Friday, June 27, 2008

புதிரா? புனிதமா?? - தமிழ் சினிமாவில் கண்ணன்!

Update:
முதல் வெற்றியாளர் என்று பார்த்தால், 1st 10/10 (2nd attempt)=ஜிரா!

குமரனுக்கு அவர் விடை தவறு என்று முன்பே சொல்லப்பட்டிருந்தால்,
ஒரு வேளை அவர் ஜிரா வருவதற்கு முன்பே,
1st 10/10 (2nd attempt) செய்து இருக்க வாய்ப்புண்டு!

குமரனுக்கு அவர் மதிப்பெண்ணைச் சரியாகச் சொல்லாதது அடியேன் தவறு!
எனவே பரிசுத் தொகையைக் கூட்டி,
குமரன், இராகவன் இருவர் பெயரிலும்,
குழந்தைகளுக்குக் கூடுதல் புத்தகங்கள் வழங்கி விடலாம் என்று எண்ணம்!
இது, எல்லாருக்கும் ஓக்கே-வா?


இதுவும் கண்ணன் திருவிளையாடல் போலும்!:-)
எப்படியோ, குழந்தையின் சிரிப்பே இறைவனின் சிரிப்பூ!
குருகுலத்தைக் கேட்டுவிட்டு, என்னென்ன கதைப் புத்தகங்கள் என்றும் சில நாட்களில் இங்கு பதிக்கிறேன்!


முடிவுகள் ரிலீஸ் பண்ணியாச்சே!
விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!
அனைவருக்கும் கண்ணனின் வாழ்த்துக்கள்! :-)

வெற்றிப் பட்டியல்! - இதோ சில நிமிடங்களில்!
குமரன் முதலில் 9/10! ஆனால் அதில் ஒரு சின்ன தவறு வந்து விட்டது!
ஸோ, என்ன செய்யலாம் மக்களே?
ஐடியாஸ் ப்ளீஸ்!

பரிசு எப்படித் தரலாம் மக்கா?
*குமரன், ஜிரா இருவரும் ரெண்டாம் ஆட்டத்தில் 10/10
*குமரன், ப்ரசன்னா முதல் ஆட்டத்திலேயே 9/10

Here are the scores.
geethamma=6, 8
gopi=5, 7, 10
kumaran=9, 10
prasanna=9
gnana raja 8, 9
tamizh priyan 8, 9, 10
kepi akka 7
gira 9, 10
kappi 7.5
chinna ammini=9
anatha loganathan 9
nijama nallavan 7
tamizharasan 7



மக்கள்ஸ்! இன்று கண்ணன் பாட்டின் நூறாவது பதிவை முன்னிட்டு ஒரு "சிறப்புப்" புதிரா? புனிதமா?? - இந்த முறை மெய்யாலுமே பரிசு உண்டு! பரிசு என்னவா? சொல்லட்டுமா?
வள்ளுவர் குருகுலம் குழந்தைகளுக்கு, அமர்-சித்ர-கதா! படம் போட்ட கதைப் புத்தகங்களின் தொகுப்பு (ஆயிரம் ரூபாய்க்கு), முதல் வெற்றியாளரின் பெயரில் வழங்கப்படும்! - குட்டிக் குழந்தைக் கண்ணன்களை, அந்தக் குழந்தைக் கண்ணனே மகிழ்விக்கட்டும்! :-)
சரி....புதிரா புனிதமா ஆடுவமா?
கண்ணன், நம்ம கோலிவுட்டில் எடுத்த அவதாரங்கள் தான் இன்னிக்கி தலைப்பு!
நாங்க ரெடி, நீங்க ரெடியா?....விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!

1

தமிழ் சினிமாவில் கவிஞர் என்றால், அது பெரும்பாலும் கண்ணனின் தாசன், கண்ணதாசனையே சிறப்புடன் குறிக்கும்!

நம் கவிஞரின் இயற்பெயர் என்ன? (நோ சாய்ஸ்)

1

முத்தையா

(முருகனின் பெயர் கொண்டு கண்ணனின் தாசன் ஆன கவிஞர்; முத்தைத் தரு பத்தித் திருநகை - முத்தையா, கவி மழை பொழிந்ததில் வியப்பேதும் இல்லை தான்!)

2

பகுத்தறிவுக் கவிஞர் வைரமுத்துவையும், நம் கண்ணன் கவர்ந்துள்ளான்! அது சரி, யாரைத் தான் அவன் கவராமல் போனான்?

ராதையின் மனதில் கண்ணன் உண்டாக்கும் கிளர்ச்சிகளை எல்லாம் காதல் ரசம் சொட்டச் சொட்ட வர்ணித்து, கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டு பிடிக்க என்று பாடுவார்! அருமையான பாட்டு! என்ன படம்? யார் இசை??

2

அ) ரெண்டு-இமான்

ஆ) சிநேகிதியே-வித்யாசாகர்

இ) ரெண்டு-யுவன் சங்கர் ராஜா

ஈ) ஆழ்வார்-ஸ்ரீ காந்த் தேவா

3

தான் கண்ணனின் அவதாரம் என்று வேஷம் கட்டிக் கொண்டு வந்து, சாமியாரிணி ஒருவரின் பொண்ணை, இந்த ஹீரோ ஏமாத்துவாரு!

படத்தின் பெயர் உங்களுக்கே தெரியும்? ஹீரோ (கண்ணன்) யார்? ஹீரோயின் (ராதை) யார்?

3

அ) ஜீவன்-நமீதா

ஆ) அஜீத்-மாளவிகா

இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா

ஈ) ஆஜீத்-ஜோதிர்மயீ

4

காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல்! உத்தம புத்திரன் படத்தில் வருவது! பத்மினி ஆடுவாங்க!

Alexander Dumas எழுதிய The Man in the Iron Mask-ஐத் தழுவி எடுத்த படம்! இந்தப் பாட்டைப் பாடியது யார்? இசை அமைத்தது யார்?

4

அ) சுசீலா-MSV

ஆ) லீலா-ஜி.ராமநாதன்

இ) சுசீலா-கேவி மகாதேவன்

ஈ) வாணி ஜெயராம்-MSV

5

சங்கராபரணம் படத்தில் வரும் ஒரு கண்ணன் பாட்டு மிகவும் இனிமையான மெலடி பாடல்! நிசப்தமான இரவில் சிஷ்யன் பாட, அவனுக்குப் பாட்டு பாதியில் மறந்து போக, மீதிப் பாட்டை சோமையாஜூலு தூங்கிக்கிட்டே கன்டினியூ பண்ணுவார்!

அந்தப் பாட்டை எழுதியது யார்? இசை அமைப்பாளர் யார்?

5

அ) தியாகராஜர்-கேவி மகாதேவன்

ஆ) புரந்தரதாசர்-கண்டசாலா

இ) புரந்தரதாசர்-புரந்தரதாசர்

ஈ) சதாசிவ பிரம்மேந்திரர் -கேவி மகாதேவன்

6

அலைபாயுதே படத்தில் வரும் அலைபாயுதே கண்ணா, என் மனம், அலை பாயுதே - இந்தப் பாடல் அனைவருக்கும் தெரியும்!

இதைப் படத்தில் எழுதியவர் யார்? பாடியது யார் யார்?

6

அ) வாலி-ஹரிணி

ஆ) பாபநாசம் சிவன்-கல்யாணி மேனன், சைந்தவி

இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி

ஈ) வாலி-ஹரிணி, சுதா ரகுநாதன், ராமலட்சுமி

7

கண்ணன்-குசேலனின் உயர்ந்த நட்பைப் போலவே ஒரு நடிகன்-முடி திருத்தும் தொழிலாளி, இவர்களின் நட்பை இந்தப் படம் சொல்லப் போகிறது!

என்ன படம், யாரு ஹீரோ-ன்னு எல்லாம் உங்களுக்கே தெரியும்! ஆனா இது ஒரு மலையாளப் படத்தின் ரீ-மேக்! மலையாளப் படத்தின் பேர் என்ன?

7

அ) கத பறையும்போல்

ஆ) கத ஸ்நேகம்போல்

இ) குசேலோபாக்ய கதா

ஈ) ஒரு வடக்கன் வீர கதா

8

கண்ணன் வேசம் என்றால் அது சினிமாவில், by default, என்.டி.ராமாராவ் தான்!

ஆனால் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஒரு சில படங்களில் கண்ணன் வேசம் கட்டியுள்ளார்! ஏதாச்சும் ஒரு படம் சொல்லுங்க பார்ப்போம்! (அந்த வேடம் வரும் context-உம் சேர்த்து சொன்னா, பரிசு கொடுக்க நல்லா இருக்கும் :-)

8

படிக்காத மேதை (ரங்காராவுக்கு எங்கிருந்தோ வந்தான்-இடைச் சாதி நான் என்றான் என்ற பாட்டில், கண்ணனாய்த் தெரிவார், ஒரு சிகிரெட் டப்பாவின் மீது)

மூன்று தெய்வங்கள்

9

நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா! - கண்ணே கனியமுதே படத்தில் அருமையான பாரதியார் பாடல்!

MSV இசையில் இதைப் பாடினவங்க யார்?

9

அ) யேசுதாஸ்-சித்ரா

ஆ) மனோ-சித்ரா

இ) மனோ-ஷைலஜா

ஈ) யேசுதாஸ்-சசிரேகா

10

கர்ணன் படத்தில் என்.டி. ராமராவ் கெளரவர்களின் சபைக்குத் தூது பேச வருவார்! அப்போது நடக்கும் விவாதத்தில், சூதாட ஒப்புக் கொண்டது மட்டும் யோக்கியமான செயலா என்ற கேள்வி கேட்கப்படும்!

அப்போது, "விதி விட்டு விலகிச் சதி செய்ததை மறக்காதே; இப்போது நீதி செய்யவும் மறுக்காதே", என்று ராமாராவ் வசனம் பேசுவார்.

இது யாரை எதிர்த்துப் பேசப்படும் வசனம்?

10

அ) சகுனி-நம்பியார்

ஆ) கர்ணன்-சிவாஜி

இ) துரியோதனன்-அசோகன்

ஈ) சகுனி-வி.எஸ்.ராகவன்





இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1

2 அ) ரெண்டு-இமான் ஆ) சிநேகிதியே-வித்யாசாகர் இ) ரெண்டு-யுவன் சங்கர் ராஜா ஈ) ஆழ்வார்-ஸ்ரீ காந்த் தேவா

3 அ) ஜீவன்-நமீதா ஆ) அஜீத்-மாளவிகா இ) ஜீவன்-கீர்த்தி சாவ்லா ஈ) ஆஜீத்-ஜோதிர்மயீ
4 அ) சுசீலா-MSV ஆ) லீலா-ஜி.ராமநாதன் இ) சுசீலா-கேவி மகாதேவன் ஈ) வாணி ஜெயராம்-MSV
5 அ) தியாகராஜர்-கேவி மகாதேவன் ஆ) புரந்தரதாசர்-கண்டசாலா இ) புரந்தரதாசர்-புரந்தரதாசர் ஈ) சதாசிவ பிரம்மேந்திரர்-கேவி மகாதேவன்
6 அ) வாலி-ஹரிணி ஆ) பாபநாசம் சிவன்-கல்யாணி மேனன், சைந்தவி இ) ஊத்துக்காடு-ஹரிணி, கல்யாணி மேனன், ராமலட்சுமி ஈ) வாலி-ஹரிணி, சுதா ரகுநாதன், ராமலட்சுமி
7 அ) கத பறையும்போல் ஆ) கத ஸ்நேகம்போல் இ) குசேலோபாக்ய கதா ஈ) ஒரு வடக்கன் வீர கதா
8
9 அ) யேசுதாஸ்-சித்ரா ஆ) மனோ-சித்ரா இ) மனோ-ஷைலஜா ஈ) யேசுதாஸ்-சசிரேகா
10
அ) சகுனி-நம்பியார் ஆ) கர்ணன்-சிவாஜி இ) துரியோதனன்-அசோகன் ஈ) சகுனி-வி.எஸ்.ராகவன்
Read more »

Thursday, June 26, 2008

கேள்வி கேட்கலையோ கேள்வி? நாத்திகன் ஆத்திகன் ஆன கதை!

அட, இந்தக் கேள்வி வியாபாரத்தை ஆரம்பிச்சு வச்ச புண்ணியவான் பேரு என்னப்பா? அந்தாளு 108 தேங்காய் ஒடைக்கறேன்-னு வேண்டிக்கிட்டா, அதைச் சொந்தச் செலவுல ஒடைச்சிக்கணும்!
இப்படி எல்லாப் பதிவர்களையும் கோத்து வுட்டு, ஒருத்தர் மண்டைய ஒருத்தர் ஒடைச்சிக்கிட்டு...சேச்சே! ஓசியில ஓம் போடறது ஓடம்புக்கு ஆவாது ராசா! :-)

Chaos Theory வித்தகர் ஸ்ரீதர் நாராயணன், பல தரப்பட்ட பாணங்களை நம் மேல ஏவி வுட்டுருந்தாரு! கொத்தனார் ஓட்டும் ரதத்தில் ஏறி, ரத்தம் பாக்க ஆசைப்பட்டாரு நம்ம அண்ணாச்சி! ஆனா இதுக்கெல்லாம் அஞ்சறவனா கேயாரெஸ்ஸூ?

நமக்குச் சாரதி யாரு? சாட்சாத் பதிவுலகப் பரந்தாமன் அல்லவா? அவன் அருளால், எனக்குப் பாணங்கள் எல்லாம் பாவனா போடும் மாலையாகி விடுமே! அஸ்திரங்கள் எல்லாம் அசின் சூட்டும் மாலையாகி விடுமே! இதோ பதில் அஸ்திரங்கள்! :-)


1. நான் வரட்டு ஆன்மீக பற்றாளன் இல்லை. ஆனால் உங்கள் எழுத்தில் இருக்கும் ஆன்மீகம் பல புதிய புரிதல்களை தருகின்றன.
நீங்கள் இறை மறுப்பாளராக இருந்து பின்னர் மாற்றம் கண்டதாக அறிகின்றேன். மாற்றங்கள் வாழ்வில் இன்றியமையாதது. ஆனால் ஆன்மீகத் தேடலைத் தாண்டி நீங்கள் ஆன்மீகம் வளர்க்க நிறைய சிரத்தை எடுக்கிறீர்கள். எதனால் இந்த மாற்றம்?


நானும் உங்களைப் போலத் தான்! வறட்டு ஆன்மீகப் பற்றாளன் இல்லீங்க! ஆன்மீகம் வளர்க்கிறேன்-ன்னு சொல்லுறது ஓவரோ ஒவர்! ஆன்மீகப் பயிர் வளர்க்கும் அருளாளர்களின் கால் தூசி பெறுவேனா அடியேன்?

ஆன்மீகம் என்பது மதம் சார்ந்த ஒன்று-ன்னு பல பேருக்கு எண்ணம்! ஆனா மதம் வேற, ஆன்மீகம் வேற!
மதம்=Religion; ஆன்மீகம்=Spirituality! கொஞ்சம் வேறுபாடு உண்டு!
மதத்தால் மதம் பிடிக்கும்! தமிழில் அழகாய்ச் "சமயம்"-ன்னு சொல்லுவாங்க! நம்மைப் பக்குவமாகச் சமைப்பது எதுவோ அதுவே "சமயம்"! அதுவே ஆன்மீகமும் கூட!

என்னாது? அடியேன் எழுத்து, பல புரிதல்களைத் தருதா? போச்சுடா! நம்ம பொழைப்பை இந்தப் பதிவுலகம் இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கு? :-)

ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் அடிப்படை ஒற்றுமை ஒன்னு இருக்குங்க! இரண்டுக்குமே தேடல் கட்டாயம் தேவை!
ஒன்றில் "உள்ளே" தேடுதல்!
இன்னொன்றில் "வெளியே" தேடுதல்!
- எனக்கு இரண்டிலுமே, தேடப் பிடிக்கும்!

நான் என்னளவில் தேடுவதை எழுதுகிறேன்! தேடல் இருப்பதால் அந்த எழுத்து உங்களுக்கும் பிடிச்சிருக்கு போல! வேற ஒன்னும் ஸ்பெசலா கிடையாது!
பஸ் ஸ்டாண்டு ஃபிகரில் இருந்து பரந்தாமன் வரை விதம் விதமா தேடல் செய்கிறோமே? :-)
தேடிக் கிடைக்கும் பொருளால் ஒரு சுகம்! அதைத் தேடும் அனுபவமே இன்னொரு சுகம்!

சரி, சரி...சீன் போட்டது போதும்! விசயத்துக்கு வாரேன்... அடியேன் திராவிடர் கழக வாசம்! அதுக்குத் தானே காத்துக்கிட்டு இருக்கீக!:-)

வாழைப்பந்தல் கிராமத்துக் கோயில்-ல கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் வச்சிக் கொடுத்து, அடி வாங்குன பொடிப் பையன்! அவனுக்குள் எப்படி இறை மறுப்பு வந்துச்சு-ன்னு இப்பவும் சிரி்ச்சிக்கிட்டே யோசிக்கிறேன்! :-)

இறை மறுப்பை விட, சாதி தாழ்த்தியமை, தமிழ் தாழ்த்தியமை! இவையே நான் மறுப்பாளனாக மாறிய காரணமாகவும் இருக்கலாம்! அது கல்லூரிக் காலம்...
சென்னை தினத்தந்தி-க்கு அருகில் உள்ளது பெரியார் திடல்! அங்கு திராவிடர் கழக அலுவலகம், பெரியாரின் நினைவிடம்(சமாதி), நூலகம் எல்லாம் உண்டு!
வீரமணி ஐயா பந்தா இல்லாதவர்! நேரிடையாக உரையாடலாம்! ஆர்வம் உள்ளவர்களுடன் அவரும் அலசி ஆய்ந்து உரையாடுவார்! சீக்கிரமாகவே பழகி விட்டார்!

தமிழ்க் கருவூலங்களான கம்பன் காவியம், பெரிய புராணம் - இவற்றை எரிக்க வேணும் என்று அவர் சொன்ன போது, அதை அவர் கிட்டக்கவே மறுத்துப் பேசியது நான் முதலில் கிளப்பிய சூடு!
சீதை என்னும் பெண்ணைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசிவிட்டு, அதே பெண்ணுரிமையைக் காப்பதாக வேறு ஒரு குரலில் பேசிய போது - அதை ஆக்ரோஷமாக அடியேன் மறுக்க.....அடுத்த சூடான விவாதம்!

தந்தை பெரியார் வரைந்து கொடுத்த அதே பகுத்தறிவுப் பாணியில், வீரமணி ஐயாவிடம் நான் கேட்ட எதிர்க் கேள்விகள்! அதை எல்லாம் இங்கிட்டு சொல்ல முடியாது! :-)
அன்று அப்படியெல்லாம் விவாதித்த பின்னர், வீரமணி ஐயாவே,
"பகுத்தறிவு தான் என்றாலும், இவ்வளவு ஓப்பனா வேற எங்காச்சும் பேசினா, அதோ கதி தான்-பா உனக்கு", என்று நல்லபடியா அறிவுரை சொல்லி அனுப்பினார்! :-)

* கோயிலில் தமிழ் இல்லவே இல்லை என்று நாத்திகனாய் நானும் "நம்பிக்கிட்டு" இருந்தேன்!
* ஆன்மீகத்தில் சாதி உண்டு என்று நாத்திகனாய் நானும் "நம்பிக்கிட்டு" இருந்தேன்!
* கடவுளை நம்பவே கூடாது என்று நாத்திகனாய் நானும் "நம்பிக்கிட்டு" இருந்தேன்!

கோபுரத்தின் முகப்பில் பெரியாரும் ஒன்றே! உடையவரும் ஒன்றே!



அப்போது என் தமிழாசிரியர் மூலமாகவும், பல்கலைக்கழகத் துறைத் தலைவர் (HOD) மூலமாகவும் வந்து சேர்ந்தவர் தான், உடையவர் என்று சொல்லப்படும் இராமானுசர்!
காரேய்க் "கருணை" இராமானுசா...என்னை நீ வந்து உற்ற பின்பு,
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


தமிழகத்து விடிவெள்ளி, ஐயா பெரியார், இருபதாம் நூற்றாண்டில் வைக்கம் கோயிலுக்குள் நுழையவே ஆயிரம் தடைகள்! சூழ்ச்சிகள்!
ஆனால் பதினொன்றாம் நூற்றாண்டு இராமானுசர், அன்றே ஆலயத்துக்குள், ஸோ கால்ட்டு கீழ்க் குலத்தாரை அழைத்துச் செல்ல முடிகிறது என்றால் எப்படி???.....
பகுத்தறிவுடன் கூடிய ஆன்மீகத் தேடல் இருந்தால், எந்தக் காலகட்டத்திலும், சமூக நீதி கிடைக்கும் என்றே பொருள்!

பாசுரங்கள் ஓதி தமிழ் முன்னே செல்ல, இறைவன் தமிழுக்குப் பின்னால் செல்கிறான்!
"பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங்கொண்டலே" என்று முருகபக்தரான குமரகுருபரர் இந்தக் காட்சியைப் பார்த்து ஏங்குகிறார்! ஏக்கம் தானே ஆக்கமாகும்?

* ஆன்மீகத்தில் சாதி இல்லை என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்!
* கோயிலில் தமிழ் உண்டு என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன்!
* பகுத்தறிவை வெறுமனே "நம்பாமல்".....பகுத்தறிவையும் "பகுத்தறிந்தால்" - இனி எல்லாம் சுகமே! - பகுத்து அறிந்து கொண்டேன்!

இதுவே நாத்திகன் ஆத்திகன் ஆன கதை! (ஆத்திகன், வைணவன் ஆன கதை-ன்னு கூடவே ஒரு கும்மி எழும்! ஆனா என்னை அம்புட்டு சீக்கிரம் எதுக்குள்ளும் அடக்கிட முடியாது-ன்னு கூடப் பழகறவங்களுக்கு நல்லாவே தெரியும் :-)

என்னைக் கேட்டால், ஆன்மீகம் பயில்வோர் / பகுத்தறிவு பயி்ல்வோர், இருவருமே அறிவியல் பயில வேண்டும் என்று சொல்வேன்!
Thats the point where tangents to both circles can meet. And ironically thatz called the "Radical Axes"!:-)

பாருங்கள்......அனைத்துச் சாதி அர்ச்சகர்கள், பல நூற்றாண்டுகளாக!
சட்டங்கள் இன்றி, சத்தங்கள் இன்றி...



2. இத்தனைப் பதிவுகள், பின்னூட்ட மட்டுறுத்தல், தொடர்ந்து விவாதம்...எப்படி நேரப் பங்கீடு செய்கிறீர்கள்?

என்ன நக்கலா?...இலவசத்தில் பதிவு போட்டு நீங்க கேள்வி கேட்டது போன வெசாயக் கெழமை! பதில் பாருங்க, எப்ப வருது-ன்னு! :-)

உண்மையைச் சொல்லணும்னா, இப்பல்லாம் நண்பர்கள் பதிவுக்குக் கூட என்னால் அடிக்கடி செல்ல முடிவதில்லை! இருந்தாலும் அத்தனை பேரும் இங்கு வந்து படிக்கிறார்கள்! பின்னூட்டம் இடுகிறார்கள்! இது அடியேனின் தகுதியைக் காட்டவில்லை! நண்பர்களின் அன்பையே காட்டுகிறது!

ஒரே ஒரு விசயம்:
Atleast, என் பதிவில் எழுப்பப்படும் கேள்விகள், விவாதங்கள்! அதிலாவது அனைவருக்கும் பதில் தர முற்படுகிறேன்! ஓரளவு நேர்மையான முறையில்!
அலுவலகத்தில் கொஞ்சம் பொறுப்பு கூடிப் போச்சு! அதனால் இரவு எவ்வளவு நேரமானாலும், இதுக்காக கொஞ்சம் மெனக்கெடுவேன்! அவ்ளோ தாங்க! பெருசா ஒன்னுமில்லை!
சில பதிவுகள் எழுதி முடிக்க எனக்கு ஏழு எட்டு மணி நேரம் கூட ஆகி இருக்கு! நம்ப முடியுதா? :-))
தியாகராஜர் பாட்டுக்குத் திருமலையில் தீப்பிடித்த பதிவு, அதில் ஒன்று!
தெர தீயக ராதா - திரை விலக்க மாட்டாயா-ன்னு கேட்கும் போது, அதை வெறும் ஒரு பக்தனாகவோ, இசை ஆர்வம் கொண்டவனாகவோ, என்னால் எழுத முடியாது!

அர்ச்சகர்கள் தன்னை அவமரியாதையாக நடத்தினாலும் தியாகராஜர் அதைப் பொருட்டாகக் கருதவில்லை! "எந்த பக்தனையோ இதே போல் கேலி பேசி இருப்பேனோ? அதான் இப்படி வினையெல்லாம் திரையாக வந்து தொங்குதோ?"-ன்னு தனக்குத் தானே தான் நொந்து கொள்கிறார்! தன்னுடைய ஆணவத் திரை விலக்க மாட்டாயா என்று தான் பாடுகிறார்!

மந்திரச் சக்திக்கா திரை எரிந்தது? கண்ணீர்ச் சக்திக்கு அல்லவா கனல் வந்தது! இதைப் போய் நான் எப்படி வெறும் வார்த்தையால் சோடிச்சி எழுத முடியும்?
ஒரே வழி.....சில நிமிடங்கள் மட்டுமாச்சும் அடியேனும் தியாகராஜர் ஆவது தான்! அதான், அந்தப் பதிவை இரவில் எழுதும் போது, அடியேன் கண்களிலும்.......

கூடி இருந்து இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும் ஒரு இன்பம் தான்! கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்!


3. இந்த மாதிரி ஒரு தொடர் விளையாட்டில் உங்களை மூன்று பேர் ஒரே சமயத்தில் அழைக்கிறார்கள். ஒரு சங்கிலியில் தான் நீங்கள் பங்கு பெற முடியும் என்று விதி இருந்தால் (அட இருக்குன்னு சொல்றேன்!) யாருடைய சங்கிலியை தொடர வைப்பீர்கள்? ஏன்?
உங்களை தொடரச் சொல்லும் அந்த மூன்று பதிவர்கள்
அ) கோ. இராகவன்
ஆ) கோவி கண்ணன்
இ) வெட்டிப் பையல் பாலாஜி

ஹிஹி! நீங்க இதுக்கு முன்னாடி குமுதம் பத்திரிகைல வேலை பாத்தீங்களா ஸ்ரீதர் அண்ணாச்சி? நடிகர் சூர்யா கிட்ட போயி, "கதாநாயகியா உங்களுக்கு யாரை ரெக்கமெண்ட் பண்ணுவீங்க? பாவனா, நயன்தரா, அசின்?" ன்னு கேக்குற மாதிரி கேக்குறீங்க! சூர்யா உண்மையைச் சொன்னாலும் கஷ்டம்! பொய்யைச் சொன்னாலும் கஷ்டமாச்சே! :-)

யார் சங்கிலியைத் தொடர்வேன்? யார் கேள்விக்குப் பதில் சொல்லுவேன்?
ஹூம்ம்ம்ம்ம்...
ஹூம்ம்ம்ம்ம்...
கோ.இராகவன்! கோ.இராகவன்! கோ.இராகவன்!:-)
ஏன்? ஏன்? ஏன்?
கோ.இராகவன்! கோ.இராகவன்! கோ.இராகவன்!:-)


4. உங்கள் நினைவில் ஆழப் பதிந்து போன சிறு வயதுக் கதை? யார் அந்த கதையை உங்களுக்கு சொன்னார்கள்?

வீட்டில் அனைவருக்கும் நான் சங்கரா! பாட்டிக்கு மட்டும் கண்ணா!
எனக்கு, அவங்க சொல்லாத கதையில்லை! பாடாத பாட்டு இல்லை! படிக்காமலேயே படித்த அந்த ஜனகவல்லி அம்மாளின் நினைவு எனக்கு இன்ன்னிக்கும் ஈரம் தான்!

"அடே, நீ படிச்சதுலயே சாரமானதைச் சொல்லுடா!"

"நலம் தரும் சொல்லை, நான் கண்டு கொண்டேன், நாராயணா என்னும் நாமம்!"

"சண்டாளா, குலங் கெடுக்க வந்த கோடரிக் காம்பே! ஜாதிக்கே உன்னால இழுக்கு! உன்னை என்ன செய்யறேன் பார்?"

"அப்பா, உங்களை எதிர்க்கணும்-னு எண்ணமெல்லாம் இல்லை எனக்கு! படிச்சதில் ஏதாச்சும் சொல்லுடா-ன்னு கேட்டா, மாதா-பிதா-குரு-தெய்வம்-னு சொல்லிட்டுப் போயிருவேன்! ஆனா சாரமானதைச் சொல்லு, சாரமானதைச் சொல்லுன்னு திரும்பித் திரும்பிக் கேட்டா, நான் என்னாத்த சொல்வேன்?
உங்க கிட்ட பொய் சொல்லச் சொல்றீங்களா? காரியம் ஆகணும்-னு சாரத்தை மாத்திப் பேசும் பழக்கம் வர மாட்டேங்குதுப்பா! நான் என்னத்த செய்ய? நீங்களே சொல்லுங்க!"

தூணில் ஒரே அடி! துரும்பிலும் வந்தது இடி!
அடி அடி என்று அடிப் பையன்! அவன் பொடிப் பையன்! அசுரக் குடிப் பையன்!
பாட்டி சொன்ன அதே கதையைக் கோயில் உற்சவத்திலும் சொன்னாங்க! ஆனாப் பாட்டி சொல்லுற சுகம் அவிங்க சொல்றதுல வரலை!

மறு நாள் காலை கோவிலில் ஏதோ பூசை! அய்யிரு மந்திரம் எல்லாம் சொல்றாரு! மூக்கைப் பிடிச்சிக்கிட்டு, சாமி முன்னாடி, கலசத்தை ஏதோ மெல்லீசான குச்சியால் தொடறாரு!

"இவரு, என்னா பாட்டி பண்றாரு?"

"நம்ம சனத்துக்கு என்னா தெரியும்பா இதெல்லாம்? அதோ உன் பிரெண்டு தீபலட்சுமியோட அப்பா நிக்குறாரு பாரு! அவரைக் கேளு கண்ணா!"

"மாமா, அய்யிரு என்னா பண்றாரு?"

"அதுவா? அதுக்குப் பிராணப் பிரதிஷ்டைன்னு பேருடா! பகவானை நமஸ்காரம் பண்ணி, மூச்சுக் காத்து வழியா, கலசத்தில் எழுந்தருளச் செய்வது!"

"ஓ...ஓ...
ஆனா நேத்து சொன்ன கதையில, அந்தப் பையன், தூண்-ல இது மாதிரி எல்லாம் ஒன்னுமே பண்ணலையே!
ஆனா அதுல சாமி வந்தாரே? எப்படி மாமா?
"
"அடி, படவா! நாலாங் கிளாஸ் பையன் பேசுற பேச்சா இது? அதுவும் சபையில, இத்தனை பெரியவா முன்னாடி?
ஜனகவல்லீம்மா, நன்னாவே வளர்த்து வச்சிருக்கேள், உங்க பேரனை! என்னா எடக்கு, என்னா மடக்கு?"

பூசைக்கு வந்திருந்தார் திருமலையின் சின்ன ஜீயர் சுவாமிகள்! அவர் மற்றவர்களைத் தடுத்து நிறுத்த...
"பையனை மடத்துப் பாடசாலைக்கு அனுப்பி வைக்கறீங்களா?"-ன்னு அவரு கேட்க, அப்பா மொதக் கொண்டு எல்லாரும் பேந்த பேந்த விழிக்க.....

"சாமீ, நாங்க சைவக் காரவுங்க! அசைவம் சாப்புடறவுங்க! முருகன் குல தெய்வம்! இது சரியா வராதுங்க சாமீ! எங்கள மன்னிச்சிருங்க!"-ன்னு அம்மா மட்டும் விடாப்பிடியாகப் பேசி, என்னை வூட்டுக்குக் கூட்டியாந்தாங்க!
வந்ததும் எனக்கு ரவுண்டு கட்டி மாறி மாறி அடி! :)
ஆண்டாள் பாட்டு பாடித் என்னைத் தூங்க வைச்ச காரணத்துக்காக அவங்க மாமியாரை (என் பாட்டியை), அம்மா ஒரு முறை முறைச்சாங்க பாருங்க... :-)))

இது தாங்க சின்ன வயசு நாஸ்டால்ஜியா கதை!
பூரண விசுவாசம் (அல்லது) பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்!
சின்னக் குழந்தை சேவடி போற்றி!


இப்போ, அடுத்த கட்ட ஆட்டம்!

* வலையுலகில் பசங்க கடலை போடுவது பலரிடம்! பொண்ணுங்க கடலை போடறது யாரிடம்?
* கடலையை வாசம் வராமல் போடும் ஒரே பதிவன் யாரு?
* அப்படியே கடலையும் போட்டுட்டு, காதலுக்கு மரியாதை கெட்டப்பில் வலம் வரும் ஜென்டில்மேன் யாரு?
* மென்மையும் வன்மையும், இசையும் அரசியலும், சேர்ந்தே அலசக் கூடிய அழகிய தமிழ் மகன் யாரு?
*** வலையுலகின் ஒரே கானாப் பாடகன் யாரு? அவர் தான் கேள்வியின் நாயகன்!

கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் ஏதைய்யா?
1. 100 பதிவு எழுதி, 1000 பின்னூட்டம் போட்டு, 10000 ஸ்கிராப்பு போட்டு உழைச்சிக் கொட்டுற நம்ம வாலிபக் குருத்துகளுக்கு இடையில்,
இதெல்லாம் ஒன்னுமே பண்ணாம, சிக்சர் சிக்சரா அடிச்சி விளாசும் உங்கள் இளமையின் ரகசியம் என்ன? மறைக்காம, வெக்கப்படாமச் சொல்லுங்க காபி அண்ணாச்சி! :-)
(சரி, போனாப் போகட்டும்...அல்லது)

உங்கள் FM றேடியோ நிகழ்ச்சி அனுபவங்களில், நீங்கள் எதிர்கொண்ட இனிமையான, மெல்லிய, ரொமான்டிக்கான கட்டம் எது?

2. இறைவன் உங்கள் முன் தோன்றி, உங்களை, இலங்கை அரசுக்கு சர்வ சக்தி படைத்த "ஒரு நாள் அதிபர்" ஆக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
உங்கள் முதல் ஆக்ஷன் (செயல்பாடு) என்னவாக இருக்கும்? (இனிய கற்பனை)

3. பதிவுலகில் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சிக்காமல் இருக்க என்னெல்லாம் செய்ய வேண்டும்? (அப்பாடா, சிக்காத நீங்க, இப்போ சிக்கிட்டீங்க :-)

4. இசையில் நீங்கள் அனைத்து வகை இசையும் விரும்பிக் கேட்பீர்கள்!-அறிவேன்!
தமிழகத்தில் தமிழிசை இயக்கம் சிறிது காலமாகத் தான் நன்கு மணம் வீசி வருகிறது! ஆனால் அதே சமயத்தில் பிறமொழி இசை ஒவ்வாமையும் நம்மிடையே சிறிது இருக்கத் தான் செய்கிறது!
கர்நாடக இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர், மற்ற இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர் என்று ரசிகர் வட்டம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகிறது! விபுலானந்த அடிகளைக் கொடுத்த ஈழத்திலும், இதே நிலை தானா? அப்போது எப்படி? இப்போது எப்படி?


ஸ்ரீதர் மட்டும் தான் கேள்வி கேட்டிருந்தாரு! இன்னும் சில நண்பர்கள், பல்வேறு காலங்களில், அடியேனைப் பல்வேறு கேள்விகள் கேட்கத் தோணியிருக்கும்! அவிங்க எல்லாருக்கும், போட்டுத் தாக்க, "இலவச" டிக்கெட் வழங்குகிறேன்!

கண்ணன் பாட்டு 100-ஐத் தொடும் நல்வேளையில் சிறப்புப் பரிசாக, என்ன வேணுமோ கேட்டுக்கோங்க மக்கா! - ஐ மீன் கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :-)
Read more »

Sunday, June 15, 2008

புதிரா? புனிதமா?? - தசாவதாரம் வினாடி வினா!

தசாவதார விடைகள் அறிவிச்சாச்சே! (12 மணி நேரம் லேட்டா)!
சரியான விடைகள் கீழே போல்ட் பண்ணியிருக்கு! பாத்துக்குங்க! படம் இது வரை பாக்காதவங்க, ஒரு முறையாச்சும் கண்டிப்பா பார்க்கலாம்!
ஆனா எப்போ? இப்பவே-வா? இல்லை டிவிடி வரும் போதா-ன்னு நீங்களே முடிவு கட்டிக்கோங்க!
எல்லாரும் கொஞ்ச நாள் இதையே தான் பேசிக்கிட்டுத் திரிவாய்ங்க! So jus' be a part of the crowd and have fun...at the expense of Kamal!:-)

வெற்றியாளர்கள்:
உலக நாயகன்கள்: கொத்ஸ், கப்பி, கோபி, ராயல் ராம்
உலக நாயகிகள்: ஜெயப்ரதா, மல்லிகா ஷெராவத், ஜாக்கெட் போடாத அசின், ஜாக்கெட் போட்ட அசின்!

என்னா கேக்கறீங்க? வழக்கம் போல் பரிசா?
அதான் உலக நாயகிகள்-ன்னு பட்டியல் போட்டு, நம்ம உலக நாயகன்களுக்கு ஈடாக அறிவிச்சிருக்கோம்-ல? அப்பறம் என்னவாம்? வாழ்த்துக்கள்!!! :-)
லாஸ்ட் நிமிட்-ல வந்து, ஜாக்கெட் போட்ட அசினைப் பிடிச்ச ராயலின் மகிமையே மகிமை!:-)

கமல் சார், வாட் நெக்ஸ்ட்???
பிகு:
படம் பார்க்க இலவச டிக்கெட், சரவண பவன் குலுக்கல் சீட்டில் கிடைச்சிருக்கு!
மூனாவது முறை படம் பார்த்தா தப்பா மக்கா? சொல்லுங்க மக்கா சொல்லுங்க! :-)


மக்கள்ஸ்! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா, எல்லாரும் தசாவதார விமர்சனம் படிச்சிட்டு, ஜாலியா இருக்கீங்களா?
யாராச்சும் ஒருத்தரோட விமர்சனத்துல, ஏதோ ஒன்னைப் படிச்சிப்புட்டு,
ஐயோ இதை நாம சரியா நோட் பண்ணலியே-ன்னு, ரெண்டாம் தபா தசாவதாரம் பார்த்த நல்லவங்க யார் யாருப்பா?
கையைத் தூக்குங்க பார்ப்போம்!(மொதல்ல, நான் கையைத் தூக்கி விடுகிறேன்!:-)

எத்தனை முறை தான் விமர்சனமே படிச்சிக்கிட்டு இருக்கறது? அதான் பார் ஏ சேஞ்ச்!
இன்னிக்கி ஸ்பெசல் தலைப்பு! தசாவதாரம் - புதிரா? புனிதமா??! Dasavatharam Quiz Show!

"புதிரா? புனிதமா??" கடைசியா நட்சத்திர வாரத்தில் போட்டதோட சரி! So, Thank You மிஸ்டர் தாமரை நகையான் (நம்ம ஜிரா கமலுக்கு வச்ச பேரு)!

* கமலே, உனக்கு 34.50$ கொடுத்தேனே-ன்னு அழுகுறாரு ஒரு கொத்தரு!
* ஹ"றி" ஓம்ன்னு படம் பாக்கச் சொல்றாரு இந்த ஹாரி புத்தரு!
* Hurry Om! படத்துக்கு லேட்டா மட்டும் போயிறாதீங்க மக்கா-ன்னு "ஹரி"-வுரை கொடுக்காரு இந்த ஜித்தரு!

தசாவதாரம் படம், புதிரா? புனிதமா??! ஆடலாம் வாங்க!
விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!


டிஸ்கி-1
இந்தப் போட்டியில் கலந்துக்கிட்டு, விடைகளைத் தப்பாச் சொன்னதுக்காக, இல்லை மேற்கண்ட படத்துக்காகவோ, இல்லை வேறு எதற்காகவோ....
இன்னோரு தபா தசாவதாரத்தைச் சரியா பார்க்கணும்-னு நீங்க ஏதாச்சும் முடிவெடுத்தீங்கன்னா, அதுக்கு எல்லாம், பாவம் கேஆரெஸ் தானா பொறுப்பு?


டிஸ்கி-2
ரங்கராஜ நம்பி கற்பனை! சிலையைக் கடலில் தூக்கி வீசியது உண்மை!
கற்பனையை உண்மையோடு கலக்கும் போது, விழிப்பும், அதை விட பொறுப்பும் தேவை!
படத்தில் தெளிவாக டிஸ்கி போட்டுச் சொல்லி விடுங்களேன்!
- என்று
முன்னொரு பதிவில் சொல்லி இருந்தேன்!

கமல் ரசிகர்கள் எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து, அப்பாவிச் சிறுவனான கேயாரெஸ்ஸைப் போட்டுத் தாக்கி, ஒரே நாளில் மாதவிப் பந்தலை அகில இந்திய ரேஞ்சுக்கு பிரிச்சி மேஞ்சி, அன்பைக் காட்டினாலும்...

கமல் மட்டும், நல்ல பிள்ளையா, நம்ம கேஆரெஸ் பேச்சைக் கேட்டுக்கிட்டு அதே போல நடந்துகிட்டாருப்பா! :-)

உலக நாயகன் கமலே, நீ வாழ்க! வாழ்க!
படம் பல வெற்றிகளைக் குவிக்கட்டும்! மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மல்டிப்பிள் பாத்திரப் படைப்புகளையும், வழக்கமான ஆத்திக-நாத்திக குழப்பத்தையும் தாண்டி,
உலக அளவில் வைத்துப் பேசப்படும் ஒரு தமிழ்ப் படத்தை உருவாக்க வேண்டும்!
அந்த வெறியை, இந்த வெ"ற்"றி உங்களுக்குக் கொடுக்கட்டும்!
உலக நாயகன் சாதனை அடைய, உலகளந்த உலகநாயகன் அருளட்டும்!!
மீண்டும் வாழ்த்துக்கள்!!!


1

கமல் பாட்டியின் பேர் என்ன?

(அசின், மல்லிகா ஷெராவத், அட ஜெயப்ரதாவைக் கூட இந்த முறை கமல் "சரியாவே" காட்டலை! இதுல பெருசா பாட்டி பேரை எல்லாம் ஏண்டா கேக்கறீங்க? -ன்னு தானே கேக்குறீங்க :-)

1

அ) ராதாபாய்

ஆ) கிருஷ்ணம்மாள்

இ) ஆண்டாள்

ஈ) கிருஷ்ணவேணி

2

படத்தின் பின்னணி இசையமைப்பாளர் யார்?

(கமல் தோன்றும் காட்சியில் "சாரே ஜஹான் சே அச்சா" போட்ட அந்த பச்சா-ன்னு யாருப்பா சவுண்ட் வுடறது? :-)

2

அ) ஹிமேஷ் ரெஷாமியா

ஆ) கமலஹாசன்

இ) தேவி ஸ்ரீ பிரசாத்

ஈ) பாபி தூத்துல்

3

முன்னாள் CIA ஏஜென்ட்டாக (?) வரும் மல்லிகா ஷெராவத்தின் படப் பெயர் என்ன? அவள் கணவன் பெயர் என்ன?

(சாரி, நோ சாய்ஸ்! ரெண்டுமே சரியாச் சொல்லணும் :-)

3

Jasmine/Christian Fletcher

4

பலராம் நாயுடு-கோவிந்த் இரண்டு கமல்களின் சந்திப்பு முதலில் எங்கு நடக்கிறது?

(தெலுங்கு டப்பிங்-ல இவரு பலராம் நாடாராமே? :-)

4

அ) சென்னை விமான நிலையம்

ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம்

இ) கார்கோ விமானம்

ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர்

5

படத்துல ஒரு பட்டாம்பூச்சி பறந்துக்கிட்டே இருக்கும்! கவனிச்சீங்களா? (கமல் உலக நாயகனாச்சே! இதெல்லாம் தமிழ் சினிமாவுல அவரு சொல்லாட்டி வேற யார் சொல்வாங்களாம்? :-)

அந்தப் பட்டாம்பூச்சியும், அது பற்றிக் கமல் எடுத்துக்காட்டும் கொள்கையும் - அவற்றின் பெயர்கள் என்ன?

5

அ) Chaos Theory-Lava Effect

ஆ) Chaos Theory-Butterfly effect

இ) Tectonic Theory-Butterfly Effect

ஈ) Quantum Theory-Lava Effect

6

படத்தின் மொத்த ஓடும் நேரம் எவ்ளோ?

(அசினும் கமலும் ஓடுன ஓட்டத்தை எல்லாம் கணக்குல எடுத்துக்காதீங்க :-)

6

அ) 03:05

ஆ) 02:55

இ) 03:15

ஈ) 02:45

7

படத்தில் தன்னையும் ஒரு கிருமி கண்ட சோழன் என்று சொல்லிக் கொள்கிறார் கோவிந்த் ராமசாமி என்னும் விஞ்ஞானி கமல்! அந்தக் கிருமியைச் சாப்பிட்டு உயிர் துறக்கும் குரங்கின் பேர் என்ன?

(கோவிந்த்-"ராம"சாமி என்பதால் சிம்பாலிக்கா ராமாயணக் குரங்கினமா? :-)

7

அ) வினு

ஆ) அனு (அனு-மான்?)

இ) சிம்பா

ஈ) கபீஷ்

8

படத்தில் வரும் அவ்தார் சிங்-கின் "ஓ ஹோ சனம்" என்ற பாடலை எழுதியது யார்? பாடியது யார்?

(இந்தப் பாட்டு புடிச்சி இருந்துச்சா? ரஹ்மான், ஹாரிஸ், யுவன் இன்னும் நல்லா போட்டிருப்பாங்களோ?)

8

அ) வாலி-ஹிமேஷ்

ஆ) வைரமுத்து-கமல்

இ) வைரமுத்து-ஹிமேஷ்

ஈ) வாலி-கமல்

9

மண்ணின் மைந்தர் பூவராகவன்! அவர் கூட இருப்பவர்களுக்கு எல்லாம் தண்ணி காட்டிய பின்னும், தான் மட்டும் சற்றும் அசையாத பாத்திரம். என்னை மிகவும் கவர்ந்த பாத்திரமும் கூட! (நீ என்ன பெரிய உலக நாயகனா-ன்னு அவரைக் கேட்கும் போது, "அட ஆமாண்டா"-ன்னு சொல்லிட்டு அவர் பேசும் வசனம் ஞாபகம் இருக்கா?)

அவர் முதல் பெயர் (First Name) என்ன? (சாரி, நோ சாய்ஸ்!)

9

வின்சென்ட் பூவராகவன்

10

கோவிந்த் சயன்டிஸ்ட்டும், இன்னும் பல சயன்டிஸ்ட்டுகளும் ஆபிசுக்கு உள்ளாறயே சைக்கிள் ஓட்டுறாங்க! (நாமளும் நம்ம பாஸ் கூப்பிடும் போது அப்படிப் போயி நின்னா எப்படி இருக்கும்?)

நின்னுக்கிட்டு ஓட்டும் "அந்த" சைக்கிள் வகையறாவுக்கு என்ன பெயர்?

10

அ) Scarpar(ஸ்கார்பார்)

ஆ) Segway (செக்வே)

இ) Wheelman (வீல்மேன்)

ஈ) Glider(க்ளைடர்)



என்னாங்க? எங்க ஓடுறீங்க?...மீண்டும் சினிமா தியேட்டருக்கா? அட! கேள்வி எல்லாம் அம்புட்டு கஷ்டமா என்ன?
இருங்க! ஈசியான ஆறுதல் கேள்வி ஒன்னு இருக்குல்ல!

*** ஜாக்கெட் போடாத அசின் அக்கா பேர் என்ன? - கோதை (ராதா)
ஜாக்கெட் போட்ட அசின் அக்கா பேரு என்ன?? ***
ஆண்டாள்
(கரெக்டா சொல்றவங்களுக்கு கமல்-அசின் பேசிக் கொள்ளும் கடி-ஜோக்குகள் கேட்டதற்காகவே இலவச பர்னால் வழங்கப்படும் :-)

இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க!

1 அ) ராதாபாய் ஆ) கிருஷ்ணம்மாள் இ) ஆண்டாள் ஈ) கிருஷ்ணவேணி

2 அ) ஹிமேஷ் ரெஷாமியா ஆ) கமலஹாசன் இ) தேவி ஸ்ரீ பிரசாத் ஈ) பாபி தூத்துல்

3
4 அ) சென்னை விமான நிலையம் ஆ) RAW இன்டலிஜென்ஸ் அலுவலகம் இ) கார்கோ விமானம் ஈ) Immigration(குடியுரிமை) கவுன்ட்டர்
5 அ) Chaos Theory-Lava Effect ஆ) Chaos Theory-Butterfly effect இ) Tectonic Theory-Butterfly Effect ஈ) Quantum Theory-Lava Effect
6 அ) 03:05 ஆ) 02:55 இ) 03:15 ஈ) 02:45
7 அ) வினு ஆ) அனு இ) சிம்பா ஈ) கபீஷ்
8 அ) வாலி-ஹிமேஷ் ஆ) வைரமுத்து-கமல் இ) வைரமுத்து-ஹிமேஷ் ஈ) வாலி-கமல்
9
10 அ) Scarpar(ஸ்கார்பார்) ஆ) Segway (செக்வே) இ) Wheelman (வீல்மேன்) ஈ) Glider(க்ளைடர்)



Results of the Poll:

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP