Wednesday, October 22, 2008

சீடனின் மனைவிக்கு விவாகரத்து செய்து வைப்பாரா?

சரி போகட்டும், உன் மனைவியை எனக்குத் தந்து விடுகிறாயா சீடனே? - ச்ச்சீய்...என்ன கேள்வி இது? கேவலமாக இல்லை? அதுவும் கேட்பது யார்? கோபுரம் ஏறி மட்டுமே கூவத் தெரிந்த ஒரு குரு!
இந்த இப்பிறவிக்கு மட்டும் வழிகாட்டும் மந்திரம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா? அடுத்தவன் பெண்டாட்டியைத் தனக்குத் தந்து விடுகிறாயா என்று கேட்கிறார் இராமானுசர்!

இந்தக் காலத்துப் துறவிகள் பலர் சொல்கிறார்களே....
இகத்தைப் பார்த்தாலே சுகத்தைப் பெறலாம்;
அந்தப் பர-த்தை, பரத்தை வீட்டில் பெற்றுக் கொள்ளலாம் என்று!
அது மாதிரியா, இந்தத் துறவி?

மனைவிக்குக் குடை பிடித்து வந்த தனுர்தாசனை, என்னமோ ஏதோ சொல்லிக் குழப்பி, அரங்கன் கண்ணைக் காட்டி மயக்கி...

எல்லாம் இதற்குத் தானா? அழகில் அழகு வாய்ந்த சிவப்புச் சிரிப்பழகி பொன்னாச்சிக்காகத் தானா? இவரா ஆசார்யர்? ஹூம்!

தம்பதிகள் என்பதால், இராமானுச மடத்தில் தங்காமல், வெளியே தங்கி இருந்தார்கள் பொன்னாச்சியும், தனுர்தாசனும்.
அவர்களுக்குள் சில நாளாகவே கருத்து வேறுபாடு! சண்டை! ஒருவருக்கொருவர் பேசிக் கூட கொள்வதில்லை! எல்லாமே சைகை பாஷை தான்!

அன்பு மிக்க நண்பர்களிடையே கூட, சண்டைன்னு வந்துட்டா, ஒன்னு உடனே போயிடும்; இல்லை போகாமல் அந்த அன்பைச் சுற்றியே திரும்பித் திரும்பி வரும்! :)
இங்கோ கருத்தொருமித்த காதல் தம்பதிகள்! யார் கண்ணு பட்டதோ...ஆண்மகன் தனுர்தாசன் மனமிரங்க மறுக்கிறான்!

அப்படி என்ன தான் செய்து விட்டாளாம் இந்தப் பொன்னாச்சி?
செல்வச் செழிப்பிலே வளர்ந்தவள், பழைய சுபாவம் மாறாமல், அடியார்களிடத்திலே "தான்" என்ற அகம்பாவம் காட்டி விட்டாளாம்! அதுவும் எப்படி-ங்கிறீங்க?

ஒரு நாடகத்துக்காக அந்தணர்கள் தம் வீட்டில் திருட வந்த போது, சரி பாவம்...பிழைக்க வழி இல்லாதவர்கள்; எடுத்துக் கொண்டு போகட்டும், என்று திரும்பிப் படுத்து விட்டாளாம்! அவள் திரும்பிய சத்தம் கேட்டு, அவர்கள் பயந்து ஓடி விட, வீட்டுக்கு வந்த தனுர்தாசன், விஷயம் அறிந்து கொள்கிறான்.

"தன்" நகை, "தான்" கொடுக்கிறோம், "தான்" தந்து அடியார்கள் பிழைக்கட்டும் - என்று அவளுக்குத் "தான்" ரொம்பவே இருக்குதாம்!
ஹிஹி! தனுர்தாசன் சொல்லும் காரணம் பாருங்கள்!
இதனால் கொஞ்ச நாளாகவே இருவருக்கும் சண்டை. ச்சே சண்டையில்லை! பாவம், "பாவம்" புரியவில்லை! சு-பாவம் புரியவில்லை!

விஷயம் இராமானுசர் காதுகளுக்கு அரசல் புரசலாக வருகிறது. துறவி தானே? எதுக்குத் தேவையில்லாமல் கணவன்-மனைவி விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்க வேண்டும்?
பொன்னாச்சியின் மனமும் நன்கு அறிந்தவர், தனுர்தாசன் உறுதியும் நன்கு அறிந்தவர். அதான் சமயம் வரும் போது பயன்படுத்திக்கப் பாக்கறோரா?
ஆசை யாரை விட்டது-ன்னு கேக்கறீங்களா? ஆமாம், ஆசை தான்! மேலே படிங்க!



"அப்பா துனுர்தாசா, ஏன் உனக்குப் பொன்னாச்சியிடம் இவ்வளவு விரக்தி? நானும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன்; பூசைகளில் கூட ரெண்டு பேரும் எட்டி எட்டி நிற்கிறீர்கள்?"

"சாமி, நானே சொல்லணும்-னு நினைச்சேன்! எனக்கு ரொம்ப விரக்தியாகி விட்டது சுவாமி! அவள் அகங்கார-ஆணவமெல்லாம் வெளியில் தெரிவதில்லை! ஆனா புத்தியில் ரொம்பவே இருக்கு!"

"நிச்சயமாகத் தெரியுமா?"

"தெரியும் சாமி! அவளுக்கு எப்பமே "தான்" தான்! சரியான கர்வி! பொன்னாச்சி இனி எனக்கு வேணாம் சாமி!"

"வேணாமா? என்ன உளறுகிறாய் தனுர்தாசா? வேணாம்-னா என்ன அர்த்தம்?"

"வேணாம்-னா வேணவே வேணாம்! பேசாம எனக்கும் சந்நியாசம் கொடுத்துருங்க! அவளோடு குடும்பம் நடத்த எனக்கு இஷ்டமில்லை! இனி அவள் அடியேனுக்கு வேணாம் சாமீ"

"ஓ...அப்ப வேணாம்-னு உறுதியா இருக்க! ஹூம்ம்ம்ம்!
சரி, அப்படி வேணாம்-ன்னா அவளை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?"

(சுற்றிலும் உள்ள மக்கள், அடியார்கள், அந்தணர்கள், கோயில் அலுவலர்கள் எல்லாம் வாயடைத்துப் போகிறார்கள்! பொம்பளை பொன்னாச்சி நடுங்குகிறாள்! ஆம்பிளை தனுர்தாசன் மட்டும் அப்போதும் சிலை போல நிற்கிறான்!

ஆலயத்தில் தமிழ் ஓங்கிக் கொண்டு வருவதைப் பிடிக்காத சில நல்ல உள்ளங்களுக்கு மட்டும்...வாயெல்லாம் சிரிப்பு! இதை எப்படியாவது ஊதிப் பெருசாக்கி, இராமானுசருக்குக் களங்கம் கற்பித்து விடலாம், எல்லாம் அந்த அரங்கன் தானாக எப்படி ஒரு வாய்ப்பைக் கொடுக்குறான் பாரு! - என்று உள்ளூரக் குதூகலித்துப் போகிறார்கள்)



"ஓ...அப்ப வேணாம்-னு உறுதியா இருக்க! ஹூம்ம்ம்ம்! சரி, அப்படி வேணாம்-ன்னா அவளை எனக்குக் கொடுத்து விடுகிறாயா?"

"சாமீ...என்ன கேள்வி இது? எப்ப நாங்க ரெண்டு பேரும் உங்க திருவடிகளில் வந்து சேர்ந்தோமோ, அன்னிக்கே நாங்க உங்களுக்குச் சொந்தமாயிட்டோமே!
என்னையும் என் உடைமையும் உன் சக்கரப் பொறியால் ஒற்றிக் கொண்டு, நின் அருளே புரிந்து இருந்தேன்; இனி என்ன திருக்குறிப்பே?-ன்னு நேத்து தானே பாடம் நடத்தினீங்க?"

"ஓ...அப்படி வரியா? சரி! என்னுடையவளை நான் எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா? நான் யாருக்குப் பிரியப்படுகிறேனோ, அவர்களுக்கும் கொடுத்து விடலாம் அல்லவா?"

(ஓ...பொன்னாச்சியைத் தேவதாசியாக்க திட்டம் போடுகிறாரோ இந்த இராமானுசர்? யப்பா, பலே ஆளா இருப்பாரு போல இருக்கே! - என்று சிலர் யோசிக்கவே தொடங்கி விட்டார்கள்!)

"ஆமாம் குருவே! உங்களுக்கு யார் பிரியமானவரோ, அவர்களுக்கு அவளைக் கொடுத்து விடலாம்! ஏன் இந்தக் கேள்வியெல்லாம் சாமீ?"

"யப்பா தனுர்தாசா! எனக்கு இந்த கோஷ்டியிலே பல பிரியமானவர்கள் இருக்கிறார்கள்;
ஞான யோகத்துக்குக் கூரத்தாழ்வான்,
கர்ம யோகத்துக்கு முதலியாண்டான்,
பக்தி யோகத்துக்கு திருமலை அனந்தாழ்வான்,

ஆனால் ஏனோ தெரியலை,
பிரியத்துக்கு மட்டும் பிள்ளை உறங்கா வில்லி என்னும் தனுர்தாசன் தான் இருக்கான்!
தனுர்தாசன் என்னும் நீயே இந்த இராமானுஜனுக்குப் பிரியமானவன்!
அதனால் உனக்கே பொன்னாச்சியைக் கொடுக்கிறேன்! புதுசா கொடுக்கறேன்
!"

"சாமீஈஈஈ"

"இது நாள் வரை அவளை உன் மனைவி-ன்னு நினைச்ச!
இப்ப நான் அவளைப் பெற்றுக் கொடுக்கிறேன்!
இனி அவளை இந்த இராமானுசன் மகள்-ன்னு நினைச்சிக்கோ!"

"சாமீ...."

"என் மகளின் பிழைகளுக்கெல்லாம் இந்த இராமானுஜன் உன் திருவடிகளில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்! என் மகளோடு வாழ்வாய் அல்லவா?"

"அச்சோ.....ஓஓஓஓ....இறைவா!" (உடையவர் வாயை ஓடோடி வந்து மூடுகிறான் தனுர்தாசன்!)
(குரு, மகான், ஆசார்யர் அப்படி-ன்னா பத்தடி தள்ளி நிக்கணும், கை கட்டி, வாய் பொத்தி, தொடாமப் பேசணும் - இதெல்லாம் இந்த இராமானுசரிடம் இல்லையோ?)

"தனுர்தாசா! பொன்னாச்சியை நான் அறிவேன்! அவளுக்கு ஆணவம் எல்லாம் இல்லை! அவள் செய்தது "தான்" என்பதில் சேர்த்தியாகாது!
அப்படிப் பார்த்தால், நீ கூடத் தான் அவளை எப்படி வேணும்னாலும் பயன்படுத்திக்குங்க-ன்னு சொன்ன? அது என்ன "நீ" சொல்வது? உனக்கென்ன அப்படி ஒரு உரிமை? அப்போ உனக்கும் "தான்" என்பது இருக்கு தானே?"

(மெளனம்)

"துறவிக்கு எது கூடினாலும், உறவு மட்டும் கூடவே கூடாது! துறவிகள் தங்கள் பழைய உறவினர்களை அதிகாரத்தில் அண்ட விடவே கூடாது! ஆனாலும், இந்தத் திருவரங்கமே சாட்சியாகச் சொல்கிறேன்!
இனி இவள் என் உறவு! இராமானுஜன் மகள்! இவள் இராமானுஜ தயா பாத்ரம்!
என் பாத்திரம், அவள் பத்திரம்! சரியா?"

இராமானுஜ தயா பாத்ரம், கருணா வத்சல குணார்னவம்!
வில்லீ சர்வ மங்கள நாயகீம், வந்தே வைஷ்ணவ வனிதா மணிம்!

(பொருள்: இராமானுசனின் தயைக்கு உகந்தவள்; கருணையும் வாத்சல்யமும் கொண்டவள்!
வில்லியின் மங்கள மனைவி! அம்மா, வைணவ வனிதா மணியே! உனக்கு வந்தனங்கள்!)

தயா பாத்ரம் என்பது பின்னாளில் வரும் குருமார்களுக்கு, முன்னாள் ஆச்சார்யர்களின் பெயரை ஒட்டிக் கொடுக்கும் பட்டம்! தன் ஆச்சார்ய சம்பந்தத்தைக் காட்ட அவரவருக்கு உள்ள சுலோகம் தான் இந்த தயா பாத்ரம்!
இராமானுசருக்குப் பின்னால் வந்த வேதாந்த தேசிகருக்கு, "இராமானுஜ தயா பாத்ரம், வந்தே வேதாந்த தேசிகம்" - அப்படி-ன்னு தயா பாத்ரம் இருக்கு!

அப்படிப்பட்ட ஒன்றை,
குலம் அறியாத, ஞான-கர்ம-பக்திகளைச் செய்யாத ஒருவருக்கு,
அதுவும் மாதம் சில நாள் தீட்டாகும் என்று சொல்லப்படும் ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்படுகிறது என்றால்? அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு?
அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்! பேச எவர்க்கும் வாய் வரவில்லை! எல்லாரும் உடையவர்-வில்லி-பொன்னாச்சியையே பார்க்கிறார்கள்!

தொட்டதெற்கெல்லாம் குடும்பச் சண்டை, மண முறிவு என்று காலம் ஆகிப் போயிற்று! அவரவர் கருத்தில் உறுதிப்பாடு அதிகம் ஆகிறது!
இதில், கணவன்-மனைவி விஷயத்தில் எல்லாம் கூட மூக்கை நுழைத்து, அவரவர் கோப தாபங்களைக் கிளறாமல், புதைந்து போன அவர்களின் அன்பை மீண்டும் பதமாய் வெளிக்கொணரனும்-னா எப்படி?



யோவ், இந்த வேலையெல்லாம் ஒரு ஆன்மீகவாதிக்குத் தேவையா?
இந்த இராமானுசர் சமயப் பணி செய்ய வந்தாரா இல்லை சமூகம்-குடும்பம்-னு பணி செய்ய வந்தாரா? எதுக்கு இவருக்கு இந்த வீண் வேலை?
இப்படி ஒரு கருணைக் குணம் ஆன்மீகத்துக்கும், ஆன்மீகப் பணி செய்வபர்களுக்கும் அவசியம் தேவை தானா?

ஞான உச்சியின் மேல் அளியில் விளைந்தது, ஒரு ஆனந்தத் தேனை என்கிறார் அருணகிரி!
இப்படி ஆத்ம ஒளியில், எழுந்த ஞான மலையின் மேல் என்ன இருக்கு?
என்ன இருக்கணும்? ஞானமா? கர்மமா? பக்தியா? - ஹிஹி....கருணை இருக்கணுமாம்! அதைத் தான் கந்தர் அலங்காரம் பதிவில் முன்பு சொல்லி இருந்தேன். புயலும் சண்டையும் கிளம்பியது! :)

இராமானுசருக்கு முன்னும் பின்னும் எத்தனையோ துறவிகள், குருமார்கள், ஆச்சார்யர்கள் வந்திருக்கிறார்கள்!
அத்தனை பேரையும் கருணை என்னும் தராசுத் தட்டில் வைத்து, அவர்கள் கூடவே இறைவனையும், அதே தட்டில் வைத்து, எதிர்த் தட்டில் உடையவரை நிறுத்தினால், பெருமாள் உட்பட அவர்கள் எல்லாம் உயர்ந்து இருக்க, தராசில் இவர் தாழ்ந்தே இருப்பார்!

இதை எதையோ நிறுவுவதற்காகச் சொல்லவில்லை! இதை நானும் சொல்லவில்லை! இதைச் சொல்பவள் சாட்சாத் மகாலக்ஷ்மி-அரங்கநாயகித் தாயார்!

திருமலை வேங்கடவன் பெருமாளே என்று ஊர் அறிய உறுதி செய்தாயிற்று! பின்னால், குழப்பம் விளைவித்த எல்லாரையும் கழுவில் ஏற்றத் துணிந்தான் மன்னன். ஆனால் அத்தனை பேரையும், மன்னன் ஆணையை மீறி விடுவித்த கருணை! - தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

கடலில் போட்ட தில்லை கோவிந்தராசப் பெருமாளை, மீண்டும் அதே இடத்தில் நிறுவி, வீம்பு காட்ட வேண்டுமா? மதப் போட்டிகளால் மக்களுக்கு அல்லவா வீண் பிரச்சனை? வேணாம்!
திருப்பதி அடிவாரத்தில் சிலையை வைத்துக் கொள்ளலாம்!
தில்லையின் ஈசனைச் சிந்தையில் வைத்துக் கொள்ளலாம்!
யாருக்கு வரும் இந்தக் கருணை? - தனிப் பெருங் கருணை! அருட் பெருஞ் சோதி!

காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் உன் அருளாம் தன்மை? -
என்று அதனால் தான் பின்னாளில் ஒரு பாட்டு எழுந்தது!
அவர் கூரை ஏறிக் கோபுரம் ஏறிக் கூவியதும் போதும்! அவர் சொன்ன மந்திரம் இப்பிறவி மட்டும் அறுக்குதோ, எப்பிறவியும் அறுக்குதோ? யாருக்கு வேணும் பிறவி அறுக்கும் மந்திரங்கள்?

மோட்சத்தை அஜாமிளன் போன்ற பாவிகளுக்குக் கொடுத்துக் கொள்!
ஆனால் பிறவிகளை அடியார்களுக்குக் கொடுத்து விடு!
மோட்சத்தைக் கேட்டு வாங்காது, பிறவியைக் கேட்டு வாங்கி, இன்றும் ஒரு ஓரத்தில் குணானுபவம் செய்து கொண்டிருக்கிறானே சிறிய திருவடி ஆஞ்சநேயன்? அவனுடன் நாங்களும் சேர்ந்து கொள்கிறோம்!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்,
"உன்" தன்னோடு, உற்றோமே ஆவோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று!

தனிப் பெருங் "கருணை"! அருட் பெருஞ் சோதி!

PS: I would be out of country for a day...Will return and reply to your comments, morrow mid nite :)
Read more »

Sunday, October 19, 2008

சினிமா சினிமா! - எந்தப் பதிவர்களை வைத்துப் பக்திப் படம் எடுக்கலாம்?

இந்தப் பதிவைப் படிச்ச பின் ஏற்படும் பயங்கரமான பின் விளைவுகள், பாவங்கள் எல்லாமே கா.பி. அண்ணாச்சி, என் தம்பி வெட்டி பாலாஜி, இவர்களையே போய்ச் சேர வேண்டும் என்று சொல்லிக்கிட்டு என்னோட திருவிளையாடலை ஆரம்பிக்கிறேன்!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த அடுத்த ரெண்டு வாரத்திலேயே Break The Rules பண்ணி,
* நண்பனோடு பார்த்தது = விக்ரம் (ஒன்னுமே புரியலை :)
* நண்பன் மற்றும் வாடகை வீட்டில் குடியிருந்த நண்பியோடு பார்த்தது = புது வசந்தம் (வித்தியாசமான அழகான கதை)
* தனியாப் பார்த்தது (ஆறாங் கிளாஸ்) = நாயகன்

சுமார் ஆறு மாசக் குழந்தையா இருக்கும் போது சினிமா பாக்க ஆரம்பிச்சேன் போல! அப்படித் தாங்க சொல்லுறாங்க!

எனக்குச் சோறு ஊட்டணும்-னா ரொம்பவே போக்கு காட்டணும். ஷோக்குப் பேர்வழி நானு! விளையும் பயிர் முளையிலே தெரியும் தானே?
அம்மாவும், அத்தையும், திருவண்ணாமலைக் கோயில்-ல இருக்குற ஒவ்வொரு சாமியும் சிற்பத்தையும் காட்டிக் காட்டி, ஒரு ஒரு வாய் ஊட்டுவாங்களாம்!
சீக்கிரமே ஆல் சாமீஸ் & சிற்பம்ஸ் தீர்ந்து போயிரிச்சு. ஆயிரம் கால் மண்டபம் கட்டுன ராசா, ஒரு பத்தாயிரம் கால் மண்டபமா கட்டி வச்சிருக்கலாம்-ல?

அப்போ தான் அத்தை ஒரு புது சோறூட்டும் வித்தையைக் கண்டுபுடிச்சாங்க! அதான் சினிமா போஸ்டரைக் காட்டிச் சோறூட்டும் பழக்கம்! :)
படத்தோட இயக்குனரே அசந்து போகும் அளவுக்கு, ஒரே போஸ்டருக்கே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான கதைகள் தயாராகும்.
இப்படியாக என் சினிமாக் கண்ணைத் தொறந்த முதல் குருநாதர்...பாலச்சந்தர் இல்லீங்க...எங்க அத்தை தான். (அவிங்க பேரு ஆண்டாள் என்பது உப-குறிப்பு :)))

நிலாவைக் காட்டிச் சோறூட்டிய காலம் போய்
கலாவைக் காட்டிச் சோறூட்டிய ஞானக் குழந்தை அடியேன்! :)

நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா:

ஐட்டம் வாரியா முன்னாடியே சொல்லிட்டேன். ஆனால், ரெண்டாங் கிளாஸ் படிக்கச் சொல்ல, வாழைப்பந்தல் தெய்வா டாக்கீஸ்-ல ஒரு சிவராத்திரிக்குப் போட்டாங்க - திருவருட்செல்வர்!

படத்தைப் பாத்துப்போட்டு, பேஸ்தடிச்சா மாதிரி இருந்தேனாம்! அதுல வர "தாள் திறவாய், கதவே தாள் திறவாய்" பாட்டு தான் ரொம்பவே ஃபீலிங்கஸ் ஆகிப் போயி, இன்னிக்கும் மனசுல நிக்குது. அதுவும் சிவாஜியின் வயதான அப்பர் சுவாமிகளின் நடுநடுங்கும் நடிப்பை, எந்தவொரு மேக்-அப் போட்டும், எந்தவொரு தசாவதாரக் கமலும் இன்று செய்ய முடியுமான்னு தெரியவில்லை!

இந்தியன் தாத்தா மேக்கப்பில் ஒரு விதமான செயற்கைத்தனம் தெரியும். அப்பர் மேக்கப்பில் அப்படி ஒரு செயற்கைத்தனம் தெரியுதா-ன்னு நீங்களே பார்த்துக்குங்க.



செயற்கைத்தனம் இல்லாததைப் பார்த்த பிறகும் எப்படி சிவாஜியின் நடிப்பை ஓவர் ஆக்டிங்-ன்னு சொல்றாங்க-ன்னு தான் புரியலை! உண்மையான உணர்ச்சிகளை உள்ளபடியே காட்டாம, நடிப்புக்குள்ள கூட நடிக்கணும் என்பது தான் எதிர்பார்ப்போ?
அவர் ஓவர் ஆக்டிங்கோ இல்லையோ, இவர்கள் ஓவர் ரியாக்டிங் என்பது வேணும்னா உண்மையா இருக்கலாம்!

பாத்திரத்துக்கு நடிகனா? நடிகனுக்குப் பாத்திரமா என்பது காலம் காலமாய் உள்ள கேள்வி தான்! கொஞ்சம் பாத்திரத்தையும் முன்னுக்குத் தள்ளுங்கய்யா! பாட்டுல பமீதா நமீதா-வை எல்லாம் அப்பறம் தள்ளிக்கலாம்!

சரி விடுங்க! ஓப்பன் சீசேம்-ன்னா தொறந்துட்டுப் போவுது! எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு, தாள் திறவாய், கதவே தாள் திறவாய்-ன்னு பாடணும்-னு? பொடிப்பையன் அப்பவே "நாஸ்திகமாய்" கேட்டு அடி வாங்குனேனாம். அது தனிக்கதை! :)


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஹிஹி...இப்போ சென்னை போன போது நாக்க மூக்க, நாக்க மூக்க -ன்னு காதலில் விழுந்தேன்! பார்த்தேன்! நாக்க மூக்க நாக்க மூக்க-ன்னு கேட்கும் போது.....நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க-ன்னு கந்த சஷ்டிக் கவசம் மாதிரியே இல்ல? அய்யோ, அடிக்க வராதீங்க! :)

போன வாரம், சென்னையில் இருந்து திரும்பி நியூயார்க் வந்தவுடன் பார்த்தது = Body of Lies! டி-காப்ரியோ or ரஸ்ஸல் க்ரோவா? கலக்குவது யாரு?
My Vote is for DiCaprio! நடுநடுவில் குருதிப் புனலை நினைச்சிக்கிட்டேன்!

ரஸ்ஸல் எப்பமே கலக்குவாரு! ஆனால் டி-காப்ரியோ கிட்ட இருந்து இப்படி ஒரு சீரியஸ் ரோலை நான் எதிர்பார்க்கவே இல்ல!
Ferris பாத்திரம் கனக் கச்சிதம்! Hoffman பாத்திரத்தில் ரஸ்ஸல் க்ரோவ் கெட்டப் கலக்கல்! டி-காப்ரியோ காதலிக்கும் அயிஷா, கொஞ்சம் கொஞ்சம் மனிஷா கொய்ராலா முகம்! :)


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அதுவும் இப்ப தான் சாமீ! பாரீஸ் போயிருந்த போது என் ஆருயிர் நண்பன் என்னை ஒழிச்சிக் கட்டறத்துக்குன்னே இந்த சிடி பரிசாகக் கொடுத்தான் போல. என்ன பண்ணுறது? அவனுக்காகவே முழுசும் பார்த்தேன் :)
ஏபி நாகராஜன் படம். சிவகுமாரை முருகனாவே பார்த்து பார்த்து, இளமையான கண்ணனாகப் பார்க்கும் போது...ஹூம்! :) பேசாம சூர்யாவைக் கண்ணனா நடிக்கச் சொன்னா என்னா? வாரணமாயிரம் எப்பப்பா ரிலீசு?

படத்தோட பேரு: ஸ்ரீ கிருஷ்ண லீலா! என் தோழனோட பேரு என்னா? :)


4. மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா

சத்தியமா ரமணாவும் இல்ல! பாய்ஸூம் இல்ல! :)

ஜிரா சொன்ன கல்யாண அகதிகள் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதைப் பார்த்த கால கட்டத்தில், படத்தின் முடிவைக் கண்டு அதிர்ந்தும் போயிருக்கேன்.
ஆனால் நினைவில் அடிக்கடி வந்து நிழலாடுவது இரண்டு படம். ஒன்னு அபூர்வ ராகங்கள். இன்னொன்னு மகாநதி. இரண்டுமே கட்டமைப்புகளை நாகரீகமாக உடைக்கும் படங்கள்.

தவமாய் தவமிருந்து = பெரிய ஹிட் இல்லை என்றாலும் என்னை மிகவும் பாதித்த படம். அப்பாவோ, பிள்ளையோ, நண்பனோ, ஒவ்வொரு மனிதனின் ஆசையிலும் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால் வாழ்வின் மொத்த நியாயத்துக்கும்னும் தனியா ஒரு நியாயம் உண்டு. அதை ஓவர் சென்ட்டி போடாது, அழகாகக் காட்டும் படும்.

எந்த ஒரு ஊடகத்திலும் தனி மனிதச் சிந்தனை, பொது வாழ்க்கை மேம்பாடு என்ற இரண்டுமே உண்டு! பொதுவுக்கு அதிக முக்கியதுவம் அளிப்பது இயற்கை தான்! அதே நேரத்தில் தனிச் சிந்தனை மேம்பாட்டுக்கும் இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கு! ஆயிரம் தனிச் சிந்தனைகள் சேர்ந்து தான் ஒரு பொதுச் சிந்தனை அல்லவா!

ஆன்மீகப் பதிவுகள் எல்லாம் இந்தத் தனிச் சிந்தனை மேம்பாட்டை மையமாகக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை. தவமாய் தவமிருந்தில் வரும் ராம லிங்கங்களின் பார்வைகள் இதனால் இன்னும் கெட்டிப்படும்!
ஆன்மீகம் பாதை காட்டத் தேவையில்லை! பார்வை காட்டினாலே போதும்!


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவம்?

குஷ்பு ஒரு கருத்து சொல்ல, உலக உத்தமர்கள் எல்லாம் தமிழ்ப் பண்பாடு காத்திட பொங்கி எழுந்த நிகழ்ச்சி தான்! இவர்கள் எல்லாம் பதிவுலகம் வந்தா, அடுத்த கட்டத்துக்கு ஈசியாப் போகலாமோ? :)

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச் சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

இந்தக் கொஸ்டின் சாய்சில் விடப்படுகிறது! :)
தசாவதாரம் படத்தில் பூவராகவன் இறக்கும் போது, கடல் நீர் போல மிதப்பது தெரிந்தாலும், அது நீர் அல்ல, காற்று என்பதைக் கேட்டு அசந்து போனேன். சின்னச் சின்னக் காமிரா டெக்னிக்குகள் ரொம்ப பிடிக்கும்! அலை பாயுதே படத்தில் காதல் சடுகுடு பாட்டில், காமிரா அப்படியே ஏறி இறங்கி டான்ஸ் ஆடும். இது போலச் சின்னச் சின்ன பார்வை!


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

யூ மீன் கிசு-கிசு? :)
குமுதம்-ல லைட்ஸ்-ஆன் தானே? விகடன்-ல ஒன்னும் இல்லையா?

MSV-இன் விகடன் தொடர் வாசிச்சி இருக்கேன். வைரமுத்து கட்டுரைகள் படித்தது உண்டு. ஒரு நடிகையின் கதை படிப்பதற்காகவே Id ஓப்பன் பண்ணதும் உண்டு!:)

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்-ன்னு ஒருத்தர் தமிழ்ச் சினிமா behind the scenes எல்லாம் எழுதுவாரு! அரிய புகைப்படங்கள் எல்லாம் இருக்கும். சேமிச்சி வச்சிக்குவேன்! அவர் எழுதிய புத்தகம் "சாதனை படைத்த தமிழ் சினிமா வரலாறு", கட்டாயம் வாசிக்க வேண்டிய ஒன்று!


7.தமிழ்ச் சினிமா இசை?

இதுக்குத் தனியா ஒரு தொடர் விளையாட்டு தான் போடணும் நீங்க!
இல்லீன்னா றேடியோஸ்பதி, வீடியோஸ்பதி, வனஸ்பதிக்குப் போங்க! இசை இன்பம் வலைப்பூவில் சினிமா இசை இப்போது குறைந்து விட்டது. இன்னும் வரணும்!

இசை அமைப்பாளர்கள் MSV, ராஜா, ரஹ்மான் இவர்கள் எல்லாம் ஒவ்வொரு மைல்கல்! அம்புட்டுத் தான்! அதுக்கு மேல அவர்கள் இல்லீன்னா ஒன்னுமே இல்ல, திரையிசையே ததிகணத்தோம் போட்டிருக்கும்-னு பேசறது எல்லாம்....
இசை என்னும் இன்பமயமான மதுவுடன் கூடவே வரும் போதை போலத் தான்!

மொத்தத்தில்
* பாடல் வரிகளை ஆத்மாவாக வைத்த இசைக்கு MSV.
* இசைக்குப் பாட்டை வைத்த இசைக்கு இளையராஜா.
* இசைக்கு இசையையே வச்சவரு ரஹ்மான்.

திரையிசையில் இப்பவெல்லாம் காலத்தால் அழியாத கானங்கள் வருவதில்லை! வெறும் இரைச்சல் தான் அதிகம் என்பது ஒரு சிலர் கருத்து! ஆனால் ஒப்புக் கொள்ள முடியாது! நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய், அற்றைத் திங்கள் வானிடம், அல்லிச் செண்டோ நீரிடம் போன்ற பாடல்கள் வராமலா போகிறது?
இப்போ கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா-ன்னு பாட்டு வந்தா, அப்போ நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானூங்கோ பாட்டு வந்தது.

இரைச்சலும் இசைக்குத் தேவை! இரைச்சல் மட்டுமே இசையாகிப் போகாமல் பார்த்துக் கொள்வது இயக்குனர் கிட்ட தான் இருக்கு. ஷங்கர் படங்களுக்கு மட்டும் எப்படி வைரமுத்து பாட்டும் கொடுக்காரு? ரஹ்மான் இசையும் கொடுக்காரு?
சுருக்கமாச் சொல்லணும்-னா, MSV, ராஜாவுக்கு இருந்த இயக்குனர்கள் இப்போ இல்லை! அம்புட்டு தான்! :)


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

இசைக்கு மொழி கிடையாது-ன்னு சொல்லுறாங்களே! சினிமாவுக்கும் அப்படித் தானுங்களே? :)
தெலுங்கில் கோதாவரி நான் இன்றும் அசை போடும் படம். ஹிந்தியில் தேவதாஸ் (ஷாருக்), தாரே ஜமீன் பர். மலையாளத்தில் சில படம் சொல்லுவேன்! அடிக்க வருவீங்க! புரசைவாக்கம் மோட்சம் தியேட்டர் பக்கத்திலேயே இருக்கும் போது, நான் என்ன செய்வதாம்? :)
பை தி வே, லயனம் என்கிற படம் பார்த்து இருக்கீங்களா? சில்க் ஸிமிதாவின் "நடிப்பை" அதில் பார்க்கலாம்!

உலகத் தரம் வாய்ந்த படமெல்லாம் நீங்க கப்பியைத் தான் கேக்கோணும்!
எனக்கு மியூசிக்கல் ரொம்ப பிடிக்கும். Singing in the Rain எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்பேன்! உங்க வீட்டுக்கு வந்தா, இந்தப் படமோ இல்லை The Chicago - இரண்டில் ஒன்னு போட்டு விட்டீங்கன்னா போதும், ரொம்ப சாப்பாடு எல்லாம் கேட்டு தொந்திரவு செய்ய மாட்டேன்-ன்னு மட்டும் வாக்குமூலம் கொடுக்கறேன்! :)

Love in the time of Cholera! அருமையான காதல் ப(பா)டம்! Garcia Márquez அவர்களின் நாவலை முதலில் திரைக்குக் கொண்டு வந்த படம்! பாடகி ஷகிரா நடிக்கவும் இருந்தார். ஆனால் ஒரு நிர்வாணக் காட்சி இருந்ததால் ஒதுங்கி விட்டார்!

காதலைக் காலரா நோய்க்கு ஒப்பிடும் துணிவு, பப்ளிக்கா இங்க யாருக்காச்சும் வருமா? கணவனின் இறுதிச் சடங்குகள் முடிந்த கையோடு 50 வருடப் பழைய டெலிகிராம் பையன் முன்னே தோன்றுகிறான்; எத்தனை வருஷம் காத்திருக்க முடியும் காதலுக்கு? ஒரு அம்பது வருஷம்? அது வரை பெண்களோடு ஒப்புக்குச் சல்லாபம். மற்றபடி அவனுக்குக் காதல் தேடும் உள்ளம். அவன் காமுகனா? காதலனா?


9. தமிழ்ச் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச் சினிமா மேம்பட அது உதவுமா?

அட, என்ன இப்பிடிக் கேட்டுப்புட்டீங்க? அடுக்குமா இது?
எனக்கு வெட்டிப்பையல் தெரியும்
எனக்கு திவ்யா தெரியும்
எனக்கு ஜிரா தெரியும்
எனக்கு ராயல் ராம் தெரியும்
எனக்கு சீவீஆர் தெரியும்
எனக்கு அருட்பெருங்கோ தெரியும்
எனக்கு பாஸ்டன் பாலா தெரியும்
எனக்கு குசும்பன் தெரியும்
எனக்கு கோவி கண்ணன் கூடத் தெரியும்!

இப்படி வருங்கால இயக்குனர்கள், திரைக்கதையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், கவிஞர்கள், திரைத் தொகுப்பாளர்கள், நகைச்சுவை வல்லுநர்கள் என்று இத்தனை பேரின் அறிமுகம் இருக்கும் போது, சேச்சே...இப்படிக் கேக்கலாமுங்களா? :)

எனக்கு கேஆரெஸ் கூடத் தெரியும்! தேவர் பிலிம்ஸ் மாதிரி கேஆரெஸ் பிலிம்ஸ்! யானைகளைத் தேடும் பணியில் இருக்கேன்!
தமிழ்த் திரையின் அடுத்த கட்டம் ஆன்மீகச் சினிமா தான்! தலைவர் கால்ஷீட் கூட 2020க்கு இப்பவே கிடைச்சாச்சி! :)


10. தமிழ்ச் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

* இதுவும் கடந்து போகும்! மசாலா என்பது ஒரு சில பிரியாணிப் படங்களுக்கு மட்டுமே என்று ஆகும்!
எப்பமே பரியாணி தின்ன முடியுங்களா?
எப்பமே ஆன்மீகப் பதிவு படிக்க முடியுங்களா என்ற கேள்வியில் உள்ள அதே நியாயம் தானே இதிலும்? :)

நம்பிக்கை நட்சத்திரங்கள் பலர் மின்னிடுகிறார்கள். சேரன் அவர்களுள் ஒருவர். சுசி கணேசன் இன்னொருவர். விக்ரம், சூர்யா இருவரும் எல்லாம் முடிந்தது என்று ஒதுங்காமல், இன்னும் இன்னும் நிறைய செய்ய வேண்டும்!

* இன்றைய தமிழ்த் திரைக்கு எல்லாம் வாய்த்தும், ஆரோக்யமான போட்டி போட்டு, நடிப்பை வெளிக் கொணரவல்ல நல்ல இயக்குனர்கள் வாய்க்கவில்லையோ?

* பெண்களுக்கு ஏன் இப்போதெல்லாம் திரையுலகில் தனியான தனித்துவம் இல்லை?
பெண்ணுரிமைக் கொடி பறக்காத காலங்களில் கூட பத்மினி என்றாலோ, பானுமதி என்றாலோ, சரிதா என்றாலோ.....ஒரு தகைமை இருந்ததே! இன்று அது எங்கே?
சில பெண் நடிகர்கள் விலகிக் கொண்டாலும், தங்கள் முத்திரைப் பதிப்புகளை இன்னும் முன்னெடுத்துச் செல்ல உதவ வேண்டும்!
பெண்கள் மனது வைத்தால், தமிழ்த் திரையின் மசாலாவை மாற்ற முடியும்! முடியும்! முடியும்!


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

பிரிக்க முடியாதது என்னவோ? = தமிழும் - சுவையும்! அட அதைக் கூட அரசியல்-ல பிரிச்சிறலாம்!
ஆனா பிரிக்கவே முடியாதது, தமிழும் - சினிமாவும்!
முத்தமிழ்-ன்னா அது = இயல், இசை, சினிமா!

எல்லாரும் பதிவு போட்டாச்சி! யாரய்யா கூப்பிட?
மாலன்
சாரு நிவேதிதா
அண்ணா கண்ணன்
வாசந்தி
கனிமொழி

சரி...சினிமாவை மாறுபட்ட கோணத்தில் பார்க்க வல்ல இருவரை அழைக்கிறேன்! - இவிங்க இப்ப தான் ஒரு தொடர் ஆடி முடிச்சாங்க! அதுக்குள்ள இன்னொன்னு!
மதுமிதா அக்கா & கொல்கத்தா நிர்மலா - முன்னாள் டீச்சர்



பி.கு:
சரி...ஏன் புகழ் பெற்ற நாவல்களைத் தழுவி அதிக தமிழ்ப் படங்கள் எடுப்பதில்லை? இல்லை வெற்றி அடைவதில்லை?
பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர நாவல்களுக்குத் தான் இந்த கதியா?
மோக முள், இரும்புக் குதிரைகள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், என் இனிய இயந்திரா (இப்போ எந்திரன்-ன்னு வரப் போகுது?)...இதெல்லாம்?

மக்கள் அதிகம் வாசித்த நாவல்கள் தானே! எடுத்தா ஓடாதா? ஹாலிவுட் ஹிட்டான நாவல்களை எல்லம் படமாக்கிக் கொழிக்கும் போது, கோலிவுட் மட்டும் கோலி விளையாடிக் கொண்டே இருப்பதுக்கு காரணம் ஏனோ? நல்ல கதைகளுக்குப் பஞ்சமே இல்லாமல் தமிழ் நாவல்கள் எக்கச்சக்கமா இருக்கே!

உ.கு:
ஏன் இப்ப எல்லாம் ஏபி நாகராஜன் டைப் ஆன்மீகப் படங்களே வருவதில்லை? வந்தால் ஓடாதா?
அதெல்லாம் ஹரிதாஸ் காலம்-பா ன்னு சொன்ன போது, ஒரு கந்தன் கருணை ஓடவில்லையா? தேவர் படம் ஓடவில்லையா? தாய் மூகாம்பிகை ஓடவில்லையா?

அதுக்காக இராம நாராயணன் மாதிரி படம் எடுக்கச் சொல்லலை! குஷ்பு சொன்ன போது மட்டும் கலாச்சாரம் பேசினோமே? தமிழ்க் கலை பண்பாட்டுப் பொக்கிஷங்களை எல்லாம் இன்றைய மக்கள் ரசனைக்கு ஏற்றவாறு தருவார்கள் யார்?

சரி, எனக்கு நம்மாழ்வார்-இராமானுசரை வச்சிப் படம் எடுக்க ஆசை! பதிவர்களில் யாரைக் கண்ணனா போடலாம்? யாரை இராமானுசரா போடலாம்? யாரைக் குலோத்துங்க சோழனா போடலாம்...சொல்லுங்க பார்ப்போம்! நாரதர் வேசம் ஏற்கனவே ஒருவர் துண்டு போட்டாச்சி :))

சுபம்!
Read more »

Wednesday, October 08, 2008

கோயிலில் முதல் மரியாதை யாருக்கு? - அபராதச் சக்கரவர்த்திக்கு!

அன்றும் அங்கே அதே பிரச்சனை தான்! கோயில் திருவிழாவில் முதல் முரியாதை யாருக்கு? இந்த முதல் மரியாதை, குடும்ப மரியாதை - சென்ட்டிமென்ட் சீனை எல்லாம் வைத்து எத்தனையோ கேப்டன் படங்கள், சரத்குமார் படங்கள் வந்து விட்டன! பெரிய தாம்பாளத் தட்டில் மாலையெல்லாம் வச்சி, பரிவட்டம் கட்டி, பல பேர் அருவா வீசி, முட்டி மோதிய பின்னர், முதல் மரியாதையை நம்ம ஹீரோவுக்குப் பூசாரி பண்ணி வைப்பாரு!
ஆனால் அவர்கள் எல்லாம் சினிமா கதாநாயகர்கள்! நிஜ வாழ்க்கைக் கதாநாயகரை இன்னிக்கிப் பார்க்கலாமா? அவர் பெயர் வேதாந்த தேசிகன்!
இன்று அவர் பிறந்தநாளும் கூட! (புரட்டாசித் திருவோணம் - Oct 9, 2008)

கடலூர் திருவயிந்தபுரம் கோயிலில் அன்னிக்கி ஒரே கூட்டம்! ஏதோ திருவிழாவாம்! கருட பஞ்சமியாம்! நாம தான் கூட்டத்தில் தரிசனம் பண்ணனும்னா, ஒரேயடியா சலிச்சிக்கிற ஆளுங்களாச்சே! சினிமாவுக்கு எவ்வளவு கூட்டம் இருந்தாலும், முதல் காட்சியிலேயே பார்த்து விடணும்! ஆனா கோயிலில் மட்டும், அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாகத், தாமும் ஒரு துளியாகக் கரைந்து வணங்கும் மனோபாவம் மட்டும் நமக்கு வராது அல்லவா! ஹா ஹா ஹா!

கடலூருக்கு அருகில் உள்ள தலம் திருவயிந்தபுரம் என்னும் திருவஹீந்திரபுரம்!

அஹீந்திரன் என்றால் ஆதிசேஷன்! அவன் வணங்கிய தலம், அதனால் திரு-அஹீந்திர-புரம்!
வைணவ வைத்தீஸ்வரன் கோயில் என்றும் சொல்லுவார்கள்! சில நோய் நீக்க மருந்துகளும் இங்கு தரப்படுகின்றன! மருந்து மலை என்னும் ஒளஷத கிரியின் அடிவாரத்தில் உள்ள ஆலயம்!
இங்கு தேவநாதப் பெருமாள், சிவபெருமானைப் போலவே, முக்கண் அப்பனாய்க் காட்சி தருகிறார்!
அவர் நெற்றியில் நெற்றிக் கண்! போதாக்குறைக்கு நீண்ட ஜடாமுடி! கையிலோ பிரம்மனைப் போல் தாமரை மலர்! இப்படி முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்று சமய ஒற்றுமைக்கு, சாட்சி கொடுத்துக் காட்சி கொடுக்கிறான் இறைவன்!

இறைவனே ஒற்றுமைக்குச் சாட்சி கொடுத்தாலும், மனிதர்களுக்கு முதலில் தங்கள் சுய பெருமை தானே முக்கியம்? - அன்று கோயிலில் தீர்த்தச் சண்டை! முதல் தீர்த்தம் யாருக்கு?


வைணவக் கோட்பாடுகளில் இரு பிரிவுகள். தென்கலை, வடகலை!
சொல்லப் போனால் அது பிரிவே இல்லை! கருத்துக்களின் பரிமாணம்! ஆனால் அது போதாதா நம்மாளுங்களுக்கு?
மாற்றுக் கருத்து என்றால் அதை வெறுத்துப் பிரித்து வேறுபாடா ஆக்கிட மாட்டாங்களா என்ன!

நண்பர்கள் என்றாலோ, சமூகம் என்றாலோ, ஒத்த கருத்து உடையவர்கள் தானே எப்போதும் நண்பர்களாக இருக்க முடியும்? கொஞ்சம் வேற வேற கருத்துன்னா, அது நட்பாகாதே! நட்பு ஆகவும் விட மாட்டாங்களே! அப்படித் தான் உலகத்தின் பார்வைக்கு, இந்தத் தென்கலை-வடகலைக் கருத்து வேறுபாடும் :))

* இறைவனைச் சரணம் அடைய வேண்டுமே என்ற பழுதிலா எண்ணமும், அவாவும் ஒன்றே போதும்; தனியாகச் சரணாகதி என்னும் செயல் கூடத் தேவையில்லை! - இது தென்கலை!
* எண்ணமும் அவாவும் மட்டும் போதாது. அதற்கான கர்மாவைச் செய்யவேண்டும். செயல் புரிய வேண்டும்! - இது வடகலை!

தமிழ் மொழியில் வழிபாட்டுக்கு இருவருமே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஆழ்வார்கள் தீந்தமிழை இருவருமே கருவறையில் ஓதுகிறார்கள்! அப்புறம் என்ன?
இரு சாராருக்கும் சிறுச்சிறு சித்தாந்த வேறுபாடுகள் தான்! சிறுச்சிறுதே எம்மேல் விழியாவோ? சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே! - இதை உணர்ந்து விட்டால் நாதத்தில் பேதம் ஏது?

ஆனால் "உணர" வேண்டுமே! அப்படி உணர்வதற்கு முதலில் "தான்", "தங்கள் கருத்து" என்பதைக் கழற்றி வைத்து, "அவன்", "அவன் கருத்து" என்று யோசிக்கும் மனம் வர வேண்டுமே! அந்த மனம் எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் இருக்காது போல! - அன்று ஆலயத்தில் சண்டை! - முதல் தீர்த்தம் யாருக்கு?

அவர்களுக்கா? இவர்களுக்கா? அவர்கள் தலைவருக்கா? இவர்கள் தலைவருக்கா?
அவர்களுக்கும் இவர்களுக்குமான ஒரே தலைவர்! - தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!



வேதாந்த தேசிகர் பழுத்த மகான். இல்லறத்தில் இருந்து கொண்டே வைணவ அறம் வளர்த்த நாயகர். எம்பெருமானுக்கு அல்லாது வேறு எதற்கும் சிக்காதவர்! உன் அந்தமில் சீர்க்கு அல்லால், அகம் குழைய மாட்டேனே என்று ஆழ்வார் வாக்கினை வாழ்க்கையிலும் காட்டிய மகா குரு! குரு பரம்பரையில் வாராது வந்த ஒரு மாமணி!

தென்கலை-வடகலை இருவருமே மதித்துப் போற்றும் மாமனிதர். கல்வி கேள்விகளில் வல்லவர். இரு மொழிப் பெரும் புலவர். சர்வ தந்திர ஸ்வதந்திரர் என்று அரங்கத்து அன்னையே உவந்து பட்டம் அளிக்கப் பெற்றவர்!

அன்று ஆலயத்தில் இந்த வீண் வேறுபாடுகளை எல்லாம் பார்த்தார், உடல் வேர்த்தார்! இறைவன் தீர்த்தத்துக்கா இவ்வளவு சண்டை? இம்புட்டுக் கூச்சல்? இது ஆ-லயமா இல்லை ஆரவார-லயமா?....
அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்க, விறுவிறு என்று நடந்து, வாசலை நோக்கிச் செல்கிறார் தேசிகர்.

ஆலயத்தில் ஒரே நிசப்தம் ஆகி விட்டது! கோபமே வராத தேசிகருக்கும் கோபம் வந்து விட்டதோ? தீர்த்தம் கூட பெற்றுக் கொள்ளாமல் வெளியேறுகிறாரே!
தீர்த்தம் வழங்க இவ்வளவு கால தாமதம் செய்கிறார்களே என்ற தாபமோ?
தனக்கு முதல் தீர்த்தம் தர இவ்வளவு யோசிக்கிறார்களே என்ற கோபமோ? ஆகா!

தேசிகர் நேராக வரிசையின் கடைசிக் கோடிக்குச் சென்று நின்று கொண்டார்! அடியவர்களோடு அடியவராகக், கூடி இருந்து குளிர்ந்தேலோ என்று நின்று விட்டார்!



"சுவாமி, என்ன இது? இங்கு வந்து நின்று கொண்டீர்கள்? அடுக்குமா? முன்னே வாருங்கள்! என்ன இருந்தாலும் நீங்கள் மகா குரு!"

"இல்லையில்லை! அடியேன் மகா குரு எல்லாம் இல்லை!"

"சுவாமீ...அப்படிச் சொல்லக் கூடாது! தாங்கள் சர்வ தந்திர ஸ்வதந்திரர்! தாங்கள் சர்வ கலா சக்கரவர்த்தி!"

"ஹா ஹா ஹா! இல்லையில்லை! அடியேன், அபராதச் சக்ரவர்த்தி!"

"ஐயகோ!"

"ஆமாம்...உண்மை தான்! அடியேன், அபராதச் சக்ரவர்த்தி!"

"தாங்களே இப்படிச் சொன்னால், நாங்கள் எல்லாம் எப்படி?"

"இதோ, இங்கே எம்பெருமானைச் சேவிக்கக் காத்திருக்கும் இந்த நடுநாட்டு விவசாயி மக்கள், அடியவர்களை எல்லாம் பாருங்கள்! அவர்கள் எல்லாரும் வேதம் அறிந்தவர்களா என்ன?"

"அதனால் தான் சுவாமி அவர்களுக்கு நடைமுறையில் இறுதியாகத் தீர்த்தம் தரப்படுகிறது"

"ஓகோ! அவர்களுக்கு வேதம் தெரியாது! சரி தான்! ஆனால் பேதமும் தெரியாது தானே!"

"புரியவில்லை சுவாமி"

"தங்கள் செளகர்யம்-அசெளகர்யங்களை எல்லாம் மறந்து விட்டு, இந்தப் புழுக்கத்திலும், அவன் ஒருவனையே குறிக்கோளாக வந்திருக்கிறார்களே! ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? வேதம் தெரிந்ததால் பேதமும் தெரிந்து வைத்திருக்கிறோம், அல்லவா?
நம் செளகர்யம்-அசெளகர்யங்களை மட்டும் பார்த்துக் கொண்டு, யாருக்கு முதலில் என்று தீர்த்தச் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோம் தானே?"

"சுவாமீ..."

"இந்தச் சண்டைகளால், எம்பெருமான் திருமுகம் உல்லாசப்படுமா? அதை யோசித்தீர்களா?
அவன் திருமுக உல்லாசம், அவன் திருவுள்ள உகப்பு - இது வேண்டுமா இல்லை முதல் தீர்த்தம் வேண்டுமா? எது வேண்டும் உங்களுக்கு?

"சுவாமீ..."

"இனி மேல்...வழிபாடு செய்து முடிக்கும் வரை, அடியேன் உங்களோடு இருந்து கொண்டு மறைகளும் மந்திரங்களும் ஓதுவேன்!
பூசைகள் முடிந்த பின்னர், அடியார்களுக்கு எல்லாம் கடைசி அடியாராக, இதே போல், இறுதியில் போய் நின்று கொள்வேன்!
நீங்கள், எல்லாருக்கும் தீர்த்தம் அளித்த பின், இந்த அபராதச் சக்ரவர்த்திக்கு தீர்த்தம் பிரசாதித்தால், அதுவே போதும்!"

"சுவாமி.....எங்களை மன்னித்து விடுங்கள்! வேண்டாம் இந்த விபரீத முடிவு! முன்னே வாருங்கள், தீர்த்தமும், துழாயும் பெற்றுக் கொள்ளுங்கள்"

"மறையோர்களே, இந்த ஊர் பேர் தெரியாத அடியவர்கள் எல்லாம், தங்களை முன்னிறுத்திக் கொள்ளவில்லை! அவனை முன்னிறுத்தியே வந்துள்ளனர்!
ஆனால் நாமோ, நம்மையும் நம் கோட்பாட்டையும் முன்னிறுத்திக் கொண்டோம்!
இப்போது சொல்லுங்கள் யார் அன்பர்கள்? யாருக்கு முதல் தீர்த்தம்?

இனி அடியவர்கள் ஒருவர் விடாது, அனைவரும் தீர்த்தம் பெற்றுக் கொண்ட பின்னர் தான், அடியேன் வேதாந்த தேசிகன் பெற்றுக் கொள்வேன்! இது சத்தியம்!"



வேதாந்த தேசிகர் பிறந்த நாளான (திரு அவதார நாளான) இன்று,
வெறுமனே விழாவாக மட்டும் கொண்டாடாது, அவர் ஆசார்ய ஹிருதயத்தை உணர்ந்து பார்ப்போம்!

தேசிகரைப் பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்ள இதோ விக்கிக் கட்டுரை! இனி வரும் காலங்களில் மாதவிப் பந்தலில், தேசிகர் பற்றிய ஆழங்கால் பதிவுகள் தொடரும்!

எம்பெருமானார் இராமானுசரை உள்ளத்தால் அண்டிய அன்பர்கள் எல்லாரும் கருணை என்னும் பெருங்குணத்தைக் கொண்டவர்களாகவே இருந்தார்கள்!
அவர்கள் வரிசையில் வந்தவர் வேதாந்த தேசிகர். அவரை "இராமானுஜ தயா பாத்ரம்" என்றே இன்றும் கொண்டாடுகிறார்கள்!
தேசிகர் ஸ்ரீவைஷ்ணவ மகுடத்தில் ஒரு மாமணி! மாமுனி!

ராமானுஜ தயா பாத்ரம், ஞான வைராக்கிய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம், வந்தே வேதாந்த தேசிகம்!

(இராமானுசரின் தயைக்குப் பாத்திரமானவரும், நல்லறிவும் பெரு உறுதியும் கொண்டவரும்,
திருவேங்கடநாதனின் அம்சமாய், அதே திருப்பெயர் கொண்டவருமான, வேதாந்த தேசிகருக்கு வணக்கங்கள்!)


செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலை மால் திருமணியாய்ச் சிறக்க வந்தோன் வாழியே!

வடகலை-தென்கலை என்னும் கோட்பாடுகளால் மட்டும் உலகம் அளந்தவனை, அளந்து விட முடியுமா என்ன?
உலகளந்த பெருமாளை அளக்க முடியாது! "கொள்"ளத் தான் முடியும்! "கொள்"வோம்!
குற்றேவல் எங்களைக் "கொள்"ளாமல் போகாது! மற்றை நம் காமங்கள் மாற்று-ஏல்-ஒர் எம்பாவாய்!

வேதாந்த தேசிகன் திருவடிகளே சரணம்!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP