சிலப்பதிகார Dancer மாதவியோட பந்தலா? இல்லை ரா’ஜ’ பார்வையில் கமல் நாயகி மாதவியின் பந்தலா?:)
மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயில் இனங்கள் கூவின காண்! - என்பது நம் கோதைத் தமிழ்!
மாதவி என்பது வசந்தமல்லி/ குருக்கத்திச் செடி! அது ஆண்டாள் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு மணம் வீ்சுது!
மாதவிப் பந்தல் மேல், எங்கிருந்தோ வரும் குயில்கள்லெல்லாம் வந்தமர்ந்து, பண் இசைக்கின்றன! இந்த மாதவிப் பந்தலில் நீங்களும் குயில்களே!:)
தமிழா? சமயமா?
மாதவிப் பந்தல் "வைணவ வலைப்பூ" என்று சொல்வதில் ஒரு சிலருக்கு மட்டும் "இனம் புரியாத" ஆர்வம்:) - ஆனால் பந்தல் வைணவப் பூ அல்ல!
மாதவிப் பந்தலில் முதன்மை பெறுவது: 1. மானுடம் - அது சார்ந்த ஆன்மீகம் 2. தமிழ் - அதை முன்னிறுத்தும் ஆன்மீகம்
சாதி மறுப்பும், தமிழ் ஏற்றமும் எங்கெங்கு எல்லாம் தலை நிமிர்ந்து உள்ளதோ... அவை அத்தனையும் பந்தலில் பேசப்பட்டுள்ளது! பேசப்படும்! - தக்க தரவுகளோடு! உண்மையோடு!
"அடியார்களைக் குலம் விசாரிப்பவன் பெற்ற தாயை யோனி விசாரிப்பவன் ஆகின்றான்" - இராமானுசர்
இப்படியான அறத் துணிவும்/பெரியார் உள்ளமும் உள்ள எந்த நெறியும் பந்தலுக்குச் சொந்த நெறியே, கந்த நெறியே!
முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ்-இல், Fast Beat கண்ணன் பாட்டு ஒன்றைப் பார்த்தோம் அல்லவா! அதே அலைவரிசையில் இன்று, பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களையும் காண்போம்! வாருங்கள்! ஆனா, அதுக்கும் முன்னாடி...
"‘நின்று’ என்றால் என்ன? சொல்லுங்க பார்ப்போம்!"
"‘நின்றா’?? அட போடா வென்று - ரவி"
"ஹா ஹா ஹா! சரி, நான் வென்றாவே இருந்துக்கிட்டு போறேன்! ஆனா, சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்-ன்னு அருணகிரி பாடுறாரு! மாயோனைப் பற்றி "நின்றேன்", வாயார என்று கொலோ வாழ்த்து நாளே?-ன்னு ஆழ்வார் பாசுரம்!
இப்படி எல்லாரும், "நின்று", "நின்று"-ன்னு சொல்லுறாங்களே! ஏன், நின்னுக்கிட்டுத் தான் கும்பிடணுமா? உட்கார்ந்து கும்புட்டா ஏலாதா? படுத்துக்கிட்டு மனசால கும்பிட்டா ஆகாதா? - ஏன் இந்த "நின்று"???
இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்! 1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான் 2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார் இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்!
இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்... இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்... 3. தோழன் இராகவன் (எ) ஜிரா...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :) எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு! மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்......
ஜிரா (எ) இராகவன் கைகளால்...
ரொம்ப நாள் கழிச்சி....இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இதோ - இங்கிட்டு செல்லுங்கள்! சிந்திக்கிலேன், "நின்று" சேவிக்கிலேன்!அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!
மஹீசார க்ஷேத்திரத்தில், சக்கரத்தாழ்வாரின் அம்சமாகப் பிறந்து, பல மதங்களைத் தழுவி (இதை, அவரே பாடலாக இயற்றியுள்ளார்), கடைசியில், வைணத்திற்கு வந்தவர் திருமழிசையாழ்வார். இவருக்கு, பல பெருமைகள் இருந்தாலும், 3 மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை:
'பிரான்' என்பது, எம்பெருமானுக்கே உரித்தான பெயர் (பிறருக்கு உதவுபவன் - இதைப் பற்றி, நரசிம்ம சரணாகதியில் முன்னமேயே எழுதியுள்ளேன்). ஆனால், 'பரம்பொருள் யார்?' என்பதை உலகுக்கு உணர்த்தி, அவர்களுக்கு நல்வழி காட்டியதால், திருமழிசை ஆழ்வாருக்கு மட்டும், திருமழிசைப் பிரான் என்ற பெயர் உண்டு!
திருமழிசைப்பிரான், கிடந்த நிலையில் இருக்கும் திவ்விய தேச எம்பெருமானைப் பற்றியே அதிகம் பாடியுள்ளார். இவர் எழச் சொன்னதும் எழுந்து, படுக்கச் சொன்னதும் மீண்டும் எம்பெருமான் படுத்த பெருமை, இந்த ஆழ்வாருக்கு மட்டுமே உண்டு! இவருக்கு உகந்து, உற்றவனாக, பேசிக்கொண்டு இருந்த திருக்குடந்தை எம்பெருமானுக்கு மட்டும், 'ஆராவமுது ஆழ்வான்' என்ற பெயர் உண்டு!
திருமழிசைப்பிரானின் வேண்டுதலுக்கு இணங்க, திருமால், ஆழ்வார் உடம்பிலேயே, தேவியர் சகிதமாக, தான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை, பெரும்புலியூர் அந்தணர்களுக்குக் காட்டியது பிரசித்தம்.
தாம் எழுதிய ஓலைச் சுவடிகளை இவர் திருக்குடந்தை திருக்குளத்தில் சமர்ப்பிக்க, திருச்சந்த விருத்தம் (முதலாயிரம்), நான்முகன் திருவந்தாதி (இயற்பா) எனும் இரண்டே பிரபந்தங்கள் மிதந்து மேலே வந்தன.
(சில வரலாற்று நூல்கள், ஆழ்வார் ஓலைச் சுவடிகளை திருக்குடந்தை ஆற்றில் விட, இந்த இரண்டு சுவடிகள் பட்டும் நீரில் அடித்துச் செல்லப் படாமல், நீரை எதிர்த்து இவர் திருவடிகளை அடைந்ததாகவும் கூறும்)
***
திருமழிசையாழ்வார் காலம், தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப் பாட்டு போன்ற நூல்கள் இயற்றப் பட்ட சங்க காலம் (திருக்குறள் முதலான 18 கீழ்க்கணக்கு நூல்களுக்கு முந்தைய காலம் இது) என்பதை தமிழ் அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.
தமிழ்ச் சங்க நூல்களுக்கும், திருச்சந்த விருத்தத்திற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன (ஆழ்வார்கள் காலங்களை நிர்ணயிக்க, சங்க நூல்களும் உதவியாக உள்ளன). மேலும், புராணங்களைக் கொண்டு நாயன்மார்கள் காலத்தில் திருமாலுக்குச் சொல்லப்படும் தாழ்வுகள் எதுவுமே சங்க நூல்களில் காணப் படவில்லை (கிருஷ்ணஸ்வாமி ஐயங்காரின் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான முகவுரை, ப-4, 1995).
வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் திருமழிசையாழ்வார் காலம் கி.பி. முதலாம் நூற்றாண்டு என்கின்றனர்.
***
'எல்லாப் பொருள்களும் எப்பொருளில் இருந்து தோன்றுகின்றதோ, தோன்றிய பிறகு, எந்தப் பொருளில் மீண்டும் மறைகிறதோ, அதுவே பரம்பொருள்' என்று உபநிடதம் கூறுகிறது (எல்லாப் பொருள்களும் ஒரு பொருளில் தோன்றி, வேறு ஒரு பொருளில் மறைந்தால், அந்த இரண்டு பொருள்களுமே பரம்பொருள்கள் அல்ல).
'பரம புருஷனே பெரியவன் என்று வாதம் செய்வாயாக' என்று விதிக்கின்றது வேதம் (முண்டக உபநிடதம் 1-1-4).
பரம்பொருள் எது என்பதை ஆதாரங்களுடன் நிர்ணயித்துக் காட்டியவர்கள் ஆழ்வார்கள். பெரியாழ்வார், பாண்டிய மன்னன் வல்லப தேவன் அவையில் இதைச் செய்து காட்டினாலும், திருமழிசை ஆழ்வார் மட்டுமே 'பரம்பொருள் எது' என்று நிர்ணயம் செய்வதையே தமது இரு பிரபந்தங்களிலும் பொழுது போக்காகக் செய்துள்ளார்.
திருச்சந்த விருத்தத்தில், குறிப்பாக பரம்பொருள் எது, அதன் தன்மைகள் யாவன, எம்பெருமான் எப்படிப் பரம்பொருள் ஆகிறான் என்பதை நமக்கு எளிமையாக விளக்குகிறார்:
'கடல் நீரில் இருந்து, அலைகள் தோன்றுகின்றன. மீண்டும் அவ்வலைகள், கடல் நீரிலேயே அடங்குகின்றன. அது போல, திருமாலிடத்தில் இருந்து எல்லாத் தேவர்களும், மனிதர்களும், பிராணிகளும், மற்ற பொருட்களும் தோன்றி, ஊழிக்காலத்தில் மீண்டும் அவனுள்ளே அடங்குகின்றன. எனவே திருமாலே ஆதி தேவன்! அவனே பரம்பொருள்!' என்று ஒரு பாசுரத்தில் கூறுகின்றார் (தன்னுளே ... திருச்சந்த விருத்தம்-10).
திருச்சந்த விருத்தம் - திரு + சந்த(ம்) + விருத்தம். விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. துள்ளல் இசையுடன் (சந்தத்துடன்) ஆழ்வாரால் இயற்றப் பட்டது இந்தப் பிரபந்தம் (பதிவுத் தலைப்பின் காரணம் இது தாங்க!). இதில் விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் நிறைய இடம் பெற்றுள்ளன.
***
வால் நிறத்தொ(தோ)ர் சீயமாய்* வளைந்த வாள் எயிற்றவன்* ஊனிறத்து உகிர்த்தலம்* அழுத்தினாய்! உலாய சீர்* நால் நிறத்த வேத நாவர்* நல்ல யோகினால் வணங்கு* பால் நிறக் கடல் கிடந்த* பற்பநாபன் அல்லையே?
திருச்சந்த விருத்தம் - 23
(வால் - வெண்மை; எயிற்றவன் = எயிற்று + அவன் - பற்களை உடையவன்; ஊனிறத்து - உடம்பின் மர்மத்தில், இதயத்தில்; உலாய சீர் - எங்கும் புகழ் பெற்ற; நிறம் - உடம்பு; நல்ல - சிறந்த; யோகு - உபாயம்)
வெளுத்த நிறத்தை உடைய ஓர் சிங்கமாய் அவதரித்து, வளைந்து, ஒளி உடைய பற்கள் கொண்ட இரணியன் உடலின் மர்மத்திலே நகங்களை நீ அழுத்தியவனே! எங்கும் புகழ் பெற்ற நான்கு வகை நிறங்களை உடைய வேதத்தை அறிந்தவர்கள், நல்ல உபாயங்களினால் வணங்குகின்ற, பாற்கடலில் துயில் கொண்டிருக்கும் பத்மநாபன், நீ அல்லவோ?
சிங்கம் வெண்மை நிறமா?
***
எம்பெருமான் நிறம் கருமை! இரணியனை அழிப்பதற்காக, அவன் பெற்ற வரங்களின் தன்மைக்கு ஏற்ப, தன் இயற்கை நிறத்தை அழித்துக் கொண்டு, வெண்மை நிறமாக்க முயற்சித்தானாம்! மேலும், எம்பெருமானின் ஜோதியினால், நரசிம்மம், வெளிர் நிறமாகவே எல்லோருக்கும் தெரிந்ததாம்! எனவே, திருமழிசையார், வெளிர் (வால்) நிற (நிறத்த) சிங்கம் (சீயம்) என்கின்றார்!
(வெளுத்த நிறத்தை உடைய பலராமன், 'வாலியோன்' என்றும் அழைக்கப் படுகின்றான்)
'வால் நிறம்' என்பதற்கு, 'ஒப்பற்ற தன்மை' என்ற பொருளும் கொள்ளலாம்.
பிறப்பில்லாத எம்பெருமான் எடுத்த பல அவதாரங்களிலே, இரண்டு யோனி கலந்து பிறந்த அவதாரம், நரசிம்மனைத் தவிர வேறு எதுவும் இல்லை!
ப்ரஹ்ம புராணம், 'உடம்பை மனிதனைப் போலச் செய்து கொண்டும், தலையை சிங்கத்தைப் போலச் செய்து கொண்டும் பிறந்தான் நரசிங்கன்' என்று கூறுகிறது (103-61).
எனவே, இந்த அவதாரத்தையே அதன் தன்மையிலும், அழகிலும், ஜோதியிலும் ஒப்பற்றது என்று ஆழ்வார் கூறுகின்றாரோ?
(நான்முகன் திருவந்தாதியிலும், திருமழிசையார் 'அரியே அழகு' எனும் பொருளில் பாடியுள்ளார். இயற்பாவில் நரசிம்மனைக் காணும்போது இதனை நாம் அனுபவிக்கலாம்)
சிங்கத்தின் நிறம் 'வால்' என்றது சரி, ஆனால் வேதத்தின் நிறம் நான்கு என்கிறாரே ஆழ்வார்?
***
'நிறம்' எனும் சொல்லுக்கு, மேனி (உடம்பு) என்ற பொருளும் உண்டு. மனிதனுடைய ஆத்மாவுக்கு உடம்பைப் போல, வேதத்திற்கு உடம்பு, அதன் ஸ்வரங்கள். வேதத்திற்கு, நான்கு வகையான ஸ்வரங்கள் உண்டு - உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம். இதனையே ஆழ்வார் இங்கு குறிப்பிடுகின்றார்.
'நால் நிறத்த வேத நாவர்' என்பதற்கு, நான்கு ஸ்வரங்களால் ஆன வேதங்களை, நன்கு கற்றவர்கள் என்ற பொருள்.
உலாய சீர் - எங்கும் புகழ் பெற்ற. 'நால் நிறத்த வேத'திற்கு அடைமொழி. ஆனால் சொற்களைச் சற்று மாற்றி அமைத்து - 'நால் நிறத்த வேத நாவர் நல்ல யோகினால் வணங்கு பால் நிறக் கடல் கிடந்த, உலாய சீர் பற்பநாபன்' - என்று பத்மநாபனுக்கு அடைமொழியாகவும் பொருள் கொள்ளலாம்.
***
கங்கை நீ பயந்த பாத* பங்கயத்து எம் அண்ணலே!* அங்கை ஆழி சங்கு தண்டு* வில்லும் வாளும் ஏந்தினாய்!* சிங்கமாய தேவ தேவ!* தேனுலாவு மென் மலர்* மங்கை மன்னி வாழு மார்ப!* ஆழி மேனி மாயனே!
திருச்சந்த விருத்தம் - 24
(பயந்த - உண்டாக்கிய; அங்கை = அம் + கை - அழகிய கை; தண்டு - கதை; மங்கை - திருமகள்)
கங்கை நீரை உண்டாக்கிய தாமரை போன்ற திருவடிகளை உடைய எங்கள் தலைவனே! உன் அழகிய திருக்கைகளில், சக்கரம், சங்கு, கதை, வில், வாள் ஆகியவற்றை ஏந்தியிருக்கின்றாய்! தேவர்களின் தலைவனான நரசிம்மனே! தேன் நிறைந்த மென்மையான தாமரை மலரில் மலர்ந்த திருமகள், அகலாமல் எப்போதும் இருக்கும் மார்பு உடையவனே! கடல் போன்ற பெரிய திருமேனியை உடைய மாயன் நீ!
***
முந்தைய பாசுரத்தில், பாற்கடலில் துயின்ற பத்மநாபனே, நரசிங்க அவதாரம் எடுத்ததாகக் கூறியவர், அவன் பெருமைகளில் ஈடுபடுகிறார் இப்பாசுரத்தில்.
இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை! அனைவரும், அவன் உடம்பில் வசிப்பவர்கள் (மார்பு, கைகள்)! எனவே, இவர்களைத் தவிர வேறு யாராலும் நரசிங்கனின் பெருமைகளை முழுவதும் அறிய முடியாது என்று நமக்குச் சொல்லவே!
(திருமழிசை ஆழ்வார் சக்கரத்தாழ்வானின் அம்சம் என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது; எனவே தான் இவரால் அவனை முழுவதும் அறிந்து, பாசுரங்களால் பரதத்துவ நிர்ணயம் செய்ய முடிந்தது)
'அண்ணலே!' (என் தலைவனே) என்று எம்பெருமானைக் குறிப்பிட்டதன் காரணம்?
'ஆழ்வார், எம்பெருமானை அடைய ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தும், ஆழ்வார் பிறந்தவுடனேயே வந்து தரிசனம் கொடுத்து அருளும் கொடுத்துச் சென்றதனால் வந்த நன்றி உணர்ச்சியே' என்று பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானம்.
***
வரத்தினில் சிரத்தை மிக்க* வாள் எயிற்று மற்றவன்* உரத்தினில் கரத்தை வைத்து* உகிர்த்தலத்தை ஊன்றினாய்!* இரத்தி நீ! இதன்ன பொய்?* இரந்த மண் வயிற்றுளேகரத்தி?* உன் கருத்தை* யாவர் காண வல்லர்? கண்ணனே!
கண்ணனே! பிரம்மாவிடம் பெற்ற வரத்தில் அதிக நம்பிக்கை வைத்தவனாய் இருந்த ஒளி வீசும் பற்களைக் கொண்ட இரணியனுடைய மார்பிலே தன் கைகளை வைத்து, நகங்களை ஊன்றினாய்! பின் வாமனனிடம், மூவுலகங்களையும் யாசித்துப் பெற்றாய்! என்ன பொய் இது? மாவலியிடம் பெற்ற உலகங்களை, பிரளயத்தின் போது, வயிற்றில் வைத்துக் காத்தாய்! உன் எண்ணங்களை யார் அறிய முடியும்?
அது என்ன ’வரத்தினில் சிரத்தை’?
***
சாகா வரம் பெறாவிட்டாலும், பெற்ற வரங்களின் மூலமாகவே, அந்தத் தன்மை கிடைத்து விட்டது என்று நினைக்கிறான் இரணியன்! வரங்களைப் பெற்றதனாலேயே, தன்னை ஈஸ்வரன் என்று நினைத்துக் கொள்கிறான்!
'அறிவு கெட்டவனே! இவ்வுலகிற்கு ஈஸ்வரனாகிய என்னிடம் அடிக்கடி சொல்கிறாயே, அந்த விஷ்ணு யாரடா?' என்று தன் மகனைக் கேட்கின்றான் அவன் (விஷ்ணு புராணம் 1-17-21).
பிரம்மனிடம் தான் பெற்ற வரங்களையும் மீறி, உடல் வலிமையையும் மீறி, இரணியனை அழிக்க வல்லவன் சிங்கப்பிரான் என்று அறியாதவனாகி விட்டான் இரணியன் - (பெற்ற) வரத்தினில் (வரத்தினில்) உள்ள நம்பிக்கையினால் (சிரத்தை)! அதனால் வந்த கர்வத்தினால்!
நரசிம்மனைப் பற்றி உயர்வாகச் சொன்னவர், திடீரென்று கண்ணன் பொய் (இதென்ன பொய்?) சொன்னதாகச் சொல்கிறாரே? அவன் 'ஏலாப் பொய்கள் உரைப்பான்' என்பதனாலா?
***
நரசிங்கமாகத் தோன்றியதைக் இரணியனை (மற்றவன்) வதம் செய்ததைக் கண்டால், நீ பேராற்றல் உடையவன் என்று தோன்றுகிறது!
நீ வாமனனாக வந்து யாசித்ததால் (இரத்தி), நீ சக்தி இல்லாதவன் என்று தோன்றுகிறது!
கிடைத்த உலகங்களை (இரந்த மண்) வயிற்றில் வைத்துக் காத்ததைப் (வயிற்றுளே கரத்தி) பார்த்தால், உன்னைப் போன்று வேறு யாரும் இல்லை என்று தோன்றுகிறது!
பேராற்றல் உடைய நீ, வாமனனாக நீ வந்தது, ஆச்சரியமான பொய்! (இதென்ன பொய்!) என்று, உண்மையில் அவனைப் புகழ்கின்றார் ஆழ்வார் (வஞ்சப் புகழ்ச்சி)!
இப்படி, மாறி மாறி, சக்தியையும், சக்தியின்மையையும் காட்டி, நீ செய்யும் மாயச் செயல்களை (உன் கருத்தை) யாரும் அறிய முடியாது (யாவர் காண வல்லரே)! மற்றவர்களாலும் செய்ய முடியாது! எனவே நீ பரம்பொருள் என்கின்றார்.
***
தொடர்ந்து வரும் இந்த 3 பாசுரங்களும், மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், மூன்று நரசிம்மாவதாரப் பாசுரங்கள் என்றே தோன்றும்!
'சைவ சமயத்தின் தாக்கத்திற்கு ஈடு கொடுக்க, வைணவ சமயம் வீறு கொண்டு எழ வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்தவே, ஆவேச அவதாரமாகிய நரசிம்ம அவதாரம் பற்றி, அடுத்தடுத்த 3 பாசுரங்களில் பாடினார்'
என்று முனைவர் கமலக் கண்ணன், தன் நூலில் குறிப்பிட்டுள்ளார் ('நாலாயிர திவ்வியப் பிரபந்தம் - மூலமும் விளக்கவுரையும்' - Vol-1 பக்கம் 43).
கண்ணனைத் திருமணம் செய்து கொண்டாலும், அது கனவில் தானே? மின்மினி பறந்தது போல இருந்தது. அவள் நெஞ்சில் நிலையாக இல்லை!
அடுத்துக் கிடைத்த கிருஷ்ணானுபவத்திலும், இவளது அன்பை அதிசயப் படுத்துவதற்காகவும், அதிகப் படுத்துவதற்காகவும், தொடக்கத்திலேயே அவளிடம், 'நான் எப்ப வருவேன், எப்படி வருவேன், என்பது தெரியாது; ஆனால் வர வேண்டிய சமயத்துக்குச் சரியாக வந்துவிடுவேன்!' என்று சொல்லிச் செல்கிறான் கண்ணன்! ஆனால் வரவே இல்லை!
தான் பெற்ற அனுபவத்தை நினைக்கிறாள் நம் பாவை! நினைக்கும்போதெல்லாம் பரவசம்! அதை மீண்டும் பெறவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது! ஆனால், அவனோ வர மறுக்கிறான்!
அவனுடன் பேசுவதற்கு, மற்றக் கலியுலகத்து ஆண்கள் மாதிரி, Mobile, Pre-Paid SIM Card வாங்கித் தரவில்லை அவன்! எனவே, அவனைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, அவன் அருகிலேயே எப்போதும் இருக்கும் சங்கிடம் பேசுகின்றாள்.
பாவை கூறியவற்றைப் பொறுமையாகக் கேட்ட சங்கு, பதில் சொல்லாமல் ஓடிவிடுகிறது!
ஓடிய சங்கம், மீண்டும் வரவில்லை! கண்ணனும் வரவில்லை! சங்கு கண்ணனிடம் ஏதாவது சொல்லிற்றா என்றும் தெரியவில்லை! 'சங்கம், கண்ணனின் அந்தரங்கனானதால், அவன் சொன்னதை மட்டுமே கேட்கும், நான் சொன்னால் கேட்காது', என்று தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறாள் பாவை.
சென்ற முறை பிரியும் தருணத்தில், மழைக் காலத்தில் கண்ணன் மீண்டும் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்! மழைக் காலமும் வந்தது. கருமை நிறக் கண்ணன் வரவில்லை. ஆனால் அவன் போல் நிறமுள்ள கருத்த மேகங்கள் முன்னே வந்து நின்றன!
காலம் காலமாக, மன்னர்கள், காதலர்கள், மற்றவர்களும், தேவைப்படும்போது தூது அனுப்புவதை வழக்கமாகவே கொண்டு இருந்தனர்.
மன்னர்கள் அனுப்பும் தூதுவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள், தூதுவன் இன்னொரு அரசனிடம் செய்தி சொல்ல வேண்டிய முறை என, பல நியதிகள் தமிழ் இலக்கியங்களில் சொல்லப் பட்டிருக்கின்றன.
தூதுவன் எப்படி இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று, நம் வள்ளுவனார் ஒரு அத்தியாயமே (69-தூது) வகுத்துள்ளார். மாதிரிக்கு, அதில் ஒன்று:
(காரண காரியங்களை எடுத்துச் சொல்லி, இன்னாத சொற்களை நீக்கி, கேட்பவர்கள் மனம் மகிழ உரைத்து, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடித்து, தம் அரசனுக்கு நன்மை பயப்பவனே தூதன் ஆவான்!)
தூது செல்பவன், நால்வகை உபாயங்களையும் (அறிவுறுத்துதல், கெஞ்சல், மிரட்டல், பொருள் கொடுத்தல்) கையாண்டு, எடுத்த காரியத்தை வெற்றியுடன் முடிக்க வேண்டும்!
நம் எல்லோருக்கும் தெரிந்த முதல் தூதுவன் - தூதுவனுக்கு மிகச் சிறந்த உதாரணம் - அனுமனே (அனுமனுடைய தகுதிகளே வள்ளுவன் இந்த அத்தியாயம் எழுதக் காரணமாயிற்று என்றும் கூறப்படுவதுண்டு)!
மன்னர்கள், மனிதர்களையும், அனுமனைப் போன்றோரையும் தூது அனுப்பினாலும், காதலர்கள்/காதலிகள் தனிமையில் தவிக்கும்போது, தூது விடுவது மனிதர்கள் மூலம் அல்ல!
கிளிப்பத்து, குயில் பத்து, புறாக்கடிதம், மயில் பத்து, மேக விடு தூது, என்று, பதில் பேசாதவைகளைப் பல விதமாகத் தூது விடுபவர்களே நம் காதலர்கள்!
இயம்புகின்ற காலத்து எகினம், மயில், கிள்ளை, பயன் பெறு மேகம், பூவை, பாங்கி, நயந்த குயில், பேதை, நெஞ்சம், தென்றல், பிரமம் ஈரைந்துமே தூதுரைத்து வாங்கும் தொடை.
மன்னர்களிடையே தூது செல்ல பெரும்பாலும் ஆண்களே அனுப்பப்பட்டாலும், ஒளவையார், அதியமானுக்காக, தொண்டைமானிடம் தூது சென்று, போரை நிறுத்தியதாக வரலாறு உண்டு!
நம் பாவை, மேகத்தையும், குயிலையும் தூது விட, சில ஆழ்வார்கள், மற்ற பறவைகளையும், நெஞ்சத்தையும் தூது விட்டுள்ளனர்!
மதுரைச் சொக்கநாதர் அருளிய 'தமிழ் விடு தூது' எனும் நூல் (உ.வே.சாமிநாத ஐயர் தேடிக் கண்டுபிடித்தது) சற்று வித்தியாசமான தூதாக இருப்பது குறிப்பிடத் தக்கது!
***
மேகத்தைத் தூது விடுபவர்கள், ஏனோ, வெயில் கால வெண் மேகத்தைத் தூது விடுவதில்லை (அவை வெகுதூரம் செல்லாததால் இருக்குமோ?). மழை மேகத்தையும், பொழிகின்ற மழையையும் பற்றித்தான் எழுதுகின்றனர்!
மேக விடு தூதிலும், 'தலைவன் வருவான்' என்று மேகம் செய்தி கூறுதல், 'தலைவனிடம் போய்ச் சொல்' என்று தூது அனுப்புதல், இடியுடனும், மழையுடனும், மேகம் பதில் பேசுதல், போன்ற பல வகைகள் உண்டு!
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய 'திருநறையூர் நம்பி மேக விடு தூது' எனும் கலி வெண்பா இயற்றியுள்ளார் ('இது இவரால் எழுதப் பட்டது அல்ல' என்ற கருத்தும் உண்டு).
ஒரு தலைவி, திருநறையூர் எனும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள நம்பி எம்பெருமான் மீது காதல் கொண்டு, 'நான் அணிந்து கொள்ள, நம்பியிடம் இருந்து துளசி மாலை வாங்கி வா' என்று மேகத்தைத் தூது அனுப்புகிறாள்.
(200 கண்ணிகள் - சிறிய/பெரிய திருமடல்கள் போல் - கொண்டது. கலி வெண்பாக்களுக்கே உரித்தான கணக்கு விவாதம் - 400 வரிகளா, 200 கண்ணிகளா, 100 பாக்களா, எல்லாம் சேர்த்து ஒரே பாடலா? - இதற்கும் உண்டு. எது எப்படி இருந்தாலும், இதன் சொற்சுவையும், பொருட்சுவையும் மிகவும் நன்றாக உள்ளது)
பதிணெண் கீழ்க் கணக்கு நூல்களில், ’கார் நாற்பது’ (மதுரைக் கண்ணன் கூத்தனார் இயற்றியது) எனும் சிறு நூல் உண்டு. மழைக் காலம் வந்து விட்டதை, நூலில் உள்ள ஒவ்வொரு செய்யுளும் உரைக்கும். இது தூது உரைக்கும் நூல் அல்ல என்றாலும், ஒரு செய்யுள்,
கடும் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த, நெடும் காடு நேர் சினம் ஈன - கொடுங்குழாய்! 'இன்னே வருவர் நமர்!' என்று எழில் வானம் மின்னும், அவர் தூது உரைத்து.
கார் நாற்பது-2
(சூரியன் வெப்பம் குறைந்து, மழைக் காலம் துவங்கி, காட்டில் எல்லாம், சிறு புல்கள் வளர, 'நம் தலைவர் இப்போதே வருவார்' என மேகம் தலைவர் அனுப்பிய தூதை அறிவித்தது என்று, தோழி தலைவியிடம் கூறுகின்றாள்)
'மழைக்காலம் ஆரம்பித்ததே, தூது உரைக்கத் தான்' என்ற பொருளில் வந்துள்ளது.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிப் புலவனான காளிதாசன் எழுதிய 'மேகதூதம்' உலகப் புகழ் பெற்றது! தவறு செய்ததனால், குபேரனால் நாட்டை விட்டு விரட்டப்பட்ட ஒரு யக்ஷன், மழைக்கால மேகங்கள் மூலம் தன் மனைவிக்குத் தூது அனுப்புகிறான்!
கலியுகமாயிற்றே! இவன் சொன்னால் மேகங்கள் உடனே தூது செல்லுமா? அவை தூது செல்வதற்கு, ஏதாவது Incentive வேண்டுமே!
'நீ போகும் வழியில், இயற்கைக் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும்; உன் மனம் நிறையும்; நீ போகும் வழியில் எல்லாம் மழை பொழிந்து கொண்டே சென்றால் பலர் உன்னை வாழ்த்துவர்' என்று அவற்றிற்கு, போக வேண்டிய காரணத்தை எடுத்துச் சொல்கிறான்!
111 சந்தங்கள் கொண்ட இந்தக் காவியத்தை, Horace Hayman Wilson எனும் ஆங்கிலேயர், 1813-ஆம் ஆண்டு 'Megha Duta: The Cloud Messenger' எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் ('Water' படத்திலும் இதைப் பற்றிய குறிப்பு வருகின்றது).
மேகதூதம், லத்தீன், ஜெர்மன், பிரெஞ்சு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.
***
வான் கொண்டு கிளர்ந்தெழுந்த* மாமுகில்காள்!* வேங்கடத்துத் தேன் கொண்ட மலர் சிதற* திரண்டேறிப் பொழிவீர்காள்!* ஊன் கொண்ட வள்ளுகிரால்* இரணியனை உடலிடந்தான்* தான் கொண்ட சரிவளைகள்* தருமாகில் சாற்றுமினே.
நாச்சியார் திருமொழி 8-5
'ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களே! திருமலையிலே உள்ள, தேன் நிறைந்துள்ள மலர்கள் சிதறும்படி, திரளாக மழை பொழியும் மேகங்களே! கூர்மையான நகங்களாலே இரணியன் உயிர் கொண்ட நரசிம்மன், என்னிடம் இருந்து எடுத்துச் சென்ற என் கைவளைகளை திருப்பித் தருவதாக இருக்கிறானா என்று நான் கேட்டதாகச் சொல்லுங்கள்'.
(ஊன் கொண்ட - சதைப் பற்றுள்ள, சக்தி வாய்ந்த; சரிவளை - கைகளில் இருந்து சரிந்து விழும் கைவளைகள்; சாற்றுமின் - சொல்லுங்கள்)
***
இந்தத் திருமொழியின் நான்காம் பாசுரம் வரை, 'மழை பொழியும் மேகங்கள்' என்று சாதாரணமாகக் குறிப்பிட்ட ஆண்டாள், இப்போது, 'கிளர்ந்து எழுங்கள்' (வான் கொண்டு கிளர்ந்தெழுந்த) என்கின்றாள்! எப்படி?
ஆகாயத்தை விழுங்கிக் கொண்டு கிளர்ந்து எழ வேண்டுமாம்! இரணியனை வதைக்க நரசிம்மன் தூணில் இருந்து கிளர்ந்து எழுந்தது போல!
'தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து' என்று திருப்பாவையில் சொன்ன அதே ஆண்டாள், இங்கு, மலர்கள் அழியும்படி, சிதறும்படி (தேன் கொண்ட மலர் சிதற) ’திரண்டு வந்து மழை பொழியும் மேகங்களே’ (திரண்டேறிப் பொழிவீர்காள்)' என்று சொல்கின்றாள்! ஏன்?
நரசிம்மன், இரணியன் உடன் வந்த அசுரர்கள் சிதறும்படி கிளர்ந்து எழுந்தானாம்! அது போன்று, திருமலையில், 'தேன் ஊறிக் கிடந்த மலர்கள் சிதறும்படி மழை பெய்ய வந்த மேகங்களே!' என்கின்றாள்!
அவை என்ன செய்ய வேண்டுமாம்?
'பிரகலாதன் கூப்பிடாமலேயே, அவனுக்காக, உன் வலிமையான (ஊன் கொண்ட) கைகளால், ஒரு இரணியனை அழிக்க வந்தாய்! ஆனால், நானோ உன்னை அழிக்க வரச் சொல்லவில்லை! என் கைவளைகளை (சரிவளைகள்) மட்டும் திருப்பித் தா! (தருமாகில்)' என்று நரசிம்மனிடம் சொல்ல வேண்டுமாம் (சாற்றுமின்)!
’கைவளைகள்’ என்று கூறாது, ‘சரிவளைகள்’ என்று ஆண்டாள் ஏன் கூற வேண்டும்? கண்ணனைப் பிரிந்த ஏக்கத்தினால், அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள். கைகளில் இருந்த வளைகள், கையில் இருந்து சரிந்து விழுந்தன. அதையே கண்ணன் எடுத்துச் சென்றான்!
(’சரிவளை’- வினைத் தொகை = சரிந்த வளை, சரிகின்ற வளை, சரியும் வளை!)
"'சக்தியுள்ள கைகளால் இரணியன் உடலைக் கிழித்தாய்! அதே கைகளால், என் வளையைத் திருடிச் சென்றாய்! அதே கைகளால், என் கைகளில் வளைகளை மீண்டும் அணிந்து விடு!' என்று, நான் சொன்னதாக, திருவேங்கட மலையில் இருக்கும் நரசிம்மனிடம் சொல்" என்று மேகத்தின் மூலம் தூது விடுகின்றாள் ஆண்டாள்!
('வளைகளைத் திருப்பித் தா', என்பதன் பொருள், 'நீயே நேரில் வந்து, உன் கைகளால் என் கையில் அணிவித்தால் தான் நான் வளையல்களை அணிவேன்; அதற்காகவாவது, நீ நேரில் வரவேண்டும்' என்பதே!)
(இத்துடன், ஆண்டாள் அனுபவித்த நரசிம்மன் நிறைவு பெறுகிறது. அடுத்து, திருமழிசை ஆழ்வாரின் அனுபவத்தைப் பார்க்கலாம்)
வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ், கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)
உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை. Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்.. பற்பநாபன் கையில்.. என்ற வரியில்.. பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க! இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;
இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...