Monday, August 20, 2007

பூரம்3: கருடா செளக்கியமா?

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு என்ன கேட்டது? - கருடா செளக்கியமா? அதற்குக் கருடன் என்ன பதில் சொன்னது?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே! - கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது என்று பாடுவார் கண்ணதாசன்.
அந்நியன் படத்திலும் கருட புராணம் அடிக்கடி தோன்றி பயமுறுத்தும்! :-)

பாம்பு பரம்சிவன் கழுத்தில் இடம் பெற்று விட்டது - அதனால் அது செளக்கியமே!
ஆனால் பாவம், கருடனின் நிலை? பார்க்கலாம் வாங்க, கருடனின் இடம் எங்கே என்று? கருடன் எப்போதும் பெருமாளின் வாகனம் (ஊர்தி) மட்டும் தானா? இறைவனைச் சுமக்கும் வேலை மட்டும் தானா கருடனுக்கு?
கருட பஞ்சமி இப்ப தான் வந்து போனது! (Aug 18, 2007) - அதே நாள் தான் நாக பஞ்சமியும் கூட!

பெரியாழ்வார் கருடனின் அம்சம் என்று சொல்லப்படுபவர். இருவருமே சுவாதி நட்சத்திரம் தான்! அதனால் தான் வில்லிபுத்தூரில் கருடனுக்கு மிகவும் ஸ்பெஷல் இடம். அது என்ன இடம்?
பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம்!

பொதுவாக கை கூப்பிய படி, பெருமாளின் முன்னே கருடன் நிற்பது தான் எல்லாக் கோவில்களிலும் வழக்கம்! ஆனால் வில்லிபுத்தூரில் மட்டும்,
ஆண்டாளும் பெருமாளும், மனைவியும் கணவனுமாய் நிற்க,
அவர்களுடன் ஜோடியாய் அதே ஆசனத்தில் கருடன்! - இது எப்படிச் சாத்தியம்?

பணியாளும் பரமனும் தோளோடு தோள் நிற்கும் அளவுக்கு சோஷியலிசமா என்ன வில்லிபுத்தூரில்? முதலாளியும் தொழிலாளியும் காம்ரேடுகள் (Comrade) ஆகி விட்டார்களா என்ன? :-)


பதிவர்கள் யாராச்சும், கருடனை வானில் பார்த்திருக்கீங்களா? கழுத்தில் வெள்ளைப் பட்டை - இல்லை தலையில் வெள்ளைப் பட்டை இருக்கும்! கருடனுக்கும் கழுகுக்கும் என்ன வேறுபாடு? சொல்லுங்க பார்ப்போம். அமெரிக்காவின் தேசியப் பறவை Bald Eagle எனப்படும் கருடன் தான்!
புத்த மதத்திலும், இலங்கை, ஆங்கர் வாட்-கம்போடியா, தாய்லாந்திலும் இந்தக் கருடன் உண்டு!

பெருமாளின் வாகனம் கருடன் என்பது எல்லாருக்கும் தெரியும்! கருட சேவை எப்போதும் மிகவும் விசேடம் தானே! "ஆழ்வார்" என்ற சிறப்புப் பெயர் கருடாழ்வாருக்கு உண்டு!
பெருமாளின் தலைக்கு மேலேயும் கருடன் - கருடக் கொடியாக!
பெருமாளின் காலுக்கு கீழேயும் கருடன் - கருட வாகனமாக!

காச்யப முனிவருக்கும், வினதைக்கும் பிறந்தவர் தான் அருணனும், கருடனும்.
அருணன் சூரியனின் தேரோட்டி. கருடனோ பகவானுக்கே வாகனம்!
ஆனால் முதலில் இறைவனுக்கும் கருடனுக்குமான உறவு சண்டையில் தான் தொடங்கியது, இக்காலக் காதலர்களைப் போல! :-)
கருடன் பெருமாளிடமே சண்டையிட்டுத் தோற்றார்.

கத்ருவும், வினதையும் காச்யபரின் மனைவிகள்.
கத்ருவுக்கு ஆயிரம் குழந்தைகள், அனைத்தும் நாகங்கள். வினதைக்கு இரண்டு மகன்கள். அருணன், கருடன்.
சூழ்ச்சியால் வினைதையை அடிமை ஆக்கிக் கொண்டாள் கத்ரு. காமதேனுவின் நிறம் வெள்ளை என வினதை சொல்லினாள்; தன் நாகப் புதல்வர்களை அனுப்பி அதைச் சூழ வைத்துக் கருப்பாக்கி பொய்யாக வென்று விட்டாள் கத்ரு. வினதையை அடிமை ஆனாள்.
தாயின் சாபம் தீர்க்க வேண்டுமானால், அமிர்த கலசம் எடுத்து வர வேண்டும் என்று, சிற்றன்னையால் ஏவப்பட்டான் கருடன்.

அமிர்த கலசத்தை எடுத்து வரும் போது, இந்திரனிடம் போரிட்டான் கருடன். கருடனின் ஆற்றல் தாளாமல் இந்திரன் தவிக்க, அமிர்தத்தைக் காப்பாற்ற, பெருமாளே போருக்கு வந்தார். பெருமாளிடம் தோற்ற கருடன், அவர் திருவடிகளில் பணிந்து, அவருக்கே வாகனம் ஆனான். சிறிதளவு அமுதமும் பெற்று தாயின் சாபமும் தீர்த்தான்.


விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி என்று பல பெயர்கள் கருடனுக்கு உண்டு!
கருடன் வேதங்களின் அம்சம், மங்கலச் சின்னம் என்று சொல்லுவார்கள்.
பல கோவில் நிகழ்ச்சிகளில், கருடன் தெரிவதும், வட்டமடிப்பதும், மங்களகரமான ஒன்று!
இது பெருமாள் ஆலயங்கள் மட்டும் அல்ல! எல்லா ஆலயங்களுக்கும் பொருந்தும்! கருடத்வனி என்ற ஒரு ராகமே உண்டு, சாம கீதம் இசைப்பதற்கு!
கிராமங்களில் கருடக் கிழங்கு என்ற ஒரு கிழங்கு உண்டு. அதை மாவிலை போல் வீட்டு வாசலில் சொருகி வைப்பார்கள், பூச்சி பொட்டுகள் வராமல் இருக்க! மேலே பறக்கும் கருடனின் நிழல், பயிர் பச்சைகளின் மேல் படுவது நல்லது என்று விவசாயிகள் நம்புவார்கள்!

கருட மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று.
எதிரிகளை வெல்வதற்கும், விஷமங்களை முறிக்கவும், மந்திர தந்திரங்களுக்கும், தீய சக்திகளை ஒடுக்கவதற்கும், வாதங்களில் வெல்வதற்கும் கருட மந்திரம் ஜபிப்பார்கள்!
கடலூருக்கு அருகில் உள்ள திருவந்திப்புரம் (திவஹீந்தரபுரம்) என்னும் ஊரில், கருட மந்திரம் ஜபித்து தான், சுவாமி தேசிகன் என்னும் ஆசார்யர், சகல கலா விற்பன்னராகத் திகழ்ந்தார். கருட தாண்டகம் என்னும் நூலையும் பாடினார்!

பாண்டவர்கள் கூட கருட வியூகம் அமைக்கும் போது தான் முதல் வெற்றி பெறுகிறார்கள்!
நீதி விளக்கமும், தண்டனைகள் மற்றும் திருத்தங்களைச் சொல்வது கருட புராணம்!
கார்க்கோடகன் என்னும் நாகத்தை அடக்கிப் பிடித்துள்ளதால், கருடன் சனி பகவானின் விளைவுகளை மட்டுப்படுத்துவர் என்றும் சொல்லுவார்கள்!

அது சரி....
உலகத்தில் எங்காச்சும் வாகனத்துக்கே வாகனம் இருக்கா?
முருகனுக்கு மயில் வாகனம், ஆனா மயிலுக்கு வாகனம் உண்டா?
பாருங்க...கருடனுக்கு ஒரு வாகனம் உண்டு! சுபர்னோ வாயு வாகனா என்பார்கள்!
வாயு பகவான் தான் கருடனுக்கு வாகனமாய் அமைகிறார்!


பெருமாளுக்கு நிகரான ஆசனம்! - சரி நிகர் சம ஆசனம், கருடனுக்கு என்று பார்த்தோம்!
அது ஏன் என்றும் பார்க்கலாம் வாங்க!

வில்லிபுத்தூரில் ஊர் அறியத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்த அரங்கன், திருமண நாள் அன்று வரத் தாமதம் ஆகிறது. ஏற்கனவே அவனுள் கலந்து விட்ட ஆண்டாளும் அவனோடு வரத் தாமதம் ஆனதால் பெரியாழ்வார் துடிக்கிறார். திருவரங்கத்தில் காணாத காட்சியை, வில்லிபுத்தூரில் காணக் கூடி விட்டனர் ஊர்மக்கள். ஆனால் பெருமாள் வருவதாகத் தெரியவில்லை!

அப்போது கருடன், ஆழ்வார் நிலை அறிந்து ஓடோடி வருகிறான். பறப்பதில் வேகம் கூட்டுகிறான்.
அன்று கஜேந்திர மோட்சத்தில் பெருமாளுக்கு எப்படி உறுதுணையாக கருடன் இருந்தானோ, அதே துடிப்போடு பறக்கிறான்!
ஆண்டாளையும் இப்போது சேர்த்து சுமப்பதால் அவனுக்கு வியர்க்கிறது. இருந்தாலும் வாயு வேகமாகப் பறந்து வந்து, குறித்த நேரத்தில் வில்லிபுத்தூரில் தம்பதிகளைச் சேர்க்கிறான் கருடன்!

பெரியாழ்வார் கலக்கம் நீங்கி அமைதி அடைகிறார். பெண்ணின் தந்தைக்கு உதவிய பிள்ளை வீட்டுக்காரன் அல்லவா கருடன்?
இதற்கு நன்றியாகவே, ஆண்டாள் பெருமாளிடம் பேசி, தங்களோடு கருடனுக்கும் அதே ஆசனத்தில் இடம் அளித்தாள்! அதுவே வில்லிபுத்தூரில் இன்றும் அழகிய காட்சி!

மேலால் பரந்த வெயில்காப்பான்
"வினதை சிறுவன்" சிறகென்னும்,
மேலாப்பின் கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
என்று நாச்சியார் திருமொழியில், மாப்பிள்ளையான பெருமாள் மேல் வெயில் படாது, கருடன் தன் சிறகால் மேலாப்பு விரித்து, மாப்பிள்ளையை அழைத்து வருவதாகப் பாடுகின்றாள்.


ஓம்காரப் பிரணவ தத்துவம் இந்தக் காட்சியில் ஒளிந்துள்ளது.
ஓம் = அ + உ + ம்
அகாரம் = பரமாத்மா = பெருமாள்
மகாரம் = ஜீவன் = கோதை
இவர்கள் இரண்டையும் ஒன்று சேர்ப்பது எது?

"அ"வும், "ம"வும் சேர்ந்து "ஓம்" என்று ஆக வேண்டுமானால், அதற்கு அ-வுக்கும், ம-வுக்கும் இடையே "உ" தேவை!
உகாரம் = சரணாகதி சம்பந்தம் = இவனே கருடன்!
பெருமாளையும் ஆண்டாளையும் ஒன்று சேர்க்க ஓடோடிப் பறந்து வந்த உகார மூர்த்தி இவன். உகாரமே சரணாகதி. அது ஒன்று தான் பரமனையும் ஜீவனையும் சேர்க்கின்றது!
அதுவே வில்லிபுத்தூரில் மூவராய் நாம் காணும் காட்சி!
(வேறொரு பதிவில், ஓங்காரம் பற்றி விரிவான விளக்கம் பேசலாம்...)

கல்யாணம் ஆகும் வரை மைனர் முறுக்கில் வலம் வந்த தலைவன், தொண்டர்களைச் சரியாகக் கவனிக்கவில்லை போலும்!
அதான் கல்யாணமானவுடன், வந்து சேர்ந்த புண்ணியவதி, புருஷனிடம் பரிந்து பேசி...
என்னங்க, பாவம் அவரும் எவ்வளவு தான் வேலை செய்வாரு? கொஞ்சம் ஊதியத்தை உயர்த்திக் கொடுங்கள் என்று சொல்வது போல, தொண்டனுக்கும் சரி நிகர் ஆசனம் வாங்கிக் கொடுத்து விட்டாள்! அது தான் தாயாரின் கருணை!
புள்ளரையன் கோவிலில், வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ என்று திருப்பாவையிலும் புள் அரையன் (பட்சி ராஜன்) பெயரை நிரந்தரமாகப் பதித்து விட்டாள்!

கருடாழ்வார்=பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!!
அரங்க நகரப்பன் திருவடிகளே சரணம் சரணம்!!!


இத்துடன், திருவாடிப்பூரம் தொடர் முற்றிற்று!
Read more »

Wednesday, August 15, 2007

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!
அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன் நீங்கள் எல்லாரும், சர்வேசன் கேட்டபடி பாடி விட்டீர்களா?
பாடவில்லை என்றால், மனசுக்குள்ளவாச்சும் ஒரு முறை பாடிப் பாருங்களேன்! இதோ உதவிக்கு ராணுவத்தின் இசை முழக்கம். 52 விநாடிகள்!



தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது தான் கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்துப் பாடப்பட்டது என்பது, அதனை ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை!
நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்!
மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார்.
இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொன்னதை பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன, துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது!
இதோ சபை விவாதங்களின் சுட்டி!
ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது!
அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும்.
வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை நாம் அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm
Read more »

பூரம்2: கோவிலில், காதலியின் மடியில் காதலன்!

வாங்க இன்னிக்கி வில்லிபுத்தூருக்குப் போயி ஊர் சுத்தலாம்! அப்படியே காதலியின் மடியில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம்!
மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டு-ல இருந்து மருதைக்காரய்ங்க பஸ் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க! மதுரையில் இருந்து ட்ரெய்னில் விருதுநகருக்கு போயி, அங்கிருந்தும் வில்லிபுத்தூருக்கு வரலாம்-ல!

இன்று திருவாடிப் பூரம்!
ஆண்டாள் அவதார தினம்! (இந்த ஆண்டு, Aug 15, 2007)
Happy Birthday Kothai! அடியே கோதை, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவள் பிறந்த நாள் அன்னிக்கி, ஊரே ஒரே கோலாகலம்! பெரிய தேரு வேற! விதம் விதமா விழா!
* ஐந்து கருட சேவை
* மடித்தல சேவை
* புஷ்ப பல்லக்கு
* ஆண்டாள் திருத்தேர்
* முத்துக்குறி் உற்சவம்...

இப்படிப் பல கொண்டாட்டங்கள்...
வாங்க மண் வாசனையோடு, ஜாலியா ஊர் சுத்தலாம்! இந்தப் பதிவில் விளக்கங்கள் எல்லாம் அவ்வளவா கிடையாது...
வில்லிபுத்தூரும், விழாவும், விதம் விதமான படங்களும் தான்!

வில்லிபுத்தூர் கோபுரம் - தமிழக அரசு முத்திரை



கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்
ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,
பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!

அப்படி என்ன, அவளை எல்லாரும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுறாங்க?
பெரியாழ்வார் பொண்ணு என்பதாலா? - இல்லை!
பேரழகி என்பதாலா? - இல்லை!
காதல் கவிதைகளில் வித்தகி என்பதாலா? - இல்லை?
பெரிய பெருமாளையே மணந்து கொண்டதாலா? - இல்லை! இல்லை! இல்லை! பின்ன எதுக்கு அவளுக்கு மட்டும் இவ்வளவு பெருமை?

மேலே சொன்னது எல்லாம் அவரவர் தன்னலம். அவரவர் சொந்தப் பெருமை. அவ்வளவு தான். வெறும் காதல் கவி சொல்லவா ஆண்டாள் வந்தாள்?
ஆன்மீகத்தின் கடமை என்ன? அது உலகத்து மக்களுக்கு என்னவெல்லாம் செய்யணும்?

பாதகங்கள் தீர்க்கணும் - தீர்த்த பின்,
பரமன் அடி காட்டணும் - காட்டிய பின்,
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - காட்டிய திருவடியை என்றும் இடையறாது பற்றிக் கொள்ள, வேதத்தைக் காட்டி உதவி செய்யணும்!
இந்த மூன்றையுமே செய்தது கோதைத் தமிழ்! அதான் அவளுக்கு அவ்வளவு பெருமை!

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் நமக்குக் காட்டிக் கொடுத்து விட்டாளே! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்!
அவன் தன்னைத் தானே வணங்குமாறு எல்லாரையும் அழைத்தான் - யாரும் வரவில்லை!
அவள் அந்தக் காதலனை வணங்குமாறு எல்லாரையும் அழைத்தாள் - அனைவரும் வந்தார்கள்!
ஆதலால், கீதையா, கோதையா என்றால், கோதையே சிறப்பு! :-)

நடையலங்காரம்

ஜடையலங்காரம்


கோதை பிறந்த ஒரே காரணத்துக்காக, கோவிந்தனே வந்து வாழும் ஊர் ஆகி விட்டது, வில்லிபுத்தூர்!
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்...


மொத்தம் ஒன்பது நாள் ஆடிப்பூர உற்சவம்.
வழக்கம் போல் கொடி ஏற்றம், சேனை முதலியார் புறப்பாட்டுடன் தொடங்குகிறது விழா! ஐந்தாம் நாள் விழா மிகவும் சிறப்பு!
ஏன் என்றால் ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையைக் காணலாம்!
பெரியபெருமாள் என்னும் வடபத்திரசாயீ
ரங்கமன்னார்
சுந்தரராஜப் பெருமாள்
ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருத்தங்கல் அப்பன்...ஆகிய ஐந்து பெருமாள்களும் தத்தம் கருட வாகனத்தில் ஒரு சேரக் காட்சி!

ஏழாம் நாள் - இந்த நாள் ஒரே ரொமாண்டிக் நாள் :-)
ஏன் என்று கேட்கிறீர்களா?
எத்தனை பேர் காதலியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கீங்க? கூச்சப்படாம சொல்லுங்க பார்ப்போம்! அப்படிப் படுத்துக் கொண்டே என்னவெல்லாம் காதல் கதைகள் பேசுவீங்க? என்னவெல்லாம் சீண்டி விளையாடுவீங்க? நீங்களே பாருங்க இந்த உலக மகா ஜோடியை!

மடி மீது தலை வைத்து, விடியும் வரை...தூங்குவோம்!

ரயில்வே ஸ்டேஷன் (தொடர்வண்டி நிலையம்) அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாளும் ரங்கமன்னாரும் எழுந்தருளி, இப்படி மடித்தல சேவை (சயன சேவை) சாதிக்கிறார்கள்!

ஒன்பதாம் நாள் (ஆடிப்பூரம் அன்று) திருத்தேர்! இது மிகவும் பெரிய தேர்! ஆயிரம் சிற்பங்கள் கொண்டது! எட்டுச் சக்கரம், ஐந்து அடுக்கு, 81 தூண்கள் கொண்ட தேர்!

பத்தாம் நாள் - விழாவின் ஹைலைட் - Dance Drama - அரையர் சேவை!
முத்துக்குறி உற்சவம் என்பார்கள் இதை. சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்!
தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க! அடே இரக்கம் இல்லாத பெருமாளே-ன்னு காய்வாய்ங்க.

வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே.


பின்னர், காட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவா. அது இன்னா முத்துக்குறி? முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவா!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் விடிய விடிய நடக்கும்!

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..

தட்டொளி-கண்ணாடி சேவை


சவுரித் திருமஞ்சனம்

அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!
இதுக்குன்னே ஆண்டாள் போட்டு வரும் ஆடை என்ன தெரியுமா? நீங்களே பாருங்க! (இந்தக் காலச் சுடிதார் போல ஒரு உடை :-)



ஆண்டாளுக்குச் சார்த்தப்படும் மாலையோடு, ஒரு பொம்மைக் கிளியும் சார்த்தப்படுகிறது. இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி.

நாமும் அந்தக் கிளியாய், அவள் தோளில் என்றும் தங்கி, கோதைத் தமிழ் பேட்போம்!
வில்லிபுத்தூர் விழா பார்த்து முடிச்சாச்சு! பேக் டு மதுரை! எல்லாரும் வண்டியில் ஏறி உட்காருங்க!

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

(திருமஞ்சனப் படங்களுக்கு மிகவும் நன்றி: adiyen b_senthil)

Read more »

Thursday, August 09, 2007

பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?
சரி, அதெல்லாம் விடுங்க.
இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?
வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)

பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாட்டு பாடும் டி.ராஜேந்தர் லெவலுக்கு எல்லாம் நீங்க இறங்கி யோசிக்க வேண்டாம்! தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க! :-)

ஆனா இன்னிக்கி நாம பாக்கப் போற கதை, கொஞ்சம் வித்தியாசமானது!
தங்கையோ எட்டாம் நூற்றாண்டு!
அண்ணனோ பதினோராம் நூற்றாண்டு!

ச்சே....இது எப்படிச் சாத்தியம்? அச்சோ....என்னை அடிக்க வாரீங்களா?
வ.வா.ச-வில் எழுதுவதால், இங்கேயும் கலாய்க்கத் தொடங்கி விட்டேன் என்று கும்ம வரீங்களா? பொறுமை! பொறுமை! மேலே படியுங்கள்!


அவள் ஒரு தங்கை - மாலை இட்ட மங்கை - நளினம் கொஞ்சும் நற்குண நங்கை! பாண்டி நாட்டாள் - தமிழ்ப் பாட்டாள்!
காதல் கவிதைகள் புனைவதில் அவளை மிஞ்ச உலகில் யாரும் கிடையாது!
அவளுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இருந்திருந்தால் அவள் வயதுக்குப் பல விஷயம் பேசி இருப்பாள். ஆனா அதுக்காக மனசுக்குப் பூட்டு போட்டு வைக்க முடியுமா?...அதுவும் கவிதைகள் ஊற்றெடுக்கும் கங்கை உள்ளத்துக்கு?

அவள், தன் மனதை, ஒரு மன்னனுக்குப் பறிகொடுத்தாள்.
அவனோ குழல் அழகன், கண் அழகன், வாய் அழகன்,
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன்! தன்னை அன்பால் நாடி வந்த எவரையும், எந்தப் பேதமும் காணாது காப்பவன்!
ஆனால் அவனை அடைவது என்னமோ அவ்வளவு சுலபமான விஷயமாகத் தெரியவில்லை! கழுவும் மீனில் நழுவும் மீன் என்பார்களே! அது போல!

பாடி ஆகி விட்டது, மாலை சூடி ஆகி விட்டது!
தூதும் விட்டு விட்டாள், நோன்பும் நோற்று விட்டாள்!
ஹூஹூம்....ஒன்றுமே நடக்க வில்லை! தந்தையின் உதவியும் அவளுக்குப் பெரிதாக உதவவில்லை! எல்லாம் காதல் படுத்தும் பாடு!
அவன் வியர்வையிலும், எச்சிலிலும் கூடத் துளசி மணமே தெரிந்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு!

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா? காதலுக்கும் தெய்வம் தானே துணை! ஓ...அதனால் தான் கோவில்களில் இப்போதெல்லாம் அதிக அளவில் இளைஞர், இளைஞி கூட்டங்களோ? கற்பூர ஜோதிக்குப் பதில் காதல் ஜோதிகளோ? :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஊர், திருமால் இருஞ் சோலை; அழகர் கோவில்-னு சொன்னா இன்னும் நல்லாத் தெரியும்! ஏற்கனவே காதலில் வெற்றி பெற்ற முருகன் கூட அங்கு தான் இருக்கிறான்! சரியான இடம் தான் மருதகாரய்ங்களுக்கு!
அங்கு தோசைப் பிரசாதம் மிகப் பிரபலம்!
அங்கு ஆசைப் பிரசாதம் பெற, வேண்டிக் கொள்கிறாள் இந்தப் பேதை!

"கள்ளழகரே, கள்ளழகரே! என் காதலைக் கனிவித்துக் கொடு!
உனக்கு நூறு தடா சர்க்கரைப் பொங்கலும், நூறு தடா வெண்ணையும் நேர்ந்து விடுகிறேன்!
(தடா என்றால் பாத்திரம் என்று அர்த்தம்...நீங்க அரசியல் பற்றியெல்லாம் ஏதும் தப்பா நினைச்சிக்காதீங்க :-)
நீ உண்ட பின், அதை உன் அடியவர்கள் எல்லாம் உண்டு, சேஷமாக வாழட்டும், சேமமாக வாழட்டும்! "
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்
சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங் கொலோ

(- நாச்சியார் திருமொழி)

வெண்ணெய், அதை உருக்கி நெய், அதையே ஊற்றி அக்கார அடிசில்! - என்ன சாமர்த்தியமான வேண்டுதல் பாருங்க :-)
அக்காரம்=சர்க்கரை; அடிசில்=சோறு/பொங்கல்;
அக்கார அடிசில் = சர்க்கரைப் பொங்கல்!
இதைக் கேட்டவுடன் சர்க்கரையாய்க் கரைந்து விட்டார் கள்ளழகர்...
அவ்வளவு தான்...கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்று அவள் கேட்டதைக் கொடுத்து விட்டார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
மருத கள்ளழகரை வேண்டிக்கிட்டா காதலில் உடனே வெற்றி!

பதிவுலக நண்பர்களில் காதலர்கள் யார் யாரு இருக்கீங்க? கை தூக்குங்க பார்க்கலாம்! மதுரை அழகர் கோவிலுக்கு டிக்கெட் எடுக்கணும்ல; அதான் கேட்டேன்! :-))


ஆனாப் பாருங்க....ஊர் மெச்ச, உலகம் போற்ற, நம்பிக்கு மாலையிடவில்லை நங்கை! அதான் தம்பதிகள் ஏற்கனவே மாலை மாற்றிக் கொண்டார்களே வில்லிபுத்தூரில்...இன்னும் என்ன? :-)
திருவரங்கத்தில் நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலாய் கரைந்து விட்டாள் நங்கை!
அவன் பாம்புப் படுக்கையில் மெல்லத் தன் காலை வைத்து,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி....அவன் மலர் மார்பைச் சேர்ந்து விட்டாள்.
பாம்பின் மேல் நாம் எல்லாம் கால் வைத்தால் பதறுவோம்! படையும் நடுங்குவோம்! ஆனால் அவள் ஏதோ ஏக்கமாய் முணுமுணுத்துக் கொண்டே ஏறிவிட்டாள்! அந்த ஏக்கத்தைக் கண்ட பச்சை மாமலைப் பாம்புக்கு, "மனதில் ஓர் எண்ணம்"!

சரி....அப்போ அவளுடைய வேண்டுதல்? - அவ்வளவு தான், அம்போ!!!
காந்திக் கணக்கு என்பார்களே - அதுவா? :-)
அம்மா இருந்திருந்தா நிறைவேத்தி வைச்சிருப்பா! அப்பாவுக்கு மகளைப் பிரிந்த துக்கமும், பாட்டெழுதும் பணியுமே சரியாகப் போய்விட்டது!


மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!
ராமானுசர் வந்துதித்த கால கட்டம். அவர் ஆதிசேஷன் என்னும் அந்தப் பாம்பின் அம்சம்.
பழுத்த துறவி...ஆனால் படிப்பதோ காதல் கவிதை! - திருப்பாவை என்னும் காதல் கவிதை! திருப்பாவை ஜீயர் என்றே பெயர் அவருக்கு!

அரங்க மாநகரத்தில் அன்று பெருவிழா.
கோவிலில் அரங்கனுக்குத் தமிழை ஓதுகிறார்கள். அப்போது இந்த நாச்சியார் திருமொழியையும் சேர்த்துத் தான் ஓதுகிறார்கள்! "நூறு தடா" என்னும் வரிகள் வரும் போது ராமானுசருக்கு "தடார்" என்று ஒரு கலக்கம்!
அச்சோ! கோதையே சொன்னதைச் செய்யாமல் போனாளே! வாய்ச் சொல் வீரமோ என்று உலகத்தார் யாராச்சும் நாளை சொல்லி விட்டால், பழி யாருக்கு?
பதறினார்....துண்டை உதறினார்....எழுந்தோடினார்!
- எங்கே? நேரே மதுரை அழகர் கோவிலுக்குத் தான்!

நூறு தடா வெண்னெய், நூறு தடா சர்க்கரைப் பொங்கல்.....
கல்யாண சீர் வரிசைப் பாத்திரங்களில் எப்படி நிரப்புவார்களோ, அப்படி நிரப்பினார்கள். சுந்தர ராஜப் பெருமாள் என்னும் மாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாளின் நேர்ச்சையாக,
அவள் பெயரும் நட்சத்திரமும் சொல்லிக், கோதையின் சார்பாகச் சமர்பித்தார் அண்ணல்! - வேண்டுதல் நிறைவேறியது! கோதையின் வாக்கும் மெய்யானது!
காதலே ஜெயம்! ஜெயிக்க வைத்த மதுரை நம்பிக்கு ஜெயம்! என்று அனைவரும் ஆனந்தப்பட்டார்கள்.

ஆனால் ராமானுசருக்கு மட்டும் ஏனோ, ஆண்டாளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உணர்வு!
"அம்மாடி...உன் ஆசை இதோ பூர்த்தியாகி விட்டது. இன்னும் என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை? சிரி தாயி..." என்று சொல்ல வேண்டும் போல் ஒரு உந்துதல்...மதுரையில் காணிக்கையைச் செலுத்தி முடித்து, வில்லிபுத்தூருக்கு மீண்டும் ஒரே ஓட்டம்!

வில்லிபுத்தூர் கோவிலுக்குள் அவர் நுழைந்தது தான் தாமதம். அவருக்கு என்ன உணர்ச்சிகள் மனத்தில் ஓடினவோ, அதே உணர்ச்சிகள் அனைத்தும் கல்லில் சிலையாய் நிற்கும் ஆண்டாளுக்கும்!
"நம் கோயில் அண்ணன் வந்தாரே", என்று அர்ச்சகர் மேல் ஆவேசித்துச் சொன்னாள்! கருவறையில் இருந்து ஓடி வருகிறாள்...அர்ச்சகரின் உருவில்!..தன் புதிய அண்ணனை வரவேற்க! எல்லாருக்கும் ஒரே திகைப்பு!
அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது! இன்றோ மடை திறந்த வெள்ளமாய் கவி பாடி ஓடி வருகிறார். வருபவள் அவளே அல்லவா?

அர்த்த மண்டபம் தாண்டியும் வந்து விட்டாள்...ராமானுசரைக் கையால் பிடித்து அழைத்து, அண்ணா என்று அன்பு காட்டினாள் கோதை!
எட்டாம் நூற்றாண்டுத் தங்கையும், பதினோராம் நூற்றாண்டு அண்ணனும் அளவளாவி மகிழ்ந்தார்கள்!

எதுக்கு ஆண்டாள் ராமானுசரைப், போயும் போயும், அண்ணா என்று கூப்பிட வேண்டும்?
ரக்ஷா பந்தன் - அதாங்க ராக்கி - கையில் கட்டி விடுவாங்களே - ஒடனே சிஸ்டர் ஆயிடுவாங்களே...அப்ப அண்ணன்கள் எல்லாரும் என்ன பண்ணுவாய்ங்க? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பாங்க!
அட, நம்மூரு கல்யாணத்துல கூட எடுத்துக்குங்க!
மணப்பெண்ணின் சகோதரன் தான், காசி யாத்திரைக்குக் கூட வரான், கால் கழுவி விடறான், பொரி வார்த்து பெண்ணைக் கொடுக்கறான்! - இப்படியான அண்ணன் தங்கை உறவு காலம் எல்லாம் தொடரும் ஒன்று!
ஒவ்வொரு பண்டிகைக்கும் அண்ணன் வீட்டுச் சீரைக் கேட்கும் தங்கச்சிங்க யாராச்சும் இருக்கீங்களா? :-)

காதலுக்குக் கண் தானில்லை! - ஆனால்
அன்புக்கோ காலமே இல்லை!! - நூற்றாண்டாவது? ஒன்றாவது?

இன்றும் வில்லிபுத்தூர் ஆலயத்தில் அர்த்த மண்டபதையும் சேர்த்து தான், கருவறையாகவே கருதப்படுகிறது! அங்கு ஆண்டாள் கால் பதித்த காரணத்தால்! அதற்கு முன்பே நாம் எல்லாம் நின்று விட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை!

இப்படி ஆண்டாளுக்கே அண்ணன் ஆன காரணத்தால் தான்....அவள் மேல் பாடப்பட்ட வாழித் திருநாமம் என்னும் பாட்டில்,
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே என்று பாடினார்கள்!
பெரும்பூதூர் மாமுனி = ராமானுசர்
அவருக்கு பின் ஆன தங்கை = ஆண்டாள்...திருவடிகளே சரணம்!


அடியே கோதை...
இன்னும் கொஞ்ச நாளில் உன் பிறந்த நாளடி! திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்த அழகியே...உனக்கு மட்டுமா பிறந்த நாள்? எங்கள் பாரத தேசமும் இதே நாளில் தானே அன்று புதிதாகப் பிறந்தது!
(இந்த ஆண்டு Aug 15, அன்று ஆடிப் பூரம் வருகிறது)
அதை ஒட்டி, ஆடிப் பூரம் - தொடர் பதிவுகளாய் - உன்னைப் பலப்பல கோணங்களில் காண ஆசை! அதுக்கு வில்லிபுத்தூர் வரப் போகிறோம்!
இதோ, உனக்கு பிறந்த நாள் பரிசுகளாய், பதிவுகள், தொடரும்...
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP