Thursday, April 21, 2011

"தற்கொலை" செய்து கொண்ட நாயன்மார்!

அடியவர்களின் கதைகளை, புராண மிகைகள் களைந்து, மூலநூலில் (திருத்தொண்டர் திருவந்தாதி) உள்ளது உள்ளபடியே எட்டிப்பார்த்து.....
அதை, நம்முடைய அகவியலோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக.....
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்! - வண்ணான் குலத்தில் பிறந்து வெளுத்துக் கொடுத்தவர்! அவரின் குருபூசை இன்று! (நினைவு நாள் - சித்திரை மாதம் சுவாதி)! பார்க்கலாமா?


தொண்டை மண்டலம் என்னும் நாடு, காஞ்சியை மையமாகக் கொண்டது!
சோழ வளநாடு சோறுடைத்து, பாண்டி முத்துடைத்து, சேரம் வேழமுடைத்து-ன்னு அவிங்கவிங்க பெருமை பாடிப்பாய்ங்க! :) ஆனாலும் அவையெல்லாம் Raw Material என்னும் மண் வளம் மட்டுமே! மனித வளம் (Human Resource) எங்கே? = தொண்டைநாடு சான்றோர் உடைத்து!

சான்றோர்-ன்னா என்ன? = யாரைச் சான்று காட்ட முடிகிறதோ, அவர்கள் சான்றோர்கள்!
அவர்கள் வாழ்வே அவர்கள் சான்று! அதை யாருக்கும் காட்டலாம்!

இப்பல்லாம் நமக்கு ஒரு Proof, சான்று தேவைப்படுகிறது! அந்தக் கடையில் "சரக்கு" எப்படி மச்சி? இந்த வங்கியில் கடன் வாங்கலாமா நண்பா?-ன்னு ஒரு பேச்சுக்கு நண்பர்களைக் கேட்டுக் கொண்டு தான் நகர்கிறோம்!
ஆனால் அந்தச் சான்று ஒத்த வாழ்கைமுறை உள்ளவர்க்கு மட்டுமே! கீழ்த்தட்டு மக்களுக்கு, நடுத்தட்டு மக்களின் சான்று ஏலாது! ஆனால் எல்லாருக்கும் ஏலக் கூடிய சான்று எது? அதைக் காட்ட வல்லரே = சான்றோர்!

* கலையில் பணிவு = எம்.எஸ்.சுப்புலட்சுமி
* ஆன்மீகத் தமிழ் = வாரியார்
* கடைசி வரை காதல் உறுதி = கே.பி. சுந்தராம்பாள்
* தொண்டில் தூய்மை = அன்னை தெரேசா
இப்படி சான்று காட்ட வல்லவர்களே, "சான்றோர்"! ஆன்றோர்களே, சான்றோர்களே என்பது வெறுமனே மேடைச்சொல் அல்ல! :)

தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்தாம்! அறிவில் சிறந்தது காஞ்சிபுரம்! அறிவு-ன்னா வெறுமனே கல்வி அல்ல! அது ஞான-பக்தி-வைராக்கியம்!
அப்படியான வைராக்கியத்திலே (உறுதியிலே) சிறந்தவர் திருக்குறிப்புத் தொண்டர்! காஞ்சிபுரத்தில், வண்ணான் குடியிலே பிறந்தவர்!

வண்ணான் குடிக்கு ஏது ஞானம்?
சிவபரம்-ன்னா என்னான்னு தெரியுமா? சிவ ரகஸ்யம், சிவகலை, சிவாகமம், சைவ சித்தாந்தம் - இதெல்லாம் தான் தெரியுமா?
"அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்"-ன்னு இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை தான்! ஆனால்...ஆனால்...ஆனால்....

* ஈசனுக்காக/அடியார்களுக்காக தங்கள் கண்ணையே, உயிரையே தருவார்கள் ஒருபுறம்!
* ஈசனின் தில்லை அம்பலத்தில் எண்ணெயைக் கொட்டி, தமிழ் ஓதி வரும் அடியார்களை வழுக்கி விழச் செய்வார்கள் மறு புறம்!
* முன்னவருக்கு சிவாகமம்/சிவ ரகஸ்யம்-ன்னு எல்லாம் அதிகம் பேசத் தெரியாது!
* பின்னவர்கள் சிவகலை, சைவ சித்தாந்தம் என்றெல்லாம் "நன்கு" அலசிப் பேசுவார்கள்!
ஆனால் ஈசனுக்கு எதைக் கொடுப்பார்கள்? = அன்பைக் கொடுக்க மாட்டார்கள்! தங்கள் அறிவையே கொடுப்பார்கள்!

சிவபெருமான் வேணுமா? சைவம் வேணுமா?-ன்னு அவிங்களைக் கேட்டுப் பாருங்க! சைவமே வேணும்பாங்க! :)
"தங்கள்" கொள்கை, "தங்கள்" குழு, "தங்கள்" பாண்டித்யம், "தங்கள்" பிடிப்பு - இதன் மேல் உள்ள கவனம் போக, மீதிக் கவனம் தான் "நங்கள்" ஈசனிடம்! :)

வண்ணான் வேலை செய்து வந்த திருக்குறிப்புத் தொண்டரிடம் போய், சைவம் வேண்டுமா? சிவன் வேண்டுமா என்று கேட்டால்.....???

(காஞ்சி - முத்தீஸ்வரர் ஆலயம் - திருக்குறிப்புத் தொண்டர் நிறைவு கொண்ட தலம்)

காஞ்சிக்கு வரும் அடியார்களின் முகக் குறிப்பைப் பார்த்தே, அவர்களுக்கு இன்ன வேணும், உணவு வேணும், நீர் வேணும், தங்க இடம் வேணும் என்பதை அறிந்து, ஆவன செய்து கொடுப்பார்! அதான் "திருக்குறிப்புத்" தொண்டர்!
"நின்னருளே புரிந்திருந்தேன், இனி என்ன "திருக்குறிப்பே"? என்பது பெரியாழ்வார் ஈரத்-தமிழ்! They also serve, who ONLY stand and wait  என்பது கண்ணழிந்த John Milton கவிதை! அப்படியான ஆசாமி நம்ம "திருக்குறிப்புத்" தொண்டர்!

திருக்குறிப்புத் தொண்டர்,  காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில், துணி வேக வைத்துக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தார்! ஆனால் ஒரே ஒரு பிரச்சனை!
தன் வாடிக்கையாளர்களின் துணியைக் காசுக்கு வெளுக்கும் முன்னர், சிவனடியார் ஒருவரின் ஆடையையாச்சும் இலவசமாக வெளுத்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்!

ஒருத்தன், இப்படியெல்லாம் உறுதியா இருந்தாத் தான் ஊருக்கு ஆகாதே! பல பேருக்கு இந்த வண்ணானைப் பிடிக்கவில்லை!
இவனுக்கு என்ன பெருசா சிவனைப் பற்றித் தெரியும்-ன்னு இத்தனை பிடிப்பு காட்டுறான்? எல்லாம் போலியான தன்னடக்கம், வெளிவேஷம் என்று சிலரின் பேச்சு! காசு கொடுக்கறது நாம, ஆனா முதல் துணிவெளுப்பு வேற்றூரில் இருந்து வரும் ஆட்களுக்கா? - என்ற நையாண்டியும் சேர்ந்து கொண்டது!


இப்படி வாழும் சூழலில், அன்று காஞ்சிபுரம் வந்தார் ஒரு பொன்னார் மேனி அடியார்!
மெலிந்த உடல், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு! குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிழ் சிரிப்பு........ஆனால் அழுக்க்க்க்க்கேறிய ஆடை!

பரதேசி போலும்! துணி துவைச்சி எத்தனை நாள் ஆச்சோ? கிட்டக்க வந்தா ஒரு வாடை அடிக்குது! எத்தனை திருநீறு பூசி இந்த வாடையைப் போக்குவதோ?
அன்று பிட்டுக்கு மண் சுமந்தவன், இன்று ஆடைக்கு வாடை சுமந்தான்!

"என்னங்க சிவனடியார் ஐயா, ஆடை இப்படி அழுக்கேறி இருக்கு?  கோயிலில் யாரேனும் முகம் சுளிக்கக் கூடுமே! 
என் கிட்ட குடுங்க! நான் ஒரு வண்ணான்! துவைத்து வெளுத்து, இன்றே தந்து விடுகிறேன்! அது வரை  இதோ இந்த மண்டபத்தில் தங்கி இளைப்பாறுங்கள்!  இந்தாருங்கள் செப்புக் காசு, உணவுக்கு உதவும்!"

"யாருய்யா நீ? தேடி வந்து உதவி செய்யறேன்-ன்னு சொல்லுற? உன்னைய போல ஆளுங்களைத் தான் நம்பவே கூடாது!"

"ஐயையோ! அப்படியில்லை! என்னை இந்த ஊரில் எல்லாருக்கும் நல்லாத் தெரியும் ஐயா! இதோ... நீங்களே பாருங்க, கழுதையும் பொதி மூட்டையும்! நான் துணி துவைக்கும் வேகவதி ஆறும், இந்த முத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் தானே!  நீங்க என் மீது ஒரு கண் வச்சிக்கிட்டே இருக்கலாம்!
இது ஒரு சிவத் தொண்டு-ன்னே நினைக்கிறேன்! அடியார்களின் உடை அழுக்கை நீக்கி, என் பிறவி அழுக்கை(?) நீக்கிக் கொள்வேன்! நம்புங்க ஐயா!"

"சரி சரி!  என் கிட்டக்க இந்த ஒரே ஆடை தான் இருக்கு! அதைத் துவைத்து உலர்த்திக் கொடுத்து விடு!  அதுவரை நான் மேல் துண்டைக் கட்டிக் கொண்டு, கோயிலுக்குச் சென்று வருகிறேன்!
சீக்கிரம்-ப்பா!  இராத்திரியானால் என்னால் குளிர் தாங்க முடியாது! இந்த மேல் துண்டு தான் எனக்கு இரவிலே போர்வை! புரிஞ்சுதா?"

"அப்படியே ஆகட்டும் ஐயனே! என்னிடம் இருக்கும் சொற்பப் பணத்தில், உங்களுக்கு இன்னொரு ஆடை வாங்கித் தரவும் சித்தமாய் உள்ளேன்!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்! ஒழுங்கா சொன்னதைச் செய்! அதுவே போதும்!
நான் ஒரு சிவ-தவசி! ஓர் உடை-ஒர் ஓடு! இதில் தான் வாழணும் என்பது எங்கள் நியதி! அதெல்லாம் உனக்குப் புரியாது! என் ஆடை பத்திரம்!"

வண்ணான் வேக வேகமாகத் துவைத்து விட்டான்! ஆனால் அவனையும் விட வேக வேகமாக தூவத் துவங்கி விட்டது!  மழை மேகம் சிவ போகம்! எத்தனை வெளுத்தும், உலர்த்தவே முடியவில்லை!

கஞ்சியம்பதியில், கஞ்சி போட்ட ஆடை....
ஈரத்தில் ஒரு ஓரத்தில் வண்ணானைப் பார்த்துச் சிரித்தது!

ஐயையோ! வேறு துணி கொடுத்தாலும், வாங்க மாட்டேன்-ன்னு முன்பே சொல்லிட்டாரே! என்ன செய்ய? ஒருவேளை வெள்ளாவியில் புழுக்காமல், வீட்டிலேயே துவைத்திருந்தால், இந்நேரம் காய வைத்திருக்கலாமோ?
- இப்படியெல்லாம் யோசித்து என்ன பயன்? ஆனால் அன்பைத் தவிர வேறொன்று அறியாத மனசு, இது போன்ற தருணங்களில், இப்படித் தானே லூசுத்தனமாக யோசிக்கறது! என்ன செய்ய?

வண்ணான் நடுநடுங்கிப் போனான்! அங்கோ அடியவர் குளிரில் நடுங்குகிறார்! இங்கோ இவன் மானத்தால் நடுங்குகிறான்!

"யோவ், உன் நியதியைக் கொஞ்சம் தளர்த்திக்கோ; இந்தா புதுத் துணி! இதுல என் தப்பு ஒன்னுமில்லை! மழை கொட்டும்-ன்னு நானும் எதிர்ப்பார்க்கலை! நீயும் எதிர்ப்பார்க்கலை! அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, சரியா?
இல்லையில்லை...தவம் தான் பெருசு-ன்னு சொன்னியானா, நான் ஒன்னும் செய்யறத்துக்கு இல்லை, நீ குளிரில் சாவது தான் வழி....என் மேல் பழி ஒன்னும் வராது!  அவரவர் வாழ்வு அவரவர் கையில்....."

- இப்படியெல்லாம் வாதாடித் தப்பிக்கும் மனம் வண்ணானுக்கு வரவில்லை!
சரணாகதியில் திளைக்கும் ஒரு உள்ளத்துக்கு, "தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தோன்றாத" மனநிலை! அவனே! அவனே! அவனே!

வண்ணான், துணி துவைக்கும் பாறைக் கல்லிலே, தன்னைத் துவைத்துக் கொள்ளத் துவங்கி விட்டான்!
ஐயோ! என்ன இது? இப்படியும் ஒரு மடமையா? நினைத்த காரியம் நிறைவேறலை-ன்னு இப்படிச் செய்யறவனைப் பார்த்தா, யாருக்கும் பயம் தானேய்யா வரும்? அவனிடமிருந்து ஒதுங்கி விடலாமா? - இப்படி இனியவர்கள் கூட யோசிக்கலாம்! ஆனால் ஈசன் யோசிப்பதில்லை! - "நில்லு குறிப்புத் தொண்டா, நில்லு"!!

"திருக்குறிப்புத் தொண்டனே! உன் உள்ளம் என்ன என்பது எமக்குத் தெரியும்!  தன்மானத்துக்கு அஞ்சியா இப்படிச் செய்தாய்? என் மானத்துக்கு அஞ்சி அல்லவோ, இப்படிச் செய்தாய்?
உனக்கு வரும் பழியை விட, எனக்கு வரும் பரிதவிப்பைக் காண ஒண்ணாது துடித்தவனை,  சைவ-உலகுக்குச் "சான்று" காட்டினோம்!
சான்றோனே!  நம் கைலாயத்திலே என்றும் அணைந்திரு!  உன் "திருக்குறிப்பு" வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!"

- நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன "திருக்குறிப்பே"?
They also serve who only stand and wait!
திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் திருவடிகளே சரணம்!

27 comments:

  1. அன்று பிட்டுக்கு மண் சுமந்தவன், இன்று ஆடைக்கு வாடை சுமந்தான்!
    அருமையான திருக்குறிப்புத்தொண்டரின் தரிசனம் தந்தமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி.
    புகழேந்தி.

    ReplyDelete
  3. திருக்குறிப்புத் தொண்ட நாயனார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  4. //அறிவு-ன்னா வெறும் கல்வி அல்ல! அது ஞான-பக்தி-வைராக்கியம்!//
    A piece of knowledge turns into a belief first, firms up as a revelation and gradually integrates into one's intellect is possibly the VAIRAAGYAM .
    திருக்குறிப்புத் தொண்டனார் அவரது வாழ்க்கை, ஒருவனது கல்வி, ஞானம் , பக்தி, வைராக்கியம் எப்படி அமையவேண்டும் என்பதற்குச் சான்றாம்.
    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  5. பதிவிற்கு நன்றி KRS

    ReplyDelete
  6. ஈசனடி போற்றி .. எந்தையடி போற்றி.. முருகா முருகா.. எத்தனை நாளாச்சு சொல்லி..
    / மெய்யடியார்கள் தம் ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே / மனசுக்குள்ள அரங்கனோ, ஈசனோ,மனுசனோ ? சான்றோனவது தானே சிறப்பு.. சான்றோர் க்கு நல்ல விளக்கம்..
    முருகா சரணம்...

    ReplyDelete
  7. @இராஜராஜேஸ்வரி - "ஆடைக்கு வாடை சுமந்தான்!" என்ற வரி பிடிச்சிப் போச்சா என்ன? :)

    @புகழேந்தி - நன்றி

    @குமரன் - சைவ சமய நாயன்மார்களுக்கு, "திருவடிகளே சரணம்"-ன்னு சொல்லலாமா?

    ReplyDelete
  8. @சூரி சார்
    // piece of knowledge turns into a belief first, firms up as a revelation and gradually integrates into one's intellect //

    ராஜாஜி பேசறாப் போல பேசறீங்க? :)
    பஜ கோவிந்தம் முன்னுரையில் இப்படித் தான் என்னமோ சொல்லுவாரு! :)

    ஞானம் என்றால் என்ன?
    பக்தி என்றால் என்ன?

    ஒரே வரி-ல, என்னையப் போல கத்துக்குட்டிக்கும் புரியறாப் போல சொல்லுங்க பார்ப்போம்! :)

    ReplyDelete
  9. @ராஜேஷ் - என்ன சொல்ல வரீங்க? வியப்புக்குறிக் கவிதை எழுதிட்டுப் போயிருக்கீங்க! :)

    @லோகன் - நன்றி!

    ReplyDelete
  10. @சரவணன் அண்ணா
    //ஈசனடி போற்றி .. எந்தையடி போற்றி.. எத்தனை நாளாச்சு சொல்லி..//

    பார்த்தீங்களா, சொல்ல வச்சிட்டேன்! :)

    //மெய்யடியார்கள் தம் ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே//

    இப்படியெல்லாம் செந்தமிழ்-ல்ல சொன்னா எனக்குப் புரிய வேணாமா? என்ன பாட்டு-ன்னு சொல்லுங்க! :)

    //மனசுக்குள்ள அரங்கனோ, ஈசனோ, மனுசனோ? சான்றோனவது தானே சிறப்பு...//

    சான்றோன் "ஆவது" பெருஞ் சிறப்பில்லை!
    சான்றோன் "ஆக்குவது" தான் சிறப்பு! :)

    ReplyDelete
  11. இரவி. 'புத்தியில' என்ன இருக்கோ அது தானே வரும். 'நெத்தியில' இருக்குறது கணக்கில்லை. :-))

    ReplyDelete
  12. ஐயோ தம்பி... புரிய வேணாமான்னெல்லாம் சொன்னா அப்புறம் நான் என்ன சொல்ல? தருமி பாட்டெழுதி சபைக்கு வந்த மாதிரி மனசு குறுகுறுக்குது.. ர ற,ந ண, கூட கொஞ்சம் அசந்தா மாத்தி போட்டுடுவேன் ..

    இதோ அந்த பாசுரம் முழுசா எழுதி வெக்கிறேன்.. நீ தான் அழகா புதுசா, வித்தியாசமா.. கடற்கரை சாலைல வண்டி ஓட்டுற மாதிரி எல்லாம் விளக்கம் சொல்லுவியே,,,ரசிச்சு , திளைக்க நாங்க இருக்கோம்..


    தேட்டர்ருந்திறல் தேனினைத்
    தென்னரங்கனைத் திருமாது வாழ்
    வாட்டமில் வனமாலை மார்வனை
    வாழ்த்தி மலர்கொள் சிந்தையராய்
    ஆட்டமேவி யலந்தழைத்து
    அயர்வெய்தும் மெய்யடியார்கள் தம்
    ஈட்டங் கண்டிடக் கூடுமேல்
    அதுகாணும் கண் பயனாவதே..( பெருமாள் திருமொழி )

    /பார்த்தீங்களா, சொல்ல வச்சிட்டேன்! :)/

    ha ha...
    சரி.. இன்னைக்கு ஆறிரு தடந்தோள் வாழ்க பாடிடலாம்..

    ReplyDelete
  13. சங்கரரின் தோடகரை என் மனத்தின் ஒரு
    மூலைக்குத தள்ளிவிட்டாரே "திரு குறிப்பு"!வெள்ளை மனம் வண்ணானுக்குப் பொருத்தமே!

    ReplyDelete
  14. @குமரன்
    //இரவி. 'புத்தியில' என்ன இருக்கோ அது தானே வரும். 'நெத்தியில' இருக்குறது கணக்கில்லை. :-))//

    ஹிஹி! ஹைய்யோ! நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு! சிவ சிவ! ச்சே! ராகவா ராகவா! :))

    ReplyDelete
  15. @லலிதாம்மா
    //சங்கரரின் தோடகரை என் மனத்தின் ஒரு
    மூலைக்குத தள்ளிவிட்டாரே "திரு குறிப்பு"!//

    தோடகாச்சாரியாரா? புரியலையே! அவருக்கும் திருக்குறிப்புத் தொண்டருக்கும் எப்படி ஒற்றுமை? அவர் ஆதிசங்கர குரு பக்தியோடு சரி அல்லவா! உயிரை மாய்த்துக் கொள்ளத் தணீந்தாரா என்ன?

    ReplyDelete
  16. சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள் முடிந்தால் ஜய்யப்பன் திருவிளையாடல்களை எழுதமுடியுமா!சாஸ்தாவின் புகழ் சர்ச்சையில் இருக்கிறது!

    ReplyDelete
  17. ஒற்றுமை:
    தோடகர் படிப்பறிவற்றவர்;அதனால் மற்ற அடியார்களின் ஏளனத்துக்கும் கேலிப் பேச்சுக்கும் ஆளாகி வருந்தியவர்.

    குருவுக்குச் சேவை செய்வதில் ,முக்கியமாக துணி தோய்த்துக் கொடுப்பதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்

    எவ்வித பலனும் எதிர் பார்க்காமல் தானுண்டு தனசேவையுண்டு என்று கண்ணுங்கருத்துமாய் சேவை செய்தவர்.

    வேற்றுமை:
    பிராம்மணர்

    சங்கரருக்கு மட்டும் துணி தோய்த்தவர்

    உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணியதில்லை;வாய்ப்பும் இல்லை;
    அவர் துணி தோய்த்துக்கொண்டிருக்கும் சமயத்தில் சங்கரர் தன கருணையால் ஞானமளித்து ''தோடகாஷ்டகம்'' பாடவைத்து மற்ற (கேலி செய்த)சீடர்களைத் தலை குனிய வைத்தார்;ஒரு நல்ல நாளில் தீக்ஷை அளித்து சன்யாசி ஆக்கினார்

    திருகுரிப்பின் துணி தோய்க்கும் சேவையைப் படித்ததும் என்மனத்தில் தோன்றிய முதல் உருவம் தோடகர்தான்!என் ஆழ் மனத்தில் சங்கரர் சிவனாகவே பதிந்திருக்கிராரோ?

    திருக்குறிப்பின் கதைபடித்ததும் தோடகர் என் மனத்தின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது நியாயந்தானே?

    ReplyDelete
  18. @லலிதாம்மா
    //வேற்றுமை:
    பிராம்மணர்
    சங்கரருக்கு மட்டும் துணி தோய்த்தவர்//

    :)
    அதனால் என்ன லலிதாம்மா? இதெல்லாம் வேற்றுமையாகி விடாது!
    * திருக்குறிப்புத் தொண்டர் = பிராமணர் அல்லாதார்;
    * தோடகர் = பிராமணர்
    என்றாலும் கூட, இருவரின் மனப்பான்மையும் சேவை மனப்பான்மையே! அதனால் இதை வேற்றுமை என்று அடியேன் அடக்க மாட்டேன்!

    * தோடகர் = குரு சேவை மட்டும் செய்தார்
    * திருக்குறிப்புத் தொண்டர் = அடியார் சேவை செய்தார்
    என்று வேண்டுமானால் சொல்லலாம்! இருவருமே கல்லாத எளியர்கள் தான்! ஆனால் இருவருமே தொண்டில் வைராக்கியம் மிகுந்தவர்கள்!

    துணி துவைத்துக் கொடுப்பதில் தான் ஒற்றுமை என்பது இப்போது புரிந்தது! எடுத்துச் சொன்னமைக்கு நன்றி!

    //திருக்குறிப்பின் கதைபடித்ததும் தோடகர் என் மனத்தின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது நியாயந்தானே?//

    நியாயம் தான்!

    ReplyDelete
  19. //சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள்//
    @நேசன் - நன்றி!

    //முடிந்தால் ஜய்யப்பன் திருவிளையாடல்களை எழுதமுடியுமா!//

    :)
    லயித்தவர் எழுதினால் நலமல்லவா?

    //சாஸ்தாவின் புகழ் சர்ச்சையில் இருக்கிறது!//

    இறைவனின் புகழ் என்றுமே மங்குவதில்லை!
    இறைவனைச் சுற்றியுள்ள கூட்டத்தின் புகழ் தான் பொங்குகிறது-மங்குகிறது! அதனால் இறைவனின் புகழே மங்குவது போல் ஒரு தோற்றம், அவ்வளவே!

    சுட்டாலும் சங்கு வெண்மை தரும்!

    ReplyDelete
  20. //சிவத்தொண்டு என்ன என்பதை அழகாக விளக்கினீர்கள் முடிந்தால் ஜய்யப்பன் திருவிளையாடல்களை எழுதமுடியுமா!சாஸ்தாவின் புகழ் சர்ச்சையில் இருக்கிறது!//

    நான் வழிமொழிறேன். இது என் கன்னிப் பின்னூட்டம். ஐயனாரின் புராண மயமாக்கப்பட்ட வடிவமே ஐயப்பன் என்றும் ஐயப்பன் மலைவாழ்மக்களின் (முன்னாள் ?) காவல் தெய்வம் என்றும் கேள்வி....

    ReplyDelete
  21. //வழிமொழிறேன்//

    தப்பு பண்ணக் கூடாது ன்னு நெனெச்சேன். 'கி' ய வுட்டுட்டேனே...

    ReplyDelete
  22. வணக்கம் ரவி,
    நல்ல பதிவு. வாசித்து பல புதிய சங்கதிகளைத் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    உங்களின் இந்தக் குருபூசைப் பதிவைப் வாசித்த போது பல பழைய நினைவுகள் வந்தது.

    நாங்கள் முந்தி யாழ்ப்பாணத்தில் பள்ளிக்கூடங்களில் படித்த காலத்தில் ஒவ்வொரு வருடமும் நான்கு நாயன்மார்களின் (அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) குருபூசை எமது பள்ளிக்கூடத்தில் கொண்டாடப்படும். அன்றைய தினம் பள்ளிக்கூடம் துவங்கும் போது அவர்கள் அருளிய பாடல்களைப் படித்தும், அவர்கள் பற்றி மாணவர்கள் பேச்சு , அதன் பின் அவல், இன்ன பிற பரிமாறப்படும்.

    யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகமான சைவப் பள்ளிக்கூடங்கள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடுத்து வந்தன.

    ஆறுமுக நாவலர் தான் இவ் வழக்கத்தை ஈழத்தில் துவக்கி வைத்தார் என நம்புகிறேன்...

    உங்களின் பதிவை வாசித்த போது கன நாட்களுக்குப் பிறகு இந்த பழைய குருபூசை நினைவு மனதில் எழுந்தது...

    ReplyDelete
  23. “நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன "திருக்குறிப்பே"?
    They also serve who only stand and wait!”

    U r writing these words often: using it as if it is the motto of ur blog.

    Periyaazhvaar's paasuram-end and Milton's sonnet-nd - r poles apart in meaning.

    How come the connection?.

    Milton begins his famous sonnet ‘On His Blindness’ accusing God of depriving him of vision at young age. He had gone blind as a result of studies at night in dim candlelight for many years: he had to read volumes and volumes of Greek and Latin books to fill his intellect with all mythologies b4 beginning his Paradise Lost. Alas, when he began PL, he had gone blind He had to dictate the whole PL to his daughter who wrote. During those struggling years, he wrote this sonnet complaining to God that he was a devote Christian praying Him day and night and yet, He had made him blind.

    Thus he began his sonnet, and courses through it and finally arrives at the solution, or rather, realisation in ur quotation.

    A sonnet begins with a problem, and explains its causes and effects, and in its last two lines, which r called sestet, it attempts to resolve, or arrive at a conclusion. The problem no longer exists when we closes the sonnet.

    Milton's conclusion is that by going blind, his service/devotion to God can’t b said to come to an end. His blindness won’t drive a wedge between his God and him. In the world, as u know, many people become atheists if they meet with a tragedy whose effect they cdn’t overcome; they put the blame on God saying: in spite of my deep devotion, God caused it; and never attempted to alleviate my suffering. They lose their belief. For Milton, no such loss of belief. He was confident he wd continue to serve his God even in blindness.. Thus he offers hope to all those who r handicapped in one way or other.

    Ur story of this Nayanaar fits well with this theory of Milton. But not with the Periyaazhvaar's paasuram.

    I reproduce both paasuram and the sonnect here in next mge. Pl wait.

    -- Jo Amalan Rayen Fernando

    Abt this Nayanaar too, will write

    ReplyDelete
  24. சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் !
    உலகு
    தன்னை வாழ நின்ற நம்பீ! தாமோதரா! சதிரா!
    என்னையும்
    என்னுடைமையையும் உன் சக்கர பொறி யொற்றிக் கொண்டு
    நின்னருளே புரிந்திருந்தேன் !
    இனி என் திருக்குறிப்பே?

    Sonnet:

    On his blindness

    When I consider how my light is spent,
    Ere half my days, in this dark world and wide,

    And that one talent which is death to hide,
    Lodged with me useless, though my soul more bent
    To serve therewith my maker, and present
    My true account, lest he returning chide,
    Doth God exact day-labour, light denied?
    I fondly ask; but Patience to prevent
    That murmur, soon replies, God doth not need
    Either man's work or his own gifts, who best
    Bear his mild yoke, they serve him best, his state
    Is kingly. Thousands at his bidding speed

    And post o'er land and ocean without rest:
    They also serve who only stand and wait.

    ReplyDelete
  25. @வெற்றி அண்ணா, நலமா? ஈழத்தில் உங்கள் பள்ளிக் கால நினைவுகளை இந்தப் பதிவு கிளறி விட்டமைக்கு, மகிழ்ச்சி! உம்...ஆறுமுக நாவலர் போன்றவர்கள் அதி தீவிர சைவர்கள் எனினும், ஈழப் போராட்டத்தில் அவர்களும் இந்நேரம் இருந்திருந்தால், விளைவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமோ என்று ஆதங்கத்துடன் எண்ணத் தோன்றுகிறது!

    ReplyDelete
  26. @Jo
    Thanks for your detailed comments on Sonnet and Paasuram!
    Both are different and Whatz on my blog header is 2 different lines that have attracted me! Thatz it!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP