மஜ்ஜை தானம் மகத்தான தானம்! Bone Marrow Donation - Part 2
எங்க வீட்டுல சொன்னா அவ்ளோ தான்! டின்னு கட்டிருவாங்க! இந்த வேலையெல்லாம் உனக்குத் தேவையா-ன்னு கேட்பாங்களே!
அட என்னாங்க அண்ணாச்சி, இப்பிடி வீட்டுக்குப் பயந்த புள்ளையாட்டும் Act கொடுக்கறீங்க? நீங்க "தம்" அடிக்கறது வீட்டுக்குத் தெரியுமா என்ன? :-)
இல்லீன்னா மவுண்ட் ரோடு Casino தியேட்டர் படத்துக்கு எப்பமே வீட்ல சொல்லிட்டுத் தான் வாரீங்களா? :-)
ஹிஹி! கோச்சீக்காதீங்க! சும்மா ஒங்களைச் சீண்டறத்துக்காகச் சொன்னேன்!
நமக்கே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா விஷயம் புரியுது! அப்படி இருக்க, வீட்டில் இருக்கும் அம்மா அப்பாவுக்கோ, இல்லை மனைவிக்கோ முழு விஷயம் தெரியும்-னு எதிர்பார்க்கலாமா? நீங்க பக்குவமா எடுத்துச் சொல்லலாம்!
அதை விட, நீங்க தானம் கொடுத்து விட்டு அப்புறம் வந்து சொன்னீங்கனா, உங்களைப் பார்த்த பின்னாடி அவிங்களுக்கே ஒரு தெம்பு வந்துரும்! சமையலைக் கூட உங்க மேலத் தானே முதலில் டெஸ்ட் பண்ணறது வழக்கம்? அதே போல இதுக்கும் நீங்க தான் முதல் டெஸ்ட்! :-)
பச்சைக் குழந்தைகள் விஷயத்தில் உங்களையும் என்னையும் விட, வீட்டில் இருப்பவங்களுக்குத் தான் கருணையும் அதிகம்! பொறுமையும் அதிகம்! எத்தனையோ விஷயம் செஞ்சிட்டீங்க! இதைச் செய்ய முடியாதா உங்களால?
வலியோ, பக்க விளைவுகளோ இன்றி இயல்பாக எடுக்கப்படும் முறை தான் எலும்பு மஜ்ஜை தானம்-ன்னு சென்ற பதிவில் பார்த்தோம்!
வாங்க, இன்னிக்கு, தானம் கொடுக்கும் போது என்னவெல்லாம் நடக்குது-ன்னு பாத்துருவோம்!
Fear of the Unknown-ன்னு சொல்லுவாங்க! கடவுளைப் பத்தி தெரியாத வரைக்கும் தான் "பய"பக்தி! கொஞ்சம் தெரியா ஆரம்பிச்சிருச்சுன்னா, "பய"பக்தியில், பயம் போயிடும்! பக்தி மட்டும் நின்னுக்கும்! அது போலத் தான் இதுவும்! விஷயம் தெரிஞ்சி போச்சின்னா பயம் போயிடும் :-)
*1. முதலில் பதிவு! அப்பறம் தான் எல்லாம்!சென்ற பதிவில் சொன்னா மாதிரி, முதலில் பெயரைப் பதிஞ்சிக்கிடணும்! இணையத்துலேயே பதிஞ்சிக்கிலாம்!
* இந்தியாவில் பங்களிக்க இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்கா நிரந்தர வாசமா? - இங்கிட்டுப் போங்க!
* அமெரிக்காவில் பதிந்தவுடன், Kit வீடு தேடி வரணுமா? இங்கே!
* அவிங்கவங்க நாட்டில் பங்களிக்க, இங்கிட்டுப் போகலாம்!
*2. பதிஞ்சாச்சு; அப்பாலிக்கா என்ன?நீங்க பதிஞ்சி முடிஞ்சதும், உங்களின் எச்சில் சாம்பிளோ அல்லது இரத்த சாம்பிளோ கொடுக்கச் சொல்லிக் கடிதம் வரும். உங்கள் ஊரிலேயே இருக்கும் ஆய்வுக் கூடத்துக்கு (Diagnostic Lab) அனுப்பி வைப்பார்கள். இதில் உங்கள் செலவு எதுவும் கிடையாது!
* முக்கியமா இங்கிட்டு ஒரு விஷயம் சொல்லிக்கறேன் மக்களே!
நீங்களும் இது தொடர்பா எதற்கும் காசு கொடுக்க வேண்டாம்! அதே போல தானத்துக்காக, உங்களுக்கும் எந்தக் காசும் தரப்பட மாட்டாது! :-)
*3. அடுத்தது தானம் தானா?
அதான் இல்லை! பல நேரங்களில் உங்களுக்கு அழைப்பே வராமல் கூட போகலாம்! பாவம், எந்தக் குழந்தையோ, இல்லை எந்த மனிதரோ? தேவையைப் பொறுத்து தான் அழைப்பு வரும்!
ஒரே குடும்பத்துக்குள் ஒப்புமை (Match) கிடைப்பதே 30% தான்!
அப்படி இருக்க வெளியில் கிடைப்பது அதை விடக் கம்மி!
இப்போ தெரியுதுங்களா, எதுக்கு பெயரையாச்சும் பதிஞ்சி வச்சிக்குங்க-ன்னு திருப்பித் திருப்பி பிளேடு போடறேன்-னு! இதுக்குத் தான்! :-)
*4. சரிப்பா, நான் ஒருத்தருக்கு மேட்ச் ஆயிட்டேன்னு வை! அப்புறமா?
கையைக் கொடுங்க சாமீ! நீங்க ஆசீர்வதிக்கப்பட்டவர்! லட்சத்துல ஒருத்தரய்யா நீர்! உங்களால் ஒரு பிஞ்சு ஜீவன் காப்பாத்தப்படணும்-னு இருக்கு!
நீங்கள் மேட்ச் ஆனீர்கள் என்றால், மருத்துவமனையில் இருந்து உங்களிடம் தொலைபேசுவார்கள்! இன்ன காரணத்துக்குத் தேவை என்பதைச் சொல்லி, உங்களிடம் மீண்டும் ஒரு முறை சம்மதம் கேட்பார்கள்!
தயவு பண்ணி "யோசிச்சி சொல்லறேன்" எல்லாம் சொல்லிடாதீங்க! உண்டு/இல்லை-ன்னு தெளீவா சொல்லிருங்க!
யாரும் உங்களைக் கட்டாயப்படுத்த மாட்டாங்க! தப்பா நினைச்சிக்கவும் மாட்டாங்க! நேரத்தை வீணடிக்காமல், லட்சம் பேரில் வேறு யாரையாச்சும் தேடுவாங்க!
உங்கள் உடல் நிலையோ, அல்லது வேறு குடும்பக் காரணங்களோ உண்மையாகவே தானத்துக்குத் தடையா இருக்கும் பட்சத்தில் சொல்லிவிடலாம்! அவர்களும் பல கேள்விகள் கேட்டு, நீங்கள் அந்த நேரத்தில் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு தான் அடுத்த கட்டத்துக்குச் செல்வார்கள்.
*5. அடுத்தது என்ன? தானம் தான்!
மருத்துவமனையில் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்! நீங்களும் அவர்கள் யாரும் போலி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, தானத்துக்கான அடையாள அட்டையைக் கொடுத்து விடுவார்கள்.
அப்பறம் என்ன? ஆப்பிள் ஜூசு குடிங்க! :-)
மயக்க மருந்து உங்களுக்குத் தரப்படும்! (லோக்கல் அனிஸ்தீஷியா)! ஆனா முழிச்சிக்கிட்டு தான் இருப்பீங்க!
மெல்லிய ஊசிகளால் 3-5% எலும்பு மஜ்ஜை எடுத்துக் கொள்ளப்படும்! அதுவும் நாலு வாரங்களில் மறுபடியும் உங்கள் உடலில் சுரந்து விடும்! மொத்தம் 2-4 மணி நேரம் தான்! அப்பறம் அன்னிக்கே வீட்டுக்கு வந்து விடலாம்!
*6. பக்க விளைவுகள்?ஒங்க தில்லுக்கு அதெல்லாம் ஒன்னுமே வராது! கவலைப் படாதீங்க!
சில மக்கள் மட்டும் சோர்வு/தலைவலி வந்ததாச் சொன்னாங்களாம்! அதான் இப்பல்லாம் சூடான பதிவுக்குச் சூடான பின்னூட்டம் போட்டா, பக்க விளைவுகள் எல்லாம் தானா வருதே! இதெல்லாம் உங்களை அசைச்சிடுமா என்ன? :-)
*7. என்னிடம் எடுக்கப்பட்ட மஜ்ஜை அடுத்து எங்கே போகும்?
அதே மருத்துவமனையிலோ, இல்லை பயனாளி எங்கு அட்மிட் ஆகி இருக்காரோ, அங்கு மருத்துவக் கூரியர் மூலமாக விரைந்து செல்லும்!
ஏற்கனவே அந்த நோயாளி/குழந்தை கீமோதெரப்பிக்கு உட்படுத்தப்பட்டு இருப்பாங்க! இது நோய் வாய்ப்பட்ட செல்களை (diseased cells) ஓரளவு அகற்றி இருக்கும்!
உங்கள் மஜ்ஜையில் கிடைத்த செல்கள் அவர்களுக்கு transfusion மூலமாகச் செலுத்தப்படும்.
இறைவன் அருளால் எல்லாம் நல்லபடியாப் போச்சுனா, சில நாட்களில் ஆரோக்யமான செல்களை அவர்கள் உடம்பும் உற்பத்தி செய்யத் துவங்கி விடும்!
*8. தானம் பெற்றுக் கொள்பவரிடம் நான் பேசலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம்! 3-6 மாதம் கழித்து கடிதமோ, தொலைபேசியோ, இல்லை நேரிலோ சந்திக்க ஏற்பாடு செய்து தருவார்கள்.
*9. இன்னொருத்தருக்கும் தானம் செய்ய என்னைக் கூப்பிட்டால்?
ஹிஹி! பயப்படாதீங்க! அதெல்லாம் கூப்பிட மாட்டாங்க! நீங்க தானம் செய்து முடித்த அடுத்த ஒரு ஆண்டுக்கு, உங்கள் பெயர் தகவற் களஞ்சியத்தில் (Database) இருந்து மறைக்கப்படும்! உங்களை இரத்த தானம் கூட செய்ய வேண்டியதில்லை என்றும் சில இடங்களில் சொல்லி விடுவாங்க.
* 10. இன்னொரு ஈசியான விஷயம் வந்திருக்கு!
அண்மைக் காலத்தில், எலும்பு மஜ்ஜைக்குப் பதிலா, PBSC-ன்னு ஒன்னு வந்திருக்கு! Peripheral Blood Stem Cell-ன்னு பேரு! இதில் தானம் செய்வது இன்னும் எளிது! எலும்பு மஜ்ஜை எடுப்பதற்குப் பதிலா, நம்ம இரத்தத்தில் இருந்தே செல்களை எடுத்துக்கறாங்க!
தானம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன், ஊசி மூலம் மருந்து செலுத்தி, அதிக செல்கள் இரத்தத்தில் உற்பத்தி ஆகுமாறு செய்யறாங்க. பின்னர் ஒரு கையில் இருந்து இரத்தம் எடுத்து நம் கண் முன்னாலேயே கருவிக்கு அனுப்புறாங்க.
அது செல்களை மட்டும் பிரித்து எடுத்துக் கொண்டு விடும்! மீதி இரத்தத்தை நம் அடுத்த கைக்கு அனுப்பி விடுவார்கள். இதில் மயக்க மருந்தோ, மஜ்ஜை எடுப்பதோ இல்லாமல் இன்னும் எளிதாகப் போய் விடுகிறது.
ஒரே ஒரு விஷயம்: இது இன்னும் பரவலாக்கப் படவில்லை!
மக்களே,
ரெண்டு பதிவுக்கும் வந்து படிச்சிப் பார்த்து, ஆதரவு தந்தமைக்கு நன்றி!
ரொம்ப டெக்னிக்கலா எல்லாம் சொல்லாது, இயல்பா பேசிக்கறாப் போலத் தான் சொல்லி இருக்கேன்! அதையும் மீறி கொஞ்சம் மொக்கை தலை தூக்கி இருந்தா மன்னிச்சிக்குங்க!
நீங்கள் செய்யும் ஒரே உதவி - எலும்பு மஜ்ஜை தானம், பேரில் இருப்பது போல் அப்படி ஒன்னும் பயங்கரமானது இல்லை என்பது தெரிந்து கொள்வது தான்!
உங்களுக்கு இந்நேரம் தானாகவே தெரிஞ்சிருக்கும்! உங்களுக்குத் தெரிஞ்சதைத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்க! அதுவே முதல் படிக்குப் போதும்!
இதையும் மீறி அடுத்த கட்டத்துக்குச் சென்று உதவணும் நினைச்சா...
please please please...உங்கள் பெயரை இங்கு பதிந்து கொள்ளுங்கள்!
உயிர் தேடும் வேட்டையில், லட்சத்தில் ஒரு பெயர் அகப்படும் போது ஏற்படும் விம்மிதம் இருக்கே! அது சொல்லில் அடங்காது!
இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனம் (அபிஷேகம்) எப்படி குளிரப் பண்ணுகிறதோ, அதே போல், "உயிர் தரும் செல்களால்" ஒரு குழந்தைக்குச் செய்யும் திருமுழுக்கு, பெருமானுக்கு என்றுமே உகப்பானது! குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்!
குழந்தைகள் வலி இன்றி, வளம் பெற்று வாழட்டும்!
சங்கு வில் வாள் தண்டு சக்கரம் ஏந்திய
அங் கைகளாலே வந்து அச்சோ அச்சோவே!
ஆரத் தழுவ வந்து அச்சோ அச்சோவே!!
(- பெரியாழ்வார் திருமொழி; குழந்தையை நோய் அண்டாமல் இருக்கப் பாடும் பட்டினம் காப்பு)
References (உசாத்துணை):
தானம் கொடுத்த நாள் அன்று ஸ்டீவனின் அனுபவங்கள் =
http://bookreviewsandmore.ca/2007/07/bone-marrow-part-3-donation.html
தானம் கொடுக்கும் போது நடப்பவை என்ன? =
http://www.mayoclinic.com/health/bone-marrow/CA00047
வ.கே.க =
http://www.matchpia.org/htm/faq.htm
http://www.marrow.org/DONOR/When_You_re_Asked_to_Donate_fo/Donation_FAQs/index.html
NMDPஇல் இருந்து Eligibility Guidelines =
http://www.giveblood.org/nmdp/eligibility.htm