Thursday, January 27, 2011

விவாகரத்து செய்து வைப்பாரா சிதம்பரம் சிவபெருமான்?

நாயன்மார்களின் கதைகளை, பெரிய புராண மிகைப்படுத்தல் இல்லாமல், மூல நூலில் உள்ளது உள்ள படி சொல்லும் முயற்சியின் தொடர்ச்சியாக...
இன்று திருநீலகண்ட நாயனாரின் குருபூசை (நினைவு நாள்) - தை விசாகம் (Jan-27-2011)!
கதையைப் பார்க்கலாமா? தலைப்பைப் பார்த்து பயந்து விடாதீர்கள்! :)
இவர் வாழ்க்கை சாதாரணப்பட்டது இல்லை! பல குடும்பச் சிக்கல்கள் கொண்டது!

காரைக்கால் அம்மையார் என்னும் தோழி புனிதாவின் கதையைப் பந்தலில் படித்து இருப்பீர்கள் அல்லவா? தமிழ்மணம் விருதும் பெற்ற புனிதாவின் நெஞ்சகத்துக் கதை! அதே போல் தான் திருநீலகண்டர் கதையும்! ஆனால் நல்ல வேளை, புனிதாவுக்கு ஏற்பட்ட கொடுமைகள் இங்கு ஏற்படவில்லை!

* அங்கு புனிதா தள்ளி வைக்கப்பட்டாள், அவள் ஆன்மீகத்தைக் காரணம் காட்டி!
* இங்கு நீலகண்டன் தள்ளி வைக்கப்பட்டான், அவன் "ஆண்"மீகத்தைக் காரணம் காட்டி! :)

* அங்கு கணவன் தள்ளி வைத்தான்! ஊரே தள்ளி வைத்தது!
* இங்கு மனைவி தள்ளி வைக்கவில்லை! தள்ளிக் கொண்டாள்!

* அங்கு தள்ளி வைக்கப்பட்டதும் இல்லாமல், நிராதரவாக விடப்பட்டாள்! சுடுகாட்டு வாய்க்கரிசியாச்சும் பசிக்குக் கிடைக்கிறதே என்று, ஒரு பேதை பேய்மகளிர் ஆனாள்!
* இங்கு நீலகண்டன், நிராதரவாக எல்லாம் விடப்படவில்லை! மனைவி, தள்ளி மட்டுமே கொண்டாள்!

காமம் மிக்க நீலகண்டன் - திரு-நீலகண்டர் ஆனான்!
இவனைத் தான் நாயன்மார்கள் பட்டியலில் முதலில் வைத்துப் பாடுகிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்!
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்!
திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன்!
இப்பேர்ப்பட்ட நாயன்மாரின் திருக்கதையைப் பார்க்கலாமா? வாருங்கள்!



தில்லை!
அன்று அவ்வளவு தொல்லை இல்லை!

தில்லைக்கு வெளியே மண் பானைகள் மற்றும் ஓடுகள் சுட்டு விற்கும் குயவர் சேரி! அதில் பிறந்தவன் நீலகண்டன்!
அவன் தில்லையம்பலத்து அழகனைப் பாடுவதிலும் பக்தி செய்வதிலும் மட்டும் காலம் கழித்து விடவில்லை! அடியார்களுக்கு உதவியாகவும் இருந்தான்!

இறைப்பணியை விட, இறைவன் பேரை முன்னிட்டுச் செய்யும் மானிடப் பணி, மிகவும் உயர்ந்தது! அதுவே இறைவனுக்கு உகப்பும் கூட!
அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே - என்று நம்மாழ்வார் இத்தனை முறை அடியார் என்று சொல்லி, அடியார்களை முன்னிட்டே தொண்டர் குலத்தை நிலைநாட்டுகிறார்!

அது போன்ற தொண்டர் குலத்துக்கு உதவியாக, அவர்கள் உண்ணும் பானைகளையும் திருவோடுகளையும் செய்து தருவது நீலகண்டன் வழக்கம்!
காசு வாங்க மாட்டான்! ஊருக்கு விற்கும் இதர மண்பாண்டங்களின் காசு மட்டுமே குடும்பத்துக்கு! நாம செய்வோமா, இன்றைய சம்பளத்தைக் கொண்டு? :) ஆனால் அன்றே செய்தான் நீலகண்டன்!

நீலகண்டனுக்கு, சைவ சமயப் பரப்பல், சமய வாதப் போர் எல்லாம் தெரியாது! சிவபெருமானை மட்டுமே தெரியும்!
அதிலும் உலகத்துக்காக அவர் தாமே நஞ்சுண்ட தியாகம் மட்டுமே தெரியும்! நீலகண்டம் நீலகண்டம் என்று அவன் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும்!
இப்பேர்ப்பட்டவனுக்கு, ஒன்னே ஒன்னில் மட்டும் கொஞ்சம் சபலம்! = காம சுகம்! :)



காமம்! தவறில்லை!

சிற்றின்பம் கூடச் சிவ இன்பமாகி விட்டால் பேரின்பம் தானே! தோழி கோதை, காமத்தால் அல்லவோ ஆண்டாள், தமிழை ஆண்டாள்?
காதல் இன்பத்தில், காம இன்பமும் சேர்ந்தால், இன்பமோ இன்பம் தான்!
ஆனால் அது காதலில் சேரும் போது மட்டுமே! வெறுங் காமத்தில் இல்லை!

தோழனொருவன் நீலப்படம் பார்ப்பதிலும் கிளுகிளு-வெனப் பேசுவதிலும் இன்பம் காண்பவன் என்றாலும், அது முருக இன்பத்தோடு சேரும் போது, உருக இன்பம் ஆகிவிடுகிறது அல்லவா! முருகா..மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்! உன்னுடைக் காமங்கள் ஏற்றேலோ ரெம்பாவாய்!

நீலகண்டனுக்கு, நல்ல மனைவி வாய்த்திருந்தாள்!
ஆனால் வீட்டுக்கு வெளியேயும் சுகம் தேடும் மனசு போல நீலகண்டனுக்கு! :)

காலம் தாழ்ந்த கல்யாணம், இளமை அல்லாத இள-வயசில் வரும் ஆசை, அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடுவதில்லை போலும்! ஒரு பொழுதில் ஓர் ஆசை, சுகம் சுகம் அதிலே, ஒரே சுகம்! :)
நீலகண்டனும் இப்படித் தான் போல! இருவரும் உடன்பட்ட Consensual தானே, தவறில்லை என்று சொன்னாலும், பாவம்....அவனையே நம்பிக் காத்துக் கிடக்கும் ஒரு ஜீவன் என்ன செய்யும்?

ஒரு நாள், மனைவியின் காதுக்கு இது எட்டி விட்டது!
கண்ணால் பார்த்தும் விட்டாள்! ஆனால் அவள் பார்த்தது....அவனுக்குத் தெரியாது!

வீட்டுக்கு வந்து, வீட்டு சுகமும் தேவைப்பட்டதோ என்னவோ!
இன்ப எண்ணிக்கையைக் கூட்ட...
எண்ணிக் கையை நீட்டினான்!
= "தொடாதீர்கள் - திருநீலகண்டர் மேல் ஆணை!"



அந்த நீலகண்டப் பெருமான் மேல்.........இந்த நீலகண்டனுக்கே சத்தியமா?
காதலின் உச்சியில் தாபமெல்லாம் திரண்டு........சாபமாக வந்து விட்டதே!

உள்ளத்தைக் கொடுத்த பேதையின்....உள்ளம் நொந்ததால் வாய்ச்சொல் வெந்தது!
"என்னைத் தொடாதே" என்று சொல்லவில்லை!
"தொடாதே" என்று பொதுவாகச் சொல்லி விட்டாள்! அதனால் நீலகண்டன் அதிர்ந்தே போனான்!

பல உடல்களோடு உறவாடிய போதெல்லாம் கூசாத உடல், கூசியது!
அசைவம் சாப்பிட்ட நாக்கே, நமக்கெல்லாம் அடங்க மறுக்குது!
அசைவம் அனுபவித்த உடல் அடங்குமோ? உள்ளம் அடங்குமோ?

அடங்கியது! அடி-முடித் தேடு பொருளின் மீது ஆணை என்று சொன்னதால்...
அன்று முதல் யாரையும் தேடுவதும் இல்லை! தொடுவதும் இல்லை!

காதல் மனைவியும் - காதல் கணவனும், காதல் இன்றி, வெறும் கணவன்-மனைவியாக, ஊருக்கு வாழ்ந்தனர்! உள்ளத்துக்கு வாழவில்லை!
ஒருவர் மேல் ஒருவருக்கு அன்பு மட்டுமே மிஞ்சியது! ஆசை மிஞ்சவில்லை! ஆண்டுகள் பல கடந்து விட்டன!



ஏழு ஆண்டு பிரிஞ்சி இருந்தாலே போதும்...மணமுறிவு-Divorce ஆமே! இவர்கள் பல காலம் பிரிஞ்சி இருக்காங்களே! யார் செய்து வைப்பது மணமுறிவை?
காமனை எரித்த அண்ணல், சிவபெருமான் வந்து இவர்கள் காமத்தை எரிப்பாரா? Divorce செய்து வைப்பாரா?

அண்ணல் வந்தார்..."மணத்தை" முறிக்க அல்ல! கல் போல் இறுகிக் கிடந்த "மனத்தை" முறிக்க!

சிவனடியார் வேடம் பூண்ட அண்ணல், நீலகண்டக் குயவனிடம் ஒரு ஓட்டைக் கொடுத்து, அது மந்திர ஓடு, தான் யாத்திரை சென்று திரும்பும் வரை, பாதுகாத்துத் தருமாறு வேண்டினார்!
இவன் தான் ஒருமையுள் ஆமை போல் ஓட்டை ஒடுக்கி வாழ்கிறானே, இந்த ஓட்டையும் காத்து வாழ ஒப்புக் கொண்டான்!
உலகத்துக்கே படி அளக்கும் ஓடு, இப்போது இவர்கள் வீட்டில்!

அவ்வப்போது அவனுக்கு மனசில் ஆசை எழும்!
ஆனால் அதே மனசுக்குள்ளேயே அடங்கியும் விடும்!
- நீலகண்டத்தின் மேல் ஆணை, ஒரு ஆணை, பூனை ஆக்கி விட்டது!

வந்தார் சிவயோகி! ஓட்டைத் திரும்பக் கேட்க, ஓடு காணோம்!
எங்கெங்கு தேடியும் காணோம்! வேறு ஓடு செய்து தருவதாகச் சொன்னாலும், மந்திர ஓட்டுக்கு எங்கே போவது?
பணம் கொடுத்துச் சரிக்கட்ட மனம் வரவில்லையே! செய்யாத தவறுக்கும், தலை குனிந்து, இறைவா என்று நிற்கவே மனம் சொல்லுகிறது!

- இதுவே சரணாகத நிலை! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத, "அவனே" என்று நின்று விட்ட நிலை!



"மந்திர ஓடு என்று தெரிந்து அபகரித்துக் கொண்டாய்! பொய் சொல்கிறாய்! இத்தனை நாள் சிவ வேடம் போட்டாய்" - இதற்கெல்லாம் பேதை உள்ளம் என்ன பதிலைச் சொல்லும்?

தன்னைத் தான் நிலைநாட்டிக் கொள்ளவும் தோன்றாது.....தேமே என்று மனத்துள்ளே அழுது கிடக்கிறதே! அதனிடம் போய், பொய் சொல்லி விட்டாய், பொய் சொல்லி விட்டாய் என்றால்?...

"ஐயா, உங்கள் ஓட்டை நான் திருடவில்லை! ஆனால் அதை உங்களிடம் எப்படித் தெரிவித்து, நீரூபிப்பது என்று தான் தெரியவில்லை! எனவே, தாங்கள் இட்ட வழக்காக இருந்து விடுகிறேன்!"

"ஓ...அப்படியானால், சிவகங்கைத் திருக்குளத்தில் இறங்கி, தம்பதி சமேதராக, உன் மனைவியின் கையைப் பிடித்து, சத்தியம் செய் பார்ப்போம்!
எதற்கு மனைவியோடு இறங்கிச் சத்தியம் செய்யச் சொல்கிறேன்-ன்னு பார்க்கிறாயா? அவள் உன் சக-தர்மினி! இல்லறம் இரண்டறமல்லாது ஓர் அறமாகச் செய்யும் நல்லறம்! நீங்கள் பொய்ச் சத்தியம் செய்தால், குடும்பமே நிர்மூலம் ஆகி விடும்! அதான் இப்படி நிரூபிக்கச் சொல்கிறேன்!"

"ஐயா...வெளியில் சொல்ல வெட்கமாக இருக்கிறது! இப்படி என்னைச் சூழ்ந்து வருகுதே சோதனை! நான் பொய்யனாகவே ஆகி விடுவேனோ?
ஐயா, நானும் என் மனைவியும், ஒரு காரணமாகத் தீண்டல் இன்றி இருக்கிறோம்!
அதனால் வேறு ஒரு மாற்று வழி சொல்லுங்களேன்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!"

"எலே...ஒரு பொய்யை மறைக்கப் பலப்பல பொய்களா? நீ சரிப்பட மாட்டாய்! வா...தில்லை நீதி மன்றத்துக்கு...நீதி...அதுவே உனக்கு நீ தீ!"



தில்லை அம்பலத்தில், நீதி அம்பலம் ஏறுமா?
பொன்னம்பலம் - சிற்றம்பலம் - எடுத்த பொற் பாத அம்பலம் - அங்கே நெஞ்சுக்கு நீதி அம்பலம் ஏறுமா?

வழக்கினைக் கேட்டு, தில்லை வாழ் அந்தணர்கள், தீர்ப்பு உரைக்கின்றனர்! அன்று அவர்கள் தான் தீர்ப்பு சொல்லும் அதிகாரத்தில் இருந்தனர் போலும்!
"சக-தர்மிணியின் கைப்பிடித்து, தம்பதி சமேதராய் மூழ்கிச் சத்தியம் பண்ணுங்கோ! அப்போ தான் நம்புவோம்!"

என்ன சொல்வது? ஊர் அறிய எப்படிச் சொல்வது?
இவளை இப்போதெல்லாம் தொடுவதில்லை! பேசியும் பல நாள் ஆகுது! - இதை எப்படி எல்லார் முன்னாடியும் சொல்ல முடியும்? - ஊர் அறிய, ஒரு உள்ளத்தை மறுதலிப்பதா? தகுமா?

கற்பனை செஞ்சிப் பாருங்க! நீங்களும்-உங்கள் நண்பரும் மனஸ்தாபத்தால் பேசிக் கொள்வதில்லை என்றாலும், அதை ஊரறியச் சொல்ல உங்களுக்கு மனம் வருமா?
இங்கோ.....அவனையே நம்பி வந்தவள்! அவளை எப்படி ஊரறிய மறுதலிப்பது? அதன் வலி எத்தனை கொடுமையானது!

பேசாமலும்-தொடாமலும் இருப்பது கொடுமை தான்!
ஆனால் அதை விடக் கொடுமை, ஒரு ஜீவனைப் பிறர் அறிய மறுதலிப்பது! :(


நீலகண்டன் - ஒரு காலத்தில் காமுகனாயிற்றே! அவளை மறுதலிக்கப் போகிறானா?

குளத்தில் அவனும் அவளும் மூழ்கி விட்டார்கள்!
ஒருவரை ஒருவர் கையால் பிடித்துக் கொண்டா? இல்லை! மூங்கில் கோலைப் பிடித்துக் கொண்டு!
ஒரு முனை அவள் கையில் - மறு முனை அவன் கையில்! இருவர் மானமும் இறைவன் கையில்....

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்!
குளத்தில் மூழ்கி எழுந்த தம்பதிகள், தம்மையும் அறியாமல், இளமை பொங்க மீண்டு எழ...
சிவனடியார் மறைந்து, சிவனே தோன்றி அருளினார்! இந்தக் காட்சி கண்டு ஊரே அதிசயிக்க...

"ஒருநீல கண்டத்தின் பொருட்டு, புலனையும் அடக்கத் துணிந்த, திருநீல கண்டா!
புலன் அடக்குவதாகச் சொல்லி, வித்தை மட்டுமே காட்டுவோர் இருக்க......,
ஒரு தியான யோகமும் அறியாத நீ, அன்பினால் மட்டும் அடக்கினாயே!!!

ஒரு பேதையின் பொருட்டு, அவளை மறுதலிக்காது, நோன்பினை விடமாட்டாத உறுதியே உறுதி!

அவளும் கடைசி வரை உன்னை மறுதலிக்காது, உன் மானத்துக்காக, தன் மானமும் விட்டு மூழ்கினாளே!
இருவரும் நீங்கா இளமை இன்பத்தில், இல்லறம் இருந்து, உலகத்துக்கெல்லாம் எடுத்துக் காட்டாய், சிவ இன்பம் அடைவீராக! சிவ இன்பம் அடைவீராக!!"


ஞான யோகம்-கர்ம யோகம்-தியான பீடம் என்று பேசுவோரெல்லாம் "அடக்க" கஷ்டப்பட்டு, வேடமே தரிக்கும் நிலையில்....
ஒரு யோகமும் அறியாத குயவன்......காமுகனாய் இருப்பினும், சிவ-அன்பினால் மட்டும் அடக்கினானே!

மனைவி மட்டும் தானே, தொடாதே, என்று சொன்னாள்? மாற்றாரைத் தொட்டிருக்கலாமே! காமுகன் தானே!
ஆம்! அவன் காமுகன் தான்! ஆனால் அது காதல்-காமம்! "காதலாகி", கசிந்து கண்ணீர் மல்கி, மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோ ரெம்பாவாய்!

குயவர் திருநீலகண்ட நாயனார் - அவர் தம் காதல் மனைவியார் திருவடிகளே சரணம்!

தமிழக மீனவர்கள் படும் அல்லலை முன்னிட்டு, அவர்களுக்கான விண்ணப்பமாய், எம்பெருமானிடம் இப்பதிவைச் சமர்ப்பிகின்றேன்!
Read more »

Thursday, January 20, 2011

முருகன் வீட்டு விசேடம்! முருகனருளில் 200 பதிவுகள்!

இன்று தைப்பூசம் அதுவுமாய் (Jan 20, 2011)....முருகன் வீட்டு விசேடம்!
முருகனருள் வலைப்பூ என்று துவங்கி,
அவன் பாடல்களுக்காகவே அமைந்து,
இன்று முருகன் பாடல்கள் 200-ஐத் தொட்டு நிற்கிறது!


இங்கே சென்று வாழ்த்தி அருளுங்கள்!

இனிமையான பித்துக்குளி முருகதாஸ் குரலில்....அழகான காவடிச் சிந்துப் பாடல் உங்களுக்குக் காத்துள்ளது!
கூடவே பழனி மலை அழகனைத் தள்ளு முள்ளு இல்லாமல் தரிசனம் + பஞ்சாமிர்தம்! :)

பின்னூட்டங்களை, இங்கல்ல, அங்கு இடவும்! Itz disabled here! :)
Read more »

Saturday, January 15, 2011

தை-01: வழி பிறந்தது! கோதைத் திருமணம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! தித்திப்பான தமிழ்த் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம், எங்கும் தங்குக! :)

என்னாங்க? பொங்கல் பொங்கிச்சா? இன்பம் பொங்கிச்சா? கரும்பைக் கடிச்சாச்சா? தொலைக்காட்சியில் மூழ்கிட்டீங்களா?
பதிவிலோ, தொலைக்காட்சியிலோ ரொம்ப மூழ்குறவங்களுக்கு, நாளைக்குச் சிறப்புப் பூசை உண்டு! உங்கள் கொம்புகளுக்கு சிறப்பு வர்ணம் அடிக்கப்படும்-ன்னு உங்க வீட்டுல சொல்றது காதுல விழலீங்களோ? :))


கோதைத் திருமணம்! ஆண்டாள் கல்யாணம்!
பொதுவா, மார்கழி முடிஞ்சதும், திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று விடும்! ஆனால் தமிழர் திருநாளான தை-முதல் நாளுக்கு, கோதை பாசுரம் பாடி வச்சிருக்கா-ன்னு பல பேருக்குத் தெரியாது!

சின்னப் பொண்ணுங்களுக்குத் தை மாசம்-ன்னா உயிராச்சே! தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்! வீட்டில் தானியமும் பணமும் கதிராடும் வேளையாச்சே! பொண்ணு மனசுல, காதல் திருமணம் சதிராடாதா? :) தமிழ் மறத்தி-கிராமத்துப் பொண்ணான எங்கள் கோதை, தைப் பிறப்பைப் பாடாமல் தான் இருப்பாளா என்ன?

வாங்க, அதை வேகமாப் பார்த்துட்டு, ஆண்டாள் திருமண வைபோகத்தையும் பார்த்துவிட்டு...மிக மிக மகிழ்ச்சியாகத் திருப்பாவைப் பதிவுகளை முடித்து வைப்போம்! :)
இதோ தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!

உய்யவும் ஆங்கொலோ என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக்கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!


வேகமான பொருள்: காமவேளே! மன்மதா! உனக்கு அனங்கன்-ன்னு பேரு! அன்+அங்கம்=உடம்பில்லாதவன்! சிவ பெருமான் நெற்றிச் சோதியில் பொடியாகிய பொடியா!

தையொரு திங்கள் - ஆண்டாள் கல்யாணத்துக்காக,
ஷைலஜா அக்கா பிரத்யேகமாக போட்டு அனுப்பிய,
வண்ணக் கோலம் (தண்-மண்டலம்). க்ளிக்கி, பெரிதாக்கிப் பார்க்கவும்!


தை மாசமான இன்று, தரையை விளக்கி, தண்-மண்டலம் என்னும் குளிர்ச்சியான கோலம் இட்டோம்! மாசியின் முந்தின நாள் வரை (அதாச்சும் தை மாதம் முழுதும்), மணற் பொடிகளாலும், வண்ணப் பொடிகளாலும், தெருவை அழகுபடுத்தினோம்! தை மாசம் என்றாலே நீ வீடு தேடி வரும் வேளையாச்சே! அதான்!

எதற்கு உயிர் வாழ்கிறேன் தெரியுமா? காமன் என்னும் உன்னையும், சாமன் என்னும் உன் தம்பியையும் தொழுதேன்! ஏன் தெரியுமா?
பொறிகள் பறக்கும் அழகிய சக்கரத்தைக் கையில் பிடிச்சிருக்கானே...அந்த வேங்கடவன்! "அவனுக்கு-நான்" என்று உன் கரும்பு வில்லால் விதிப்பாயே!



பொதுவா, மார்கழி நோன்பு முடிஞ்சதும், ரெண்டு மாசம் கழிச்சி, பங்குனியில் தான் (பங்குனி உத்திரம்) கோதைத் திருமணத்தைக் கொண்டாடுவார்கள், சொந்த ஊர்களான திருவரங்கம் மற்றும் வில்லிபுத்தூரில்!

ஆனால் வேங்கடவன்? எப்படா இவள், "வங்கக்கடல் கடைந்த" கடைசிப் பாசுரம் பாடி முடிக்கப் போகிறாளோ?-ன்னு காத்துக்கிட்டு இருக்கான் போல! வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே! நோன்பு முடிச்ச கையோடு.....அவளை-அவன்.....அடுத்த நாளே லபக்! :)

இன்றும் திருமலை-திருப்பதியில், தைத் திருநாளான பொங்கலில் தான் ஆண்டாள் திருமணம்-கோதைப் பரிணயம் என்று கொண்டாடப்படும்! காலையில் வேங்கட மாப்பிள்ளை பாரி வேட்டை எல்லாம் நடத்தி, வீரம் கொப்பளிக்க வருவாரு! வந்து கைத்தலம் பற்றுவாரு! மாலை மாற்றல் அற்புதமாக நடக்கும்!
இவ்வளவு நாள், தான் சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

ஆண்டாள் மாலை மாற்றல் காட்சியை, திருமதி. விசாகா ஹரி, சூப்பர் பாட்டு ஒன்றினால் விவரிப்பதைக் கேளுங்கள்! (மாலை சூட்டும் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!)


கேட்பதற்கு மட்டுமான ஒலிச்சுட்டி!
மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
மாலடைந்து, மதிலரங்கன், மாலை அவர்தம் மார்பிலே,
மையலாள், தையலாள், மாமலர்க் கரத்தினாள்,

ரங்க ராஜனை, அன்பர் தங்கள் நேசனை,
ஆசி கூறி, பூசுரர்கள் பேசி மிக்க வாழ்த்திட,
அன்புடன், இன்பமாய், ஆண்டாள் கரத்தினாள்,

மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்!
பா-மாலை சாற்றினாள்! பூ-மாலை மாற்றினாள்!


அப்படியே கற்பனை பண்ணிப் பாருங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

*பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2042, தைத் திங்கள் முதல் நாள் (15-Jan-2011), கார்த்திகை நட்சத்திரம் கூடிய தைப்-பொங்கல் நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள்,
திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாடுடைத் தலைவன், அமலனாதிப் பிரான்,
திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* ஆண்டாள்-அரங்கன் திவ்ய தம்பதிகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,

* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.


வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!


இத்துடன், திருமகள் திருமணத்தோடு கூடிய திருப்பாவைப் பதிவுகள்...
மாதவிப் பந்தலில் நிறைவாகின! கனவுகள் நனவாகின!!


யம்மாடி கோதை,
"கனாக் கண்டேன் தோழீ நான்"-ன்னு முடியும் உன்னோட வரிகளை, ஒவ்வொரு பாட்டிலும் கட் பண்ணி விட்டேன்! வார்த்தைகளில் கூட, உன் ஆசையும்-கல்யாணமும், "கனா/கனவு" என்பதாக அமையாமல், "நனவு" என்றே இருக்க வேணும்! அதான்! "
வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்"-ன்னு எழுத மனசு வரலை! "வந்தென்னைக் கைத்தலம் பற்ற"...என்றே சொல்லத் தோனுது! Sorry dee, for the edit!

என் தோழீ...என்னை ஒரு காலும் மறக்க மாட்டேன் என்று என் முகம் பார்த்துச் சொல்லிவிட்டு...உன்னவனுடன், முகமெல்லாம் இன்பமாப் போய் வாடீ...

பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!

அவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு!

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்!
பொங்கலோ பொங்கல்! இன்பமே பொங்கல்!
Read more »

Thursday, January 13, 2011

மார்கழி-30: வங்கக் கடல் கடைந்த சங்கத் தமிழ்!

வாங்க வாங்க! இனிய தைத் திருநாள் - பொங்கல் வாழ்த்துக்கள்!

மஞ்சள் கொத்துடனும், கரும்புடனும், நாளைக் காலையில் ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் என்பதற்கு முன்னாடியே, இன்னிக்கு வங்கக் கடலைக் கடைஞ்சிருவோம்! :)

இந்த ஆண்டு மார்கழியில் 30 நாட்கள்! அதனால் 30 பாசுரங்களும் முழுக்கப் பார்த்து விடலாம்! திருப்பாவைப் பதிவுகளின் க்ளைமாக்ஸ்-க்குப் போகலாமா? :)

பொதுவா எந்த பெரும் ஆன்மீக நூலாக இருந்தாலும், அதற்கு
* கடவுள் வாழ்த்து-ன்னு ஒன்னு துவக்கத்தில் இருக்கும்!
* நூற் பயன் (பல ஸ்ருதி)-ன்னு முடிவில் இருக்கும்!
ஆனால் திருப்பாவைக்குக் கடவுள் வாழ்த்து-ன்னு தனியா இல்லை!
வாழ்த்து + நூற்பயன் என்று இரண்டையுமே முதலிலேயே சொல்லி விடுகிறாள்!

* கார்மேனி, செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான் = கடவுள் வாழ்த்து (தியான சுலோகம்)!
* நாராயண"னே" நமக்"கே" பறை தருவான் = நூற் பயன் (பல ஸ்ருதி)!

இப்படித் துவங்கும் போதே துவங்கி விடுகிறாள்! = Straight to the point!
நச்-ன்னு சொல்லத் தான் கோதைக்குப் பிடிக்கும்! மரபு மீறுகிறதா-ன்னு எல்லாம் அப்புறம் தான்! :)

குழந்தைகளுக்கு என்ன பரிசு கிடைக்கும்-ன்னு சொல்லிட்டு, ஆர்வம் ஏற்படுத்தி, அப்புறமா படிக்கச் சொல்லிக் கொடுப்பது போலே!
பாருங்கள், என் தோழி, கோதை = ஒரு சிறந்த Motivator, Psychologist & Managing Director - Human Resources! :)

ஆனால், முடிக்கும் போதும், இன்னொரு முறை, நூற்பயனைச் சொல்கிறாளே? அதான் முதல் பாட்டிலேயே தியான சுலோகம்+நூற்பயன் சொல்லிட்டாளே! அப்புறம் எதுக்கு, முப்பதாம் பாட்டில், திருப்பாவைப் பாடல்களால் என்னென்ன பலன் கிடைக்கும்-ன்னு ஒரு லிஸ்ட் போடுகிறாள்?

கோதைக்கு "அவனை"க் காட்டிலும் "அடியார்கள்" தான் முக்கியம்! அடியார்களோடு, "கூடி இருந்து", குளிர்ந்தேலோ தான்!
அதனால் தான் அடியார்களுக்கு என்ன தேவை? என்ன கிடைக்கும்? என்பதை வெளிப்படையாகச் சொல்லி விட்டு, தன் திருப்பாவையை நிறைவு செய்கிறாள்!

* திருவெம்பாவையைப் பாருங்கள் - ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை-ன்னு இறைவனை முதலில் வைத்துத் துவங்குகிறார் மணிவாசகப் பெருமான்!
* ஆனா இவ? நேர் இழையீர்...சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்-ன்னு அடியார்களைத் தான் முதலில் சொல்கிறாள்! அப்புறம் தான் கண்ணன் - நந்தகோபன் குமரன், யசோதை இளஞ்சிங்கம் எல்லாம்!

இவ பெரிய வம்புக்காரியாச்சே! மரபுக்கு எல்லாம் கட்டுப்படுவாளா என்ன? :)
* முடிக்கும் போதும் அடியார்களைக் கொண்டே முடிக்கிறாள்! = எங்கும் திருவருள் பெற்று (அடியார்கள்) இன்புறுவர் எம் பாவாய்! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,


சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!




வங்கக் கடல் கடைந்த மாதவனை, கேசவனை = கப்பல்கள் செல்லும் கடலைக் கடைந்த மாதவன்-கேசவன்!
ஆகா திருப்பாற்கடலை யார் கடைந்தார்கள்? இவனா கடைந்தான்?
தேவர்-அசுரர் அல்லவா கடைந்தார்கள்? உழைப்பு அவர்களது! கிரெடிட் ஐயாவுக்கா? ஹா ஹா ஹா!
கர்மன்யேவா அதிகாரஸ்தே - செய்யும் கர்மங்களின் மேல் உனக்கு அதிகாரம் இல்லை என்ற கீதா-சாரத்தைக் கோதா-சாரத்தில் வைக்கிறாள்!

ஆமையாய் நடு நின்ற நடுவன் அவன்! அதனால் தானே அசுர-அமரர்களால் கடைய முடிந்தது? மொத்த பாரத்தையும் நடுவில் தாங்கிக் கொண்டான்! தேவர் இழுப்பு, அசுரர் இழுப்பு, மலையின் கனம், பாம்பின் விடம், கடலின் அலை என்று மொத்த பாரமும் அவன் மேல் தான்!

ஏதோ வெளியில் இருந்து பார்க்கும் போது, நாம தான் எல்லாம் கடைவது/செய்வது போல இருக்கும்! அடியில் தாங்கி நிற்கும் ஆமை தெரியாது! ஆனால் உண்மையிலேயே கடைவது/செய்வது மாதவன்-கேசவன் தான்!

சரி, அது என்ன வங்கக் கடல்? வங்கம் = பெரும் கப்பல்! அட, திருப்பாற்கடலில் கப்பல் எல்லாம் போகுமா? என்னப்பா கதை விடறீங்க?
ஹிஹி! இங்கே ஆண்டாள் காட்டும் கப்பல் வேற! நம் மனம் என்னும் கப்பல்! அது உலகக் கடலில் மிதந்தும், அலைகழிந்தும் போகிறது! அப்பர் சுவாமிகளும் மனம் எனும் தோணி என்று பாடுகிறார்!
ஆண்டாளும், அப்பர் சுவாமிகளும் பல இடங்களில் ஒரே உவமைகளைக் கையாளுவார்கள்! யாராச்சும் ஆய்வு செய்து பாருங்கள்! தெரியும்!

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி
சினம் எனும் சரக்கை ஏற்றி, செறி கடல் ஓடும் போது
மனன் எனும் பாறை தாக்கி, மரியும் போது அறிய ஒண்ணா
உனை எணும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே!



திங்கள் திரு முகத்து சேய் இழையார் = நிலவைப் போல மதி முகம் கொண்ட பெண்கள்

"சென்று" இறைஞ்சி = தாங்கள் இருந்து இடத்தில் இருந்தே, இறுமாப்பாய் வணங்காது, "சென்று" வணங்குகிறார்கள்!
ஏன்? = அடியார்களுடன் கூடி வழிபடணும்! அது தான் கைங்கர்யம்! அது தான் தொண்டு!இருந்த இடத்தில் இருந்தே கூட இறைவனை வணங்கலாம் தான்! ஆனால் அது தனித்த வழிபாடு! அற்புதமான வைகறை வேளையில் தனிமை எதுக்கு? அடியார் கூட்டத்தில், கூடி இருந்து, குளிர்ந்து வழிபட்டால், அது தனிப் புத்துணர்ச்சி அல்லவா!

அங்கு அப் பறை கொண்ட ஆற்றை = அங்கே, பெருமாளிடம் பறை வாங்கிக் கொண்ட வழியை...
ஆறு=வழி! ஆற்றுப்படை-ன்னு சொல்லுறோம்-ல! இங்கே பறை என்று சொல்லிவிட்டு பெருமாளையே வாங்கும் வழியை அல்லவோ நமக்குச் சொல்லித் தருகிறாள்!

* திருமுருகாற்றுப்படை = முருகப் பரிசில்!
* ஆண்டாள் ஆற்றுப்படை = பெருமாள் பரிசில்!
அதனால் திருப்பாவையை ஆண்டாள் ஆற்றுப்படை-ன்னு சொல்லலாம் தானே? சரி தானே? திருமாலாற்றுப்படை-ன்னாச்சும் கட்டாயம் சொல்லலாம்!

அணி புதுவை = அழகான புதுவைக் கிராமம், புத்தூர், வில்லிபுத்தூர்!
பைங் கமலத் தண் தெரியல் = பசுமையான குளிர்ச்சியான தாமரை மாலைகள்! தெரியல்-ன்னா தொங்கு மாலை!

தொங்கல், தொடையல், கண்ணி-ன்னு விதம் விதமான மாலைகள் உண்டு!
ஆண்டாள் சூடியது + சூடிக் கொடுத்தது = தெரியல் என்னும் தொங்கு மாலை! ஆண்டாள் மாலைன்னே இப்போ பெயர் ஆயிடிச்சி!

பட்டர் பிரான் கோதை சொன்ன = பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்லப் பொண்ணு (கோதை) சொன்ன...
ஆண்டாளுக்கு பொறந்த வீட்டுப் பாசம் ஜாஸ்தி! என்ன தான் கண்ணா, கண்ணா-ன்னு கொஞ்சினாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம், தன் பெயர் வரும் போதெல்லாம், தன் இனிஷியல் போட்டுப்பா!:)
பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் கோதை! பட்டர் பிரான் பெரியாழ்வாரின் செல்வக் குமாரத்தியான என் தோழியே! சூடிக் கொடுத்த சுடர் கொடியே!

சங்கத்தமிழ் மாலை = அவள் பாடிக் கொடுத்த சங்கத்தமிழ் மாலை!
சங்க காலம் தான் எப்பவோ முடிஞ்சி போயிடுச்சே! இவள் காலம் அப்புறம் தானே? அப்புறம் என்ன சங்கத் தமிழ்?

* நப்பின்னையை முன் வைத்தாள்!
* பழந்தமிழர் பண்பாடு,
* தமிழில் இறையியல்,
* தமிழ்க் கடவுள் மாயோன்,
* வெட்சி-கரந்தை ஆநிரை காத்தல்
என்றெல்லாம் சங்ககாலத் தமிழ்ச் சமயத்தை, தமிழ்ச் சமூகத்தை அவள் இப்போதும் முன்னிறுத்தி நிலைநாட்டியதால் = சங்கத்தமிழ்!

கோதை, வடமொழி தெரிந்திருந்தும், வடமொழியில் பாடினாள் இல்லை! வடமொழியில் எழுதினால் தான் சபையில் மதிப்பு என்று இருந்த ஒரு காலகட்டத்திலும், நம்மைப் போன்ற எளியவர்களுக்காகத் தெய்வத் தமிழில் பாடினாள்!=தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!


முப்பதும் தப்பாமே = அந்தக் கோதைத் தமிழ் - முப்பது பாசுரங்கள்! பா+சுரம்=கவிதை+இசை! இசைக் கவிதையான திருப்பாவைப் பாடல்களை...

இங்கு இப்பரிசு உரைப்பார் = இங்கே இந்தப் பெருமாள் பரிசைப் பாடுபவர்கள் எல்லாரும்...
அங்கு அப் பறை -- இங்கு இப் பரிசு = பார்த்தீங்களா சொல்லாட்சியை? பொருளாட்சியை?

* அங்கு-அப் பறை = அங்கு, அங்கு-ன்னு மோட்சம் தேடறீங்களா மக்களே?
* இங்கு-இப் பரிசு = இங்கு, இங்கு-ன்னு இங்கேயே இருக்கு!


கையில் வெண்ணையை வச்சிக்கிட்டு, நெய்க்கு அலையலாமா? "எனக்கு மோட்சம் வேணும், எனக்கு மோட்சம் வேணும்"-ன்னு, சுயநலப் போர்வை போர்த்திக் கொண்டு, கர்மங்களையும், அனுஷ்டானங்களையும் செய்யாதீர்கள்! சுயநலம் இல்லாமல் அனுஷ்டானம் செய்யுங்கள்!

அங்கு அப் பறை, இங்கு இப் பரிசு = நித்ய கைங்கர்யம்!
என் கடன் பணி செய்து "கிடப்பதே"! = இதுவே மோட்சம்! இதுவே இன்பம்! இதுவே இறைவன் உள்ள உகப்பு!
திருப்பாவை = ஒரு பரிசு! பெருமாள், தன்னோட பூமிப் பிராட்டியை அனுப்பி, நம்ம எல்லாருக்கும் கொடுத்த பரிசு! அதை ஓதுவார் எல்லாரும், பரிசு உரைப்பார் எல்லாரும்....

இப்போது பாருங்கள், கோதையின் உன்னிப்பான உத்தியை!
* முதல் பாசுரத்தில் = தியான சுலோகம் + நூற் பயன் வைத்தாள்!
* இறுதிப் பாசுரத்தில் = நூற் பயன் + தியான சுலோகம் வைக்கிறாள்!


ஈர் இரண்டு, மால் வரை தோள் = நான்கு பெரும் மலைத் தோள்கள்!
ஈர்-இரண்டு=நான்கு! மேகம் தங்கும் மலைமுகடு போல, நாம் போய்த் தங்கும் அவன் நான்கு தோள்கள் = சங்கு-சக்கர-அபய-வரதக் கரங்கள்!
செங்கண், திருமுகத்து = செவ்வரி ஓடிய கண்கள்! திவ்யமான திருமுகம்! பால் வடியும் அந்த அழகு முகம்! அய்யோ....
செல்வ+திருமாலால் = திருமகளோடு கூடிய திருமாலால்!

எங்கும் = எங்கும்=எல்லா இடத்திலும், என்றும்=எல்லாக் காலத்திலும்,

திரு-அருள் பெற்று = உலகன்னை மகாலக்ஷ்மியின் பரிபூர்ண கடாட்சத்தாலே, அகலகில்லாக் கருணையாலே...
* தமிழ்க் கடவுள் மாயோன் திரு-அருள் பெற்று...
* ஆண்டவன்-அடியார் திருத்தொண்டில்...
இன்புறுவர் எம் பாவாய்!
இன்புறுவர் எம் பாவாய்!
இன்புறுவர் எம் பாவாய்!



* ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்!
* அடியேன் திருப்பாவைப் பதிவுகளை நிறைவு செய்கிறேன்!
* அடியார்களான உங்கள் திருவடிகளில் சேவித்துக் கொள்கிறேன்!
* இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்! இன்புறுவர் எம் பாவாய்!


இனி வருவன....மரபுப் படி, கோதையின் மேல் பிறர் பாடிய, வாழ்த்துப் பாக்கள் + வாழித் திருநாமம்.....

திருப்பாவை வாழ்த்துப் பாக்கள் - வேதப் பிரான் பட்டர் எழுதியது!

கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்! - நீதியால்
நல்ல பத்தர் வாழும் ஊர்! நான் மறைகள் ஓதும் ஊர்!
வில்லி புத்தூர்! வேதக் கோனூர்!

பாதகங்கள் தீர்க்கும்! பரமன் அடி காட்டும்!
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்! - கோதைத் தமிழ்
ஐ ஐந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு!


சமயத்தின் முப்பெரும் குறிக்கோள் என்ன?
1. பாதகங்கள் தீர்க்கணும்!
2. பரமன் அடி காட்டணும்!
3. வேதம் அனைத்துக்கும் வித்தாகணும்!
இம்மூன்றும் கோதையின் திருப்பாவை வெகு எளிதாகச் செய்து விடுகிறது!
சாஸ்திர விற்பன்னர்கள், ஆராய்ச்சியாளர்கள் இவர்களை எல்லாம் கடந்து, எளிய மக்களுக்கும் இதை எடுத்துச் செல்கிறது!

அதனால் தான் திருப்பாவைக்கு மட்டும், எந்தக் காலத்திலும், ஆலயங்களில் தடையில்லை! திருமலையில் வடமொழிச் சுப்ரபாதத்தை நிறுத்தி விட்டு, திருப்பாவையை ஓதுகிறார்கள்!
மந்திரங்களுக்கே உரித்தான மதிப்பு, வேதம் அனைத்துக்கும் வித்து-ன்னு சொன்னாலும்...

மாதவிலக்காய் இருக்கும் போதோ...குளிக்காமலேயோ/குளித்தோ, தீட்டோ, தீட்டு இல்லையோ, என்ன வேணுமானாலும் ஆச்சாரம் சொல்லிக் கொள்ளுங்கள்!
இந்த வேதம் அனைத்துக்கும் வித்து = திருப்பாவையை மட்டும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானுலும் ஓதிக் கொள்ளலாம்!

இது வைணவச் சொத்து அல்ல!
சமயச் சொத்து அல்ல!
குலச் சொத்து அல்ல!
ஆச்சார சொத்து அல்ல!
உலகில் மூவருக்கு மட்டுமே ஓங்காரப் பொருள் தெரியும்-ன்னு அலட்டிக் கொள்ளும் குடும்பச் சொத்து அல்ல!
திருப்பாவை = பொதுச் சொத்து! அதுவே இதன் நீர்மை-பெருமை!




கோதையின் மேல் தமிழ் அர்ச்சனை! - வாழித் திருநாமம்!
* திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!
* திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
* பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!
* பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!


* ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!
* உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!
* மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!
* வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

ஆண்டாள் திருவடிகளே சரணம்! எம்பெருமான் திருவடிகளே சரணம்!
பந்தல் வாசகர்களுக்கும், அன்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நாளை, கோதைத் திருமணத்தோடு, பொங்கும் இன்பம் எங்கும் தங்கும்! :)
Read more »

Wednesday, January 12, 2011

மார்கழி-29: சிற்றஞ் சிறுகாலே! காமமா? மோட்சமா?

மார்கழியின் முக்கியமான நாள் என்பதால், சென்ற ஆண்டுகளின் மீள் பதிவை இடுகிறேன்!


வாங்க! வாங்க! ஆட்ட இறுதிக்கு வந்துட்டோம்! போகி அதுவுமா என்ன கொளுத்துனீங்க? டயரை எல்லாம் கொளுத்தலை தானே?
சரி, பறை அடிச்சீங்களா? ஆண்டாளும் பறை, பறை-ன்னு கேக்குறாளே! நீங்க கொஞ்சம் அவளுக்குப் பறையறது? :)

இன்றைய பாட்டு மிக மிக விசேடமான பாட்டு! எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு! திருப்பாவை முப்பதின் சாரமும் இந்த ஒரே பாட்டு தான்!

தினமுமே முப்பதும் சொல்ல முடியாதவர்கள், இந்த ஒன்றை மட்டும் வாய் விட்டு ஓதிக்கலாம்! மனசுக்குள் சொல்லிக்கலாம்!
ஆலயங்களில், சாத்துமுறை என்னும் சாற்று மறையில், இது சிறப்பாக ஓதப்படும் பாசுரம்! கருவறைகளில் இந்தத் "தமிழ்ப் பாட்டு" இல்லாத பெருமாள் கோயிலே இல்லை - ஆந்திரா, கர்நாடகம், சில கேரள ஆலயங்கள் உட்பட! :)

இவ்வளவு பெருமை கொண்ட இந்தப் பாட்டின் சாரம் என்ன தெரியுமா?
எல்லாரும் காமம் செய்யுங்கள்! எல்லாரும் காமம் செய்யுங்கள்!

ஹா ஹா ஹா! அட நான் சொல்லலைங்க! ஏற்கனவே என்னைத் தான் "வேற மாதிரி" பாத்துக்கிட்டு இருக்காங்களே! இது நான் சொல்லும் விளக்கம் இல்லை! இது ஆச்சார்ய விளக்கம்! பெரும் ஆச்சார்ய விளக்கம்!



சின்ன வயசு இராமானுசர்! அன்று திருப்பாவை விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காரு....திருவரங்கம் அர்ச்சுன மண்டபத்திலே! பெருங்கூட்டம்!

வைணவத்துக்குள்ளேயே, அவரோட ஆரம்ப கால எதிரிகள் நிறையப் பேரு கூட்டத்தோடு கூட்டமாச் சூழ்ந்து நிக்குறாங்க!
அவரோட கருத்தில் எங்காவது பெரிய குற்றமாக் கண்டுபிடிச்சி, அவரை ஒரேயடியா மடக்கிட்டா, அப்புறம் அவர் அதோகதி தான்! ஆலயத்து அக வேலைகளில் அவரைக் கை வைக்க முடியாமல் பண்ணீறலாம்! நாமளே தொடர்ந்து சுயநல ராஜாங்கம் நடத்தலாம்-ன்னு ஒரு கணக்கு! :)

இராமானுசர்: "ஆக, ஐ*ஐந்தும் + ஐந்துமான திருப்பாவை முப்பதிலே, சாரமான, சாஸ்திரோத்காரமான பாசுரம் இந்த சிற்றஞ்சிறுகாலே!
அங்க பஞ்சக சம்பன்னமான, ஆத்ம ரட்சை என்னும் சரணாகதியைச் செய்யும் பாசுரம் இது!

எல்லாருக்கும் தர்மம்-அர்த்தம்-காமம்-மோட்சம் என்று நாலு நிலையும் தெரியும் அல்லவா? தமிழில் அறம்-பொருள்-இன்பம்-வீடு என்றும் சொல்வார்கள்! இந்த நான்கில் சிறப்பானது எது? - அறமா? பொருளா? காமமா? மோட்சமா? சொல்லுங்கள் பார்ப்போம்!"

கூட்டம்:
* ஒரு சிலர் அறம்-ன்னு சொல்லுறாங்க = தர்மம் தலை காக்கும்!
* கொஞ்சூண்டு பேர் பொருள்-ன்னு சொல்லுறாங்க = ஆன்மீகம்-ன்னா அதில் பணம்/பொருள்-ன்னு வெளிப்படையாச் சொல்லக் கூடாதே! :)
* ஆனா யாருமே காமம்-ன்னு சொல்லலை! சொன்னா ஒழிச்சிருவாங்க! :)
* நூற்றுக்கு தொன்னூறு பேரு...மோட்சம், மோட்சம், அது தான் நான்கிலும் உசத்தி-ன்னு ஒரே கூக்குரல்...

இராமானுசர்: "அமைதி! அமைதி! நான் சொல்லட்டுமா? அறமா? பொருளா? காமமா? மோட்சமா?
நான்குமே ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்று தேவைப்பட்டாலும்...
நான்கிலும் மிக மிக உயர்த்தியானது...
எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டியது...காமம்!
காமமே மிகவும் சிறப்பானது!!!
"

கூட்டம்: ஒரே சல-சல!.....
அடப்பாவி.....இராமானுசரா இப்படிப் பேசுவது? சீச்சீ! ஆச்சார சீலர்கள் எல்லாம் முகம் சுளிக்கிறார்கள்! உண்மையான பக்தர்களுக்கும் அடியார்களுக்கும் திகைப்பு! கொஞ்சம் வருத்தம்! ஆனால், உடையவர் இப்படிச் சொல்றாரு-ன்னா அதுல ஏதோ இருக்கும்-ங்கிற ஒரு எண்ணம்!

எதிரிகள் எல்லாருக்கும் சந்தோஷம்! ஒழிஞ்சாருடா இராமானுஜர்! வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டார்!
ஜகத்குருவான கண்ணன், கீதையில் நிஷ்+காம்ய கர்மம்-ன்னு சொல்கிறான்!
நிஷ்+காமம்! காமம் இல்லாம இருக்கணும் என்பது தான் பகவத் கீதை!
அப்படி இருக்க, இவரோ காமம் தான் உசத்தி-ன்னு தறி கெட்டுப் போய் பேசுகிறாரே! இன்று இராமானுஜரை ஒரேயடியா சாய்ச்சிறலாம்!

சைவத்தில் இருந்து இவரு நம்ம வைஷ்ணவத்துக்குள் வந்து புகுந்த போதே எனக்குப் பயம்! இவரைப் போய் ஆளவந்தார், பெரிய நம்பி எல்லாம் எப்படிக் கொண்டாடுறாங்க-ன்னு தான் புரியலை! ஆனா இன்னிக்கி எல்லாம் முடிஞ்சிது! வகையா மாட்டினார்! ஹா ஹா ஹா! ரங்கா...உனக்கு எப்படி நன்றி சொல்லுறது! நல்ல வாய்ப்பைக் கொடுத்தீயே!
இராமானுசரே.....நிறுத்துங்கள்! அபச்சாரம்...உங்க விளக்கத்தில்...."

இராமானுசர்: "சற்றுப் பொறுங்கள்! அடியேன் இன்னும் முடிக்கவில்லை!
காமமே மிகவும் சிறப்பானது.....
கண்ணனுக்கே உரியது காமம்!"


கூட்டம்: "ஹாஆஆஆஆஆஆஆஆஆஆ"

இராமானுசர்: "உனக்"கே" நாம் ஆள் செய்வோம்! உனக்"கே" நம் காமம்!
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல்-ஓர் எம் பாவாய்!"


கீதா சாரமா? கோதா சாரமா? :)
காமமா? மோட்சமா?
கோதை வெட்ட வெளிச்சமா ஆக்குறா! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!


இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!




சிற்றம் சிறு காலே = சிறு காலே-ன்னா Early Morning!
சிற்றம் சிறு காலே-ன்னா = Early Early Morning! :)

வைகறை
என்பது தமிழ்க் காலக் கணக்கு! பிரம்ம மூகூர்த்தம் என்பார்கள் வடமொழியில்!
சூர்யோதயத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக! சுமார் 04:30 மணி!

இன்றும் சில திருமணங்கள் 04:30-06:00 இல் நடக்கும்! இந்த நேரம் சாதனைக்கும், யோகத்துக்கும், போகத்துக்கும் மிகவும் மங்களமான நேரம்!
மனித செயற்கைத்தனங்கள் விடிந்து கொள்ளும் முன்னர், இயற்கையான இயற்கையை ருசிக்கும் அற்புத நேரம்!

"வந்து", உன்னைச் "சேவித்து" = அடியாருடன் கூட்டமாக "வந்து", உன்னைச் சேவிக்கிறோம்!
* வந்து = இருந்த இடத்தில் இருந்தபடியே கூட இறைவனை வணங்கலாம்! ஆனால் அது தனித்த வழிபாடு! நாம "வந்து" வணங்குவோம்!
இந்த அற்புதமான வைகறை வேளையில் தனிமை எதுக்கு? அடியார் கூட்டத்தில், கூடி இருந்து, குளிர்ந்து வழிபட்டால், அது தனிப் புத்துணர்ச்சி அல்லவா!

* சேவித்து = இது வைணவத்தில் அதிகம் புழங்கும் ஒரு அழகிய தமிழ்ச் சொல்! இறைவனைக் கும்பிடலாம்! அது என்ன "சேவித்து"?
கரம் சேர்த்து வணங்குவதைச் சேவித்தல்-ன்னு சொல்லுவாங்க! ஆனால் சேர்வை/சேவை என்பதின் அடிச்சொல் தான் "சேவித்து"!

சும்மா கண்ணால பாத்துட்டு ஹாய் சொல்லிட்டு வந்தா = கும்பிடுதல்!
சேவை என்னும் தொண்டும் செய்யணும்! அப்படிச் செய்தால் = "சேவித்து"!


உன் பொற்றாமரை அடியே, போற்றும் பொருள் கேளாய் = உன்னைப் போற்றவில்லை! உன் திருவடிகளைப் போற்றும் காரணத்தைச் சொல்கிறோம்! கேள்!

வள்ளுவரின் கடவுள் வாழ்த்து முழுக்க, கடவுளைச் சொல்லலை! திருவடிகளைத் தான் சொல்றாரு ஐயன்!

* வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
* மலர்மிசை ஏகினான் "மாண் அடி" சேர்ந்தார்
* வேண்டுதல் வேண்டாமை "இலான் அடி" சேர்ந்தார்க்கு
* தனக்குவமை இல்லாதான் "தாள்" சேர்ந்தார்க்கு அல்லால்
* அறவாழி அந்தணன் "தாள்" சேர்ந்தார்க் கல்லால்
* எண் குணத்தான் "தாளை" வணங்காத் தலை
* நீந்தார் இறைவன் "அடி" சேராதார்

கோதையும் இறைவனைப் போற்றாது, அவன் திருவடிகளையே போற்றுகிறாள்!
உன்னை விட உன் திருவடிகளைப் போற்றுவதால், அந்த பொற்றாமரை அடிகள் மேல் உனக்குப் பொறாமையா பெருமாளே? ஹிஹி! காரணம் சொல்கிறோம், கேள்!


பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ = மாடுகளை மேய்த்து உண்ணும் "சாதாரண" தொண்டர் குலம் நாங்கள்! அதில் நீயும் வந்து பிறந்து விட்டாய்!
(பெற்றம்=பெறு=பேறு-ன்னு தமிழ்க் காரணப் பெயர்களின் அழகைப் பாருங்க! பெற்றம்=மாடு=செல்வம்! பசுச் செல்வம்! பால் செல்வம்!)

* இறைவன் ஆயர் குலத்தில் நேரடியாகப் பிறக்கவில்லை! ஓர் இரவில் மாறி, ஆயர் குலத்தில் "உதித்தனன்" உலகம் உய்ய!
ஆயர்கள் அவனை விட்டுக் கொடுப்பதாக இல்லை! அவனும் ஆயர் குலம் தான்! மொத்த ஆயர் குலமும் தொண்டர் குலம் தான்! எனவே அவனும் ஒரு அடியார் தான்!

* அட, இது எப்படி? அவனுக்கே அவன் எப்படி அடியாராய் இருக்க முடியும்?
பெருமாள் நெற்றியை நல்லா உற்றுப் பாருங்க...என்ன இருக்கு? திருவடிகள்!
அவன் திருவடிகள் அவனைக் காட்டிலும் உசத்தி! அதனால் தான் அவனே அதை நெற்றியில் தாங்கிக்கிட்டு இருக்கான்!

அவனுக்கே அவன் செவ்வடி தான் காப்பு! செவ்வித் திருக்காப்பு!
அதனால் தான் அவனைப் போற்றும் பொருள் கேளாய்-ன்னு பாடாமல், பொற்றாமரை "அடியே" போற்றும் பொருள் கேளாய்!

குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது = எங்கள் தொண்டை, கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடாது, பெருமாளே!
நாங்கள் தொண்டு செய்வோம்! நீ ஏற்றுக் கொண்டே ஆகணும்!

அது என்ன குற்றேவல்? குறு + ஏவல் = சின்னச் சின்ன வேலை! சின்னச் சின்ன ஆசை! :)

கட+உள் = கடந்து உள்ளவன்! பெரும் பெரியவன்! அவனுக்குப் போய் பெருசா நாம என்ன பண்ணிட முடியும்?
* அவனை எழுப்புறோம், விசிறுகிறோம், திரு முழுக்காட்டுறோம்!
* அவனுக்குப் பூச் சூட்டுறோம்! உணவு படைக்கிறோம், தூப-தீப-கற்பூர ஆரத்தி எல்லாம் காட்டுகிறோம்!
* அடியார்களுடன் கூடிப் பாடுகிறோம்! அடியார் தொண்டும், சமூகத் தொண்டும் செய்கிறோம்!

இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை? நமக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிக்கறோம்! அவனுக்குச் சும்மா ஒத்த ரூவாய்க்கு பூப் போட்டா போதுமா?
ஹிஹி! போதும்! போதும்!
குற்றேவல், ஆனால் குற்றமே இல்லாத ஏவல்
! அன்பால் செய்யும் தொண்டு! மனம் கசிந்து செய்யும் தொண்டு!

அம்மாவுக்கு ஒன்னுமே வாங்கிட்டுப் போகலை-ன்னாக் கூட அவங்க முகம் மாறி விடாது!
யம்மா, சாப்பாடு போடும்மா-ன்னு முன்னாடி உட்காருகிறோம் பாருங்க, அதுவே அவங்களைப் பொறுத்த வரை பெரிய தொண்டு தான்!

எப்படி இருக்கு கதை? சாப்பிடறது நாம! அது ஒரு தொண்டா? - ஹிஹி! அதான் குற்றேவல்! யம்மா, சாப்பாடு போடும்மா-ன்னு உரிமையோடு அன்போடு கேட்பது...சின்ன தொண்டு தானே-ன்னு எங்களைக் கொள்ளாமல் போகாது பெருமாளே! ஞாபகம் வச்சிக்கோ! எங்கள் கடன் பணி (கைங்கர்யம்) செய்து கிடப்பதே! உன் கடன் அதை ஏற்றுக் கொண்டு கிடப்பதே!


இற்றைப் பறை கொள்வான் அன்று! காண்! = ஏதோ பறை, பறை-ன்னு நோன்புச் சாமான் கேட்டோம்! நீயும் கொடுத்தாய்!
ஆனால் நாங்கள் கேட்டது சும்மா சடங்குக்கும், நோன்புக்கும் அடிக்கும் பறை அல்ல! இற்றைப் பறை கொள்வான் அன்று! அன்று! அன்று!

அன்னிக்கு ஒருத்தன், மரணமே வரக் கூடாது
* உள்ளும்/வெளியும், மேலும்/கீழும், மனிதன்/மிருகம்...என்றெல்லாம் அடுக்கி அடுக்கி வரம் கேட்டானே! அது போல எங்களையும் நினைச்சிட்டீயா?
* ஏதோ காசு, பணம், வீடு, வசதி, ஆஸ்தி, அந்தஸ்து கேப்பாங்க இவங்க! சரி கொடுத்துடலாம்-ன்னு நினைச்சியா?
இல்லை! இல்லை! இல்லை! இற்றைப் பறை கொள்வாம் அன்று! அன்று! அன்று!

நாங்கள் கேட்ட பறை = சாலப் + பெரும் + பறை
பரம்பரை, பரம்பரை-களாக வரும் பரம்+பறை!

பரமாத்வான நீ! = நீ தான் வேணும் எங்களுக்கு!
நாராயண"னே", நமக்"கே" பறை தருவான்
-ன்னு துவக்கத்திலேயே, முதல் பாட்டிலேயே சொல்லியாச்சு! வரம் எல்லாம் வேணாம்! நீ தான் வேணும்! ஆகவே உன்னைக் கொடு, என்னைத் தருவேன்!:)
கோவிந்தா = கோ-விந்தனே! பசுக்களான எங்களைக் காப்பவனே!

சென்ற இரண்டு பாசுரங்களிலும், இந்தப் பாசுரத்திலும் சேர்த்து, "கோவிந்தா-கோவிந்தா-கோவிந்தா" என்று மூன்று முறை அழைக்கிறாள் கோதை!
* கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
* குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!
* இற்றைப் பறை கொள்வாம் அன்று காண், கோவிந்தா!


கோவிந்த சப்தம் மங்களகரமான சப்தம்! எல்லா அவதாரங்களையும் ஒரே பெயரில் அடக்க முடியும்-ன்னா அது "கோவிந்த" என்ற ஒரே சொல்லில் மட்டும் தான், என்று மூக்கூர் சுவாமிகள் உபன்னியாசம் செய்வார்!
இறைவனின் திருநாமங்கள் பெரும்பாலும் மந்திரப் பூர்வமானவை! ஆனால் இந்த "கோவிந்தா" என்ற ஒரே திருநாமம் தான் மந்திரம் இல்லாமல், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் என்று ஆனது!

மாதவிலக்காய் இருக்கும் பாஞ்சாலி நடுச்சபையில் கூவியதும் "கோவிந்தா" என்ற நாமமே!
யாரோ ஒரு கிராமத்துவாசி "கோஹிந்தா"-ன்னு சொல்ல, அதை ஒரு வடமொழி வித்தகர் திருத்தினாராம்! வேண்டாம், அப்படியே சொல்லட்டும் என்று தடுத்தாட்கொண்ட கதையும் உண்டு!
- அப்படியான திரு நாமம், எளியோர்கள் ஒரு நாமம்! = கோவிந்தா! கோவிந்தா!


எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும் = எப்பப்ப எல்லாம் "எழும் எழும்" பிறவிகளோ, அப்பல்லாம்...

ஏழ் x ஏழ் பிறவின்னா என்ன? ஏழு பிறவியா? இல்லை ஏழேழு=நாற்பத்தொன்பது பிறவியா? :)
இதை வல்லுனர்கள் விதம் விதமா கணக்குப் போடுவாங்க!

* ஒரு சிலர் ஏழு பிறவி-ம்பாங்க = தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, விலங்கு, நரகர், தேவர், மக்கள்...
தேவர்களே ஆனாலும், மனுசனாய்ப் பிறந்தால் தான், எல்லாம் வினையும் தீர்த்து, மோட்சம் புக முடியும்! ஆகவே Last Stop மனுசன் தான்! :) - வைகுந்தம் புகுவது "மண்ணவர்" விதியே!

* இன்னும் சிலர் ஏழேழாய், ஒன்றுக்குள் ஒன்று அடங்கி இருப்பத்தோரு பிறவி-ன்னு கூடச் சொல்லுவாய்ங்க! - "மூவேழ்" சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே -ன்னு திருவாசகம்!
புல்லாகிப், பூடாய், புழுவாய், மரமாகிப்,
பல் விருகமாகிப், பறவையாய்ப், பாம்பாகிக்,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல் அசுராகி, முனிவராய்த், தேவராய்,
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


* ஆனால் கோதைக்கு இந்தக் கன்ஃப்யூஷனே இல்லை! அது ஏழோ, இல்லை இருவத்தி ஒன்னோ, இல்லை நாற்பத்து ஒன்பதோ...
அவ தான் எவ்ளோ பிறவி-ன்னாலும், வேணாம்-ன்னு சொல்லாமல், வேணும் வேணும்-ன்னு கேட்கிறாளே! மோட்சம் வேணாமா? - வேணாம்! அது சுத்த போர்! :)


நாம்: "என்னது மோட்சம் போரா?"

கோதை: "ஆமா! அங்கே மலர்கள் வாடவே வாடாது! தினம் தினம் பூமாலை, பாமாலை சூட்டிக் கொடுக்கத் தான் முடியுமா? இல்லை படுத்திருக்கும் பெருமாளை அப்படியே ஆசையாக் கட்டிக்கத் தான் முடியுமா?
யாருக்கு வேணும் மோட்சம்? போங்கய்யா, ஜீவாத்மா, பரமாத்மா-ன்னு சொல்லிக்கிட்டு இருங்க! எனக்கு ஒன்னியும் வேணாம்! நீங்களே வச்சிக்குங்க!"

நாம்: "அடிப் பாவீ...கோதை! லூசாடி நீயி? இவ்ளோ கஷ்டப்பட்டு, மார்கழி நோன்பெல்லாம் இருந்துட்டு, க்ளைமாக்ஸ்-ல வந்து மோட்சம் வேணாம்-ன்னு சொல்லுறியே?
மனுசனாப் பொறந்தாலே ஆயிரம் கஷ்டம்! அவனவன் இன்னொரு பிறவி வேணாம்-ன்னு தெய்வத்து கிட்ட வேண்டுறான்! நீ என்னடா-ன்னு பிறவி "வேணும்"ங்கிறியே? பிறவி எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

கோதை: ஒரு கஷ்டமும் இல்ல!
பூமியில தான் மாடு வேணும், வீடு வேணும்-னு விதம் விதமாச் சுயநலமா வேண்டிக்குறீங்க-ன்னா, "எனக்கு" மோட்சம் வேணும், "எனக்கு" மோட்சம் வேணும்-ன்னு மோட்சத்திலேயும் சுயநலமா?
போங்கடீ...நீங்க தான் லூசு! பிறவி என்பது கஷ்டமே இல்லையே!

* நீர் வாழ்வனவா? = மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!
* பறவையா? = கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!
* மரமா? = வேங்கடத்து செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே! எம்பெருமான் பொன்மலை மேல் "ஏதேனும்" ஆவேனே!

ஆல் திஸ் ஜீவாத்மா, பரமாத்மா, மோட்சம் எல்லாம் நீங்களே வச்சிக்குங்க! :)
ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்,
"எனக்கு" மோட்சம் வேணும், "எனக்கு" மோட்சம் வேணும் -ன்னு, எனக்கு-எனக்கு-ன்னு சொல்லிக்கிட்டே இருங்க!
ஒரு கையில் மணி, இன்னொரு கையில் செம்பு வச்சிக்கிட்டு, அனத்திக்கிட்டே இருங்க! ஹா ஹா ஹா! :)

அங்கே மோட்சத்துக்கே போனாலும்,
அவர் அவதாரம் எடுக்கும் போது, நம்மளையும் கீழே கூப்புடுவாரு! அப்போ வர மாட்டேன்-ன்னா சொல்லப் போறே?
உனக்கு உன் சுயநலமான மோட்சம் வேணுமா, இல்லை அன்பாக அவரு வேணுமா? யோசி...


உன் தன்னோடு உற்றோமே ஆவோம் = உனக்கு உறவாக அமைவோம்!

அவ்ளோ தான்! "நீ-நாங்கள்" உறவு! இது பிரணவம் போல! பிரிக்கவே முடியாது! உன்தன்னோடு (அ) + உறவேல் (உ) + நமக்கு (ம)! இங்கு ஒழிக்க ஒழியாது!

உனக்கே நாம் ஆட்செய்வோம் = உனக்"கே" நாம் ஆளாக இருப்போம்!
மாம் "ஏகம்" சரணம் வ்ரஜ-ன்னு நீ தானே அன்று சொன்னாய்?
அதான் உனக்"கே" நாம் ஆட்செய்வோம்!
என்னிக்கும் நான் உன் "ஆளு" கண்ணா! அதை மறந்துடாதே! :)

கைங்கர்யம்-ன்னு ஒன்னு இருந்தாப் போதும்! குணானுபவம்-ன்னு ஒன்னு இருந்தாப் போதும்!
நான் பூமாலை, பாமாலை சூடி அவனுக்கும் சூட்டிக் கொண்டே இருப்பேன்! பதிவு போட்டுக்கிட்டே இருப்பேன்! :)

ஏழேழ்-ன்னு எத்தனை பிறவி எழுந்தாலும், எழுந்தாலும்...I dont care! I will enjoy the thirumeni sountharyam of my Love:)
எனக்குக் காமம் தான் வேணும்! காமம் தான் வேணும்!

மற்றை நம் காமங்கள் மாற்று = அதுக்குத் தடையா, போட்டியா, வேறெந்த காமம் வந்தாலும், அதை மாத்திரு கண்ணா!

சர்வ தர்மான் பரித்யஜ்ய = எல்லாத் தர்மங்களையும் விட்டுவிட்டு-ன்னு எங்களுக்குச் சொன்னாய் அல்லவா!
சர்வ காமான் பரித்யஜ்ய = மற்றை நம் காமங்கள் மாற்று-ன்னு நாங்கள் உனக்குச் சொல்கிறோம்!

கண்ணனுக்குப் போய் சேராத எங்களின் மற்ற காமங்களை, மற்ற விருப்பங்களை எல்லாம் ஒன்னு விடாமல் மாற்றி விடு!
சில சமயம் இவ்ளோ பேசிட்டு நானே ஒரு வேளை சபலப் பட்டுப் போயிடலாம்! இந்தப் பூமியோட ராசி அப்படி! அதுனால....

மற்றை நம் காமங்கள் மாற்று! மாற்று!
கண்ணனின் காமங்கள் ஏற்று! ஏற்று!


ஏல் கொள் பெருமாளே! என்னை-எங்களை ஏற்றுக் கொள்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!


Read more »

Tuesday, January 11, 2011

மார்கழி-28: கடவுளாலும் முடியாத காரியம்...DNA!

முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பான்! அன்பினால் சிறுபேர் அழைத்தனமும் சீறி-"அருளுவான்"! = எதுக்கு திட்டியவனைப் போய் வாழ வைக்கணும்?

இது திருப்பாவை - மீள்பதிவு தான்! 2008 இல் எழுதியது! இந்த மார்கழியில் சில பல காரணங்களுக்காக, ஒன்னும் எழுதலை! அதான் இப்படி!
பொங்கலுக்கு முன்னுள்ள மூன்று நாளும், மார்கழி முத்துக்கள்! அன்று வரும் பாசுரங்களில் ஒரு காதல் வேள்வியே அடங்கி இருக்கு! சும்மா வாசிச்சிப் பாருங்க, தெரியும்! :)


அன்னிக்கு அப்படித் தான், அடுத்த வீட்டுக் குழந்தை ஓடிவந்து மேலேறிக்கிச்சி! புதுசா வந்த Samsung Behold T919 வேணுமாம் விளையாட! நான் தரவில்லை! முடியைப் பிடிச்சி இழுக்குது! கன்னத்தில் கடிக்குது! சரி, படவா என்று திட்டுவோம், ஆனால் சனியனே- செத்துப் போ-ன்னு திட்டுவோமா?

தலைமுடியைப் பிடிச்சி இழுத்தாக்கா, சோறு கிடையாது என்று தெரிஞ்சா குழந்தை இழுக்குமா?
இழுத்த குழந்தை அன்று சாப்பிடாவிட்டால் மாறி மாறிக் கெஞ்சியும், கொஞ்சியும் ஊட்டுகிறோமே?
* "அன்பினால்" "சிறுபேர் அழைத்தனமும்", "சீறி"-"அருளுவான்"!

கடவுளை.....ஏதோ.....சர்வ சக்தன், சர்வ சுதந்திரன், சர்வ ஈசன்(சர்வேசன்), சர்வ சுவாமி, சர்வ லோக பாலகன், சர்வ சிரேஷ்டன், சர்வ அந்தர்யாமி-ன்னு.....பல "சர்வ" போடுகிறோம்! ஆனால் அப்பேர்ப்பட்ட கடவுளாலும் முடியாத ஒரே காரியம்.....ஒன்னு இருக்கு!

ஆகா...என்ன அது? அதைக் கோதை வெட்ட வெளிச்சமா ஆக்குறா! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,

உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


பாடலின் விளக்கத்துக்குப் போவோம்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு தாய்! மாறிக்கிட்டே இருக்காய்ங்க! ஒரு பிறவித் தாய்க்கே இம்புட்டு பாசம்-ன்னா, எல்லாப் பிறவிக்கும் தாயான தாய்க்கு எம்புட்டு பாசம் இருக்கும்?

உறவுகள், ரெண்டு வகை = சரீர பந்துக்கள் (உடல் உறவினர்)! ஆத்ம பந்து! (உயிர் உறவினர்)
சரீர உறவினர்கள் எப்ப வேணும்னாலும் வருவாங்க! எப்ப வேணும்னாலும் போவாங்க! யாருக்கு எப்போ பிடிக்காமப் போகும்-ன்னு, யாருக்குத் தெரியும்? :)
* அவங்களைப் பொறுத்த வரை = நீ முதலில் ஒரு சரீரம்! அப்பறம் தான் உன் உள்ளம்!
* ஆனா ஒரே ஒருத்தருக்குத் தான் = நீ முதலில் உள்ளம், அப்பறம் தான் உன் சரீரம்!

சும்மா கற்பனை பண்ணிப் பாருங்க! இந்த அறிவியல் காலத்தில் கூட, அட்ரெஸ் தெளிவா இல்லீன்னா ஒரு பொருளைக் கொண்டு போய் கொடுப்பது சிரமமா இருக்கு! பின் கோடு, சிப் கோடு, யூனிக் கோடு-ன்னு பல கோடுகள்! அதில்லாம தபால் அனுப்பினா திவால் தான்!
ஆனால் பிறவிகள் தோறும்...உன் கர்மாக்கள்...உன் வினைகள்...கரெக்டா உன் கிட்ட வந்து சேருதே? எப்படி?

* முகத்தைப் பார்த்து கொடுக்க முடியாது - புது உடம்பு வந்தாச்சி!
* பேரைப் பார்த்து கொடுக்க முடியாது - ஜீவன் நாம ரூபம் இல்லாதவன்!
* அட்ரெஸ் பார்த்து கொடுக்க முடியாது - ஆளுக்கு அட்ரெஸ் இருக்கான்னே தெரியாது! எங்காச்சும் காட்டுக்குள்ள கூட பொறந்திருக்கலாம்!
* பேங்க் அக்கவுன்ட் பார்த்து கொடுக்க முடியாது - அதைச் சொந்தக்காரவுங்க, எப்பவோ சாப்பிட்டு, வெத்தலை-பாக்கும் போட்டிருப்பாங்க!:)

எப்படி, ஒரு அடையாளம், Identification, Embedded Chip கூட இல்லாம, புண்ய-பாவக் கணக்குகள், கரெக்ட்டா பட்டுவாடா ஆகுது? ஹா ஹா ஹா!
* இறைவனைப் பற்றி இறைவனே தான் அறிந்து கொள்ள முடியும்!
* ஒரு குழந்தையை, அதன் தாயே தான் அடையாளம் காட்ட முடியும்!


பிறந்து ரெண்டு நாளே ஆன குழந்தை...
பார்ப்பதற்கு மத்த குழந்தைகளைப் போலவே இருந்தாலும், அதன் தாய்க்குத் தன் குழந்தையை எளிதில் அடையாளம் காண முடியும் அல்லவா!
* நாம் காட்சியை மட்டும் வைத்து அடையாளம் கண்டால்...
* அம்மா வாசனை, காட்சி, குரல், சுவை, தீண்டல்-ன்னு ஒரே நொடியில் சொல்லிடுவா!

அப்படித் தான் பிறவிகள் தோறும், நம்மை இறைவனும் அடையாளம் கண்டு கொள்கிறான்! Embedded Chip எல்லாம் எதுவும் வைக்காமலேயே! :)

இப்பேர்ப்பட்ட இறைவன்...அவனாலும் முடியாத ஒரே காரியம்...
* நாம்-அவன் என்கிற இந்த உறவை அழிக்கவே முடியாது!
* அதை நம்மாலும் அழிக்க முடியாது! அவனாலும் அழிக்க முடியாது!


பொறந்தாச்சு! இனி "நான் அம்மா இல்லை"ன்னு அவ சொன்னாலும் அம்மா, அம்மா தான்!
"ச்சீ நான் உன் புள்ளை இல்லை"ன்னு சொன்னாலும் புள்ளை, புள்ளை தான்!
= DNA மகத்துவம் அப்படி!!! அம்மாவோ/புள்ளையோ காசு கொடுத்து, அறுவை சிகிச்சை பண்ணி DNA-வை மாத்திக்க முடியுமா? :))

சர்வ சக்தன், சர்வ சுதந்திரன், சர்வ ஈசன் (சர்வேசன்), சர்வ சுவாமி, சர்வ லோக பாலகன், சர்வ சிரேஷ்டன், சர்வ அந்தர்யாமி-ன்னு...பல "சர்வ" போட்டாலும்...கடைசியில்.....
* அவன் சர்வ சரண்யன்! சர்வ சரண்யன்! சர்வ சரண்யன்!
* உன் தன்னோடு - உறவேல் நமக்கு - இங்கு ஒழிக்க ஒழியாது!!!

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எனக்குமான DNA-வை நீயே நினைச்சாலும் ஒன்னுமே பண்ண முடியாது! :)
அடுத்த முறை நீ ரொம்ப மக்கர் பண்ணேன்னு வையி, ஏய் பெருமாளே! DNA Test-க்கு வரீயா-ன்னு கூப்பிடுவேன்! :)

கோதை சொல்லிக் கொடுக்கும் இந்த சூப்பர் உத்தியைப் பார்க்கலாமா? வாங்க, விளக்கத்துக்குப் போகலாம்!



கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம் = கறவை மாட்டுக்குப் பின்னாலேயே போய், காட்டிலே மேய விட்டு, பின்னர் சாப்பிடுவோம்!

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து = இப்படி மாடு மேய்க்கும் கூட்டம்! ரொம்ப பெருசா அறிவெல்லாம் இல்லாத ஒரு ஆயர் குலம்!
அந்தக் குலத்துக்கு ஜப-தப-ஹோமம் எல்லாம் ஒன்னும் செய்யத் தெரியாது! வியாபாரம் கூட பெருசா ஒன்னும் தெரியாது! ஞான நூல்கள் எல்லாம் படிக்கத் தெரியாது! ஆன்மீகப் பதிவு கூடப் போடத் தெரியாது! :)

உன் தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம் = அந்த மாதிரியான ஒரு கூட்டத்துக்கு நடுவில், நீ வந்து பொறந்தீயே! என்னைப் பெத்த ராசா! என்ன புண்ணியம் செஞ்சோமோ நாங்க?

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா = வெறுமனே "குறை இல்லாத கோவிந்தா"-ன்னு சொல்ல மனசு ஒப்பலையே! இன்னிக்கி வேணும்னா குறை இல்லாம இருக்கலாம்! ஆனா நாளைக்கு மாறிடுவாங்களே!
நீயோ, குறை "ஒன்றுமே" இல்லாத கோ-விந்தன்!

சென்ற பாட்டில் சொன்னது போல், இனி திருப்பாவை முடியும் வரை கோவிந்த கோஷம் தான்! கோவிந்த நாமம் மிக மிக மங்களகரமானது என்று நேற்றே பார்த்தோம்! நோன்பு முடிந்த வெற்றியில், ஒவ்வொரு பாட்டிலும், கோவிந்தனை வலிய இழுத்து, கொண்டாடுகிறார்கள்! கோவிந்த நாம சங்கீர்த்தனம்...கோவிந்தா கோவிந்தா!

* ஆபாட மொக்குல வாடா, அடுகடுகு தண்ணல வாடா = கோவிந்தா கோவிந்தா!
* வட்டிகாசுல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஏடு கொண்டல வாடா, வேங்கட ரமணா = கோவிந்தா கோவிந்தா!
* ஆபத் பாந்தவா, அனாத ரட்சகா = கோவிந்தா கோவிந்தா!



உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = நீ+உறவு+நாங்கள் = அ+உ+ம = ஓம்!
அகரம்=அவன்; மகரம்=நாம்; உகரம்=(அவன்-நாம்)உறவு!

பிரணவ சொருபத்தை இப்பாசுரத்தில் மிக அழகாகக் காட்டுகிறாள் கோதை!
* எல்லாரும் பிரணவப் பொருள், பிரணவப் பொருள்-ன்னு சும்மா பேசறோமே தவிர, முருகப் பெருமான் அப்பாவுக்குச் சொன்ன பொருள் தான் என்ன?
* அதை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே? ஏன்? பிரணவம் என்பது ரகசியமா?
* ஆனால் கோதை இதோ சொல்கிறாளே! ஊர் அறியப் போட்டு உடைத்து விட்டாளே!

ஓம் என்னும் பிரணவத்துக்குப் பொருள் தெரியாமல் தானே பிரம்மா அவதிப்பட்டார்? ஆசை முருகன் தலையில் குட்டினான்? தெரியாத பிரம்மனுக்குப் பிறகு சொல்லிக் கொடுத்தானா?
சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் "இரு செவி" மீதிலும் பகர் என்று ஆனதுவே! எப்படி ஒரே நேரத்தில், இரண்டு செவி மீதிலும் சொல்ல முடியும்? அருணகிரி பொய் சொல்ல மாட்டாரே! - தனிப் பதிவாய் தான் இட வேணும்! யாரேனும் தைப் பூசத்தின் போது அடியேனுக்கு ஞாபகப் படுத்துங்கள்!


இங்கு ஒழிக்க ஒழியாது
= அந்த, "நீ-நான்" உறவு, பிரணவ மயமானது! அதை நீயே ஒழிக்க நினைச்சாலும் ஒழியாது! ஏன் தெரியுமா?
(ஓம்)+நமோ+நாராயணாய = 1+2+5 = 8 = அஷ்டாட்சரம் என்னும் திருவெட்டெழுத்து!
ஓம் என்பது தமிழில் எழுதும் போது, பார்க்க ஈரெழுத்து போல இருப்பினும், அது ஒரே எழுத்து தான்! அ+உ+ம சப்தம் சேர்ந்த ஏகாட்சரம்!
* உந்தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம = ஓம்!
அந்த உறவை, அந்த "ஓம்"-ஐ, உன்னால் கூட அழிக்க முடியுமா? அழித்தால் உன் அஷ்டாட்சரத்துக்கே பொருள் இல்லாமல் போய் விடுமே?

ஏன்னா, அந்த "ஓம்" என்பதைச் சேர்த்தா தான் எட்டு எழுத்து! "ஓம்"-ஐ நீக்கிப் பாருங்கள்! ஏழாகி விடும்! சப்தாட்சரம்-ன்னு ஆயிரும்! :)

இப்படி ஓங்காரம் சேர்ந்தே இருக்கும் "ஒரே" மந்திரம் என்பது அஷ்டாட்சரத்துக்கு மட்டுமே உரிய ஒன்று!
"ஓம்" என்பதைச் சேர்த்தால் தான் அஷ்டாட்சரப் பூர்த்தி! உலகில் வேறு எந்த மந்திரத்துக்கும் இப்படி ஓங்காரத் த்வனி, பிரணவ மயம் இல்லை!

* நம+சிவாய = 5 = பஞ்சாட்சரம்! திருவைந்தெழுத்து! - "ஓம்" என்பது அதில் இல்லை! ஓம் என்பதைப் பஞ்சாட்சரத்துடன் தனியாகக் கோர்த்து தான் சொல்லணும்!
* சரவண+பவ = 6 = சடாட்சரம்! திருவாறெழுத்து! - "ஓம்" என்பதைச் சடாட்சரத்துடன் தனியாகக் கோர்த்து தான் சொல்லணும்!
* (ஓம்)+நமோ+நாராயணாய = 8 = அஷ்டாட்சரம்! திருவெட்டெழுத்து! - "ஓம்" என்பதைக் கோர்க்கவே தேவையில்லை! தானாகவே அமைந்து விடுகிறது!

ஓங்காரமாகிய பிரணவம், மந்திரத்துக்குள்ளேயே இயைந்து ஒலிப்பது இதன் தனித்துவம்! அதை மந்திரத்தில் இருந்து பிரிக்கவே முடியாது!
அதனால் தான் பிரணவாகாரம் என்று சொன்னான் "குரு"குகனான எங்கள் முருகப் பெருமான்! அரங்க விமானமும் பிரணவாகார விமானம் என்றே வழங்கப்படுகிறது!

(குறிப்பு: இதனால் பஞ்சாட்சர, சடாட்சர, ஏனைய மந்திரங்கள் எல்லாம் தாழ்ச்சி என்றோ, திருவெட்டெழுத்து மட்டுமே உசத்தி என்றோ, தெளிவொன்றில்லாத குறுகுறு மனமாய்க் கணக்கு போடக் கூடாது! ஒவ்வொரு மந்திர சப்த மாத்திரமும் ஒவ்வொரு நன்மைக்கு ஏற்பட்டது! இது பிரணவாகாரம் என்பதைக் காட்ட வந்த மந்திரம்! அவ்வளவே! இதற்கு மேல் வீண் கற்பனைகளை, அவரவர் மனசுக்கு ஏத்தாப் போலே, உயர்ச்சி/தாழ்ச்சி-ன்னு வளர்த்துக்க வேணாம்!)

* இப்படியான பிரணவம் = உந்தன்னோடு+உறவேல்+நமக்கு! = அ+உ+ம!
* அடே பெருமாளே, இப்போ அந்த உறவை=ஓம், அதை ஒழியேன் பார்ப்போம் என்று கோதை சவடால் விடுகிறாள்! புடிச்சாப்பா பாயின்ட்டை! அவன் ஒன்னுமே பண்ண முடியாது! ஹா ஹா ஹா! :)



அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள்! அப்பாவிச் சிறுவன் சிறுமிகள்! :)
எங்க நல்லது எது-ன்னு எங்களுக்கே தெரியாது! எங்கள் நல்லது நாடும் உள்ளங்களை நாங்களே போட்டுத் தாக்குவோம்! ஒரு பொருள் - நேற்று நல்லதாகத் தெரியும்! ஆனா இன்னிக்கு மாறிடும்! நாளை மீண்டும் நல்லதாத் தெரியும்! இப்படி "நல்லது" அறியாக் கூட்டம் நாங்க!

அன்பினால் உன் தன்னை = ஏதோ, அன்பாலேயும், உரிமையாலேயும், உன்னை
சிறு பேர் அழைத்தனமும் = என்னென்னமோ சொல்லி இருக்கோம்! எப்படி எப்படியோ திட்டி இருக்கோம்!

சீறி அருளாதே = பூச்சாண்டி காட்டுவது போல் சீறுவாயே! அப்படிச் சீறக் கூடச் சீறாதே! சீறினாலும் அருள்வாய் அல்லவா! முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பாய் அல்லவா!

இறைவா, நீ தாராய் பறை = இறைவா! குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா! நீ தான் அபயம்! அபயம்!

நேற்றைய பாசுரத்திலேயே பறை என்னும் நோன்புப் பொருளைக் கொடுத்து விட்டாய்! இருந்தாலும் இன்னிக்கும் பறை தாராய்-ன்னு கேட்கிறோமே-ன்னு பாக்குறியா? கேட்டுக் கேட்டுப் பழக்க தோஷம் ஆயிருச்சா? ஹிஹி! ஏன்-ன்னு அடுத்த பாசுரத்தில் சொல்கிறோம்! உனக்கே இன்ப அதிர்ச்சி கொடுக்கிறோம்!

இப்போதைக்கு, இன்றைய பாட்டில்...."நீ-நாங்கள்" உறவைப் பிரிக்கவே முடியாது! அதனால் தான்
* "உன்" தன்னைப் பிறவி பெறுந்தனை
* "உன்" தன்னோடு உறவேல் நமக்கு
* "உன்" தன்னைச் சிறு பேர் அழைத்தனமும்
என்று மூன்று முறை "உன், உன், உன்" என்று ஒரே பாட்டில் சொல்லி,
"நம்-அவன்" உறவைக் கல்வெட்டு போல வெட்டி வைக்கிறாள் இந்த அறியாப் பெண்! அப்பாவிச் சிறுமி!

குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா - இறைவா, நீ தாராய் பறை!
எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!


எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிய "குறையொன்றுமில்லை" என்னும் அழியாக் காவியமான பாடலின் கரு, இந்தப் பாசுரத்தில் இருந்தே எடுக்கப்பட்டது!
குறையொன்றுமில்லை கண்ணா, குறையொன்றுமில்லை கோவிந்தா = குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு....
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP