Monday, December 07, 2009

நரசிம்மனைப் பார்த்தீரா?


இடம்: ஒரு மண்டபம்
காலம்: கலியுகம்
நேரம்: கேள்வி நேரம்

(மண்டபத்தில், ஒரு பாகவதர் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார்; ஒரு கூட்டம் அதை உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது)

ஒரு பக்தன் (திடீரென எழுந்து): ஸ்வாமி! ஒரு கேள்வி கேட்கலாமா?

பாகவதர்: தாராளமாக!

பக்தன்: நான்முகனும், நீலகண்டனும் நாளும் நாடும் நாராயணனை நாம் எங்கு நோக்கலாம்?

பாகவதர்: கண்ணனே நாராயணன்! ருக்மிணியை வலியக் கைப்பற்றி, தேரில் ஏற்றிக் கொண்ட கண்ணனுடன் ருக்மிணியின் அண்ணன் போரிட வருகின்றான். அப்போது இருவருக்கும் நடந்த போரை நன்றாகக் கண்டவர் உளர். கண்ணனைப் பார்த்தால் நாராயணனைப் பார்த்த மாதிரித் தானே!


பக்தன்: யார்? அந்தச் சிறுவனா? அவன் பொல்லாதவன் ஆயிற்றே? தாய் போன்ற பூதனையின் முலையைச் சுவைத்து அவள் உயிர் உண்டதாகச் சொல்வார்களே? பெண்கள் மீது இரக்கமற்றவன் தானே இப்படிச் செய்ய முடியும்?

பாகவதர் ('ஐயோ! மீண்டும் பூதனையா!' என்ற முனகலுடன்): அப்படிப் பேசாதே! அந்தக் கண்ணனே, கம்சன் அடைத்து வைத்திருந்த பதினாயிரம் கன்னிகைகளை விடுவித்து, தானே அனைவரையும் மணந்து கொண்டவன்! இவனா பொல்லாதவன்?


கண்ணன் தன் தேவிமார்களொடு, துவாரகையில் சிம்மாசனத்தில் அமர்ந்து அரசாண்டதைப் பார்த்தவர்கள் உள்ளனர்!

பக்தன் (மீண்டும்): இவன் ஏழு உலகையும் உண்டதாகச் சொல்வார்களே? இதையாவது யாராவது பார்த்திருக்கின்றனரா?

பாகவதர் (சற்று கோபத்துடன்): நீ இன்று இங்கு நின்று, என்னைக் கேள்வியால் துளைப்பது, அன்று நாராயணன் வராக உருவில் கடலைத் துளைத்து, பூமியை வெளிக் கொணர்ந்ததால் தானே? அதற்காகவாவது அவனிடம் கொஞ்சம் நன்றியோடு நடந்து கொள்!


பக்தன்: ஸ்வாமி! குழப்புகிறீர்களே! நாம் கடைக்குச் சென்று கடைக்காரனிடம் 'பச்சரிசி இருக்கின்றதா' என்று கேட்டால், 'புழுங்கரிசி இருக்கு' என்று கடைக்காரன் சொல்வது போல் அல்லவா இருக்கின்றது?

(பாகவதர் பதில் சொல்வதற்குள், பின்னால் இருந்து, 'ஏய்! உக்காருப்பா! Chance கிடைத்தால் போதுமே! பேசிட்டே இருப்பீங்களே!’ என்று ஒரு குரல் ... அதற்கு சில ஆமாம் சாமிகள் கூட ... அங்கு சிறு சலசலப்பு!)

பாகவதர் (எல்லோரையும் பார்த்து): அமைதி! அவன் கேட்கட்டும்!

இன்னொரு பக்தன் (குறிக்கிட்டு): எங்களுக்கும் Chance கொடுப்பா! ... ஸ்வாமிகளே! எம்பெருமானுக்கு, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்குமே! இந்தக் கண்ணனுக்கு அவை இல்லையே?

பாகவதர்: கொடியில் அனுமன் அமர, வெள்ளைக் குதிரைகளின் கடிவாளத்துடன் அருச்சுனன் தேர் முன் அமர்ந்த கண்ணன், அவனுக்கு ஆயிரம் கைகளுடன் விசுவரூப தரிசனம் தந்தாரே? அந்தக் கைகளில் சங்கு, சக்கரம், வாள், தண்டு, வில் அனைத்தும் இருந்தனவே! அவற்றை, இரண்டு பெரும் படைகள் பார்த்தனவே!

அதே பக்தன்: சரி! கண்ணன் நாராயணன் தான்! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ராமன் நாராயணனா?

பாகவதர் (சற்று யோசித்து): இதில் சந்தேகமென்ன? ராமன் மிதிலையில், சிவனுடைய வில்லை வளைத்தானே? சிவனுடைய வில்லை வளைப்பவன் எம்பெருமானாகத் தான் இருக்க வேண்டும்? மேலும் பிராட்டியை வேறு யாரும் மணக்க முடியுமா?

இதை, அங்கு கூடியிருந்த மிதிலை மக்களும், ஸ்வயம்வரத்திற்கு அங்கு வந்த மற்ற மன்னர்களும் பார்த்திருக்கின்றனரே?


அதே பக்தன்: ஸ்வாமி! இன்னொரு கேள்வி!

(கூட்டத்தில் முணுமுணுப்பு ... 'ஸ்வாமிகள் பாகவதம் சொல்ல வந்தால், இங்கு ராமாயணம் ஆரம்பித்து விட்டார்களே!' என்று ஒரு வயதானவர் புலம்புகிறார்)

பாகவதர் (எரிச்சலுடன்): இன்னும் என்னப்பா?

பக்தன்: இந்த ராமன், கண்ணன் எல்லாம் பாரதத்தில் தான் பிறந்தார்கள். ஆனால், கலியுகத்தில் பிறக்கவில்லையே? இந்த ராமனை நாம் இப்போது எங்கு பார்ப்பது?

பாகவதர் (’எப்ப பாத்தாலும் நமக்கு இப்படி ஒருத்தன் வந்து மாட்டுகிறானே’ என்று நினைத்து): அந்த ராமனைத் தேடுகிறீர்களா? மார்பைப் பிளந்து ரத்தத்துடன் அளைந்த கைகளுடன் நரசிம்மம் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்!

இன்னொரு பக்தன் (பாகவதரை மடக்க, வேகமாக எழுந்து): இதுவும் எப்பொழுதோ நடந்தது தானே? நரசிம்மரை இப்போது எப்படிப் பார்ப்பது?

கூட்டத்தில், ஒருவர் (சத்தமாக): 'நீ எப்பொழுதும் நாராயணனை நன்றாகத் திட்டிக் கொண்டிரு! அவர் வந்து உன் மார்பையும் பிளப்பார்; அப்போது உன் மூலம் நாங்களும் நரசிம்மனைப் பார்ப்போம்!

(மண்டபத்தில் சிரிப்பலை!
Tension ஆன பாகவதர், துண்டால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, கேள்விக்குப் பதில் சொல்லாமல், அத்துடன் அன்றைய பாகவதத்தை முடித்துக் கொள்கிறார் ... சபை கலைகிறது)

***

து அடியேன் கற்பனை அல்ல ... பெரியாழ்வார் எழுதியது!

இதற்கு முன், பல பாசுரங்களில் தன்னை யசோதையாக நினைத்து, கண்ணனை அனுபவித்து மகிழ்ந்த பெரியாழ்வாருக்கு, ஒரு புறம் அவனை மீண்டும் நேரில் காணும் ஆவலும், மறுபுறம், அனுபவ முதிர்ச்சியால் எம்பெருமானை ஏற்கனவே நன்கு பார்த்துவிட்ட ஞானமும் வருகிறது! விளைவு?

தானே 'நாராயணனைக் காண வேண்டுமா? என்ற கேள்வியைக் கேட்டு, தானே, 'அவனைக் கண்டவர்கள் இருக்கின்றார்களே!' என்று பதிலும் உரைத்துக் கொண்டு, ’கதிராயிரம்’ எனும் இத் திருமொழியை இயற்றியுள்ளார்.

ஒவ்வொரு பாசுரத்திலும், முதல் இரண்டு வரிகளில், எம்பெருமானையோ அவனது அவதாரத்தையோ அல்லது அவதார லீலைகளையோ காண வேண்டுமா என்ற கேள்வி! அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பதில்!

(இதே போல் ஸ்ரீ ஆண்டாளும், 'பட்டி மேய்ந்து' [நாச்சியார் திருமொழி-14] எனும் திருமொழியை இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது)

(இத்தகைய தமிழ்ப் பாடல்களுக்கு, ’எதிரும் புதிரும்’ என்ற பெயர் உண்டு என்று கேள்விப் பட்டுள்ளேன்! தமிழ் அறிஞர்களே! இது சரியா? பதில் சொல்லுங்கள்! தெரிந்து கொள்கிறேன்)

பெரும்பாலும், ஆழ்வார் கேள்விக்கும் பதிலுக்கும் தொடர்பு இருந்தாலும், சில பாசுரங்களில் தொடர்பு நேரடியாக இல்லை. இந்தத் தொடர்பிலும் ஆசாரியர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு!

இதில் முதல் பாசுரத்திலேயே நரசிம்மனைப் பார்க்கின்றார் ஆழ்வார்.

***

கதிராயிரம் இரவி கலந்தெறித்தால் ஒத்த நீள்முடியன்*
எதிரில் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல்*

அதிரும் கழற்பொருதோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்*

உதிரம் அளைந்த கையோடு இருந்தானை உள்ளவா கண்டாருளர்.

கதிராயிரம் 4-1-1

ஆயிரம் கதிர்கள் உடைய சூரியன் ஒளி வீசுவதை ஒத்து இருக்கும் நீண்ட முடியை உடையவனும், ஒப்பு இல்லாத பெருமை உடைய ராமன் இருக்கும் இடத்தைத் தேடுகிறீர்களா?

வீரக் கழல் அணிந்தவனும், போர் புரியும் தோள்களையும் உடைய இரணியனின் மார்பைப் பிளந்து, ரத்தத்தை விலக்க அளைந்த கைகளோடு, நரசிம்மன் இருந்ததைப் பார்த்தவர்கள் இருக்கின்றனர்.

(இரவி - சூரியன்; ஆகம் - மார்பு; எதிரில் = எதிர் + இல் - ஒப்பு இல்லாத)

ஆயிரம் கதிரா? ஆயிரம் இரவியா?

***

திர்கள் ஆயிரம் உண்டு ஒவ்வொரு சூரியனுக்கும்! எனவே, இதைச் சொல்வதில் ஒன்றும் புதிதில்லை! ஆனால், எம்பெருமான் நீள் முடி, ஒரு சூரியன் ஒளி மட்டுமே கொண்டதா? இல்லையே?


இங்கு, 'ஆயிரம்' எனும் வார்த்தை, கதிருடனும், இரவியினுடனும் சேரும்! 'கதிர் ஆயிரம், (ஆயிரம்) இரவி கலந்து எறித்தால் போல்' என்று பொருள் கொள்வதே சரி!

பாசுரத்தில், ராமனை, ‘எதிரில் பெருமை இராமனை’ என்கின்றார். தன்னிகர் இல்லாத பெருமை உடையவனாம் ராமன்!

இதற்குப் பொருள் கூற ஆரம்பித்தால், முன்னால் மண்டபத்தில் ஒருவர் கூறியது போல், நரசிம்மாவதாரத்தில் இருந்து ராமாயணம் ஆரம்பித்து விடும். எனவே ராமனுக்கு ‘எதிர் இல்’ என்று ஒப்புக் கொண்டு, பாசுரத்தில் கவனம் செலுத்துவோம்!

ஆழ்வாரின் கேள்வி: இந்த ராமன் உண்மையிலேயே இருக்கின்றானா? அவன் இருக்கும் இடம் தேடுகிறீர்களா?

அவர் பதில்: நரசிம்மன் இருக்கின்றான்! அவன் இரணியனை அன்று மார்பு பிளந்ததை, பலர் பார்த்தனர்!

ராமரைக் கேட்டால் நரசிம்மரைச் சொல்கிறாரே? இன்னொரு ’பச்சரிசி+புழுங்கரிசி’ கதையா? ஒருவேளை ஆழ்வார் வேறு கணக்குப் போட்டாரோ?

***

a=b, a=c என்றால், ஃ b=c என்று தானே அர்த்தம்?

நாராயணன் = ராமன்; நாராயணன் = நரசிம்மன்; ஃ ராமன் = நரசிம்மன்

இது தான் ஆழ்வார் போட்ட கணக்கு!

கணக்கு இருக்கட்டும்! ஆழ்வார் நமக்கு என்ன சொல்கிறார்?

எம்பெருமான் பாற்கடலிலேயே இருந்தால் நம்மால் அவனைப் பார்க்கவே முடியாது! நமக்காக அவன் அவ்வப் பொழுது கீழே வந்து, ’நான் வந்திருக்கிறேன்! பார்த்துக் கொள்’ என்று தரிசனம் தருகிறான்.

எல்லா அவதாரங்களும் ’தானே’ என்று முத்திரையும் காட்டிவிட்டுப் போகிறான்!

இவனை நீங்கள் நேரிலே பார்க்காவிட்டாலும், ’உங்கள் மூதாதையரில் ஒருவராவது பார்த்திருப்பர்’ என்கிறார்!

கலியுகத்தில் அவன் இன்னும் வரவில்லை! நமக்கு தரிசனம் தருவதற்காகவே கோயில்களில் இருக்கிறான்!


நரசிம்மன், கைகளில் ரத்தத்துடன் இருந்ததைப் பலர் பார்த்தனராமே? யார் அவர்கள்?

***

செவ்வை சூடுவார், சுமார் ஐந்நூறு ஆண்டுகள் (சிலர் 300 என்பர்) முன்பு வாழ்ந்த புலவர்! 'தமிழில் பாகவதம் இல்லையே' என்ற குறையைத் தீர்க்க அவதரித்தவர்! இவர் ஓலைச் சுவடியில் எழுதிய பாகவதத்தை, உ.வே.சாமிநாத ஐயர் வெளிக் கொணர்ந்தார்! இதிலும் பிரகலாத சரித்திரம் விவரமாக இருக்கின்றது!

இரணிய வதத்தின் பின், எம்பெருமான் இருந்த நிலையை வருணிக்கிறார் இவர்! அவற்றுள் சில பாடல்கள் இதோ:

கழை சுளி களிறு அன்னானை, கவானிடைக் கிடத்தி, மாலைக்
குழவி வெண் திங்கள் அன்ன கூருகிர் நுதியின், பைந்தேன்

பொழி மலர் அலங்கல் மார்பம் போழ்ந்து, செங்குருதி ஊறி,

வழி பசுங் குடர் மென் கண்ணி ஆளரி வளைந்தது அன்றே.
1692

யானையைப் போல் இருந்த இரணியனை மடியில் கிடத்தி, சந்திரன் போல் பளபளக்கும் தன் கூர்மையான நகங்களால், மாலை அணிந்த அவன் மார்பைக் கீறி, அவன் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார் ஆளரி!

ஆர்த்தனர் அமர் ஓடி; அரும்பு அவிழ் பசும்பொற் போது
தூர்த்தனர்; உலகம் உண்ட சுடர் நகைப் பவள வாயும்,

கூர்த்த வாள் உகிரும், கையும், கொழுங்குடர் அணிந்த மார்பும்

பார்த்தனர்; வெருவல் உற்றார், பனி இரு விசும்பு மொய்த்தார்.
1693


தேவர்கள் இதை ஓடி வந்து, மேலிருந்து பார்க்கின்றனராம் (அதுவரை இரணியனிடம் உள்ள பயத்தால் ஒளிந்து இருந்தவர்கள்)! அன்றே பூத்த மலர்களைத் தூவுகின்றனர்! போட்டி போட்டுக் கொண்டு, அந்தரத்தில் இடம் பிடிக்கின்றனர்!

ஆனால் அவர்கள் பார்த்ததோ ஒரு புதிய உருவத்தை! உலகம் உண்ட அந்தப் பவள வாயையும், கூர்மையான அந்த நகங்களையும், குடல் அணிந்த அந்த மார்பையும்! விசுவ ரூபத்தையும்! தேவர்கள் மட்டுமா பார்த்தனர்? மற்றவர்களும் தான்!

வெஞ்சினத் திகிரி மாயன் வெருவரு தோற்றம் நோக்கி,
கஞ்ச நாண் மலரினானும் கண்ணுதல் பிறரும் அஞ்சி,
செஞ்சுடர் விரிக்கும் போதின், 'தெரிவை! நீ, சேறி!' என்ன,
அஞ்சினள் அணங்கு, நண்ண அவ்வுருக் கண்டு; மன்னோ.
1694

அவனுடைய கோபம் தரும் தோற்றம் காண்கின்றனர், பிரமனும், சிவனும், இந்திரனும்! அருகே செல்லப் பயப்படுகின்றனர்! பிரமன், அருகே நிற்கும் திருமகளைப் பார்த்து, 'தெரிவை! நீ சேறி!' என்று கூறுகின்றான்!

ஆனால் அருகில் செல்ல, திருமகளும் பயப்படுகின்றாள்! ஏன்?

***

தற்கு முன்பு, 'ஆளரிநாதன்' பதிப்பில், அடியேன், 'நரசிம்மனை யாரும் இதற்கு முன் பார்த்திருக்க வில்லை என்பதற்குச் சிறந்த சான்று எது?' என்று கேட்டிருந்தேன். இதோ ஒரு விளக்கம்:

பிரமனும் சிவனும் திருமகளைப் பார்த்து, 'நீ செல்!' என்று கூற, திருமகள் அஞ்சுகின்றாளாம்! பயத்தினால் அல்ல!

தான் இதுவரை பார்த்திராத உருவமாம் அது! தன் கணவனையே அடையாளம் தெரியவில்லை அவளுக்கு! ஒரு வேளை இது நாராயணன் இல்லை என்றால்! பிற புருஷனிடம் எப்படிச் செல்வது? எனவே அஞ்சினாளாம் திருமகள்! இதற்கு மேல் வேறு சான்று வேண்டுமா நரசிம்மம் புதிது என்பதற்கு?

திருமகள் தயங்கித் தயங்கிப் பார்க்கின்றாள்!

மலரயன், கிரீசன், தேவர், வாசவன், முனிவர், சித்தர்,
இலகு தென்புலத்தோர், நாகர், இயக்கர், கந்திருவர், ஆதி

அலகிலோர் அணுகார் ஆகி; ஆளரி உருவத்தோனை,

பலமுறை தொழுது, பாத பங்கயம் பரவினார்; ஆல். 1695


எல்லாத் தேவர்களும் பார்க்கின்றனர்! ஆனாலும், அருகில் நெருங்க பயம்! தள்ளி இருந்தே திருவடி தொழுகின்றனர்!

சண்டைக்குப் பின், மீதமுள்ள அசுரர்களும் பார்க்கின்றனர்! அசுரர்களின் ஒரே ஒரு ஆழ்வானான ப்ரகலாதாழ்வானும் பார்க்கின்றான்! இரணியன் அரண்மனையில் அப்பொழுது இருந்த புரோகிதர்களும், மற்ற மனிதர்களும் பார்க்கின்றனராம்!

இப்படி, 'நரசிம்மனைப் பார்த்தவர்கள் பலர் உண்டே' என்கின்றார் ஆழ்வார்! சரிதானே!

- நரசிம்மர் நமக்கும் தரிசனம் தருவார்!

29 comments:

 1. முன் பகுதியில் பெரியாழ்வாரின் பத்து பாசுரங்களையும் கேள்வி பதில் ரூபமாக கொடுத்த யுக்தி அருமை அருமை.

  ReplyDelete
 2. அன்பரே

  //முன் பகுதியில் பெரியாழ்வாரின் பத்து பாசுரங்களையும் கேள்வி பதில் ரூபமாக கொடுத்த யுக்தி அருமை அருமை.//

  நன்றி.

  இரண்டு-மூன்று பாசுரங்களில், கேள்வி-பதில் அமைப்புகளில் கருத்து வேறுபாடு இருப்பதால், அவற்றை விட்டு விட்டேன்.

  ReplyDelete
 3. நாம் இருப்பது நரசிம்மர் உலகமா
  அங்கேயே தூக்கிட்டு போய்டீங்க நன்றி

  ReplyDelete
 4. //நரசிம்மனைப் பார்த்தீரா?//

  கண்டேன் கண்டேன் கண்டேன்
  கண்ணுக்கு இனியன கண்டேன்

  பிரகலாதக் குழந்தையைக் கண்டேன்!
  அந்தக் குழந்தை இருக்கும் மனம் எல்லாம் நரசிம்மனும் இருப்பான் அல்லவா? பார்த்து விடலாம் அல்லவா?

  சின்னக் குழந்தை சேவடி போற்றி!
  சினமிகு பெருமாள் சேவடி போற்றி!
  மனமிகு பெருமாள் சேவடி போற்றி!

  ReplyDelete
 5. //எம்பெருமானுக்கு, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்குமே! இந்தக் கண்ணனுக்கு அவை இல்லையே?//

  ஹா ஹா ஹா
  அங்க அடையாளங்கள் இல்லீன்னா இறைவன் மேலேயே கூட நம்மில் பலருக்குச் சந்தேகம் வந்துவிடும் போல இருக்கே! :)

  எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் என்ன?

  பசு என்றால் அடையாளம் நாலு கால்-ன்னு சொன்னா போதுமா? கொம்பு-ன்னு சொன்னாப் போதுமா? காட்டெருமைக்கும் இதே அடையாளங்கள் உண்டே? :)

  ஒரு அடையாளம்-ன்னா தனித்த அடையாளமா இருக்கணும்! ஏகதேசமா அதை மட்டுமே குறிப்பதா இருக்கணும்!

  அப்படீன்னா எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் என்ன? சங்கு சக்கரங்களா? இல்லை! :)

  ReplyDelete
 6. //அப்படீன்னா எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் என்ன? சங்கு சக்கரங்களா? இல்லை! :)//

  சங்கு சக்கரங்கள் விஷ்வக்சேனர் என்னும் சேனை முதலியாரிடம் உண்டு! முழுமுதற் படைத் தளபதி-கண நாதரான சேனை முதலியார் சங்கு சக்கரங்களோடு தான் இருப்பார்!

  பெருமானின் வாயிற் காப்போர், ஜய விஜயர்கள், இவர்களும் சங்கு சக்கரம் வச்சிக்கிட்டு தான் இருப்பாங்க! எல்லாக் கோயில்-லயும் கருவறைக்கு உள்ளே நுழையும் முன் வாயிலில் பார்க்கலாம்!

  பெருமாள் கிட்ட முதலாளி-தொழிலாளி பேதங்கள் இல்லை! முதலாளி கிட்ட இருக்கும் சங்கு சக்கரம், பென்ஸ் கார் எல்லாம் தொழிலாளி கிட்டயும் இருக்கும்! :))

  அப்படீன்னா எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் என்ன???

  ReplyDelete
 7. சங்கு சக்கரம் இருந்தாத் தான் பெருமாள்-ன்னே நம்புவோம்-ன்னு ஒரு கோஷ்டி, முன்னாளில், திருமலை-திருப்பதியில் கலாட்டா பண்ணி, கும்மி அடிச்சுது! :)

  பதிவு/Blogging எல்லாம் வருவதற்கு முன்னாடியே, இந்தக் கும்மி கோஷ்டி இருந்தது என்பதற்கு, திருப்பதி தான் சிறந்த எடுத்துக்காட்டு! :)

  திருவேங்கடமுடையான் தன் சங்கு சக்கரங்களுடன், சிலப்பதிகார காலத்துக்கும் முன்னாடில இருந்தே நிற்கிறான்! இதைச் சமணரான இளங்கோவடிகளே பாடி வைக்கிறார்!

  ஆனால் நாம தான் "selective amnesia" தமிழ்க் கடவுள் கோஷ்டியாச்சே! :)

  தமிழ் இலக்கியத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமலேயே திருமால் தமிழ்க் கடவுள் அல்ல-ன்னு கும்மி அடிப்போம்!
  தொல்காப்பியர், திருமாலைத் தமிழ்க் கடவுளாகக் காட்டினா, அவரை உடனே தொல்லைக் காப்பியர் ஆக்கீருவோம்! :)

  ஆனால் நேர்மையாளரான இளங்கோவடிகள் அப்படி அல்ல!
  வீங்கு நீர் அருவி "வேங்கடம்" என்னும்
  ஓங்குயர் மாமலை உச்சி மீமீசை

  பகை அணங்கு ஆழியும் பால் வெண் சங்கமும்
  தகை பெறு தாமரைக் கையில் ஏந்திய
  செங்கண் மால் நெடியோன் நின்ற வண்ணமாய்
  -ன்னு வேங்கடத்தான் கையில் சங்கு சக்கரங்களைக் காட்டுகிறார்!

  பின்னாளில் (approx 1000 AD) இந்த சங்கு சக்கரங்கள் பெருமானை விட்டு நீங்கின! தொண்டைமானுக்கு உதவியாக இறைவனே தந்ததாக ஒரு சாரார் கருத்து! இல்லை, கும்மி அடித்து, பெருமானிடம் இருந்து வலிய நீக்கப்பட்டது என்பது இன்னொரு சாரார் கருத்து!

  எது எப்படியோ...
  அங்க அடையாளத்தில் ஊறி விட்ட மனித மனம்! அதுக்கு என்ன சொன்னாலும், எவ்வளவு தெளிவாக வாதிட்டாலும் எடுபடாது என்பதை நன்கு உணர்ந்த இராமானுசர், பொறுப்பை இறைவனிடமே விட்டுவிட,

  அனைத்து ஆயுதங்களையும், பலர் பார்க்க, மன்னன் முன்னிலையில், கும்மி கோஷ்டி முன்னிலையில், இறைவன் திரு முன் வைத்து நடை சார்த்தி, சீல் வைக்க...

  திருவேங்கடமுடையான் சங்கு சக்கரங்களையே ஏற்று அருளினான்! இது பலர் பார்க்க நடந்த ஒரு நிகழ்வு! ஆனால் இன்றும் சிலர், இதை வைத்துக் கொண்டு, ஏதோ இராமானுசர் தான் "புகுத்தி" விட்டாற் போல, இன்னும் வீண் கும்மி அடித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்! :)))

  இராமானுசர் "புகுத்தினார்"-ன்னு சொன்னால் கூட ஏதோ நம்பலாம்!
  இளங்கோவடிகள் ஏன் "புகுத்தினார்"?-ன்னு கேளுங்க! பதிலே வராது! :)

  பின்னாளில் என் முருகன் மேல் மாறாத அன்பு பூண்ட அருணகிரியாரும், திருப்புகழில் திருவேங்கடமுடையான் கையில் சங்கு சக்கரங்களைக் காட்டி, கும்மியின் முகத்தில் கரியைப் பூசிச் செல்கிறார்! :)

  ReplyDelete
 8. //அங்க அடையாளத்தில் ஊறி விட்ட மனித மனம்!//

  அரங்கனுக்கு சங்கு சக்கரங்களே கிடையாது! திருவரங்கம் போயிப் பாருங்க! சும்மா ஃப்ரீயா படுத்துக்கிட்டு இருப்பாரு! :)

  செந்தூர் முருகன், பழனியாண்டவர், சுவாமிமலை முருகன் கையில் எல்லாம் வேலே இருக்காது!
  அலங்காரத்துக்காக, தோள் மேலே சார்த்தி வச்சிருப்பாங்க! என் முருகனும் அடையாளம் இன்றி ஃப்ரீயாத் தான் இருக்கான்! :)

  ஆனா நடுவுல சை-சைன்னு ஆடுறது எல்லாம் "இதுகள்" தான்! :)))

  ReplyDelete
 9. சரி, நாம விட்ட இடத்துக்கே வருவோம்...

  ....அப்படீன்னா எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் என்ன???

  எம்பெருமானை, பிறவற்றில் இருந்து தனித்துக் காட்டவல்ல அடையாளம் என்ன?


  * சங்கு சக்கரம் இல்லை!
  * தாமரை இல்லை!
  * வாள் வேல் கதை இல்லை!
  * நகை நட்டு இல்லை!
  * நெத்தியில நாமம், புத்தியில நாமம் இல்லை! :)
  * அந்த நாமத்திலேயும் அந்தக் கலை, இந்தக் கலை-ன்னு இல்லை! :)

  எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் என்ன???

  எம்பெருமானுடைய முழு முதல் அடையாளம் = ஸ்ரீயத் பதியான எம்பெருமான்! திரு+மால்! திருமகள் கேள்வன்!

  அவளே அவனுக்கான முழுமுதல் அடையாளம்!
  ஸ்ரீ-மன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே!
  ஸ்ரீ-மதே நாராயணாய நம:

  ReplyDelete
 10. //அவளே அவனுக்கான முழுமுதல் அடையாளம்!//

  அவள் ஒவ்வொரு அவதாரத்திலும் எப்படி வந்து அவனை அடையாளப்படுத்துகிறாள் என்பதை நீங்க சுருக்கமாச் சொல்லி விளக்கனீங்கன்னா, நாங்க எல்லாரும் தெரிஞ்சிப்போம், ரங்கன் அண்ணா!

  பதிவு அருமை! "மண்டபத்துல" உட்கார்ந்து எழுதினீங்க போல! :)

  ReplyDelete
 11. //'நீ எப்பொழுதும் நாராயணனை நன்றாகத் திட்டிக் கொண்டிரு! அவர் வந்து உன் மார்பையும் பிளப்பார்; அப்போது உன் மூலம் நாங்களும் நரசிம்மனைப் பார்ப்போம்!//

  சூப்பர் ஐடியா! :)

  //ஆயிரம் கதிரா? ஆயிரம் இரவியா//

  அட, என் ஒரு ரவியே ஊரு தாங்க மாட்டேங்குது! இதுல ஆயிரம் ரவியா? அதோ கதி தான்! :) சரி தானே ராதா? :))

  ReplyDelete
 12. //முதல் இரண்டு வரிகளில், எம்பெருமானையோ அவனது அவதாரத்தையோ அல்லது அவதார லீலைகளையோ காண வேண்டுமா என்ற கேள்வி! அடுத்த இரண்டு வரிகளில் அதற்குப் பதில்!//

  //(இத்தகைய தமிழ்ப் பாடல்களுக்கு, ’எதிரும் புதிரும்’ என்ற பெயர் உண்டு என்று கேள்விப் பட்டுள்ளேன்!//

  தமிழ் இலக்கியத்தில் இது பல இடங்களில் கடைபிடிக்கப்படும் அழகான உத்தி!

  நிரல் நிறை அணி என்பார்கள்!
  முதல் அடியில் சொல்லையோ, வினாவையோ இட்டு
  அடுத்த அடியில் அதன் பொருளையோ, விடையையோ சொல்லுதல்!

  இது பின்னாளில் புதிர்/விளையாட்டாகவே மாறி, விடுகதை வரையெல்லாம் கூடப் போனது!

  புதிர்நிலை-எதிர்நிலை, வெடி-நொடி என்றும் சில பெயர்கள் உண்டு!
  இப்படிக் கேள்வி-பதில் அமைக்கும் பாடல்களுக்கு "பிசி அமைத்தல்" என்று பெயர்!
  லோக்கலாச் சொல்லணும்-ன்னா புதிர்/விடுகதை போடல்! :)

  இதுவே அம்மானை போன்ற கேள்வி பதில் விளையாட்டாகவும் பின்னாளைய இலக்கியங்களில் உருப்பெற்றது!

  பிள்ளைத்தமிழ் இலக்கியத்துக்கு முன்னோடியான பெரியாழ்வார், இப்படி பிசி அமைத்து, பாசுரம் பாடுவது வியப்பிலும் வியப்பே!

  ReplyDelete
 13. கோதையும் இப்படி Conversational-ஆகப் பாடுகிறாள்! கேள்வி-பதில் டெக்னிக்கில்! :)

  பட்டி மேய்ந்து ஓர் காரேறு
  பலதே அதற்கு ஓர் கீழ்க் கன்றாய்,
  இட்டீ றிட்டு விளையாடி
  இங்கே போதக் கண்டீரே?-ன்னு கேள்வி!

  இட்ட மான பசுக்களை
  இனிது மறித்து நீரூட்டி,
  விட்டுக் கொண்டு விளையாட
  விருந்தா வனத்தே கண்டோமே-ன்னு பதில்!

  ஆனா, இதை விட சூப்பர், ஒரு திருப்பாவைப் பாடல்! அதுல டுயட்டே வரும்! :)
  ஒன் லைனர் Conversational-ஆ மாத்தி மாத்தி...இக்கடச் சூடண்டி! :)
  மார்கழி-15: Duet Song முதலில் போட்டது யாரு?

  ReplyDelete
 14. //செவ்வை சூடுவார், சுமார் ஐந்நூறு ஆண்டுகள் (சிலர் 300 என்பர்) முன்பு வாழ்ந்த புலவர்! 'தமிழில் பாகவதம் இல்லையே' என்ற குறையைத் தீர்க்க அவதரித்தவர்!//

  பலரும் செவ்வை சூடுவாரை அறிந்திருக்க மாட்டாங்க ரங்கன் அண்ணா! அவரைப் பற்றி அப்பறம் ஒரு தனிப் பதிவா போடுங்களேன்!
  அவர் எழுதிய பாகவதம் நூலின் பெயர் என்ன? அதில் உள்ள சிறப்புகள் என்ன? கம்பரைப் போல அவரும் மூல நூலில் சில மாற்றங்களைச் செய்தாரா?

  ஏன் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் நூல் அதிகம் இடம் பெறவில்லை? வைணவ வரலாற்றிலும் அதிகம் காணோமே! - இதெயெல்லாம் தொகுத்து ஒரு தனிக் கட்டுரையாப் போட்டீங்க-ன்னா பந்தல் வாசகர்கள் பலருக்கும் அறிமுகம் ஆகும்!

  இணையத்தில் அவர் நூல் இல்லை-ன்னே நினைக்கிறேன்!
  புத்தகமா வாங்கி, மின் தமிழ்க் குழுமத்தில் கொடுத்தால், மின்-புத்தகமா வலையேற்ற வாய்ப்புண்டு! (No typing, but just scanned)

  ReplyDelete
 15. KRS

  //பிள்ளைத்தமிழ் இலக்கியத்துக்கு முன்னோடியான பெரியாழ்வார், இப்படி பிசி அமைத்து, பாசுரம் பாடுவது வியப்பிலும் வியப்பே!//

  பிள்ளைத் தமிழுக்கு முன்னோடி பெரியாழ்வார் என்பது சரியே. ஆனால் இந்தக் கேள்வி-பதில் உத்தியில் (கதிராயிரம்) - ஆண்டாள் பெரியாழ்வாரை முந்திக் கொண்டாள் என்றே நினைக்கிறேன் (பெரியாழ்வார் பாசுரம் பாடியது ஆண்டாள் காலத்திற்குப் பிறகே என்பதனால்)

  ReplyDelete
 16. KRS

  //அவர் எழுதிய பாகவதம் நூலின் பெயர் என்ன? அதில் உள்ள சிறப்புகள் என்ன? கம்பரைப் போல அவரும் மூல நூலில் சில மாற்றங்களைச் செய்தாரா?//

  நூலின் பெயர், செவ்வை சூடுவார் பாகவதம்.

  சிறப்புகள் - தமிழில் முழு பாகவதம் உள்ள ஒரே நூல் இது. இவர் தமிழ், கம்பரின் தமிழைப் போல் அல்லாது, நமக்குக் தெரிந்த தமிழ்
  (சமீபத்திய காலம் - only 300-500 ஆண்டுகள்), போல இருக்கும்.
  இந்த பாகவதத்தில், அடியேனுக்கு ஓரளவு தெரிந்தது பிரகலாத சரித்திரம் ஒன்றுதான்.

  இதில், பாகவதத்தில் இருந்து அதிக மாற்றங்கள் இல்லை.

  - சில விவரங்கள் விடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, இரணியகசிபு, வரங்கள் பெற்றதன் பின் உலகங்களை, 71 சதுர்யுகங்கள் (ஒரு க்ருத+த்ரேத+துவாபரம்+கலி = 28 லட்சம் ஆண்டுகள்!) ஆண்டதாக வியாச பாகவதம் கூறுகிறது. ஆனால், இந்த விஷயம் செவ்வை சூடுவார் பாகவதத்தில் இல்லை.

  மிக முக்கியமான மாற்றம் - செவ்வை சூடுவாரின் பாகவதத்தில், பிரகலாதன் (தந்தைக்கும், மற்ற அசுரச் சிறுவர்களுக்கும்) கூறிய அறிவுரைகள், சில சமயங்களில், அத்வைதக் கருத்துகளாக இருப்பதாகவும் வியாச பாகவதத்தில், விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் இருப்பதாகப் பெரியோர் கூறுவர்(அடியேன் இதில் Expert இல்லை! எனவே ‘ஜகா’ வாஙி விடுகிறேன்). இன்னும் சில விவரங்கள் எல்லாம், பாசுர விளக்கங்கள் எழுதும்போது குறிப்பிடலாம் என்றுள்ளேன்.

  ReplyDelete
 17. KRS

  //ஏன் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவர் நூல் அதிகம் இடம் பெறவில்லை? வைணவ வரலாற்றிலும் அதிகம் காணோமே! - இதெயெல்லாம் தொகுத்து ஒரு தனிக் கட்டுரையாப் போட்டீங்க-ன்னா பந்தல் வாசகர்கள் பலருக்கும் அறிமுகம் ஆகும்!//

  இதை சாமிநாத ஸ்வாமிகள் வெளிக் கொணர்ந்தது சுமார் 70-100 ஆண்டுகள் கூட இருக்காது. எனவே, பள்ளியில் அதிகம் யாரும் படித்திருக்க முடியாது (அடியேனும் இதைப் படிக்க ஆரம்பித்தது, பிரகலாதன் பற்றி தெரிந்து கொள்ள எழுந்த ஆவலினால் தான் - Please recall my Introduction to Blog)

  குரு பரம்பரையில் இது அதிகம் பேசப்படாததற்குக் காரணம், இதில் அத்வைதம் அதிகமாக இருந்ததால் இருக்குமோ (This is only mu guess)?

  ReplyDelete
 18. KRS

  //இணையத்தில் அவர் நூல் இல்லை-ன்னே நினைக்கிறேன்!
  புத்தகமா வாங்கி, மின் தமிழ்க் குழுமத்தில் கொடுத்தால், மின்-புத்தகமா வலையேற்ற வாய்ப்புண்டு! (No typing, but just scanned)//

  தேடிய வரை இணையத்தில் இது இல்லை.

  இந்தப் புத்தகம், 7 Volume-களாக வெளி வந்துள்ளது.

  அடியேன், பிரகலாத சரித்திரத்தை மட்டும், ‘சற்று Proof' பார்த்து (தெரிந்த வரையில் தான்), பொருளுடன், தமிழிலேயே Type செய்து வைத்துள்ளேன். இதை 'Maayaa'-வில் போடலாம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் பயம் (சரியாக இருக்காதோ என்று)!

  ReplyDelete
 19. KRS

  //சங்கு சக்கரங்கள் விஷ்வக்சேனர் என்னும் சேனை முதலியாரிடம் உண்டு! முழுமுதற் படைத் தளபதி-கண நாதரான சேனை முதலியார் சங்கு சக்கரங்களோடு தான் இருப்பார்!//

  ஆனால், எம்பெருமான் வைத்திருக்கும் சங்கு, சக்கரம் மற்றவர்கள் வைத்திருப்பது போல் அல்லவே! இதற்காகத் தானே மனிதர்களைப் போல், இவற்றிற்கும் பெயர் உண்டு!

  எம்பெருமான் வைத்திருப்பது வெறும் சக்கரமல்ல! சுதர்சனாழ்வார்! அவர் வைத்திருப்பது, வெறும் சங்கல்ல! பாஞ்சஜன்னியம்!

  இவர் வைத்திருக்கும் சக்கரமும், சங்கும், தனி. வேறு எந்தக் கைகளிலும் ஏறாது! சீமாலிகன் கதையும், புண்டரீக வாசுதேவன் கதையும் தங்களுக்குத் தெரியாதது அல்லவே!

  ReplyDelete
 20. KRS

  //பதிவு அருமை! "மண்டபத்துல" உட்கார்ந்து எழுதினீங்க போல! :)//

  ஆஹா! நம்ம வீட்டையே மண்டபம் ஆக்கிட்டாய்ங்களே!

  ReplyDelete
 21. KRS

  //ஆனா, இதை விட சூப்பர், ஒரு திருப்பாவைப் பாடல்! அதுல டுயட்டே வரும்! :)
  ஒன் லைனர் Conversational-ஆ மாத்தி மாத்தி...இக்கடச் சூடண்டி! :)//

  உண்மை தான்!

  இந்தப் பாசுரத்தில் டூயட் வெளிப்படையாக வந்துள்ளது!

  ஆனால், திருப்பாவை 5-ம் பாசுரத்தில் இருந்து, இந்தப் பாசுரம் வரையிலும், டூயட் மறைமுகமாக உள்ளதே!

  ReplyDelete
 22. //அடியேன், பிரகலாத சரித்திரத்தை மட்டும், ‘சற்று Proof' பார்த்து (தெரிந்த வரையில் தான்), பொருளுடன், தமிழிலேயே Type செய்து வைத்துள்ளேன்.//

  அப்படியே மேலே பாய்ஞ்சுடாதீங்க!

  சிறு விளக்கம்:

  ‘Proof-பார்த்து’ என்றால் - சாமினாதர் சரியாகச் செய்துள்ளாரா என்று அல்ல!

  இருக்கின்ற புத்தகங்கள் எல்லாம், தமிழ் யாப்பு கொண்டே வார்த்தைகளை அச்சிட்டுள்ளன. இதில் பொருள் புரிவது கஷ்டம்.

  ’கதிரா யிரமிரவி கலந்தெறித்
  தாலொத்த நீள்முடியன்’

  என்று எழுதுவதற்கும்,

  ‘கதிர் ஆயிரம் இரவி கலந்தி எறித்தால் ஒத்த நீள் முடியன்’

  என்று எழுதுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

  இதில் முதல் வகை யாப்பு கருதி எழுதுவது

  இரண்டாவது வகை பொருள் கருதி எழுதுவது.

  அடியேன் போன்ற சாமானியருக்கு, இரண்டாவது வகையே சரி.

  எனவே, செவ்வை சூடுவாரின் பிரகலாத சரித்திரத்தை பொருள் கருதி, தமிழில் Type செய்து வைத்துள்ளேன்.

  ReplyDelete
 23. அன்பரே

  //நாம் இருப்பது நரசிம்மர் உலகமா
  அங்கேயே தூக்கிட்டு போய்டீங்க நன்றி//

  நன்றி.

  ReplyDelete
 24. யானையைப் போல் இருந்த இரணியனை மடியில் கிடத்தி, சந்திரன் போல் பளபளக்கும் தன் கூர்மையான நகங்களால், மாலை அணிந்த அவன் மார்பைக் கீறி, அவன் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்கிறார் ஆளரி!:)))))  இரணியனை மடியில் கிடத்தி மார்பை பிளந்தார் நரசிம்மர் என்று ஆழ்வார்கள் பாடியிருகிரார்கள்

  அவன் குடலை உருவி மாலையாக போட்டதாக ஆழ்வார்கள் பாடியிருகிரார்களா??

  இரணியன் நரசிம்மரிடன் சண்டையிடும்போது அவன் வானத்துக்கும் பூமிக்கும் பறந்தான்

  அவனை கோபத்துடன் தர தர வென்று இழத்து வந்து வாசல்படியில் உக்ரத்துடன் அமர்ந்து அவனை மடியில் கிடத்தி
  அவன் மார்பை பிளந்தார். அவன் இறக்கும் தருவாயில் அவனை தன் மடியில் இருந்து தூக்கி எறிந்தார்.

  சாதரணமாக உயிரற்ற உடல் இறைவனுக்கு தீட்டு என்பார்கள். குடல் மாலை என்றால் தீட்டு இல்லையா!

  குடலை உருவினார் என்றால் மடியில் அவன் இறந்ததாக அர்தம் ஆகிவிடுமே  மகாலட்சுமி வாசம் செய்யும் மார்பு , புனிதமான துளசி மாலை அணியும் மார்புக்கும் ஸ்ரீமன் நாராயணன் திருமார்புக்கு எதற்கு அந்த கொடியவனின் குடல் மாலை???

  அப்படி குடலை மாலையாக போட்டறேன்றால் ஆழ்வார்கள் பாடியிருபார்களே ஏன் பாடவில்லை.  இடந்திட்டு இரணியன் நெஞ்சை* இருபிளவாக முன் கீண்டாய்!*
  குடந்தைக் கிடந்த எம் கோவே!* குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.  உளந்தொட்டு இரணியன்* ஒண் மார்வகலம்*
  பிளந்திட்ட கைகளால் சப்பாணி*
  பேய்முலை உண்டானே! சப்பாணி  இதெல்லாம் செவ்வை சூடுவாரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் உங்களிடம் கேட்டு விட்டேன்

  ReplyDelete
 25. அன்பரே

  I am neither an Authority on செவ்வை சூடுவார் nor on some of the subjects touched by you, like ’தீட்டு’. எனவே தெரிந்தவரை பதிலளிக்கிறேன்.

  //அவன் குடலை உருவி மாலையாக போட்டதாக ஆழ்வார்கள் பாடியிருகிரார்களா??//

  அடியேனுக்குத் தெரிந்தவரை இல்லை.

  //அப்படி குடலை மாலையாக போட்டறேன்றால் ஆழ்வார்கள் பாடியிருபார்களே ஏன் பாடவில்லை.//

  வைணவ புராணங்களைப் பொருத்த வரையில், இரணிய வதத்துடன் அவதார நோக்கம் முடிந்து விடுகிறது. எனவே, இரணியன் வதத்திற்குப் பிறகு நடந்தவற்றை எழுதுவதில் அதிக ஆர்வமும், கவனமும் இல்லை (ஆனால், மற்ற புராணங்களில் உண்டு - இவற்றை, நாம் பின்னால் பார்க்கலாம்).

  இதனாலேயே, ஆழ்வார்களின் பாசுரங்களில், இரணியன் வதத்தின் பிறகு நடந்தவை பற்றிக் குறிப்பு எதுவும் இல்லை. மங்கையார் மட்டும்,

  ‘அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவன் இடம்’ (3-1-4) என்றும்,

  ‘பிளந்தவன் தன் மகனுக்கு அருள் செய்தான் வாழுமிடம்’ (3-10-4) என்றும்,

  அவதார நோக்கம் முடிந்ததும், ’பிரகலாதனுக்கு அருள் செய்தான்’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

  ஆழ்வார்களைப் பின்பற்றியே வந்த குரு பரம்பரைக் குறிப்புகளிலும், இரணிய வதத்தின்பின் நடந்தவை பற்றி அதிகமாக விளக்கங்கள் இல்லை.

  //சாதரணமாக உயிரற்ற உடல் இறைவனுக்கு தீட்டு என்பார்கள். குடல் மாலை என்றால் தீட்டு இல்லையா!//

  இறைவனுக்குத் தீட்டு ஏது? அவன் கை பட்டதுமே, எதுவே சுத்தமாகி விடுகிறதே? இரணியன் உடம்பும் குடல் மாலையும், இதில் அடங்குமே?

  எம்பெருமானை திருப்பாணாழ்வார், அமலன், விமலன் என்கின்றாரே? என்ன அர்த்தம்?

  மலன் என்றால், அசுத்தம்.

  அ+மலன் என்றால், அசுத்தம் இல்லாதவன் என்று பொருள்.

  வி+மலன் என்றால், நம்மிடம் உள்ள அசுத்தத்தைப் போக்குபவன் என்று பொருள்.

  எனவே அவன் நம்மைத் தொட்டால், உடனே நாம் சுத்தமாகி விடுவோம்! அதற்கப்புறம் நமக்கும் தீட்டு இல்லை! அவனுக்கும் (எப்பொழுதும்) இல்லை.

  ஆனால், கோயிலுள் (வீட்டிலும் தான்!) உள்ள அர்ச்சாவதார எம்பெருமான் நமக்காகவே!

  நீங்கள் கேட்டது போல், அர்ச்சைக்குத் ’தீட்டு’ என்பது, அங்குள்ள எம்பெருமானை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே!

  நம்முடையவற்றை நாம் சுத்தமாக வைத்துக் கொள்வது நமக்கு நல்லது தானே!

  மனிதர்கள் பெரும்பாலும் அசுத்தம் என்று தெரிந்தே (திருப்பதி லட்டு joke தெரியும் தானே?) வேதங்கள், அர்ச்சையைத் தொடுவதற்குச் சில நியமங்களை விதித்துள்ளன.

  தொடுவதற்கு முன், சுத்தமாக இருந்து, அதற்கான நியமங்களைப் பின்பற்றினாலே தொட முடியும்.

  இது, கோயிலில் மட்டும் இல்லை. பலர் வீட்டிலும் தான்! அன்று நீராடவில்லை என்றால், பலர் வீட்டில், பூஜை அறைக்குள் நுழைய இயலாது (அடியேன் வீட்டிலும் தான் ஹி ... ஹி ...)

  //குடலை உருவினார் என்றால் மடியில் மகாலட்சுமி வாசம் செய்யும் மார்பு, புனிதமான துளசி மாலை அணியும் மார்புக்கும் ஸ்ரீமன் நாராயணன் திருமார்புக்கு எதற்கு அந்த கொடியவனின் குடல் மாலை???//

  நல்ல கேள்வி!

  மார்பைப் பிளந்தவுடன், இரணியன் இறக்கிறான். ஆனால், எம்பெருமான் கோபம் தணியவில்லை. அவன் குடலை மாலையாகப் போட்டுக் கொள்கிறார்.

  அவனுக்கு ஏன் கோபம்?

  பக்தனான பிரகலாதனின் துன்பம் கண்டு கோபம்!

  எம்பெருமானுக்கு, திருமகளை விட, அடியவர்க்கு நேரும் துன்பத்தைத் தவிர்ப்பது மிக விருப்பமானதாம்!

  ‘தன்னடியார் திறத்தகத்தே ...’ எனும் பெரியாழ்வார் பாசுரம் (4-9-2) தங்களுக்குத் தெரிந்திருக்குமே?

  எனவே, குடல் மாலை திருமகள் மீது படுவதைப் பற்றி எம்பெருமான் கவலைப் படாதது வியப்பா என்ன?

  //இதெல்லாம் செவ்வை சூடுவாரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் உங்களிடம் கேட்டு விட்டேன்//

  ’அடியேன் செவ்வை சூடுவார் இல்லை’ என்பதால், என்ன வேண்டுமானாலும் எழுதலாம் தானே (ஹி .. ஹி ... ஹி ....)!

  நரசிம்மாவதாரத்தைப் பொறுத்த வரையில், பாகவத மகா புராணம் பெரும்பாலும் 'Reference' ஆகப் கூறப் படுகிறது (பிரகலாத சரித்திரத்தை, நேரில் பார்த்த நாரதரே தருமருக்குக் கதையைக் கூறுவதால்).

  இதில், நாரதர், ‘எம்பெருமான் குடல் மாலையை அணிந்தவராய் இருந்தார்’ என்று கூறுகிறார் (7.14.8.30-32)

  செவ்வை சூடுவாரும் பாகவதத்தைத் தானே எழுதினார்?

  ஒரே ஒரு வித்தியாசம் தான்: சூடுவார், ’குடலை உருவினார்’ என்று சேர்த்துள்ளார் (குடலை உருவாமல் எப்படி மாலையாகப் போட்டுக் கொள்வது? :-) இது தப்பில்லீங்கோ!

  ReplyDelete
 26. //இதில், நாரதர், ‘எம்பெருமான் குடல் மாலையை அணிந்தவராய் இருந்தார்’ என்று கூறுகிறார் (7.14.8.30-32)//

  சிறு திருத்தம்:

  நாரதர் கூறியது ‘... பிடரி மயிர்களை உடைய முகமும், நரம்பு மாலை அணிந்தவராகவும், ...”

  குடல் என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. குடல் நரம்புகளையே குறித்தார்.

  இன்னொரு விஷயம்: பல உக்ர நரசிம்மர் கோயில்களில், நரசிம்மர் தன் 2 கைகளால் நரம்புகளை உருவுவது போல் இருக்கும். இதற்கு மிகச் சிறந்த சான்று, மத்தூர் உக்ர நரசிம்மர் (கண் வரதராஜர் இருக்கும் அதே தலம் தான்!).

  ReplyDelete
 27. செவ்வை சூடுவார் திருவடிகளே சரணம்.

  ReplyDelete
 28. அரங்கன் அண்ணா. பதினாயிரம் கன்னியர்களை அடைத்து வைத்திருந்தவன் கம்சனா நரகனா?

  ReplyDelete
 29. குமரன்

  //அரங்கன் அண்ணா. பதினாயிரம் கன்னியர்களை அடைத்து வைத்திருந்தவன் கம்சனா நரகனா?//

  நரகன் தான். அடியேன் எழுதும்போது தவறு செய்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

  தாஸன்
  ரங்கன்

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP