***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!
இன்னிக்கி கிச்சன் காபினெட் பக்கம் ஒதுங்கலாம்-னு ஐடியா!
மாதவிப் பந்தலில் செவிக்கு உணவு ரொம்பவே கொடுத்தாச்சு இஸ்டார் வீக்குல! அதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்-னு...
யாருப்பா அது ஈயப்படும்-னு சொல்லுறத்துக்கு முன்னாடியே பெண் ஈயம், ஆண் பித்தளை-ன்னு கெளப்பறது? ஓ...கொத்தனாரா?
வாய்யா! வா! கொத்தனார் கிட்டத் தான் இந்த மாதிரி அறிவியல் பூர்வமான கேள்வி எல்லாம் கேக்கோனும்! விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!
கொத்ஸ் அண்ணே: அவரைக்காய் என்றால் என்ன? கொத்ஸ்வரங்காய் என்றால் என்ன? அதை அமேரிக்காவில் இங்க்லிபீஷ்-ல என்னன்னு சொல்லி வாங்கணும்ணே?
இதைத் தீர்த்து வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இபிகோ செக்சன் 356 படி, உங்க மேலச் சுமத்தப்பட்டுள்ளது.
நாம சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம்! இந்த அவரக்கா தெரியுங்களா ஒங்களுக்கு, அவரக்கா?
என்னாது? அவர் அக்கா, இவர் அக்கா-ன்னு எல்லாம் கேக்கறீங்களா?
போச்சுடா! பதிவுலகில் எனக்கு நிறையவே அக்காங்க!
கெ.பி.அக்கா மொதக் கொண்டு, ஜி3 அக்கா இடைக்கொண்டு, துர்கா அக்கா கடைக்கொண்டு, சர்வம் அக்கா மயம்!
இதுல நான் எவர் அக்காவைச் சொல்வது? நான் சொல்லுறது அவரைக்காய்-ங்க! பச்சையா இருக்கும்-ல!

இதுக்குத் தான் சென்னை போகும் போதெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்கு ஒரு நடை போயி வரணும்ங்கிறது! இங்கிட்டு பார்க்காத காய்கறி எல்லாம் அங்கிட்டு பார்த்துக்கலாம்!
அம்மாவின் ஸ்பெசாலிட்டிகளில் இந்த அவரைக்காயும் ஒன்னு! அவரைக்காய் புளிக்குழம்பு-ன்னு ஒன்னு வைப்பாங்க பாருங்க! யம்மாடியோவ்!
அந்த உறைப்புக்கும் காரத்துக்கும் சாப்பாடு கூட வேணாம்! சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு! அதுக்குக் கூடவே தொட்டுக்க அவரைக்காய் பொரிச்ச கூட்டு! - இப்பவே எனக்கு நாக்கு ஊறுதே!
இன்னும் கொஞ்ச நாளு தானே! இதோ சென்னைக்குப் போனவுடன், நான் கேட்காமலேயே இந்த ஐயிட்டம் எனக்காகச் செய்து வைக்கப்பட்டிருக்கும்! வூட்டாண்ட வாங்க, 50-50 போட்டுக்கலாம்! :-)
அவரைக்காய் பொரிச்ச கூட்டு எப்படிச் செய்யறது?
(அந்தப் அவரைப் புளிக் கொழம்பு அம்மா கிட்ட இது நாள் வரை கேட்டுக்கலைங்க! சாரி, கூட்டு மட்டும் இன்னிக்கி பார்க்கலாம்)
1. மொதல்ல கிச்சன் எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சிக்குங்க! வழி தெரியலையா? இந்தாங்க!
2. தேவையான பொருட்கள்:
அவரைக்காய் = 1/4 கிலோ (அரிஞ்சி வைச்சா, 3 கப் வரும்)
கடலைப் பருப்பு = ?
(கடலை போடும் போதே இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்! சரி போனாப் போவட்டும்! சொல்லிடறேன்! 1/4 கப்)
புளி பேஸ்ட் = 1 தேக், பெருங்காயம் = 1/2 தேக்
உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பலை, உ.பருப்பு, காய்ஞ்ச மிளகாய்(3) = இதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்கே தெரியும்! ஒங்களுக்குத் தெரியாதா என்னா? தேங்காத் துருவல்= ஒரு கைப்பிடி போட்டா இன்னும் மஜாவா இருக்கும்!

3. அவரைக்காயைக் மொதல்ல அந்த இழை உரிக்கணும்! இல்லீன்னா சாப்பிடும் போது நூடுல்ஸ் மாதிரி வந்து உயிரை வாங்கும்.
அப்பறம் அவரைக்காயைத் துண்டு துண்டா அரிஞ்சி வைச்சிக்குங்க! நீளவாட்டில் பொடிசா அரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! French Fries மாதிரி ஒரு மொரமொரப்பு கெடைக்கும்!
4. கடலைப் பருப்பைத் தனியாக் குக்கரில் வேக வச்சிக்குங்க! அட, அரிசி வைக்கும் போது, கூடவே இதையும் வச்சிக்குங்க அப்பு! :)
5. இனி மேல் தாண்டி வேலை!
வாணலியில்(கடாய்) எண்ணெய் விட்டு, காய்ஞ்ச மிளகாய், உ.பருப்பு எல்லாம் கொட்டி பொன்னிறமா வறுத்துக்குங்க! இது கூடத் தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்சியில் நல்லா விழுதா, ஒரு அரை அரைச்சிக்கிடணும்!
ஏற்கனவே கட் பண்ணி வச்ச அவரைக்காயை வாணலியில் கொட்டி, கீப் ஆன் வதக்கிங்!
வேக வைத்த கடலைப் பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும்! உப்பும், மஞ்சள் தூளும் தேவையான அளவு முன்னாடியே சேர்த்துக்கிடணும்!
நெருப்பைக் குறைச்சி, தட்டு போட்டு மூடிருங்க! கொஞ்ச நேரம் ஆவியில் வேகட்டும்!
திரும்பவும் வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு/கறிவேப்பிலை/பெருங்காயம் போன்ற தாளிப்பு சமாச்சாரங்களை எல்லாம் கவனிச்சுக்குங்க! கடுகு கொஞ்சம் நல்லாவே வெடிச்சா வாசனையும் தூக்கலா இருக்கும்!
பத்து நிமிசம் கழிச்சி, மூடி வைச்ச தட்டைத் தொறந்து,
உப்பு, புளி பேஸ்ட், ஏற்கனவே அரைச்சி வைச்ச தேங்காய்ப் பேஸ்ட், இப்ப தாளித்த ஐட்டம்-இது எல்லாத்தையும் ஒன்னாக் கொட்டிக் கிளறி, ஒரு ரெண்டு நிமிடம் வதக்கினாக்கா...பொரியலா, மொரமொர-ன்னு வரும்!
மணக்க மணக்க....பொரிச்ச அவரைக்காய்க் கூட்டு!சுடச்சுட ஆவி பறக்கும் மல்லிப்பூ சாதத்துடன் தொட்டுக்கிட்டுச் சாப்பிடலாம்! ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)
ஜவ்வரிசி வத்தல், தனியாத் துவையல், புதினாத் துவையல் கூட, இந்த அவரைக்காய்க் கூட்டை வச்சி சாப்பிட்டாக்கா...சொர்க்கம் நிச்சயம்! :-))
அவரைக்காய் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! நீரிழிவு/அலசர் நோயாளிகளுக்கு இப்போது அறிவுறுத்தப்படும் ஓர் உணவு! நார்ச் சத்து (Fiber) அதிகம் உள்ளது! உள்குத்து...ச்சே உள்காயங்களுக்கு நல்ல மருந்தும் கூட!
தெலுங்கு=சிக்குடு காய், கன்னடம்=அவேரக்காயி, மலையாளம்=அவரா, இந்தி=செம்; இங்கிலிபீஷ்-ல என்னான்னு தெரிஞ்சா ஓடிப் போயி, பாத்மார்க் கடையில் வாங்கியாந்துறலாம்! கொத்ஸ், என்ன ரெடியா? மக்களே, நீங்க அதுக்குள்ள ஒரு கை அள்ளி வாயில் போட்டுக்குங்க! இன்னா, எப்படி இருக்கு அவர் அக்கா, இவர் அக்கா, எவர் அக்கா பொரிச்ச கூட்டு? :-)










