நீங்க குளிக்கணும்னா உக்கமும் தட்டொளியும் தேவையா?
கேள்வியை வேணும்னா கொஞ்சமா மாற்றி யோசிச்சுப் பாருங்க! நம்மைக் காலங் கார்த்தால அம்மா எழுப்பி விடறாங்க...என்ன செய்வீங்க?
அடப் போம்மா-ன்னு முரண்டு புடிச்சித் திரும்பிப் படுப்பீங்க! விடாப்பிடியா எழுப்பறாங்க!...........சரி...எழுந்தாச்சு!
எத்தனை பேர், நேராக் கண்ணாடி முன்னாடி போய் நின்னு, தலைமுடியை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுவீங்க?
டேய் சங்கரா, சந்து முனையில் போய் ஒரு குடம் தண்ணீர் புடிச்சிக்கிட்டு வாடா-ன்னு சொல்லுறாங்க! இப்ப என்ன செய்வீங்க? கண்ணாடி முன்னாடி போவீங்களா, மாட்டீங்களா? மறைக்காம உண்மையச் சொல்லுங்க! :-)
இன்னும் காய்ச்சல் தீரலையா? இன்னுமா உளறிக் கொண்டு இருக்கே? என்று கேட்கத் தோணுகிறதா? பொறுமை! பொறுமை!!
நம்ம நாமக்கல் சிபி, திருப்பாவைப் பாசுரங்கள் பொங்கப் பொங்க, ஒரு தொடர் கதை போட்டிருக்காரு! அவசியம் பாருங்க! அதைப் பார்த்தவுடன், என் உள்ளம் ஏனோ கிறங்கத் தொடங்கி விட்டது! இனிய தமிழ் என் உள்ளத்தில் பொழிந்து வழிகிறது!
அது ஏனோ தெரியவில்லை, ஆண்டாள் என்றாலோ, திருப்பாவை என்றாலோ, அப்படி ஒரு ஈர்ப்பு, காந்த சக்தி!
காதலா? பக்தியா?
இன்பத் தமிழா? இறை அன்பா? இசையா?
ஒரு பெண்ணின் கனவா? கதையா? அழகா? அலங்காரமா? - எது? எது?
இன்று பூர நட்சத்திரம் (ஆடிப் பூரம், அவள் பிறந்த நாள், அடுத்த மாதம்...) ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காணலாம் வாங்க!
எல்லாப் பெண்களும், சிற்றஞ் சிறுகாலே, மார்கழி நீராடப் போறாங்க!
ஒருவர் இன்னொருவரை அழைக்க, இன்னொருவர் இன்-இன்னொருவரை அழைக்க....
இப்படியே எல்லாரும் பாடிக்கிட்டே போறாங்க...போயி கண்ணன் வீட்டு வாசலில் நிக்கறாங்க!
பலமாக் குரல் கொடுத்து, எல்லாரையும் எழுப்பறாங்க!
கேள்வி நம்பர் 1:
பெண் அடியவர்கள், அன்பர்கள் எல்லாம் இன்னும் நீராட வில்லை!
நீராடாமலேயே, தமிழ் வேதமான, பிரபந்தத்தை ஓதுகிறார்கள்! கண்ணன் ஆலய வாசலிலும் குளிக்காமலேயே நிற்கிறார்கள்! - ஆண்டாளே இப்படிச் செய்யலாமா? இது சரியா? சொல்லுங்கள்!:-)))
நீங்க உங்க வீட்டில் இப்படிப் பண்ணா, குளிக்காம கோவிலுக்கு வந்தா, அம்மா அப்பா மனைவி உங்களை சும்மா விடுவார்களா?:-)))
எல்லாரும் கண்ணனின் காதலி, நப்பின்னையை எழுப்பறாங்க! எழுப்பி.....
நப்பின்னை நங்கையே, கண்ணன் எங்கள் தலைவன்! உமக்கும் எமக்கும் அவனே நாயகன்!
அவன் தன்னுடைய அன்பினால் எங்களை எல்லாம் நீராட்ட வேண்டும்!
எங்கள் பிறவி என்னும் பிணியை அவன் அருள் என்னும் நன்னீர் கொண்டு கழுவி, எங்களைக் கடைத்தேற்ற வேண்டும்.
அவனை எழுப்பி, எங்களுடன் அனுப்பி வையம்மா...
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து, உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!
(திருப்பாவை - 20ஆம் பாசுரம் - முப்பத்து மூவர் என்று தொடங்கும் கவிதை - பாடலைக் கேட்க, சொடுக்கவும்)
உக்கம்-னா விசிறி, தட்டொளி-ன்னா கண்ணாடி!
விசிறியும் கண்ணாடியும் கையில் கொடுத்து, எங்களை நீராட்ட அவனை அனுப்பி வை, தாயே!
கேள்வி நம்பர் 2:
நீராடுவதற்கு எதற்கு விசிறியும் கண்ணாடியும்?
கேள்வி நம்பர் 3:
அப்படியே தேவை என்றாலும், இந்தக் கண்ணாடியும் விசிறியும் யாருக்குத் தேவை?
அவனுக்கு நீ கொடுத்து அவனை அனுப்பி வை என்கிறார்களே!
அப்படிக் கொடுத்து அனுப்பி வைப்பது, அவனுக்கா? எங்களுக்கா??
இது பற்றிப் பின்னூட்டங்களில் விவாதிக்கலாமே! நீங்கள் அறிந்தவரை உங்கள் கருத்து என்ன என்று சொல்லி தெளிவு படுத்துங்களேன், ப்ளீஸ்!
அன்புக்கு நன்றி!
Kannabiran Ravi Shankar
இது பற்றி அன்பு நண்பர் ஜி.ராகவன், ஓரிரு ஆண்டுகளுக்கு முன் பதிவிட்ட திருப்பாவை தொடரில், பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சிறுத்த குறுக்குடைய நப்பின்னை நாயகியே துயில் எழுவாய்! அப்படியே உனது மணவாளன் கண்ணனுக்கு விசிறிடுவாய். அந்தக் குளிர் காற்று தீண்டவும் அவன் எழுவான். அப்படி எழுகையில் அவன் முகம் காட்டக் கண்ணாடியைத் தருவாய். அவன் இப்பொழுதே எழுந்தால் தான் பாவை நீராடி அருள் பெறுவாய் எம்பாவாய்!
ராகவனின் இந்தச் சிந்தனை வித்தியாசமான ஒன்று! - அது மிக நன்று!
இருப்பினும் சீர் தூக்கிப் பார்த்தேன்! ஏனோ சரியாகப் பிடிபடவில்லை!
1. நீங்க தூங்கும் போது உங்களுக்கு விசிறினா, நீங்க மேலும் தூங்குவீங்களா? இல்லை எழுந்து கொள்வீர்களா? - ஹிஹி...குளிர் காற்றில் இன்னும் இழுத்துப் போர்த்தித் தான் தூங்குவீங்க இல்லையா? அப்படியிருக்க, ஒருவரை விசிறி எழுப்ப முடியுமா?
2. எழுப்பி விட்டவுடன், கண்ணாடி பார்த்து தலை திருத்திக் கொள்வீர்களா?
3. எழுந்தவுடன் தருவதற்குப் பல பொருட்கள் உள்ளன! பெட் காபி (:-), பல் விளக்கம், குளிக்க எண்ணெய் இல்லை முகப் பூச்சு, நெற்றித் திலகம்....இதை எல்லாம் சொல்லாமல், உக்கமும் தட்டொளியையும் மட்டும் ஏன் ஆண்டாள் சொல்ல வேண்டும்?
4. நோன்புக்கு வேண்டிய நெய்யுண்ணோம், பாலுண்ணோம் எல்லாம் பட்டியல் இட்டுச் சொல்கிறாள். கோல விளக்கு, கொடி, விதானம், ஆலின் இலை எல்லாம் அருளேலோ என்று வாய் விட்டுக் கேட்கிறாள்! அப்படி இருக்க உக்கமும் தட்டொளியும் கேட்பது கூட நோன்புக்குத் தானா?
இதுக்கு மேல நண்பர்கள் நீங்க தான் வந்து சொல்லணும்! அம்மா கோதை! எதுக்கும்மா இதையெல்லாம் நீ கேட்ட?
உக்கம் = விசிறி = Hair Dryer
தட்டொளி = கண்ணாடி = Hand Mirror, அதான் சின்னப் பெண் Makeup kit போலக் கேட்டிருப்பாள் என்று வீட்டில் சொல்லறாங்க! இத நான் எங்க போய் சொல்ல! நீங்களே சொல்லுங்க! :-)))