நியூயார்க் Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாளாம்! சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு?
நம்ம ஊரு நியூ யார்க்கு! இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே! பாலத்துக்குன்னு வலைப்பூ எல்லாம் தொடங்கி இருக்காங்க மக்கா! இன்னிக்கி ராவோட ராவா, Philharmonic மீசிக் பார்ட்டி, பட்டாசு வெடிச்சிக் கொண்டாட்டம்-னு கச்சேரி களைகட்டுது!
சென்னை அண்ணா மேம்பாலத்தில் யாராச்சும் நடந்து போயிருக்கீங்களா? இல்லை சைக்கிளில் போயிருக்கீங்களா? அதுவும் ராத்திரி பன்னிரெண்டு-ஒரு மணிக்கு நண்பர்களோட போகும் சுகமே தனி!
பாலத்தில் பெரியார் சிலை கிட்ட ஒரு யூ-டர்ன் அடிச்சி நின்னு பாத்தா, புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு பெரிய விருந்து கிடைக்கும்!
ரேஸ் குதிரையை அடக்கும் மனிதன் சிலை, தேவாலயம், பாலம், மவுண்ட் ரோடு (அண்ணா சாலை)-ன்னு அத்தனையும் ஒரே ஷாட்-ல புடிக்கலாம்! இப்போ வெளம்பரப் பலகை, டிஜிடல் பேனர் வேற எல்லாம் எடுத்துட்டாங்களாம்?
விசயம் என்னான்னா மக்களே, Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாளாம்!
உலகிலேயே மிகப் பழமையான தொங்கு பாலம்! கீழே பில்லர் (தூண்) எல்லாம் ஒன்னும் இருக்காது!
நியூயார்க் நகரத்தின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று இந்த ப்ரூக்ளின் பாலம்! அதை விட முக்கியமான விசயம், இந்தப் பாலத்தில் பயணம் செய்ய கப்பம் கட்ட வேணாம்! Toll Free! :-)
எனக்கு இது கிட்ட பிடிச்சதே என்னன்னா,
* பாலத்தின் மேல் கம்பி எண்ணிக்கிட்டே காலாற நடந்து போகலாம்! தனிப் பாதை!
* ஆத்தா ஆத்தோராமாப் போறீயா-ன்னு பாடிக்கிட்டே சைக்கிளும் ஓட்டலாம், ஆளையும் ஓட்டலாம்! அதுக்கும் தனிப்பாதை!
* காரு, பஸ்ஸு, சுரங்க ரயில்-ன்னு அது அதுக்கு தனித் தனி பாதை!
இப்பிடி விதம்விதமா ஓட்டுறத்துக்கன்னே ஒருத்தன் 125 வருசத்துக்கு முன்னாடி யோசிச்சிருகான்னா, அவன் தான்யா கடலை மன்னன்! :-)
மென்ஹாட்டன் என்னும் மையமான நகரத் தீவை, ப்ரூக்ளின் என்னும் இன்னொரு நகரத்தோடு இணைப்பது இந்தப் பாலம்! கீழே ஓடுவது கிழக்காறு (East River)!
ஸ்பைடர் மேன் படத்துல பார்த்து அசந்து இருப்பீங்க!
உலக வர்த்தக மையம் (WTC) தாக்கப்பட்ட போது எடுத்த அத்தனை வீடியோக்களிலும் பாலம் படமாகி இருக்கும்!
அம்புட்டுத் தானா? இது கட்டின போது பல காதல் கதைகளும், சண்டைகளும், பிரிவுகளும் நடந்துச்சாம்!
சும்மா ஒரு ரவுண்டு கட்டிப் பார்க்கலாமா?!
அப்படியே கேஆரெஸ் வீட்டுல ஒரு பார்ட்டியும் வச்சிக்கலாம்! என்ன மக்களே, போகலாம் வாரீங்களா?
ப்ரூக்ளின் பாலம் 1870இல் கட்டத் துவங்கினாங்க! சரியா பதிமூனே வருசத்துல வேலைய முடிச்சிட்டாங்க! மே 24, 1883 திறப்பு விழா!
பாலம் கட்ட ஆன காசு, அப்பவே பதினாறு மில்லியன் டாலர். முதல் நாளே ஒன்றரை லட்சம் மக்கள் பாலத்தைக் கடந்தாங்களாம்!
நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் பாலத்தை வச்சி ஒரு ஜோக் சொல்லுவாய்ங்க!
* இந்த ஊர்ல பாலத்துக்குத் தொகையை ஒதுக்கி, பாலம் கட்டி முடிச்சவுடன், மிச்சம் மீதி இருக்குற தொகையைப் பங்கு போட்டுக்குவாய்ங்க!
* நம்மூருல பாலத்துக்குத் தொகையை ஒதுக்கினவுடன், அதை தங்களுக்குள்ள மொதல்ல பிரிச்சிக்கிட்டு, மிச்சம் மீதி ஏதாச்சும் தொகை இருந்தா, பாலம் கட்டினா கட்டுவாய்ங்க!
ஆக மொத்தம் அரசியல்வாதிகள் எங்கேயும் அரசியல்வாதிகள் தான்! :-)
தொறந்த முதல் வாரத்திலேயே ஒரு பெரிய விபத்து!
எதுனால? பாலம் சரியாக் கட்டலையா? கமிஷன் ஊழலா? அதெல்லாம் இல்ல!
முதல் தொங்கு பாலம் பாருங்க! மக்கள் சில பேருக்குப் பயம்! சில அறிவாளிங்க, பாலம் வீக்கா இருக்கு, ஒடைஞ்சி விழப் போகுதுன்னு, மே 30ஆம் தேதி ஒரு புரளி கெளப்பி வுட்டுட்டாங்க! அதுல நடந்த தள்ளு முள்ளு நெரிசல்-ல 12 பேரு காலி!
பாலத்தின் மொத்த நீளம் ஆறாயிரம் அடி! மையப் பகுதி நீளம் 1600 அடி (கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர்). Gothic ஸ்டைலில் வளைவுகள் வைத்துக் கட்டப்பட்டது. கருங்கல் (Granite), சுண்ணாம்புக் கல் (Lime Stone), ரோசன்டேல் சிமென்ட், ஸ்டீல் கம்பிகள் தான் கட்டுமானப் பொருட்கள்!
இப்போ பாலத்தோட காதல் கதை:
பாலத்தின் முதல் வடிவமைப்பாளர் பேரு ரோப்லிங் (John Augustus Roebling). தாய் நாடு ஜெர்மனி! அமெரிக்காவுல செட்டில் ஆனவரு! பாலத்துக்காக ஆற்றில் சர்வே எடுக்கும் போது, படகு முட்டிக் கால் ஒடைஞ்சி போச்சி அவருக்கு! ஒரு வாரத்துல டெட்டனஸ் என்னும் நோய் தாக்கி இறந்துட்டாரு!
வாரிசா, அவர் புள்ள வாஷிங்டன் வேலையை ஆரம்பிச்சாரு! என்ன நேரமோ தெரியலை அவரும் காய்சான் (Caisson) என்னும் நோய் தாக்கி இறந்துட்டாரு! அழுத்தப்பட்ட காற்றினால்(Compressed Air) வரும் நோய் இது! அப்பறம் தான் நடந்திச்சி அந்த அதிசயம்!
அவர் அன்பு மனைவி எமிலி ரோப்லிங் (Emily Warren Roebling) களத்துக்கு வந்தாங்க! அவங்க இத்தனைக்கும் பொறியியல் வல்லுநர் எல்லாம் கிடையாது! ஆனா கணவர் தினமும் தன்னிடம் பாலம் பற்றிக் கற்பனை விரிய பேசினதை எல்லாம் காது குடுத்து கேட்டவங்க!
(எத்தினி பேரு ஆபீஸ்-ல code எழுதும் போது Bug வந்ததைப் பற்றி எல்லாம் வூட்ல சொல்லி இருக்கீங்க? அவங்க Debug பண்ண ஆரம்பிச்சா என்ன நடக்கும்? கற்பனைக் குதிரையைத் தட்டுங்க பார்ப்போம் :-)
தன் மறைந்த கணவரின் கனவு, திட்டம், வரைபடம் எல்லாத்தையும் சக பணியாளர்களிடம் பேசிப் புரிய வைத்து, பாலத்தின் அடுத்த கட்டக் கட்டுமானத்துக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்களாம்.
போதாக்குறைக்கு இதுக்காகவே பொறியியல் படிக்கவும் துவங்கினாங்களாம்! காற்று பலமாக அடிக்கும் இடமாதலால், பாலத்தை ஆறு மடங்கு ஸ்ட்ராங்க கட்டணும் வேற அரசுக்கு அறிவுறுத்தினாங்க!
அவரோட உற்சாகத்தைப் பார்த்தே, மக்கள் பாலம் கட்டுறதுல செம பிசியாகிட்டாங்க! பாலத்தின் திறப்பு விழா போது, முதலில் பாலத்தைக் கடக்க அரசியல்வாதிங்க, அவுங்க குடும்பம்-னு யாரும் போட்டி போடலை! எமிலியைத் தான் முதலில் பாலத்தைக் கடக்கச் செய்து மதிப்பும் மரியாதையும் செய்தார்கள்!
பாலத்துல பாருங்க இப்பிடி ஒரு காதல் கதை!
காதலர்கள் மரத்தைச் சுத்துவாங்க, பாலத்தின் மேல் ஓடியாடி முத்தம் கொடுத்துக்குவாங்க அப்படின்னு சொல்றவங்களுக்கு எல்லாம் ஆப்பு!
காதலர்கள் பாருங்க, காதலால் அன்புப் பாலம் மட்டுமில்லை! ஒரு நிஜ பாலத்தையே கட்டி இருக்காங்க! நாம தான் இல்லாத ராமர் பாலத்தை வச்சிக்கிட்டு அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கோம்! அட ராமா ராமா! :-)
பாலம் கட்டி முடிச்ச பிறகும் ஒரு சோதனை. பாலத்துக்குத் தருவிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் தரத்தில் லாய்டு (Lloyd Haigh) என்ற ஒப்பந்ததாரர் (Contractor) கொஞ்சம் வெளையாடிட்டாரு போல! எப்படியோ விசயம் லீக் அவுட் ஆயிரிச்சி!
நம்ம எமிலி தான் மீண்டும் ஆய்வு செய்து ஆறு மடங்கு பாதுகாப்பு நாலு மடங்காக குறைந்து விடும்னு கண்டுபுடிச்சாங்க! இன்னொரு 250 கேபிள் கொடுத்து பாலத்தை இழுத்துப் புடிச்சாங்களாம்!
வேலை ஆச்சா, காசு பாத்தோமா, போவோம்-னு இல்லாம, கணவரின் பெயரைக் காலமெல்லாம் சொல்லும் அளவுக்கு பாலம் கட்டின எமிலி, ஆத்தா நீ வாழ்க! வாழ்க!
அண்மையில் மின்னசோட்டா பால விபத்தைப் படிச்சிருப்பீங்க! ப்ரூக்ளின் பாலத்துக்குப் பின்னாடி வந்த பாலம் எல்லாம் காணமப் போச்சு!
ஆனா ப்ரூக்ளின் பாலம் மட்டும் காதலைப் போலவே கம்பீரமா இன்னும் நின்னுக்கிட்டு இருக்கு! இருக்கும்!!
WTC இடிப்புக்குப் பின்னர் மக்கள் கும்பல் கும்பலாகத் தப்பி ஓடியதும் இந்தப் பாலத்தின் மீது தான்! தீவிரவாதம் தலை தூக்கிய போது, இந்தத் தொங்கு பாலத்தை வெல்டிங் டார்ச்சால் அறுத்துப் போட சதி பண்ணதை, NYPD (New York Police Dept) காவல்துறை கண்டுபுடிச்சி தடுத்துட்டாங்க!
பாலம் தொங்கு பாலம் என்பதால், லைட்டாக அப்படி இப்படிக் காற்றில் ஆடுவதை, நடந்து போனால் நீங்க உணரமுடியும்! Pedestrian oscillations Sway Effect என்கிறார்கள் இதை!
நீங்களும் பாலத்து மேல ஜாலியாச் சைக்கிள் ஓட்டிக்கிட்டே போக ஆசையா இருக்கா? இந்தாங்க, போங்க - Live Cam! அப்படியே இன்னிக்கி கொண்டாட்டத்தையும், ராத்திரி இக்கட சூடலாம்!
இந்தப் பாலம் கட்டும் போது, என்னென்ன செய்திகள் நடந்துச்சு, அப்போது இருந்த நாளிதழ்களில் தினமும் என்னென்ன சேதி வந்துச்சு, என்பதை எல்லாம் ஒன்னாத் தொகுத்து, ஒரு வலைத்தளம் உருவாக்கி இருக்காங்க, அந்தக் காலத்து நியூஸ்பேப்பர் ஸ்டைலில்! பாருங்க!
அப்படியே பாலத்தைக் கூகுள் சேட்டிலைட் மேப்பில் கொஞ்சம் எட்டிப் பாருங்க!
மக்கா,
நம்மூரு அண்ணா மேம்பாலத்துக்கு என்னிக்குப்பா பொறந்த நாளு?
கரீட்டாச் சொல்றவங்க தனியா கவனிக்கப்படுவார்கள்-ன்னு உறுதி அளிக்கிறேன்! :-)
References (உசாத்துணை):
"Bridging the East River" - The Brooklyn Daily Eagle
The story of Brooklyn Bridge - by CBS
Chicago Tribune - Article
Picture Courtesy: Yellowecho.com