Friday, January 29, 2010

நரசிம்ம சரணாகதி - 1


ரங்கனின் பெருமைகளைப் பேசிக் கொண்டே வந்த பெரியாழ்வாருக்கு, தன் மனம் ஐம்புலன்களிலே சென்றதைக் குறித்து வெறுப்புக் கொண்டு, 'என் பிழையைப் பொறுக்க வேண்டும்; எனக்கு அருள் செய்ய வேண்டும்' என்று, வாக்குத்தூய்மை என்ற திருமொழியின் மூலம் அரங்கனை வேண்டுகின்றார்.

திருமொழியின் 9-ஆம் பாசுரத்தில், நரசிம்மனை அழைக்கிறார்.

***

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமதானாய்!*
உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*

கம்ப மா கரி கோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*

எம்பிரான்! என்னை ஆளுடைத்தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே.
வாக்குத்தூய்மை 5-1-9

நம்பத் தகுந்தவனே! நாவினால் அவனை வணங்குபவர்களுக்கு அன்பனே! நரசிம்ம அவதாரம் செய்தவனே! தேவர்கள் தலைவனே! ஏழு உலகங்களையும் அளந்தவனே! பிரளய காலத்தில் இருந்தவனே! முன்பு சக்கரத்தை ஏந்தி, நடுங்கும் பெரிய யானையின் துயர் நீக்கியவனே! உலகப் படைப்புக்குக் காரணமாய் இருப்பவனே! கடலைக் கடைந்தவனே!

எனது தலைவனே! அடிமையான என்னை ஆளும் போக்கியம் உடையவனே! இந்த ஏழையின் துன்பத்தை நீக்குவாயாக!

(நவின்று - பயிற்சி செய்து; உம்பர் - தேவர்கள்; ஊழி - பிரளயம்; ஆழி - சக்கரத்தாழ்வான்; கம்பம் - நடுக்கம்; மா கரி - பெரிய யானை; கோள் - துயரம்; காரணன் - படைப்புக்குக் காரணமானவன்)

***

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் இறைவனின் திருவிளையாடல்களைக் போல இருக்கும். ஆனால், உண்மையில் இந்தப் பாசுரம், சரணாகதிப் பாசுரம்!

நாம் ஒருவரிடம் சரணடைய வேண்டுமானால், நமக்குத் தான் சில குணங்கள் வேண்டும் என்று நினைக்கிறோம்! ஆனால், யாரிடம் சரணடைகிறோமோ அவருக்கும் சில குணங்கள் (9) இருக்க வேண்டும்!

இந்த குணங்களை, கதைகள் மூலம் (நமக்கு?!) சொல்லி, 'இந்த குணங்கள் உன்னைத் தவிர வேறு யாரிடமும் இல்லை; எனவே தான் உன்னைச் சரணடைந்தேன்! எனக்கு அருள் செய்!' என்கிறார் பெரியாழ்வார்!

ஒரு கதை (அடியேன் நேரிலே கண்டது) கேளுங்கள்!

***

ரு நடுத்தர வயது அப்பா, தன் மகனுக்கு, Inspector, சிபாரிசைத் தேடிச் செல்கிறார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தவுடன், சிபாரிசு, உத்தரவாதம் கொடுக்கிறது. நிம்மதியுடன் வீட்டிற்கு வருகிறார் அப்பா.

மனைவியின் மந்திரத்திற்குப் பிறகு, இருவருக்கும், 'சிபாரிசு, வேலை வாங்கித் தருமா?' என்ற சந்தேகம்! 'எதற்கும் இருக்கட்டுமே!' என்று, இம்முறை, மனைவி, தன் அண்ணன் மூலம் இன்னொரு சிபாரிசைத் தேடிச் செல்கிறார். அங்கும், 'கவனிப்பு' நடந்தவுடன், அதே வேலைக்கு, இந்தப் புதிய 'சிபாரிசு' உத்தரவாதம் கொடுக்கிறது.

தம்பதியருக்கு, இரட்டிப்பு நிம்மதி! 'இவர் வாங்கித் தராவிட்டாலும் அவர் வாங்கித் தருவார்' என்று!

இரு சிபாரிசுகளும், இருக்கும் ஒரே Post-க்குப் போட்டி போட, சிபாரிசுகளுக்குள் Ego தலை விரித்தாடியது! Ego பிரச்சனை முற்றி, Egg பிரச்சனையாக மாறியது! பின்னர் நடந்த சமரசமாக, முதலில், அந்தப் பதவிக்கான Appointment போடப் பட்டது.

சில மாதங்கள் கழித்து, இரு சிபாரிசுகளின் 'பெரிய மேலிடம்' உள்ளே புகுந்து, இன்னொருவனுக்கு அந்த வேலையைப் போட்டுத் தந்தது! இது தான் விதி என்பதோ?

இப்போது, அந்தத் தம்பதியர் இருவரும், சிபாரிசுகளிடம் 'கொடுத்ததை' மீட்க நடையோ நடை என்று அலைகின்றனர்!

காரணம்? முதல் சிபாரிசு, நம்பத் தகுந்தது அல்ல (இரண்டாவதும் தான்)! முதல் சிபாரிசு காரியத்தை முடிக்கும் என்பதில், தம்பதியினருக்கும் நம்பிக்கை இல்ல! நம்பிக்கை இருந்தால், இரண்டாம் சிபாரிசை நோக்கிச் செல்வானேன்? அந்தத் தம்பதியர் செய்ய மறந்தது:

இதனை இதனால், இவன் முடிப்பன்' என்று, பேசி, 'அதனை' அவன் கண் கொடல்!

***

நாம் சரணாகதி அடைபவர், முதலில் நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்க வேண்டும்!

பதிலுக்கு எதுவும் எதிர்பாராமல், நமக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொள்பவன், எம்பெருமான் ஒருவனே! அவனே, எல்லாக் காலங்களிலும், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் நம்பத் தகுந்தவன்!

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் - அவனிடம் நாம் செல்ல வேண்டும்! அவ்வளவே!

(இப்படி, பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்காது, நம்பி வருபவர்களுக்கு, மழை போல் அருளைப் பொழியும் அவன் குணத்திற்கு, அவாப்த ஸமஸ்த காமத்வம் என்பர் வடமொழியில்)

சில சங்கடங்களால், அவனிடம் செல்ல இயலவில்லை என்றால் என்ன செய்வது?

***

ப்படி ஒரு சங்கடம் சிலருக்கு உண்டு! திரௌபதியைப் போல!

அந்தச் சபையினில் அவள் நிலைமை? இருந்தாலும் சங்கடம்! தன் மானம் பறிபோகிறது! வெளியே ஓடிச் சென்றாலும் மானம் போய்விடும் - கணவன்(கள்) சொல்லைத் தட்டியவள் என்று!

அவளால் முடிந்த மனித முயற்சி எல்லாம் செய்து விட்டாள் அவள்! கடைசியில், அவளுக்கு (நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் ஒரே வழி - அவனைக் கூப்பிடுவது தான்!

அவனை நம்பி, அவள் 'கோவிந்தா!' என்றழைக்க, அவன் வரவில்லை!

இந்தச் சின்னக் காரியத்துக்கு அவன் வரத் தேவையில்லை என்று நினைத்தான் அவன்! வந்தது, அவளுக்கு அந்த சமயத்தில் மிகத் தேவையானது! நீஈஈஈஈஈஈளமான புடவை!


'வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை', 'நேரில் வந்து அழைக்கவில்லை', முறையாக அழைக்கவில்லை', அவள் கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை', என் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை', ஏன் முதலிலேயே என்னைக் கூப்பிடவில்லை', போன்ற கோபம் எல்லாம் இல்லை அவனுக்கு!

கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக, உதவி செய்தான் அவன்!

***

திரௌபதிக்கு அன்று மானப் பிரச்சனை என்றால், பிரகலாதனுக்கோ, உயிர்ப் பிரச்சனை!

பின்னே, சிறிய மலையுடன், நாக பாசத்தால் கட்டி, கடலில் எறிந்தால், இருக்காதா என்ன!

அந்த சமயத்தில், பிரகலாதன் செய்யக் கூடியது - செய்தது - ஒன்று தான்! அவன் நாமத்தைச் சொல்வது! சொன்னான் அவன் - பிரகலாத ஸ்துதியை! உயிர் தப்பியது!

இப்படி, பிரகலாதனைப் போல், திரௌபதியைப் போல், நன்கு கற்று, அவன் பெயரைச் சொல்பவர்களுக்கு ('நவின்று ஏத்துவார்களுக்கு') அவன் பிடித்தவன் ('நாதன்') என்கின்றார் பெரியாழ்வார்!

ஒரு முறை அவன் நாமத்தைச் சொல்லப் பழகி விட்டால், பின் அவன் நம்மை விடமாட்டான்! அவன் அருளாவிட்டாலும், அவன் நாமம் அருளும்!

அவ்வளவு ஸெளலப்யம் (எளிமை) அவன்!

***

ரணியகசிபு போல் பகைவர்கள் இருந்து விட்டால், நம்பிக்கையும், எளிமையும் இருந்து விட்டால் மட்டும் போதாது! பலமும் வேண்டும்! மறங்கொள் இரணியனாயிற்றே அவன்! அவனையும் விளையாட்டாக அழிக்கக் கூடிய அசாத்திய பலம் வேண்டும்! அது இருப்பது, ஒருவனிடமே!

(இப்படி, பிறரால் செய்ய முடியாத காரியங்களை மிக எளிதில் செய்யும் குணத்திற்கு, ஸர்வ ஸக்தித்வம் என்ற வடமொழிச் சொல் உண்டு)!


மிகவும் நம்பத் தகுந்தவனாய், அதிக பலம் கொண்டவனாய் இருந்தான் நரசிம்மன்!

எனவே, அவதாரங்கள் பல இருந்தாலும், நரசிம்மனையே முதலில் அழைத்து, அவனிடம் சரணாகதி செய்கிறார் பெரியாழ்வார்!

***

இடம்: ஒரு அலுவலகம்
நேரம்: கெஞ்சல் நேரம்

(ஒருவன் தன் மானேஜரிடம் பேசிக் கொண்டிருக்கிறான்)

பணியாளன்: ஸார்! என்னுடைய இடம் சரியில்லை. வெளிச்சமே இல்லை. காற்றும் வருவதில்லை. எப்பொழுதும் யாராவது காபி குடிக்க வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அரட்டை சத்தம் தாங்க முடியவில்லை.

மானேஜர்: வேறு இடம் இல்லை. இப்போதைக்கு Adjust செய்து கொள். எதற்கும் நான் என் மானேஜரிடம் பேசிப் பார்க்கிறேன். அடுத்த மாசம் பார்க்கலாம்.

(பணியாளன், தலையைச் சொறிந்து கொண்டே, 'SAAAAAAR' என்று இழுக்கிறான்)

மானேஜர்: இன்னும் என்ன வேண்டும்! சீக்கிரம் சொல்லு! எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

(’இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்று முனகிக் கொண்டே)

பணியாளன்: சார்! இந்த வருடம் எனக்கு சம்பள உயர்வே இல்லை! நான் தானே எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்கிறேன்.

மானேஜர்: நானும் முயற்சி செய்தேன். ஆனால், உயர்வு பலருக்குக் கிடைக்கவில்லை. எதற்கும் இன்னொரு முறை சிபாரிசு செய்து பார்க்கிறேன். அடுத்த வாரம் வா!

பணியாளன்: ஸார்! எனக்கு 3 நாள் லீவு வேண்டும்!


மானேஜர்: இந்த மாதம் முடிய விடுமுறை கிடையாது! வேலை நிறைய உள்ளது. வேறு பலர் லீவில் உள்ளனர். நீயும் போய்விட்டால் நான் தான் எல்ல வேலையும் செய்ய வேண்டும்!

பணியாளன் ('அப்படியாவது நீயும் வேலை செய்' என்று முனகிக் கொண்டே): சார்! இது ரொம்ப Urgent! வீட்டில் பண்டிகை. கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும்.

மானேஜர்: என்ன முனகல்!

பணியாளன்: ஒன்றும் இல்லை! உங்களைப் போல் தயாள குணம் யாருக்கும் வராது என்று சொன்னேன் ஸார்!
மானேஜர்: இப்போதைக்கு விடுமுறை இல்லை! எதற்கும் நாளை வா! Customer-ஐ கேட்டுச் சொல்கிறேன்.

(பணியாளன், 'இவனால் எதுவுமே முடியாது! நாம் நேரே முதலாளியிடம் செல்ல வேண்டியது தான்!' என்று புலம்பிக் கொண்டே செல்கிறான்)

***

லுவலகத்தில், நம் மானேஜர் நம் தேவை எல்லாவற்றிற்குமே மேலிடத்திற்குப் போனால், நாமே நேராக, தலைமைக்கே சென்று விடுவோம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதையைத் தனித் தனியாக அடைவதை விட, எல்லாவற்றிற்கும், ஒரே சரணாக எல்லாத் தேவர்களுக்கும் CEO-வான எம்பெருமானிடமே சரணடையலாம். அவன், தன்னை உதவி கேட்டு யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருப்பானாம்! இப்படிப் பட்ட இவனை, 'தேவர்கள் தலைவனே' ('உம்பர் கோன்') என்று அழைக்கின்றார் பெரியாழ்வார்!

வடமொழியில் இதனை 'ஸ்வாமித்வம்' என்பர்!

***

இடம்: வைகுந்தம்
நேரம்: Emergency


(வைகுந்தத்தில், தேவிகள் பேச, எம்பெருமான் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார். திடீரென்று, ஒரு அலறல் கேட்க, இதைச் சாக்காக வைத்துக் கொண்டு எம்பெருமான், Vivek Style-ல் ’Escape'!

எல்லா நித்ய சூரிகளும், தேவியரும் பார்க்கும் போதே, எம்பெருமான், கிளம்பி விட்டார்! எப்படி?)

சேனை முதலியார்: எம்பெருமானே! உங்கள் கைலாகை மறந்து விட்டீர்களே!

நாராயணன்: ஓ! மறந்து விட்டேன்! கொடுங்கள்!

(ஓடிச் சென்று, கருடன் மேல் அமர்ந்து கொள்ள முயற்சிக்க, கருடன் தவிக்கிறான்)

கருடன் (தயக்கத்துடன்): நாராயணா! நான் இன்னும் வாஹன அலங்காரம் செய்யவில்லையே! வழக்கமாக அரை மணி நேரம் அவகாசம் கொடுப்பீர்களே! இன்று என்னவாயிற்று?


நாராயணன்: ரொம்ப அவசரமப்பா!

கருடன் (அவசரமாக): சரி! ஏறிக்கொள்ளுங்கள்!

கருடன்: நாராயணா! இன்று நான் அதிருஷ்டம் செய்துள்ளேன்!

நாராயணன்: வைநதேயா! இப்போது Sentiment-க்கு நேரமில்லை! விஷயத்திற்கு வா!

கருடன்: வழக்கமாகத் தங்கள் பாதுகையைத் தான் என் கைகளில் தாங்கி இருப்பேன்! இன்று, பாதுகை இல்லாமல் என் கைகளின் மேல் உங்கள் திருவடியை வைத்துள்ளீர்கள்!

நாராயணன்: அதனால் என்ன இப்போது?

(ஆஹா! தலையில் திருவடி வைத்ததால் 'மாவலிக்கு அடுத்த ஜன்மத்தில் இந்திர பதவி; எனக்கு என்ன கிடைக்கும்!' என்று கருடன் எண்ணுவதற்குள்)

ஸ்ரீதேவி (ஓடி வந்து): என்னங்க! கலைந்த ஆடையுடன் எங்கே போகிறீர்கள்? இந்தாருங்கள் உங்கள் செருப்பு!

(பிடுங்காத குறையாக, ரத்ன பாதுகைகளை வாங்கிக் கொண்டு, நாராயணன் கிளம்ப முயற்சிக்கிறார்)

ஸ்ரீதேவி: 'ஒரு நிமிஷம் இருங்க! நானும் வரேன்'!

(ஸ்ரீதேவி Makeup செய்யப் போக, நாராயணன் அதற்குள் கருட வாஹனனாக கிளம்பி விடுகிறார்; உடனே ஸ்ரீதேவி ஒரே தாவு - கருடனின் வலப்புறத்திற்கு! இதைப் பார்த்த நீளா தேவி, 'அதெப்படி அக்கா மட்டும் எப்போதும் உடனே செல்லலாம்?' என்று நினைத்து, தானும், ஆதிசேஷன் மேலிருந்து ஒரே Long Jump! இடப் பக்கத்திற்கு சென்று உட்கார்ந்து கொள்கிறாள் - பாவம் கருடன்!)


(இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் சக்கரத்தாழ்வார்! 'நானில்லாமல் கிளம்ப மாட்டாரே இவர்! இன்று என்னாச்சு இவருக்கு?' என்று நினைத்து)

சுதர்ஸனர் (கூவுகிறார்): நாராயணா! சற்று நில்லுங்கள்! சண்டைக்குச் செல்வது போல் புறப்படுகிறீர்களே? நான் உங்கள் தோள் மேல் இல்லாமல் எப்படி நீங்கள் வெளியில் கிளம்புகிறீர்கள்? அப்படி என்ன அவசரம்?

நாராயணன்: ஸாரி சுதர்ஸனா! மறந்து விட்டேன்! 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் அழைத்தான்! அவனுக்கு ஆபத்து என்று நினைக்கிறேன்! கேள்வி எதுவும் கேட்காமல் உடனே வா!

(சுதர்ஸனரும் உடனே சேர்ந்து கொள்ள, நாராயணன் அவசரமாக பூலோகத்திற்குக் கிளம்புகிறார்)

***

மேலே கூறிய காட்சி, பராசர பட்டர் (ர.ஸ்த. 2-57) அருளிச் செய்தது!

'பக்தனுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், தானும் அலங்காரம் செய்யாமல், அலங்காரம் ஏதும் இல்லாத கருட வாஹனத்தின் முன் ஏற முயற்சித்த நாராயணனின் வேகத்திற்கு ஒரு நமஸ்காரம்' என்கின்றார் பட்டர்!

நாம் ஒருவரிடம் சரணாகதி அடையும்போது, நம்முடைய நிலைமையைப் பார்த்து, அவர் இரக்கப்பட வேண்டும்! எம்பெருமான் கஜேந்திரனுக்கு இரக்கப் பட்டது போல்! 'முன் ஆழி ஏந்தி, கம்ப மா கரி கோள் விடுத்தான்' என்கின்றார் பெரியாழ்வார்!

இரக்க குணம் உடையவரிடம் நாம் சரணாகதி அடைவதில் நமக்கும் வருத்தம் இராது!

(மாறாக, நம்மை அவர் கேலி செய்தால், அவரிடம் பெரும்பாலும் நாம் சரணகதி அடைய இயலாது; அல்லது, 'இது நம் தலையெழுத்து' என்று, காரியம் நிறைவேறும் வரை பொறுத்துக் கொள்வோம்)!

- நரசிம்ம சரணாகதி தொடரும்!

12 comments:

  1. //பக்தனுக்கு ஆபத்து என்று தெரிந்ததும்,
    ....
    ....
    நாராயணனின் வேகத்திற்கு ஒரு நமஸ்காரம்'//

    ஹே, அந்த வேகமே! உனக்கு வந்தனங்கள்!
    ஹே, அந்தத் துடிப்பே! உனக்கு வந்தனங்கள்!
    ஹே, அந்தப் பதைபதைப்பே! உனக்கு வந்தனங்கள்!

    முப்பத்து மூவர் அமரர்க்கும்...
    அவர்களை விட "முன்" சென்று...
    ஏன், அவனையும் விட "முன்" சென்று...

    கப்பம் தவிர்க்கும் "கலியே" உனக்கு வந்தனங்கள்!
    கப்பம் தவிர்க்கும் "கலியே" உனக்கு வந்தனங்கள்!

    ReplyDelete
  2. பதிவில் இந்தக் காலத்து சிபாரிசு கதைகளும் அலுவலக கதைகளும் அருமையா வந்திருக்கு ரங்கன் அண்ணா! :)

    சரணாகதனின் லட்சணத்தை விட
    சரணாகத வத்சலனின் லட்சணம் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னது சூப்பர்!

    //நாம் ஒருவரிடம் சரணாகதி அடையும்போது, நம்முடைய நிலைமையைப் பார்த்து, அவர் இரக்கப்பட வேண்டும்!

    மாறாக, நம்மை அவர் கேலி செய்தால், அவரிடம் பெரும்பாலும் நாம் சரணகதி அடைய இயலாது;//

    :)
    நிஜ வாழ்விலும் பொருந்தும் சோகமான உண்மை!

    * அதான் விபீஷணன் இராமனிடம் செய்த சரணாகதி பலித்தது!
    * இராமன் கடலரசனிடம் செய்த சரணாகதி பலிக்கவில்லை!

    ReplyDelete
  3. //அவளால் முடிந்த மனித முயற்சி எல்லாம் செய்து விட்டாள் அவள்!//

    அனைத்து யோகங்களையும் செய்து விட்டாகி விட்டது!

    //கடைசியில், அவளுக்கு (நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் ஒரே வழி - அவனைக் கூப்பிடுவது தான்!//

    நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்!

    //அவனை நம்பி, அவள் 'கோவிந்தா!' என்றழைக்க, அவன் வரவில்லை!//

    வரத் தேவையில்லை!
    அவன் வந்திருந்தால் அவனுக்குத் தான் இன்னும் பெருமை சேர்ந்திருக்கும்!
    ஆனால் இப்போதோ இவளுக்குப் பெருமை சேர்ந்தது!

    இவள் மானம் காத்து,
    இவள் கணவன் மானம் காத்து,
    இவள் வீட்டு மானம் காத்து,
    இவர்கள் குல மானம் காத்து,
    சேலை உருவியனின் குல மானத்தையும் சேர்த்தே காத்து,
    பீஷ்மர் முதலான அத்தனை பேரின் மானமும் காத்து...

    அன்னை உலகத்தை மறந்தாள் ஒருமை உற்றாள்!
    வண்ணப் பொற் சேலைகளாம், அவை வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே!

    ReplyDelete
  4. //'வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை', 'நேரில் வந்து அழைக்கவில்லை', முறையாக அழைக்கவில்லை', அவள் கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை', என் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை', ஏன் முதலிலேயே என்னைக் கூப்பிடவில்லை', போன்ற கோபம் எல்லாம் இல்லை அவனுக்கு!//

    இது ஒன்றே சரணாகதி மகத்துவம்!
    இதைச் செய்தால் தான் சரணாகதி!
    அதைச் செய்தால் தான் சரணாகதி!
    -என்றபடி எல்லாம் சொல்லாது...

    நோற்ற நோன்பு ஒன்று இலேன்
    நுண் அறிவு ஒன்று இலேன்
    ஒன்றும் ஆற்ற கின்றிலேன்

    எல்லாம் எனக்கு நீயே,
    எல்லாம் உனக்கு நானே...
    என்ற உறவேல் இங்கு ஒழிக்க ஒழியாது!

    சரணாகதியில் விசாரிப்புகள் இல்லை!
    சரணாகதியில் தகுதிகள் இல்லை!

    தகுதி இல்லை என்ற தகுதியே சரணாகதிக்கு!

    சங்கு சக்ர கதா பாணே
    துவாரக நிலைய அச்சுத
    கோவிந்தா புண்டரீகாட்சா
    ரட்சமாம் சரணாகதம்!
    பிரபோ...
    ரட்சமாம் சரணாகதம்!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நாராயணன்: வைநதேயா! இப்போது Sentiment-க்கு நேரமில்லை! விஷயத்திற்கு வா!::)))


    வைநதேயா என்றால் என்னங்க கருடனா!

    ReplyDelete
  7. @கலவை

    ரங்கன் அண்ணா, திருமங்கையின் திருப்பதிகளுக்குச் சென்றுள்ளார். அதனால் அவர் சார்பாக அடியேன் பதில் சொல்கிறேன்!

    //வைநதேயா என்றால் என்னங்க கருடனா!//

    ஆமாங்க!
    விநதை-யின் மகன் வைநதேயன்
    = பெரிய திருவடி = கருடன்!
    அஞ்சனை-யின் மகன் ஆஞ்சநேயன்
    = சிறிய திருவடி = அனுமன்!

    ReplyDelete
  8. //பதிவு ரவியின் பதிவா உண்மைய சொல்லுங்க//

    விண்ணப்பம்!
    - இது போன்ற சின்னச் சின்ன விளையாட்டுக்கள் வேண்டாமே, ப்ளீஸ்!

    அவரவருக்கு ஒரு நடை! ரங்கன் அண்ணா சம்பிரதாய அடிப்படையிலும் பேசக் கூடியவர்! நகைச்சுவையும் கலக்கக் கூடியவர்!

    பந்தல் என்னும் வீட்டில், அடியேன் எழுதுவதைக் குறைத்துக் கொண்ட பின்னாலும்,
    பல அடியார்கள் புழங்கிய வீட்டில் தொடர்ந்து விளக்கு ஏற்றும் ரங்கன் அண்ணாவுக்கு அடியோங்கள் நன்றி!

    மாதவிப் பந்தல் மேல்...
    பல் கால் குயில் இனங்கள் கூவின காண்!

    ReplyDelete
  9. Rajesh

    Realy sorry!

    ReplyDelete
  10. @kalavai
    he he
    no issues...take it ez...ensoy maadi :)

    ReplyDelete
  11. //நாராயணனின் வேகத்திற்கு ஒரு நமஸ்காரம்'//

    இந்த பதிவுக்கு நான் கொஞ்சம் தாமதமாக வந்து விட்டேன்.
    ஆனாலும் என்ன? கஜேந்திர மோட்சத்தை நேரில் பாத்த ஒரு எபஃக்ட்.

    மெய் சிலிர்த்து நானும் என்னை அறியாமல் ஒரு முறை ஆதிமூலமே! என மனதார கூப்பிட்டு விட்டேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  12. miga miga arumai. ungal sevai todarattum

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP