Tuesday, August 31, 2010

நான்மணிக் கடிகையில் தமிழ்க் கடவுள்!

நான்மணிக் கடிகை

ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது!
நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன!
ஒரு ஆரம் (necklace) போல இருக்கு!
ஆகவே = நான்கு + மணிக் + கடிகை = நான்கு மணிகள் கோர்த்த மாலை! Four Stone Necklace!

இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்! இவர் காலம் கி.பி 5-6 நூற்றாண்டு!
மிக அருமையாகக் கருத்துக்களைக் கோர்க்கிறார்!
மொத்தம் 106 பாடல்கள்!
துவக்கப் பாடல்கள் இரண்டைத் திருமாலுக்கே ஆக்குகிறார் கவிஞர்!

மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும்
கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முதுநீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர்மலர் மற்றவன் கண்ஒக்கும் பூவைப்
புதுமலர் ஒக்கும் நிறம். ..... ..1

நிலா, திருமாலின் முகத்தை ஒத்திருக்கே!
கதிரவனோ, அவன் சக்கரத்தை ஒத்திருக்கே!
வயலில் உள்ள தாமரையோ, அவன் கண்ணை ஒத்திருக்கே!
இந்தக் காயாம்பூவோ, அவன் மேனியை ஒத்திருக்கே!

படியை மடியகத்து இட்டான்; அடியினால்
முக்காற் கடந்தான் முழுநிலம் - அக்காலத்து
ஆனிரை தாங்கிய குன்றெடுத்தான் சோவின்
அருமை யழித்த மகன். ..... ..2

உலகத்தைத் தன் வயிற்றினுள் அடக்கினான்!
அதே உலகத்தைத் திருவடியினால் அளந்தான்!
ஆனிரைகளைக் காக்க குன்றம் எடுத்தான்!
இவனே துன்பத்தை அழித்த மகன்!!



திருமாலைப் பாடும் கீழ்க்கணக்குப் பாடல்கள் எவை என்பதற்காகத் தான் தரவுகள் தேடினேன்! ஆனால் அப்படிப் படித்த போது, நான்மணிக்கடிகை மிகவும் பிடித்து விட்டது!

அழகு தமிழில், சுருக்கமாக, இன்றைய Twitter தளத்தில் பேசுவது போல் என்னமாச் சொல்லி இருக்காங்க, பண்டைத் தமிழ்க் கவிஞர்கள்!
என்னமா கருத்துக்களைக் கோர்க்கிறார் நான் மணிக் கடிகையில்! நீங்களே பாருங்க! யார் யாருக்கு எல்லாம் தூக்கம் போச்சாம்?

கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்!.....9

1. திருடத் திட்டமிடும் திருடர்களுக்கு!
2. காதலியிடம் உள்ளம் கொடுத்தவர்களுக்கு!
3. செல்வம் சேர்க்க உண்மையாகவே துடிப்பவர்களுக்கு!
4. சேர்த்த செல்வத்தைக் காப்பாற்ற வேணுமே என்று சதா எண்ணுபவர்களுக்கு!
- நாலு பேருக்கும் தூக்கம் போச்சுடி யம்மா! :))

சங்க இலக்கிய அழகே அழகு தான்!
திருமால்=தமிழ்க் கடவுள் என்பதற்காக இப்போது தேடினாலும்...இன்னொரு முறை ஓய்வாக வந்து, கீழ்க் கணக்கு நூல்களை வாசிக்க வேண்டும் என்று ஆவல் எழுகிறது!

பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் மட்டுமே அதிகம் வாசித்துப் பழக்கம்! கீழ்க் கணக்கு நூல்களையும் இனி வாசிப்புப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

திரிகடுகத்தில் தமிழ்க் கடவுள்!

திரிகடுகம்

திரிகடுகம்-ன்னு ஆறாங் கிளாஸ் தமிழ்ப் புத்தகத்தில் செய்யுளை உருப்போட்ட ஞாபகம் இருக்கா? :))

இது பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று! திருக்குறள் போலவே பல அறங்களைச் செப்புவது! ஆனால் இரண்டடிக் குறள் வெண்பா இல்லை, நாலடி வெண்பாவால் ஆனது!

ஒவ்வொரு பாட்டிலும் மூன்று கருத்துக்கள்! ஒவ்வொரு மருந்திலும் மூன்று பொருட்கள் போல்!(சுக்கு,மிளகு,திப்பிலி)!

மூன்று மருந்துகள் உடலுக்குச் செய்யும் நன்மை போல்,
இதன் மூன்று கருத்துக்கள் உள்ளத்துக்கு நன்மை செய்வதால்,
இதற்குத் திரிகடுகம் என்று பெயர்!

இதன் ஆசிரியர்: நல்லாதனார்!
மாயோன்-திருமால் என்னும் பழந்தமிழ்க் கடவுளைக் குறிப்பிடுகிறார்!

கண்அகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்நறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய

மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்

பூவைப் பூவண்ணன் அடி


அன்று அகலமான உலகம் அளந்தது ஓரடி!
பூக்கள் பூக்கும் குருந்த மரத்தைச் சாய்த்தது ஓரடி!
மாயச் சகடம் என்னும் வண்டிச் சக்கரத்தை உதைத்து ஓரடி!
இம்மூன்றும் பூவைப் பூவண்ணனான திருமாலின் திருவடிகள்!

அருந்ததிக் கற்பினார் தோளும் திருந்திய
தொல்குடியின் மாண்டார் தெடார்ச்சியும் - சொல்லின்
அரில்அகற்றும் கேள்வியார் நட்பும் இம்மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து

இது காப்புப் பாடலாகத் திரிகடுகத்தில் வருவது! இதையும் சேர்த்துத் தான் நூறு வெண்பாக்கள் திரிகடுகத்தில்! எனவே இது ஆசிரியரே எழுதி இருக்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம்! அதனாலேயே இதையும் இங்கு தரவாகச் சேர்த்தேன்! மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்கள்!

மற்ற சங்க நூல்களுக்கு அமைந்த கடவுள் வாழ்த்து எல்லாம், பின்னாளில் எழுதிச் சேர்த்த ஒன்று! பாரதம் பாடிய பெருந்தேவனார், அகநானூறு போன்ற தொகை நூல்களுக்கெல்லாம் அவரே எழுதி இப்படிச் சேர்த்திருப்பார்! இத்தனைக்கும் அகநானூறைத் தொகுத்தவர் அவரில்லை! வெறும் "கடவுள் வாழ்த்து" மட்டுமே எழுதிச் சேர்த்தது!

(என்னளவில்) இது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை! நாம் எழுதிய நூலுக்கு, இருபது ஆண்டு கழித்து, Chapter 0-ன்னு வேறு ஒருவர் எழுதிச் சேர்த்தால் நம் மனம் ஒப்புமா? :)

சரி, இந்தப் போக்கு, தமிழ் இலக்கியத்தில், உரையாசிரியர்கள் மூலமாகவோ, இல்லை வாழ்த்துநர்கள் மூலமாகவோ எப்படியோ ஏற்பட்டு விட்டது!

இந்தப் பாடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், தரவுகளின் எண்ணிக்கை எனக்கும் அதிகமாகும் தான்! ஆனால் அவற்றைத் தமிழ்க் கடவுள் தரவுகளுக்கு எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை! முழுதும் சங்க காலப் பாடல்களை மட்டுமே எடுத்துக் கொண்டு, தரவுகளை முன் வைக்கிறேன்! பின்னாளில் எழுதிச் சேர்த்த கடவுள் வாழ்த்துகளை அல்ல!

திரிகடுகம் அப்படி இல்லாமல், அதன் ஆசிரியரே எழுதிய ஒன்றாக இருப்பதாலே, அதை இங்குச் சுட்டினேன்! இப்படியாக, மாயோன்-திருமால் காட்சிகளைச் சங்கத் தமிழர்கள் அறிந்து வைத்துப் போற்றியதை, திரிகடுகமும் காட்டுகிறது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

சீவக சிந்தாமணியில் தமிழ்க் கடவுள்!

சீவக சிந்தாமணி:

சீவக சிந்தாமணி அருங் காப்பியம்! பெருங் காப்பியம்!
சமணம் சார்ந்த கப்பியம் என்று சமய முத்திரை குத்தி ஒதுக்கிட முடியாதபடி, தமிழ் நிறைந்து இருக்கும் அழகிய காப்பியம்!

எழுதிய திருத்தக்க தேவரும் ஒரு சமண முனிவர்!
சமணர்கள் தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் மருத்துவத்துக்கும் ஆற்றிய தொண்டுகள் மிகப் பெரிது!
ஆனால் சில சமயப் போர்களாலும், சமயவாதிகளாலும், நல்ல பல நூல்கள் தீக்கும், நீருக்கும் இரையாகியது, நமது போகூழ் (துரதிருஷ்டம்) தான்! :(

இது பின்னாளைய காப்பியம் (9-10 நூற்றாண்டு)! சங்க காலம் அல்ல! இருப்பினும் ஐம்பெருங் காப்பியங்களுள் இது ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது!

விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியம்! 13 இலம்பகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது! 3000+ செய்யுள்கள் கொண்டது! சேக்கிழார் பெரிய புராணம் என்னும் நூலை எழுத, "எதிர்த் தூண்டுகோலாக" இருந்ததும் இந்தச் சமணக் காப்பியமே என்று சைவ சமயமும் இதைக் குறிப்பிட்டு பேசும்!

அதற்காகச் சீவக சிந்தாமணியைச் "சிற்றின்ப நூல்" என்றெல்லாம் குறை சொல்லிவிட முடியாது! ஒவ்வொரு நூலுக்கும் ஒவ்வொரு கதைக்களன், ஒவ்வொரு நோக்கம்!
சமணம் எப்போதும் துறவை மட்டுமே பேசுகிறது, மக்கள் வாழ்வையும் இன்பத்தையும் பேசவேயில்லை என்னும் கருத்தைத் துடைக்கவே, சிந்தாமணியை அருளினார் திருத்தக்க தேவர்!

மன்னன் மகனாகப் பிறந்த சீவகன், விதி வசத்தால் இடுகாட்டில் பிறந்து, வணிகன் வீட்டில் வளர்கிறான்! அச்சணந்தி என்னும் முனிவரிடம் கல்வி கற்கிறான்!
பல கலைகளிலும் தேர்ந்த வீரன், எட்டு பெண்களை மணந்து கொள்வது தான் கதை! :)

பல பெண்களை மணம் கொண்டதன் மூலம், பணம்/படைகளைப் பெருக்கி, இழந்த அரசை மீட்டு, நல்ல முறையில் ஆட்சி செய்து விட்டு, சமணக் கோட்பாடுகளின் படி, துறவு பூண்கிறான்! சுபம்! :)

கதைக்களனில், சிலப்பதிகாரம் போல் திருப்பங்கள் அதிகம் இல்லை என்றாலும், காப்பிய அழகும், விருத்தப் பாவின் வீரியமும், காட்சிகளின் வர்ணணையும் இந்தக் காவியத்தின் சிறப்புகள்! பின்னாளில் விருத்தம் என்னும் ஒண்பாவுக்கு உயர் கம்பன் என்று சொன்னாலும், விருத்தத்தின் வித்து என்னமோ சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர் தான்!



நாம், எடுத்துக் கொண்ட பேசு பொருளான, பெருமாள் என்னும் தமிழ்க் கடவுளுக்கு மட்டும் வருவோம்! மாயோன்-நப்பின்னையின் சங்க காலத் திருமணம் பற்றிச் சீவக சிந்தாமணியும் பேசுகிறது! அதைப் பார்ப்போமா? கோவிந்தையார் இலம்பகம் என்றே மாயோனிடம் இருந்து தான் திருமணப் படலங்களும் துவக்குகிறது! ஒரு வேளை பேர் ராசி போல! :)

குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே!

ஆநிரைகளை மீட்டுத் தருவோர் யாராயினும், அவர்களுக்கு தன் மகள் கோவிந்தையை மணம் முடித்துத் தருவதாக அறிவிக்கிறார் நந்தகோன் என்னும் ஆயர்க்குடி தலைவர்!
நம்ம ஹீரோ சீவகன் மீட்டுத் தர, அவனுக்கே கோவிந்தையைத் தருவதாகச் சொல்கிறார்! ஆனால் வேறு வேறு குலம்! அதனால் என்ன?

முருகன் எப்படி வள்ளியை மணந்தானோ, மாயவன் எப்படி நப்பின்னையை மணந்தானோ, அதே போலத் தன் மகள் கோவிந்தையைச் சீவகன் மணக்கலாம் என்பது நந்தகோன் கூற்று!
நப்பின்னையின் வாய்-அமுதைக் கண்ணன் துய்த்து அடைந்த இன்பத்தைக் கூறி, காவியச் சுவையும் கிளுகிளு சுவையும் கூட்டுகிறார் கவிஞர்! :)

சீவக சிந்தாமணி காலத்துக்கு முன்பாகவே, ஆழ்வார்கள் பாசுர மழை பொழிந்து விட்டார்கள்! அதனால் சீவக சிந்தாமணியைத் தமிழ்க் கடவுளுக்குத் தரவாக வைக்க முடியாது! இது சங்க கால இலக்கியம் அல்ல! இருப்பினும் ஐம்பெரும் காப்பியம் என்பதால், அதில் உள்ள திருமால் குறிப்புகளையும் தர முனைந்தேன்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

மணிமேகலையில் தமிழ்க் கடவுள்!

மணிமேகலை:

சிலம்பில் திருமாலைப் பற்றிய பல நுண்ணிய, அடுக்கடுக்கான தகவல்களைப் பார்த்தோம்! இப்போது மணிமேகலைக்கு வருவோம்!

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலை!
ஒன்றின் கதைக் களன் இன்னொன்றின் தொடர்ச்சி!

சிலப்பதிகாரக் கதையினை இளங்கோ எழுதினாலும், அதை அவருக்கு முதலில் சொன்னவரே சீத்தலைச் சாத்தனார் தான்! இதைச் சிலம்பின் பாயிரத்திலேயே குணவாயிற் கோட்ட நிகழ்வில் நாம் காணலாம்!
சிலம்பைச் "சொன்னவர்", மணிமேகலையை "எழுதினார்"! :)



அடிப்படையில்...
* சிலம்பு - சமயம் சாராத காப்பியம்
* மணிமேகலை - பெளத்தக் காப்பியம்

அதனால், கொள்கை விளக்கமாக இல்லாமல், சிலம்பில் "கதைச்சுவை" அதிகம்!

அதற்காக மணிமேகலையில் கதைச்சுவை இல்லை என்று பொருளாகி விடாது! இதிலும் நுட்பமான கதைக் களன் உண்டு! துறவியைக் காதலிக்கும் அரசன்-ன்னு ஒரு கதைக்கரு வைத்தால் சும்மாவா? = மணிமேகலை-உதய குமாரன்! பெண் சாமியாரைக் காதலிக்கும் அமைச்சர்-ன்னு எடுத்தா இப்போ பிச்சிக்கிட்டு போகாது? :)


ஆனால் கதைக்குத் தரும் முக்கியத்துவத்தை விட, ஆசிரியர், தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறார்! அது படைப்பாளி என்ற முறையில் அவரின் சொந்த உரிமை!

அதனால் மக்களின் வாழ்வியல், குரவைக் கூத்து, வேலன் வெறியாடல், தமிழிசை, மருத்துவம், வேளாண்மை, நாட்டுப் பாடல்கள் - இது போன்ற சமுதாயத் தகவல்கள், சிலம்பைப் போல் மேகலையில் இல்லை!

ஆனாலும் உயரிய தத்துவங்கள் உண்டு! பசிப் பிணி நீக்கல் உண்டு!
* உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
* பசியும் பிணியும் பகையும் நீங்கி
*
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை!

கள்ளுண்ணாமை கூட உண்டு! ஆனா அதெல்லாம் நாம கேட்போமா என்ன? :)
திருக்குறளை எவ்வளவு தான் கொண்டாடினாலும், அதில் உள்ள புலால் மறுத்தல் /கள்ளுண்ணாமை - இதெல்லாம் மட்டும் சாய்சில் விட்டுருவோம்-ல்ல? :)
மனிதர்களுக்கு அறத்துப் பால் மட்டும் சொன்னால் போதுமா? காமத்துப் பாலும் வேண்டும்-ல்ல? :)




மணிமேகலையில், சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை என்னும் பகுதி! கிட்டத்தட்ட ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரத்தில் வரும் ஞான சபை அறிஞர்களின் விவாதம் போலத் தான் இருக்கும்! அதில் பல சமயங்களின் தத்துவங்கள் முன் வைக்கப்படுகின்றன!
1. வைதீகம்,
2. சைவம்,
3. பிரம வாதம்,
4. உலகாயுதம்,
5. சமணம்,
6. பௌத்தம்,
7. சாங்கியம்,
8. நையாயிகம்,
9. வைசேடிகம்,
10. மீமாம்சை
....என்று பல சமய/தத்துவ ஞான மரபுகள் பற்றி, மணிமேகலை, அந்தந்த அறிஞர்களோடு விவாதம் செய்கின்றாள்!
வைதீகனை,ஆசீவகனை, இன்னும் பலரைக் கேள்வி கேட்டு மடக்குகின்றாள்! ஆனால் வைணவனை ஏனோ மடக்கவில்லை! :) ஏன்?

இந்த விவாதத்தில் அவரவர் மதத் தத்துவங்கள் விரித்துச் சொல்லப்படுகின்றன!
ஆனால் வைணவத்துக்கு மட்டும் பெரிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை! ஒரே வரியில் முடிந்து விடுகிறது! அதான் மணிமேகலை மடக்கவில்லை! மடக்க ஒன்றுமில்லை!

காதல் கொண்டு, கடல்வணன் புராணம்
ஓதினன், நாரணன் காப்பு என்று உரைத்தனன்!!


காதல் கொள்ளுதல், நாரணனே காப்பு - இவ்வளவு தான் தத்துவம்! :)
* காதல் = இறை அன்பே முக்கியம், ஞான-கர்மங்களை விட!
* நாரணன் காப்பு = இறைவன் ஒருவனே உயிர்களுக்கு எல்லாம் காப்பு! சரணாகதி! அவ்வளவு தான்! இதுக்கு மேல பெருசா ஒன்னும் இல்ல! :)

ஏன் இப்படி? வைணவத்துக்கு-ன்னு தத்துவம், ஒன்னு கூடவா இல்லை?

சமயக் கணக்கர்கள், மணிமேகலையிடம் என்னென்னவோ பேசுகிறார்கள்! அதில் ஆசீவகன் என்பவனை மணிமேகலை கேள்வி கேட்டு மடக்குகிறாள்! ஆனால் இந்த வைணவர் மட்டும் ஒரே வரியில் முடித்து விட்டாரே? ஏன்??

ஏன்னா, அப்போ "வைணவம்"-ன்னு ஒன்னு இல்லவே இல்லை! அது மிகவும் பின்னால் வந்த சமயம்! :)



உலகம் மாயை அல்ல! உலகம் உண்மை! இதைச் சொன்ன சமயத் தத்துவம் = வைணவம்!
மனத்தைப் பக்குவமாய்ச் சமைப்பது எதுவோ அது சமயம்! ஆனால் "மதம்" என்பது கூடாது!

உலகமே மாயை, சிற்றின்பம் சிறுமை, பேரின்பம் தான் பெருமை என்ற சொல்லிக் கொண்டிருந்த அந்நாளைய சமய வெளியில்...
சங்கத் தமிழ் மரபை, அகம்-புறம் என்று இரண்டையுமே முன்னிறுத்தி ஒரு விழுமிய மரபும் உருவானது!

இது ஒன்றும் புதிய மரபு அல்ல! ஏற்கனவே சங்க காலத்தில் இருந்தது தான்!
ஆனால்....என்ன....ஒரு கட்டமைப்பாக இல்லை! அமைப்பு ரீதியாக இது நிறுவனப் படுத்தப்படவில்லை!

* மாயோன்-பெருமாள், சேயோன்-முருகன் என்று வாழ்வியலாகத் தான் இருந்ததே தவிர...
* வைணவம் என்றோ, கெளமாரம் என்றோ மத அமைப்பாக இல்லை!


உலகம் உண்மை தான், மாயை அல்ல, அகம்-புறம் என்று வாழ்வியல் - இப்படி சங்கத் தமிழ் மரபை ஒட்டி, தத்துவ நீட்சியாக மட்டுமே இருந்த ஒரு மரபு....
பின்னாளில் "விண்ணவம்/வைணவம்" என்று அமைப்பு கண்டு விட்டது! ஒரு தொல் மரபு, "சமயம்" என்ற புதுப் போர்வை போர்த்திக் கொண்டு விட்டது! இதைத் தான் மணிமேகலையில் பார்க்கிறோம்!

சமயக் கணக்கர் திறம் உரைத்த காதையில், வைணவம் பற்றி அதிகமான தத்துவங்கள் இல்லை! ஒற்றை வரியிலேயே முடித்துக் கொள்கிறார்!
ஏன்னா, வைணவம் அப்போது நிறுவனப்படுத்தப்படவில்லை!
அகம்-புறம் என்று வாழ்வியலாகவே இருந்தது! தத்துவ நீட்சியாகவே இருந்தது!


அதான்...
* காதல் கொண்டு = உன் தன்னோடு உறவு!
* நாரணன் காப்பு = முதற்"றே" உலகு!
இறைவ"னே" அனைத்து உயிர்க்கும் தஞ்சம்! நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்! உன்தன்னோடு-உறவேல்-நமக்கு, அது ஒழிக்க ஒழியாது!

.....என்று மட்டுமே முடித்து விட்டார்! உலகம் உண்மை, மாயை அல்ல! என்று நடைமுறை வாழ்வியலாக முடித்து விட்டார்!

மாயாவாதம், ஜீவாத்மா-மாயை-பரமாத்மா, பசு-பதி-பாசம், ஆசை அறுத்தல் என்றெல்லாம் இதர சமயங்கள் பேச...
வைணவம் மட்டும், அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தத்துவக் கரை கட்டப்பட்டு, நிறுவனப் படுத்தப்பட்டது...மிகவும் தாமதமாகத் தான்! அது வரை வாழ்வியலை ஒட்டியே அமைந்து இருந்தது!

சிலம்பு-மணிமேகலைக்கு பின்னால் வந்த முதல் சில ஆழ்வார்களும், வாழ்வியலை ஒட்டியே ஈரத் தமிழைப் பொழிந்தனர்! மாயோன்-நப்பின்னை-அகம்-புறம் என்று சங்கத் தமிழ் மரபே அவர்களின் ஈரத் தமிழிலும் காணலாம்!

பின்னால் தான், இராமானுசர் முதலான ஆசார்யர்கள், நடைமுறை வாழ்வியலாக ஏற்கனவே இருந்த ஒன்றுக்கு...பலமான தத்துவக் கரைகளைக் கட்டி, நிறுவனப் படுத்தினார்கள்! சங்கத் தமிழ் மரபாக இருந்ததால் அதை ஒதுக்கி விடாது, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயம், விதப்பொருமை (விசிட்டாத்துவைதம்) என்றெல்லாம் நிறுவனமும் படுத்தி விட்டார்கள்!

இப்படி "நிறுவனப்படுத்தல்" தேவையா? என்று பலமுறை நான் யோசித்ததுண்டு!

* சேயோன்-முருகன் யாராலும் நிறுவனப்படுத்தப்படவில்லை! அதனால் வாழ்வியல்/தொன்மம் என்பதையெல்லாம் நடைமுறையில் இழந்து, ஆலயங்களில் வெறுமனே "சுப்ரமணியன்" ஆகி விட்டான்! வள்ளி-முருகன் காதலைக் கொண்டாடுவார் இல்லை! வள்ளியம்மைக்கு எந்த ஆலயத்திலும் தனி மதிப்பு என்பது கிடையாது!

* மாயோன்-பெருமாள், மிகவும் லேட்டாக, பின்னாளில் தான் நிறுவனப் படுத்தப்பட்டான்! இன்றும் பெருமாள் கோயில் கருவறைகளில் தமிழ் ஒலிக்கிறது! ஓதுவார்கள் போல் ஒரு ஓரமாக இருந்து சொல்லாமல், அர்ச்சகர்களே, ஒவ்வொரு பூசைக்கும் தமிழ் ஓதுகிறார்கள்! மார்கழி மாதத்தில், தமிழுக்கு என்றே விழா எடுக்கிறார்கள் (திருவாய்மொழித் திருநாள்)! ஒரு மாதம் முழுதும், வடமொழி-சுப்ரபாதங்களை ஓதாமல் தள்ளி வைக்கிறார்கள்!

"நப்பின்னை" என்ற பெண்ணின் பெயர் மறைந்து விட்டாலும், அவளை ஒட்டிய "ஆண்டாள்" என்ற பெண் இல்லாமல், எந்தப் பெருமாள் கோயிலும் இல்லை!
"தாயார்" என்று பெண்மைக்குச் சிறப்பிடம் கொடுத்து, அவளைச் சேவித்த பின்னரே, பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்றெல்லாம் ஆகிப் போனது!

"நிறுவனப்படுத்தலில்" லாப-நட்டங்கள் இரண்டுமே உண்டு!
* நஷ்டம் -> சடங்குகள் புகுந்து கொள்ள வாய்ப்புண்டு
* லாபம் -> வாழ்வியலும், தமிழும் அழிந்து விடாமல்..அடுத்த தலைமுறைக்கும் செல்ல ஏதுவாகும்! இறைத் தமிழ் தழைக்கும்!

எதை எவ்வளவு தூரம் நிறுவனப்படுத்துகிறோம், ஓவராக இல்லாமல் அதை எங்கே நிறுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நன்மை/தீமைகள்...
அதை அவரவர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்!


சரி, போதும்! பேசு பொருளான = மணிமேகலையில் மாயோன்/திருமால் எங்கெங்கு வருகிறான் என்பதற்கு மட்டும் நாம் வருவோம்!

1. (சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை)

காதல் கொண்டு, கடல்வணன் புராணம்
ஓதினன், நாரணன் காப்பு என்று உரைத்தனன்!!

இதற்கான விளக்கத்தை முன்னரே பார்த்து விட்டோம்!

2.(சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)

இதில் திருமால் உலகளந்த சேதி பேசப்படுகிறது!

நெடியோன் குறள் உருவாகி நிமர்ந்து தன்
அடியிற் படியை அடக்கிய அந்நாள்
(51 - 52)

இவையே மாயோன்/திருமாலின் தமிழ்த் தொன்மையை எடுத்துரைக்கும் அகச் சான்றுகளாக மணிமேகலையில் திகழ்கின்றன!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

சிலப்பதிகாரத்தில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

சிலப்பதிகாரம்:

* நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்!
* யாம் அறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவன் போல், இளங்கோவைப் போல்....

இதெல்லாம் சிலம்பின் பெருமைகள்!
சிலம்பு பேதைப் பெண் கண்ணகியை மட்டுமா காட்டுகிறது? மேதைப் பெண் கண்ணகியையும் அல்லவா காட்டுகிறது!
ஊரு விட்டு ஊரு வந்து, புது மாநிலத்தில் ஒரு பொண்ணு, அந்தூரு முதலமைச்சரை....நேரடியாகத் "தேரா மன்னா"-ன்னு கேட்க முடியுமா? நம்ம பெண் எம்.பி.க்கள் கூட இலங்கைக் குழுவில் அமைதியாகத் தானே போய் வருவாங்க? :)) * வள்ளுவர் அரசியல் பற்றியும், பெண்ணின் மாண்பு பற்றியும், ஊழ்வினை பற்றியும் தத்துவமாகச் சொல்லி விட்டுப் போனார்!
* ஆனால் எளிய மக்கள் அதைத் தொடர்புப்படுத்தி பார்க்கும் வண்ணம், கதை நடையில் கொண்டு சென்றவர் இளங்கோ!

கண்ணகியைப் "பொழைக்கத் தெரியாதவள்", "புனித பிம்பம்" என்று ஒரு சொல்லில் அடக்கி, இந்தக் காலத்தில் கேலி பேசலாம்! ஆனால் அவள் உள்ளத்தில் இருந்த அறத்தின் மேன்மையை அறிந்தவர் யார்?


இளங்கோவின் காப்பியத்தில் தான் எத்தனை எத்தனை புரட்சிகள்?
1. கதையில் முதலில் தலைவனை அறிமுகப்படுத்தாமல், தலைவியை அறிமுகப்படுத்துகிறார்!

2. ஹீரோ, ஹீரோயின் எல்லாரும் வெகு சாதாரண குடிமக்கள்! அரசனைப் பாடாது, மக்களையும் அடியவரையும் பாடும் வித்தியாசமான பாணி இளங்கோவின் எண்ணத்திலேயே இருந்துள்ளது.

3. பெண்ணின் மென்மைத் தன்மையையும், வீரத்தையும் ஒருங்கே காட்டும் கவிஞர் அவர்!
குடும்ப நலனே பெரிதென்று இருக்கும் ஒரு வன்சொல் அறியாத பெண், நாலு பேர் முன்னிலையில் "தேரா மன்னா" என்று அரசனைச் சொல்ல எவ்வளவு "தில்" இருக்க வேண்டும்? அதுவும் ஊரு விட்டு ஊரு வந்து, எந்த ஒரு பின்புலமும் அரசியல் சப்போர்ட்டும் இல்லாது?

4. அப்படியே சொன்னாலும், "யாரடி நீ...வாய் நீளுதோ...கொஞ்சம் கூட அவையடக்கம் இல்லாமல்?" என்று அதட்டி இருக்கலாம்! ஆனா அமைதியாக வழக்கு கேட்க, ஒரு ஆட்சி முறைக்குத் தான் எவ்வளவு பொறுப்பு இருந்திருக்க வேண்டும்? கேள்வி கேட்டாலே, வூட்டுக்கு ஆட்டோ அனுப்பும் "மன்னர்கள் ஆளும் மக்களாட்சி" ஆகி விட்டது இன்றைய கால கட்டம்! :-)

5. ஓ, அவளா! அவள் ஒரு நடனப் பெண் தானே என்று மாதவியை வெகு ஈசியாக வில்லி ஆக்கியிருக்க முடியும்! படையப்பா ஸ்டைலில், ஒரு வில்லி அப்போதே உருவாகி இருப்பார்! ஆனால் இளங்கோ செய்தது என்ன? = குலத்தால் அவளை ஒதுக்காமல், குணத்தால் அவளை ஏற்றுக் கொண்டு, காப்பிய நாயகிக்கு இணையாக வைக்கிறார்!

காப்பியத்தில், தவறுகளை ஆணும் பெண்ணும் சரி சமமாகவே புரிகின்றனர். ஆனால் மாதவி மனம் மாறி, துறவு மனப்பான்மை மிகுந்து விடுகிறாள்;
கண்ணகியின் நலம் குறித்து தான் விடும் தூதில் கேட்டனுப்பும் போது, நம் மனக்கண் முன் வெகுவாக உயர்ந்து விடுகிறாள் (அட மாதவியும் புனித பிம்பம் ஆயிட்டாப்பா என்று சொல்லிடாதீங்க :-)

6. இளங்கோ, தான் சமணத் துறவியாக மாறிய போதிலும், காப்பியத்தில் பொது நோக்கம் தான் காட்டுகிறார்; பிற சமயங்களையும், தெய்வங்களையும், மக்கள் பழக்க வழக்கங்களையும், தனக்கு எதிரி நாடான சோழ/பாண்டிய நாட்டின் பெருமை பற்றியும்...மறைக்காது எழுதிய நல்ல உள்ளம், இளங்கோவின் "நெஞ்சம்"! அதனால் தான் போலும், அந்த நெஞ்சத்தைப் போற்றும் வகையில், "நெஞ்சை" அள்ளும் சிலம்பு என்றான் பாரதி!


கண்ணகியைக் காட்டும் காவியம், கண்ணனையும் நடுநடுவே பல இடங்களில் பேசுகிறது! தமிழ்க் கடவுளராகிய பெருமாள்-முருகன், தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் எப்படி இயைந்து இருந்தார்கள் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது!
அரங்கம், வேங்கடம், செந்தூர் என்ற ஆலயங்கள் எல்லாம் 1700 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தன என்றால் நம்ப முடிகிறதா? சிலப்பதிகாரம் படம் பிடித்துக் காட்டுகிறது, பார்க்கலாமா?


திருவேங்கட மலையில் நிற்பவன் யார்? = பெருமாளா? முருகனா??

இன்றளவும் சிலர் குழம்பித் திரிந்து, குழப்பியும் திரிகிறார்களே! அவர்களுக்கு இளங்கோவடிகள் பதில் சொல்கிறார் பாருங்கள்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை
...
...
பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய 50
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்


என்கண் காட்டென்று என்னுள்ளங் கவற்ற
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்!!!
(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம் - காடு காண் காதை)

பகை அணங்கு ஆழியும் = சக்கரமும்,
பால் வெண் சங்கும் = சங்கும்,
தாமரைக் கையில் ஏந்தி,
பூவாலேயே ஆடை அணிந்து (பூலங்கி = பூ+அங்கிச் சேவை என்று இன்றும் நடக்கிறது)

நெடியோன் நிற்கிறானாம், எங்கு? = வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் மலையில்! சங்கு-சக்கரம் ஏந்திக் கொண்டு!
ஒரு படத்தையே தமிழ்ச் சொற்களால் வரைந்து காட்டுகிறார் பாருங்கள்!


இன்னொரு இடத்திலும், வேங்கடம் யாருடைய மலை என்று காட்டுகிறார்!
தமிழகத்தின் எல்லைகளை "வடவேங்கடம்-தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல் உலகம்" என்று தொல்காப்பியம் காட்டியது அல்லவா!
அதில் வடவேங்கடம் என்று தான் வருகிறதே தவிர, அந்த வேங்கடத்தில் யார் நிற்பது என்று அதில் சொல்லப்படவில்லை!
அதனால் இளங்கோ தன் கேமராவை இன்னும் Zoom செய்து காட்டுகிறார் போல! :)

புகார்க் காண்டம் - வேனில் காதை
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு (2)

நெடியோன் குன்றம் = நெடியோனாகிய திருமாலின் குன்றம் - திருவேங்கடம்
தொடியோள் பெளவம் = தொடியோளாகிய குமரியின் கடல்
தமிழ் வரம்பு அறுத்த = தமிழ் நாட்டு எல்லையாக வரம்பு செய்து
தண்புனல் நன்னாட்டு = நீர்வளம் கொழிக்கும் நாட்டில்

குமரி ஆறு என்னாது குமரி பெளவம் என்று சொல்வது எதுக்கு-ன்னா, குமரி ஆறு கடல் கோளால் கடலுள் உள் வாங்கி விட்டது!
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
என்று இதே இளங்கோ, சிலம்பில் முன்பு சொல்லி விட்டார் அல்லவா!

இப்படி, இவ்வளவு தெளிவாக, வேங்கட மலையில் நிற்பது யார் என்பதை, ஒரு தமிழ் அறிஞர்...இளங்கோ படம் பிடித்துக் காட்டுகிறார்!

ஆனால் வேண்டுமென்றே கிளப்பி விட்டு, அப்பாவி மக்களைக் குழப்பித் திரியும் சில மதவாதிகள்.....அது முருகனோ, அவனோ, இவனோ...என்று இந்தக் காலத்திலும் குட்டையைக் கலக்கி, மீன் பிடிக்க எண்ணுகின்றனர்!
"வேங்கட சுப்ரமண்யம்" என்றெல்லாம் பேர் வைத்து, தங்கள் குல அபிமானத்தையும், வடமொழி வெறியையும், சமயப் போர்வையும் ஒன்றுமறியாக் குழந்தைகளின் மேல் திணிக்கின்றனர்! :(((

பழுத்த தமிழர் - சமய விருப்பு/வெறுப்பு இல்லாதவர் - இளங்கோ அடிகள் சொல்வதைக் கூடக் காது கொடுத்து கேளாதவர்கள், தமிழைக் கேளாதவர்களே!

சரி, இளங்கோ சொல்வதைத் தான் கேட்கவில்லை! ஆனால் பின்னால் வந்த அரும்பெரும் முருக பக்தர் அருணகிரி சொல்வதைக் கூடவா கேட்க மாட்டார்கள்? இளங்கோவடிகள் காட்டும் அதே காட்சியை - திருமால் திருவேங்கட மலை மேல் நிற்பதை - அருணகிரியும் காட்டுகிறார்! இதோ....

உலகீன்ற பச்சை உமை அண்ணன்
வடவேங்க டத்தில் உறைபவன்
உயர் சாரங்க சக்ர கரதலன் மருகோனே
திரை பாய்ந்த பத்ம தட வயலி-
இல் வேந்த முத்தி அருள்தரு
திருவாஞ்சி யத்தில் அமரர்....பெருமாளே!

இலக்கியம், வரலாறுகளைத் தங்கள் "மனம் போன" போக்கில் மட்டுமே கொள்வது, உண்மை அறிந்த பின்னும் பழையதே சாதித்துக் கொண்டுத் திரிவது......இதெல்லாம் தமிழும் அல்ல! முருகும் அல்ல! அவரவர் செய்து கொள்ளும் "சுய இன்பங்களே"!



சிலப்பதிகாரம் காட்டும் மாயோன் பற்றிய இதர பல செய்திகள்:

1. புகார்க் காண்டம் - மாதவி நாட்டியம் - முதல் வணக்கம் யாருக்கு?

இந்திர விழாவின் தொடக்கத்தில், மாதவி நடனம் ஆடுகிறாள்! பதினோரு ஆடல்! அனைத்து ஆடல்களுக்கும் முதன்மையான ஆடல் எது? = காக்கும் கடவுளான மாயோன் ஆடல்! மாயோன் பாணி!

புகார்க் காண்டம் - கடலாடு காதை
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர் (35)
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க

உரை: பதினோரு ஆடற்கும் முகநிலையாகிய தேவபாணியாவது காத்தற் கடவுளாகிய மாயோன் பாணி என்ப. அது,

"மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன்;
மறிதிரைக் கடலினை மதித்திட வடைத்தவன்;
இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்;
இன நிரைத் தொகைகளை இசைத்தலில் அழைத்தவன்"
எனத் துவங்கும்; எண்சீரான் வந்த கொச்சக ஒருபோகு; பண் - கௌசிகம். தாளம் - இரண்டு ஒத்துடைத் தடாரம்


2. மதுரைக் காண்டம் - ஆய்ச்சியர் குரவை - பொது மக்கள் ஆடும் திருமால் கூத்து

2005112600220301

இந்தப் பாடல், முத்தமிழில், இசைத் தமிழ்!
பண்ணுடன் பாடவல்ல சிலப்பதிகாரப் பாடல்!

கண்ணகி, மதுரைக்கு வெளியே, ஆயர்ப்பாடியில் இருக்கும் போது....
அவள் தனிமையைத் தணிவிக்க....
மாதரி-ஐயை மற்றும் இதர ஆயர்கள் ஆடும் கூத்து!

மாயோனாகிய பெருமாளை மையப் பொருளாக வைத்து = குரவைக் கூத்து!
பண்டைத் தமிழ் மக்களின் நாட்டிய அமைப்பினை/பண்ணிசையை, சிலப்பதிகாரம் மிகவும் நுணுக்கமாகக் காட்டும் கட்டம் இங்கு தான்!

தமிழ்க் கடவுளும், ஆயர்களின் அன்பனுமான கண்ணன்! அவன் அழகும் பெருமையும் பாட்டில் ஒவ்வொன்றாக வருகிறது! அடியே தோழீ, கண்ணன் நம்ம வீட்டுக்கு வந்தால், அவனைப் பிடிச்சி, அவன் குழல் வாசிக்கும் இனிமையைக் கேட்போமா?- என்று பெண்கள் திட்டம் போடுகிறார்கள்! :)

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த கோதையாகிய ஆண்டாளும் சிலப்பதிகாரம் படிச்சி இருப்பாள் போல! அவளும் அதே சொற்றொடரைப் பயன்படுத்துகிறாள் பாருங்கள்! = கன்றுக் குணிலா எறிந்தாய் கழல் போற்றி!!

மதுரைக் காண்டம் - காதை: ஆய்ச்சியர் குரவை
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2
ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3
எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;
(இளங்கோ "குருந்து ஒசித்த மாயவன்" என்கிறார்! கோதையோ, "மருப்பு ஒசித்த மாதவன்-தன் வாய்ச்சுவையும் நாற்றமும்" என்கிறாள்!)

முன்னிலைப் பரவல்

இது மாயோனுக்கென்றே ஆன மிக அழகான சங்கத் தமிழ்ப் பாடல்! ஆழ்வார் தமிழுக்கும் முந்தைய தமிழ்! ஆலயங்களில் கூடப் சிலம்பைப் பாடலாம்! அவ்வளவு அழகு!

நாராயணா என்னாத நாவென்ன நாவே,
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே,
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே?


என்றெல்லாம் இளங்கோ என்னும் தமிழ்க் கொண்டல் பொழிகிறது! இதை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் ஐ.நா சபை நிகழ்ச்சியில் பாடி, அனைவரையும் கவர்ந்து இழுத்தார்கள்! இதோ ஒலிச்சுட்டி!


madhavipanthal.podbean.com

வடவரையை மத்தாக்கி, வாசுகியை நாணாக்கிக் 1
கடல்வண்ணன் பண்டொருநாள், கடல்வயிறு கலக்கினையே!
கலக்கிய கை அசோதையார், கடை கயிற்றால் கட்டுண்கை
மலர்க் கமல உந்தியாய்.....மாயமோ மருட்கைத்தே?

அறுபொருள் இவன் என்றே, அமரர்கணம் தொழுது ஏத்த 2
உறுபசி ஒன்று இன்றியே, உலகடைய உண்டனையே!
உண்டவாய் களவினான், உறிவெண்ணெய் உண்ட வாய்
வண்டுழாய் மாலையாய்.....மாயமோ மருட்கைத்தே?

திரண்டு அமரர் தொழுதேத்தும், திருமால் நின் செங்கமல 3
இரண்டடியான் மூவுலகும், இருள்தீர நடந்தனையே!
நடந்தஅடி பஞ்சவர்க்கு, தூதாக நடந்தஅடி
மடங்கலாய் மாறட்டாய்.....மாயமோ மருட்கைத்தே?

பெரிய கயிறாலும் கட்டுப்படாதவன், தாயின் தாம்புக் கயிற்றுக்கு அடங்கினாயே, உலகையே உண்ட வாய், வெண்ணெய்க்கு அலையுமோ? இப்படி இனிய மாயம் செய்யும் மாயோனே....இந்த மாயமெல்லாம் உன் மேல் எங்களுக்கு ஒரு மருட்கை (மயக்கத்தை) உண்டாக்குது!

படர்க்கைப் பரவல்

மூவுலகும் ஈரடியான் முறை நிரம்பா வகை முடியத் 1
தாவிய சேவடி சேப்பத், தம்பியொடும் கான்போந்து
சேர் அரணும் போர் மடியத், தொல் இலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத....செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத...செவி என்ன செவியே?

பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் 2
விரிகமல உந்தியுடை விண்ணவனை - கண்ணும்
திருவடியும், கையும், திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே?
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ண கண்ணே?

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் 3
கடந்தானை நூற்றுவர் பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே?
நாராயணா என்னா நாவென்ன நாவே?

நாரணம் என்பது தூய தமிழ்ச் சொல்லே!
=நாரம் (நீர்) + அணம் (அருகில்/இடம்) = நீர்மை தங்கும் இடம் = நாரணம்!
இது குறித்த இராம.கி ஐயாவின் பதிவுகளையும் வாசியுங்கள்! சுட்டிகள் மேலே!

இப்படிப் பல அழகான இசைப் பாடல்களோடு, கண்ணன் கூத்து-ஆய்ச்சியர் குரவை முடிகிறது!


3. மதுரைக் காண்டம் - பழமுதிர் சோலை - மதுரைக்குப் போகும் "ரூட்"

மதுரைக்கு எந்த ரூட்டில் போகணும்?
கொடும்பாளூரில் இருந்து இரண்டு வழிகள் பிரியும்! மதுரைக்குச் செல்லும் அந்த இரண்டு வழிகளைச் சொல்கிறார் இளங்கோ! ஒன்று வலப்பக்க வழி! இன்னொன்று இடப்பக்க வழி!
29567009_tirumaliruncholai

அந்த இடப்பக்க வழியில் சென்றால் வருவது, ஆறாவது படை வீடான = பழமுதிர் சோலை! அது என்ன மலையாம்? = திருமால் குன்றமாம்! :) அட, சொல்வது நான் இல்லீங்க! இளங்கோ! :)
சரவணம் என்னும் பொய்கையையும் அங்கே காட்டுகிறார்! மாயோனும் சேயோனும் இணைந்து உறையும் சோலைமலை அல்லவா!

மதுரைக் காண்டம் - காடு காண் காதை
அவ்வழிப் படரீர் ஆயின் இடத்துச்
செவ்வழிப் பண்ணிற் சிறைவண்டு அரற்றும்
தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு
கடம்பல கிடந்த காடுடன் கழிந்து 90

திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்
பெருமால் கெடுக்கும் பிலம் உண்டாங்கு
விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற்
புண்ணிய சரவணம் பவகாரணியோடு
இட்ட சித்தி யெனும்பெயர் போகி 95
...
...
ஓங்குயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது 105
சிந்தையில் அவன் தன் சேவடி வைத்து
வந்தனை மும்முறை மலைவலம் செய்தால்
நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்றலை

இளங்கோ, சமண அடிகளாய் இருந்தாலும், காப்பியத்தில் தன் சொந்த விருப்பு-வெறுப்புகளைப் புகுத்தவே மாட்டார்! தமிழைத் தமிழாய்ப் பார்ப்பார்! அதான் அவரு "நெஞ்சை அள்ளும்" இளங்கோ!

இதில் கூடப் பாருங்க.....திருமால் குன்றம்-சரவணப் பொய்கை-ன்னு வழிப்போக்கன் (மறையவன்) சொன்னாலும், கவுந்தி அடிகள் சமணர் அல்லவா? அவர் கூற்றையும் மறைக்காமல் சொல்லுவார்!
"எங்களுக்குச் சரவணப் பொய்கையில் குளிக்கும் வழக்கமெல்லாம் இல்லை மறையவரே, எனினும் நன்றி"-ன்னு கடந்து செல்வதையும் இளங்கோ காட்டுவார்! = பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை-ன்னு ஒரே வரியில் சொல்லி விடுவார் கவுந்தி அடிகள்!

இப்படி,
* திருமால் குன்றம்-சரவணப் பொய்கையின் பெருமையும்,
* அதே சமயம் சமண அடிகளுக்கு அவை ஒரு பொருட்டல்ல என்றும்
ஒருங்கே, உள்ளது உள்ளபடிக் காட்ட, இளங்கோவால் மட்டுமே முடியும்! muruga..i like this elango very much da:)


4. புகார்க் காண்டம் /மதுரைக் காண்டம் = திருவரங்கம்

திருவரங்கத்தில் பெருமாள் என்னும் மாயோன், பாம்பணையில் துயில் கொண்டு இருப்பதையும், தன் கேமராவில் படம் பிடிக்கிறார் இளங்கோ!

ஒரு பெரிய நீல மேகம், வெள்ளி மலை உச்சியில் படுத்து இருப்பது போல் இருக்கிறதாம் = கருந் தெய்வமான மாயோன், வெண் பாம்பில் படுத்து இருப்பது!
இப்படிக் காவிரியின் நடுவில், திருவாழ் மார்பன் கிடந்த வண்ணம் என்கிறார்!

மதுரைக் காண்டம் - காடு காண் காதை
நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் 35
பால்விரிந்து அகலாது படிந்தது போல
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளிப் பலர்தொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித்
திரு-அமர் மார்பன் கிடந்த வண்ணமும்




5. வஞ்சிக் காண்டம் - சேடக மாடப் பெருமாள்! (திருவனந்தபுரம்)

வஞ்சிக் காண்டம் முருகப் பெருமானோடு தான் துவங்குகிறது! குன்றக் குரவை! குறவர்கள் ஆடும் கூத்து!
முன்பு ஆயர்கள் ஆடும் கூத்து பார்த்தோம் அல்லவா? அது போல் இது குறவர்கள் ஆடும் குத்து! அது முல்லை, இது குறிஞ்சி! அது பெருமாள், இது முருகன்!

கூத்து நடக்கும் போது, அங்கு வந்த சேரன் செங்குட்டுவனுக்கு, இந்த மலைக் குறவர்கள் தான், கண்ணகி கோவலனோடு வானில் போன நிகழ்வைச் சொல்லுகிறார்கள்! சாத்தனார் முழுக் கண்ணகி கதையினைச் சொல்கிறார்!

அதன் பின்னரே, செங்குட்டுவன், வடபுல மன்னரை வெற்றி கொள்ளச் செல்கிறான்! அப்படியே கண்ணகி சிலை செய்ய, கங்கைக் கரையில் கல் எடுத்து வரவும் திட்டம்!
போருக்குச் செல்லும் முன், வஞ்சிப் பூ சூடி, தெய்வம் பரவி, யானை மேல் ஏறுகிறான்! அப்போது இறைவன் மாலைகளைக் கொணர்வித்துத் தருகிறார்கள்!

வஞ்சி மாலையைப் போட்டுக் கொண்டு யானை ஏறும் முன்னால், சிவப் பிரசாதமாக மாலை தர, அதைச் சென்னியில் சூடிக் கொள்கிறான்!
யானை ஏறிய பின், சேடகமாட ஆலயத்தில் இருந்து, இறைவன் அருட் கொடையாக இன்னொரு மாலை வருகிறது! (சேடகமாடம் = இன்றைய திருவனந்தபுரத்து ஆலயம் என்று கருதுவர்)

அதையும் செங்குட்டுவன் அன்போடு ஏற்றுக் கொள்கிறான்! ஏற்கனவே ஈசனின் மலர் சென்னியில் உள்ளதால், தலையில் வைக்க இடமில்லாமல், இந்த மாலையைக் கழுத்தில்/தோள்களில் தாங்கிக் கொள்கிறான்! பின்னர் சேர குலத்தின் மாலையான வஞ்சி மாலையும் அதே தோளில் சூடிக் கொண்டு உலா வருகிறான்!

வஞ்சிக் காண்டம் - கால்கோள் காதை
குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க’ என, (61)
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கோண்டு, சிலர் நின்று ஏத்த,
தெண்- நீர் கரந்த செஞ் சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணி முடி வைத்தலின்,
ஆங்கு- அது வாங்கி, அணி மணிப் புயத்துத்
தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வுழ

ஈசனின் மாலை ஏற்கனவே தலையில் உள்ளதால், சேடகமாடத்தின் திருமால் மாலையை, "அணி மணி புயங்களில்", "தாங்கிக்" கொள்கிறான், தகைமையோடு!

ஆனால், ஒரு சிலர் மட்டும் இதை "வேறு மாதிரி" செல்லுவார்கள்! :)
செங்குட்டுவன் சைவ மரபினன்! அதனால் ஈசன் மாலையைத் தலையில் வைத்துக் கொண்டான்! ஆனால் பெருமாள் மாலையை, "சரி...ஒழியுது, குடுக்கறாங்களே"-ன்னு அலட்சியமாய் வாங்கி, ஒப்புக்கு "ஒற்றைத் தோளில்" போட்டுக் கொண்டானாம்! :)

பாட்டைக் கொடுத்திருக்கேன்-ல்ல? நீங்களே பாருங்க! எங்கேயாச்சும் "ஒற்றைத் தோள்" இருக்கா? :) "அலட்சியம்" இருக்கா?

அணி மணி புயங்களில், சேரன், சும்மானா போட்டுக் கொள்ள வில்லை! "தாங்கிக்" கொண்டானாம்! ஏன்? இறைவன் அருட்கொடை என்பதால்! = தாங்கினன் ஆகித் தகைமையுடன் செல்வுழ!
அப்பறம் வஞ்சிப்பூ மாலையைக் கூடத் தான் தோள்களில் போட்டு வருகிறான்! உடனே சேர குல அடையாளமான வஞ்சிப் பூ மாலைக்கு அவ்வளவு தான் மரியாதை என்றா சொல்வோம்? :)

தங்களின் "ஏற்றம்" மிகு செயல்களைச் சொல்லலாம்-ல்ல? மாட்டார்கள்! அடுத்தவரை "இறக்கிக்" கொண்டு மட்டுமே இருப்பார்கள்! ஆலயக் கருவறைகளில் தமிழை முன்னிறுத்த மாட்டார்கள்! ஆனால் பெருமாள் கோயில் கருவறையில் தமிழ் ஓதி வழிபடுவதை ஒதுக்கித் தள்ளுவார்கள்! திருமால் தமிழ்க் கடவுள் அல்ல என்று ஒதுக்கித் தள்ளுவார்கள்!

சிறுபான்மைச் சமூகங்கள் தங்களுக்கு அடங்கியே தங்கள் மரபைப் பேண வேண்டும்! நல்லதே செய்தாலும், ஒரு போதும் தங்களை மிஞ்சிடக் கூடாது என்ற "புத்தி"!
தமிழைத் தாங்கள் தான் முன்னிறுத்தவில்லை! அடுத்தவர்களாச்சும் தமிழை முன்னிறுத்துகிறார்களே என்று "ஏற்ற" எண்ணம் வராது! "இறக்க" எண்ணமே வரும்! :(

சிலப்பதிகார வரிகளை, பொதுமக்கள் யார் போய்ப் படிக்கப் போகிறார்கள் என்ற துணிவில், சும்மானா அடித்து விடுவது! - "சேரன் செங்குட்டுவன் ஒற்றைத் தோளில் அலட்சியமாக திருமால் மாலையை வாங்கிக்கிட்டான்" என்று! :) அடக் கொடுமையே!
தமிழைப் படிக்கும் போதாவது, சமயத்தைத் தாண்டி, தமிழைத் தமிழுக்காகவே படித்தால், தமிழ் தழைக்கும்!



6. புகார்க் காண்டம்: கோவலன்-கண்ணகி ஊரை விட்டுக் கிளம்பும் முன், திருமால் கோயிலுக்குப் போதல்!


கோவலன்-கண்ணகி ஒன்று சேர்ந்த பின்னர், பொருள் ஈட்டும் பொருட்டு, சுற்றம் அறியாது தன்மானத்துடன், மதுரைக்குச் செல்ல முடிவெடுக்கிறான்!

சொந்த ஊரை விட்டு மதுரைக்குக் கிளம்பும் முன், கோவலன்-கண்ணகி, முதலில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, பின்னரே கிளம்புகிறார்கள்!
அதன் பின்னர் இந்திர கோட்டமான புத்த விகாரத்தையும், சமணப் பள்ளியான திலாதலத்தையும் வணங்கிச் செல்கிறார்கள்!

புகார்க் காண்டம் - நாடு காண் காதை
வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க,
கார் இருள் நின்ற கடைநாள் கங்குல்-
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப (4),
...
...
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து-ஆங்கு-
அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து
(10)

அரவத்தின் மேல் அறி துயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டத்தை (கோயிலை) வலம் செய்து, சென்றார்கள்!

பெருமாள் கோயிலை மட்டுமா வலம் செய்தார்கள்? இல்லை!
அடுத்து பெளத்த விகாரத்தையும், அதற்கு அடுத்து சமணப் பள்ளியாகிய சிலாதலத்தையும் வணங்கி...
பின்னர் காவிரிக் கடைமுகம் தாண்டி, வடக்காகப் பயணம் துவங்கினார்கள்! கவுந்தி அடிகளும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்!

அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து 15

அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி

இதில் இருந்தே கோவலன்-கண்ணகியின் சமயப் பொறைமையும், கண்ணகியின் மாசில்லாத அன்பும் தெரிகிறது அல்லவா? காதல் ஒருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் "யாவினும்" கைக்கொடுத்து...யம்மாடி கண்ணகி, நீ நல்லா இருக்கணும்! உன் உள்ளம் வாழி வாழி!!

மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும்!!!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

முல்லைப் பாட்டில் தமிழ்க் கடவுள்!

முல்லைப்பாட்டு:

பத்துப் பாட்டு நூல்களில் மிகவும் சிறப்பான நூல்! இயற்கை வாழ்வும், மக்கள் வளமும், முல்லை நிலக் காடும் கழனியும் என்று பலவும் பேசும்!

தனித்தமிழ் அறிஞரான மறைமலை அடிகள், இதற்கென்றே, முல்லைப் பாட்டு - ஆராய்ச்சி உரை எழுதியுள்ளார்!
அத்தனை இயற்கை வளம், கணவன் மனைவி மன உணர்வுகளைச் சொல்லும் நூல்!

* முல்லைத் திணை = இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சித் திணை = புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

குறிஞ்சியில் = தலைவன்-தலைவி உடல் இன்பத்தைப் பேசி, (களவொழுக்கம்)! தெய்வம் = முருகன்!
முல்லையில் = தலைவன்-தலைவி, ஒருவருக்கொருவர் என்றே இருத்தலைப் (இல்வாழ்வு - கற்பொழுக்கம்) பேசுவது! தெய்வம் = திருமால்!

ஹா ஹா ஹா! இப்போது தெரிகிறது, எதுக்கு எனக்கு முருகனை மறைமுகமா மனசுக்குள்ளாற ஆழமாகப் பிடிக்கிறது-ன்னு! :)
ஆனால் அவனுக்காக காத்து "இருப்பதே" - இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - என்று ஆக்கி விட்டு விட்டாரே முல்லை நிலப் பெருமாள் என்று தலைவி ஏங்கலாமோ?

பாடியவர்: நப்பூதனார் (காவிரிப் பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார், நப்பூதனார்)
பாடப்பட்டோன்: குறிப்பாக இன்னார் என்று இல்லை! சங்கத் தமிழ் வாழ்வியலே!

மனைவியைப் பிரிந்து, பகை வேந்தரோடு போர் செய்யப் போகிறான் தலைவன்!
"கார்காலத் தொடக்கத்தில் வருவேன், அது வரை நீ ஆற்றி இரு" என்று சொல்லி விட்டுச் செல்கிறான்!

அவன் சொல்லையே வாழ்வாகக் கொண்டு ஆற்றி இருக்கிறாள்! கார் காலம் முடிந்தும் வரவில்லை! இருப்பினும் காத்து இருக்கிறாள்! Like Penelope who waited for Odysseus!
திருமால் கோயிலுக்குச் செல்கிறாள்! அங்கே பெருமுது பெண்டிர் குறி சொல்லியும் அவளை ஆற்றுகிறார்கள்!


இது தான் பாட்டின் களம்!
முல்லை நிலச் செய்திகள், இயற்கை அழகு, இயற்கையான வாழ்வியல், அழகான உவமைகள், காதல் உணர்வு, காதல் எப்படி திருமணத்துக்குப் பிறகு இன்னும் ஆழமாகிறது....என்றெல்லாம் வருகிறது!



பாட்டின் துவக்கமே, திருமாலைச் சொல்லித் தான் துவங்குகிறது!

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல (3)

சக்கரப் படையும், சங்கும் தன் கைகளில் உடைய திருமால்!
திருமார்பில், துணைவியை அன்புடன் கொண்டுள்ள திருமால்!
அவன் கைகளில் நீர் வாங்கிக் கொண்டே நிமிர்ந்து உலகளந்தான் போலே, மேகமும் நீர் வாங்கிக் கொண்டே, உலகெலாம் சுற்றி வருகிறதே!

அருங் கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு,
நாழி கொண்ட, நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, 10
பெரு முது பெண்டிர், விரிச்சி நிற்ப

மேலும், ஊர்ப் பக்கத்தே திருமால் கோயிலுக்குப் போய், நாழி நெல்லும் முல்லையும் தூவி வணங்குதல் பற்றிச் சொல்கிறது!
குறி சொல்லும் வழக்கம் - முதிய பெண்டிர்களின் விரிச்சி (குறி) கேட்டு, மனம் ஆறுதல் பெறும் இளம் பெண்கள் பற்றியும் பேசுகிறது!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

திருமுருகாற்றுப்படையில் தமிழ்க் கடவுள் பெருமாள்!

திருமுருகாற்றுப்படை:

அருளியவர்: நக்கீரர்.
இவரே தமிழில் முதல் ஆன்மீகப் பதிவர்!

பின்னே..... எல்லாப் புலவர்களும் அகத்துறை, புறத்துறை-ன்னு பாட...
இவர் மட்டும் தான் ஆன்மீகத்துக்குன்னே, தனியாக ஒரு ஆற்றுப்படை பாடினார்! எல்லாப் புலவர்களும் மன்னனை நோக்கி ஆற்றுப்படுத்த,
இவர் தான் முதன் முதலில், இறைவனை நோக்கி ஆற்றுப்படுத்தினார்!

மாயோனையும் பாடும் வாயோன் என்று தன்னை அறிவித்து, நமக்கும் அதை அறிவிக்கிறார் நக்கீரர்! திருமால், முருகன் என்று இருவரின் குணங்களையும் ஏத்துகிறார்!

கடுவொடு ஒடுங்கிய தூம்படை வால்எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் . . .150
புள்ளணி நீள்கொடிச் செல்வனும்,

(நச்சுப் பல்லும், தீப்பறக்கும் கண்களும், அச்சம் கொடுக்கும் திறலும் கொண்ட பாம்புகளே அஞ்சும், பெரிய சிறகுகள் உடைய பருந்து பறவை! அதைக் கொடியில் கொண்டுள்ள மாயோனே! நீள் கொடிச் செல்வா!)
...
....

திருவாவினன் குடி என்னும் பழனி மலைக்கு பல முனிவர்களும், கந்தருவப் பெண்களும், நான்முகன், இந்திரன் முதலானோரும், சிவனாரும், திருமாலும் ஒருங்கே வரும் காட்சியை விவரிக்கும் போது....

மாயோனைப் "புள்ளணி நீள் கொடிச் செல்வன்" = பறவையைக் கொடியில் கொண்ட செல்வன் என்று ஏத்துகிறார்! இவ்வாறு முருகனோடு வந்த முத்தொழில் மூர்த்திகளை அனைவரும் ஏத்துவதாகவும் பாடுகிறார்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன்: முருகன்
திணை: பாடாண்திணை
துறை: ஆற்றுப்படை
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 317


நக்கீரர் சங்கத் தமிழ் புலவரே அல்ல! அவர் காலம் கி.பி 9! சொல்லுது விக்கிப்பீடியா! :)

திருமுருகாற்றுப்படையில் சரவண பவ என்னும் ஆறெழுத்து மந்திரம் பற்றிய குறிப்பு வருவதால் (ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி), இது சங்க கால நூல் தானோ? என்று ஐயுறுவாரும் உண்டு! மும்மூர்த்திகள், கந்தர்வ தேவதைகள் என்று பல பிற்காலச் சேதிகளும் இதில் காணப்படுவதால் தான் இந்த ஐயம்!

மேலும் பன்னிரு சைவத் திருமுறைகளில், திருமுருகாற்றுப்படையும் பதினோராம் திருமுறையாகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளது!

அதில் நக்கீரர் பாடியதாக, இன்னும் சில தொகுப்புகள் - கோபப் பிரசாதம், கண்ணப்ப நாயனார் வரலாறு, கயிலை பாதி காளத்தி பாதி - என்றெல்லாம் வைக்கப்பட்டுள்ளதால், அந்த வடமொழிப் பெயர்களைப் பார்த்து, இது போன்ற ஐயம் வந்து, நக்கீரர் பிற்காலத்தவர் (9th Century AD) என்று விக்கிப்பீடியாவிலும் எழுதி வைத்து விட்டனர்!

ஆனால் இது தவறு!

நக்கீரர் சங்கத் தமிழ்ப் புலவரே! கடைச் சங்கமாக இருக்கலாம்!
திருமுறைகளில் உள்ள தொகுப்புகளைப் பாடியது பிற்கால நக்கீரர்களாக இருக்க வாய்ப்புண்டு! நக்கீரர் பற்றிய கதைகளும் பிற்காலத்தையவே!
ஆனால் அதற்காகத் திருமுருகாற்றுப்படையையோ, நக்கீரரையோ பிற்காலத்தவர் என்று முடிவு கட்டிடக் கூடாது! அதன் பாடல் அமைப்பும், இன்ன பிற சேதிகளும், அதைச் சங்க நூலாகவே காட்டுகின்றன!

எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன்? முருக ஆசையினாலா? :) மாயோன் பாசத்தாலா? :) இல்லை! தமிழ்ச் சான்றாண்மையால்!

ஏனென்றால்.....புறநானூற்றில் வரும் இன்னொரு நக்கீரர் பாடலும், இதற்குச் சான்று! - 56 ஆம் பாடல்! இதிலும் மாயோனைப் போற்றுகிறார்!
எங்கும் புகழ் பரவி இருப்பதில், திருமாலைப் போல இருக்கீயே
என்று பாண்டியனைப் பாடுகிறார்!

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,


கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே?


மாற்ற முடியாத கோபத்தில் கூற்றுவனைப் போல இருக்கீயே!
வலிமையில் பலராமன் போல இருக்கீயே!
புகழ் பரவி இருப்பதிலும், பகைவரைப் பணிய வைக்க வல்லதிலும் திருமாலைப் போல இருக்கீயே!
நினைச்சதை முடிப்பதில் முருகனைப் போல இருக்கீயே!
உன்னால் முடியாததும் ஒன்று இருக்கா, பாண்டிய மன்னா?



கவனியுங்கள், நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன்!
சினிமாவில் வருவது போல்...கூந்தலுக்கு வாசனை கண்டு புடிக்க படாதபாடு பட்ட ஏ.பி நாகராஜனின் செண்பகப் பாண்டியன் அல்ல! :)

"இறையனாரும், தமிழ்க் கடவுள் எம்பெருமான் முருகவேளும்" என்று சினிமா வசனத்தை மட்டும் வச்சிக்கிட்டு, தமிழ்க் கடவுள் இவர் ஒருவரே என்று முடிவு கட்டி விட முடியாது! அதற்குத் தமிழர் தந்தையான தொல்காப்பியரிடம் கேட்க வேண்டும்! ஏபி நாகராஜனிடம் அல்ல! :))

திணை = பாடாண் திணை
துறை
= பூவை நிலை
பாண்டியன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை,மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது!

தமிழ் இலக்கியம் பயிலும் போது, சமய விருப்பு வெறுப்புகளைக் கடந்து, உள்ளது உள்ளவாறு, தக்க தரவுகளோடு நோக்க வேண்டும்;

பன்னிரு சைவத் திருமுறையில் இருக்கும் நக்கீரர் "கோபப் பிரசாதம்" என்ற நூலை வைத்து, அதில் இருக்கும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையும் அப்படியே என்று முடிவு கட்டினால், அது தவறு அல்லவா?
சமயம் கடந்த அந்த "இலக்கிய நேர்மை" நமக்கு வந்தால் தமிழ் தழைக்கும்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

மதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்!

மதுரைக் காஞ்சி

மதுரைக் காஞ்சி-ன்னா என்ன?
காஞ்சிப் போன மதுரையா? :)
இல்லை மதுரையும் காஞ்சிபுரமுமா?

இரண்டுமே இல்லை! காஞ்சி என்பது காஞ்சித் திணை! வஞ்சி x காஞ்சி, உழிஞை x நொச்சி-ன்னு எல்லாம் சின்ன வயசில் உருப்போட்டு இருப்பீங்களே! :)
இவையெல்லாம் போர்த் திணைகள்! வஞ்சிப்பூ சூடி வரும் எதிரிப் படைகளை, நாட்டின் எல்லையில் தடுத்து நிறுத்தி, அந்த நாட்டு வீரர்கள் காஞ்சிப்பூ சூடி, எதிர்ப்பது!

ஆனால் இந்த நூலுக்கு அதுவும் பொருளில்லை! தொல்காப்பியர் குறிப்பிடும் காஞ்சி-ப்படி பொருள் அமைகிறது! அதாவது "நிலையாமை"யைச் சொல்ல வந்த திணை!
போர் என்னும் மறக் கூறாக இல்லாமல், போரில் செல்வம்/இளமை என்று ஒரே நேரத்தில் சாய்ந்துவிடும் "நிலையாமை" பற்றிச் சொல்ல வந்ததால் காஞ்சி!

அப்பறம் என்ன மதுரைக் காஞ்சி? மதுரையில் பாடப்பட்ட "நிலையாமைத் தத்துவக் காஞ்சி"!
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரையில் பாடியது!

இது தான் பத்துப் பாட்டிலேயே நீளமான பாடல்! :)
இதில், மதுரையின் பல சிறப்புகளையும், விழாக்களையும் சொல்லும் கவிஞர்,
பெருமாளுக்கு உரிய திருவோண விழாவை,
பண்டைய தமிழ் மக்களும், மதுரை மறவர்களும் கொண்டாடுவது பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார்!


(மாயோன் மேய ஓண நன்னாள் - மாயோனுக்குரிய திரு ஓண விழா பற்றிய குறிப்புக்கள்)


பாடியவர்: மாங்குடி மருதனார்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்
திணை: காஞ்சி
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 782

ஓணம் - திருவோணம் என்பது வான்வெளி விண்மீன் மண்டலம்!

Shravanam என்று வடமொழியிலும், Aquilae என்று ஆங்கில/கிரேக்க/லத்தீனிலும் குறிக்கப்படுவது இஃதே!
பார்க்க, சிறகுகள் விரித்துப் பறக்கும் பருந்து/கருடன் போல் இருக்கும்!
மிகவும் ஒளி பொருந்திய நட்சத்திர மண்டலம்! பல மண்டலங்களைத் தன்னுள் அடக்கியதும் கூட!

பண்டைத் தமிழர்கள் தங்கள் தெய்வமான மாயோனுக்குரிய விழாவினை, ஓணத்தில் தான் கொண்டாடினர்!
இன்றும் திராவிடத் தோன்றல்களுள் ஒன்றான மலையாளத்திலும் ஓணம் அவர்களுக்கே உரித்தான பெரும் பண்டிகை!

பத்து நாட்கள் உள்ள ஓண விழா, அத்தத்தின் பத்தாம் நாள் என்னும்படிக்கு, அத்தம் என்ற விண்மீனில் துவங்கி, ஓணத்தில் நிறைவு பெறும்! பூக்கோலங்களும், ஆடல்-பாடல் துள்ளல்களும், யானைத் துள்ளல்களும், ஒளி விளக்குகளும், சுவை உணவுகளும் - எல்லாம் உண்டு!



பாடலுக்கு வருவோமா?

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம் பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப....5
...
...
...

(மறவர்கள் ஓண விழாவில் மகிழ்ந்து திரிதல்)

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நன்னாட்
...591

கோணந் தின்ற வடுவாழ் முகத்த
சாணந் தின்ற சமந்தாங்கு தடக்கை
மறங்கொள் சேரி மாறுபொரு செருவில்

(அவுணரைக் கடந்து வெற்றி கொண்ட மாயோன், பொன்மாலை அணிந்துள்ள அவன் தோன்றிய ஓண நன்னாளில்...ஊர் விழா எடுக்க,
வடுக்கள் உள்ள முகம் கொண்ட மறவர்கள், சேரியில் வீர விளையாட்டுகளில் ஈடுபட)


மாறா துற்ற வடுப்படு நெற்றிச்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம்பரல் உறுப்பக்

(வளைந்த பூக்கள் கொண்ட மாலைகள் தரித்து, மறக் கூட்டம், களிறு ஓட்டம் முதலியன செய்ய...யானைக்கு முன்னே ஓடிய வீரர்கள்....
வேகமாக ஓடும் யானையை அடக்க, நெருஞ்சி முள் போல் கொத்துள்ள கப்பணம் என்னும் கருவியை, காழகம் என்னும் நீல ஆடையில் சுற்றி, நிலத்தில் பரவ, கால் பொதுக்கி, யானைகள் ஒரே இடத்தில் நிற்கின்றன...

அப்படியே கேரள ஓணம் திருவிழாக் காட்சி போலவே இருக்கு-ல்ல?)


கணவர் உவப்பப் புதல்வர் பயந்து
பணைத்தேந் திளமுலை அமுதம் ஊறப்

புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு

வள மனை மகளிர் குளநீர் அயர
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி, 605

கணவருடனும், புதல்வர்களுடனும், சுற்றத்தோடும் குழுமி, செவ்வழிப் பண்ணில் பாடி, யாழ்-முழவு போன்ற இசைக் கருவிகள் வாசித்து...குரவைக் கூத்து ஆடி....

நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப

மயில் போல் ஒன்று திரண்டு, மகளிர் தேவராட்டியுடன் நின்று, தெய்வத்திற்கு மடை கொடுக்க...குலவை இட்டு, கை தொழுது, சாலினின் பெண்கள் அருள் வந்து ஆட...
....
....
இப்படி விழா இரவின் பல யாமங்கள் நீடிக்கிறது! சாலினி என்னும் அருள் வந்து ஆடலால், முருகனுக்கும் வேலன் வெறியாட்டு நடக்கிறது! இரவு முழுதும் விழா ஒலி பரவ.....மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் உறங்குகின்றான்!
....
....
(நிலம் தந்த பேர் உதவி,
பொலந் தார் மார்பின், நெடியோன் உம்பல்! )
தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும், சால்பும், செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி,

எல்லா நிலங்களையும் தன்னிடத்தே அளந்த திருவுடைய மாயோனைப் போல...
சிறப்புடன் தோன்றுவாயாக என்று பாண்டியனை வாழ்த்துகிறார்!
....
....




மாயோனுக்குரிய திரு ஓண நன்னாளைச் சுற்றத்தோடு கொண்டாடும் காட்சி காட்டப்படுகிறது!
பின்னாளில் இம்மரபையே ஆழ்வார்களும் சொல்லப் போந்தனர். திரு ஓணத்தான் உலகாளும் என்பார்களே என்பது பெரியாழ்வார் திருமொழி!

ஆவணி மாதத்தில் ஓணம் விண்மீனில் (Shravanam Star in Shravanam Month) வரும் இவ்விழா தான், பின்னால் வரும் மற்ற விழாக்களுக்கு எல்லாம் துவக்க விழா!
கேரளத்தில் இன்றும் வீடுகளில் சிறப்பாகக் கொண்டாடும் இந்த விழா, தமிழகத்தில் ஆலயங்கள் அளவில் மட்டும் நின்று விட்டது!

திருமாலின்/மாயோனின் தோற்றங்கள் பலவும் இந்தத் திருவோண/கருட/பருந்து விண்-மீன் நாளிலே தான் நிகழ்வதாகவே தொன்மங்களும் கதைகளும் பேசுகின்றன!

மாவலியின் பொருட்டும், உலகின் பொருட்டும் மூன்றடி மண் இரந்து பெற்ற இறைவன், இந்தத் திருவோண விண்மீனில் தான் தோன்றினான்! இதே விண்மீனில் தான் அத்தனை உலகையும் உயிரையும் அளந்தான்! திருவடிகளால் அத்தனை படைப்புகளும் தோய்க்கப் பெற்ற நாளும் இதுவே!

கீழுலகங்களுக்கு மட்டும் மாவலியைத் தலைவனாக்கி, அதிகாரப் பரவல் செய்து முடித்து, இருப்பினும் ஆசை தீராத மாவலிக்கு, அடியவன் என்பதால்...
அடுத்த சுழற்சியில், அமரர் தலைவன் பதவியும் அளித்து இன்புறச் செய்தான்! இன்றும் ஆண்டுக்கொரு முறை மாவலி, தன் பழைய நாட்டினையும் மக்களையும், இதே ஓணத்தன்றே பார்க்க வருவதாக நாட்டார் நம்பிக்கை! அதன் பொருட்டே மலையாள ஓணம்!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

பெரும்பாண் ஆற்றுப்படையில் பெருமாள்!

பெரும்பாண் ஆற்றுப்படை

ஆற்றுப்படை-ன்னா? ஆறுபடைவீடு-ன்னு சொல்றாங்களே, அதுவா?
இல்லை!
பண்டைக் காலத்தில் ஆர்க்குட், முகப் புத்தகமான ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இல்லை-ல்ல? எப்படி ஒத்த சிந்தனை, ஒத்த குழுவில் உள்ளவர்கள் சமூக இணைப்பாக்கம் (Social Networking) செய்ய முடியும்? தான் பெற்ற பயனை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வது எப்படி? = அதான் ஆற்றுப்படை! :)

வறுமை அல்லது வேறு காரணங்களுக்காக வாட்டமுற்று இருக்கும் சில கவிஞர்கள், பாணர்கள் (விறலியர், பாணர், கூத்தர், பொருநர்)! அவர்களுக்கு யாரிடம் போய் உதவி கேட்கலாம் என்றும் தெரியாது! கண்டவர்களிடம் கேட்டு விடவும் மாட்டார்கள்! தமிழ்த் தன்மானம்! இனிப்பான அந்தத் தூத்துக்குடி உப்பு உடம்பில் ஓடுதுல்ல? :)

தன்னைப் போல் தமிழார்வமுள்ள, மதிப்பு தெரிந்த மன்னவர்களிடம் மட்டுமே உதவி கேட்கத் தோனும்! ஆனால் எந்தெந்த மன்னன் எப்படி-ன்னு தெரிந்து கொள்ள, மன்னர்களின் Orkut, Facebook, Linkedin, Blog-க்கு எல்லாமா போய்ப் பார்க்க முடியும்? :)

ஆனால், அந்த மன்னனிடம் ஏற்கனவே அறிமுகமான கவிஞர்/பாணர், அவர்களைப் பற்றி ஓரளவு அறிந்திருப்பார்! அந்த மன்னனின் கல்வி மாண்பும், தமிழ்க் காதலும், அறத்துப் பால் உள்ள ஆர்வமும் அறிந்து வைத்திருப்பார்!
அவர், மற்ற கவிஞர்களை, அந்த மன்னனை நோக்கி ஆற்றுப்படுத்துவதே = ஆற்றுப்படை!

* ஆறு = வழி! உய்யும் "ஆறு" என்று எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்-ன்னு வரும்-ல்ல?
* ஆற்றுப்படை = வழி காட்டுவது!
* ஆற்றுப் படுத்துவது = அந்த வழியில் அவனைச் செல்விப்பது!

பண்டைக் காலத் தமிழ்க் கவிஞர்கள் பலரும், மன்னனை நோக்கியே ஆற்றுப்படுத்த...
நக்கீரர் தான் முதன்முதலில் இறைவனை நோக்கி ஆற்றுப்படுத்தினார்!

மன்னருக்கெல்லாம் மன்னன் முருகனை நோக்கி...
பாடல் நடுவே சும்மா இரண்டு வரிகள் மட்டும் முருகனைப் பற்றிச் சொல்லாது, முழுக்க முழுக்க முருகனைப் பேசும் நூல்! ஆன்மீகம் மட்டுமே பேசும் வலைப்பூ போல! எனவே அவரே முதல் ஆன்மிகப் பதிவர்! :)

தமிழில் சிறந்த ஆற்றுப்படைகள், பத்துப்பாட்டில் தான் உள்ளன! பத்துப்பாட்டில் உள்ள பத்து பாட்டில், நான்கும் ஆற்றுப்படைகளே!
1. திருமுருகாற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. பெரும்பாண் ஆற்றுப்படை
4. சிறுபாண் ஆற்றுப்படை

நாம் பெரும்பாணாற்றுப்படையைப் பார்ப்போம்!
அதில் தான் பண்டைத் தமிழர்களின் தெய்வமான திருமால் பற்றி பல அழகிய குறிப்புகள் வருகின்றன!
பேரியாழ் வாசிக்கும் பாணன் ஒருவன், இன்னொரு பாணனை ஆற்றுப்படுத்துகிறான்! யாரிடம்? = தொண்டைமான் இளந்திரையனிடம்!

வெறும் மன்னன் புகழ் பாடுவதா ஆற்றுப்படை? இல்லை!
கவிஞர்களின் வறுமைச் செல்வம், பாணர்களின் தமிழிசை, விறலிகளின் நாட்டியம், ஊருக்குப் போகும் வழிகள், நிலப்பரப்பு, மன்னனின் குடி வரலாறு என்னும் பல சேதிகளைச் சொல்வது ஆற்றுப்படை!
அதில் தமிழ்க் கடவுளாகிய திருமாலின் குணங்களையும் சொல்லி ஆற்றுப்படுத்துவதைப் பார்ப்போமா?


(திருமறு மார்பன், கடல்வண்ணன், பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்றெல்லாம் திருமால் பற்றிய குறிப்புக்கள்)

பாடியவர்: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன்: தொண்டைமான் இளந்திரையன்

திணை: பாடாண்திணை
துறை: ஆற்றுப்படை
பாவகை: ஆசிரியப்பா
மொத்த அடிகள்: 500

அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப். . . .1
பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற்
பாசிலை யழித்த பராஅரைப் பாதிரி
...
...
இருநிலங் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை யந்நீர்த்
. . . .30

திரைதரு மரபி னுரவோ னும்பல்
மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்
(உலகம் அளந்து, மார்பிலே திருமறு கொண்டு, கடல் வண்ணனான மாயோனின் வழியில்...தொல்மரபில் தோன்றிட்ட இளந்திரையன்)
...
...
காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப். . . .371
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்

(காந்தள் மலர் பூக்கும் மலையிலே; களிறு கிடந்தாற் போல், பாம்பு அணையிலே பள்ளி கொள்ளும் திருமால்...)

வெயினுழை பறியாக் குயினுழை பொதும்பர்க்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூக்
காரகற் கூவியர் பாகொடு பிடித்த
விழைசூழ் வட்டம் பால்கலந் தவைபோ
...
...
வடையா வாயின் மிளைசூழ் படப்பை
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ். . . .402
(நீல நிற உருவம் கொண்டோன், நெடியோன், அவன் கொப்பூழில் தோன்றிய தாமரையில்...)

நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமரைப் பொகுட்டிற் காண்வரத் தோன்றிச்
சுடும ணோங்கிய நெடுநகர் வரைப்பி
னிழுமென் புள்ளி னீண்டுகிளைத் தொழுதிக்

கொழுமென் சினைய கோளி யுள்ளும்
பழமீக் கூறும் பலாஅப் போலப்
புலவுக் கடலுடுத்த வானஞ் சூடிய
மலர்தலை யுலகத் துள்ளும் பலர்தொழ....410


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

பரிபாடலில் பெருமாள் என்னும் தமிழ்க் கடவுள்!

பரிபாடல்:

பரிபாடல் போல் இறைவனை "மட்டுமே" அதிகமாகப் பேசும் சங்க நூலைக் காண்பது அரிது! அப்போதே ஆன்மீகப் பதிவுகள்! :)
முருகனைப் பற்றியும், திருமாலைப் பற்றியுமான சங்கத் தமிழ்க் குறிப்புகள் தேடுவோர்க்குப் பரிபாடல் என்பது ஒரு களஞ்சியம்! அத்தனையும் இசைப் பாடல்கள்!

அகம், புறம் இரண்டும் சார்ந்தது! ஆனால் புறத் திணையே அதிகம்! இன்றைக்கு கிடைக்கும் 22 பாடல்களில்...
* வைகை/மதுரை மேல் 8 பாடல்கள்
* முருகன் மேல் 8 பாடல்கள்
* திருமால் மேல் 6 பாடல்கள்!

முருகன் பாடல்கள் அகம்/புறம் இரண்டிலும் வர,
திருமால் பாடல்கள் புறத் திணையில் வருகின்றன!

உடனே, சில எதுகை மோனை எகத்தாளர்கள், "பார்த்தீங்களா, முருகனை அகத்தில் வைத்து, திருமாலைப் புறத்தில் வச்சாங்க" என்று கூடப் பல்லிளிக்க வாய்ப்புண்டு! :) இப்படி எல்லாம் சிந்திக்க அவர்களால் மட்டுமே முடியும்! :)

புறம் = வீரம்! அகம் = காதல்!
புறம் என்றால் புறத்தே (வெளியே) வைத்தல் என்று எடுத்துக் கொள்வது பிழையானது! தமிழர்கள் வாழ்வில் அகமும் புறமும் இயைந்தே இருந்தன!
பரிபாடலில் முருகன் புறத்திலும் இருக்கிறான்!
"புற"நானூறு என்றால் "வெளியே தள்ளி வைச்ச நானூறு"-ன்னு சொல்ல முடியுமா? அய்யோ அய்யோ! :))

காதலன், தன் காதலை நிரூபிக்க யார் மேல் சத்தியம் செய்தான்? = திருமால் என்னும் தமிழ்க் கடவுள் மீது!
கலித் தொகைப் பாடல் 108-இல் பார்த்தோம் அல்லவா? ஆக, அகம்/புறம் என்று திருமாலும் இரண்டு திணைகளிலுமே வருகிறார் என்பது கண்கூடு! சிலருக்கு மட்டும் கண்"மூடு"! :)

திருமாலைப் பரிபாடலில் பாடிய புலவர்கள்:
1. இளம் பெருவழுதியார்
2. கடுவன் இளவெழிநியார்
3. கீரந்தையார்
4. நல்லேழினியார்
5. மற்ற புலவர்கள் - பெயர் கிடைக்கவில்லை!

திரு இருந்தையூர், திருமாலிருஞ்சோலை என்ற தலங்கள் பாடப் பாடுகின்றன!
இரண்டுமே மதுரைக்கு அருகில் உள்ளவையே!
* திருமாலிருஞ்சோலை = அழகர் கோயில்/பழமுதிர் சோலை
* ஆனால் திரு இருந்தையூர் தலம் இப்போது எங்குளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை!

"இருந்தையூர்" குறுங்கோழியார் என்னும் புலவர், இரண்டாம் சங்கத்தில் (இடைச் சங்கம்) இருந்தது பற்றிச் சொல்லப்படுகிறது! அடியார்க்கு நல்லார் உரையில் கூட இவர் வருகிறார்!
இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் துவரைக் கோமான் = கண்ணன் வீற்றிருந்த செய்தியும் சொல்லப்படுகிறது!

அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் உரைகள் இதை விரிவாகப் பேசுகின்றன!

"இருந்தையூர்" குறுங்கோழியாரின் ஊர்ப் பெயரில் இருந்து, "இருந்தையூர்" இருந்தது புலனாகிறது அல்லவா!
அங்குள்ள இறைவனைப் பாடும் பாடல்கள் பரிபாடலில் உள்ளன!
திருமால் வழிபாட்டில், நாகர் வழிபாடும் (ஆதிசேடனும் ) கூடவே காட்டப் படுகின்றது! இதோ...பரிபாடல்-கள்!



பரிபாடல் 3: "மறு பிறப்பறுக்கும் மாசில் சேவடி மாயோனே"!
செழுந்தமிழில் திருமால் தத்துவம் தொனிக்கும் நல்ல இசைப்பாட்டு!

இது ஒரு எசப்பாட்டு (இசைப்பாட்டு)!
எழுதியது ஒருவர்! இசை அமைத்தது இன்னொருவர்!

அப்பவே கண்ணதாசன்-எம்.எஸ்.வி, வாலி-இளையராஜா, வைரமுத்து-ரஹ்மான் ஸ்டைல் போல! :)

பெருமாளை, "மாஅயோயே, மாஅயோயே, மாயோனே" என்றெல்லாம் வாய் விட்டு அழைக்கிறார்!
"முன்னை மரபின் முதுமொழி முதல்வ "
என்கிறார்! அப்படியே "அரும்பெயர் மரபின் பெரும்பெயர் முருக!" என்பது போலவே இருக்கு-ல்ல? :)


பாடியவர்: கடுவன் இளவெயினனார்
இசை அமைத்தவர்: பெட்டனாகனார்
பண் (ராகம்): பாலையாழ்

மா அயோயே! மாஅயோயே!
மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
மணி திகழ் உருபின் மா அயோயே!


திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும், 5
திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம் 10

ஐம்பூதங்கள், கதிர்/மதி (சூரிய/சந்திரன்), அறம்/ஐந்தொழில், அசுரர்/அமரர், எண் திசைகள், பதினொரு ருத்திரர், மருத்துவ இருவர், கூற்றுவன், மூன்று*ஏழு உலகம், அதிலுள்ள உயிர்கள்....எல்லாம்....உன்னில் இருந்தே விரிந்தன!

மாயா வாய்மொழி உரைதர வலந்து:
‘வாய்மொழி ஓடை மலர்ந்த
தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
நீ‘ என பொழியுமால், அந்தணர் அரு மறை.
முனிவரும் தேவரும் பாடும் வகை

தாமரைச் செல்வன் பிரமனும் உன்னுள் இருந்தே தோன்றினான்! இவை அனைத்தும் மறையில் உள்ள தரவு!

‘ஏஎர், வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின், 15
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை; 20
தீ செங் கனலியும், கூற்றமும், ஞமனும்,
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்

பருந்துப் புள்ளினைக் கொடியில் உடைய சேவல் கொடியோனே! (சேவல்=பறவை)! உன் சேவடி தொழாதவரும் ஒருவர் உண்டா?

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய்‘ எனவும்,
‘மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் 25
சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய்‘ எனவும்,
ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
பாடும் வகையே: எம் பாடல்தாம் அப்
பாடுவார் பாடும் வகை. 30

ஊழிக் காலத்தில் பன்றியாய்த் தோன்றி உலகினை மீட்டு, அன்னமாய்த் தோன்றி பெருநீரைச் சிறகால் வறண்டு போகச் செய்தாய் என்றெல்லாம் பாடுகின்றார்கள்! நானும் உன் சீர்மையை எண்ணி வியக்கிறேன்!

வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின, கை;
நகை அச்சாக நல் அமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரூ கை,
இரூ கை மாஅல் ! 35

கேசி என்னும் கூந்தலானைச் சினந்தவனே! உன் கைகள் தான் எத்தனை எத்தனை பணிகளைச் செய்துள்ளது? இரு கை மால்! அதில் ஒரு கை மட்டும், அமிழ்தம் ஒரு சாராருக்கு மட்டுமே ஈந்து, நடுவுநிலை தவறியதோ என்னவோ? (அப்படித் தான் இப்போது நான் நினைக்கின்றேன்)

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்!
எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள!
பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்! 40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!
பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அதற்கு அப்புறம் உனக்குப் பல கைகள் இருப்பதைப் பலரும் காட்டியுள்ளனர்! 3,4,5,6,7,8,9,10,100,1000,10000, 100000 என்று விரிந்து கொண்டே போகிறது உன் ஆற்றல்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை! 45
நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,
முன்னை மரபின் முதுமொழி முதல்வ!

எம்பெருமானே! முன்னை மரபின் முதுமொழி முதல்வா!
வரம்பு அறியா யாக்கை (திருமேனி) கொண்ட உன்னை...வரம்புள்ள யாக்கை கொண்ட யாங்கள் அறிய ஏலுமோ? உன்னை நீ அல்லவா உணர முடியும்!

நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் 55

அன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;
அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்‘ என்னும்
வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?
ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட
சேவல் ஊர்தியும், ‘செங் கண் மாஅல்! 60
ஓ!‘ எனக் கிளக்கும் கால முதல்வனை;
ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்;

அமரர் அசுரர் இருவர்க்கும் முதல்வன் நீயே! அதனால் நண்பர்/பகைவர் என்ற பாகுபாடு உன் மரபுக்கு உண்டா என்ன?
ஆயிரம் படமுடைப் பாம்பும் கொண்டவன்! பருந்தும் ஊர்தியாய்க் கொண்டவன்!
இப்படி ஓ-வென்று விரியும் கால வெளியில், இரண்டு எதிர் எதிர் தத்துவங்களுக்கும் (Pair of Opposites) உடையவன் நீ! நன்கு அறிந்தேன்!

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

எம்பெருமானே!
தீக்குள் சூடு நீ! மலருக்குள் மணம் நீ!
அணியில் ஒளி நீ! சொல்லில் உண்மை நீ!

(தெரிய மாட்டாய், உணர மட்டுமே படுவாய்!
சொல்லில் பொய் இருப்பது அப்போது சொல்லப்படும் அந்தச் சொல்லுக்கு மட்டும் தானே தெரியும்! அதற்கு இது பொய் என்ற உண்மை தெரியும் அல்லவா?)

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ; 65
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின்,

எம்பெருமானே!
அறத்துக்குள் ஒளிந்திருக்கும் அன்பு நீ!
மறத்துக்குள் ஒளிந்திருக்கும் வீரம் நீ!
கதிர்-மதிகளும், அனைத்தும் நீயே! ஏன் என்றால் அனைத்தின் உட்பொருளாய் இருக்கின்றாய்!

(பின்னாளில் மாறன் என்னும் நம்-ஆழ்வார், இந்தச் சங்கத் தமிழ் மரபை ஒட்டியே, "உடல் மிசை உயிர் எனக் கரந்து எங்கும் மறைந்துளன்" என்று விதப்பொருமைத் தத்துவத்தை, பாசுரத்தில் வடித்துச் சென்றார்! )

உறையும் உறைவதும் இலையே; உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமார் அனையை; 70
முதல்முறை, இடைமுறை, கடைமுறை, தொழிலில்
பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே;

உனக்குத் தங்கும் இடமும் இல்லை! தங்குவதும் இல்லை! ஆனால் தங்குகிறாய்!
உனக்குப் பிறவியும் இல்லை! மறவியும் இல்லை!
(இருப்பினும் உலக நலனுக்காகப் பிறந்து வாழ்ந்து காட்டுகிறாய்)

உன்னைப் பிறப்பித்தாரும் இல்லை!
(பிறவா யாக்கைப் பெரியோன் என்று ஈசனைச் சொல்வோம்! அவருக்குப் பிறவா-ஆனால் யாக்கை!
பிறவா உயிர்மைப் பெரியோன் என்று உன்னைச் சொல்லலமா? பிறவா-உயிர்மை! நீ தான் யாக்கைக்கு எல்லாம் உயிராய், உடல் மிசை உயிர் என நின்றுள்ளாயே!)

பறவாப் பூவைப் பூவினோயே!
அருள் குடையாக, அறம் கோலாக,
இரு நிழல் படாமை மூ-ஏழ் உலகமும் 75
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை; 80

காயாம் பூ கருநீல வண்ணா, உன் அருளே குறை! அறமே செங்கோல்! அப்படி உலகை ஆளும் மன்னா, எம் வண்ணா!
0, 1/4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 என்று எண்களின் தத்துவத்தில் உன்னை வைத்துப் பேசுவார்கள்!
("ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்"....என்றும் "பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய்" என்றெல்லாம் ஆழ்வார் பின்னாளில் பேசியதும் ஈதே!)

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!
பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!
இடவல! குட அல! கோவல! காவல!
காணா மரப! நீயா நினைவ!
மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ! 85

பல வண்ணனே! இட-வலமாய் நின்று குரவைக் கூத்து, குடக் கூத்து ஆடுவோனே! கோவலா=இடைச் செல்வனே!

தொல் இயல் புலவ! நல் யாழ்ப் பாண!
மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!
பொலம் புரி ஆடை! வலம்புரி வண்ண
பருதி வலவ! பொரு திறல் மல்ல!
திருவின் கணவ! பொரு விறல் மள்ள! 90

நல்ல கவிஞனே! யாழ் இசை வாணனே! திருவின் காதல் கணவனே!

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து,
நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய
வாய்மொழி மகனொடு மலர்ந்த
தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே! 94

ஊழி வெள்ளத்தில் மீண்டும் தோன்றி, பிரமனுக்குத் திரு-வாய்மொழி மறை சொல்லி, உலகு படைத்தவனே!
உன் திருவாழிப்படையின் (சக்கரத்தின்) நிழலே, உலகுக்கு நல்ல நிழலாக அமைந்து காக்கட்டும்!

இது தான் பரிபாடல் காட்டும் திருமால்-தத்துவம்!
எவ்ளோ பெரிய பாட்டு-ல்ல? :)
அவ்ளோ தான் முடிஞ்சிரிச்சி-ன்னு நினைச்சிறாதீங்க! :) "இரண்டொரு பாடல் மட்டுமே திருமாலுக்கு"-ன்னு சொன்னாங்க-ல்ல? பரி பாடலில் கொட்டோ கொட்டோ-ன்னு கொட்டிக் கிடக்கு! இன்னும் வரும்! :))



பரிபாடல் 1: திருமாலே, "ஆர்வத்தால்" உனை என்னென்னவோ பேசுகின்றோம்!
சிறு பேர் அழைத்தாலும் சீறி அருளாதே!


இந்தப் பரிபாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை! ஆனாலும் பல செறிவான கருத்துக்கள் உள்ளன! இந்தப் சங்கத் தமிழ்ப் பாடலை ஒட்டி, நம்மாழ்வாரும் ஆண்டாளும் கூடத் தத்தம் கவிதைகளை அமைக்கின்றனர்!

ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாயுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனிச்
சேய் உயர் பனைமிசை எழில் வேழம் ஏந்திய,
வாய் வாங்கும் வளை நாஞ்சில், ஒரு குழை ஒருவனை; 5

(ஆயிரம் தலை கொண்ட பாம்பு, தீ உமிழ்ந்து, உன் திருமுடி மேல் விரித்து நிற்க...
மார்பிலோ திருவானவள் திகழ...
வெண்சங்கு மேனியும், பனைக் கொடி ஏந்தியும், கூர் கொண்ட கலப்பை ஏந்தியும், ஒரு குழை மட்டும் அணிந்த வாலியோனாகவும் (பலராமன்) , நீயே இருக்கின்றாய்!
...
...
சேவல் அம் கொடியோய்! நின் வல வயின் நிறுத்தும்
ஏவல் உழந்தமை கூறும்,
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே.

(சேவல் அம் கொடியானே-ன்னு எதுக்குத் திருமாலைக் கூப்பிடுகிறார் என்று குழம்பக் கூடாது! சேவல்=பறவை! பருந்துப் பறவையைக் கொடியில் கொண்ட மாயோனே! நா வல்ல மறைகளை அறவோராகிய அந்தணர் ஓதுகிறார்களே! அந்த மறைக்குப் பொருளே நீ தான்! )

(சந்த ஓசை மிக்க வரிகள்...முழுதுமாய்க் கிடைக்கவில்லை)
இணை பிரி அணி துணி பணி எரி புரை விடர்
இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் 15

நெரி திர டெரி புரை தன மிகு தன முரண் மிகு
கடறரு மணியடும் முத்து யாத்த நேர் அணி
நெறி செறி வெறி உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின்
...
...
(வணங்குதல் அல்லது வாழ்த்துதல் அரிது)
தெருள நின் வரவு அறிதல்
மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே:
அன்ன மரபின் அனையோய்! நின்னை
இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது? 35

(நீ எப்படி வருவாய் என்று அறிவது, நன்கு படித்த முனைவர்க்கும் அரிது! அப்படிப்பட்ட உன்னைப் போய், இன்னான்...இப்படி என்று என்னால் கூற முடியுமோ?)

(சிறு பேர் அழைத்தனவும்...சீறி அருளாதே)
அருமை நற்கு அறியினும், ஆர்வம் நின்வயின்

பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
மெல்லிய எனாஅ வெறாஅது, அல்லி அம்
திரு மறு மார்ப! நீ அருளல் வேண்டும்.

(உன் அருமை அறிய மாட்டோம்! ஆனால் உன் பேரில் மிகுந்த ஆர்வம்!
அதனால் இங்கு பாடும் பாட்டெல்லாம், மிகுந்த மெலிதாக இருக்கிறதே என்று எண்ணாது....
அல்லிமலர் மங்கை மார்பா! நீ சீறாது அருள வேண்டும்!

இந்தப் பரிபாடலை ஆண்டாள் படித்திருப்பாள் போல! அதான் திருப்பாவையில்...
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே - என்றே பாடுகிறாள்!)

அடுத்து, பல திருமால் தத்துவங்களைப் பாட்டில் காட்டுகிறார் புலவர்...
உலக இயக்கமும், உடன்மறை-எதிர்மறைகளும்-Pair of Opposites, எல்லாமும் நீயே என்று காட்டுகிறார்!

அறனும், ஆர்வலர்க்கு அளியும், நீ;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் சிறப்பின்
மறனும், மாற்றலர்க்கு அணங்கும், நீ;
அம் கண் ஏர் வானத்து அணி நிலாத் திகழ்தரும்
திங்களும், தெறு கதிர்க் கனலியும், நீ; 45

(ஐந்தலைச் சிவபிரானும் நீ! ஆகாசம் முதலான பூதங்களும் நீ, காட்சி-மாட்சியும் நீயே)
ஐந் தலை உயிரிய அணங்குடை அருந் திறல்

மைந்துடை ஒருவனும், மடங்கலும், நீ;
நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப்
புலமும், பூவனும், நாற்றமும், நீ;
வலன் உயர் எழிலியும், மாக விசும்பும், 50
நிலனும், நீடிய இமயமும், நீ.

(பரிபாடல் சங்கத் தமிழ்க் கருத்தையே, மாறன் என்னும் நம்மாழ்வாரும், பின்னாளில் அழகாகக் காட்டுகிறார்...
சிவ பிரானும் நீயே என்று திருமாலை வியக்கிறார்! -
அரன் அயன் என உலகு அழித்து அமைத்து உளனே"

ஆழ்வார்கள் வடமொழியை அதிகம் சாராமல், சங்கத் தமிழ் மரபினையே, தங்கள் பாசுரங்களில் பெரிதும் பேணி வளர்த்தனர்! நம்மாழ்வார் வரிகளைப் பாருங்கள்! இந்தப் பரிபாடல் கருத்து போலவே இருக்கும்!

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ண னேறக் கொலோ?

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும்
காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும்,
காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ?

(இப்படி , உன்னை இன்னாரைப் போல் என்று என்னால் முழுமையாகச் சொல்ல முடியவில்லை! ஏனென்றால் நீ ஒப்பாரும்-மிக்காரும் இல்லாதவன்! ஒப்பில்லா அப்பன்! சக்கரப் படையை வலத்தில் ஏந்திய "முதல்வன்")


அதனால்,
‘இன்னோர் அனையை; இனையையால்‘ என,
அன்னோர் யாம் இவண் காணாமையின்,
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய 55
மன்னுயிர் முதல்வனை ஆதலின்,

நின்னோர் அனையை, நின் புகழோடும் பொலிந்தே!
நின் ஒக்கும் புகழ் நிழல் அவை;
பொன் ஒக்கும் உடை அவை;
புள்ளின் கொடி அவை; புரி வளையின் அவை; 60

எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை;
மண்ணுறு மணி பாய் உருவினவை;
எண் இறந்த புகழவை; எழில் மார்பினவை,
ஆங்கு,

காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக! என,
ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும்-
வாய்மொழிப் புலவ! நின் தாள்-நிழல் தொழுதே; 68

(உன் மேல் காமம் கொள்ளும் அன்பர்களோடு....ஒரூங்கிருந்து
உன் திருவடி தொழும் இன்பமே எமக்கு இன்பம்!
ஏமுறு நெஞ்சத்தோம் நாங்கள்! பொலிக பொலிக!)



பரிபாடல் (திரட்டு): திருமால்-நாகர் வழிபாடு (கிராமிய மக்கள், பாம்புகளை ஆலயத்தில்-மரத்தின் கீழ் வைத்து வழிபடும் வழக்கம்)
(இது பரிபாடல் திரட்டு; நச்சினார்க்கினியர் உரையில் இருந்து திரட்டிய பரிபாடல்கள்...)


வான் ஆர் எழிலி மழை வளம் நந்த,
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான் மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் .. . .5
திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது


(மலையில் மேகங்கள் பொழிய, அந்த நீர், நான்மாடக் கூடலில் உள்ள மக்கள் எதிர்கொள்ள, அந்தத் துறையில் உள்ள இருந்தையூர் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள செல்வத் திருமாலே! உன் திருவடியைத் தொழுது வாழ்த்துகின்றோம்)
...
...
(திரு இருந்தையூரின் வளமும் நலமும், மக்களும்)
...
...
(மாயோன்-நாகர் கோயிலில் மைந்தரும் மகளிரும் பரத்தையரும் வழிபடுதல்)

வாய் இருள் பனிச்சை வாள் சிலைப் புருவத்து
ஒளி இழை ஒதுங்கிய ஒண் நுதலோரும்,
புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்,
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும்,
விடையோடு இகலிய விறல் நடையோரும் . .. . . 40
...
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, ...45
...
...
சூடா நறவொடு காமம் விரும்ப,
இனைய பிறவும், இவை போல்வனவும்,
அனையவை எல்லாம் இயையும்-புனை இழைப்
பூ முடி நாகர் நகர்.

...
...
(பாற்கடல் கடைந்த போது, நாகத்தின் தொண்டு, முப்புரம் எரித்து போழ்து ஆதிசேடனின் பங்கு - இவையும் நினைவுகூரப்படுகிறது!
பாற்கடலில் மத்துக்குக் கயிறு போல இருபுறமும் வாங்கி இழுத்தாலும், அதன் வலியைப் பொறுத்து, பொது நன்மைக்கு அணிகலனாய் நின்றதுவும்...
முப்புரிம் எரித்த காலை, ஈசனின் வில்லுக்கு நாணாய் நின்றதுவும் பேசப்பட்டு, வாழ்த்தப்படுகிறது)

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால், வெற்புத்
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, ...65

மகர மறி கடல் வைத்து நிறுத்துப்
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும்
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி,
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க,
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் ...70

அறாஅது அணிந்தாரும் தாம்;
மிகாஅ மறலிய மே வலி எல்லாம்
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்;
மணி புரை மாமலை ஞாறிய ஞாலம்
அணிபோல் பொறுத்தாரும் தாஅம்; பணிபு இல் சீர்ச் .....75

செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக்
கல் உயர் வென்னி இமய வில் நாண் ஆகித்
தொல் புகழ் தந்தாரும் தாம்
...
...
(நாகர்-ஆதிசேடனின் சிறப்புக்களைப் போற்றுதல்)

அணங்குடை அருந் தலை ஆயிரம் விரித்த
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி,
நல் அடி ஏத்தி நிற் பரவுதும்-
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. ...82


(ஆயிரம் தலைகளைப் பரப்பி, சுற்றத்து அடியவர் கணங்களுடன் இருக்கும் ஆதிசேடனை வணங்கி...திருமாலே, உன் திருவடி பணிகிறோம்!
எதற்குத் தெரியுமா? நாங்கள் எல்லோரும், இதே போல், அடியார்களுடன் நின்னடியைப் பிரியாமல் இருப்பதற்கே!)


பரிபாடல் 2: திருமாலின் ஊழிப் பெரு வெள்ளம்

அடுத்த பாட்டைப் பார்ப்போமா? அதுவும் ஒரு எசப்பாட்டு (இசைப்பாட்டு)! எழுதியது ஒருவர்! இசை அமைத்தது ஒருவர்!
படைப்பு, உயிர்கள் தோற்றம், மறைவு, ஊழி-ன்னு பலவும் பேசுகிறது!

பாடியவர்: கீரந்தையார்
இசை அமைத்தவர்: நன்னாகனார்
பண் (ராகம்): பாலையாழ்

தொல் முறை இயற்கையின் மதிய
... ..... ... மரபிற்று ஆக,
பசும் பொன்னுலகமும் மண்ணும் பாழ்பட,
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி, 5

பெரும் ஊழியால் மண்ணும் விண்ணும் எல்லாம் பாழ்பட....அனைத்தும் ஒடுங்கிய பின்...

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு, 10

ஒடுக்கத்தில் இருந்து வான்(வெளி) தோன்ற, பின்பு அதிலிருந்து காற்றும், அதில் உயிர்ப்பு பெற்று தீயும், அது குளிர்வித்து நீரும், அதிலிருந்து நிலமும்...

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்;
நெய்தலும், குவளையும், ஆம்பலும், சங்கமும்,
மை இல் கமலமும், வெள்ளமும், நுதலிய
செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை- 15

கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின், முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா;
ஆழி முதல்வ! நிற் பேணுதும், தொழுதும்

உலகைக் காக்க கேழல் என்னும் பன்றியாகவும் ஆகி, நீருக்குள் புகுந்து நிலத்தை நிறுத்தினாய்! நிலத்தில் உயிர்கள் தோன்றின! உன் ஊழித் திறத்தை யார் அறிவார்? ஆழி முதல்வா, உன்னைத் தொழுகிறோம்!

திருமாலின் நிலைகள்

நீயே, ‘வளையடி புரையும் வாலியோற்கு அவன் 20
இளையன்‘ என்போர்க்கு இளையை ஆதாம்,
‘புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு
முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும்,
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும், 25

இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச்சிறப்பே.

உன்னை இளையன் என்று சொன்னால் பலதேவர்க்கும் இளையன் ஆகி விடுகிறாய்! முதியன் என்று சொன்னால், மூவா ஊழி முதல்வன் ஆகி விடுகிறாய்! இளையன்-முதியன் என்று அநாதி நாதனாய், உயிர்களுக்குள் உயிராய் நிற்கின்றாய்!

திருமாலின் சிறப்பு

ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும்
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில
நித்தில மதாணி அத்தகு மதி மறுச் 30

செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம்-
வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண்
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு
‘புள்ளி நிலனும் புரைபடல் அரிது‘ என
உள்ளுநர் உரைப்போர் உரையடு சிறந்தன்று. 35

மண்மகளைப் பாசி தூர்த்து மணந்தாய் என்பர் சிலர்! ஆனால் அவர்கள் தத்துவம் அறியாதவர்கள்! திருமகள் தான் உன் மார்பில் முன்பிருந்தே இருக்கிறாளே! இது வெறும் ஊழியின் பொருட்டு செய்த செயல் அல்லவா! உங்கள் சேர்த்தி தான் என்றுமுள ஒன்றாயிற்றே!

படைச் சிறப்பு

ஒடியா உள்ளமொடு உருத்து, ஒருங்கு உடன் இயைந்து,
இடி எதிர் கழறும்-கால் உறழ்பு எழுந்தவர்
கொடி அறுபு இறுபு, செவி செவிடு படுபு,
முடிகள் அதிர, படிநிலை தளர,
நனி முரல் வளை முடி அழிபு, இழிபு, 40

தலை இறுபு தாரொடு புரள-
நிலை தொலைபு, வேர், தூர், மடல்,
குருகு, பறியா நீள் இரும் பனைமிசைப்
பல பதினாயிரம் குலை தரை உதிர்வபோல்-
நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி, 45

ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
அளறு சொரிபு, நிலம் சோர,
சேரார் இன் உயிர் செகுக்கும்-
போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே:
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே; 50
பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.

உன் ஆழிப்படையாகிய சக்கரம், மாற்றார் வலியை அக்குவேறு ஆணிவேறாய்த் தொலைக்கும்! பனங்காய்கள் சிதறுவது போல் சிதறடிக்கும்! பார்ப்பதற்கு கூற்றத்தை ஒக்கும்! நிறமோ, பொன்னையே சுடவல்ல தீக்கொழுந்தை ஒக்கும்!

திருமால் திருமேனியின் ஒளி முதலிய சிறப்புக்கள்

நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
கண்ணே, புகழ்சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும், 55

சாயல் நினது, வான் நிறை-என்னும்
நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே:
அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
எவ் வயினோயும் நீயே.

உடலோ = நீலமணி, கண்ணோ = தாமரை, வாய் = தவறாது வரும் நாள், பொறுமை = நிலம், அருளோ = மேகம் என்று மறைகள் கூறும்!

உருவமும், உணவும், வெளிப்பாடும்
செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே! 60

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,
நின் உருபுடன் உண்டி; 65

பிறர் உடம்படுவாரா
நின்னொடு புரைய
அந்தணர் காணும் வரவு.

பல் புகழும் பரவலும்

வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
மூவா மரபும் ஓவா நோன்மையும் 70

சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
... ... ... மரபினோய் நின் அடி
தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்-
‘கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!‘ எனவே. 76

அமுதம் ஈந்து சாவா மரபில் செழிக்க வைப்பவா, உன்னைப் பலவாறு துதித்தோம்! வாழ்க! எங்கள் அறிவு, மாயையில் சிக்காது, மெய்யுணர்வே பெற அருள்வாயாக!



பரிபாடல் 4: போற்றினாலும் போற்றாவிட்டாலும் யாவர்க்கும் காப்பு - பெருமாள்!

பாடியவர்: கடுவன் இளவெயினனார்
இசையமைத்தவர்: பெட்டனாகனார்
பண்: பாலையாழ்

ஐந்து இருள் அற நீக்கி, நான்கினுள் துடைத்துத் தம்
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி,
நின் புகழ் விரித்தனர்; கிளக்குங்கால், அவை நினக்கு
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம், ஆயினும்,
நகுதலும் தகுதி, ஈங்கு ஊங்கு நிற் கிளப்ப; 5

ஐம்புலன்களால் உருவாகும் அக இருள் நீக்கும் திருமாலே! உன்னை ஆர்வலர் பலவாறு பேசித் தொழுகின்றனர்; அப்பேச்சு பிதற்றலாக இருப்பின் அது கண்டு நீ சிரிக்கக் கூடும்! ஆனால் அச்சிரிப்பும் எமக்கு உவப்பே! அதற்கெல்லாம் நாங்கள் வெட்கப்பட மாட்டோம்! உன்னைத் தொடர்ந்து ஏத்துவோம்!

திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;
மாஅ மெய்யடு முரணிய உடுக்கையை;
நோனார் உயிரொடு முரணிய நேமியை;

கதல் போன்ற கருத்த மேனி! அதற்குச் சற்றும் ஒட்டாத பொன்னிற ஆடை! திருவாழி என்னும் சக்கரம் தரித்து விளங்குகிறாய்!

செயிர் தீர் செங் கட் செல்வ! நிற் புகழ- 10
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணி பட
வலந்துழி,
மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா 15

பெருகலாதன் (பிரகலாதன் - பிருங்கலாதன்) என்னும் பிள்ளை-அன்பன்!
அவன் உன்னை நெஞ்சில் புதைத்து வைத்திருந்தான்!
அதைப் பொறுக்க மாட்டாது, புகை சூழ்ந்த நெஞ்சம் கொண்டு, அன்பனைப் பல துன்பங்களுக்கு ஆளாக்க,
அவன் கூம்பி நடுங்கினும், தந்தை என்பதால், தன்னை இகழ்ந்தாலும் தான் இகழாது நின்றான்! அதனால் நீயும் இகழாமல் வந்தாய்!

நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு, 20
தடி தடி பல பட-வகிர் வாய்த்த உகிரினை;

தூணில் புடைப்ப, அப்போதும் மனம் மாறாது , ஒன்றாமல், பகையே விரும்பினான் அவன் தந்தை!
அவன் மார்பு மோதி, கூர் நகம் நட்டு, இடி போல் இயம்பி, அவனைக் கூறாக்கினாய்!

புருவத்துக் கரு வல் கந்தத்தால்
தாங்கி, இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண்
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்;

உலகு உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்
நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள; 25
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள; 30
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்த்த நிற் பிரிந்து,
மேவல் சான்றன, எல்லாம். 35

சேவல் ஓங்கு உயர் கொடி
நின் ஒன்று உயர் கொடி பனை;
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில்;
நின் ஒன்று உயர் கொடி யானை; 40

கருடச் சேவல் கொடியும் உனதே! பனைக் கொடி, கலப்பைக் கொடி, யானைக் கொடி என்று பல கொடிகள் உனக்கு, ஆயினும் கருடச் சேவல் கொடியே சிறப்பு!

நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று;
விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்;
அவன் மடிமேல் வலந்தது பாம்பு;
பாம்பு தொடி; பாம்பு முடி மேலன;
பாம்பு பூண்; பாம்பு தலைமேலது; 45
பாம்பு படி மதம் சாய்த்தோய்! பசும் பூணவை
கொடிமேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு;

அந்தக் கருடக் கொடியில் அரவமும் உண்டு! கருடனும் பாம்பும் பகையே என்றாலும், கருடனின் இடையில் பாம்பு! தலையணி, தொடி, பூண் என்று அவனை அலங்கரிப்பதும் அரவமே!
இப்படி வேறு வேறான இரண்டும் உன்னிடம் ஒன்றுகின்றன!

கடு நவை அணங்கும் கடுப்பும், நல்கலும்,
கொடுமையும் செம்மையும், வெம்மையும் தண்மையும் 50
உள்வழி உடையை; இல்வழி இலையே;
போற்றார் உயிரினும், போற்றுநர் உயிரினும்,
மாற்று ஏமாற்றல் இலையே; ‘நினக்கு
மாற்றோரும் இலர்; கேளிரும் இலர்‘ எனும்
வேற்றுமை இன்று, அது போற்றுநர்ப் பெறினே: 55
மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே;

நீ, உனக்கென்று ஒரு குணம் இல்லை! உன்னை எப்படிப் பார்க்கின்றார்களோ, அப்படியே நீ தெரிகிறாய்! (கண்ணாடி போல)
வெம்மைக்கு வெம்மையாய், தண்மைக்கு தண்மையாய்!
போற்றினாலும், போற்றா விட்டாலும், இருவர் உயிரிலும் மறைந்துறைவது நீ தான்! உனக்கென்று உறவும் இல்லை! பகையும் இல்லை! அவரவர் நினைப்பே வடிவாய் உடையாய்! உனக்கென்று என ஓர் வடிவும் இலையே!

கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி,

நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை;
பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப!
நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை 60

அன்ன நாட்டத்து அளப்பரியவை;
நின்னின் சிறந்த நின் தாள் இணையவை;
நின்னில் சிறந்த நிறை கடவுளவை;
அன்னோர் அல்லா வேறும் உள; அவை
நின் ஓர் அன்ஓர் அந்தணர் அருமறை. 65

உன்னை விட உன் திருவடிகள் சிறந்தவை!
உன்னை விட ஒரு கடவுளைக் காட்ட வேண்டுமென்றால், அது உன் திருவடிகளே!

அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர் 70

ஆலமர் செல்வனும் நீ, கடம்பணி மைந்தனும் நீ!
பல பெயர் கொண்டு விளங்குகிறாய்!

தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே;
அவரவர் ஏவலாளனும் நீயே;
அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே. 73

உன் அன்பர்களின் ஏவலாளனும் நீயே! காவலாளனும் நீயே!
அவர்கள் தொழுத கையில் உள்ள அமைதியில் உள்ளவனே! நீ வாழ்க!!


பரிபாடல் 13: திருமாலிடம் அன்பு செய்வார் பெறும் பேறு!

பாடியவர்: நல்லெழுதியார்
இசையமைத்தவர்: பெயர் அறியப்படவில்லை
பண்: நோதிறம்

மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று
அணி வனப்பு அமைந்த பூந் துகில், புனை முடி,
இறு வரை இழிதரும் பொன் மணி அருவியின்
நிறனொடு மாறும் தார், புள்ளுப் பொறி புனை கொடி,
விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் 5

ஞாயிறு போல் உடை, பூ முடி, அருவி போல் தொங்கும் மாலை, புள் கொடி

தண் அளி கொண்ட அணங்குடை நேமி மால்!
பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த
இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல,
நேமியும் வளையும் ஏந்திய கையாந்--
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண், 10

சங்கு சக்கரங்கள் (வளை-நேமி)

அருவி உருவின் ஆரமொடு, அணிந்த நின்
திரு வரை அகலம் --தொழுவோர்க்கு
உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து.

திருமார்பு, அதோடு உன்னைத் தொழுவார்க்கு, வீடுபேறு என்பது வேண்டுதல் அல்ல! உரிமையாகவே ஆகி விடும்!

சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்! 15
அவைஅவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே; 20

நான்கின் உணரும் நீரும் நீயே;
அதனால், நின் மருங்கின்று--மூ-ஏழ் உலகமும்,

ஐம்புலன்கள் - அதை உணர்த்த வல்ல ஐம்பொறிகள் - அது தோன்றும் ஐம்பூதங்கள் என்று எல்லாமும் நீயே! உன் முதற்றே உலகு!

மூலமும், அறனும், முதன்மையின் இகந்த
காலமும், விசும்பும், காற்றொடு கனலும் 25

தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண்,
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த
கவை நா அருந் தலைக் காண்பின் சேக்கைத்
துளவம் சூடிய அறிதுயிலோனும்--
மறம் மிகு மலி ஒலி மாறு அடி தானையால், 30

திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்,
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்--
நானிலம் துளக்கு அற முழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணி மணி மடற் பேர் அணி 35

இலங்கு ஒளி மருப்பின் களிறும் -- ஆகி,
மூஉரு ஆகிய தலைபிரி ஒருவனை!

துளவம் சூடிய அறி துயில், பகைவர் மனதையும் உழ வல்ல கலப்பை, நிலத்தை நீரில் இருந்து மீட்டமை, முத்தொழில் செய்யும் அயன்-அரன்-அரியும் நீயே!

படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக்
கொடியெனக் கொண்ட கோடாச் செல்வனை;
ஏவல் இன் முது மொழி கூறும், 40

சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ! நல் புகழவை;
கார், மலர்ப் பூவை, கடலை, இருள், மணி,
அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை;
வலம்புரி, வாய்பொழி, அதிர்பு வான், முழக்குச் செல்,
அவை நான்கும் உறழும்--அருள், செறல், வயின் மொழி; 45

முடிந்ததும், முடிவதும், முகிழ்ப்பதும், அவை மூன்றும்
கடந்து, அவை அமைந்த கழலின் நிழலவை;
இருமை வினையும் இல, ஏத்துமவை;
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை;
அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை-- 50

முக்காலமும் கடந்த உன் திருவடிகள்!
அதைப் பிடித்தார்க்கு ஒரு வினையும் இல!

அடியும், கையும், கண்ணும், வாயும்;
தொடியும், உந்தியும், தோள் அணி வலயமும்,
தாளும், தோளும், எருத்தொடு, பெரியை;
மார்பும், அல்குலும், மனத்தொடு, பரியை;
கேள்வியும், அறிவும், அறத்தொடு, நுண்ணியை; 55

வேள்வியும், மறனும், விருப்பொடு வெய்யை;
அறாஅ மைந்தின், செறாஅச் செங்கண்,
செரு மிகு திகிரிச் செல்வ! வெல் போர்
எரி நகை இடை இடுபு இழைத்த நறுந் தார்ப்
புரி மலர்த் துழா அய் மேவல் மார்பினோய்!-- 60

அன்னை எனநினைஇ, நின் அடி தொழுதனெம்;
பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம்--
முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால்;
இன்னும் இன்னும் எம் காமம் இதுவே! 64

பிறவிப் பெறும் தனை புண்ணியம் யாம் உடையோம்!
உன்னை இறைஞ்சி உனக்கென்று இருப்பதே எங்களுக்குக் காமம்!
திகிரிச் செல்வா! இன்னும் இன்னும் எம் காமம் இதுவே!

(அப்படியே மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் என்னும் திருப்பாவை போலவே இருக்கு-ல்ல? கோதை, சங்கத் தமிழை எல்லாம் படித்துத் தான், அப்படி உருகி உருகிக் காதலித்து இருப்பாளோ? சங்கத் தமிழ்ப் பாணியிலேயே, தன் பின்னாளைய கவிதையை அமைக்கின்றாளோ? சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே என்று சொன்னது, இதனால் தானோ?)



பரிபாடல் 15: மதுரை - திருமாலிருஞ்சோலை (அழகர் கோயிலின் சிறப்பு)

பாடியவர்: இளம்பெருவழுதியார்
இசையமைத்தவர்: மருத்துவன் நல்லச்சுதனார்
பண்: நோதிறம்

புல வரை அறியாப் புகழொடு பொலிந்து,
நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத்
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும்
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம்
பல; எனின், ஆங்கு-அவை பலவே: பலவினும், 5

நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன்
நின்று பெற நிகழும் குன்று--அவை சிலவே:
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும்
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய
குல வரை சிலவே: குல வரை சிலவினும் 10

சிறந்தது--கல் அறை கடாம் கானலும் போலவும்,
புல்லிய சொல்லும் பொருளும் போலவும்,
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த்
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்.

புலவர்கள் பல மலைகளை ஆய்ந்து சொல்லி இருக்கிறார்கள்! ஆனால் பசியாற்றும் பசுமலைகள் வெகு சிலவே! அதிலும் தெய்வம் உறை மலைகள் வெகு வெகு சிலவே! அதிலும் மாயோனாகிய பெருமாளையும், வாலியானோகிய நம்பி மூத்த பிரானையும் ஒரு சேரத் தாங்கும் மலை = திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலை!

நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை 15
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்?
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப.

பலர் பலதையும் அருள இயலும்! ஆனால் வீடுபேறு?
நாற்றத் துழாய் முடி திருமால்! அவனே நல்க முடியும்!
அவன் நல்காது, வீடு பேறு ஏறுதல் எளிதோ?
அரிதாகப் பெறும் வீடுபேற்றினை, எளிதாகப் பெறச் செய்வது மாலிருங்குன்றம்!

அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின்
மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி, 20
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்--

அம்மலையில் சிலம்பாறு பாய்கிறது!
இது வாலியோன் மார்பில் உள்ள வெண்கடம்ப மாலை போல் மெல்லிதாய் ஓடுகிறது!
சோலையொடு திகழும் மாலிருங்குன்றம்!

நாமத் தன்மை நன்கனம் படி எழ, 25
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து,
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென,
பொன் புனை உடுக்கையோன் புணஎந்து அமர் நிலையே
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்!

சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் 30
சினையெலாம் செயலை மலர, காய் கனி
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர,
மாயோன் ஒத்த இன் நிலைத்தே.

இம்மலை மாயோனின் திருவுருவமே ஒத்ததாகும்!
சுனைகளில் நீலமலர், வேங்கை மலர் என இரண்டுமே திகழும்! தலைவியும் தலைவனும் காமம் விதைத்து விளைக்கும் யாமம் உடைய மலை! இருளும் இளவெயிலும் ஒருங்கே திகழும் மலை! அதன் சீர் கேளுங்கள்! நினையுங்கள்!

சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே--
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே 35
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள்.

சென்று தொழ முடியவில்லையா? இங்கிருந்தே கண்டு கொண்டாவது பணியுங்கள்!
ஏனென்றால் அது தொல் புகழ் உடைய கடவுள் மலை! காம மயக்கம் நீக்கும் காமக் கடவுள் மலை! (மற்றை நம் காமங்கள் மாற்றி, மயர்வில்லாக் காமங்கள் ஏற்றும் காமக் கடவுள்-விரும்பும் கடவுள்-மாயோன்)

மக முயங்கு மந்தி வரைவரை பாய,
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட,
மணி மருள் நல் நீர்ச் சினை மடமயில் அகவ, 40
குருகு இலை உதிர, குயிலினம் கூவ,

அந்த மலையில் குட்டிக் குரங்கு பெண் குரங்கை மடியைக் கட்டிக் கொள்ள, அப்படியே மலையில் தாவும்!
மருளும் மயில்கள் - நல்நீர்ச் சினை மயில்கள் அகவ, குருக்கத்தி இலைகள் உதிர, குயில்கள் கூவி மகிழும்!

பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன,
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது--ஒன்னார்க்
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. 45

குழலோசை தவழ, பாண்டில் இயம்ப, நா நவிலும் பாடல்கள் பாட, முழவு மத்தளம் கொட்ட, சிலம்பு இசை ஒலிக்க....இத்தனை ஒலிகளின் எதிரொலியால்...ஒலி என்றுமே நீங்காத குன்று!

குன்றத்தானைச் சுற்றம் புடை சூழப் போற்றுமின்
தையலவரொடும், தந்தாரவரொடும்,
கைம் மகவோடும், காதலவரொடும்,
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின்--
புவ்வத் தாமரை புரையும் கண்ணன்,
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், 50

அந்தக் குன்றத்தானை = மாலிருஞ் சோலை நம்பியை = அழகனைப் போற்றுங்கள்!
பெண்களோடும், குரவர்களோடும், கைக் குழந்தைகளோடும், காதலர்களோடும்...இப்படி அனைவருமே கண்ணன் எனும் கருந் தெய்வம் பேணுகின்றனர்!

எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின்
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன்
அன்பு-அது மேஎய் இருங்குன்றத்தான்.

துன்பம் களைவான்-அன்பே உருவாய் நின்றான்! மாலிருங் குன்றத்தான்!

கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை;
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; 55
புள் அணி பொலங் கொடியவை;
வள் அணி வளை நாஞ்சிலவை,
சலம் புரி தண்டு ஏந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரி சிலை வய அம்பினவை; 60
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை;
என ஆங்கு-

பசும் துளவம், ஒளிரும் மேனி, ஒற்றைக் குழை, கருடக் கொடி, கலப்பை உடையவன்!
அங்கையில் ஐந்து ஆயுதம் ஏந்தி உள்ளான்! - சங்கு, நேமி, தண்டு, வில், வாள்

நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை,
‘இருங்குன்றத்து அடி உறை இயைக!‘ என,
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. 66

நலம்பல நல்கும் வாய்மொழி வாழ்த்தை - என்னுள்ளே தானிருந்து தானே தன்னை இசைத்துக் கொண்டான்!
இவனுடைய திருமால் இருங் குன்றத்தின் அடிவாரத்தில், எப்போதும் இயைந்து வாழும் வாழ்வை அருள வேணுமாய்...
நம்பி மூத்த பிரானையும், நம்பியையும் ஒரு சேரப் பராவித் தொழுகின்றேன்!

சதிரள மடவார் தாழ்ச்சியை மதியா(து)
அதிர்குரல் சங்கத்து அழகர்தம் கோயில்
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை
பதியது ஏத்தி எழுவது பயனே
(பின்னாளைய திருவாய்மொழியில், இதே போல் மாலிருங் குன்றத்தை வரைந்து காட்டுகிறார்! மதி தவழும் மலை முகடு! அதை ஏத்தி எழுவது கடனே என்று பாசுரம்)

பரிபாடலில் திருமால் பாடல்கள் இத்துடன் நிறைந்தன!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP