Monday, January 09, 2017

அகர முதல சம்ஸ்கிருதம்! ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!

நலம் மிகு நண்பர்களுக்கு, அன்பார்ந்த குறள் வணக்கம்!
"அஹர" முதல எழுத்தெல்லாம் - "ஆதி பகவான்", முதற்றே "லோகம்"

தமிழ் மொழியின் Signatureஆக விளங்கும் திருக்குறளே, Sanskritஇல் தான் தொடங்குறது? பார்த்தேளா? பார்த்தேளா?
*அகர முதல சம்ஸ்கிருதம்!
*ஆதி பகவன் சம்ஸ்கிருதம்!
அட, தமிழே= சம்ஸ்கிருதம் தான் ஓய்! "ஜமீஷ்" என்பதே "தமீழ்" எ. ஆகியது!:)))

*சம்ஸ்கிருதமே = தமிழில் உள்ள சொற்களுக்கு அடிப்படை!
*தமிழ் உட்பட..இந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் தாய்= சம்ஸ்கிருதமே!

*சம்ஸ்கிருதம், தெய்வீகம் நிரம்பிய மொழி; தமிழும் சுமார் தான்; ஆனா சில "மந்த்ர ஸப்தங்கள்" தமிழில் இல்லை! தெய்வாம்சம் இல்லை!

*சம்ஸ்கிருதத்தை, மொழியாய்ப் பார்க்காதீர்கள்; It's a great culture! அதை ஒரு "கலாச்சாரமாய்ப்" பாருங்கள்!
*தமிழை, பற்று கொள்ளாதீர்கள்; It;s just a communication tool; குறுகிய மனசை விரிவு படுத்துங்கள்!

*சம்ஸ்கிருதம், தமிழ்.. இரண்டுமே நம் கண்கள்!அதில், ஒரு கண் மட்டும் சற்றே உசத்தி; ஏனென்றால், அந்தச் சம்ஸ்கிருதக் கண்= பாரதீய தெய்வீகம்!

மேற்கண்டவை, என் சொற்கள் அல்ல!
*சில பிரபலங்கள்,
*பல ஆன்மீக/தெய்வீக ஆட்கள்,
*அக்ஷராதிபதிகள் (I mean.. எழுத்தாளர்கள்)
*பாரதீய தர்ம & ஞான மரபுக் காவலாளிகள்.. சொல்பவையே!

இப்படிச் சொல்வோரின் தனிப்பட்ட சாதிகளை, நாம் ஆராயத் தேவையில்லை!
"சம்ஸ்கிருத பாசம்" மிகுதியாகக் கொண்டவர்கள் யார்? = இது உங்களுக்கே தெரியும்:)

இப்படி, "சம்ஸ்கிருத பாசம்" கொண்டவர்கள் எத்தனை பேருக்கு,
சம்ஸ்கிருதம்= எழுதவும்/ படிக்கவும் தெரியும்? என்பது வேறு கதை!:)

"ஸ்லோகார்த்தம் ஏவ விவரண ஹஸ்தோபி" - இதன் முழுமையான பொருள் என்ன? என்று எனக்கு 5 ஆண்டுகளாய்ச் சொல்ல முடியாம.. இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்காங்க, பல Sanskrit அபிமானிகள்!:)

Sanskrit தெரியாவிட்டாலும், "அங்கே தான் தங்கள் வேர்!" என்று மனத்து ஆழமாக நம்புகிறவர்கள்!
அதனால், அங்கு அதீத பாசங்கள் இயற்கையே! நேரடியாகவும்/ மறைமுகமாகவும் வெளிப்படுத்துவார்கள்!

இருக்கட்டும்! ஆனால்..
*ஒரு மொழி மேல் பாசம் கொள்வது வேறு!
*அதை.. இன்னொரு மொழியில், கள்ளத்தனம் செய்து கலப்பது வேறு!
*கலந்த பின், மூல மொழியின் பெருமையெல்லாம், தங்களுடையதே! எ. தம்பட்டப் பொய்ம்மை வேறு வேறு!



சம்ஸ்கிருதம் = செம்மொழி தான்; மறுப்பே இல்லை!
பாளி/ பிராகிருத மொழியிலிருந்து பலவும் இழுத்துக் கொண்டாலும்,
இன்று, ஒரேயடியா வழக்கு  ஒழிந்து விட்டாலும்,
வெறுமனே பிராமணீய/ மதச் சடங்கு 'பாஷை'யாய் ஒடுங்கி விட்டாலும்,

சம்ஸ்கிருதமும் செம்மொழியே! இதை.. தமிழ் தயங்காது ஒப்புக் கொள்ளும்!

ஆனால், என் மனசு வலி என்னவென்றால்:
சம்ஸ்கிருதத்தை, பிற மொழிகளிலெல்லாம் ஏற்றி ஏற்றிக் கலப்பும் திணிப்பும் செய்கிறார்களே?
குறிப்பாகத் தமிழில்; இது ஏன்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?

ஓவ்வொரு மொழியும் உன்னதமே!
மொழிக்குள்  = "பல தலைமுறை மனிதம்" வாழ்கிறது!
அந்த “மனிதம்” மதிக்கணும்; திணிக்கக் கூடாது!

ஒரு பெரும் தொல்-மொழியின் மரபை, "சிறுமை" செய்து,
//பாத்தீங்களா? உங்க தமிழ் “இலக்கணம்” என்ற சொல்லே = எங்கள் சம்ஸ்கிருத “லக்ஷணம்” தான் டா!//
= ஏன் இந்த மனப்போக்கு???
= எதிர்ப்பது, இத் "திணிப்பை" மட்டுமே!
= எதிர்ப்பது, இத் திணிப்பு செய்வோரை மட்டுமே! எல்லாப் பிராமணர்களையும் அல்ல!

சம்ஸ்கிருதம் தானாய் வளராமல், இன்னொன்றில் ஏறி,
Parasite போல், மூல மொழிச் சொற்களை அழிப்பதால் மட்டுமே = எதிர்ப்பு!


இதைச் சம்ஸ்கிருதம் என்னும் மொழி செய்யவில்லை; அது நல்ல மொழி தான்!
இதை ஆட்களும்/அதிகார அமைப்புமே செய்கிறார்கள்; அதற்கு மட்டுமே எதிர்ப்பு!

(மற்றபடி, என் அன்புக்கினிய ஆசிரியர்/ திருநின்றவூர் கோயில் பட்டர் ஸ்ரீ. உ.வே. வேங்கட கிருஷ்ணமாச்சாரியார் மூலமாக,
நானே சம்ஸ்கிருதம் எழுதவும் படிக்கவும் அறிவேன்.. ஸாம வேத - சாந்தோக்ய உபநிஷதம் வரை!

அன்று, அன்னார் இட்ட வித்து! 
இன்றும் உதவுகிறது, தமிழைச் சிறுமை செய்யும் பிராமணீய அரைகுறைகளை, தடி கொண்டு நொறுக்க!:)
அமர துருஷ்ட ஸ்வ-விக்ரம! சமர ஜூஷ்ட பிரமிக்ரம)


சரி, நாம் முதல் திருக்குறளுக்கு வருவோம்!
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு
தமிழர்களின் தன்மானம்/பெருமிதம் = இக் குறள்! அதில் கை வைக்கலாமா?

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= இந் நான்கு சொற்களும் சம்ஸ்கிருதமா?
= சம்ஸ்கிருதம், தமிழுக்கு இட்ட பிக்ஷையா, முதற் குறள்?
= வள்ளுவர், "தமிழ் ஒரு கண்; சம்ஸ்கிருதம் ஒரு கண்" எ. வாழ்ந்த மஹரிஷியா?

இப்படியெல்லாம் (பொய்) சொல்வது யார்?
 = As usual, காஞ்சிப் (போன) பெரியவா:)

*அவரை முன்னிட்டு
*அவரின் அதீத எளிமை, பக்தி, ஞானம் என்ற போர்வையில்..
*அவரைப் போலவே Sanskrit பாசம் கொண்ட, ஆனால் அவர் போல் Sanskrit அறிவிலா அரைகுறைகள்,
*சமயம் கிடைக்கும் போதெல்லாம், 'விஷத்தைக்' கலந்து கொண்டே இருக்கிறார்கள்!


மேற்கண்டவாள்: தமிழ் + சம்ஸ்கிருதம், இரண்டுமே அறியா அற்ப அறிவிலிகள்!
கீழ்க்கண்டவாள்: சம்ஸ்கிருதம் அறியா விட்டாலும், தமிழ் மட்டுமே கொஞ்சூண்டு பழக்கப்பட்ட எழுத்-தாளர்கள்!
தமிழன்னையை, சரஸ்வதி மாதா ஆக்கும் Projectஇல் இருப்பவர்கள்!



இணையத்தில், இந்தச் சிவப்பு முக்கோண ஆசாமிகளிடம், விழிப்பாகவே இருங்கள்!
நட்பு போல் நடித்து, வேளை பார்த்து.. நச்சுப் பாம்பு போல் கொத்தி விடுவார்கள்!:(

இந்தச் சொக்கன், பாரா, பீயே. கிருஷ்ணன் எழுத்-தாளர்களை விட, 
அந்த அற்ப அறிவிலிகள், @amas32 & @n_shekar போன்றவர்கள் தான் 
= மிகு 'விஷம்'! மிக்க 'அபாயம்'!

ஏனென்றால்.. உங்க கூட நட்பு பாராட்டுவது போல பசப்பி, ஆன்மீகம் பேசுவது போல் நடித்து, "மென் முறையில் விஷம்" ஏற்றும் விற்பன்னர்கள்!
எழுத்தாளர் எ. பீடத்தில் உட்காராது, உங்க கூடவே பழகி, உறவாடிக் கெடுக்கும் Social Virus!

*பின்னவர்களை= அடையாளம் கண்டு கொள்ள முடியும்!
*முன்னவர்களை= நட்பு வளையம் எ. மாயப் போர்வை மறைக்கும்!

தமிழையே சிதைத்தாலும்.. உங்கள் நண்பர்கள் என்பதற்காக, நீங்கள் Adjust செய்து கொண்டு போகிறீர்களே?
ஆனா அவர்களோ, 'பகவத் கீதையில் ஜாதி' என்று ஒரு சொல் சொன்னாலே, நட்பு கூட பாராமல், பொங்கி வருகிறார்களே? ஏன்?

இதான் ஒங்க "நட்பா"?
தமிழையோ/ குறளையோ இப்படில்லாம் சிதைக்காதீங்க! -ன்னு,
உங்களால் அவிங்க கிட்ட சொல்ல முடியலையே? ஏன்?


"இது அவிங்க கருத்து! அவரவர் கருத்து அவர்களுக்கு!" எ. நீங்க Escape ஆக முடியாது!
*அழகில் சிறந்தவர் = ரஜினியா? கமலா? என்றால்..
அப்போ அவரவர் கருத்து! ஒவ்வொருவரின் அழகு அளவுகோல் மாறுபடும்!
*ஆனால் "தமிழ்ச் சிதைப்பு" = அவரவர் கருத்து அல்ல!
அறம் சார்ந்தது! அறத்தின் அளவுகோல் மாறாது!

"ராஜபட்சே கருத்து அவருக்கு! அவர் கருத்து அவர் வரையில் சரி!" என்று
ட்விட்டரில் இந்த Sanskrit கும்பலோடு ஈஷிக் கொள்ளும் ஈழத்து நண்பர்கள் கிட்ட சொல்லுங்களேன் பார்ப்போம்?
வலிக்கும்ல?:( அதே தானே தமிழ்ச் சிதைப்பும்?

என் அன்பு கெழுமிய ஈழம் & தமிழகத் தமிழர்களே,
உங்கள் Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்!

வெறுமனே.. தமிழ்ச் சினிமா இசை, தமிழ் இலக்கியக் கம்பன் என்றெல்லாம் உங்கள் 'சுயம்' பரவ வேண்டி,
அவர்கள் Media பலத்துக்குப் பல் இளித்து, ராஜபட்சே-கர்னல் விநாயகமூர்த்தி முரளிதரன் போல் மாறி விடாதீர்கள்! (கர்னல் கருணா எ. சொல்லை, அதே பேருள்ள நண்பர்கள் நலம் கருதித் தவிர்க்கிறேன்)

யாராயினும்.. தமிழ்ச் சிதைப்பை, பொதுவெளியில் தட்டிக் கேளுங்கள்!

இல்லாவிடின்..உங்களைத் தமிழ் அறம் சூழும்!
பெருஞ்சித்திரனார் அறம்! இட்ட சாபம் முட்டும்!




இனி, பேசுபொருளுக்கு வருவோம்..
அகர முதல = சம்ஸ்கிருதமா? ஆதி பகவன் = சம்ஸ்கிருதமா? 

1. அகரம்  2. ஆதி 3. பகவன்  & 4. உலகு
= தமிழ்ச் சொற்களே என்ற ஆதாரம்/ தரவு தருகிறேன்! இதோ!

அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
பொருள்:
எல்லா எழுத்துக்கும், அகரம் முதல் ஆதல் போல்
எல்லா உலகுக்கும், இறைவன் முதல் ஆகின்றான்

1. முதல் சொல் = அகரம்
அகரம் என்றாலே சம்ஸ்கிருதம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?
ம் -ன்னு முடிஞ்சா சம்ஸ்கிருதமா?
ழ-வை= ழகரம் என்போம்! அப்போ ழ= சம்ஸ்கிருதமா?:)
உங்களுக்கே தெரியும், ழ= தமிழுக்கே உரிய சிறப்பெழுத்து என்று!

அ என்னும் “ஓசை”
முதல் எழுத்தாய்= உலகின் பல மொழிகளிலும் உள்ளது!

அ in Tamizh,
A in English,
Alpha α in Greek,
ā in Latin,
诶 in Chinese,
అ in Telugu,
ಅ in kannada,
അ in Malayalam,
অ in Bengali

கிரேக்கம், இலத்தீன், சீன மொழியில் உள்ள "அ"கரம் கூட= சம்ஸ்கிருதமே என்று சொல்வீர்களா என்ன?:)

தாய்மொழி என்று ஒரு மொழியைப் பழகும் நேரம் வரும் போது,
"அ" என்ற ஒலியே..
உலகெங்கும் முன்னிறுத்தப்படுகிறது! இது எதனால்?

அகர ஓசை= பல பண்பாடுகளுக்கும் முதல் ஓசை!
மாந்தவியலின்.. பழங்குடித் தொல்லியல் ஓசை!
"அ" என்ற ஒலி = ஒலிக்காமலேயே ஒலிக்கவல்ல, உலகப் பொது ஒலி!

ஒரு குழந்தை.. நெட்டொலி தான் முதலில் எழுப்பும்!
தா, மா, பா என்ற 'நெடில்'ஒலிகள் தான், வீட்டுக் குழந்தைகள் முதலில் பழகுவதைக் காணலாம்!
'தாத்தா' வேகமாய் வரும்; ஆனா 'அப்பா' மெதுவாய்த் தான் வரும்:)

ஆனா, அந்த நெட்டொலியிலும், ஒளிந்துள்ள குற்றொலியை அறிவீர்களா?
"அ" ஒலி = உயிர் ஒலி
ஒரு குழந்தை வாயைத் திறக்கும் முன்பே, உடலில் தங்கி விடுகிறது உயிர்ப்பு!

இந்த வரியைப் படிக்கும் போதே, ஏதாச்சும் பேசத் துவங்குங்களேன்! உதடு திறக்க ஆரம்பிங்க, பார்ப்போம்?
நீங்கள் பேசாமலேயே, "அ" என்ற ஒலி முயற்சிக்கு, உங்கள் உதட்டு விரிவு அடங்குவதைக் காணலாம்!

இப்பவே, செஞ்சிப் பாருங்க!
இரண்டு உதடுகளை மட்டும் லேசாக விரிங்க!
விரிக்கும் போதே "அ" என்ற ஒலி அமைப்பு வந்துரும்!

பிறந்த குழந்தையின் முதல் அழுகையோ,
பின்னர் சிரிப்போ,
பின்னர் தத்தக்கா பேச்சோ,
பின்னர் முறையாகத் தாய்மொழி பயிலும் போதோ..
எதுவாயினும், ஒலிக்கும் முன் இதழ் விரிக்க வேண்டும்! அந்த விரிப்பிலேயே "அ" என்ற நுட்ப ஒலி அடங்கிவிடும்!

எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து, 
.... பிறப்பொடு விடுவழி, உறழ்ச்சி வாரத்து, 
"அ"கத்து எழு வளி இசை, அரில்தப நாடி 
(தொல்காப்பியம் - எழுத்துப் பிறப்பியல்)

இதனால் தான், உலக மொழிகள் பலவும்.. "அ" எ. அகரம் முன்னிட்டே தொடங்குகின்றன!
மொழியே இல்லாத, ஆதி மனித இனத்தின் ஒலிப்பியல்! = அகரம்!

"அகர முதல", வள்ளுவர் மட்டுமே பாடவில்லை; அவருக்கும் முன்பே தொல்காப்பியர் பாடிச் சென்ற மரபு தான்!
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப; எழுத்து எனப்படுப!

அதைத் தான்.. அகர முதல எழுத்தெல்லாம் என்று தொடங்குகிறார் ஐயன்!
*அகரம் = உலக ஒலிப் பொதுமை!
*அகரம் = சம்ஸ்கிருதம் அல்லவே அல்ல!
*அகரம் = தமிழ் உட்பட, பன்மொழிப்பொதுமை!

திருக்குறள்= "பொது"மறை என்ற நோக்கில் தான் எழுதப்பட்டது!
அதான், “தமிழ்” என்ற சொல் கூட அதில் இல்லை!
முல்லை/குறிஞ்சி, திணைக் கட்டுப்பாடு கூட இல்லாத அகத்திணைக் குறள்!

ஒரு “பொது மறையை”,
= முதல் குறளே சம்ஸ்கிருதம் தான் என்று சொல்லுதல்
= ஐயன் வள்ளுவனின் நோக்கத்துக்கே கேடு செய்யக் கூடியது!

உங்கள் இறைவன் அமரும் மனச்சாட்சியைக் கேட்க!
வேண்டாம், மட்டமான Sanskrit ஆதிக்கப் புத்தி! தவிர்த்து விடுங்கள்!


2.  அடுத்த சொல் = ஆதி

ஆதி = “ஆதல்”;
இறைவன் = உலகுக்கு முதல் “ஆகிறான்”; அதுவே “ஆதி”
Ready ஆதல் என்று பேச்சு வழக்கிலும்,
திருமணம் ஆதல், நேரம் ஆதல், வயசு ஆதல்.. இப்படி!

சேர மன்னன்= சேரல் + "ஆதன்"=சேரலாதன்
ஆதன்/ஆதி= தமிழில் மாண்பு உள்ள பெயர்ச்சொற்கள்! பண்பாடு "ஆகி" வரும், இவர்களிடமிருந்து!

மன்னர்கள்: வாழி ஆதன், ஆதன் ஓரி, ஆதன் எழினி
பெண்கள்: ஆட்டனத்தி ஆதிமந்தி
கவிஞர்கள்: மால் ஆதனார், குழல் ஆதனார்
ஆதன் எழினி= சம்ஸ்கிருத ராஜா என்பீர்களா என்ன?:)

சம்ஸ்கிருதத்திலும் "ஆதி" உண்டு என்பதை அறிவேன்!
ஆனால், அது வேறு ஆதி/ आधी
ஆதிலக்ஷ்மி என்று வடமொழியில் சொன்னால், அது “ஆகும்” லக்ஷ்மி அல்ல!:)
அது, ஆதியில், Original லக்ஷ்மி என்ற பொருளில்!

Sanskrit ஆதி/ आधी = Original, பொண்ணு, துன்பம், சாபம் என்ற பல பொருளில் வருமே?
ஆதி பகவன் = சாபம் குடுக்கும் பகவான் -ன்னு எடுத்துக்கோங்களேன் பார்ப்போம்?:)
சம்ஸ்கிருதம் தான் 'ஸப்த' நுட்பம் பயங்கரமா இருக்குற மொழியாச்சே?:)

ஆக.. தமிழ் ஆதிக்கும், சம்ஸ்கிருத ஆதிக்கும், வேறுபாடு உண்டு!
அதே போல் தான், கந்தன்-ஸ்கந்தன்! அமிழ்தம் - அம்ருதம்!
*அமிழ்தம் = தமிழ்; இனிமை எ. பொருள்!
*அம்ருதம் = சம்ஸ்கிருதம்; அ+மிருத்யு = சாகாமை எ. பொருள்; 
அதைக் குடிச்சா, தேவாள் சாக மாட்டாங்க! ஆனா Sanskrit Scoundrels நீங்க செத்துருவீக!

*கந்தன்= கந்து/ பற்றுக்கோடு (தூண், நடுகல் போன்ற அமைப்பு)
*ஸ்கந்தன்= ஒன்றாக்கப்பட்டவன் (6 முகமும் 1 முகமாய், பொய்ப் புராணம்)

மதப் பரவலால், இன்று.. இந்த இரண்டு சொற்களும், ஒரே கடவுளைக் குறிக்கத் துவங்கி விட்டாலும்..
முருகன்= “பழங்குடித்” தமிழ்க் கடவுள்!
ஸ்கந்தன் = Mixed up, Post Vedic, Brahministic Deity!
கந்தன் – ஸ்கந்தன் = இரு மொழிகளிலும் வெவ்வேறு வேர்ச்சொல்!

சொற்கள் ஒன்று போல் ஒலிப்பதாலேயே.. அங்க இருந்து தான், இங்க வந்துச்சி எ. "புத்தி" காட்டாதீர்கள்!
ஏன்??? இங்கிருந்து அங்கு போகாதா?
இங்கிருந்து தான் அங்க போச்சி! எ. உங்களைப் போலவே அடிச்சி விட எவ்ளோ நேரம் ஆகும்? ச்சீ..

வேர்ச் சொல் அறிந்து பேசுங்கள்; இரு மொழியும் அறிந்து பேசுங்கள்!

ஒரே மாதிரி ஒலிப்பதாலேயே, எல்லா மொழிச் சொல்லும் சம்ஸ்கிருதம் ஆகி விடாது!
Rum  எ. இலத்தீன்/ஆங்கிலச் சொல்லும், “ரம்”மியம் எ. சம்ஸ்கிருதச் சொல்லும் ஒன்றா?
குடிகாரர்களுக்கு Rum  ரம்மியமா இருக்கும் என்பது வேறு கதை:)

ராமன் = 'ரம்யம்' என்பது தானே சம்ஸ்கிருதச் சொல் இலக்கணம்?
ரமந்தே ராமஹ; ரமந்தே யோகினோநந்தே

ரம்மியமான ராமன் 'ரம்' குடிச்சான்னு 'ஷொல்லு'ங்கோ பார்ப்போம்?
அதை மட்டும் சொல்ல மாட்டேளே?:)
அதே போல் தான் தமிழ் ஆதியும், சம்ஸ்கிருத ஆதியும்!
ஒன்று போல் ஒலித்தாலும்,  இரண்டும் வேறு வேறு!

திருக்குறளின், ஆதி பகவன் = "ஆதி" தமிழ்ச் சொல்லே!
ஆவதால் ஆதி!



3. அடுத்த சொல் = பகவன்

பகவன்= பகவான் அல்ல:)
அது Pagavan எ. ஒலிப்பு! Bhagawan எ. ஒலிப்பு அல்ல!

தமிழ்ச் சொற்களில் வரும் "முதலெழுத்து வல்லினம்" அழுத்தியே ஒலிக்கும்!
*சொல்= Chol; Sol அல்ல
*கொலு= Kolu; Golu அல்ல
*தேவாரம்= Thevaaram; Devaram அல்ல!
*போலவே, பகவன்= Pagavan; Bhagawan அல்ல!

பகவன் = பகு + வ் + அன்
*பகு = பகுதி
*வ் = இடைநிலை
*அன் = விகுதி
பகவு + அன் என்றும் பிரிக்கலாம்; பகவுதல் = பகுத்தல்! தக/ தகவு, பக/ பகவு!

தமிழில், பகவன்= “பகு” (Divide & Distribute) என்ற பொருளில் வரும்!
*ஆதி= உலகத்துக்கு முதல் “ஆகி”றான்
*பகவன்= உலக உயிர்களை, பல விதங்களாய்ப் “பகு”க்கிறான்
Bacteria, செடி, ஊர்வன, பறப்பன, விலங்கு, மனிதன் எ. பல்வேறு பகுத்தல்!

இதே வள்ளுவர், “பக” என்று மற்ற குறட்பாக்களிலும் சொல்கிறாரே?
“பகச் சொல்லிக் கேளிர் பிரிப்பர்” 
கேளிர்= அதுவும் சம்ஸ்கிருதமா?:)

ஆதிபகவன் = இருபெயரொட்டுப் பண்புத் தொகை / உம்மைத் தொகை!
உயர்திணை உம்மை என்பதால் வலிமிகல் இல்லை!
இகரவீற்று உயர்திணைப் புணர்ச்சி! ஆதியும் பகவனுமான இறைவன்!

முக்கோல் “பகவர்கள்” என்று தமிழில் உண்டு; முக்கோலைக் கையில் ஏந்திய சான்றோர்கள், சமூக அறங்களைப் “பகுத்து” வழங்குபவர்கள்;
அந்தப் பகவர்களை (வெறும் மானிடர்களை) Bhagawan என்பதா? இது ஒங்க பகவானுக்கே அடுக்குமோ?:)

சம்ஸ்கிருத Bhagawan = “பஜ்” என்ற சொல்லில் பிறக்கும்;
பஜ் = (இறைவனுக்கு) வழிபாடு
பக்தி என்பதும்= “பஜ்” என்ற மூலமே!
பஜி= வழிபடு; அதிலிருந்து தான் பஜனையும்!

இப்போ சொல்லுங்க: தமிழ் Pagavan  & சம்ஸ்கிருத Bhagawan  ஒன்றா?:)
Sanskrit அறியாமலேயே, ஏன் உங்களுக்கு இந்தச் "சொருகு" வேலை? வெட்கமாயில்லை? உடம்பு கூசலை?
'சுயம்' பிடித்த அஹங்கார உங்களுக்கா, Bhagawan மோட்சம் குடுப்பான்?
குடுக்கவே மாட்டான்! உழன்று அழிந்து சாகுங்கள்! ந தர்ம நிஷ்டோஷ்மி!

ஆதிபகவன் = தமிழ்ச் சொல்லே!
*ஆதி= பல்லுயிரும், ஆவதால் ஆதி
*பகவன்= பல்லுயிரும், பகுப்பதால் பகவன் (Pagavan)



4. கடைசிச் சொல் = உலகு

உலகம் என்னும் தமிழ்ச் சொல் = “லோகம்” என்ற உங்கள் வடசொல் அல்ல!:)
சம்ஸ்கிருதம்: “லோக்” = லோக+ஈகம்= லெளகீகம்
ஆனா, தமிழில், “உலகீகம்”-ன்னு ஏதாச்சும் இருக்கா என்ன?:) அப்பறம் எப்படி உலகம் = லோகம்-ன்னு சொல்றீங்க?

தொல்காப்பியக் காலம் தொட்டே, “உலகம்” எ. தமிழ்ச் சொல்!
மாயோன் மேய காடு உறை உலகம்
சேயோன் மேய மை வரை உலகம்

உலகு = உல் + அ + கு
உல்லுதல் = "திரண்டு" உருளல்; உல்லும் தோள் = திரண்ட தோள்
உல்லுவதால்= உலகம்!

போலவே..
*ஞால்வதால் (தொங்குவதால்)= ஞாலம்
*வைப்பதால்= வையம்
*நிலைப்பதால்= நிலம்

Sanskrit லோக் = ஆங்கில Look ஆகாது!
விட்டா ஆங்கிலமே, Sanskrit போட்ட பிச்சைன்னு கூடச் சொல்வேள் போலயே?:)
English Look =  West German Luogen/ Lagud என்ற வேர்ச்சொல்லில் வருவது!
Lagud = Eyes என்று பொருள்படும்!
காஞ்சிப் (போன) பெரியவா, அடிச்சி விடுவதெல்லாம் மொழியியல் / வேர்ச் சொல்லாய்வில் நில்லாது;
நீங்க மட்டும் தான் "நம்ம பெரியவா பெரியவா"-ன்னு மெச்சிக்கணும்:)

लोक/ லோக் தான் Look ஆச்சு-ன்னா,
"அந்தக லோகம்" = பார்வையில்லாத லோகம் எப்படி ஓய், Look விடும்?
பொய்யைப் பொருந்த ஷொல்ல மாட்டேளா?:)

இப்படி, பொய்யைப் பொருந்தச் சொல்லாம தான், ஆத்திசூடியில் கை வைச்சி, காஞ்சி பெரியவா அசிங்கப்பட்ட நிகழ்வு = https://goo.gl/41QZQY
தேவையா இது, மஹா ஞானி, மஹா பெரியவாளுக்கு? பாவம்:(

உலகம் = தமிழ்ச் சொல்லே! அது लोक அல்ல!
பல தமிழ் இலக்கியங்களும், “உலகம்”-ன்னே துவங்கும் மரபு.. பலப்பல காலமாய்!
இவை அத்தனையுமே சம்ஸ்கிருதம் ஆயிடுமா? ரொம்பவே ஒங்க பேராசை:)

* ஆதி பகவன் முதற்றே "உலகு" – திருக்குறள்
* நனந்தலை "உலகம்" வளைஇ நேமி – முல்லைப்பாட்டு
* "உலகம்" உவப்ப வலனேர்பு திரிதரும் – திருமுருகாற்றுப்படை
* திங்களைப் போற்றுதும்.. "உலகு" அளித்தலான் – சிலப்பதிகாரம்
* "உலகம்" திரியா ஓங்குயர் விழுச் சீர் – மணிமேகலை

மதம் பிடிப்பதை விட, "உலகம்" பிடிப்பதே உவப்பானது, சங்கத் தமிழுக்கு!
அவரவர் அகம்-புறம் Truthful வாழ்வு தானே தவிர,
Imaginary சொர்க்கமோ/ நரகமோ கண்டு அஞ்சாத தமிழ்!

அதான் "உலகம்" என்ற சொற்-பொருளை முதற்சொல்லாய் வைத்து, இலக்கியம் படைத்தது!
உலகம் = தமிழ்ச் சொல்லே!
Thus Proved, quod erat demonstrandum (Q.E.D)
அகர முதல ஆதி பகவன் உலகு= தமிழ்ச் சொற்களே!



முடிப்புரை:

இன்றைய தமிழ் மொழியில், “சம்ஸ்கிருதக் கலப்பே” இல்லை-ன்னு நான் சொல்லமாட்டேன்! 30% சொற்கள் Parasite தான் உறிஞ்சித் தின்கிறது:(
அவாளே வாத்திகளாய் உட்கார்ந்து..
தமிழில், Sanskrit கலந்து கலந்து பரப்பிய 'லட்சணம்' இது:(

நம்மை அறியாமல் பயன்படுத்தும் Sanskrit சொற்களுக்கு மாற்றாக,
அன்றாட வாழ்வில் எளிய தமிழ்ச் சொற்கள், அகராதி இங்கே= https://goo.gl/cbm2nY

Sanskrit Parasite என்பது பின்னாளில்= மதம்/பண்பாட்டுக் கலப்பு மூலமா,
அரசியலில்.. அரசர்களை வலைக்குள் வீழ்த்தி நுழைந்தவை!
ஆதித் தமிழ் நிலத்துக்கு... "மதம்" பிடித்த கதை, இங்கே = https://goo.gl/9dKl0L

என்ன தான்.. "மதம்" காட்டி, Emotional Blackmail மூலமாக, பிராமணீயம் தமிழகத்தில் கடை விரித்தாலும்,
சங்கத் தமிழ் இலக்கியங்களில், பிராமணீய மதத்துக்கும்/ சம்ஸ்கிருதக் கலப்புக்கும்,
சான்றோர்/ மக்களின் எதிர்ப்பு ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டே உள்ளது!

*இன்றைய பொது மக்கள், அது பற்றி நிறைய அறியலீன்னாலும்,
*தங்களின் சமயமே அல்லாத ஒரு மதத்தில், போலியாய்க் கட்டுண்டு கிடந்தாலும்..
*எது தமிழ்ச் சொல்-பொருள்? / எது சம்ஸ்கிருத வார்த்தை-அர்த்தம்? என்றே பிரித்தறிய முடியாதபடி, Parasite ஒட்டப்பட்டு விட்டாலும்..

மெய்த் தமிழைப் படிக்கப் படிக்க = உண்மைகள் தானே வெளி வந்துரும்!


இக் காலம் = அறிவியல் காலம்!
முன்பு போல், (பிராமணீய) வாத்திகளின் கையில், தமிழ் இல்லை!
பொதுமக்கள் நினைத்தால், உண்மைத் தமிழைத் தோண்டி எடுக்க முடியும்!
Technology Integrated Tamizh!

அதைப் பொறுக்க முடியாமல் தான், இணையத்தில் இத்தனை கூத்து!
பொய்யாய் எழுதி வைக்கிறார்கள்!
அதற்கு, "ஸ்வாமி பக்தி" என்ற போர்வை போர்த்துகிறார்கள்!

வாத்திகள் கைவிட்டுப் போன தமிழை,
இணைய பிராமணீயம் கைக்கொண்டு, 
திருக்குறள் = Sanskrit என்று 'ஜோடிச்சி', விதம் விதமாய் 'விஷம்' பரப்புகிறது!

தரவு கேளுங்கள்! தர மாட்டார்கள்:)
ஆனாலும் தமிழ் இலக்கணம் = 'லக்ஷணம்' எ. இடைவிடாது பரப்பிக் கொண்டே இருப்பார்கள்!
நீங்களோ, நட்பு கருதி கண்டு கொள்ளவே மாட்டீர்கள்:( தமிழை அடகு வைத்துப் போய் விடுவீர்கள்!
இதனால் தான்... இன உணர்வே இல்லாமல், இன ஒற்றுமை இன்றி, ஈழத்தில் ஒரேயடியா முடிஞ்சி போனீங்க:(

பெரியார் சமூக இயக்கம்/ தமிழ் இயக்கம்/ அறிவியல் பரவல்களால் தான்
இன்று பழைய ஜாதிச் சிறைகளைக் கடந்து, 
"படிப்பு" எ. கல்விக் கதவுகள் திறந்து, சற்றே மேல்வந்து உள்ளீர்கள்!

ஆனால், இன்னும் நீங்கள் அடிமைகளே!
*கல்வி/ பொருளாதாரம் மட்டும் தான் வென்று உள்ளீர்கள்!
*மொழி/ சமயம்/ சமூகம்/ பண்பாடு = பலவற்றிலும், இன்னும் அடிமைகளே!
ஆனால், அடிமைகள் என்று கூட உங்களுக்கே தெரியாது:( அதான் கொடுமை!

*உங்கள் தமிழ் மொழியில்= Sanskrit ஆதிக்கம், இன்றும் நிறைய உண்டு!
*உங்கள் சமயத்தில்= பிராமணீய ஆதிக்கம் இன்றும் உண்டு!
*உங்கள் சமூகத்தில்= பகவத்கீதா விதைத்த ஜாதிபேதம் இன்றும் உண்டு!
*உங்கள் பண்பாட்டில்= கல்யாணம் முதல் கருமாதி வரை, தமிழல்லாத பிராமணீய வழக்கமும், Emotional ஆதிக்கமும் இன்றும் உண்டு!

இதையெல்லாம், ஒரு பெரியாரால்/ ஒரு வள்ளலாரால் மாற்ற முடியாது!
இஃது, இடைவிடாத தொடர் இயக்கம்!

இந்த இயக்கத்தில், உங்கள் தமிழ் வேர்களை, அறியவாச்சும் முயலுங்கள்!
1. ஜாதியை, மனத்தால் துறந்து விடுங்கள்
2. மதம் கடந்து, தமிழை அணுகுங்கள்
3. அறிவியல் தமிழாக.. தரவுகளை நாடுங்கள்!
இதோ, உங்கள் கூர்வேல் ஆயுதம்! பெருஞ்சித்திரனாரின்.. "ஆதி பகவன்" முதலான.. ஆழமான பல திருக்குறள் ஆய்வு= https://goo.gl/jtxAjT
பெருசா ஒன்னும் வேணாம்; 
திருக்குறள் = உங்கள் 2500+ ஆண்டு இனத்தின் பெருமிதம்!
குறளின் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்= Sanskrit அல்ல!
இதை உரக்கச் சொல்லுங்கள்! அஃதே போதும்; முதல் படி!

Sanskrit புல்லுருவிகள், மாறப் போவதில்லை!
ஆனால், நீங்கள் மாற முடியும்! "திரள" முடியும்!
இதோ, இந்தக் கயமைக் கீச்சின் மேல் Quote செய்து,
https://twitter.com/amas32/status/817569021767729152

தமிழின் தன்மானப் பெருமிதம்= திருக்குறள்! 
அகர முதல ஆதி பகவன்= Sanskrit Parasite அல்ல! தமிழே! 
இதோ ஆதாரம்= https://goo.gl/ehvVZi
என்று அனைவரும் ஒன்று திரண்டு, நாடும் நகரமும் நன்கறிய, ஊருக்கு உரையுங்கள்! 
அப்போ தான், அவங்களுக்கு அச்சம் வரும்! தமிழுக்கு ஒற்றுமை வரும்!

போலியான நட்புக்கு அஞ்சாது, அறம் துணிந்து,
திருக்குறள் = Sanskrit அல்ல! என்றாச்சும் சொல்வீர்களா?
இளமை மிகு தமிழ்ப் பெண்களே/ஆண்களே,
நீங்கள் உரக்கச் சொல்வீர்களா? சொல்வீர்களா? செய்வீர்களா? செய்வீர்களா?
அகர முதல எழுத்தெல்லாம் - ஆதி
பகவன் முதற்றே உலகு!
(உங்கள் உலகு/ உங்கள் தலைமுறை உலகு/ தமிழ் உலகு!)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP