Tuesday, March 27, 2007

படகோட்டியா? பரதனா?? - இராமன் மனம் யாருக்கு?

நாம் எல்லாம் விமானத்தில் சொந்த ஊர் போய் இறங்கியவுடன் என்ன செய்வோம்? விமான நிலையத்திலிருந்து நேரே வீட்டுக்கு தானே ஓட்டம்? பின்பு அவரவர் வசதிற்கு ஏற்ப, குளித்து விட்டோ குளிக்காமலோ, இட்லி,வடை, (கவனிக்கவும் "இட்லிவடை" இல்லை! "இட்லி கமா வடை" :-)
தோசை, சாம்பார்,காரச்சட்னி, புதினாச் சட்னி,தேங்காய்ச் சட்னி,வெங்காய்ச் சட்னி என்று வெட்டி விட்டு தானே மறு வேலை? அப்புறம் தானே நண்பர்களைப் பார்க்கப் போவதோ, இல்லை பதிவர் மாநாடோ, மற்றது எல்லாம்?

ஆனால் ராமன் என்ன செய்தான்?
அவனும் புஷ்பக விமானத்தில் வந்து இறங்குகிறான். பதினாலு ஆண்டுகள் கழித்து ஊருக்கு வருகிறான். நேரே எங்கு போகிறான்?

இராமாயணம் போல் புகழ் அடைந்த காவியமும் இல்லை!
இராமாயணம் போல் சர்ச்சைக்குள்ளான காவியமும் இல்லை!
அப்படி ஒரு ராசி குணசீலனான இராமனுக்கு! எந்த இந்திய மொழியாகிலும் சரி, அதில் மகாபாரதம் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் இராமாயணம் இருக்கும்! - ஏன்?

காவியமாக இல்லையா?
சரி, இலக்கியங்களிலோ இசையிலோ விரவி வரும். அதுவும் இல்லையா?
சரி, கிராமத்து எசப்பாட்டாக இருக்கும். இப்படி எல்லார் மனத்துக்கும் இனியவன் தான் நம் இராமன்!
இன்று அவன் பிறந்த நாள்; இராம நவமி! (March 27, 2007)

So, Happy Birthday - ராமா!
அட, அவனுக்கு மட்டும் தான் பிறந்த நாளா?
Happy Birthday - பரதா, இலக்குவா, சத்ருக்கனா!

எனக்கு என்னவோ, இராமனைப் பற்றிப் பேசுவதைக் காட்டிலும், இன்று அவன் அன்பர்களைப் பற்றிப் பேசவே மனம் விழைகிறது.
அனுமனைப் பற்றி பேசலாம் தான்; ஆனால், அனுமனுக்கோ இராமனைப் பற்றிப் பேசுவது தான் பிடிக்கும்! இராமனுக்கோ அனுமனைப் பற்றிப் பேசினால் தான் மனம் களிக்கும்! என்ன செய்வது?.... ஹூம்...

இராம காதையில், இராமனுக்குக் கூடப் "பெருமாள்" என்ற பட்டம் கிடையாது!
இராமப் பெருமாள் என்று யாராச்சும் சொல்கிறார்களா?
ஆனால், எண்ணி இரண்டே இரண்டு பேருக்குத் தான் பெருமாள் என்ற சிறப்பு.
* இளைய பெருமாள் - இலக்குவன்
* குகப் பெருமாள் - குகன்


குலசேகரர், பெரியாழ்வார், திருமங்கை முதலான ஆழ்வார்களும், இராமானுசர், தேசிகன் முதலான ஆச்சாரியர்களும் குகனைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.
கூர் அணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீர் அணிந்த தோழமை கொண்டதும் ஓர் அடையாளம்
என்று இராமனின் அடையாளங்களுள் ஒன்றாக, குகனையே குறிக்கிறார் பெரியாழ்வார்.

0171

குகனைப் பற்றி நம் எல்லாருக்குமே தெரியும்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் கதையில் ஒரே ஒரு அத்தியாயம் வருகிறானா இந்தக் குகன்? அவனுக்குப் போய் இவ்வளவு சிறப்பு ஏன்?

முருகப் பெருமானுக்கும் குகன் என்ற பெயருண்டு.
பெரிய மலைகள் இருந்தும் அங்கு வாழாது,
ஆன்மா என்னும் குகையில் வாழ்பவன் தான் குகன்!
நிடத நாட்டுக் காட்டுத் தலைவன்; கங்கைக் கரைப் படகோட்டி. இராமனிடம் பார்க்காமலேயே பேரன்பு கொண்டு இருந்தவன்.
புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.


இலங்கையில் வெற்றி பெற்ற பின், எல்லாரும் ஊர் திரும்புகிறார்கள் புஷ்பக விமானத்தில்! பெரும் களைப்பு; வழியில் பரத்துவாச முனிவரின் ஆசிரமத்தில் சற்றே ஓய்வு! ஆனால் ஓய்வெடுக்க எல்லாம் நேரமே இல்லை. உடனே விரைந்தாக வேண்டும்.
பதினாலு ஆண்டு காலம் முடிய, இன்னும் கொஞ்ச நாட்களே உள்ளன.

அயோத்திக்கு வெளியே, நந்திக் கிராமத்தில் பரதன் காத்துக் கொண்டு இருக்கிறான். சமயத்துக்குள் வரவில்லை என்றால் தீக்குளித்து விடுவான்!
அப்புறம் என்ன வாழ்ந்து, என்ன பயன்?
விமானத்தில் சென்றாலும் நேரம் ஆகிறதே; அதை விட விரைந்து சென்று, செய்தி சொல்ல வல்லவர் யார்? சொல்லின் செல்வர் தானே!


"ஆஞ்சநேயா, எனக்குத் தயை கூர்ந்து ஒரு உதவி செய்வாயா?"

"சுவாமி, என்ன இது பெரிய வார்த்தை? அடியேனுக்கு ஆணையிடுங்கள்!"

"அப்படி இல்லை ஆஞ்சநேயா! நீ இது வரை செய்த உதவிகளுக்கே, நான் எத்தனை பிறவி எடுத்து உனக்குக் கைம்மாறு செய்யப் போகிறேனோ என்னவோ?
என்னமோ தெரியவில்லை, உயிர் காக்கும் பொறுப்பெல்லாம் உன்னிடமே வருகிறது.
நீ பறந்து சென்று...’பின்னால் அனைவரும் வந்து கொண்டே இருக்கிறோம். அப்படியே தாமதம் ஆனாலும் அவசரப்பட்டு விட வேண்டாம்’என்று பரதனுக்கு அறிவிப்பாயாக! இந்தா முத்திரை மோதிரம்! செல்! சென்று சொல், ஒரு சொல்!"

ஆனால் இராமன் இன்னும் முழுக்க முடிக்கவில்லை; ....இழுத்தான்.
"ஆங்...மாருதீ, மறந்து போனேனே! போகும் வழியில் கங்கையை ஒட்டிச் சிருங்கிபேரம் என்ற ஊர் வரும். அங்கு என் அன்பன், அடியவன், குகன் இருக்கிறான். அன்று என்னையே கரையேற்றியவன் தான் இந்தக் குகன்.
அவனுக்கும் "வந்து கொண்டே இருக்கிறோம்", என்று அறிவித்துவிட்டே நீ செல்வாயாக!"

அனுமன் இந்த அவசரத்தில் இது தேவையா என்பது போல் ஒரு கணம் தயங்குகிறான்!

"ஆஞ்சநேயா...தம்பி பரதனின் உயிர் முக்கியம் தான். கால அவகாசமும் குறைவாகத் தான் உள்ளது! ஆனால் அதற்காகக் குகனைப் பார்த்தும் பார்க்காது போல் செல்ல முடியுமா?
எனவே, குகனிடம் ஓடிக் கொண்டே சொல்லி விடு. சொல்லிக் கொண்டே ஓடி விடு!"

"இன்று நாம் பதி போகலம், மாருதி! ஈண்டச்
சென்று, தீது இன்மை செப்பி, அத் தீமையும் விலக்கி,
நின்ற காலையின் வருதும்" என்று ஏயினன்...

சிந்தை பின் வரச் செல்பவன்,
குகற்கும் அச் சேயோன்
வந்த வாசகம் கூறி
, மேல் வான்வழிப் போனான்.



0169

யாருக்கு வரும் இந்த கருணை? இன்று அவனவன் எல்லாவற்றிலும் "தானே" இருக்க வேண்டும்;
அடுத்தது "தன் குடும்பம்" தான் இருக்க வேண்டும் என்று அலைகிறான். முதலில் தன் முனைப்பு, பின்பு தமர் முனைப்பு!
தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவை உண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம் கொண்டோன்
, என்கிறார் பாரதிதாசன்.

இராமனுக்கு, இழந்தது எல்லாம் இப்போது கிட்டி விட்டது. வேலையும் முடிந்து விட்டது. இனி யார் தயவும் தேவை இல்லை.
அண்ட பகிரண்டமும் அஞ்சும் இலங்கேஸ்வரனையே வென்றாகி விட்டது!
அயோத்திக்குக் கீழே உள்ள நாடுகள் எல்லாம் இனி நட்பு நாடுகள் தான்! கூட்டணி பலமாக அமைந்து விட்டது! :) இனி யார் என்ன செய்ய முடியும்?

எங்கோ ஒரு படகோட்டி, எப்போதோ படகு வலித்தான் - இது என்ன பெரிய விஷயமா? இதை விடப் பல பேர், பெரிய உதவி எல்லாம் செய்துள்ளார்கள்.
அப்படி இருக்கும் போது, ஏன் இந்தக் குகன் மேல் மட்டும் அவ்வளவு கரிசனம்? - அதுவும் தம்பியின் உயிரைக் காக்கும் தருணத்திலும்?


அங்கு தான் மறைபொருள் உள்ளது. பொதுவாக இராமாவதாரத்தில், தன்னை இறைவனாக வெளிக்காட்டாமல், மனிதனாக வாழ்ந்து காட்டியதாகச் சொல்லுவார்கள். ஆனால் குகன் போன்றோரின் விடயங்களில் தான், இந்த தெய்வத்தன்மை தன்னையும் அறியாமல் வெளிப்பட்டு விடுகிறது!

1. எளியவர்க்கும் எளியவனாகும் எளிவந்த தன்மை.
2. அதே சமயம், தன்னை எளிதில் வந்து அடையும்படி,
தன் நிலையையும் வைத்துக் கொள்வது.
இறைவனின் திருக் கல்யாண குணங்களில் இவ்விரண்டும் தலையாய குணங்கள். (வடமொழியில், இந்தக் குணங்களுக்குச் சிறப்புப் பெயர் சொல்லுவார்கள், சட்டென்று நினைவுக்கு வரவில்லை; அறிந்தவர் சொல்லுங்களேன்)
தன்னையே தன் அன்பர்களுக்குக் கொடுத்து விடும் குணம்!
தம்மையே தம்மவர்க்கு நல்கும் தனிப் பெரும் பதம்! - எது அது?

மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை,
முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத், தானே
இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை,
'ராமா' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக், கண்களின் தெரியக் கண்டான்!


காட்டு வாசி; கறியும் மீனும் உண்பவன்; குளித்தானோ இல்லையோ; தாழ்ந்த சாதி; தொட்டால் தீட்டு! - இப்படி எல்லாம் பார்க்க முடிந்ததா இராமனால்? தொட்டால் தீட்டு! - ஆனால் தழுவினால் கூட்டு!! :))

ஏன் இப்படி?...
ஏன் என்றால், இறை அன்புக்கு வரை இல்லை, முறை இல்லை!
சாதி இல்லை, சுத்தம் இல்லை!
மனிதன் இல்லை, மிருகம் இல்லை!
உயர்வு இல்லை, தாழ்வும் இல்லை!
இதுவே இராம காதையின் சூட்சுமம்.

அன்பு திரும்பக் கிடைக்குமா என்று கூடத் தெரியாமல், அன்பு செய்வதே - குகன்! "நின் அருளே புரிந்திருந்தேன், இனி என்ன திருக் குறிப்பே?"
- இது பெரியாழ்வார் திருமொழி
- இது குகப் பெருமாளின் இதய மொழி
- இது மாதவிப் பந்தலின் முகப்பு மொழி!

அன்பே சிவம். அன்பே இராமம்!
குகப் பெருமாள் திருவடிகளே சரணம்!
Read more »

Saturday, March 24, 2007

மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!

என்னாது?
பெருமாள் மட்டையால் அடி வாங்கினாரா? இன்னாப்பா சொல்ற நீ?
கிரிக்கெட் மட்டைய சொல்றியா நீ? வேர்ல்ட் கப்-ல நம்ம பசங்க எல்லாம் கப்-வச்சிட்டாங்களே; டெண்டுல்கர் டக் அவுட் ஆயிட்டாரேன்னு, உனக்கு புத்தி கித்தி ஏதாச்சும் கலங்கிப் போச்சா? சொல்றத தெளிவாச் சொல்லுப்பா!

அட நெசம் தான்பா!
திருவரங்கம் மற்றும் இன்னும் பல கோவில்கள்-ல பெருமாளுக்கு இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் உண்டு, தெரியுமா?
பங்குனி உத்திரம், பங்குனி உத்திரம்-னு ஒரு விழா. இந்த வருடம் ஏப்ரல் 1 அன்று வருகிறது.
அன்னிக்கி தான் இந்த காட்சிய கண்கொள்ளாம பார்க்கலாம். எல்லாப் பக்தர்களும் சும்மா ஜாலியா அடிக்கலாம். நீயும் வரியா? பெருமாளைச் சும்மா ஜாலியா நாலு சாத்து சாத்திட்டு வரலாம்?

தர்மத்தின் நாயகனுக்கு தர்ம அடியா? அடப் பாவிங்களா?
சாத்தமுது சாத்தமுது-ன்னு நீ சொல்றப்பவே நினைச்சேன். இப்படிப் பெருமாளைச் சாத்தி விட்டுத் தான் சாத்தமுது-ன்னு சொல்றீங்களாடா?


டேய், டென்சன் ஆவாதடா மச்சான். Freeஆ விடு மாமே-ன்னு ஒரு சூப்பர் பதிவர் சொல்லியிருக்காரு, தெரியுமா!
பெருமாளைப் போய் யாராச்சும் மனசு வந்து அடிப்பாங்களா?
ஆனா இப்படி அடிப்பதற்கு என்றே மட்டையடி உற்சவம்-ன்னு ஒரு உற்சவம் இருக்குடா!
திருவரங்கம் சென்று என்ன தான் நடக்குதுன்னு பாத்துட்டு வருவோம். இன்னா, நீயும் வரியா?


templeFront

திருவரங்கத்தின் அழகனான அரங்கன்
பங்குனி மாதம், பக்கத்து ஊரான உறையூர் சென்று வருகிறான். எதற்கு?
அவன் மேல் காதலால் உருகி நின்றாள் ஒரு மங்கை - சோழர்குல வல்லி, கமலவல்லித் தாயார் என்ற திருப்பெயர்; மகாலக்ஷ்மியின் அம்சம்.
அரங்கன் வருவானா வருவானா என்று கதவருகே நின்று, ஏங்கி ஏங்கி, அவள் கதவைப் போலவே மரத்து விட்டாள்.

அவளை ஆட்கொள்ள வந்தான் அரங்கன்; அவனை, உறையூரே வேண்டிக் கேட்டுக் கொள்கிறது!
"ரங்கா, எங்கள் வல்லியைத் தவிக்க விட்டு விடாதே; அவள் அன்பை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால், ஒரு பெண் கொடியைச் சித்ரவதை செய்தான் அரங்கன் என்று இந்த உலகமே உன்னைத் தூற்றும் படி செய்து விடுவோம்".

அச்சச்சோ! அவன் மார்பில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். மார்பில் மகாலக்ஷ்மி ஆயிற்றே!
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை,
என்றும் இருந்திட ஏது குறை உறையூருக்கு?
அவள் தலை அசைந்து விட்டாள்! இதற்கு இசைந்து விட்டாள்!!
மன்னனாய் வந்த அரங்கன் இப்போது மாப்பிள்ளையாகி விட்டான்.
திருமணம் முடிந்து, மீண்டும் திருவரங்கம் செல்கிறார் புது மாப்பிள்ளை!

வந்தது வினை! புது மாப்பிள்ளை தான் ஏற்கனவே பழைய மாப்பிள்ளை ஆயிற்றே! வரும் வழியில் பழைய கல்யாண மோதிரத்தைத் தொலைத்து விடுகிறார் சுவாமி.

போச்சுடா! திருவரங்கத்தில் மகாலக்ஷ்மி என்கிற அரங்கநாயகி, சும்மா விடமாட்டாளே! பெண்கள் எதை விட்டாலும் விடுவார்கள், செண்டிமெண்டை விடமாட்டார்களே! :-)
"ஏங்க, உங்களுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கவும் இசைந்தேனே! அப்படிப்பட்ட என் மோதிரத்தைப் போய் தொலைத்து விட்டீர்களே! அதே போல் என்னையும் தொலைத்து விடுவீர்களா? ஏங்க...ஏங்க...", என்று அவள் ஏங்கி விடுவாளே!

கணவன் அரங்கனைப் பயம் கப்பிக் கொண்டது.
தி.நகரில் கடைக்கு வெளியே நிற்கும் கணவன்மார்களின் பரிதாபமான முகம் அரங்கனுக்கும் வந்து விட்டது! :-)
பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான். கீழே குனிந்து எல்லோரும் தேடிக் கொண்டே பல்லக்கு செல்கிறது. ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை! என்ன செய்வது, பாவம்?
நீங்களே பாருங்கள் அந்தத் தேடும் காட்சியை!




சரி, வேறு வழியில்லை!
கோவிலுக்குள் அவசர கதியில் புகுந்து அரங்கநாயகியின் சந்நிதிக்குள் ஓடோடி வருகிறான்.
மகாலக்ஷ்மி ஒப்புக்கு இசைந்தாலும், மனதுக்கு ஒப்பவில்லை போலும்.
அரங்கன் வரும் நேரம் பார்த்து, கதவு மூடிக் கொள்கிறது!
சர்வேஸ்வரன், உலக நாயகன், தன் வீட்டுக்குள் கூட நுழைய முடியாது திணறுகிறானே! கதவைச் சாத்தி விடுகிறாள் அரங்கநாயகி. ஐயோ பாவம்!
பாருங்கள் காட்சியை! காணக் கிடைக்காத காட்சி!
வாசவன் வாசற்படியில் காத்துக் கிடக்கும் காட்சி!!

srirangam_renganathar_enlar


சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர்.
தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.
பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.
தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல் வாங்குகிறார்.
சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.
உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...
படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....
இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான் போங்க!


தாயார் சார்பாக உள்ள மக்கள் எல்லாரும், "ரங்கா, எங்கள் பெண்ணையா ஏமாற்றுகிறாய்", என்று அடிதடிக்குத் தயாராகிறார்கள்!
பூக்களாலும், பழங்களாலும், வெண்ணெய் உருண்டையாலும்
போட்டுத் தாக்கு! இது தான் சாக்கு!
சிறு வயதில் வேண்டிக் கொண்ட பின்பும் தேர்வில் ஃபெயிலான மக்கள்ஸ் எல்லாம், இன்னைக்குன்னு பாத்து தாயார் பக்கம் சேர்ந்துக்கறாங்க! பாவம் பெருமாள்!
அடுத்த அடி என்ன தெரியுமா? மட்டையடி!

என்ன மட்டை? கிரிக்கெட் மட்டையா?
இல்லை இல்லை...
மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து!
அதுவே மட்டையடி உற்சவம்.
கணவன் மனைவி கலாட்டா என்ன ஆனது? அரங்கனுக்குக் கதவு திறந்ததா?
பங்குனி உத்திரத்தின் புகழ் பெற்ற சேர்த்தி சேவை.
எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா?....

(Video Courtesy: oppiliappan.org)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP