அர்ச்சுனா! வீண் வேடிக்கையா காட்டுகிறாய்?...இதோ நானே இறங்கி முடிக்கிறேன் அந்த மூர்க்க முதல்வன் பீஷ்மனை!

* போரிலே ஆயுதம் ஏந்தேன் என்று கண்ணன் செய்த சத்தியம் பொய்யாகட்டும்!
* போரிலே தோழனைக் காத்தான் என்ற கண்ணன் மனம் மட்டுமே மெய்யாகட்டும்!


ஹே பீஷ்மாஆஆஆ....
சத்தியம் தவறிய கண்ணன்...இதோ உன் முன்னே!"

தேர்த் தட்டிலே, ஆசன பத்மத்திலே,
அழுத்தின திருவடிகள், எகிறிக் குதிக்க...
கலைந்த மயிரிலே புழுதிகள் அளைக்க...
கச்சையின் ஆடையோ காற்றிலே பறக்க...

அறிவுற்று, தீ விழித்து,
வேரி மயிர் பொங்க,
எப்பாடும் பேர்ந்து...உதறி....
மூரி....நிமிர்ந்து....முழங்கி....
புறப்பட்டான்...புறப்பட்டான்...புறப்பட்டான்...

"சத்தியம் தவறிய கண்ணன்" கைகளில், சத்திய சொரூபமான சக்கரம் சுழல்கின்றதே!

(எதற்கும் கலங்காத யோகி பீஷ்மர், இன்று கண்ணன் கோலத்தைக் கண்டு, மனத்தால் கேவுகிறார்...உடல் நடுங்குகிறது....)
எம்பெருமானே வருக! என் கண் வருக! எனது ஆருயிர் வருக!
சேத தண்ட வினோதா நமோ நம! தீர சம்ப்ரம வீரா நமோ நம!


தனக்குப் பொய்யனே! = தன் அடியார்க்கு மெய்யனே!!
சரணாகதம்! அடியேன் உனக்குச் சரணாகதம்!!

பீஷ்மர்: "கண்ணாஆஆஆஆஆ! இன்று தான் தெரிந்து கொண்டேன்! இன்று தான் புரிந்து கொண்டேன்!
"என்" தர்மம், "என்" தர்மம் என்று இது நாள் வரை....எனக்குள் மட்டுமே ஒழிந்த என்னை......

இன்று தோழனின் உயிர் காக்க, "உன்" சத்தியத்தையும் பொய்யாக்கத் துணிந்து, "என்" தர்மம் என்றால் என்ன என்று உணர்த்தி விட்டாய்!

அர்ச்சுனன்: "ஐயோ...கண்ணா வேண்டாம்! வேண்டாம்! உனக்கு எதற்கு இந்த அவப் பெயர்? இது நாள் வரை எங்களுக்காக நீ வாங்கிக் கட்டிக்கிட்ட சாபங்களே போதும்! அவரை விட்டு விடு! நான் பார்த்துக் கொள்கிறேன்! காரேறு கண்ணனே, தேரேறு! நீ தேரேறு!"


கண்ணன்: ஹே அர்ஜூனா! பொறு! உனக்கு ஒருவரை நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்!

"ஐயா, ஆயுசுக்கும் உங்கள் வீட்டுக் கிணற்றிலே நீர் இறைத்து, என் நன்றியைச் செலுத்துவேன் என்று சத்தியம் செய்தானாம் ஒருவன்!

ஒரு நாள் அந்த வீட்டுக் குழந்தை தவறிக் கிணற்றிலே விழுந்து விட்டது! அதைப் பார்த்து விட்டு.......

அப்போதும் விடாமல் தன் சத்தியம் தன் சத்தியம் என்றே நீர் இறைத்துக் கொண்டு இருந்தானாம் அந்தச் "சத்திய" புருஷன்!

அவன் ஒரு "கர்ம" யோகி! அவன் பெயர் பீஷ்மன்!
அவனுக்கு சத்தியம் தவறிய கண்ணனின் வணக்கங்கள்
!"

பீஷ்மர்: "ஐயோ...ஐயோ....கண்ணாஆஆஆஆஆ!"

கண்ணன்: "யாரங்கே? கண்ணனின் புனிதமான தேரிலே, ஒரு திருநங்கை ஏறப் போகிறாள்!
அவளுக்குத் தேரோட்டுவதில் இந்தக் கண்ணன் பெருமைப் படுகிறான்!
இதை விடாப்பிடிக் கர்ம-ஞான சாஸ்திர யோகியான பீஷ்மர் உணரட்டும்!
இவர் மட்டுமல்ல! இன்னும் பலப் பல விடாப்பிடி பீஷ்மர்கள் எல்லாம் உணரட்டும்!"


அவன் தூக்கிய சக்கரத்தால்......அவர் மனத்திலே "சரணம்" கனிந்தது!

ச்சே...அடியவன் ஒருவனுக்காக...பெருமான் தன் "தர்மத்தையே" விடத் துணிந்தானே!
நானோ, யாருக்கும் பயனில்லாமல், என் "தர்மத்தை" மட்டுமே இது நாள் வரை பிடிச்சி, தொங்கிக் கொண்டு இருந்தேனே!

குலத்தின் மானம் காக்கத் தானே சத்தியம் செய்தேன்?
ஆனால் அன்று அவள் சேலை பறி போன போது, குலத்தின் மானமே ஒட்டு மொத்தமாய்ப் போச்சே!
நான் எதைக் காத்தேன்? - "என்" சத்தியத்தையா? "குலத்தின்" மானத்தையா??


எது தர்மம்?
பக்கத்து வீட்டுக் குழந்தையின் சங்கிலி, என் வீட்டு வாசலில் விழுந்து விட்டது! கீழே விழுந்த பொருள் தானே? நைசாக எடுத்து வந்து விடு என்று என் அப்பா சொல்கிறார்!
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! பித்ரு வாக்ய பரிபாலனம்! அதுவா தர்மம்??

எது தர்மம்?
* மாதா பிதா குரு தெய்வம் என்பதே தர்மம்! => பிரகலாதன் அதர்மம் செய்தவனா?
* இறைவன் தலையில் நம் கால் தூசு படக் கூடாது! => கோபிகைகள் அதர்மக்காரிகளா?


தனக்குப் பொய்யன்! தன் அடியார்க்கு மெய்யன்!
அவன் எங்கே? நான் எங்கே?
நான் ஏன் இப்படி யோசிக்காமல் போனேன்?


எது தர்மம்?
* "என்" கர்ம யோகத்தில் மட்டுமே அடங்கிப் போய் விடுவதா?
* "என்" ஞான யோகத்தில் மட்டுமே அடங்கிப் போய் விடுவதா?
* என் தர்மத்துக்கு நான் இருப்பதா?? அவன் தர்மத்துக்கு நான் இருப்பதா??

- இப்படியெல்லாம் ஒரு கர்ம யோகி, ஞான யோகி யோசிக்கத் தொடங்கி விட்டார்!


அன்று வரை பீஷ்மர் என்பவர்
= போராளி, அரசியல் வித்தகர், பெண்களைச் சிறையெடுப்பவர், சபதக்காரர், நிர்வாகி, யோகி...என்று மட்டுமே உலகம் அறிந்து வைத்திருந்தது!

இன்றோ பீஷ்மர் என்பவர் = "தன்"-னை விடுத்து, "அவன்"-ஐப் பற்றிக் கொண்டார்!

* உலகமே துதித்து மகிழும் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பதற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டார்!
* ஆசார்யர்கள் துதித்து மகிழும் பீஷ்ம ஸ்துதி என்பதற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டார்!
* அவர் இறக்கும் தறுவாயில், அவர் மோட்சம் புகுவதைக் காண வேண்டுமே என்று கண்ணன் அரக்க பறக்க ஓடி வருகிறான்! பீஷ்மரை நாடி வருகிறான்!

பீஷ்மோ உவாச:
ஜகத் ப்ரபும் தேவ தேவம், அனந்தம் புருஷோத்தமம்!
ஸ்துவன் நாம சகஸ்ரேன...புருஷ சத தோதிதா
ஏஷமே சர்வ தர்மானாம்! தர்மாதிக தமோமத:
பவித்ரானாம் பவித்ரம்யோ, மங்களானாம் ச மங்களம்!

ஏஷமே சர்வ தர்மானாம்! = அவன் தர்மமே பரம தர்மம்!
என் தர்மம் என்று ஒன்றில்லை! அவன் தர்மத்துக்கே நான்!

"மகா ஞானி" பீஷ்மர், தன்னை ஒப்புக் கொண்டார்!
"அறிவு கெட்ட" நான், என்னை ஒப்புக் கொள்வேனா?
என்னைப் பின்னே தள்ளி, அவனை முன்னே தள்ளுவேனா?
அவன் "உள்ள உகப்புக்கு" இருப்பேனா?

* நான் = என் சுயநல ஆசைக்காக, முருகன் மேல்...குடம் குடமாய் பால் கொட்டும் ஆத்திகனா?
* நான் = அவன் சிலையின் அவல நிலை கண்டு, ஐயோ முருகாஆஆஆ வேணாம்...ரெண்டே கண்-துளி சொட்டும் காதலனா?


என் ஆசைக்கு அவனா? = அவன் ஆசைக்கு நானா??
பீஷ்மர் திருவடிகளே சரணம்!

18 comments:

 1. நாம் விரும்பும்படி வாழாமல் இறைவன் விரும்பும்படி வாழனும்! அதானே இந்த பதிவின் கருத்து,

  ReplyDelete
 2. ஆயர்களின் ஆண்மையற்ற தலைவன்", தூது வந்து போனதில் இருந்து...:::))

  ஆண் சிங்கம் கண்ணனையா இப்படி சொல்றீங்க !

  ReplyDelete
 3. திருவெல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உற்சவர் முகட்டில் புள்ளி புள்ளி தழும்புகள் இருக்கும். அதற்கு காரணம் பீஷ்மர் என்பது தெரிந்து விட்டது

  Thanks & Buy
  Rajesh Narayanan

  ReplyDelete
 4. //Kalavai said...
  நாம் விரும்பும்படி வாழாமல் இறைவன் விரும்பும்படி வாழனும்! அதானே இந்த பதிவின் கருத்து//


  நாம் விரும்பும்படி வாழாமல்-ன்னு சொல்லீறக் கூடாது!
  வாழ்க்கையில் நம்ம விருப்பமும் முக்கியம் அல்லவா?

  இறைவன் விரும்பும்படி
  நம்ம விருப்பங்களை
  அமைச்சிக்கிட்டு வாழணும் என்பதே மையக் கருத்து! :)

  மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!
  கண்ணன் தன் காமங்கள் ஏற்றேலோ ரெம்பாவாய்! :)

  ReplyDelete
 5. //Kalavai said...
  ஆயர்களின் ஆண்மையற்ற தலைவன்", தூது வந்து போனதில் இருந்து...:::))

  ஆண் சிங்கம் கண்ணனையா இப்படி சொல்றீங்க !//

  அது நம்ம துரியோதனப் பையல் செல்லமாச் சபையில் சத்தம் போட்டுச் சொல்லுறது! :)

  ReplyDelete
 6. //Kalavai said...
  திருவெல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உற்சவர் முகட்டில் புள்ளி புள்ளி தழும்புகள் இருக்கும். அதற்கு காரணம் பீஷ்மர் என்பது தெரிந்து விட்டது//

  ஆகா! அர்ச்சகர் சொல்லி ஆரத்தி காட்டி இருப்பாரே!
  அந்தப் பெருமைக்கு முழுக் காரணமும் பீஷ்மர்! அதுனாலயே எனக்குப் பீஷ்மரை ரொம்பப் பிடிக்கும்! :)

  மற்ற எம்பெருமான்களை விட,
  "முகத்தில் டிசைன் போட்ட" என் பெருமான் கொள்ளை அழகு! :))

  ReplyDelete
 7. அருமை அருமை. ஒரு நாவல் எழுதலாம்.

  ReplyDelete
 8. தல அட்டகாசமான பதிவு..சும்மா வார்த்தைகள் வந்து விளையாடி இருக்கு.

  நிறைய விஷயங்கள் தெரிந்தது. நன்றி தல ;)

  ReplyDelete
 9. //Jeeves said...
  அருமை அருமை. ஒரு நாவல் எழுதலாம்//

  எப்படி இருக்கீக ஜீவ்ஸ் அண்ணே? ரொம்ப நாளாச்சு!

  நாவல் எழுதலாமா? நீங்க வேற...
  பீஷ்மரைத் தப்பாக் காட்டக் கூடாது...இப்போ அவர் பக்தர் ஆயிட்டாரு-ன்னு, "ஆஸ்திகர்கள்" உங்களை அடிக்க வருவாக! :)

  பீஷ்மர், மனித மனத்தின் மாறுபாட்டு மேன்மைக்குச் சிறந்த உளவியல் Case Study!
  ஒரு கெட்டவன், நல்லவனாத் திருந்தலாம்!
  ஆனா ஒரு நல்லவர், நல்லவனாத் திருந்தறது ரொம்ப கஷ்டம்! :)

  அதைச் சாதிச்சிக் காட்டியவர் பீஷ்மர்!
  நீங்க சொல்லுறாப் போல, இன்றைய அரசியலில் பீஷ்மரை வச்சி, சூப்பர் நாவல் எழுதலாம்!

  ReplyDelete
 10. //கோபிநாத் said...
  தல அட்டகாசமான பதிவு..சும்மா வார்த்தைகள் வந்து விளையாடி இருக்கு//

  :)
  தாமே பெற வேலவர் தந்ததினால்...

  //நிறைய விஷயங்கள் தெரிந்தது. நன்றி தல ;)//

  நிறைய விஷயம் தெரிஞ்சிச்சா? அதுக்குத் தானே இப்படிச் சுருக்க, நெருக்க எழுதறது! :)
  Glad if ppl compare themseleves with Bhishma's position! :)

  ReplyDelete
 11. நல்ல தொகுப்பு.. ரசித்து படித்தேன். சிறுவர்மலரில் படித்த பீஷ்மர் இன்னும் நினைவில் இருக்கிறார்..

  ReplyDelete
 12. Super-o-super...

  Dharmatthin thalaivan - nallavanukku nallavan innum nallavara maariya presentation, great!!

  MM

  ReplyDelete
 13. அருமை. தற்சமயம் அரசியல்வாதிகளை பிதாமகர் என அழைக்கப்படும் பொழுது எனக்கு கூசுகிறது. இதை படித்தப்பின் பிறர் இவ்வார்த்தையை கேட்டால் கூச்சம் அடையலாம் :)

  ReplyDelete
 14. நாளுக்குப் பொருத்தமான பதிவு!

  அழகழகான படங்கள்..நன்றி.

  ஆனால் ரவி,உங்கள் பதிவுகளில் வழக்கமாக காணப்படும் நீரோட்டமான கருத்தொழுங்கு இதில் மிஸஸிங்..

  என்ன ஆச்சு?

  ReplyDelete
 15. //அறிவன்#11802717200764379909 said...//

  எப்படி இருக்கீங்க அறிவன் ஐயா? நலமா?

  //ஆனால் ரவி,உங்கள் பதிவுகளில் வழக்கமாக காணப்படும் நீரோட்டமான கருத்தொழுங்கு இதில் மிஸஸிங்..
  என்ன ஆச்சு?//

  :)

  மெய் எல்லாம் போக விட்டு
  விரி குழல் ஆரில் பட்டு
  பொய் எல்லாம் பொதிந்து நிற்க
  பொக்கனேன் வந்து நின்றேன்!

  கள்ளமே காதல் செய்து-உன்
  கள்ளத்தே கழிக்க வந்தேன்!
  எங்ஙனம் மறந்து வாழ்வேன்
  அரங்க மா நகருளானே!

  :)
  ஒரு அஞ்சாறு மாசமா எழுதறதில்லை அறிவன் ஐயா! அதான் போல நீரோட்டமான கருத்தொழுங்கு அமையலை!

  ரங்கன் அண்ணா தான் பந்தல் வெறுமை ஆகாமல், இப்போது எழுதிக் கொண்டு வருகிறார்! அவரை வாசித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
 16. :(

  மிகவும் சுமாரான பதிவு. இதில் ஒரு முக்கியமான விஷயம் தவற விட்டீர்கள்.

  நாடு என்பது மக்களால் ஆனது. நாட்டிற்கு தலைவனாக வேண்டியவனுக்கு சில தகுதிகள் தேவை. தன் பிள்ளைகளுக்கு தகுதி இல்லாததால் அரியணை கூடாது என்று சொன்ன பரதனின் வம்சத்தில் பிறந்த தேவவிரதன் அதைச் சிந்தித்திருக்க வேண்டும்.

  பிறக்காத குழந்தையை அரியனையில் அமர வைப்பேன் என்று அரியனையை ஏதோ பொம்மைப் போல தேவவிரதன் நினைத்தது பெரும் குற்றம். மேலும் அதில் அமர்பவரை என் தந்தைப் போல நினைப்பேன் என்றது முட்டாள் தனத்தின் உச்சம்.

  ஞானத்தில் சிறந்த தேவவிரதன் சந்நியாசம் வாங்கி காட்டிற்கு சென்றிருக்கலாம். ஆனால் அவன் வில்லின் வலிமையால் தகுதியற்றவர்களுக்கு அரியனை சென்றது.

  பாரத போரின் முதல் குற்றவாளி பிதாமகர் தான். அடுத்தது தான் திருதிராஷ்டிரன்.

  ReplyDelete
 17. //:(
  மிகவும் சுமாரான பதிவு. இதில் ஒரு முக்கியமான விஷயம் தவற விட்டீர்கள்//

  வருக பாலாஜி! ரொம்ப நாள் கழிச்சி வரீங்க! நல்வரவு!
  சுமாரான பதிவு தான்! No Issues! அதுக்கு எதுக்கு அழுகாச்சியோட உள்ள வரீக? சிரிச்சிக்கிட்டே தான் வாங்களேன்! :)

  //நாடு என்பது மக்களால் ஆனது. நாட்டிற்கு தலைவனாக வேண்டியவனுக்கு சில தகுதிகள் தேவை. தன் பிள்ளைகளுக்கு தகுதி இல்லாததால் அரியணை கூடாது என்று சொன்ன பரதனின் வம்சத்தில் பிறந்த தேவவிரதன் அதைச் சிந்தித்திருக்க வேண்டும்//

  உம்! நாட்டைப் பற்றிய சிந்தனையே பீஷ்மனுக்கு இல்லை-ன்னு சொல்றீங்க போல!

  //பிறக்காத குழந்தையை அரியனையில் அமர வைப்பேன் என்று அரியனையை ஏதோ பொம்மைப் போல தேவவிரதன் நினைத்தது பெரும் குற்றம்//

  அரியணையைப் பொம்மை போல எல்லாம் பீஷ்மன் நினைக்கவில்லை!
  பிறக்காத குழந்தையே ஆனாலும், அரச வம்சக் குழந்தை என்பதால் தகுதி உடைத்தே என்பது அந்நாளைய மன்னராட்சி வழிமுறை! தகுதி என்பது தானாக அமையும் (அ) வளர்ந்து அமைத்து வைக்கப்படும்!
  தகுதி வளர்ந்தும் வராவிட்டால் ஒதுக்குவது என்பது வேறு! ஆனால் இயல்பிலேயே தகுதி என்பது தான் வாரிசு வழிமுறையாக இருந்தது! அதையே பீஷ்மனும் எண்ணினான்!

  இன்னும் பிறக்காத குழந்தை, கருவில் உள்ள திரு, இராமனே எங்கள் ராஜா என்றெல்லாம் அயோத்தி மக்கள் பேசுவதும் கொண்டாடுவதும் மன்னராட்சியில் சகஜம் தான்!

  //ஞானத்தில் சிறந்த தேவவிரதன் சந்நியாசம் வாங்கி காட்டிற்கு சென்றிருக்கலாம். ஆனால் அவன் வில்லின் வலிமையால் தகுதியற்றவர்களுக்கு அரியனை சென்றது//

  சன்னியாசம் வாங்கிக்க வேண்டியது தானே என்று பீஷ்மரின் தனிப்பட்ட வாழ்வில் புகுந்து பேச கண்ணனுக்கு உரிமை இல்லை போலும்! :)
  அதான் உங்களைப் போல் சொல்லாமல், பீஷ்மரின் மனசாட்சிக்கு, மற்றவற்றை மட்டும் முன்வைத்துச் சொல்கிறான் கண்ணன்!

  ReplyDelete
 18. //பாரத போரின் முதல் குற்றவாளி பிதாமகர் தான். அடுத்தது தான் திருதிராஷ்டிரன்//

  இங்கே கண்ணனின் நோக்கம், யார் முதல் குற்றவாளி, யார் ரெண்டாம் குற்றவாளி-ன்னு பட்டியல் போடுவது இல்லை! :)
  மகா பக்தரான பீஷ்மரை, தான், தன்-தர்மம், தன்-சத்தியம் என்ற பிடியில் இருந்து விடுவிப்பதே அவன் நோக்கம்!

  அதனால் தான் இதையெல்லாம் தன் வாதத்தில் அதிகம் பேசாமல், பீஷ்ம மன மாற்றத்துக்கு மட்டும் கண்ணன் பேசினான்!
  * குற்றவாளி/பொறுப்பாளி ஆக்குவது நோக்கம் அன்று!
  * எளியன்/பக்தன் ஆக்குவதே நோக்கம்!

  ஓக்கேவா பாலாஜி? :)

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP