நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா?
ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் இவருக்கு மட்டும் என்ன அப்படி உசத்தி? பக்தர்களுடைய பக்தியில் உன் பக்தி உசத்தி, என் பக்தி கொஞ்சம் தாழ்த்தி என்றெல்லாம் பாகுபாடு கிடையாதே!
அப்படி இருக்க, எம்பெருமானிடம் ஆழ்ந்தவர்களான ஆழ்வார்கள் இடையே, பெரிய/சிறிய அடைமொழிகள், ஏற்றத் தாழ்வுகள் எப்படி வரலாம்? - பார்ப்போம் வாருங்கள்!
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (Jun 26, 2007)
அதே போல், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் - நாதமுனிகள் பிறந்த தினம் - (Jun 28, 2007)
மேலும் ஆனி மூலம் - மாணிக்கவாசகர் குரு பூஜையும் கூட!
- இன்று நாம் எல்லா ஆழ்வார்களின் பிரபந்தமும் படிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த நாதமுனிகள் தான்! தொலைந்த பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!
பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்! இசைப்பாட்டு பாடித் துதிக்கும் அரையர் சேவை என்னும் முறையை அறிமுகம் செய்தவர்! இவருக்கும் பெரியாழ்வாரிடம் அப்படி ஒரு ஈடுபாடு! பார்க்கலாம் வாருங்கள்!
ஆழ்வார்களில், வைணவத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தவர் நம்மாழ்வார்! அவர் திருவாய்மொழி தான் எல்லாவற்றுக்கும் சாரம்!
வேதத்தையே தமிழ் செய்த மாறன் சடகோபன் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!
அவருக்கு அடுத்து திருமங்கை ஆழ்வார். இவர் ஒரு பெரும் நிறுவனத்துக்கு மேலாளர் போல், வைணவம் என்றும் செழித்திருக்கச் செய்தவர்;
பாசுரங்கள் பாடி விட்டதோடு மட்டும் நில்லாது, அடிப்படை வசதிகள் (Basic Infrastructure) செய்து வைத்தவர்! - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!
ஆழ்வார்களிலேயே முதலாமவர் பொய்கையாழ்வார்.
திருக்கோவிலூரில் அவர் பாடிய பாசுரம் தான் முதல் பிரபந்தம்! அவருடன் கூடச் சேர்ந்து பாடினர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்கிற இருவரும்! - ஆனால் இவர்களுக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!
பெருமாளையே படுக்கையை விட்டு எழுப்பி, மணிவண்ணா, என்னைப் பின்தொடர்ந்து வா, என்று அதிகாரமாய்க் கட்டளையிட்டவர் திருமழிசை ஆழ்வார் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!
இறைவனையே ஆண்டவள் ஆண்டாள்!
சரி இவளுக்காவது "பெரிய" பட்டம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை! அவளே "பட்டர் பிரான் கோதை சொன்ன" என்று பெரியாழ்வாரின் Initialஐயே தனக்கும் போட்டுக் கொள்கிறாள்!
One and Only One! - பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!
மதுரை நகரம். மல்லி வாசம். கூடல் அழகர்!
பாண்டியன் சபையிலே பரமாத்மா யார் என்று பரத்துவ நிர்ணயம் செய்து,
கிழி அறுத்து, வெற்றி வாகை சூடினார் பட்டர்பிரான்; அரசனின் அன்பு வற்புறுத்தலால் யானை மேல் ஏறி, நகர் வலம் வருகிறார்!
முன்னே பின்னே யானை மீது ஏறியிருந்தா தானே! அப்படி வலம் வரும் அளவுக்குப் பணபலம்/படைபலம் உள்ளவர் அல்லவே!
ரொம்பவும் கூச்சப்பட்டு அமர்ந்து கொண்டு, திருவெட்டெழுத்து ஓதிய வண்ணம் வருகிறார், விஷ்ணுவைச் சித்தத்தில் வைத்த விஷ்ணுசித்தன்.
தன் பிள்ளை ஊர் மெச்ச வரும் காட்சியைக் காண, எந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் தான் மனசு துடிக்காது?
மின்னல் போல் பளிச் என வானத்தில் தோன்றி, சூரியன் போல் பிரகாசித்தார் பெருமாள். கருட சேவையாக! காணக் கிடைக்காத காட்சி...
மன்னனைக் கண்டால் புலவருக்கு என்ன தோன்றும்? - பரிசு, பொற்கிழி, பொன்னாடை?
மந்திரியைக் கண்டால் மாவட்டத்துக்கு என்ன தோன்றும்? - கமிஷன், காண்ட்ராக்ட்?
காதலியைக் கண்டால் காதலனுக்கு என்ன தோன்றும்? - டேய், வாயில வாட்டர் ஃபால்ஸ் வருது பார்! வாயை மூடு என்ற சிவாஜி பட வசனம் :-)
தாயைக் கண்டால் குழந்தைக்கு என்ன தோன்றும்? - பால், பட்சணம், கொஞ்சல்?
எல்லாம் சரி!....ஆனால் தாய்க்குக் குழந்தையைக் கண்டால்?... அதே தான் பட்டர் பிரானுக்கும் தோன்றியது!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் - செவ்வடி செவ்வி திருக்காப்பு!
நான் இருக்கேன் உனக்குப் பிரிவின்றி - ஆயிரம் பல்லாண்டு!
இலட்சுமி மார்பில் இருந்து காப்பாள் - ஆயிரம் பல்லாண்டு!
வலப்பக்கம் சக்கரமும், இடப்பக்கம் சங்கும் எப்போதும் காக்கும் - ஆயிரம் பல்லாண்டு!
கடவுளைக் கண்ட மாத்திரத்தில், கை கூப்பக் கூட இல்லை!......மாறாக, "ஆகா...பேரழகுப் பெட்டகமே! நல்லா இரு! அமோகமா இரு! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழு! என்று கடவுளுக்கே ஆசீர்வாதமா?
அட, இது என்ன பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?
உள்ளேயும் மரணம் கூடாது, வெளியேயும் கூடாது...இல்லாக்காட்டி
என்னை மிஞ்சுவார் எவரும் இருக்கக் கூடாது...இல்லாக்காட்டி
ஏழடுக்கு மாளிகையில்....என் பேரனுக்குப் பேரன்....தங்கக் கிண்ணத்துல பால் குடிக்கறத பாக்கணும் - இப்படி எல்லாம் வரம் வாங்கறத வுட்டுபுட்டு,
வரம் தரும் வரதராஜனையே நல்லா அமோகமா இரு-ன்னா என்னா அர்த்தம்?
- பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரேப்பா! தனக்கென்று மோட்சம் கூடக் கேட்கவில்லை! வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!
ஐயோ, குழந்தை ஊர் அறியத் தோன்றியதே! அந்த அழகே வெட்கப்படும் அழகனாயிற்றே அவன்! தோள் கண்டார் தோளே காண்பாரே!
என்ன கண்ணேறு படப்போகுதோ? திருஷ்டி கழிக்கணும் மொதல்ல! திருவந்திக்காப்பு செய்ய வேணும் உடனே!
அடேய் சக்கரமே, அடேய் சங்கே, அடே கருடா...
தூங்கிட கீங்கிடப் போறீங்க...குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோங்கடா!
என் கண்ணனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுது...உங்கள சும்மா விடமாட்டேன்!
எவ்வளவு 'தில்' இருந்தா, சகல சக்தி படைத்த சக்கரத்தாழ்வாரையே, இப்படி மிரட்டுகிறார் நம்ம பட்டர் பிரான்? - அதான் இவர் பெரிய ஆழ்வார்!
உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சாரங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல் பள்ளியறைக் குறிக்கோண்மின்!
இப்படித் தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார் ஆனார்!
எந்த ஆழ்வாரின் பிரபந்தங்களை ஓதுவதற்கு முன்னரும், இந்தத் திருப்பல்லாண்டை சொல்லி விட்டே, மற்றவற்றை ஓத வேண்டும் என்பது கோவில் மரபு ஆகி விட்டது! அது மட்டுமா?......................
மற்ற ஆழ்வார்கள் எல்லாம், கண்ணன் வராவிட்டால்....
ஒன்று தூது அனுப்புவார்கள், இல்லை இப்படி என்னை வதைக்கிறானே பாவீ.... என்று வசைமாரி பொழிவார்கள்!
ஆனால் யசோதை மட்டும் தான்,
"கண்ணனை வீட்டுக்குள் பூட்டியும் வைக்க முடியாது. அப்படி செய்தால் உலக அனுபவம் அவனுக்கு இல்லாமல் போய்விடும்! அய்யோ வெளியில் சென்றானே, இன்று எந்தப் பாவி எந்த ரூபத்தில் குழந்தையைச் சூழ்ந்தானோ" - என்று தினம் தினம் செத்துப் பிழைத்தாள், ஓராயிரம் முறை!
அப்படியே தான் பெரியாழ்வாரும் செத்து செத்துப் பிழைக்கிறார், கண்ணனைப் பற்றிய கவலையில்!
அவன் பிறந்த நாளை அக்கம் பக்கத்தார்க்கு நேரடியாகச் சொன்னால், கம்சன் கண்டு பிடித்து விடுவானோ என்று பயப்படுகிறார்! அதனால் "அட்டத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்" என்கிறார்!
ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள் எது? - முன்னிருந்து கணக்கு போட்டா ரோகிணி - பின்னாடி இருந்து கணக்கு போட்டா திருவோணம்! கம்சனும் அவன் ஆளுங்களும் குழம்பட்டும்! நாம குழந்தையின் பிறந்த நாளைக் கொஞ்சம் மறைஞ்சே கொண்டாடுவோம் - என்று அப்படி ஒரு பரிவு பட்டர் பிரானுக்கு!
ஷைலஜா ஒரு பதிவில் கதை போல் சொல்லி இருந்தார்கள்; மிக வயதான ஒரு அம்மா, புகைவண்டி Upper Berth-இல் தூங்கும் தன் "ஐம்பது வயதுக் குழந்தை", எங்கே புரண்டு விழப் போகிறானோ என்று பயந்தார்களாம்!
எத்தனை முறை நம் வீட்டிலேயே, நம்ம அம்மா,
"டேய்...பாத்து போய் வாடா, ரோடு க்ராஸ் பண்ணும் போது ஜாக்கிரதை!", என்று இந்த வயதிலும் சொல்லுகிறார்கள்! :-)
- இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்!
- ஏனையோர் தங்களைத் தலைவியாக்கிக் கொண்டு, தலைவனைச் சேர விரும்பி இருக்க, இவர் மட்டும் கடமையை மட்டுமே கைக்கொண்டு, கைங்கர்யம் புரிந்ததால் பெரிய ஆழ்வார்!
- ஜனகன் வில் தூக்கும் போட்டி வைத்து பின்னர் தான் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். ஆனால் இவரோ போட்டா போட்டி எல்லாம் எதுவும் வைக்காது, பெருமாளை ரொம்பவும் வருத்தாது, மகளைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார். அவன் செல்வம் செழித்திருக்க, திருவை அவனுக்குக் கொடுத்ததால் பெரிய ஆழ்வார்!
- பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
- ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
- இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்!
கீழே பாட்டைப் பாருங்கள்! இந்தப் பாட்டு தான், ஏன் "பெரிய" ஆழ்வார் என்பதற்கு முக்கியமான பிரமாணம்!
இதைப் பாடியவர், மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சார்யர்! - திருவரங்கக் கோயிலில் தமிழ் வழிபாட்டுக்கு இடைஞ்சல் வந்த போது, தமிழைத் தாங்கிப் பிடித்தவர்! நீங்களே ஒரு முறை வாய் விட்டுப் படியுங்கள்!
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வஅளவு தானன்றி - பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
"பெரிய"ஆழ்வார் என்னும் பெயர்!
மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!
விருத்திபெறு வில்லிபுத்தூர் விளங்கவந்தான் வாழியே!
பெருமைமிகு ஆண்டாளைப் பெற்றபிரான் வாழியே!
பட்டர்பிரான் வாழியே! பட்டர்பிரான் வாழியே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!!